கள் விடுதலைப் போராட்டம் 4


கள்ளும் பதநீரும்

கள் இறக்குவதற்கும் பதனீர் இறக்குவதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை குறித்த புரிதல் நமக்கு வேண்டும். இரண்டு பானங்களுமே பனை மரத்திலுள்ள பாளைகளில் இருந்து பெறப்படுபவை தான். பாளையிலிருந்து சொட்டுகின்ற நீரானது, புளிப்போ இனிப்போ இன்றி நுங்கில் காணப்படும் ஒரு மென் சுவையோடு இருக்கும். எப்போது பாளையிலிருந்து பானைக்குள் இந்த நீர் விழுகிறதோ அப்போதே அது காற்றில் உள்ள இயற்கையான நுண்ணுயிரிகளுடன் இணைந்து வேதியல் வினை புரிந்து நொதிக்க ஆரம்பிக்கும். வெயில் ஏற ஏற இதன் தன்மை புளிப்பும் கடுப்புமாக மாறிவிடும். இது இயற்கையான ஒரு செயல்பாடு. ஆனால் இந்த கள் இறக்குவதில் பனையேறிகள் ஒரு குறையினை கண்டுணர்ந்தனர். கள் நொதிக்கும் வேகம் மிக தீவிரமாக இருப்பதால், அதன் புளிப்பு சுவைக் கூடி, ஒரு நாள் ஆகிவிட்டால் குடிக்க இயலாததாக  மாறிவிடுகின்றது.  அவைகளைக் கொண்டு பெரிய பயன் இல்லை. ஆகவே வெளியே கொட்டிவிடுவார்கள். குடியின் மீது தீரா விருப்பு கொண்டவர்களுக்கு, இவ்விதம் புளிப்பு நிறைந்த கள் மிகவும் தேவையாக இருந்ததினால், தயிருக்கு உறை வைப்பதுபோல் கள்ளிற்கும் உறை ஊற்றி புளிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விதம் உறை உற்றப்படாத கள் இன்சுவை கள்ளாக இருக்கும்.  அதனை போதை என்று சொல்லுவது தூயவாதிகளின் கூற்றாக எண்ணி புறந்தள்ள வேண்டியதுதான்.

கள் என்பது போதை அற்ற ஒரு பானம். மூத்த எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் கூறும்போது “கள்ளிற்கு போதை வருவது எப்போது? அது கடைக்கு வந்த பின்புதான்” என கேள்வி பதில் பாணியில் நமக்கு உண்மையினை போட்டுடைக்கிறார். இயற்கையாக கிடைக்கும் கள்ளில் இருக்கும் “போதையானது”  “கொட்டைப்பாக்கு வெற்றிலை போன்றவற்றை சேர்த்து குதப்பும்போது ஏற்படுமே அவ்விதமான ஒரு போதைதான் கள்ளிலிருக்கிறது” என்பார்.   நம்மூரில் வெற்றிலைக் குதப்பாத கிழவனும் கிழவியும் நமது கண்களுக்கு அனேகமாக புலப்படுவதே இல்லை. ஆசியாவின் முக்கிய காலாச்சார அடையாளங்களில் ஒன்று தாம்பூலம் சுவைப்பது. அப்படியானால் தாம்பூலம் சுவைப்பதை எவ்வகையில் புரிந்துகொள்ளுவது? போதைக்கு அடிமையானவர்கள் தாம்பூலம் சுவைக்கிறார்கள் என்றா? ஆகவே அதனை தடை செய்ய வேண்டும் என்றா? மருந்திற்காக பயன்படுத்துபவர்கள் மருந்து கடைகளில் வெற்றிலையை பெற்றுக்கொள்ளட்டும் என்றா? நமது மரபை எதிர்க்கும் கேள்விகள் எங்கிருந்து எழும்பிகின்றன என எண்ணுவது நல்லது.

MegasthaniS

மெகஸ்தெனஸ்

குமரி மாவட்ட வனத்துறையில் பணியாற்றிய திரு.தங்கமரியான் அவர்கள் கூறும்போது, பனை மரத்தில் இரண்டு ஓலைகள் காற்று இல்லாவிட்டாலும் சந்தமெழுப்பியபடி இருக்கும். இவைகளை வெட்டி கள் கலயத்திற்குள் இட்டால், பெரும் போதை அளிக்கும் கள்ளாக அது மாறிப்போய்விடும் என்பார். மிடாலக்காடு பகுதியைச் சார்ந்த பனையேறும் போவாஸ் அவர்களிடம் இது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது அவர் அதனை சிரித்துக்கொண்டே ஆமோதித்தார். ஆனால், அது ஒரு வழக்கமான முறைமை அல்ல என்பதனையும் சுட்டிக்காட்டினார். அபூர்வமாக நிகழும் ஒன்று மாத்திரம் அல்ல, பனையேறிகள் அவைகளை முதன்மைப்படுத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஆகவே தான், இதனை பதப்படுத்தும் நோக்கோடு சுண்ணாம்பு கலந்து, கள்ளில் நடைபெறும் நொதித்தலை கட்டுப்படுத்தி பதனீராக மாற்றினார்கள். இன்சுவை பதனீரை காய்ச்சி எடுக்கையில் கிடைத்த கருப்புகட்டியினை நெடுநாள் சேகரித்து வைக்கும் நுட்பத்தினையும் கண்டடைந்தார்கள். இதன் காலம் குறித்த தரவுகள் நம்மிடம் சரியாக இல்லையெனினும், இதனை சைவர்களோ, இஸ்லாமியர்களோ அறிமுகப்படுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளது. பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் கூறும்பொது “கரும்பிலிருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றிலிருந்து செய்யப்பட்டதே கருப்புகட்டி. கரும்பு + கட்டி-யே புணர்தலின் நிமித்தமாக கருப்பு கட்டி ஆனது என்பார்”. மேலும் அவர் 17ஆம் நூற்றாண்டில் தான் கருப்புகட்டி காய்ச்சும் நுட்பம் தென் மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது என்றும் கூறுவார். இது அவரது மனப்பதிவு என்றாலும் அதனை மிகச்சரியாக நம்மால் மறுக்க இயலாது. ஆனால் கி மு 4 ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த மெகஸ்தெனஸ் என்கிற கிரேக்க பயணியும் புவியிலாளருமானவர், பாடலிபுத்திரம் வந்து இந்தியா குறித்து எழுதியிருக்கிறார். அவரது குறிப்புகளில், இனிப்பு கட்டிகள் குறித்த விவரணைகள் வருகிறதாக இலங்கையைச் சார்ந்த கோவோர் அவர்கள் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூறுகிறார். மெகஸ்தெனஸ் ன் விவரணையில் வரும் படிகம் போன்று இருக்கும் “இனிப்பு கல்” “பனங்கற்கண்டு” அன்றி வேறாக இருக்கவியலாது என்பது அவரது துணிபு. அப்படியானால் கருப்பட்டி காய்ச்சும் நுட்பம் அன்றே தாராளமாக இருந்திருக்கும். கள்ளும் பதனீரும் வரலாறு முழுக்க இணைந்தே பயணித்திருக்கின்றன

நான் பார்த்த வரையில் எங்கும் பழங்குடியினர் கருப்பட்டி காய்ச்சும் நுட்பத்தினைக் கொண்டிருக்கவில்லை.  ஒருவேளை அப்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் கண்டடையும் நோக்கிலேயே நான் பயணித்து வருகிறேன்.

800px-Refreshing_palm_wine

ஆப்பிரிக்க பழங்குடியினர் கள் குடிக்க பயன்படுத்தும் சுரைக்குடுவை

நமக்கு பழங்குடியினர் வாழ்வில் இயல்பாக இருக்கும் ஒன்றின் மீதான ஒவ்வாமை எப்போதிருந்து ஏற்பட்டது?  திருவள்ளுவரின் ஆக்கங்களுள் கள்ளுண்ணாமை இடைச்சொருகலா என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.  என்னைப் பொறுத்தவரையில் கள்ளுண்ணாமை கடந்த இரு நூற்றாண்டுகளுள் ஏற்பட்ட ஒரு மாற்றம் தான்.  குறிப்பாக, பிரித்தானிய வருகையினை ஒட்டி, இவ்வித சிந்தனைகள் உழ்நுழைந்திருக்கும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து “கல்வி” கற்று வேலைக்கு செல்ல ஆரம்பித்த தலைமுறைக்கு கள் என்பது ஒவ்வாமை அளிக்கும் ஒன்றாக இருந்திருக்கும். பழங்குடியினர் வாழ்விலிருந்து நவீன வாழ்வு நோக்கி வந்த மனிதர்களிடம், காலத்திற்கு ஒவ்வாத ஒரு பழக்கம் இருப்பதை நவீன மனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். ஆகவே மிக உக்கிரமாக கள்ளிற்கு எதிரான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன.

அய்யாவழியினை தோற்றுவித்த முத்துகுட்டி சுவாமி எனும் ஆன்மீக மற்றும் சமுதாய தலைவர், பனைத் தொழிலை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தவர். அச்சூழலிலிருந்து அவர் ஒரு தெய்வீக நிலைக்கு மாறுகையில், “கள் உண்ணேன்” என்னும் நோன்பினை முன்னெடுக்கிறார். மாத்திரம் அல்ல, ஒருவருக்கும் கள் உண்ண கொடுக்கவும் மாட்டேன் என முடிவெடுக்கிறார். ஆன்மீக நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோன்பினை கடைபிடிப்பது வழக்கம். அந்த நோன்பானது எவ்வகையிலும் நியதியாக பொது மக்களுக்கு வைக்ககூடாது என்பதே எனது எண்ணம். நோன்பிருப்பவர்கள் வேண்டுமானால் அவரவர் தேவைக்கேற்ப இவைகளை தெரிவு செய்யலாம்.

Cambodia

கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் ஆலயத்தின் அருகில் மூங்கில் குழாய்களில் கள் நிரப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

கள் இறக்குவது கூடாது எனும் எண்ணம் ஒரு பனையேறியின் முடிவாக இருக்கும் பட்சத்தில் அவரை நாம் நிற்பத்திப்பது சரியாகாது. ஆனால், பனையேறிகள் கள் தங்கள் உரிமை என்றே எண்ணி வந்திருக்கின்றனர். பனையேறிகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவே நமது குரல்கள் எழும்ப வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.  தனது வாழ்வை ஒரு பனையேறி எப்படி கட்டமைக்கவேண்டும் என விரும்புகிறானோ, அவ்விதமாகவே அது நிலைபெற வேண்டும். உலகெலாம் ஒரு நியதி இன்று ஏற்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின் அடையாளம் என எவைகள் காணப்பட்டனவோ அவைகள் திரும்பி மீட்கப்பட்டு வருகின்றன. நவீன வாழ்வு நோக்கி முன்னேற்றம் என சென்றவர்கள் அனைவருமே மரபு நோக்கி திரும்பி வருகின்றனர். அத்தனை பின் நவீனத்துவ அறிஞர்களும் தொல் பழமையில் ஊறிக்கிடக்கும் உண்மைகளை தேடிகொண்டு வந்து சேர்த்தபடி உள்ளனர். பெரும்பொருட்செலவில் பழைமைகளை மீட்டுக்கொண்டு வருகின்றனர். நாம் அந்த அளவிற்கு இன்னும் இழக்கவில்லை. ஒருவேளை மீட்கவே இயலாத இடத்திற்கு நம்மைத் தள்ள முற்படுகிறார்களா என்ன?

“சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;”

அதியமான் நெடுமான் அஞ்சியின் மரணத்தை ஒட்டி, அவரது வள்ளன்மையை குறிக்கும் ஒவ்வையாரின் பாடல் இது.

பகிர்ந்து கொள்ள இயலாதபடி குறைவாகவே கள் இருந்தால், நான் நிறைவாக குடிக்கும்படி எமக்கு அதனைத் தருவான், ஒருவேளை பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு நிறைவாக கிடைத்தால், எனக்கும் கொடுத்து தானும் உண்டு மகிழ்வான் என பாடுகின்றார்.   சற்றே யோசித்து பார்க்கையில், கள் எப்போதும் நிறைவாக கிடைப்பது அல்ல, எனும் கருத்து உட்பொதிந்திருக்கிறதைக் காணமுடியும், கூடவே அரசனும் கவிஞர்களும் விருந்தினர்களும் போற்றும் ஒரு உணவாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. விருந்தினருக்கு கள் படைக்கும் விருந்தோம்பல் தானே புகழப்பட்டிருக்கிறது? மருந்தா விருந்தோம்பலின் இலக்கணம்? நமது பாரம்பரியத்தில் உணவே மருந்தாக இருந்திருக்கிறது.

பனை சார்ந்த எனது பயணத்தில், இந்தியாவில் இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்களும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றே உணர்ந்துகொண்டேன். அல்லது அவ்விதம் ஒரு நிலைப்பாட்டை அவர்களால் வெற்றிகரமாக நிறுவ இயலவில்லை என்பதே பொருள். குறிப்பாக இஸ்லாமியர்கள் கோலோச்சிய ஆந்திர பகுதிகளில் இன்றும் கள் விற்பனை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. மாத்திரம் அல்ல அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மட் கலங்கள் கூட இஸ்லாமிய கூஜா வடிவினை ஒத்து இருப்பதைப் பார்க்கும்போது, எவ்வகையில் கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை கடந்து நமது கரத்தில் வந்து சேர்ந்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடியும். இலங்கை சென்றிருக்கும்போது கூட, அங்கே கொடுக்கப்படும் கள் மணிமேகலையின் அட்சய பாத்திரத்தை (சீன கிண்னங்கள்) ஒத்திருந்ததை கண்டுகொண்டேன். மூங்கில் களிகளில் கள் குடிக்ககொடுப்பது கிழக்காசிய வழக்கம், அப்படியே சுரைக்குடுவையில் குடிக்க கொடுப்பது ஆப்பிரிக்க வழக்கம். தத்தமது சூழலில், கண்டங்கள் கடந்து பனங்கள் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்கையில்,  தமிழகத்தில் மட்டும் இந்த தடைக்கான காரணம் என்ன என எவரேனும் சொல்ல மாட்டார்களா என்கிற கேள்வி நம்மைக் குடைந்துகொண்டே இருக்கிறது. இக்கேள்விக்கு விடைகள் மழுப்பலாகவே நம்மை வந்தடைந்துகொண்டிருக்கின்றது.  வாழ்வில் இத்துணை பண்பாடுகளுடன் இணைந்து வரும் கள்ளை தமிழகம் புறக்கணிப்பது, சற்றும் ஏற்புடையாதாக காணப்படவேயில்லை.

telengana toddy

தெலுங்கானாவில் கள் விற்பனை செய்யும் கூஜா

மர வழிபாடு உட்பட நாட்டார் வழிபாடுகள் பல்வேறு வடிவங்கள் கொண்டவை. பனையேறிகள் உட்பட பல்வேறு மக்களினங்கள் கள்ளினை சாமிக்கு படைக்கும் முறைமையினை தமிழகத்தில் கொண்டிருந்தார்கள். அவர்களின் வாழ்வில், வழிபாட்டில் நமது சட்டங்கள் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும்போது, அதற்கு ஒரு சிலர் துணை நிற்பதை அறியும்போது, எவ்வகையில் இவைகளை நாம் எடுத்துக்கொள்ள முடியும்? நமது வழிபாட்டு முறைமைகள் என்பவை தொல் அடையாளங்களின் எச்சம். அவைகளை துடைத்தெறியும் சட்டங்கள், நமது பண்பாட்டு அலகுகளை அழிக்கின்றன. இவ்வித செயல்பாடுகள் நமது கலாச்சாரத்துடன், நமது தொழில், நமது சூழியல், நமது திறன்களை மழுங்கடிக்கும் நோக்கு கொண்டவை. இவைகள் கண்டிப்பாக பன்னாட்டு வணிக சுமைகளை நம்மேல் திணிப்பவையாகவே மாறிவிடும்.

குமரி மாவட்டத்தில் ஈசன்தங்கு என்ற இடத்தில் ஒரு கோவில் உண்டு. இக்கோவிலில் இரண்டு விழாக்கள் முக்கியமாக நிகழும். ஒன்று கார்த்திகை மாதம் நிகழும் சொக்கப்பனை, மற்றொன்று பனை மரத்திலிருந்து கள் இறக்கும் பங்குனி திருவிழா. பங்குனி மாதம் குமரி மாவட்டத்தில் பதநீர் / கள் முடிவுக்கு வரும் சமயம். இங்கிருந்து நெல்லை மற்றும் பிற பகுதிகளுக்கு பனையேறிகள் தங்கள் தொழில் நிமித்தமாக புலம்பெயரும் காலகட்டம். இச்சூழலில், ஒரே நாளில் பனை ஏறி கலயம் கட்டி அன்று மாலையே கள் இறக்கி அன்று தானே சாமிக்கு படைக்கும் இந்த வழிபாடு, மிக முக்கியமானது. ஒரு மனிதனுடைய வாழ்வில் அவனது இறை நம்பிக்கையுடன் அவனது உணவு கலாச்சாரம் எப்படி இணைந்து முயங்கி இருக்கிறது என்பதை அறிவுறுத்துகிறது. இந்த வழிபாட்டு முறைமை அடிபடும்பொழுது, பனை ஏறும் திறன் இல்லாது போய்விடும். அது சார்ந்த மக்களின் நம்பிக்கையும் மாற்றமடையும், நமக்கு நமது முன்னோர் ஒரே நாளில் கள் எடுக்கும் திறனை கற்றுக்கொடுத்த ஒரு சடங்கு மறைந்தே போய்விடும். ஒன்றை இழப்பதினூடாக நாம் ஒட்டுமொத்தமாக இழக்கிறோம் என்பது குறித்த புரிதலை நாம் அடையாததுதான் தற்போது நிலவும் பிரச்சனை பிரச்சனை.

தமிழகத்தில் கள் குறித்து யாரும் ஆய்வு செய்திருக்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. கேரளாவில் இறக்கும் தென்னங்கள்ளில் ஆய்வு செய்தவர்கள், புதிதாக இறக்கப்பட்ட கள்ளில் சுமார் 0.2% எனத் துவங்கி 24 மணி நேரம் கடக்கும்போது 4.5% என்ற அளவில் வந்து நிற்கிறது என பதிவு செய்கிறார்கள். 24 மணி நேரத்திற்கு பின்பு இவை இன்னும் கூடுதல் போதையாகுமே என்று சிலர் எண்ணலாம். அது தான் இல்லை, அதன் பின்பு அது காடியாக (Vineger) மாறிவிடும்.

ஆகவே பனையேறிகள் மிக தெளிவாக இருந்தார்கள். அன்றாட தேவைகளுக்கு எத்தனை கலயம் கள் போடுவது என்றும் தங்கள் சேமிப்பிற்காக எத்தனை கலயத்தில் பதனீர் இடுவது என்பதும் அவர்கள் பட்டறிவின் வாயிலாக உணர்ந்திருக்கிறார்கள். அந்த விகிதத்தை அவர்கள் தீர்மானிக்கும் அளவிற்கு நாம் விடவில்லையென்று சொன்னால், அவர்களின் உரிமைக்குள் அனாவசிய தலையீடு செய்கிறவர்களாக இருப்போம். அதை செய்ய அரசு உட்பட எவரையும் அனுமத்திக்கலாகாது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

ஒரு பதில் to “கள் விடுதலைப் போராட்டம் 4”

  1. Meera Meenakshi Says:

    அருமையான பதிவு. ஆம் திரு Godson.. பனையின் உள்ளமுது (கள் ) நம் மரபணு ஞாபகங்களில் இருக்கிறது.

    அது சுரக்கும் காலங்களும் முக்கியமானவை அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய வலிமையை நம் உடல் இழந்துவிடாமல் தடுக்கிறது கள். அதற்கான முன்னெடுப்புகளைப் பனை மரமே (அதன் சுற்றும் முற்றம் வாழும் மனிதர்களுக்காக) செய்கிறது.

    அப்படிப்பட்ட மென் உணர்வுகளுடன் கம்பீரமாக நிற்கும் நம் சக உயிரான அம்மரத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு கடமை நமக்குமுண்டு ..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: