பனைமுறைக் காலம் 4


ஓலைகளினூடாக

கேரள தமிழ்நாடு எல்கையான களியக்காவிளை வந்தபோது தடுத்து  நிறுத்தப்பட்டோம். எட்டு வயது மித்திரனைத் தவிர அனைவரும் கண்டிப்பாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பரிசோதனை முடிந்து புறப்படும்போது நள்ளிரவு ஒரு மணி. மூன்று நாளைக்கு பிறகு தான் முடிவு வரும் என குறுஞ்செய்தி வந்தது.

காலை என்னைத் தேடி பொறியாளர். சேவியர் பெனடிக்ட் அவர்கள் வருவதாக சொல்லியிருந்தார். சேவியர் அவர்கள் பனை மீது தீரா விருப்பு கொண்டவர்கள். பல சர்வதேச பயணங்களை மேற்கொண்டவர். உலகிலுள்ள பல்வேறு வகையான பனைகளை மட்டுமே தேடி தேடி சேகரித்து தனது  தோட்டத்தில்  நட்டு பராமரித்தவர்.. தற்போது பழவேற்காடு பகுதிகளில் உள்ள பரதவர் பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் செய்யும் பயிற்சிகளை கொடுத்து வருகிறார். அதன் மூலமாக அங்குள்ள பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவருகிறார். நான் பனை சார்ந்து இயங்குகிறேன் என்றால் அவர் அதனை விட பலமடங்கு வீரியமாக பழவேற்காடு குறித்து இயங்குகிறவர்.  நான் தமிழகம் வருகிறேன் என்றவுடன் அவரது தென் மாவட்ட பயணங்களோடு கன்னியாகுமரி பயணத்தையும் இணைத்துக்கொண்டார்.  அன்று காலை கார் முழுக்க தனது பயணத்தில் சேகரித்த பனை பொருட்களை எடுத்து வந்திருந்தார் சேவியர். கன்னிப்பெட்டி என்ற ஒரு அழகிய பெட்டியை எனக்கு பரிசாக கொடுத்தார்.

சேவியர் தென் தமிழகத்தில் தாம் சேகரித்த பனை ஓலை/ நார் பொருட்களுடன்

கன்னிப்பெட்டி குறித்து நான் 20 வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். மார்த்தாண்டம் சந்தையில் பனை ஓலைகள் சேகரிக்கச் சென்றபோது அங்கே இவ்வித பெட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருமண வாழ்வினை எட்டுமுன் ஒரு பெண் இறந்துபோனால், இவ்விதமான கன்னிப்பெட்டியில் துணிகள் மற்றும் சில பூஜைக்குரிய பொருட்களை வைத்து அதனை உறவினர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ கொடுக்கும் வழக்கம் இன்றும் தென் மாவட்டங்களில் இருக்கிறது.

சேவியர் எடுத்துவந்த கன்னிப்பெட்டிகள் ராமனாதபுரம் பகுதிகளில் மட்டுமே செய்யப்படுகின்ற ரகம் என்பதை நான் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டேன். மிகவும் நேர்த்தியாக பின்னப்படுகின்ற இவ்வகை பெட்டிகள் விலை மலிவானவை. 250 ரூபாய்க்குள் இப்படியான ஒரு பெட்டியினை நாம் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாங்க முடியும். அப்படியானால் தயாரிப்பவர்களுக்கு 100 ரூபாய் கிடைப்பதே அபூர்வம்.

கன்னிப்பெட்டியின் பின்னல் இரட்டை அடுக்கானது. சற்றே அகலமான சாரோலைகளைக்கொண்டு உட்புற பின்னலும் மெல்லிய குருத்தோலைகளும் வண்ணமேற்றிய ஓலைகளையும் கொண்டு வெளிப்புறமும் பின்னப்பட்டிருக்கும். உட்புற பின்னல் கூட்டல் வடிவிலும் வெளிப்புற பின்னல் பெருக்கல் வடிவிலும் இருப்பது இவ்வித கலைஞர்களுக்குள் உறைந்திருக்கும் பின்னல் திறமைகளுக்கு சான்று. மிக நேர்த்தியாக, சர்வதேச தரத்தில் விளிம்பு கட்டப்பட்டிருக்கும். கைப்பிடியானது பெட்டியின் அடிப்பகுதி வழியாக வந்து பெட்டிக்கு மேற்புறம் எழுந்து நிற்கும். இந்த பெட்டிக்கு கீழ்புறம் இருப்பதைப் போன்ற வடிவில் மேற்பகுதியில் சிறிய அளவில் பின்னி மூடி இட்டிருப்பார்கள்

கன்னிப்பெட்டிகள் என்பது பல்வேறு வகைகளில் இருக்கும் என்றே நினைக்கிறேன். குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய பெண்மணி ராஜாவூர் பகுதிகளில் இவ்வித கன்னிப்பெட்டிகள் செய்வதாக கேள்விப்பட்டு ஓரிருமுறை அவர்களை சந்திக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறேன். நமது நாட்டார் மரபுகளில் இஸ்லாமியரின் பங்களிப்பு இணைந்திருக்கிறது என்பது நமது பண்பாட்டின் விரிவை விளம்பும் சான்று. சமயங்களுக்கிடையில் இருந்த நல்லுறவுகளை எடுத்தியம்பும் பனை அனைத்து சமயங்களுக்கிடையிலும் ஒரு சமாதான தூதுவராக நிலைநிற்கிறது. குமரி மாவட்டத்தில் பின்னப்படுகின்ற இந்த கன்னிப்பெட்டி பார்வைக்கு சாதாரண மூடிபோட்ட பெட்டியைப்போலிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் தஞ்சாவூர்  சென்றிருந்தபோது அங்கும் ஒரு கலைஞர் கன்னிப்பெட்டி செய்திருந்தார். வடிவநேர்த்தியில்  குமரிமாவட்டத்திற்கும் இதற்கும் பெருத்த ஒற்றுமைகள்  இருந்தன. ஒரு சில சிறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இவ்வித வித்தியாசம் என்பது மாவட்டத்திற்கான வித்தியாசம் என நாம் புரிந்துகொண்டாலும், பனை ஓலைகள் பரந்துபட்ட தமிழக  காலாச்சார சடங்குகளில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.

சேவியர் கொண்டுவந்த  பனை ஓலைப் பொருட்களின் வகைகளைப் பார்க்கும்போதே அவர் தமிழகத்தின் எப்பகுதிகளையெல்லாம் கடந்து வந்திருப்பார் என என்னால் யூகிக்க முடிந்தது. அவர் வைத்திருந்த ஒரு அழகிய கோழி குஞ்சுகளை இட்டுவைக்கும் பெட்டி என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் அதை குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே வடிவிலான படத்தை நான் பார்க்கவும் செய்திருக்கிறேன், ஆனால், அதனை யார் தயாரிக்கிறார்கள் என என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது உற்சாகத்தைப் பார்த்து சேவியர் இதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். ஆம்,  அவர்களின் தாராள குணத்திற்கு அளவே கிடையாது.  நான்  தான் வேண்டாம் என்றேன். இதனை தயாரிப்பவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எனது தாகமாக இருந்தது. குருத்தோலை ஈர்க்குகளால் கட்டில் பின்னல்கள் போல் அறுகோண வடிவில் பின்னப்பட்ட அந்த கூடு ஒரு, அழகிய கலைப் படைப்பு. குமரி மாவட்டத்திலோ தமிழகத்தின் பிற பகுதிகளிலோ காணக்கிடைக்காதது. இவ்வித கோழி குஞ்சுகளை விடும் கூடுகள் செய்யும் ஒரே ஒரு பாட்டி திசையன் விளையில் இருகிறார்கள் என்ற குறிப்பையும் சேவியர் எனக்குக் கொடுத்தார். இவ்வித கலைஞர்களே நமது  தேசிய சொத்து என்ற எண்ணமே என்னுள் எழுந்தது.   இவ்வித தனித்துவ திறன் மிக்க கலைஞர்களை  எவ்வகையிலும் எவரும்  பொருட்படுத்துவதில்லை.

கோழிக்குஞ்சுகளை அடைக்கும் பனை ஈர்க்கில் கூடு

நான் அவருக்கு ஆரே தூய பவுல் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையிலிருந்து எடுத்து வந்த அட்டைபெட்டியில் குமரி மாவட்ட பனை விதையைக் கொடுத்தேன். ஜாஸ்மின் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு மரத்திலிருந்து எடுத்த விதை அது. கருப்பு காய்ச்சி ரகம். ஒவ்வொரு பழமும் பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட 2.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் சிலர் இதனை யாழ் விதை எனக் கூறுவார்கள். பெயர்கள் எப்படியிருந்தாலும், இது யாழ் விதை அல்ல என்பதே எனது எண்ணம். குமரி மாவட்டம் மட்டுமல்ல, மும்பை பகுதியில் கூட இவ்வித பெரிய பழங்களை நான் கண்டிருக்கிறேன். திருநெல்வேலி அம்பாசமுத்திரம், தென்காசி, தூத்துக்குடி, பகுதிகளிலெல்லாம் மூன்று கிலோவைத் தாண்டிய பனம்பழங்கள் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மிகப்பெரிய தேங்காயைப் பார்க்கும்போது, அது யாழ்பாண தேங்காய் என கூறப்படுவதால், பனம்பழங்களிலும் ஒரு யாழ் பனம்பழத்தை யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

பனை விதை பெட்டியினை சேவியர் அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்.

2013 ஆம் ஆண்டு, நான் கம்போடியா சென்றபோது அங்கோர்வாட் அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு இளநீர் ஒரு டாலர் மட்டுமே. அந்த தேங்காய் மிக மிக பிரம்மாண்டமானது. இந்தியாவில் அதற்கு இணையான தேங்காய்களை நான் பார்த்ததே இல்லை.  அது போலவே, பர்மா சென்றிருந்த போதும் நானும் எனது குக்கி பழங்குடியின நண்பன் மாங்சா ஹோப்கிப்பும்  (Mangcha Haopkip)  இணைந்து  ஒரே இளநீரை பகிர்ந்து குடித்தோம். இந்தியாவில் காணப்படும் இரண்டு மிகப்பெரும் தேங்காய்களிற்கு இணையானது அங்கு விற்கப்படும் ஒரே தேங்காய். அப்படியானால் இலங்கைக்கும் நமக்கும் உள்ள உறவின் வெளிப்பாடாகவே இப்பெயர் சூட்டல் இருக்கிறது என நான் கருதுகிறேன். மேலும் பனை மரத்திற்கு யாழ்பாணம் என்பது ஒரு மைய்யம் கூட.

கருப்பு காய்ச்சி பனம்பழம்

சேவியர் அவர்களுக்கு மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் செல்ல வேண்டும் என்னும் ஆசை இருந்தது. பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைக் குறித்து அவர் கேள்விபட்டிருக்கிறார்.  2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை இங்கே நான் பணியாற்றியிருக்கிறேன். ஆகையினால், அந்த அலுவலகத்திற்குள் உரிமையோடு செல்லுவேன். ஆகவே அந்த அலுவலகத்திற்கு முதலில் செல்ல தீர்மானித்தோம்.

பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள் 1975ஆம் ஆண்டு பனைத் தொழிலாளர்களுக்காக ஒரு இயக்கத்தை மார்த்தாண்டம் பகுதிகளில் ஆரம்பித்தார். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்ற மாபெரும் இயக்கம்,  பனை தொழிலாளர்களது வாழ்வில் மரணம் மற்றும் நிரந்தர ஊனம் போன்ற சவால்களை எதிர்கொள்ளும்படியாக துவங்கப்பட்டது. மிக நுண்மையாக பனை தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கண்டறிந்து அவைகளை தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அக்காலங்களில் பனை தொழிலாளர்களுக்கு பதனீர் காய்ச்சுவதற்கு விறகு என்பது மிக முக்கிய தேவையாக இருந்தது. ஆனால் குமரி மாவட்டத்தில் போதுமான விறகுகள் கிடையாது. அச்சூழலில், பிற மாவட்டங்களிலிருந்து லாரிகளில் விறகுகளை வர வைத்து தேவையானவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது.

பேராயர் உலக கிறிஸ்தவ மன்றத்தின் தலைவராக இருந்தவர். ஆகவே அவரால் சர்வதேச உதவிகளைப் பெற முடிந்தது. உலகில் எங்குமே நிகழாத பனை தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி, அவர்களுக்கான உதவிகள், மற்றும் புது தொழில்நுட்பங்களை கண்டடைந்து அவர்கள் பொருட்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்ல பேராயர் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், பனைத் தொழிலாளர்களது மரணம், அவர்களின் வாழ்வில் ஏற்படும் நிரந்தர ஊனம் மற்றும் சமூகத்தின் பார்வையில் இழிவாக காணப்பட்ட அன்றைய சூழல்  பேராயரது சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கூடவே பனைத் தொழிலாளர்களுக்கு சமூகத்தில் இருந்த அங்கீகாரமற்ற சூழ்நிலை இவர்கள் வாழ்வை மாற்றினால் ஒழிய இவர்களை மீட்கவியலாது என்ற எண்ணத்தை பேராயர் அவர்களுக்கு கொடுத்தது.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தொண்ணூறுகளின் மையப்பகுதிகளில் “வளர்ச்சி” என்ற நோக்கில் செயல்பட ஆரம்பித்தன. அன்றைய சூழலில் பனை அது சார்ந்து வாழும் மக்களுக்கு ஒரு கால்விலங்கு என கணிக்கப்பட்டதும் அவ்விலங்கினின்று உதறி மேலெழுவதுமே அன்றைய சவாலாக இருந்தன. ஆகவே பனையேறிகள் பனைத் தொழிலை விட்டு வெளிவருவதற்குண்டான கடனுதவி போன்றவைகளை மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளார்ச்சி இயக்கம் முன்னெடுத்தது. பனை மர தொழிலாளர்களை சிறு பெட்டிகடைகள் வைக்கவும், பழைய குடிசை மற்றும் சிதிலமடைந்த வீடுகளை மாற்றி நவீன வீடுகளை கட்டிக்கொள்ளவும், கல்வியில் உயர பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை என பல்வேறு உதவிகள் செய்து அவர்கள் பொருளியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்றம் பெறச் செய்தார் பேராயர்.

பனையோலையில் செய்யப்பட்ட பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் படம்

இந்த பணியில் அவர்கள் நிர்தாட்சண்யம் இல்லாமல் பனை மரங்களை கைவிட்டனர். அதற்கு காரணம் பனையா மனிதனா என்கிற கேள்வி முன் பேராயர் தன் தேர்வை வைக்கவேண்டிய சூழலில் இருந்தார். அதாவது, பனை சார்ந்த வாழ்வு சமூக அங்கீகாரத்தையோ பொருளியல் நன்மையையோ கொடாது என அறிந்தபோது, பனையையும் பனைத்தொழிலாளர்களையும் பேராயர் அவர்கள் பிரித்தார். பனை மரங்கள் பனையேறியின்றி வீணாக நிற்பதைக் கண்டவர்கள் அதனை வெட்டிவிட்டு வீடுகளை வைக்கவோ, ரப்பர் தோட்டம் வைக்கவோ அல்லது தென்னை மரங்களை வைக்கவோ முன்வந்தனர். அன்றையகுறைந்த வருமானம் மற்றும் சமூகத்தில் தாழ்வாக பார்க்கப்பட்ட பனையேறிகளுக்கு பேராயர் வழங்கிய திசை சரியானதே. ஆனால் எதிர்காலத்தில் பனைகள் கைவிடப்பட்டு அழியும் என்பது அவர் எண்ணிப்பார்த்திராதது.

பேராயர் அவர்களை நான் 1999 ஆம் ஆண்டு ஐக்கிய இறையியல் கல்லூரியில் முதன் முறையாக சந்தித்தேன். எங்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் அருட்திரு ஞானா ராபின்சன் அவர்கள் என்னிடம், பேராயர் சாமுவேல் அமிர்தம் வந்திருக்கிறார்கள் நீ  அவரை சந்திப்பது நல்லது என்றார். கல்லூரி முன்பு இருக்கும் புல்தரையை சுற்றி செல்லும் சாலையில் தனது ஊன்றுகோலோடு பேராயர் நடந்துகொண்டிருந்தார், நான் அவருடன் இணைந்துகொண்டேன்.  என்னை அறிமுகப்படுத்திவிட்டு, பனை ஓலையில் நான் செய்த விசிடிங் கார்டு, வாழ்த்து அட்டைகள், புத்தக குறிப்பான், மற்றும் அழகிய பனை ஓலையாலான ஃபைல் ஒன்றையும் காண்பித்தேன்.  அனைத்தும் நன்றாக இருக்கிறது எனச் சொன்னவர், இவைகள் நமக்கு சோறு போடாது என்றார். எனக்கு “பக்”கென்றது. ஆனால் அவர் என்னிடம், நீ இப்போது படி, பிற்பாடு இவைகளைக் குறித்து நாம் பேசலாம் என்றார்.

பேராயர் அவர்கள் பதநீரை பாட்டிலில் அடைப்பது எப்படி என  ஜெர்மனி தேசத்திலிருந்து  அறிஞர்களை இங்கே அழைத்து வந்து,  பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். மேலும் இரண்டு முறை பனை ஏறுவதற்கு பதிலாக ஒருமுறை ஏறிவிட்டு பதனீரை மேலிருந்து ஒரு குழாயில் பனைமரத்தின் அடிப்பகுதி வரை கொண்டுவந்து அதனை சேகரிக்கும் வழிமுறைகள் என பலவற்றை பரிசோதித்து பார்த்தவர். குமரி கேரளா எல்லையில் இருக்கும் கோட்டவிளை என்ற தோட்டத்தில் புகையில்லா பதனீர் காய்ச்சும் அடுப்பு ஒன்றை மாதிரியாக இன்றும் வைத்திருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் முதன் முறையாக விஞ்ஞான முறையில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தான் அறிமுகப்படுத்தியது.  உலகமயமாக்கலில், பனை தொழில் பின்தங்கியே இருக்கிறது என புரிந்ததால் தான் அவர், பனை தொழிலை விட்டு வேறு வகையில் மக்கள் பொருளியல் மற்றும் சமூக உயர்வை அடைய உதவினார்.

எண்பதுகளில் பனை சார்ந்து சர்வதேச தளங்களில் பெரும் வீச்சுடன் இயங்கிய அறிஞரான Dr. T. A. டேவிஸ் அவர்களும், “பனையும் வறுமையும் இணைந்தே இருக்கும்” (Palmyra and poverty goes together) என்றார். இவைகள் இரண்டையும் நான் ஒன்றாக இணைத்தே நான்  புரிந்துகொள்ள  முயற்சிக்கிறேன். அதாவது பனை சார்ந்த எந்த நிறுவனமும் அமைப்பும் பனை தொழிலாளர்களை கைத்தூக்கிவிட இயலாது என்பது தான் உண்மை. பனை தொழிலாளர்கள் வைத்த எந்த கோரிக்கையும் இதுவரை  எந்த அரசாலும் செவிகூரப்பட்டதும் இல்லை. ஏனென்றால், சந்தை பொருளாதார காலகட்டமான இன்றும்  கூட பனையேறிகள் தங்கள் தொழில் அடிப்படையில் ஒரு பழங்குடியின சமூகமாகவே நீடிக்கின்றனர். ஆனால் அவர்களை சமூக அடையாளப்படுத்துதலில்  பிற்படுத்தப்பட்ட மக்களாக இச்சமூகம் ஏற்றுகொண்டுள்ளது. ஆகவேதான் பனையேறுகிறவர்களுக்கு எது தேவை என இங்கிருக்கும் மக்களால் எடுத்துச் சொல்ல முடியாத நிலை இருக்கின்றது. பழங்குடியினர் வாழ்வில் நிலம் மற்றும் அவர்களது உரிமைகளை எப்படி கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டுமோ அப்படி பார்ப்பது மட்டுமே இவ்வித மக்களின் விடுதலைக்கான துவக்கமாக அமையும்.

பனை மரங்கள் மீதான உரிமை பனையேறிகளுக்கு வேண்டும். அவர்கள் அதிலிருந்து பெறும் எவ்வித பொருட்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கலாகாது. பனைத்தொழில் சார்த்த விற்பனை உரிமையும் அவர்களிடம் இருக்கவேண்டும். அல்லது அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இவைகளை முன்னெடுக்கவேண்டும். இப்படி இருந்தாலே எதிர்காலத்தில் பனை சார்ந்து வாழும் மக்கள் ஏதேனும் நற்பயன் பெறுவார்கள். இன்று கூட தமிழகத்தில் பனையேறிகளைச் சுரண்டிப் பிழைக்கும் பெரு முதலாளிகள் உண்டு. தங்கள் கோட்டைக்குள் பனையேறிகளை சிறை வைத்து மிககுறைந்த கூலி கொடுத்து மனசாட்சியே இல்லாமல் பனையேறிகளின் வாழ்வோடு விளையாடிக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பனையேறிகளை காக்கும் வழிமுறை என்பது விரிவாக ஆராய்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது.   சேகரிக்கும் பொருளாதாரத்தை வாழ்வியலாக கொண்ட ஒருவனை சந்தை பொருளாதார வாழ்வு நோக்கி நகர்த்துவது என்பது கவனமாக செய்யப்படவேண்டிய ஒன்று. மிகுந்த கரிசனையுடன், இதன் நுண்மைகளை விளங்கிக்கொண்டாலொழிய பனையேறிகள் வாழ்வில் எவ்வித நன்மைகளும் விளையாது என்பது தான் உண்மை.

பனை சார்ந்த பொருளாதாரம் என்பன போன்ற பேச்சுக்கள் இன்று அனாயாசமாக பேசப்படுகின்றன. இவைகள் யாவும் ஒரு இடைத்தரகரின் நோக்கில் பேசப்படுகின்றதே ஒழிய, உண்மையான பனை பொருளியல் என்பது என்ன? அது கிராம சூழலில் எப்படி இயங்கும் என்பது போன்றவைகளை ஆராய்வது இல்லை. பெரும்பாலும் பனை சார்ந்த பொருட்கள் நகரத்திலும்  வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படும் வாய்ப்புகளுக்காகவே  காத்திருக்கிறது. இதற்கு நேரெதிராக கள், உள்ளூர் சந்தையின் பலத்தையும் பனையேறிகளின் விடுதலையையும் ஒருசேர வெளிப்படுத்தும் சக்தியாக இருக்கிறது. கள் என்கிற ஒற்றை பொருளிற்கான விடுதலை பனை சார்ந்த பிற பொருட்களை தடையின்றி தாராளமாக பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படியானால் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொழிலை இன்று நாம் எப்படி வெற்றிகரமான ஒன்றாக மாற்றுவது? இரண்டு வழிகள் எனக்கு தென்படுகின்றன. ஒன்று நமது இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இன்று இல்லை. பனை மரம் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எவ்வித பொருள் முதலீடுமின்றி உடனடி வேலை வாய்ப்பை வழங்க வல்லது. இரண்டாவதாக, பனை சார்ந்த வாழ்க்கை முறை நமது பிற தேவையற்ற நவீன சார்புகளை தவிர்க்கும். அவ்வகையில் மிகப்பெரிய அளவில் நமது செலவினங்களை மிச்சப்படுத்தலாம். மேலும், இன்று பனை சார்ந்த  உணவுகளின் தேவை மிக அதிகமாக இருக்கிறது ஆகவே இத்தொழிலில் இறங்கும் இளைஞர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் இருக்கிறது. கலப்படமில்லா இவ்வித உணவுகள் நமது சமூகத்தின்  ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.   நமது இளைஞர்கள் பனை ஏறுவதை முழுநேர தொழிலாக கூட எடுத்துக்கொள்ளவேண்டாம். வீட்டின் அருகில் நிற்கும் ஓரிரு மரங்களில் ஏறி வீட்டு தேவைக்கென பதநீரோ கள்ளோ இறக்கினால் போதும். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழும்.

நாங்கள் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்க வளாகத்திற்குள் சென்றோம். அலுவலகம் அமைதியுடனிருந்தது. திரு சந்திரபாபு அவர்களை சந்தித்தோம். நான் சேவியர் அவர்களை அறிமுகப்படுத்தினேன்.  சேவியர் அவர்களுக்கு பனை சார்ந்த பொருட்கள் மீதான விருப்பமிருந்ததால் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின்  கைவினை பிரிவு நோக்கி சென்றோம். அங்கே தற்பொழுது பனை ஓலையில் தொப்பி செய்யும் ஒரு சிறு அலகு மட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருப்பவர்கள் அனுமதியுடன் சேவியர் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இதன் பொறுப்பாளராக இருக்கும் திருமதி ராணி அவர்களை எனது சிறு பிராயம் முதல் நான் அறிவேன். அவர்கள் தேவையான தொப்பிகளை எடுத்து காண்பித்தார்கள். 

இங்கு செய்யப்படும் தொப்பி வெளிநாட்டு கெளபாய் தொப்பிகளைப் போன்றது. அதற்கான பெரும் சந்தை இருக்கின்றது. கொரோனாவினால் அனைத்தும் முடங்கிவிட்டன என ராணி அக்கா சொன்னார்கள். சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வர வைக்கும்படியாக மூன்று அளவுகளிலும், மெக்சிகன் வடிவில் மிக பிரம்மாண்டமான தொப்பிகளும் இங்கே செய்கிறார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத ஒரு முறைமை இங்கே கைக்கொள்ளப்படுவதை நாம் பார்க்கலாம். ஓலைகளை சன்னமாக வகிர்ந்து சடையாக பின்னிக்கொள்ளுவார்கள். அவைகளை மீட்டர் கணக்கில் வாங்கி சேகரித்து வைத்துக்கொண்டு பின்னர் தையல் எந்திரத்தில் வைத்து தைத்து அழகிய தொப்பியாக மாற்றிவிடுவார்கள். இவ்வித செயல்பாடு என்பது கலை நுணுக்கம் வாய்த்தது அல்ல, ஆனால் சந்தையின் தேவைகளை விரைந்து சந்திக்க இயலும்.

குமரி மாவட்ட மீனவர்களில் பலர் இதனை அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். கடலுக்குள் செல்லும்பொது இவ்வித தொப்பிகள் வெயிலிலிருந்து மீனவர்களை காக்கும் ஒன்றாக இருக்கிறது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றூலா பயணிகள் இதனை அதிகமாக வாங்கிச் செல்லுகிறார்கள். தயாரிக்கும் இடத்தில்  சுமார் 50 ரூபாய்க்கு கிடைக்கும் இவ்வகைத் தொப்பிகள் மிகவும் மலிவானவைகள்.

பனை சார்ந்த பொருட்களின் தேவை இந்த நாட்களில் அதிகரித்திருக்கிறதைக் காண்கிறோம். ஆனால் அவைகள் மிகவும் ஆபத்தானவை என நான் கண்டுகொண்டேன். இன்றைய சந்தை தேவை என்னவாக இருக்கிறது என்றால் வண்ணம் மிக்க பனையோலை பொருட்கள் தான். வெகு சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன். பெரும்பாலான பனைஓலை நுகர்பொருட்கள் என்பவை ஒற்றைமுறை பயன்பாட்டிற்கானது. அழகென காணப்படவேண்டும் ஆகையால் குருத்தோலைகள் கோருவது. ராமநாதபுரம் முதல் தமிழகத்தின்  பிற பகுதிகளில் வெட்டப்படும் பனை மரங்களில் இருந்து தான் இன்று பெரும்பாலான ஓலைகளின் தேவை சந்திக்கப்படுகிறது. இவைகள் எப்படி ஒரு நீடித்த வாழ்வியலை ஏற்படுத்தும்?  நெகிழிக்கு மாற்றாக இங்கே பனை ஓலைகள் முன்வைக்கப்படுவது மிகவும் அதிர்ச்சிகரமானது. ஏனென்றால், பனைஓலையில் வாங்குகின்ற பொருட்களை விசிறிவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது, நெகிழியைப்போல நம்மால் எப்போதும் பனை ஓலைப் பொருட்களை விசிறிக்கொண்டிருக்க இயலாது. அதன் பயன்பாடு எப்போதும் அப்படி இருந்ததில்லை.

பனை சார்ந்த பொருட்களை பனையேறிகள் பயன்படுத்தும் விதத்தைக் குறித்து அறிந்துகொண்டால், நாமெல்லாம் பனை சார்ந்த பொருட்களை புனிதம் மிக்கதாக கருதி அவைகளை பாதுகாப்போம். அவைகளை எவ்விதம் கையாளவேண்டும் எனவும் தேவையின்றி அவைகளை  வீணடிக்கமாட்டோம். நான் அறிந்த பனை ஓலைப்பாய் கலைஞரான தங்கப்பன் அவர்கள் ஒரே பனையோலைப் பாயினை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். கருங்கல் பகுதியை அடுத்த காட்டுவிளையைச் சார்ந்த பனையேறும் செல்லையா அவர்கள் தான் தயாரித்த வெற்றிலைப் பெட்டியினை ஏழு ஆண்டுகளாக பயன்படுத்திவருகிறார். பதனீர் எடுத்துவரும் குடுவைகளை இரண்டு ஆண்டுகளாவது நீட்டிப்பது பனையேரிகளுக்கு வாடிக்கை. ஆழ்ந்து நோக்குகையில், நமது பாரம்பரிய பொருட்கள் யாவும் நமது அன்றாட பயன்பாட்டில் இணைந்திருப்பதாகவும் சூழியலை மாசு படுத்தாததாகவும் நீடித்து உழைக்கும் தன்மைகொண்டதாகவும் இருந்திருக்கிறது. இப்படி, ஒரு பொருளை பயன்பாட்டு பொருளாக ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தும் வழக்கம் நம்மிடம் குறைந்து வருகிறது. தமிழகம் இன்று ஆண்டுக்கணக்கில் வைத்து பராமரிக்கும் ஒரே பொருள் முறம் தான். இன்று பிளாஸ்டிக் முறத்தின் வரவால் பனையோலை முறம்  தயாரிப்பவர்களது வாழ்வு மிகப்பெரும் அடியை சந்தித்திருக்கிறது. புதிய தலைமுறையினருக்கு முறத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என தெரியவில்லை. முறம் இல்லா சமையலறை என்கிற அளவிற்கு நவீன வாழ்க்கை மாறிவிட்டது. இவைகள் யாவையும் ஒட்டுமொத்தமாக சீர்தூக்கிப் பார்க்கையில், பனை சார்ந்த கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பது தெரியும்.

அப்படியானால் இன்று தயாரிக்கப்படும் ஓலைபொருட்களை நிறுத்திவிடவேண்டுமா என்ற கேள்வி எழும்பலாம்? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனேயே இன்று அப்படி செய்ய இயலாது. அப்படி செய்வது சரியுமாகாது. சற்றே நிதானித்து எதிர்காலத்திற்கான பொருள் என்ன என எண்ணி மக்களின் வாழ்வில் என்றும் இணைத்திருக்கும் பொருட்களை அறிமுகப்படுத்தி பனை பொருட்கள் அன்றாட வாழ்வில் நிலைபெறச் செய்வதே நமது கடமையாகிறது. எனது தொப்பி, திருமறை பை போன்றவைகள் அவற்றையே வலியுறுத்துகின்றன. பனை ஓலையுடன் பனை நார் இணைந்துகொள்ளும்போது அப்பொருள் அமரத்துவம் பெறுகிறது.

சேவியர், தான் எதிர்பார்த்தது போல மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பிரம்மாண்டமாக இல்லை என்று குறிப்பிட்டார். அது உண்மை தான். செயல்பாட்டளவில் அது குமரி மாவட்டம் மட்டுமல்ல தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்திய ஒரு நிறுவனம், இன்று அதன் சுவடுகள் மறைந்துபோய்விட்டன.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: