குகை ஓவியம்
பனை சார்ந்த வாழ்க்கை என்பது பெரும் கற்கால வாழ்க்கையில் இருந்திருக்கிறதா என்கிற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு. ஏனென்றால் பெரும்பாலும் பெரும்கற்கால மனிதர்கள் குகை ஓவியங்களாக வரைந்தவைகளில் மரங்களே கிடையாது. பெரும்பாலானவைகள் மிருகங்களும் மிருகங்களை வேட்டையாடும் மனிதர்கள் தான். ஆனாலும் வரை கலையின் ஆரம்ப குறியீடான புள்ளிகள், கோடுகள், வட்டம், சதுரம் போன்றவைகள் ஏராளமாக குகைகளில் காணக்கிடைக்கின்றன. பெரும் கற்கால மனிதர்கள் பனியுகத்தைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணமும் இருக்கிறது. இது ஒரு சார்பு நிலை புரிதலே. உலகின் ஒரு சில பகுதிகள் பனியால் மூடியிருக்கும்போது வேறு பகுதிகள் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை என்பது தான் உண்மை. அப்படியானால் பனியுகத்திற்கு எதிராக ஒரு பனையுகம் இருந்திருக்கவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். ஆகவே பனை மரம் எவ்வகையிலெல்லாம் மனிதனுக்கு பேருதவியாக இருந்திருக்கும் என நாம் ஒரு வரைவை இட்டுப்பார்க்கலாம்.
பனை சார்ந்து மனிதன் வாழும்போது எண்ணிக்கைகளை அறிந்துகொள்ளுவது மிக எளிதாக இருந்திருக்கிறது. பனை விதைகள் பெரும்பாலும் ஒன்று இரண்டு மூன்று என இருப்பது எண்ணிக்கையின் ஆரம்ப படிநிலை என நாம் கொள்ள இயலுமா? அல்லது பனை ஓலைகள் ஒன்று இரண்டு என முளைப்பதும் ஆதி கால மனிதர்களுக்கு எண்ணிக்கை சார்ந்த புரிதலை மேம்படுத்துவதாக இருந்திருக்குமா?. ஏனென்றால் ஒரு இலை விடும்போது பனங்கிழங்கு மென்மையானதாக இருக்கும் என்கிற புரிதல் அவர்களுக்கு இருந்திருக்கும். அப்படியே இரண்டு இலை விடும்போது அவைகள் முற்றியிருக்கும். இந்த புரிதல் பனங்காட்டின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையானவை. அப்படியே இரண்டிற்கு மேல் ஓலைகள் கிளைத்தெழுமென்றால் அங்கே பனங்கிழங்கு இருக்காது என்கிற புரிதலும் கண்டடையப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக… இரண்டு ஆதி மனிதர்கள் சந்திக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவகளுக்கு ஒரு பனம் பழம் கிடைக்கிறது. அதற்காக அவர்கள் போட்டிபோடுபோது அந்த பழம் இரண்டாக பிளந்து ஆளுக்கு ஒரு விதைகளும் அதனுடன் இணைந்திருக்கும் சதைப்பற்றும் கிடைக்கின்றன. இது சரியான பகிர்தல் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கும். அப்படியானால் மூன்று விதைகள் உள்ள பனம்பழம் கிடைக்கையில் அது சார்ந்து எழும் தீர்க்க முடியாத கேள்விகளே எண்ணிக்கை சார்ந்த நோக்கிற்கு ஆதி மனிதர்களை வழிநடத்தியிருக்கும்.

பனை மரம் மிக தெளிவாக் தெரியும் குகை ஓவியம்
உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், மனிதர் தனது உடல் பாகங்களையே முதன் முதலில் எண்ணும் கருவியாக பயன்படுத்தியிருப்பர் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணுவதையே கற்கால மனிதர்கள் செய்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் பனை ஓலைக்கு எத்தனை விரல்கள் இருந்திருக்கும்? இவ்விதமான கேள்வி இயற்கையை உற்றுநோக்கும்போது எழுவது இயல்பு. கைகளுக்கும் பனை ஓலைக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதைக் கண்டடைந்தவுடனேயே இவ்விதமான பொருத்தப்படுகளை மனிதர்கள் யூகித்திருப்பார்கள். தன் உடலைப்போலவே ஒரு தாவரத்தின் இலைகள் இருக்கிறது எனும் எண்ணம் தான் பனையுடன் மனிதர்களுக்கான நெருக்கத்திற்கு காரணமாக இருந்திருக்குமா? இல்லை உணவின் வழியாக அது மனிதர்களுக்கு வாழ்வளித்தது காரணமாக இருந்திருக்குமா? இவ்வித கேள்விகள் ருசிகரமானவை. ஏனெனில் மேலும் அனேக வழிகளில் மனிதன் பனையோடு தனக்குள்ள உறவை வெளிபடுத்தியிருப்பான் என்பது தான் உண்மை.
பத்ரகாளி தன் பிள்ளைகளுக்கு பனையேற கற்றுக்கொடுத்த சம்பவம் குறித்து ஒரு பழங்கதை குமரி மாவட்ட நாட்டார் வழக்காற்றில் உண்டு. தனது பிள்ளைகளின் பசியாற்ற பனை மரத்தை காளி உருவாக்குகிறாள். பின்பு தனது காலில் இட்டிருக்கும் தண்டட்டிகளை கழற்றி கொடுத்து அதனை தளை நாராக மாற்றி பனை மரங்களில் ஏற பணிக்கிறாள். பனை மரத்தின் உயரம் அதிகமானபடியால் காளி யோசித்தாள். ஒருவேளை பனை மரத்திலிருந்து தனது பிள்ளைகள் வீழ்ந்துவிட்டால் என்ன செய்வது என எண்ணி பல்வேறு மூலிகைகளை இணைத்து ஒரு மருந்து தயாரித்தாள். இந்த மருந்தினை தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டி தனியே வைத்துவிட்டு வேறு என்ன செய்யலாம் என எண்ணலானாள். காளி பனை மரத்தினை உருவாக்கும்போது, தற்பொது இருப்பது போல அதன் ஓலைகள் உட்பகுதி இணைந்தும் வெளிப்பகுதி விரிந்தும் காணப்படவில்லை. தென்னை ஓலைகளில் இருப்பது போலவே அவைகள் தனித்தனியாக இருந்தன. ஆகவே, இவைகளை இணைத்து ஒன்றாக்கினால், பிள்ளைகள் பதனீர் குடிக்க உதவுமே என்று எண்ணி பிரிந்திருந்த ஓலைகளை ஒவ்வொன்றாக ஊசிகொண்டு தைக்க ஆரம்பித்தாள்.
அப்போது அங்கே வந்த மாயவன், காளியை பார்த்து, உன் பிள்ளைகளுக்காக நீ கஷ்டப்பட்டு ஓலைகளை பட்டையாக தைத்துக்கொண்டிருக்கிறாய் ஆனால் அவனைப் பார் உனக்கு பதனீர் தருவதற்கு முன்பாக தானே முந்தி பதனீரை சுவைக்கிறான் என சொல்ல, காளி பனையில் என்ன நிகழ்கிறது என அண்ணாந்து பார்த்தாள். பனம் பாளையை பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த பிள்ளையின் வாயில், அவ்வேளையில் தெரித்த ஒரு சொட்டு பதனீர் எதிர்பாராதவிதமாக தெறித்தது. பிள்ளை எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் தானே முந்தி பதனீரை சுவைத்துவிட்டானே என்ற ஆற்றாமையால் காளி ஓலைகளை அப்படியே வீசிவிட்டு செல்கிறாள். அவள் விட்டுச்சென்ற மருந்தினை அருகில் இருந்த அணில் சாப்பிட்டது. அதனால் தான் எவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தாலும் அணிலுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் அது தப்பித்துக்கொள்ளுகிறது. அணில் சாப்பிட்டதில் மிச்சம் சில துணுக்குகள் எஞ்சியிருந்தன. அப்படி மிச்சமிருத்த ஒரு சிறு துணுக்கை ஓணான் வந்து நக்கிப்பார்த்தது. ஆகவேதான் ஓணான் கீழே விழுந்தவுடன் ஒரு கணம் தயங்கி பின்னே உயிர் பிழைத்து ஓடுகிறது என்றும் கதை அந்த விரியும்.
காளி வீசிவிட்டு சென்ற ஓலை உள்ளங்கையும் விரிந்த விரல்களும் என்ற வகையிலே நின்றுவிட்டிருந்தது. ஆகவே தான் இன்றும் பனை மரத்தில் உள்ள ஓலைகள் முற்றுப்பெறாமல் இருக்கிறது என்று அந்த பழங்கதை நிறைவடையும். இவைகளை ஒன்றிணைத்துப் பார்க்கையில், மனிதனுக்கு இயற்கை மீதான ஒரு கவனம் எப்படி ஒரு தொன்மமாக உருவெடுக்கிறது என்பதையும், மனிதன் இயற்கையிலேயே தன்னை சுற்றியுள்ளவைகளை கூர்ந்து பார்த்து தன்னோடு ஒப்பிட்டு தனது அறிவை மேம்படுத்துகிறான் எனவும் விளங்கும்.கைகளை ஒத்திருக்கும் ஓலைகள் எதை நோக்கி மனிதனை இயக்கின என்பது ஆய்வாக விரித்தெடுக்கவேண்டிய ஒரு முக்கியமான காரியம்.
கைகளை பயன்படுத்தி எண்ணுவதைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் inRum வெளிவந்தவண்ணம் உள்ளன. இவைகளில் ஃபிரான்ஸ் தேசத்தில் உள்ள கோஸ்கெர் குகை (Cosquer Cave) மிக முக்கிய ஆய்வுத் தரவுகளாக காணப்படுகின்றன. இந்த குகை ஓவியங்கள் பெரும்பாலும் கைகளை சாயத்தில் முக்கி அப்படியே குகைகளில் பதித்து வைப்பதாகவோ அல்லது கைகளை வைத்துவிட்டு அவைகளைச் சுற்றிலும் சாயமிடும் முறைமைகளையும் கொண்டிருக்கிறது. இதன் சிறப்புகளைக் குறித்து ஆராயும் கேரன்லை ஓவர்மான் (Karenleigh A. Overmann) என்கிற ஆய்வாளர் பல தகவல்களை தொகுத்தளிக்கிறார். அவைகளில் முதன்மையானது கைவிரல் அடையாளங்கள் எவ்விதம் அன்றைய எண்ணிகை முறையினை சுட்டி நிற்கிறது என அவர் விவரிக்கிறார்.
இந்த குகை ஓவியங்களில் பல இடங்களில் விரல்கள் குறிப்பிட்ட அளவைவிட சிறிதாக இருப்பதைப் பார்த்த போது அந்த விரல்கள் ஏதோ சடங்குகளில் வெட்டப்பட்டதாகவோ அல்லது வேட்டை நேரத்தில் பிற மிருகங்களோடு போராடும்போது இழந்த விர்லகளாகளின் பகுதியாகவோ இருக்கும் என்றே எண்ணினார்கள். மேலும் வேறு எதேனும் சூழலில் உடைந்து அழிந்து போன விரல்களைத் தான் இதன்மூலம் பதிவு செய்கிறார்கள் என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் உடலியல் தரவுகளையும் அந்த குகைகளில் காணப்பட்ட ஓவியங்களையும் இணைத்து பார்த்தபோது மிக கண்டிப்பாக அவைகள் குறைவுபட்டுப்போன விரல்கள் அல்ல என்பது நிரூபணமானது.

கோஸ்கர் குகை ஓவியம்
மனிதர்கள் தங்கள் விரல்களை மடக்கி இவ்வித வடிவங்களை பதிப்பித்திருக்கிறார்கள் என்கிற முடிவிற்கு வருகிறார் கோரென்லை. அந்த விரல்களின் தன்மைக்கேற்ப எண்ணிக்கைகளை அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார்கள். மிகவும் சுவைபட காணப்படும் இவ்வித ஆய்வுகளில் பனை ஓலைகளையும் இணைத்துப்பார்ப்பது மேலும் ருசிகரமாக இருக்கும்.
திருமறையில் காணப்படும் ஒரு நிகழ்வு இச்சூழலில் நாம் நினைவுகொள்ள ஏற்றது. மீதியானியருக்கும் இஸ்ரவேலருக்கும் இடையில் ஒரு போர் நிகழும் தருணம். இஸ்ரவேலர் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே கடவுள் கிதியோனிடம், இஸ்ரவேல் மக்கள் தாங்களே இந்த வெற்றியைப் பெற்றார்கள் என சொல்லாதபடிக்கு, மக்களை எப்படி தெரிவு செய்யவேண்டும் என பணிக்கிறார். பயம் உள்ளவர்கள் திரும்பிப்போய்விடுங்கள் என்று சொன்னவுடனேயே இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். மீதமிருக்கும் பதினாயிரம் பேரையும் கடவுள் பிரிக்கச் சொல்லுகிறார். அவ்விதம் கிதியோன் அங்கே இருக்கும் நீரூற்றண்டையில் மக்களை கூடிவரச் செய்து தண்ணீர் குடிக்க வைக்கிறான். அதன் முடிவு இவ்விதமாக இருந்தது. “தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்” (நியாயாதிபதிகள் 7: 6)

பனை மரம் – குகை ஓவியம்
இக்கதை போருக்கு ஆயத்தமாகும் தன்மையுடையவர்களை கிதியோன் தெரிவுசெய்வதை நமக்கு உணர்த்துகிறது ஒரு புறம் என்றாலும், அந்த தேர்வில் காணப்பட்ட மக்களின் பழக்க வழக்கம் நமக்கு சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. முதலாவதாக முழங்கால் இட்டு தங்கள் வாய்களை நேரடியாக நீரில் வைத்து உரிஞ்சி குடிப்பவர்கள் சற்றே மிருகங்களின் தன்மையை வெளிப்படுத்துகிறவர்களாக கிதியோனிற்கு காணப்பட்டிருக்கலாம். முழங்கால் இட்டு வாய் தண்ணீரை நோக்கி செல்லும்போது கைகளும் தரையில் பதிந்திருக்கும் ஒரு காட்சி தான் நமக்கு தென்படுகிறது. வழக்கமான முறை அதுதான் போலும். ஏனெனில் பதினாயிரம் பேர் அவ்விதம் தான் அந்த ஓடையிலிருந்து தண்ணீர் குடிக்கிறார்கள். வெறும் முன்னூறு பேர் மட்டும் தங்கள் கரங்களில் தண்ணீரை வாரிக்குடிக்கிறார்கள். இவர்கள் குனித்து நீர் அள்ளுவதால் சற்றே ஜாக்கிரதை உணர்வுடன் இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒரு வகையில், கைகளை இணைத்து நீர் குடிக்கும் ஒரு வழக்கம் மனித வாழ்வில் நுழைவதை குறிப்பிடுகிறதாகவும் இருக்கலாம்.
என்னைப்பொறுத்தவரை, வரைதலின் முதல் படியே கோடுகள் தான். கோடுகள் நேராக இடத்தெரிந்தாலே கோடுகளை வைத்து மற்ற வடிவங்களை உயிர்பெறச் செய்ய முடியும். அவ்வகையில் பனை மரம் கோடுகளின் முக்கியமான ஓர் அடையாளமாகவே இருக்கிறதாக அறிகிறேன். ஒன்று என்ற எண்ணிக்கையினை இன்று நாம் எழுதுவதும் நேர் கோடுகளும் பனை மரமும் ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாதவை. பனை மரத்திலிருந்து தான் மனிதன் எண்ணிக்கையைத் தொடங்கினான் என்பதற்குத்தானோ ஒன்று என்ற எண் எழுதப்பட்டதோ. அல்லது கோடுகள் வரைவது கூட பனை மரத்தின் நெடிய தோற்றத்திலிருந்து பெறப்பட்ட புரிதல் தானோ? ஆக கணிதத்தின் ஆரம்ப சுழியினை கற்கால ஓவியங்கள் நமக்கு தெரிவிக்கிறதாக் அறிகிறோம்.

பனை மரத்துடன் தொடர்புடைய மிருகம் – குகை ஓவியம்
கற்கால ஓவியங்களில் மான் யானை காட்டு மாடுகள் மற்றும் வேட்டைக்குச் செல்லும் மனிதர்கள் போன்றவையே அதிகமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆகவே கற்கால மனிதர்கள் தாவரங்களை அதிகமாக வரையவில்லை என்றே இதுகாறும் எண்ணப்பட்டிருந்தது. ஆனால் வெகு சமீப காலங்களில் பல்வேறு குகை ஓவியங்களில் இருந்து தாவரங்கள் சார்ந்த படங்கள் கண்டடையப்பட்டிருக்கின்றன. அவைகளிலும் பனை சார்ந்த படங்கள் நமக்கு கற்கால மனிதர்களுக்கும் பனைக்குமான நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்கின்றன.
ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா என்ற பகுதிகளில் உள்ள குகைகளில் பனை மரங்களும் அதன் ஓலைகளும் வெறும் கோடுகளாகவே காணப்படும் ஒரு படம் கண்டடையப்பட்டிருக்கிறது. வெண்மையும் சிவப்பும் கலந்த இந்த படங்கள் கி மு 10000 ஆண்டுகளை ஒட்டியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆப்பிரிக்காவிற்கும் பனை மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் புதிதாக சொல்லி நிறுவ வேண்டியதில்லை. மனிதர்கள் மிக மகிழ்ச்சியோடு பனங்காட்டில் வாழ்வது போன்ற படங்கள் கற்காலத்திலிருந்து எழுந்து வருவது புதிய ஒரு உலகை நமக்கு காட்டத்தான்.
மனித வாழ்வில், கைகளை இணைத்து நீரை அள்ளி குடிக்கும் ஒரு சூழல் வந்த பின்பு, கைகள் குவிப்பதன் நுட்பத்தினை மனிதர்கள் கவனித்திருப்பார்கள். கைகளின் இடுக்கு வழியாக நீர் ஒழுகாமல் இருக்க கைகளை இணைத்து சற்றே குவிக்கும்போது அதிக நீர் எடுக்க வாய்ப்பு உள்ளது என்ற அறிதல் பனை ஓலைகளையும் இணைக்கலாமே என்கிற புரிதலுக்கு நேராக ஆதி மனிதர்களை வழிநடத்தியிருக்கும். அப்படியானால் கைவிரல்களை ஒத்திருக்கும் ஐந்து நரம்புகள் கொண்ட ஓலைகளை சேர்த்து குவித்துப் பிடிப்பது அதிக அளவில் தண்ணீரை எடுத்து வர உதவியாயிருந்திருக்கும். அதுவே பனையில் செய்யப்பட்ட முதல் வடிவம் என்று நான் கருதுகிறேன்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)
ஆரே பால் குடியிருப்பு
பகிரி: 9080250653
மின்னஞ்சல்: malargodson@gmail.com
6:15 முப இல் ஏப்ரல் 8, 2020
அருமையான பதிவு. பனைக்குகை ஓவியங்கள் எல்லாம் மிக அருமை. எப்படி கிடைத்தன இந்த தரவுகள் என்று ஆச்சர்யமாயிருக்கின்றது. மனிதவியல் ஆய்விலிருந்து துவங்கி தொல்கதைகள் வழியே வந்திருக்கும் இந்தபதிவு மிக அருமை. இந்தியாவில் பனை சாராத சமயங்களே இல்லை என சொல்லிவிடலாம் போலிருக்கிறது. கி ரா அவரது கோபல்லபுரத்துமக்கள் கதையில் ஒரு கிராமத்து திருவிழாவில் இளைஞர்கள் முன்பே செய்துவைத்திருக்கும் பனைமட்டை வாள்களால் போரிடுவதுபோன்ற ஒரு காட்சியை சொல்லி இருப்பார். தேடத்தேட, தோண்ட தோண்ட பனை வந்துகொண்டே இருக்கும் போலிருக்கிறது உங்கள் கரங்களின் வழியே