பனை இரயில்
இரயில் காலை 9.30 மணிக்கு புறப்பட இருந்தாலும் சீக்கிரமாக வந்துவிட்டோம். இரயில் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. இரயிலுக்குள் ஏறிய பின்பு தான் காலை உணவு. உணவுகளை எடுத்து வந்த பெரிய ஓலை பை ஜாஸ்மின் செய்தது. இளவரசி கற்றுக்கொடுக்க ஜாஸ்மின் மட்டுமல்ல திருச்சபையின் பல குழந்தைகள் பனையோலைப் பொருட்களை செய்து பழகினர். இவ்விதமான பின்னல்கள் பொறுமையாக செய்யவேண்டியது ஆகும். ஒரே விதமான பின்னல்களை மீண்டும் மீண்டும் செய்வது பெருமளவில் சலிப்பூட்டக்கூடியதாக இருந்தாலும், நுணுக்கங்களை தேடி கண்டடைவோருக்கு, அதில் கூடி வரும் நேர்த்தி அளிக்கும் பரவசம் அளவில்லாதது. இளவரசி அவ்வகையில் திறன்மிக்கவளும் பொறுமைசாலியும் கூட. பனை ஓலையை தொடமாட்டேன் என்ற ஜாஸ்மின், மெல்ல ஓலையின் பால் தனது கவனத்தை திரும்பியதற்கு இளவரசியின் பயிற்றுவிக்கும் திறன் ஒரு முக்கிய காரணம்.

இரயிலில் அமர்ந்தவுடன் எனது தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி அங்கிருந்த கொக்கியில் தொங்க விட்டேன். உணவு கூடைகளை ஓரிடத்தில் வைத்தேன். நான் எங்கும் எடுத்துச் செல்லும் பனை ஓலையால் செய்யப்பட்ட திருமறை பையினையும் தொங்கவிட்டேன். ஒவ்வொன்றும் அதற்கான இடத்தைப் பெற்றபோது அழகாகவே இருந்தன. இவ்விதமாக அடுக்கியபோது ஏன் இந்திய அளவில் பனை ஓலைகளாலான பொருட்களை சேகரித்து அவைகளை ஒரு இரயில் கண்காட்சியாக வைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. எவரோ வைப்பது என்ன நானே எனக்கான இரயில் கண்காட்சியை அமைக்கிறேன் என்று எண்ணியபடி என்னிடமிருந்த ஓலைப் பொருட்களை இரயிலில் ஆங்காங்கே வைத்து நிறைவு கொண்டேன்.

இளவரசி எனக்கு செய்து கொடுத்திருந்த தொப்பி மிக அழகானது. முதன் முறையாக நான் அதனை கண்டபோது வாரி அனைத்துக்கொண்டேன். அது எனது வாழ்வின் அங்கமாகிப்போகும் என அப்போது நான் சற்றும் நினைத்திருக்கவில்லை. முகம்மது என்னை பல கோணங்களில் இந்த தொப்பியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறான். அதில் ஒன்றை நான் முகநூலில் பகிர்ந்தபோது எனது சித்தப்பா “வேடிக்கையாக இருக்கிறது” என்று பதிவிட்டார்கள். எனக்கு இரத்தம் தேவையில்லாமல் கொதித்தாலும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனது தொப்பியை குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதர் பார்த்தால் இது என்ன “கடவத்தை கமத்தி வெச்சிருக்கு” என்றே ஏளனமாக சொல்லி கடந்து செல்வார்கள். பார்ப்பதற்கு அகலமான பின்னல்களால் செய்யப்பட்டிருக்கும் இந்த எளிய தொப்பி குறித்த பின்னணியத்தை ஒருவர் அறிந்தால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.
பலர் கலந்துகொண்ட பனை ஓலைப் பயிற்சியில் இளவரசி இரண்டாம் நாள் தான் கலந்துகொண்டாள். ஆறு நாள் நடைபெற்ற அந்த பயிற்சியில், பிறரை விட சிறப்பாக கற்று தேறினாள். ஓலையின் மீது அவளுக்கு ஒரு தனி ஈடுபாடு வந்தமைந்தது. பனை ஓலை அவளை தன்னுள் இழுத்துக்கொண்டதா இல்லை, திறமையே உருவான அவள் பனை ஓலையில் தனது கலை வாழ்வைக் கண்டடைந்தாளோ தெரியவில்லை. சொந்தமாக தனக்கென ஒரு செல்பேசி இல்லாதவள், தனது தந்தை வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து அவரது செல்பேசியை வாங்கி, அதில் காணப்படும் பல்வேறு பனையோலை பொருட்களை பிரதியெடுக்க ஆரம்பித்தாள்.
அப்படித்தான் ஒருநாள் அழகிய காலணி ஒன்றைச் செய்து காண்பித்தாள். மிகவும் அழகாக இருந்த அந்த காலணி எனக்கு பிடித்துப்போயிற்று. பனையோலையிலேயும் பனம் பத்தையிலேயும் காலணி போட்டு செல்லவேண்டும் என்பது எனது வெகுநாளைய விருப்பம். முற்காலங்களில் பனை ஓலையிலேயே எளிய மனிதர்கள் காலணிகளை செய்து புழங்கியிருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கூட எனது சகோதரி அவ்விதமான காலணிகளை மார்த்தண்டம் சந்தைக்கு பொருட்களை சுமந்துவரும் எளிய மனிதர்கள் போட்டிருப்பதை தான் பார்த்ததாக நினைவுகூர்ந்திருக்கிறார்கள். இவ்வித காலணிகள் நிமிடத்தில் செய்யகூடியது. ஒருநாள் பயணத்திற்கானது. அது போலவே முட்காடுகளில் இருந்து தங்கள் கால்களைப் பாதுகாக்க பனையேறிகள் இவ்விதமான பனை ஓலை செருப்பு செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காடு என்ற பகுதியில் தங்கியிருக்கையில், எங்கள் வீட்டின் அருகில் அருணாச்சலம் எனும் பெரியவர் எனக்கு அவ்விதமான ஒரு செருப்பை செய்து கொடுத்தார். அந்த செருப்பை போட்டுக்கொண்டு நாகர்கோவில் வரை போய் வந்தேன். அதைக் குறித்து இந்துவில் நான் எழுதியபோது, தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இவ்வித செருப்பு கிடைக்குமா என்று ஒரு சித்த மருத்துவர் என்னை தொடர்புகொண்டு கேட்டார். நமது வாழ்க்கையில் நாம் இழந்தைவகளுள் அனேகம் நமது வறட்டு கவுரவத்தால் தான். பிறர் நம்மைக்குறித்து என்ன நினைப்பார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் இழந்தைவைகள் அதிகம். பனை சார்ந்த பொருட்கள், நமக்கு அதிக செலவு வைக்காதவைகள். சூழியலை மாசு படுத்தாதவைகள். ஒருவகையில், பனை சார்ந்த பொருட்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், அதன் மூலமாக தோல் பதனிடும் ஆலைகளின் பெருக்கத்தை வெகுவாக குறைத்திருக்கலாம். நமது நிலம் கெட்டுப்போயிருக்காது. எண்ணற்றோர், வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள்.
பாரம்பரியமாக இங்கே தயாரிக்கப்பட்ட பனையோலை செருப்பிற்கும் இளவரசி தயாரித்த செருப்பிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. தென் தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஓலைகள் பாய்போல சமதளமாக பின்னப்பட்டு பனை நார் கொண்டு வார் அமைக்கப்பட்டிருக்கும். இளவரசி செய்ததோ படகு போன்ற ஓர் வடிவம். தனியாக வார் தேவைப்படாமல் கால்களை பின்னல்களுக்குள் நுழைக்கும் ஒரு அமைப்பு. நாம் தற்காலங்களில் அணியும் கட் ஷூவை ஒத்திருந்தது. ஆகவே இது ஒரு இந்திய தயாரிப்பு போல் இல்லாதத்தால், எங்கிருந்து இதனைக் கற்றாய் எனக் கேட்டேன். அதற்கு அவள் ஒரு ருஷ்ய இணையதளத்தை காண்பித்தாள். அரண்டுபோனேன். அப்படியே ஓலைகளில் பின்னப்பட்ட அழகிய காலணிகள் செய்யப்பட்டிருப்பதைப் அந்த தளத்தில் பார்த்தேன். நம்பவே முடியவில்லை! ருஷ்யாவில் எப்படி ஓலைகள் கிடைக்கும்? ஆகவே எந்த இயற்கைப் பொருளைக் கொண்டு அதனை தயாரித்திருக்கிறார்கள் என தேட ஆரம்பித்தேன்.
ஐரோப்பாவின் வடக்கு பகுதிகளில் பாஸ்ட் (Bast) வகை காலணிகள் தயாரிக்கப்பட்டுவந்தன. இவைகள் டிலியா (Tilia) வகை மரங்களின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மரத்தின் வெளிப்புற பட்டையை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் பட்டைகளை உரிந்து இதனைச் செய்கிறார்கள். ருஷ்ய மொழியில் ஒரு ஜோடு என்பதை “லாப்டி” என்றும் ஒற்றைச் செருப்பை லாப்டோ என்றும் அழைக்கிறார்கள். இவைகள் ஏழைகளாலும் குடியானவர்களாலும் பயன்படுத்தப்பட்டதாலும், இதன் வாழ்நாள் குறுகியதாலும், பின்னாளில் வசை சொற்களாகவும் பயன்பட்டன. அது அப்படித்தான், உலகெங்கும் திறன் மிக்கவர்களை வசை சொற்களால் அழைப்பது என்பது மேட்டுக்குடித்தனம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலம் அது.

ஒவ்வொரு மனிதனும் இவ்வித காலணிகள் செய்ய கற்றிருப்பர். பெரும்பாலும் ஆண்களே இதனைச் செய்வர். பெண்கள் யாரேனும் செய்யக் கற்றிருந்தால் குடும்பத்தில் அவர்களுக்கு பெருத்த மரியாதை இருக்கும் என்பதாக கூறப்படுகின்றது. சிறுவர்கள் இவைகளை செய்ய கற்றுக்கொள்ளும்போது முதல் காலணியை நெருப்பில் சுட்டு அதன் சாம்பலை நீரில் கலக்கி அவர்களுக்கு குடிக்க கொடுப்பார்களாம். இவ்விதமாக செய்வது கற்பவரை மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர் ஆக்குகிறது. மேலும், பல்வேறு பழமொழிகள் ருஷ்ய வாழ்வில் கலணிகள் பின்னுவது மிகவும் எளிதான ஒன்று என்பதையே சுட்டி நிற்கின்றன.
பழைய காலணிகளை வேலியோரத்தில் தொங்கவிடும் வழக்கம் கூட அங்கே இருக்கிறது. அனைத்து தீய சக்திகளும் அண்டாமல் இருக்க இவ்விதம் செய்யும்வழக்கம் இருக்கிறது என அறிந்துகொண்டேன். இவ்விதம் செய்யும் காலணிகளை குப்பையில் போடமாட்டார்கள் என்பதே அவைகளை செய்வோர் அவைகளுக்கு அளிக்கும் மரியாதை என்பதாக உணர்ந்துகொள்ள முடிந்தது.
வரலாற்றிற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே இவ்வித செருப்புகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. குறிப்பாக இவ்வித காலணிகள் செய்யக்கூடிய பழைமையான மர அச்சு தொல்லியல் நிபுணர்களால் கண்டடையப்பட்டிருக்கிறது. சுமார் 4900 வருட பழைமையான இவ்வித அச்சு, பழங்காலத்தில் எப்படி இதனை பயன்படுத்தி காலணிகள் செய்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்க்த்டும். உலகம் முழுக்கவே தாவரங்கள் தான் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தவைகளாக இருந்திருக்கின்றன. குறிப்பாக வெறுங்கால்களை கொண்டு நடக்க சிரமமாக இருந்தபோது இவ்வித கண்டுபிடுப்புகள் எழுந்க்டிருக்கலாம். புதிய கற்காலத்தைச் சார்ந்த இவ்வித காலணிகளின் பயன்பாடு, தமிழகத்திலும், இந்திய நிலப்பரப்பிலும் இருந்திருக்கலாம் என்பதை தெளிவுற உணர்த்துகின்றன. பனையோடு கூடிய தொடர்புகள் நமக்கும் பனை ஓலை காலணிகள் பயன்பாட்டில் இருந்திருக்கும் என்பதை விளக்குவதாக அமைகிறது.
இவ்விதம் மரப்பட்டைகளில் செய்யும் செருப்புகளோடு அவர்கள் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் வேறு சில பொருட்களையும் தயாரித்து பயன்படுத்த துவங்கினர். அவைகளில் பொருட்களை முதுகில் சுமந்து செல்லும் பையும், தொப்பியும் மிக முக்கியமானவைகள். இளவரசி, அங்கிருந்து தான் இந்த தொப்பியைக் கண்டடைந்தாள்.

அது மாத்திரம் அல்ல இந்த தொப்பிக்கு வேறு ஒரு முக்கியத்துவம் கூட இருக்கிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் நாம் காணும் நான்கு முக்கு கொண்ட பெட்டி அல்ல இது. இதற்கு 12 முக்குகள் இருக்கின்றன. அதுவே இதனை சிறப்புக்குறிய ஒன்றாக முன்னிறுத்துகிறது. பனை ஓலைகளில் செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஒவ்வொரு சூத்திரம் கொண்டது. பெரும்பாலும் ஒன்றுபோல தென்பட்டாலும், இவைகளுக்குள் ஒரு சில மாறுதல்கள் காணப்படும். அது புதியவர்களுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அந்த திடீர் திருப்பங்களுக்கு புதியவர்கள் திகைத்து நின்றுவிடுவார்கள். ஆனால் பழகியவர்களுக்கு அது ஊட்டி மலைப்பாதை போல. ரசித்து ஓட்டலாம். இளவரசி எதைச் செய்தாலும் அது திகைப்பூட்டும் அளவிற்கு அழகுடனிருக்கும். எப்படி இதனைச் செய்தீர்கள் எனக் கேட்டால், “அது ஈசிதான் பாஸ்ட்ரைய்யா” என்பாள். ஆனால் முதல் முறையாக எனக்கு அவள் செய்து தந்த தொப்பியைக் காட்டி கேட்டபோது “கொஞ்சம் கஷ்டம்தான்…” என்றாள். இளவரசிக்கே சிரமமாக இருக்கிறதா என்று நினைத்துக்கொண்டேன்.
ஒருமுறை நான் ஒரிசா சென்றபோது அங்கிருந்த துறவிகள் வாழ்வில் பனையோலைகள் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததைக் காண முடிந்தது. ஒரு ஜாண் அளவேயுள்ள ஒரு சிறிய ஓலைப்பெட்டியில் கயிற்றினை நுழைத்து, அவர்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். சிறிய நீள்சதுரமான பெட்டி. அங்கிருந்த துறவிகளிடம் பழைமையான ஒரு பெட்டியை வாங்கி அதைப்போல செய்ய இயலுமா என குமரி மாவட்டத்திலுள்ள சில நண்பர்களைக் கேட்டேன். அனேகருக்கு தெரியவில்லை. இறுதியாக பல்வேறு வகைகளில் முடையும் திறன்கொண்ட பெண்கள் அமைப்பு ஒன்றைக் கண்டு அவர்களிடம் இதைப்போல் செய்துகொடுங்கள் எனக்கோரினேன். அவர்கள் பலவாறாக முடைந்து பார்த்துவிட்டு, இயலாது என கைவிரித்துவிட்டார்கள். ஏன் என நான் கேட்கவே “முக்கு எங்கே திருப்பவேண்டும் எனத் தெரியவில்லை” என்று தான் கூறினார்கள். அப்போதுதான் மொட்டைவிளை செல்லையா தாத்தாவைப் பார்த்தேன். எனது எம் எஸ் எல் 8537 புல்லட் வாகனத்திற்கு இருக்கையினைச் செய்து கொடுத்தவர் அவர். செய்துவிடலாம் என்றார். குமரி மாவட்டத்தில் இவ்விதமான ஒரு வடிவம் இதற்கு முன்பு இருந்ததில்லை. அவர் முயன்று இவ்விதமான ஒரு அழகிய துறவிப்பெட்டியினைச் செய்து கொடுத்தார். மீண்டும் ஒரு தருணத்தில், இது போல செய்ய சிரமப்பட்ட அதே பெண்களுக்கு இதனை எப்படி செய்ய வேண்டும் என சிறு கணக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் இலகுவில் பிடித்துக்கொண்டனர். அது அப்படித்தான், ஒவ்வொரு பொருளைச் செய்யவும் அதற்கான சூட்சுமம் இருக்கின்றது.
நான் பார்த்தவரையில் பெரும்பாலும் பாரம்பரிய பொருட்கள் செய்யும் எவருமே மூன்று பொருட்களுக்கு மேல் செய்வதில்லை. பல பொருட்கள் செய்யத் தெரிந்திருந்தாலும், ஒன்றிரண்டு பொருட்களுக்குள் அவர்கள் தயாரிப்பவை நின்றுவிடும். ஏனென்றால், வேகம் தாம் இதில் முக்கியம். குறைவான கூலி கிடைக்கையில், வேகமாக செய்து கொடுக்கும் பொருட்களால்தான் ஏதேனும் குறைந்தபட்ச சம்பாத்தியத்தை இவர்களுக்கு உறுதி செய்யும். மேற்கத்திய நாடுகளைப்போல் தனித்த வடிவமைப்புகளுக்கான மதிப்பு இங்கே கிடையாது. பனையோலைக் கலைஞர்களை ஏமாற்ற முடியுமா? அல்லது சுரண்டிக்கொழுக்க முடியுமா? என்று அலைகின்ற மக்களே அதிகம்.
ஆகவே தான் நான் பனை ஓலைப் பொருட்களை விற்பனை செய்வதை முன்னிறுத்தாமல், பனை சார்ந்த பயிற்சிகளை முன்னெடுக்கிறேன். பனையோலைப் பொருட்களைச் செய்கிறவர்கள், அதில் உறைந்திருக்கும் திறன் சார்ந்த “மதிப்பை” உணர்ந்தார்கள் என்றால், பனை ஓலைகளை விலைகொடுத்து வாங்கி காப்பாற்றும் செயலைவிட அதன் ஆழ்ந்த கலைதன்மையை அறிந்து பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விழைவார்கள்.
என்னிடமிருந்த ஒவ்வொரு பொருளையும் எடுத்து நான் இரயிலில் வைத்து அழகு பார்த்தேன். பனை இரயில் என்பது எப்படி இருக்கும்? என எனது கற்பனையை ஓட்ட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பனை ஓலை கைவினைஞர்களை தெரிவு செய்து அவர்களை இணைத்து எடுத்துச் செல்லும் ஒரு இந்திய பயணமாக அது இருக்கவேண்டும் என எண்ணினேன். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்கள் செய்யும் பாரம்பரிய பொருட்களை வைக்கும் வகையில் ஒவ்வொரு பெட்டி ஒதுக்கப்படவேண்டும். அந்த பெட்டிகளில் ஒவ்வொரு பொருளின் அருகிலும் அப்பொருளினைக் குறித்த சிறு குறிப்பும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். முடிந்தால், பல்மொழிகளில் அந்த பொருள் குறித்த ஒலிக்கோர்ப்பு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். கண் தெரியாதவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். வாய் பேசாதவர்களுக்காக பனை சார்ந்த கலாச்சாரத்தை விளக்கும் காட்சிகளும் ஓடிக்கொண்டிருக்கலாம். ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கலைஞர்கள் ஓலையில் பொருட்களை செய்து காட்சிக்கு வைப்பது சிறப்பாக இருக்கும். ஒரு உணவு பெட்டி, பனை உணவுகளை விற்கும்படியாகவும், ஒரு பெட்டி பனையோலை சார்ந்த பொருட்களை விற்பதற்காகவும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மிகப்பெரிய இலாபம் கிடக்கவில்லை என்றாலும், இவ்வித முயற்சிகள் இரயில்வே துறை தனது சமூக பங்களிப்பாக சூழியலுக்காகவும் சமூக நல்லைணக்கத்திற்காகவும், கிராமிய பொருளியலை மேம்படுத்தும் விதமாகவும், இந்திய துணைக் கண்டத்தின் பல்முனைக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையும். அவ்வகையில் இரயில்வே மிகப்பெரும் களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுவதால், துண்டுபட்டுகிடக்கும் சமூகங்களுக்குள் ஓர் இணைப்பை உருவாக்க இயலும். காலாச்சார பரிமாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.
ஓலைச் சுவடிகள் முதல் இன்றைய நவீன பயன்பாட்டிற்கான பொருட்கள் வரை வைக்கப்பட்டிருக்கும் ஒரு இரயில் இயக்கப்படுமென்றால், பனை மரங்களைக் காக்கும் ஒரு பணியினை இந்திய இரயில்வே சிறப்பாக முன்னெடுத்திருக்கிறது எனக் கொள்ள இயலும். பரீட்சார்த்த முறையில் ஒரிரு பெட்டிகளை மட்டுமாவது இணைத்து ஏதேனும் ஒரு மாநிலம் இவ்வித முயற்சிகளை முன்னெடுக்கலாம். தமிழகம், ஆந்திரா, பீகார், ஒரிசா போன்ற இடங்கள் வெள்ளோட்டத்திற்கு தகுதியானவைகள். இரயில் பெட்டிகளில் ஒவ்வொரு மாநில பனையேறிகள் குறித்த படங்களும், பெரும்பான்மையாக காணப்படும் பனை சார்ந்த பொருட்களை காண்பிக்கும் படங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் பெட்டிகளை அமைக்கலாம். சிறப்பு இருக்கைகளையும் படுக்கைகளையும் பனை நார் கொண்டு அமைக்கலாம். மூன்று வருடம் மட்டும் முன்னெடுக்கும் இவ்வித முயற்சிகளால் இந்திய நிலம் முழுக்க பனை ஓலைகளின் பயன்பாடு அதிகரிக்கும் அதே வேளையில் நெகிழிக்கு எதிரான ஒரு முன்னெடுப்பாகவும் இந்திய இரயில்வே இவைகளை செய்யலாம். கூடவே பனை விதைகளை வழங்கவும் இரயில்வே நிலங்களுக்குள் பனை விதைகளை நடுவதற்கும் இவ்வித இரயில்கள் பயன்படக்கூடும்.
தற்பொழுது சர்வதேச சுற்றுலா வீழ்சியடைந்து இருக்கும் சூழலில் இவ்விதமான உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிப்பது பயன் தரும் ஒன்றாக இருக்கும். காதி, அந்தந்த மாநில சுற்றுலாதுறை மற்றும் இரயில்வே இணைந்து இந்திய நிலமெங்கும் பரவி விரிந்திருக்கும் கலைஞர்களை முன்னிறுத்திக் கூட இவ்விதமான ஒரு முயற்சியை முன்னெடுக்கலாம். இயற்கை சார்ந்தும் பாரம்பரிய அறிவு சார்ந்தும் இயங்கும் எண்ணம் கொண்டவர்கள் பெருகியிருக்கும் சூழலில் இவ்வித யாத்திரைகள் நவீன புண்ணிய யாத்திரைகளாக கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
பனை சார்ந்த பொருட்களை எனது பயணத்தில் எடுத்துச் செல்லுவதை முக்கியம் என கருதுகிறேன். ஏனென்றால், எனது பயணத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே எனக்கு இப்பொருட்கள் புதிய நண்பர்களையும், நான் செல்லும் இடங்களில் இருக்கும் பனை சார்ந்த மக்களுடன் ஒரு நெருக்கத்தையும் கொடுக்கிறது. மேலும் பனை ஓலைகளை என்னுடன் எடுத்துச் செல்லும்போது அது ஒரு அறைகூவலாக மாறிவிடுகிறது. பிறருக்கும் அப்படியான ஒரு வாழ்கைமுறை மீது பிடிப்பு ஏற்பட இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கிறது.

இன்றைக்கு கிடைக்கும் பல்வேறு பனை ஓலைப் பொருட்கள் பெரும்பாலும் அழகு பொருட்களாகவே முன்னிறுத்தப்படுகிறது. அவைகளில் காணப்படும் ஒரே பிரச்சனை என்னவென்றால், இவ்வித அழகு பொருட்கள் நெடுநாள் பயன்பாட்டிற்கு உரியதாக இல்லாமல், மேஜை அலங்காரமாக அமர்ந்துவிடுகிறதைப் பார்க்கிறோம். இவ்விதமான பொருட்களை விட, அன்றாடம் பயன்பாட்டில் நிலவும் பொருட்களே தேவையாக இருக்கின்றன. அதுவே பனை சார்ந்த ஒரு இயக்கம் புத்தெழுச்சியுடன் எழும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் குறியீடாக அமையும்.
இரயில் பன்வேல் என்ற இரயில் நிலையத்தைக் கடக்கும்போது ரசாயினி எப்பொழுது வரும் என ஆவலுடன் வெளியே பார்த்தபடி வந்தேன். பன்வேல் மும்பையின் எல்லை. அதனைத் தொடர்ந்து வருவது சிறு நகரங்களும், கிராமங்களும் காடுகளும்தான். பசுமையான மலைகள் சூழப்பட்ட இடங்களில் பனை மரங்கள் நெடிந்துயர்ந்து நின்றுகொண்டிருந்தன. ரசாயினி நடை மேடையில் நின்ற பனை மரத்தை நான் கவனிக்கவில்லை. வெட்டிவிட்டார்களோ? இல்லை நான் தான் சரியாக பார்க்கவில்லையோ? ஆனால் அங்கிருந்த பனைமரத்தைச் சுற்றியிருந்த ஆலமரம் அப்படியே விரிந்து பரந்து இருந்தது. ரசாயினி எனது பனை மரச் சாலையின் துவக்கம் என்பதால் அதனைக் கடந்து செல்லும்போது எனக்குள் குதூகலித்து குழந்தையாவதை தடுக்க இயலவில்லை.

பனை மரத்தில் பற்றிப்பிடிக்கும் மரங்கள் அனேகம் உண்டு. ஆலமரம் அரசமரம் என அனைத்துமே ஃபைகஸ் (Ficus) குடும்பத்தைச் சார்ந்தவை. ஆரே பகுதிகளிலும் இவ்விதமாக மரங்களுக்குள் ஏற்படும் பிணைப்புகளை அதிகம் காண முடிந்தது. ஏனென்றால் பனை மரங்கள் பயன்பாட்டை விட்டு விலகும்போது அவைகளைப் பற்றிப்பிடிக்கும் மரங்கள் நிலைகொள்ளுவதை தவிர்க்க இயலாது. மரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இவ்வித தன்மைகள் இடத்தை பேணிக்கொள்ளவும், நமது உள்ளூர் மரங்களை இணைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும்.
பென் (Pen) என்னும் இடம் வரைக்கும் பனை மரங்கள் எங்களுடன் இணைந்து வந்துகொண்டிருந்தன அதன் பின்பு பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன.
மறுநாள் காலை இரயில் மங்களூரில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கீழிறங்கி பார்த்தபோது தொலைவில் ஒரு சில பனை மரங்கள் நின்றுகொண்டிருந்தன. காலை பொழுது அத்துணை மகிழ்வளிக்கும் ஒன்றாக மாறிவிடும் என நான் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. நான் பெங்களூரில் ஐந்து வருடங்கள் படித்திருந்தாலும் கர்நாடகாவில் பனை மரங்களை பெருமளவில் காண இயலவில்லை. பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் இரயில் வழித்தடத்தில் கோலார் பகுதியைக் கடக்கும்போதுதான் பனை மரங்கள் காணப்படும். நாகர்கோவிலிலிருந்து பேருந்தில் ஓசூர் வரும் வழியிலும் பனை மரங்ளைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் நான் கர்நாடகாவில் பெருமளவு பயணிக்காததால் பனை மரங்கள் எங்கே அதிகமாக இருக்கின்றன என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. மங்களூரின் அமைப்பு நாகர்கோவிலை ஒத்து இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே இக்காலை காட்சி பனை மரங்கள் இங்கே செழித்திருக்கும் எனும் நம்பிக்கையை கொடுத்தது. இப்படி பனை மரங்கள் செழித்திருக்கும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகவும், ஒவ்வொரு பயணியும் ஒரு பனை விதை நடுவதற்கான இடத்தையும் இரயில்வே நிர்வாகம் முன்னெடுப்பது மிகப்பிரம்மாண்ட சூழியல் பங்களிப்பை முன்னிறுத்துவதாக அமையும். வெறும் இரயில் என்று தான் இல்லை, கப்பலோ, விமானமோ, பேருந்தோ அல்லது சிற்றுந்தோ பனை விழிப்புணர்வுக்காக எதுவும் பயன்படலாம். இவ்விதமான ஒரு விழிப்புணர்வு, வரும் நாட்களில் பனை மரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

பனை விதைகளை நான் கொடுப்பது குறித்து எனது அமெரிக்க தோழி பேராசிரியர். விட்னி இப்படி எழுதியிருந்தார்கள். உனது தொப்பி எனக்கு ஜானி ஆப்பிள்சீட் (John Appleseed) என்ற மனிதரை நினைவுறுத்துகிறது உனக்கு அவரைத் தெரியுமா என்றார். சத்தியமாக எனக்கு அவரைத் தெரியாது. ஆகவே “யார் அவர் எனக் கேட்டேன்”. எனக்கு ஒரு ஒளிப்பட இணைப்பை அளித்துவிட்டு அவரைக் குறித்து சுருக்கமாக பகிர்ந்துகொண்டார்கள். ஜாண் சாப்மான் (John Copman) என்ற ஜானி ஆப்பிள்சீட், கையில் ஒரு ஆப்பிள் விதைகளாலான பை, மற்றொரு கையில் திருமறை, மேலும் அவரது தலையில் சமைப்பதற்கான பாத்திரத்தை தொப்பி போல கவிழ்த்து வைத்திருக்கும் ஒரு அற்புத மனிதர். அமெரிக்காவில் உணவு பஞ்சத்தை உணர்ந்து ஆப்பிள் விதைகளை மக்கள் குடியேறும் பகுதிகளை கணித்து விதைத்த ஒரு மகான். இப்படி ஒரு மனிதர் இருந்தாரா அல்லது கற்பனைக் கதையா என்று சொல்லுமளவு அவரது வாழ்வு நாட்டுபுற கதைகளுடன் இணைந்தே இருக்கிறது.
நீ தான் அவர். நீ செல்லுமிடங்களுக்கு பனை விதைகளை எடுத்துச் செல்லுகிறாய் இல்லையா? எனச் சொன்னார்கள். திடீரென அவர்கள் இப்படி சொன்னவுடன் நான் அயர்ந்துபோனேன். இப்படியான ஒரு பொருத்தப்பாட்டினை நான் எப்போதும் எண்ணியிருக்கவில்லை. ஒரு கையில் திருமறையும் மற்றொருகையில் பனை விதையும் இணைகோடுகளாகவே செல்லுவதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இறைப்பணி என்பது பலவேளைகளில் எவ்வித சூழியல் பிரக்ஞையுமற்ற அற்பணிப்புமற்ற மனிதர்களால் முன்னெடுக்கப்படுகிறது. அதில் சூழ்ந்திருக்கும் ஆபத்து நாம் உணராதது.
ஒரு காலத்தில் பனையேறிகள் குறித்து ஏளனமாக பேசிய சமூகம் இன்றுதான் கண்திறந்து பார்க்கிறது. பனை சார்ந்து இயங்கியவர்கள் காணாமல் போனதால் நமது உணவு பழக்கங்கள் மாறிப்போய்விட்டது. ஊரே இணைந்து இனிப்பு கருப்பட்டி தயாரித்தபோது இல்லாத சர்க்கரை நோய் நம்மை இன்று அச்சுறுத்துகிறது. ஊருக்குள் பெருகியிருக்கும் நோய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியிருக்கிறது.
இப்பயணம் எனக்கு முன்னால் எதனை முன்வைத்திருக்கிறது என நான் உண்மையிலேயே அறியேன். ஆனால் கண்டிப்பாக பனை சார்ந்து இயங்கும் மக்களைக் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். ஏனென்றால், இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்கள் அனைவருமே அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை ஆகவே, எப்படியாவது இவர்களை முன்னிறுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். இன்று நாம் செய்யக்கூடுவது அது மட்டும்தான். 2016ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தைவிட, தற்பொழுது பனை சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. பனை விதைப்போர், சேகரிப்போர் எண்ணிக்கை பலமடங்காக கூடியிருக்கிறது. பனை ஓலைப் பொருட்களைச் செய்யும் ஆர்வலர்கள் பெருகியிருக்கிறார்கள். கருப்பட்டிக்கான விலை அதிகரித்திருக்கிறது. இதனை உயிர்ப்புடன் வைக்கவேண்டிய கட்டாயம் நம்மைச் சூழ இருக்கிறது என கண்டுகொண்டேன்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, மும்பை
malargodson@gmail.com / 9080250653
You must be logged in to post a comment.