பின்னல்கள் – 10


தோண்டி

தமிழகத்தில் புழங்கிய பனை ஓலை பொருட்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகம் என்றே கருதுகிறேன். ஆகவே தான் அது தமிழகத்தை தன்னிகரற்ற ஒரு நிலப்பரப்பாக பனையோடு இணைத்திருக்கிறது. வேறு எங்கும் காணமுடியாத பொருட்கள் இங்கு இருப்பதோடல்லாமல், பல்வேறு நாடுகளுக்கு பொதுமையான பனை ஓலைப் பொருட்களும் இங்கு இருப்பது அதிசயம் அல்ல, ஏனெனில் இது பனை கலைகளின் தாய்வீடு. 

நீர் நிறைந்த பனை ஓலைத் தோண்டி

மிக சிறிய வயதில் பனை ஓலையில் செய்யப்பட்ட எண்ணற்ற பொருட்குவியலுக்குள் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் அவைகளின் பெயர்கள் அவ்வயதில் எனக்குத் தெரியாது. அவைகள் எப்படி இருக்கும் என விவரித்தே அதனை நான் அடையாளப்படுத்திக்கொள்ள  வேண்டும். அவ்வகையில்  எனது சிறு பிராயத்தில் நான் ஆச்சரியமாக பார்த்த ஒரு பொருள் இன்றும் என் மனதில் நீங்கா நினைவுகளோடு இருக்கிறது. அதற்கு காரணம் என்ன? பல்வேறு  காரணங்கள் இருந்தாலும்,  திருமறைக்கும் எனக்கும் உள்ள உறவுதான் பனைமரத்துடன் இணைந்த தோண்டியை நான் நினைவுகூறச் செய்யும் ஒன்றாக இருந்திருக்கின்றது.

திருவிதாங்கூர் பகுதியில் கிணற்றில் நீர் இறைக்க தோண்டியை எடுத்துச் செல்லும் பெண்மணி. சுமார் 150 வருடங்கள் முன்பு

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டம் போதகர் இல்லத்தின் பின்புறம் இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் பனை ஓலையில் செய்த அழகிய தோண்டியை வைத்திருப்பார்கள். அப்படியில்லாதிருந்தால் கமுகுப் பாளையில் செய்த நீர் இறைக்கும் வாளியை வைத்திருப்பார்கள். இந்த தோண்டி ஒருசில வார காலமோ ஒரு மாத காலமோ பயன்பாட்டில் இருக்கும். பயன்படுத்துகிறவர்களின் கைப்பக்குவம் சார்ந்து அதன் வாழ்நாள் நீடிக்கும்.

ஒரு முறை  அந்த கிணற்றில் உள்ள தண்ணீர் கெட்டுப்போனது. கொசுக்கள் முட்டையிட்டு அதில் கூத்தாடிப்புழுக்கள் நிரம்பவே அந்த கிணற்றை இறைத்து சுத்தம்பண்ணினர். அந்த நிகழ்வின் இறுதியிலே ஒரு சடங்கு நடந்தது. புதிய நீர் ஊறி வருகின்ற தருணத்தில் எங்கள் கோவில்பிள்ளை அவர்கள் ஓர் பனை ஓலைத் தோண்டியில் உப்பும் புளியும் வைத்து அதை கிணற்றுக்குள் இறக்கினர். நான் இது எதற்கு என்றபோது கிணற்று நீரை சுத்தம் செய்ய என்று அப்பா சொன்னார்கள். அந்த வேளையில் எனது அக்காக்களில் யாரோ ஒருவர் “எலிசா” தீர்க்கதரிசி செய்தது போல என சொல்லக்கேட்டேன்.

திருமறையில் எலிசா எனும் ஒரு இறைவாக்குரைப்பவர் குறித்து (தீர்க்கதரிசி) விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் எலியா தீர்க்கதரிசியின் உடன் இருந்தவர். எலியா தீர்க்கதரிசியிடம் இருந்து இரட்டிப்பான வரம் பெற்றவர். அதாவது எலியா செய்த வல்லசெயல்கள் போல இரட்டிப்பான அதிசயங்கள் செய்யும் வரம் பெற்றவர் இவர். தோண்டியைக் குறித்து திருமறையில் சொல்லப்பட்டிருக்கும் பகுதி எனது சிறு வயதின் அனுபவத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றுணர்ந்தேன்.

“பின்பு அந்த பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது. நிலமும் பாழ்நிலம் என்றார்கள். அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,  அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்த தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்”. (2 ராஜாக்கள் 2: 19 – 21)

சாமித்தோப்பு கிணற்றடியில்

திருமறையில் காணப்படுகின்ற தோண்டி என்ற வார்த்தை இவ்விதமாகத்தான் என் மனதில் நிலைபெற்றது. தமிழ் திருமறையில் ஒரு வார்த்தை காணப்படும்போது அது யூத கலாச்சாரத்தில் இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நமது புரிதலுக்காகத்தான் மொழிப்பெயர்ப்பே செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே தோண்டி என்கிற அந்த வார்த்தை நமது கலாச்சாரத்தில் வெகுவாக புழங்கியிருக்கவேண்டும், இல்லையென்றால் இவ்வார்த்தை புழங்கிய இடங்களிலிருந்து மொழிபெயர்பாளர்கள் இதனை எடுத்தாண்டிருக்கும்  வாய்ப்புமிருக்கிறது. பனை மரங்கள் நிறைந்த இடையன்குடி  பகுதிகளில் ஊழியம் செய்த பேராயர் கால்டுவெல் அவர்களும் திருமறை மொழிபெயர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் எனப்தை நாம் அறிவோம்.

தோண்டி என்பது “தோண்டு”தல் என்ற வேர் சொல்லிலிருந்து பிறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அகழ்தல் என்ற வார்த்தைக்கு நிகராக தோண்டுதல் என்ற வார்த்தை பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. தோண்டி துருவி, தோண்டி துழாவி போன்ற சொற்றொடர்கள் வழக்கத்தில் இன்றும் இருக்கின்றன. நீரை அகழ்ந்து எடுக்க பயன்பட்டிருக்கும் பொருளாயிருப்பதால் தோண்டி என பெயர் பெற்றதா?  அல்லது மண்ணை அகழ்ந்து எடுத்த கிணற்றிலிருந்து நீர் எடுக்க பயன்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதா?

இதற்கு எதிரான ஒரு நிலைப்பாடும் நமது மரபில் இருந்திருக்கிறது…

நந்தவனத்தில் ஒரு ஆண்டி -அவன்

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தா னொரு தோண்டி – அதை

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

“நல்ல வழிதனை நாடு- எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”

– கடுவெளி சித்தர்

இவ்வகையில் தோண்டி குயவர்கள் செய்யும் மண்பாண்டம் எனவும் நாம் அறிய  முடிகிறது. நீர் மொள்ளும் தேவையினை கருத்தில் கொண்டு அனைத்து உலோக பொருட்களிலும் தோண்டி வடிவெடுத்திருக்கிறது. இங்கே கடுவெளி சித்தர் அதனை உயிர் உருவெடுத்த உடலுடன் இணைத்துச் சொல்லுகிறார்.

பனை ஓலை தோண்டி என்பது ஓலை பட்டையின் செவ்வியல் வடிவம் தான். ஈராயிரம் முதல் மூவாயிரம் ஆண்டு தொன்மையான வடிவாக இது இருக்கலாம் என நான் அனுமானிக்கிறேன். அதற்கு காரணம் சாதாரண பட்டையிலிருந்து வித்தியாசப்பட்டு  வடிவ நேற்த்தி அடைந்திருக்கும்.  தோண்டியினை பார்ப்பதற்கு பரதநாட்டிய உடையைப்போல மடிப்புகளுடன் கவர்ந்திழுக்கும் அழகுடன் கச்சிதமாக இருக்கும். மடிப்பு குலையாதபடி இவ்விதமாக ஒரு தோண்டியினைச் செய்வது எளிதான காரியம் அல்ல. பனைபொருள்  அல்லாத கம்பு, மற்றும் தென்னை ஓலைப் பண்டி ஆகியவற்றை இணைத்தே இதனைச் செய்வதால் மிக முக்கிய கவனத்தைக்கோரும் ஒன்றாக இது இருப்பதில் ஐயமில்லை. பனை எவ்விதம் பிற தாவரங்களுடன் இணைவு கொள்கிறது என்பதற்கு இது அடையாளமாக இருக்கிறது.

நாகர்கோவில் அப்டா சந்தைக்கு தான் செய்த பனை ஓலை தோண்டியினை விற்பனைக்கு கொண்டு வந்த கலைஞர்.

குமரிமாவட்டத்திலுள்ள அய்யாவழி சமயத்தவர்,  பூவண்டர் தோட்டத்திலே வந்து அங்கிருக்கும் நாமக் கிணற்றில் குளிப்பார்கள். அந்த கிணற்றில் குளிப்பவர்கள் பெரும்பாலும் இன்றுவரை பனை ஓலையில் செய்த தோண்டியினைக் கொண்டே நீர் இறைத்து குளிப்பார்கள். பதியில் சென்று வணங்குமுன் இக்குளியல் மிக முக்கியமான ஒன்றாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வற்றாத அந்த கிணற்றில் குளிப்பதற்கு என்று பனை ஓலை தோண்டியில் செய்யப்பட்ட வாளியைத்தான் பயன்படுத்துவார்கள்.  ஆகவே பனை ஓலைத் தோண்டியினை விற்பனை செய்வதற்கென்றே ஒரு கடை அங்கே இருக்கும். இன்றும் தோண்டி தமிழகத்தில் எஞ்சி இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அய்யாவழி பதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சடங்கு ஒரு முக்கிய காரணம்.

விற்பனைக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் பனையோலை தோண்டி

அப்படியே, திருமண வீடுகளுக்கு வாங்கும் பனை ஓலைபொருட்களிலும் கண்டிப்பாக தோண்டி இருக்கும். அனைத்து சமையல்காரர்களும் தோண்டியினை குறிப்பிட தவறுவதில்லை. குறிப்பாக சாம்பார் கோரி எடுப்பதற்கும், அரிசியில் நிற்கும் தண்ணீரை கோரி மாற்றுவதற்கும் தோண்டியினை  பயன்படுத்துவார்கள். மேலும் அடுப்பில் இருக்கும் வார்ப்பை கீழிறக்காமல் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யவும் தோண்டி தான் பயன்படும். சூடு நிறைந்த பாத்திரத்தில் தோண்டி பயன்படுத்தி பதார்த்தங்களை எடுக்கும்போது அது  எடை அற்றதாகவும் சூட்டைக் கடத்தாததாகவும் இருப்பதால் சமையல்காரர்கள் இன்றளவும் இதனை பயன்படுத்திவருகிறார்கள். கூடுதலாக ஓலையின் சுவை உணவில் ஊடுருவி தனித்துவ வாசனையினை உணவிற்கு கொடுக்கும். சமையல்காரர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்தவில்லையென்று சொன்னால் இதன் உற்பத்தி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லாமலே போயிருந்திருக்கும். 

தோண்டி பிடிக்கும் முறை

பனை ஓலையில் தோண்டி செய்வது பெரும்பாலும் தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தாம். பொதுவாக வீட்டிற்கு தேவையான தோண்டி என்றால், அவைகள் குறித்த குறிப்புகள் பனையேறியிடம் சொல்லப்படும். எத்தனை ஈக்குகள் நிறைந்த சிறகு வேண்டும் எனக் குறிப்பிடுவார்கள். இரண்டாம் குருத்து அல்லது மூன்றாம் குருத்து போன்றவைகளையே தோண்டி செய்வதற்கு பெரும்பாலும் தெரிந்துகொள்ளுவார்கள். பனையேறிகள், தேவையான ஓலையினை தெரிவுசெய்து பனையிலிருந்தே கிழித்து, அதனை தங்கள் அரிவாள் பெட்டியில் எடுத்து பத்திரமாக இறக்குவார்கள். ஏனெனில் பனை ஓலை கிழிந்துவிட்டால் தோண்டி செய்ய இயலாது. கொண்டு வந்த ஓலையினை நன்றாக வெயிலில் போட்டு உலர வைப்பார்கள். உலர்ந்த ஓலையினை நீரில் முன்றுமணிநேரம் போட்டு அதன் பின்பே தேவையான வடிவில் எடுத்துக் “கோட்டு”வார்கள். பின்னல்கள் செய்யும் அறிவு ஏதும் இதற்கு தேவை இல்லை எனினும், தோண்டி செய்வோர் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்களே. எனது வாழ்க்கையிலேயே தோண்டி செய்யும் கலைஞர்கள் மூவரைத்தான் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் ஓலைக் கிழிந்துபோனால்  ஊசியைக்கொண்டு தென்னை குருத்தோலைப் “பண்டி”யினை எடுத்து ஓலையினை தைக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.

தோண்டி நேர்த்தியான வடிவம் பெறுகின்றது

பனை ஓலைகளை தெரிந்து எடுப்பது முதல் அனைத்தும் கவனமாக செய்யவேண்டும். தோண்டி செய்து முடித்தபின்பு கூட சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அதற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகவே இவைகளை ஒன்றிணைத்து ஒரே சரடில் கட்டி, ஒற்றை சுமடாக்கி எடுத்துச் செல்லுவார்கள். பூமாலை கட்டுவதுபோல அவைகளைக் கட்டி தோரணமாகவோ அல்லது தொங்லாகவோ விற்பனைக்கு போட்டுவைப்பார்கள்.  இன்று கிடைக்கும் தோண்டிகள் சுமார் 3 முதல் 5 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்டவைகளாக இருக்கின்றன.

பனை ஓலை தோண்டியினை பெரும்பாலும் சந்தைக்குச் செல்லும் தாய்மார்கள் மீன் வாங்கிவர பயன்படுத்துவார்கள். மீன் காய்கறி போன்ற உணவுபொருட்கள் முதன்மையாக தோண்டியில் இருக்கும். இவ்விதமான பொருட்களின் பயன்பாடுகள் இன்று நம்மை விட்டு காணாமல் போன பின்பு, அவ்விடத்தை பிளாஸ்டிக் எடுத்துக்கொண்டது. வரும் நாட்களில் இவைகளை நாம் மீட்டுக்கொண்டுவர முயற்சிப்பது நெகிழிக்கு எதிரான ஒரு போராட்ட வடிவாக இருக்கும்.  

பனை ஓலைபொருட்களில் தனித்துவமானதும் ஆசிய நாடுகளில் முழு வீச்சுடன்  விரிவடைந்திருப்பதுமான பனை ஓலைத் தோண்டி என்பது  விரிவாக ஆராய்ச்சிக்குட்படுத்தவேண்டிய ஒரு பொருளாகும். ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் பனை ஓலையில் செய்யப்படும் தோண்டியை ஒத்த ஒரு பொருள் இசைக்கருவியாக மாறியிருக்கிறது…ஜலதரங்கம் போல இசைஎழுப்பும் இந்த கருவியினை சசண்டோ என்று அழைக்கிறார்கள். தோண்டி செய்வோர் இன்றுவரை அதற்கான அங்கீகாரம் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.

மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட தோண்டி

பனை ஓலையின் பொருட்களில் வழக்கொழிந்து போகும் நிலையில் உள்ள பொருட்கள் ஏராளம் உண்டு. அவைகளில் தோண்டி மிக முக்கியமான ஒன்று. கடைகளில் கிடைக்கும் தோண்டி அதன் ஆகச்சிறந்த அழகுடன் செய்யப்படுவதில்லை என்ற குறைபாட்டினை தோண்டி செய்வோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழகத்திலேயே தென் மாவட்டங்களைத் தவிர்த்து, தோண்டி செய்யும் வழக்கம் இருக்கிறதா என்கிற கேள்வி எஞ்சியிருக்கிறது. என்றாலும், இலங்கையிலும், ஆந்திராவிலும் மராட்டியத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது இருப்பதாக அறிகிறேன்.

தாய்லாந்தில் தோண்டி பிடிக்கும் மனிதர்

குமரி மாவட்டத்தில் தோண்டி என குறிப்பிடும் இதனை, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் தோண்டி பாட்டை எனவோ அல்லது வெறுமனே “பட்டை” எனவோ அழைப்பது வழக்கம். இலங்கையிலும் இதனை பட்டை என்றே அழைக்கிறார்கள். மராட்டியத்தில் இதனை துரோண் என்றும், ஆந்திராவில் உள்ள கோயா பழங்குடியினர் இதனை துரோணா என்று குறிப்பிடுவதாக அறிந்தேன். இவைகளை உறுதிப்படுத்தும்போது மேலதிக தகவல்கள் நமக்கு கிடைக்கும். தாய் மொழியில்  திமாபைஜக் (ติหมาใบจาก) எனவும் தெலுங்கில் தாட்டி சேதா எனவும் வழங்கப்படுகின்றது

தாய்லாந்தில் கினாற்றிலிருந்து நீர் இறைக்க தோண்டி பயன்படுத்தப்படுகிறது

கம்போடியா இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் இவ்விதமான தோண்டிகள் பனையேறிகளுக்கு மிக முக்கிய பயன்பாட்டு பொருளாக இன்றளவும் இருக்கிறது. ஆசியா என்னும் நிலபரப்பில் இவ்விதம் ஒரு பொருள் பரந்து விரிந்து இருக்குமென்றால், அதன் வரலாற்று பின்புலம் ஆராயத்தக்கது. தமிழகத்தின் ஒரு சில பகுதியில் காணப்படாத தோண்டி எப்படி ஆசியா முழுக்க வியாபித்திருக்கிறது என்கிற கேள்வி பல வரலாற்று உண்மைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு வரலாற்று ஆவணம். 

தோண்டியோடு பனை ஏறும் இத்தோனேசிய பனையேறி

பனை ஓலை தோண்டி செய்கிறவர்கள் இன்றும் குமரி மாவட்டத்தில் உண்டு. ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது சுலபம் அல்ல. பனை ஏறுகிறவர்களோ அல்லது பனை சார்ந்த வாழ்வு கொண்டுள்ளவர்களோ தோண்டி செய்வார்கள் என்பது உண்மைதான் என்றாலும், எல்லாரும் தங்களுக்கு தோண்டி செய்யத் தெரியும் என பறையடித்து திரிவதில்லை.  தெரியும் என்றால் கூட அதனை ஒரு தகுதியாக பொதுவெளியில் கூற இயலாதபடி சூழ்நிலை மக்களைப் பிரித்து வைத்திருக்கிறது.

எனது மனைவி ஜாஸ்மின் அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தான் திரு சகாயம்  அவர்கள் இருக்கிறார்கள். ஜாஸ்மினுடைய பெரியப்பா தான் அவர். கிட்டத்தட்ட 10 வருட திருமண வாழ்வில் ஒருபோதும் அவரைக் குறித்து நான் கேள்விப்பட்டதே இல்லை. பல திருமண வீடுகளில் நாங்கள் எதிர்பட்டிருப்போம் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்திருப்போம். ஜாஸ்மினிடம் ஒருநாள் தோண்டி செய்கிறவர்கள் நமது ஊரில் உண்டா என கேட்டபோது அவள் விசாரித்து பெரியப்பா செய்வார்கள் என கூறிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

திரு சகாயம் அவர்கள் குமரிமாவட்டம் கருங்கல் என்ற ஊரை அடுத்த தேவிகோடு பகுதியில் வாழ்கிறவர். சற்றே கூச்சத்துடன் தான் தனக்கு தோண்டி செய்யத் தெரியும் என ஒத்துக்கொண்டார்.  அவரது தந்தையார் தோண்டி செய்வதை கண்ணால் பார்த்து இதனைச் செய்ய கற்றுக்கொண்டதாக என்னிடம் தெரிவித்தார். சுமார் 70 வயது மதிக்கத்தக்க இவருக்கு பனை ஏறத் தெரியாது.  இவரது சிறு பிராயத்தில் தான் பனை சார்ந்த தொழில்கள் உச்ச கட்டத்தில் இருந்து சரிவு நோக்கி வந்தது. குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் பனை சார்ந்து ஒரு விலகலை கடைப்பிடிக்கும் காலகட்டம் எழுந்தபோது தனது ஐந்து குழந்தைகளையும் பனை சாராத தொழில்களுக்கு மாற்றி விட்டார்.

காய்ந்த பனை ஓலையினை ஊறப்போட வேண்டும் பின்னர் அது பதமான பின்பு அதனை சரியான முறையில் மடித்து தோண்டிப் பட்டையைப் பிடிக்கவேண்டும் என்றார். பல ஆண்டுகளுக்குப் பின்பு அவர் தோண்டியினை செய்வதை நான் பார்த்தாலும் அவர் நேர்த்தியாக என் கண்களின் முன்னால் அதனை உருபெறச் செய்தார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு அவர் தோண்டியினைச் செய்தாலும் எவ்வகையிலும் அவர் அக்கலையினை மறந்துவிடவில்லை.

நீர் இறைக்கும் தேவைகள் இன்று குறைந்துவிட்டன. மற்றும் பல்வேறு விதங்களில் நீர் இன்று நம்மை வந்து அடைந்துவிட்டன.  இக்கால சுழலில் இதன் தேவை தான் என்ன என்று பலரும் நினைக்கலாம். பனை ஓலைத் தோண்டி இன்று உணவகங்களில் உணவை கொடுக்க உதவும் ஒன்றாக இருக்கும். அப்படியே பூக்களை அலங்கரிக்க இதனை பயன்படுத்தலாம். தமிழகம் என்று மாத்திரம் அல்ல இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஒரு சிறப்பான புது முயற்சிக்கு அழிந்துவரும் தோண்டி வேலைவாய்ப்பினை பெருக்க வாய்ப்பளிக்கும் ஒரு அட்சய பாத்திரம் என்றால் அது மிகையாகாது.

பண்டி: தென்னை / பனை ஓலைகளின் ஓரப்பகுதி

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: