பின்னல்கள் – 7பட்டை
வாழை இலைகள் தான் நமது உணவு உண்ணும் பாரம்பரிய பாத்திரம் என்பதாக இன்று ஒரு கருத்து தமிழகத்தில் நிலைபெற்றிருக்கிறது. அனைத்து திருமண வீடுகளிலும், விருந்து வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் வாழை இலையில் பரிமாறப்படும் உணவே தமிழக உணவு பாரம்பரியத்தைக் குறிக்கும் சிறப்பம்சமாக எடுத்துக்கூறப்பட்டு வந்திருக்கிறது. வாழை மரங்கள் தண்ணீர் செழித்திருக்கும் இடத்தில் வளர்பவை ஆனபடியால் அவைகள் செழிப்பை முன்னிறுத்தும் ஒரு அடையாளமாகிப்போனது. அப்படியானால் ஐவகை நிலம் கொண்ட தமிழகத்தில் குறிஞ்சி பகுதியினைத் தவிர்த்து அனைத்திடங்களிலும் வளரும் பனை மரத்தின் ஓலைகள் எப்படி இவ்வடையாளத்தை இழந்தது?

மித்திரன் பனை ஓலை பட்டையில் பதனீர் குடிக்க உதவியபோது


வாழை இலைகள் எப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவு பாத்திரத்தின் அடையாளமாக மாற முடியும்? யோசித்து பார்த்தால், வளம் மிக்க பகுதியில் வாழ்வோரின் வழக்கமே வறண்ட நிலப் பகுதியில் வாழ்வோர் ஏக்கம் கொள்ளும் வாழ்வு என்பதாக முன்னிறுத்தப்பட்டது. மேலும் வாழை இலையினை மையப்படுத்தியே நமது சமையல்கள் விரிவடைய துவங்கின. ஆகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வாழை இலை இட்டு உணவு பரிமாறுதல் பொருந்தும் என்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நிலை எப்போதும் நம்மிடம் இருந்தது இல்லை. உணவுண்ணும் பாத்திரம் அந்தத்த இடத்தில் கிடைக்கும் இயற்கை பொருட்களின் தன்மையைப்பொறுத்தே இருந்திருக்கிறது. தையல் இலை, கமுகு பாளை, வாழை இலை, தேக்கிலை, சேம்பு இலை, தாமரை இலை மற்றும் பனை ஓலை போன்றவை தேவைக்கு ஏற்ப பயன்பாட்டில் இருந்துவந்தன. இவைகளில் கமுகு பாளை தட்டும் பனையோலை தட்டும்தான் கையிலேயே வைத்து உணவு உண்ண வசதியானவைகள். அதிலும் உடனடி பாத்திரம் என்றால் பனை ஓலை தான் மிகச் சரியானது. தேவையான அளவு எப்போதும் எடுத்துக்கொள்ள வாய்பிருந்திருக்கிறது. மொத்தமாக ஓரிலையை வெட்டி விட தேவையில்லை.


பொதுவாக வறண்ட நிலப்பகுதிகள் உள்ள தென் மாவட்டங்களில் பனை ஓலை பட்டை மிக முக்கிய உணவுப்பாத்திரமாக இருந்திருக்கிறது. தவிர்க்க இயலா இந்த பாரம்பரியம் அழிந்து போவதற்கு பனை தொழில் அழிவும் பிற விவசாய தொழில்களின் எழுச்சியும் காரணம். குறிப்பாக அணை கட்டுமானங்கள் போன்ற பெரும் நீர் தேக்கங்களின் வரவிற்கு பின்பு, நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு, உணவுகள் உற்பத்தியிலும் உட்கொள்ளுதலிலும் தமிழகம் மிக அதிக அளவில் மாற்றத்தை அடைந்திருக்கிறது.
பனை ஓலையில் செய்யப்படும் பனையோலைப் பட்டையானது நம்மோடு தங்கியிருக்கும் ஒர் ஆதி உணவு பாத்திரம். இவ்விதமாக எல்லா கலாச்சாரத்திலும் தொல் வடிவங்கள் எளிதில் வந்து நவீன வாழ்வை அடைவதில்லை. ஆதிவடிவங்கள் நம்மை வந்தடைவது ஒரு நல்லூழ். அவ்வடிவங்களே நாம் பனை சார்ந்த வாழ்வை முன்னெடுத்தவர்கள் என்று கூறுவதற்கு ஏற்ற அடையாளம். அகழ்வாய்வு செய்து நாம் எடுக்கும் பொருட்களை விட பயன்பாட்டில் இருக்கும் இவ்வித பொருட்கள் பயன்பாட்டளவில் மிகவும் தொன்மையானது.

கறி பொதிந்த ஓலை


பனை ஓலையின் வடிவம் அதிகளவில் மாறாமல் பனை மரத்தின் ஓலையைக் கொண்டு செய்யப்படும் ஒரு வடிவம்தான் பனையோலைப் பட்டை. இதற்கு இணையான வேறு எளிய பொருள் பரந்துபட்ட பயன்பாட்டில் இல்லை என்று சொல்லலாம். இன்று பெரும்பாலும் ரோட்டோரங்களில் பனையோலைப் பட்டைகளுடன் பதனீர் விற்பவர்கள் நின்று விற்பனை செய்வதைப் பார்க்கிறோம். அந்த பட்டைதான் பதனீரை விற்பனை செய்யும் விற்பனை முகவர் எனும் அளவிற்கு இன்று பனையோலைப் பட்டை முன்னணியில் நிற்கின்றது.


எனது சிறு வயதில் பதனீரை பனையோலைப் பட்டையில் வழங்கும் ஒரு முறைமையை நான் பெரிதும் ரசித்திருக்கவில்லை. மடிப்பு மடிப்பாக இருக்கும் இலைகள், இரண்டு கைகளும் பற்றியிருக்க குனிந்து மாடு நீர் குடிப்பது போல பதனீர் குடிப்பது, ஏதோ இலையையும் சேர்த்து சாப்பிடும் பாவனையைக் கொண்டிருந்தது. எவ்வகையிலும் பொருத்தமில்லா ஒரு கடினமான வடிவத்தை நமது முன்னோர் நம்மீது திணித்துவிட்டார்களோ என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் வளர்ந்த பிற்பாடு, ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் கத்தியும் கரண்டியும், சீனர்கள் பயன்படுத்தும் இரட்டைக் குச்சிகளும் இதனை விட கடினமான அனுபவங்களைக் உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு கட்டத்தில் பனை ஓலை பட்டையின் வடிவம் மிக நேர்த்தியான ஒன்றாகவும் காணப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல பனைஓலையில் சாப்பிடும் உணவின் சுவை என்னை திக்குமுக்காட செய்வதாக இருந்தது. தனித்துவமான அந்த வடிவம், பயன்பாடு மற்றும் பயன்படுத்துவோர் சார்ந்த தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு அதிகமானவை. அட்சயப்பாத்திரம் என்ற ஒரு உன்னத வடிவமாகவே இதனைப் இன்று பார்க்கிறேன்.


ஓலைகளில் பல்வேறு பயன்பாட்டு வடிவங்கள் செய்வது உலகமெங்கும் வழக்கில் காணப்படுகின்ற ஒன்று. ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு பொருள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவை யாவும் பல நூற்றாண்டுகளாக நமது மரபில் ஊறி எழுந்தவை. இன்று இவற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், இவை அத்தனை எளிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை ஒருமுறை தொட்டுணர்ந்தாலே தெரிந்துவிடும். ஆதி மனிதர்கள் ஓலைகளுடன் கொண்டுள்ள உறவைச் சொல்லும் சான்றுதான் பனை ஓலை பட்டை.


பெண்களும் தாய்மார்களுமே ஆதி பயன்பாட்டு பொருட்களை கண்டுபிடித்தவர்கள் என்பது குறித்த பார்வை, பெண்ணிய ஆய்வாலர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தையைப் பெற்றடுத்த தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பின் போது ஏற்படும் தேவைகளுக்கேற்ப அனேக காரியங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஓலை பட்டையில் கூட குழந்தையை விரித்து பரப்பி வைத்து படுக்க வைத்திருக்கலாம். அது போலவே விழுந்து கிடக்கும் பனை ஓலைகளை எடுத்து குவித்து குழந்தையின் சிறு வாய் வழி குழந்தைகளுக்கு உணவு புகட்டும் தாய்மார்கள் பனை ஓலை பட்டையின் ஆதி வடிவைக் கண்டுபிடித்திருப்பார்கள். உணவை சாறு, கூழாக அருந்தும் ஒரு குழந்தைப் பருவத்து நிலையை இது இன்றும் உணர்த்துவதாக இருக்கிறது.


பனை மரத்துடன் ஈடுபாடு கொண்டவர்கள் பனையோலை பட்டையில் பதனீர் வாங்கிக்குடித்த அனுபவத்தை மறப்பது இல்லை. பட்டையை கிளப்பும் அந்த அனுபவம் தொன்றுதொட்டு வரும் ஒரு அறிவு என்பதோடு தொன்மையான ஓலை பயன்பாட்டின் ஆதாரம் என்றும் நாம் கொள்ளலாம். மேலும், பின்னல்கள் எனும் மொழியினை மனிதர் கற்றுத்தேற நாம் கண்டடைந்த பாதையினைச் சுட்டி நிற்கும் மைல்கற்கள் இவைகளே

பனை ஓலைப் பட்டையில் பனம்பழம் – குற்றாலம்


வேட்டை சமூகங்கள் ஓலைகளையும் இலைகளையும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களையுமே தங்கள் வேட்டைப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து வெகு சமீப காலம் வரை கூட பனை ஓலையிலேயே பன்றி இறைச்சியினை பொதிந்து கொடுப்பார்கள். இவ்விதமாக பொதிந்தவைகளிலிருந்து கறியை எடுத்து வீசியெறியும் ஓலைகளின் நடுவில் குழிவு இருப்பதைப் பார்க்கலாம். இவைகளும் ஓலை பட்டையின் ஒரு ஆதி வடிவமாக இருக்க வாய்ப்பிருக்கிறது

பனை ஓலைகளில் பட்டையினை மடிக்கும்போது கவனிக்கவேண்டியவைகள் சில உண்டு. எல்லாரும் எளிதில் பனை ஓலையில் பட்டையைப் பிடித்துவிடமாட்டார்கள். அது எளிதும் அல்ல. ஓலைகளின் பதம் மிகவும் முக்கியம். எத்துணை திறமையானவர் மடித்தாலும் ஒருசில ஓலைகளில் கீறல்கள் விழுந்துவிடுவது இயல்பு. சில வேளைகளில் நெருப்பில் வாட்டி மடிக்கும் வாய்ப்பு இருந்தாலும் அந்த வாய்ப்பு எப்போதும் சாத்தியப்படுவதில்லை.

பதனீர் விற்பவரும் பனம் பழம் விற்கும் சிறுவனும் பனையோலை பட்டையுடன் – குற்றாலம்


ஓலைகளை குறித்து ஒரு சிறு அறிமுகம் இருந்தால் பின்வருவனவற்றை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். இரண்டு பெருவிரல்களும் இணைந்திருக்கும்படி கைகளை விரித்து வைத்துக்கொள்ளுங்கள். பனை ஓலையும் சற்றேறக்குறைய இப்படித்தான் இருக்கும். இப்பகுதியில் தான் மட்டை வந்து மையம் கொள்ளும். இதனை மூக்கோலை என்றும் பொன்னி ஓலை என்றும் குறிப்பிடுவார்கள். இப்பகுதிக்கு என்று ஒரு தனித்துவமான மடிப்பு இருக்கும் இதிலே ஒரு குருவி பதிவாக வந்து ஒளிந்து கொள்ளும். ஆகவே தான் ஓலையின் இப்பகுதியில் தங்கியிருக்கும் குருவிக்கு மூக்கோலை குருவி அல்லது பொன்னி குருவி என்று பெயரிட்டார்கள் குமரி மாவட்டத்தினர். தூத்துக்குடி ராமனாதபுரம் போன்ற பகுதிகளில் இவற்றை முன்னி ஓலை என அழைப்பார்கள். ஓலையின் இப்பகுதி பெரும்பாலும் பொருட்கள் செய்ய பயன்படுத்துவதில்லை.
பொன்னி ஓலையை மையப்படுத்தி ஓலையினை வலஞ்சிறகு இடஞ்சிறகு என்றும் பிரிப்பார்கள். அதாவது, ஓலையினை வலதுபுறம் என்று இடதுபுறம் என்று பிரிப்பது. இதில் வலஞ்சிறகிற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பனை மரத்திலிருந்தே பதமாக வெட்டி அருவாபெட்டியில் எடுத்துவரப்படும் நிகழ்சிகள் உண்டு. தனித்துவமான பொருட்களை அவ்வளவு கவனமாக செய்வார்கள். ஓலையின் இரு ஓரங்களையும் கடஞ்சிலக்கு என்பார்கள். ஓலையை பெருமளவில் பாதிக்காதபடி கடஞ்சிலக்கினை எடுத்துக் கூட பட்டை மடிப்பார்கள். அது பதனீர் இறக்கும் பனை மரத்தை பெருமளவில் பாதிக்காத செயல்.

குருத்தோலைச் சிறகு


மூன்று, நான்கு அல்லது ஐந்து ‘இலக்குகள்’ கொண்ட பனை ஓலைகளை ஒன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றை மடக்கிச் செய்வதுதான் பனை ஓலைப் பட்டை. பொதுவாக ஒரு ஐந்து இலக்குகள் கொண்ட ஓலையினை இணிந்து எடுத்துப் பார்த்தால் அது மனிதக் கைகளை ஒத்திருக்கும். ஓலையில் அடிப்பாகம் ஒன்றோடொன்று இணைந்து உள்ளங்கை போலவும், மேற்பகுதி விரல்கள் போன்று பிரிந்தும் இருக்கும். இது மனிதக் கைகளை குவித்து தண்ணீர் மொண்டு குடித்த ஆதி குடிகளின் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும். பிரிந்திருக்கும் விரல்களை எப்படி சேர்த்துவைத்துத் தண்ணீர் மொண்டுகொள்ளுகிறோமோ, அதுபோலவே ஓலைகளையும் குவித்துப் பிடித்துவிட்டால் தண்ணீரைத் தேக்கி குடிக்கும் ஒரு வடிவமாக மாற்ற முடியுமே என எண்ணியிருக்கலாம். ஓலைகளைப் பரத்தி, பிரிந்திருக்கும் நுனிப்பகுதிகளை ஒன்றிணைத்தால் ஒரு குழிவுடன் கூடிய படகின் வடிவம் கிடைக்கும். ஒன்றிணைத்த ஓலைகளின் ஒரு சிறு பகுதியை மட்டும் பிரித்து, நீண்டு நிற்கிற ஓலைகளுக்குக் குறுக்காக சுற்றிக் கட்டிவிட்டால் பயன்பாட்டுக்கு ஏற்ற பனை ஓலை பட்டை தயார்.

மித்திரன் நேரடியாக பனையேறி அளித்த பட்டையில் பதனீர் சுவைக்கும் காட்சி – திருஞானபுரம்


ஒரு வகையில் பனை ஓலைப் பட்டைகளின் எளிமையும் தான் தொன்மையான அவற்றை இன்றுவரை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பனையேறிகளின் முதல் நாள் பூசையில் பனையோலைப்பட்டை கண்டிப்பாக ஓர் இடம் பெற்றிருக்கும். குமரியிலுள்ள அனைத்து மதத்தினரும் தங்கள் விழாக்களின்போது, சடங்குகளின்போது பனை ஓலைப் பட்டையில் ஏதேனும் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு.

கூடவிளை – தென்னிந்திய திருச்சபை, துக்க வெள்ளி ஆராதனைக்குப் பின்பு நிகழும் பனையோலைப் பட்டை கஞ்சி வழங்குதல்


குமரி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபைகளில் நடைபெறும் புனித வெள்ளி ஆராதனை ஒரு தொல் சடங்கினை ஏந்தி வருவதை இன்றும் காணலாம். பல திருச்சபைகளில் மும்மணி நேர ஆராதனைக்குப் பின்பு கஞ்சியினைக் கொடுப்பார்கள். ஆனால், இன்றும் ஒரு சில திருச்சபைகளில் பனை ஓலைப் பட்டையிலேயே இதனை வழங்குவார்கள். இதற்காக திருச்சபையினர் எடுத்துக்கொள்ளும் சிறப்பு கவனம் நம்மை பிரமிக்க வைப்பது. ஓலைகளை வெட்டி மலைபோல முந்தையநாள் குவித்துவிடுவார்கள். பிற்பாடு அவைகள் புழுமி மென்மையாகும்போது ஓலைகளை எடுத்து மடிப்பார்கள். ஓலைகளை மடிப்பதற்கு என்று தனி திறமை வாய்ந்தவர்கள் உண்டு.
இதே சூழலை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அசனம் வழங்கும்போது பனை ஓலை பட்டையில் தான் கொடுப்பார்கள் நவீன வாழ்வில் வாழை இலைகள் பனையோலைகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டன.


பனையோலைப் பட்டை சோறு வழங்குதலில் நாட்டார் தெய்வ வணக்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. பல்வேறு விழாக்களில் கொடுக்கப்படும் கிடாய்கறி சோறு பனை ஓலைப் பட்டைகளிலேயே கொடுக்கப்படும். திருவிழாக்களின் உற்சாக களைப்பில் மிக அதிக உணவைக் கோருகின்ற ஒரு வடிவம் பட்டை சோறு என்றால் அது மிகையாகாது. கிடா அல்லது கோழி பலியிட்டு நாட்டார் தெய்வங்களை வணங்கும்போதும் பனை ஓலை பட்டையில் கறிசோறு வழங்கும் நடைமுறை இன்றும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமனாதபுரத்தில் கோழிக்கறியினை பனையோலை பட்டையில் உண்ட அனுபவம் கிட்டியது. பதனீரோ, கஞ்சியோ, கறிக்குழம்போ பனை ஓலை வாசத்துடன் நம் நாக்கில் வந்து விழுவது பசியை நன்கு தூண்டும்.


2018 ஆம் ஆண்டு தமிழகத்தினை சுற்றி வருகையில், அனேக தென் மாவட்ட கோவில்களின் அருகில் பனை ஓலை பட்டைகள் திருவிழாக்கள் முடிந்துவிட்டதன் அடையாளமாக கிடந்தன. பழங்காலத்தில் சில பாட்டிமார் இவ்வித ஓலைகளை எடுத்து கடவம் போன்ற பொருட்களை செய்து ஓலைகளை மறு சுழற்சி செய்த கதைகளையும் கேட்டிருக்கிறேன்.

மட்டையுடன் இணைந்திருக்கும் பனையோலையினை தேவைக்கேற்ப கிழித்தெடுக்க தயாராகும் பனையேறி – பண்ணைவிளை


எனது அனுபவத்தில் பனையோலை பட்டையினை பயன்படுத்தும் மக்கள் பலதரப்பட்டவர்கள் என அறிந்திருக்கிறேன். தமிழகம் தாண்டி ஆந்திராவிலும் அவற்றின் பயன்பாடு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சாதி சமய மொழி நாடு கடந்து காணப்படும் பனை ஓலை பட்டைதான். அப்படி பார்க்கையில் தமிழகத்தில் இழந்துபோன பட்டையின் பங்களிப்பை மீட்டுருவாக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இராமனாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் எப்படியாவது ஒரு சில கடைகளில் பனை ஓலை பட்டையில் உணவளிக்கும் கடைகள் உருவாகத்துவங்கினால், மண்வாசனை என்ற கூற்று பனைவாசனை என மாறும். பட்டையைக் கிளப்பும் காலத்திற்கு தமிழகம் தயாராகட்டும்.

அசனம் : திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தென்னிந்திய திருச்சபையில் வழங்கப்படும் சிறப்பு விருந்து. ஊரிலுள்ள அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொள்ளலாம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: