கள் விடுதலைப் போராட்டம்


கள் சார்ந்த விடுதலை என்பது பனை சார்ந்து வாழும் மக்களுக்கான உரிமை. காந்தி உப்பு காய்ச்ச இறங்கியது போன்ற ஒரு நிகழ்வே இது. நமது மரம், நாம் ஏறுகிறோம், நாம் பருகுகிறோம். நமக்கு வேண்டியவர்களுக்கு இதனை கொடுக்கிறோம். கள் இறக்குபவர்களை அடக்க முற்படுவது ஒரு நவீன சமூகத்தில் வாழும் எவரும் செய்யக் கூடாதது. வெகு சமீபத்தில் பனை பொருளாதாரம் குறித்து பேசிவரும் திரு. குமரி நம்பி, “உணவு உரிமைக்கு எதிரானது கள்” என ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். இச்சூழலில் நான் சுதேசி இயக்கம் எனக்களித்த விருதினை துறந்து, சுதேசி இயக்கத்தினரின் கள்ளிற்கு எதிரான நிலப்பாட்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனது பனை மரச்சாலையில் ஆந்திராவில் காணப்படும் கள் இறக்குகிறவர்களையும், கள் இறக்கும் பகுதிகளையும், கள்ளுக்கடைகளையும் நான் ஓரளவு எழுதியிருந்தாலும், கள்ளு குறித்து தனித்தன்மையாக ஏதும் பதிவிடவில்லை. ஆனால் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு “குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்  விழுமியங்களும்” என்ற கலந்துரையாடலில் கள் குறித்து சிறு  கட்டுரையினை சமர்ப்பித்தேன். கள்ளும் பனையேறிகளும் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரை பனைத் தொழிலாளர் வாழ்வில் குடி எப்படி இயல்பாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியிருந்தது.

L3

தமிழக பனைத் தொழிலாளி

இயல்பாகவே குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், கள் வீட்டின் உணவுப் பொருளாயிருந்தது. கிறிஸ்தவ வீடுகளில் கள் ஆப்பம் செய்ய பயன்பட்ட ஒரு ஊக்கியாக இருந்தது. போதகரான எனது தந்தை குடிக்கு எதிராக தனது வாழ்வை அற்பணித்திருந்த்போதும் கூட “கள்” வீட்டில் இருப்பதைக் குறித்து ஏதும் சொன்னதில்லை. ஒரு காலகட்டத்தில் எங்குமே போதகர்கள் கள்ளினை ஆப்பம் செய்ய பயன்படுத்தாமல் இல்லை. நல்ல கள்ளினை பனையேறியிடம் கேட்டே பெற்றுக்கொள்ளுவார்கள். நான் பெங்காளூரு ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, எனது ஆசிரியராயிருந்த டாக்டர். கிரண் செபாஸ்டியான், கள்ளுக்கடையிலிருந்து ஆப்பம் செய்ய கள்ளு (தென்னங்கள்ளாக இருக்கலாம்) வாங்கி வந்ததை போகிறபோக்கில் சொன்னார்.

கள் என்பது மதுவாக பார்க்கப்பட்டு பருகப்பட்டபோது, அதற்குள் ஊமத்தை விதைகள், போதை மாத்திரைகள் ஆகியவை சேர்க்கப்பட்டன. இவ்வித சூழலில் அரசு கள்ளை விட, வெளிநாட்டு மதுபானங்களின் மேல் விருப்பு கொண்டு, கள்ளை தடை செய்ய முன்வந்தனர். கள்ளுக்கு தடை ஏற்பட்டபோது பலரும் இணைந்து அதனை ஏற்றுக்கொண்டனர். ஆண்கள் குடித்து விட்டு வீடுகளில் ஏற்படுத்தும் கலகங்களைப் பார்த்தோ என்னவோ தமிழக அரசு சொன்னதை எதிர்க்காமல் கிறிஸ்தவ சமூகம் அன்று ஏற்றுக்கொண்டது தவறு தான் என்று நினைக்கிறேன். ஆகவே தான் இன்றைய சூழல் “பானைக்குள்ளிருந்து அடுப்பிற்குள் நுழைந்த” கதையாகிவிட்டது. கள் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு மனத்தடை இருந்தது. இன்றும் கிறிஸ்தவ சமூகம் கள்ளு சார்ந்து ஒரு சரியான புரிதலை ஏற்றுக்கொள்ளாவிடில், மிகப்பெரிய தவறிளைத்தவர்களாக நாம் மாறிவிடுவோம். குறைந்த பட்சம் கள் சார்ந்த ஒரு உரையாடலை நாம் நிகழ்த்தவேண்டும் ஏனென்றால், வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் பனை மரங்களே வேலைவாய்ப்பு நல்கும் ஒரு மரமாக வரமாக இருக்கிறது. கள் வேலைவாய்ப்பினை பரவலாக்கும் ஒரு சுதேசி தொழில்.

L5

கள் இறக்குபவர்

கள் என்பது போர் நேரத்திலும்  விழாக்காலங்களிலும் பயன்படுத்தும் ஒரு உணவு என்றே நமக்கு கூறப்பட்டிருக்கிறது. வெறியாட்டுக்களிலும் களியாட்டுக்களிலும் கிறிஸ்தவம் பெரு விருப்பை காண்பிப்பது இல்லை. ஆனால் கள்ளின் பயன்பாடு அனுதினமும் எளியமனிதர்களின் வாழ்வில் இன்றியமையாதது என்று எனது 25 வருட தொடர் அலைச்சலில் கண்டுகொண்டேன்.  குறிப்பாக கோடை நேரத்தில் மக்களின் உடல் வெம்மையினை போக்க கள் தான் அருமருந்து. மதுபானத்தை தடை செய்த்திருக்கும் குஜராத்தில் கூட, வெயில் காலங்களில் உடல் சூட்டினை தணிக்க பனங்கள்ளினையே பீல் பழங்குடியினர் பயன்படுத்க்டுகிறார்கள். உடல் களைப்பை போக்கவும், தோல் நோய்களை நீக்கவும், குடலினை சுத்தம் செய்யவும் கள் பயன்பட்டுவந்தது. கருவுற்றிருக்கும் பெண்கள், பிரசவித்த பெண்கள், சவலைக்குழந்தைகள், கடும் உடல் உழைப்பினை நல்கும் உழைப்பாளிகள், கலைஞர்கள் போன்றோர் மீண்டெழ கள் தான் சிறந்த மருந்தாக பயன்பாட்டில் இருந்துவந்தது.

 

எனது நண்பரும் பனையேறியுமான நரசிங்கனூர் பாண்டியன் அவர்கள், ஏழாம் வகுப்பு படிக்கும் தனது மகள் கரிஷ்மாவின் தோல் வியாதிக்காக சந்திக்காத மருத்துவர்கள் இல்லை. முயற்சிக்காத மருத்துவமுறைமைகள் இல்லை. நானே அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கும்போது, அது குறித்த மனக்கிலேசம் அவருக்கு இருந்தது. அப்போது, ஒரு பரீட்சார்த்த முறையில் அவர் தனது மகளுக்கு கள் கொடுக்கத் துவங்கியிருந்தார். ஓரளவு பலன் தெரிகிறது என்றும் சொன்னார். எப்படி கள்ளினை தெரிந்துகொண்டீர்கள் என வினவியபோது, “உண்பொருள் குண அகராதி”  என்ற 120 ஆண்டு பழைமையான ஒரு புத்தகத்தை தான் வாசித்துக்கொண்டிருந்தபோது, பனங்கள் குடிப்பதால் – “சப்த தாதுக்களை பெருகப்பண்ணும், தொழுநோயை குணப்படுத்தும், சுக்கில விருத்தியை உண்டுபண்ணும்” என எழுதியிருந்ததை வாசித்து, தொழுநோயே குணமாகுமென்றால், தோல் நோய் குணமாகாதா என எண்ணி முயற்சித்திருக்கிறார். சுமார் ஒரு பருவகாலம் முழுவதும் கள் உண்ட அவளுக்கு இன்று தோல் நோய்கள் என்று ஏதும் இல்லை. இன்று வேறு எந்த உடல் சார்ந்த பிரச்சனைகளோ அல்லது உளம் சார்ந்த பிரச்சனைகளோ அவளுக்கு இல்லை. மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாள்.

பலருக்கும் எழும் ஒரு கேள்வி நமக்கும் எழுவது இயல்பு. பனங்கள் குடித்தவர்கள் கள் இறக்கும் பருவகாலம் முடிந்தபின்பு என்ன செய்வார்கள்? கை நடுங்காதா? இல்லை கள்ளிற்கு அடிமையாகிவிட மாட்டார்களா போன்றனவற்றிற்கு, இல்லை என்றே பாண்டியன் பதிலளிக்கிறார். கள்ளின் பருவ காலம் துவங்கும்போது ஊரின் பெண்கள் அனைவரும் தனி அழகு பெற்று விடுகின்றனர் என்று சிரிப்புடன் கூறுகிறார். பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்களின் முகமும் உடலும் சிறந்த ஒரு வடிவம் பெற்று பொலிவிடுகிறதை தான் கவனித்ததாக குறிப்பிடுகிறார். குறிப்பாக பனங்கள் என்பதை அவர் பழச்சாற்றுக்களுக்கு மாற்றாகவே குறிப்பிடுகிறார். தனது வீட்டில் கள்ளிருக்கும் நேரங்களில் எந்தவிதமான பழங்களும் விரும்பி உண்ணப்படுவதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

L8

கள் கலயம்

ஒருமுறை அவரோடு தங்கியிருந்த நாளின் அதிகாலை வேளையில், சூரிய உதயத்திற்கு முன்பதாக எழுந்து அவருடன் பனங்காட்டிற்குச் சென்றேன். பதனீரை இறக்கி கருப்பட்டி செய்யும் அவர், ஒரு பனை மரத்தில் மட்டும் கள் கலயம் போட்டிருந்தார். ஒரு லிட்டருக்கும் குறைவாகவே அன்று கள் கிடைத்திருந்தது. நானும், கரிஷ்மாவும், பாண்டியனும் அதனை பகிர்ந்தே குடிக்கவேண்டும் என்கிற நிலை. என் வாழ்வில் அத்தனை சுவையான பானத்தை நான் குடித்ததில்லை. அவ்வளவு சுவையாக அது இருந்தது. இன்று நாம் குடிக்கும் மென்பானங்களில் காணப்படும் செறிவூட்டப்பட்ட பானங்கள் எல்லாம் பனங்கள்ளிடம் பிச்சை கேட்கவேண்டும். அத்துணை சுவை. இளனீரில் காணப்படும் இனிப்பு மற்றும் சுர்ரென்ற ஒரு தன்மை யாவும் பனங்கள்ளில் உள்ளுறைந்திருந்தன. உள்ளத்தைக் குளிர்விக்கும் தன்மை யாவும் கள்ளினுள் சங்கமித்து இருந்தது. பொதுவாகவே கள் என்றால் புளிக்கும் என்ற சூழலிலிருந்து “இன்கள்” என்ற புரிதல் நோக்கி நான் வந்த நாள் அது. போதையும் கள்ளும் என்பது அரசியல் சார்ந்து கட்டமைக்கப்பட்ட ஒரு புனைவு என்பதையும் அன்று புரிந்துகொண்டேன்.

WFD1

இன்று போதை தலைகேறி இருக்கும் ஒரு அரசு மக்களின் அடிமடியில் உண்மையிலேயே கைவைத்துவிட்டது பேரதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அடி மடி எனும்போது கண்டிப்பாக அது பணம் மாத்திரம் அல்ல மகப்பேறு சார்ந்த குறைப்பாட்டையும் குறிப்பது தான் பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. குடும்ப கட்டுப்பாடு குறித்து பெரிதளவில் விளம்பரப்படுத்திய இந்த நாட்டில், இன்று மகப்பேறு மருத்துவமனைகளின் பெருக்கத்தைக் காணும்பொது, உண்பொருள் குண அகராதியில் சொல்லப்படும் சுக்கில விருத்திக்கு “பனங்கள்” எத்துணை முக்கியமானது என தெரியவரும். ஒரு சமூகத்தையே மலடாக்கும் ஆண்மையற்ற அரசுகளினால் நாம் இழக்கப்போவது நமது சந்ததிகள் தான் என்பது ஏன் நமக்குப் புரியவில்லை? மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் வாழ வேண்டி இவ்வித மாபாதகத்தை நாம் செய்ய துணிகிறோமா?

கள் சார்ந்து நான் எதனையும் வெளிப்படையாக எழுதிவிட இயலாது என்ற சூழலிலேயே எனது வாழ்வின் பனை சார்ந்த பயணம் சென்றுகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எனது கிறிஸ்தவ நண்பர் உன்னத சிறகுகள் என்ற பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெபக்குமார் அவர்கள், ஐயா நீங்கள் பனை சார்ந்து செயல் படுவதால்,  கள்ளு நல்லசாமியை தொடர்புகொள்ள வேண்டும் என்றார். அப்போது நான் மும்பையில் தங்கியிருந்ததால், எனக்கு அவரை தொடர்புகொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. கடவுளின் அருள் என்றுதான் கூறவேண்டும், திரு நல்லசாமி அவர்களின் இளைய மகள் பிரியதர்சினி நல்லசாமி எனது பனை பயணத்தைக் குறித்து கேள்விப்பட்டு, என்னை முகநூல் வழியாக தொடர்புகொண்டார்கள். அவர்களின் உதவியுடன் ஐயா நல்லசாமி அவர்களை நேரில் சென்று அவரது ஊரிலேயே சந்தித்தேன். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சந்திப்பு எனது வாழ்வின் முக்கியதருணம். கள் சார்ந்த அரசியல் மற்றும் அவரது புரிதல்கள் இதுவரை தமிழகத்தில் எவர் வயிலிருந்தும் புறப்படாத தர்க்க நேர்த்தி கொண்டவை. மாத்திரம் அல்ல எவரும் மறுக்க இயலா உண்மைகள் கூட.

SaththiyanEsan

குமரி மாவட்ட பனை தொழிலாளி – ஓலை வெட்டுவதற்கு ஆயத்தமாகும்போது

பார்வைக்கு மட்டுமல்ல பழகுவதற்கும் மிக எளிமையான மனிதராக விளங்கும் திரு நல்லுசாமி அவர்கள், கள் பனை மரங்களிலிருந்து இறக்கப்படவேண்டும், அதனை அனைவரும் பருகவேண்டும், கள் ஒரு போதைப்பொருளல்ல என்பன போன்ற, கள்ளுக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வருபவர். பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பேசி கள்ளிற்காக தொடர்ந்து போராடி வருபவர். ஒருவேளை தமிழகத்தில் கள் சார்ந்த அனுமதி கிடைத்து ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் ஐயா நல்லசாமி அவர்களின் தொடர் போராட்டம் என்பதை யாரும் மறுக்கவியலாது. சாதிகளைக் கடந்து பொது நோக்கில் அவர் காணும் தரிசனம் என்பது “பேராண்மை” கொண்ட பெருந்தகைகளுக்கே உரியது.

கள்ளுக்கான போராட்டம் எனபது வருகின்ற ஜனவரி, 21 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பெப்ருவரி 2, வள்ளுவர் கோட்டத்தில் வைத்து மிக பிரம்மாண்டமான அளவில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. திரு நல்லசாமி அவர்கள் கூறுகையில் “வரும், 21ல் நடைபெறும் என எங்கள் இயக்கம் அறிவித்தது, கள் இறக்கும் போராட்டம் அல்ல. 2009லேயே கள் இறக்குவோம் என, அறிவித்து தொடர்ந்து இறக்கி வருகிறோம். அதை வரும், 21ல் விரிவுபடுத்த உள்ளோம். கள் இறக்கியது தொடர்பாக, 48 வழக்குகள் போடப்பட்டது. 44 வழக்கில் விடுதலை பெற்றுள்ளோம். நாங்கள் புதிதாக கள் இறக்குவது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. கள் இறக்கும் போது, சட்டரீதியான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டால் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம். மீறி கைது செய்தால் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வோம். அரசியல் அமைப்பு சட்டம், உணவு தேடும் உரிமையை மக்களுக்கு அளித்துள்ளது. இதன்படி கள் இறக்குகிறோம். ஜனநாயக முறையில் மக்கள் ஆதரவு திரட்ட, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நடவடிக்கையை மேற்கொள்கிறோம்”. இத்தனைத் தொடர்ச்சியாக கள்ளிற்கான போராட்டம் சமீபத்தில் நடைபெற்றது இல்லை.

கள் சார்ந்து தங்களது புரிதலைக் கூறும் அனேகரிடம் நான் பேசியிருக்கிறேன். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மதுவிற்கு எதிரானவர்கள். ஆனால் காந்தி இன்று இருந்திருந்தால், மதுவினை எதிர்த்து சுதேச பானமான கள் இறக்குவதற்காகப் போராடியிருப்பார் என தனது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார். எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களை நான் திருவண்ணாமலையில் சென்று சந்தித்தபோது, அரசின் கள் மீதான தடையை குறித்து அதிருப்தி கொண்ட அவர், ” நானும் எனது குழந்தைகளும் இணைந்து எங்கள் உணவு மேஜையில் கள் அருந்தும் நாளிற்காக காத்திருக்கிறேன்” என்றார்.

டாஸ்மாக் வாசலில் குடித்துக்கொண்டிருந்த ஒரு முதியவரைப்பார்த்து கேட்டேன், அய்யா பனங்கள் குடிப்பதை விட்டுவிட்டு இதனைக் குடிக்கிறீர்களே என்று. அதற்கு அவர், பனங்கள் கிடைத்தால் இங்கு யார் வரப்போகிறார்கள் என்றார்.

குமரி மாவட்டத்திலுள்ள எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள், கள்ளுக்கு எப்போது போதை வருகிறது? அது கடைக்கு வரும்போதுதான் போதை ஏற்றப்படுகிறது என்று சொல்லுவார்கள். தனிக்கள் அனைவருக்கும் உரியது என்றும் மாலைபயினியின் சுவைக்கு இணையேதும் இல்லை என்றும் சிலாகிக்கிறார்.

குடியினால் தமிழ் சமூகம் அழிந்துவிட்டது நமக்குத் தெரியும். 60 பனைகள் வரை ஏறி தொழில் செய்த பனையேறிகளால் இன்று 20 பனைகள் கூட ஏற இயலாதபடி தமிழகத்தில் ஓடும் மது ஆறு மக்களை முடக்கியிருக்கிறது. இச்சூழலில், கள் விற்பதற்கான ஒரு போராட்டம் என்பது மிகவும் முக்கிய தேவையாகிறது. குடிகாரர்களை மீட்பதற்கும் கள்ளே நமது கையிலிருக்கும் மிகச்சிறந்த ஆயுதம். என்னைப் பொறுத்த வரையில், ஆந்திராவில் நான் கண்டதுபோல், பனை தொழிலாளிகளோ அல்லது அவர்களது துணைவிகளோ கள் விற்பது தான் சிறந்தது. காலை எட்டுமணிக்குள் கள் குடிப்பதும், எஞ்சியவற்றை குடிகாரர்களுக்காக வைத்திருப்பதும் தான் சரி. கள் விற்கும் கடைகளை எக்காரணம் கொண்டும் எவரும் ஊக்குவிக்கக் கூடாது. அது பனையேறிகளை மீண்டும் அடிமைத்தனத்திற்கு நேராக இட்டுச்சென்றுவிடும். கள் சார்ந்து போராடுகிறவர்கள், கள் ஆலை வேண்டும் என போராடுவார்கள் என்றால், பனையேறிகள் மீண்டும் தங்கள் இழிநிலைக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று கள் இறக்க விரும்பும் அனேகர், பனை மரங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள். நமது தோட்டத்தில் கள் இறக்கி விற்கலாமே என்னும் நப்பாசையில் கள் போராட்டத்திற்கு பின்புலமாக நிற்பவர்கள். இவர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பனையேறிகள் விற்கும் கள்ளில் கிடைக்கும்சரிபாதி வருமானத்தை பனை மரங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். மாறாக பனையேறிகளுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுத்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய கள் இறக்கிகொள்ள முற்படுவார்கள் என்று சொன்னால் அதுவும் கண்டிக்கத்தக்கது. கள் விடுதலைப் போராட்டம், பனைமரத்தினை தழுவி வாழும் மனிதர்களுக்கான விடுதலை. அதற்கு தடையாக எவரும் நிற்பது ஏற்புடையது அல்ல.

கள் பெருமளவில் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில், கிளி கட்டு என்ற ஒரு முறைமை உண்டு. மன்னர் காலத்தில் பொற்கிழி வழங்குவார்களே அது போலவே மருத்துவகுணம் நிறைந்த மூலிகைகள் வேர்கள் மற்றும் பட்டைகளை ஒன்றாக்கி ஒரு துணியில் கட்டி மருத்துவர் கொடுத்தனுப்புவார். இவைகளை பனையேறியிடம் கொண்டு கொடுக்கவேண்டும். அவர் அதனை சுண்ணாம்பு இடாத கலயத்தில் இருக்கும் பாளையில் கட்டிவிடுவார். பாளையில் இருந்து சொட்டும் பதனீர் இந்த கிழியில் விழுந்து ஊறி பின்னர் பானையில் சேகரிக்கப்படும். மிக குறைந்த அளவு பதனீர் ஊறும் பனைகளிலேயே இதனைக் கட்டுவார்கள். சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரைக்கும் கிடைக்கும் அந்த கள்ளினை தவறாது குடித்துவந்தால் நோய்கள் அண்டாது. குறிப்பாக வாத நோய் கண்டவர்கள் கள் குடிக்க இயலாது, அப்படிப்பட்டவர்கள் எல்லாம், நல்லமிளகு திப்பிலி போன்ற பொருட்களை இணைத்து கிளி கட்டுவது வழக்கம்.

கள் இறக்குவதற்கு தடை என்பதை மலிவான அரசியலாகவே நாம் பார்க்க இயலும். அரசு மதுபானத்தில் வரும் வருமானத்திற்கு கட்டுண்டு கிடக்கிறது. ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கிறது. அதற்கு ஒத்து ஊதுகின்ற குமரி நம்பி ஆகட்டும், குமரி அனந்தன் ஆகட்டும் பனை சார்ந்த வாழ்வியலை நசுக்கப் புறப்பட்டிருக்கும் கீழ் மக்களே. இவர்களின் “போதை” சார்ந்த வாதங்கள் புளித்துப்போனவை. குறிப்பாக மனிதனின் உணவு தேவையில் 10% பனை உணவிலிருந்து கிடைக்கும் என்று சொல்லுகின்ற குமரி நம்பி தமிழக அரசு விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தில் பனை தொளிலாளர்களுக்கு 10% கொடுக்கிறார்களா என எண்ணத்தலைப்படவில்லை. மருத்துவ செலவுகளில் 40 சதவிகிதம் பனை உணவுகளால் மிச்சமாகிறது என சொல்லுகிறவர், தாலியறுத்து நிற்கும் பெண்களின் வாழ்வில் தாலி பாக்கியம் அளிக்கும் கள்ளினைக் குறித்து பேசாதது அறிந்தே செய்யும் இருட்டடிப்பு.

பாளையைச் சீவி கள் எடுத்துவிட்டால், நுங்கு, பதனீர், பனம் பழம், கருப்பட்டி, கற்கண்டு, பனங்கிழங்கு போன்றவைகள் கிடைக்காது என்பவர் சொல்லாமல் விட்ட ஒரு உண்மை என்னவென்றால், தமிழகத்தில் இன்று 5 சதவிகிதம் பனை மரங்களே ஏறப்படுகின்றன. அப்படியென்றால் 95% பனை மரங்கள் இன்று ஏறுவோர் இன்றி இருக்கின்றன என்கிற உண்மை பொட்டில் அடித்தார்போல் நம் கண்முன்னால் இருக்கின்றது. சர்வதேச பனை பொருளாதார மாநாடு நடத்துகிறவர்கள், இதுவரை எத்தனை சதவிகித பனை மரங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர் என சொல்லுவது அவர்கள் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும்.

ஆகவே கள்ளிற்கான தடை உடைபடுகையில் என்ன நிகழும் என எண்ணிப்பார்ப்பது நலம். அவனவன் தன் தன் நிலத்தில் இருக்கும் மரத்திலிருந்து கள்ளினை இறக்கி குடிப்பார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் சீரடைவதை உணர்வார்கள். அரசு துவங்கியிருக்கும் டாஸ்மாக் கடைகள் ஒவ்வொன்றாக வருமானமின்றி மூடப்படும். கார்பரேட்டுக்களை நம்பி அல்ல நமது அரசுகள், மக்களை நம்பி தான் அரசு என்கிற கருதுகோள் மீண்டும் நிலைநிறுத்தபடும். தேவையற்ற பல ஆணிகளை நாம் பிடுங்கி வீசலாம். பனை பொருளாதாரம் என கூவி சொல்லும் சுதேசி இயக்க தலைவர் குமரி நம்பி, மற்றும் காந்தியின் பெயரை வீணிலே வழங்கும் குமரி அனந்தன் ஆகியோர்  கள் இறக்கும் 10 லட்சம் இளைஞர்களின் வயிற்றில் அடித்துவிட்டு, பல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் தாலியை அறுத்துவிட்டு, பல்வேறு எதிர்கால குழந்தைகளின் வாழ்வை நாசமாக்கியபடி இருக்கும், டாஸ்மாக் நடத்தும் அரசின் சார்பாக நிற்பது அருவருக்கத்தக்க நிலைப்பாடு.

தமிழகத்தில் 2000 வருடங்களுக்கும் மேலாய் கள் இறக்குவதும் பனை சார்ந்த வாழ்வியலும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. கள்ளைக்குறித்து மிக அதிகமாக பேசிய சங்க இலக்கியம் தான் “பவழ கூர்வாய் செங்கால் நாராய்” என பனங்கிழங்கிற்கு நிகராக செங்கால் நாரையின் கூர்வாய் பகுதியினை ஒப்புமைப்படுத்தியிருக்கிறது. பனை சார்ந்த தொழிலாளிகளுக்கு மீட்புஅமையக்கூடாது என்று களமிறக்கப்பட்டவர்கள் தானோ குமரி அனந்தனும், குமரி நம்பியும் என்ற சந்தேகம் இதனால் வலுப்பெறுகிறது. இவர்களை இயக்குபவர்களை கண்டு புறம்தள்ளாவிடில் பனை போராட்டம் வெற்றிபெறாது.

எனது ஆதரவினை கள் இயக்கதிற்கும், கள் இறக்க போராடும் மக்களுக்கும், பல்லாயிரம் பனையேறிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். இப்போராட்டம் தமிழக அளவில் எட்டும் ஒரு வெற்றியாக மட்டுமல்ல, சர்வதேச அளவில் கள்ளினை மென் பானமாக முன்னிறுத்தும் ஒரு சிறப்பு கவனயீர்ப்பு போராட்டமாக அமைய வாழ்த்துகிறேன்.

கள்ளுக்கு கடையும் வேண்டாம்!

கள்ளுக்குத் தடையும் வேண்டாம்!

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: