Archive for ஜூன், 2020

பின்னல்கள் – 9

ஜூன் 29, 2020

ஓலைக் குழல்

சிறு பிள்ளைகளது வாழ்வில் விளையாட்டுப் பொருட்கள் இன்றியமையாதது. நான் சிறுவனாக இருக்கும்போதே விதம் விதமாக அனேக விளையாட்டு பொருட்கள்  விற்பனைக்கு வந்துவிட்டன. அதாவது விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சூழல் நிலைபெற்றுவிட்ட ஒரு காலம்.  எனக்கான  விளையாட்டுப் பொருட்கள் என ஏதும் வீட்டில் வாங்கித்  தந்ததில்லை. அந்நாட்களில்  நமக்கான விளையாட்டுப்பொருட்களை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான்.  நான் விரும்பி விளையாடிய விளையாட்டு கச்சி (கோலி) தான் விலை கொடுத்து வாங்கிய பொருளைக் கொண்டு விளையாடிய விளையாட்டு.  அஞ்சு பைசாதான் ஒரு கச்சியின் விலை.

கச்சி என்ற களைச்சி

விளையாட்டுப் பொருட்கள் பல்வேறுவிதமானவைகள் மாத்திரம் அல்ல பல்வேறு சூழல்களையும் பின்னணியங்களையும்  வெளிப்படுத்த வல்லவை. இன்றைய சூழலில் குழந்தைகள் சர்வதேச பொம்மை வணிகத்திற்குள் இழுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் கைகளில் தொட்டு உணரும் வகையில் பயன்படுத்திய பொம்மைகள் போய் இன்று தொடு திரையில் விளையாடும் மென் விளையாட்டுக்கள் பிரபலமாகியிருக்கின்றன. ஆகவேதான் இவ்வித இணைய விளையாட்டுக்களிலிருந்து தங்கள் குழந்தைகள் விடுபடவேண்டும் என்ற எண்ணத்துடன்  இன்றைய பெற்றோர்  தங்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் கையிலிருக்கும் விளையாட்டுப்பொருட்கள் அவர்கள் எவ்விதமான எதிர்காலத்தை கட்டமைக்கப்போகிறார்கள் என்பதையே குறிப்பிடும் என்ற நம்பிக்கை ஆழ வேரூன்றி இருக்கிறது. இன்றும் பெரும்பாலும்  பெண் குழந்தைகளுக்கு சமையல் பாத்திரம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் ஆண்களுக்காக கார் பொம்மைகள் மற்றும் துப்பாக்கிகள் என பாலின வேறுபாட்டை காண்பிக்கும் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.  பால் சார்ந்த திணிப்பு கூடாது என்று தொடர்ந்து பல்வேறு முயற்சிகள்  சர்வதேச அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டின் மூலம் கல்வி என பல்வேறு வகைகளில் விளையாட்டுக்கள் அர்த்தம் பெறுவதைக் காணலாம்.

சிறுவர்களைப் பொறுத்தவரையில் இன்று தான் என்று அல்ல, தொல் பழங்காலம் முதலே விளையாட்டுபொருட்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் பெரும்பாலும் பெரியவர்களின் வாழ்வில் காணப்படும் பொருட்களை பிரதிபலிப்பதாகவே இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு பெரியவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு.  அந்தந்த கலாச்சாரத்தையும் காலகட்டத்தையும் வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கான பொம்மைகளின் உலகம் பிரம்மாண்டமானது.

நான் எப்போதும் கூறிவருவதுபோல, பனை மரம் குழந்தைகளுக்கான மரம். பனை மரத்திலிருந்து எடுக்கும் பொருட்களைக் கொண்டு குழந்தைகளுக்கான அனேக விளையாட்டுப்பொருட்கள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்றாலும், அவைகள் பட்டியலிடப்படவோ அவைகளின் பின்னணியம் சார்ந்த தேடுதல்களை முன்னெடுக்கவோ முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டது போல தெரியவில்லை.

ஆதி காலத்தில் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வாழ்வில் காணப்பட்ட ஆயுதங்களை போலவே பொருட்கள் செய்ய கற்றுக்கொண்டனர். அல்லது அவ்விதமான பொருட்களை போலி செய்து பயன்படுத்திவந்தனர்.  பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஆயுத பயிற்சி தொல் பழங்காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என கூறுவார்கள். மாத்திரம் அல்ல, பல்வேறு பழங்குடியினரிடையே வேட்டையாடும் மிருகங்களையே குழந்தைகளுக்கான விளையாட்டுபொருட்களாக செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.

சமையல் பொருட்கள், பயணிக்கும்  வாகனங்கள், ஆயுதங்கள், மனிதர்கள், உயிர்வாழினங்கள் என பல்வேறு பொருட்களை விளையாட்டுபொருட்களாக செய்துவந்திருக்கும் சிறுவர்கள், சில நேரங்களில் பனை சார்ந்து வாழும் வாழ்வை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். குழந்தைகள் பனையுடன் விளையாடிய விளையாட்டுக்களின் பட்டியலை மட்டும் நம்மால் ஒருபோதும் வகுத்துவிட இயலாது. பொதுவான விளையாட்டுக்கள் பல இருந்தாலும், ஒவ்வொரு ஊருக்கும் தனித்தன்மை வாய்ந்த விளையாட்டுக்கள் அதற்கே உரிய நுட்பமான வேறுபாடுகள் என பனை குழந்தைகளுடன் உறவுகொள்ளும் விதமே ஒரு விளையாட்டுத்தான்.

கற்கால குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள்

குழந்தைகள் விளையாட்டு பொருட்களுடன் செலவு செய்யும் நேரம் என்பது இன்று மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் தங்களைச் சூழ நிற்கின்ற புற உலகத்தை பார்க்கும் ஒரு கருவியாக தான் விளையாட்டுக்கள் இருக்கின்றன. விளையாட்டைப் பொறுத்தவரையில் குழந்தைகளின் சிந்தனைத் திறனை கூர்மைப்படுத்தும் மகிழ்வின் தருணங்களாகவே குழந்தைகளுக்கு இருக்கும். அதே வேளையில், குழந்தைகள் ஒருவரோடொருவர் பழகவும், தத்தமது திறன்களை மேம்படுத்தவும் விளையாட்டுப்பொருட்கள் அவசியமாக இருக்கின்றன.

ஒரு குழந்தை தன்னைச் சுற்றி இருக்கும் சூழியலிலிருந்து தனக்கான விளையாட்டு பொருளை உற்பத்தி செய்யும்போது அந்த குழந்தை  தனது பண்பாடையும் வாழ்வையும்  இணைத்துப்பார்க்கின்றது. இந்த ஒத்திசைவினை உணர்ந்துகொள்ளும்போது சூழியல் சார்ந்த விழிப்பூணர்வு விளையாட்டு வாயிலாக அறிமுகமாகிறது. தன்னைச் சூழ இருக்கும் இயற்கையைக் காக்கவேண்டும் என்கிற எண்ணம் போன்றவை மேலெழுகின்றன.

குழந்தைகள் தாமே விளையாட்டுப் பொருட்கள் செய்கையில் மேலும் இருவிதமான செயல்கள் நிகழ்கின்றன. ஒன்று குழந்தை ஒரு பொருளை உருவாக்கும் துடிப்பு மற்றும் உற்சாகத்தை மன ரீதியாக அடைகிறது. அப்படியே அந்த குழந்தையின் உடல் இயக்கங்கள் மிக சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கின்றன. இவ்விதமான உடல்  மற்றும் மன இயக்கமே குழந்தைக்கு மிக முக்கிய ஆற்றல்களை வழங்க வல்லன என்பதாக சமூகம் புரிந்திருக்கிறது. ஆகவே பெரும்பாலும் குழந்தைகளின் உடல் மற்றும் மன இயக்கம் சீரடைவதற்காக இவ்வித விளையாட்டுக்களை ஊக்குவிப்பார்கள்.

பனை ஓலையினை எடுத்து அதனைச் சுற்றி கட்டும் பொருளாக மாற்றும் நிலையிலிருந்து பட்டை மடிக்கும் ஒரு புது வழிமுறையினை கண்டுகொண்டதுவரைக்கும் ஒரு மிகப்பெரிய தொலைவினைத் தான் நமது முன்னோர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். அவ்வித நெடும்பயணத்தில் ஓலைகள் பெற்ற வடிவங்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவைகள். நீடித்து உழைப்பவை மற்றும் சூழியல் மாசு விளைவிக்காத இவ்வித பொருட்கள் யாவும் இன்றைய குழந்தைகளை வந்து அடையாதது தான் சூழியல் சீர்கேடுகளுக்கு காரணம்.

ஓலைகளை பல்வேறு வடிவங்களில் மாற்றி பயன்படுத்த இயலும் என்பதை நாம் கவனித்திருப்போம். “கோட்டு”தல் என்பது ஓலைகள் இருக்கும் விதமாகவே வைத்து அவைகளை ஒரு பாத்திர வடிவிற்கு ஏற்ப கொள்கலனாக மாற்றுவது. “முடை”தல் என்பது ஓலைகளை சீராக கிழித்து பின்னர் அவைகளை பின்னி  பொருட்களை உருவாக்கும்  ஒரு முறைமை. பின்னல்களில் ஒன்றின்மீது ஒன்று பரவி செல்லும் முறைமைகளில் பலவிதம் என்றால், ஏடாக மடக்கி கலயத்தின் வாயில் நுழைக்கும் விதம் மற்றொருபுறம். ஓலைகளை திரித்து கயிறாக்குவது, அப்படியே அவைகளை எழுதும் ஏடாக மாற்றுவது வேறுவகை. இவ்வித பின்னணியத்தில் தான் ஓலைகளைச் சுருட்டி பயன்படுத்தும் பொருட்கள் முக்கிய கவனத்தைக் கோருகின்றன.

இசைக்கருவிகளின் ஆரம்ப நிலை குறித்து பேசும்போது கற்கால துவக்கத்திலேயே இசையின் ஆரம்ப வடிவம் இருந்திருக்கிறது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஒருவகையில் கற்களைத் தட்டும் சத்தத்தில் ஏற்படும் தாளம் இசையின் ஆதி நிலை என்கிறார்கள். ஆனால்  இசைக்கருவி என்று வரும்போது 40000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொடை எலும்பில் இடப்பட்ட துளைகளை காண்பித்து இதுவே இசையின் ஆரம்ப வடிவம் என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். பொதுவாக மூங்கில் காடுகளில் வண்டுகள் துளைத்த மூங்கில்களின் வழியாய் காற்று நுழைந்து எழுப்பும் ஒலிகளே ஆதி மனிதனுக்கு இசை குறித்த அறிமுக பாடம் அளித்திருக்கும் என சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எப்படியும் நாம் மீண்டும் மீண்டும் வந்து நிற்கும் ஓரிடம் உண்டு. அது மனிதர்கள் தங்கள் குரலால் எழுப்பிய ஓசை தான் அது. ஒலியின் மீது ஏற்பட்ட ஒரு தேடுதல் மனிதர்களை பண்பாடு நோக்கி அழைத்து வந்தது என்றால் அது மிகை அல்ல.

தமது குழந்தைகளிடம் அன்னையர் உரையாடிய விதத்தினையும் மிக முக்கிய குறிப்பாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கூவல் முறை, சீட்டிகை, கொட்டல், உறுமல், முனகல்  போன்றவை அடிப்படையான சத்தங்களாக இருந்திருக்கும். அன்னையரின் தாலாட்டு தான் இசையின் அடி நாதமாக இருத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவைகளில் சற்றெனும் குறிப்பிடப்படாத ஒன்று உண்டு அது  சங்கு தான். கடல் சங்கின் உள்ளிருக்கும் ஊன் உண்ணப்பட்டு எஞ்சி இருக்கும் பகுதியில் எழுப்பும் சத்தம் பல மைல் தூரம் கேட்கும் சக்தி வாய்ந்தது. இதற்கு இணையாகவே மிருகங்களின் கொம்புகளும் பயன்பாட்டில் இருந்தன. ஒலியெழுப்பும்படியாக இவைகள் புழக்கத்தில் இருந்தன என தொல்லியலாளர்களும், கற்கால ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.

அப்படியானால் இதே காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எளிய ஒலி எழுப்பும் பனை ஓலைக் கருவியினை நாம் விட்டுவிட இயலாது. ஓலையினை சுற்றி அதனை கொம்பு வடிவத்தில் ஒரு பக்கம் குவித்தும் மற்றொறு பக்கம் விரிவாக்கியும் செய்யும் வடிவம், மிக எளிதானது. எலும்பில் துளையிடும்  அறிவிற்கு முந்தைய நிலை தான் ஓலையில் செய்யும் ஒலிஎழுப்பும் கருவி. இன்று சிறுவர்கள் விளையாட்டிற்காக செய்யும் இந்த ஊதுகுழல் மனித நாகரீகத்தின் முதல் குரலாக எழுந்த ஓலையின் ஒலி என்பதாக அறைகூவுகிறது. ஓசை அல்லது ஒலி எழுப்புவதால் தான் அது ஓலையானதா என்பது கூட ஆய்வுக்குரிய வார்த்தையாக  இருக்கிறது.

பெரும்பாலும் இடையர் வாழ்வில் ஒலி எழுப்புவது ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. குழலூதும் கண்ணன் போன்ற படிமங்கள் இவ்வித தொல் அடையாளங்களினூடாக எழுந்திருக்க வாய்ப்புள்ளது. அரசு மற்றும் மத  தலைவர்கள் பலரும் சத்தங்களுடனே அறியப்பட்டிருக்கிறார்கள்.  போர் முரசிற்கு இணையாகவே எக்காளங்கள் கெம்பீர சத்தம் எழுப்பியிருக்கின்றன. சத்தங்களே பழங்கால வழிகாட்டி.

பால்யபருவத்தில் பாட்டி வீட்டின் பின்புறம் கிணற்றடியில் ஒரு பூவரச மரம் நின்றது நினைவிற்கு வருகிறது. இலைகளை சுருட்டி ஊதினால் போதும் நாம் கேட்டிராத கமறல் போன்றதொரு ஒலி எழும்பும். ஆனால் அவ்விதமான ஒரு ஒலியினை பனை ஓலையினைக்கொண்டு எழுப்பமுடியும் என்று நான் வெகு சமீபகாலம் வரை எண்ணிப்பார்த்திருக்கவில்லை.  

ஊதுகுழலின் தேவை எதற்கு இருக்கிறதோ இல்லையோ ஒருவிதமான சத்தம் எழுப்ப கண்டிப்பாக பயன்பட்டிருக்கவேண்டும். தூரத்திலிருந்து  எச்சரிக்கை அளிக்கவோ அல்லது சத்தம் எழுப்பி உதவி கோரவோ கூட பயன்பட்டிருக்கும்.

எனது பனைமர வேட்கைப் பயணத்தின்போது சந்தித்த  ஹாரிஸ் பிரேம் 2017 ஆம் ஆண்டு ஒருநாள் எனை அழைத்தார். பொதுவாக அவர் அடிக்கடி அழைப்பவர் இல்லை. பாஸ்டர் இங்கே இரண்டுபேர் வந்திருக்கிறார்கள்  அவர்கள் கையில் இருக்கும் வாத்தியக்கருவி பார்ப்பதற்கு பனை ஓலையில் செய்யப்பட்டதுபோல இருக்கிறது. ஒரு பேஸ் சத்தம் எழுகிறது என்றார்கள். எனக்கு அதன் சத்தத்தையும்  படத்தையும் அனுப்பினார்கள். பனை ஓலையில் தான் செய்யபட்டிருக்கிறது என நான் அப்போது உறுதி கூறினேன். ஏனென்றால், ஏற்கெனவே இந்தோனேசிய தீவுகளில் இது போல ஒரு இசைக்கருவியினைப் பார்த்திருக்கிறேன் என்றேன்.

இதற்கு ஒப்பாயிருக்கும் ஒரு இசைக்கருவியினை மஹாராஷ்டிராவில் பார்த்தேன். ஆரே பகுதியில் ஒரு பழங்குடியின போராட்டத்தின்போது தார்பா என்ற இசைக்கருவியினை ஒருவர் வாசிக்க அதற்கேற்ப பழங்குடி பெண்கள் இணைந்து ஆடினர். ஆகவே இவ்விதமான ஒரு இசைக்கருவி தொல் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதை என்னால் உறுதி செய்ய முடிந்தது.

தார்பா – வார்லி பழங்குடியினரின் பனை ஓலையில் செய்யப்பட்ட இசைக்கருவி

2017 ஆம் ஆண்டு நான், செந்தமிழன் அவர்கள் செம்மை சார்பில் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள ராமனாதபுரம் சென்றிருந்தேன். சுமார் 60 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், திரு. பாண்டியன் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் ஒரு விவசாயி, பனை தொழில் சார்ந்த எந்த ஈடுபாடு அவர்களுக்கு இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்து செல்கையில் தான் பனை சார்ந்து இயங்கவேண்டும் என்கிற எண்ணம் உறுதிப்பட்டிருக்கிறது தோழர், என கூறி, பனை ஏற தேவையான கருவிகளை வாங்கிச் சென்றார்.

எங்கள் சந்திப்பு மிக நெருக்கமாக காரணம், முதல் நாள் இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் காலை அனைவரும் பனைத்தொழில் செய்யும் இடங்களில் சென்று பார்த்தோம். பனக்காட்டிற்குள் சென்ற அந்த நடையில் தான் பாண்டியன் அவர்கள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு  ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். ஓலையை அதன் வடிவம் ஒரு கூம்பு வடிவத்தை அடைந்தது அதனை ஊதி ஒலி எழுப்பினார்கள். பிரம்மாண்டமான சத்தம் எழுந்தது. பல்வேறு வகைகளில் அதில் ஒலி எழுப்ப முடியும் என்பதை பாண்டியன் அன்று நிகழ்த்திக்காட்டினார்கள். அங்கு வந்திருந்த அனைவருமே குழந்தைகளாக மாறிவிட்ட ஒரு உணர்வு அந்த சத்தத்தால் ஏற்பட்டது.

பாண்டியன் தான் செய்த பீப்பீ வாத்தியத்தை வாசிக்கிறார்

தமிழகம் முழுவதுமே குழந்தைகள் ஓலைகளைக் கொண்டு பீப்பீ சத்தம் எழுப்பி விளையாடியிருக்கின்றனர். அந்த விளையாட்டு குழந்தைகளுக்கு ஓலைகள் குறித்த ஒரு அறிமுகம் என்றால் அது மிகையல்ல. பின்னல்களையோ வேறு விதமான ஓலைப்பயன்பாடுகளையோ அறியும் முன்பதாகவே ஓலைகளை எடுத்துச் செய்யும் இவ்வித பொருள் எளிமையானதும் பெரு மகிழ்வளிப்பதுமாகும்.

பாண்டியன் தான்  சார்ந்திருந்த விவசாயம் பொய்த்துபோனதால் 2017 ஆம் ஆண்டு முதல் பனை மரம் ஏற துவங்கி இன்று வெற்றிகரமான பனை தொழிலாளியாக செயல்பட்டு வருகிறார். செம்மை அவரது பனை சார்ந்த பீப்பீ விற்பனைக்கான ஒரு களத்தினை சென்னையில் மரபு கூடல் என்ற வகையில் செய்து கொடுத்தது ஒரு முக்கிய திருப்புமுனை. குழந்தைகளால் விரும்பி வாங்கப்பட்ட அந்த “விளையாட்டு” இசைக்கருவிதான் அவருக்கு பனை தொழில் சார்ந்து இயங்குவதற்கு ஊக்கமருந்தாக இருந்திருக்கிறது. சிறு வயதில் அவர் விளையாட்டாக செய்து பழகிய ஒன்று பிற்கலத்தில் அவரது வாழ்விற்கே அடிப்படையான ஒன்றாக மாறிப்போன அதிசயம் இது.

பாண்டியன் பனை ஏறுவதை தொழிலாக கொண்டிருந்தாலும் இன்றும் சிறுவர்களுக்கான ஒலியெழுப்பும் பீப்பீ செய்து வருகிறார். சிறு குழந்தைகளுக்கான பனை ஓலை பொம்மைகளை செய்ய கற்றுக்கொடுக்கிறார். அவர் சார்ந்திருக்கும் நரசிங்கனூர் என்ற ஊரினை பனை சார்ந்த ஒரு மாதிரி ஊராக மாற்றிக்கொண்டு வருகிறார். இன்றுவரை பாண்டியனுடன் எனக்கு நல்ல தொடர்பு உள்ளது. அவரது வீட்டில் தங்கியிருக்கிறேன் பாண்டியன் அவர்களின் ஊருக்கு இருமுறை சென்றுள்ளேன்.  பாண்டியன் குறித்து தி இந்து தமிழ் திசையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

பாண்டியன், புதிதாக பனை ஏற விரும்புகிறவர்களுக்கு ஊக்கமளிப்பவராகவும், பனை மரம் ஏற தனது 12 வயது இளைய மகள் கரிஷ்மாவை ஊக்கப்படுத்தியும் வருகிறார். பெரும்பாலான பனை ஆர்வலர்களுக்கும், பனையேறிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்துவருகிறார்.

பனை ஓலை கொம்பூதி அறிவிப்போம் பனை மரம் குழந்தைகளுக்கானது என்று.

அருட்பணிகாட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com


%d bloggers like this: