பின்னல்கள்  – 2


ஓலை

பனை ஓலைகளில் காணப்படும் பொருட்கள் நெடு நாட்கள் பயன்பாட்டிற்கு வருவது இல்லை என ஒரு புரிதல் நமக்கு இருக்கலாம். அது அப்படியல்ல, ஒரு பொருளின் பயன்பாட்டினை உணர்ந்து யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அதன் வாழ்நாள் இருக்கும். பனை ஓலைகள் பெருமளவில் கிடைத்துக்கொண்டிருந்த காலத்தில் கூட  பல வருடங்களாக பனை பொருட்களை மக்கள் பயன்படுத்தியதை பார்க்க இயலும். இவ்வித பயன்பாட்டு பழக்கவழக்கம் ஒரு பொருளின் தன்மையினை உணர்ந்து அதனை எப்படி பேணினால் அதன் வாழ்நாள் நீடிக்கும் என்பதை உணர்ந்த மக்களாலேயே  சாத்தியம். ஒவ்வொரு பொருளையும் பேணும் வழிமுறைகள் வித்தியாசமானது. பல்வேறு பனை பொருட்களை பேணும் முறைகள் நினைவுகளாக கூட இன்று எஞ்சியிருக்கவில்லை. முறையானயான பயன்பாடு தான் பனை பொருட்களை நெடுநாட்கள் காப்பாற்றும். அவ்வகையில், நமது கலாச்சாரம் பனை பொருட்களை தகுந்த முறையில் பேணி பாதுகாத்த ஒரு உயரிய பண்பாடாகும்.

EDN_2773

பனை ஓலைக் கூடையுடன் ஆரோன்

ஆனால் பயன் படுத்தி ஏறியும் பழக்க வந்த பின்னர், பனை ஓலைகளுக்கும் அந்த கதியே ஏற்பட்டது. நவீன பொருட்கள், நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. பனை பொருட்கள் கீழானவைகளாக எண்ணி பேணுவது சார்த்த அறிவு மங்கிப்போயின.  ஆகவே அவைகள் பெருமளவு மதிப்பிற்குரிய பொருட்களாக கவனத்துக்குட்படுத்தவில்லை.  பனை சார்ந்து இயங்கும் கலைஞர்கள்  நமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பாட்டியோ மாமாவோ யாரோ ஒர் தெரிந்த எளிய மனிதராக இருப்பதினால் அவர்களது முக்கியத்துவம் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. கல்விக்கு முக்கியத்துவம் ஏற்பட்ட பின்னர் இவ்விதமான முறைசாரா கல்விக்கு எவரும் மதிப்பளிக்கவில்லை. இவ்விதம் நுட்பமான வேலைகள் செய்வோரை நாம் எவ்வகையிலும் பொருட்படுத்துவதுமில்லை. ஆனால் மனித நாகரீகத்தில் பின்னல்களுக்கு என ஒரு முக்கிய இடம் இருக்கிறது. ஆகவே தான் பட்டுச் சாலை மிக முக்கிய வணிக பாதையாகவும் கலாச்சார பாதையாகவும் வரலாற்றில் இன்றளவும் கவனிக்கப்படுகிறது.

பின்னல்கள் என்பது மனித வாழ்வில் எஞ்சியிருக்கும் மிக தொன்மையான கலை வடிவம் என்கின்றனர் ஆய்வாளர்கள். புதிய கற்காலம் முதலே பின்னல்கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 12000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வகையான புற்பூண்டுகள்   கொண்டு மனிதன் பின்னல்களை செய்ய கற்றிருக்கிறான். வேலியமைப்பது மற்றும் சிறு பொருட்கள் செய்வது என அது பல்வேறு பரிணாமங்களை எட்டியிருக்கிறது. எனினும்  முதன் முதலில் மனிதன் எந்த தாவரத்தை பின்னல்களுக்கு  பயன்படுத்தியிருப்பான் போன்ற கேள்விகளுக்கு சரியான விடை ஆய்வாளர்களிடம் இருப்பதில்லை.  வரலாற்றில் எஞ்சிய அந்த பக்கங்களை பனை மரம் கொண்டு நாம் தைரியமாக நிரப்ப இயலும்.

சில அறிஞர்கள் பழைய கற்காலம் முதலே பின்னல்கள் வழக்கில் இருந்ததாக கூறுவார்கள். 27000 வருடங்களுக்கு முன்பே பிரி போன்ற பொருட்களால் பைகள் கச்சைகள் போன்றவைகளை செய்திருப்பதாக கண்டடைந்திருக்கிறார்கள். எரிந்துபோன துணியும் பானைகளில் பிரிகளின் அடையாளங்களும் பதிந்திருப்பதை செக் குடியரசில் (Czech Republic) உள்ள தோல்னி வெஸ்டோனிஸ் (Dolní Věstonice) என்ற பழைய கற்கால குடியிருப்பில்  கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தென்னமரிக்காவைப்பொறுத்தவரையில் கி மு 10100 முதல் 9080 வாக்கில் கிடைக்கபெற்ற ஆறு பாய்கள் மிக சீராக செய்யப்பட்டவைகளாக இருந்திருக்கின்றன. இவைகள் தாவரங்களை மையமாக கொண்டு நெய்யப்பட்டவைகள் என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சணல் நூலினால் நெய்யப்பட்ட துணியினை மத்திய கிழக்கு நாடுகளில் கி மு 7000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து கி மு 5000 ஆண்டுகளில் ஆளி செடியிலிருந்து பெறும் கயிற்றினை திரித்து நெய்ய கற்றிருக்கிறார்கள். சீனாவின் பட்டு நூல் பாரம்பரியம் 3500 ஆண்டுகள் என்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த பின்னல்களின் நெடுந்தூரப் பயணம் என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மக்களால் சிறுக சிறுக பெற்றடைந்த ஞானம் என்பதாகவே இதன் மூலம் நாம் அறிகிறோம்.

திராவிடர்களின் நூற்பு கலையானது 5000 ஆண்டுகள் பழைமையானது என்றும் அது கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் கலாச்சாரத்தைவிடவும் மேலானதாக இருந்திருக்கிறது என இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர். சான்மார்சல் தீர்க்கமாக கூறுகிறார்.  மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகள் இந்த கருத்திற்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது என அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் பருத்தி ஆடைகளின் இற்றுப்போன எச்சத்தை கண்டடைந்திருக்கிறார்கள். அப்படியானால் இதற்கு முந்தைய காலம் எப்படியானது என்கிற கேள்வியினை நாம் கேட்டுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். பருத்தி பயிர் செய்து நூற்பு கலை மேலெழுந்திருக்குமானால் அதற்கு முந்தைய நிலை முடைதல் என்னும் கலைதான் என என்னால் தீர்க்கமாக கூறமுடியும்.

Mohanjadaro

மொகஞ்சதாரோ நகர அரசனும் அவர் அணிந்திருக்கும் அழகிய ஆடையும்

நமது பண்பாட்டிலிருந்து தூர நோக்குகையில் நாமும் எளிதாக எதனையும் சொல்லிவிட முடியாது என்பது உண்மைதான். என்றாலும் பனை சார்ந்து வாழும் ஒரு கலாச்சாரத்தில் பனை மிக முக்கியமாக மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் நாம் வாழும் காலத்தில் நமது கைகளில் வந்து சேர்ந்திருக்கும் பனை ஓலைப் பொருட்களின் வரலாறு மிக நெடியது என்பதையும் நாம் உணர்ந்தே ஆகவேன்டும். அவ்வகையில் நாம் ஆழ்ந்து நோக்கும்போது, பனை ஓலை சார்ந்த கலைஞர்கள் ஒரு தொல் பண்பாட்டின் எச்சமாக நம்மிடம் இருந்துகொண்டிருப்பவர்கள். மிக மிக அரிதானவர்கள். காலத்தால் அடித்துச்செல்லப்பட்ட மாபெரும் கலையின் எச்சத்தை தங்கள் உயிர் மூச்சைப் பிடித்து இன்றும் வாழ வைப்பவர்கள். பல்வேறு நாடுகளில் இவ்வித தொல் கலாச்சாரத்தின் எச்சங்கள் புதை படிவங்களாக எஞ்சியிருக்கையில், நம்மிடையே இவர்கள் வாழும் தொன்மங்களாக இருக்கிறார்கள் என்பது எத்துணை சிறப்பான காரியம்.

பனை மர ஓலைகள் தன்னளவில் மிகவும்வழுவழுப்பானவைகள். அவைகளின் அகன்ற வடிவம் நேரடியாக பழைய கற்கால மனிதர்களால் பயன்படுதப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகுந்திருக்கின்றன. தாய்மார்களே தங்களது குழந்தைகளுக்கான படுக்கையாகவோ அல்லது மழையிலிருந்து காப்பாகவும் விழுந்த பனையோலைகளை பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் பனை சார்ந்த பல்வேறு பொருட்கள் மேலெழுந்து வர காலம் அவர்களுடன் கைகோர்த்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சரி பனையுடன் எப்படி மனிதர்களுக்கான தொடர்பு ஏற்பட்டது? எங்கே ஏற்பட்டது போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் கூற இயலாது ஆனால் இரண்டு கண்டங்களில் பனை விரவி பரவியிருந்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சி. மனித குல ஆரம்பம் முதலே பனை அவர்களுக்கு ஏற்ற தோழனாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் என்ற ஒரு உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளலாம். இரண்டு முக்கிய காரணிகள் நமக்கு தடயங்களாக இருக்கின்றன. ஒன்று ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றியது என்கின்ற ஒரு தரவு. அப்படியே நாம் பயன்படுத்தும் பனை மரமானது ஆசியாவில் தோன்றியதாக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் மற்றும் பனைமரம் ஆகிய  இந்த இரண்டு இனங்களின் சந்திப்பும் நிகழ்ந்த காலம் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பின் காலம் என மனித வாழ்வில் நாம் கூறமுடியும். பரஸ்பரம் மனிதனும் பனை என்னும் தாவரமும் இறுக தழுக்கொண்ட இந்த காலகட்டம் மனித வாழ்விலும் தாவரங்கள் வாழ்விலும் ஒரு பொற்காலம் எனலாம். ஏனென்றால் மனிதன் உணவுக்காக பல்வேறு இடங்கள் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது பனை மரமே அவனுக்கு உணவளித்து அவனை ஓரிடத்தில் தங்கச் செய்த கற்பக விருட்சமாக காணப்பட்டிருக்கிறது.

தானியங்களை மனிதன் கண்டுபிடித்தது கி மு 10000 ஆண்டு வாக்கில் தான். ஆனால் தானியத்தினை உணவு பொருள் என நுண்மையாக கணுபிடிக்கும் ஒரு அறிவிற்கு முன்னால் உணவு என்பது கனிகளும் கிழங்குகளுமாகவே  மனித வாழ்வில் இருந்திருக்கின்றன.  பனை மரத்தில் மட்டுமே வருடம் முழுவதும் பழங்களும் கிழங்குகளும் கிடைக்கும். பனை சார்ந்த சூழியலில் காணப்படும் சிறு உயிர்களும் ஒரு உணவு சங்கிலியை மனிதனுக்கு வழங்கியிருக்கின்றன. குறிப்பாக பனங்காட்டில் மிகுந்து வளரும் கரையான் மனிதனுக்குத் தேவையான புரதத்தினை வாரி வழங்கியிருக்கும்.  இவ்விதம் நீர்நிலைகளும் பனைமரமும் ஒன்றிணையும் தடங்களில் மனிதனின் ஆதி வாழ்வு உருப்பெற்றிருகும் வாய்புகள் வளமாக இருக்கின்றன.

பனை மரத்திலிருந்து பனம் பழங்கள் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரைக் கிடைக்கும். அப்படியே பனங்கிழங்குகள் மிச்சம் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கும். இவ்வித சூழல் மனிதன் தன்னை தகவமைத்துக்கொள்ள ஏற்றவைகள். பனைக்கு இணையாக தொடர்ந்து வருடம் முழுவதும் உணவளிக்கும் வேறு தாவரங்கள் ஏதும் இன்று நம்மிடம் எஞ்சியிருக்கவில்லை. மாத்திரமல்ல, மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய  பொருட்களை வழங்கும்  வேறு மரங்களும் இல்லை. ஆகவே பனை மரத்தினை மனித வாழ்வின் முதன்மையான மரம் எனக் கொள்ளுவது மிகச்சரியாகவே இருக்கும்.

மேலும் பனை மரத்தின் குருத்துகள் பஞ்சகாலத்தின் முக்கிய உணவாகும். கற்கால கருவிகளைக் கொண்டு பனை மரத்தைச் சிதைத்து அதன் குருத்தினை உண்டு கூட உயிர் தப்பியிருக்ககூடிய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. ஆகவே தான் மனித மரபணுவில் பனை ஆழமாக பதிந்துபோய்விட்டது.

மேலும் பனை பல்வேறு வகைகளில் மனிதனுக்கு உதவியிருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. வெட்டுவதற்கு ஏற்ற வகையில் கூர்மையான கருக்குகள் கொண்ட அதன் மட்டை ஆயுதங்கள் குறித்த ஒரு பார்வையைக் கொடுத்திருக்கும். விழுந்துபோன பனைகளில் எஞ்சியிருக்கும் குழிகள் அவன் பொருட்களை வைத்துகொள்ளவும் உதவியிருக்கும். கூடாகிப்போன பனை மரத்தடிக்குள் பதுங்கிக்கொள்ளவும் வாய்ப்பிருந்திருக்கிறது.

ஆகவே பனை சார்ந்த ஒரு வாழ்விடம் மனிதன் ஆதி காலம் முதலே தங்குவதற்கு ஏற்ற இடமாக இருந்திருக்கிறது. பொதுவாக பனை மரங்கள் அடர் காடுகளில் காணப்படுவது இல்லை. மனித வாழ்வு அரைப்பாலை நிலங்களிலேயே செழித்திருக்கிறதாக கூறுகிறார்கள். அவ்வகையிலும் பனை தன்னை முதன்மையான தாவரமாக மனித வாழ்வில் முன்னிறுத்துகிறது.

பின்னல்கள் மனித வாழ்வில் மிக படிபடியாக கற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கலை. கைகளால் நெய்து பின்னர் படிபடியாக விசைத்தறி மற்றும் மின் தறிகள் என நாம் பல நூற்றாண்டுகள் கடந்து வந்து விட்டிருக்கிறோம். என்றாலும் மனித கைகளும் மனித மனமுமே இவ்வித வளர்ச்சிப்படிகளின் ஆரம்பம் எனக் கொள்வோமானால் நம்மிடம் எஞ்சியிருக்கும் பனை சார்ந்த கலைஞர்களின் வாழ்வினை நாம் போற்றவும் அவர்களின் முக்கியத்துவத்தை உணரவும் வசதியாக இருக்கும்.

இந்தியாவில் பனை வாரியம் என்பது விவசாயத்துறையின் கீழ் வருவதல்ல. மாறாக ஜவுளித்துறையின் கீழ் இதனை அமைத்திருக்கிறார்கள். ஏன் என எண்ணிப்பார்க்கையில் காதி கதர் கிராம தொழில் முனைவோர் பனை ஓலைகள் சார்ந்த பொருட்கள் பின்னலாடைகள் சார்ந்த ஒன்றாக இருப்பதாகவே கருதியிருக்கிறார்கள். மேலும் இவ்விதம் இணைத்து செயல்படும்போது பனை சார்ந்த கலைஞர்களுக்கும் பயன் அமையுமே என்ற நல்லெண்ணத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பனை சார்ந்த புரிதலற்றவர்களால் பனை ஓலை பொருட்கள் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன. அவ்விதம் கைவிடப்பட்டவைகளும் நினைத்து எண்ணி கைவிடப்படவில்லை. புரிதலற்ற தன்மையாலும், வெளிநாட்டு வருமானத்தை கவனத்தில் கொண்டுமே கைவிடப்பட்டன.

குறிப்பாக மணப்பாடு மற்றும் கடலூர் போன்ற  இடங்களில் நிறுவப்பட்ட பனை சார்ந்த பயிற்சி மையங்கள் எல்லாம், பாரம்பரிய முறைகளை ஒவ்வொன்றாக வைவிட்டு நவீன வழிமுறைகளையும் வடிவங்களையும் முன்னெடுத்தன. இவைகள் பனை ஓலையினை அழகாக மாற்றி விற்பனை செய்யும் வடிவமைப்பு கொண்டவையாக இருந்தாலும் பாரம்பரிய பொருட்களில் காணப்பட்ட பயன்பாட்டு தன்மையும் உறுதியும் இவைகளில் இல்லாமல் ஆகின. ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் உள்நாட்டு பயன்பாட்டு நிலையிருந்து வெளியேறின. மக்கள் மிகவும் மலிவான அழகான நெகிழிப் பொருட்களை தேடிச் செல்லலாயினர்.

இச்சூழலில் தான் பனையோலைகள் நமது அன்றாட வாழ்விலிருந்து  வெளியேறுவதைப் பார்க்கின்றோம். சிறுக சிறுக அவைகள் மறைந்து செல்லுவதை உணராதபடி நம்மை சூழ பிற பொருட்கள் வந்து ஓலைகளின் இடத்தைப் பிடித்துவிட்டன.  இன்று பனை சார்ந்த வாழ்வு அழிந்துகொண்டிருக்கும்போது பனை சார்ந்த எவ்வித கலைகளும் மேலெழும்பும் வாய்ப்புகள் இல்லாத சூழல் தான் எஞ்சியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை முன்னெடுப்பதற்கும் மனித வாழ்வில் இவைகளின் அளப்பரிய பங்களிப்பினை எடுத்துக்கூறுவதற்கும் பனை சார்ந்த கலைஞர்கள் இன்றியமையாதவர்கள். பனை ஓலை கலைஞர்கள், பனையேறிகள், பனை உணவு தயாரிப்பவர்கள் போன்றோர் யாவும் பனை மரத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள். ஒன்று அழிந்தாலும் அனைத்தும் இணைந்தே அழிந்துவிடும் அபாய சூழலே இன்று இருக்கிறது. இவ்வித அழிவின் விழும்பில் இருக்கும் ஒன்றினை கவனத்துடன் மீட்டெடுப்பது மிக முக்கிய பணியாக நம்முன் எழுந்து நிற்கின்றது.

அப்படியானால் பனை கலைஞர்களின் கூட்டு நிகழ்ச்சிக்கான காரணம் என்ன? அவைகளின் தேவை தான் என்ன? என்கிற கேள்விகள் எழும்புவது இயல்பே. இன்று நமது கண் முன்னால் அழிபவைகள் ஆவணப்படுத்தப்படாமலேயே அழிவது இந்த காலகட்டத்தில் நிகழ்வது தான் இவற்றின் பேரவலம். நாம் வாழும் காலகட்டம் தகவல் தொழில்னுட்பம் பெருகியிருக்கும் காலகட்டம். இச்சூழலிலும் இவ்வித தகவல்கள் அரிதாக இருக்குமென்றால், நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.   இரண்டாவதாக பனை சார்ந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வோர் பனை மரத்தினை முக்கியத்துவப்படுத்தியும் இயற்கை பொருட்களை முன்னிறுத்தியும் விற்பனை செய்வது வழக்கம். மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. ஓரளவிற்கு இவைகள் ஏற்புடையதே. ஆனால் ஒருபோதும், ஒரு தனிப்பட்ட பொருளை ஒரு கலைஞருடன் இணைத்து முன்னிறுத்துவதில்லை. ஒருவகையில் இது பனை சார்ந்த கலைஞர்களுக்கு ஒரு பின்னடைவு என்றே கருதுகிறேன். பனை ஓலைக் கலைஞர்கள் முன்னிறுத்தப்படாது போகும்போது, அவைகளின் தனித்தன்மைகள் என்னவாகும்?

இப்படி யோசித்து பார்ப்போம், பல்வேறு இசைக்கலைஞர்கள் இன்று இருந்தாலும், இசைக்கலைஞர்களுள் இளையராஜா என்பவர் பெற்றிருக்கும் ஒரிடத்தைபோல பனை சார்ந்த கலைஞர்களும் ஓரிடத்தைப் பெறவேண்டும் என்பது எனது எண்ணம். அதற்கு இவ்வித கூட்டு முயற்சிகள் இன்றியமையாதவை. வேறு வகைகளிலும் இவைகளைச் செய்யலாம் என்றாலும், இப்போது நான் முன்வைக்கும் வழிமுறைகள் இவைகளே. 

குறிப்பு: ஓலை என்பது செய்தி எனவும் பொருள்படும்

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

ஒரு பதில் to “பின்னல்கள்  – 2”

 1. Logamadevi Annadurai Says:

  ஆம் நீங்கள் சொல்வது போல எத்தனையோ தாவரங்கள் இருப்பினும் பனை அவற்றீன் அரசன் எனச்சொல்லலாம் . நமக்கெல்லாம் அது இறையென்றும் சொல்லலாமே. மானுடப்பிழைகளை மன்னித்து, வானுயர்ந்து நின்றபடி நம்மை குனிந்து பாரத்து, நாம் இத்தனை அநீதி பனைக்கிழைத்தும் இன்னும் நம்முடன் இருப்பது என்று பனை நமக்களித்துக்கொண்டிருக்கும் அளிகள் ஏராளம் அல்லவா
  use and thorw நம் வாழ்வின் இயங்கியலில் ஒரு முக்கியச்செயலாகிவிட்டிருப்பதும் பனைசார்ந்த பொருட்களின் பயன்பாடு அழிவதற்கு மிக முக்கியகாரணம்தான்
  தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்
  அன்புடன்
  லோகமாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: