பனைமுறைக் காலம் 6


பனை நிலவு

அக்டோபர் எட்டாம் தேதி காலை ஜாஸ்மினும்  ஆரோனுமாக காலை நடைக்கு மிடாலம் கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் சென்ற சற்று நேரத்தில்  நானும் கடற்கரை நோக்கி சென்றேன். கையில் பணமும் எடுத்து வைத்துக்கொண்டேன். மிடாலம் கடற்கரையில் காலை எட்டு மணிக்கு முன்பு சென்றால்  கரமடி மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.  செல்லும் வழியில் ஒரு வடலி பனை மரத்தை முறித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன். இப்பாதகத்தை மின்சார வாரியம் செய்ததா அல்லது தோப்பின் உரிமையாளர் செய்ததா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. அந்த மரத்தின் மட்டைகளை வெட்டி விட்டிருந்தால் அது எவ்வித பிரச்சனையுமின்றி மின்சார கம்பத்தை தாண்டி வளர்ந்திருக்கும். காலை நேரம் இப்படி மன சஞ்சலத்தை ஏற்படுத்தும் காட்சியுடன் விடியும் என நான் எண்ணியிருக்கவில்லை.

முறித்துப் போட்ட வடலி பனை

நான் கடற்கரைக்கு சென்றபோது ஆரோன் ஒடியாடி மீன்களை  பொறுக்கிக்கொண்டிருந்தான். கைகள் நிறைய நிறைய சில  சாளை மீன்களை எடுத்து வந்து எனக்கு காட்டினான். பொதுவாக மீனவர்கள் வலைகளில் சிக்கியிருக்கும் ஜெல்லி மீன்களையும் தேவையற்ற மீன்களையும் எடுத்து வெளியே வீசுவது வழக்கம். ஜெல்லி மீன்களுள்  சிக்கியிருக்கும் சிறிய மீன்களை கடற்கரையில் வாழும் சிறுவர்கள் எடுத்துச் செல்லுவது வழக்கம். கடற்கரையில் வேறு சில சிறுவர்கள் ஒரு வீட்டிற்கு தேவையான மீன்களை குவித்து வைத்திருந்ததைப் பார்த்தேன். அன்று அதிகமாக சாளை மீன் பிடிபட்டிருந்தது. ஜாஸ்மின் நூறு ரூபாய்க்கு மீன்களை வாங்கினாகள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு மீன்கள் எடுத்து கொடுத்தார்கள். நாங்கள் 500 ரூபாய் கொடுத்தபோது, சில்லரை இல்லை எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவ்வளவு மீன்களை முன் பின் தெரியாதவர்களுக்கு கொடுக்கும் நல்லுள்ளம் எந்த வியாபாரிக்கும் வராது. பனையேறிகளே இவ்விதம் வழிப்போக்கர்களுக்கு பதனீரை இலவசமாக கொடுத்த கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வகையில் மீனவர்கள் மாபெரும் வள்ளல் பரம்பரைதான்.

ஆரோன் சேகரித்த மீன்களுடன்

2018 ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் இருந்தபோது, இதே கடற்கரையில் 100 பனை விதைகளை நட்டோம். நானூறு பனை விதைகளை இங்குள்ள மீனவர்களுக்கு கொடுத்தோம். அவைகளில் சில முளைத்திருந்ததை நான் ஏற்கனவே வந்து பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் தற்போது கடற்கரையில் காங்கிரீட் தடுப்புச் சுவர் எழுப்பவேண்டி நாங்கள் பனை விதைத்திருந்த   ஆக்கிரமித்திருந்தார்கள். பல பனைகள் சமாதியாகிவிட்டிருந்தன.  நாம் நடுகின்ற பனைவிதைகளில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் மட்டுமே அதன் முழு ஆயுளைக் காணும் என நினைக்கிறேன். ஆர்வத்தால் விதைப்பவைகள் அனைத்தும் அதன் பலனைக் கொடுக்கும் வரை இருக்குமோ இல்லையோ தெரியாது எனும் அளவில் தான் தற்போதைய சூழல் இருக்கின்றது. எங்கும் நிகழும் சாலை விரிவாக்கப்பணிகள், பொதுப்பணித்துறை பணிகள், கட்டுமானப்பணிகள், என பல்வேறு காரணிகள் விதைக்கப்படும் பனை விதைகளை முளையிலேயே கிள்ளி எறியும் சூழல் மேலோங்கி இருக்கிறது. ஆகவேதான், நிற்கும் மரங்களை பாதுகாப்பது, எதிர்காலத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய புண்ணிய  காரியம் என்பதாக உணருகிறேன்.

மிடாலம் கடற்கரை இன்று

காலை நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்திற்கு சென்றேன். அங்கே அதன் இயக்குனராக இருக்கு  சந்திரபாபு அவர்களை சந்திப்பது தான்எனது எண்ணமாக இருந்தது. நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் போது, இவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இருவருமாக பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைச் சார்ந்த சில பெண்கள் எப்படி அரசியல் தளங்களில் வெற்றி பெற்றனர் என்பதை மையமாக கொண்டு ஒரு புத்தகத்தினை தொகுத்தோம். எனது பங்களிப்பு அதில் மிகச் சிறிய அளவில் தான் இருந்தது. ஆகவே தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைப் பேசி வரலாம் என்று தான் கிளம்பினேன்.  “வரும் தேர்தலில்  கள் தான் கதாநாயகன்” என்ற சூளுரையோடு எனது தமிழகம் தழுவிய பயணத்தை  முன்னெடுக்கிறேன் என்றேன்.   உங்கள் அனுபவம் சார்ந்து சில தகவல்களை தந்துதவ முடியுமா எனக் கேட்டேன். என்ன வேண்டும் எனக் கேட்டார்கள். “பனையேறிகள் செய்த போராட்டங்களில் கள் சார்ந்து ஏதேனும் போராட்டங்கள் முன்னெடுத்தார்களா எனக் கேட்டேன்” அவர் பல்வேறு போராட்டங்கள் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். கள் என்பது கள்ளுக்கடைகளுக்கு தான் இலாபம் ஈட்டும் ஒன்றாக இருந்ததால், பனையேறிகள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு மட்டுமே கள் இறக்கிக்கொண்டிருந்தனர் என்றார்.   மேலும் அவர், 1985 ஆம் ஆண்டு பனைதொழிலாளர்கள் நிகழ்த்திய மாநாட்டின் மூலம் ஒரு பத்தம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர் என்றும் அதனை சமீபத்தில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் மீண்டும் பதிப்பித்திருக்கிறது என சொல்லி ஒரு புத்தகத்தை எனக்கு காண்பித்தார். 

சந்திரபாபு அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

பனைத்தொழிலாளர்களின் பத்தம்சக் கோரிக்கைகள் – 1985

1. பனைத் தொழிலாளர்களுக்கும் பனைப் பொருட்களின் உற்பத்திக்கும் ஊக்கமளிக்க பனைவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

2. அரசு நிலங்களிலிருந்து குத்தகைக்கு விடப்படும் பனை மரங்கள் பனைத்

தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படல் வேண்டும்.

3. பனைத் தொழிலாளர்களின் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை முழுவதும் அரசே செலுத்த வேண்டும்.

4. பனைத் தொழிலாளர்களுக்கு பணி செய்ய இயலாத காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

5. பனைத் தொழிலை அறிவியல் முறையில் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்

6. கருப்புகட்டிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

7. பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு , கல்வி மருத்துவம், வீட்டு வசதி,

வேலைவாய்ப்புத் துறைகளில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.

8. பனைத் தொழில் செய்யும்போது விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டால் பிரேத

பரிசோதனையின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

9. விபத்தில் மரணமடையும் பனை தொழிலாளிகளுக்கு 15000 ரூபாய் காப்பீடாகவும், தொழில் செய்ய இயலாமல் நிரந்தர ஊனமுற்றால் 7500 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

10. அரசின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், உதவிகள், கடன்கள் அனைத்தும், பனைத் தொழிலாளர் அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும்

பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்று அல்ல, பனை சார்ந்து எங்கும் இதுவரை வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்குட்படுத்தப்படவில்லை. பதினைந்தாயிரம் பனைதொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த   மாபெரும் போராட்டகளத்தில் ஒரு  கோரிக்கை கூட செவிசாய்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலானகோரிக்கைகள் அன்றைய சூழலை பிரதிபலிப்பதாக இருந்தாலும் இன்றும் இவைகள் கோரிக்கை என்னும் வடிவிலேயே இருக்கின்றன. பெரும்பாலான கோரிக்கைகள் இன்றும் பனைதொழிலாளர் வாழ்வு மாறவில்லை என்பதன் மவுன சாட்சியாக நிற்கின்றன.

குமரி மாவட்டத்திலுள்ள தேவிகோடு பகுதியை அடுத்த பட்டன்விளாகத்தைச் சார்ந்த பனைத் தொழிலாளி திரு செல்வராஜ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் “அனைத்து கோரிக்கைகளையும் விட, பனை மரத்திலிருந்து விழும் பனையேறிகளுக்கு உடற்கூறு ஆய்வு மட்டும் செய்யவேண்டாம் என்ற கோரிக்கையினை இறுதியாக மாவட்ட ஆட்சிதலைவர் முன் வைத்தோம்” என்றது மிக  நெகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அன்றைய ஆட்சியாளராக இருந்தவர், இவ்விதமாக பதிலளித்திருக்கிறார்: “விபத்தில் நான் உயிரிழந்தால் கூட  எனக்கும் உடற்கூறாய்வு செய்தே ஆகவேண்டும் என்பது தான் நியதி” அதனைத் தாண்டி எங்களால் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்க இயலவில்லை என்றார். சோகம் என்னவென்றால், அன்று பனையேறிகள் தங்களுக்காக முன்னெடுத்த போராட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்களின்  உதவி சிறிதும் இல்லாமல் இருந்தது. பனையேறிகள் தானே என்னும் இளக்காரமே மேலோங்கியிருந்தது. தங்கள் உடன்பிறந்தவர் என்றாலும் தந்தையே என்றாலும் பனையேறியென்றால் சமூகத்தில் அதனை பெருமிதத்துடன் முன்வைக்க இயலாத சூழல் காணப்பட்டது. ஆகவே பனை சார்ந்து இயங்குகிறவர்கள் மெதுவாக பனை மரத்தை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.            

அங்கிருந்து நான் சவுத் இந்தியா பிறஸ் என்ற அச்சகத்தை வைத்திருக்கும் கருணா அவர்களை சந்திக்கச் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை வேஷ்டி சட்டையில் மார்த்தாண்டத்தின் கதாநாயகனாக வலம் வரும் முக்கிய ஆளுமை அவர். கேரளா முதல் உலகின் அத்தனை பாகங்களிலும் நட்புக்களை வைத்திருப்பவர். பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள், பனை  தொழிலாளர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைத்தபோது கூட்டிய மிகச்சிறிய நண்பர் குழாமில் இவரும் ஒருவர். பனையேறிகளுக்கு நாம் செய்யகூடிய நன்மை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டபோது அன்றைய இளைஞரான கருணா, தனக்கே உரிய  தனித்துவத்துடன் “எல்லா பனையையும் முறிக்கணும்” என்றது செவி வழி செய்தி. 1975ல் அப்படி சொல்லும் ஒரு கருத்து மிகவும் புரட்சிகரமானது. அவரது ஒற்றைச் சொல் மிகவும் வீரியமாக பின்னாளில் பலித்திருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில்,  காதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குமரி மாவட்டத்தில் இருந்த  பனை மரங்களின் எண்ணிகை 25 லட்சம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று குமரி மாவட்டம் முழுக்க பனைகளை நான் தேடி ஆவணப்படுத்துகையில் ஒரு லட்சம் பனை மரங்கள் எஞ்சுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இவைகள் எப்படி முறிக்கப்பட்டன? ஒரு சமூகமே இணைந்து பனை மரங்களை உதறிவிட்டது போலவே இந்த இழப்பை நான் புரிந்துகொள்ளுகிறேன்.

கருணா அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

கருணா அவர்களின் அந்த கூற்றிற்கு காரணம் என்ன? ஆழ்ந்து நோக்குகையில், பனையேறிக்கும் பனைக்கும் உள்ள உறவு என்பது ஆத்மார்த்தமானது. பனை ஏறிக்கொண்டிருக்கும் ஒருவரால், பனை மரத்தினை அவ்வளவு எளிதில் உதறிவிட இயலாது.  பனை மரம் ஏறுவதைத் தவிற உலகில் வேறு சிறந்த துறை இருக்கிறது என ஒருபோதும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. பனை மீதான  காதலால் கண்மூடித்தனமான வழிபாட்டு நோக்குடனே பனையை அவர்கள் பூஜித்தார்கள். ஆகவே, பனையேறிகளின் வாழ்வு பனையைச் சுற்றியே இருக்கும். அன்றைய சூழலின்படி பனை சார்ந்து வாழ்பவர்கள் வறுமையிலேயே உழல நேரிடும். மேலும், பனை ஏறுகின்றவர், சமூகத்தில் கீழாகவே பார்க்கப்பட்டு வந்தார், ஆகவே, பனை மரங்களை முறித்துவிட்டால், வேறு ஏதேனும் வேலைக்குச் சென்று தனது வாழ்வை ஒருவர்  காப்பாற்றிகொள்ள முடியும் என கருணா அவர்கள் உறுதியாக நம்பினார். அவரது சொல் தான் பின்னர் பலித்தது என நான் எண்ணிக்கொள்ளுவேன்.

கருணா அவர்கள் எனது பணிகளை ஆழ்ந்து கவனிப்பவர், எனது தனித்துவ பணிகளுக்காக என்னை அதிகமாக ஊக்கப்படுத்துபவர். அவரிடம் பனை விதைகளை கொடுத்தேன். வாங்கிவிட்டு, இதனை எனது வீட்டின் அருகில் நடுவேன் என உறுதியாக கூறினார். மேலும் அவரது வீட்டின் அருகில் ஒரு வடலி பனை நிற்பதாகவும்,  எச்சூழலிலும் எவரும் அதனை முறிக்ககூடாது என பேணி பாதுகாப்பதாகவும் சொன்னார். சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு மனிதருக்குள் ஏற்பட்ட தலைகீழான மாற்றம் தான் என்ன? இன்று பனை ஒரு பண்பாட்டு அடையாளமாக மாறிவிட்டது தான் உண்மை. தமது மூதாதையரின் பெருமித அடையாளமாக இன்று பனை அவருக்கு காட்சியளிக்கிறது. கள்ளிற்கு ஆதரவு தெரிவித்த அவர்,  ஆயிரம் ரூபாய் இல்லாவிட்டால் இன்று கேரள கள்ளுக்கடைக்குள் சென்று வர இயலாது எனக் கூறினார்(அங்கு கிடைக்கும் சுவையான மீன் தலை மற்றும் கிழங்கு இன்னபிற உணவுகளுடன் சேர்த்து). குமரி மாவட்டத்தில் கள் கிடைக்கவில்லை எனவும், கருப்பட்டி வேண்டுமென்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் நண்பர்களிடம் சொல்லி வைத்து வாங்கவேண்டும் எனவும் ஆதங்கப்பட்டார். மாற்றம் அனைவரது வாழ்விலும் நிகழும் என்பதற்கு கருணா அவர்களின் புரிதல் ஒரு பதம்.

அங்கிருந்து மீண்டும் பால்மா நோக்கி பயணித்தேன். ஜேக்கப் அவர்களிடம் உரையாடும்போது “என்னை உங்கள் பயணங்களில் இணைத்துக்கொள்ள மாட்டீர்களா” எனக் கேட்டார். நான் இந்த கேள்வியினை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜேக்கப் நான் முன்னெடுக்கும் பனை பயணத்தில் இணைத்துகொள்ளுவார் என்பது நான் எண்ணிப்பார்த்திராதது.  நான் எனது பயணத்தில் உள்ள சிரமங்களைச் சொன்னேன்.  எனது பயணம் நீண்டது என்றும், கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்க முடியும் என்றும், உங்கள் அலுவலகத்தை விட்டு உங்களால் அப்படி ஒரு தொடர் பயணத்தை முன்னெடுப்பது சாத்தியமா எனக் கேட்டேன். “தமிழகமே உங்களோடு பயணிக்க விரும்புகிறது எங்களுக்கு விருப்பம் இருக்காதா” என்றார். நான் மலைத்துப்போனேன். சரி உங்களுக்கு பொருத்தமான நாட்களைச் சொல்லுங்கள் என்றேன். ஒரு மூன்று நாட்கள் தென்தமிழக பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனச் சொன்னார். அது குறித்து நாம் விரிவாக திட்டமிடுவோம் எனக் கூறி விடைபெற்றேன்.

எனது பயணத்தை தமிழக அளவில் ஒரு முக்கிய அடையாளமாக நான் நிலைநிறுத்தியிருக்கிறேன். எனது சிறு வயதில் கூட, பல பயணங்கள் பனை மரங்களைப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்தது. பனைமரச்சாலை அவ்வகையில் ஒரு முக்கிய திருப்பம். எனது பயணம் திட்டமிட்டவைகளை விட, தற்செயல்களால் நிறைந்தவை. அதில் இருக்கும் சாகசத் தன்மை என்னை உந்தும் விசை. அதே வேளையில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அது  மிகப்பெரிய மன எழுச்சியைக் கொடுப்பவை.  நான் எங்கு சென்றாலும், அங்கே எல்லாம் புதிய தகவல்களைத்  தேடி பதிவு செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். தமிழகத்தில் பனை சார்ந்து பயணங்கள் நிகழ்த்தப்படுமென்றால் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்.

பனை மரங்களை தேடி மனிதர்கள் சென்றாலே பனை சார்ந்து வாழும் மனிதர்களின் மற்றும் பனை மரங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது எனது தீர்க்கமான முடிவு. பனை சார்ந்த கலைஞர்கள் அனைவரும், உழைப்பை முன்னிறுத்துகிறவர்கள். உழைப்பினைத் தொடர்ந்து செல்லும் அவர்களுக்கு ஓய்வு மிக முக்கிய தேவை. அவர்களின் ஓய்வு நேரம் அவர்களைக் கண்டு உரையாடுவது அவர்களின் அல்லது அவர்களின் பணி நேரத்தில் அவர்களின் பணிக்கு இடையூறின்றி சந்திப்பது யாவும் அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.  பனை சார்ந்த கலைஞர்கள் நமது சமூகத்தில் அடையாளம் இழந்து வாழ்கிறார்கள், அவர்களை நாம் நேரடியாக சென்று சந்தித்து வரும்போது அவர்கள் வாழ்க்கை முறைக் குறித்த ஒரு புரிதல் உண்டாகும். அவ்வித புரிதல் இல்லையென்றால் நம்மால் ஒருபோதும், பனை சார்ந்த ஒரு மாற்றத்தை இச்சமூகத்தில் நிகழ்த்திவிட இயலாது. இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கு கூட பனையேறிகள் குறித்த புரிதல் சரியாக இல்லை. ஏனெனில் அவர்கள் பனை சார்ந்த மனிதர்களுடன் பயணிப்பது இல்லை.

இக்கருத்துக்களை எப்படி ஒன்றாக திரட்டி மக்களுக்கு அளிப்பது என நான் எண்ணுகையில் தான் பனை நிலவு என்ற ஒரு திட்டம் எனக்குள் உதித்தது. பனை நிலவு என்பது பனை சார்ந்த ஒரு சுற்றூலா தான். பனையோடு செலவிடும் நாட்கள். பனை குறித்த புரிதலற்ற ஒரு குழுவினரை ஒன்றாக திரட்டி, அவர்களுக்கு, ஒரு திட்டமிட்ட பயண அனுபவத்தைக் கொடுப்பதுவே எனது எண்ணமாக இருத்தது. அவ்வகையில் இதனை ஒழுங்கமைக்க அதிக சிரமத்தை எடுத்துக்கொண்டேன். ஆனால் நான் எண்ணியதை விட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. தேனிலவிற்கு இணையான போதையுடன் இருக்கும் என்றாதாலேயே “பனை நிலவு” என பெயரிட்டேன். இரண்டு நாள் பயணம். கன்னியாகுமரி மாவட்டம் துவங்கி திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவு செய்யும் ஒரு அற்புத பயண திட்டம்.

மார்த்தாண்டம் பால்மா மக்கள் இயக்கத்தில் அனைவரும் கூடவும், அங்கிருந்து பயணத்திற்கான திட்டத்தை  முன்னுரை வழங்கவும் திட்டமிட்டோம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எங்கள் பயணத்தில் சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். முன்னுரையில் பனை மரத்தை எப்படி பனையேறியும் பனைக் கலைஞர்களும் தாங்கிப்பிடிக்கின்றனர் என்றும், பனை சார்ந்த கலாச்சாரமே பனை மரங்களின் வாழ்வை நீட்டிக்கும் எனவும் கூறினேன். பனை சார்ந்த சுற்றுலா பனையேறுகின்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், உள்ளூர் சுற்றுலாவையும், உள்ளூர் பனை உணவு மற்றும் பனை பொருட்கள் சார்ந்த விற்பனையும் மேம்படும் என்றும் கூறினேன். பனை பொருட்களை நகரத்திலிருந்து வாங்கிவிடத் துடிக்கும் மனநிலை எப்படி பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வில் எவ்வித பயனையும் விதைக்காமல் போய்விடுகிறது எனவும் விளக்கிக்கூறினேன். வந்த அனைவருக்கும் பனம்பழ ஸ்குவாஷ் மற்றும் பனம்பழ ஜாம் வழங்கினோம்.

சுதா அவர்கள் செய்யும் அரிவட்டி

பனை ஓலைக் கலைஞரான சுதா அவர்களைக்  காணவேண்டி அவர்களின் ஒப்புதலுடன், கழுவந்திட்டை பகுதிக்கு  சென்றோம். முதலில் இது எப்படியிருக்கும் என அவர்கள் தயங்கினாலும், பின்னர் எங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். சுதா அவர்கள் பனை ஓலையில் இருக்கும் ஈர்க்கில் கொண்டு ஈர்க்காம்பெட்டி என்ற அரிவட்டியினை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். குமரிமாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஈர்க்கில் கொண்டு பொருட்களைச் செய்பவர்கள்  தலித் சமூகத்தினராகவே இருப்பார்கள். ஈர்க்கிலில் பொருட்களைச் செய்ய தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பனை ஓலைப் பாய் செய்யவும் தெரிந்திருக்கும். மேலதிகமாக பனை ஓலைப் பெட்டியும் செய்யத் தெரிந்திருக்கும்.  எஞ்சியிருக்கும் ஈர்க்கில் கொண்டே அழகிய வடிவம்பெறும் வகையில் ஒரு பொருளைச் செய்யும் சமூகம் எத்துணை திறமையானதும்  பனையுடன் உறவாடியதுமாக இருந்திருக்க வேண்டும்? அரிவட்டியின் பின்னல் முறைகள் சற்றே வித்தியாசமானது, பெருக்கல் குறியீடோ அல்லது கூட்டல் குறியீடோ சார்ந்தபின்னல்கள் அல்ல இது. ஒருவகையில் நடுவிலிருந்து அலையலையாக விரிந்து செல்லும் ஒரு  வடிவம். இரட்டை ஓலைகளாக தாவிச் செல்லும் பாய்ச்சல் கொண்டது. மூங்கில்களைக் கோண்டு  செய்ய்யப்படும் இவ்வகை பின்னல்கள் பெருமளவில் பழங்குடியினரிடம் மட்டுமே இன்று  எஞ்சியிருக்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். சுதா அவர்களிடம் உரையாடிய அனைவரும் தங்களுக்கு வேண்டிய பதிவுசெய்துகொண்டனர். அவர்கள் கூறிய பணத்தை விட அதிகமாகவே கொடுக்க அனைவரும் சித்தமாயினர். இந்த புரிதல் வேண்டிதான் அனைவரையும் இவ்வித பனை பயணம் செல்ல நான் அறைகூவல் விடுக்கிறேன். உண்மையான கலைஞர்களின் பெறுமதி என்ன என்பதை அருகிலிருந்து பார்த்தால் தான் புரிந்துகொள்ள இயலும். அவ்வகையில் இது எனது முதல் வெற்றி.

சுதா அவர்கள் செய்த கூட்டுப்பெட்டி – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கொழிந்து போனது

சுதா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, குமரி மாவட்டத்தில் வழக்கொழிந்துபோன கூட்டுபெட்டி என்ற ஒன்றை குறித்து பேசினேன். அவர்கள் எனக்கு அதனை மீட்டெடுத்து கொடுத்தார்கள். ஓலைகளை ஒடுக்கமான பெட்டியாக பின்னி, அதன் வாயை பரணியின் வாய் போல குறுக்கி, அதனுள் ஒரு கயிறு கட்டிய தேங்காய் சிரட்டையினை இட்டு, மூடிவிடுவார்கள். இவ்வித  கூட்டுபெட்டியினுள், மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அரிய பொருட்களை வைத்து தொங்கவிட்டுவிடுவார்கள். எலிகளால் அவைகளை எவ்வகையிலும் சேதப்படுத்திவிட இயலாது. 

பனை ஓலைக் கடவத்தில் குவித்து வைத்திருக்கும் காய்கறிகள்

பின்னர் குழுவினரை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் சந்தைக்குச் சென்றேன். மார்த்தாண்டம் சந்தையில் புளியினை பனை ஓலைப்பாயினில் விரித்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். ஓலைப்பெட்டியில் புளிகள் விற்பனைக்கு சிப்பம் சிப்பமாக வைக்கப்பட்டிருந்தன. காய்கறிகளை உட்புறமாக மடக்கிய கடவத்தில் குவித்து வைத்திருந்தனர். இது குழுவினருக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பனை ஓலை பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்று அவர்கள் விற்பனைச் செய்யும் பொருட்களை காண்பித்தேன். இன்றும் பனை ஓலைப் பொருட்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் இவ்வித கடைகள் தான் காரணம். விசிறி, மற்றும் பல்வேறு பொருட்கள் அங்கே இருந்தன. மார்த்தாண்டம் சந்தையில் மட்டும் பனை ஓலைப் பொருட்களை விற்கும் கடைகள் 2 இருக்கின்றன. 

குறும்பனை வெகு அருகில் தான்

இதனைத் தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் மிக முக்கியமானது. தென் இந்திய திருச்சபையின் அங்கமான கூடவிளை திருச்சபைக்கு சென்றோம். நாங்கள் புனிதவெள்ளி அன்று எங்கள் பயணத்தை அமைத்திருந்தபடியால், குமரி மாவட்டத்தில் காணப்படும் தனித்துவமான ஒரு வாய்ப்பினை நண்பர்கள் அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது.  புனித வெள்ளி அன்று அனைத்து திருச்சபைகளிலும் இயேசுவின் சிலுவை மொழிகளை மூன்று மணி நேர தியான நேரமாக கொள்ளுவது வழக்கம். மும்மணி நேர ஆராதனை முடிந்த பின்பு களைப்புற்றிருக்கும் அனைவருக்கும், பனை ஓலையில் பயிறு மற்றும் தேங்காய் துருவிபோட்ட கஞ்சி வழங்கப்படும். சமீப நாட்களில், இவ்வகை சடங்குகள் உருமாறிக்கொண்டு வந்தாலும், கூடவிளை போன்ற சபைகளில் இவ்வித பாரம்பரியத்தினை கைக்கொண்டு வருகிறார்கள். கஞ்சியின் சுவை ஒருபுறம், திருச்சபை பனை சார்ந்து கொண்டுள்ள தனித்திவமான பாரம்பரிய வழக்கம் மற்றொருபுறம் என நண்பர்கள் திக்குமுக்காடிப்போனார்கள்.

நண்பர்கள் அனைவரையும் குறும்பனை என்ற கடற்கரை கிராமத்திற்கு அழைத்துச் சென்றேன். பனை இருக்கும் இடத்தை தென்னை எப்படி ஆக்கிரமித்திருக்கிறது என நேரடியான ஒரு அனுபவ புரிதலுக்கு இப்பயணம் உதவியாக இருந்தது. மேலும் குறும்பனையில் காணப்பட்ட பனைகள் அனைத்தும் குறுகியே காணப்பட்டன.  ஒருவகையில் இங்கு காணப்படும் பனைகள் தனித்துவமானவைகளா? அதனை உணர்ந்து தான் குறும்பனை என நமது முன்னோர்கள் பெயரிட்டிருக்கிறார்களா? என்கிற கேள்விஎனக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. மீனவர்கள் வாழ்வில் பனை மரம் எவ்விதம் ஊடுபாவியிருந்தது எனவும் நண்பர்களுக்கு விளக்கினேன்.

அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் குமரி மாவட்டத்தின்  சிறந்த பானமான நுங்கு சர்பத்தினை ருசிக்க முடிந்தது. அங்கே தானே, நூங்கு சார்ந்த எனது புரிதலை விளக்கிக் கூறினேன். நுங்கு என்பது முதிர்ச்சி அடையாத ஒரு பனைக் கனி. அதனை உண்டுவிட்டால், நமக்கு அடுத்த தலைமுறை பனை மரங்கள் கிடைக்காது. குமரி மாவட்டத்தில் பனை மரங்கள் வேகமாக அழிவதற்கு நுங்கினை உட்கொள்ளும் மரபு ஒரு முக்கிய காரணம் என்றேன். என்னைப்பொறுத்த அளவில் நுங்கு உண்பது  பனைக்கு நாம் செய்யும் கருச்சிதைவு. ஆனால், சாமானிய மக்களைப் பொறுத்த அளவில், பனை மரங்களை மக்களிடம் கொண்டு செல்ல நுங்கு தான் எளிய வழி. அனைவரும் பனை மரத்தினை நுங்கு மரம் என்றே அறிந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற கிராமத்தை அந்தி சாயும் நேரத்தில் வந்தடைந்தோம். அங்கே இருக்கும் பனை மரங்களையும் நெல் வயல்களையும் நண்பர்களுக்கு காண்பித்து, ஆதி மனிதர்கள் நமக்கு எச்சமாக விட்டு வைத்த ஊர் இது. இந்த ஊரில் காணப்படும் பனை மரங்கள் என்பவை நமது மூதா,தையர்களுடன் நம்மை இன்றும் இணைப்பவைகளாக உள்ளன என கூறினேன். ஒரு முறை எனது நண்பர் ஒருவர் பழைய பானை ஓடுகளை எனக்கு காண்பித்தபோது அதன் அடிப்பகுதியில் பனை ஓலைப்பாயின் அடையாளம் அச்சாக பதிந்திருந்ததைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

அன்று இரவு நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி என்ற கிராமத்தின் அருகில் இருக்கும் திரு தானியேல் நாடார் என்பவரின் தோட்டத்தில் இரவு தங்கினோம்.  அங்கே சென்றபோது பனம்பழமும்  பனங்கிழங்கும்  உணவாக வைக்கப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற மீன்களை சமைத்து இரவு உணவு உண்டுவிட்டு, இரவு உலாவிற்கு பனங் காட்டிற்குள் சென்றோம். பனை சார்ந்து வாழும் மிருகங்கள் பறவைகள் அவைகளின் சத்தங்கள் போன்றவற்றை குறித்து பாண்டிச்சேரி ராம் விளக்கி கூறினார்கள். சூழியல் சார்ந்த அவரது புரிதல் பனை சார்ந்து எண்ணற்ற உயிரினக்கள் இருக்கின்றன என்பதை நண்பர்களுக்கு எடுத்துக்கூறியது. இரவு படுத்துறங்குவதற்கு என பச்சைப் பனை ஓலைகளை வெட்டி போட்டிருந்தார்கள்.  பனை ஓலைகள் மேல் படுத்துறங்குவது என்பது தனித்துவமான ஓர் அனுபவமாக அனைவருக்கும் இருந்தது. நட்ட நடு ராத்திரியில் தலைக்குமேல் எந்த கூரையும் இல்லாமல் பனங்காட்டில் ஓலைகளின் மேல் புரண்டு உறங்கும் ஒரு வாழ்க்கைமுறை எவரும் கேள்விப்பட்டிராதது. அன்று அதன் இன்பத்தை  முழுவதுமாக அனுபவித்தோம்.

பனை நிலவில் கலந்துகொண்டவர்கள் – புகைப்படம் ஆரோன்

மறுநாள் அதிகாலை சுற்றிலுமிருக்கும் கிராமங்களுக்குச் சென்று பனை நார் கட்டில் பின்னுபவர்களுடனும், பனை ஓலை முறம் செய்பவர்களுடனும் உரையாடினோம். எனது நண்பனும், நியூசிலாந்து நாட்டில் ஓட்டல் துறையில் இருக்கும் வின்ஸ்டன் மதியம் கருப்பட்டி பிரியாணி என ஒன்றைச் செய்தார். அனைவரும் நிகழ்ச்சி குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள மகிழ்வுடன்  கலைந்தோம்.  இதன் சிறப்பம்சம் என்பது பனை சார்ந்த அத்தனை உணவுகளும், அந்த இரு நாட்களுக்குள் எங்களால் சுவைக்க முடிந்தது. ஒரு வருடமாக கிடைக்கும் விதவிதமான பனை உணவுகளை இரண்டே நாளில் சுவைத்தது எங்கள் நண்பர் குழுவினராக மட்டுமே இருக்கமுடியும். ஒரு பனைத் தொழிலாளியின் குடும்பமே கூட ஒரே நாளில் இத்தனை சுவைகளை அறிந்திருக்காது.

ஜேக்கப் அவர்களிடமிருந்து விடை பெற்று, நடைக்காவு என்ற பகுதிக்குச் சென்றேன். செல்லும் வழியை நான் தவறவிட்டதால், வழிதப்பி நான் சென்ற பாதையில் ஒரு புதுப்பிக்கப்பட்ட இந்து ஆலயமும் அதன் அருகில் நிற்கும் அழகிய பனை மரமும் என் கண்ணிற்குப் பட்டது. ஒற்றை மரமாக அது இருந்தபோதிலும்,  அவ்வாலயத்திற்கு அது அழகு சேர்த்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவ்விடத்தில் நான் செலவிட்டேன். எனது வழி  எப்போதும் பனை வழி தான். ஆகவேதான் வழிதப்பினாலும் பனை மரங்கள் என் கண்களுக்கு விருந்தாக எங்கும் நின்றுகொண்டிருக்கின்றன.

நடைக்காவு என்ற ஊரில் திரு. பாலையன் அவர்கள் இருக்கிறார்கள்.பாலையன் அவர்கள் என்னை மிகவும் நேசித்தவர்.  நான் மும்பையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும்போது அவரை சந்தித்தது. அவரது மகள் புஷ்பா மூலமாக எனது எண்ணை வாங்கி என்னிடம் பேசி என்னை பார்க்க வாருங்கள் என்றார். பொதுவாக திருச்சபை அங்கத்தினர்கள் என்போன்ற பணிகளை செய்பவர்களை விரும்புவதில்லை. ஆனால் பாலையன் அவர்கள் என்மீது மிகப்பெரும் மதிப்பை கொண்டிருந்தார். “பனையேறி பாஸ்டரே” என அன்புடனே அழைப்பார். அவரது மகள் புஷ்பா, மருமகன் கிறிஸ்துராஜ், பேரபிள்ளை ஸ்னேகா, மற்றும் மகன் ஃபெலிக்ஸ் அனைவருமே என்னை மிகவும் நேசிப்பவர்கள். ஆகவே அவரைக் கண்டு பனை விதையினைக் கொடுத்து வந்தேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தனது  வீட்டில் நின்ற பனை மரத்தை மகன் முறித்துவிட்டான் என்ற வருத்தம் இருந்தாலும்,  அங்கே வளர்ந்து வரும் ஒரு சிறு வடலியைக் காட்டி சந்தோஷப்பட்டார்.  என்னைப் பார்க்கும் மக்கள் அனைவருமே பனை மரத்தினை கண்டிப்பாக நாம் பாதுகாக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வந்துவிடுகிறார்கள் என்பதுவே  நான் அடைந்த ஆகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

2 பதில்கள் to “பனைமுறைக் காலம் 6”

  1. mariaannam Says:

    பனைமுறைக் காலம் 6 எதிர்பார்த்ததை விடவும் சிறப்பு. நள்ளிரவு நேரத்தில் பனைக்காடுகளின் வழியாக பயணப்பட்டு அங்கு எழும் வினோதமான விலங்கினங்களின் சத்தத்தை ஆராயாமல் கேட்டு ரசிக்க அப்பாவியின் மனநிலை வேண்டும்.அது உங்களுக்கு வாய்த்திருப்பது கடந்த காலக்கருனையின் விளைவு.இங்கு இவற்றிற்கு தடையாக இருப்பது பெற்ற அறிவு.அறிவின் அவாவை தடை செய்யாமல் முக்தி அல்லது மோட்சம் பயணம் சாத்தியம் இல்லை.பயணம் தொடர வாழ்த்தும் அன்பன் ஜெ.ஜெயசெல்வன்.

  2. தமிழ் வாழ்வியல் Says:

    என்னைப்பொறுத்த அளவில் நுங்கு உண்பது பனைக்கு நாம் செய்யும் கருச்சிதைவு – என்ற சொல்லாடல் என்னை மிகவும் கலங்க வைக்கிறது. யோசித்து செயலாற்ற குறிப்பு தரும் சொல்லாடல். நன்றி.

    சுதா அவர்கள் செய்த கூட்டுப்பெட்டி மற்றும் அரிபெட்டி அருமை. பொது மக்களிடம் இது போன்ற பொருள்கள் புழங்க வேண்டும்.

    பனையேறிகளுக்கு பதநீர் இறக்குதல் வருடத்திற்கு நான்கு மாத தொழில். பனை ஓலை வீடுகள் மறைந்து வருவது அவர்கள் வருடத்தில் மீதமுள்ள மாதங்களில் இருந்த வேலைவாய்ப்பை இல்லாமல் செய்கிறது.

    குறும்பனை என்ற பெயரை படித்தவுடன் பனை என்ற பேரை தாங்கி இருக்கும் வூர்களை பற்றி தேடி போக வேண்டும் என்ற உத்வேகம் அளிக்கிறது. R. பாலகிருஷ்ணன் IAS, பானை வழி பாதை தேடி ஆய்வு செய்தது போல பனை வழி பாதையையும் ஆய்வு செய்ய வேண்டும்.

    அரசை நம்பி பயன் இல்லை. என்னை போன்றோர் பனை காட்டை, பனை வாரியத்தை அமைக்க வேண்டும். முயற்சி செய்கிறேன். நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: