Archive for பிப்ரவரி, 2021

பனைமுறைக் காலம் 9

பிப்ரவரி 26, 2021

பறிபோகா உறவுகள்

எங்களது பயணம் நீண்டுகொண்டே சென்றது மதியம் 12.30 வாக்கிலே தான் சென்று சேர்ந்தோம். நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு நீண்ட பாலத்தின் ஆரம்பம். அந்த பாலத்திற்கு அப்பால் தொலை தூரத்தில் ஒரு கலங்கரை விளக்கம் நின்றுகொண்டிருந்தது. அதனைச் சுற்றிலும் பனை மரக்கூட்டம். எனக்கு அந்த காட்சி மிகவும் பிடித்திருந்தது. அக்காட்சி என் மனதிற்கு நெருக்கமானது மட்டுமல்ல, கலங்கரை விளக்கத்தின் ஊற்றுக்கண்ணே பனை மரம் தான் என நான் எண்ணிக்கொள்வதுண்டு. கிட்டத்தட்ட இதற்கு இணையாக கன்னியாகுமரியிலும் பனை மரங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் நின்றுகொண்டிருக்கும். பல பனை மரங்கள் அழிந்துபோனாலும், இன்றும், ஒரு சில பனை மரங்கள், முட்டம் கடற்கரையினை ஒட்டி இருப்பதை நான் பதிவு செய்திருக்கிறேன். இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கூட ஒரு சில பனை மரங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். நான் எனக்கான இடத்தை தேடி வந்திருக்கிறேன் என்ற நிறைவை அந்த பனைமரங்களும் கலங்கரை விளக்கமும் கொடுத்தது.

அங்கே சுமன் என்ற மீனவர் நண்பர் ஒருவரின் தொடர்பு எண்ணை சேவியர் கொடுத்திருந்தார்கள். அவரை தொடர்புகொள்ள முயற்சித்தோம், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். ஆகவே, எங்களுக்கு இடதுபுறமாக காணப்பட்ட மீன் சந்தைக்குச் சென்றோம். மீன்பிடி படகுகள், தோணிகள் அதிகமாக அப்பகுதிகளில் நின்றுகொண்டிருந்தன.  கடலை ஒட்டி அனைத்து மீன்களும் உடனுக்குடன் பிடிக்கப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருந்தது. இறால் அதிகமாக தென்பட்டது. எதுவும் மலிவாக இருப்பது போல தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அனைத்தும் பிடிக்கப்பட்டு உயிருடனோ அல்லது சற்று நேரத்திற்கு முன் உயிரை விட்டோ வந்திருக்கிறது.

சுமன் வருவதற்கு நேரமானபடியால், அக்கரையிலிருந்த கலங்கரை விளக்கம் நோக்கிச் சென்றோம். பழவேற்காடு பகுதிகளில் இரண்டு கலங்கரை விளக்கம் இருப்பதாக சேவியர் கூறினார். மற்றுமொரு கலங்கரை விளக்கம் பல மைல்கள் தள்ளி ஆந்திரா எல்லையில் இருக்கிறது. கலங்கரை விளக்கத்தினைத் தாண்டி நாங்கள் சென்றபோது  அங்கே ஆர்ப்பரிக்கும்  கடல் இருந்தது. எனக்கு குழப்பமாகிவிட்டது. அப்படியானால் இங்கே பாலத்தின் அடியில் நான் கண்டது என்ன? ஆம், அது தான் பழவேற்காடு காயல் என பின்னர் அறிந்துகொண்டேன். இங்கு கடலுக்கும் காயலுக்கும் நடுவில் மிக நீண்ட மணல் திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள காயலே மீன் பெருமளவில் பெருகுவதற்கும், இறால் பெருகி வளருவதற்கும் வெளிநாட்டு பறவைகள் வருவதற்கும் காரணமாகின்றன. இன்று ஐஸ் வைக்கபடாத மீன்கள் வேண்டுவோர் பழவேற்காடு நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆகவே இங்கே விலை பிற இடங்களை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

பிரசாந்த் சுவாமினாதன் அவர்கள் எடுத்த அழகிய புகைப்படம்

எனது பயணம் ஏன் பழவேற்காடு நோக்கி அமைத்தது? அதற்கு ஒரு நீண்ட பின்கதை உண்டு. பனைமரச்சாலை பயணத்தில் நான் ஸ்ரீ ஹரிக்கோட்டாவை தாண்டி வரும்போது பழவேற்காடு பகுதியை பார்க்கவேண்டும் என விரும்பினேன். ஆனால் சென்னை செல்லுவது தாமதம் ஆகும் என கருதியதால் அன்று அந்த எண்ணத்தை கைவிட்டு ஏலூருவிலிருந்து சென்னை வரை 500 கிலோமீட்டர் ஒரே மூச்சாய் ஓட்டி வந்து சேர்ந்தேன். அந்த பயணத்தில் நான் பழவேற்காடு பகுதியை பார்க்கத்தவறியது மாபெரும் தவறு என பல நாள் எண்ணி வருந்தியிருக்கிறேன்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒருவர் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். பனை ஓலையில் செய்யப்பட்ட பறி போன்ற அமைப்பைக்கொண்ட ஒரு அழகிய பனையோலை பெட்டியினை ஒரு கரிய மனிதர் வெண்மையான முள் தாடியுடனும், தனது தோளில் உள்ள குச்சியின் ஓரத்தில் கட்டி தொங்கவிட்டபடி புகைப்படக் கருவியை  தீர்க்கமாக பார்த்தபடி நின்றார். அப்புகைப்படம், ஒரு நூறாண்டு பழைமையான புகைப்படம் போலவே காணப்பட்டது. காலத்தால் நாம் பின்நோக்கிச் சென்றால் எப்படி அன்றைய கருப்பு வெள்ளை படங்களில் நமது ஆதி குடிகளை ஆங்கிலேயர்கள் படமெடுத்து வைத்திருந்தார்களோ  அப்படியான தோரணைக் கொண்டது  அப்படம். ஆனால் ஆச்சரியப்பட வைக்கும் அளவில் அப்படம் வர்ணக்கலவையால் நிறைந்திருந்தது. இது எப்படி சாத்தியம் என எண்ணிக்கொண்டு நண்பர்களிடம் அப்புகைப்படம் எடுத்த நபர் குறித்து விவரங்கள் கேட்டேன். ஒருவகையாக அப்புகைப்படம் எடுத்த நபரையும் தேடிக்கண்டுபிடித்தேன். பிரசாந்த் சுவாமினாதன் என்ற அந்த புகைப்படக்காரருக்கு, அவரது பயணத்தின் போது, தற்செயலாக கிடைத்த படம் அது என்பதைத் தாண்டி மேலதிகமாக எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றாலும், எண்ணூர் பகுதியில் இப்படியான புகைப்படத்தைத் தாம் எடுத்தாக ஒப்புக்கொண்டார்.

இதனை நான் தேடுகையில், தான் சேவியர் அவர்களை ரோடா அலெக்ஸ் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். சேவியர் அவர்கள் என்னை நேரடியாக பழவேற்காடு வரச்சொல்லிவிட்டார். என்னால் அங்கு செல்லும் சூழல் அப்போது அமையவில்லை. எனது மனதோ பழவேற்காடு செல்லவேண்டும் என துடித்துக்கொண்டிருந்தது. பழவேற்காடு பகுதிகளில் காணப்படும் இவ்வித ஓலை வடிவத்தைக் குறித்து நான் தேடத் துவங்கியது 2017 ஆம் ஆண்டு தான். அதுவரை பறி என்கிற வார்த்தையை நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.

பாண்டியன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோருடன் பாண்டிச்சேரியில் வைத்து…

பறி என்ற சொல்லினை நான் முதன் முறையாக பாண்டிச்சேரியில் வைத்து தான் கேள்விப்பட்டேன். பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் “அகவிழி” என்ற குறும்படத்தை எடுத்த  இயக்குநர் பாண்டியனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.  பாண்டியனோடு பேசிக்கொண்டிருக்கும்போது தான் பாண்டிச்சேரி பகுதியில் காணப்படும் பறி குறித்த விவரங்களை எனக்குச் சொன்னார். பாண்டிச்சேரி மக்கள் மீன் வாங்குவதற்கு என ஒரு பனை ஓலை பையினை வைத்திருப்பார்கள் எனவும், அதனை எடுத்துக்கொண்டு தான் மீன் வாங்கச் செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் மீன் வங்கி வந்த பின்பு அந்த பெட்டியினை அவர்கள் கழுவி மீண்டும் பயன்படுத்த வேண்டி பத்திரமாக எடுத்து வைப்பார்கள் எனவும் கூறினார். நமது சூழியல் அறிவு எப்படி சமீப காலங்களில் மழுங்கிப்போய்விட்டது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வெகு சமீப காலம் வரைக்கும் புழக்கத்திலிருந்த இவ்வழக்கம் மறைந்து போய்விட்டது என அவர் சொன்ன போதே இதனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என உறுதி பூண்டேன்.

பாண்டிச்சேரி பறி

ஆனால், நான் எங்கு தேடியும் அது எனது கைகளில் சிக்கவில்லை. அப்படி ஒரு பொருள் இருந்திருக்கிறது என்றவர்களால் கூட அது எங்கிருந்து உருவாகி அவர்கள் கைகளை வந்தடைந்தது என சொல்லத் தெரியவில்லை. இது போன்ற சூழல்களில் தான் நமக்கு உள்ளூர் வாசிகளின் உதவி தேவைப்படும். பாண்டிச்சேரியில் இரண்டு நாட்கள் செலவழித்தால் ஒருவேளை இதனை கண்டுபிடித்து மீட்டெடுக்க இயலும். மக்கள் வெகு சாதாரணமாக புழங்கிய ஒரு பொருள் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இன்றி மறைந்து போவது என்பது மாபெரும் பண்பாட்டு இழப்பாகும்.

குமரி மாவட்டத்தில் கூட மீன் வாங்கச் செல்லுபவர்கள், ஒரு சிறு பெட்டியினை சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் முப்பதாண்டுகளுக்கு முன்பு இருந்தது. சாதாரண மிட்டாய் பெட்டியின் அடிப்பாகம் போல காணப்படும் ஒரு எளிய பெட்டி தான் அது. ஆனால் அதனை  எடுத்துச் செல்லும் விதம் தான் அதனை சற்று வித்தியாசமான ஒன்றாக காட்சிப்படுத்தும். வட்ட வடிவில் காணப்படும் கையடக்க பெட்டிக்குள் மீனை போட்டு, முயலின் காதை பிடித்து வருவதுபோல் அதன் மேற்பகுதியினை மடித்து தூக்கி வருவார்கள். இப்பெட்டியும் வழக்கொழிந்து போனதுதான். 

குமரி மாவட்ட மீன் பெட்டி

குமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு பகுதியில் ஒரு நாள் பனை விதைகளை சேகரித்துக்கொண்டிருந்தபோது, உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று ஒரு பெண்மணி சொன்னார்கள். அவர்கள் பெயர் ரெஜினா. கணவனை இழந்தவர்கள், இரண்டு ஆண் மகன்கள் அவர்களுக்கு உண்டு.  கிட்டத்தட்ட 5000 விதைகளை அவர்கள் அந்த வருடம் தன்னார்வலராக சேகரித்து கொடுத்தார்கள். அவர்கள் தனக்கு அந்த மீன் பட்டி செய்யத் தெரியும் என்றும், ஓலைகள் கொடுத்தால் நான் செய்து கொடுப்பேன் என்றும் கூறினார்கள். அப்படித்தான் இழந்த மீன் பெட்டியினை மீட்டெடுத்தோம்.

ரெஜினா மீன் பெட்டி செய்கிறார்கள்

பறி குறித்து எனது தேடுதல் வேகமடைந்தது. 2017 – 2018ஆம் ஆண்டிற்கான சூழியல் விருதினை பாண்டிச்சேரியிலுள்ள ஆரண்யா காடு என்ற அமைப்பினை நடத்தும் திரு சரவணன் மற்றும் குழுவினர் என்னையும் ஒருவராக தெரிந்தெடுத்திருந்தார்கள். அங்கே பனைமரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. பண்ருட்டி இரா பஞ்சவர்ணம் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. எனது தேடுதலைச் சொன்ன போது, அவரது நட்புகளை தொடர்புகொண்டு, எப்படியும் உதவி செய்தே ஆகவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடலூர், பாண்டிச்சேரி மற்றும்  சென்னை பகுதிகளில் அவருக்கு ஏராளம் நண்பர்கள் உண்டு.  விதைகளை சேகரித்து அதனை பரவலாக்கும் ராமநாதன் என்னும் ஓய்வுபெற்ற ஆசிரியர்  எங்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்கள்.  எப்படியோ ஓரிடத்தை கண்டுபிடித்துவிட்டோம்.  அங்கே சென்று சேர்ந்த போது, அது வீராம்பட்டிணம் என்ற ஒரு மீனவ கிராமம். பாண்டிச்சேரியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

பறியை இடுப்பில் கட்டியபடி வலை வீசும் மீனவர், பாண்டிச்சேரி

அங்கு சென்றபோது ஒருசேர ஏமாற்றமும் அதிர்ச்சியும் எனக்கு காத்திருந்தது. நாங்கள் தேடி வந்த மக்கள் பயன்பாட்டிற்கான பறி கிடைக்கவில்லை. அது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அதனை சற்று நேரத்திற்குப் பின் தான் என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. மீனவர் கிராமத்தில் வந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் பறியினை தேடுவது சரியில்லையே?

எங்கள் தேடுதலில் ஆச்சரியமளிக்கும் விதமாக இங்கு பறி செய்யும் ஒருவரைப் பார்த்தோம். திரு ராஜேந்திரன் என்பவர் அதனை செய்துகொண்டிருந்தார். இன்றும் விராம்பட்டிணம் ஊரிலுள்ள மறை மலையடிகள் தெருவை சார்ந்த நான்கு குடும்பங்கள் பறி செய்வதாக தெரிவித்தார். அந்த பறியின் பயன்பாடு தெரிய அந்த மீனவரை அழைத்துக்கொண்டு சென்றோம். உள்நாட்டு மீனவர்கள் தான் இவர்கள் என அப்போதுதான் புரிந்துகொண்டேன். அவர் தனது இடுப்பில் இந்த பறியைக் கட்டிக்கொண்டு கரத்தில் ஒரு வலையை எடுத்துக்கொண்டார். கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளில் தான் இவர்கள் மீன் பிடிப்பது வழக்கமாக இருக்கிறது. அன்று அதிகமாக எதுவும் கிடைக்கவில்லை, ஒரு நண்டும் ஒரு சில சிறிய மீன்களும் அவருக்கு கிடைத்தன.

பறியின் வடிவம் குறித்து நான் சொல்லியே ஆகவேண்டும். பறி குமரி மாவட்டத்தில் காணப்படும் எந்த வித பொருட்களுடனும் தொடர்புடையது அல்ல. அப்படி நான் சொல்லுவதற்கு காரணம், குமரி மாவட்டத்தில் வழக்கமாக கிடைக்கும் பொருட்கள் எதனுடனும் நாம் ஒப்பிடமுடியாத வடிவமாக அது காணப்பட்டது.  மேலும் அப்போது நான் குமரி கடற்கரைகளில்  புழங்கும் பனை ஓலை பொருட்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. ஆனால் அதனைப் பார்த்த போது இனம்புரியாத ஒரு குதூகலம், என்னை ஆட்கொண்டது. ஏதோ கண்டுபிடித்துவிட்டேன், சாதித்துவிட்டேன் என்பது போல உற்சாகமாகிவிட்டேன். எனது உற்சாகம், ஐயா பஞ்சவர்ணம் அவர்களையும், மற்றும் உடன் வந்த ராமநாதன் ஆசிரியரையும்  ஒருங்கே  கூட தொற்றிக்கொண்டது. எனக்கான பறிக்கு ஐயா பஞ்சவர்ணம் அவர்கள் முன்பணம்  கூட கொடுத்துவிட்டார்கள்.

அப்படி அந்த பறியில் நான் என்னத்தை சிறப்பாக கண்டேன்? எனக்குத் தெரியவில்லை. பொதுவாக நான்கு முக்கு பெட்டிகளோ இரண்டு முக்கு பெட்டிகளோ தான் குமரி மாவட்டத்தில் இருக்கும். இது ஒரு சீரான வடிவற்ற பொருள். பார்க்க மனிதர்களின் பிருட்டம் போல காணப்பட்டது. அதன் வாய் ஒடுங்கி மனித கழுத்தினளவு தான் இருந்தது. பறியின் அடிப்பகுதி  நேர்கோடாக செல்லும் பகுதியையும், வாய் பகுதி சீரான வட்ட வடிவத்தையும் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. பறி என்ற அமைப்பில் தான் வயிற்றுப்பகுதி ஊதி பெரிதாகவும், மிச்சப்பகுதிகள் சீராக இருப்பதாகவும் எனக்கு தோன்றிற்று. அவைகள் எப்படி இந்த “வடிவற்ற” வடிவை அடைந்தன என என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. என்னைப்பொறுத்த அளவில் செய்நேர்த்தி இல்லாத ஒரு ஆச்சரிய வடிவம் என்பதாகத்தான் அதனை அப்போது உள்வாங்க முடிந்தது.

ஏன் பிருட்டம் போன்ற வடிவம்? ஏன் பனை ஓலையில் போன்ற கேள்விகளுக்கு  அன்றே எனக்கு விடை கிடைத்தன. தண்ணீரில் இடுப்பளவு இறங்கி நின்று மீன் பிடிக்கும் ஒருவர், பறியினை இடுப்பில் கட்டியிருப்பார். பிடித்த மீனை பறிக்குள் உயிருடன் போடுவார். அது அவர் வீடு வருவது வரை உயிருடன் இருக்கும். அப்படி தண்ணீரிலேயே மீன்கள் இருப்பதனால் எவ்வகையிலும், அவைகள் மீண்டும் தண்ணீரில் குதித்துவிடக்கூடாதே என்பதற்காக தான்  இவ்விதம் அதனை மடித்து கழுத்தை சிறிதாக்கி விடுகிறார்கள் என அறிந்துகொண்டேன். பனை மரங்கள் நெய்தல் நிலத்தில் பெருமளவு காணப்படுவதால் பனை ஓலைகளை மீன்பிடி உபகரணங்கள் செய்ய பயன் படுத்துகிறார்கள் என அறிந்து கொண்டேன்.

தமிழக கடற்கரை பகுதிகளுக்கும் பனை மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் மட்டுமல்ல, இராமநாதபுரம் பகுதிகளிலும் பனை ஓலையில் பறி செய்யும் வழக்கம் இருப்பதாக பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில் குறிப்பிட்டார்கள். அக்குழுவினரைச் சார்ந்த சாமிநாதன் என்பவர், ராமநாதபுரம் சென்று பறி எப்படி செய்கிறார்கள் எனக் கற்று வந்தார். ஆகவே இளவேனிலிடம் அப்பெரியவரின் எண் வாங்கிகொண்டு அந்த மனிதரைக் கண்டு திரும்பலாம் என நினைத்தேன்.

பல தேடுதல்களுக்கு பின்பு ராமநாதபுரத்தில் பறி செய்யும் அந்த நபரை கண்டுபிடித்தேன். அவரிடம் நான் பர்த்த பறி இன்னும் வித்தியாசமாக காணப்பட்டது. ஏற்கெனவே நான் கூறியிருப்பது போல பின்னல்களில் கூட்டல் வடிவமும் பெருக்கல் வடிவமும் உண்டு. ராமநாதபுரத்தைப் பொறுத்த அளவில் கூட்டல் முறை போன்ற ஒன்றே அவர்களிடம் காணப்படுகிறது. மேலும், கூட்டல் முறை என்று சொல்லும்போது இரண்டு பக்கமும் ஓலைகளையோ அல்லது பனை நாரையோ கொண்டு பின்னல் இடுவது வழக்கம். ஆனால் இங்கு செய்யப்படும் பறியின் அமைப்பு, சற்று வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக ஊடாக செல்லும் ஓலைக்குப் பதிலாக பனை ஈர்க்கில் பயன்படுத்தப்பட்டிருந்தது.  

குமரி மாவட்டத்தில் செய்யப்படும் வட்ட ஒமல் – மீள் உருவாக்கம் செய்யப்பட்டது

இதே பின்னல் முறையினை ஒத்த ஒரு நேர்த்தியான வடிவத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மீண்டும் அமைந்தது பெரும் பாக்கியம் என்றே சொல்லுவேன். 2017 – 18 ஆகிய வருடங்களில் ஜாஸ்மின் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அவருடன் பணியாற்றும் ஒரு ஆசிரியர் உடல் நலம் குன்றியபோது நாங்கள் அவர்களைப் பார்க்கச் சென்றோம்.  அவர்களின் கணவர், பனை ஓலையில் ஒமல் என்கிற பனை ஓலைப் பொருளை தமது சிறு வயதில் மீன்களை அள்ள பயன்படுத்திருக்கிறாதாக  கூறினார்கள். குமரி மாவட்டத்தில் பனை சார்ந்த தேடுதலை 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்துவந்த எனக்கு  அது ஒரு ஆச்சரியத் தகவல். நமக்கடுத்திருப்பவர்களிடம் இருக்கும் ஓலைப்பொருளைக்கூட  தெரியாமல் இருந்திருக்கிறேனே என்கிற ஆற்றாமை என்னை புரட்டிப்போட்டது. ஆகவே குமரி கடற்கரையை பகுதிகளை பன்னாடையிட்டு தேடத் துவங்கினேன். முட்டம் என்னும் ஒரு பகுதில் ஒருவர், ஒமல் செய்வதாக கேள்விப்பட்டு அவ்வீட்டை கண்டடைந்தேன். ஆனால் அவர்கள், பிளாஸ்டிக் நார் கொண்டே அந்த ஒமலினைச் செய்து வந்தார்கள். பனை ஓலையில் செய்யும் ஒரே ஒருவர் அப்பகுதியில் இன்னும் இருப்பதாகவும், அவர் தனது மகளுடைய வீட்டிற்கு போயிருப்பதாகவும் கூறினார்கள். அவரைக் கண்டுபிடிக்க சிறிது காலம் தேவைப்பட்டது.

திருமதி பாக்கியம் வட்ட ஒமல் – மீள் உருவாக்கம் செய்யும்போது

2018 – 19 ஆகிய வருடங்களில்,  மிடாலக்காடு என்ற பகுதியில் உள்ள ஒரு  வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டிற்கு எதிரில் இரண்டு மீனவ குடும்பத்தினர் வாடைகைக்கு இருந்தார்கள்.  மீனவ குடும்பத்தினருக்கே உரிய அன்பை எங்கள் மீது பொழிந்தவர்கள் அவர்கள்.  பனை சார்ந்த  எனது தேடுதலை அறிந்த பாக்கியம் என்ற அம்மையார், தனது தந்தையார் பனை ஓலைகளில் ஒமல் என்கிற மீன் அள்ளும் பொருளினைச் செய்வதை தான் பார்த்திருப்பதாகவும், ஓலைகள் கொடுத்தால், தான் அதனை மீட்டிருவாக்கம் செய்ய இயலும் என்றும் கூறினார்கள். கிட்டத்தட்ட 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே ஒமல் குறித்த அறிவு இருக்கும்.

வட்ட ஒமலுக்காக அடிவைக்கும் முறை

நான் ஓலைகளை எடுத்து வந்தபோது அவர்கள் அதனை செய்யத் துவங்கினார்கள். என் கண்களின் முன்னால் உருப்பெற்ற அந்த ஒமல் வட்ட வடிவாக விரிந்து செல்லுவதும், ஈர்க்கில்களே அவைகளை  இணைத்து கட்டுவதும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. குமரி மாவட்டம் என்று அல்ல, தமிழகத்தின் எப்பகுதியிலும் இவ்விதமான பின்னும் முறைகள் காணப்பட்டதில்லை என்பது தான் உண்மை. எனக்கு ஒமல் என்ற அந்த வடிவத்தைப் பார்க்க  ஆச்சரியமாயிருந்தது. மீனவர்களின் இந்த தனித்திறனோ அல்லது பனையுடனான உறவோ ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும், மீனவ சமூகத்தாலேயே மறக்கப்பட்டு வருவதும் வேதனையான உண்மைகள். குறிப்பாக குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே மெல்ல மெல்ல தென்னைமயமாகிக்கொண்டு வருவதும், பனைகள் குமரி கடற்கரையோரங்களிலிருந்து மறைந்துபோவதும் தொடர்நிகழ்வாகிவிட்டன.

முட்டத்தைச் சார்ந்த அந்த மனிதரைப் வெகு நாட்களுக்குப் பின்பு கண்டுபிடித்தேன். அவர் பெயர் இன்னாசி மகன் ஜோசப் (79). கடற்கரைக்கே உரித்தான வட்டார வழக்கினை தவிர்த்து அவர் பேசினது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுமார் எண்பது வயதை எட்டுகின்ற அவர், எனக்கு ஒமல் செய்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.  அவரது உடல், மற்றும் வயோதிபம் போன்ற பல காரணங்களால் அந்த பழைமையான பொருளை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதாக கைக்கூடவில்லை.  நான் அவரை மீண்டும் மீண்டும் சென்று பார்க்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டியிருந்தது. அவர் அதனைத் துவங்கும்போது அவருடனிருந்தேன். இரண்டு ஈர்க்கில்களின் மத்தியில் ஒரு ஓலை செல்லும். ஈர்க்கில் அந்த ஓலையினை பின்னிச்செல்வதினூடாக வலிமையான ஒரு பொருளாக அதனை மாற்றும்.  அவர் அதனை முடிக்கும் வேளையில் நான் மும்பை வந்துவிட்டேன். எனது நண்பர்களே அதனை வாங்கி சென்னை எடுத்துச் சென்றனர்.  எப்படியிருந்தாலும், அதன் வடிவம் சற்றே ராமநாதபுரத்தை ஒட்டிய ஒருவடிவமாகவே காணப்பட்டது ஆனால் ராமநாதபுரத்தை விட மிகப் பெரிதாக இருந்தது.

முட்டம் இன்னாசி மகன் ஜோசப் அவர்கள் செய்த அழகிய ஒமல்

வேம்பார் பகுதிகளிலும் கூட பறி பயன்பாட்டில் இருப்பதாக ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அதனை செய்பவர்களையோ அல்லது அதன் ஒரு மாதிரியோ ஏன் ஒரு புகைப்படமோக்கூட எங்களுக்கு கிடைக்கவேயில்லை. என்னைப்பொறுத்தவரையில் தென் தமிழக கடற்கரை பகுதிக்கும், வட தமிழக கடற்கரைப் பகுதிக்கும் ஒரு பெருத்த வித்தியாசம் இருக்கிறது. பின்னல்களில் அந்த வேறுபாடு சிறப்பாகவே தென்படுகின்றன. ஒருவேளை கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நேராக பழவேற்காடு வரைக்கும் பயணித்தால், கண்டிப்பாக விதம் விதமான மீன்பிடி பொருட்களை நம்மால் சேகரிக்க இயலும். இப்பயணத்தினை கொல்கத்தா வரை விரித்தால், கேட்கவே வேண்டாம். இவ்விதமான பண்பாட்டு கண்ணிகளைப் பிடித்து பயணிப்பது ஆச்சரியங்கள் பலவற்றை நமக்கு வெளிப்படுத்தும். இன்று அந்த அறிவு பெருமளவில் மங்கிப்போய்விட்டது என்பது தான் உண்மை.

கடற்கரைப் பகுதிகளில் தனித்துவமான பனை ஓலைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது எனது பயணத்தின் மூலமாக உறுதிப்பட்டன.   பனை சார்ந்து வாழும் கரையோர மக்களின் பயன்பாட்டு பொருட்களுக்கும் கடற்கரை மக்களின் பொருட்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை இவைகள் உணர்த்துவதுமாகவே இருக்கின்றன. நெய்தல் நிலத்தில் பனை மரங்கள் இருப்பது மட்டுமல்ல நெய்தல் நில வாழ்வில் பனை சார்ந்த பொருட்கள் செய்யும் தனித்துவ அறிவு ஊடுருவியிருப்பதை இவை தெளிவுபடுத்துகின்றன.  ஆகவே பனை மரங்கள் சார்ந்த வாழ்வியல் என்பது கரைப்பகுதியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல கடற்கரை மக்களுக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவே இருக்கிறது. அவைகளின் வித்தியாசம், இருவேறு பண்பாட்டை சுட்டிக்காட்டும் பின்னல்களைக் கொண்டிருக்கின்றன.

எங்கள் அழைப்பை எடுத்த சுமன், உடனே வருவதாக கூறினார். அவருக்காக  நாங்கள் பாலத்திற்கு அருகில் காத்து நிற்கையில்,  ஒயர் கூடையில் மிகச்சிறிய பனை ஓலைக்குருத்தினை எடுத்துச்செல்லும் ஒரு மனிதரைப் பார்த்தேன். அருகில் அவரது மனைவி என்று சொல்லத்தக்க ஒரு பெண்மணி. சிறிய ஒயர்கூடையில் அவர்களது உணவு மற்றும் பொருட்களை வைத்திருப்பார்கள் போலும். பொருட்களால் நிரம்பியிருந்த அந்த கூடைக்கு மேல், அப்போதுதான் பறித்த சிறிய வடலி குருத்து தீட்டிய குறுவாளென பளபளப்புடன் காணப்பட்டது. அதிலும் அவர்கள் அந்த குருத்தினை கத்தி வைத்து வெட்டி எடுத்தது போல தோன்றவில்லை. ஏதோ கூர்மையான கல்லைக்கொண்டு வெட்டி எடுத்தது போல அதன் மட்டை சதைந்து இருந்தது.  மிஞ்சிப்போனால் ஒரு முளம் நீளம் மட்டுமே வரும் அந்த குருத்தினை அவர்கள் ஒரு பொக்கிஷமென எடுத்துச் செல்லுவது என்னை பலவாறாக சிந்திக்க வைத்தது. அந்த மனிதரின் கரத்தில் பனை ஓலையாலான பறி இருந்தது. சேவியர்  என்னிடம் கூறியது அப்போது தான் என நினைவிற்கு வந்தது. பழவேற்காடு பகுதிகளில் ஏனாதிகள் என்னும் பழங்குடியினர் தான் இறால் பிடிப்பார்கள். தங்கள் கரங்களை பயன்படுத்தியே இறால்  பிடிக்கும்  அவர்கள் தாங்கள் பிடித்த இறால் மீன்களை பனை ஓலை பறியில் தான் எடுத்துச் செல்லுவார்கள் எனவும் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது. எனக்கு ஒவ்வொன்றாக விளங்கத் துவங்கியது.எனது பழவேற்காடு பயணத்தையே இதற்காகத்தான் ஒருக்கியிருந்தேன். ஆகவே அவர்களை நிறுத்தி  பேச்சுக்கொடுக்கத் துவங்கினேன். அவர்கள் இறால் பிடித்துக்கொண்டு செல்லுவதாகவும் நேரம் ஆகிவிட்டது எனவும் கூறி அகன்றுவிட்டார்கள்.

பழங்குடியினரின் வடிவங்கள் என்பவை தொல் பழங்காலத்தைச் சார்ந்தவை.  அதுவும் குறிப்பாக ஏனாதிகளின் கரத்தில் இருக்கும் இந்த பறி  பல முக்கிய அறிதல்களை உள்ளடக்கியிருக்கிறது என கண்டுகொண்டேன். பொதுவாக பழங்குடியினரைப் பார்த்தவுடன் எப்படி வில்லும் அம்பும் அவர்களது தொன்மையை பறை சாற்றுமோ,  அது போன்ற ஒரு காட்சிதான் ஏனாதிகள் கரத்தில் இருக்கும் இந்த பறி. இதனை சிறப்பான ஒன்றாக நான் கருதியதற்கு காரணம் என்னவென்றால், அந்த வடிவமைப்பில் உள்ள பழைமை தான். நவீன காலத்தில் பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள்,  அனைவருமே, ஓலையின் அடிப்பாகத்தையும்  அதன்  நுனி பகுதியையும் வெட்டிவிட்டே பொருட்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். இவர்களைப் பொறுத்த அளவில், ஓலைகள் அதன் அடி முதல் நுனி வரை அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, ஈர்க்கில் மட்டுமே ஓலையிலிருந்து கைகளாலேயே பிய்த்து நீக்கப்பட்டிருக்கிறது. பிற இடங்களில் ஓலைகளை வகிர்ந்து எடுப்பது போல் ஓலைகளை வகிரவில்லை. இத்தனை  ஏன் இவ்வோலைகளின் வயிற்றுப்பகுதி கூட சீர்செய்யப்படவில்லை. ஆகவே தான் பறியின் வயிறு பெரிதாகவும் அதன் கழுத்துப்பகுதி மிக சிறிதாகவும் இருக்கிறது. இந்த அறிதல் என்னை துள்ளிக்குதிக்க வைத்துவிட்டது. பழங்குடியினரான இவர்களது வாழ்வில் இருக்கும் பொருட்கள் தமிழக அளவில் மட்டுமல்ல உலக அளவிலேயே மிக முக்கியமான தொல்லியல் சான்று என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

பழவேற்காடு வரும் வரையிலும், என்னால் இவ்வடிவத்தின் பின்னால் இருக்கும் ஒரு பிரம்மாண்டத்தை உணர்ந்துகொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. கற்கால வாழ்வில் எப்படி கல் ஆயுதங்களையும் கைகளையும் மட்டுமே கருவிகள் செய்யவும் வேட்டையாடவும் பயன்படுத்தினார்களோ அதே முறைமையினை இன்றும் ஏனாதிகள் கைகொள்ளுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மீன்களையும் இறாலையும்  கைகளைக் கொண்டே பிடிப்பார்கள் என சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போது அவர்கள் செய்யும் பறியும் கூட எவ்வித கருவிகளும் இன்றி கைகளைக் கொண்டு மாத்திரம் செய்யப்படும் ஒன்று என்பதை அறியும்போது பழவேற்காடு வந்ததன் பயனை அடைந்துவிட்டேன் என என் மனம் கூவியது. பழவேற்காடு என்பது ஏனாதிகள் எனும் தொல்குடிகளின் வாழும்  நிலப்பரப்பு. பல்வேறு மாற்றங்களை கண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் தனித்துவத்துடன் நமக்கு முன் முழு வீச்சுடன் எழுந்து நிற்கிறார்கள்.

அவர்களின் கைகள் அவர்கள் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன. அவர்கள் ஆன்மா அந்த நிலப்பரப்பை ஒரு புனித தலமாகவே கருதுகிறது என் நினைத்துக்கொண்டேன். இவ்வித ஒரு நிலப்பகுதியில் எனது பயணம் அமைந்தது ஒரு புண்ணிய யாத்திரைக்கு ஒப்பானது. அவ்வகையில் இது எனது புனித பயணம். நான் நிற்பது புண்ணிய பூமி. பறி என்னை உயிருடன் உள்ளிழுத்துக்கொண்டது.

பனைமுறைக் காலம் 8

பிப்ரவரி 19, 2021

பறவைகள் பனைவிதம்

2017 ஆம் ஆண்டு, பனையேற்றம் என்ற குழுவினை இளவேனில்  மற்றும் சாமிநாதன் எனும் இளைஞர்கள் துவங்கியிருந்தனர். பனையேற்றம் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பனையேற்றம் என்பது ஒரு முழுமையை சுட்டி நிற்கும் சொல். பனை பெரும்பாலும் தனித்து நிற்கும் ஒன்றைக் குறிப்பதாகவே நான் காண்கிறேன்.  பனை சார்ந்து தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வு அரும்பியிருந்த காலம் அது.  பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில், செம்மை நிகழ்த்தும் பனை கூடல் என்ற  நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். செம்மை அமைப்பும், செம்மையினை வழி நடத்தும் செந்தமிழன் அவர்களும் எனக்கு அப்போது தான் அறிமுகம். நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பனங்காட்டில்  வைத்து நடைபெற்றது. அனைவருக்குமான உணவினை அங்கு வந்தவர்களே இணைந்து பொங்கினார்கள். அனைத்து செலவுகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அன்று மதியம் செந்தமிழன் பேசினார். பனை குறித்து அதிகம் பேசவில்லை என்றாலும் இயற்கையான ஒரு மரத்தினை சார்ந்து வாழ்வது எவ்வகையில் நமக்கு உகந்தது என அவருக்கே உரிய பாணியில் பேசினார். தமிழர்களது வாழ்வில் இனிப்பு என்பது கருமையோடு தொடர்புடையது என்பதை, தேன், வெல்லம், கரும்பு, கருப்பட்டி என அவர் வரிசைப்படுத்தி கூறியது, வெள்ளைச் சர்க்கரைக்கு எதிரான மண் சார்ந்த குரல் என்றே பார்க்கிறேன்.

பாண்டிச்சேரி கோபினாத் முனிசாமி எடுத்த புகைப்படம்

இரவு ஒரு அமர்வு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பனை குறித்து விரிவாக நான் அறிந்தவற்றைக் குறித்து பேசினேன். திருச்சபைக்குள் இருந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுள், தனியனாக நான் எழுப்பும் கூக்குரலையும், எனது எளிய பங்களிப்புகளையும் குறித்து விவரித்தேன். “ஈராயிரம் ஆண்டுகளாக குருத்தோலைப் பண்டிகையினை கொண்டாடும் திருச்சபை ஏன் ஒரு பனை மரத்தைக்  கூட நடவில்லை”? என திருச்சபை நோக்கி நான் எழுப்பிய கேள்வியினை பகிர்ந்தபோது அனைவரும் நிமிர்ந்து என்னைப் பார்த்தனர். அக்கூடுகையில் கிறிஸ்தவரல்லாதோர் பெருவாரியாக இருந்தாலும், நான் என்ன கூற வருகிறேன் என மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால் எவருமே என்னிடம் கேள்வி எழுப்பவில்லை. அதற்கு காரணம் பனை குறித்த எந்த அறிமுகமும் அவர்களுக்கு இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் பனை குறித்து அறிந்துகொள்ள வந்தோம் என அனைவரும் ஒத்துக்கொண்டனர். இது ஒரு முக்கியமான புரிதலை எனக்கு ஏற்படுத்க்டியது. பனை சார்ந்து வாழும் தென் மாவட்டட்தைச் சார்ந்டவர்களுக்கு பனை குறித்து ஒரு விலக்கமும், பனை குறித்த புரிதலற்ற சமூகம் பனை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற காட்சி வெளிப்பட்டது. அன்று வந்திருந்தவர்களில் அனேகர் எனது தொடர்பு எண்ணை எடுத்துக்கொண்டார்கள். அன்று இரவு அங்கே  தங்குவதற்கு பள்ளிகூடம் ஒன்று இருந்தாலும், பெண்கள் உட்பட அனைவருமே வெளியே கிடந்த கடல் மணலில் தான் உறங்கினோம். எனது பயணங்களில் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இது அமைந்தது. இப்படி கட்டற்று தேடல் ததும்பி வழியும்  ஒரு குழுவினரை என் வாழ்வில் நான் சந்தித்ததே இல்லை. 

பனம்பழம் சாப்பிடும் குரங்கு

இங்கு வைத்து தான் கல்யாண் குமார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் சென்னையை அடுத்த திருவள்ளூரில் பனை சார்ந்த பயிற்சி ஒன்றை ஒழுங்குசெய்தார்.சுமார் 10 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சிக்கு இரு திருநங்கைகள் வந்திருந்தார்கள். நான் மிகவும் மதிக்கும் ஐயா கலையரசன் அவர்களை அந்த நிகழ்விலே தான் சந்தித்தேன்.  கல்யாண் குமார், சென்னை வந்தால் என்னை பார்க்காமல் செல்லக்கூடாது என அன்புகட்டளை இட்டிருந்தார், ஆகவே, பெரும்பாலும் சென்னை செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்துவிடுவேன். நான் சென்றால் தனது வங்கி வேலையைக் கூட கல்யாண் ஒதுக்கிவைத்துவிட்டு என்னுடன் பயணிப்பார். அவர் என்மீது கொண்ட அன்பு ஆழமானது. திருமாவளவன் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி, பனை விதைகளை சேகரிக்க துவங்குகையில், எனக்கு பதிலாக கல்யாண் அவர்களை தான் நான் உதவிக்கு அனுப்பினேன். இப்போதும் சென்னை செல்ல ஆயத்தமாகும்போது கல்யாண் தான் நினைவுக்கு வந்தார்.

பனம்பழம் சாப்பிடும் ஆடுகள்

கல்யாண் தனது வேலைகளுக்கு மத்தியில், எனக்காக நேரத்தை ஒதுக்கினார். விடுப்பு எடுத்து எனக்காக காத்திருந்தார். தாம்பரத்தில் இறங்கி, அவரது வீடு இருக்கும் நிமிலிச்சேரி பகுதிக்கு பேருந்தில் சென்று இறங்கினேன். அவர் பேருந்து நிலையத்திற்கு வந்து என்னை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது அப்பாவும் அம்மாவும் வீட்டிலிருந்தார்கள். மனைவி அருகிலிருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.  அவரது வீட்டில் குளித்து சுட சுட தோசை சாப்பிட்டுவிட்டு பழவேற்காடு நோக்கி கிளம்பினோம். பொது முடக்கம், அனைவரையும் சற்று அதிகமாகவே சீண்டிப்பார்த்திருக்கிறது. கல்யாண் தனது வீட்டை சமீபத்தில் தான் கட்டியிருந்தார். ஆகவே வருமானம் கிடைக்கும்படியாக ஏதேனும் ஒரு தொழிலினை மேற்கொண்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை.  மீன் கடை வைக்கும் எண்ணம் தனக்கிருப்பதாகவும், பழவேற்காடு சென்றால், மீன்களை வாங்கும் வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ளலாம் என்று கூறியபடி வந்தார்.

பனை ஓலையில் தும்பி

அவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு  ஈச்சமரத்தில் சில தூக்கணாங் குருவி கூடுகள்  இருப்பதைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சற்று தூரத்தில் வேறொரு பனை மரத்தில்  தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். நாங்கள் செல்லும் வழியில் கூட பனை மரங்களில் பல இடங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பெரும்பாலும் பார்க்க முடிந்தது. வெகு ஆச்சரியமாக அன்று  ஒரு தென்னை மரத்திலும் தூக்கணாங் குருவிக் கூடுகளைப் பார்த்தேன். எனது நண்பனும் பறவைகளை மிக அதிகமாக நேசிக்கும் பாண்டிச்சேரி ராம், என்னிடம் அடிக்கடி சொல்லுவான் “தூக்கணாங் குருவி வேறே எங்கண்ணே இருக்கும்? பனை மரத்திலே தானே அண்ணே கூடு கட்டும்”. அவனது கூற்று முற்றிலும் உண்மையானது. பனை மரங்களே அவைகளின் விருப்பத்திற்குரிய வாழிடம். அப்படி பனை மரங்கள் இல்லாதிருந்தால் அவைகள் வேறு மரங்களையோ புதர் செடிகளையோ வேறு இடங்களையோ தெரிவு செய்துகொள்ளும். வயல் வெளிகள், மற்றும் சதுப்பு நிலங்களிலோ அல்லது நீர் இருக்கும் கிணறுகள் அருகிலோ,  ஒற்றையாக நிற்கும் மரங்களை தெரிவு செய்து தங்கள் கூடுகளை தூக்கணாங் குருவிகள் அமைப்பதை பார்த்திருக்கிறேன்.

வடலி பனையில் கரிச்சான் குருவி

2017 ஆம் ஆண்டு மும்பை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் எடுக்கப்பட்ட துக்கணாங் குருவி கணக்கெடுப்புகளில், இந்திய அளவில் தூக்கணாங் குருவிகள் குறைந்து வருகின்றன என பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் (BNHS) பதிவு செய்கிறார்கள். இப்பதிவில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் எந்த முடிவிற்கும் வரவியலாது ஏனென்றால், இது ஒரு முழுமையான ஆய்வு அல்ல, ஆய்வின் துவக்கம் மட்டுமே. ஆனால், அவர்கள் வெளிப்படுத்தும் சந்தேகம் உண்மையானது. அந்க்ட சந்தேகம் எனக்குளூம் அப்படியே இருக்கிறது. இன்று BNHS பறவை ஆர்வலர்களையும், பறவையியலாளர்களையும், சூழியல் செயல்பாட்டாளர்களையும், காட்டிலாகாவினரையும் துக்கணாங் குருவி கணக்கெடுப்பு செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். அப்படியானால், பறவைகளின் எண்ணிக்கையில் ஒரு மாபெரும் வீழ்ச்சி புலப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஒருவேளை பனை மரங்களின் அழிவு தான் இப்பறவைகளின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறதா? இயற்கை சங்கிலியில், பனை மரங்களை நாம் பெரும்பாலும் பொருட்டாக கருதுவதில்லை, ஆனால் அவைகளின் இருப்பு முக முக்கியமானது என எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை வேறு பல காரணிகளும் தூக்கணாங்குரிவியின் அழிவிற்கு காரனமாக இருக்கலாம். அவைகள் என்ன என்பது தேடிக்கண்டடயவேண்டியவைகள். இப்பேரழிவிற்கு காரணங்கள் என்ன என்பதை விகிதாச்சார அடிப்படையில் நாம் ஆராயவேண்டும்.

பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகள்

குமரி மாவட்டத்திலும் நான் பெருமளவு இவைகளை நான் கண்டது இல்லை. ஒரு முறை வெள்ளிமலை பகுதியிலிருந்து கூட்டுமங்கலம் செல்லும் வயல்வெளி குறுக்குப்பாதையில், காணப்பட்ட ஒரு பனை மரக்த்தில் சில தூக்கணாங்க் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். குமரி மாவட்டத்தில் வேறு  எங்குமே பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகளை நான் காண இயலவில்லை. ஒருவேளை நாகர்கோவிலுக்கு கிழக்குப் பகுதிகளில் அவைகள் காணப்படலாம். நான் தற்போது வாழும் ஆரே பகுதிகளில் வந்த துவக்கத்தில் ஒரு பனை மரத்தில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள் இருந்ததைப் பார்த்தேன். பின்னர் அவைகளை என்னால் காண முடியவில்லை. பனை மரங்கள் இங்கு வெகுவாக குறைந்துவிட்டது ஒருபுறம், மற்றொருபுரம், இங்கு இருக்கும் ஆதிவாசிகளின் வாழ்வு நகரமயமாக்கலில் பெருமளவில் மாறிவருகிறது. குறிப்பாக, வயல்வெளிகள் இங்கு அருகிவருவதும் ஒரு காரணம். ஒருவேளை, ஆதிவாசிகள் கூட பயிர்களைக் காக்கும்படியாக சில பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது இப்பறவைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.  ஆனால் ஆரே காலனி அலகு எண் 7ல் இருக்கும் எங்கள் ஆலயத்திற்கு எதிர்புறம் உள்ள புல்வெளி நடுவில் இருக்கும் ஒரு அரச மரத்தில், ஒரு சில கூடுகளைப் கடந்த மாரி காலத்தில் பார்த்தேன். இப்போது அவைகள் இல்லை. அந்த அரச மரத்தை பருந்துகள் ஆக்கிரமித்துவிட்டன. தூக்கணாங் குருவிகள் எங்கே சென்றுவிட்டன என தேடிக்கொண்டே இருக்கிறேன். மகராஷ்டிராவின் பால்கர் பகுதிகளில் இன்னும் பனை மரங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகள் ஆங்காங்கே இருக்கின்றன. 

அரிவாள் மூக்கன்

2018 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் துக்கணாங் குருவிகள் கூடு குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. சுமார் 42 வகையான தாவரங்களில் தூக்கணாங் குருவிகள் தங்கள் கூடுகளை அமைப்பது இதன் மூலம் கண்டடையப்பட்டது. இவைகளில் 92 சதவிகித கூடுகள், பனை, தென்னை மற்றும் ஈச்சை மரங்களில் இருப்பதாக பதிவு செய்கிறார்கள். இந்த ஆய்வில் துணை நின்ற ஆய்வுக்கட்டுரையில் T A டேவிஸ் அவர்கள் மிக முக்கியமாக அடிக்கோடிடப்பட்டிருப்பது எனக்கு புதிய திறப்புகளைக் கொடுக்கிறதாக அமைந்தது. 1974 வாக்கிலேயே அவர் எழுதிய தூக்கணாங்குருவி குறித்த கட்டுரைகள், அவரது பனை சார்ந்த தேடுதலின் அங்கமாக இது இருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. T A டேவிஸ் அவர்கள் பனை சார்ந்து சர்வதேச கட்டுரைகள் எழுதிய மிகப்பெரிய ஆளுமை.

மானில மரத்தில் தேசிய பறவை

ஆரே காலனி வந்த பின்பு இங்குள்ள வார்லி பழங்குடியினருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டேன். அப்படியே பழங்குடியினருக்காக களப்பணியாற்றும் சில நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒரு சிலருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் வாய்த்தன. இந்த நெருக்கம் வார்லி பழங்குடியினரின் வாழ்வில் பனை எப்படி இரண்டரக் கலந்திருக்கிறது என்பதற்கான தரவுகளை சேர்க்க உதவியது. வார்லி பழங்குடியினரின் ஓவியங்களில் பனை மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், தூக்கணாங் குருவிகளைக் குறிப்பிடுமிடத்தில் அவைகள் பனையிலோ  ஈச்சமரத்திலோ அல்லது தென்னை மரத்திலோ  இருப்பதாகவே பதிவு செய்யப்படும். இது வெறுமனே போகிறபோக்கில் வரையப்படும் சாதாரண படங்களல்ல. பத்தாயிர வருட வார்லி பழங்குடி வாழ்வின் தொடர்ச்சி. அவர்கள் தொடர்ந்து இயற்கையை அணுகி அறிந்த உண்மையினை சொற்களாக்கும் முன்பு வரைந்து காட்டிய வாழ்கைச் சித்திரம்.

மரத் தவளை/ தேரை

தூக்கணாங் குருவிகளின் கூடுகள் புற்களாலும், நெற்பயிரின் இளம் தாள்களாலும் கட்டப்படுபவைகள். அவைகளின் வாழிடம் குறித்தும் ஆய்வுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவைகளின் உணவு பழக்கம் குறித்த தேடுதல் நமக்கு பலவிதமான உண்மைகளை வெளிப்படுத்த வல்லவை. சிறிய விதைகளை தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணும். அரிசி, கோதுமை, பார்லி போன்றவை அவைகளின் விருப்ப உணவு என்பதாக அறிகிறோம். வெட்டுக்கிளிகள், சிறு பூச்சிகள், வண்டுகள், கரையான் வண்ணத்துப்பூச்சிகள், கம்பளிப்பூச்சி போன்றவற்றையும் தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணுகின்றது. சில நேரங்களில் மலர்களில் உள்ள தேனையோ, பதனீரையோ, சிலந்தி, சிறு நத்தைகள் மற்றும் நெல் தவளை போன்றவற்றையும் உண்ணுகிறது. நெற்பயிரும் பனையும் இணைந்து நிற்கும் இடங்களில் இவைகள் கூடமைப்பது சதுப்பு நிலப்பகுதிகளை இவைகள் தேர்ந்தெடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும். ஆகவே, பனை மரங்கள் சதுப்பு நிலத்திலும் வளரும் தன்மைகொண்ட மரம் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது.

வார்லி பழங்குடியினரின் ஓவியம்: பனையில் தூக்கணாங் குருவிக்கூடு

பனைமரச் சாலை பயணம் தான் என்னை முதன் முறையாக பனை மரங்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பை கண்டுணரும் வாய்ப்பை நல்கியது. அது மிகவும் எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஆனால், அந்த திறப்பு எனக்கு பல்வேறு வகைகளில் பனை மீதான எனது முடிவுகளையே உறுதிப்படுத்திக்கொண்டு இருந்தன. குறிப்பாக நம் நாட்டு பறவைகளில் பெரும்பாலானவைகள் பனை மரத்தை கூடாகவோ, வேட்டைக்களமாகவோ அல்லது இளைப்பாறுமிடமாகவோ வைத்திருக்கின்றன. ஆனால் பனை மரத்திற்கும் நமது சூழியலுக்கும் உள்ள  தொடர்பு குறித்து இதுவரை குறிப்பிடத்தகுத்த ஒரு கட்டுரை கூட வெளிவந்தது இல்லை. இத்தனைக்கும் நம்மிடம், இயற்கை சார்ந்து பணியாற்றுகிறவர்கள் ஏராளம் உண்டு.

வார்லி பழங்குடியினரின் ஓவியம்: ஈச்சமரத்தில் தூக்கணாங் குருவிகளும் கூடும்

2017 ஆம் ஆண்டு  ஹைதிரபாத் பகுதியில் இருக்கும் ஹென்றி மார்டின் இன்ஸ்டிடியூட் (HMI) என்னை பனை சார்ந்த ஆவண படம் எடுக்க பணித்திருந்தார்கள். பறவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்பினை அறிய வேண்டி நான் டாக்டர். ராபர்ட் கிரப் (Robert Grubb) அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்.

தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த பறவையியலாளரான அவரது மகன் எனது நெருங்கிய நண்பன். நாங்கள் கல்லூரியில் ஒன்றாக படித்தோம், கல்லூரி பாடகர் குழுவில் இணைந்து பாடினோம், ஒன்றாக சைக்கிள் ஓட்டினோம், தேசிய மாணவர் படையில் இணைந்திருந்தோம், மேலதிகமாக நாகர்கோவிலை அடுத்த கீழப்பெருவிளை என்ற ஒரே ஊரின் இரு வேறு பகுதிகளில் தங்கியிருந்தோம். கல்லூரி காலத்தில் அடிக்கடி சந்திப்போம். ஆகவே அவரிடம், சற்றே உரிமையுடன், பனை மரங்களில் இருக்கும் பறவைகள் குறித்து எனக்கு சில குறிப்புகளைக் கூற முடியுமா என்று நான் கேட்டபோது, அவர் யோசிக்காமலேயே, “அப்படி பனை மரத்தில் பெரிதாக ஒன்றும் இருக்கிறது மாதிரி தெரியவில்லையே” என்றார். எனக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் மூத்த சூழியலாளர்களுல் ஒருவர் அவர்.

கள் குடிக்க வந்திருக்கும் பச்சைக் கிளி

அவரிடம் இருந்து பெறும் ஒவ்வொரு வார்த்தைகளும் வரம் போன்றவைகள். அவர் திடுமென அப்படி சொல்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் நானே பல பறவைகளை பனை மரத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை அவரிடம் நான் நேரடியாக சொல்ல முடியாது. ஆகவே, அவர் தலைமுறையிலுள்ள  ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வரும் தாவரவியலாளருமான டாக்டர் ஷோபனராஜ் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, பனங்காடை என்று ஒன்று பனை மரத்தில் இருப்பதாக அவர் கூறினார் என்றேன். மேலும், பொன்னி குருவி என்கிற பாம் சுவிஃப்ட் (Palm Swift) என்ற பறவையின் பெயரையும் அவர் குறிப்பிட்டார் எனக் கூறினேன். அவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். நீ ஒரு முடிவோட தான் வந்திருக்கே என்பது அதன் அர்த்தம். ஒரு ஆழ்ந்த அமைதிக்குப் பின் என்னிடம், “நீ ஒரு நாலு நாளைக்கு அப்புறம் வாடே” என்றார். எனக்கு அது முதல் வெற்றி.

Painted Stork

நான்கு நாட்களுக்குப் பின்பு, நான் அவரை சந்தித்தபோது அவர் என்னை வெகு உற்சாகமாக என்னை வரவேற்றார். முப்பதிற்கும் மேற்பட்ட பறவைகளைக் குறித்த ஒரு நீண்ட உரையாடலை நான் காணொளியாக பதிவு செய்ய அவர் உதவினார். அவரது விளக்கங்கள் அவ்வளவு தெளிவாகவும், எவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் விளக்கியபடி வந்க்டார். அன்று மட்டும் முப்பது பறவைகளின் பெயர்களைக் குறீப்பிட்டு அவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்புகளை விளக்கிகூறினார். இன்று தமிழகத்தில்  இருக்கும் பறவைகளில் சரிபாதி ஏதொ ஒரு வகையில் பனையோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். பறவைகளின் வாழிடம், உணவு மற்றும் அவைகளின் வேட்டைக்களம் போன்றவைகள் பறவையியலாளர்களால் மிக அதிகளவில் பேசப்பட்ட பேசுபொருள் தான். ஆனால் பனை மரங்கள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஏனென்றால், பனை மரத்தின் உயரம், எங்கும் காணப்படும் அந்த மரங்கள் மீதான சலிப்பு, காடுகளுக்குள் இருக்கும் பறவைகள் மீதான மோகம் என, நாம் அன்றாடும் காணும் பறவைகளுக்கும், பனைக்கும் உள்ள உறவுகளை இணைத்துப் பார்க்க இயலாதபடி நமது கண்களை முடிவிட்டன.

பனை மரத்தில் வாழும் சிறிய வகை பாலூட்டி

அழகிய நீல நிற சிறகுகள் கொண்ட பறவையினை புளூ ஜே (Blue jay) என்றும் இன்டியன் ரோலர் (Indian Roller) என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் பனங்காடுகள் நிறைந்த பகுதிகளில் தான் இவைகள் வாழும். அப்படியே, பனை சார்ந்த பகுதிகளில் இவைகள் பெருமளவில் காணப்படும் என்றார். பொதுவாக நாம் காணும் காடைகளுக்கும் இவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், பனங் காடை என்ற பெயர், உள்ளூர் மக்களால் வழங்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியம் பனை சார்ந்து வாழும் இப்பறவைகளினை அறிந்துணர்ந்த நமது முன்னோரால் வழங்கப்பட்டிருக்கும் என்பது உறுதி. இதே பறவையினை நான் மும்பை ஆரே காலணியிலும், பால்கர் பகுதிகளிலும், ஒரிசா சென்றிருந்தபோதும் பார்க்க முடிந்தது. பனை மர பொந்துகளில் இவைகள் இருப்பதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.  இப்பறவைகளை நான் எங்கேனும் பார்த்தால் அனிச்சையாக என் கண்கள் பனை மரங்களைத் தேடும். கண்டிப்பாக அப்பகுதிகளில் பனை மரங்களை நான் பார்த்துவிடுவேன். பனையின்றி பனங்காடைகள் கிடையாது எனும் அளவிற்கு அவைகள் பனையோடு இணைந்தே வாழுகின்றன.

பனைஓலையில் தேன்கூடு

பாம் ஸ்விஃப்ட் என்ற பறவைக் குறித்து டாக்டர் கிரப் அவர்கள் விவரித்தது, பனை சார்ந்த புரிதல் கொண்ட ஒருவருக்கே உரித்தானது. மேலும் அவரின் விவரணைகள் பறவையியலாளர்களின் தனித்துவ பார்வைகளையும் கொண்டது. “பாம் ஸ்விஃப்ட் என்பதை பொன்னி குருவி என்று தமிழில் அழைப்பார்கள்” என்றார். மேலும் “குமரி மாவட்டத்தில் மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள்”. மூக்கோலை என்றால் என்ன? பனை ஓலைகள் பார்ப்பதற்கு விரிந்திருப்பது போல தெரிந்தாலும், அவைகளில் மூன்று மேடு பள்ளங்கள் இருக்கும். அதிலும் மட்டை வந்து சேருமிடம் மூக்கைப்போல் மேலெழும்பி இருக்கும். இதன் நடுவில் தாம் இக்குருவி வாழும் ஆகவே இதனை மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள். பொன்னி என்கிற வார்த்தை கூட மூக்கோலையின் பகுதியை சுட்டுவதாகவே அமைகிறது. அப்படியானால் பொன்னி என்கிற பெண்பாற் பெயர், பனையிலிருந்து கிடைத்தது மாத்திரம் அல்ல, தன்னை நாடி வருவோருக்கும் அடைக்கலம் அளிக்கும் ஆழ்ந்த பொருள் உள்ள ஒன்றாக வெளிப்படுத்துகிறது. பொன்னி குருவிகளை, நான் பனை இருக்கும் பகுதிகளில் எல்லாம் பார்த்து வருகிறேன். அவைகள் பறந்துகொண்டே உணவை தேடிக்கொள்ளும் எனவும், அவைகள் பெரும்பாலும் காற்றினை பயன்படுத்தி பட்டம் போல் பறக்கும் எனவும் அவர் குற்ப்பிட்டார். மேலும், அவைகள் தமது கூடுகளில் தங்குவதை விட, வெளியே பறந்துகொண்டிருப்பதையே விரும்பும் என்றார்.

புல்புல் தனது கூட்டினை பனை ஓலையில் அமைத்திருக்கிறது

தூக்கணாங் குருவி தமது கூடுகளை பனையில் அமைப்பது, எதிரிகளிடமிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும்  தனது குஞ்சுகளையும் முட்டையினையும் காப்பதற்காக என்று அவர் சொன்னது மிகவும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஆண் தூக்கணாங் குருவி கட்டும் இக்கூடுகலை பெண் குருவ் வந்க்டு பார்த்து  ஆராய்ந்து ஒப்புதல் அளித்தாலே அவைகள் தங்கள் புது வாழ்க்கையை துவங்க முடியும். ஆகவே சில வேளைகளில் முற்றுப்பெறாத கூடுகளும் மரங்களில் தென்படும்.  தூக்கணாங் குருவிக் கூடுகள் இருக்குமிடத்தினை பாம்புகள் எட்டுவது என்பது வெகு சவாலான விஷயம் என்றே அவர் கூறுகிறார். ஏனென்றால், பனை ஓலைகளின் நுனியிலேயே அவைகள் தமது கூடுகளைக் கட்டும். அதையும் மீறி பாம்புகள் இக்கூடுகளுக்குள் நுழைந்து முட்டைகளை எடுப்பதும், குஞ்சுகளைச் சாப்பிடுவது கூட நிகழ்த்திருப்பதை பாண்டிச்சேரி ராம் கூறினான். உணவிற்கான தேடுதலில், உயிரை பணயம் வைப்பது  இயற்கை நியதி தானே? ராபர்ட் கிரப் அவர்கள், வயல் வெளிகளில் இவைகள் கூடு கட்டும்போது  பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை சாப்பிடுவதால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது எனக் கூறினார்.  இப்பறவைகள் தங்கள்,  இனப்பெருக்க காலத்தில் இன்னும் அதிகமாக பூச்சிகளை வேட்டையாடும். ஆகவே தூக்கணாங் குருவிகள் விவசாயிகளின் நண்பன் தான் என்றார்.

பனையிலிருந்து இறங்கிவரும் பாம்பு

அனைத்தையும் விவரித்து முடியும் தருவாயில், டாக்டர். கிரப் அவர்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்ததை நான் நேரிலேயே பார்த்தேன். அவர் அதுவரை தனது கவனத்தைச் செலுத்தாத ஒரு மரத்தின் மீது அவருக்கு ஏற்படும் பிடிப்பு தான் அது. அன்று இறுதியாக அவர் இப்படி சொன்னார், “பனை மரம் சார்ந்து வாழும் பறவைகளை வைத்து பார்க்கையில், பனை மரமே ஒரு சரணாலயம் தான்”. நான் அதைக்கேட்டபொழுது அப்படியே நெஞ்சுருகிப்போனேன். எதற்கென அவரைத் தேடி வந்தேனோ அது கச்சிதமாக நிகழ்ந்த பொற்தருணம் என்றே அதைக் கருதுவேன். ஒரு பறவையியலாளராக அவர் பல சரணலயங்களைப் பார்த்திருப்பார், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் அவ்வித சரணாலயங்களை குறித்து பதிவு செய்துமிருப்பார். ஆனால், அவரது வாழ்க்கையில் முதன் முறையாக பனை மரத்தை ஒரு சரணாலையம் என்று சொல்லுகின்ற தருணத்திற்கு அவர் வந்தது அவருக்கே வியப்பளித்திருக்கும். அந்த வார்த்தை அவர் இதயத்திலிருந்து எழுந்த ஒன்று என்பது மறுக்கவியலா உண்மை. அவரும் ஒரு பரவச நிலையிலேயே இருந்தார்.

2017 – 19 வரையிலும் இரண்டு வருடங்கள், நான் தமிழகம் முழுவதும் பனை மரத்தினை குறிவைத்து அலைந்து திரிந்தேன். நேரடியாக பல்வேறு பறவைகளும், விலங்குகளும், உயிரிகளும் பனையுடன் இணைந்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறேன். நினைக்கவியலா ஒரு பெரும் தொகுப்பு அது. இம்மண்ணில், பனைச் சூழியல் குறித்து தேடும் ஒரு தலைமுறை எழும்புமென்றால் , பனை மரம் எத்துணை முக்கியமானது என்பது நமக்கு தெரியவரும்.

பனையோலைக்குள் குளவிக்கூடுகள்

பொதுவாகவே பனையுடன் இணைந்து வாழ்பவர்களுக்கு பனையுடன் இருக்கும் பல்வேறு உயிரினங்கள் குறித்த புரிதல் தானாகவே இருக்கும். எளிமையாக சொல்லவேண்டுமென்றால், பனைமரத்தடியில் சென்று பதனீர் வாங்குபவர்களோ அல்லது கள் அருந்த செல்லுபவர்களோ அந்த பானங்களில் விழுந்து கிடக்கும் எண்ணிறந்த பூச்சிகள் குறித்த புரிதல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தேனீக்கள், பல்வேறு ஈக்கள், வண்டுகள், கொசுக்கள், வண்ணத்து பூச்சிகள், அந்துப்பூச்சிகள், தும்பி, எட்டுக்கால் பூச்சிகள், எறும்புகள், குளவிகள் கடந்தைகள், தேள் என பூச்சியியலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பனை. பல்லிகள், ஓணான், பச்சோந்தி, அரணை, உடும்பு, பல்வேறுவகை பாம்புகள் என ஊர்வன பட்டியல் தனியாக இருக்கும். மிகச்சிறிய பாலூட்டியான எலி முதல், பழவுண்ணி எனப்படும் மரநாய், குரங்கு, தேவாங்கு, கரடி மற்றும் பனம் பழங்களை விரும்பி உண்ணும் மான்கள், நரி, காட்டு மாடுகள், பன்றிகள் மற்றும்  வீட்டு விலங்குகளான நாய், ஆடு, மாடு போன்றவைகளுடன் மிகப்பெரிய உயிரியான யானையையும் குறிப்பிட வேண்டும். பறவைகளில், தேன் குடிக்கும் மிகச்சிறிய பறவைகளிலிருந்து பூச்சிகளைப் பிடிக்கும் பறவைகளும், காகம், கிளி, மைனா, ஆந்தை, என உருவங்கள் பெரிதாகி, வைரி, ராஜாளி, அரிவாள் மூக்கன், பருந்து மற்றும் மிகப்பெரிய மயில் மற்றும் கழுகுகள் வரை பனை மரங்களில் வந்தமரும். பலவேறு நிலப்பரப்புகளில் பனை மரத்தில் வாழும் நத்தைகளையும், ஒருசிலவிடங்களில் மரத்தவளைகளையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஏன், பனயேறிக்கெண்டை என்ற மீனே பனை ஏறுகிற ஒன்றாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட சங்கிலியைத் தான் நாம் எவ்வித அடிப்படை புரிதலுமின்றி தகர்த்தெறிந்துகொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை. பனையேறுகின்ற மனிதன் தான் இவைகள் அனைத்தையும் காப்பாற்றிவரும் சூழியலாலன்.  தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படவேண்டியவன்.

பனையேறி எனும் தன்னிகரற்ற சூழியலாளன்

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

எட்டிப்பிடிக்கத் தவறிய இரட்சிப்பின் செய்தி

பிப்ரவரி 13, 2021

ஒரு நரி பசியோடு உணவு தேடி அலைந்தது. இறுதியில் அது ஒரு திராட்சைக் கொடியைக் கண்டது. திராட்சை குலை உயரத்தில் இருந்ததால் அது இந்த திராட்சைக் பழத்தை எவ்வளவோ எம்பிக்குதித்தும் பறித்து பசியாற இயலவில்லை. அதன் பசி ஒருபுறம் அதன் இயலாமை ஒருபுறம். உணவைக்கண்டும் உண்ணமுடியாத சூழ்நிலையில் அது கூறியதாம் “சீச்…சீ இந்தப் பழம் புளிக்கும்”. சுவைக்காத ஒன்றின் சுவையை கூறும் மனநிலையை நாம் என்னவென்று கூறுவோம்? பசியைப் போக்காத உணவை நாம் எப்படி உணவென்று அழைப்பது?

 

ஒருவேளை தனது இயலாமையை நரி அங்கதத்தோடு வெளிப்படுத்திய விதமா இது?  உணவு அற்ற நரி தனது உயிரைக் காப்பாற்றிகொண்டதா எனும் பதைபதைப்பு யாருக்கேனும் எழுகிறதா? இக்கதை கூறும் முடிவு என்ன? ஒருவேளை இக்கதைக்கு முடிவில்லாததுபோல தோன்றுகிறதில்லையா? ஆம் ஆழ்ந்து யோசித்தால் அதன் பசி என்னாயிற்று என்பதற்கு விடை இல்லை. நரியின் பசி அதை எதை நோக்கி உந்தித்தள்ளியது என்பதை நாம் அறியமாட்டோம்! இன்னும் நாம் அச்சமுறவேண்டிய ஒரு உண்மை உண்டு. அதற்கு எங்கேனும் உணவு கிடைத்ததா? கிடைத்ததென்று கொண்டால் அது கசப்பையும் இனிப்பென கொண்டிருக்குமோ? கசந்ததைத் தின்று, அல்லது ஏதுவுமே கிடைக்காமல் உயிரை விட்டிருக்குமோ?

 

அன்பு உள்ளங்கொண்ட திருச்சபையினரே! முடிவிலா கேள்விகள் நம் முன் நிற்கின்றன. நாம் யார்? திராட்சையாக பிறர் பசியைப் போக்காத எட்டா உயரத்தில் இருக்கிறோமா? அல்லது பசிகொண்ட நரியாக சுற்றிவருகிறோமா? இல்லை இக்கதையை சொல்லும் கதை சொல்லியாக அனைத்தையும் அறிந்த கடவுளின் நிலையில் இருக்கிறோமா? இல்லை ஒருவேளை கதைக் கேட்போராக இருந்து நரியை ஏளனத்துடன் பார்த்து பரிகாசக்காரர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருக்கிறோமா?

 

கேள்விகள் இன்னும் நின்றபாடில்லை. திராட்சையும் நரியும் வாழும் இஸ்ரவேலில் கூறப்பட்ட கதையா இது? எனில் திராட்சை எதன் சாயலாக குறிப்பிடப்படுகிறது, நரி எதற்கு உவமானமாக நிற்கின்றது? “குலை குலையா முந்திரிக்கா” எனும் சிறு பிள்ளைகளின் விளையாட்டு நாம் விளையாடியிருப்பதால் இக்கதையின் ஊற்றும் நமது பிராந்தியத்திலேயே தோன்றியதாயிருக்குமா? உணவற்ற நரி ஏன் தான் உண்ணும் சிறு விலங்குகளை விட்டு திராட்சைக்காக அலைந்தது? ஊற்றைப்போல் ஊறிவரும் இக்கேள்விகள் அனைத்தும் நாம் சிறு வயதில் கேட்ட ஒரு நான்கு வரிக்கதையிலிருந்து எழுவதை நம்மால் தவிர்க்க இயலவில்லையல்லவா? கதை தான் முடிந்துவிட்டதே அதன் பின் ஏன் கேள்விகள் என எண்ணுகிறோமா?

ஏசாயவின் கவிதையொன்று இதைப்போன்றே ஒரு திராட்சைத் தோட்டத்தை முன்னிறுத்துகிறது. அது நேசருக்கேற்றப் பாட்டைப் பாடுகின்ற மணவாட்டியாக ஏசாயா தன்னை உவமித்துக்கொள்ளும் ஒரு தருணம். —–*அழகையும் அழுகையையும், மகிழ்ச்சியையும் துக்கத்தையும், உழைப்பையும் அது வீணய்ப்போவதையும் பதிவுசெய்யும் கவிதை

 

மிகவும் செழிப்பான மேட்டிலே நேசருக்கு ஒரு திரட்சைத்தோட்டம் இருக்கின்றது. தண்ணீர் தேங்கி அதன் வேர்கள் அழுகிவிடாதபடி அதன் மேடுகளிலிருந்து வாய்க்கால்கள் ஓடுகின்றன… அதன் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்காத தன்மையில் வெயில் படும் இடத்திலே அது அமைந்திருக்கிறது. அத்தோட்டத்தை நேசர் தன் உடல் உழைப்பாலும் தன்னிடமுள்ள பொருளையும் சேலவளித்து அதை பாதுகாக்கும் வண்ணம் வேலி அமைக்கிறார். அந்நிலத்தைப் பண்படுத்தி வளர்ச்சிக்குத் தடையாயிருந்த கற்களையெல்லாம் பொறுக்கி ஒரு நல்ல தோட்டமாக வேர்பற்றி வளர  ஆயத்தம் செய்தார்.

 

இத்தனை ஆயத்தங்களுக்குப் பின்னும் அவர் கருத்துடன் நேரம் செலவு செய்து, இருப்பதிலேயே சிறந்த நாற்றுகளான “நற்குல” திராட்சைச் செடியை மிக விருப்புடனும், மதி நுட்பத்துடனும், கருத்துடனும் தெரிவுசெய்து அதை தனது நிலத்தில் நாட்டினார். அவைகள் கிளைத்தெளும்ப சரியான பிடிமானங்களை எழுப்பி, அதற்காக தண்ணீர்  பாய்ச்சி, ஏற்ற நேரத்தில் அதற்கான உரமிட்டு இரவு பகல் என்று கண்ணயராது காத்துநின்றார்.

 

மிகவும் எதிர்பார்ப்புடனும்  பெரும் பொருட்செலவும்  செய்து திராட்சை ரசம் பிழியும் ஒரு ஆலையையும்  உருவாக்கி,   கனிதரும் காலத்திற்காக காத்து நின்றார். பூ பூத்தது – நேசர் மகிழ்ந்தார், பிஞ்சு காய்கள் தோன்றின – நேசர் அகமகிழ்ந்தார். ஓரு தகப்பனைப் போன்று வாஞ்சையுடன் அவைகளை கவனித்தார். காலம் கனிந்தது திராட்சைகளும் கனிந்து நின்றன, நேசர் பேருவகை கொண்டார். திராட்சை அறுவடைக்காக அவர் கூலியாட்களை அமர்த்தினார். அடுத்திருப்பவர்களையும் உறவினர்களையும் உதவிக்கு அழைத்தார். அவர்கள் கூடை கூடையாக பழங்கள் பறித்து ஆலைக்கு எடுத்துச் சென்றனர்.

 

சிறுமி ஒருத்தி  ஆவல் மிகுதியால் ஒரு திராட்சைப் பழத்தை எடுத்து சுவைத்தாள். அவள் முகம் கோணலானது. வெறுப்பை உமிழும் சுவையும் பார்வையும் அவளில் நின்றன. அம்மா கசக்கிறது என் கத்திவிட்டாள். சுற்றி நின்ற வேலைக்காரர்கள் அதைப் பார்த்தனர். தாங்களும் சுவைத்துப்பார்த்து இக்கனியின் சுவை ஏற்றதாக இல்லையே என்று ஏங்கிப்போயினர். தனது ஆலைக்காக வாங்கியிருந்த புதிய தோல் துருத்திகளையும் ஜாடிகளையும் பார்வையிட்டுக்கொண்டிருந்த நேசரிடம் ஒருவன் ஓடிப்போய்,             “ அய்யா நாம் மோசம் போனோம். பழங்கள் யாவும் எட்டியப்போல் கசக்கின்றன. இவைகள் ஒன்றுக்கும் உதவாது. ஆலையிலே இவைகளை பிழிவதால் எந்த நன்மையும் விளையப்போவதிலை” என அங்கலாய்ப்புடன் வந்து கூறினான்.

 

நேசர் திகைத்து நிற்கிறார். வந்திருந்த உறவினர்கள் ஆறுதல் கூறுகின்றனர். அருகிலுள்ள தோட்டத்திலுள்ளவர்கள் சிலர் பரிதபம் கொள்கின்றனர். வேறு சிலர் இத்தோட்டத்தை விலைபேச இது தகுந்த நேரம் என மனகணக்குப் போடுகின்றனர். ஆனால் நேசருக்கு திகைப்பு இன்னும் அடங்கவில்லை. தான் தெரிந்துகொண்ட நற்குல திராட்சைக்கொடிகள் எப்படி கஷாயத்தைப் போன்ற கசந்த ரசத்தை உள்ளடக்கியது எனும் கேள்வி தொக்கி நிற்கிறது. இத்திகைப்பிற்கான விடை காணப்படாமலே இருக்கின்றது. எப்படி இந்த மர்ம முடிச்சை அவிழ்ப்பது? செய்யத்தக்க அனைத்தும் மிகச்சரியாக செய்தும் நற்குல திராட்சைச் செடிகளான யூதா இஸ்ரவேல் குடிகள் கசப்பான பழங்களையே தருகிறார்கள் எனும்போது இதைச் சரிசெய்வது எங்கனம்? தவறே நிகழாத இடத்தில் சரி செய்வதற்கான பிரச்சனை என்ன இருக்கிறது? யாராலும் சரி செய்ய இயலாதபடி பழுது ஏற்பட்டுவிட்டச் சூழலில் மறுபடியும் முதலிலிருந்து துவக்குவது எவ்வளவு கடினம்?

 

நேசரின் ஆற்றாமை அளவிடமுடியாதது. நேசர் வேதனையின் உச்சத்திலிருந்து, தான் மிகவும் நேசித்த, பாதுகாத்த, தன் அனைத்து ஆற்றலையும் செலவிட்டு அன்புகாட்டி வளர்த்த திரட்சைத்தோட்டத்தைப் பார்த்து இவ்விதமாக கூறுகிறார் “இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோகும். அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். (ஏசாயா 5: 5&6)

தீர்க்கன் ஏசாயா எதை முன்னிட்டு இக்கவிதையை புனைகிறார் என்று நாம் நோக்கினால்… யூதா இஸ்ரவேல் எனும் இரு குடிகள் கர்த்தருடைய அன்பை உணராதபடி அவரை துக்கப்படுத்தும் காரியங்களைச் செய்தனர் என்பதினால் தானே? “அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு”.(ஏசாயா 5: 7ஆ)

நியாயமும் நீதியுமற்றத்தன்மையை பாவம் என எளிதில் கூறிக் கடந்துவிடமல் இன்னும் ஒருபடிமேல் போய் “தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5: 8) என கர்த்தர் சொன்னதாக ஏசாயா கூறுகிறார்.

இன்றைய தினத்தின் வெற்றிச் சின்னங்கள் நமது வீடுகள். நமது தோட்டங்கள், நமது சொத்துக்கள், நமது நகைகள், நமது உயர்குடி நண்பர்கள், நாம் வாங்கும் பொருட்கள், நாம் செல்லும் ஆலயம், நாம் சார்ந்திருக்கும் சமயம், நாம் வணங்கும் கடவுள். இச்சிறு காரியங்களா? ஒரு தேசம் அல்லது ஒரு திருச்சபை கர்த்தருக்கு விரோதமாக செய்தவைகள் என எண்ணத் தோன்றுகின்றதல்லவா?

 

இன்று ஒரு போதகராக இந்த ஆலயத்தின் பளிங்கு தரையில் நின்று நான் பேசுகின்ற இவ்வேளையில், ஒரு சில பேராயர்கள் மண் தரையில் அமர்ந்து ஒரு மேஜை கூட இன்றி  போரினாலும், வறுமையினாலும், இனக்கலவரங்களுக்கும் மத்தியில் அமர்ந்து தங்கள் பணிகளைச் செய்கிறார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய இயலுகின்றதா? எவ்வகையில் இவர்களுக்காக நாம் அனுப்பும் காணிக்கைகள் பொருத்தமுடையதாயிருக்கும்? எவ்வகையில் நாமும் இவர்களோடு ஐக்கியப்படுவோம்? கசப்பான பழங்களாக நாம் மாறியபின், யாருடைய வாழ்வில் நாம், சுவையேற்ற இயலும்?

 

இன்றைய தினத்தில் ஒரு போதகரின் செய்தி மிகக்கடுமையாகவும் கண்டிப்புடனும் திருமறைக்கு ஒத்ததாகவும் நமக்கு ஒத்துக்கொள்ள கடினமாகவும் இருந்தால் நாம் என்ன செய்வோம்? அவரை எதிர்க்கலாம், எள்ளி நகையாடலாம், குழி பறிக்கலாம், அவர்களுக்கு விரோதமாக எதையும் சொல்லலாம், நெருக்கடி கொடுக்கலாம். துணிந்தவர்கள் அங்கியைப்பிடித்து இழுக்கலாம், எச்சில் உமிழலாம், துரத்தலாம், வேலையை விட்டு நீக்கலாம், ஏன் கன்னத்தில் கூட அறையலம். அவ்வளவே

 

இன்றைய மானுடம் ஒருவகையில் பண்பட்டு ஆனால் சற்றும் நெகிழாத் தன்மையுடன் இறுகியிருப்பதை வேதனையுடன் காண்கிறோம். ஆனால் ஏசாயாவின் காலத்தில் அப்படியல்ல. தீர்க்கதரிசனம் சொல்லுவது தன்னையே மாய்த்துக்கொள்ளுவதற்குச் சமம்.

 

ஆம் பிரியமானவர்களே, எபிரேயர் கடிதம் இதை மிக அழகாக சித்தரிக்கின்றது. விசுவாசம் குறித்த விளக்கத்தை எபிரேயர் 11ன் முற்பகுதியிலும், விசுவாசத்தில் நடந்த பெரியோர்களது வாழ்வு, அரும்பண்புகள், அற்பணிப்பு, அருஞ்செயல்கள் யாவும் விசுவாசத்தால் நிகழ்ந்தன என அது பறைசாற்றுகின்றது. எனினும் அவர்கள் பெற்றுக்கொள்ள இயலாத நன்மையான  காரியத்தை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

 

உலகம் அவர்களுக்குப் பாத்திரமாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். அனைத்து நன்மையின் மத்தியிலும் சிலர் “நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பண்ணப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டுண்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்.

 

தாங்கள் இறைவனிடம் இருந்து பெற்ற வாக்குகளை பகிர்ந்துகொள்ளத்தவறினால் அதனால் வரும் ஆக்கினைக்குப் பயந்து, கீழ்ப்படிந்து; வைராக்கியம் கொண்டு, மேய்ச்சல் நிறைந்த தேசத்திலே தங்களைத் தேடுவோரிடமிருந்து தப்பிக்கொள்ளுவதற்காக ஆட்டுத்தோலைப் போர்த்தியபடி, தாங்கள் சந்திக்கவிருந்த ஆபத்துகளிலிருந்து தப்பினார்கள். அவ்விதமாகவே  உறுதியுடன் நின்ற அனேகர் தேடப்பட்டு, வேட்டையாடப்பட்டு, கல்லெறியுண்டு வாளால் அறுப்புண்டு போயினர். ஏசாயா எனும் தீர்க்கதரிசியின் முடிவும் இவ்விதமாக இருந்தது என்றே நாம் கண்டுகொள்ளுகிறோம்.

 

எனினும் தேவ தாசர்கள் எனக் குறிப்படப்படும் விசுவாசிகள் கூட்டத்தில் இராகாப் எனும் பெண்ணும் சேர்ந்திருப்பது நமக்கு அதிர்ச்சியளிக்காமலில்லை. இவை எவைகளைச் சுட்டி நிற்கிறது? சேதமாகாமல் இருப்பதோ சேதமாவதோ அல்ல விசுவாசத்தின் அளவுகோல். எச்சூழலிலும் கடவுளின் சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் துணிச்சலையே நாம் கண்டுகொள்ளுகிறோம். ஆம் இவர்கள் அனைவருக்கும் முன்னால் ஒருவர் மேலாக உயர்ந்து நிற்கிறார். அன்பின் அடையாளமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்து எனும் இயேசு  “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு. அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (12.2) என நாம் வாசிக்கும்பொழுது நமது உள்ளங்கள் கொளுந்துவிட்டு எரியவில்லையா? ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (12:1) என முத்தாய்ப்பு வைக்கிறார்.

 

இந்த பொறுமையான ஓட்டம் எத்தகையது எனும் நாம் கூர்ந்து அவதானித்தால் இயேசுவின் கூற்றில் உள்ள உண்மைகளை நாம் கண்டுகொள்ளுவது எளிதாகும். அது நமது வாழ்வில் நாம் கண்ட பாரதியின் கவிதையோடும் உறவு கொள்ளுவதைக் காணமுடியும்.

அக்கினி குஞ்சொன்றைக் கண்டேன்

அதில் ஆங்கோற் காட்டிடைப் பொந்தொன்றில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு.

“பூமியிலே அக்கினியைப் போடவந்தேன், அது இப்போதே பற்றியெறிய வேண்டும் என்று விரும்புகிறேன்”(லூக்கா 12:49) என இயேசு தாம் பூமியிலே வந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறார். அவர் இது போல் பலமுறைக் கூறியிருந்தும் பல விதங்களில் தன் வருகையின் இரகசியத்தைக் குறிப்பிட்டிருந்தும் அவரின் வருகையை, அதன் உட்கருத்தை எவரும் அறிந்திலர். ஆகவே தான் மீண்டும் மீண்டும் அவர் தனது வருகையின் நோக்கத்தை, புரிந்துகொள்ளாத் தன்மையை அடிக்கோடிடுகிறார்.

 

அப்படி புரிவதற்கு என்ன கடினம் அவர் வார்த்தைகளில் ஒளிந்திருந்தன? ஏன் அவர் உவமைகள் மூலமாகதானே பேசினார். எளிய மக்களோடெல்லாம் அவர் பேசினாரே. ஒரு கிணற்றடியில் நின்ற பெண்மணி கூட “மேசியாவைக் கண்டேன்” என சாட்சி கூற முடிந்ததே? மறைநூல் அறிஞர்களோ, பரிசேயரோ, பிலாத்துவோ, ஏரோதோ ஏன் அவரைக் கண்டுகொள்ள இயலவில்லை?

 

இயேசு கூறுவது நிறுவப்பட்ட நம்பிக்கைக்கு  எதிரான ஒரு போங்கே என நாம் காணும்போது நம் இதழ்களில் ஒரு மெல்லிய புன்முறுவல் எழலாம். “நீதிமான்களையல்ல பாவிகளையே மனம்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்” என கூறுவது இயேசு தனது பணியை பாவிகளுக்கானது என சொல்வதுபோல் தோன்றினாலும் நல்லோர் வேடமிட்டிருப்போரையும் அது சுட்டி நிற்பதால் அவ்வார்த்தையின் தீண்டலினாலே சீண்டப்பட்ட “மெத்தப் படித்தவர்கள்” அவருக்கு விரோதமாய் நின்றதைக் காணமுடியும். அவ்விதமாகவே யோவான் 7: 28 ஐ வாசிக்கையில் இயேசுவின் “சிலுவை” மட்டுமல்ல “வாழ்வே சிலுவையாக” இருந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு; “நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என் சுயமாய் வரவில்லை என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்” என்றார்.

 

எப்படியிருந்தாலும் தனது பணியின் ஒட்டுமொத்த அழைப்பையும் அவர் உதாசீனம் செய்யவில்லை என்பதே உண்மை. இவ்வுலகத்தை இரட்சிக்கவே அவர் வந்தார்  என்பதை அவர் மிக தெளிவாகவே உணர்ந்திருந்தார். அந்த அன்பின் சாட்சியாகவே அவர் ” ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால் அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்காமல் இரட்சிக்க வந்தேன்” என உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்மைப்பார்த்துக் கூறுகிறார்.

 

தாகம் நிறைந்த காகம், தண்ணீர் குறைந்த ஜாடியைக் கண்டபோது ஏற்பட்ட உந்துதலால் கற்களை நிறைத்து தண்ணீர் பருகிய கதையைப் போன்றே நரியும் உந்துதலோடு செயலாற்றியிருந்தால் ஒருவேளை அதன் பசி ஆறியிருக்குமோ?

 

நாம் எவ்விதத்தில் இந்த இரட்சிப்பை புரிந்துகொள்ளுகிறோம்?

அருட்திரு. காட்சன் சாமுவேல்

(18.08.2013 ஞாயிறன்று வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம். இடம்: மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத்)

கற்பனை குற்றச்சாட்டுகள்

பிப்ரவரி 13, 2021

கற்பனை குற்றச்சாட்டுகள்

பனை சார்ந்த எதிர்மறை பதிவுகள் வலம் வருவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. எதிர்மறை என இவற்றை எப்படி இனம் கண்டு கொள்ள இயலும் என்பதற்கு சில அடிப்படை காரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பனை சார்ந்த சமீபத்திய எதிர்மறை பதிவுகளில் பனை “முச்சனிகளில்” ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டது. “சனி பகவான்” என்ற கருதுகோள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றதோ அங்கிருந்தே விடம் கக்கும் நாவுகளும் புறப்படுகிறது என்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். எந்த “சனி” குறித்த  கவலையும் அற்ற சூழியலாளர்கள், கனி தரும் பனை பேணும் பணியினை தொடர்ந்து செய்வார்கள்.

முன்று முக்கிய கருத்துக்கள் இப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் வருவதை நாம் கண்டுகொள்ளலாம்.

  1. பனை சாதியோடு தொடர்புடையது
  2. பனை வந்தேரிகளுடன் தொடர்புடையது
  3. பனை “தமிழருக்கு” எதிரி

சாதி எனும் அமைப்பினை கேள்விக்குட்படுத்தாமல், சிறுபான்மையினரை சிறுமைப்படுத்தி, மொழி அரணுக்குள் பதுங்கும் நத்தையை ஒத்த அணுகுமுறை இது. ஆகவே  முற்றாக  புறம்தள்ள வேண்டியது.

தன்னையே முழுமையாக வாரி வழங்கும் பனை மீது ஏன் இந்த வெறுப்பு? பனை ஒரு பொருளியல் சார்ந்த மரம் என இன்று கட்டமைக்கப்படுவது தான் காரணம். எதிர்தரப்பு அது குறித்து எந்த கவலையும் அடைய வேண்டியதில்லை. இன்றைய சந்தை பொருளாதாரத்தை முன்னிட்டு நாம் பார்க்கையில், பனை வைத்திருப்பவன் எல்லாம் பணக்காரன் ஆக முடியாது. பனை தொழில் செய்பவர்கள் ஒரு விழுமியத்தை தான் முன் வைக்க இயலும். தற்சார்பு, கிராமிய பொருளியல் போன்றவைகளையே நாம் இன்று பேசமுடியும். சர்வதேச பொருளியலைக் குறித்து பேச இயலாது.  ஆனால் சர்வதேச சந்தை பொருளியலைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு “அறம் சார்ந்த பொருளியலாக பனைப் பொருளியலைக் காணலாம்.

தமிழகத்தில் பனை சார்ந்த பேச்சினை முன்னெடுத்த கட்சி யார் என அனைவரும் அறிவார்கள். நாம் தமிழர் கட்சி அதனை பேசுவதற்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள். புலிகள் பனை சார்ந்த ஒரு பொருளியலைக் கட்டமைத்திருந்தார்களா என்றால் இல்லை என்பதே பதில். அவர்கள் கொண்டிருந்தது பனை சார்ந்த வாழ்வியல் மட்டுமே. இறாலை விற்கும் சந்தை அவர்களுக்கு உலகமெங்கும் உண்டு. பனையை விற்கும் சந்தை அவர்களுக்குள் மட்டுமே இருந்தது. விடுதலைப் புலிகளின் பனை சார்ந்த பொருட்கள் ஏதாகிலும் தமிழக சந்தைக்கு வந்து யாரேனும் வாங்கி பயன்படுத்தியிருக்கிறார்களா? இல்லை என்பதுவே பதில். சர்வதேச சந்தையில் விற்கும் கருப்பட்டி மீண்டும் வால்மாட்டிற்கும், பே டி ஏம்மிற்கும் கப்பம் கட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்பதை எப்படி மறந்து போனோம்? பனை ஒரு சர்வதேச சந்தை மதிப்பு கொண்ட பொருளல்ல. ஆனால் பனை சர்வதேச சந்தையில் தனது இடத்தை நிறூபிக்கும் வல்லமை கொண்ட மரம். ஆகவே தான் பனையின் அடையாளம் பல்வேறு தரப்பினரால் இன்று உலக அளவில் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது.

பனையின் எழுச்சியைக் கண்டு பெருமுவதற்கு மற்றொரு காரணம். பனை இன்று ஒரு அரசியல் தரப்பாக எழுந்து வருவது தான். பனை சார்ந்த பொருளியலை குறித்து பேசினாலும், பனை கூறும் சூழியல் முக்கியத்துவம் மறைக்கவியலா. அது உள்ளங்கை நெல்லிக்கனி போல காணப்படும் உண்மை.

தோழர். திருமாவளவனின் பங்களிப்பு பனை சார்ந்த ஒரு முக்கிய திருப்பத்தை தமிழக அரசியலில் நிகழ்த்தியிருக்கிறது. திருமாவளவன் அவர்கள் தனது சூழியல் பங்களிப்பாக பனை மரத்தினை முன்னெடுப்பது அவரது அரசியல் வாழ்வில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. தமிழகத்தில் பனை குறித்து பெருமளவில் முழக்கமிட்டிருந்த சீமான் அவர்கள், திருமாஅவர்களின் முன்னெடுப்பிற்கு பின்பே களத்தில் இறங்கி பனை நட துவங்கினார்.  இன்று தமிழக் அரசியலில் பனை ஒரு முக்கிய அரசியல் தரப்பாக எழுத்துநிற்கின்றது. பனை தொழிலாளர்களுக்கு ஏதும் செய்யாத ஸ்டாலின் கூட வேறு வழியின்றி பதனீரை பட்டையில் குடிக்கின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டார்.

பனை மரம் குறித்து ஏன் இத்த திடீர் எழுச்சி? பனை சார்ந்த வணிகம் செய்யும் மக்களுக்கு இதன் மேன் ஒரு கண்ணா? குறிப்பாக நாடார் இன மக்கள் இதன் பின்னணியமாக இருந்து தூண்டுகிறார்களா? அப்படி தேவையில்லாத ஒரு மரத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறார்களா? எனபதுவே கேள்வியாக இருக்கிறது.

இன்றும் பெருமளவில் நாடார் மக்கள் பனை சார்ந்த தொழிலில் இருந்தாலும், அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே உழல்கின்றனர். அரசு பனைத் தொழிலாளர்களை வஞ்சித்தது போல் வேறு எவரையும் கடந்த 30 ஆண்டுகளில் வஞ்சித்திருக்குமா தெரியாது. அந்த அளவு வறுமையின் கோரப்பிடியில் நின்றே பனைத்தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் 95% பனைகள் பயன்படுத்தப்படவே இல்லை.

பனை மரங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவைகளை நம்மால் எப்படியும் பொருளியல் ரீதியாக பாதுகாக்க இயலாது. ஆனால் சூழியல் சார்ந்து பனை மரங்களின் பங்களிப்பு என்பது பனையேறி இருந்தால் ஒருவகையிலும், பனையேறி இல்லாவிட்டால் வேறு வகைகளிலும் இருக்கிறதைக் காணமுடிகிறது. ஒருவகையில் மனிதன் சூழியலின் அங்கமாக எவ்விதம் இருக்கவேண்டும் என்பதைக் கூட நாம் பனையேறிகளிடம் இருந்து அறியவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பனை மரங்களின் எண்ணிக்கை 1965 (பனை வளம்) முதல் இன்று வரை 5 கோடியாக இருப்பது ஒரு மாபெரும் அதிசயம் என்றே கூறவேண்டும். இந்த மண்ணில் மனிதர்கள் இருக்கிறார்களோ இல்லையோ பனை மரங்கள் இருக்கும். பனை இருந்தால் தான் மனித இனம் தழைக்க முடியும். பனைக்கு மாற்றாக மற்றோரு மரத்தை எவரும் சுட்டிக்காட்ட இயலாது. கேரளாவில் காணப்படும் கற்பகத்தருவான தென்னை உட்பட.

சூழியலில் ஒரு மரத்தையோ ஒரு மிருகத்தையோ ஒரு பறவையையோ ஒரு இனக்குழுவுடன் இணைப்பது என்பது பழங்குடியினர் வாழ்வில் இருந்த ஒரு கலாச்சார அமைப்பு. இன்று அவைகள் மீண்டும் வேறு வகையில் நமது அடையாளமாக மறுசீரடைகின்றனவே ஒழிய, அவைகளை சாதியோடு சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாது. அப்படி செய்வது சிக்கலான ஒரு வரலாற்று திருப்பத்தை நமக்கு அளிக்குமே அன்றி முழுமையான வரலாற்று நோக்கை அளிக்காது.

ஏன் இப்போது பனை சார்ந்து ஒரு பரபரப்பு கூட்டப்படுகின்றது என்பவர்கள் பனை சார்ந்து முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளை கூர்ந்து ஆராயாதவர்கள். பனை சார்ந்த முயற்சிகள் 1950 – 1960களில் நடைபெற்றதில் ஒரு துளி கூட இன்று நடைபெறவில்லை. கருப்பட்டி இன்று மருத்துவபொருளாக எஞ்சியிருப்பதனால் அதன் தேவை தக்கவைக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, அது மிகப்பெரிய எண்ணை வணிகம் போன்றதல்ல. ஆக ஒரு வணிகத்திற்காக பிறரை ஏமாற்றும் பணியினை நாடார்கள் செய்கிறார்கள் என்பது போன்ற பிரச்சாரம் தேவையற்றது. வணிகம் செய்பவர்கள் தங்கள் வணிகத்திற்கு பனை தடையாக இருக்கும் என்றே வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். பனை மரம் ஏற ஆட்கள் இல்லை என்பதுவே இன்றைய சிக்கலாக இருக்கிறது.

சூழியல் சார்ந்த ஒரு மரமாக பனையினை முன்னெடுப்பதற்கு பனை மரத்தடியில்  தண்ணீர் நிற்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பனை மரத்தின் தகவமைப்பு பல்வேறு சூழலமைப்புகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் வலிமை பெற்றது. மீனவர்கள் வாழும் நெய்தல் நிலப்  பகுதிகளிலும், முல்லை நில பகுதியிலும், மருத நிலப் பகுதிகளிலும் பனை இருந்திருப்பதாக இலக்கியங்களின் வாயிலாகவும் நமது நிலவியல் அமைப்பினைக் கொண்டும் நம்மால் உறுதியாக கூறமுடிகிறது. குறிஞ்சி நிலத்தில் பனை நின்றிருக்கிறதா? அது ஆய்வுக்குறியது, ஆனால் பனை சார்ந்த “முறம்” குறிஞ்சி நிலப் பகுதி வாழ் புலியினை விரட்ட பயன்பட்டிருக்கிறது. ஐவகை நிலங்கள் நமக்கு உண்டென்றால் ஐவகை நிலத்திலும் பனை ஏதோ ஒருவகையில் தன்னை இணைத்துகொண்டிருக்கிறது என்பதுவே நான் நேரில் கண்ட உண்மை.

தமிழ் மொழியே பனையினை மையமாக கொண்டு வளர்ந்த மொழி தான். பல்வேறு வார்த்தைகள் பனையிலிருந்து கிளைப்பதை நம்மால் உணரமுடியும். நமது நிலம், நமது வடிவமைப்புகள், நமது வார்த்தைகள் நமது கலாச்சாரம் அனைத்தும் பனை சார்ந்த ஒரு வாழ்வின் எச்சம் தான். அவைகள் குறித்த ஆய்வுகளோ சீரான பதிவுகளோ நம்மிடம் எதுவும் இல்லை. ஆனால் பனையால் நமக்கு அவைகளைத் திருப்பித்தர இயலும்.

மனித குல வரலாற்றில் இன்றியமையாத ஒரு தாவரமாக நம் பனை மரத்தினைக் கொள்ள இயலும். அதனை இழித்து பேசுவோர் ஏறிய ஏணியினை எட்டி உதைக்கும் மனோபாவம் கொண்டவர்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விதம் மன பிறள்வுகள் கொண்டோரை கருணையுடன் நோக்கும் தன்மை நம்மில் பெருகவேண்டும். பனை சார்ந்த ஒரு மாற்று தரப்பாக அவர்கள் இருந்துவிட்டு போகட்டும் என்பது தான் எனது விருப்பம். இந்த மாற்று தரப்பினைத் தாண்டி  முன்னேறும் பனை படை வீரர்களே நமக்குத் தேவை. பனை அதனை தெரிவு செய்யும்.

இறுதியாக பனை குறித்து  பேசுகையில் பனை மரத்தினை எதோ மந்திர வித்தைக் காட்டும் மரம் என முன்னிறுத்தும் பாங்கினையும் நாம் ஒழிக்க வேண்டும். பனை மரம் நமது எதிர்காலத்தில் எவ்விதம் பயன்மிக்கதாக இருக்கும் என்பதை நமது மரபிலிருந்து கண்டடைய வேண்டுமே ஒழிய வீணான கற்பனை தகவல்களை உலவவிடுவதை தவிர்க்க வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளாக பனை சார்ந்த பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறேன். பனை சார்ந்த முன்னெடுப்புகள் எப்போதும் இல்லாத அளவிற்கு  முன்வரிசை பிடிப்பதை நானே பிரமிப்புடன் பார்க்கிறேன். இதற்கு மிக முக்கிய காரணம், தமிழகத்தில் நாம் சந்திக்கும் வறட்சி தான். மரங்களை நட்டு வளர்த்திய பல்வேறு அமைப்புகள், கோடைக் காலத்தில் அவைகளை பராமரிப்பதில் உள்ள சிரமத்தை களத்தில் உணர்ந்தவர்கள். பனை வளர்ப்பது எளிது என்பது மட்டுமல்ல நீர் மேலாண்மைக்கும் உகந்தது என்பதை கண்டுணர்ந்தவர்கள்.  உலகில் வருடம் முழுவதும் உணவுதரும் வேறு ஒரு மரம் உண்டா? உணவோடு கூட புழங்கு பொருட்களை வழங்கும் வேறு மரங்கள் உண்டா? தமிழகம் என்று மொழி வாரியாக தன்னை குறுக்கிக்கொள்ளாதபடி மூன்று கண்டங்களில் பரவி விரிந்து சாதி மதம் இனம் கடந்து பயனளிக்கும் மரம் உண்டா? இல்லை என்பது தான் பதில்.

ஆனால் ஒன்று உண்டு, நவீன வாழ்வில் பனை அளவு புறக்கணிக்கப்பட்ட தாவரம் மற்றொன்றில்லை. பனை சார்ந்த ஆய்வுகள் மிக மந்தமாக நடைபெற்று அவைகளும் இன்று இல்லாமற் போய்விட்டன. உலகளாவிய ஒருங்கிணைந்த ஆய்வுகளை முன்னெடுக்கும் வலிமையான அமைப்புகளும் நம்மிடம் இல்லை. இலங்கையைச் சார்ந்த கோவூர் பனை குறித்து சொல்லும்போது, “பனை மிகவும் பயனுள்ள மரம் தான் ஆனால், வணிக ரீதியாக  பார்க்கையில் பனையிலிருந்து கிடைக்கும் அத்தனைப் பொருட்களுக்கும் மலிவான ஒரு மாற்று சந்தையில் இருக்கிறது”. அவ்வகையில் பனை மரமானது தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை சக்திகளாலும் புறம்தள்ளப்பட்டும் அவைகளைப் பொறுட்படுத்தாமல் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்றே நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றது.

இன்று பனை மரத்தினை நாயக வழிபாட்டு மனநிலையுடன் அணுகும் ஒரு புது தலைமுறை எழுந்துள்ளது. ஆனால் நமது தேவை ஆய்வுள்ளம் கொண்ட இளம் தலைமுறை.  அத்தனை துறைகளிலும் பனை சார்ந்து ஆய்வு செய்ய வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. இன்னும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து அவரும் அறியவில்லை என்பது தான் வேதனை. இதற்கிடையில் நிறுவப்படாத உண்மைகளுக்கு எதிராக பதில் கூற  களமிறங்கியிருக்கும் அறிவாளிகளுக்கு என்ன பதில் சொல்லுவது?

தெருச்சண்டை மனநிலையுடன் இருப்பவர்களைக் காண கூட்டம் கூடுவது இயல்பு. அக்கூட்டம் சண்டை நடைபெறவில்லையென்றால் கலைந்துவிடும். பனை சார்ந்து நிகழும் இந்த உலகளாவிய எழுச்சி காலத்தின் கட்டாயம். பனை தனக்கானவர்களை தெரிந்துகொள்ளும். தன்னை வெட்ட வருபவர்களையும் அணைக்கும் அன்னை அது.

உலகெங்கிலும் விவசாயம் பழகின நிலங்கள் கூட நாளடைவில் மிகப்பெரும் சூழியல் சீர்கேடுகளை அடைந்துள்ள நிலையில் நிலத்தின் தன்மையினை சிறிதும் மாற்றாமல் இருக்கும் நிலப்பகுதி பனை தொழில் இயங்கும் பகுதிதான். பனையேறி எனும் சூழியலாளனை விட வேறு சிறந்த சூழியலாளர் இருக்கின்றனரா என்ன?

அருட்பணி. காட்சன் சாமுவேல்
ராயல் பாம்ஸ், ஆரே மில்க் காலனி, மும்பை
9080250653, malargodson@gmail.com

 

பின்னல்கள் – 11

பிப்ரவரி 13, 2021

பின்னல்கள் – 11

சம்பு 

நான் 2003 ஆம் ஆண்டு இறையியல் கல்வி நிறைவுசெய்தபோது திருச்சபையில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என முடிவெடுத்தேன். அப்போது எனது சகோதரி மாலத்தீவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் ஏதேனும் ஒரு  வேலையில் இணைந்துகொள்ளலாம் என நினைத்து அங்கே சென்றேன். மிக அழகிய சுத்தமான இடம் தான் மாலத்தீவு. அங்கே,  நான் சுவைக்க விரும்பும் மீன்கள் அனைத்தும் எனது கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்தாலும், திரும்பிய பக்கமெல்லாம் நீலம், பசுமை குறைவு, நிலமின்மை, பனையின்மை என எனக்கு பல ஒவ்வாமைகள். அங்கிருந்து திரும்பவேண்டும் என்கிற ஒரு உந்துதல் எனக்குள் இருந்துகொண்டிருந்தது. அந்த வெறுப்பு என் பார்வையில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அங்கே தென்னை ஓலைகளை ஒன்றுடன் ஒன்றாக அடுக்கி அதனைக் கோர்த்து ஒற்றை தடுக்காக மாற்றி கடைகளுக்கு சாய்வாகவும், தட்டியாகவும் அமைத்திருந்தார்கள். “க்கும்… பின்னத்தெரியாத்த பயலுவ…” என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களுக்கும் பின்னல்கள் உண்டு என்பதனை அந்த இரண்டு மாத காலத்திற்குள்ளேயே அறிந்துகொண்டேன்.

மாலத்தீவிலுள்ள தென்னை ஓலை வீடு

2017 முதல் 2019 வரை நான் எனது இறைப்பணியில் இருந்து விடுபட்டு பனைபணியே இறைப்பணி என்ற நோக்கோடு தமிழகம் முழுவதும் வெறிகொண்டு பயணித்தேன். தமிழகத்தில் வழக்கொழிந்துபோன பல்வேறு பொருட்களை மீட்டெடுக்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் கனன்றுகொண்டிருந்ததால், பார்க்கும் பனை சார்ந்த ஒவ்வொருவரிடமும், அவர்கள் கண் முன்னால் மறைந்துபோன பொருட்கள் குறித்த தகவல்களை கேட்டுப்பெற  முயற்சிப்பேன். அப்படிக் கிடைக்கும் தகவல்களைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் அலைந்து திரிந்து காணாமற்போன பொருளை எப்படியும் மீட்டுவிடுவேன். ஒரு பொருள் குறித்த நினைவு மட்டுமேக்கூட அந்த மக்களுக்கு இருக்குமென்றால் அதனை மீட்பதில் பெரிய சிரமமில்லை என்பதே நான் அறிந்த உண்மை.

பின்னல்கள் குறித்த தேடுதலில் பின்னலே இன்றி செய்யப்படும் பொருட்கள் பலவற்றை இதுகாறும் பார்த்திருக்கிறோம். பட்டை, பீப்பீ, தோண்டி, விசிறி என அவைகள் யாவும் பனை ஓலையின் வடிவத்தை சாதகமாக மாற்றி ஓலையின் தன்மை பெரிதளவில் மாற்றத்திற்குள்ளாகாமல் செய்யப்படும் பொருட்களாகும்.

பனை ஓலையில் பின்னலே இன்றி இன்று நம்மை வந்து அடைந்திருக்கும் மற்றொரு பொருள் தான் சம்பு என்ற மழை அணி. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் என்ற ஊரில் வாழும் திரு. பாண்டியன் எனும் நண்பர்  இதுகுறித்து எனக்கு தகவல்களைக் கொடுத்து சம்புவை மீட்டுருவாக்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திகொண்டார். திரு கல்யாண சுந்தரம் (63) என்ற பெரியவர், சம்பு செய்வதில் வல்லவர். பண்டியனின் மாமா தான் இவர்.  நரசிங்கனூரைச் சார்ந்த பல்வேறு மக்களுக்கு சம்பு செய்யும் அறிவு இருந்தாலும், அனைவரும் அதனை கைவிட்டுவிட்டனர். இந்த அறிவினை தன் நெஞ்சில் ஒரு கனலாக எடுத்துச் சுமந்தவர் கலியாண சுந்தரம் மட்டுமே.

திரு கலியாண சுந்தரம் சம்பு தயாரிக்கும்போது

பின்னல்கள் சார்ந்து சம்புவில் ஏதும் காணப்படவில்லை என்றாலும் பின்னல்களுக்கான ஒரு அடிப்படை இங்கிருந்து தான் துவங்குகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. ஓலைகளின் பயன்பாட்டு வரலாற்றில் மிக தொன்மையானதும், மழைக் காலங்களுக்கு உகந்த  ஒரு பயனுள்ள பொருளான சம்புவினை சற்றே நெருங்கி உணர்வது நல்லது.

குரும்பர் கொங்காணி

உலகம் முழுக்க மழையணிகள் கற்காலத்திலிருந்து வழக்கத்தில் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மழையணிகள் செய்வது வழக்கம். வைக்கோல், மூங்கில், மரப்பட்டைகள், தோல் என அவைகள் விரிவடைந்துகொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் சூழலில் கிடைக்கும் பொருட்களின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் முயன்றுபார்த்திருக்கிறார்கள். 

நேபாள மழையணி

தென்னை ஓலைகளுக்கும் பனை ஓலைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பார்த்தவுடனேயே இவைகளில் தெரியும் வித்தியாசமான வடிவ அமைப்புகள் நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டியவைகள். தென்னை மட்டையில்  ஓலைகள் தனித்தனியாக நடுநரம்பிற்கு இருபுறமும் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். (Pinnately Compound) பனை ஓலையோ நடுநரம்பின் இருபுறமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விசிறியைபோல இருக்கும். (Palmately Compound). உலகம் முழுவதும் பின்னல்களுக்கான ஆரம்ப பணி என்பது  இலக்குகளை தனித்தனியாக  பிரித்தெடுப்பது தான். ஓலைகளைப் பிரித்து எடுப்பதை இணிந்து எடுப்பது என்றே குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவார்கள். தென்னை மட்டையில்  பிரிந்திருக்கும் ஓலைகளை தனித்தனியாக இணிந்து எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை ஆனால் ஒன்றாக இணைந்திருக்கும்  பனை ஓலைகளைப் பிரிப்பது குறித்த புரிதல் ஆதி குடிகளுக்கு சற்றே வேறுவகையான ஒரு அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

கர்னாடகாவிலுள்ள கூர்க் பகுதியில் மழையணி

ஓலையில் வடிவங்கள் செய்வது மனித வாழ்வில் ஒரு தொடர் செயல்பாடாக இருந்து வந்துள்ளது. அவ்விதமாகவே அவைகள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்றைய பொருட்களாக நம்மை வந்து எட்டியிருக்கின்றன. இவைகளின் தொன்மம் சார்ந்த கதைகள் கூட இப்படிநிலைகளை விளக்கும்படியாக சுவைபட அமைந்திருக்கின்றன.

ஆதியில் பனை ஓலைகள் இப்போது காணப்படுவது போன்று இணைந்து இருந்ததில்லை. காளி தனது பிள்ளைகளுக்கு பனையேறக் கற்றுக்கொடுக்கிறாள். அவர்கள் பனை ஏறும்போது முதல் பதனீர் தனக்கு கொண்டுவரும்படி கூறி ஒரு ஓலையை வெட்டி போடச் சொல்கிறாள். பதனீர் பருக, பிரிந்து இருந்த ஓலைகளை ஒன்றிணைக்கும் வேளையில், அங்கே ஒருவர் வந்து உனது பிள்ளைகள் உனக்கு கொடுக்குமுன்பே பதனீர் அருந்துகிறார்கள் என கூற, கீழிருந்து காளி பார்க்கையில் சொட்டுகின்ற பதனீர் தெறித்து அங்கே இருந்த காளியின் பிள்ளையின் வாயில் பட, காளி கோபத்துடன் பனை ஓலைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றதாக ஒரு கதைப் பாடல் உண்டு. ஆகவே பிரிந்திருக்கும் ஓலைகளை இணைக்கும் வழிமுறைகளை காளியின் பிள்ளைகளும் முன்னெடுத்திருப்பார்கள் என நாம் உணரலாம்.

மழையணியின் பயன்பாடு

மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும்  தேவைகளின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும்போது அது பல்வேறு முயற்சிகள் மற்றும் தோல்விகள் வழியாக நிகர்செய்யப்படுகிறது. பனை ஓலைகளை பின்னும் தொழில் நுட்பத்தினை மானிடர் அறிவதற்கு முன்பு, அவைகள் ஒன்றோடு ஒன்று சீராக அடுக்கப்பட்டு கோர்க்கப்பட்ட ஒரு நிலை இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மணிகளை கோர்க்கும் முறைமை கி மு 40000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது  போன்ற தகவல்கள் அகழ்வாய்வுகளில் வெளிப்படுகின்றன  . அப்படியான ஒரு அலங்காரத்திற்கு முன்பே பயன்பாட்டு முக்கியத்துவம் கிளைத்திருக்க வேண்டும் என்றே நம்புகிறேன். 

பனை ஓலைகளின் அமைப்பினைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். பனை ஓலைகள் என்பவை இலக்குகளின் தொகை. அவ்விதம் இணைத்திருக்கும் ஓலைகளை தனிதனி இணுக்குகளாக பிரித்து எடுத்துப் பார்த்தால் அனைத்து இலக்குகளுக்கும் நடுவில் ஒரு நரம்பு ஓடிக்கொண்டிருக்கும். அதனை ஈர்க்கில் என்பார்கள். குமரி மாவட்ட வழக்கச் சொல்லின்படி அதனை ஈக்கல் அல்லது ஈக்கு என்று தான் அழைப்பார்கள். ஈர்க்கிலோடு ஒரு அரை செ மீ அகல ஓலையை சேர்த்து கிழித்தால் அதனை மூரி என்று விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பிடுகிறார்கள்.

மழையணி அணிந்துகொண்டு பணி செய்வது

ஈக்கல் ஓலைகளை விட பல மடங்கு உறுதியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு நீள ஊசியினை நினைவுறுத்தும் அமைப்பு கொண்டது. நீரில் நனைத்து பயன்படுத்தினால் சற்றே கயிறு போன்ற நெகிழ்வுதன்மையுடன் உறுதியும் கூடியிருப்பது. ஈக்கலின் பயன்பாடு குறித்து தேடத் துவங்கினால் அது நம்மை தொல்பழங்காலத்தில் கொண்டு சென்றுவிடும்.

பனை சார்ந்த பொருட்கள் எப்படி ஒரு சூழலில் உருபெற்று வந்ததோ அதுபோலவே பல்வேறு சூழல்களினால் ஒருசில பனை சார்ந்த பொருட்கள் மறைந்தும் போயின.  அவைகளை நாம் வழக்கொழிந்து போன பொருட்கள் என்கிறோம்.  ஒரு பொருள் வழக்கொழிவதற்கு பல்வேறு புறக்காரணங்கள் உண்டு. அவைகளில் மிக முக்கியமானது நவீன வாழ்க்கை முறை. 

மழையணியுடன் இடையர் சிலை

அதுபோல பனை சார்ந்து பொருட்கள் செய்கிறவர்கள் குறித்து எந்த குறிப்புகளும் புத்தகங்களில் இருக்காது. எங்கோ ஏதாவது ஒரு பத்திரிகையில் பனை சார்ந்த பொருட்களைக் குறித்து வருகின்ற செய்திகளை தொகுப்பதும் எளிதல்ல. அப்படியே சேகரித்தாலும் அவைகள்  தமிழகத்தில் இருந்த பொருட்களில் பத்திலொன்றைக்கூட அவைகள் குறிப்பிட்டிருக்காது. பெரும்பாலும் ஊர்களைக் குறிப்பதுடன் அவைகளும் தங்கள் பங்களிப்பை நிறுத்திவிடும்.

ஓலைகளை அப்படியே வைத்து தயாரிக்கும் பட்டை மற்றும் தோண்டி இவைகளை நாம் கடந்த வாரங்களில் பார்த்தோம். சம்பு செய்யும் முறை இவைகளை விட வித்தியாசமானது. ஓலைகளை தனித்தனி இலக்குகளாக பிய்த்து அதன் பின் அவைகளை இணைத்து செய்யும் தொழில் நுட்பம் சார்ந்தது. மிக அடிப்படையான ஒரு வடிவமைப்பு. ஓலைகளை வரிசையாக ஒன்றோடொன்று நெருங்கி இருக்கும்படி அடுக்கி, இணைக்கும்படியாக பனை ஈர்க்கில்களையே பயன்படுத்துவார்கள். இவைகள் அடிப்படையில் ஒரு தடுக்காக பயன்படும். இதனோடு ஈச்ச மட்டைகளை இணைத்து பலப்படுத்தி, அவைகளை குவித்து இணைத்துவிட்டால் சம்பு தயார்.

மழையணியுடன் இடையர் சிலை

சம்பு ஒரு சிறந்த மழையணி. புயல் மழைக்கும் அசைந்து கொடுக்காதது என்றே குறிப்பிடுவார்கள். தொல்பழங்காலத்தின் மழை கோட் என்றே சொல்லுமளவு, இது தலை முதல் கால் வரை உடலை பாதுகாக்கும் ஒரு அமைப்பு. சம்பு என்ற வடிவம் காலத்தால் மிக தொன்மையானது என்பதை அதன் வடிவத்திலிருந்தும் பயன்பாட்டு தன்மையிலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.  உலகின் பல்வேறு நாடுகளில் மழையணியாக சம்புவை ஒத்த வடிவங்களில் பலர் மழையணியினைச் செய்வது பழங்குடியினரிடையே இருக்கும் வழக்கம். வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் பரவலாக பயன்பட்ட ஒரு வடிவம் இது என்று பனை மரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் குறிப்பிடுவார்கள். இன்று சம்புவினை தொழில் முறையாக செய்தால் ரூ150திலிருந்து ரூ200 வரைக்கும் விற்க இயலும். கிராம மக்களுக்கு குடையினை விட சிறந்த வடிவமைப்பு இதுதான்.

நவீன வாழ்வு தான் இவ்வித அறிதல்களையும் வாழ்க்கைமுறைகளையும் சிதறடித்தது. ஒரு சம்பு செய்ய 60 ரூபாய் ஆகும் சூழலில் வெறும் 50 ரூபாய்க்கு குடை கிடைத்தது ஆகவே சம்புவினை விட நவீனமாக காணப்பட்ட குடைக்கே  மதிப்பு கிராம மக்களிடம் பெருகியது ஆகவே உடல் உழைப்பால் செய்யும் சம்புவினை அப்படியே மறந்துவிட்டனர்.

முதலில் பெரிய பனை ஓலைகளாக தெரிவு செய்து பனை மரத்திலிருந்து மட்டையைத் தவிர்த்து ஓலையாகவே கழித்து எடுப்பார்கள்.  காலையிலேயே வெட்டிய ஓலையினை மாலை வரை வாட விடுவார்கள். மாலை வேளையானதும் ஓலையினைச் சுருக்கு பிடித்து வைத்துவிடுவார்கள்.  பின்னர் தடுக்கு செய்ய ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு இலக்காக கிழித்து நீர் தெளித்து கட்டி வைத்துவிடுவார்கள். மறுநாள் காலை 3 மணிக்கு பெண்கள் எந்து தடுக்கு தைப்பார்கள். ஒரு சம்பு செய்ய 7 தடுக்குகள் ஆகும். அப்படி, ஒரு நாளைக்கு சுமார் 20 தடுக்குகள் வரை பெண்கள் செய்வார்கள். தடுக்குகளை மூரி வைத்து தைப்பார்கள். ஈர்க்கிலோடு இணைந்திருக்கும் பகுதியினை ஆண் மூரி என்றும் ஈர்க்கில் இல்லாத எதிர்பகுதியை பெண் மூரி எனவும் குறிப்பிடுவார்கள்.

பனை ஓலை பொருட்களைச் செய்யும்போது பிற தாவரங்களின் பொருட்கள் உள்நுழைவது ஒரு முக்கியமான இணைவாக இருக்கிறது. அது எவ்விதமான தாவரங்கள் அப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றன என்பதன் அடையாளம் ஆகும். சம்பு செய்கையில் ஈச்சங் கசங்கினை பயன்படுத்துவதைப் பார்த்தேன். கசஙு  என்ற வார்த்தை ஓலைகளை நீக்கிய ஈச்ச மட்டையினை குறிப்பிடும் வார்க்ட்தையாக இருக்கிறது.  இவ்விதமாக சேகரிக்கப்பட்ட ஈச்சங் கசங்குகளை இரண்டாக கிழித்து பக்குவமாக காயவைத்து சேமித்து வைத்துக்கொள்ளுவார்கள். இவைகளை தேவையான நேரத்தில் எடுத்து நீரில் ஊறபோட்டு மீண்டும் இரண்டாக கிழித்து விடுவார்கள். இவைகளில் நீளமாக வருகிற கசங்கினை  மடிச்சி போடுற கசங்கு என்றும், குட்டையாக வருகிற கசங்கை ஒடிச்சி போடுற கசங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அகணி (பனை மட்டையின் உட்புறமிருக்கும் நார்) நாரை கிழித்து கோணி ஊசியில் நுழையும் அளவிற்கு மெல்லியதாக எடுத்து அதனைத் தைப்பார்கள். அகணியில் பிரித்தெடுக்கும் நாரினை சரடு என்றே குறிப்பிடுகிறார்கள். தடுக்கையும் கசங்கையும் இணைத்து கட்டுவதற்காக அகணி சரடு பயன்படும். கோணி ஊசியில் சரடை கோர்த்து தைப்பார்கள். அந்த தையலுக்கு ஒரு முடிப்பு இருக்கும். ஒரு கசங்கிற்கு நாலு தையல் என்ற வீதம் உறுதியாக சம்புவினை கட்டி முடிப்பார்கள்.

 கொண்டைப்பகுதி செய்கையில் ஒருவரால் கட்ட இயலாது. பொதுவாக ஆணும் பெண்ணும்  இணைந்தே கட்டுவார்கள்.  இவ்விதமாக குடும்பமாக இணைந்து செய்யும் பனை பொருட்கள் தமிழகத்தில் இன்றுவரை இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், சங்க இலக்கியங்களில் காணப்பட்ட முறம் கூட இன்று குடும்பமாக ஆணும் பெண்ணுமாக இணைந்து செய்யும் ஒரு வடிவம் தான்.

சம்புவினை வீட்டில் தட்டியாகவும், கூரை வேய்கையில் அடித்தளமாகவும், இரவு காவலிருப்பவர்களுக்கான கூடாரமாகவும், பனி, மழை போன்றவைகளிருந்து காத்துக்கொள்ள பயன்படுத்திவந்திருக்கிறார்கள். கிணற்றில் நீர் இறைக்கும் மோட்டார் மீது கவிழ்த்து வைக்கவும் கூட இது பயன்பட்டிருக்கிறது. நவீன காலத்தில் இப்பொருளுக்கு ஏற்பட்ட  அழிவு, நமது வாழ்விலிருந்த்து சில கலைஞர்களை அப்புறப்படுத்தியிருக்கிறது என்பது உறுதி.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சம்புவிற்கு ஒத்த ஒரு பொருள் குமரி மாவட்டத்தில் உண்டு என தனிப்பட்ட முறையில் என்னிடம்  கூறியிருக்கிறார்கள். அதன் பெயர் காமணம். காமணம் குறித்து நான் அனேகரிடம் கேட்டும் என்னால் அது குறித்து மேலதிக தகவல்களை சேகரிக்க இயலவில்லை. இப்படியிருக்கையில் ஜெயமோகன் அவர்கள் சமீபத்தில் “ஆமை” என்று ஒரு கதை எழுதினார்கள். அதில் புலையர் பெண் ஒருத்தி கொரம்பை என்கிற என்கிற பனை ஓலை மழையணிக்குள் ஆமைபோல வாழ்ந்து மறைந்த கதை அவர்கள் வழிமரபினரால் நினைவுகூறப்படும் வகையில் எழுதியிருந்தார். இக்கதையில் காணப்படும் விவரணையின்படி “தலையிலே மாட்டிக்கிட்டா தோளும் முதுகும் உள்ள மறைக்கிற மாதிரி இருக்கும். குனிஞ்சுகிட்ட கூரை மாதிரி நம்ம உடம்புமேலே நிக்கும். ஆமையோடு மாதிரின்னு வைங்க.” மேலும் “நல்ல கொரம்பை ஒரு பெரிய சொத்து… அதுக்க இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தா அடியிலே புதிய ஓலையை கோத்து செரியாக்கிடுவாங்க. அப்படி சரிபண்ணிட்டே இருக்கணும். மேலே உள்ள ஓலை காலப்போக்கிலே கருகி மட்கிபோகும். அப்ப அடியிலே உள்ள ஓலை மேலே வரும். வெயிலுள்ள காலத்திலே தேன்மெழுகு எடுத்து அரக்கும்சேத்து உருக்கி மேலே பூசிவைச்சா பல ஆண்டுகள் அப்படியே இருக்கும்”.

இவ்விதமான பொருட்களின் படமோ அல்லது நினைவுகளோ என்னால் இன்றுவரை சேகரிக்க இயலவிலை. எப்படியும் இவைகள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்திருக்கும். கடந்த 100 ஆண்டுகளுக்குள்  சமூகத்தட்டில் மிகவும் கீழ்நிலையில் இருந்ததாலோ என்னவோ, வயல் வேலைச் செய்யும் புலையர்கள் வாழ்வில் காணப்பட்ட இந்த பொருளினை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லைப் போலும். பனைக்கென இப்போதும் ஓரியக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்காவிட்டால், பனையின் நிலையும் இவ்விதம் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கும்.

குமரி மாவட்டத்தில் உள்ள பெரியவர்கள் பலரைக் கேட்டும் இது குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எனக்கு மிகவும் அறிமுகமான பனை ஓலைக் கலைஞரான குமரி மாவட்டத்தின்  மொட்டவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களிடம் விசாரிக்கையில்  அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு அதன் பெயர் கொங்காணி என்றார். நான் அயர்ந்துவிட்டேன். எத்தனைப் பெயர்கள்தான் இந்த மழையணிக்கு?

சம்பு என்ற தாவரத்திலும் இது போல் மழையணி செய்திருப்பார்களோ? அல்லது கோரை புல்லில் இதற்கு இணையான மழையணி செய்திருப்பதால் கொரம்பை என பெயரிடப்பட்டதா தெரியவில்லை.

இணையத்திலிருந்து ஒருசில படங்கள் கிடைத்தன. சம்புவைப்போன்ற எதோ ஒரு மழையணி அணிந்திருக்கும் படங்களை இடையர் சிலைகள் என்றே குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியானால் வயல் வேலைகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல, இடையர்களது வாழ்விலும் சம்புவின் இடம் முக்கியத்துவம் பெறலாகின்றது. அதனை நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், பனை சார்ந்து கொடாப்பு எனும் பிரம்மாண்ட அமைப்பை ஆட்டு குட்டிகளில் பாதுகாப்பிற்காக செய்கிறவர்கள் இடையர்கள். சமீப காலமாக பனை மரக்கள் குறித்து சங்க இலக்கியம் கூறுவது என்ன என்று தேடுகிற ஒரு கூட்டம் எழும்பியிருக்கிறது. உண்மையிலேயே பனை சார்ந்த பொருட்களின் புழக்கத்தை தேடி கண்டுபிடித்தால் அது சங்க இலக்கிய வாழ்வில் நமது பனை சார்ந்த அறிதல்கள் குறித்து மேலதிக தகவல்களைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

மழையணி என்ற இந்த பொருள் எனது வாழ்வில் நான் மீட்டெடுக்கவேண்டிய தமிழர்களின் முக்கிய அடையாளமாக இருப்பதாகவே நான் உணருகிறேன் ஆகவே இதன் தேடுதலை எனது கைக்கு எட்டிய சம்பு மூலமாக துவங்குகிறேன்.

பனைமுறைக் காலம் 3

பிப்ரவரி 13, 2021

பிள்ளையார் சுழி

எங்களது பயணத்தில் நாங்கள் இருந்த  பெட்டியிலேயே என்னோடு பணியாற்றும் ஜாண் ராஜாமணி என்ற போதகரும் பயணிக்கிறார் என்பதை வழியில் கண்டுகொண்டோம். போதகர் ராஜாமணி அவர்கள் வசாய் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறார்கள். போதகர் ராஜாமணி அவர்களுக்கு பனை மீதான விருப்பம் அதிகம்,  மாத்திரம் அல்ல பனைமரச் சாலை தொடராக எனது வலைப்பூவில் வெளிவந்தபோது அதனை தொடர்ந்து வாசித்து வந்தவர் அவர்.  பயணம் முழுக்க பனை குறித்து உரையாடியபடி வந்தோம்.

போதகர் ராஜாமணி மற்றும் மித்திரனுடன்

மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஒரு பழங்கால கோட்டை இருக்கிறது. வசாய் பகுதியினை ப்ரிட்டிஷார் பேசின் (Bessin) என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றும் கூட வசாய் செல்லும் மும்பை நகர்புற இரயில்கள் V என்ற எழுத்திற்கு பதிலாக  BS என்றே தாங்கி வரும். வசாய் கோட்டை 1509 ஆம் ஆண்டு போர்துகீசியர்கள் மும்பையில் கால் ஊன்றியதை நினைவுறுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை.  பிற்பாடு மாராத்தியர்கள் இதனை 18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் இதைனை கையகப்படுத்தினார்கள். கடலை முத்தமிட்டிருக்கும் இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தகோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வசாய் பகுதியில் பனை மரங்கள் செழித்திருக்கும் என நான் கேவிப்பட்டிருப்பதினாலேயே, அங்கே செல்லவேண்டும் என போதகரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

வசாய் கோட்டை – நன்றி இணையதளம்

கேரளத்தினூடாக பயணிக்கிறோம் என்பதை இருபுறத்திலும் எங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த தென்னைகளின் திரட்சி பறைசாற்றின. பனை மரங்கள் தென்னையினூடாக தலைதூக்கி எட்டிப்பார்க்கும் காட்சிகள் ஆங்காங்கே தென்பட்டவண்ணம் இருந்தன. கேரளம், தென்னை மரத்தை தனது பண்பாட்டு அடையாளமாக கொண்டிருப்பதாக கூறுவார்கள். கேர எனும் வார்த்தையே தென்னையைக் குறிப்பிடுவதாக அமைகிறது.  கேரளா என்பது சமீபகாலமாக தென்னை நோக்கி நகர்ந்து வந்த ஒரு நிலபரப்பு என்றே நான் கொள்ளுவேன். போர்துக்கீசியர் வந்தபின்பே தென்னை இங்கு நிலைபெற்றிருக்கும். சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் முன்பதாக பனை மரம் கேரளாவின் தேவையினை பூர்த்தி செய்த ஒரு மரமாகவே இருந்திருக்கிறது. தென்னை மரம் ஒரு பணப்பயிர் என கண்ணுற்றபோது, அதிக உழைப்பைக்கோரும் பனை மரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டனர் என்பதுதான் உண்மை. ஆனால், பனை சுயம்புவாக இங்கே முழைத்தெழும்பி நிலைபெற்றிருப்பதைக் காணும்போது, நமது பார்வைகள் சற்றே மாறவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேரளாவில் தென்னை ஓலைகள் வீடுகள் கட்டவும், பனை ஓலைகள் பயன்பாட்டு பொருட்கள் செய்யவும் என துறைசார்ந்து பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விதமான பிரிவுகள் தாவரங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவைகளை சமூகங்கள் தேவையான விகிதங்களில் பேணிவந்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தும்.  பொதுவாகவே பனையும் தென்னையும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் ஆகும். கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி, பனை மரங்களை விட தென்னைகளை பேணும் காலங்களாகவே இருந்திருக்கின்றன. இப்படியான சூழலில், பனை மரங்களை தென்னந்தோப்புகளின் நடுவில் நாம் காணும்போது, அவைகள் தப்பிப்பிழைத்த மரபான தாவரங்கள் என்றே நாம் உணர்ந்துகொள்ளுகிறோம்.

ஒருமுறை கொச்சியில் பணிபுரியும் என் சகோதரி மெர்சியா அவர்கள் அங்குள்ள ஒரு  மேலாண்மை நிறுவனத்தில், பனை சார்ந்து ஒரு கட்டுரை வாசிக்கச்சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். சர்வதேச அளவிலான அந்த  நிகழ்வின் இறுதி நாளில் ஆலப்புழாவிலுள்ள படகு வீடு ஒன்றில் நாங்கள் கும்பலாக ஏறி பயணித்தோம். தென்னைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் அந்த நீர்பரப்பு, விந்தையானது. எப்படி  ஒரு சமூகம் தென்னையை மையப்படுத்துகிறது என்பதோடு பிற தாவரங்கள் எப்படி அவ்விடத்திலிருந்து அழிந்துபோகின்றது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்விதமான ஒற்றைத் தாவர பயிரிடுதல் நிகழும்போது அங்கே இருக்கும் வேறு சில மரபான தாவரங்கள் அழிவதை தவிர்க்க இயலாது. எனது பயணத்தில் தென்னைகளுக்கு மத்தியில்  நெடுந்துயர்ந்து வளர்ந்த ஒரு ஒற்றைப் பனையும் அதன் அருகில் ஒரு கோவிலையும் கண்டேன். பார்க்க வண்ணக்கலவைகளுடன் சற்றே தமிழ் சாயலைக் கொண்ட கோவிலாக இருந்தது.

தென்னைகள் பயிரிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியில் ஒற்றைப்பனைமரம் எப்படி வந்தது? பனை மரத்திற்கான தேவை தான் என்ன? விடை இதுதான், பனை மற்றும் இன்னபிற  தாவரங்கள் இருந்த இடங்களில் இருந்து அவைகள் சிறுக சிறுக அகற்றப்பட்டு மெதுவாக தென்னை குடியேறியிருக்கிறது என்பது தான் உண்மை.

இதனைக் குறித்து என்னோடு பயணித்த ஒரு பேராசிரியரிடம் நான் கேட்டபோது, அவர் பனை மரங்கள் இங்கு வாழ ஏற்றவை அல்ல என்றார். மேலும் அவர், இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் பதனீர் காய்ச்ச உகந்த இடம் இதுவல்ல என்றார். அவர் கூறுவது உண்மைதான், ஆனால், இவ்வித எண்ணங்கள் பொருளியல் சார்ந்த ஒரு பார்வையை முன்வைக்கிறதேயன்றி, நிலவியல் சார்ந்த உண்மையை வெளிப்படுத்துவது அல்ல. தென்னைகள் கூட, சிறுக சிறுக மக்கள் பெருக்கத்தினூடாக ஏற்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உண்மையிலேயே இப்படியான பிரம்மாண்ட தென்னை நிலப்பரப்பு இருந்திருக்க இயலாது.

பனை சார்ந்த நிலப்பரப்பு என்பவை எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழும்புவது இயல்பு. நான் மும்பையில் பனை விதைகளை விதைக்கையில், மும்பை என்னும் காட்டினை பாலைவனமாக்கிவிடாதீர்கள் என்ற எச்சரிப்பை ஒருவர் வழங்கினார். இப்படியான எச்சரிப்புகள் எனக்கு புதிதல்ல. தமிழகம் முழுக்கவே பனை விதைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் ஒரு சில சூழியல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் எப்படி நீர் நிலைகள் இம்மாவட்டங்களின் சூழியலை மாற்றியமைத்தன என நாம் உணர்ந்துகொள்ள முடியும். மும்பையில் கூட இன்றும் பனை செழித்து வளரும் ஒரு நிலப்பரப்பு மழை பொழியும் ஆறு மாதங்கள் சதுப்புநிலமாகவே காட்சியளிப்பதைப் பார்த்து வியந்துபோனேன். பறைகளுக்கிடையில், கடற்கரை ஓரங்களில் என பனை மரங்கள் தனக்கான இடத்தை  தகவமைத்துக்கொள்ளுவது ஆச்சரியமானது.

தென்னை மரங்கள் மனிதர்களால் பயிரிடப்படவில்லையென்றால், கண்டிப்பாக நீர் நிலைகளால் பரவும் வாய்ப்பு கொண்டவை. ஆனால், பனை மரங்களுக்கு வெறு பல வாய்ப்புகள் கூடவே இருக்கின்றன. மாடுகள், பன்றிகள், எருதுகள், மான்கள், குரங்குகள், நாய்கள், நரிகள், யானைகள் என எண்ணற்ற உயிரினங்கள் பனை விதை பரப்புதலில் இணைந்துகொள்ளுகின்றன. மேலும், வறட்சி காலங்களில் பனை மரம் தப்பி பிழைக்கும் தன்மையுடையது ஆனபடியால் தென்னையை விடவும் தன்னிச்சையாக பலவிடங்களில் பரவியிருக்க வாய்ப்புள்ளது.

“Kerala  – The Land of Palms” என்ற புத்தகம் 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படம்   பனை மரத்தாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் ஹாக்கர் (I H Hacker) கேரளவிலுள்ள கொல்லம் (Quilon) பகுதிக்கு வரும்போது அங்கே காணப்படும் தென்னைமரங்களை சுட்டிக்காட்டி, இதுவே கேரள தனது பெயரை பெற்றுக்கொள்ள காரணமான மரம் என ஒப்புக்கொள்ளுகிறார். தென்னை மரங்கள் கொல்லம் பகுதிகளில் காணப்படுவதாக வரைந்திருக்கும் படத்தில் கூட, பல்வேறு தாவரங்களின் மத்தியில் தான் தென்னைகள் நெடுந்துயர்ந்து வளர்ந்திருக்கின்றன. தனது புத்தகத்தில் தாவரங்களின் இளவரசன் பனை என்றே குறிப்பிடுகிறார்.

நன்றி இணையதளம்

தென்னை நிறைந்த பகுதியாக மட்டுமே இருந்திருந்தால் எப்படி பனை மரங்கள் அன்று முகப்பில் இடம்பெற்றிருக்கும்? விடை இதுதான், பனை சார்ந்த ஒரு வாழ்வு திருவிதாங்கூர் பகுதிகளில் செழித்திருந்தது. லண்டன் மிஷன் சொசைட்டி (London Mission Society) வெளியிட்ட இந்த புத்தகம், அக்காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவிய பெரும்பாலான நாடார் சமூகத்தை முன்னிறுத்தும்பொருட்டும் இருந்திருக்கலாம்.  ஆனால் தென்னைகள் கூடி இருப்பதை விட பனங்கூடலை காண்பிக்கும் கோட்டோவியங்கள்  அசாத்தியமானவை. தென்னை சார்ந்த வாழ்வியலை விட பனை சார்ந்த வாழ்வியல் இப்புத்தகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தென்னைகளின் திரட்சியின் முன்பாக பனைகள் காணாமல் போவதற்கு காரணம் என்ன? திருவிதாங்கூரில் ஏற்பட்ட சாதிய கொடுமைகளும், பனை மரம் சார்ந்த இழி அடையாளங்களும், பனை மரத்தை நினைவிலிருந்து மட்டுமல்ல, நிலப்பரப்பிலிருந்தே நீங்கச்செய்திருக்கும் என்பது தான் உண்மை. மரத்தோடு தொடர்புடையவர்கள் இழிவானவர்களாக கீழானவர்களாக சமூகம் கட்டமத்தபின்பு, அந்த மரமே இழிவானது என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவது  ஒன்றும் கடினம் அல்ல. ஆகவே நாடார் சமூகமே பனை மரங்களைக் கைவிடத் துவங்கினர். அதற்கு அன்று அவர்கள் மிஷனெறி பணிகள் மூலமாக பெற்ற கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன என்பதை புத்தகம் குறிப்புணர்த்துகிறது.

Kerala – The land of Palms என்ற நூலிலிருந்து

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு  மார்த்தாண்டம் பகுதிகளில் பயணிக்கையில் കള്ള് என மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையை  ஆங்காங்கே ஒதுக்குபுறமாக பார்த்திருக்கிறேன்.  தமிழில் கள்ளு என எழுதியிருப்பதால் மலையாளத்திலும் அதையே எழுதியிருக்கிறார்கள் என்றும், என்னால் மலையாளம் வாசிக்க முடியும் என்றும் குதூகலித்திருக்கிறேன். இவைகளுடன் Toddy என ஆங்கில எழுத்துரு இடம் பெற்றிருக்கும். அனைத்து எழுத்துக்களும் கரும்பலகையில் அழகிய வெண்ணிற எழுத்துக்களால் வரையப்பட்டிருக்கும். நான் பார்த்தவரையில் மிக கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம் அது. இருளில் மின்னும் வெண்மை. நுரைக்கும் கள்ளை காட்சிப்படுத்தும் கரும் பலகை. சீரான எழுத்துக்கள் என அதற்கு ஓர் அழகு இருந்தது. மும்பை வந்த பின்பு தான் Toddy என்ற வார்த்தை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு, (அல்லது சமஸ்கிருதத்திலிருந்து) சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். “தாட்” என்றல் பனை மரம், பனை மரத்திலிருந்து  கிடைப்பது “தாடி” (Toddy) என்றே இன்றும் வட இந்திய நிலப்பரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

கள்ளுகடை

இந்த விளம்பரப்பலகையின் அருகில் ஒரு தென்னையோலை கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். அங்கே தான் கள் விற்பனை நடக்கும். உள்ளே எப்படி இருக்கும் என தெரியாது. எனது 11 வயது வரை இவ்வித காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். பின்னர், மார்த்தாண்டம் காவல் நிலையம் கள்ளினை கைப்பற்றி வடக்குத்தெருவிலுள்ள ஓடைகளில் கவிழ்த்துவிடுவது வாடிக்கையாக இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில் மதுவிலக்கு போலீசார் எவ்விதம் தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள் என இறும்பூதெய்தாமால் இருக்கவியலவில்லை.

கேரளம் என்பது கள்ளிற்கான பூமி.  இன்றும் கள்ளை கொண்டாடும் சமூகம், அங்கே உயிர்ப்புடன் இருக்கின்றனர். பனங்கள் கிடைக்குமோ இல்லையோ தென்னங்கள் கண்டிப்பாக கிடைக்கும். நான் இதுவரை கேரளத்திலோ அல்லது  குமரி மாவட்டத்திலோ தென்னங்கள் பருகியது இல்லை. ஆனால் பெங்களூருவிலும் பாண்டிச்சேரியிலும் தென்னங்கள் பருகியிருக்கிறேன்.  முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு வாக்கில் குமரி மாவட்டதிலுள்ள தெரிசனங்கோப்பு என்ற பகுதியில் கள் கிடைக்கும் என்று சொன்னதால் தனியாக சென்றேன். அங்கிருந்த ஒரு குளத்தைத் தாண்டி  நடந்து சென்றபோது ஒரு பழைமையான கோவில் வந்தது. அதையும் கடந்து குளக்கரையில் இருந்த ஒரு தோப்பிற்குள் சென்று கள் பருகியது மறக்கவியலா அனுபவம். சற்றே புளிப்புடன் இருந்தாலும், கள்ளை சுவைத்துவிட்டேன் என்பதே ஆகப்பெரும் வெற்றியாக இருந்தது. போலீசார் தொந்தரவு குறித்து அப்போது அவர் கூறியிருந்தாலும் மீண்டும் 2000ஆம் ஆண்டு அங்கே சென்றேன். 

2004 ஆம் ஆண்டு நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றிய போது அவர்களின் பழைய போராட்ட வரலாறுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” நடத்திய குறிப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது, கள்ளுக்கடைகள் எப்படி பனையேரிகளை சுரண்டி தழைத்தன என்கிற உண்மை வெளியானது. பனையேரிகளிடமிருந்து பதனீராகவே கள்ளுக்கடையினர் வாங்குவார்கள். பின்னர் எப்படி காய்ச்சிய பாலை ஆறவைத்து அதில் தயிர் ஊற்றி உறை வைப்பார்களோ அது போலவே, பதனீரிலுள்ள சுண்ணாம்பை அகற்றிவிட்டு, தனி பதனீரை தெளித்தெடுத்து அதில் கள்ளை ஊற்றி வைப்பார்கள். சரியான பருவத்தில் இதனை கள்ளாக விற்பனை செய்வார்கள். மேலும் போதை ஏறுவதற்காக சில இயற்கை மற்றும் செயற்கை சேர்மானங்களையும் இடுவார்கள்.  எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை நான் சந்தித்தபோது, “கள்ளுக்கு எப்போ போதை வருகிறது?…. அது கடைக்கு வரும்போது தான்” என்று சொன்ன கூற்றின் உண்மை பின்னணியம் இதுதான். இவ்விதமான கள்ளுக்கடைகள் தனி முதலாளிகளையே ஊக்குவிக்கின்றது. ஆகவே தங்கள் முழு முதல் உரிமையினை மீட்டெடுக்கும் பனையேறிகளின் ஒரு உணர்ச்சிகர போராட்ட வடிவமாகவே “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” இருத்ததாக நான் புரிந்துகொள்ளுகிறேன். இப்போதும் கூட கள்ளு என்பது கடைக்கு வரவேண்டாம் பனையேறிகளே கள்ளினை விற்பனை செய்யட்டும் என்னும் நிலைப்பாடே சரியாக இருக்கும்.

மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் 1985 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். சுமார் 15 ஆயிரம் பனையேறிகள் கலந்துகொண்ட அந்த மாநாடு, தமிழகத்தையே அசைத்தது. இதனைத் தொடர்ந்து தான் 01.01.1987 ஆம் ஆண்டு கள் தடைக்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படுகிறது கவனத்திற்குரியது. பனைத் தொழிலாளிகள் ஒன்றுபட்டால் அவர்களது கோரிக்கைகள் வலுப்பெறும் எனவே கள்ளுக்கடைக்கு தடை போட்டால் ஒரேயடியாக பனை தொழிலுக்கு மூடுவிழா நடத்திவிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கும்.  அது உண்மைதான் என சமீபகாலத்தில் உணர்ந்துகொண்டேன். தமிழகம் முழுவதும் 12 லெட்சம் பனை தொழிலாளர்கள் இருந்து வந்த சூழல் கள் தடைக்குப் பின் மாறியது. கள் தடை அறிவித்தவுடனேயே  10 லெட்சம் பனையேறிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர் என சுதேசி இயக்கத்தைச் சார்ந்த திரு. குமரி நம்பி அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

இச்சூழலில் தான் தமிழகத்தில் கள் சார்ந்த ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணி இப்பயணத்தை நிகழ்த்த உறுதிபூண்டேன். ஆனால் ஒருபோதும் இவைகளை எழுத்துருவாக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் கள்ளை முதன்மைப்படுத்தி ஒரு போதகர் எழுதுவதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது.  நான் அறிந்த பல கிறிஸ்தவர்களும் கள் சார்ந்து ஒரு புரிதலற்ற நிலையினையேக் கொண்டுள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனெறிகள் பலரும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். கிறிஸ்தவ கிராமங்களிலிருந்து கள் இறக்குகிறவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக குமரி மாவட்ட நெய்யூர் பகுதியைச் சார்ந்த குறிப்பு காணப்படுகிறது. அதற்கு காரணம் உண்டு.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளில் போதை இல்லையா? எப்படி ஒரு போதகர் கள்ளைக் குறித்து எவ்வித அருவருப்புமின்றி பேசமுடியும்? திருமறை குடிபோதையை எதிர்க்கிறதே என பலவிதமான எண்ணங்களுடன் நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கள் எனும் பானத்தை குடிக்கு நிகரென பேசுவது தற்கால சூழலில் நகைப்புக்குரியதாகவே இருக்கும்.  ஆகவே ஒரு முழுமையான பின்னணியத்தில் இவைகளை வைத்துப் பார்ப்பது மிகவும் தேவை.

1999 ஆம் ஆண்டு நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, அங்கு மாதத்திற்கு ஒருமுறை நற்கருணை வழிபாடு நிகழும். குமரி மாவட்டத்தில் வழங்கும் நற்கருணை திராட்சை ரசத்திற்கும், ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கிய திராட்சை ரசத்திற்கும் பெரிய வேறுபாடு இருந்ததைக் அப்போது தான் கண்டுகொண்டேன். குமரி மாவட்ட சி எஸ் ஐ திருச்சபைகளில் வழங்கப்படும் திராட்சை ரசம் என்பது உண்மையிலேயே திராட்சை ரசம் கிடையாது. அது சில மணமூட்டிகளும் சர்க்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு செயற்கை பானம் மட்டுமே. அதனுடன் தண்ணீர் சேர்த்தே நற்கருணை ஆராதனையில் பருக கொடுப்பார்கள். ஆனால் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கப்படும் திராட்சை ரசமானது வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன் (Home made wine) ஆகும். திராட்சைப் பழங்களும் இன்ன பிற சேர்மானங்களும் இணைத்து செய்யப்படும் பானத்தையே எங்களுக்கு கொடுப்பார்கள். இந்தபானத்தில் இருக்கும் ஆல்கஹால் தான் இதனைக் கெட்டுபோகாமல் வைத்திருக்க உதவுகிறது. பெங்களூரில் இருக்கையில் நான் சென்ற தூய மாற்கு (St Mark’s Cathedral) ஆலயத்திலும் இவ்விதமான திராட்சை பழங்களை பிழிந்தெடுத்த சாறு தான் நற்கருணையில் வழங்குவார்கள்.

திருவருட்சாதனங்கள் – அப்பமும் திராட்சை ரசமும் (நன்றி: இணையதளம்)

குமரி மாவட்டத்தில் செயற்கை மணமூட்டிகள் நிறமூட்டிகளைக் கொண்டு வழங்கப்படும் பானமும், பெங்களூரில் வழங்கிய திராட்சை ரசம் என்றாலும், வழங்கப்படும் நோக்கம் ஒன்றுதான். இரண்டு பானங்களும் இயேசுவின் அருட்கொடையாம் சிலுவைப்பாடுகளை நினைவுறுத்தும் ஒன்றே. அது கிறிஸ்துவின் இரத்தத்தில் நாம் பங்குகொள்ளுகிறோம் என்னும் பேருண்மையின் அடையாளம் மட்டுமே. ரசத்தின் உள்ளடக்கம் என்பது இங்கு அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தை மட்டுமே தாங்கி நிற்பதாக அமைகிறது என்றே கொள்ளவேண்டும்.  அவ்வகையில் சுண்ணாம்பு தடவிய பதனீரோ அல்லது கள்ளோ பனையேறியின் உழைப்பின் அடையாளமாகத்தான் பார்க்கப்படவேண்டும். வேறு வகைகளில் பார்க்கப்படுவது பார்பவரின் பார்வைக் குறைபாட்டையே எடுத்தியம்பும்.

திருமறையில் இயேசு அருந்திய திராட்சை ரசம் எப்படிப்பட்டது என்று விவாதங்கள் வரலாற்றில் அப்போதே எழுந்திருக்கின்றன.   “எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்”.  (மத்தேயு 11: 18 – 19) இந்த வசனம் “நீதி” என ஒப்புக்கொள்ளப்படும் என்ற இடத்தில் நிறைவடைகிறது கவனத்திற்குட்படுத்தவேண்டியது ஆகும்.  அதுவே ஞானம்.

இன்று கள் என்பது கண்டிப்பாக போதை வஸ்து அல்ல. அது போதைக்கு எதிரான ஒன்றாகவே எழுந்து நிற்கின்றது. இன்றைய தமிழக அரசு வழங்கும் வெளிநாட்டு மதுபானங்கள் என்பவை உடலையும், உள்ளத்தையும், குடும்பங்களையும் அழிப்பவை. ஆனால் பனங்கள் என்பது குடும்பங்களை வாழ வைப்பவை. அது ஒரு விடுதலையின் அடையாளம். காலம் காலமாக தங்கள் முன்னோர்  புழங்கிய தளங்களில் பனையேறிகள் தங்கு தடையின்றி பயணிக்கும் அனுமதி சீட்டு.

கள் இறக்க அனுமதி இருந்தாலே பனை சார்ந்த பிற தொழில்கள் செழிக்க இயலும். பலர் என்னிடம் கள் என்பது ஒரு போதைப்பொருள் தான். அவைகள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஏன் கள் விற்பனையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்கள் பதனீர் எடுப்பதை ஊக்கப்படுத்தினால் அவர்களுக்கு எந்த வகையிலும் வருமானம் குறைவுபடாதே? இவ்விதமான தீய காரியங்களுக்கு ஏன் உடன்படுகிறீர்கள் என கேள்விகளை முன் வைப்பார்கள். நான் மறு உத்தரவாக அவர்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் பனை ஏறுவீர்களா? என்பதைத்தான். பனை ஏறாதவர்கள் பனையேறிகளுக்கு எது தேவை என நிர்ணயிக்க இயலாது. பனை ஏறுகிற எவருமே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து நான் பார்த்ததில்லை. கள் குடிக்காமல் பனையேறிகள் இருந்திருக்கலாம் ஆனால், ஒருபோதும், பனை சார்ந்து இயங்கும் மக்கள் கள் தடை வேண்டும் என சொல்லமாட்டார்கள். கள்ளில் இருக்கும் மருத்துவ குணங்கள் அப்படிப்பட்டவைகள். குறிப்பாக கோடை கால வெம்மையிலிருந்து மக்களைக் காக்கும் அருமருந்து கள். ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு என்பது, பனையேறிகளைப் புரிந்து கொள்ளாமை தான்.

முந்தைய பயணம்போல் நான் எனது இருசக்கரவாகனத்தை இப்பயணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனது இருசக்கர வாகனம் இல்லாத கலவையான ஒரு பயணம் இது. இவ்விதமான கலவையான ஒரு பயணத்தை எப்படி ஒருங்கிணைத்து எழுதுவது என்ற எண்ணம் என் மனதின் அடியாளத்தில் இருந்துகொண்டிருந்தது.

இச்சூழலில் தான் நண்பர் ஷாகுல் திருவனந்தபுரத்திலுள்ள நண்பர் சுப்பிரமணியின் தொடர்பு எண்னைக் கொடுத்தார். நண்பர் சுப்பிரமணி உளவுத்துறையில் பணியாற்றியவர். அதற்கான கல்வியினை கற்கும்படியாக பல நாடுகளுக்கு பயணித்தவர். இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மூலமாக எனது பயணக்கட்டுரையினைக் குறித்து கேள்விப்பட்டு, பின்னர் சாகுல் அவர்களின் கடையிலிருந்து எனது புத்தகத்தை  வாங்கி வாசித்திருக்கிறார்.  எனது பனைமரச்சாலையினை வாசித்துவிட்டு என்மீது தனிப்பிரியம் கொண்டு என்னைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்படியும் திருவனத்தபுரத்தைக் கடந்து செல்வதினாலேயே நான் அவருக்கு  படங்களை எடுத்துச் செல்லவும் அவரை சந்திக்கவும் உறுதி கூறினேன். எனது பயணத்தின் துவக்கம் முதல் என்னோடு தொடர்பில் இருந்தார். திருவனத்தபுரத்திலிருந்து தேவிகோடு செல்வதற்கு உதவி வேண்டுமென்றால் தாம் உதவி செய்வதாகவும் கூறியிருந்தார். என்ன உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நான் திருவனந்தபுரம் வருகிறேன் என அறிந்தபோது எனது மூத்த சகோதரி மெர்சியா அவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு செல் என்றார்கள். அவர்கள் திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணினோம் ஆனால் அவர்கள் நெடுமங்காடு செல்லும் வழியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக விலாசத்தைப் பார்த்து சுப்பிரமணி கூறினார்.

திருவனந்தபுரம் வந்து இறங்கியதும் அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டோம். சுமார் ஒரு மணி நேரம் நின்றுகொண்டிருந்தோம். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைத் தவிர வேறு எவரும் அங்கு இல்லை. எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நபர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். ஒருவழியாக அனைத்து முறைமைகளும் முடிந்து வெளியே வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பிள்ளைகள் துவண்டுபோனார்கள்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது  ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டின் வந்து காத்திருந்தார். போதகர் ஜாண் ராஜாமணி அவர்களும் எங்களுடன் வீட்டிற்கே வருவதாக கூறியிருந்தார். நாங்கள் பெட்டிகளை வண்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது நண்பர் சுப்பிரமணி அவரது காரிலேயே வந்து சேர்த்துவிட்டார். அடையாளம் கண்டதும், காரிலிருந்து மிகவும் உயரமான நல்ல உடல்வாகும்கொண்ட ஒரு நபர் இறங்கி என்னை நோக்கி வந்தார். நான் என்ன என எண்ணுமுன்பே எனது காலில் விழுந்தார். பையன் ஜனா தான் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சுப்பிரமணி சொன்னார். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று சொன்னேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் போதகர் ராஜாமணி ஆகியோரை ஜஸ்டின் காரில் ஏறச்சொல்லிவிட்டு, நான் நண்பர் சுப்பிரமணி அவர்கள் காரில் ஏறிக்கொண்டேன். உடனேயே கொண்டு வந்த படங்கள் மறந்துவிடக்கூடாது என எண்ணி, அவரிடம் கொடுத்தேன். பசிக்கிறது எங்காவது நிறுத்துங்கள் என்றேன். எங்கள் கார் முன்னால் வழிகாட்டியபடி செல்ல குடும்பத்தினர் எங்களைத் தொடர்ந்தனர். திருவனத்தபுரம்  கிட்டத்தட்ட அடைபட்டுக்கிடந்தது. உணவு தேடியபடி சென்றோம். ரோட்டோரம் ஒரு கேரவனைக்கண்டு நிறுத்தி, சுட சுட கேரள கல் தோசை, ஆறென பெருக்கெடுத்தோடும் சுவையான தேங்காய்ச் சட்னி மற்றும் பீஃப் சாப்பிட்டோம்.

சுப்பிரமணி, சொல்லியிருந்தால் கண்டிப்பாக வீட்டில் உணவு தயாரித்திருப்பேன் என்றார்கள். அக்கா பணியாற்றும் இடத்திலும் உணவு தயாரிக்க இயலாத சூழ்நிலை. செல்லும் வழி எங்கும் பேசிக்கொண்டே சென்றோம். அக்காவை பார்த்தபோது மகிழ்ந்துபோனோம். அக்கா அவர்கள் இருக்கும் இடத்தைக் சுற்றிகாட்டினார்கள். கத்தோலிக்க குருமார் நடத்தும் அந்த கல்லூரி மிகவும் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்ததை அந்த இரவிலும் கண்டுகொண்டோம்.

இடமிருந்து வலம்: ஜாஸ்மின், அக்கா, ஆரோன், நான், போதகர் ராஜாமணி, மித்திரன், சுப்பிரமணி, ஜனா

எங்கள் சுருக்க பயணத்தில்  நான் கண்டுகொண்டது இதுதான். சுப்பிரமணியிடம் ஒரு வேகம் இருந்தது, அன்பு கூறுவதில் ஆகட்டும், பேச்சில் ஆகட்டும், வாகனம் ஓட்டுவதில் ஆகட்டும், நிறுத்தவியலா ஒரு கரைபுரண்டோடும் தன்மை உண்டு. நான் மிகவு ரசிக்கும் ஒரு வேகம் அது. அவர் ஒரு பிள்ளை சமூகத்தை சார்த்தவர். பிள்ளை சமூகத்தினரிடையே பனை சார்ந்து காணப்படும்  தொடர்புகளை எனக்கு விவரித்தபடி வந்தார். அது எனக்கு மாபெரும் திறப்பு.  பெரும்பாலான சடங்குகள் நமது சாதிக்குள்ளேயோ அல்லது சமயத்திற்குள்ளேயோ இருப்பதால், நம்மால் ஒருபோதும் பிற சாதியினர் எவ்விதம் தங்கள் சடங்குகளைச் செய்கின்றனர் என உணர முடியாது, பார்க்கவும் வழியில்லை. அன்று மட்டும் என்னிடம் பலமுறை கூறியபடி வந்தார், “நீங்கள் இந்த பயணத்தை ஒரு கட்டுரைத் தொகுப்பாக போடவேண்டும் என்று”. என்னால் இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் முயன்று பார்க்கலாம் என வாக்களித்தேன். இப்புத்தகம் வடிவம்பெறுமென்றால் அதற்கான “பிள்ளை”யார்சுழி சுப்பிரமணி தான்.

நாங்கள் பிரியும் வேளை வந்தபோது, எனது கரத்தில் ரு2500/- கொடுத்தார். நான் இருக்கட்டும் வேண்டாம் எனக் கூறினேன். உங்கள் பயணம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதனை ஒரு வாழ்த்தாக பெற்றுக்கொண்டேன். பயணம் குறித்து எழுதுவது மட்டுமல்ல பயணம் செய்வதே இப்போது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.

நான் அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறியவுடன், போதகர் என்னிடம் கூறினார்” திருச்சபையில் கூட இத்துணை அன்பானவர்களை காண்பது அரிது என்றார்” ஆம். நான் மட்டுமல்ல சுப்பிரமணியுடன் பழகியவர்கள் கண்டிப்பாக இதனை உணர்ந்துகொள்ளுவார்கள்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 7

பிப்ரவரி 12, 2021

புனித கால்கள்

மறுநாள் (09.10.2020) ஜெனோபின் ஷானுடைய பிறந்த நாள். கடந்த வருடம் குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் நான் குமரி மாவட்டம் வரும் வாய்ப்பு கிட்டியது.  என்னோடு ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயின்ற ஆந்திராவைச் சேர்ந்த அருட்திரு ஜேம்ஸ் விக்டர் எனது பணியால் ஈர்க்கப்பட்டு என்னை தென்னிந்திய திருச்சபையின் போதகர் கூடுகைக்காக அழைத்திருந்தார். தென்னிந்திய திருச்சபையினைச் சார்ந்த அனைத்து பேராயங்களிலுமிருந்து சுமார் 600 போதகர்கள் கன்னையாகுமரியில் குழுமியிருந்த இந்த பிரம்மாண்ட நிகழ்வில் நான் அழைக்கப்பட்டிருந்தது பெரும் பேறு. அவர்களோடு திருச்சபையில் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பேராயர்கள் என பெரும் நிகழ்வாக அது அமைந்திருந்தது. அடித்தள பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு போதகர் தனது அனுபவங்களைப் பகிர வேண்டிய நிலையில் பனை சார்ந்து நான் எடுக்கும் முயற்சிகளைக் குறித்து விளக்க எனக்கு ஒரு அமர்வு கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன் என்பதை உறுதி செய்தபின்பு, வந்திருக்கும் போதகர்கள் அனைவருக்கும் பனை விதைகளை அளிக்கலாம் என முடிவு செய்தேன். மும்பையிலிருந்து விமானத்தில் பனை விதைகளை எடுத்துவர இயலாது, ஆகவே, பால்மா மக்கள் இயக்கத்திடம் விதைகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் பனை விதைகளைத் தருகிறோம் என்றார்கள். ஆனால் எனக்கு மற்றொரு யோசனை தொன்றியது.

பனை மரத்தைப் பற்றியேறும் பனையேறி

தூத்துக்குடி பேராயத்தைச் போதகர் ஜான் சாமுவேல் எனக்கடுத்த நிலையில்  பனை சார்ந்து பல முன்னெடுப்புகள் செய்யும் ஒரு தனித்துவமான  போதகர். பனையேறிகளை கனம் பண்ணும் நிகழ்வு என்று அவர்களுக்கு சால்வை அணியும் நிகழ்வை அவர் நடத்தினார். பனை ஓலையில் பொருட்களைச் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்தபடியிருந்தார். பனை விதைகளை பனை ஓலையில் பொதிந்து கொடுக்க இயலுமா என அவரிடம் கேட்டேன். கண்டிப்பாக செய்கிறேன் அய்யா என்றார்கள். அதற்கான பொருட் செலவையும் அவர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

மும்பையில் நான் பனை விதைகளை வழங்குகையில் கடைபிடிக்கும் வழிமுறை என்பது வித்தியாசமானது. ஒரு அட்டைபெட்டியின் வெளிப்புறம்  முழுக்க, பனை சார்ந்த தகவல்களை நிரப்பி அச்சிட்டு, அதனுள் பனை குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு சிறு பிரதி ஒன்றையும் இணைத்தே மக்களுக்கு கொடுப்போம். அது மும்பை போன்ற பெருநகரங்களில் பனை குறித்த புரிதலற்றவர்களுக்கு ஒரு அறிமுகத்தை அளிப்பதாக இருக்கும். ஆனால், நமது பணம், பெருமளவில் பனை சாராத மக்களிடம் சென்று சேரும். இவ்வித அட்டைப்பெட்டிகள் செய்வதனால் எவ்வகையிலும் பனை சார்ந்த மக்கள் பயன் பெறப்போவதில்லை. ஆகவே தமிழக சூழலில், பனை விதைகளை பனை ஓலைக்குள் பொதிந்து கொடுத்தால், அதன் மூலமாக அனேக ஓலைக் கலைஞர் பயன் பெறுவார்கள் என எண்ணினேன். சில்லு கருப்பட்டிக்கு எப்படி பனை ஓலைகளைப் பொதிவார்களோ அதுபோல பனை விதைகளை பொதிந்துதர அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ மாமன்ற பொதுசெயலாளர் அறிவர். ஆசீர் அவர்கள் நிகழ்ச்சியின் இறுதி நாளில் வந்திருந்தார். பனை விதைகள் சில்லுகருப்பட்டிபோல் பொதிந்து விதை பரவலுக்காக எடுத்துவரப்பட்டதை கண்டு மகிழ்ந்துபோனார். அன்றைய நிகழ்ச்சியில் அவர் அதனைக் காட்டி பேசினார். இந்திய திருச்சபை வரலாற்றில் பனை எங்குமே முதன்மைப்படுத்தப்பட்டது இல்லை.  ஆசீர் அவர்கள் பனை சார்ந்த எனது பயணத்தினையும் போதகர்கள் ஏன் பனை சார்ந்த முன்னெடுப்புகளையும் தங்கள் ஊழியத்தினூடாக செய்வது அவசியம் என்பதனையும் அன்று குறிப்பிட்டார். நெய்யூர் மருத்துவமனையைச் சுற்றிலும் இருந்த  பனை மரங்கள் இன்று மாயமாகிப்போனதும் அதனைச் சார்ந்து வாழ்ந்த பல்லுயிர்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். வேலூரில் உள்ள கிறிஸ்தவ நிலங்களைச் சுற்றி பனை வேலியாக அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து தான் பரவசமடைந்தது என அவர் பனை சார்ந்த முக்கியத்துவத்தை விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியில், அனைவரிடமும் ஆளுக்கொரு பனை விதைகளை எடுத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சி நடந்த கன்னியாகுமரி சி எஸ் ஐ (C S I) தேவாலயத்தின் வாசல்களின் அருகில் பனை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் எனது நண்பனும் புகைப்பட கலைஞருமான ரங்கிஷ் அவர்களைச் சந்தித்தேன். “ஓய், காலைல டியோசிசன் ஆஃபீஸ் பக்கம் போயிருந்தேன்” என ஒரு சம்பவத்தை விளக்கினார். பனை ஓலை பெட்டியை வைத்திருந்த ஒரு பெண்மணி, இன்னொருவரிடம்  மிகவும்  வருத்தப்பட்டு பேசிகோண்டிருந்திருக்கிறார்கள். “ஆனாலும் இப்படி ஏமாத்தப்பிடாது, நாலு பெட்டி எடுத்துட்டு வந்தேன், வீட்டுல வந்து பார்த்தா சில்லு கருப்பட்டிய காணேல, பனங்கொட்டைய உள்ள வெச்சி ஏமாத்தியிருக்கினும்”. என்றவர், “அப்பவே நினைத்தேன், காட்சன் ஊருக்குள் தான் நடமாடுகிறான்” என்றபடி என்னைப் பார்த்தார். எனக்கு சிரிப்பு தாளவில்லை…, பனை விதைகள் தான் கொடுக்கிறோம் என்ற அறிவிப்பை கேட்காத எவரோ ஒருவர், சில்லு கருப்பட்டி இலவசமாக கிடைக்கிறது என அள்ளி எடுத்து சென்று ஏமாந்திருக்கிறார்.   

குமரிப் பேராயர் A R செல்லையா அவர்களுக்கு பனை விதை வழங்குகிறேன்.

ஜெனோஃபின் பிறந்த போது மாமனாராக நான் அவனுக்கு ஏதாவது பரிசளிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். கிலுகிலுப்பைகள் வழங்கலாம் ஆனால் அது எவ்வகையிலும் எனது பனை பயணத்தில் பயலை உள்ளிழுப்பதாகாது. அனேக குழந்தைகளுக்கு நான் பனை ஓலையில் தடுக்குகள் செய்து கொடுத்திருக்கிறேன். ஆகவே, தனித்துவமான ஒரு பனையோலை பொருளை அவனுக்கு பரிசளிக்க விரும்பினேன். எனது இரு சக்கர வாகனத்தில் இருக்கைகளை அமைத்துத் தந்த மொட்டைவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களைத் தொடர்புகொண்டு பனை ஓலையில் ஒரு அழகிய தொட்டில் ஒன்றைச் செய்து கொடுப்பீர்களா எனக் கேட்டேன். மகிழ்ச்சியோடு சரியென்றார்கள். ஆகவே, அதனையும் எடுத்துச் சென்று பிள்ளை காணும் நிகழ்ச்சிக்குச் சென்றேன். அங்கே இருந்து நான் குழந்தையுடனும் உறவினர்களுடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தோம். அந்த புகைப்படம் “உலகிலேயே முதன் முறையாக ஓலை தொட்டிலை அறிமுகப்படுத்திய குடும்பம்” என பதிவாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் முகநூலில் அதனை பகிர்ந்திருந்தார்கள்.

முதல் பனையோலைத் தொட்டில்

இந்த ஓலைத்தொட்டிலை நான் பதிவுசெய்தபோது ஒரு நண்பர் எரிச்சல் மேலிடும் தொனியில் “நாங்களும் சிறு வயதில் இதனைப் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார். அதற்கு காரணம், “நீ தான் அனைத்தையும் கண்டடைந்திருக்கிறாய் என இறுமாப்பு கொள்ளாதே, நாங்கள் பயன்படுத்தி தூக்கி வீசியதை தான் இன்று நீ  உனக்கானதாக முன்வைக்கிறாய் என்ற எள்ளல் நிறைந்த பதிவு அது”. உண்மை என்னவென்றால், பனையோலைத் தொட்டில் என நான் அறிமுகப்படுத்தியிருப்பது ஓலைக்கடவத்தின் சற்றே மாறுபட்ட வடிவம் தான். அதற்கு மிகப்பெரிய அறிவோ, திறமையோ தேவையிலை.  கடவத்திற்கு நான்கு புறமும் சரி சமமாக ஓலைகளை அடி வைத்து பின்ன வேண்டும். பனை ஓலைத் தொட்டிலுக்கு, ஒருபுறம் நீளமாகவும் மற்றொருபுறம் குறுகலாகவும் இருக்க வேண்டும். திருநெல்வேலி பகுதிகளில் ஆட்டுபெட்டி செய்பவர்கள், அல்லது தக்காளி கூடை செய்பவர்களுக்கு இவ்வித செவ்வக அமைப்பு அறிமுகமானதுதான், ஆனால் குமரி மாவட்டத்தில், இவ்வித பின்னல் முறைகள் கிடையாது. மாத்திரம் அல்ல, எங்குமே குழந்தைகளை இப்படி ஓலைப்பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்ட வரலாறு கிடையாது.  எங்கள் ஊரில் குழந்தைகள்  அங்காங்கே ஊர்ந்து சென்றுவிடாதிருக்க, கடவத்திற்குள்  கடல் மணலை நிரப்பி, உள்ளே விட்டுவிடுவார்கள். கடல் மண் இருப்பதால் கடவம் எச்சூழலிலும் மறிந்துவிழாது. குழந்தைகளும் அந்த மென் மணலில் அமர்ந்துகொண்டு வெளியே நடப்பவைகளை பார்த்தபடி விளையாடும்.

ஆபிரகாமிய வம்சத்தாராகிய எபிரேயார்கள் அடிமைகளாக வாழ்ந்த எகிப்தில், பிறக்கும் ஒவ்வொரு எபிரேய குழந்தையையும்  நைல் நதியில் வீசிவிடவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்துவந்த மருத்துவச்சிகளுக்கு கூட குழந்தைகளைக் கொல்லும் உரிமைக் கொடுக்கப்பட்டிருந்தது. அச்சூழலில் தான், லேவி குடும்பத்தில், யோகெபேத் கருவுற்று ஒரு குழந்தையினை பெற்றபோது அந்த குழந்தையினை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். அதற்கு அப்புறம் அவள் அந்த குழந்தையை தனது வீட்டில் ஒழித்து வைக்க கூடாமல், அழகான நாணற்பெட்டி ஒன்றைச் செய்து, அதற்கு பிசின் கீல் போன்றவைகளை பூசி, நைல் நதியில் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு என்ன சம்பவிக்கபோகிறது என்பதை கண்காணிக்கும்படியாக குழந்தையின் சகோதரி அதற்கு காவல் இருந்தாள். அப்போது பார்வோனின் மகள் அப்பகுதியில் குளிக்க வந்து  அழகான அந்த குழந்தையினை தானே வளர்க்க முடிவு செய்தாள். எபிரேய மக்களுடைய மிகப்பெரிய தலைவனான மோசேயுடைய வாழ்வின் துவக்கம் அப்படி ஒரு எளிய நாணற்பெட்டியில் துவங்கியது ஆச்சரியமானது.  நாணற்பெட்டிக்கு இணையாக பனையோலைப் பெட்டி எழுந்துவரும் காலம் ஒன்று வெகு விரைவில் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

பார்வோனின் மகள் மோசேயை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்போது

திருமறையில் நாணற்பெட்டி செய்து அதில் கிடத்திய குழந்தை மிகப்பெரியவனாகியது வரலாறென்றாலும், இதுவரை பனை ஓலையில் எவருமே தொட்டில்கள் செய்ததாக நான் கேள்விப்படவில்லை. ஏன் அப்படி? குழந்தைகளை தூளியில் போட்டு தூங்கவைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. இது கிராமபுற மக்களுக்கு மிக எளிமையான வழி. வசதியுள்ளவர்கள் மர தொட்டிலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏன் பனை நார் இட்ட தொட்டில் கூட நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓலை பெட்டியில் குழந்தைகளைக் கிடத்துவது என்பது எவரும் கைக்கொண்டதாக நான் கேள்விப்படவில்லை.

பனை ஓலைத் தடுக்குகளில் குழந்தைகளைக் கிடத்துவதே வாடிக்கையானபடியால், மிகப்பெரிய அளவில்  செலவாகும் ஓலைகள் குறித்த கரிசனை இருந்திருக்கலாம். குறிப்பாக, வறுமை சூழ்ந்த அக்காலங்களில், தங்களை ஒடுக்கி தான் பனை சார்ந்த தொழிலாளர்களால் இயங்க முடிந்தது. வீட்டில் செய்யப்படும் கடவங்களை பிறருக்கு கொடுத்துவிடுவதே பொருளீட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும்போது, இவ்வகை முயற்சிகள் தேவையற்றது என அவர்கள் எண்ணியிருக்கலாம். அக்காலங்களில் ஓலை கடவத்திற்குள், குழந்தையினை படுக்க வைப்பது என்பது நினைத்துப்பார்க்கவியலா ஒன்று என்பது தான் உண்மை. கோழியை பிடித்து கடவத்திற்குள் கமத்திப் போடுவது தான் அன்றைய வழக்கம். நான் ஓலைப்பெட்டியினை அறிமுகப்படுத்தும்போதே, குடும்பத்தினருக்குள் ஒருவித விலக்கம் தென்பட்டது.  குழந்தையை யாராவது கடவத்திற்குள் போடுவார்களா என்ன? என்று தான் சிலர் கேட்டார்கள். வேறு சிலர், ஒரு தொட்டில் செய்ய பணமில்லையா என்று ஏளனமாக சிரித்தனர்.  இத்தனைக்கும் அனைவரும் பனங்காட்டிற்குள் புரண்டு வளர்ந்தவர்கள் தான்.  பனையோலை தொட்டிலை நான் வழங்கிய பின்னும், குழந்தைக்கான வேறு தொட்டில்  குடும்பத்தினரால் வாங்கப்பட்டது. பொடியன் பனை ஓலை தொட்டிலில் படுக்க விரும்பவில்லை என வியக்கியானமும் பின்னர் சொல்லப்பட்டது. ஆக, பிடிவாதத்துடன் பயலை பிடித்து கடவத்திற்குள் கிடத்தி இது தான் உலகத்திலேயே முதல் பனை ஓலைத் தொட்டில் என பிடிவாதமாக ஒரு புது பொருளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

சமையலும் கற்று மற

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான உணவு தயாரிப்பு,  சர்வதேச சமையல் கற்ற எனது ஜெகன் மச்சான் முன்னின்று நடத்த, கரண்டியை பிடித்து நான் உதவி செய்தேன். போதகர்கள் வந்து ஜெபிக்க அன்று மதிய விருந்து வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரி மாவட்ட கிறிஸ்தவ சடங்குகள் சற்று வித்தியாசமானவை. ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு முன்னால் ஒரு வாழை இலையை பரப்பி, அதில், உணவு, பணம், பழங்கள், மற்றும் திருமறை, பாட்டு புத்தகம், பிற புத்தகங்கள், தங்க சங்கிலி, தங்க  வளையல் என சில பொருட்களை போட்டுவிடுவார்கள். குழந்தை அவைகளில் எதனை முதலில் எடுக்கிறதோ அவ்விதமாகவே குழந்தை வளரும் என்பது பெரியவர்களின் முடிவு. எல்லா குழந்தைகளும் இவ்வித முடிவுகளை பொய்யாக்கிக்கொண்டே இருக்கின்றன.

முதல் பிறந்தநாள் சடங்கு

அன்று மாலையில் தானே நான் சென்னை செல்வதற்கான பேருந்து பயணச்சீட்டினை எடுப்பதற்காக மார்த்தாண்டம் சென்றேன். கருங்கல் பகுதியிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் வழியில் நட்டாலம் என்றொரு சிறிய ஊர் இருக்கிறது. நட்டாலம் என்பது, குமரி மாவட்டத்திலுள்ள மிகவும் வளமான ஒரு பகுதி. வற்றாத குளம் ஒன்று உண்டு. வயல் நிறைந்த பகுதிகளில் இன்று வாழை மற்றும் கிழங்குகளை பயிரிடுகிறார்கள். இவ்வூரின் மேடான பகுதிகளில்  இன்றும் ஆங்காங்கே பனை மரங்கள் நின்றுகொண்டிருப்பது பனை இம்மண்ணின் மக்களுடன் உறவாடிய மரம் என்பதனை கோடிட்டு காட்டுகிறது. நட்டாலத்தில் தான் குமரி மாவட்டத்தின் முதல் மறை சாட்சியான தேவசகாயம் பிள்ளை அவர்கள் பிறந்தார்கள். இன்று மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் நினைவாக ஒரு இல்லத்தினை அவர் வாழ்ந்த இடத்தில் கத்தோலிக்கத் திருச்சபை கட்டியெழுப்பியிருக்கிறது. அதன் அருகில் ஒரு பனை மரம் நிற்பதைப் பார்த்து அதனை படம் பிடித்தேன்.

புதிதாக கட்டப்பட்ட தேவசகாயம் பிள்ளை நினைவு இல்லம்

நீலகண்டன் பிள்ளை என்பவர் நாயர் குடும்பத்தில் பிறந்தவர். கேப்டன் யுஸ்டேசியஸ்  டி லெனாய் (Eustachius De Lannoy) மூலமாக கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து, கிறிஸ்தவத்தினை தழுவியபோது லாசரஸ் என பெயர் மாற்றிக்கொண்டவர். திருவிதாங்கூர் பகுதி மக்களால் தேவசகாயம் பிள்ளை என்று இன்று நினைவுகூறப்படுபவர்.  திருவாங்கூர் சமஸ்தான அரசர்களால் துன்புறுத்தப்பட்டு ஆரல்வாய் மொழி என்ற பகுதியிலுள்ள பனை சூழ்ந்த காற்றாடி மலைப் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவரது 400 ஆம் அகவை தினம் வெகு விமரிசையாக கோட்டாறு மறை மாவட்டத்தால் கொண்டாடப்பட்டது.  அன்று அவர் போப் பெனடிக்ட் அவர்களால் “ஆசீர்வதிக்கப்பட்டவர்” (Beatified) என சிறப்பு நிலை பெற்றார். 2020ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் அவர்கள் தேவசகாயம்பிள்ளை அவர்கள் மரித்த பின்பு அவர் மூலமாக நிகழ்ந்த ஒரு அற்புதத்தினை ஏற்றுக்கொண்டார். இவையனைத்தும் தேவசகாயம் பிள்ளை அவர்கள் புனிதர் பட்டம் பெறும் தகுதியுடையவராக அவரை மாற்றுகிறது.

தேவசகாயம் பிள்ளை

கத்தோலிக்க திருச்சபையின் சில வழக்கங்கள் மிகவும் தொன்மையானவைகள். அவைகளில் கால்களைக் கழுவுதல் என்து இயேசுவிடம் சென்று சேரும் அளவிற்கு அது நீண்ட மரபைக் கொண்டது ஆகும். முற்காலங்களில் போப் அவர்கள் தனக்கு கீழ் இருக்கும் உயர் மட்ட தலைமை  குருக்களில் 12 நபர்களை தெரிந்துகொண்டு அவர்களது கால்களை கழுவுவது வழக்கம். இவ்வித வழக்கம் வெறும் சடங்குகளின் தொகையாக மாறிவிட்டது என கருதியபடியால் போப் பிரான்சிஸ் அவர்கள் புதுமையான முறையில் இச்சடங்கினை முன்னெடுக்கத் துவங்கினார்கள். சிறைச்சாலையில் உள்ளவர்களின் கால்களை கழுவும்படியாக தெரிவு செய்தல், அகதிகள், மாற்று சமயத்தினர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என அவரது தெரிவுகள் கத்தோலிக்க திருச்சபை பார்த்திராத அளவிற்கு புதுமையானதும் புனிதமானதும் கூட.   

கால்களைக் கழுவுதல் என்ற சடங்கின் மீது எனக்குள்ள தனி ஈடுபாடு நிமித்தமாக  நானும் இச்சடங்கினை கடைபிடிக்க விரும்பினேன். திருச்சபைக்குள் இதனை கடைபிடிக்க இயலாது ஆகையால், திருச்சபைக்கு வெளியே இதனை நிகழ்த்த ஆசைப்பட்டேன். எனது எண்ணங்கள் எல்லாம் பனை ஏறுகிறவர்களைக் கண்டு அவர்கள் கால்களைக் கழுவி, அவர்களுக்கு பணிவிடை செய்யும் இயேசுவின் போதனையின் சிறப்பியல்புகளை காண்பிக்கவும், கூடவே எனது அன்பின் வெளிப்பாடாக, புத்தாடைகள் எடுத்து கொடுக்கவும், நான் விரும்பினேன். என்னால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. பிற இடங்களில் மக்கள் தங்கள் கால்களை என்னிடம் காண்பிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கால்களை காண்பிக்க மெறுப்பதற்கான காரணங்கள் பல உண்டு. சில வேளைகளில், கால்களைக் கழுவுபவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை, சில நேரங்களில் இவ்வித சடங்குகளின் பொருளின்மை என வரிசைபடுத்திக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது கால்களில் இருக்கும் காயங்களை அவர்கள் வெளியே காட்ட விழைவதில்லை என்பதே உண்மை. தங்கள் வாழ்வு இவ்விதமொரு சிதைவுற்ற ஒன்றுடன் இணைக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.  எப்போதும் அவர்கள், மக்களது வாழ்வை சுவைகூட்டுபவர்கள் என்ற பெருமிதம் கொண்டிருப்பதினாலேயே தங்கள் கால்களை மறைக்கிறார்கள் என நான் பொருள் கொள்ளுவேன். அவர்கள் நிலையில் இவ்விதமான நிலைப்பாடு சரியென்றாலும், அவர்களின் குரலாக ஒலிக்கின்ற நமக்கு அவர்களது காயங்கள் தாம் முக்கிய குறியீடாக, அவர்களின் தியாக சின்னமாக வெளிப்படுத்தப்படவேண்டும் என்கிற உறுதி வேண்டும்.

பனையேறியின் கால்கள்

பனையேறிகளுடைய கால்கள், காயங்களால் நிறைந்தவை. அவைகளை அவன் ஒரு வீரனுக்குரிய பெருமையென கருதியிருந்தாலும், இன்னொருவரிடம் காண்பிக்க அவன் விழைய மாட்டான். தழும்புகளைக் காட்டி தனது தியாகத்தை நிலைநிறுத்தும் செயலை ஒரு பனையேறி எப்போதும் செய்ய துணிவதில்லை. அது அவனது வீரத்திற்கும் அவனது உழைப்பிற்கும் இழைக்கப்படும் அநீதி என்பதாகவே அவன் எடுத்துக்கொள்ளுவான். அவனது மவுனத்தை இயலாமை என சிலர் புரிந்து கொண்டு, பனையேறிகளுக்கான குரலை வெளியில் கேட்கக்கூடாதபடி செய்துவிட்டனர்.

காய்த்துப்போயிருக்கும் பனையேறியின் கைகள்

பனையேறியின் கால்களில் இருக்கும் காயங்களுக்கு சற்றும் குறையாமல் அவர் கைகளிலும் உடலிலும் காயங்களும் தழும்புகளும் இருக்கும். காயங்கள் அவர்கள் வாழ்வில் அனுதின அனுபவம் தான். அந்த காயங்களை அவர்கள் பெரிதுபடுத்தியிருந்தால், அவர்களின் துயரம் இன்று உலக அளவில் சரியான அளவில் முன்வைக்கப்பட்டிருக்கும். பனையேறிகளின் வியர்வை பேசுபொருளாயிருக்கும் அளவிற்கு அவர்கள் கால்கள் பேசுபொருளாயிருந்தது இல்லை. அவர்கள் கால்களும் அவர்தம் உடலில் இருக்கும் காயங்களுமே அவர்கள் சூழியலின் பங்காளர்கள் என உரத்துக் கூறும் அடையாளங்களாகும்.

கால்களைக் கழுவி முத்தமிடும் போப்

என்னைப்பொறுத்த வரையில் போப் அவர்கள் பனையேறிகளின் கால்களை கழுவவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையினை நான் போப் அவர்கள் மீது திணிக்க இயாலாது என்பதால் தான் முதன் முறையாக அவ்வித முன்னெடுப்பை நான் மேற்கொண்டேன்.

திருமறையில் இயேசு கால்களைக் கழுவும் நிகழ்ச்சி மிக உக்கிரமானது. இயேசு வாழ்ந்த காலத்தில் கால்களைக் கழுவும் பணி அடிமைகளுக்குரியது. குரு என்றும், ரபி என்றும், கடவுளின் மகன், இஸ்ரவேலை மீட்கும் மேசியா என்றும் உயர் பட்டங்களை தாங்கி நின்ற இயேசு தமது சீடர்களின் கால்களைக் கழுவுதல் சீடர்களுக்குள்ளேயே துணுக்குறலை ஏற்படுத்தியது. பேதுரு என்ற சீடன் அவரைப் பார்த்து நீர் எனது கால்களைக் கழுவக்கூடாது என விலகி நிற்க இயேசு அவனிடம் உனது கால்களை நான் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்கு பங்குமில்லை பாகமுமில்லை என்கிறார்.

எனது நீண்ட நாள் கனவு என்பது பனையேறிகள் கால்கள் கழுவப்படவேண்டும் என்பது தான். கத்தோலிக்கத் திருச்சபை, இன்று இந்தியாவில், இருக்கும் பனையேறிகளின் கால்களைக் கழுவ முற்படுவார்கள் என்று சொன்னால், அதுவே நாளை வாத்திகன் பனையேறிகளின் கால்களைக் உற்று நோக்க வழிவகை செய்யும். உடைந்து உருக்குலைந்திருக்கும் பனையேறிகளின் கால்கள் மிகப்பெரும் ஆன்மீக பிண்ணணி கொண்டவை. அழகிய கால்கள் எப்படி கடுமையான உழைப்பின் பயனாய் வளைந்துவிடுகின்றன எனவும், காய்ப்பு பிடிக்கிறது எனவும், பாளம் பாளமாக கீறிப்போய் கிடக்கிறது எனவும் எந்த இலக்கியமும் பதிவுசெய்யாத நமக்கடுத்த வாழ்வனுபவம். பனையேறிகளின் உருக்குலைந்த கால்களுக்காக எந்த திருச்சபையிலும் மன்றாட்டுகள் ஏறெடுக்கப்படவில்லை என்பதுவே கசப்பான உண்மை.

சிறிய கால்களே அழகுமிக்கவைகள் என்னும் சீன பாரம்பரியத்தினை விரிவாக பலர் பதிவு செய்திருக்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டு முதல் சமூகத்தில் மிக உயரிய இடத்திலிருந்த சீமாட்டிகளுடைய கால்களை ஆறு வயது முதல் கட்டி, காலின் பயனே அற்றுப்போகப்பண்ணும் ஒரு முறைமையினைக் குறித்து இருபதாம் நூற்றாண்டில் டங்கன் என்கிற கிறிஸ்தவ மிஷனெறி குறிப்பிடுகிறார். பெண்களை எப்படி அழகு என்ற போர்வையில் சமூகம் அடக்கி ஆள்கிறது எனவும், பெண்கள் இதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள் விரிவாகவும் ஆராயப்பட்டிருக்கின்றன. ஆனால் பனையேறிகள், பனை மரத்தினை பற்றி பிடித்து ஏறும்பொது அதிலிருக்கும் சிலாம்புகள், பனையின் புறப்பகுதியில் இருக்கும் சில சொரசொரப்பான பகுதிகள், கால்களில் ஏற்படுத்தும் காயங்களையும், பற்றிபிடிக்கும் விதமாக கால்கள் வளைந்து உருக்குலைவதும், நமது சமூகத்தில் காணப்படும் பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. அசிங்கமான இத்தொழிலை விட்டு வெளியே வருவதுவே தீர்வு என முடிவெடுத்து விட்டாலும், இன்றும் தங்கள் கால்கள் பனையை பற்றியிருக்க, தங்கள் கைகள் பனை மரத்தை அணைத்திருக்க, நமது வாழ்வில் பனையேறிகள் இன்றும் சுவைகூட்டியபடியே இருக்கின்றார்கள்.

கால்களைக் கட்டிவிடுவதால் ஏற்படும் பாதிப்பு

எவரொருவர், பனையேறியின் கால்களையும் கைகளையும் அணுகி பார்த்தாலும், அத்தாய்மையின் கரத்தை பார்த்து அவரது உள்ளம் விம்முவது உறுதி. பனையேறி தனது உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பெருமளவில் அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் ஒரு பண்பட்ட சமூகம், அவன் கடந்து வந்த பாதைகளில் இருக்கும் இடர்களை நீக்கி, அவன் வழிகளை செவ்வை செய்வது சிறந்த சேவையாக இருக்க முடியும்.

அவ்வகையில், போப் அவர்கள், பனையேறிகளின் கால்களைக் கழுவும் ஒரு தினம் அமையுமா என நான் எண்ணிப்பார்க்கிறேன். போப் அவர்கள் இதுவரை பார்த்த கால்கள், காலணிகள் இட்டு நடமாடிய மென் கால்கள் மட்டுமே. வெறுங்காலுடன், பனையேறும் பனையேறிகளின் கால்களும் கரங்களும் அவருக்கு இயேசுவின் சிலுவைக் காட்சிகளை மீட்டெழுப்பும். இவ்விதம்  எற்படுத்தும் ஓர் நிகழ்வு கூட, உலகமெங்கும் அதிர்வலைகளை எழுப்ப வல்லவை.

பனையேரிகள் என்றவுடனேயே, நாம் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே அவ்விதம் எண்ணிக்கொள்ளுகிறோம், ஆனால், இந்தியா முழுக்க பனை ஏறிக்கொண்டிருக்கும் சமூகங்கள் பல இருக்கின்றன. பழங்குடியினர், நாடோடிகள் உட்பட இந்திய சமூகத்தில் பலரும் பனையேரிக்கொண்டிருக்கின்றனர். இந்தியா, இலங்கை, பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 12 பனையேறிகளை அழைத்து , கால்களைக் கழுவும் சடங்கு ஒன்றினை நிகழ்த்தினால், அது எப்படியிருக்கும்? ஆம், அது தான், 21ஆம் நூற்றாண்டில் திருச்சபையின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஒரு திருப்புமுனை கணமாக இருக்கும். திருச்சபை ஏன் பனை சார்ந்த மக்களுக்காக தங்களை அர்பணிக்கவேண்டும் என்பதனை போப் அவர்களின் இச்செயல் உறுதிப்படுத்தும். 

பனையேறிகளின் காயங்கள் நமக்கு திருமறையின் ஆழ்ந்த படிமங்களை வெளிப்படுத்துவதாக நான் உணருகிறேன். இயேசுவின் சிலுவைக் காயங்களுக்கு ஒத்தவைகள் அவைகள். நமது வாழ்வு சுவைப்பட அவர்கள் தங்கள் உடலை வருத்த ஒப்புக்கொடுக்கின்றனர். அவர்கள் காயங்கள் பின்னே இருக்கும் சோக கதைகள் இதுவரை தொகுக்கப்படாத காப்பிய தருணங்களைக் கொண்டது. பனையேறிகளின் காயங்கள் வெறுமனே காயங்கள் அல்ல, அவைகள் நமது வாழ்வை செறிவூட்ட பனையேறிகள் ஏற்றுக்கொண்ட விழுப்புண்கள். போர்க்களத்தில் ஏற்படும் புண்களை விட இவ்வித வடுக்கள் தான் இன்று நமது வாழ்வை உயர்த்திப்பிடிக்கும் அழகிய தழும்புகள். இத்தழும்புகள் குறித்த பெருமையோ சிறுமையோ எதுவும் திருச்சபையிலோ பொதுவெளிகளிலோ பேசப்படவில்லை. அந்த மவுனம் கலைக்கப்படவேண்டும்.

பனையேறிகள் வாழ்வில் இன்னும் பல சோகங்கள் அரங்கேறி வருவது பொதுவெளிகளில் பேசப்படுவது இல்லை. கல்வி அறிவு பனையேறிகளுக்கு இல்லாததாலும், அவர்களின் உடை அமைப்புகள் அவர்களை எளியவர்கள் என வெளிப்படுத்துவதாலும்,  காவல்துறையின் அராஜகம் பனையேறிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதும் வரலாறு. கள் இறக்கினால் கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையினை ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டனர். காவல்துறை, போலி மது விற்கிறார்கள் என போலியாக வழக்கு பதிவு செய்து, பனையேறிகளை கைது செய்வதும், அவர்கள் பயன்படுத்தும் மண் கலயங்களை உடைத்துப்போடுவது, பனை மரங்களில் பிற பனையேறிகளை ஏறவைத்து பதனீர் சொட்டிக்கொண்டிருக்கும் பாளைகளை தறித்துப்போடுவது, சில வேளைகளில் பனையேறிகளை அடித்து துன்புறுத்துவது ஏன் கை கால்கள் முடமாகும் அளவிற்கு அவர்களை குற்றுயிராக்குவது என ஈனச் செயல்கள் செய்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய பூர்வகுடிகளிடம் மன்னிப்பு கோரும் தருணத்தில்

இன்று உலகில் எங்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் பொதுவெளியில் நாம் கொதித்தெழுகிறோம். ஆனால் காலம் காலமாக அடக்குமுறைக்குள் வாழ்ந்து தான் கற்ற தொழிலினை இவைகளினூடே எடுத்துச் செல்லும் பனையேறி எவ்வித சலனமுமின்றி தனது பணியை தொடர்ந்துகொண்டிருப்பது நம்மை பதை பதைக்க வைப்பது. இவ்வித சூழலில் பனையேறிகளிடம் வாங்கிய லஞ்சப் பணத்தினை காவல்துறை நாலத்தனையாக திருப்பிக் கொடுக்கவேண்டும். பனையேறிகள் வாழ்வில் காவல்துறை செய்த அனைத்து பிழையீடுகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். ஆளும் அரசு, பனையேறிகளுக்கு  இதுமட்டும் செய்யத்தவறியவைகளுக்கும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கும் பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும். ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு நிகழ்ந்த துயரத்தை விஞ்சும் கதைகள் இங்கே உண்டு, ஆனால் அவைகளைப் பேசும் உள்ளங்கள் இங்கு இல்லாமல் போய்விட்டது தான் சோகம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653


%d bloggers like this: