பின்னல்கள்  – 5 


இழைகள்

பத்து வருடங்கள் இருக்கும். நானும் போதகர் எமில் அவர்களும் மும்பையிலுள்ள கோரே பகுதியில் பனை ஓலைகளை சேகரிக்க சென்றோம். அங்கே டொமினிக் என பெயருடைய ஒரு மனிதரை நாங்கள் அறிவோம். அவருடைய தோட்டத்தில் அதிக பனை மரங்கள் உண்டு. அன்று தேவையான ஓலைகளை சேகரித்துவிட்டு பார்த்தால் எங்களிடம் கயிறு இல்லை. போதகர் எமில் உடனடியாக இரண்டு ஓலைகளை எடுத்து முடிச்சிட்டார். அப்படியே மேலும் இரண்டு ஓலைகளை எடுத்து முடிந்தபின் அவைகளை அருகருகே ஒன்றுபோல் கிடத்திவிட்டு நாங்கள் சேகரித்த ஓலைகளை அதன்மேல் அடுக்கினார். நான் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நாங்கள் சேகரித்த ஓலைகளை எப்படி இந்த ஓலைகள் தாங்கும் என எண்ணிக்கொண்டிருக்கையில் அவர் இரு முனைகளையும் இழுத்து ஓலைகளைச் சுற்றி வளைத்தார். முடிச்சிடுவார் என நான் எண்ணுகையில் அவர் அந்த ஓலைகளை இணைத்து கால்களால் ஓலைக்கற்றைகளை அழுத்தியபடி கட்டவேண்டிய ஓலைகளை முறுக்கத்துவங்கினார். கிட்டத்தட்ட நாம் அணியும் பெல்ட் போலவே இருக்கும் ஆனால் முடிவில் அவைகள் ஒன்றாக முறுக்கி விடப்பட்டிருக்கும் அவ்வளவுதான். நான் “இது எப்படி பெலக்கும்” என்பதுபோல வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அதே போல மற்றொருபுறமும் ஓலைகளை முறுக்கிவிட்டு, பின்னர், அவைகளை அப்படியே அந்த கட்டிற்குள் நுழைத்துவிட்டார். கட்டு நான் நினைத்ததைவிட மிக பலமாக அமைந்தது. அன்றுதான் ஓலையினை முறுக்கிச் செய்யும் உடனடி “கயிற்றினைக்” குறித்து அறிந்துகொண்டேன்.

மேலே நான் குறிப்பிட்டதை ஒத்த பல சம்பவங்களை எனது சிறு வயதில் நான் கண்டிருந்தாலும், நானே ஈடுபட்ட நிகழ்வானபடியால் இது எனக்குள் மாபெரும் தாக்கத்தை நிகழ்த்தியது. இயற்கையிலேயே பல்வேறு வகையான சரடுகள் கொடிகள் நார்கள் தாராளமாக இருக்கின்றன என்கின்ற நினைவூட்டலை இச்சம்பவம் எனக்கு அளித்தது.

இந்த சம்பவத்தினை விஞ்சும் மற்றொரு காரியமும் எனது வாழ்வில் நடந்தது. தாஸ் என்று ஒரு நண்பர் ஆப்பிரிக்காவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். எனது பனை ஆர்வத்தின் மேல் அவருக்கு பெரு மதிப்பு உண்டு. அவர் தனது பணியிடங்களில் பனை மரங்கள் நிற்கின்றன என்ற ஒரு தகவலை எனக்குச் சொன்னார். எனக்கு ஆப்பிரிக்கா கனவு தேசம். பனை மரங்கள் உள்ள அத்துணை இடங்களும் எனக்குரிய இடங்களாகவே நான் கற்பனை செய்துவைத்திருக்கிறேன். ஆகவே அவரிடம், பனை சார்ந்த பொருட்களை எங்கு பார்த்தாலும் புகைப்படம் எடுத்து வையுங்கள் என்று சொன்னேன்.

