கள் விடுதலைப் போராட்டம் – 2


பனம்பாளை கூறும் உண்மை

பனை மரம் சார்ந்த அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களால் கள் குறித்த புரிதலை எவ்வகையிலும் எட்ட இயலாது ஆனபடியால் பனை சார்ந்த புரிதலையும் பனை சார்ந்து வாழும் சமூகத்தினரின் புரிதலையும் விரிவுபடுத்தி எழுத கடமைப்பட்டுள்ளேன். பனை சார்ந்த விழிப்புணர்வு புகைப்படங்களையும்  – பனை சார்ந்த புரிதலற்றவர்களின் பதிவுகளை புகைப்படமாக ஒப்புநோக்க இங்கே பதிவிடுகிறேன். சீர்தூக்கி பார்க்கும் தமிழ் சமூகம் அனைத்தையும் ஆய்ந்து பொருள் கொள்ளட்டும்.

பனை மரம் ஆண் பெண் என இரு தன்மைகள் கொண்டது. அதாவது தாவரவியலாளர்கள் ஆங்கிலத்தில் இதனை “Dioecious” என அழைப்பார்கள். இதனை தமிழில் இருபாற்கூறுகள் என்றும், பாலின தனிப்பாடு என்றும் கூறுவார்கள். புரியும்படியாக கூறவேண்டுமென்றால், ஆண் பனையில் ஏற்படும் பாளைகளிலிருந்து பதனீர் கள் போன்றவை கிடைக்கும் – நுங்கு அல்லது பனம்பழம் ஆண் மரங்களில் உருவாகாது. ஆகவே பனங்கிழங்கு அல்லது தவண் போன்றவைகளும் ஆண் மரத்திலிருந்து கிடைக்காது. பெண் பனை மரங்களில் இருந்து தான் பனம் பழங்கள் நுங்கு ஆகியவைக் கிடைக்கின்றன என்றாலும் பெண் மரங்களிலிருந்தும் பதநீர் மற்றும் கள் இறக்க இயலும். ஆகவே இரு மரங்களும் பதனீரோ கள்ளோ கொடுக்கும் தன்மையுடையவைகள் என்ற கருத்தை முதலில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

DSC_0204

பனம்பழங்கள் காய்த்துக்குலுங்கும் பெண் பனைமரங்கள்

பனை சார்ந்த ஆய்வுகளை சர்வதேச அளவில் மேற்கொண்ட Dr. T A. டேவிஸ் அவர்கள் பனையில் காணப்படும் இந்த இருபால்கூறின் விகிதத்தை 1:1 என குறிப்பிடுகிறார். அதாவது ஒரு ஆண் மரத்திற்கு இணையாக மற்றொரு பெண் மரம் இருக்கும் என தனது ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறார். இவைகளை நாம் பொருத்திப்பார்க்கும்போது, தமிழகத்தில் இருக்கும் சரி பாதி மரங்கள் ஆண் மரங்களாகவும் மற்றொரு பாதி பெண் மரங்களாகவும் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அப்படியானால், ஆண் மரங்களிலிருந்து கள் அல்லது பதனீர் எடுத்துவிட்டு, பெண் மரங்களில் இருந்து தேவையான பழங்களையும் கிழங்குகளையும் எடுப்பதற்கு வாய்ப்புகள் வளமாக இருக்கிறன. என்றாலும் நமக்கு ஒரு கேள்வி இருக்கும், ஆண் பெண் என இரு மரங்களிலும் பதனீர் மற்றும் கள் கிடைக்குமென்றால், அனைத்தையும் சீவி தள்ளிவிடுவார்களே, நமக்கு பனை சார்ந்த பிற உணவுகள் கிடைக்காமல் போய்விடுமே என்று பதைபதைக்கலாம். இது பனை மரத்தோடு உறவில்லாத பொருள்முதல்வாதிகளின் கூற்று. சற்றே பொறுமையுடன் பனை சார்ந்து வாழும் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் எனக் கேட்போமென்றால் நமக்கு இது குறித்து தெளிவுகள் கிடைக்கும்.

DSC08043

ஆண் பாளைகள் நிறைந்த பனை. இவற்றிலிருந்து இயற்கையாகவே நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு கிடைக்காது. இவற்றின் பாளையிலிருந்து கள்ளோ அல்லது பதனீரோ மட்டுமே பெறமுடியும்.

பனை சார்ந்து வாழும் பனை தொழிலாளர்கள் எவரையும் இன்று பனை சார்ந்து பணியாற்றும் எவரும் பொருட்படுத்துவதில்லை. பனையேறிகளுக்கு அறிவுரை சொல்லும் உயர்வகுப்பினராகவே இன்று அனேகர் தங்களைக் காட்டிக்கொள்ளுகின்றனர். ஆழ்ந்து நோக்கினால் சூழல் அப்படியல்ல என நமது நிலைப்பாடுகள் பல்லிளித்துவிடும்.

இன்று பனை சார்ந்த புரிதல் கொண்டவர்கள் எவரும் பனையேறிகளுக்கு நிகரானவர்கள் அல்ல. பனையேறிகளே சிறந்த சூழியலாளர்கள். பனை சார்ந்த சூழியல் சமன்பாட்டினை அவர்களை விட அதிகம் அறிந்தவர் எவரும் இருக்க இயலாது. இச்செய்தி இன்றளவும்  நமது கண்களுக்கு மறைவாக இருந்தது. இது வெளியில் தெரியும்போது போலி வேடதாரிகளின் முகத்திரைகள் கிழிகின்றன. குறிப்பாக பனை பொருளாதாரம் குறித்து பேசுபவர்கள், பனை மரத்தினை சூழியலின் ஒரு அங்கமாக கருதாமல், பனை மரத்தினை பணம் காய்க்கும் மரம் என முன்வைப்பது தான் சிக்கல்களின் ஆணி வேர். பனை மரம் ஒரு வாழ்வியல் சார்ந்த மரமே ஒழிய அது பணத்தினை உற்பத்தி செய்யும் மரம் என்பவர்கள் முழுக்க முழுக்க தவறான புரிதலில் இருக்கிறார்கள் என்பதே பொருள். பனை மரத்தினை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்களை சுரண்டிப் பிழைக்கவே பனை பொருளாதாரம் என்னும் கருதுகோள் முன்வைக்கப்படுகிறதே அன்றி பனை சார்ந்த வாழ்வியலை எவரும் முன்வைப்பது இல்லை.

DSC08743

ஆண் பனையானாலும் பெண் பனையானாலும் பனையோலைகளும் மட்டைகளும் எடுத்து தமக்குத் தேவையான பொருட்களை செய்துகொள்வர் பனையேறிகள். ஓலை மற்றும் மட்டை தொழில் செய்பவர்க்கும் மூலப்பொருள் கொடுப்பவர் இவரே

பனை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன? ஒரு மனிதன் தனது வாழ்வின் சூழலுக்கு ஏற்ப பனை மரத்தோடு இசைந்து வாழ்வது தான் பனை வாழ்வியல். இந்த வாழ்வியலில் இருந்து உபரியாக கிடைக்கும் பொருட்களே, அவர்களின் பொருளாதார ஆணிவேரே அன்றி, பொருளியல் சார்ந்த நோக்கு அல்ல அவர்களது வாழ்கை முறைமை. பனைத் தொழிலாளியின் வாழ்வியலை ஆழ்ந்து நோக்குகையில், பனை சார்ந்த உணவுகள், கலாச்சாரம், பனை சார்ந்த பயன்பாட்டு பொருட்கள், உபகரணங்கள், உப தொழில்கள் மெல்ல எழுந்துவருவதைக் காணலாம். இப்படியான ஒரு முழுமை நோக்கு இல்லாமல் பனை சார்ந்த ஒரு தொழிலை முன்னெடுக்க கூறி அதன் மூலமாக எவரும் பனை மரத்தினை காப்பாற்றிவிட இயலாது. அப்படி கூறுபவர்கள் பனை மரத்தையோ பனையேறியையோ முழுமையாக புரிந்துகொள்ளாதவர்கள் மாத்திரம் அல்ல பனை சார்ந்த வாழ்வியலை அழிக்க புறப்பட்டிருக்கும் தீய சக்திகள்.

பனை மரங்கள் தோற்றத்திற்கு காட்டு மரம் போல காணப்பட்டாலும், அது மனிதனை சார்ந்து இருக்கும் ஒரு தாவரம் தான் என்பதை பனை சார்ந்திருக்கும் நிலப்பரப்புகளிலிருந்து அறியலாம். அடர் வனங்களோ அல்லது மனித நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலோ பனை மரங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆகவே பண்பாடு சார்ந்து பனைக்குள்ள உறவை பிரித்து வெறும் வணிக நொக்கில் பனை மரத்தினை முன்வைப்பது என்பது பனைக்கும் பனை தொளிலாளர்களுக்கும் உள்ள உணர்வுபூர்வமான உறவையும், தொல் பழங்காலம் தொட்டு மனிதனுக்கும் இந்த மரத்திற்கும் உள்ள உறவை நீக்கும் சதிதிட்டம் என்றே கூறுகிறோம்.

பனைத் தொழிலாளி பனை ஏறும் முன்பதாக பல படி நிலைகளை மேற்கொள்வார். பாளை வந்துவிட்டதா என முதலில் பார்வையிடுவார். பாளைகள் அனைத்து மரத்திலும் ஒரு போல வந்துவிடாது. அப்படியே பளை வந்த அனைத்து மரங்களிலும் அவர் ஏறி கலயங்கள் கட்டுவதில்லை. இப்பணிகளில் பனையேறியின் தெரிவு, பொறுமை, அவதானிப்பு போன்றவைகள் குறித்த தகவல்கள் நம்மிடம் போதுமான அளவு இல்லை. காரணம் பனையேறிகள் சார்ந்து ஆய்வு செய்தவர்கள் என ஒருவர் கூட நம்மிடம் இன்று கிடையாது.

ஒரு தோட்டத்தில் 30 பனை மரங்கள் இருந்தால் அனைத்திலும் பனைத் தொழிலாளி ஏறிவிடுவதில்லை. சுமார் 20 மரங்கள் மட்டுமே ஏறுவார். மீதமிருக்கும் பனைகளில் பெரும்பான்மை பெண் பனைகளாகவும் ஒரு சில பனைகள் ஆண் பனைகளாகவும் இருக்கும். பெண் பனைகள் நுங்கு, பனம்பழம் மற்றும் கிழங்குக்காக விடப்படுவது ஒரு காரணம் என்றால், சரியான மகரந்த சேர்க்கைக்காக ஆண் பனைகளில் உள்ள பாளைகள் சீவப்படாமல் விடுவது மற்றொரு காரணம். இவைகள் யாவும் சொல்லிக்காட்டப்படுவதில்லை, ஆனால் பனையோடுள்ள உறவால் ஏற்படும் புரிதல்.

இவ்விதமாக நமது வாழ்வில் நெருங்கியிருந்த ஒரு மரம் என்பது, பசித்தவனுக்கு உணவும், தங்க வீடும், புழங்கு பொருட்களுமாக இருந்த ஒரு மரத்தை கள் இறக்கத் தடை என்ற ஒற்றை சட்டத்தால் தகர்த்துவிட்டார்கள். 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொன்மையான ஒரு தொடர் சங்கிலி அறுபட்டு, பனை சார்ந்த வாழ்வு தகர்ந்து போனது.

ஒரு மரத்திலிருந்து 180 லிட்டர் பதனீர் 20 மட்டைகள் அது இது என புள்ளிவிபரங்கள் கொடுக்கின்ற வகையில் அல்ல பனை மரங்களின் செயல்பாடு. அது மனிதனின் பயன்பாட்டிற்கு ஏற்ப தன்னையே தரும் ஒரு மரம்.

பனம் பழங்களில் பல்வேறு வகைகள் உண்டு அவைகளை கொட்டை காய்ச்சி மற்றும் சதைக்காய்ச்சி என பிரிப்பார்கள். தோலின் நிறத்தினைக்கொண்டு வெள்ளைக்காய்ச்சி மற்றும் கறுப்புகாய்ச்சி என்றும் அழைப்பார்கள். மாமரங்களில் பழத்திற்கு ஏற்றது, பச்சையாக சாப்பிட ஏற்றது, ஊறுகாய் செய்ய ஏற்றது, வடுமாங்காய் செய்ய ஏற்றது, மீன் குழம்பிற்கு ஏற்றது போன்ற தனித்தன்மை வாய்ந்த மரங்களை நாம் அடையாளப்படுத்தி வைத்திருப்பதுபோல், பனை மரத்தில் எந்த பனை எதற்கு ஏற்றது என பனையேறி தனது அனுபவத்தின்மூலம் தெரிந்து வைத்திருப்பார். பதனீராக கொடுக்க ஏற்ற மரம், கருப்பட்டி காய்ச்ச ஏற்ற மரம், கள்ளு கிடைக்க ஏற்ற மரம் என தனித்தனியாக பிரித்து வைத்திருப்பார்கள். மேலும், பதனீர் கலயம் கட்டிய அதே மரத்தில் மற்றொரு பாளையில் தேவைப்பட்டால் கள் கலயம் கட்டுவதையும் வழக்கமாகவே கொண்டுள்ளார்கள். இவர்களிடம் நீ இப்படித்தான் செய்யவேண்டும் என அறிவுறை சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது? டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு இயங்குகிறது என மார்தட்டும் அரசிற்கா? அல்லது இவர்களின் அடிவருடியாக இருக்கும் போலி பனை பாதுகாவலர்களுக்கா?

kal

உணவு உரிமைக்கு எதிரானது கள் என தனது அறிவுறையை துவங்கும் சென்னை வாழ் குமரி நம்பி, பனை மரத்தில் ஆண் பெண் என இரு தன்மைகள் உள்ளதை அறியாதவர் போலும். பனம் பாளையைச் சீவி கள் எடுத்துவிட்டால், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்றவைகள் கிடைக்காது எனக் கூறுகிறார். இவைகள் அனைத்தும் ஆண் பனைகளிலிருந்தும் கிடைக்காதே? பெண் பனைகள் அல்லவா நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு கொடுப்பவை? அப்படியிருக்க ஆண் பாளைகளைச் சீவி கள் எடுப்பதால் பதனீர் மட்டும் கிடைக்காது என சொல்லலாமா? அப்படியும் முழுமையாக சொல்லிவிடமுடியாது, ஏனென்றால், ஒரே மரத்தில் பல்வேறு பாளைகள் எழும்பும். அவைகளில் தேவையானதில் கள்ளையும் மற்றோன்றில் பதனீரையும் போடுவது பனைஏறுபவரின் தெரிவு என்றே விடப்படவேண்டும்.

கள் இறக்க, என்றைக்கு தடை வந்ததோ அன்று தான் இந்த தொழில் வீழ்ச்சி நோக்கி வந்ததை வரலாறு நமக்கு கற்பிக்கின்றது. குமரி மாவட்டத்தில் எனது சின்னஞ்சிறு வயதில், பள்ளிகூடம் முடிந்த பின்பு பேருந்தின் வருகைக்காக தாம்சன் தாத்தா கடையில் தான் நானும் அக்காவும் இருப்போம். மார்த்தாண்டம் எல் எம் எஸ் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் அந்த கடை இருந்தது. லாரிகளில் கருப்பட்டிகள் அன்று வரும். கள் தடைக்குப் பின் அந்த லாரிகளின் எண்ணிகை குறைந்தன. பனையேறிகள் வஞ்சிக்கபட்டு பேச்சுரிமை இன்றி ஆக்கப்பட்டனர். அதற்கு அன்று கருவியாக குமரியைச் சார்ந்த் ஒருவர் இருந்தார். தமிழகமெங்கு சென்றாலும் பனையேறிகள் அவரை மன்னித்துவிட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்லி நான் கேட்டதில்லை. பனையேறிகளுக்கு அவர் இழைத்த துரோகம் அப்படிப்பட்டது. இன்று குமரி என்ற அடைமொழியுடன் மற்றொரு துரோகி உருவாவதை நாம் தடுக்காவிட்டால், காலம் நம்மை கேள்வி கேட்கும்.

ஒருவேளை எனது கூற்றுகள் எவரையும் புண்படுத்தும்படி இருக்கும் என்று யாரேனும் கருதினால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து ஒரு 10 பனையேறிகளைக் கண்டு, அவர்கள் வாய்மொழி கூற்றைக் கேட்டு உணருங்கள். பனைமரத்தினை புகைபடங்களுக்காக கட்டியணைத்து பாதுகாக்காமல், தனது நெஞ்சு உராய தழுவி அதனுடன் இரண்டரக்கலந்த பனையேறி எந்த சாதியைச் சார்ந்தவனாயினும், கள் குறித்து ஒரு வார்த்தைக் கூட தவறாக சொல்லமாட்டான். அவனுக்கு தெரியும் “கள்ளு தள்ளைக்கு சமம்”[1] என்று.

தனது உழைப்பை முன்னிறுத்தி வாழும் பனையேறிகளின் வாழ்வில் உரிமைகள் மறுக்கப்படுவதை எந்த நவீன சமூகமும் ஒப்புக்கொள்ளாது.

 

[1] “கள்ளு தள்ளைக்கு சமம்” என்பது குமரி மாவட்ட வழக்கச் சொல். தள்ளை என்பது தாய் என குமரிமாவட்டத்தில் பொருள்பெறும். பனை மரத்தினை காளியின் வடிவம் என்றும் காளியே பனையேறிகளின் தாய் என்றும் ஒரு புரிதல் தென்மாவட்ட  பனையேறிகளிடம் உண்டு.

தகுந்த ஆதாரங்களுடன் கள் விடுதலைப் போராட்டம் தொடரும்…

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

 

ஒரு பதில் to “கள் விடுதலைப் போராட்டம் – 2”

  1. ponkathaan Says:

    அருமையான பதிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: