பின்னல்கள்


அடி

பனை சார்ந்த எனது தேடுதல், நிறைவடையாத ஒரு பிரம்மாண்ட பின்னல். சில கோணங்களில் அவைகள் ஒரு முடிவினை எட்டிவிட்டது என்றாலும் அவைகள் முடிவிலி நோக்கியே என்னை இழுத்துச் செல்லுகின்றன. ஒன்றன் மேல் ஒன்றாக ஏறிச்செல்லும் இப்பின்னல்கள் என்னை ஒரு முழு வடிவமாக்க முயற்சிக்கின்றன. அப்படி ஒரு முழுமைகொள்ளலை பனை சார்ந்தும் எட்டிவிட இயலுமா என்றே எம்பிக்கொண்டிருக்கிறேன். இது வெற்றி தோல்வி என்ற பாதையை தெரிவு செய்யும் களமல்ல தடம் பதித்து பாதை சமைக்கும் ஒரு கடுந்தவம். பின்னிப்பின்னி முடைந்தெடுத்து ஒன்றாக்கி சேர்ப்பதில் உள்ள நுட்பம் நேர்த்தி போன்றவை அலைந்து திரிந்து தேடும் வாழ்க்கை முறை  இருந்தாலே  சாத்தியம்.

எனது வாழ்வு குறித்தும் பனைத் தேடுதல் குறித்தும் முழுக்கவே பனை மரச் சாலையில் எழுதியிருக்கிறேன். கடந்த 2016 ஆம் ஆண்டு எனது இருச்சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வந்தேன். பனை மரம் மீதுள்ள எனது 20 வருடத்திற்கும் மேலான வேட்கையினை அதன் மூலம் நான் நிறைவேற்றிக்கொண்டேன். மேலதிகமாக எழுத ஏதுமில்லை என உணர்த்தபோது இலங்கை பயணம் அமைந்தது. இலங்கை தேசிய கிறிஸ்தவ திருச்சபை மாமன்றம் என்னை அழைத்து திருச்சபை சார்ந்த பனை மர வேட்கையினை நிகழ்த்த உதவியது. ஆகவே அப்பயணம் சார்ந்த பதிவுகளையும் தொடராக  எழுதினேன். பின்பு   பனை சார்ந்த தொடர் ஒன்றினை  கற்பக தரு என்ற தலைப்பில், முதன் முதலாக தி இந்து தமிழ் நாழிதழ் வாயிலாக 50 வாரங்கள் வெளியிட்டேன்.  ஒவ்வொரு வாரமும் ஒரு பனை சார்ந்த பொருள் மற்றும் ஒரு பனை கலைஞரை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற வேட்கையுடன் ரசித்து அவைகளை வடிவமைத்தேன்.

panaimara-saalai_FrontImage_871

பனைமரச் சாலை

தி இந்து தமிழ் திசையில் நான் பதிப்பித்த  அத்தனை கட்டுரைகளும் தமிழ் வரலாற்றில் பனை  சார்ந்து பதிக்கப்பட்ட முதல் தகவல்கள். அனைத்து தகவல்களையும் நானே நேரில்  தேடி சென்று சேகரித்தவைகள். அந்த தேடுதலில் இருந்த சவால் மற்றும் அதில் என்னைப் பரவசமடயச் செய்யும் தகவல்கள் என என்னை நிறைத்துக்கொள்ளும் ஒரு பயணமாக அவைகள் அமைந்திருந்தது. இன்னும் குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு பனை சார்ந்த பொருட்களை மையப்படுத்தியே நான் எனது ஆய்வுகளை விரிக்க வேண்டிவரும் என நினைக்கிறேன். ஒருவேளை எனது வாழ்நாள் முழுவதுமே இத்தேடலில் நான் செலவிடக்கூடும். அத்துணை செறிவுமிக்க ஒரு தேடலாக இது இருக்கிறது.

எனது பனைமரச்சாலை பயணத்தின்போது ஒன்றைக் கவனித்தேன், தமிழகத்தில் தான் பனை சார்ந்த பொருட்கள் அதிகம் செய்யப்படுகின்றன. அதே நேரம், நாம் செய்யாதவற்றை பிற இடங்களில் மக்கள் செய்துகொண்டுவருகிறார்கள். அல்லது நம்மிடம் வழக்கொழிந்துபோனவைகள் பிற இடங்களில் உயிர்ப்புடன்  இருக்கின்றன. இது எனக்குள் ஒரு அகத்தூண்டலை ஏற்படுத்தியது. பின்னல்கள் என்பவை எவ்வாறு மனித வரலாற்றில் துவங்கியிருக்கும்? அதன் காலம் என்ன? எச்சூழலில் இவைகள் பன்மடங்காக பெருகி ஊறியிருக்கும்? போன்ற முடிவிலா கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. எனக்கு கிடைக்கபெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் என்னால் எதையும் உறுதியாக சொல்ல இயலாத ஒரு மாயவலை என்னைச் சூழ்ந்து இருப்பதைக் கண்டுகொண்டேன்.

ஆகவே துணிந்து எனது மனதில் பட்டவைகளைக் கூற முடிவெடுத்தே இப்பதிவுகளை எழுத ஆரம்பிக்கிறேன். கடந்த 2017- 18 வரை ஹென்றி மார்ட்டின் இன்ஸ்டியூட், ஹைதராபாத் என்னை பனை சார்ந்து ஒரு ஆவணப்படம் எடுக்க பணித்தார்கள். அவ்வகையில் பனை சார்ந்து நான் தமிழகம் முழுக்க பயணித்தது எனக்கு பேருதவியாக இருந்தது. இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் அவர்களின் உதவியுடன் நான் பெற்ற புரிதல்களே அன்றி நான் பனைமரச்சாலை எழுதியபோது நான் அறிந்திருந்தவைகள் அல்ல. ஆகவே எனது வணக்கத்தையும் நன்றிகளையும் கூறத்தகுந்தவர்கள் அவர்கள்.

இரண்டாவதாக 2018 – 19 வருடங்களில் நான் குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து பணியாற்றினேன். பனை நாடு என்ற அமைப்பினை அப்போது உருவாக்கி தமிழகம் முழுவதும் ஒருகோடி பனை விதைகளை நடும் திட்டங்களை முன்னெடுத்தோம். தமிழகம் தழுவிய ஒரு பயணம் செய்யும் ஒரு வாய்ப்பு இதன் மூலம் மீண்டும்  கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தையும் நான் பயன்படுத்தி பனை சார்ந்த கலைஞர்களை தேடிக் கண்டுபிடித்தேன். குறிப்பாக பனை ஓலைக் குடுவை என்ற மறைந்து போன ஒரு கலையைக் கூட இதன் வாயிலாக நான் மீட்டெடுக்கும் ஒரு தருணமாக அமைத்துக்கொண்டேன். மட்டுமல்ல, இக்காலங்களில் தான் எனது எழுத்துக்கள் தொடராக தி இந்துவில் வெளிவரத்துவங்கின. ஆகவே குழித்துறை மறை மாவட்டதிற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை பரிந்திரைத்த அருட்பணி. ஜெகத் கஸ்பார் அவர்களுக்கு எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன்.

EDN_2785

பனையோலை தோள்பை

பனை சார்ந்த எனது தேடுதலில் எனக்கு பேருதவியாகவும் எனக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர்கள் பனை ஓலைக் கலைஞர்கள் தாம். அவர்களின் பின்னல்கள் குறித்து நான் இப்போது எண்ணிப்பார்க்கையில், பல நுண் தகவல்களை நான் குறித்து வைக்காமல் விட்டுவிட்டேனே என்கிற ஒரு அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த விடுபடல் எப்போதும் இருக்கும் என்பது எனது அனுபவம். வாசகர்கள் அதனை தங்கள் வாசிப்பினூடாகவும் பயணத்தினூடாகவும் நிறைவு செய்வது ஒன்றே வழி. ஆகவே எனது பெரு வணக்கத்திற்குறிய நபர்களாக பனை கலைஞர்களையே குறிப்பிடுவேன்.

பனை சார்ந்த கலைஞர்களுக்கும் பனை ஏறுகிறவர்களுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. பனை ஏறுகிறவர்கள் பனை சார்ந்த கலைஞர்களாக இருக்க இயலும் ஆனால் பனை சார்ந்த கலைஞர்கள் பனையேரிகளாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆகவே பனை சார்ந்த கலை பணிகளில் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு வளமாக தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெருமளவில் உணவிற்கு ஈடாகவே பனை சார்ந்த உண்ணாபொருட்கள் தமிழக வாழ்வில் பெரும் பொருளியல் பங்களிப்பை செய்து வந்திருக்கின்றன. இவைகள் ஆய்வு செய்யப்படவேண்டிய பணி என்றாலும் அவ்வகையான ஆய்வுகளை செய்யும் வலுவோ சூழலோ இன்று தமிழகத்தில் இல்லை என்பது தான் உண்மை.

ஆகவே பனை சார்ந்த கைவினைக் கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்ற வரலாற்று உண்மையினை பதிவு செய்யும் ஒரு சூழல் இதன் வாயிலாக கிட்டியது. அது உண்மையும் கூட. பனைத்தொழில் ஆண்களால் செய்யப்பட்டபோது  அதனை சார்ந்து வாழும் பெண்கள் தமது எஞ்சிய நேரத்தில் பனை சார்ந்த பல்வேறு பொருட்களை செய்து தமது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்தனர். இவைகள் ஒருபுறம் இருந்தாலும், ஆண்களும் பனை சார்ந்த கலையில் தொய்வடைந்திருக்கவில்லை என்பதுவே எனது அனுபவ உண்மை. ஆண்களுக்கான பிரம்மாண்ட படைப்புகள் என தனி வரிசையே இருப்பதைக் கண்டுகொண்டேன்.

ஆகவே இக்கலவையான கலைகளினூடாக ஒரு பயணத்தை எடுத்துச் செல்லுவது எனக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு முன்னோடியாக இவைகளில் முன்னின்று நான் செய்யவேண்டிய மேலதிக பொறுப்பும் எனக்கு உள்ளதாக நான் நினைத்ததால் இவைகளை தொகுக்க விழைகிறேன். கூடுதலாக பனைமரச்சாலை புத்தகமாக வெளிவருவதற்கு முன்னே, அது இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக பல்வேறு பனை சார்ந்த கலைஞர்கள் மேலெழுந்திருக்கிறார்கள்.

EDN_2782

பனையோலை தோள்பையுடன் ஆரோன்

எனது பனை தேடல்கள், தொடர் தேடுதல் ஆனபடியால் தமிழகத்தைக் கடந்தும் பனை சார்ந்த கலைஞர்களை அடையாளப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஏனென்றால், பனை சார்ந்து இன்றும் சில மாயைகள் மக்களின் மனதில் இருக்கின்றன. அதில் முதலாவதாக பனை மரம் தமிழர்களுக்கான மரம் என்பது. இரண்டாவதாக தமிழகத்தில் உள்ளவர்களுக்கு பனை மரம் நாடார் சாதிக்கு மட்டுமே உரித்தான மரம் என்கிற எண்ணம். இவ்விரண்டு கருத்துக்களையும் நான் நேர் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். ஒன்று தமிழகம் அல்லாத பகுதிகளில் பனை மரம் மற்றும் பனை சார்ந்த வாழ்வு பெருகி பரவியிருக்கிறது. ஆகவே நாடார் அல்லாத மக்களும் பனை சார்ந்த வாழ்வை மேற்கொள்ளுகிறார்கள். அப்படியானால், பனை தமிழர்களின் மரம் இல்லையா? நாடார்களுக்கு பனையுடன் உறவு இல்லையா என வெகுண்டெழும் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது.

பனை மரம் இயாற்கையின் வரம். அதனை பல்வேறு நிலப்பரப்பில் வாழும் மக்கள் தமதென சுவீகரித்துக்கொண்டார்கள். ஆகவே இது மானுட மரம். அதனை நாம் சுருக்க விளைவது பனைக்குச் செய்யும் சிறுமையே அன்றி வேறல்ல. ஆனால் பனை தமிழர்களின் மரம் என சொல்லப்படுவதற்கும் நாடார்களின் மரம் என சொல்லப்படுவதற்கும் வேறு காரணங்கள் உண்டு. அது என்னவென்றால், உலகின் எந்த கலாச்சாரத்திலும் பனைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை விட தமிழகத்தில் அதற்கான ஒரு முக்கிய இடம் இருந்திருக்கிறது. அப்படி இல்லையென்றால் கூட உலகில் எங்கோ வாழும் ஒரு பழங்குடியினரின் வாழ்வில் காணப்படும் பனைக்  கலாச்சாரத்திற்கு இணையாவாகவேனும்  பனை இங்கு  போற்றப்பட்டிருக்கிறது. அப்படியே இன்று தமிழகத்தில் உள்ள எந்த சாதியினரை விடவும் பனை மரத்தினை உரிமைக்கொண்டாட நாடார்களின் கடந்த 300 வருட அற்பணிப்பு மற்றும் பனை சார்ந்த வாழ்வு சாட்சியாக இருக்கிறது.

இன்று இது யாருடைய மரம் என்ற கேள்வியை விட, இதனைப் பேணி வந்த மக்களின் தொகையினை தேடி எடுப்பது பனை எவ்விதம் பல்வேறு கலாச்சார, மொழி, சாதி, இனம், நிலப்பரப்புகளைத் தாண்டி இந்திய நிலப்பரப்பில் இயங்கிவந்திருக்கிறது என்பதை நமக்கு உணர்த்த வல்லது. அவ்விதம் ஒரு தேடுதல் முழுமையடைந்தால் இந்திய நிலப்பரப்பில் பனை சார்ந்த வாழ்வியலை அடையாளப்படுத்தும் முதன் முயற்சியாக அது காணப்படும். மாத்திரம் அல்ல நமது வரலாற்றை திருப்பி எழுதவும் ஏன் மனித பரிணாம வரலாற்றைத் திருப்பி எழுதவும் கூட இது பேருதவியாக இருக்கும் என கருதுகிறேன்.

இக்கட்டுரைகளை நான் தொகுக்க ஒரு காரணம் உண்டு. கடந்த பெப்ருவரி 25 முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை “வாஃபா இந்தியா 2020” (WAFA India 2020) என ஒரு மலர் கண்காட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் என்ற இடத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் எப்படியோ எனது தொடர்பை பெற்று பனை சார்ந்த அலங்கரிப்புகள் செய்யக் கேட்டுக்கொண்டார்கள் மாத்திரம் அல்ல இரண்டு பனை சார்ந்த கலைஞர்களையும் என்னையும் அங்கே செயல்முறை விளக்கம் அளிக்க அழைப்பு விடுத்தார்கள். இச்சூழலில் நான் பரிந்துரை செய்தவர்களை அவர்கள் விமானத்தின் மூலம்  ராஜஸ்தான் அழைத்தார்கள். இந்திய சூழலில் பெரும்பாலானவர்களுக்கு விமான பயணம் ஒரு கனவே.  பனை சார்ந்து இயங்குகிறவர்களை நானறிந்து இதுவரை எவரும் விமானத்தில் அழைத்துச் சென்றதில்லை. அதற்கு காரணம் பனை சார்ந்து இயங்குகிறவர்கள் மேல் ஒரு இளக்காரம் சமூகத்திற்கு இருக்கிறது. இதனை மாற்ற வேண்டுமானால், பனை சார்ந்த கலையின் மேன்மையினை சர்வதேச மேடைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்.

அவ்வகையில் நான் தற்போது இருக்கும் மும்பை ஒரு சர்வதேச மேடையாக ஏன் இருக்ககூடாது என எண்ணினேன். ஆகவே பனை சார்ந்த கலைஞர்களை ஒன்றிணைத்து மும்பையில் ஒரு நிகழ்வினை அமைத்தால் அது  சர்வதேச கவனத்தைப் பெறும் என முடிவு செய்து அதற்கான ஆரம்ப பணிகளைச் செய்ய ஆரம்பித்தேன். முதலாவதாக அனைவரையும் விமானத்தில் மும்பை கொண்டுவரவேண்டும் என்று தான் எண்ணினேன் ஆனால் அது நடைபெறுமா என்கிற ஐயப்பாடு எழுந்தது. கொரோனா ஏற்படுத்திய நஷ்டத்தை விமான கம்பெனிகள் வரும் நாட்களில் வசூலிக்க திட்டமிடுவார்கள். மேலும், ஒரு நிகழ்வினை ஒருங்கிணைக்கும் சூழல் உண்டா என நான் களமிறங்குமுன்பே  கொரோனா பேரிடர் பூதாகரமாக எழுந்து விட்டது.

ஆகவே, முதலில் பனை சார்ந்து நான் அறிந்த பொருட்களையும் அதனைச் செய்யும் கலைஞர்களையும் வரிசைப்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். தமிழகத்தைச் சார்ந்த 60 கலைஞர்களும் பிற மாநிலங்களிலிருந்து 40 கலைஞர்களின் சங்கமமாக இந்த புத்தகம் விரிவடைய வேண்டும் என எண்ணுகிறேன். இந்த புத்தகத்தின் நிறைவே நான் யாரை இந்த நிகழ்வுகளுக்கு அழைக்க இருக்கிறேன் என்பதையும் எந்த பொருட்கள் காட்சிக்கு வரவிருக்கின்றன என்பதையும் தீர்மானம் செய்யும்.

குறிப்பு: “அடி” என்பதற்கு பனை ஓலையில் செய்யப்படும் பொருட்களிற்கான துவக்கம் என பொருள்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

ஒரு பதில் to “பின்னல்கள்”

  1. Logamadevi Annadurai Says:

    மிகப்பிரமாதமான துவக்கம். ஆம், பனைக்காதல் உங்களைச் சூழ்ந்திருக்கும் மாயவலையேதான். மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். சாதி மதம் மொழி எனும் பாகுபாடுகளை கடந்த இப்பனைத்தேடலில் மீண்டும் உங்களுடன் வாசிப்பின் வழி இணைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி
    வாழ்த்துக்கள் இத்தொடரின் வெற்றிக்கு
    அன்புடன்
    லோகமாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: