பனைமுறைக் காலம் 7


புனித கால்கள்

மறுநாள் (09.10.2020) ஜெனோபின் ஷானுடைய பிறந்த நாள். கடந்த வருடம் குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் நான் குமரி மாவட்டம் வரும் வாய்ப்பு கிட்டியது.  என்னோடு ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயின்ற ஆந்திராவைச் சேர்ந்த அருட்திரு ஜேம்ஸ் விக்டர் எனது பணியால் ஈர்க்கப்பட்டு என்னை தென்னிந்திய திருச்சபையின் போதகர் கூடுகைக்காக அழைத்திருந்தார். தென்னிந்திய திருச்சபையினைச் சார்ந்த அனைத்து பேராயங்களிலுமிருந்து சுமார் 600 போதகர்கள் கன்னையாகுமரியில் குழுமியிருந்த இந்த பிரம்மாண்ட நிகழ்வில் நான் அழைக்கப்பட்டிருந்தது பெரும் பேறு. அவர்களோடு திருச்சபையில் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பேராயர்கள் என பெரும் நிகழ்வாக அது அமைந்திருந்தது. அடித்தள பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு போதகர் தனது அனுபவங்களைப் பகிர வேண்டிய நிலையில் பனை சார்ந்து நான் எடுக்கும் முயற்சிகளைக் குறித்து விளக்க எனக்கு ஒரு அமர்வு கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன் என்பதை உறுதி செய்தபின்பு, வந்திருக்கும் போதகர்கள் அனைவருக்கும் பனை விதைகளை அளிக்கலாம் என முடிவு செய்தேன். மும்பையிலிருந்து விமானத்தில் பனை விதைகளை எடுத்துவர இயலாது, ஆகவே, பால்மா மக்கள் இயக்கத்திடம் விதைகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் பனை விதைகளைத் தருகிறோம் என்றார்கள். ஆனால் எனக்கு மற்றொரு யோசனை தொன்றியது.

பனை மரத்தைப் பற்றியேறும் பனையேறி

தூத்துக்குடி பேராயத்தைச் போதகர் ஜான் சாமுவேல் எனக்கடுத்த நிலையில்  பனை சார்ந்து பல முன்னெடுப்புகள் செய்யும் ஒரு தனித்துவமான  போதகர். பனையேறிகளை கனம் பண்ணும் நிகழ்வு என்று அவர்களுக்கு சால்வை அணியும் நிகழ்வை அவர் நடத்தினார். பனை ஓலையில் பொருட்களைச் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்தபடியிருந்தார். பனை விதைகளை பனை ஓலையில் பொதிந்து கொடுக்க இயலுமா என அவரிடம் கேட்டேன். கண்டிப்பாக செய்கிறேன் அய்யா என்றார்கள். அதற்கான பொருட் செலவையும் அவர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

மும்பையில் நான் பனை விதைகளை வழங்குகையில் கடைபிடிக்கும் வழிமுறை என்பது வித்தியாசமானது. ஒரு அட்டைபெட்டியின் வெளிப்புறம்  முழுக்க, பனை சார்ந்த தகவல்களை நிரப்பி அச்சிட்டு, அதனுள் பனை குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு சிறு பிரதி ஒன்றையும் இணைத்தே மக்களுக்கு கொடுப்போம். அது மும்பை போன்ற பெருநகரங்களில் பனை குறித்த புரிதலற்றவர்களுக்கு ஒரு அறிமுகத்தை அளிப்பதாக இருக்கும். ஆனால், நமது பணம், பெருமளவில் பனை சாராத மக்களிடம் சென்று சேரும். இவ்வித அட்டைப்பெட்டிகள் செய்வதனால் எவ்வகையிலும் பனை சார்ந்த மக்கள் பயன் பெறப்போவதில்லை. ஆகவே தமிழக சூழலில், பனை விதைகளை பனை ஓலைக்குள் பொதிந்து கொடுத்தால், அதன் மூலமாக அனேக ஓலைக் கலைஞர் பயன் பெறுவார்கள் என எண்ணினேன். சில்லு கருப்பட்டிக்கு எப்படி பனை ஓலைகளைப் பொதிவார்களோ அதுபோல பனை விதைகளை பொதிந்துதர அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ மாமன்ற பொதுசெயலாளர் அறிவர். ஆசீர் அவர்கள் நிகழ்ச்சியின் இறுதி நாளில் வந்திருந்தார். பனை விதைகள் சில்லுகருப்பட்டிபோல் பொதிந்து விதை பரவலுக்காக எடுத்துவரப்பட்டதை கண்டு மகிழ்ந்துபோனார். அன்றைய நிகழ்ச்சியில் அவர் அதனைக் காட்டி பேசினார். இந்திய திருச்சபை வரலாற்றில் பனை எங்குமே முதன்மைப்படுத்தப்பட்டது இல்லை.  ஆசீர் அவர்கள் பனை சார்ந்த எனது பயணத்தினையும் போதகர்கள் ஏன் பனை சார்ந்த முன்னெடுப்புகளையும் தங்கள் ஊழியத்தினூடாக செய்வது அவசியம் என்பதனையும் அன்று குறிப்பிட்டார். நெய்யூர் மருத்துவமனையைச் சுற்றிலும் இருந்த  பனை மரங்கள் இன்று மாயமாகிப்போனதும் அதனைச் சார்ந்து வாழ்ந்த பல்லுயிர்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். வேலூரில் உள்ள கிறிஸ்தவ நிலங்களைச் சுற்றி பனை வேலியாக அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து தான் பரவசமடைந்தது என அவர் பனை சார்ந்த முக்கியத்துவத்தை விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியில், அனைவரிடமும் ஆளுக்கொரு பனை விதைகளை எடுத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சி நடந்த கன்னியாகுமரி சி எஸ் ஐ (C S I) தேவாலயத்தின் வாசல்களின் அருகில் பனை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் எனது நண்பனும் புகைப்பட கலைஞருமான ரங்கிஷ் அவர்களைச் சந்தித்தேன். “ஓய், காலைல டியோசிசன் ஆஃபீஸ் பக்கம் போயிருந்தேன்” என ஒரு சம்பவத்தை விளக்கினார். பனை ஓலை பெட்டியை வைத்திருந்த ஒரு பெண்மணி, இன்னொருவரிடம்  மிகவும்  வருத்தப்பட்டு பேசிகோண்டிருந்திருக்கிறார்கள். “ஆனாலும் இப்படி ஏமாத்தப்பிடாது, நாலு பெட்டி எடுத்துட்டு வந்தேன், வீட்டுல வந்து பார்த்தா சில்லு கருப்பட்டிய காணேல, பனங்கொட்டைய உள்ள வெச்சி ஏமாத்தியிருக்கினும்”. என்றவர், “அப்பவே நினைத்தேன், காட்சன் ஊருக்குள் தான் நடமாடுகிறான்” என்றபடி என்னைப் பார்த்தார். எனக்கு சிரிப்பு தாளவில்லை…, பனை விதைகள் தான் கொடுக்கிறோம் என்ற அறிவிப்பை கேட்காத எவரோ ஒருவர், சில்லு கருப்பட்டி இலவசமாக கிடைக்கிறது என அள்ளி எடுத்து சென்று ஏமாந்திருக்கிறார்.   

குமரிப் பேராயர் A R செல்லையா அவர்களுக்கு பனை விதை வழங்குகிறேன்.

ஜெனோஃபின் பிறந்த போது மாமனாராக நான் அவனுக்கு ஏதாவது பரிசளிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். கிலுகிலுப்பைகள் வழங்கலாம் ஆனால் அது எவ்வகையிலும் எனது பனை பயணத்தில் பயலை உள்ளிழுப்பதாகாது. அனேக குழந்தைகளுக்கு நான் பனை ஓலையில் தடுக்குகள் செய்து கொடுத்திருக்கிறேன். ஆகவே, தனித்துவமான ஒரு பனையோலை பொருளை அவனுக்கு பரிசளிக்க விரும்பினேன். எனது இரு சக்கர வாகனத்தில் இருக்கைகளை அமைத்துத் தந்த மொட்டைவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களைத் தொடர்புகொண்டு பனை ஓலையில் ஒரு அழகிய தொட்டில் ஒன்றைச் செய்து கொடுப்பீர்களா எனக் கேட்டேன். மகிழ்ச்சியோடு சரியென்றார்கள். ஆகவே, அதனையும் எடுத்துச் சென்று பிள்ளை காணும் நிகழ்ச்சிக்குச் சென்றேன். அங்கே இருந்து நான் குழந்தையுடனும் உறவினர்களுடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தோம். அந்த புகைப்படம் “உலகிலேயே முதன் முறையாக ஓலை தொட்டிலை அறிமுகப்படுத்திய குடும்பம்” என பதிவாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் முகநூலில் அதனை பகிர்ந்திருந்தார்கள்.

முதல் பனையோலைத் தொட்டில்

இந்த ஓலைத்தொட்டிலை நான் பதிவுசெய்தபோது ஒரு நண்பர் எரிச்சல் மேலிடும் தொனியில் “நாங்களும் சிறு வயதில் இதனைப் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார். அதற்கு காரணம், “நீ தான் அனைத்தையும் கண்டடைந்திருக்கிறாய் என இறுமாப்பு கொள்ளாதே, நாங்கள் பயன்படுத்தி தூக்கி வீசியதை தான் இன்று நீ  உனக்கானதாக முன்வைக்கிறாய் என்ற எள்ளல் நிறைந்த பதிவு அது”. உண்மை என்னவென்றால், பனையோலைத் தொட்டில் என நான் அறிமுகப்படுத்தியிருப்பது ஓலைக்கடவத்தின் சற்றே மாறுபட்ட வடிவம் தான். அதற்கு மிகப்பெரிய அறிவோ, திறமையோ தேவையிலை.  கடவத்திற்கு நான்கு புறமும் சரி சமமாக ஓலைகளை அடி வைத்து பின்ன வேண்டும். பனை ஓலைத் தொட்டிலுக்கு, ஒருபுறம் நீளமாகவும் மற்றொருபுறம் குறுகலாகவும் இருக்க வேண்டும். திருநெல்வேலி பகுதிகளில் ஆட்டுபெட்டி செய்பவர்கள், அல்லது தக்காளி கூடை செய்பவர்களுக்கு இவ்வித செவ்வக அமைப்பு அறிமுகமானதுதான், ஆனால் குமரி மாவட்டத்தில், இவ்வித பின்னல் முறைகள் கிடையாது. மாத்திரம் அல்ல, எங்குமே குழந்தைகளை இப்படி ஓலைப்பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்ட வரலாறு கிடையாது.  எங்கள் ஊரில் குழந்தைகள்  அங்காங்கே ஊர்ந்து சென்றுவிடாதிருக்க, கடவத்திற்குள்  கடல் மணலை நிரப்பி, உள்ளே விட்டுவிடுவார்கள். கடல் மண் இருப்பதால் கடவம் எச்சூழலிலும் மறிந்துவிழாது. குழந்தைகளும் அந்த மென் மணலில் அமர்ந்துகொண்டு வெளியே நடப்பவைகளை பார்த்தபடி விளையாடும்.

ஆபிரகாமிய வம்சத்தாராகிய எபிரேயார்கள் அடிமைகளாக வாழ்ந்த எகிப்தில், பிறக்கும் ஒவ்வொரு எபிரேய குழந்தையையும்  நைல் நதியில் வீசிவிடவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்துவந்த மருத்துவச்சிகளுக்கு கூட குழந்தைகளைக் கொல்லும் உரிமைக் கொடுக்கப்பட்டிருந்தது. அச்சூழலில் தான், லேவி குடும்பத்தில், யோகெபேத் கருவுற்று ஒரு குழந்தையினை பெற்றபோது அந்த குழந்தையினை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். அதற்கு அப்புறம் அவள் அந்த குழந்தையை தனது வீட்டில் ஒழித்து வைக்க கூடாமல், அழகான நாணற்பெட்டி ஒன்றைச் செய்து, அதற்கு பிசின் கீல் போன்றவைகளை பூசி, நைல் நதியில் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு என்ன சம்பவிக்கபோகிறது என்பதை கண்காணிக்கும்படியாக குழந்தையின் சகோதரி அதற்கு காவல் இருந்தாள். அப்போது பார்வோனின் மகள் அப்பகுதியில் குளிக்க வந்து  அழகான அந்த குழந்தையினை தானே வளர்க்க முடிவு செய்தாள். எபிரேய மக்களுடைய மிகப்பெரிய தலைவனான மோசேயுடைய வாழ்வின் துவக்கம் அப்படி ஒரு எளிய நாணற்பெட்டியில் துவங்கியது ஆச்சரியமானது.  நாணற்பெட்டிக்கு இணையாக பனையோலைப் பெட்டி எழுந்துவரும் காலம் ஒன்று வெகு விரைவில் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

பார்வோனின் மகள் மோசேயை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்போது

திருமறையில் நாணற்பெட்டி செய்து அதில் கிடத்திய குழந்தை மிகப்பெரியவனாகியது வரலாறென்றாலும், இதுவரை பனை ஓலையில் எவருமே தொட்டில்கள் செய்ததாக நான் கேள்விப்படவில்லை. ஏன் அப்படி? குழந்தைகளை தூளியில் போட்டு தூங்கவைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. இது கிராமபுற மக்களுக்கு மிக எளிமையான வழி. வசதியுள்ளவர்கள் மர தொட்டிலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏன் பனை நார் இட்ட தொட்டில் கூட நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓலை பெட்டியில் குழந்தைகளைக் கிடத்துவது என்பது எவரும் கைக்கொண்டதாக நான் கேள்விப்படவில்லை.

பனை ஓலைத் தடுக்குகளில் குழந்தைகளைக் கிடத்துவதே வாடிக்கையானபடியால், மிகப்பெரிய அளவில்  செலவாகும் ஓலைகள் குறித்த கரிசனை இருந்திருக்கலாம். குறிப்பாக, வறுமை சூழ்ந்த அக்காலங்களில், தங்களை ஒடுக்கி தான் பனை சார்ந்த தொழிலாளர்களால் இயங்க முடிந்தது. வீட்டில் செய்யப்படும் கடவங்களை பிறருக்கு கொடுத்துவிடுவதே பொருளீட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும்போது, இவ்வகை முயற்சிகள் தேவையற்றது என அவர்கள் எண்ணியிருக்கலாம். அக்காலங்களில் ஓலை கடவத்திற்குள், குழந்தையினை படுக்க வைப்பது என்பது நினைத்துப்பார்க்கவியலா ஒன்று என்பது தான் உண்மை. கோழியை பிடித்து கடவத்திற்குள் கமத்திப் போடுவது தான் அன்றைய வழக்கம். நான் ஓலைப்பெட்டியினை அறிமுகப்படுத்தும்போதே, குடும்பத்தினருக்குள் ஒருவித விலக்கம் தென்பட்டது.  குழந்தையை யாராவது கடவத்திற்குள் போடுவார்களா என்ன? என்று தான் சிலர் கேட்டார்கள். வேறு சிலர், ஒரு தொட்டில் செய்ய பணமில்லையா என்று ஏளனமாக சிரித்தனர்.  இத்தனைக்கும் அனைவரும் பனங்காட்டிற்குள் புரண்டு வளர்ந்தவர்கள் தான்.  பனையோலை தொட்டிலை நான் வழங்கிய பின்னும், குழந்தைக்கான வேறு தொட்டில்  குடும்பத்தினரால் வாங்கப்பட்டது. பொடியன் பனை ஓலை தொட்டிலில் படுக்க விரும்பவில்லை என வியக்கியானமும் பின்னர் சொல்லப்பட்டது. ஆக, பிடிவாதத்துடன் பயலை பிடித்து கடவத்திற்குள் கிடத்தி இது தான் உலகத்திலேயே முதல் பனை ஓலைத் தொட்டில் என பிடிவாதமாக ஒரு புது பொருளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

சமையலும் கற்று மற

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான உணவு தயாரிப்பு,  சர்வதேச சமையல் கற்ற எனது ஜெகன் மச்சான் முன்னின்று நடத்த, கரண்டியை பிடித்து நான் உதவி செய்தேன். போதகர்கள் வந்து ஜெபிக்க அன்று மதிய விருந்து வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரி மாவட்ட கிறிஸ்தவ சடங்குகள் சற்று வித்தியாசமானவை. ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு முன்னால் ஒரு வாழை இலையை பரப்பி, அதில், உணவு, பணம், பழங்கள், மற்றும் திருமறை, பாட்டு புத்தகம், பிற புத்தகங்கள், தங்க சங்கிலி, தங்க  வளையல் என சில பொருட்களை போட்டுவிடுவார்கள். குழந்தை அவைகளில் எதனை முதலில் எடுக்கிறதோ அவ்விதமாகவே குழந்தை வளரும் என்பது பெரியவர்களின் முடிவு. எல்லா குழந்தைகளும் இவ்வித முடிவுகளை பொய்யாக்கிக்கொண்டே இருக்கின்றன.

முதல் பிறந்தநாள் சடங்கு

அன்று மாலையில் தானே நான் சென்னை செல்வதற்கான பேருந்து பயணச்சீட்டினை எடுப்பதற்காக மார்த்தாண்டம் சென்றேன். கருங்கல் பகுதியிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் வழியில் நட்டாலம் என்றொரு சிறிய ஊர் இருக்கிறது. நட்டாலம் என்பது, குமரி மாவட்டத்திலுள்ள மிகவும் வளமான ஒரு பகுதி. வற்றாத குளம் ஒன்று உண்டு. வயல் நிறைந்த பகுதிகளில் இன்று வாழை மற்றும் கிழங்குகளை பயிரிடுகிறார்கள். இவ்வூரின் மேடான பகுதிகளில்  இன்றும் ஆங்காங்கே பனை மரங்கள் நின்றுகொண்டிருப்பது பனை இம்மண்ணின் மக்களுடன் உறவாடிய மரம் என்பதனை கோடிட்டு காட்டுகிறது. நட்டாலத்தில் தான் குமரி மாவட்டத்தின் முதல் மறை சாட்சியான தேவசகாயம் பிள்ளை அவர்கள் பிறந்தார்கள். இன்று மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் நினைவாக ஒரு இல்லத்தினை அவர் வாழ்ந்த இடத்தில் கத்தோலிக்கத் திருச்சபை கட்டியெழுப்பியிருக்கிறது. அதன் அருகில் ஒரு பனை மரம் நிற்பதைப் பார்த்து அதனை படம் பிடித்தேன்.

புதிதாக கட்டப்பட்ட தேவசகாயம் பிள்ளை நினைவு இல்லம்

நீலகண்டன் பிள்ளை என்பவர் நாயர் குடும்பத்தில் பிறந்தவர். கேப்டன் யுஸ்டேசியஸ்  டி லெனாய் (Eustachius De Lannoy) மூலமாக கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து, கிறிஸ்தவத்தினை தழுவியபோது லாசரஸ் என பெயர் மாற்றிக்கொண்டவர். திருவிதாங்கூர் பகுதி மக்களால் தேவசகாயம் பிள்ளை என்று இன்று நினைவுகூறப்படுபவர்.  திருவாங்கூர் சமஸ்தான அரசர்களால் துன்புறுத்தப்பட்டு ஆரல்வாய் மொழி என்ற பகுதியிலுள்ள பனை சூழ்ந்த காற்றாடி மலைப் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவரது 400 ஆம் அகவை தினம் வெகு விமரிசையாக கோட்டாறு மறை மாவட்டத்தால் கொண்டாடப்பட்டது.  அன்று அவர் போப் பெனடிக்ட் அவர்களால் “ஆசீர்வதிக்கப்பட்டவர்” (Beatified) என சிறப்பு நிலை பெற்றார். 2020ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் அவர்கள் தேவசகாயம்பிள்ளை அவர்கள் மரித்த பின்பு அவர் மூலமாக நிகழ்ந்த ஒரு அற்புதத்தினை ஏற்றுக்கொண்டார். இவையனைத்தும் தேவசகாயம் பிள்ளை அவர்கள் புனிதர் பட்டம் பெறும் தகுதியுடையவராக அவரை மாற்றுகிறது.

தேவசகாயம் பிள்ளை

கத்தோலிக்க திருச்சபையின் சில வழக்கங்கள் மிகவும் தொன்மையானவைகள். அவைகளில் கால்களைக் கழுவுதல் என்து இயேசுவிடம் சென்று சேரும் அளவிற்கு அது நீண்ட மரபைக் கொண்டது ஆகும். முற்காலங்களில் போப் அவர்கள் தனக்கு கீழ் இருக்கும் உயர் மட்ட தலைமை  குருக்களில் 12 நபர்களை தெரிந்துகொண்டு அவர்களது கால்களை கழுவுவது வழக்கம். இவ்வித வழக்கம் வெறும் சடங்குகளின் தொகையாக மாறிவிட்டது என கருதியபடியால் போப் பிரான்சிஸ் அவர்கள் புதுமையான முறையில் இச்சடங்கினை முன்னெடுக்கத் துவங்கினார்கள். சிறைச்சாலையில் உள்ளவர்களின் கால்களை கழுவும்படியாக தெரிவு செய்தல், அகதிகள், மாற்று சமயத்தினர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என அவரது தெரிவுகள் கத்தோலிக்க திருச்சபை பார்த்திராத அளவிற்கு புதுமையானதும் புனிதமானதும் கூட.   

கால்களைக் கழுவுதல் என்ற சடங்கின் மீது எனக்குள்ள தனி ஈடுபாடு நிமித்தமாக  நானும் இச்சடங்கினை கடைபிடிக்க விரும்பினேன். திருச்சபைக்குள் இதனை கடைபிடிக்க இயலாது ஆகையால், திருச்சபைக்கு வெளியே இதனை நிகழ்த்த ஆசைப்பட்டேன். எனது எண்ணங்கள் எல்லாம் பனை ஏறுகிறவர்களைக் கண்டு அவர்கள் கால்களைக் கழுவி, அவர்களுக்கு பணிவிடை செய்யும் இயேசுவின் போதனையின் சிறப்பியல்புகளை காண்பிக்கவும், கூடவே எனது அன்பின் வெளிப்பாடாக, புத்தாடைகள் எடுத்து கொடுக்கவும், நான் விரும்பினேன். என்னால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. பிற இடங்களில் மக்கள் தங்கள் கால்களை என்னிடம் காண்பிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கால்களை காண்பிக்க மெறுப்பதற்கான காரணங்கள் பல உண்டு. சில வேளைகளில், கால்களைக் கழுவுபவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை, சில நேரங்களில் இவ்வித சடங்குகளின் பொருளின்மை என வரிசைபடுத்திக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது கால்களில் இருக்கும் காயங்களை அவர்கள் வெளியே காட்ட விழைவதில்லை என்பதே உண்மை. தங்கள் வாழ்வு இவ்விதமொரு சிதைவுற்ற ஒன்றுடன் இணைக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.  எப்போதும் அவர்கள், மக்களது வாழ்வை சுவைகூட்டுபவர்கள் என்ற பெருமிதம் கொண்டிருப்பதினாலேயே தங்கள் கால்களை மறைக்கிறார்கள் என நான் பொருள் கொள்ளுவேன். அவர்கள் நிலையில் இவ்விதமான நிலைப்பாடு சரியென்றாலும், அவர்களின் குரலாக ஒலிக்கின்ற நமக்கு அவர்களது காயங்கள் தாம் முக்கிய குறியீடாக, அவர்களின் தியாக சின்னமாக வெளிப்படுத்தப்படவேண்டும் என்கிற உறுதி வேண்டும்.

பனையேறியின் கால்கள்

பனையேறிகளுடைய கால்கள், காயங்களால் நிறைந்தவை. அவைகளை அவன் ஒரு வீரனுக்குரிய பெருமையென கருதியிருந்தாலும், இன்னொருவரிடம் காண்பிக்க அவன் விழைய மாட்டான். தழும்புகளைக் காட்டி தனது தியாகத்தை நிலைநிறுத்தும் செயலை ஒரு பனையேறி எப்போதும் செய்ய துணிவதில்லை. அது அவனது வீரத்திற்கும் அவனது உழைப்பிற்கும் இழைக்கப்படும் அநீதி என்பதாகவே அவன் எடுத்துக்கொள்ளுவான். அவனது மவுனத்தை இயலாமை என சிலர் புரிந்து கொண்டு, பனையேறிகளுக்கான குரலை வெளியில் கேட்கக்கூடாதபடி செய்துவிட்டனர்.

காய்த்துப்போயிருக்கும் பனையேறியின் கைகள்

பனையேறியின் கால்களில் இருக்கும் காயங்களுக்கு சற்றும் குறையாமல் அவர் கைகளிலும் உடலிலும் காயங்களும் தழும்புகளும் இருக்கும். காயங்கள் அவர்கள் வாழ்வில் அனுதின அனுபவம் தான். அந்த காயங்களை அவர்கள் பெரிதுபடுத்தியிருந்தால், அவர்களின் துயரம் இன்று உலக அளவில் சரியான அளவில் முன்வைக்கப்பட்டிருக்கும். பனையேறிகளின் வியர்வை பேசுபொருளாயிருக்கும் அளவிற்கு அவர்கள் கால்கள் பேசுபொருளாயிருந்தது இல்லை. அவர்கள் கால்களும் அவர்தம் உடலில் இருக்கும் காயங்களுமே அவர்கள் சூழியலின் பங்காளர்கள் என உரத்துக் கூறும் அடையாளங்களாகும்.

கால்களைக் கழுவி முத்தமிடும் போப்

என்னைப்பொறுத்த வரையில் போப் அவர்கள் பனையேறிகளின் கால்களை கழுவவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையினை நான் போப் அவர்கள் மீது திணிக்க இயாலாது என்பதால் தான் முதன் முறையாக அவ்வித முன்னெடுப்பை நான் மேற்கொண்டேன்.

திருமறையில் இயேசு கால்களைக் கழுவும் நிகழ்ச்சி மிக உக்கிரமானது. இயேசு வாழ்ந்த காலத்தில் கால்களைக் கழுவும் பணி அடிமைகளுக்குரியது. குரு என்றும், ரபி என்றும், கடவுளின் மகன், இஸ்ரவேலை மீட்கும் மேசியா என்றும் உயர் பட்டங்களை தாங்கி நின்ற இயேசு தமது சீடர்களின் கால்களைக் கழுவுதல் சீடர்களுக்குள்ளேயே துணுக்குறலை ஏற்படுத்தியது. பேதுரு என்ற சீடன் அவரைப் பார்த்து நீர் எனது கால்களைக் கழுவக்கூடாது என விலகி நிற்க இயேசு அவனிடம் உனது கால்களை நான் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்கு பங்குமில்லை பாகமுமில்லை என்கிறார்.

எனது நீண்ட நாள் கனவு என்பது பனையேறிகள் கால்கள் கழுவப்படவேண்டும் என்பது தான். கத்தோலிக்கத் திருச்சபை, இன்று இந்தியாவில், இருக்கும் பனையேறிகளின் கால்களைக் கழுவ முற்படுவார்கள் என்று சொன்னால், அதுவே நாளை வாத்திகன் பனையேறிகளின் கால்களைக் உற்று நோக்க வழிவகை செய்யும். உடைந்து உருக்குலைந்திருக்கும் பனையேறிகளின் கால்கள் மிகப்பெரும் ஆன்மீக பிண்ணணி கொண்டவை. அழகிய கால்கள் எப்படி கடுமையான உழைப்பின் பயனாய் வளைந்துவிடுகின்றன எனவும், காய்ப்பு பிடிக்கிறது எனவும், பாளம் பாளமாக கீறிப்போய் கிடக்கிறது எனவும் எந்த இலக்கியமும் பதிவுசெய்யாத நமக்கடுத்த வாழ்வனுபவம். பனையேறிகளின் உருக்குலைந்த கால்களுக்காக எந்த திருச்சபையிலும் மன்றாட்டுகள் ஏறெடுக்கப்படவில்லை என்பதுவே கசப்பான உண்மை.

சிறிய கால்களே அழகுமிக்கவைகள் என்னும் சீன பாரம்பரியத்தினை விரிவாக பலர் பதிவு செய்திருக்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டு முதல் சமூகத்தில் மிக உயரிய இடத்திலிருந்த சீமாட்டிகளுடைய கால்களை ஆறு வயது முதல் கட்டி, காலின் பயனே அற்றுப்போகப்பண்ணும் ஒரு முறைமையினைக் குறித்து இருபதாம் நூற்றாண்டில் டங்கன் என்கிற கிறிஸ்தவ மிஷனெறி குறிப்பிடுகிறார். பெண்களை எப்படி அழகு என்ற போர்வையில் சமூகம் அடக்கி ஆள்கிறது எனவும், பெண்கள் இதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள் விரிவாகவும் ஆராயப்பட்டிருக்கின்றன. ஆனால் பனையேறிகள், பனை மரத்தினை பற்றி பிடித்து ஏறும்பொது அதிலிருக்கும் சிலாம்புகள், பனையின் புறப்பகுதியில் இருக்கும் சில சொரசொரப்பான பகுதிகள், கால்களில் ஏற்படுத்தும் காயங்களையும், பற்றிபிடிக்கும் விதமாக கால்கள் வளைந்து உருக்குலைவதும், நமது சமூகத்தில் காணப்படும் பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. அசிங்கமான இத்தொழிலை விட்டு வெளியே வருவதுவே தீர்வு என முடிவெடுத்து விட்டாலும், இன்றும் தங்கள் கால்கள் பனையை பற்றியிருக்க, தங்கள் கைகள் பனை மரத்தை அணைத்திருக்க, நமது வாழ்வில் பனையேறிகள் இன்றும் சுவைகூட்டியபடியே இருக்கின்றார்கள்.

கால்களைக் கட்டிவிடுவதால் ஏற்படும் பாதிப்பு

எவரொருவர், பனையேறியின் கால்களையும் கைகளையும் அணுகி பார்த்தாலும், அத்தாய்மையின் கரத்தை பார்த்து அவரது உள்ளம் விம்முவது உறுதி. பனையேறி தனது உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பெருமளவில் அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் ஒரு பண்பட்ட சமூகம், அவன் கடந்து வந்த பாதைகளில் இருக்கும் இடர்களை நீக்கி, அவன் வழிகளை செவ்வை செய்வது சிறந்த சேவையாக இருக்க முடியும்.

அவ்வகையில், போப் அவர்கள், பனையேறிகளின் கால்களைக் கழுவும் ஒரு தினம் அமையுமா என நான் எண்ணிப்பார்க்கிறேன். போப் அவர்கள் இதுவரை பார்த்த கால்கள், காலணிகள் இட்டு நடமாடிய மென் கால்கள் மட்டுமே. வெறுங்காலுடன், பனையேறும் பனையேறிகளின் கால்களும் கரங்களும் அவருக்கு இயேசுவின் சிலுவைக் காட்சிகளை மீட்டெழுப்பும். இவ்விதம்  எற்படுத்தும் ஓர் நிகழ்வு கூட, உலகமெங்கும் அதிர்வலைகளை எழுப்ப வல்லவை.

பனையேரிகள் என்றவுடனேயே, நாம் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே அவ்விதம் எண்ணிக்கொள்ளுகிறோம், ஆனால், இந்தியா முழுக்க பனை ஏறிக்கொண்டிருக்கும் சமூகங்கள் பல இருக்கின்றன. பழங்குடியினர், நாடோடிகள் உட்பட இந்திய சமூகத்தில் பலரும் பனையேரிக்கொண்டிருக்கின்றனர். இந்தியா, இலங்கை, பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 12 பனையேறிகளை அழைத்து , கால்களைக் கழுவும் சடங்கு ஒன்றினை நிகழ்த்தினால், அது எப்படியிருக்கும்? ஆம், அது தான், 21ஆம் நூற்றாண்டில் திருச்சபையின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஒரு திருப்புமுனை கணமாக இருக்கும். திருச்சபை ஏன் பனை சார்ந்த மக்களுக்காக தங்களை அர்பணிக்கவேண்டும் என்பதனை போப் அவர்களின் இச்செயல் உறுதிப்படுத்தும். 

பனையேறிகளின் காயங்கள் நமக்கு திருமறையின் ஆழ்ந்த படிமங்களை வெளிப்படுத்துவதாக நான் உணருகிறேன். இயேசுவின் சிலுவைக் காயங்களுக்கு ஒத்தவைகள் அவைகள். நமது வாழ்வு சுவைப்பட அவர்கள் தங்கள் உடலை வருத்த ஒப்புக்கொடுக்கின்றனர். அவர்கள் காயங்கள் பின்னே இருக்கும் சோக கதைகள் இதுவரை தொகுக்கப்படாத காப்பிய தருணங்களைக் கொண்டது. பனையேறிகளின் காயங்கள் வெறுமனே காயங்கள் அல்ல, அவைகள் நமது வாழ்வை செறிவூட்ட பனையேறிகள் ஏற்றுக்கொண்ட விழுப்புண்கள். போர்க்களத்தில் ஏற்படும் புண்களை விட இவ்வித வடுக்கள் தான் இன்று நமது வாழ்வை உயர்த்திப்பிடிக்கும் அழகிய தழும்புகள். இத்தழும்புகள் குறித்த பெருமையோ சிறுமையோ எதுவும் திருச்சபையிலோ பொதுவெளிகளிலோ பேசப்படவில்லை. அந்த மவுனம் கலைக்கப்படவேண்டும்.

பனையேறிகள் வாழ்வில் இன்னும் பல சோகங்கள் அரங்கேறி வருவது பொதுவெளிகளில் பேசப்படுவது இல்லை. கல்வி அறிவு பனையேறிகளுக்கு இல்லாததாலும், அவர்களின் உடை அமைப்புகள் அவர்களை எளியவர்கள் என வெளிப்படுத்துவதாலும்,  காவல்துறையின் அராஜகம் பனையேறிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதும் வரலாறு. கள் இறக்கினால் கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையினை ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டனர். காவல்துறை, போலி மது விற்கிறார்கள் என போலியாக வழக்கு பதிவு செய்து, பனையேறிகளை கைது செய்வதும், அவர்கள் பயன்படுத்தும் மண் கலயங்களை உடைத்துப்போடுவது, பனை மரங்களில் பிற பனையேறிகளை ஏறவைத்து பதனீர் சொட்டிக்கொண்டிருக்கும் பாளைகளை தறித்துப்போடுவது, சில வேளைகளில் பனையேறிகளை அடித்து துன்புறுத்துவது ஏன் கை கால்கள் முடமாகும் அளவிற்கு அவர்களை குற்றுயிராக்குவது என ஈனச் செயல்கள் செய்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய பூர்வகுடிகளிடம் மன்னிப்பு கோரும் தருணத்தில்

இன்று உலகில் எங்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் பொதுவெளியில் நாம் கொதித்தெழுகிறோம். ஆனால் காலம் காலமாக அடக்குமுறைக்குள் வாழ்ந்து தான் கற்ற தொழிலினை இவைகளினூடே எடுத்துச் செல்லும் பனையேறி எவ்வித சலனமுமின்றி தனது பணியை தொடர்ந்துகொண்டிருப்பது நம்மை பதை பதைக்க வைப்பது. இவ்வித சூழலில் பனையேறிகளிடம் வாங்கிய லஞ்சப் பணத்தினை காவல்துறை நாலத்தனையாக திருப்பிக் கொடுக்கவேண்டும். பனையேறிகள் வாழ்வில் காவல்துறை செய்த அனைத்து பிழையீடுகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். ஆளும் அரசு, பனையேறிகளுக்கு  இதுமட்டும் செய்யத்தவறியவைகளுக்கும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கும் பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும். ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு நிகழ்ந்த துயரத்தை விஞ்சும் கதைகள் இங்கே உண்டு, ஆனால் அவைகளைப் பேசும் உள்ளங்கள் இங்கு இல்லாமல் போய்விட்டது தான் சோகம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

ஒரு பதில் to “பனைமுறைக் காலம் 7”

  1. தமிழ் வாழ்வியல் Says:

    நெகிழ்ச்சியான கண் கலங்க வைக்கும் பதிவு.

    நன்றியுடனும் அன்புடனும் இரவிக்குமார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: