பின்னல்கள்  – 4


பட்டை

பனை ஓலைகளைக் கொண்டு செய்யும் பொருட்களிலேயே மிக தொன்மையானதும் இன்றளவிலும் பரந்துபட்ட பயன்பாடு கொண்டதுமான பனையோலை பட்டை,  நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டிய ஒரு முதன்மைப் பொருளாகும். இந்த வடிவம் ஆதி காலம் தொட்டு இன்றுவரை மாறாததாக இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். பனையோலைப் பட்டை  மக்கள் பயன்பாட்டில் பெருகியிருப்பதற்கு காரணம் இதன் வடிவத்தில் காணும் எளிமையும், இதன் பயன்பாட்டில் காணப்படும் வசதியும், காலங்களை கடந்து நிற்கும் தொன்மையும், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் தன்மையும், சமயங்களை உள்ளடக்கும் விரிவும்  என்றே எண்ணுகிறேன். மேலும் மிகப்பெருமளவில் பட்டையில் மற்றங்கள் ஏதும் ஏற்படவியலாதபடி அதன் வடிவம் ஓலையின் இயற்கைவடிவத்தைச் சார்ந்தே இருக்கிறது என்பது தெளிவு.

pattai

பனை ஓலை பட்டையில் பதனீர் ஊற்றிக் குடிக்கும்போது

பட்டை என்பது சிறகொன்று அன்னமிட்ட கையாக மாற்றம் அடைவது தான். அது பனை தனது இறகினை எடுத்து தன் பிள்ளைகள் பசியாற குவிக்கும் கரமே தான். இரக்கத்தின் கரம், அன்பின் கரம், சுவையூட்டும் கரம். அதனை மடிப்பது கூட ஒரு மா தவமே. எனது வாழ்வில் ஏனோ தானோவென்று பட்டை மடிக்கும் ஒருவரைக்கூட நான் கவனித்தது இல்லை. மிக கருத்தூன்றி ஓலையின் தன்மையினை உணர்ந்து பட்டையினை மடிப்பார்கள்.  ஒருவேளை கவனக்குறைவாக பட்டை மடித்தால் ஓலையில் கீறல் ஏற்பட்டு பதனீர் ஓழுகிவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

சேகரிக்கும் பொருளாதாரத்தை மையமாக கொண்ட அனைத்து பழங்குடி பண்பாடும்  சேகரிக்கும் தருணத்தில் இலைகளை பயன்படுத்துகிறது. தானியங்களையோ அல்லது பழங்களையோ சேகரிப்பது ஆகட்டும் வேட்டையாடிய பொருட்களை சேகரிக்கும்போதும் தொன்மையான கலாச்சாரத்தில் கூட இலைகள் பொருட்களை பொதிந்து எடுத்துச் செல்ல உதவிகரமாக இருந்தன.

ஒருவேளை பனம்பழங்களை பனை ஓலையில் பொதிந்து எடுத்து வந்த ஒரு தொல் சமூகம், தங்கள் உணவிற்கு மிஞ்சிய ஒரு பழத்தை ஓரிரு நாட்கள் ஓலையுடன் விட்டு வைத்திருந்தார்கள் என்று சொன்னால் அந்த ஓலை குவிந்து தனது இயல்பு வடிவத்தை விட்டு ஒரு பட்டையின் வடிவத்தை எட்டியிருக்கும். இந்த வடிவம் தான் தேவைக்கேற்ப ஓலைகளை மிகச்சரியான வகையில் பயன்படுத்துவதற்கான ஆரம்ப புள்ளி எனலாம்.

Fruits carried on palm leaf

பனம் பழங்களை பனை ஓலையில் எடுத்துச் செல்லுவது – ஆரே, மும்பை

குமரி மாவட்டத்தில் இன்றும் கூட பனை ஓலைப்பாயே இறைச்சிக்கடைகளில் விரித்திருப்பார்கள். இது பனை ஓலையினை விரித்து அதன் மீது வேட்டை உணவை பரப்பிய நினைவுகளின் எச்சமாக இருக்கலாம். இன்றும் குமரி மாவட்ட வீடுகளில் கோழியை அறுக்கும்போது வாழை இலையில் வைப்பது வழக்கம். பனை மரத்தின் இடத்தை வாழைகள் பிடித்துக்கொண்டன என்பது தான் உண்மை.

Fish Packing

மீன் பொதிய பனை ஓலை பயனபாட்டில் உள்ளது

எனது சிறு வயதில் பன்றி இறைச்சியினை விற்பவர்கள் அதனை பனை ஓலையில் தான் கட்டி கொடுப்பார்கள். இது குமரி மாவட்டத்திற்கான ஒரு தனித்தன்மை. ஆனால், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் கூட ஆட்டிறைச்சியினை பனை ஓலையில் பொதிந்து கொடுப்பதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை காயல்பட்டணம் சென்றிருந்தபோது அங்கே பனை ஓலைகளில் தான் ஆட்டிறைச்சியினை பொதிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தென்காசியை அடுத்த கடையம் சந்தையில் பனை ஓலையில் கருவாட்டினை பொதிந்துகொடுக்கும் ஒரு சம்பவத்தினைக் கண்டபோது இந்த வழக்கம் மிக தொன்மையானது தான் என்கிற உறுதி எனக்குள் ஏற்பட்டது.

Meat pack

இறைச்சி பொதிய பனை ஓலை பயனபாட்டில் உள்ளது

பொதுவாக ஐம்பதாண்டுகளுக்கு முன்பு பனங்காட்டினூடாக வழிப்போக்கர்கள் செல்லும்போது பனையேறிகள் பனை ஓலையினை அறுத்துப்போடுவார்கள். கீழே செல்லும் வழிப்போக்கர்கள் அதனை எடுத்து பட்டையாக மடித்து தயாராக வைத்து இருக்கவேண்டும். வழிப்போக்கர்களுக்கு பட்டை மடிக்க தெரியவில்லையின்று சொன்னால், பனையேறியே கீழிறங்கி வந்து ஓலைகளை பட்டையாக மடித்து தருவார். பின்னர் வழிப்போக்கரின் பசியாற பதனீரைப் பட்டையில் ஊற்றுவார்.

பனையேறிகளின் இந்த தாராள குணத்திற்கான கரணங்கள் உண்டு. அது தொல் சமூகங்களில் உள்ள பகிர்ந்தளிக்கும் தன்மை. ஒரு சமூகத்தில் ஒருவன் வேட்டையாடினாலும் அந்த வேட்டையிலிருந்து பெறும் உணவானது வேட்டையில் பங்குபெறாதவரின் பசியையும் ஆற்ற வேண்டும் என்பதுவே நியதியாக இருந்தது. மாத்திரம் அல்ல இந்திய பெருநிலத்தில் பல்வேறு புண்ணிய தலங்கள் உண்டு. பனையேறிகளால் தங்கள் தொழில் தொடங்கிய பின்னர் ஆலயங்களோ புண்ணிய தலங்களோ செல்ல இயலாது.  ஆகவே உணவளிக்கும் மாபெரும் அறத்தினை தங்கள் வாழ்வில் அவர்கள் முன்னெடுக்கிறார்கள் எனக் கொள்ளலாம்.

Mithran pathaneer

மித்திரன் ஓலைப்பட்டையில் பதனீர் குடிக்கிறான்

பண்பாட்டு அளவில் பனையோலைப் பட்டை என்பது மனிதர்களுடைய வாழ்வில் தொடர்ந்து பன்னெடுங்காலமாக வந்துகொண்டிருப்பதை அறிகிறோம். பனையேற்று வேளையில் பனை மரத்திற்கு பூசை செய்வது பனையேறிகளின் தொன்றுதொட்ட வழக்கம். அதாவது ஒவ்வொரு பருவ காலத்திலும் பனையேறிகள் பனை ஏறத்துவங்கும்போது காளி பூசை செய்வார்கள். அப்போது பனை ஓலை பட்டையில் பதனீரை வைத்து வணங்குவார்கள். பனை ஓலை பட்டை அவ்வகையில் ஒரு அட்சய பாத்திரமாக உருவெடுத்து எழுவதை பார்க்கிறோம்.

பனை ஓலைப் பட்டைகளுக்கு என்று சிறப்பு மதிப்பு இன்றும் சில சடங்குகளில் எஞ்சியிருக்கின்றது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள  நாட்டார் வழிபாட்டு முறைகளில் சாமிக்கு படையல் இடும்போது, விழாவில் கலந்துகொள்ளும் மக்களுக்கு பனை ஓலையிலேயே உணவளிப்பார்கள்.

பனை ஓலை பட்டை மடிப்பது என்பது ஒரு எளிய தொழில்நுட்பம் தான். பிறந்த குழந்தையை கையில் எடுப்பதுபோல ஓலையை எடுக்கவேண்டும். பின்பு ஓலை கிழியாமல் சற்று உட்புறம் குவிய வைக்க வேண்டும். இறுதியாக ஓலைகளின் முடிவில் பிரிந்து நிற்கும் ஓலைகளை ஒரு கையால் நெருக்கி, மற்றொரு கையால் அதன் கடைசி ஓலையை மாத்திரம் சற்றே கிழித்து அதனை ஒன்றாக்கப்பட்ட ஓலைகளை சுற்றி நுழைத்து இறுக்கிவிடுவதுதான் பட்டை. இது பார்பதற்கு ஒரு சிறு படகுபோல் காணப்படும்.

Meat on mat

இறைச்சி கடைகளில் பனை ஓலை பாய்

பட்டைகள் பல்வேறு சூழல்களில் இன்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பனை மரங்கள் பெருமளவில் இருக்குமிடங்களில் பனை ஓலைகள் ஒரு அடிப்படை உணவு பாத்திரமாக செயல்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்கு படைக்கும் பாயசம், மற்றும் கறி சோறு அல்லது கஞ்சி இன்றளவும் சில ஊர்களில் பனை ஓலையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு நான் இராமனாதபுரம் மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது அங்கே பனை ஏறுகின்ற தொழிலாளர்கள் சிலர் சில சடங்குகளை முடித்துவிட்டு உணவருந்த ஆயத்தமானார்கள். படையலுக்காக சேவல் கோழியை அடித்திருந்தவர்கள் அதனை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். ஆண்களும் பெண்களும் சிறுபிள்ளைகளுமாக சுமார் 30 நபர்கள் இருந்திருப்போம். அனைவருக்கும் ஒரே கோழியும் அதில் ஊறி நின்ற  இரசமும் சோறும் அன்று விருந்தாக அமைந்தது. பங்கிட்டு தின்றால் பசியாறும் என்பதற்கிணங்க, அந்த உணவின் சுவை தனித்துவமாக இருந்தது. ஆம் பட்டையில் தான் அன்று அனைவருகும் உணவு வழங்கினார்கள்.

KayalpattaNam

கறிக்கடை – காயல்பட்டிணம்

பனை ஓலைக்கென ஒரு மணமும் சுவையும் உண்டு. பனை ஓலையில் ஒரு உணவு வைத்து பகிரப்பட்டால், அதன் சுவையே தனித்துவமானதாக இருக்கும். வாழையிலையில் சாப்பாடு போடுவது தற்போது ஒரு கவுரவமான விஷயம். அதிலும் குறிப்பாக உணவகங்களில் சென்று சாப்பிடும்பொது வாழை இலைக்கென ஒரு தனி சிறப்பு இருக்கவே செய்கிறது. ஆனால், பனை ஓலையில் உணவு சாப்பிடாதவர்கள் தான் வாழை இலையினை விதந்தோதுவார்கள். பனை ஓலையில் ஒருவர் ஒருமுறை சாப்பிட்டுவிட்டால், அதுதான் அவருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவு பாத்திரமாக இருக்கும். சுவை கூட்டும் ஒரு அற்புத உணவு பாத்திரம் அது.

பனை ஓலையில் கஞ்சி வழங்குவது  குமரி மாவட்ட கல்லறை பிரதிஷ்டை நேரத்தில் நடக்கும் ஒரு சடங்கு. வழக்கொழிந்துபோன இந்த சடங்கு இன்று வேறு வகைகளில் நம்மிடம் எஞ்சியிருக்கின்றது.  கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் புனித வெள்ளி ஆராதனையின்போது, குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு திருச்சபைகளில் பனை ஓலையில் கஞ்சி கொடுப்பது வழக்கம்.  மூன்று மணி நேர ஆராதனைக்குப் பின்பு, ஆலயத்தில் வைத்து கொடுக்கப்படும் பனையோலை பட்டை கஞ்சி மிக சிறப்பானதாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனது அறிவில், குமரி மாவட்டத்தில் பல்வேறு சி எஸ் ஐ ஆலயங்களில் பனை ஓலை பட்டையில் கஞ்சி வழங்கும் மரபு இருந்தாலும் இன்றும் எங்கள் சொந்த ஊர் திருச்சபையான சி எஸ் ஐ பெருவிளையிலும், மற்றும் ஜாஸ்மினுடைய ஊரின் அருகில் இருக்கும் சி எஸ் ஐ கூடைவிளை  சபையிலும் இன்றும் பனை ஓலைகளில் மக்கள் கஞ்சி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நான் சூரங்குடி திருச்சபையில் கூட இந்த முறைமையினை கண்டு அனுபவித்திருக்கிறேன்.

தொன்மையான ஒரு வாழ்வின் எச்சத்தினை திருச்சபை கைக்கொள்ளுகிறது என்பது பல்வேறு மக்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். திருச்சபை தன்னை இந்த மண்ணின் கலாச்சாரத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது என்பதற்கு இதுவும் சாட்சியாக இருக்கிறது.

இவ்விதமான கஞ்சி வழங்கலின் போது காண துவையல் வழங்குவது மரபு. பனங்காடுகளில் பனையேறிகள் காணம் உழுந்க்டு மற்றும் தட்டைப்பயறுவகைகளையே பெருமளவில் பயிரிட்டுவந்தார்கள் எனவும் இவைகளே மானாவாரி பயிர்களாக நீர் குறைவாக கிடைக்கும் பனக்காட்டு சூழலுக்கு ஏற்றது என்பதையும் பனை சார்ந்து வாழும் மக்கள் அறிவார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாகத்தான் பதனீர் விற்பனை என்பது சாலை ஓரங்களில் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு இப்போதுள்ளதைப் போல் பதனீர் விற்பனைப்பொருளாக இருக்கவில்லை. சாலையோரங்களில் கிடைக்கும் இப்பதனீரின் உண்மை தன்மை குறித்த கேள்விகள் நமக்கு அதிகம் இருந்தாலும், பதனீர் விற்பவர்கள் அனைவரும் தங்களுடன் பனை ஓலைகளையோ ஓலைப் பட்டைகளை எடுத்துவர தவறுவதில்லை. காரணம், போலி பதனீரை மறைக்க இவ்விதம் தங்களுடன் உண்மையான ஓலைகளை எடுத்துவருவார்கள்.  நகரங்களில் பொதுவாக பதனீர் குடிப்போர்களுக்கு பட்டைகள் புதிதுபுதிதாக செய்து குடுப்பது வழக்கமாக இருந்தாலும், கிராமங்களில் ஒரே பட்டையினை பகிர்ந்துகொள்ளுவது வழக்கம். அப்படியே ஆடு மேய்க்கின்ற கோனார்கள்  கஞ்சி குடிப்பதற்காக ஒரே பனை ஓலை பட்டையினை வெகு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதும் வழக்கமாக இருந்திருக்கிறது என்பதை எனது பயண அனுபவங்களில் இருந்து பெற்றிருக்கிறேன்.

கடந்த தேர்தலின்போது ஒட்டப்பிடாரம் அருகே சூராவளி பிரச்சாரம் நடத்திய ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு மக்கள் பதனீர் கொடுத்து உபசரித்திருக்கிறார்கள். இது மிக முக்கிய செய்தியாக நாழிதழ்களில் வெளியாகியிருந்தது. அச்சூழலில் பனை ஓலை பட்டையில் தான் ஸ்டாலின் அவர்கள் பதனீரை வாங்கிக் குடித்தார்கள். தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பனை விதைகளை விதைக்க முற்பட்டிருந்த தருணம், நாம் தமிழர் கட்சி கூட அவ்விதமாகவே பனை சார்ந்து இயங்கிக்கொண்டிருந்தது. அச்சூழலில் தான் பனை சார்ந்த மக்களுடன் தானும் இணைந்திருக்கிறேன் என்கிற ஒரு எண்ணத்தை விதைக்கும்படியாக திரு ஸ்டாலின் அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருப்பார். ஏனெனில் நிகழ்வின் முடிவிலே அவர், பதனீர் நல்ல சுவையுடன் இருக்கிறது இதற்குள் சர்க்கரை போட்டீர்களா என கேட்டிருக்கிறார். பலரால் நகைச்சுவைக்குள்ளாக்கப்பட்ட இந்த பதில் உண்மையிலேயே பனை சார்ந்து தமிழகத்தில் இருக்கும் விலக்கத்தினை நமக்கு விளக்குகிறது.

Stalin and kanimozhi

நாம்  வாழும் இருபத்தி ஓராம்  நூற்றாண்டின் இச்சூழலில் கூட பனை எப்படி தன்னை சூழலுக்கேற்ப மக்களின் எண்ணங்களுடன் இணைத்துக்கொள்ளுகிறது என்பது வியப்பளிப்பது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்திக்கொண்டிருக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் என்ற பகுதியில் பனங்காட்டிற்குள் வாழும் குணசேகரன் முருகலெட்சுமி தம்பதியினர் கொரோனா முக கவசத்தினை பனையோலையில் தயாரித்து அமர்களம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் பெரு விருப்பத்துடன் இதனை வாங்கிச்செல்லுகின்றனர். குறைந்த விலையில் பனையேறும் தம்பதிகளால் இதனை உற்பத்திசெய்து விற்பனைக்கு கொடுக்க முடிகிறது. பாரம்பரிய பட்டையின் அதே அமைப்பு ஆனால் நூலினை கட்டி அதனை முக கவசமாக  மாற்றிவிட்டனர். இது, நாம் பல வகைகளில் புறக்கணித்த தொல் வடிவம்ங்கள் இன்றும் பயனுள்ளவைகளாக இருக்கும் என்பதற்கு ஆதாரம். அதிலும் குறிப்பாக நவீன உலக உதவிகள் சென்று சேர இயலாத பல்லாயிரக்கணக்கான குக்கிராமங்களுக்கு இவ்வித உதவி மிகவும் தேவையாக இருக்கிறது.

Woven Mask

பின்னி செய்யப்பட்ட பனை ஓலை முக கவசம்

பலருக்கு இவ்வித ஓலைகளாலான முக கவசங்கள் பயனுள்ளவைகளாக இருக்குமா என்கிற கேள்விகள் இருக்கிறது. முதலில் அவைகள் நமது மூக்கையும் வாயையும் நாம் தொடுவதை தடுகிறது. இரண்டாவதாக, தாவரங்களில் இருந்துதான் பல்வேறு மருந்துகளும் பயன்பாட்டு பொருட்களும் இன்று நமக்கு கிடைக்கபெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள் பயன்படுத்தும் பச்சை வண்ண உடையே இயற்கையிலிருந்து பிரதி எடுத்ததுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதுகுறித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் காட்சன் வின்சிலி தாஸ் அவர்கள், கோவில்பட்டி அரசு சித்த மருத்துவரான திரு அவர்கள் “பனை ஓலையில் நோய் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் பனை ஓலையில் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வீரியத்துடன் காணப்படும்” என்கிறார். இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நிறுவும் பொருள்னிலை மற்றும் மனநிலை கொண்டவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை ஆனால் பனை ஓலையின் பயன்பாடு பனங்காட்டில் உள்ளவர்களுக்கு மிக எளிதாக வாய்த்துவிடுகிறது.

Facepalm

பட்டை வடிவில் செய்யப்பட்ட பனைஓலை முக கவசம்

ஆதி கண்டுபிடிப்புகள் என்பது திட்டமிட்டு நடந்தவைகள் என்பதைவிட அவைகள் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு எதேச்சையாக நடைபெற்ற எதிர்வினைகள் என்பது தான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு மனிதன் பனை மரத்தினை சார்ந்து வாழ்ந்திருக்கிறான்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

ஒரு பதில் to “பின்னல்கள்  – 4”

  1. Logamadevi Annadurai Says:

    நல்ல செறிவான பதிவு. பனை ஒரு கற்பக விருட்ஷம்ங்கறது எத்தனை சரி. இலையில் எத்தனை பயன்பாடுகள். தற்போதைய கொரொனா தொற்றுக்கான முகக்கவசமும் அதிலேயே இருக்கே ஆச்சரயம்தான்.ஈச்சை மர இலைகளின் நோய்தொற்றுக்கான பயன்பாடுகளைக்குறித்த ஆய்வறிக்கையினை முன்பு வாசித்திருக்கிறேன். பனையோலை சாற்றின் கிருமிகளுக்கெதிரான செயல்பாடுகளை தாவர ஆய்வாளர்கள் சோதிக்கவேண்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: