கள் விடுதலைப் போராட்டம் – 3


அறியாமை புரியாமை

“கள் இறக்கினால் பனை தொழிலாளர்களது வாழ்வு சிறக்கும் என்பது அறியாமை புரியாமை” என்ற பொன்மொழி நமக்கு கிடைத்திருக்கிறது. கள் இறக்கும் அனுமதியினால் பனையேறிகளுடைய வாழ்வு சிறக்கும் என்று நிறுவப்பட்டால், மேற்குறிப்பிட்ட கருத்தினை விளம்பிய பெருந்தகை கள் இறக்க முன்வருவாரா? இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், கொள்கை அளவில் அவர்கள் கள் இறக்க எதிரானவர்கள்.  இந்த கொள்கையே அவர்களை பனைத் தொழிலாளர்களுக்கு எதிரானவர்களாக நிறுத்துகிறது. நாங்கள் பனையேறிகளுக்கு துணை நிற்கிறோம் என்ற கூற்று ஒருவரின் வாயிலிருந்து வரவேண்டுமென்றால், அவர் பனையேறின் வாழ்வினை உய்த்துணர்ந்திருந்தாலன்றி அவ்விதம் சொல்ல இயாலாது.  ஆகவே சற்றும் உண்மையின் பால் நிற்கும் தகுதியற்று வறட்டு கொள்கை பிடிப்பு கொண்டவர்களின் கூற்றினை நாம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை.

Kal 3

உண்மைக்குப் புறம்பான கொள்கை

எனது வாழ்வில் இரண்டு இடங்களில் கள் இறக்குபவர்கள் கருப்பட்டி காய்ச்ச கற்றுக்கொடுக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளேன். ஒன்று மஹாராஷ்டிரா மற்றொன்று குஜராத். இரண்டு இடங்களிலும் கருப்பட்டி செய்யத் தெரியாது என்கிற சூழலில், இம்முயற்சிகளை முன்னெடுத்தோம். நான் தனித்து நின்று செயல்பட்ட இடத்தில் தோல்வியும், குழுவாக இணைந்து செயல்பட்ட இடத்தில் வெற்றியும் கிட்டியது. இன்றும் மகராஷ்டிரா பகுதிகளில் உள்ள வார்லி பழங்குடியினருக்கு கருப்பட்டி செய்ய கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். தமிழகத்திலும் பனையேறிகள் கருப்பட்டி காய்ச்ச தொடர் ஊக்கத்தை அளித்துக்கொண்டுதானிருக்கிறேன். ஆனால், கள் இறக்குவதன் தேவை என்பது பனை சார்ந்த வாழ்வினை மேற்கொள்ளும் மக்களின் தெரிவு என்பதனையே எனது அவதானிப்பு தெரிவிக்கின்றது. கள் இறக்குவது என்பது பனை சார்ந்து வாழும் மக்களின் உரிமை. பனை சார்ந்து வாழும் மக்களின் உரிமை என்றவுடன், இவ்வார்த்தைகளுக்கு சாதி சாயம் பூச முற்படுகின்றனர்.

2015 – 16 ஆண்டு நான் மும்பையில் ரசாயினி என்ற பகுதியில் பனியாற்றிக்கொண்டிருந்தபோது, கள் இறக்கும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மற்றும், புலம்பெயர் பீகாரிகள் கள் இறக்கிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. அதற்கு முன்பே, மலாட் மட் பகுதியில், நாடார்கள் கள் இறக்குவதும், கோரே பகுதிகளில், கத்தோலிக்க குடும்பங்கள் பண்டாரி எனும் மகராஷ்டிராவின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உதவியோடு கள் இறக்குவதும், வேறு சிலர் ஆந்திராவிலிருந்து ஆட்களை அழைத்து, பனங்கள் இறக்குவதையும் பார்த்திருக்கிறேன். ஆகவே, இவைகள் பனை மரம் சாதியைக் கடந்து பல்வேறு மக்களினங்கள் வாழ்வில் இணைந்திருக்கும் மரம் என்பதை என்னால் உணர முடிந்தது.

DSC_0212

மும்பையில் கள்ளிறக்கும் ஆந்திராவைச் சார்ந்த பனையேறி

மேற்கண்ட புரிதல்களை மனதில் வைத்து 2016 ஆம் ஆண்டு மே16 ஆம் தேதி, எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மும்பையிலிருந்து எனது சொந்த ஊரான நாகர்கோவிலை நோக்கி பயணித்தேன். 18 நாட்கள் நிகழ்ந்த இந்த நெடிய பயணத்தில், ஆந்திராவில் காணப்படுகின்ற பனை சார்ந்து வாழும் நாடோடிகள் குறித்த தகவல்களையும் அறிந்துகொண்டேன். எங்குமே பனையேறிகள், கள்ளுடன் இணைந்தே வாழுகிறார்கள். அவர்கள் வாழ்வில், போதை என்பது கள் அல்ல, அதற்காக வேறு சாராயம் காய்ச்சும் முறைமைகளை வைத்திருக்கிறார்கள்.

ஒருமுறை டாடா நிறுவனம் ஒரிசாவில் நடத்திய ஒரு கருத்தரங்கிற்குச் சென்று பனை சார்ந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அங்கு வந்திருந்த ஒரு பழங்குடியின வாலிபன் என்னை தொடர்புகொண்டு, நான் கோயா பழங்குடியினத்தைச் சார்ந்தவன், எங்கள் வாழ்வில் பனை இன்றியமையாதது என்றான்.  பல ஆச்சரியமான தகவல்களை அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார், அவற்றில் மிக முக்கியமானது கள்ளினை புளிக்கவைத்து அதிலிருந்து மிகவும் விலை குறைவான ஆனால் உயர் தரமான சாராயத்தை அவர்கள் பெருகிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. அப்படியானால், கள் என்பது போதைப் பட்டியலில் அல்ல, அது பழச்சாறுகளுக்கு இணையாகவே கையாளப்பட்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டு நிகழ்ந்த எனது இலங்கைப் பயணத்தில், அங்கே கள் புட்டியில் அடைக்கப்பட்டு விற்கும் நிலையினை அறிந்துகொண்டேன். எப்போதுமே கள் அபரிமிதமாகவே கிடைக்கும். ஆகவே தான், வெறுமனே கள் மட்டும் எடுக்காமல் தேவைக்கு ஏற்ப பதனீர் இறக்கி அதிலிருந்து பனங்கற்கண்டு கருப்பட்டி பனஞ்சீனி போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றது. இந்த உண்மையினை அறிந்ததால் தான், எஞ்சியிருக்கும் கள்ளினை வடிசாலைகளுக்கு எடுத்துச் சென்று அதனை சாராயமாக மாற்றும் நுட்பத்தினையும் இலங்கையில் கையாள்கிறார்கள். இவ்விதம் உள்ள சூழலில், பனை சார்த்து கிடைக்கும் மற்ற 75% பொருட்கள் கிடைக்காதே என அனேகர் அங்கலாய்ப்பது எனக்கு கேட்கிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இவ்விதம் காணப்படும் ஒரு சூழலில் தான் பனை சார்ந்து அத்தனை தொழில்களும் பீடு நடை போடுகின்றன.

இலங்கையின் பனை சார்ந்த மையம் என்பது யாழ்பாணம் தான். யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு சுமார் 360 கி மீ தொலைவு இருக்கும். இன்று மட்டக்களப்பு பகுதிகளில்  பெருமளவில் பனைத் தொழில் கிடையாது.   மட்டக்களப்பில் நான்  தங்கியிருந்த ஓரிடத்தில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றிருந்த போது காய்ந்த பனங்கிழங்கினை அவித்து ஒரு சில சாக்குகளில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். எனது இலங்கைப் பயணம் முழுக்க அவைகளை நான் சுவைத்தும் சந்திப்பவர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தேன். கள் சீவும் இலங்கையில் எப்படி பனங்கிழங்கு சாக்குகளில் கட்டப்பட்டு மளிகைக்கடைகளில் கிடைப்பதாக இருக்கமுடியும்? இப்படி எண்ணுகிறவர்கள், ஒருபோதும் பனையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்க இயலாது. இதனைத் தொடர்ந்து நான் யாழ்பாணம் சென்றபோது, பனங்கிழங்கு மாவு (ஒடியல்) விற்பனை செய்யுமிடத்தை அறிந்தேன். அங்குள்ள மிக முக்கிய பாரம்பரிய உணவு ஒடியல் கஞ்சி. மேலும், பனம் பழ ஜாம், பனம்பழ ரசம் போன்றவிகள் மிகவும் தாராளமாக கிடைக்கின்றன. பனம் பழத்தில் செய்யும் பணாட்டும் அங்கே கிடைத்தன. மட்டக்களப்பில் நான் பார்த்த பனை ஓலை தயாரிப்பான அலங்கார பூக்களின் அழகிற்கு இணையாக தமிழகத்தில் வேறு பொருட்கள் எவரும் இன்னும் செய்யத் துவங்கவில்லை. எனது பயணம் முழுக்க “நீத்து பெட்டி” என்ற புட்டு செய்யும் பட்டியினை நான் தமிழர் மட்டுமல்லாது சிங்களவரும் செய்வதைக் கண்டேன். இப்படியிருக்க 75% பொருட்களின் பயன்பாடுகள் இல்லாமலாகிப்போய்விடும் என்ற புரளியினை கிளப்பிவிடுவதற்கான காரணம் என்ன என்கிற சந்தேகம் வலுக்கிறது.

குமரி மாவட்டத்தில், பனை மரத்தின் பயன்கள் மறைந்து போனதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அந்த ஆற்றாமையில் தான் இவைகளை பதிவிடுகிறேன். மார்த்தாண்டம், கோடியூர் ஆகிய சபைகளின் எனது தகப்பனார் போதகராக பணியாற்றிய வேளைகளில், ஆலய வளாகத்திலுள்ள பனைகளில் பனையேறிகள் வந்து பதனீர் இறக்கிச் செல்லுவார்கள். அவர்களிடமிருந்துதான் நாங்கள் வீட்டிற்கு தேவையான கள்ளினை வாங்குவோம். அப்போது கள்ளுக்கடைகள் இருந்த காலம். ஆனால், 1987ஆம் ஆண்டிற்குப் பின் அப்பா பணியாற்றிய ஜேம்ஸ்டவுண் திருச்சபையாகட்டும், சிறக்கரை பகுதிகள் ஆகட்டும், பனைமரங்கள் இருந்தும் மருந்திற்கும் பனையேறிகளை நாங்கள் பார்க்க இயலவில்லை. கள் இறக்க தடை ஏற்பட்டபின் பனையேறிகள் மீது காவல்துறையினர் அவிழ்த்துவிட்ட வன்முறை தான் இதற்குக் காரணம். இக்கொடுமைகளை தாங்கவியலாமல் சொற்ப காலத்திலேயே பனையேறிகள், இது தங்கள் தொழில் அல்ல என அதிலிருந்து விலகிவிட்டனர். காவல்துறையின் துப்பாக்கிகள்  கள் கலயங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. அலைக்கழிப்புகள், வசவுகள், பொருட்செலவு, மன உளைச்சல்  என எண்ணவியலாத துன்பத்திற்கு ஆட்பட்ட பனையேறிகளுக்காக “குமரியின்” குரல் எழும்பவேயில்லை. பல லட்சம் மக்களின் நன்மைகளை விட, கொள்கை பிடிப்புடன் பனையேறிகளை முற்றாக அழித்தவர்களின் பின்னால் நிற்க எவருக்கு மனமொப்பும்? சிலரது கொள்கைகள் மிகவும் உறுதியானவைகள். இவ்வித கொள்கைகள், எவன் செத்தால் நமக்கென்ன, எவன் “குடி” முழுகிப்போனால் நமக்கென்ன என்பதுதான் போலும்.

DSC01514

குமரி மாவட்டத்தில் அரிவட்டி செய்கிற பெண்

முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, பனம்பழம் சாப்பிடுவது வெகு இயல்பானது. 95% பனை மரங்களில் பாளை சீவாத இன்றைய சூழலில், பனம்பழங்கள் எவ்விதம் நமக்கு கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில், நாம் பார்த்திராத  டிராகன் ஃபுரூட், கிவி மற்றும் ஸ்டிராபெர்ரி போன்ற பழங்கள் தாராளமாக கிடைக்கின்றன, ஆனால் பனம்பழம் கிடைப்பதில்லை. பனம்பழம் ஒரு சிறந்த ஊட்டச் சத்து மிக்க உணவு என்கிற புரிதலே முன்வைக்கப்படவில்லை. நமது குழந்தைகள் படிக்கும் பாடதிட்டத்தில் கூட பனம்பழங்கள் குறித்த குறிப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இப்படியிருக்க யாரை ஏமாற்றுகிறோம்?

தமிழகத்தில் பனையேறிகளுகுக் என ஒரு சுயாதீனம் இருந்த காலத்தில், பல்வேறு பொருட்கள் கிடைத்து வந்தன. தி இந்து தமிழ் திசை நாழிதழுக்காக நான் எழுதிய “கற்பக தரு” எனும் கட்டுரைத் தொடரில், பனை சார்ந்த பல்வேறு கலைஞர்களை நான் அறிமுகப்படுத்தியிருப்பேன். அவைகள் பனை மரம் எப்படி சாதி எனும் அமைப்பினைக் கடந்து, மனிதர் வாழ்வில் இயற்கையின் இசைவை கொண்டிருக்கின்றன என எடுத்துக்காட்ட சிறந்த உதாரணங்களாகும். அரிவட்டி செய்யும் குமரி மாவட்ட தலித் மக்கள், கடவம் செய்யும்  நாடார் இன பெண்கள், பிளா பெட்டி செய்யும் இஸ்லாமியர்கள், மஞ்சணப்பெட்டி செய்யும் விஸ்மகர்மா இல்லத்தரசிகள், கொடாப்பு செய்யும் இடையர்கள், சம்பு எனும் மழையணி செய்யும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், கொட்டான்கள் செய்யும் செட்டி வீட்டு ஆச்சிகள், ஒமல் செய்யும் குமரிமாவட்ட கடற்கரை மீனவர்கள், பறி செய்யும் உள்நாட்டு மீனவர்கள் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இவைகள் அனைத்துமே கடந்த 30 ஆண்டுகளில் வழக்கொழிந்து போனது ஏதேச்சையாக நடந்தது அல்ல. தமிழ் குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு தாக்குதல் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

கள் தடைக்கான காரணம் என்பது உள்ளங்கை நுங்கு போல் தெளிவாக நமக்குத் தெரிகிறது. அது மக்களை அரசால் கட்டுப்படுத்த இயலும் என்கிற மறைமுக எச்சரிக்கையை விடுக்கிறது. கலசங்களை உடைப்பது, கைது அரங்கேற்றம், காவல்துறை அச்சுறுத்தல் போன்றவை தொடர்ந்து நடைபெறவே பனையேறிகள் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள தலைப்பட்டனர். அப்படியே ஒரு தலைமுறைக்குள் ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று எவ்வகையிலும் அத்தொழில் தலையெடுத்துவிடக்கூடாது என்ற கண்காணிப்பு கருவியாக ஓர் இயக்கம் உருவாகியிருக்கிறது என்றால், தமிழர்களை எச்சரிக்கவேண்டிய தருணம் இது.

25% கள் வருமானம் மிச்சமிருக்கும் 75% வருமானத்தை கெடுத்துவிடுமா?  என பயப்படுகிறவர்களுக்கு இறுதியாக ஒரு தெளிவினை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பனை ஏறுவதே பனை காக்கும் முறைமை என்பதனை நான் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறேன். இன்று பனை ஓலைகளில் குருத்தொன்றினை பெறவேண்டுமென்று சொன்னால் ரூ35 – 50/- வரை கொடுக்க வேண்டும். இன்று கிடைக்கும் குருத்தோலைகள்  பெரும்பாலும் பனை மரங்களை தறித்து  பெறப்படுபவைகளே. ஆகவே தான் மற்ற 75% பொருட்களுக்கான பேச்சு இன்று அடிபடுகின்றது. மொத்தத்தில் காலி செய்துவிடலாமே?  பனை பாதுகாப்பு வேடமணிந்து செய்யும் இப்பாதகச் செயலினை கண்டிப்பாக தடுத்தே ஆகவேண்டும்.

இயல்பு வாழ்கை என ஒன்று பனை சார்ந்த சமூகங்களுக்குள் இருந்தது. பதனீர் அல்லது கள் இறக்கச் செல்லும்போது பனை மரத்தினை பனையேறிகள் சுத்தம் செய்வார்கள். இச்செயல்பாட்டினால் ஒரே நேரத்தில்  கிட்டத்தட்ட 15 – 20 ஓலைகள் வரைக் கிடைக்கும். இவைகளில், காவோலைகள் எரிப்பதர்க்கும், சாரோலைகள் அதன் தன்மைகளைப் பொறுத்து, கூரை வேயவோ, பெட்டி மற்றும் கடவங்கள் முடையவோ பயன்படும். தங்கள் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் ஓலைகளை பனையேறிகள் கழிப்பதால், இவ்விதம் எடுக்கப்படும் ஓலைகளுக்கு பெருமளவில் விலை இருக்காது. குறைந்தபட்ச விலையினையே பனையேறிகள் நிர்ணயிப்பார்கள். ஆகவே, மூலப்பொருளின் விலை வெகுவாக குறையும் பனைத் தொழில் ஏழை எளிய மக்கள் தொடர்ந்து செய்யும் வாய்ப்பு பெருகும்.

DSC_0220

மும்பையில் காணப்படும் கள் இறக்கும் மண் கலசம்

அப்படியானால் குருத்தோலைகள் எப்படி அன்றைய கால கட்டத்தில் கிடைத்துக்கொண்டிருந்தது?  பனைத் தொழிலாளிகள் பனை மரத்தில் கள் அல்லது பதனீர் இறக்கினால் அந்த மரத்திலிருந்து ஓலைகளை வெட்டுவது இல்லை (சுத்தம் செய்த பின்பு). ஆனால் சிறகுகளைக் கிழித்தெடுக்கும் ஒரு முறைமையினை அவர்கள் கையாண்டு வந்தார்கள். மிக லாவகமாக அவர்கள் கரத்தில் இருக்கும் கூர்மையான அரிவாளால் வலது பக்க சிறகினை கிழித்தெடுப்பார்கள். தேவைப்படுகிறவர்களுக்கு அபூர்வமாகவே இதனைச் செய்வார்கள்.   மற்றபடி, குருத்தோலை என்பது வீடு கட்டுகிறவர்கள் முறிக்கின்ற பனை மரங்களில் இருந்து கிடைக்கபெறுபவைகளே. ஆகவே தான் அன்று பனைத்தொழில் மிக சரியான புரிதலுடன் கூடிய ஒரு தொழிலாக அதன் அத்தனை பாகங்களும் மிகச்சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு அனைவருக்கும் பொதுவானதாக இருந்துவந்தது. இன்றோ பனை தொழிலை காக்கிறோம் என்று சொல்லி, பனை மரத்திலுள்ள குருத்தோலைகளை வாங்குவதற்காக பனை மரங்கள் வெட்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணதுடன் செயல் படுகிறவர்கள், எப்படி பனை மரத்தினை பாதுகாப்பார்கள்?

அறியாமை புரியாமை என அகங்காரத்துடன் முன்வைக்கப்படும் கருத்துக்களை நம்பி யாரும் ஏமாந்துவிடாதீர்கள். அது பனையேறிகளுக்கும் பனைக்கும் எதிராக முன்வைக்கப்படும் கோஷம். இவர்களின் வேஷம் கலையும்போது தான் பனையேறிகளால் மீண்டும் பனை சார்ந்த வாழ்வியலை முன்னெடுக்க இயலும். ஆகவே, கள் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். அது பனையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையானது. பனையேறிகள் தெளிவாகவே இருக்கிறார்கள். அறியாமையை விதைக்கும் தேவையற்ற ஆமைகளை பனை வாழ்வியலுக்குள் உழ்நுழைய விடாது இருப்பது அவசியம்.

“பொருந்தா கொள்கை கொண்ட தலைவர்களை  விட உண்மை சூடிய மனிதர்களே மேல்”.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: