பனை கலைஞர் மாவட்டம்
சேவியர் அவர்களை நான் பால்மா மக்கள் அமைப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு அங்கமாக இருந்த பனைத் தொழிலாளர் பேரவையானது அதன் நிறுவனர் பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் இலட்சியக் கனவான ” பனைத்தொழிலாளர்களின் ஒன்றிணைவு, தற்சார்பு சமூகம், இவற்றால் விளையும் சுதந்திரம் மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்தல்” என்ற கோட்பாட்டின் வழி தனித்து, பால்மா மக்கள் இயக்கமாக தற்பொழுது செயல்படுகிறது. எந்த அரசும் செய்யாத வகையில் 165 முதிய பனைத்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும், பனைத் தொழிலாளர்களின் மனைவியாக இருந்து விதவையானவர்களுக்கும் உதவிசெய்துவருகிறார்கள். இங்கு உருவாக்கியிருக்கும் ஒரு புதிய சந்தை பொருளினை காண்பிக்கவே நான் சேவியர் அவர்களை அழைத்து வந்தேன்.
பால்மா மக்கள் அமைப்பின் தலைவராக திரு அன்பையன் என்னும் முன்னாள் பனை தொழிலாளி இருக்கிறார்கள். இதன் செயல் இயக்குனராக நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது அங்கு நிதி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு ஜேக்கப் அவர்களும் இருக்கிறர்கள். என்னை பால்மாவின் பிரதிநிதியாக 2017 ஆம் ஆண்டுமுதல் முன்னிறுத்திவருகிறார்கள். பால்மா குமரி மாவட்டத்தில் மட்டும் 454 பெண்கள் சுய உதவிக்குழுக்களைக் கொண்டது 186 தொழிலாளர் மன்றங்களும் கொண்டது. குமரியில் மிக பிரம்மாண்டமான வலைப்பின்னல் கொண்டது. தங்கள் அமைப்பிலுள்ள அனைவரையும் இலாப பங்காளர்களாக மாற்றும் உன்னத நோக்குடன் பால்மா செயல்படுகிறது.
2018 ஆம் ஆண்டு பனம்பழங்கள் எனும் உணவுப்பொருள் மிகப்பெருமளவில் வீணாகின்றன என்பதனை குறித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதனை வாசித்த செயல் இயக்குனர் ஜேக்கப் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். அப்போது நான் பனை ஓலைக் குடுவைகள் செய்யும் ஒரு பயிற்சியின் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை கிராமத்தை அடுத்த இலங்கையாளவார் தோட்டத்தில் இருந்தேன். மிக பிரம்மாண்டமான பனை தோட்டம் அது. வருடத்திற்கு ஒருமுறை அங்கே பனையேறிகள் வந்து தங்கி பதனீர் இறக்கி அதனை காய்த்து, கருப்பட்டியாக விற்பனை செய்வார்கள். ஆகவே தங்குமிடம் சமையலறை, கிணறு மற்றும் பம்புசெற்று ஆகியவை இருந்தன.

“உங்க கட்டுரையைப் பார்த்தேன் ஒரு சில பனம்பழங்கள் வேண்டும்” என்று கேட்டார்கள். குமரி மாவட்டத்தில் தேடினால் கிடைக்கும் என்றேன். ஆனால் அவர்கள் இப்போது இங்கே சீசன் இல்லை நீங்கள் எடுத்து வர முடியுமென்றால் ஒருசில பழங்களை எடுத்துவரவேண்டும் என்றார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டு, நான்கு பனம்பழங்களுடன் இரவிபுதூர்க்கடை என்ற பகுதிக்கு வந்தபோது இரவு 8 மணி ஆகிவிட்டது. அந்த இரவு பொழுதிலும் அங்கே வந்து பனம்பழங்களை எடுத்துச் சென்றார்கள். எதற்கு என கேட்டதற்கு விடை ஒரு வாரத்திற்குப் பின்பு எனக்கு கிடைத்தது. என்னை அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து, பனம் பழத்தில் ஸ்குவாஷ் செய்திருக்கிறோம் என்றார்கள். எனக்கு ஒரு பாட்டில் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் சுவைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார். பனம்பழத்தில் உள்ள காரல் தன்மையோடு சிறப்பாகவே அந்த பானம் இருந்தது. பின்னர் அதுவே பால்மாவின் அடையாளமாகிப்போனது.

பால்மாவுடன் இணைந்து பனம் பழச் சாறு தயாரிக்கும் ஒரு பயிற்சி பட்டறையினை தமிழக அளவில் நடத்தினோம். இந்த பனம்பழச் சாறு குறித்து அறிந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக காளிமார்க் குளிர்பானங்களின் அதிபரும் அதில் கலந்துகொண்டார். எங்களது திட்டம் பனம்பழங்கள் பனை மரத்திலிருந்து விழுந்த சில மணி நேரங்களில் வண்டு ஏறி உண்ணத்தகாததாக மாறிவிடும். ஆகவே இவைகளை சேகரித்து எப்படி அதிக நாட்கள் உணவுபொருளாக பயன்படுத்தலாம் என்பதாக இருந்தது. அவ்வகையில் பனம்பழச் சாறு என்பது ஒரு வருட அலமாரி ஆயுள் கொண்டது. தமிழகத்தில் வீணாகும் பனம்பழங்கள் அந்தந்த இடங்களில் சேகரிக்கப்பட்டு அவைகள் பயன்படுத்தப்பட்டால், உணவும் வீணாகபோகாது உபரியாக வருமானமும் கிடைக்கும் என்பது தான் எண்ணமாக இருந்தது.

எங்களுக்கு பயிற்சியளிக்க திரு பால்ராஜ் அவர்கள் வந்திருந்தார்கள். மத்திய அரசு வழங்கிய பயிற்சியினைப் பெற்றவர் இவர். மிக எளியவராக பார்வைக்கு தோற்றமளிப்பவர் என்றாலும், மிக மிக திறன் வாய்ந்தவர். ஜெர்மனியிலுள்ள ஆய்வாளர்களுடன் இணைந்து பனை சார்ந்த ஆய்வுகளை குமரி மாவட்டத்தில் மேற்கொண்டவர். குமரி மாவட்டத்தில் கற்கண்டு விளையாது என்ற கூற்றை உடைத்து முதன் முதலாக கற்கண்டு அறுவடை செய்தவர் இவர். பால்மாவுடன் இணைந்து மேலும் ஒரு சில பயிற்சிகளை முன்னெடுக்க இது ஒரு நல் துவக்கமாக அமைந்தது.

பால்மா பனம் பழங்களில் செய்யும் ஸ்குவாஷ் விற்பனையில் இப்படித்தான் களமிறங்கியது. தனது எல்லைகளை குமரியை விட்டு விலக்கி தமிழகத்தின் பிற பகுதிகளில் காலடி எடுத்து வைக்க முற்பட்டது. மாத்திரம் அல்ல பனம்பழ ஜாம் போன்றவற்றையும் இன்று விற்பனை செய்துகொண்டிருக்கிறது. வரும் நாட்களில் பனம் பழங்களிலிருந்து அழகுசாதனபொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

திரு அன்பையன் அவர்களுட னும் ஜேக்கப் அவர்களுடனும் சேவியர் அவர்கள் சந்தித்து உரையாடினார்கள். திரு அன்பையன் அவர்கள் தற்பொழுது பனை மரம் குறித்த பனையேறியின் பார்வையில் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழக அளவில் ஒரு பனையேறி எழுதும் முதல் புத்தகம் என்ற அளவில் இது ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். புறப்படும் முன்பு, தேவையான ஸ்குவாஷ் மற்றும் கருப்பட்டிகளை வாங்கிக்கொண்டார்கள்.
அங்கிருந்து திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். இரவிபுதூர்கடையிலிருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் இடப்புறமாக இரயில் தண்டவாளத்தின் அருகில் செல்லும் சாலையினைப் பிடித்தால் வாழ்வச்சகோஷ்டம் என்ற பகுதியில் வாழும் தங்கப்பன் அவர்கள் வீட்டை அடையலாம். தங்கப்பன் என்பவர் என்னைப்பொறுத்தவரையில் பனையோலைக் கலைஞர்களுள் மிக முக்கியமான ஆளுமை. முறையான கல்வி கற்காதவர், ஆனால் வறுமையின் நிமித்தமாக தனது சிறு வயது முதலே உழைப்பில் ஊறிப்போய்விட்டவர். அவரது 12 வயது முதல் குடுவை செய்ய குடும்பத்தினருடன் அமர்ந்து உழைத்தவர்.
குடுவை என்பது பனையேறிகளின் அடையாளம். குடுவை என்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வழக்கொழிந்துபோனஒரு கலைப்படைப்பாகும். அன்றைய காலத்தில் பனை ஏறுகிறவர்கள், பனை மரத்தில் மண் கலயத்தினை கட்டியிருப்பார்கள். பனை மரத்திலிருந்து பதனீரை இறக்கி கொண்டு வர பனை ஓலையால் செய்யப்பட்ட பனையோலைக் குடுவையினை பயன்படுத்துவார்கள். திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் சுரை குடுகையினை இதற்கென பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பனையோலைக் குடுவை என்பது ஒரு செவ்வியல் படைப்பு. பனை ஓலைகளில் காணப்படும், குருத்தோலை சாரோலை, பனை நார், கருக்கு நார், பனை மட்டை, ஈர்க்கில் என அனைத்து பொருட்களையும் இணைந்து செய்யப்படுவதுவே குடுவையாகும். பனையோலைக் குடுவைக்கு இணையான ஒரு நீர் ஏந்தும் தாவர பாத்திரம் உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இருந்திருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு இனத்தின் நாடி நரம்பு அனைத்தும் பனை சார்ந்து துடித்தாலொழிய இவ்வித கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்க இயலாது. உலகில் வேறு எந்த பகுதியிலும் இதற்கு இணையான பொருள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
சுமார் தொண்ணூறுகள் வரைக்கும் மிக எளிமையாக கிடைத்துக்கொண்டிருந்த பனைஓலைக் குடுவைகள் பிற்பாடு அழிவை சந்தித்தன. எனது பனை மர தேடுதலும் விருப்பமும் குடுவையின் அழகில் மயங்கி தான் நிகழ்த்தன என நான் பனைமரச்சாலையிலேயே பதிவு செய்திருப்பேன். இப்படி பனை ஓலைக் குடுவை செய்யும் ஒரு நபரையாவது கண்டடையமுடியுமா என்று குமரி மாவட்டத்தை சல்லடையாக சலித்து தேடிக்கொண்டிருக்கும்போதுதான் தங்கப்பன் அவர்களை சந்தித்தேன். எனக்கு ஒரு குடுவை செய்ய்வெண்டும் என்று சொன்னபோது 1000 ரூபாய் வேண்டும், ஆறு மட்டை சாரோலைகள், மூன்று மட்டை குருத்தோலை மற்றும் ஆறு நீண்ட மட்டைகள் வேண்டும் எனக் கேட்டார். எனது அண்ணன் உதவியுடன் இவைகளை எடுத்துச் சென்று நான் கொடுத்தேன். 2017 ஆம் ஆண்டு அவர் எனக்கு இதனைச் செய்து கொடுத்தார். என்னைப்பொறுத்த அளவில், குமரிமாவட்டத்தில் இருக்கும் எஞ்சிய ஒரே குடுவை தயாரிப்பவர் இவர் தான். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் இருக்கக்கூடும். தஞ்சையிலும், பண்ணைவிளையிலும் குடுவை செய்கிறவர்களை சந்தித்திருக்கிறேன்.
தங்கப்பன் அவர்களைக் கொண்டு தான் குடுவை பயிற்சி இலங்கை ஆளவார் தோட்டத்தில் வைத்து நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 7 நபர்கள் வந்திருந்தார்கள். இருவர் ஆண்கள் மற்றும் ஐவர் பெண்கள். பயிற்சி காலம் ஒரு வாரம். எப்படியோ கஷ்டப்பட்டு பெண்கள் ஐவரும் ஆளுக்கொரு குடுவையினை செய்து முடித்தார்கள். தங்கப்பன் அவ்வகையில் ஒரு தலைசிறந்த ஆசிரியர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு சர்வதேச மலர்கண்காட்சிக்கு நான் திரு தங்கப்பன் அவர்களைத் தான் அழைத்தேன். பனை சார்ந்த ஒரு கலைஞரை விமானத்தின் மூலம் பயணிக்கச் செய்தது எனக்கு மனநிறைவளித்ததுடன் முதன் முறையாக பயணித்த அவருக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. பனை ஏறுகின்ற சங்கர் கணேஷ் அவர்களுக்கு உதவியாகவும் தனது கலைப்படைப்புகளுடனும் அங்கே வந்திருந்தார்கள்.
நாங்கள் அங்கே சென்றபோது தங்கப்பன் அவர்கள் மண் கிளைக்கும் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவியும் இரண்டு பேரபிள்ளைகளும் மட்டுமே இருந்தனர். தங்கப்பன் செய்யும் பொருட்களின் செய்நேர்த்தி என்பது இரண்டு கூறுகளால் ஆனது. ஒன்று அவரது கைகளில் ஒளிந்திருக்கும் கலை நேர்த்தி. இரண்டாவதாக அப்பொருளின் உறுதி அதன் மூலமாக அப்பொருள் நீடித்து உழைக்கும் தன்மை. திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு நான் முதன் முறையாக சென்றபோது, அவரது திருமணத்திற்கு அவரே செய்த பனையோலை பாயினைக் காண்பித்தார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த பாய், கருநாகத்தோல் போல் வழவழப்புடன் காணப்பட்டது. பனை பொருட்களை எடுத்து பயன்படுத்துவது என்பது அதன் மீதான ஆழ்ந்த பற்றுடன் செய்யப்படக்கூடியது என்ற படிப்பினையை தங்கப்பன் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதற்கென அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் கூறவில்லை. மாறாக தனது கைத்திறனால் உருவாக்கிய பொருட்களின் மூலம் அவர் பேசினார்.
அவர்கள் வீட்டில் செய்யப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் மற்றும் ஒற்றைமுக்கு தொப்பி போன்றவற்றை சேவியர், அவர்கள் கூறிய விலைக்கே வாங்கிக்கொன்டார். நாங்கள் தேடி வந்த பனையோலைக் குடுவை கிடைக்கவில்லை. ஆனால் எப்படியும் குடுவையினை உங்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று உறுதிகூறினேன். அங்கிருந்து நேராக மதிய உணவிற்கு ஜாஸ்மின் வீட்டிற்கு சென்றோம்.
மதியத்திற்குப் பின்பு கிராமிய வளர்ச்சி இயக்கம் (RDM) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றோம். பாரக்கன் விளை என்ற பகுதியில் இருக்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர், பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் நெருங்கிய நண்பரான அறிவர் அருட்திரு. இஸ்ரயேல் செல்வநாயகம். கிராமிய வளர்ச்சி இயக்கம், அப்பகுதியிலுள்ள பெண்களின் தொழில் வாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. தையல் மற்றும் வேறு பல வேலைவாய்ப்புகளும் இங்கு உண்டு. பெண்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகள் செய்யலாம். குமரி மாவட்டத்தில், பனை ஓலைகள் சார்ந்து அழகு பொருட்களைச் செய்யும் கடைசி தலைமுறையினரில் இவர்கள் குழுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த இக்கலைஞர்களுக்குப் பின்பு அடுத்த தலைமுறையினர் இக்கலைகளை கற்றுக்கொள்ளாதது வேதனையானது.அங்கிருந்த பொருட்களைப் பார்த்த பின்பு, அங்குள்ளவர்களோடு சற்றுநேரம் சேவியர் உரையாடினார். பின்னர் அங்கிருந்து பனை ஓலையில் கடவம் செய்யும் பாலம்மாளைக் காண ஓலைவிளைக்கு செல்லலாம் என்று கூறினேன். சேவியர் சரி என்றார்.
சற்றேறக்குறைய மாலை 5 மணி ஆகிவிட்டது. என்னைப்பொறுத்தவரை பாலம்மாள் அவர்கள் கடவம் செய்வதில் நிபுணத்துவம் கொண்டவர். ஓலைகள் அவர்கள் பேச்சை கேட்கும். எவ்விதமான கடவம் வேண்டும் என்று கேட்டாலும் ஒரு மணி நேரத்தில் அவைகளைச் செய்து நமது கரத்தில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். அன்று நாங்கள் சென்றபோது சற்று வேலையாக இருந்தார்கள். ஆகவே நாங்கள் அருகிலுள்ள கடைக்கு தேனீர் குடிக்கப் போனோம். செல்லும் வழியில் “கூவக் கிழங்குகள்” விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் சேவியர் கண்டு ஆச்சரியத்துடன் சிறிது வாங்கிக்கொண்டார். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் இந்த கிழங்கு மிகவும் சுவையானது. வெண்மை நிறத்திலிருக்கும் இதனைக் கடித்து சுவைக்கையில் பால் ஊறி வரும். தனித்துவமான சுவைக்கொண்டிருக்கும். கொஞ்சமே கொஞ்சமாக கோதல் எஞ்சும். குமரியின் மேற்கு பகுதியிலுள்ளவர்களை “கிழங்கன்” என்று அழைப்பதற்கு அவர்கள் உணவில் பெருமளவில் சேரும் கிழங்குவகைகள் தான் காரணம்.

ஓலைவிளை ஜங்ஷனின் அருகிலேயே பாறைகளை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் நாங்கள் சென்று நின்றோம். எவ்விதம் வளர்ச்சி என்ற பெயரில் நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என சேவியர் கூறினார். நமது வளார்ச்சி திட்டங்கள் எப்படி அழிவை நோக்கியதாகவே இருக்கின்றன என்பதை ஒரு பொறியாளராக அவர் விளக்கிக் கூறும்போது, சூழியல் சார்ந்த பொறுப்புணர்வு ஒரு சமூகத்திற்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்றன என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
பனையோலைக் கலைஞர்களைப் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படும். அவர்களிடம் சில குறிப்பிட்ட பண்புகள் காணப்படுகின்றன. அவர்கள் ஓலைகளை எடுத்து வைக்கும் அழகு, நேர்த்தி போன்றவை பிரமிக்க வைப்பது. அவர்கள் ஓலைகளை தெரிவு செய்வது கூட ஒன்றுபோலவே இருக்கும். எவ்வித சூழலிலும் இறுதி வடிவம் மிக அழகாக காட்சியளிக்கும் வண்ணம் செய்துவிடுவார்கள். பொருட்களைச் செய்வதில் உள்ள வேகம், கூடவே வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் திறன் என பல்முனை திறன் பெற்ற ஆளுமைகளாக இருப்பார்கள். பார்வைக்கு மிக அதிக ஓலைகளை விரயம் செய்வதுபோல காணப்பட்டாலும், மிக சிக்கனமாக ஓலைகளைக் கையாள்வது உடனிருந்து பார்ப்பவருக்குத்தான் தெரியும். பாலம்மாளுக்கு ஒருவேளை கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியிருந்தால் குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய கல்லூரியில் விரிவுரையாளராக மாறியிருப்பார். அப்படி பேச்சு கொடுப்பார்.
ஆரம்பத்தில் கடவம் குறித்து எனக்கு சரியான புரிதல் இருந்ததில்லை. ஆகவே கடவம் செய்பவர்கள் மேலும் எனக்கு முதலில் பெரிய மதிப்பு இருந்ததில்லை. ஆனால் பாலம்மாள் தனித்திறன் வாய்ந்தவர் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மூன்றடி சுற்றளவு கொண்ட ஒரு கடவத்தை செய்யும் திறன் எவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அன்னையைப்போன்ற ஒருவராலேயே ஓலைகளை தன் மடியில் குழந்தைகளைப்போல விளையாட விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலும்பி நிற்கும் ஓலைகளாய் வழிக்கு கொண்டுவரும் திறமை உண்டு. அவர்களின் கைகளுக்கு மட்டுமல்ல, தனது பல்லாண்டு அனுபவத்தாலும் கரிசனையாலும் ஓலைகளை ஒன்றிணைப்பவர் என்பதனைக் கண்டுகொண்டேன்.
கடவம் செய்யும்போது, ஓலைகளில் ஈர்க்கில் கிழிக்கப்படாது. ஆனால் அதன் வயிற்றுப்பகுதி மட்டும் சற்று சீர் செய்யப்பட்டு இணைக்கப்படும். இதில் இணைத்திருக்கும் ஈர்க்கிலால் ஒரு புறம் இப்பெட்டிகள் உறுதி பெற்றாலும், மற்றொரு வகையில் பார்க்கும்போது ஈர்க்கில் இருப்பதால் இரட்டை ஓலைகள் இயல்பாக இப்பின்னல்களில் அமைந்துவிடுகிறது. இதற்கு மேல் பொத்தல் என்று சொல்லகூடிய அதிகப்படியான பின்னல் கடவத்தின் உறுதியினை மேம்படுத்தி நீடித்து உழைக்கச் செய்கிறது.

கடவம் என்பது குமரி மாவட்டத்தில் செய்யப்படும் பெட்டிகளிலேயே மிகப்பெரிய வகையாகும். குமரி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக இவைகள் செய்யப்படுகின்றன. திருமண வீட்டில் அப்பளம் பொரித்து வைக்கவும், பழங்கள் எடுத்துச் செல்லவும், சோறு எடுத்துச் செல்லவும் இவைகள் பயன்பட்டன. சந்தைகளில் காய்கறிகள் வைக்கவும், சுமடு எடுத்து செல்லுகிறவர்கள், கடவங்களிலேயே பொருட்களை எடுத்துச் செல்லுவதும் குமரி மாவட்டத்தில் காணப்படும் அன்றாட காட்சி. மீன் விற்பவர்கள் பனை ஓலைக் கடவத்தில் தான் பல மைல்கள் கடந்து மீனை எடுத்துச் சென்று விற்பார்கள். அக்காலங்கள் ஐஸ் இல்லாத மீன்கள் விற்கப்பட்ட காலம். மேலும் எண்னை பிழியும் செக்கு இயக்கப்படுமிடங்களில் கூட பனை ஓலைக் கடவமே பயன்பாட்டில் இருக்கும். காயவைத்த தேங்காய்களை எடுத்துச் செல்ல இவைகள் பயன் பட்டன. வீடுகளில் உரம் சுமக்க, மண் சுமக்க மற்றும் சருகுகள் வார என பல்வேறு பயன்பாடுகள் இங்கே இருந்தன.
“கடவத்துல வாரியெடுக்கவேண்டும்” என்கிற சொல்லாடல் தெறிக்கெட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள் சொல்லுவது. “பெருசா கடவத்துல கொண்டுவந்துட்டா” என மருமகளைப் பார்த்து மாமியார் கேட்பதும் உண்டு.
கடவங்களில் அதன் நான்கு முக்குகள் தான் முதலில் பாதிக்கப்படும். அப்போது ஓலைகளை கொண்டு பெரியவர்கள் பொத்தி பயன்படுத்துவார்கள். பொத்தி எனும் வார்த்தை ஓட்டையை அடைப்பது என்பதுடன், அதனைப் பலப்படுத்துவது, மேலும் ஒரு வரிசை ஓலைகளை இணைத்துக்கொள்ளுவது என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. என் குழந்தையை பொத்தி பொத்தி வளார்த்தேன் என்பது கூட மிக கவனமாக ஒன்றன் பின் ஒன்றாக கவனித்து வளர்த்தேன் என்கிற பொருள்பெறுவது இப்படித்தான். அதிகமாக சாப்பிடுகிறவர்களை “கடவங்கணக்குல அள்ளி தின்னுகான்” என்பார்கள்.
ஓலைவிளையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பும் கூட நூற்றிற்கு மேற்பட்ட மக்கள் கடவம் பின்னுவதனையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பனை ஓலைகள் இங்கே கிடைப்பதில்லை. இராமநாதபுரத்திலிருந்து வருகின்ற ஓலைகளை நம்பியே இங்கே தற்போது தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓலைகள் பெரிய லாரியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் அவைகள் சிறிய டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஓலைகள் குறித்த காலத்திற்கு வராமை, ஓலைகளுக்கான விலையேற்றம், தரமற்ற ஓலைகள் என பல காரணங்களால் இன்று பெரும்பாலானோர் இதனை விட்டு வெளியே வந்துவிட்டனர்.
ஓலைகளை செய்து முடித்த பின்பு, சேவியர் ஒரு வேண்டுகோளை அவர்கள் முன்பு வைத்தார். இதே பெட்டி ஒடுங்கி சற்றே உயரமாக வரும்படி செய்ய முடியுமா? பாலம்மாள் முடியும் என்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யோசித்திருக்கவில்லை. உடனடியாக ஒன்றைச் செய்ய சொல்ல, அவர்கள் அதனை செய்து பார்த்தார்கள். இருட்டிவிட்டது. ஆனால் அவர்களது கைகளோ தட்டச்சு வேகத்தில் பின்னிக்கொண்டு சென்றது. இருளில் அதனையும் பொத்திக் கொடுத்தார்கள். ஆனால் கடவத்தின் நேர்த்தி கைகூடவில்லை. அது அப்படித்தான், ஒரே வடிவம், சீரான அமைப்பு என ஒருவர் பின்னிக்கொண்டு வருகையில், அதிலிருந்து மாறுதலான வடிவம் ஒன்றைச் செய்யச் சொன்னால் அது அத்துணை எளிதில் நடைபெறுவது இல்லை. சேவியர் அவர்கள் அதனைப் புரிந்துகொண்டார். அவர்கள் பாலம்மாளிடம் எனக்கு இதுபோல 5 பெட்டிகள் வேண்டும், பொறுமையாக செய்து அனுப்புங்கள் என அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றார்.
இரவாகிவிட்டதால் சேவியர் திரும்பவேண்டிய நேரம் வந்தது. ஆனால் அவர் சங்கர் கணேஷ் என்ற எனது நண்பனும், பனையேறியும், பனை ஓலைக் கலைஞனை காண விரும்பினார்கள். சங்கருக்கு அப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே பல்வேறு வேலைகளில் அவன் சிக்கிகொண்டதால், எங்களை சந்திக்க வரவில்லை. ஆகவே நான் கூறினேன், நாங்கள் உனது வீட்டைத்தான் நோக்கி வருகிறோம் என்று. அவன் வேலைகளை முடித்துவிட்டு எங்களை திக்கணங்கோட்டில் வைத்து சந்தித்தார். இரவு சற்றேறக்குறைய 9 மணி இருக்கும்.
சங்கர், தான் செய்த பொருட்களைக் அவருக்கு விளக்கி காட்டினான். விலைகளைக் குறித்து விசாரித்தபின், மெல்லிய சிரிப்போடு, இதனைவிட விலைகுறைவாக நேர்த்தியாக பழவேற்காட்டில் செய்வார்கள் என்றார். சேவியர் அவர்கள், என்னோடு பேசும்போது எப்படி அவர்களால் ஒரு சிறந்த தரத்தை கைக்கொள்ள முடிகிறது என்பதைக் குறித்து விவரித்தார்கள். ஓலைகள் பழவேற்காட்டைச் சார்த்தவை. ஒவ்வொரு பொருளும், ஆர்டரை முன்வைத்தே செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்கள் இவ்வித முறைமையினையே கைக்கொள்ளுகிறார்கள், ஆனால் பழவேற்காட்டைப் பொறுத்த அளவில், ஓலைகள், வாங்கப்பட்ட பின்பே பொருட்கள் செய்யப்படும். ஓலைகளை ஏற்கனவே வாங்கி பரணில் போட்டு பழைய ஓலைகளில் பொருட்கள் செய்யும் வழக்கம் அங்கே இல்லை. அவ்வகையில் பார்க்கும்பொது, பழவேற்காட்டில் உள்ள கூலி குமரி மாவட்டத்தை விட குறைவு. தயாரிப்பு செலவு இன்னும் குறைவாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் அவர்களது கலைத் திறன் மேல் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் சேவியர்.
அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு தற்போது இல்லை. பாரம்பரிய பொருட்களைச் செய்வோர் மீது எனக்கு மிகப்பெரிய காதலுண்டு. எப்படி இஸ்லாமியர் வாயிலாக நமக்கு அழகிய கலைப்பொருட்கள் வந்திருக்கும் எனவும், எப்படி பரதவர் பெண்கள் பனை ஓலைக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நான் பார்த்தவரையில் மணப்பாடு மிகச்சிறந்த பனைக் கலைஞர்களைக் கொண்ட இடம். அவ்விடத்தில் பரதவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள்.
பேச்சினூடே பரதவர்களுக்கும் பனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவர்கள் தயாரிக்கும் ஒரு உணவு பொருளை நீங்கள் சுவைத்துப்பாருங்கள் என்று கொடுத்தார்கள். வாழைப்பழத்தை பதனீரில் இட்டு இடித்து செய்யும் ஒரு தின்பண்டம். அல்வா போல இருந்தது. இன்னும் அனேக உணவுபொருட்கள் உண்டு என்றார். மிக அழகிய வேலைப்பாடுகள் மட்டுமல்ல, பல்வேறுவகைகளில் மீன்களைப் பிடிக்கவும், கள் உட்பட பல்வேறு உணவு பொருட்களை பனை சார்ந்து அவர்களே அமைத்துக்கொண்டுள்ளனர் என்றார். நாங்கள் மெய்மறந்து நின்றோம்.
உண்மையில், நமது உரையாடல் என்பது மேலோட்டமானது, நமக்கடுத்திருக்கும் நபர்களின் வாழ்வியல் சார்ந்து நாம் அறிந்தவைகள் மிகக்குறைவு. நான் 2017 – 2019 வரை குமரி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தான் நெய்தல் நிலத்திற்கும் பனைக்குமான தொடர்பைக் குறித்து ஆராய துவங்கினேன். நாங்கள் தங்கியிருந்த மிடாலக்காடு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் குறும்பனை என்ற கடற்கரை கிராமம் இருக்கின்றது. குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே, தென்னை மரங்களால் நிறைந்தவை. தென்னைகள் என்பவை பனைகளுக்கு மாறாகவும், புன்னை மரங்களை அழித்தும் வேரூன்றியவை. அப்படியானால் குறும்பனை? நாங்கள் தேடி சென்றபோது இன்னும் சிதைவுறாமல் ஒரு பனங்காடு அங்கே இருப்பதைப் பார்த்தேன். கன்னியாகுமரி, சொத்தைவிளை மற்றும் முட்டம் போன்ற கடற்கரைகளில் இன்றும் பனைமரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கடற்கரையில் வாழும் மக்களுக்கு பனை மரம் மிகவும் நெருக்கமானது தான் சந்தேகம் இல்லை.
நான் பழவேற்காடு பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் கூறினேன். அவர் தங்கும் வசதி எதுவும் கிடையாது என்றார். எப்படியாவது ஓரிடத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்றேன். பார்க்கிறேன் என்றார். நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் ஏதும் இருக்காது, ஆனால் வாருங்கள் என்றார். கண்டிப்பாக பழவேற்காட்டில் சந்திப்போம் என்று கூறி பிரிந்தோம். அவர் காரில் நாகர்கோவில் செல்ல சங்கர் தனது பைக்கில் என்னை தேவிகோடு அழைத்துச் சென்றார். வீட்டில் இருவருமாக இரவு உணவைச் சாப்பிட்டோம்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, மும்பை
malargodson@gmail.com / 9080250653
மறுமொழியொன்றை இடுங்கள்