African rope

கைகளால் பனை ஓலையினை திரிக்கும் ஆப்பிரிக்கர்

ஒருநாள் திடீரென அவர் அழைத்தார்… வாட்சாப்பை பாருங்கள் என்றார். கட்டுகட்டாக விறகுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவைகளை கட்டி வைத்திருந்த கயிற்றினைக் காட்டி இவைகள் பனை ஓலைகள் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் உண்மை அதுதான். சுமார் 30 கிலோ வரை விறகுகள் கொண்ட கட்டுகளை பனை ஓலைக் கயிற்றினால் கட்டி எடுத்து செல்லுகிறார்கள் என்றார். அப்படியே எனக்கு பல காணொளிகளையும் புகைப்படங்களையும் அனுப்பினார். வடலி ஓலைகளை கைகளால் மாத்திரம் பின்னியெடுத்து செய்யும் ஒரு கயிறு. அரண்டுவிட்டேன். ஓலைகளால் செய்யப்படும் கயிறுகள் இத்துணை உறுதிபடைத்தவையா என்கிற ஆச்சரியம் எழுந்தது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் பாரம்பரியமாக பனை ஓலைகளைக் கொண்டு கயிறுகளைச் செய்யும் எவரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை, ஆனால் ஓலைகளில் கயிற்றினைச் செய்யும் மனிதர்கள் உண்டு என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியானால் தமிழகத்தில் பனை ஓலைகளைக் கொண்டு செய்யும் கயிறுகள் எப்படி வழக்கொழிந்தன?

பழங்குடியினர் வாழ்வில் கயிறுகள் மிக முக்கிய பங்களிப்பாற்றியிருக்கின்றன என்கிற புரிதலுக்கு நான் வர மேலும் பல நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்தன. ஒரிசாவில் நான் சந்தித்த பழங்குடியினர் வாழ்வில் காணப்படும் பனை சார்ந்த கயிறுகள், தயாரிக்கும் நுட்பம் கண்டிப்பாக பனை பொருட்கள் தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். மகாராஷ்டிராவில் வாழும் வார்லி பழங்குடியினரின் ஓவியங்களிலிலும் விறகுகளை கட்டி எடுத்துச் செல்லும் ஓவியங்கள் மிகவும் பிரபலமானவைகள். ஒருவகையில் நாம் இவ்வோவியங்களைக் கவனித்தால் பனை ஓலைகளைக் கொண்டு அதனைக் கட்டியிருப்பது மிக தெளிவாக தெரியும். நானே பல்வேறு சூழல்களில் பல தரப்பட்ட மக்கள் பனை ஓலையினைக்கொண்டு புல் மற்றும் விறகு கட்டுகளை கட்டி ஒன்றிணைத்திருக்கிறதைப் பார்த்திருக்கிறேன்.

WP F

விறகு கட்டி எடுத்துச் செல்லும் வார்லி பழங்குடியினர்

பனை மர பத்தையில் இருந்து கிடைக்கும் தும்புகள் மற்றொரு வகையான பிணைப்பு சாதனம். இயற்கையிலேயே கிடைக்கும் மிகவும் உறுதியான இதனை  ஆதி மனிதர்கள் பெருமளவில் பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. சுமார் ஒன்றரை அடி வரைக்கும் நீளமாக கிடைக்கும் இவ்வித தும்புகள் ஒருவகை புரிதலை ஆதி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் குமரி மாவட்ட குளச்சல் பகுதியில் செயல்பட்டுவந்த தும்பு தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளாக கைவிடப்பட்டு கிடக்கின்றது. மிகவும் அபாயகரமான அவ்விடத்திற்கு நானும் எனது நண்பன் ரங்கிஷுமாக ஒருமுறை சென்றிருந்தோம். அப்பொது அங்கே கிடந்த தும்புகள் பெருமளவில் உறுதியுடன் தான் இருந்ததாக நான் நினைவுகூறுகிறேன்.

2017 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் நான் ராமனாதபுரத்திற்கு போயிருந்தேன். அப்போது நான் நின்றுகொண்டிருந்த பனங்காட்டிலிருந்து டிராக்டர் ஒன்று புறப்பட்டு செல்வதைப் பார்த்தேன். என்ன கட்டி எடுத்து செல்லுகிறார்கள் எனப் பார்ப்பதற்காக அருகில் சென்றபோது டிராக்டர் முழுவதும் கட்டு கட்டாக பனை மட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன. எனது வாழ்நாளில் அவ்வளவு பெரிய அளவில் பனை மட்டைகள் எடுத்துச் செல்லுவதை நான் பார்த்தது இல்லை. ஆகவே அதன் அருகில் சென்று பார்தேன். கட்டுகள் அனைத்தும் பனை ஈர்க்கிலால் பின்னப்பட்ட கயிற்றினால் செய்தது. அதே போன்ற கயிற்றினை மிடாலக்காடு பகுதியில் உள்ள பனைஓலை விற்பனை முகவர் அவர்கள் எனக்கு கொடுத்த ஓலைக் கட்டிலும் பார்த்தேன். இவ்வித பின்னல்கள் அனைத்தும் இராமனாதபுரத்திலிருந்து  தான் வருகின்றன என புரிந்துகொண்டேன்.

Rope

ஆப்பிரிக்க பனை ஓலைக் கயிறு

சிறு வயதில் மீன்பிடிக்கும் இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி சேறா சகதியா இல்லை தண்ணீரா என்று விவரிக்க இயலாதபடி இருக்கும் பகுதியில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள். கோடை காலத்தின் மிக முக்கிய இந்த விளையாட்டின் இறுதியில், மீன்களை எடுத்துச்செல்லுவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஏதோ ஒரு தாவரத்திலிருந்து எடுத்த நார் கொண்டு பிடித்த மீன்களை கட்டி எடுத்துச் செல்லுவார்கள். மீன்களின் வாய் மற்றும் செவிள் பகுதிக்குள் செல்லும் இந்த நார், மீன்கள் ஒரு தோரணம் போல இணைத்து கொள்ளுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது.

பெரிய பை தேவையில்லை. அப்படியே பொதிந்து எடுத்துச் செல்ல இலைகளும் தேவையிலை. ஒரு முழம் கயிற்றில் ஒன்பது மீன்களை அழகாக கட்டி தூக்கி எடுத்துச் செல்லலாம். இவ்விதமான ஒரு உபாயம் தொல் பழங்காலத்தில்  இருந்திருக்கவேண்டும். ஏனெனில், இன்றும் நமக்கு கிடைக்கும் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது மணிகளையோ அல்லது எலும்புகளாலான அணிகலன்களையோ ஒன்றாக இணைத்து ஆபரணமாக தொல் குடியினர் செய்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

கற்காலம் கற்காலம் என்று சொல்லுகிறோமே அந்த கற்காலத்தில் தாவரங்களின் இசைவு எப்படி இருந்தது என்பதை பெருமளவில் யாரும் யோசிப்பது இல்லை. ஆனால் கற்கால ஆயுதங்களின் மேம்பாடு என்பது கண்டிப்பாக ஒரு தாவரத்திருந்து பெறுவதைக் கொண்டே சாத்தியம்.  எடுத்துக்காட்டாக ஒரு கல்லாலான கோடாரி துண்டு இருக்கிறது என வைத்துக்கொள்வோம், அதனை ஒரு எலும்புடனோ அல்லது மரத்தடியுடனோ   இணைக்கும்போது தான் அதன் வலிமை கூடுகின்றது. ஆப்பு அடித்து இறுக்கும் முறை இருந்தாலும் அதற்கு இணையாக ஏதோ ஒன்றினை வைத்து கட்டுகிறார்களே அது தான் கற்கால மனிதர்களை அடுத்த நிலைக்குத் தள்ளியது.

ஓலைகள் அல்லது பனை நார் அல்லது ஈர்க்கில் ஆகியவற்றிற்கு ஒரு பொது கூறு உண்டு அது இவைகளை கயிறாக திரிக்க முடியும் என்பதே. இரண்டோ மூன்றோ பிரிகள் இணந்தாலே அவைகள் கயிறு என பொருள்படும். பிரிகள் நன்றாக முறுக்கப்பட்ட ஓலைகளாகவோ அல்லது பனை நாராகவோ இருக்கும். இவ்வித பனை பொருட்களின் தேவை இன்றியே கூட இயற்கையில் கிடைக்கும் கொடிகள் கட்டுவதற்கு ஏற்றவைகளாக இருக்கின்றன.

“ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது”. பிரசங்கி 4: 12 என்கிற வேத வாக்கியத்தின் பிற்பகுதியினை பெரும்பாலும் திருமண வீடுகளில் கிறிஸ்தவ போதகர்கள் குறிப்பிடுவார்கள். ஒற்றைச்சரடாக இணைக்கப்பட்ட முன்று நூல் இணைந்தால் அது பலம் கொண்டதாக மாறிவிடுவதை பிரசங்கி குறிப்பிடுகிறார். மணமகன் மணமகள் மற்றும் கடவுள் இணைந்திருக்கும் குடும்பங்கள் பிணைப்புடன் உறுதியாயிருக்கும் என்ற பொருளில் எடுத்தாள்வார்கள்.

பேராசிரியர் நிகோலாஸ் கோனார்ட் (Nicholas Conard) மற்றும் அவரது குழுவினர் வெகு சமீபத்தில்  ஒரு கருவியினைக் கண்டுபிடித்தார்கள். பனியுகத்தில் காணப்பட்ட மிக பிரம்மாண்டமான யானை இனத்தைச் சார்ந்த மாமோத் தந்தத்தில் நான்கு சிறிய துளைகள் இடப்பட்டிருந்தன. ஒவ்வொரு துளையும் சுமார் 7 மிமீ முதல் 9 மிமீ வரையே இருந்தன. அவ்வளவு தான் அந்த கருவி. இசைக்கருவியாக இருக்குமோ அல்லது அழகுபொருளாக இருக்குமோ என பலவறாக புரட்டிபார்த்த அந்த குழுவினர் இறுதியில் இந்த கருவிகள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய கயிறு திரிக்கும் கருவி என்ற புரிதலுக்கு வந்தனர்.

இழைகளால் ஆன ஒரு யுகம் இருக்கிறது என்று எலிசபெத் வேலாண்ட் பார்பெர் (Elizabeth Wayland Barber) என்ற தொல்லியல் மற்றும் பெருங்கற்கால ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.   ஆதி மனிதர்களுக்கு தாவர இழைகளும்  மிருக இழைகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இவ்வித இழைகள் கற்கால மனிதர்களுக்கு  மிக இன்றியமையாத ஒன்றாய் இருந்திருக்கின்றன  என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக கற்காலம் என்பதே இழைகளால் பின்னப்பட்டு முடிச்சுகளிடப்பட்ட  ஒரு காலம் தான். கல் என இறுகிப்போன ஆண் துணையை வஞ்சிக்கொடி சுற்றிவளைத்து பொருளுள்ள திசை நோக்கி வழிநடத்திய ஒரு காலம்.

பார்பர் (Barber) ஒரு பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்தவர் என்பது நாம் புரிந்துகொள்ள கூடிய ஒன்று. தேடி அவர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவும் நம் பார்வை கோணங்கள் எட்டாத இடங்களை சென்றடைபவை. அவரது பெண்களின் வேலைகள்: முதல் 20,000 வருடங்கள் – பெண்கள் ஆடைகள் மற்றும் ஆதி கால சமூகம் (Women’s Work: The First 20,000 Years : Women, Cloth, and Society in Early Times)என்ற புத்தகம் பெண்களுக்கும் ஆடைகளுக்கும்  உள்ள தொடர்பை ஆழமாக நிறுவும் ஒன்று.

இச்சரடுகளுக்கு பரந்துபட்ட பயன்பாடு உண்டென்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம். குறிப்பாக, மீன் பிடிக்கும் அல்லது வேடர்களின் வலைகள் செய்வதோ, கண்ணிகள் அமைத்து வேட்டையாடுவதோ, கூர் ஆயுதங்களான ஈட்டி அம்பு போன்றவைகளை இறுக கட்டி இணைக்கவோ என பல்வேறுவகை பயன்பாட்டில் இருந்துவந்திருக்கின்றன. மேலும் விறகு சேகரிப்பதற்கும் கூடாரங்கள் அமைப்பதற்கும் பொருட்களை சேகரிப்பதற்கும் இவைகள் பேருதவியாக இருக்கின்றன. இவ்விதமான இழைகளும் சரடுகளும் தான் கயிறு திரிப்பதற்கும் பின்னல்களால்  நிறைந்த ஜவுளி துறைக்கு அடிப்படை என ஆணித்தரமாக கூறுகிறார்கள்.

பல்வேறு மணிகளை மீட்டெடுத்ததன் வாயிலாக  சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட ஏதோ தவர அல்லது விலங்கின் ரோமங்களை கயிறாக திரித்து மணிகளை தொடுத்திருக்கிறார்கள். ஒரு உண்மையினை அனைத்து ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அதாவது இயற்கையாக கிடைக்கும் சரடுகள் மட்கிப்போகும் தன்மையுடையவைகள் ஆதலால்,  பெரும்பாலும் இணைப்பு சரடுகளை கற்கால சான்றுகளிலிருந்து நம்மால் மீட்டெடுக்க இயலவில்லை.

பெரும் கற்கால பயன்பாட்டு பொருளாக கயிறு அல்லது திரிக்கப்பட்ட மெல்லிய இழைகள் இருக்குமென்று சொன்னால், கண்டிப்பாக பனை எனும் மூதாயின் பங்களிப்பு அதனுள் கலந்திருக்கும். எண்ணிப்பார்த்தால், ஓலை, ஈர்க்கில், மட்டையில் கிடைக்கும் நார், தும்பு என எண்ணிறந்தவைகள்  ஒரே மரத்திலிருந்து சரடாக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. இத்துணை பரந்துபட்ட  தன்மைகொண்ட இயற்கை இழைகளை வழங்கும் மரம் அல்லது தாவரம் வேறு ஏதும் இல்லை எனலாம். மேலும் வருடம் முழுவதும் உணவினை அள்ளி வழங்கும் ஒரு மரமாகவும் பனை மரம் காணப்படுகின்றது. உலக வரைப்படத்தில் உள்ள இரண்டு கண்டங்களில் வரலாற்று காலத் திற்கு முன்பே பனை மரங்கள் பரவியிருந்திருக்கின்றன. இச்சூழலில், பனை ஓலைகளில் கிடைக்கும் நார் மற்றும் கயிறுகளைக் குறித்து பேசாமல் கற்கால ஆய்வை எவரும் முழுமைசெய்துவிட இயலாது.

 

 அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

ஒரு பதில் to “பின்னல்கள்  – 5 ”

 1. logamadevi Says:

  மற்றுமோர் அருமையான பதிவு. ஆம் மூதாயென்று நீங்கள் மிக மரியாதையுடன் குறிப்பிட்டிருக்கும் பனையே கற்கால மனிதர்களை கயிறுக்காலத்துக்கு நகர்த்தியிருக்கும் போலிருக்கிறது. நான் தாவரப்பொருளாதார பாடத்தின்பொருட்டு தாவர நார்களையும் கயறுகளையும் குறித்து கற்றுக்கொடுக்கிறேன். நார்களின் பயன்பாடு சுமார் 17000 BC க்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டிருக்கிறது. எகிப்தியர்களே தாவரபொருட்களிலிருந்து எடுக்கபட்ட நார்களை கயறுகளாக பின்னி கட்டுமானத்துக்கு சுமார் 4000 BC க்கு முன்பே பயன்படுத்தி இருக்கிறார்கள்.அதன் பின்னரே சீனர்களும் பின்பு உலகெங்கிலும்இவை பயன்பாட்டுக்கு வந்தன
  1940 ல் செயற்கை இழைகள் கண்டறியபடுவதற்கு முன்பு வரை தாவர நார்களே உலகெங்கிலும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.
  history of textile fibres பனைத்தண்டுகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் நார்கள் பெறப்பட்டு பயன்பாட்டில் இருந்ததை குறிப்பிடுகின்றது.
  இந்தியாவிலும் பருத்தி சாகுபடி தீவிரமடைவதற்கு முன்னர் சணப்பையும் தென்னையும் பனையுமே நார்களை அளித்து வந்திருக்கின்றன.
  மடகாஸ்கரின் ராஃபியா பனைநார்களின் பயன்பாடு பழங்காலத்திலிருந்து இன்றும் தொடர்கின்றது.
  அன்புடன்
  லோகமாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: