Archive for ஜனவரி, 2021

பனைமுறைக் காலம் 6

ஜனவரி 19, 2021

பனை நிலவு

அக்டோபர் எட்டாம் தேதி காலை ஜாஸ்மினும்  ஆரோனுமாக காலை நடைக்கு மிடாலம் கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் சென்ற சற்று நேரத்தில்  நானும் கடற்கரை நோக்கி சென்றேன். கையில் பணமும் எடுத்து வைத்துக்கொண்டேன். மிடாலம் கடற்கரையில் காலை எட்டு மணிக்கு முன்பு சென்றால்  கரமடி மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.  செல்லும் வழியில் ஒரு வடலி பனை மரத்தை முறித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன். இப்பாதகத்தை மின்சார வாரியம் செய்ததா அல்லது தோப்பின் உரிமையாளர் செய்ததா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. அந்த மரத்தின் மட்டைகளை வெட்டி விட்டிருந்தால் அது எவ்வித பிரச்சனையுமின்றி மின்சார கம்பத்தை தாண்டி வளர்ந்திருக்கும். காலை நேரம் இப்படி மன சஞ்சலத்தை ஏற்படுத்தும் காட்சியுடன் விடியும் என நான் எண்ணியிருக்கவில்லை.

முறித்துப் போட்ட வடலி பனை

நான் கடற்கரைக்கு சென்றபோது ஆரோன் ஒடியாடி மீன்களை  பொறுக்கிக்கொண்டிருந்தான். கைகள் நிறைய நிறைய சில  சாளை மீன்களை எடுத்து வந்து எனக்கு காட்டினான். பொதுவாக மீனவர்கள் வலைகளில் சிக்கியிருக்கும் ஜெல்லி மீன்களையும் தேவையற்ற மீன்களையும் எடுத்து வெளியே வீசுவது வழக்கம். ஜெல்லி மீன்களுள்  சிக்கியிருக்கும் சிறிய மீன்களை கடற்கரையில் வாழும் சிறுவர்கள் எடுத்துச் செல்லுவது வழக்கம். கடற்கரையில் வேறு சில சிறுவர்கள் ஒரு வீட்டிற்கு தேவையான மீன்களை குவித்து வைத்திருந்ததைப் பார்த்தேன். அன்று அதிகமாக சாளை மீன் பிடிபட்டிருந்தது. ஜாஸ்மின் நூறு ரூபாய்க்கு மீன்களை வாங்கினாகள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு மீன்கள் எடுத்து கொடுத்தார்கள். நாங்கள் 500 ரூபாய் கொடுத்தபோது, சில்லரை இல்லை எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவ்வளவு மீன்களை முன் பின் தெரியாதவர்களுக்கு கொடுக்கும் நல்லுள்ளம் எந்த வியாபாரிக்கும் வராது. பனையேறிகளே இவ்விதம் வழிப்போக்கர்களுக்கு பதனீரை இலவசமாக கொடுத்த கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வகையில் மீனவர்கள் மாபெரும் வள்ளல் பரம்பரைதான்.

ஆரோன் சேகரித்த மீன்களுடன்

2018 ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் இருந்தபோது, இதே கடற்கரையில் 100 பனை விதைகளை நட்டோம். நானூறு பனை விதைகளை இங்குள்ள மீனவர்களுக்கு கொடுத்தோம். அவைகளில் சில முளைத்திருந்ததை நான் ஏற்கனவே வந்து பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் தற்போது கடற்கரையில் காங்கிரீட் தடுப்புச் சுவர் எழுப்பவேண்டி நாங்கள் பனை விதைத்திருந்த   ஆக்கிரமித்திருந்தார்கள். பல பனைகள் சமாதியாகிவிட்டிருந்தன.  நாம் நடுகின்ற பனைவிதைகளில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் மட்டுமே அதன் முழு ஆயுளைக் காணும் என நினைக்கிறேன். ஆர்வத்தால் விதைப்பவைகள் அனைத்தும் அதன் பலனைக் கொடுக்கும் வரை இருக்குமோ இல்லையோ தெரியாது எனும் அளவில் தான் தற்போதைய சூழல் இருக்கின்றது. எங்கும் நிகழும் சாலை விரிவாக்கப்பணிகள், பொதுப்பணித்துறை பணிகள், கட்டுமானப்பணிகள், என பல்வேறு காரணிகள் விதைக்கப்படும் பனை விதைகளை முளையிலேயே கிள்ளி எறியும் சூழல் மேலோங்கி இருக்கிறது. ஆகவேதான், நிற்கும் மரங்களை பாதுகாப்பது, எதிர்காலத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய புண்ணிய  காரியம் என்பதாக உணருகிறேன்.

மிடாலம் கடற்கரை இன்று

காலை நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்திற்கு சென்றேன். அங்கே அதன் இயக்குனராக இருக்கு  சந்திரபாபு அவர்களை சந்திப்பது தான்எனது எண்ணமாக இருந்தது. நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் போது, இவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இருவருமாக பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைச் சார்ந்த சில பெண்கள் எப்படி அரசியல் தளங்களில் வெற்றி பெற்றனர் என்பதை மையமாக கொண்டு ஒரு புத்தகத்தினை தொகுத்தோம். எனது பங்களிப்பு அதில் மிகச் சிறிய அளவில் தான் இருந்தது. ஆகவே தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைப் பேசி வரலாம் என்று தான் கிளம்பினேன்.  “வரும் தேர்தலில்  கள் தான் கதாநாயகன்” என்ற சூளுரையோடு எனது தமிழகம் தழுவிய பயணத்தை  முன்னெடுக்கிறேன் என்றேன்.   உங்கள் அனுபவம் சார்ந்து சில தகவல்களை தந்துதவ முடியுமா எனக் கேட்டேன். என்ன வேண்டும் எனக் கேட்டார்கள். “பனையேறிகள் செய்த போராட்டங்களில் கள் சார்ந்து ஏதேனும் போராட்டங்கள் முன்னெடுத்தார்களா எனக் கேட்டேன்” அவர் பல்வேறு போராட்டங்கள் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். கள் என்பது கள்ளுக்கடைகளுக்கு தான் இலாபம் ஈட்டும் ஒன்றாக இருந்ததால், பனையேறிகள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு மட்டுமே கள் இறக்கிக்கொண்டிருந்தனர் என்றார்.   மேலும் அவர், 1985 ஆம் ஆண்டு பனைதொழிலாளர்கள் நிகழ்த்திய மாநாட்டின் மூலம் ஒரு பத்தம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர் என்றும் அதனை சமீபத்தில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் மீண்டும் பதிப்பித்திருக்கிறது என சொல்லி ஒரு புத்தகத்தை எனக்கு காண்பித்தார். 

சந்திரபாபு அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

பனைத்தொழிலாளர்களின் பத்தம்சக் கோரிக்கைகள் – 1985

1. பனைத் தொழிலாளர்களுக்கும் பனைப் பொருட்களின் உற்பத்திக்கும் ஊக்கமளிக்க பனைவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

2. அரசு நிலங்களிலிருந்து குத்தகைக்கு விடப்படும் பனை மரங்கள் பனைத்

தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படல் வேண்டும்.

3. பனைத் தொழிலாளர்களின் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை முழுவதும் அரசே செலுத்த வேண்டும்.

4. பனைத் தொழிலாளர்களுக்கு பணி செய்ய இயலாத காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

5. பனைத் தொழிலை அறிவியல் முறையில் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்

6. கருப்புகட்டிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

7. பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு , கல்வி மருத்துவம், வீட்டு வசதி,

வேலைவாய்ப்புத் துறைகளில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.

8. பனைத் தொழில் செய்யும்போது விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டால் பிரேத

பரிசோதனையின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

9. விபத்தில் மரணமடையும் பனை தொழிலாளிகளுக்கு 15000 ரூபாய் காப்பீடாகவும், தொழில் செய்ய இயலாமல் நிரந்தர ஊனமுற்றால் 7500 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

10. அரசின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், உதவிகள், கடன்கள் அனைத்தும், பனைத் தொழிலாளர் அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும்

பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்று அல்ல, பனை சார்ந்து எங்கும் இதுவரை வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்குட்படுத்தப்படவில்லை. பதினைந்தாயிரம் பனைதொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த   மாபெரும் போராட்டகளத்தில் ஒரு  கோரிக்கை கூட செவிசாய்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலானகோரிக்கைகள் அன்றைய சூழலை பிரதிபலிப்பதாக இருந்தாலும் இன்றும் இவைகள் கோரிக்கை என்னும் வடிவிலேயே இருக்கின்றன. பெரும்பாலான கோரிக்கைகள் இன்றும் பனைதொழிலாளர் வாழ்வு மாறவில்லை என்பதன் மவுன சாட்சியாக நிற்கின்றன.

குமரி மாவட்டத்திலுள்ள தேவிகோடு பகுதியை அடுத்த பட்டன்விளாகத்தைச் சார்ந்த பனைத் தொழிலாளி திரு செல்வராஜ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் “அனைத்து கோரிக்கைகளையும் விட, பனை மரத்திலிருந்து விழும் பனையேறிகளுக்கு உடற்கூறு ஆய்வு மட்டும் செய்யவேண்டாம் என்ற கோரிக்கையினை இறுதியாக மாவட்ட ஆட்சிதலைவர் முன் வைத்தோம்” என்றது மிக  நெகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அன்றைய ஆட்சியாளராக இருந்தவர், இவ்விதமாக பதிலளித்திருக்கிறார்: “விபத்தில் நான் உயிரிழந்தால் கூட  எனக்கும் உடற்கூறாய்வு செய்தே ஆகவேண்டும் என்பது தான் நியதி” அதனைத் தாண்டி எங்களால் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்க இயலவில்லை என்றார். சோகம் என்னவென்றால், அன்று பனையேறிகள் தங்களுக்காக முன்னெடுத்த போராட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்களின்  உதவி சிறிதும் இல்லாமல் இருந்தது. பனையேறிகள் தானே என்னும் இளக்காரமே மேலோங்கியிருந்தது. தங்கள் உடன்பிறந்தவர் என்றாலும் தந்தையே என்றாலும் பனையேறியென்றால் சமூகத்தில் அதனை பெருமிதத்துடன் முன்வைக்க இயலாத சூழல் காணப்பட்டது. ஆகவே பனை சார்ந்து இயங்குகிறவர்கள் மெதுவாக பனை மரத்தை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.            

அங்கிருந்து நான் சவுத் இந்தியா பிறஸ் என்ற அச்சகத்தை வைத்திருக்கும் கருணா அவர்களை சந்திக்கச் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை வேஷ்டி சட்டையில் மார்த்தாண்டத்தின் கதாநாயகனாக வலம் வரும் முக்கிய ஆளுமை அவர். கேரளா முதல் உலகின் அத்தனை பாகங்களிலும் நட்புக்களை வைத்திருப்பவர். பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள், பனை  தொழிலாளர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைத்தபோது கூட்டிய மிகச்சிறிய நண்பர் குழாமில் இவரும் ஒருவர். பனையேறிகளுக்கு நாம் செய்யகூடிய நன்மை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டபோது அன்றைய இளைஞரான கருணா, தனக்கே உரிய  தனித்துவத்துடன் “எல்லா பனையையும் முறிக்கணும்” என்றது செவி வழி செய்தி. 1975ல் அப்படி சொல்லும் ஒரு கருத்து மிகவும் புரட்சிகரமானது. அவரது ஒற்றைச் சொல் மிகவும் வீரியமாக பின்னாளில் பலித்திருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில்,  காதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குமரி மாவட்டத்தில் இருந்த  பனை மரங்களின் எண்ணிகை 25 லட்சம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று குமரி மாவட்டம் முழுக்க பனைகளை நான் தேடி ஆவணப்படுத்துகையில் ஒரு லட்சம் பனை மரங்கள் எஞ்சுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இவைகள் எப்படி முறிக்கப்பட்டன? ஒரு சமூகமே இணைந்து பனை மரங்களை உதறிவிட்டது போலவே இந்த இழப்பை நான் புரிந்துகொள்ளுகிறேன்.

கருணா அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

கருணா அவர்களின் அந்த கூற்றிற்கு காரணம் என்ன? ஆழ்ந்து நோக்குகையில், பனையேறிக்கும் பனைக்கும் உள்ள உறவு என்பது ஆத்மார்த்தமானது. பனை ஏறிக்கொண்டிருக்கும் ஒருவரால், பனை மரத்தினை அவ்வளவு எளிதில் உதறிவிட இயலாது.  பனை மரம் ஏறுவதைத் தவிற உலகில் வேறு சிறந்த துறை இருக்கிறது என ஒருபோதும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. பனை மீதான  காதலால் கண்மூடித்தனமான வழிபாட்டு நோக்குடனே பனையை அவர்கள் பூஜித்தார்கள். ஆகவே, பனையேறிகளின் வாழ்வு பனையைச் சுற்றியே இருக்கும். அன்றைய சூழலின்படி பனை சார்ந்து வாழ்பவர்கள் வறுமையிலேயே உழல நேரிடும். மேலும், பனை ஏறுகின்றவர், சமூகத்தில் கீழாகவே பார்க்கப்பட்டு வந்தார், ஆகவே, பனை மரங்களை முறித்துவிட்டால், வேறு ஏதேனும் வேலைக்குச் சென்று தனது வாழ்வை ஒருவர்  காப்பாற்றிகொள்ள முடியும் என கருணா அவர்கள் உறுதியாக நம்பினார். அவரது சொல் தான் பின்னர் பலித்தது என நான் எண்ணிக்கொள்ளுவேன்.

கருணா அவர்கள் எனது பணிகளை ஆழ்ந்து கவனிப்பவர், எனது தனித்துவ பணிகளுக்காக என்னை அதிகமாக ஊக்கப்படுத்துபவர். அவரிடம் பனை விதைகளை கொடுத்தேன். வாங்கிவிட்டு, இதனை எனது வீட்டின் அருகில் நடுவேன் என உறுதியாக கூறினார். மேலும் அவரது வீட்டின் அருகில் ஒரு வடலி பனை நிற்பதாகவும்,  எச்சூழலிலும் எவரும் அதனை முறிக்ககூடாது என பேணி பாதுகாப்பதாகவும் சொன்னார். சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு மனிதருக்குள் ஏற்பட்ட தலைகீழான மாற்றம் தான் என்ன? இன்று பனை ஒரு பண்பாட்டு அடையாளமாக மாறிவிட்டது தான் உண்மை. தமது மூதாதையரின் பெருமித அடையாளமாக இன்று பனை அவருக்கு காட்சியளிக்கிறது. கள்ளிற்கு ஆதரவு தெரிவித்த அவர்,  ஆயிரம் ரூபாய் இல்லாவிட்டால் இன்று கேரள கள்ளுக்கடைக்குள் சென்று வர இயலாது எனக் கூறினார்(அங்கு கிடைக்கும் சுவையான மீன் தலை மற்றும் கிழங்கு இன்னபிற உணவுகளுடன் சேர்த்து). குமரி மாவட்டத்தில் கள் கிடைக்கவில்லை எனவும், கருப்பட்டி வேண்டுமென்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் நண்பர்களிடம் சொல்லி வைத்து வாங்கவேண்டும் எனவும் ஆதங்கப்பட்டார். மாற்றம் அனைவரது வாழ்விலும் நிகழும் என்பதற்கு கருணா அவர்களின் புரிதல் ஒரு பதம்.

அங்கிருந்து மீண்டும் பால்மா நோக்கி பயணித்தேன். ஜேக்கப் அவர்களிடம் உரையாடும்போது “என்னை உங்கள் பயணங்களில் இணைத்துக்கொள்ள மாட்டீர்களா” எனக் கேட்டார். நான் இந்த கேள்வியினை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜேக்கப் நான் முன்னெடுக்கும் பனை பயணத்தில் இணைத்துகொள்ளுவார் என்பது நான் எண்ணிப்பார்த்திராதது.  நான் எனது பயணத்தில் உள்ள சிரமங்களைச் சொன்னேன்.  எனது பயணம் நீண்டது என்றும், கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்க முடியும் என்றும், உங்கள் அலுவலகத்தை விட்டு உங்களால் அப்படி ஒரு தொடர் பயணத்தை முன்னெடுப்பது சாத்தியமா எனக் கேட்டேன். “தமிழகமே உங்களோடு பயணிக்க விரும்புகிறது எங்களுக்கு விருப்பம் இருக்காதா” என்றார். நான் மலைத்துப்போனேன். சரி உங்களுக்கு பொருத்தமான நாட்களைச் சொல்லுங்கள் என்றேன். ஒரு மூன்று நாட்கள் தென்தமிழக பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனச் சொன்னார். அது குறித்து நாம் விரிவாக திட்டமிடுவோம் எனக் கூறி விடைபெற்றேன்.

எனது பயணத்தை தமிழக அளவில் ஒரு முக்கிய அடையாளமாக நான் நிலைநிறுத்தியிருக்கிறேன். எனது சிறு வயதில் கூட, பல பயணங்கள் பனை மரங்களைப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்தது. பனைமரச்சாலை அவ்வகையில் ஒரு முக்கிய திருப்பம். எனது பயணம் திட்டமிட்டவைகளை விட, தற்செயல்களால் நிறைந்தவை. அதில் இருக்கும் சாகசத் தன்மை என்னை உந்தும் விசை. அதே வேளையில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அது  மிகப்பெரிய மன எழுச்சியைக் கொடுப்பவை.  நான் எங்கு சென்றாலும், அங்கே எல்லாம் புதிய தகவல்களைத்  தேடி பதிவு செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். தமிழகத்தில் பனை சார்ந்து பயணங்கள் நிகழ்த்தப்படுமென்றால் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்.

பனை மரங்களை தேடி மனிதர்கள் சென்றாலே பனை சார்ந்து வாழும் மனிதர்களின் மற்றும் பனை மரங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது எனது தீர்க்கமான முடிவு. பனை சார்ந்த கலைஞர்கள் அனைவரும், உழைப்பை முன்னிறுத்துகிறவர்கள். உழைப்பினைத் தொடர்ந்து செல்லும் அவர்களுக்கு ஓய்வு மிக முக்கிய தேவை. அவர்களின் ஓய்வு நேரம் அவர்களைக் கண்டு உரையாடுவது அவர்களின் அல்லது அவர்களின் பணி நேரத்தில் அவர்களின் பணிக்கு இடையூறின்றி சந்திப்பது யாவும் அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.  பனை சார்ந்த கலைஞர்கள் நமது சமூகத்தில் அடையாளம் இழந்து வாழ்கிறார்கள், அவர்களை நாம் நேரடியாக சென்று சந்தித்து வரும்போது அவர்கள் வாழ்க்கை முறைக் குறித்த ஒரு புரிதல் உண்டாகும். அவ்வித புரிதல் இல்லையென்றால் நம்மால் ஒருபோதும், பனை சார்ந்த ஒரு மாற்றத்தை இச்சமூகத்தில் நிகழ்த்திவிட இயலாது. இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கு கூட பனையேறிகள் குறித்த புரிதல் சரியாக இல்லை. ஏனெனில் அவர்கள் பனை சார்ந்த மனிதர்களுடன் பயணிப்பது இல்லை.

இக்கருத்துக்களை எப்படி ஒன்றாக திரட்டி மக்களுக்கு அளிப்பது என நான் எண்ணுகையில் தான் பனை நிலவு என்ற ஒரு திட்டம் எனக்குள் உதித்தது. பனை நிலவு என்பது பனை சார்ந்த ஒரு சுற்றூலா தான். பனையோடு செலவிடும் நாட்கள். பனை குறித்த புரிதலற்ற ஒரு குழுவினரை ஒன்றாக திரட்டி, அவர்களுக்கு, ஒரு திட்டமிட்ட பயண அனுபவத்தைக் கொடுப்பதுவே எனது எண்ணமாக இருத்தது. அவ்வகையில் இதனை ஒழுங்கமைக்க அதிக சிரமத்தை எடுத்துக்கொண்டேன். ஆனால் நான் எண்ணியதை விட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. தேனிலவிற்கு இணையான போதையுடன் இருக்கும் என்றாதாலேயே “பனை நிலவு” என பெயரிட்டேன். இரண்டு நாள் பயணம். கன்னியாகுமரி மாவட்டம் துவங்கி திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவு செய்யும் ஒரு அற்புத பயண திட்டம்.

மார்த்தாண்டம் பால்மா மக்கள் இயக்கத்தில் அனைவரும் கூடவும், அங்கிருந்து பயணத்திற்கான திட்டத்தை  முன்னுரை வழங்கவும் திட்டமிட்டோம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எங்கள் பயணத்தில் சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். முன்னுரையில் பனை மரத்தை எப்படி பனையேறியும் பனைக் கலைஞர்களும் தாங்கிப்பிடிக்கின்றனர் என்றும், பனை சார்ந்த கலாச்சாரமே பனை மரங்களின் வாழ்வை நீட்டிக்கும் எனவும் கூறினேன். பனை சார்ந்த சுற்றுலா பனையேறுகின்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், உள்ளூர் சுற்றுலாவையும், உள்ளூர் பனை உணவு மற்றும் பனை பொருட்கள் சார்ந்த விற்பனையும் மேம்படும் என்றும் கூறினேன். பனை பொருட்களை நகரத்திலிருந்து வாங்கிவிடத் துடிக்கும் மனநிலை எப்படி பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வில் எவ்வித பயனையும் விதைக்காமல் போய்விடுகிறது எனவும் விளக்கிக்கூறினேன். வந்த அனைவருக்கும் பனம்பழ ஸ்குவாஷ் மற்றும் பனம்பழ ஜாம் வழங்கினோம்.

சுதா அவர்கள் செய்யும் அரிவட்டி

பனை ஓலைக் கலைஞரான சுதா அவர்களைக்  காணவேண்டி அவர்களின் ஒப்புதலுடன், கழுவந்திட்டை பகுதிக்கு  சென்றோம். முதலில் இது எப்படியிருக்கும் என அவர்கள் தயங்கினாலும், பின்னர் எங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். சுதா அவர்கள் பனை ஓலையில் இருக்கும் ஈர்க்கில் கொண்டு ஈர்க்காம்பெட்டி என்ற அரிவட்டியினை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். குமரிமாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஈர்க்கில் கொண்டு பொருட்களைச் செய்பவர்கள்  தலித் சமூகத்தினராகவே இருப்பார்கள். ஈர்க்கிலில் பொருட்களைச் செய்ய தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பனை ஓலைப் பாய் செய்யவும் தெரிந்திருக்கும். மேலதிகமாக பனை ஓலைப் பெட்டியும் செய்யத் தெரிந்திருக்கும்.  எஞ்சியிருக்கும் ஈர்க்கில் கொண்டே அழகிய வடிவம்பெறும் வகையில் ஒரு பொருளைச் செய்யும் சமூகம் எத்துணை திறமையானதும்  பனையுடன் உறவாடியதுமாக இருந்திருக்க வேண்டும்? அரிவட்டியின் பின்னல் முறைகள் சற்றே வித்தியாசமானது, பெருக்கல் குறியீடோ அல்லது கூட்டல் குறியீடோ சார்ந்தபின்னல்கள் அல்ல இது. ஒருவகையில் நடுவிலிருந்து அலையலையாக விரிந்து செல்லும் ஒரு  வடிவம். இரட்டை ஓலைகளாக தாவிச் செல்லும் பாய்ச்சல் கொண்டது. மூங்கில்களைக் கோண்டு  செய்ய்யப்படும் இவ்வகை பின்னல்கள் பெருமளவில் பழங்குடியினரிடம் மட்டுமே இன்று  எஞ்சியிருக்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். சுதா அவர்களிடம் உரையாடிய அனைவரும் தங்களுக்கு வேண்டிய பதிவுசெய்துகொண்டனர். அவர்கள் கூறிய பணத்தை விட அதிகமாகவே கொடுக்க அனைவரும் சித்தமாயினர். இந்த புரிதல் வேண்டிதான் அனைவரையும் இவ்வித பனை பயணம் செல்ல நான் அறைகூவல் விடுக்கிறேன். உண்மையான கலைஞர்களின் பெறுமதி என்ன என்பதை அருகிலிருந்து பார்த்தால் தான் புரிந்துகொள்ள இயலும். அவ்வகையில் இது எனது முதல் வெற்றி.

சுதா அவர்கள் செய்த கூட்டுப்பெட்டி – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கொழிந்து போனது

சுதா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, குமரி மாவட்டத்தில் வழக்கொழிந்துபோன கூட்டுபெட்டி என்ற ஒன்றை குறித்து பேசினேன். அவர்கள் எனக்கு அதனை மீட்டெடுத்து கொடுத்தார்கள். ஓலைகளை ஒடுக்கமான பெட்டியாக பின்னி, அதன் வாயை பரணியின் வாய் போல குறுக்கி, அதனுள் ஒரு கயிறு கட்டிய தேங்காய் சிரட்டையினை இட்டு, மூடிவிடுவார்கள். இவ்வித  கூட்டுபெட்டியினுள், மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அரிய பொருட்களை வைத்து தொங்கவிட்டுவிடுவார்கள். எலிகளால் அவைகளை எவ்வகையிலும் சேதப்படுத்திவிட இயலாது. 

பனை ஓலைக் கடவத்தில் குவித்து வைத்திருக்கும் காய்கறிகள்

பின்னர் குழுவினரை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் சந்தைக்குச் சென்றேன். மார்த்தாண்டம் சந்தையில் புளியினை பனை ஓலைப்பாயினில் விரித்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். ஓலைப்பெட்டியில் புளிகள் விற்பனைக்கு சிப்பம் சிப்பமாக வைக்கப்பட்டிருந்தன. காய்கறிகளை உட்புறமாக மடக்கிய கடவத்தில் குவித்து வைத்திருந்தனர். இது குழுவினருக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பனை ஓலை பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்று அவர்கள் விற்பனைச் செய்யும் பொருட்களை காண்பித்தேன். இன்றும் பனை ஓலைப் பொருட்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் இவ்வித கடைகள் தான் காரணம். விசிறி, மற்றும் பல்வேறு பொருட்கள் அங்கே இருந்தன. மார்த்தாண்டம் சந்தையில் மட்டும் பனை ஓலைப் பொருட்களை விற்கும் கடைகள் 2 இருக்கின்றன. 

குறும்பனை வெகு அருகில் தான்

இதனைத் தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் மிக முக்கியமானது. தென் இந்திய திருச்சபையின் அங்கமான கூடவிளை திருச்சபைக்கு சென்றோம். நாங்கள் புனிதவெள்ளி அன்று எங்கள் பயணத்தை அமைத்திருந்தபடியால், குமரி மாவட்டத்தில் காணப்படும் தனித்துவமான ஒரு வாய்ப்பினை நண்பர்கள் அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது.  புனித வெள்ளி அன்று அனைத்து திருச்சபைகளிலும் இயேசுவின் சிலுவை மொழிகளை மூன்று மணி நேர தியான நேரமாக கொள்ளுவது வழக்கம். மும்மணி நேர ஆராதனை முடிந்த பின்பு களைப்புற்றிருக்கும் அனைவருக்கும், பனை ஓலையில் பயிறு மற்றும் தேங்காய் துருவிபோட்ட கஞ்சி வழங்கப்படும். சமீப நாட்களில், இவ்வகை சடங்குகள் உருமாறிக்கொண்டு வந்தாலும், கூடவிளை போன்ற சபைகளில் இவ்வித பாரம்பரியத்தினை கைக்கொண்டு வருகிறார்கள். கஞ்சியின் சுவை ஒருபுறம், திருச்சபை பனை சார்ந்து கொண்டுள்ள தனித்திவமான பாரம்பரிய வழக்கம் மற்றொருபுறம் என நண்பர்கள் திக்குமுக்காடிப்போனார்கள்.

நண்பர்கள் அனைவரையும் குறும்பனை என்ற கடற்கரை கிராமத்திற்கு அழைத்துச் சென்றேன். பனை இருக்கும் இடத்தை தென்னை எப்படி ஆக்கிரமித்திருக்கிறது என நேரடியான ஒரு அனுபவ புரிதலுக்கு இப்பயணம் உதவியாக இருந்தது. மேலும் குறும்பனையில் காணப்பட்ட பனைகள் அனைத்தும் குறுகியே காணப்பட்டன.  ஒருவகையில் இங்கு காணப்படும் பனைகள் தனித்துவமானவைகளா? அதனை உணர்ந்து தான் குறும்பனை என நமது முன்னோர்கள் பெயரிட்டிருக்கிறார்களா? என்கிற கேள்விஎனக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. மீனவர்கள் வாழ்வில் பனை மரம் எவ்விதம் ஊடுபாவியிருந்தது எனவும் நண்பர்களுக்கு விளக்கினேன்.

அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் குமரி மாவட்டத்தின்  சிறந்த பானமான நுங்கு சர்பத்தினை ருசிக்க முடிந்தது. அங்கே தானே, நூங்கு சார்ந்த எனது புரிதலை விளக்கிக் கூறினேன். நுங்கு என்பது முதிர்ச்சி அடையாத ஒரு பனைக் கனி. அதனை உண்டுவிட்டால், நமக்கு அடுத்த தலைமுறை பனை மரங்கள் கிடைக்காது. குமரி மாவட்டத்தில் பனை மரங்கள் வேகமாக அழிவதற்கு நுங்கினை உட்கொள்ளும் மரபு ஒரு முக்கிய காரணம் என்றேன். என்னைப்பொறுத்த அளவில் நுங்கு உண்பது  பனைக்கு நாம் செய்யும் கருச்சிதைவு. ஆனால், சாமானிய மக்களைப் பொறுத்த அளவில், பனை மரங்களை மக்களிடம் கொண்டு செல்ல நுங்கு தான் எளிய வழி. அனைவரும் பனை மரத்தினை நுங்கு மரம் என்றே அறிந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற கிராமத்தை அந்தி சாயும் நேரத்தில் வந்தடைந்தோம். அங்கே இருக்கும் பனை மரங்களையும் நெல் வயல்களையும் நண்பர்களுக்கு காண்பித்து, ஆதி மனிதர்கள் நமக்கு எச்சமாக விட்டு வைத்த ஊர் இது. இந்த ஊரில் காணப்படும் பனை மரங்கள் என்பவை நமது மூதா,தையர்களுடன் நம்மை இன்றும் இணைப்பவைகளாக உள்ளன என கூறினேன். ஒரு முறை எனது நண்பர் ஒருவர் பழைய பானை ஓடுகளை எனக்கு காண்பித்தபோது அதன் அடிப்பகுதியில் பனை ஓலைப்பாயின் அடையாளம் அச்சாக பதிந்திருந்ததைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

அன்று இரவு நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி என்ற கிராமத்தின் அருகில் இருக்கும் திரு தானியேல் நாடார் என்பவரின் தோட்டத்தில் இரவு தங்கினோம்.  அங்கே சென்றபோது பனம்பழமும்  பனங்கிழங்கும்  உணவாக வைக்கப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற மீன்களை சமைத்து இரவு உணவு உண்டுவிட்டு, இரவு உலாவிற்கு பனங் காட்டிற்குள் சென்றோம். பனை சார்ந்து வாழும் மிருகங்கள் பறவைகள் அவைகளின் சத்தங்கள் போன்றவற்றை குறித்து பாண்டிச்சேரி ராம் விளக்கி கூறினார்கள். சூழியல் சார்ந்த அவரது புரிதல் பனை சார்ந்து எண்ணற்ற உயிரினக்கள் இருக்கின்றன என்பதை நண்பர்களுக்கு எடுத்துக்கூறியது. இரவு படுத்துறங்குவதற்கு என பச்சைப் பனை ஓலைகளை வெட்டி போட்டிருந்தார்கள்.  பனை ஓலைகள் மேல் படுத்துறங்குவது என்பது தனித்துவமான ஓர் அனுபவமாக அனைவருக்கும் இருந்தது. நட்ட நடு ராத்திரியில் தலைக்குமேல் எந்த கூரையும் இல்லாமல் பனங்காட்டில் ஓலைகளின் மேல் புரண்டு உறங்கும் ஒரு வாழ்க்கைமுறை எவரும் கேள்விப்பட்டிராதது. அன்று அதன் இன்பத்தை  முழுவதுமாக அனுபவித்தோம்.

பனை நிலவில் கலந்துகொண்டவர்கள் – புகைப்படம் ஆரோன்

மறுநாள் அதிகாலை சுற்றிலுமிருக்கும் கிராமங்களுக்குச் சென்று பனை நார் கட்டில் பின்னுபவர்களுடனும், பனை ஓலை முறம் செய்பவர்களுடனும் உரையாடினோம். எனது நண்பனும், நியூசிலாந்து நாட்டில் ஓட்டல் துறையில் இருக்கும் வின்ஸ்டன் மதியம் கருப்பட்டி பிரியாணி என ஒன்றைச் செய்தார். அனைவரும் நிகழ்ச்சி குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள மகிழ்வுடன்  கலைந்தோம்.  இதன் சிறப்பம்சம் என்பது பனை சார்ந்த அத்தனை உணவுகளும், அந்த இரு நாட்களுக்குள் எங்களால் சுவைக்க முடிந்தது. ஒரு வருடமாக கிடைக்கும் விதவிதமான பனை உணவுகளை இரண்டே நாளில் சுவைத்தது எங்கள் நண்பர் குழுவினராக மட்டுமே இருக்கமுடியும். ஒரு பனைத் தொழிலாளியின் குடும்பமே கூட ஒரே நாளில் இத்தனை சுவைகளை அறிந்திருக்காது.

ஜேக்கப் அவர்களிடமிருந்து விடை பெற்று, நடைக்காவு என்ற பகுதிக்குச் சென்றேன். செல்லும் வழியை நான் தவறவிட்டதால், வழிதப்பி நான் சென்ற பாதையில் ஒரு புதுப்பிக்கப்பட்ட இந்து ஆலயமும் அதன் அருகில் நிற்கும் அழகிய பனை மரமும் என் கண்ணிற்குப் பட்டது. ஒற்றை மரமாக அது இருந்தபோதிலும்,  அவ்வாலயத்திற்கு அது அழகு சேர்த்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவ்விடத்தில் நான் செலவிட்டேன். எனது வழி  எப்போதும் பனை வழி தான். ஆகவேதான் வழிதப்பினாலும் பனை மரங்கள் என் கண்களுக்கு விருந்தாக எங்கும் நின்றுகொண்டிருக்கின்றன.

நடைக்காவு என்ற ஊரில் திரு. பாலையன் அவர்கள் இருக்கிறார்கள்.பாலையன் அவர்கள் என்னை மிகவும் நேசித்தவர்.  நான் மும்பையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும்போது அவரை சந்தித்தது. அவரது மகள் புஷ்பா மூலமாக எனது எண்ணை வாங்கி என்னிடம் பேசி என்னை பார்க்க வாருங்கள் என்றார். பொதுவாக திருச்சபை அங்கத்தினர்கள் என்போன்ற பணிகளை செய்பவர்களை விரும்புவதில்லை. ஆனால் பாலையன் அவர்கள் என்மீது மிகப்பெரும் மதிப்பை கொண்டிருந்தார். “பனையேறி பாஸ்டரே” என அன்புடனே அழைப்பார். அவரது மகள் புஷ்பா, மருமகன் கிறிஸ்துராஜ், பேரபிள்ளை ஸ்னேகா, மற்றும் மகன் ஃபெலிக்ஸ் அனைவருமே என்னை மிகவும் நேசிப்பவர்கள். ஆகவே அவரைக் கண்டு பனை விதையினைக் கொடுத்து வந்தேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தனது  வீட்டில் நின்ற பனை மரத்தை மகன் முறித்துவிட்டான் என்ற வருத்தம் இருந்தாலும்,  அங்கே வளர்ந்து வரும் ஒரு சிறு வடலியைக் காட்டி சந்தோஷப்பட்டார்.  என்னைப் பார்க்கும் மக்கள் அனைவருமே பனை மரத்தினை கண்டிப்பாக நாம் பாதுகாக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வந்துவிடுகிறார்கள் என்பதுவே  நான் அடைந்த ஆகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 5

ஜனவரி 16, 2021

பனை கலைஞர் மாவட்டம்

சேவியர் அவர்களை நான் பால்மா மக்கள் அமைப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு அங்கமாக இருந்த பனைத் தொழிலாளர் பேரவையானது அதன் நிறுவனர் பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் இலட்சியக் கனவான ” பனைத்தொழிலாளர்களின் ஒன்றிணைவு, தற்சார்பு சமூகம், இவற்றால் விளையும் சுதந்திரம் மற்றும் வாழ்க்கைத்தரம்  உயர்தல்” என்ற கோட்பாட்டின் வழி தனித்து, பால்மா மக்கள் இயக்கமாக தற்பொழுது செயல்படுகிறது. எந்த அரசும் செய்யாத வகையில் 165 முதிய  பனைத்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும், பனைத் தொழிலாளர்களின் மனைவியாக இருந்து விதவையானவர்களுக்கும் உதவிசெய்துவருகிறார்கள். இங்கு உருவாக்கியிருக்கும் ஒரு புதிய சந்தை பொருளினை காண்பிக்கவே நான் சேவியர் அவர்களை அழைத்து வந்தேன். 

பால்மா மக்கள் அமைப்பின் தலைவராக திரு அன்பையன் என்னும் முன்னாள் பனை தொழிலாளி இருக்கிறார்கள். இதன் செயல் இயக்குனராக நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது அங்கு நிதி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு ஜேக்கப் அவர்களும் இருக்கிறர்கள். என்னை பால்மாவின்  பிரதிநிதியாக 2017 ஆம் ஆண்டுமுதல் முன்னிறுத்திவருகிறார்கள். பால்மா குமரி மாவட்டத்தில் மட்டும்  454 பெண்கள் சுய உதவிக்குழுக்களைக் கொண்டது 186 தொழிலாளர் மன்றங்களும் கொண்டது. குமரியில் மிக பிரம்மாண்டமான வலைப்பின்னல் கொண்டது. தங்கள் அமைப்பிலுள்ள அனைவரையும் இலாப பங்காளர்களாக மாற்றும் உன்னத நோக்குடன் பால்மா செயல்படுகிறது.  

2018 ஆம் ஆண்டு பனம்பழங்கள் எனும் உணவுப்பொருள் மிகப்பெருமளவில் வீணாகின்றன என்பதனை குறித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதனை வாசித்த செயல் இயக்குனர் ஜேக்கப் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். அப்போது நான் பனை ஓலைக் குடுவைகள் செய்யும் ஒரு பயிற்சியின் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை கிராமத்தை அடுத்த இலங்கையாளவார் தோட்டத்தில் இருந்தேன். மிக பிரம்மாண்டமான பனை தோட்டம் அது. வருடத்திற்கு ஒருமுறை அங்கே பனையேறிகள் வந்து தங்கி பதனீர் இறக்கி அதனை காய்த்து, கருப்பட்டியாக விற்பனை செய்வார்கள். ஆகவே தங்குமிடம் சமையலறை, கிணறு மற்றும் பம்புசெற்று ஆகியவை இருந்தன.

தங்கப்பனைக் கொண்டு வழங்கிய குடுவை பயிற்சி

“உங்க கட்டுரையைப் பார்த்தேன் ஒரு சில பனம்பழங்கள் வேண்டும்” என்று கேட்டார்கள். குமரி மாவட்டத்தில் தேடினால் கிடைக்கும் என்றேன். ஆனால் அவர்கள் இப்போது இங்கே சீசன் இல்லை நீங்கள் எடுத்து வர முடியுமென்றால் ஒருசில பழங்களை எடுத்துவரவேண்டும் என்றார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டு, நான்கு பனம்பழங்களுடன்  இரவிபுதூர்க்கடை என்ற பகுதிக்கு வந்தபோது இரவு 8 மணி ஆகிவிட்டது.  அந்த இரவு பொழுதிலும் அங்கே வந்து பனம்பழங்களை எடுத்துச் சென்றார்கள். எதற்கு என கேட்டதற்கு விடை ஒரு வாரத்திற்குப் பின்பு எனக்கு கிடைத்தது. என்னை அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து, பனம் பழத்தில் ஸ்குவாஷ் செய்திருக்கிறோம் என்றார்கள். எனக்கு ஒரு பாட்டில் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் சுவைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.  பனம்பழத்தில் உள்ள காரல் தன்மையோடு சிறப்பாகவே அந்த பானம் இருந்தது. பின்னர் அதுவே பால்மாவின் அடையாளமாகிப்போனது.

பனம்பழங்கள் உணவிற்காக சுடப்படுகின்றன

பால்மாவுடன் இணைந்து பனம் பழச் சாறு தயாரிக்கும் ஒரு பயிற்சி பட்டறையினை தமிழக அளவில் நடத்தினோம்.  இந்த பனம்பழச் சாறு குறித்து அறிந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக காளிமார்க் குளிர்பானங்களின் அதிபரும் அதில் கலந்துகொண்டார். எங்களது திட்டம் பனம்பழங்கள் பனை மரத்திலிருந்து விழுந்த சில மணி நேரங்களில் வண்டு ஏறி உண்ணத்தகாததாக மாறிவிடும். ஆகவே இவைகளை சேகரித்து எப்படி அதிக நாட்கள் உணவுபொருளாக பயன்படுத்தலாம் என்பதாக இருந்தது. அவ்வகையில் பனம்பழச் சாறு என்பது ஒரு வருட அலமாரி ஆயுள் கொண்டது. தமிழகத்தில் வீணாகும் பனம்பழங்கள் அந்தந்த இடங்களில் சேகரிக்கப்பட்டு அவைகள் பயன்படுத்தப்பட்டால்,  உணவும் வீணாகபோகாது உபரியாக வருமானமும் கிடைக்கும் என்பது தான் எண்ணமாக இருந்தது.

பனம்பழம் உண்பதற்காக வேகவைக்கும் முறை

எங்களுக்கு பயிற்சியளிக்க திரு பால்ராஜ் அவர்கள் வந்திருந்தார்கள். மத்திய அரசு வழங்கிய பயிற்சியினைப் பெற்றவர் இவர். மிக எளியவராக பார்வைக்கு தோற்றமளிப்பவர் என்றாலும், மிக மிக திறன் வாய்ந்தவர். ஜெர்மனியிலுள்ள ஆய்வாளர்களுடன் இணைந்து பனை சார்ந்த ஆய்வுகளை குமரி மாவட்டத்தில் மேற்கொண்டவர். குமரி மாவட்டத்தில் கற்கண்டு விளையாது என்ற கூற்றை உடைத்து முதன் முதலாக கற்கண்டு அறுவடை செய்தவர் இவர். பால்மாவுடன் இணைந்து மேலும் ஒரு சில பயிற்சிகளை முன்னெடுக்க இது ஒரு நல் துவக்கமாக அமைந்தது.

முதல் பனம்பழம் ஸ்குவாஷுடன் ஜேக்கப்

பால்மா பனம் பழங்களில் செய்யும் ஸ்குவாஷ் விற்பனையில் இப்படித்தான் களமிறங்கியது. தனது எல்லைகளை குமரியை விட்டு விலக்கி தமிழகத்தின் பிற பகுதிகளில் காலடி எடுத்து வைக்க முற்பட்டது. மாத்திரம் அல்ல பனம்பழ ஜாம் போன்றவற்றையும் இன்று விற்பனை செய்துகொண்டிருக்கிறது. வரும் நாட்களில் பனம் பழங்களிலிருந்து அழகுசாதனபொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

பனம்பழம் ஸ்குவாஷ் பயிற்சி வழங்கு பால்ராஜ்

திரு அன்பையன் அவர்களுட னும் ஜேக்கப் அவர்களுடனும் சேவியர் அவர்கள் சந்தித்து உரையாடினார்கள். திரு அன்பையன் அவர்கள் தற்பொழுது பனை மரம் குறித்த பனையேறியின் பார்வையில் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழக அளவில் ஒரு பனையேறி எழுதும் முதல் புத்தகம் என்ற அளவில் இது ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.  புறப்படும் முன்பு, தேவையான ஸ்குவாஷ் மற்றும் கருப்பட்டிகளை வாங்கிக்கொண்டார்கள்.

அங்கிருந்து திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். இரவிபுதூர்கடையிலிருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் இடப்புறமாக இரயில் தண்டவாளத்தின் அருகில் செல்லும் சாலையினைப் பிடித்தால் வாழ்வச்சகோஷ்டம் என்ற பகுதியில் வாழும் தங்கப்பன் அவர்கள் வீட்டை அடையலாம். தங்கப்பன் என்பவர் என்னைப்பொறுத்தவரையில் பனையோலைக் கலைஞர்களுள் மிக முக்கியமான ஆளுமை. முறையான கல்வி கற்காதவர், ஆனால் வறுமையின் நிமித்தமாக தனது சிறு வயது முதலே உழைப்பில் ஊறிப்போய்விட்டவர். அவரது 12 வயது முதல் குடுவை செய்ய குடும்பத்தினருடன் அமர்ந்து உழைத்தவர்.

குடுவை என்பது பனையேறிகளின் அடையாளம்.  குடுவை என்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வழக்கொழிந்துபோனஒரு கலைப்படைப்பாகும். அன்றைய காலத்தில் பனை ஏறுகிறவர்கள், பனை மரத்தில் மண் கலயத்தினை கட்டியிருப்பார்கள். பனை மரத்திலிருந்து பதனீரை இறக்கி கொண்டு வர பனை ஓலையால் செய்யப்பட்ட பனையோலைக் குடுவையினை பயன்படுத்துவார்கள். திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் சுரை குடுகையினை இதற்கென பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

வழக்கொழிந்துபோன பனையோலை குடுவை பயிற்சி வழங்கிய தங்கப்பன் பயிற்சியாளர்களுடன்

பனையோலைக் குடுவை என்பது ஒரு செவ்வியல் படைப்பு. பனை ஓலைகளில் காணப்படும், குருத்தோலை சாரோலை, பனை நார், கருக்கு நார், பனை மட்டை, ஈர்க்கில் என அனைத்து பொருட்களையும் இணைந்து செய்யப்படுவதுவே குடுவையாகும். பனையோலைக் குடுவைக்கு இணையான ஒரு நீர் ஏந்தும் தாவர பாத்திரம் உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இருந்திருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு இனத்தின் நாடி நரம்பு அனைத்தும் பனை சார்ந்து துடித்தாலொழிய இவ்வித கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்க இயலாது. உலகில் வேறு எந்த பகுதியிலும் இதற்கு இணையான பொருள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

சுமார் தொண்ணூறுகள் வரைக்கும் மிக எளிமையாக கிடைத்துக்கொண்டிருந்த பனைஓலைக் குடுவைகள் பிற்பாடு அழிவை சந்தித்தன. எனது பனை மர தேடுதலும் விருப்பமும் குடுவையின் அழகில் மயங்கி தான் நிகழ்த்தன என நான் பனைமரச்சாலையிலேயே பதிவு செய்திருப்பேன். இப்படி பனை ஓலைக் குடுவை செய்யும் ஒரு நபரையாவது கண்டடையமுடியுமா என்று குமரி மாவட்டத்தை சல்லடையாக சலித்து தேடிக்கொண்டிருக்கும்போதுதான் தங்கப்பன் அவர்களை சந்தித்தேன். எனக்கு ஒரு குடுவை செய்ய்வெண்டும் என்று சொன்னபோது 1000 ரூபாய் வேண்டும், ஆறு மட்டை சாரோலைகள், மூன்று மட்டை குருத்தோலை மற்றும் ஆறு நீண்ட மட்டைகள் வேண்டும் எனக் கேட்டார். எனது அண்ணன் உதவியுடன் இவைகளை எடுத்துச் சென்று நான் கொடுத்தேன். 2017 ஆம் ஆண்டு அவர் எனக்கு இதனைச் செய்து கொடுத்தார். என்னைப்பொறுத்த அளவில், குமரிமாவட்டத்தில் இருக்கும் எஞ்சிய ஒரே குடுவை தயாரிப்பவர் இவர் தான். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் இருக்கக்கூடும். தஞ்சையிலும், பண்ணைவிளையிலும் குடுவை செய்கிறவர்களை சந்தித்திருக்கிறேன்.

தங்கப்பன் அவர்களைக் கொண்டு தான் குடுவை பயிற்சி இலங்கை ஆளவார் தோட்டத்தில் வைத்து நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 7 நபர்கள் வந்திருந்தார்கள். இருவர் ஆண்கள் மற்றும் ஐவர் பெண்கள். பயிற்சி காலம் ஒரு வாரம். எப்படியோ கஷ்டப்பட்டு பெண்கள் ஐவரும் ஆளுக்கொரு குடுவையினை செய்து முடித்தார்கள். தங்கப்பன் அவ்வகையில் ஒரு தலைசிறந்த ஆசிரியர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு சர்வதேச மலர்கண்காட்சிக்கு நான் திரு தங்கப்பன் அவர்களைத் தான் அழைத்தேன். பனை சார்ந்த ஒரு கலைஞரை விமானத்தின் மூலம் பயணிக்கச் செய்தது எனக்கு மனநிறைவளித்ததுடன் முதன் முறையாக பயணித்த அவருக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. பனை ஏறுகின்ற சங்கர் கணேஷ் அவர்களுக்கு உதவியாகவும் தனது கலைப்படைப்புகளுடனும் அங்கே வந்திருந்தார்கள்.

நாங்கள் அங்கே சென்றபோது தங்கப்பன் அவர்கள் மண் கிளைக்கும் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவியும் இரண்டு பேரபிள்ளைகளும் மட்டுமே இருந்தனர். தங்கப்பன் செய்யும் பொருட்களின் செய்நேர்த்தி என்பது இரண்டு கூறுகளால் ஆனது. ஒன்று அவரது கைகளில் ஒளிந்திருக்கும் கலை நேர்த்தி. இரண்டாவதாக அப்பொருளின் உறுதி அதன் மூலமாக அப்பொருள் நீடித்து உழைக்கும் தன்மை. திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு நான் முதன் முறையாக சென்றபோது, அவரது திருமணத்திற்கு அவரே செய்த பனையோலை பாயினைக் காண்பித்தார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த பாய், கருநாகத்தோல் போல் வழவழப்புடன் காணப்பட்டது. பனை பொருட்களை எடுத்து பயன்படுத்துவது என்பது அதன் மீதான ஆழ்ந்த பற்றுடன் செய்யப்படக்கூடியது என்ற படிப்பினையை தங்கப்பன் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதற்கென அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் கூறவில்லை. மாறாக தனது கைத்திறனால் உருவாக்கிய பொருட்களின் மூலம் அவர் பேசினார்.

அவர்கள் வீட்டில் செய்யப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் மற்றும் ஒற்றைமுக்கு தொப்பி போன்றவற்றை சேவியர், அவர்கள் கூறிய விலைக்கே வாங்கிக்கொன்டார். நாங்கள் தேடி வந்த பனையோலைக் குடுவை கிடைக்கவில்லை. ஆனால் எப்படியும் குடுவையினை உங்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று உறுதிகூறினேன். அங்கிருந்து நேராக மதிய உணவிற்கு ஜாஸ்மின் வீட்டிற்கு சென்றோம்.

மதியத்திற்குப் பின்பு கிராமிய வளர்ச்சி இயக்கம் (RDM) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றோம். பாரக்கன் விளை என்ற பகுதியில் இருக்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர், பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் நெருங்கிய நண்பரான அறிவர் அருட்திரு. இஸ்ரயேல் செல்வநாயகம். கிராமிய வளர்ச்சி இயக்கம், அப்பகுதியிலுள்ள பெண்களின் தொழில் வாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. தையல் மற்றும் வேறு பல வேலைவாய்ப்புகளும் இங்கு உண்டு. பெண்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகள் செய்யலாம். குமரி மாவட்டத்தில், பனை ஓலைகள் சார்ந்து அழகு பொருட்களைச் செய்யும் கடைசி தலைமுறையினரில் இவர்கள் குழுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த  இக்கலைஞர்களுக்குப் பின்பு அடுத்த தலைமுறையினர் இக்கலைகளை கற்றுக்கொள்ளாதது வேதனையானது.அங்கிருந்த பொருட்களைப் பார்த்த பின்பு, அங்குள்ளவர்களோடு சற்றுநேரம் சேவியர் உரையாடினார். பின்னர் அங்கிருந்து பனை ஓலையில் கடவம் செய்யும் பாலம்மாளைக் காண ஓலைவிளைக்கு செல்லலாம் என்று கூறினேன். சேவியர் சரி என்றார்.

சற்றேறக்குறைய மாலை 5 மணி ஆகிவிட்டது. என்னைப்பொறுத்தவரை பாலம்மாள் அவர்கள் கடவம் செய்வதில் நிபுணத்துவம் கொண்டவர். ஓலைகள் அவர்கள் பேச்சை கேட்கும். எவ்விதமான கடவம் வேண்டும் என்று கேட்டாலும் ஒரு மணி நேரத்தில் அவைகளைச் செய்து நமது கரத்தில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். அன்று நாங்கள் சென்றபோது சற்று வேலையாக இருந்தார்கள். ஆகவே நாங்கள் அருகிலுள்ள கடைக்கு தேனீர் குடிக்கப் போனோம். செல்லும் வழியில் “கூவக் கிழங்குகள்” விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் சேவியர் கண்டு ஆச்சரியத்துடன் சிறிது வாங்கிக்கொண்டார். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் இந்த கிழங்கு மிகவும் சுவையானது. வெண்மை நிறத்திலிருக்கும் இதனைக் கடித்து சுவைக்கையில் பால் ஊறி வரும். தனித்துவமான சுவைக்கொண்டிருக்கும். கொஞ்சமே கொஞ்சமாக கோதல் எஞ்சும். குமரியின் மேற்கு பகுதியிலுள்ளவர்களை “கிழங்கன்” என்று அழைப்பதற்கு அவர்கள் உணவில் பெருமளவில் சேரும் கிழங்குவகைகள் தான் காரணம். 

கடவம் முடையும் பாலம்மாள்

ஓலைவிளை ஜங்ஷனின் அருகிலேயே  பாறைகளை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் நாங்கள் சென்று நின்றோம். எவ்விதம் வளர்ச்சி என்ற பெயரில் நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என சேவியர் கூறினார். நமது வளார்ச்சி திட்டங்கள் எப்படி அழிவை நோக்கியதாகவே இருக்கின்றன என்பதை ஒரு பொறியாளராக அவர் விளக்கிக் கூறும்போது, சூழியல் சார்ந்த பொறுப்புணர்வு ஒரு சமூகத்திற்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்றன என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

பனையோலைக் கலைஞர்களைப் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படும். அவர்களிடம் சில குறிப்பிட்ட பண்புகள் காணப்படுகின்றன. அவர்கள் ஓலைகளை எடுத்து வைக்கும் அழகு, நேர்த்தி போன்றவை பிரமிக்க வைப்பது. அவர்கள் ஓலைகளை தெரிவு செய்வது கூட ஒன்றுபோலவே இருக்கும். எவ்வித சூழலிலும் இறுதி வடிவம் மிக அழகாக காட்சியளிக்கும் வண்ணம் செய்துவிடுவார்கள். பொருட்களைச் செய்வதில் உள்ள வேகம், கூடவே வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் திறன் என பல்முனை திறன் பெற்ற ஆளுமைகளாக இருப்பார்கள். பார்வைக்கு மிக அதிக ஓலைகளை விரயம் செய்வதுபோல காணப்பட்டாலும், மிக சிக்கனமாக ஓலைகளைக் கையாள்வது உடனிருந்து பார்ப்பவருக்குத்தான் தெரியும். பாலம்மாளுக்கு ஒருவேளை கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியிருந்தால் குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய கல்லூரியில் விரிவுரையாளராக மாறியிருப்பார். அப்படி பேச்சு கொடுப்பார்.

ஆரம்பத்தில் கடவம் குறித்து எனக்கு சரியான புரிதல் இருந்ததில்லை. ஆகவே கடவம் செய்பவர்கள் மேலும் எனக்கு முதலில் பெரிய மதிப்பு இருந்ததில்லை. ஆனால் பாலம்மாள் தனித்திறன் வாய்ந்தவர் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மூன்றடி சுற்றளவு கொண்ட ஒரு கடவத்தை செய்யும் திறன் எவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அன்னையைப்போன்ற ஒருவராலேயே ஓலைகளை தன் மடியில் குழந்தைகளைப்போல விளையாட விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலும்பி நிற்கும் ஓலைகளாய் வழிக்கு கொண்டுவரும் திறமை உண்டு. அவர்களின் கைகளுக்கு மட்டுமல்ல,  தனது பல்லாண்டு அனுபவத்தாலும் கரிசனையாலும் ஓலைகளை ஒன்றிணைப்பவர் என்பதனைக் கண்டுகொண்டேன்.

கடவம் செய்யும்போது, ஓலைகளில் ஈர்க்கில் கிழிக்கப்படாது. ஆனால் அதன் வயிற்றுப்பகுதி மட்டும் சற்று சீர் செய்யப்பட்டு இணைக்கப்படும். இதில் இணைத்திருக்கும் ஈர்க்கிலால் ஒரு புறம் இப்பெட்டிகள் உறுதி பெற்றாலும், மற்றொரு வகையில் பார்க்கும்போது ஈர்க்கில் இருப்பதால் இரட்டை ஓலைகள் இயல்பாக இப்பின்னல்களில் அமைந்துவிடுகிறது. இதற்கு மேல் பொத்தல் என்று சொல்லகூடிய அதிகப்படியான பின்னல் கடவத்தின் உறுதியினை மேம்படுத்தி நீடித்து உழைக்கச் செய்கிறது.

சிறிய கடவத்தினை நேர்த்தியாக உருவாக்கிக்கொண்டிருக்கும் பாலம்மாள்

கடவம் என்பது குமரி மாவட்டத்தில் செய்யப்படும் பெட்டிகளிலேயே மிகப்பெரிய வகையாகும். குமரி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக இவைகள் செய்யப்படுகின்றன. திருமண வீட்டில் அப்பளம் பொரித்து வைக்கவும், பழங்கள் எடுத்துச் செல்லவும், சோறு எடுத்துச் செல்லவும் இவைகள் பயன்பட்டன. சந்தைகளில் காய்கறிகள் வைக்கவும், சுமடு எடுத்து செல்லுகிறவர்கள், கடவங்களிலேயே பொருட்களை எடுத்துச் செல்லுவதும் குமரி மாவட்டத்தில் காணப்படும் அன்றாட காட்சி. மீன் விற்பவர்கள் பனை ஓலைக் கடவத்தில் தான் பல மைல்கள் கடந்து மீனை எடுத்துச் சென்று விற்பார்கள். அக்காலங்கள் ஐஸ் இல்லாத மீன்கள் விற்கப்பட்ட காலம். மேலும் எண்னை பிழியும் செக்கு இயக்கப்படுமிடங்களில் கூட பனை ஓலைக் கடவமே பயன்பாட்டில் இருக்கும். காயவைத்த தேங்காய்களை எடுத்துச் செல்ல இவைகள் பயன் பட்டன. வீடுகளில் உரம் சுமக்க, மண் சுமக்க மற்றும் சருகுகள் வார என பல்வேறு பயன்பாடுகள் இங்கே இருந்தன.

“கடவத்துல வாரியெடுக்கவேண்டும்” என்கிற சொல்லாடல் தெறிக்கெட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள் சொல்லுவது. “பெருசா கடவத்துல கொண்டுவந்துட்டா” என மருமகளைப் பார்த்து மாமியார் கேட்பதும் உண்டு.

கடவங்களில் அதன் நான்கு முக்குகள் தான் முதலில் பாதிக்கப்படும். அப்போது ஓலைகளை கொண்டு பெரியவர்கள் பொத்தி பயன்படுத்துவார்கள். பொத்தி எனும் வார்த்தை ஓட்டையை அடைப்பது என்பதுடன், அதனைப் பலப்படுத்துவது, மேலும் ஒரு வரிசை ஓலைகளை இணைத்துக்கொள்ளுவது என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. என் குழந்தையை பொத்தி பொத்தி வளார்த்தேன் என்பது கூட மிக கவனமாக ஒன்றன் பின் ஒன்றாக கவனித்து வளர்த்தேன் என்கிற பொருள்பெறுவது இப்படித்தான். அதிகமாக சாப்பிடுகிறவர்களை “கடவங்கணக்குல அள்ளி தின்னுகான்” என்பார்கள்.

ஓலைவிளையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பும் கூட நூற்றிற்கு மேற்பட்ட மக்கள் கடவம் பின்னுவதனையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பனை ஓலைகள் இங்கே கிடைப்பதில்லை. இராமநாதபுரத்திலிருந்து வருகின்ற ஓலைகளை நம்பியே இங்கே தற்போது தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓலைகள் பெரிய லாரியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் அவைகள் சிறிய டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஓலைகள் குறித்த காலத்திற்கு வராமை, ஓலைகளுக்கான விலையேற்றம், தரமற்ற ஓலைகள் என பல காரணங்களால் இன்று பெரும்பாலானோர் இதனை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

ஓலைகளை செய்து முடித்த பின்பு, சேவியர் ஒரு வேண்டுகோளை அவர்கள் முன்பு வைத்தார். இதே பெட்டி ஒடுங்கி சற்றே உயரமாக வரும்படி செய்ய முடியுமா? பாலம்மாள் முடியும் என்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யோசித்திருக்கவில்லை. உடனடியாக ஒன்றைச் செய்ய சொல்ல, அவர்கள் அதனை செய்து பார்த்தார்கள். இருட்டிவிட்டது. ஆனால் அவர்களது கைகளோ தட்டச்சு வேகத்தில் பின்னிக்கொண்டு சென்றது. இருளில் அதனையும் பொத்திக் கொடுத்தார்கள். ஆனால் கடவத்தின் நேர்த்தி கைகூடவில்லை. அது அப்படித்தான், ஒரே வடிவம், சீரான அமைப்பு என ஒருவர் பின்னிக்கொண்டு வருகையில், அதிலிருந்து மாறுதலான வடிவம் ஒன்றைச் செய்யச் சொன்னால் அது அத்துணை எளிதில் நடைபெறுவது இல்லை. சேவியர் அவர்கள் அதனைப் புரிந்துகொண்டார். அவர்கள் பாலம்மாளிடம் எனக்கு இதுபோல 5 பெட்டிகள் வேண்டும், பொறுமையாக செய்து அனுப்புங்கள் என அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றார்.

இரவாகிவிட்டதால் சேவியர் திரும்பவேண்டிய நேரம் வந்தது. ஆனால் அவர் சங்கர் கணேஷ் என்ற எனது நண்பனும், பனையேறியும், பனை ஓலைக் கலைஞனை காண விரும்பினார்கள். சங்கருக்கு அப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே பல்வேறு வேலைகளில் அவன் சிக்கிகொண்டதால், எங்களை சந்திக்க வரவில்லை. ஆகவே நான் கூறினேன், நாங்கள் உனது வீட்டைத்தான் நோக்கி வருகிறோம் என்று. அவன் வேலைகளை முடித்துவிட்டு எங்களை திக்கணங்கோட்டில் வைத்து சந்தித்தார். இரவு சற்றேறக்குறைய 9 மணி இருக்கும்.

சங்கர், தான் செய்த பொருட்களைக் அவருக்கு விளக்கி காட்டினான். விலைகளைக் குறித்து விசாரித்தபின், மெல்லிய சிரிப்போடு, இதனைவிட விலைகுறைவாக நேர்த்தியாக பழவேற்காட்டில் செய்வார்கள் என்றார். சேவியர் அவர்கள், என்னோடு பேசும்போது எப்படி அவர்களால் ஒரு சிறந்த தரத்தை கைக்கொள்ள முடிகிறது என்பதைக் குறித்து விவரித்தார்கள். ஓலைகள் பழவேற்காட்டைச் சார்த்தவை. ஒவ்வொரு பொருளும், ஆர்டரை முன்வைத்தே செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்கள் இவ்வித முறைமையினையே கைக்கொள்ளுகிறார்கள், ஆனால் பழவேற்காட்டைப் பொறுத்த அளவில், ஓலைகள், வாங்கப்பட்ட பின்பே பொருட்கள் செய்யப்படும். ஓலைகளை ஏற்கனவே வாங்கி பரணில் போட்டு பழைய ஓலைகளில் பொருட்கள் செய்யும் வழக்கம் அங்கே இல்லை. அவ்வகையில் பார்க்கும்பொது, பழவேற்காட்டில் உள்ள கூலி குமரி மாவட்டத்தை விட குறைவு. தயாரிப்பு செலவு இன்னும் குறைவாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் அவர்களது கலைத் திறன் மேல் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் சேவியர்.  

அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு தற்போது இல்லை. பாரம்பரிய பொருட்களைச் செய்வோர் மீது எனக்கு மிகப்பெரிய காதலுண்டு. எப்படி இஸ்லாமியர் வாயிலாக நமக்கு அழகிய கலைப்பொருட்கள் வந்திருக்கும் எனவும், எப்படி பரதவர் பெண்கள் பனை ஓலைக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நான் பார்த்தவரையில் மணப்பாடு மிகச்சிறந்த பனைக் கலைஞர்களைக் கொண்ட இடம். அவ்விடத்தில் பரதவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

பேச்சினூடே பரதவர்களுக்கும் பனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவர்கள் தயாரிக்கும் ஒரு உணவு பொருளை நீங்கள் சுவைத்துப்பாருங்கள் என்று கொடுத்தார்கள். வாழைப்பழத்தை பதனீரில் இட்டு இடித்து செய்யும் ஒரு தின்பண்டம். அல்வா போல இருந்தது. இன்னும் அனேக உணவுபொருட்கள் உண்டு என்றார். மிக அழகிய வேலைப்பாடுகள் மட்டுமல்ல, பல்வேறுவகைகளில் மீன்களைப் பிடிக்கவும், கள் உட்பட பல்வேறு உணவு பொருட்களை பனை சார்ந்து அவர்களே அமைத்துக்கொண்டுள்ளனர் என்றார். நாங்கள் மெய்மறந்து நின்றோம்.

உண்மையில், நமது உரையாடல் என்பது மேலோட்டமானது, நமக்கடுத்திருக்கும் நபர்களின் வாழ்வியல் சார்ந்து நாம் அறிந்தவைகள் மிகக்குறைவு. நான் 2017 – 2019 வரை குமரி மாவட்டத்தில்  தங்கியிருந்தபோது தான் நெய்தல் நிலத்திற்கும் பனைக்குமான தொடர்பைக் குறித்து ஆராய துவங்கினேன். நாங்கள் தங்கியிருந்த மிடாலக்காடு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் குறும்பனை என்ற கடற்கரை கிராமம் இருக்கின்றது. குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே, தென்னை மரங்களால் நிறைந்தவை. தென்னைகள் என்பவை பனைகளுக்கு மாறாகவும், புன்னை மரங்களை அழித்தும் வேரூன்றியவை. அப்படியானால் குறும்பனை? நாங்கள் தேடி சென்றபோது இன்னும் சிதைவுறாமல் ஒரு பனங்காடு அங்கே இருப்பதைப் பார்த்தேன். கன்னியாகுமரி, சொத்தைவிளை மற்றும் முட்டம் போன்ற கடற்கரைகளில் இன்றும் பனைமரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கடற்கரையில் வாழும் மக்களுக்கு பனை மரம் மிகவும் நெருக்கமானது தான் சந்தேகம் இல்லை.

நான் பழவேற்காடு பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் கூறினேன். அவர் தங்கும் வசதி எதுவும் கிடையாது என்றார். எப்படியாவது ஓரிடத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்றேன். பார்க்கிறேன் என்றார். நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் ஏதும் இருக்காது, ஆனால் வாருங்கள் என்றார். கண்டிப்பாக பழவேற்காட்டில் சந்திப்போம் என்று கூறி பிரிந்தோம். அவர் காரில் நாகர்கோவில் செல்ல சங்கர் தனது பைக்கில் என்னை தேவிகோடு அழைத்துச் சென்றார். வீட்டில் இருவருமாக இரவு உணவைச் சாப்பிட்டோம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 4

ஜனவரி 12, 2021

ஓலைகளினூடாக

கேரள தமிழ்நாடு எல்கையான களியக்காவிளை வந்தபோது தடுத்து  நிறுத்தப்பட்டோம். எட்டு வயது மித்திரனைத் தவிர அனைவரும் கண்டிப்பாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பரிசோதனை முடிந்து புறப்படும்போது நள்ளிரவு ஒரு மணி. மூன்று நாளைக்கு பிறகு தான் முடிவு வரும் என குறுஞ்செய்தி வந்தது.

காலை என்னைத் தேடி பொறியாளர். சேவியர் பெனடிக்ட் அவர்கள் வருவதாக சொல்லியிருந்தார். சேவியர் அவர்கள் பனை மீது தீரா விருப்பு கொண்டவர்கள். பல சர்வதேச பயணங்களை மேற்கொண்டவர். உலகிலுள்ள பல்வேறு வகையான பனைகளை மட்டுமே தேடி தேடி சேகரித்து தனது  தோட்டத்தில்  நட்டு பராமரித்தவர்.. தற்போது பழவேற்காடு பகுதிகளில் உள்ள பரதவர் பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் செய்யும் பயிற்சிகளை கொடுத்து வருகிறார். அதன் மூலமாக அங்குள்ள பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவருகிறார். நான் பனை சார்ந்து இயங்குகிறேன் என்றால் அவர் அதனை விட பலமடங்கு வீரியமாக பழவேற்காடு குறித்து இயங்குகிறவர்.  நான் தமிழகம் வருகிறேன் என்றவுடன் அவரது தென் மாவட்ட பயணங்களோடு கன்னியாகுமரி பயணத்தையும் இணைத்துக்கொண்டார்.  அன்று காலை கார் முழுக்க தனது பயணத்தில் சேகரித்த பனை பொருட்களை எடுத்து வந்திருந்தார் சேவியர். கன்னிப்பெட்டி என்ற ஒரு அழகிய பெட்டியை எனக்கு பரிசாக கொடுத்தார்.

சேவியர் தென் தமிழகத்தில் தாம் சேகரித்த பனை ஓலை/ நார் பொருட்களுடன்

கன்னிப்பெட்டி குறித்து நான் 20 வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். மார்த்தாண்டம் சந்தையில் பனை ஓலைகள் சேகரிக்கச் சென்றபோது அங்கே இவ்வித பெட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருமண வாழ்வினை எட்டுமுன் ஒரு பெண் இறந்துபோனால், இவ்விதமான கன்னிப்பெட்டியில் துணிகள் மற்றும் சில பூஜைக்குரிய பொருட்களை வைத்து அதனை உறவினர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ கொடுக்கும் வழக்கம் இன்றும் தென் மாவட்டங்களில் இருக்கிறது.

சேவியர் எடுத்துவந்த கன்னிப்பெட்டிகள் ராமனாதபுரம் பகுதிகளில் மட்டுமே செய்யப்படுகின்ற ரகம் என்பதை நான் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டேன். மிகவும் நேர்த்தியாக பின்னப்படுகின்ற இவ்வகை பெட்டிகள் விலை மலிவானவை. 250 ரூபாய்க்குள் இப்படியான ஒரு பெட்டியினை நாம் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாங்க முடியும். அப்படியானால் தயாரிப்பவர்களுக்கு 100 ரூபாய் கிடைப்பதே அபூர்வம்.

கன்னிப்பெட்டியின் பின்னல் இரட்டை அடுக்கானது. சற்றே அகலமான சாரோலைகளைக்கொண்டு உட்புற பின்னலும் மெல்லிய குருத்தோலைகளும் வண்ணமேற்றிய ஓலைகளையும் கொண்டு வெளிப்புறமும் பின்னப்பட்டிருக்கும். உட்புற பின்னல் கூட்டல் வடிவிலும் வெளிப்புற பின்னல் பெருக்கல் வடிவிலும் இருப்பது இவ்வித கலைஞர்களுக்குள் உறைந்திருக்கும் பின்னல் திறமைகளுக்கு சான்று. மிக நேர்த்தியாக, சர்வதேச தரத்தில் விளிம்பு கட்டப்பட்டிருக்கும். கைப்பிடியானது பெட்டியின் அடிப்பகுதி வழியாக வந்து பெட்டிக்கு மேற்புறம் எழுந்து நிற்கும். இந்த பெட்டிக்கு கீழ்புறம் இருப்பதைப் போன்ற வடிவில் மேற்பகுதியில் சிறிய அளவில் பின்னி மூடி இட்டிருப்பார்கள்

கன்னிப்பெட்டிகள் என்பது பல்வேறு வகைகளில் இருக்கும் என்றே நினைக்கிறேன். குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய பெண்மணி ராஜாவூர் பகுதிகளில் இவ்வித கன்னிப்பெட்டிகள் செய்வதாக கேள்விப்பட்டு ஓரிருமுறை அவர்களை சந்திக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறேன். நமது நாட்டார் மரபுகளில் இஸ்லாமியரின் பங்களிப்பு இணைந்திருக்கிறது என்பது நமது பண்பாட்டின் விரிவை விளம்பும் சான்று. சமயங்களுக்கிடையில் இருந்த நல்லுறவுகளை எடுத்தியம்பும் பனை அனைத்து சமயங்களுக்கிடையிலும் ஒரு சமாதான தூதுவராக நிலைநிற்கிறது. குமரி மாவட்டத்தில் பின்னப்படுகின்ற இந்த கன்னிப்பெட்டி பார்வைக்கு சாதாரண மூடிபோட்ட பெட்டியைப்போலிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் தஞ்சாவூர்  சென்றிருந்தபோது அங்கும் ஒரு கலைஞர் கன்னிப்பெட்டி செய்திருந்தார். வடிவநேர்த்தியில்  குமரிமாவட்டத்திற்கும் இதற்கும் பெருத்த ஒற்றுமைகள்  இருந்தன. ஒரு சில சிறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இவ்வித வித்தியாசம் என்பது மாவட்டத்திற்கான வித்தியாசம் என நாம் புரிந்துகொண்டாலும், பனை ஓலைகள் பரந்துபட்ட தமிழக  காலாச்சார சடங்குகளில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.

சேவியர் கொண்டுவந்த  பனை ஓலைப் பொருட்களின் வகைகளைப் பார்க்கும்போதே அவர் தமிழகத்தின் எப்பகுதிகளையெல்லாம் கடந்து வந்திருப்பார் என என்னால் யூகிக்க முடிந்தது. அவர் வைத்திருந்த ஒரு அழகிய கோழி குஞ்சுகளை இட்டுவைக்கும் பெட்டி என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் அதை குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே வடிவிலான படத்தை நான் பார்க்கவும் செய்திருக்கிறேன், ஆனால், அதனை யார் தயாரிக்கிறார்கள் என என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது உற்சாகத்தைப் பார்த்து சேவியர் இதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். ஆம்,  அவர்களின் தாராள குணத்திற்கு அளவே கிடையாது.  நான்  தான் வேண்டாம் என்றேன். இதனை தயாரிப்பவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எனது தாகமாக இருந்தது. குருத்தோலை ஈர்க்குகளால் கட்டில் பின்னல்கள் போல் அறுகோண வடிவில் பின்னப்பட்ட அந்த கூடு ஒரு, அழகிய கலைப் படைப்பு. குமரி மாவட்டத்திலோ தமிழகத்தின் பிற பகுதிகளிலோ காணக்கிடைக்காதது. இவ்வித கோழி குஞ்சுகளை விடும் கூடுகள் செய்யும் ஒரே ஒரு பாட்டி திசையன் விளையில் இருகிறார்கள் என்ற குறிப்பையும் சேவியர் எனக்குக் கொடுத்தார். இவ்வித கலைஞர்களே நமது  தேசிய சொத்து என்ற எண்ணமே என்னுள் எழுந்தது.   இவ்வித தனித்துவ திறன் மிக்க கலைஞர்களை  எவ்வகையிலும் எவரும்  பொருட்படுத்துவதில்லை.

கோழிக்குஞ்சுகளை அடைக்கும் பனை ஈர்க்கில் கூடு

நான் அவருக்கு ஆரே தூய பவுல் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையிலிருந்து எடுத்து வந்த அட்டைபெட்டியில் குமரி மாவட்ட பனை விதையைக் கொடுத்தேன். ஜாஸ்மின் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு மரத்திலிருந்து எடுத்த விதை அது. கருப்பு காய்ச்சி ரகம். ஒவ்வொரு பழமும் பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட 2.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் சிலர் இதனை யாழ் விதை எனக் கூறுவார்கள். பெயர்கள் எப்படியிருந்தாலும், இது யாழ் விதை அல்ல என்பதே எனது எண்ணம். குமரி மாவட்டம் மட்டுமல்ல, மும்பை பகுதியில் கூட இவ்வித பெரிய பழங்களை நான் கண்டிருக்கிறேன். திருநெல்வேலி அம்பாசமுத்திரம், தென்காசி, தூத்துக்குடி, பகுதிகளிலெல்லாம் மூன்று கிலோவைத் தாண்டிய பனம்பழங்கள் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மிகப்பெரிய தேங்காயைப் பார்க்கும்போது, அது யாழ்பாண தேங்காய் என கூறப்படுவதால், பனம்பழங்களிலும் ஒரு யாழ் பனம்பழத்தை யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

பனை விதை பெட்டியினை சேவியர் அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்.

2013 ஆம் ஆண்டு, நான் கம்போடியா சென்றபோது அங்கோர்வாட் அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு இளநீர் ஒரு டாலர் மட்டுமே. அந்த தேங்காய் மிக மிக பிரம்மாண்டமானது. இந்தியாவில் அதற்கு இணையான தேங்காய்களை நான் பார்த்ததே இல்லை.  அது போலவே, பர்மா சென்றிருந்த போதும் நானும் எனது குக்கி பழங்குடியின நண்பன் மாங்சா ஹோப்கிப்பும்  (Mangcha Haopkip)  இணைந்து  ஒரே இளநீரை பகிர்ந்து குடித்தோம். இந்தியாவில் காணப்படும் இரண்டு மிகப்பெரும் தேங்காய்களிற்கு இணையானது அங்கு விற்கப்படும் ஒரே தேங்காய். அப்படியானால் இலங்கைக்கும் நமக்கும் உள்ள உறவின் வெளிப்பாடாகவே இப்பெயர் சூட்டல் இருக்கிறது என நான் கருதுகிறேன். மேலும் பனை மரத்திற்கு யாழ்பாணம் என்பது ஒரு மைய்யம் கூட.

கருப்பு காய்ச்சி பனம்பழம்

சேவியர் அவர்களுக்கு மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் செல்ல வேண்டும் என்னும் ஆசை இருந்தது. பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைக் குறித்து அவர் கேள்விபட்டிருக்கிறார்.  2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை இங்கே நான் பணியாற்றியிருக்கிறேன். ஆகையினால், அந்த அலுவலகத்திற்குள் உரிமையோடு செல்லுவேன். ஆகவே அந்த அலுவலகத்திற்கு முதலில் செல்ல தீர்மானித்தோம்.

பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள் 1975ஆம் ஆண்டு பனைத் தொழிலாளர்களுக்காக ஒரு இயக்கத்தை மார்த்தாண்டம் பகுதிகளில் ஆரம்பித்தார். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்ற மாபெரும் இயக்கம்,  பனை தொழிலாளர்களது வாழ்வில் மரணம் மற்றும் நிரந்தர ஊனம் போன்ற சவால்களை எதிர்கொள்ளும்படியாக துவங்கப்பட்டது. மிக நுண்மையாக பனை தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கண்டறிந்து அவைகளை தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அக்காலங்களில் பனை தொழிலாளர்களுக்கு பதனீர் காய்ச்சுவதற்கு விறகு என்பது மிக முக்கிய தேவையாக இருந்தது. ஆனால் குமரி மாவட்டத்தில் போதுமான விறகுகள் கிடையாது. அச்சூழலில், பிற மாவட்டங்களிலிருந்து லாரிகளில் விறகுகளை வர வைத்து தேவையானவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது.

பேராயர் உலக கிறிஸ்தவ மன்றத்தின் தலைவராக இருந்தவர். ஆகவே அவரால் சர்வதேச உதவிகளைப் பெற முடிந்தது. உலகில் எங்குமே நிகழாத பனை தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி, அவர்களுக்கான உதவிகள், மற்றும் புது தொழில்நுட்பங்களை கண்டடைந்து அவர்கள் பொருட்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்ல பேராயர் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், பனைத் தொழிலாளர்களது மரணம், அவர்களின் வாழ்வில் ஏற்படும் நிரந்தர ஊனம் மற்றும் சமூகத்தின் பார்வையில் இழிவாக காணப்பட்ட அன்றைய சூழல்  பேராயரது சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கூடவே பனைத் தொழிலாளர்களுக்கு சமூகத்தில் இருந்த அங்கீகாரமற்ற சூழ்நிலை இவர்கள் வாழ்வை மாற்றினால் ஒழிய இவர்களை மீட்கவியலாது என்ற எண்ணத்தை பேராயர் அவர்களுக்கு கொடுத்தது.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தொண்ணூறுகளின் மையப்பகுதிகளில் “வளர்ச்சி” என்ற நோக்கில் செயல்பட ஆரம்பித்தன. அன்றைய சூழலில் பனை அது சார்ந்து வாழும் மக்களுக்கு ஒரு கால்விலங்கு என கணிக்கப்பட்டதும் அவ்விலங்கினின்று உதறி மேலெழுவதுமே அன்றைய சவாலாக இருந்தன. ஆகவே பனையேறிகள் பனைத் தொழிலை விட்டு வெளிவருவதற்குண்டான கடனுதவி போன்றவைகளை மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளார்ச்சி இயக்கம் முன்னெடுத்தது. பனை மர தொழிலாளர்களை சிறு பெட்டிகடைகள் வைக்கவும், பழைய குடிசை மற்றும் சிதிலமடைந்த வீடுகளை மாற்றி நவீன வீடுகளை கட்டிக்கொள்ளவும், கல்வியில் உயர பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை என பல்வேறு உதவிகள் செய்து அவர்கள் பொருளியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்றம் பெறச் செய்தார் பேராயர்.

பனையோலையில் செய்யப்பட்ட பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் படம்

இந்த பணியில் அவர்கள் நிர்தாட்சண்யம் இல்லாமல் பனை மரங்களை கைவிட்டனர். அதற்கு காரணம் பனையா மனிதனா என்கிற கேள்வி முன் பேராயர் தன் தேர்வை வைக்கவேண்டிய சூழலில் இருந்தார். அதாவது, பனை சார்ந்த வாழ்வு சமூக அங்கீகாரத்தையோ பொருளியல் நன்மையையோ கொடாது என அறிந்தபோது, பனையையும் பனைத்தொழிலாளர்களையும் பேராயர் அவர்கள் பிரித்தார். பனை மரங்கள் பனையேறியின்றி வீணாக நிற்பதைக் கண்டவர்கள் அதனை வெட்டிவிட்டு வீடுகளை வைக்கவோ, ரப்பர் தோட்டம் வைக்கவோ அல்லது தென்னை மரங்களை வைக்கவோ முன்வந்தனர். அன்றையகுறைந்த வருமானம் மற்றும் சமூகத்தில் தாழ்வாக பார்க்கப்பட்ட பனையேறிகளுக்கு பேராயர் வழங்கிய திசை சரியானதே. ஆனால் எதிர்காலத்தில் பனைகள் கைவிடப்பட்டு அழியும் என்பது அவர் எண்ணிப்பார்த்திராதது.

பேராயர் அவர்களை நான் 1999 ஆம் ஆண்டு ஐக்கிய இறையியல் கல்லூரியில் முதன் முறையாக சந்தித்தேன். எங்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் அருட்திரு ஞானா ராபின்சன் அவர்கள் என்னிடம், பேராயர் சாமுவேல் அமிர்தம் வந்திருக்கிறார்கள் நீ  அவரை சந்திப்பது நல்லது என்றார். கல்லூரி முன்பு இருக்கும் புல்தரையை சுற்றி செல்லும் சாலையில் தனது ஊன்றுகோலோடு பேராயர் நடந்துகொண்டிருந்தார், நான் அவருடன் இணைந்துகொண்டேன்.  என்னை அறிமுகப்படுத்திவிட்டு, பனை ஓலையில் நான் செய்த விசிடிங் கார்டு, வாழ்த்து அட்டைகள், புத்தக குறிப்பான், மற்றும் அழகிய பனை ஓலையாலான ஃபைல் ஒன்றையும் காண்பித்தேன்.  அனைத்தும் நன்றாக இருக்கிறது எனச் சொன்னவர், இவைகள் நமக்கு சோறு போடாது என்றார். எனக்கு “பக்”கென்றது. ஆனால் அவர் என்னிடம், நீ இப்போது படி, பிற்பாடு இவைகளைக் குறித்து நாம் பேசலாம் என்றார்.

பேராயர் அவர்கள் பதநீரை பாட்டிலில் அடைப்பது எப்படி என  ஜெர்மனி தேசத்திலிருந்து  அறிஞர்களை இங்கே அழைத்து வந்து,  பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். மேலும் இரண்டு முறை பனை ஏறுவதற்கு பதிலாக ஒருமுறை ஏறிவிட்டு பதனீரை மேலிருந்து ஒரு குழாயில் பனைமரத்தின் அடிப்பகுதி வரை கொண்டுவந்து அதனை சேகரிக்கும் வழிமுறைகள் என பலவற்றை பரிசோதித்து பார்த்தவர். குமரி கேரளா எல்லையில் இருக்கும் கோட்டவிளை என்ற தோட்டத்தில் புகையில்லா பதனீர் காய்ச்சும் அடுப்பு ஒன்றை மாதிரியாக இன்றும் வைத்திருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் முதன் முறையாக விஞ்ஞான முறையில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தான் அறிமுகப்படுத்தியது.  உலகமயமாக்கலில், பனை தொழில் பின்தங்கியே இருக்கிறது என புரிந்ததால் தான் அவர், பனை தொழிலை விட்டு வேறு வகையில் மக்கள் பொருளியல் மற்றும் சமூக உயர்வை அடைய உதவினார்.

எண்பதுகளில் பனை சார்ந்து சர்வதேச தளங்களில் பெரும் வீச்சுடன் இயங்கிய அறிஞரான Dr. T. A. டேவிஸ் அவர்களும், “பனையும் வறுமையும் இணைந்தே இருக்கும்” (Palmyra and poverty goes together) என்றார். இவைகள் இரண்டையும் நான் ஒன்றாக இணைத்தே நான்  புரிந்துகொள்ள  முயற்சிக்கிறேன். அதாவது பனை சார்ந்த எந்த நிறுவனமும் அமைப்பும் பனை தொழிலாளர்களை கைத்தூக்கிவிட இயலாது என்பது தான் உண்மை. பனை தொழிலாளர்கள் வைத்த எந்த கோரிக்கையும் இதுவரை  எந்த அரசாலும் செவிகூரப்பட்டதும் இல்லை. ஏனென்றால், சந்தை பொருளாதார காலகட்டமான இன்றும்  கூட பனையேறிகள் தங்கள் தொழில் அடிப்படையில் ஒரு பழங்குடியின சமூகமாகவே நீடிக்கின்றனர். ஆனால் அவர்களை சமூக அடையாளப்படுத்துதலில்  பிற்படுத்தப்பட்ட மக்களாக இச்சமூகம் ஏற்றுகொண்டுள்ளது. ஆகவேதான் பனையேறுகிறவர்களுக்கு எது தேவை என இங்கிருக்கும் மக்களால் எடுத்துச் சொல்ல முடியாத நிலை இருக்கின்றது. பழங்குடியினர் வாழ்வில் நிலம் மற்றும் அவர்களது உரிமைகளை எப்படி கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டுமோ அப்படி பார்ப்பது மட்டுமே இவ்வித மக்களின் விடுதலைக்கான துவக்கமாக அமையும்.

பனை மரங்கள் மீதான உரிமை பனையேறிகளுக்கு வேண்டும். அவர்கள் அதிலிருந்து பெறும் எவ்வித பொருட்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கலாகாது. பனைத்தொழில் சார்த்த விற்பனை உரிமையும் அவர்களிடம் இருக்கவேண்டும். அல்லது அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இவைகளை முன்னெடுக்கவேண்டும். இப்படி இருந்தாலே எதிர்காலத்தில் பனை சார்ந்து வாழும் மக்கள் ஏதேனும் நற்பயன் பெறுவார்கள். இன்று கூட தமிழகத்தில் பனையேறிகளைச் சுரண்டிப் பிழைக்கும் பெரு முதலாளிகள் உண்டு. தங்கள் கோட்டைக்குள் பனையேறிகளை சிறை வைத்து மிககுறைந்த கூலி கொடுத்து மனசாட்சியே இல்லாமல் பனையேறிகளின் வாழ்வோடு விளையாடிக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பனையேறிகளை காக்கும் வழிமுறை என்பது விரிவாக ஆராய்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது.   சேகரிக்கும் பொருளாதாரத்தை வாழ்வியலாக கொண்ட ஒருவனை சந்தை பொருளாதார வாழ்வு நோக்கி நகர்த்துவது என்பது கவனமாக செய்யப்படவேண்டிய ஒன்று. மிகுந்த கரிசனையுடன், இதன் நுண்மைகளை விளங்கிக்கொண்டாலொழிய பனையேறிகள் வாழ்வில் எவ்வித நன்மைகளும் விளையாது என்பது தான் உண்மை.

பனை சார்ந்த பொருளாதாரம் என்பன போன்ற பேச்சுக்கள் இன்று அனாயாசமாக பேசப்படுகின்றன. இவைகள் யாவும் ஒரு இடைத்தரகரின் நோக்கில் பேசப்படுகின்றதே ஒழிய, உண்மையான பனை பொருளியல் என்பது என்ன? அது கிராம சூழலில் எப்படி இயங்கும் என்பது போன்றவைகளை ஆராய்வது இல்லை. பெரும்பாலும் பனை சார்ந்த பொருட்கள் நகரத்திலும்  வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படும் வாய்ப்புகளுக்காகவே  காத்திருக்கிறது. இதற்கு நேரெதிராக கள், உள்ளூர் சந்தையின் பலத்தையும் பனையேறிகளின் விடுதலையையும் ஒருசேர வெளிப்படுத்தும் சக்தியாக இருக்கிறது. கள் என்கிற ஒற்றை பொருளிற்கான விடுதலை பனை சார்ந்த பிற பொருட்களை தடையின்றி தாராளமாக பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படியானால் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொழிலை இன்று நாம் எப்படி வெற்றிகரமான ஒன்றாக மாற்றுவது? இரண்டு வழிகள் எனக்கு தென்படுகின்றன. ஒன்று நமது இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இன்று இல்லை. பனை மரம் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எவ்வித பொருள் முதலீடுமின்றி உடனடி வேலை வாய்ப்பை வழங்க வல்லது. இரண்டாவதாக, பனை சார்ந்த வாழ்க்கை முறை நமது பிற தேவையற்ற நவீன சார்புகளை தவிர்க்கும். அவ்வகையில் மிகப்பெரிய அளவில் நமது செலவினங்களை மிச்சப்படுத்தலாம். மேலும், இன்று பனை சார்ந்த  உணவுகளின் தேவை மிக அதிகமாக இருக்கிறது ஆகவே இத்தொழிலில் இறங்கும் இளைஞர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் இருக்கிறது. கலப்படமில்லா இவ்வித உணவுகள் நமது சமூகத்தின்  ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.   நமது இளைஞர்கள் பனை ஏறுவதை முழுநேர தொழிலாக கூட எடுத்துக்கொள்ளவேண்டாம். வீட்டின் அருகில் நிற்கும் ஓரிரு மரங்களில் ஏறி வீட்டு தேவைக்கென பதநீரோ கள்ளோ இறக்கினால் போதும். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழும்.

நாங்கள் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்க வளாகத்திற்குள் சென்றோம். அலுவலகம் அமைதியுடனிருந்தது. திரு சந்திரபாபு அவர்களை சந்தித்தோம். நான் சேவியர் அவர்களை அறிமுகப்படுத்தினேன்.  சேவியர் அவர்களுக்கு பனை சார்ந்த பொருட்கள் மீதான விருப்பமிருந்ததால் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின்  கைவினை பிரிவு நோக்கி சென்றோம். அங்கே தற்பொழுது பனை ஓலையில் தொப்பி செய்யும் ஒரு சிறு அலகு மட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருப்பவர்கள் அனுமதியுடன் சேவியர் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இதன் பொறுப்பாளராக இருக்கும் திருமதி ராணி அவர்களை எனது சிறு பிராயம் முதல் நான் அறிவேன். அவர்கள் தேவையான தொப்பிகளை எடுத்து காண்பித்தார்கள். 

இங்கு செய்யப்படும் தொப்பி வெளிநாட்டு கெளபாய் தொப்பிகளைப் போன்றது. அதற்கான பெரும் சந்தை இருக்கின்றது. கொரோனாவினால் அனைத்தும் முடங்கிவிட்டன என ராணி அக்கா சொன்னார்கள். சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வர வைக்கும்படியாக மூன்று அளவுகளிலும், மெக்சிகன் வடிவில் மிக பிரம்மாண்டமான தொப்பிகளும் இங்கே செய்கிறார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத ஒரு முறைமை இங்கே கைக்கொள்ளப்படுவதை நாம் பார்க்கலாம். ஓலைகளை சன்னமாக வகிர்ந்து சடையாக பின்னிக்கொள்ளுவார்கள். அவைகளை மீட்டர் கணக்கில் வாங்கி சேகரித்து வைத்துக்கொண்டு பின்னர் தையல் எந்திரத்தில் வைத்து தைத்து அழகிய தொப்பியாக மாற்றிவிடுவார்கள். இவ்வித செயல்பாடு என்பது கலை நுணுக்கம் வாய்த்தது அல்ல, ஆனால் சந்தையின் தேவைகளை விரைந்து சந்திக்க இயலும்.

குமரி மாவட்ட மீனவர்களில் பலர் இதனை அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். கடலுக்குள் செல்லும்பொது இவ்வித தொப்பிகள் வெயிலிலிருந்து மீனவர்களை காக்கும் ஒன்றாக இருக்கிறது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றூலா பயணிகள் இதனை அதிகமாக வாங்கிச் செல்லுகிறார்கள். தயாரிக்கும் இடத்தில்  சுமார் 50 ரூபாய்க்கு கிடைக்கும் இவ்வகைத் தொப்பிகள் மிகவும் மலிவானவைகள்.

பனை சார்ந்த பொருட்களின் தேவை இந்த நாட்களில் அதிகரித்திருக்கிறதைக் காண்கிறோம். ஆனால் அவைகள் மிகவும் ஆபத்தானவை என நான் கண்டுகொண்டேன். இன்றைய சந்தை தேவை என்னவாக இருக்கிறது என்றால் வண்ணம் மிக்க பனையோலை பொருட்கள் தான். வெகு சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன். பெரும்பாலான பனைஓலை நுகர்பொருட்கள் என்பவை ஒற்றைமுறை பயன்பாட்டிற்கானது. அழகென காணப்படவேண்டும் ஆகையால் குருத்தோலைகள் கோருவது. ராமநாதபுரம் முதல் தமிழகத்தின்  பிற பகுதிகளில் வெட்டப்படும் பனை மரங்களில் இருந்து தான் இன்று பெரும்பாலான ஓலைகளின் தேவை சந்திக்கப்படுகிறது. இவைகள் எப்படி ஒரு நீடித்த வாழ்வியலை ஏற்படுத்தும்?  நெகிழிக்கு மாற்றாக இங்கே பனை ஓலைகள் முன்வைக்கப்படுவது மிகவும் அதிர்ச்சிகரமானது. ஏனென்றால், பனைஓலையில் வாங்குகின்ற பொருட்களை விசிறிவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது, நெகிழியைப்போல நம்மால் எப்போதும் பனை ஓலைப் பொருட்களை விசிறிக்கொண்டிருக்க இயலாது. அதன் பயன்பாடு எப்போதும் அப்படி இருந்ததில்லை.

பனை சார்ந்த பொருட்களை பனையேறிகள் பயன்படுத்தும் விதத்தைக் குறித்து அறிந்துகொண்டால், நாமெல்லாம் பனை சார்ந்த பொருட்களை புனிதம் மிக்கதாக கருதி அவைகளை பாதுகாப்போம். அவைகளை எவ்விதம் கையாளவேண்டும் எனவும் தேவையின்றி அவைகளை  வீணடிக்கமாட்டோம். நான் அறிந்த பனை ஓலைப்பாய் கலைஞரான தங்கப்பன் அவர்கள் ஒரே பனையோலைப் பாயினை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். கருங்கல் பகுதியை அடுத்த காட்டுவிளையைச் சார்ந்த பனையேறும் செல்லையா அவர்கள் தான் தயாரித்த வெற்றிலைப் பெட்டியினை ஏழு ஆண்டுகளாக பயன்படுத்திவருகிறார். பதனீர் எடுத்துவரும் குடுவைகளை இரண்டு ஆண்டுகளாவது நீட்டிப்பது பனையேரிகளுக்கு வாடிக்கை. ஆழ்ந்து நோக்குகையில், நமது பாரம்பரிய பொருட்கள் யாவும் நமது அன்றாட பயன்பாட்டில் இணைந்திருப்பதாகவும் சூழியலை மாசு படுத்தாததாகவும் நீடித்து உழைக்கும் தன்மைகொண்டதாகவும் இருந்திருக்கிறது. இப்படி, ஒரு பொருளை பயன்பாட்டு பொருளாக ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தும் வழக்கம் நம்மிடம் குறைந்து வருகிறது. தமிழகம் இன்று ஆண்டுக்கணக்கில் வைத்து பராமரிக்கும் ஒரே பொருள் முறம் தான். இன்று பிளாஸ்டிக் முறத்தின் வரவால் பனையோலை முறம்  தயாரிப்பவர்களது வாழ்வு மிகப்பெரும் அடியை சந்தித்திருக்கிறது. புதிய தலைமுறையினருக்கு முறத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என தெரியவில்லை. முறம் இல்லா சமையலறை என்கிற அளவிற்கு நவீன வாழ்க்கை மாறிவிட்டது. இவைகள் யாவையும் ஒட்டுமொத்தமாக சீர்தூக்கிப் பார்க்கையில், பனை சார்ந்த கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பது தெரியும்.

அப்படியானால் இன்று தயாரிக்கப்படும் ஓலைபொருட்களை நிறுத்திவிடவேண்டுமா என்ற கேள்வி எழும்பலாம்? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனேயே இன்று அப்படி செய்ய இயலாது. அப்படி செய்வது சரியுமாகாது. சற்றே நிதானித்து எதிர்காலத்திற்கான பொருள் என்ன என எண்ணி மக்களின் வாழ்வில் என்றும் இணைத்திருக்கும் பொருட்களை அறிமுகப்படுத்தி பனை பொருட்கள் அன்றாட வாழ்வில் நிலைபெறச் செய்வதே நமது கடமையாகிறது. எனது தொப்பி, திருமறை பை போன்றவைகள் அவற்றையே வலியுறுத்துகின்றன. பனை ஓலையுடன் பனை நார் இணைந்துகொள்ளும்போது அப்பொருள் அமரத்துவம் பெறுகிறது.

சேவியர், தான் எதிர்பார்த்தது போல மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பிரம்மாண்டமாக இல்லை என்று குறிப்பிட்டார். அது உண்மை தான். செயல்பாட்டளவில் அது குமரி மாவட்டம் மட்டுமல்ல தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்திய ஒரு நிறுவனம், இன்று அதன் சுவடுகள் மறைந்துபோய்விட்டன.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 3

ஜனவரி 5, 2021

பிள்ளையார் சுழி

எங்களது பயணத்தில் நாங்கள் இருந்த  பெட்டியிலேயே என்னோடு பணியாற்றும் ஜாண் ராஜாமணி என்ற போதகரும் பயணிக்கிறார் என்பதை வழியில் கண்டுகொண்டோம். போதகர் ராஜாமணி அவர்கள் வசாய் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறார்கள். போதகர் ராஜாமணி அவர்களுக்கு பனை மீதான விருப்பம் அதிகம்,  மாத்திரம் அல்ல பனைமரச் சாலை தொடராக எனது வலைப்பூவில் வெளிவந்தபோது அதனை தொடர்ந்து வாசித்து வந்தவர் அவர்.  பயணம் முழுக்க பனை குறித்து உரையாடியபடி வந்தோம்.

போதகர் ராஜாமணியுடன் மித்திரனும் நானும்

மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஒரு பழங்கால கோட்டை இருக்கிறது. வசாய் பகுதியினை ப்ரிட்டிஷார் பேசின் (Bessin) என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றும் கூட வசாய் செல்லும் மும்பை நகர்புற இரயில்கள் V என்ற எழுத்திற்கு பதிலாக  BS என்றே தாங்கி வரும். வசாய் கோட்டை 1509 ஆம் ஆண்டு போர்துகீசியர்கள் மும்பையில் கால் ஊன்றியதை நினைவுறுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை.  பிற்பாடு மாராத்தியர்கள் இதனை 18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் இதைனை கையகப்படுத்தினார்கள். கடலை முத்தமிட்டிருக்கும் இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தகோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வசாய் பகுதியில் பனை மரங்கள் செழித்திருக்கும் என நான் கேவிப்பட்டிருப்பதினாலேயே, அங்கே செல்லவேண்டும் என போதகரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.\

வசாய் கோட்டையில் பனை

கேரளத்தினூடாக பயணிக்கிறோம் என்பதை இருபுறத்திலும் எங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த தென்னைகளின் திரட்சி பறைசாற்றின. பனை மரங்கள் தென்னையினூடாக தலைதூக்கி எட்டிப்பார்க்கும் காட்சிகள் ஆங்காங்கே தென்பட்டவண்ணம் இருந்தன. கேரளம், தென்னை மரத்தை தனது பண்பாட்டு அடையாளமாக கொண்டிருப்பதாக கூறுவார்கள். கேர எனும் வார்த்தையே தென்னையைக் குறிப்பிடுவதாக அமைகிறது.  கேரளா என்பது சமீபகாலமாக தென்னை நோக்கி நகர்ந்து வந்த ஒரு நிலபரப்பு என்றே நான் கொள்ளுவேன். போர்துக்கீசியர் வந்தபின்பே தென்னை இங்கு நிலைபெற்றிருக்கும். சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் முன்பதாக பனை மரம் கேரளாவின் தேவையினை பூர்த்தி செய்த ஒரு மரமாகவே இருந்திருக்கிறது. தென்னை மரம் ஒரு பணப்பயிர் என கண்ணுற்றபோது, அதிக உழைப்பைக்கோரும் பனை மரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டனர் என்பதுதான் உண்மை. ஆனால், பனை சுயம்புவாக இங்கே முழைத்தெழும்பி நிலைபெற்றிருப்பதைக் காணும்போது, நமது பார்வைகள் சற்றே மாறவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேரளாவில் தென்னை ஓலைகள் வீடுகள் கட்டவும், பனை ஓலைகள் பயன்பாட்டு பொருட்கள் செய்யவும் என துறைசார்ந்து பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விதமான பிரிவுகள் தாவரங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவைகளை சமூகங்கள் தேவையான விகிதங்களில் பேணிவந்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தும்.  பொதுவாகவே பனையும் தென்னையும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் ஆகும். கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி, பனை மரங்களை விட தென்னைகளை பேணும் காலங்களாகவே இருந்திருக்கின்றன. இப்படியான சூழலில், பனை மரங்களை தென்னந்தோப்புகளின் நடுவில் நாம் காணும்போது, அவைகள் தப்பிப்பிழைத்த மரபான தாவரங்கள் என்றே நாம் உணர்ந்துகொள்ளுகிறோம்.

ஒருமுறை கொச்சியில் பணிபுரியும் என் சகோதரி மெர்சியா அவர்கள் அங்குள்ள ஒரு  மேலாண்மை நிறுவனத்தில், பனை சார்ந்து ஒரு கட்டுரை வாசிக்கச்சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். சர்வதேச அளவிலான அந்த  நிகழ்வின் இறுதி நாளில் ஆலப்புழாவிலுள்ள படகு வீடு ஒன்றில் நாங்கள் கும்பலாக ஏறி பயணித்தோம். தென்னைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் அந்த நீர்பரப்பு, விந்தையானது. எப்படி  ஒரு சமூகம் தென்னையை மையப்படுத்துகிறது என்பதோடு பிற தாவரங்கள் எப்படி அவ்விடத்திலிருந்து அழிந்துபோகின்றது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்விதமான ஒற்றைத் தாவர பயிரிடுதல் நிகழும்போது அங்கே இருக்கும் வேறு சில மரபான தாவரங்கள் அழிவதை தவிர்க்க இயலாது. எனது பயணத்தில் தென்னைகளுக்கு மத்தியில்  நெடுந்துயர்ந்து வளர்ந்த ஒரு ஒற்றைப் பனையும் அதன் அருகில் ஒரு கோவிலையும் கண்டேன். பார்க்க வண்ணக்கலவைகளுடன் சற்றே தமிழ் சாயலைக் கொண்ட கோவிலாக இருந்தது.

தென்னைகள் பயிரிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியில் ஒற்றைப்பனைமரம் எப்படி வந்தது? பனை மரத்திற்கான தேவை தான் என்ன? விடை இதுதான், பனை மற்றும் இன்னபிற  தாவரங்கள் இருந்த இடங்களில் இருந்து அவைகள் சிறுக சிறுக அகற்றப்பட்டு மெதுவாக தென்னை குடியேறியிருக்கிறது என்பது தான் உண்மை.

இதனைக் குறித்து என்னோடு பயணித்த ஒரு பேராசிரியரிடம் நான் கேட்டபோது, அவர் பனை மரங்கள் இங்கு வாழ ஏற்றவை அல்ல என்றார். மேலும் அவர், இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் பதனீர் காய்ச்ச உகந்த இடம் இதுவல்ல என்றார். அவர் கூறுவது உண்மைதான், ஆனால், இவ்வித எண்ணங்கள் பொருளியல் சார்ந்த ஒரு பார்வையை முன்வைக்கிறதேயன்றி, நிலவியல் சார்ந்த உண்மையை வெளிப்படுத்துவது அல்ல. தென்னைகள் கூட, சிறுக சிறுக மக்கள் பெருக்கத்தினூடாக ஏற்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உண்மையிலேயே இப்படியான பிரம்மாண்ட தென்னை நிலப்பரப்பு இருந்திருக்க இயலாது.

பனை சார்ந்த நிலப்பரப்பு என்பவை எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழும்புவது இயல்பு. நான் மும்பையில் பனை விதைகளை விதைக்கையில், மும்பை என்னும் காட்டினை பாலைவனமாக்கிவிடாதீர்கள் என்ற எச்சரிப்பை ஒருவர் வழங்கினார். இப்படியான எச்சரிப்புகள் எனக்கு புதிதல்ல. தமிழகம் முழுக்கவே பனை விதைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் ஒரு சில சூழியல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் எப்படி நீர் நிலைகள் இம்மாவட்டங்களின் சூழியலை மாற்றியமைத்தன என நாம் உணர்ந்துகொள்ள முடியும். மும்பையில் கூட இன்றும் பனை செழித்து வளரும் ஒரு நிலப்பரப்பு மழை பொழியும் ஆறு மாதங்கள் சதுப்புநிலமாகவே காட்சியளிப்பதைப் பார்த்து வியந்துபோனேன். பறைகளுக்கிடையில், கடற்கரை ஓரங்களில் என பனை மரங்கள் தனக்கான இடத்தை  தகவமைத்துக்கொள்ளுவது ஆச்சரியமானது.

தென்னை மரங்கள் மனிதர்களால் பயிரிடப்படவில்லையென்றால், கண்டிப்பாக நீர் நிலைகளால் பரவும் வாய்ப்பு கொண்டவை. ஆனால், பனை மரங்களுக்கு வெறு பல வாய்ப்புகள் கூடவே இருக்கின்றன. மாடுகள், பன்றிகள், எருதுகள், மான்கள், குரங்குகள், நாய்கள், நரிகள், யானைகள் என எண்ணற்ற உயிரினங்கள் பனை விதை பரப்புதலில் இணைந்துகொள்ளுகின்றன. மேலும், வறட்சி காலங்களில் பனை மரம் தப்பி பிழைக்கும் தன்மையுடையது ஆனபடியால் தென்னையை விடவும் தன்னிச்சையாக பலவிடங்களில் பரவியிருக்க வாய்ப்புள்ளது.

“Kerala  – The Land of Palms” என்ற புத்தகம் 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படம்   பனை மரத்தாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் ஹாக்கர் (I H Hacker) கேரளவிலுள்ள கொல்லம் (Quilon) பகுதிக்கு வரும்போது அங்கே காணப்படும் தென்னைமரங்களை சுட்டிக்காட்டி, இதுவே கேரள தனது பெயரை பெற்றுக்கொள்ள காரணமான மரம் என ஒப்புக்கொள்ளுகிறார். தென்னை மரங்கள் கொல்லம் பகுதிகளில் காணப்படுவதாக வரைந்திருக்கும் படத்தில் கூட, பல்வேறு தாவரங்களின் மத்தியில் தான் தென்னைகள் நெடுந்துயர்ந்து வளர்ந்திருக்கின்றன. தனது புத்தகத்தில் தாவரங்களின் இளவரசன் பனை என்றே குறிப்பிடுகிறார்.

Kerala – the Land of Palms

தென்னை நிறைந்த பகுதியாக மட்டுமே இருந்திருந்தால் எப்படி பனை மரங்கள் அன்று முகப்பில் இடம்பெற்றிருக்கும்? விடை இதுதான், பனை சார்ந்த ஒரு வாழ்வு திருவிதாங்கூர் பகுதிகளில் செழித்திருந்தது. லண்டன் மிஷன் சொசைட்டி (London Mission Society) வெளியிட்ட இந்த புத்தகம், அக்காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவிய பெரும்பாலான நாடார் சமூகத்தை முன்னிறுத்தும்பொருட்டும் இருந்திருக்கலாம்.  ஆனால் தென்னைகள் கூடி இருப்பதை விட பனங்கூடலை காண்பிக்கும் கோட்டோவியங்கள்  அசாத்தியமானவை. தென்னை சார்ந்த வாழ்வியலை விட பனை சார்ந்த வாழ்வியல் இப்புத்தகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தென்னைகளின் திரட்சியின் முன்பாக பனைகள் காணாமல் போவதற்கு காரணம் என்ன? திருவிதாங்கூரில் ஏற்பட்ட சாதிய கொடுமைகளும், பனை மரம் சார்ந்த இழி அடையாளங்களும், பனை மரத்தை நினைவிலிருந்து மட்டுமல்ல, நிலப்பரப்பிலிருந்தே நீங்கச்செய்திருக்கும் என்பது தான் உண்மை. மரத்தோடு தொடர்புடையவர்கள் இழிவானவர்களாக கீழானவர்களாக சமூகம் கட்டமத்தபின்பு, அந்த மரமே இழிவானது என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவது  ஒன்றும் கடினம் அல்ல. ஆகவே நாடார் சமூகமே பனை மரங்களைக் கைவிடத் துவங்கினர். அதற்கு அன்று அவர்கள் மிஷனெறி பணிகள் மூலமாக பெற்ற கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன என்பதை புத்தகம் குறிப்புணர்த்துகிறது.

திருவிதாங்கூர் பகுதி சாலையோரங்களில் பனைமரங்கள்: Kerala The land of Palms

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு  மார்த்தாண்டம் பகுதிகளில் பயணிக்கையில் കള്ള് என மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையை  ஆங்காங்கே ஒதுக்குபுறமாக பார்த்திருக்கிறேன்.  தமிழில் கள்ளு என எழுதியிருப்பதால் மலையாளத்திலும் அதையே எழுதியிருக்கிறார்கள் என்றும், என்னால் மலையாளம் வாசிக்க முடியும் என்றும் குதூகலித்திருக்கிறேன். இவைகளுடன் Toddy என ஆங்கில எழுத்துரு இடம் பெற்றிருக்கும். அனைத்து எழுத்துக்களும் கரும்பலகையில் அழகிய வெண்ணிற எழுத்துக்களால் வரையப்பட்டிருக்கும். நான் பார்த்தவரையில் மிக கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம் அது. இருளில் மின்னும் வெண்மை. நுரைக்கும் கள்ளை காட்சிப்படுத்தும் கரும் பலகை. சீரான எழுத்துக்கள் என அதற்கு ஓர் அழகு இருந்தது. மும்பை வந்த பின்பு தான் Toddy என்ற வார்த்தை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு, (அல்லது சமஸ்கிருதத்திலிருந்து) சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். “தாட்” என்றால் பனை மரம், பனை மரத்திலிருந்து  கிடைப்பது “தாடி” (Toddy) என்றே இன்றும் வட இந்திய நிலப்பரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விளம்பரப்பலகையின் அருகில் ஒரு தென்னையோலை கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். அங்கே தான் கள் விற்பனை நடக்கும். உள்ளே எப்படி இருக்கும் என தெரியாது. எனது 11 வயது வரை இவ்வித காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். பின்னர், மார்த்தாண்டம் காவல் நிலையம் கள்ளினை கைப்பற்றி வடக்குத்தெருவிலுள்ள ஓடைகளில் கவிழ்த்துவிடுவது வாடிக்கையாக இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில் மதுவிலக்கு போலீசார் எவ்விதம் தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள் என இறும்பூதெய்தாமால் இருக்கவியலவில்லை.

கேரளம் என்பது கள்ளிற்கான பூமி.  இன்றும் கள்ளை கொண்டாடும் சமூகம், அங்கே உயிர்ப்புடன் இருக்கின்றனர். பனங்கள் கிடைக்குமோ இல்லையோ தென்னங்கள் கண்டிப்பாக கிடைக்கும். நான் இதுவரை கேரளத்திலோ அல்லது  குமரி மாவட்டத்திலோ தென்னங்கள் பருகியது இல்லை. ஆனால் பெங்களூருவிலும் பாண்டிச்சேரியிலும் தென்னங்கள் பருகியிருக்கிறேன்.  முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு வாக்கில் குமரி மாவட்டதிலுள்ள தெரிசனங்கோப்பு என்ற பகுதியில் கள் கிடைக்கும் என்று சொன்னதால் தனியாக சென்றேன். அங்கிருந்த ஒரு குளத்தைத் தாண்டி  நடந்து சென்றபோது ஒரு பழைமையான கோவில் வந்தது. அதையும் கடந்து குளக்கரையில் இருந்த ஒரு தோப்பிற்குள் சென்று கள் பருகியது மறக்கவியலா அனுபவம். சற்றே புளிப்புடன் இருந்தாலும், கள்ளை சுவைத்துவிட்டேன் என்பதே ஆகப்பெரும் வெற்றியாக இருந்தது. போலீசார் தொந்தரவு குறித்து அப்போது அவர் கூறியிருந்தாலும் மீண்டும் 2000ஆம் ஆண்டு அங்கே சென்றேன். 

2004 ஆம் ஆண்டு நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றிய போது அவர்களின் பழைய போராட்ட வரலாறுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” நடத்திய குறிப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது, கள்ளுக்கடைகள் எப்படி பனையேரிகளை சுரண்டி தழைத்தன என்கிற உண்மை வெளியானது. பனையேரிகளிடமிருந்து பதனீராகவே கள்ளுக்கடையினர் வாங்குவார்கள். பின்னர் எப்படி காய்ச்சிய பாலை ஆறவைத்து அதில் தயிர் ஊற்றி உறை வைப்பார்களோ அது போலவே, பதனீரிலுள்ள சுண்ணாம்பை அகற்றிவிட்டு, தனி பதனீரை தெளித்தெடுத்து அதில் கள்ளை ஊற்றி வைப்பார்கள். சரியான பருவத்தில் இதனை கள்ளாக விற்பனை செய்வார்கள். மேலும் போதை ஏறுவதற்காக சில இயற்கை மற்றும் செயற்கை சேர்மானங்களையும் இடுவார்கள்.  எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை நான் சந்தித்தபோது, “கள்ளுக்கு எப்போ போதை வருகிறது?…. அது கடைக்கு வரும்போது தான்” என்று சொன்ன கூற்றின் உண்மை பின்னணியம் இதுதான். இவ்விதமான கள்ளுக்கடைகள் தனி முதலாளிகளையே ஊக்குவிக்கின்றது. ஆகவே தங்கள் முழு முதல் உரிமையினை மீட்டெடுக்கும் பனையேறிகளின் ஒரு உணர்ச்சிகர போராட்ட வடிவமாகவே “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” இருத்ததாக நான் புரிந்துகொள்ளுகிறேன். இப்போதும் கூட கள்ளு என்பது கடைக்கு வரவேண்டாம் பனையேறிகளே கள்ளினை விற்பனை செய்யட்டும் என்னும் நிலைப்பாடே சரியாக இருக்கும்.

மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் 1985 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். சுமார் 15 ஆயிரம் பனையேறிகள் கலந்துகொண்ட அந்த மாநாடு, தமிழகத்தையே அசைத்தது. இதனைத் தொடர்ந்து தான் 01.01.1987 ஆம் ஆண்டு கள் தடைக்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படுகிறது கவனத்திற்குரியது. பனைத் தொழிலாளிகள் ஒன்றுபட்டால் அவர்களது கோரிக்கைகள் வலுப்பெறும் எனவே கள்ளுக்கடைக்கு தடை போட்டால் ஒரேயடியாக பனை தொழிலுக்கு மூடுவிழா நடத்திவிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கும்.  அது உண்மைதான் என சமீபகாலத்தில் உணர்ந்துகொண்டேன். தமிழகம் முழுவதும் 12 லெட்சம் பனை தொழிலாளர்கள் இருந்து வந்த சூழல் கள் தடைக்குப் பின் மாறியது. கள் தடை அறிவித்தவுடனேயே  10 லெட்சம் பனையேறிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர் என சுதேசி இயக்கத்தைச் சார்ந்த திரு. குமரி நம்பி அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

இச்சூழலில் தான் தமிழகத்தில் கள் சார்ந்த ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணி இப்பயணத்தை நிகழ்த்த உறுதிபூண்டேன். ஆனால் ஒருபோதும் இவைகளை எழுத்துருவாக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் கள்ளை முதன்மைப்படுத்தி ஒரு போதகர் எழுதுவதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது.  நான் அறிந்த பல கிறிஸ்தவர்களும் கள் சார்ந்து ஒரு புரிதலற்ற நிலையினையேக் கொண்டுள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனெறிகள் பலரும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். கிறிஸ்தவ கிராமங்களிலிருந்து கள் இறக்குகிறவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக குமரி மாவட்ட நெய்யூர் பகுதியைச் சார்ந்த குறிப்பு காணப்படுகிறது. அதற்கு காரணம் உண்டு.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளில் போதை இல்லையா? எப்படி ஒரு போதகர் கள்ளைக் குறித்து எவ்வித அருவருப்புமின்றி பேசமுடியும்? திருமறை குடிபோதையை எதிர்க்கிறதே என பலவிதமான எண்ணங்களுடன் நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கள் எனும் பானத்தை குடிக்கு நிகரென பேசுவது தற்கால சூழலில் நகைப்புக்குரியதாகவே இருக்கும்.  ஆகவே ஒரு முழுமையான பின்னணியத்தில் இவைகளை வைத்துப் பார்ப்பது மிகவும் தேவை.

1999 ஆம் ஆண்டு நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, அங்கு மாதத்திற்கு ஒருமுறை நற்கருணை வழிபாடு நிகழும். குமரி மாவட்டத்தில் வழங்கும் நற்கருணை திராட்சை ரசத்திற்கும், ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கிய திராட்சை ரசத்திற்கும் பெரிய வேறுபாடு இருந்ததைக் அப்போது தான் கண்டுகொண்டேன். குமரி மாவட்ட சி எஸ் ஐ திருச்சபைகளில் வழங்கப்படும் திராட்சை ரசம் என்பது உண்மையிலேயே திராட்சை ரசம் கிடையாது. அது சில மணமூட்டிகளும் சர்க்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு செயற்கை பானம் மட்டுமே. அதனுடன் தண்ணீர் சேர்த்தே நற்கருணை ஆராதனையில் பருக கொடுப்பார்கள். ஆனால் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கப்படும் திராட்சை ரசமானது வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன் (Home made wine) ஆகும். திராட்சைப் பழங்களும் இன்ன பிற சேர்மானங்களும் இணைத்து செய்யப்படும் பானத்தையே எங்களுக்கு கொடுப்பார்கள். இந்தபானத்தில் இருக்கும் ஆல்கஹால் தான் இதனைக் கெட்டுபோகாமல் வைத்திருக்க உதவுகிறது. பெங்களூரில் இருக்கையில் நான் சென்ற தூய மாற்கு (St Mark’s Cathedral) ஆலயத்திலும் இவ்விதமான திராட்சை பழங்களை பிழிந்தெடுத்த சாறு தான் நற்கருணையில் வழங்குவார்கள்.

குமரி மாவட்டத்தில் செயற்கை மணமூட்டிகள் நிறமூட்டிகளைக் கொண்டு வழங்கப்படும் பானமும், பெங்களூரில் வழங்கிய திராட்சை ரசம் என்றாலும், வழங்கப்படும் நோக்கம் ஒன்றுதான். இரண்டு பானங்களும் இயேசுவின் அருட்கொடையாம் சிலுவைப்பாடுகளை நினைவுறுத்தும் ஒன்றே. அது கிறிஸ்துவின் இரத்தத்தில் நாம் பங்குகொள்ளுகிறோம் என்னும் பேருண்மையின் அடையாளம் மட்டுமே. ரசத்தின் உள்ளடக்கம் என்பது இங்கு அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தை மட்டுமே தாங்கி நிற்பதாக அமைகிறது என்றே கொள்ளவேண்டும்.  அவ்வகையில் சுண்ணாம்பு தடவிய பதனீரோ அல்லது கள்ளோ பனையேறியின் உழைப்பின் அடையாளமாகத்தான் பார்க்கப்படவேண்டும். வேறு வகைகளில் பார்க்கப்படுவது பார்பவரின் பார்வைக் குறைபாட்டையே எடுத்தியம்பும்.

திருமறையில் இயேசு அருந்திய திராட்சை ரசம் எப்படிப்பட்டது என்று விவாதங்கள் வரலாற்றில் அப்போதே எழுந்திருக்கின்றன.   “எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்”.  (மத்தேயு 11: 18 – 19) இந்த வசனம் “நீதி” என ஒப்புக்கொள்ளப்படும் என்ற இடத்தில் நிறைவடைகிறது கவனத்திற்குட்படுத்தவேண்டியது ஆகும்.  அதுவே ஞானம்.

நன்றி: இணையதளம்

இன்று கள் என்பது கண்டிப்பாக போதை வஸ்து அல்ல. அது போதைக்கு எதிரான ஒன்றாகவே எழுந்து நிற்கின்றது. இன்றைய தமிழக அரசு வழங்கும் வெளிநாட்டு மதுபானங்கள் என்பவை உடலையும், உள்ளத்தையும், குடும்பங்களையும் அழிப்பவை. ஆனால் பனங்கள் என்பது குடும்பங்களை வாழ வைப்பவை. அது ஒரு விடுதலையின் அடையாளம். காலம் காலமாக தங்கள் முன்னோர்  புழங்கிய தளங்களில் பனையேறிகள் தங்கு தடையின்றி பயணிக்கும் அனுமதி சீட்டு.

கள் இறக்க அனுமதி இருந்தாலே பனை சார்ந்த பிற தொழில்கள் செழிக்க இயலும். பலர் என்னிடம் கள் என்பது ஒரு போதைப்பொருள் தான். அவைகள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஏன் கள் விற்பனையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்கள் பதனீர் எடுப்பதை ஊக்கப்படுத்தினால் அவர்களுக்கு எந்த வகையிலும் வருமானம் குறைவுபடாதே? இவ்விதமான தீய காரியங்களுக்கு ஏன் உடன்படுகிறீர்கள் என கேள்விகளை முன் வைப்பார்கள். நான் மறு உத்தரவாக அவர்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் பனை ஏறுவீர்களா? என்பதைத்தான். பனை ஏறாதவர்கள் பனையேறிகளுக்கு எது தேவை என நிர்ணயிக்க இயலாது. பனை ஏறுகிற எவருமே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து நான் பார்த்ததில்லை. கள் குடிக்காமல் பனையேறிகள் இருந்திருக்கலாம் ஆனால், ஒருபோதும், பனை சார்ந்து இயங்கும் மக்கள் கள் தடை வேண்டும் என சொல்லமாட்டார்கள். கள்ளில் இருக்கும் மருத்துவ குணங்கள் அப்படிப்பட்டவைகள். குறிப்பாக கோடை கால வெம்மையிலிருந்து மக்களைக் காக்கும் அருமருந்து கள். ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு என்பது, பனையேறிகளைப் புரிந்து கொள்ளாமை தான்.

முந்தைய பயணம்போல் நான் எனது இருசக்கரவாகனத்தை இப்பயணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனது இருசக்கர வாகனம் இல்லாத கலவையான ஒரு பயணம் இது. இவ்விதமான கலவையான ஒரு பயணத்தை எப்படி ஒருங்கிணைத்து எழுதுவது என்ற எண்ணம் என் மனதின் அடியாளத்தில் இருந்துகொண்டிருந்தது.

இச்சூழலில் தான் நண்பர் ஷாகுல் திருவனந்தபுரத்திலுள்ள நண்பர் சுப்பிரமணியின் தொடர்பு எண்னைக் கொடுத்தார். நண்பர் சுப்பிரமணி உளவுத்துறையில் பணியாற்றியவர். அதற்கான கல்வியினை கற்கும்படியாக பல நாடுகளுக்கு பயணித்தவர். இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மூலமாக எனது பயணக்கட்டுரையினைக் குறித்து கேள்விப்பட்டு, பின்னர் சாகுல் அவர்களின் கடையிலிருந்து எனது புத்தகத்தை  வாங்கி வாசித்திருக்கிறார்.  எனது பனைமரச்சாலையினை வாசித்துவிட்டு என்மீது தனிப்பிரியம் கொண்டு என்னைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்படியும் திருவனத்தபுரத்தைக் கடந்து செல்வதினாலேயே நான் அவருக்கு  படங்களை எடுத்துச் செல்லவும் அவரை சந்திக்கவும் உறுதி கூறினேன். எனது பயணத்தின் துவக்கம் முதல் என்னோடு தொடர்பில் இருந்தார். திருவனத்தபுரத்திலிருந்து தேவிகோடு செல்வதற்கு உதவி வேண்டுமென்றால் தாம் உதவி செய்வதாகவும் கூறியிருந்தார். என்ன உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நான் திருவனந்தபுரம் வருகிறேன் என அறிந்தபோது எனது மூத்த சகோதரி மெர்சியா அவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு செல் என்றார்கள். அக்கா சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர்கள் திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணினோம் ஆனால் அவர்கள் நெடுமங்காடு செல்லும் வழியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக விலாசத்தைப் பார்த்து சுப்பிரமணி கூறினார்.

திருவனந்தபுரம் வந்து இறங்கியதும் அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டோம். சுமார் ஒரு மணி நேரம் நின்றுகொண்டிருந்தோம். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைத் தவிர வேறு எவரும் அங்கு இல்லை. எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நபர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். தொற்று நோய்க்கான எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பயண சீட்டைச் சரிபார்த்து எங்கே செல்லவேண்டும் என்றும், ஆவணங்களை சரிபார்த்து விலாசத்தை வாங்கிகொண்டு விட்டுவிட்டார்கள். ஒருவழியாக அனைத்து முறைமைகளும் முடிந்து வெளியே வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பிள்ளைகள் துவண்டுபோனார்கள்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது  ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டின் வந்து காத்திருந்தார். போதகர் ஜாண் ராஜாமணி அவர்களும் எங்களுடன் வீட்டிற்கே வருவதாக கூறியிருந்தார். நாங்கள் பெட்டிகளை வண்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது நண்பர் சுப்பிரமணி அவரது காரிலேயே வந்து சேர்த்துவிட்டார். அடையாளம் கண்டதும், காரிலிருந்து மிகவும் உயரமான நல்ல உடல்வாகும்கொண்ட ஒரு நபர் இறங்கி என்னை நோக்கி வந்தார். நான் என்ன என எண்ணுமுன்பே எனது காலில் விழுந்தார். பையன் ஜனா தான் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சுப்பிரமணி சொன்னார். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று சொன்னேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் போதகர் ராஜாமணி ஆகியோரை ஜஸ்டின் காரில் ஏறச்சொல்லிவிட்டு, நான் நண்பர் சுப்பிரமணி அவர்கள் காரில் ஏறிக்கொண்டேன். உடனேயே கொண்டு வந்த படங்கள் மறந்துவிடக்கூடாது என எண்ணி, அவரிடம் கொடுத்தேன். பசிக்கிறது எங்காவது நிறுத்துங்கள் என்றேன். எங்கள் கார் முன்னால் வழிகாட்டியபடி செல்ல குடும்பத்தினர் எங்களைத் தொடர்ந்தனர். திருவனத்தபுரம்  கிட்டத்தட்ட அடைபட்டுக்கிடந்தது. உணவு தேடியபடி சென்றோம். ரோட்டோரம் ஒரு கேரவனைக்கண்டு நிறுத்தி, சுட சுட கேரள கல் தோசை, ஆறென பெருக்கெடுத்தோடும் சுவையான தேங்காய்ச் சட்னி மற்றும் பீஃப் சாப்பிட்டோம்.

சுப்பிரமணி, சொல்லியிருந்தால் கண்டிப்பாக வீட்டில் உணவு தயாரித்திருப்பேன் என்றார்கள். அக்கா பணியாற்றும் இடத்திலும் உணவு தயாரிக்க இயலாத சூழ்நிலை. அக்கா இருக்குமிடம் நோக்கி செல்லும் வழியில் எங்கும் பேசிக்கொண்டே சென்றோம். அக்காவை பார்த்தபோது மகிழ்ந்துபோனோம். அக்கா அவர்கள் இருக்கும் இடத்தைக் சுற்றிகாட்டினார்கள். கத்தோலிக்க குருமார் நடத்தும் அந்த கல்லூரி மிகவும் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்ததை அந்த இரவிலும் கண்டுகொண்டோம்.

இடமிருந்து வலம்: ஜாஸ்மின், அக்கா, ஆரோன், நான், போதகர் ராஜாமணி, மித்திரன், சுப்பிரமணி, ஜனா

எங்கள் சுருக்க பயணத்தில்  நான் கண்டுகொண்டது இதுதான். சுப்பிரமணியிடம் ஒரு வேகம் இருந்தது, அன்பு கூறுவதில் ஆகட்டும், பேச்சில் ஆகட்டும், வாகனம் ஓட்டுவதில் ஆகட்டும், நிறுத்தவியலா ஒரு கரைபுரண்டோடும் தன்மை உண்டு. நான் மிகவு ரசிக்கும் ஒரு வேகம் அது. அவர் ஒரு பிள்ளை சமூகத்தை சார்த்தவர். பிள்ளை சமூகத்தினரிடையே பனை சார்ந்து காணப்படும்  தொடர்புகளை எனக்கு விவரித்தபடி வந்தார். அது எனக்கு மாபெரும் திறப்பு.  பெரும்பாலான சடங்குகள் நமது சாதிக்குள்ளேயோ அல்லது சமயத்திற்குள்ளேயோ இருப்பதால், நம்மால் ஒருபோதும் பிற சாதியினர் எவ்விதம் தங்கள் சடங்குகளைச் செய்கின்றனர் என உணர முடியாது, பார்க்கவும் வழியில்லை. அன்று மட்டும் என்னிடம் பலமுறை கூறியபடி வந்தார், “நீங்கள் இந்த பயணத்தை ஒரு கட்டுரைத் தொகுப்பாக போடவேண்டும் என்று”. என்னால் இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் முயன்று பார்க்கலாம் என வாக்களித்தேன். இப்புத்தகம் வடிவம்பெறுமென்றால் அதற்கான “பிள்ளை”யார்சுழி சுப்பிரமணி தான்.

நாங்கள் பிரியும் வேளை வந்தபோது, எனது கரத்தில் ரு2500/- கொடுத்தார். நான் இருக்கட்டும் வேண்டாம் எனக் கூறினேன். உங்கள் பயணம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதனை ஒரு வாழ்த்தாக பெற்றுக்கொண்டேன். பயணம் குறித்து எழுதுவது மட்டுமல்ல பயணம் செய்வதே இப்போது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.

நான் அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறியவுடன், போதகர் என்னிடம் கூறினார்” திருச்சபையில் கூட இத்துணை அன்பானவர்களை காண்பது அரிது என்றார்” ஆம். நான் மட்டுமல்ல சுப்பிரமணியுடன் பழகியவர்கள் கண்டிப்பாக இதனை உணர்ந்துகொள்ளுவார்கள்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653


%d bloggers like this: