பனை நகரம் 17


 

பனம்பழ நகரம்

இந்த முறை நான் மும்பை வந்த நாளிலிருந்து, பனம் பழங்களை தேடி எடுத்து சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக எனது பிள்ளைகள் பனம்பழங்களை விரும்பி உண்பவர்கள். உலகத்தின் எந்த சுவையான உணவையும் குழந்தைகள் விருப்புடன் உண்பதைப் போலவே, எனது பிள்ளைகள் இருவரும் பனம்பழத்தை  வெகு விருப்பத்துடன் உண்பார்கள். நான் எனது குழந்தைகளை ரசிக்கும் ஒரு உன்னத தருணம் அது. குழந்தைகள்தான் என்றில்லை பனம்பழங்களை விரும்பி உண்ணும் அனைவரையும் பார்க்கும்போது ஏற்படும் பேருவகை அது. எளிதில் காணகிடைக்காத ஓர் அரிய நிகழ்வல்லவா? பனம் பழங்கள் பெரும்பாலும் இன்று விரும்பப்படுவது இல்லை. தமிழகத்தில் ஒரு தலைமுறை பனம்பழங்களை முற்றிலும் அழுக விட்டுவிட்டது. அதனை சுவைக்கையில் கைகள் முழுவதும் பனம்பழமாக மாறிவிடும் என்பது மட்டுமல்ல, முகமும் பனம்பழத்தின் இன்கனியால் தீற்றப்பட்டுவிடும். இப்படியிருக்க மாய்ந்து மாய்ந்து இதை தின்கிறார்களே என்கிற எண்ணம் பலர் வாயிலாக என் காதுகளை வந்தடைந்ததுண்டு. ஆனால் பனம் பழங்களின் சுவையும் மணமும்  அத்தனை எளிதில் நம்மையும் நமது தலைமுறைகளையும் விடாது என்பது தான் உண்மை.

DSC00654

பனம்பழம் சீவும் முறை

பனம் பழம் குறித்து மும்பையில் எவருக்கும் தெரியாது. இக்கூற்றினை எழுதிய பின்பு நான் விழித்துக்கொண்டேன். ஒருவேளை நான் சற்றே மிகையாக கூறுகிறேனோ என்கிற எண்ணம் எழுந்தது. ஆம், பனம் பழம் குறித்த புரிதல் கொண்ட மக்களை நான் மும்பையில் இதுவரை சந்திக்கவில்லை என மாற்றி சொல்லுவதே சரியாயிருக்கும். மும்பையின் உண்மையான பனை வரலாறு தெரியாமல் அதனை உற்று நோக்கிக்கிகொண்டிருக்கும் ஒருவனாகவே என்னை எண்ணிக்கொள்ளுகிறேன். இங்கு பனம் பழங்களின் காலம் என்பது ஏப்ரல் முதல்  முதல் ஜூன் – ஜூலை வரை தான். இதற்கு இணையான ஒரு பருவத்தை நான் குமரி மாவட்டத்தில் தான் பார்த்திருக்கிறேன். சற்றேரக்குறைய இதே பருவகாலத்தில் தான் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பனம் பழங்கள் கிடைக்கும் என்றாலும், அங்கே டிசம்பர் முதலே  ஆங்காங்கே கிடைக்கும். மும்பையிலும் ஆங்காங்கே பனம் பழங்கள் பழுத்து நிற்பதை டிசம்பர் மாதம் முதல் பார்த்துவருகிறேன்.

பனம் பழங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எனது பெருவிளை கிராமத்திலிருந்து துவங்குகிறது. எனது அத்தை பனம் பழங்களைப் பொறுக்கும் நுட்பத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தார்கள். விடுமுறை நாட்களில் நாங்கள் அத்தை வீட்டில் தான் தங்கியிருப்போம். அத்தையின் வீட்டின் பின்புறம் இருந்த விளையில் பனை மரங்கள் நின்றன. அதனை ஒரு குட்டி பனங்காடு எனலாம். அதிகாலை வேளையில் பனம் பழம் காற்றில் உதிரும். விழும்போது “தொம்” என்று சத்தம் கேட்கும். அந்த சத்தம் ஒரு அழைப்பு . நான் உங்கள் உணவு தட்டிற்காக வந்து நிற்கிறேன் என்கிற அறைகூவல் அது. அத்தை எழுப்பி விடுவார்கள். வெகு உற்சாகத்துடன் முயல் போல தெறித்து ஓடி போய் எடுத்து வருவோம். சில நேரங்களில் நான் செல்லும்போது வேறு திசைகளிலிருந்தும் சிறுவர்கள் ஓடி வருவார்கள். மிகப்பெரிய பழங்களாகவே இருக்கும். பனம்பழம் கிடைத்தால் தூக்க இயலாதபடி தூக்கி வருவேன். அத்தையின் சூழலைப் பொறுத்து சுட்டோ அவித்தோ கொடுப்பார்கள். 40 வருடங்களுக்கு முன்பு இருந்த உலகம் எப்படி தலைகீழாக மாறிவிட்டது என எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.

கடந்த வருடம் போவாஸ் என்கிற பனைத் தொழிலாளியுடன் இணைந்து குமரி மாவட்டத்தில் இருக்கும் மிடாலக்காடு என்கிற பகுதியில் இருக்கும் ஒரு கத்தோலிக்க திருச்சபையில் சென்று பனம் பழங்களை அவித்துக்கொடுத்தோம். பாரம்பரிய சுவையினை மீட்டெடுக்கும்படியான அந்த நிகழ்வு மிகப்பெரும் வெற்றி பெற்றது. சகாய பெலிக்ஸ் என்கிற இளம் துறவி அங்கே பணியாற்றிக்கொண்டிருந்தார். நானும் போவாஸ் பனையேறியுமாக இணைந்து பனம் பழங்களை சேகரித்தோம். அதிகமாக கிடைக்காவிடினும் இரண்டு மூன்று நாட்களாக சுமார் 20 பழங்களை சேகரித்தோம். அவைகளை எடுத்து எனது வீட்டு குளிசாதனப்பெட்டியும், மற்றும் ஒரு சில நண்பர்களின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் இட்டு வைத்தோம். குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், பனம் பழங்களை போவாஸ் பனையேறி தனது அறிவாளால் தோலோடு இருக்கும்படியாக  சீவியெடுத்தார். சீவியெடுத்தபின் கொட்டைகள் அனைத்தும் பார்க்க திருப்பதிக்கு போய்வந்த தலைகளைப்போல் காட்சியளித்தன. சிறிது பனம்பழங்களை மூடியிருக்கும் “நெட்டி”யினை எடுத்து பானையின் அடிப்பாகத்தில் அடுக்கிவைத்தார். அதற்கு மேல் சீவியெடுத்த பனம்பழ தூன்டங்களை  அடுக்கினார். அனைத்திற்கும் மேலே கொஞ்சம் பனங் கருப்பட்டியினை உடைத்துப்போட்டார்.பனம் பழங்களை அன்று இரவே வேகவைத்தோம். அடுப்பில் தீ மூட்டி பனம் பழம் வேகும்Pஒது “பனம்பழம் தின்ன பண்ணி செவியறுத்தாலும் நிக்காது” கேட்டியளா என என்னைப்பார்த்து சிரித்தார். பனம்பழங்களில் இருக்கும் “காறல்” தன்மை பொங்கி வழிந்தோடிவிடவேண்டும் எனக் குறிப்பிட்டார். பொங்களின் பின்னணியத்தில் பனை ஊடுருவி இருக்க வேறு காரணம் வ் ஏண்டுமா? இவ்வித நுட்பங்களை பனையேறிகளிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ள முடியும்.

DSC09462

போவாஸ் பனம்பழங்களை அரிவாள் கொண்டு அறுக்கிறார்

மறுநாள் ஆலய ஆராதனைக்கு பின்பு, அருட்தந்தை சகாய பெலிக்ஸ் அவர்கள் மக்களை ஆலயத்தின் அருகிலுள்ள மைதானத்திற்கு அழைத்து வந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முந்தைய இரவு வேகவைத்த பனம்பழங்களை சிறு சிறு துண்டுகளாக எடுத்து கொடுத்தனர். பெண்களும் சிறுவர்களும் போட்டிபோட்டபடி வந்க்டு சுவைத்துப்பார்த்தனர். பானையில் இருந்த எஞ்சிய இன்னீரை குடிக்க அப்படி ஒரு போட்டி நடந்தது. நெட்டியில் வாரிக் குடிக்கும் அந்த காட்சியின் இன்பம் நான் அரிதாக கடந்து வந்த ஒரு உணவு திருவிழா காட்சி.

பனம் பழத்தின் மீதான ஈர்ப்பின் முதல் விசை அதன் மணம் தான். விழுந்த உடனேயே நாம் எடுக்கும் பழங்கள் மிகவும் விரும்பத்தக்க வாசனை கொண்டவை. கிறங்கடிக்கும் மணம் எனலாம். எப்படி பலாப்பழத்தின் வாசனையை அடக்கிவைக்க இயலாதோ அப்படியே சுட்ட பனம்பழத்தின் வாசனையையும் மறைக்க இயலாது. ஆதி மனிதர்கள் விலங்கின் தன்மைகள் பெருமளவில் கொண்டிருக்கையில், பனம் பழங்களின் வாசனை எப்படி அவர்களை சுண்டி இழுத்திருக்கும் என சொல்லத்தேவையில்லை. அதன் மென் மணம் பிறந்த குழந்தையை எப்படி கரத்தில் எடுத்து முத்தமிடத் தூண்டுமோ அத்தகையது. பழத்தினை அவித்தோ அல்லது சுட்டோ சாப்பிட்டால், காதலாகி கசிந்துருகி காதலியை முத்தமிடும் தருணத்திற்கு ஒப்பானது. அணைத்து, முகர்ந்து, கடித்து, சுவைத்து, இன்புற்று பித்தேறிய நிலைக்கு கொண்டு செல்லும் சுவை அதனுள் உறைத்திருக்கும்.

DSC09528

நெட்டியில் பனம்பழம் அவித்த சாறு குடிக்கும் சகோதரி

இந்த வாசனைக்கு இருக்கும் தனித்தன்மையினை உணர்ந்தே அத்தனை விலங்குகளும் இதனை போட்டி போட்டு சாப்பிடும். சிலநேரங்களில் வீட்டினருகில் இருக்கும் நாய்களும், ஊருக்குள் வரும் நரிகளும் பனம்பழங்களை விரும்பி உண்ணும். மாடுகளுக்கு பனம்பழங்களை எடுத்துப்போடுவார்கள். பன்றிகள் இதனைத் தேடி உண்ணும். காட்டு விலங்குகள் கூட பனம்பழங்களை விரும்பி உண்ணும் என்பதனை நான் பின்னர் தான் அறிந்துகொண்டேன். மான் பனம்பழங்களை சாப்பிடும் என புகைப்படங்களை எனது நண்பர் விஸ்வா வேதா என்னிடம் ஒருமுறைக் கூறினார். அப்படியே குமரி மாவட்டத்தில் காட்டிலகா அதிகாரியாயிருந்த ஒருவர் கரடிகள் பனம் பழங்களின் வாசனைக்கு அடிபணிந்து காட்டை விட்டு மலையடிவாரங்களில் சுற்றித்திரியும் என்றார். மிளா சப்பிடும் என்பதனையும் அவர் கூறியே கேள்விப்பட்டேன். குரங்குகள் கண்டிப்பாக இவைகளைச் சாப்பிடும். இலங்கையில் பனம் பழங்களை யானை விரும்பி உண்ணும் என நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். பனை மரத்தை உலுப்பி தனக்கான சுவையான பனம்பழங்களை தேடும் யானைகள் ஆப்பிரிக்க கண்டங்களில் இருக்கிறதை காணொளி வாயிலாக தெரிந்து கொண்டேன்.

பனம் பழ வாசனை குறித்து நாம் எவ்வளவு தான் விதந்தோதினாலும், மெய்யாகவே பனம்பழத்தின் வாசனை  குறித்த ஒரு ஒவ்வாமை மக்களுக்கு ஒரு கட்டத்தில் ஏற்பட்டுவிட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற கூற்று பனம்பழத்திற்கும் பொருந்தும். பனம் பழம் விழுந்து  சில மணி நேரங்களுக்குள் அதனுள் ஒரு வண்டு நுழைந்துவிடும். வண்டு ஏறிய பழங்களை சாப்பிடக்கூடாது. அப்படியான பழங்களில் வாசனை சற்றே தூக்கலாக அடிக்கும். அது ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகவே பனம் பழங்களை சாப்பிடுகிறவர்கள் கூட வாசனை மாறுகையில் குமட்டுவது இயல்பு. பனம் பழமும் “அந்த பயம் இருக்கட்டும்” என நம்மைப் பார்க்காமல் கூறிவிட்டு, கிழங்கிற்காக தன்னை அற்பணித்துகொள்ளுகிறது.

DSC09509

அருட்பணியாளர் சகாய பெலிக்ஸ் – பனம்பழப் பானை அருகில் உள்ளது

இன்று பனை சார்ந்த முன்னெடுப்புகளை வெறுப்பவர்கள் பெரும்பாலும் பனம் பழம் சாப்பிட்டால் பித்தம் வந்துவிடும் என்பதனையே கூறி, பனம் பழம் சாப்பிடுகிறவர்களை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் கீழ்தரமான இந்த பரப்புரைக்கு விடையினை நமது முன்னோர்களே கூறிச்சென்றிருக்கிறார்கள். “பசிக்கு பனம்பழம் சாப்பிட்டால் பித்தம் போறவழியில் போகும்” என்று கூறியிருக்கிறார்கள். இன்று பனை உணவுகள் திரும்பி வருகின்ற சூழலில் தமிழகத்தில் ஏற்படுகின்ற பதட்டத்தை சற்றே கூர்ந்து நோக்குகிறேன். உள்ளூர் பழத்தையே நாம் இவ்விதம் இழந்தோமென்று சொன்னால், எவருடைய வணிகத்திற்கு நாம் ஏவல் செய்துகொண்டிருக்கிறோம்?

பனை மரங்கள் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் உணவு. இந்த உணவை தாங்கிப்பிடிப்பது நமது கடமை. ஒருவேளை உணவுக்காக ஏங்கும் பல்வேறு குடும்பங்களின் பசியைப் போக்க வல்லது பனம்பழம். உலகின் 99% உட்டசத்து குறைவு மிக்க மக்கள், மூன்றாம் உலக நாடுகளிலேயே வாழ்கிறார்கள். இயற்கை அளிக்கும் இவ்வைகையான உணவுகள் பசியினையும் ஊட்டச்சத்தினையும் ஒருங்கே வழங்க வல்லன. இன்று நாம் சந்திக்கும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு, நமது உணவு முறைகளில் ஏற்பட்ட மாறுதல் முக்கிய காரணம் என்கிறார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கும் உணவுகளை நாம் உண்ணாது இருப்பது நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பனம் பழம் தோல் நோய்களுக்கு, குடல் சுத்தம் செய்வதற்கு, கண் பார்வை மேம்படுதல் என பல வகைகளில் பயனளிக்கும் அருமருந்து.

குமரி மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட இயற்கையாகவே கதிர் வீச்சு 40 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. குமரி மாவட்டத்தின் குளச்சல் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதிகள் மிக அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட கடற்கரைப்பகுதிகள். இங்கு வாழும் மீனவர்கள் கரையில் வாழும் மக்களிடம் மீனைக் கொடுத்து பனம்பழங்களை வாங்கி சாப்பிட்ட ஒரு காலம் உண்டு. அதாவது பனம் பழம் கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைக்கும் என்கிற ஒரு புரிதலாக இருந்திருக்கும். குமரி மாவட்டத்தில் மீன் அனுதினமும் உணவாக இருந்ததற்கு இந்த பண்டமாற்று முறை வாய்ப்பளித்திருக்கிறது.

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது பெருவிளைக் கிராமத்திற்குள் நுழைந்து பனம் பழங்களைத் தேடுவேன். ஒருபோதும் பனம் பழம் கிடைக்காமல் நான் வீடு திரும்பியது இல்லை. எப்படியாவது பனம் பழம் எனக்கு கிடைத்துவிடும். எனது சைக்கிளில் அதனை வைத்து வீட்டிற்கு எடுத்து வருவேன். எனக்கு பனம் பழம் தான் அன்றைய ஷாம்பூ. தலைக்கு பனம் பழத்தை இட்டு ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால், தலையில் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கி, முடி மிருதுவாகவும் பளபளப்பாக மாறிவிடும். பனம் பழம் இட்ட தலையிலிருந்து வரும் வாசனை சற்றே ஆரஞ்சு பழத்தின் வாசனையினை நினைவுறுத்தும்.

இந்த இணைப்பு தான் மும்பைக்கும் குமரி மாவட்டத்திற்கும் உள்ள தொடர்பினை நான் ஆழ்ந்து எண்ண தலைப்படக் காரணம். குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பனம் பழங்கள் பல்வேறு கால நிலைகளில் கிடைத்துக்கொண்டிருப்பதற்கு, விதை தெரிவு ஒரு காரணமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். வருடத்தின் பெரும்பகுதி பனம் பழங்கள் கிடைக்கும்படியான ஒரு அமைப்பை இங்கு வாழ்ந்த பனையேறிகள் உருவாக்கியிருக்கலாம். அதிகமாக பூக்கும் பருவங்கள் அதிக பதனீரையும் அதிக உற்பத்தியையும் தர வல்லது என பனையோடு பயணித்தவர்கள் புரிந்திருப்பார்கள். அதே எண்ணத்தை மராட்டிய மண்ணில் இருக்கும் மும்பைக்கும் பொறுத்திப்பார்த்தால் அதனை நாம் எப்படி விளங்கிக் கொள்வது?

பனை சார்ந்த சமூகங்கள் இங்கு இருந்திருக்கின்றன. கடல் சார்ந்த சமூகமும் இங்கு உண்டு, அப்படியே பனை சார்ந்து வாழும் பழங்குடியினரும் இங்கு வாழ்கிறார்கள். இதையும் தாண்டி மேலே குறிப்பிடும்படியாக ஒன்று உண்டு. மராட்டியர்கள் வாழ்வில் ஒரு காலகட்டம் போர் இன்றி வேறில்லை என வாழ்ந்த காலகட்டம். எல்லா சமூகமும்  கள்ளினை போர் நேரத்தில் பெருமளவில் பயன்படுத்தியிருக்கின்றன. இன்றும் மஹாராஷ்டிராவில், கள் கிடைத்துக்கொண்டிருக்கிறது. மும்பையை அடுத்து இருக்கும் பால்கர் பகுதிகளில் பனை மரங்களும் அதனை சார்ந்து வாழும் பழங்குடி மக்களும் ஏராளம் இருக்கிறார்கள்.

கள்ளும் போரும் பிரிக்கவியலா ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. அப்படியே கள்ளினை வடித்து சாராயமாக்கும் தொழில் நுட்பம் இன்றும் மகராஷ்டிரா பகுதி பழங்குடியினர் வாழ்வில் இருக்கிறது. ஆகவே பனை சார்ந்த புரிதல் கொண்டே, பல்வேறு கால சூழ்நிலையிலும் பனை தனது பயனைக் கொடுக்கவேண்டி மக்கள் “தெரிந்து” பயிரிட்ட மரங்களே பருவம் தப்பி வந்த பனைகள் என நான் எண்ணுகிறேன். பல்வேறு தட்பவெட்ப சூழல்களும், தவரவியல் சார்ந்த காரணங்களும் இதற்குப்பின் இருக்குமென்றாலும், எனது தரப்பு, மனிதர்கள் பனை மரத்தினை ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். அப்படியே, பருவத்திற்கு முன்பும் பின்பும் பலன்  கிடைக்கும் பனை மரங்களையும் அவர்கள் பாதுகாத்திருக்கிறார்கள் என்றும் திடமாக நம்புகிறேன்.

பனம் பழம் சார்ந்து பேசிக்கொண்டு வருகையில் கள்ளிற்கான எண்ண ஓட்டம் எப்படி உள்நுழைந்தது? பனை மரமே பருவம் சார்ந்து நோக்கப்படும் ஒரு மரம் தான். போர்ச்சூழலில் மட்டுமல்லாது பல்வேறு வகைகளில் மஹாராஷ்டிரா பஞ்சங்களைக் கடந்து வந்த பகுதி. ஆகவே, இங்கே பனம்பழம் ஒரு முக்கிய உணவாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்கவியலாது. அது எப்படி இவர்கள் வாழ்வில் இருந்தது என நாம் கண்டடையும் முன்பு, பனம் பழம் தொடர்ச்சியாக 6 – 8 மாதங்கள் வரைக் கிடைக்கும் என்கிற தகவல் பதிவு செய்யப்படவேண்டும் என்பதாலேயே இதனை இங்கு முன்வைக்கிறேன். இந்த சிறு தகவலை மறந்து நாம் மும்பையின் பனை வாழ்வை எழுதிவிட முடியாது ஏனென்றால், இதுவே தாவரவியல் சார்ந்தும், நிலவியல் சார்ந்தும், சூழியல் சார்ந்தும்,  இங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றிலும் முக்கிய தகவலக்ளை உள்ளடக்கி இருக்கிறது. பனம் பழம் மும்பையின் சுவையினை கட்டமைத்த பழம் தான். இன்று அது வெளியே தெரியாவிட்டாலும், எங்கோ புதைந்துகிடக்கும் இந்த உண்மை முதற்பீலியாக வெளிவரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: