Archive for மார்ச், 2020

மணப்பாஞ்சிவிளை

மார்ச் 27, 2020

 

போதகர் இந்த வார பிறந்த நாள் என வாசித்தபோது எனது பெயரும் இருந்தது.

மணப்பாஞ்சிவிளை ராபின்சன் பத்தொன்பதாம் தேதி.

எனக்கு அந்த மணப்பாஞ்சிவிளை என்ற பெயர் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் ராபின்சனுடன் அது இணையும்போது கேட்கவே ஒருமாதிரியாக இருந்தது. எங்கள் விளைக்கு இந்த பெயர் எப்படி வந்திருக்கும்?  ஒருவேளை நமக்குத் தெரியாத ஆழ்ந்த பொருள் ஏதும் இருக்குமா? யாரிடம் கேட்கலாம் என எண்ணியபடி இருந்தேன். ஆலய ஆராதனை முடிந்து வீட்டிற்கு வந்தவுடனேயே பாட்டியிடம் கேட்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். வீடு வந்தபோது  பாட்டி நார் கட்டிலில் இருந்து மெல்ல எழுந்து அடுப்படிக்கு செல்வதைப் பார்த்தேன்.  கம்பை ஊணி பாட்டி நடப்பது வெட்டுக்கிளியின் துரித நடைபோலிருக்கும்.

பாட்டியோ….. மணப்பாஞ்சீண்ணா  என்னவாக்கும். ஆரிட்ட பேரு.

ஞாயிறாச்சையும் அதுவுமா வேதத்த படிலே… வேளங் கேக்க வந்திருக்கான் …. என்றபடி கரத்திலிருந்த கறிச்சட்டியினை கழுவி ஊற்றினார்கள்.

எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. சிறு வயதில் அப்பா அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அது தாத்தா காலத்திலிருந்து வரும் பெயர் என்பது மட்டும் தான் தெரியும். அது எப்படி பொருள் இல்லாமல் ஒரு பெயர் இருக்கமுடியும்? அதுவும் இந்த காலத்திற்கு  பொருந்தாத பெயர்.

தாத்தாவிற்கு சகோதர சகோதிரிகள் கிடையாது ஆகவே பதினோரு பிள்ளைகள் பெற்ற மாணிக்கம் நாடார் வீட்டிலிருந்து இளைய மகளான பொன்னமாவை திருமணம் செய்துகொண்டார். பாட்டியின் அப்பாவிற்கு இளைய மகள் மீது பெரு விருப்பம் ஆகையால் பாட்டிக்காக ஒரு பனையை முறித்து கருப்பட்டி பத்தாயம் செய்து கொடுத்திருக்கிறார். பொன்னம்மா பாட்டி எப்போதும் பெருமையாக சொல்லும் ஒரு வாக்கியம், “பதினெட்டு கருப்பட்டியும் ஏழு மக்களையும் வளத்த கையாக்கும் இது”.

தாத்தா பனை ஏறுகிறவர். பதனீர் காய்ப்பதற்கு தினமும் மூன்றுமணிநேரம் அடுப்பு எரியவேண்டும். அந்த தீ நாக்குகளின் பசி அடங்கினால் தான் கருப்பட்டியினை எடுத்து வயிற்றுப்பசியினை ஆற்ற முடியும். சேகரித்து வைத்திருக்கும் விறகுகள் யாவும் தை மாதத்துடன் தீர்ந்துவிடும். அதன் பின்பு மாசி மாதம் முதல் கிடைக்கும் ஒவ்வொரு  புளிய இலையையும் சேகரித்து எரிக்கவேண்டியது தான். பாட்டி கஷ்டப்பட்டு தான் பிள்ளைகளை வளர்த்தார்கள்.

பாட்டி கதை சொல்லக் கேட்டுதான் வளார்ந்திருக்கிறோம்… பேய்கதை… திருடர் கதை என எல்லாம் சொல்லி தருவார்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். ஆரம்ப காலத்திலிருந்தே பாட்டி கோவிலுக்கு செல்லுவதில்லை, ஆனால் எங்கள் குடும்ப திருச்சபையான சீயோன் மலை சி ஏஸ் ஐ தேவாலயத்தைப் புதுப்பித்தபோது தானே முன்வந்து வாசல் கதவின் செலவை ஏற்றவள். அவள் கையிலிருந்து ஒரு பைசாவை அவர்கள் அனுமதியின்றி யாரும் எடுத்துவிட முடியாது.

பெயர் காரணம் குடைந்துகொண்டிருந்ததால் வெளியேறி சடையாண்டி கொத்தனாரைத் தேடிப்போனேன். சடையாண்டி கொத்தனார் தான் நாங்கள் இருக்கின்ற வீடு பணிந்தவர். வீட்டிற்கு சென்றபோது வெற்றிலைப்பெட்டியிலிருந்து வெற்றிலை பாக்கு முதலானவைகளை வெகு நிதானமாக எடுத்துக்கொண்டிருந்தார்.

சடையாண்டி தலையில் ஒரு முடி கூட இல்லாதவர். வெட்டருவா மீசை. துணைக்கு ஒரு தடி அவர் இருந்த நார் கட்டிலில் சாய்த்துவைக்கப்பட்டிருந்தது.

ஆரு… என கைகளை கண்களுக்கு மேல் சாய்வாக்கி கூர்ந்து பார்த்தார்.

நான் பொன்னமைக்க பேரன் என்றேன்…

பிள்ளா வரணும்… என்றபடி என்னவாக்கும் காரியம் என்றார்…

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கேட்டேன்… மணப்பாஞ்சீண்ணா என்னவாக்கும் பாட்டா?

மக்கா அதிப்பம் எனக்கு ஒண்ணும் தெரியாது பாத்திக்க… வீடு பணியும் முன்பே மணப்பாஞ்சிவிளைணாக்கும் விளிப்பினும் என்றார்.

பின்ன ஒரு காரணம் உண்டு… பண்டு அங்கின ஒரு செறிய வீடு உண்டாயிருந்து. மண்ணு பதச்சு கெட்டின வீடாக்கும். ஒருவேளை மண்ணு பதச்சிண்ணு செல்லியது தான் மணப்பாஞ்சி ஆச்சுதோ என்னவோ ஆரு கண்டா?

தாத்தா சொல்லுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றே மனது கூறியது. எல்லா வீடுகளும் ஒரு காலத்தில் மண் பதைத்து கட்டப்பட்ட வீடுகள் தாம். வேறு ஏதோ ஆழ்ந்த  அர்த்தம் இருக்கவேண்டும் என எண்ணியபடி விடைபெற்றேன்.

போவும்பம் கடவரையிலெ செல்ராசு உண்டெங்கிலே பிள்ள வரச்சொல்லணும் கேட்டா என்றார்.

ஓம் என்றபடி கிளம்பினேன்.

உச்சைக் கடைகளைத் தாண்டி செல்லும்போது ரெத்தினம் அண்ணனுடைய பூக்கடை வந்தது. மணப்பாஞ்சி என்ற பதம் மணத்தைக் குறிப்பதாக இருக்குமோ? என்ற எண்ணம் வந்தது. எதற்கும் தமிழாசிரியரை ஒரு முறைக் கேட்டுக்கொள்வோம் என்று ராகவன் சாரைப் பார்க்க முடிவு செய்தேன்.

மறுபடியும் வீட்டிற்கு வந்தபோது அப்பாவும் அம்மாவும் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

மணப்பாஞ்சி என்ற வார்த்தையை எப்படியெல்லாம் எழுத முடியும் என உட்கார்ந்து யோசித்தேன்.

மன பிராந்தி?

ஒன்றுமே ஓடவில்லை…

“எளவுடுத்த பேருகள கொண்டு வெச்சிருக்கினும்” என முணுமுணுத்தேன்

பாட்டிக்கு நான் கூறியது கேட்டுதோ என்னவோ

“பொறத்தால போ சாத்தானே” என கம்பை வீசினார்கள். வீட்டிற்குள் வந்த கோழிகள் பதறி சிதறி ஓடின.

ஒன்றில் மணம், இல்லாவிட்டால் மனம் இந்த இரண்டு வார்தைகளில் ஒன்றாகவே இது இருக்கவேண்டும்

மனம் பாய்ந்த விளையா? மனம் விரும்பத்தக்க விளையா இது?

ஆனாலும் பொருள் வரவில்லையே? ஈடன் கார்டென் என பெயர் மாற்றவேண்டும் என கறுவிக்கொண்டேன்.

சாயங்காலமாக ராகவன் சார் வீட்டிற்குச் சென்றேன். ராகவன் சார் எங்களுக்கு ஆறாம் வகுப்பில் தமிழ் பாடம் எடுத்தவர்கள். எம் கே ஆர் என்று தான் கூப்பிடுவோம். மாக்கிரி ராகவன் என்பதன் சுருக்கம். பக்கவாட்டு தோற்றத்தில் தவளையை பிரதி எடுத்தது போன்ற ஒரு முகம் என எவனோ கிளப்பிவிட்டது. பாடம் நன்றாக நடத்துவார்.

என்னடே இந்தப்பக்கம் என்றார்.

சார் நம்ம வீட்டு வெளைக்க பேரு மணப்பாஞ்சிண்ணாக்கும். அதுக்க வெளக்கம் கிட்டுமாண்ணு….

ஓ அப்படியா…. என்றவர் இரிடே… என்றபடி உள்ளே சென்றார்.

வெளியில் வரும்பொது இரண்டு பெரிய புத்தகங்கள்… நிகண்டுகளாக்கும் என்றவர்… கண்ணாடி போட்டபடி தேட ஆரம்பித்தார். ஒண்ணும் காணேலியேடே…

அவரே தொடர்ந்தார்…. வெள்ளரி விளை, எலிகுத்திப் பாறை, மாவிளை, ஊரை சுத்தி இருக்கப்பட்ட இடங்களுக்கு எல்லாம் எதோ ஒரு பெயர் காரணம் இருக்கத்தான் செய்யுது… இது வெளெங்கேலியேடே என்றார்.

பின்ன ஒரு காரியம் உண்டு வெளவங்கோட்டுல  உள்ள பேச்சு வளக்கு தனியாக்கும். அதுக்க மகிம தெரியாத்தவனுவ நிகண்டு எழுதி வெச்சா ஆச்சா என்றார்.

செரி… யாதெங்கிலும் மூப்பிலுகிட்ட கேட்டு பாக்குதேன் என்று கிளம்பினேன்.

போதகரைப் பார்த்து கேட்டால் என்ன என என்ணி அவரைத்தேடிப்போனேன்.

பிறந்த நாளாக்கும் இல்லியா பிள்ளா?

ஜெபிக்கணும்னாக்கும் வந்தது…

போதகர் ஜெபித்து முடித்தவுடன்

நம்ம விளைக்க பேருக்க அர்த்தம் தேடிட்டு இருக்கேன்.

மணப்பாஞ்சி விளையா? பெரிதாக சிரித்தார்

ஆ…. தம்பி….. அது மணம் பாய்ஞ்சி ஓடுத இடமில்லியா. நற்கந்தம் வீசுத இடம்.  பரிசுத்த வேதாகமம் அப்படித்தான் சொல்லுது என்று பிரம்மாண்டமாக சிரித்தார். நானும் சிரித்துவிட்டு அதாக்கும் பாஸ்டரே என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

வீட்டிற்கு வந்தபின் அம்மா கேட்டார்கள், “ஏம்பிலே இப்படி கெடந்து பெடச்சுத விளை பேர ஊரெல்லாம் போய் கேக்கணுமாக்கும் என்றார்கள்”

பின்ன… நானும் கேக்குதேன் யாரும் விளிகேக்காததுபோல இருந்தா? என இறைந்தேன்.

நீ நேரா ஆலம்பாறை போ…. அங்கிண சொல்லுவினும்.

ஒருவழியாக தீர்வு கிடைக்கும் என்று நம்பி ஆலம்பாறையில் உள்ள யோவான் தாத்தா வீடு நோக்கி சென்றேன். யோவான் தாத்தா பாட்டியின் உடன்பிறப்புகளில் எஞ்சியிருக்கும் ஒரே அண்ணன். ஒரு காலத்தில் பனையேறியவர். பிள்ளைகள் தடுத்ததால் இப்போது ஏறுவதில்லை. 86 வயது. பொக்கை வாய். சுருக்கம் விழுந்த தோல் மற்றும் எலும்பு மட்டுமேயான மெலிந்த உடல். 10 நாள் வெண் தாடி கரியமுகத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்தன. வேட்டி கட்டி தோளில் ஒரு துண்டு போட்டிருந்தார். அவரை விட ஒரு முழுமையான மனிதரை பார்க்க இயலாது. அவ்வளவு அழகும் நேர்த்தியும் அவரிடம் கூடியிருந்தது.

என்ன பிள்ளா இஞ்சோட்டு என நலம் விசாரித்தார்.

மணப்பாஞ்சி விளைக்க பேர மாத்தலாமுண்ணு இருக்கியேன்…

யொவான் தாத்தா தலை குனித்து சத்தம் வராமல் சிரித்தார் … வாயிலிருந்து எச்சில் ஒழுகியது

துண்டை எடுத்து துடைத்தபடி

பிள்ளைக்கு கத கேக்கணும் இல்லியா? சொல்லுதேன்…

பொன்னம்மைய அப்பன் கெட்டி கொடுத்தப்போ அவ ஒண்ணும் அறியாத குட்டியாக்கும்… அக்கானி காய்ச்சி பளக்கமில்லே…. மொத நாளு மாமியா வந்து எப்படி காய்ச்சுததுண்ணு சொல்லி குடுத்திருக்கினும். மறு நாள் நீயே பாத்துக்க என இவளுகிட்டே செல்லீண்டு கருங்க சந்தைக்கு மாமியா போச்சினும். இவளும் தீயொக்க இட்டு அக்கானி காய்ச்சி எறக்கிப்போட்டா.  எங்கிலும்…. இவளுக்கு துடுப்பிட தெரியேல. கருப்பட்டி காய்ச்ச பின்ன துடுப்பிடுததுலயாக்கும் இருக்கு சூத்திரம். கருப்பட்டீண்ணா கடிக்கும்போ மாவு போல இருக்கணும். ஆனா பதம் தப்பிச்சிண்ணா மணல் கேறிப்பிடிச்சதுபோல இருக்கும். சுற்று மாறி இவ துடுப்பிட்டப்போ எல்லாம் மணப்பாஞ்சி போச்சி. புதுசா வந்த மருமவள மாமியாக்காரிக்கு ஒன்னும் சொல்லப்பற்றேல. கருப்பட்டி ஊத்த தெரியாதாக்கும்ணு சிரிச்சிட்டு போச்சினும். பொன்னம்மைக்கும் பரிகேடாப் போச்சி. அண்ணு வாசி எடுத்தவ தான் மணப்பாஞ்சி விளையில நான் கருப்பட்டி காய்ச்சுதேண்ணு சொல்லி மொத்தம் வேலையும் அவ தான் எடுத்து செய்தா. அவளுக்க 7 மக்களும் 18 கருப்பட்டிக்க காரியமும் இதாக்கும்.

பேரு மாத்தண்டாம் பாட்டா என்றபடி நான் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

 

அருட்பணிகாட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com


%d bloggers like this: