சம்பு
நான் 2003 ஆம் ஆண்டு இறையியல் கல்வி நிறைவுசெய்தபோது திருச்சபையில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என முடிவெடுத்தேன். அப்போது எனது சகோதரி மாலத்தீவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் ஏதேனும் ஒரு வேலையில் இணைந்துகொள்ளலாம் என நினைத்து அங்கே சென்றேன். மிக அழகிய சுத்தமான இடம் தான் மாலத்தீவு. அங்கே, நான் சுவைக்க விரும்பும் மீன்கள் அனைத்தும் எனது கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்தாலும், திரும்பிய பக்கமெல்லாம் நீலம், பசுமை குறைவு, நிலமின்மை, பனையின்மை என எனக்கு பல ஒவ்வாமைகள். அங்கிருந்து திரும்பவேண்டும் என்கிற ஒரு உந்துதல் எனக்குள் இருந்துகொண்டிருந்தது. அந்த வெறுப்பு என் பார்வையில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அங்கே தென்னை ஓலைகளை ஒன்றுடன் ஒன்றாக அடுக்கி அதனைக் கோர்த்து ஒற்றை தடுக்காக மாற்றி கடைகளுக்கு சாய்வாகவும், தட்டியாகவும் அமைத்திருந்தார்கள். “க்கும்… பின்னத்தெரியாத்த பயலுவ…” என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களுக்கும் பின்னல்கள் உண்டு என்பதனை அந்த இரண்டு மாத காலத்திற்குள்ளேயே அறிந்துகொண்டேன்.

2017 முதல் 2019 வரை நான் எனது இறைப்பணியில் இருந்து விடுபட்டு பனைபணியே இறைப்பணி என்ற நோக்கோடு தமிழகம் முழுவதும் வெறிகொண்டு பயணித்தேன். தமிழகத்தில் வழக்கொழிந்துபோன பல்வேறு பொருட்களை மீட்டெடுக்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் கனன்றுகொண்டிருந்ததால், பார்க்கும் பனை சார்ந்த ஒவ்வொருவரிடமும், அவர்கள் கண் முன்னால் மறைந்துபோன பொருட்கள் குறித்த தகவல்களை கேட்டுப்பெற முயற்சிப்பேன். அப்படிக் கிடைக்கும் தகவல்களைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் அலைந்து திரிந்து காணாமற்போன பொருளை எப்படியும் மீட்டுவிடுவேன். ஒரு பொருள் குறித்த நினைவு மட்டுமேக்கூட அந்த மக்களுக்கு இருக்குமென்றால் அதனை மீட்பதில் பெரிய சிரமமில்லை என்பதே நான் அறிந்த உண்மை.
பின்னல்கள் குறித்த தேடுதலில் பின்னலே இன்றி செய்யப்படும் பொருட்கள் பலவற்றை இதுகாறும் பார்த்திருக்கிறோம். பட்டை, பீப்பீ, தோண்டி, விசிறி என அவைகள் யாவும் பனை ஓலையின் வடிவத்தை சாதகமாக மாற்றி ஓலையின் தன்மை பெரிதளவில் மாற்றத்திற்குள்ளாகாமல் செய்யப்படும் பொருட்களாகும்.
பனை ஓலையில் பின்னலே இன்றி இன்று நம்மை வந்து அடைந்திருக்கும் மற்றொரு பொருள் தான் சம்பு என்ற மழை அணி. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் என்ற ஊரில் வாழும் திரு. பாண்டியன் எனும் நண்பர் இதுகுறித்து எனக்கு தகவல்களைக் கொடுத்து சம்புவை மீட்டுருவாக்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திகொண்டார். திரு கல்யாண சுந்தரம் (63) என்ற பெரியவர், சம்பு செய்வதில் வல்லவர். பண்டியனின் மாமா தான் இவர். நரசிங்கனூரைச் சார்ந்த பல்வேறு மக்களுக்கு சம்பு செய்யும் அறிவு இருந்தாலும், அனைவரும் அதனை கைவிட்டுவிட்டனர். இந்த அறிவினை தன் நெஞ்சில் ஒரு கனலாக எடுத்துச் சுமந்தவர் கலியாண சுந்தரம் மட்டுமே.

பின்னல்கள் சார்ந்து சம்புவில் ஏதும் காணப்படவில்லை என்றாலும் பின்னல்களுக்கான ஒரு அடிப்படை இங்கிருந்து தான் துவங்குகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. ஓலைகளின் பயன்பாட்டு வரலாற்றில் மிக தொன்மையானதும், மழைக் காலங்களுக்கு உகந்த ஒரு பயனுள்ள பொருளான சம்புவினை சற்றே நெருங்கி உணர்வது நல்லது.
உலகம் முழுக்க மழையணிகள் கற்காலத்திலிருந்து வழக்கத்தில் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மழையணிகள் செய்வது வழக்கம். வைக்கோல், மூங்கில், மரப்பட்டைகள், தோல் என அவைகள் விரிவடைந்துகொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் சூழலில் கிடைக்கும் பொருட்களின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் முயன்றுபார்த்திருக்கிறார்கள்.

தென்னை ஓலைகளுக்கும் பனை ஓலைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பார்த்தவுடனேயே இவைகளில் தெரியும் வித்தியாசமான வடிவ அமைப்புகள் நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டியவைகள். தென்னை மட்டையில் ஓலைகள் தனித்தனியாக நடுநரம்பிற்கு இருபுறமும் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். (Pinnately Compound) பனை ஓலையோ நடுநரம்பின் இருபுறமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விசிறியைபோல இருக்கும். (Palmately Compound). உலகம் முழுவதும் பின்னல்களுக்கான ஆரம்ப பணி என்பது இலக்குகளை தனித்தனியாக பிரித்தெடுப்பது தான். ஓலைகளைப் பிரித்து எடுப்பதை இணிந்து எடுப்பது என்றே குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவார்கள். தென்னை மட்டையில் பிரிந்திருக்கும் ஓலைகளை தனித்தனியாக இணிந்து எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை ஆனால் ஒன்றாக இணைந்திருக்கும் பனை ஓலைகளைப் பிரிப்பது குறித்த புரிதல் ஆதி குடிகளுக்கு சற்றே வேறுவகையான ஒரு அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.
ஓலையில் வடிவங்கள் செய்வது மனித வாழ்வில் ஒரு தொடர் செயல்பாடாக இருந்து வந்துள்ளது. அவ்விதமாகவே அவைகள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்றைய பொருட்களாக நம்மை வந்து எட்டியிருக்கின்றன. இவைகளின் தொன்மம் சார்ந்த கதைகள் கூட இப்படிநிலைகளை விளக்கும்படியாக சுவைபட அமைந்திருக்கின்றன.

ஆதியில் பனை ஓலைகள் இப்போது காணப்படுவது போன்று இணைந்து இருந்ததில்லை. காளி தனது பிள்ளைகளுக்கு பனையேறக் கற்றுக்கொடுக்கிறாள். அவர்கள் பனை ஏறும்போது முதல் பதனீர் தனக்கு கொண்டுவரும்படி கூறி ஒரு ஓலையை வெட்டி போடச் சொல்கிறாள். பதனீர் பருக, பிரிந்து இருந்த ஓலைகளை ஒன்றிணைக்கும் வேளையில், அங்கே ஒருவர் வந்து உனது பிள்ளைகள் உனக்கு கொடுக்குமுன்பே பதனீர் அருந்துகிறார்கள் என கூற, கீழிருந்து காளி பார்க்கையில் சொட்டுகின்ற பதனீர் தெறித்து அங்கே இருந்த காளியின் பிள்ளையின் வாயில் பட, காளி கோபத்துடன் பனை ஓலைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றதாக ஒரு கதைப் பாடல் உண்டு. ஆகவே பிரிந்திருக்கும் ஓலைகளை இணைக்கும் வழிமுறைகளை காளியின் பிள்ளைகளும் முன்னெடுத்திருப்பார்கள் என நாம் உணரலாம்.

மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தேவைகளின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும்போது அது பல்வேறு முயற்சிகள் மற்றும் தோல்விகள் வழியாக நிகர்செய்யப்படுகிறது. பனை ஓலைகளை பின்னும் தொழில் நுட்பத்தினை மானிடர் அறிவதற்கு முன்பு, அவைகள் ஒன்றோடு ஒன்று சீராக அடுக்கப்பட்டு கோர்க்கப்பட்ட ஒரு நிலை இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மணிகளை கோர்க்கும் முறைமை கி மு 40000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது போன்ற தகவல்கள் அகழ்வாய்வுகளில் வெளிப்படுகின்றன . அப்படியான ஒரு அலங்காரத்திற்கு முன்பே பயன்பாட்டு முக்கியத்துவம் கிளைத்திருக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.

பனை ஓலைகளின் அமைப்பினைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். பனை ஓலைகள் என்பவை இலக்குகளின் தொகை. அவ்விதம் இணைத்திருக்கும் ஓலைகளை தனிதனி இணுக்குகளாக பிரித்து எடுத்துப் பார்த்தால் அனைத்து இலக்குகளுக்கும் நடுவில் ஒரு நரம்பு ஓடிக்கொண்டிருக்கும். அதனை ஈர்க்கில் என்பார்கள். குமரி மாவட்ட வழக்கச் சொல்லின்படி அதனை ஈக்கல் அல்லது ஈக்கு என்று தான் அழைப்பார்கள். ஈர்க்கிலோடு ஒரு அரை செ மீ அகல ஓலையை சேர்த்து கிழித்தால் அதனை மூரி என்று விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பிடுகிறார்கள்.
ஈர்க்கில் ஓலைகளை விட பல மடங்கு உறுதியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு நீள ஊசியினை நினைவுறுத்தும் அமைப்பு கொண்டது. நீரில் நனைத்து பயன்படுத்தினால் சற்றே கயிறு போன்ற நெகிழ்வுதன்மையுடன் உறுதியும் கூடியிருப்பது. ஈக்கலின் பயன்பாடு குறித்து தேடத் துவங்கினால் அது நம்மை தொல்பழங்காலத்தில் கொண்டு சென்றுவிடும்.

பனை சார்ந்த பொருட்கள் எப்படி ஒரு சூழலில் உருபெற்று வந்ததோ அதுபோலவே பல்வேறு சூழல்களினால் ஒருசில பனை சார்ந்த பொருட்கள் மறைந்தும் போயின. அவைகளை நாம் வழக்கொழிந்து போன பொருட்கள் என்கிறோம். ஒரு பொருள் வழக்கொழிவதற்கு பல்வேறு புறக்காரணங்கள் உண்டு. அவைகளில் மிக முக்கியமானது நவீன வாழ்க்கை முறை.
அதுபோல பனை சார்ந்து பொருட்கள் செய்கிறவர்கள் குறித்து எந்த குறிப்புகளும் புத்தகங்களில் இருக்காது. எங்கோ ஏதாவது ஒரு பத்திரிகையில் பனை சார்ந்த பொருட்களைக் குறித்து வருகின்ற செய்திகளை தொகுப்பதும் எளிதல்ல. அப்படியே சேகரித்தாலும் அவைகள் தமிழகத்தில் இருந்த பொருட்களில் பத்திலொன்றைக்கூட அவைகள் குறிப்பிட்டிருக்காது. பெரும்பாலும் ஊர்களைக் குறிப்பதுடன் அவைகளும் தங்கள் பங்களிப்பை நிறுத்திவிடும்.

ஓலைகளை அப்படியே வைத்து தயாரிக்கும் பட்டை மற்றும் தோண்டி இவைகளை நாம் கடந்த வாரங்களில் பார்த்தோம். சம்பு செய்யும் முறை இவைகளை விட வித்தியாசமானது. ஓலைகளை தனித்தனி இலக்குகளாக பிய்த்து அதன் பின் அவைகளை இணைத்து செய்யும் தொழில் நுட்பம் சார்ந்தது. மிக அடிப்படையான ஒரு வடிவமைப்பு. ஓலைகளை வரிசையாக ஒன்றோடொன்று நெருங்கி இருக்கும்படி அடுக்கி, இணைக்கும்படியாக பனை ஈர்க்கில்களையே பயன்படுத்துவார்கள். இவைகள் அடிப்படையில் ஒரு தடுக்காக பயன்படும். இதனோடு ஈச்ச மட்டைகளை இணைத்து பலப்படுத்தி, அவைகளை குவித்து இணைத்துவிட்டால் சம்பு தயார்.

சம்பு ஒரு சிறந்த மழையணி. புயல் மழைக்கும் அசைந்து கொடுக்காதது என்றே குறிப்பிடுவார்கள். தொல்பழங்காலத்தின் மழை கோட் என்றே சொல்லுமளவு, இது தலை முதல் கால் வரை உடலை பாதுகாக்கும் ஒரு அமைப்பு. சம்பு என்ற வடிவம் காலத்தால் மிக தொன்மையானது என்பதை அதன் வடிவத்திலிருந்தும் பயன்பாட்டு தன்மையிலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம். உலகின் பல்வேறு நாடுகளில் மழையணியாக சம்புவை ஒத்த வடிவங்களில் பலர் மழையணியினைச் செய்வது பழங்குடியினரிடையே இருக்கும் வழக்கம். வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் பரவலாக பயன்பட்ட ஒரு வடிவம் இது என்று பனை மரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் குறிப்பிடுவார்கள். இன்று சம்புவினை தொழில் முறையாக செய்தால் ரூ150திலிருந்து ரூ200 வரைக்கும் விற்க இயலும். கிராம மக்களுக்கு குடையினை விட சிறந்த வடிவமைப்பு இதுதான்.

நவீன வாழ்வு தான் இவ்வித அறிதல்களையும் வாழ்க்கைமுறைகளையும் சிதறடித்தது. ஒரு சம்பு செய்ய 60 ரூபாய் ஆகும் சூழலில் வெறும் 50 ரூபாய்க்கு குடை கிடைத்தது ஆகவே சம்புவினை விட நவீனமாக காணப்பட்ட குடைக்கே மதிப்பு கிராம மக்களிடம் பெருகியது ஆகவே உடல் உழைப்பால் செய்யும் சம்புவினை அப்படியே மறந்துவிட்டனர்.
முதலில் பெரிய பனை ஓலைகளாக தெரிவு செய்து பனை மரத்திலிருந்து மட்டையைத் தவிர்த்து ஓலையாகவே கழித்து எடுப்பார்கள். காலையிலேயே வெட்டிய ஓலையினை மாலை வரை வாட விடுவார்கள். மாலை வேளையானதும் ஓலையினைச் சுருக்கு பிடித்து வைத்துவிடுவார்கள். பின்னர் தடுக்கு செய்ய ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு இலக்காக கிழித்து நீர் தெளித்து கட்டி வைத்துவிடுவார்கள். மறுநாள் காலை 3 மணிக்கு பெண்கள் எந்து தடுக்கு தைப்பார்கள். ஒரு சம்பு செய்ய 7 தடுக்குகள் ஆகும். அப்படி, ஒரு நாளைக்கு சுமார் 20 தடுக்குகள் வரை பெண்கள் செய்வார்கள். தடுக்குகளை மூரி வைத்து தைப்பார்கள். ஈர்க்கிலோடு இணைந்திருக்கும் பகுதியினை ஆண் மூரி என்றும் ஈர்க்கில் இல்லாத எதிர்பகுதியை பெண் மூரி எனவும் குறிப்பிடுவார்கள்.
பனை ஓலை பொருட்களைச் செய்யும்போது பிற தாவரங்களின் பொருட்கள் உள்நுழைவது ஒரு முக்கியமான இணைவாக இருக்கிறது. அது எவ்விதமான தாவரங்கள் அப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றன என்பதன் அடையாளம் ஆகும். சம்பு செய்கையில் ஈச்சங் கசங்கினை பயன்படுத்துவதைப் பார்த்தேன். கசஙு என்ற வார்த்தை ஓலைகளை நீக்கிய ஈச்ச மட்டையினை குறிப்பிடும் வார்க்ட்தையாக இருக்கிறது. இவ்விதமாக சேகரிக்கப்பட்ட ஈச்சங் கசங்குகளை இரண்டாக கிழித்து பக்குவமாக காயவைத்து சேமித்து வைத்துக்கொள்ளுவார்கள். இவைகளை தேவையான நேரத்தில் எடுத்து நீரில் ஊறபோட்டு மீண்டும் இரண்டாக கிழித்து விடுவார்கள். இவைகளில் நீளமாக வருகிற கசங்கினை மடிச்சி போடுற கசங்கு என்றும், குட்டையாக வருகிற கசங்கை ஒடிச்சி போடுற கசங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அகணி (பனை மட்டையின் உட்புறமிருக்கும் நார்) நாரை கிழித்து கோணி ஊசியில் நுழையும் அளவிற்கு மெல்லியதாக எடுத்து அதனைத் தைப்பார்கள். அகணியில் பிரித்தெடுக்கும் நாரினை சரடு என்றே குறிப்பிடுகிறார்கள். தடுக்கையும் கசங்கையும் இணைத்து கட்டுவதற்காக அகணி சரடு பயன்படும். கோணி ஊசியில் சரடை கோர்த்து தைப்பார்கள். அந்த தையலுக்கு ஒரு முடிப்பு இருக்கும். ஒரு கசங்கிற்கு நாலு தையல் என்ற வீதம் உறுதியாக சம்புவினை கட்டி முடிப்பார்கள்.
கொண்டைப்பகுதி செய்கையில் ஒருவரால் கட்ட இயலாது. பொதுவாக ஆணும் பெண்ணும் இணைந்தே கட்டுவார்கள். இவ்விதமாக குடும்பமாக இணைந்து செய்யும் பனை பொருட்கள் தமிழகத்தில் இன்றுவரை இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், சங்க இலக்கியங்களில் காணப்பட்ட முறம் கூட இன்று குடும்பமாக ஆணும் பெண்ணுமாக இணைந்து செய்யும் ஒரு வடிவம் தான்.
சம்புவினை வீட்டில் தட்டியாகவும், கூரை வேய்கையில் அடித்தளமாகவும், இரவு காவலிருப்பவர்களுக்கான கூடாரமாகவும், பனி, மழை போன்றவைகளிருந்து காத்துக்கொள்ள பயன்படுத்திவந்திருக்கிறார்கள். கிணற்றில் நீர் இறைக்கும் மோட்டார் மீது கவிழ்த்து வைக்கவும் கூட இது பயன்பட்டிருக்கிறது. நவீன காலத்தில் இப்பொருளுக்கு ஏற்பட்ட அழிவு, நமது வாழ்விலிருந்த்து சில கலைஞர்களை அப்புறப்படுத்தியிருக்கிறது என்பது உறுதி.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சம்புவிற்கு ஒத்த ஒரு பொருள் குமரி மாவட்டத்தில் உண்டு என தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அதன் பெயர் காமணம். காமணம் குறித்து நான் அனேகரிடம் கேட்டும் என்னால் அது குறித்து மேலதிக தகவல்களை சேகரிக்க இயலவில்லை. இப்படியிருக்கையில் ஜெயமோகன் அவர்கள் சமீபத்தில் “ஆமை” என்று ஒரு கதை எழுதினார்கள். அதில் புலையர் பெண் ஒருத்தி கொரம்பை என்கிற என்கிற பனை ஓலை மழையணிக்குள் ஆமைபோல வாழ்ந்து மறைந்த கதை அவர்கள் வழிமரபினரால் நினைவுகூறப்படும் வகையில் எழுதியிருந்தார். இக்கதையில் காணப்படும் விவரணையின்படி “தலையிலே மாட்டிக்கிட்டா தோளும் முதுகும் உள்ள மறைக்கிற மாதிரி இருக்கும். குனிஞ்சுகிட்ட கூரை மாதிரி நம்ம உடம்புமேலே நிக்கும். ஆமையோடு மாதிரின்னு வைங்க.” மேலும் “நல்ல கொரம்பை ஒரு பெரிய சொத்து… அதுக்க இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தா அடியிலே புதிய ஓலையை கோத்து செரியாக்கிடுவாங்க. அப்படி சரிபண்ணிட்டே இருக்கணும். மேலே உள்ள ஓலை காலப்போக்கிலே கருகி மட்கிபோகும். அப்ப அடியிலே உள்ள ஓலை மேலே வரும். வெயிலுள்ள காலத்திலே தேன்மெழுகு எடுத்து அரக்கும்சேத்து உருக்கி மேலே பூசிவைச்சா பல ஆண்டுகள் அப்படியே இருக்கும்”.
இவ்விதமான பொருட்களின் படமோ அல்லது நினைவுகளோ என்னால் இன்றுவரை சேகரிக்க இயலவிலை. எப்படியும் இவைகள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்திருக்கும். கடந்த 100 ஆண்டுகளுக்குள் சமூகத்தட்டில் மிகவும் கீழ்நிலையில் இருந்ததாலோ என்னவோ, வயல் வேலைச் செய்யும் புலையர்கள் வாழ்வில் காணப்பட்ட இந்த பொருளினை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லைப் போலும். பனைக்கென இப்போதும் ஓரியக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்காவிட்டால், பனையின் நிலையும் இவ்விதம் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கும்.
குமரி மாவட்டத்தில் உள்ள பெரியவர்கள் பலரைக் கேட்டும் இது குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எனக்கு மிகவும் அறிமுகமான பனை ஓலைக் கலைஞரான குமரி மாவட்டத்தின் மொட்டவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களிடம் விசாரிக்கையில் அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு அதன் பெயர் கொங்காணி என்றார். நான் அயர்ந்துவிட்டேன். எத்தனைப் பெயர்கள்தான் இந்த மழையணிக்கு?
சம்பு என்ற தாவரத்திலும் இது போல் மழையணி செய்திருப்பார்களோ? அல்லது கோரை புல்லில் இதற்கு இணையான மழையணி செய்திருப்பதால் கொரம்பை என பெயரிடப்பட்டதா தெரியவில்லை.
இணையத்திலிருந்து ஒருசில படங்கள் கிடைத்தன. சம்புவைப்போன்ற எதோ ஒரு மழையணி அணிந்திருக்கும் படங்களை இடையர் சிலைகள் என்றே குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியானால் வயல் வேலைகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல, இடையர்களது வாழ்விலும் சம்புவின் இடம் முக்கியத்துவம் பெறலாகின்றது. அதனை நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், பனை சார்ந்து கொடாப்பு எனும் பிரம்மாண்ட அமைப்பை ஆட்டு குட்டிகளில் பாதுகாப்பிற்காக செய்கிறவர்கள் இடையர்கள். சமீப காலமாக பனை மரக்கள் குறித்து சங்க இலக்கியம் கூறுவது என்ன என்று தேடுகிற ஒரு கூட்டம் எழும்பியிருக்கிறது. உண்மையிலேயே பனை சார்ந்த பொருட்களின் புழக்கத்தை தேடி கண்டுபிடித்தால் அது சங்க இலக்கிய வாழ்வில் நமது பனை சார்ந்த அறிதல்கள் குறித்து மேலதிக தகவல்களைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

மழையணி என்ற இந்த பொருள் எனது வாழ்வில் நான் மீட்டெடுக்கவேண்டிய தமிழர்களின் முக்கிய அடையாளமாக இருப்பதாகவே நான் உணருகிறேன் ஆகவே இதன் தேடுதலை எனது கைக்கு எட்டிய சம்பு மூலமாக துவங்குகிறேன்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)
ஆரே பால் குடியிருப்பு
பகிரி: 9080250653
மின்னஞ்சல்: malargodson@gmail.com
You must be logged in to post a comment.