கற்பனை குற்றச்சாட்டுகள்
பனை சார்ந்த எதிர்மறை பதிவுகள் வலம் வருவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. எதிர்மறை என இவற்றை எப்படி இனம் கண்டு கொள்ள இயலும் என்பதற்கு சில அடிப்படை காரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பனை சார்ந்த சமீபத்திய எதிர்மறை பதிவுகளில் பனை “முச்சனிகளில்” ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டது. “சனி பகவான்” என்ற கருதுகோள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றதோ அங்கிருந்தே விடம் கக்கும் நாவுகளும் புறப்படுகிறது என்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். எந்த “சனி” குறித்த கவலையும் அற்ற சூழியலாளர்கள், கனி தரும் பனை பேணும் பணியினை தொடர்ந்து செய்வார்கள்.
முன்று முக்கிய கருத்துக்கள் இப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் வருவதை நாம் கண்டுகொள்ளலாம்.
- பனை சாதியோடு தொடர்புடையது
- பனை வந்தேரிகளுடன் தொடர்புடையது
- பனை “தமிழருக்கு” எதிரி
சாதி எனும் அமைப்பினை கேள்விக்குட்படுத்தாமல், சிறுபான்மையினரை சிறுமைப்படுத்தி, மொழி அரணுக்குள் பதுங்கும் நத்தையை ஒத்த அணுகுமுறை இது. ஆகவே முற்றாக புறம்தள்ள வேண்டியது.
தன்னையே முழுமையாக வாரி வழங்கும் பனை மீது ஏன் இந்த வெறுப்பு? பனை ஒரு பொருளியல் சார்ந்த மரம் என இன்று கட்டமைக்கப்படுவது தான் காரணம். எதிர்தரப்பு அது குறித்து எந்த கவலையும் அடைய வேண்டியதில்லை. இன்றைய சந்தை பொருளாதாரத்தை முன்னிட்டு நாம் பார்க்கையில், பனை வைத்திருப்பவன் எல்லாம் பணக்காரன் ஆக முடியாது. பனை தொழில் செய்பவர்கள் ஒரு விழுமியத்தை தான் முன் வைக்க இயலும். தற்சார்பு, கிராமிய பொருளியல் போன்றவைகளையே நாம் இன்று பேசமுடியும். சர்வதேச பொருளியலைக் குறித்து பேச இயலாது. ஆனால் சர்வதேச சந்தை பொருளியலைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு “அறம் சார்ந்த பொருளியலாக“ பனைப் பொருளியலைக் காணலாம்.
தமிழகத்தில் பனை சார்ந்த பேச்சினை முன்னெடுத்த கட்சி யார் என அனைவரும் அறிவார்கள். நாம் தமிழர் கட்சி அதனை பேசுவதற்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள். புலிகள் பனை சார்ந்த ஒரு பொருளியலைக் கட்டமைத்திருந்தார்களா என்றால் இல்லை என்பதே பதில். அவர்கள் கொண்டிருந்தது பனை சார்ந்த வாழ்வியல் மட்டுமே. இறாலை விற்கும் சந்தை அவர்களுக்கு உலகமெங்கும் உண்டு. பனையை விற்கும் சந்தை அவர்களுக்குள் மட்டுமே இருந்தது. விடுதலைப் புலிகளின் பனை சார்ந்த பொருட்கள் ஏதாகிலும் தமிழக சந்தைக்கு வந்து யாரேனும் வாங்கி பயன்படுத்தியிருக்கிறார்களா? இல்லை என்பதுவே பதில். சர்வதேச சந்தையில் விற்கும் கருப்பட்டி மீண்டும் வால்மாட்டிற்கும், பே டி ஏம்மிற்கும் கப்பம் கட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்பதை எப்படி மறந்து போனோம்? பனை ஒரு சர்வதேச சந்தை மதிப்பு கொண்ட பொருளல்ல. ஆனால் பனை சர்வதேச சந்தையில் தனது இடத்தை நிறூபிக்கும் வல்லமை கொண்ட மரம். ஆகவே தான் பனையின் அடையாளம் பல்வேறு தரப்பினரால் இன்று உலக அளவில் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது.
பனையின் எழுச்சியைக் கண்டு பெருமுவதற்கு மற்றொரு காரணம். பனை இன்று ஒரு அரசியல் தரப்பாக எழுந்து வருவது தான். பனை சார்ந்த பொருளியலை குறித்து பேசினாலும், பனை கூறும் சூழியல் முக்கியத்துவம் மறைக்கவியலா. அது உள்ளங்கை நெல்லிக்கனி போல காணப்படும் உண்மை.
தோழர். திருமாவளவனின் பங்களிப்பு பனை சார்ந்த ஒரு முக்கிய திருப்பத்தை தமிழக அரசியலில் நிகழ்த்தியிருக்கிறது. திருமாவளவன் அவர்கள் தனது சூழியல் பங்களிப்பாக பனை மரத்தினை முன்னெடுப்பது அவரது அரசியல் வாழ்வில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. தமிழகத்தில் பனை குறித்து பெருமளவில் முழக்கமிட்டிருந்த சீமான் அவர்கள், திருமாஅவர்களின் முன்னெடுப்பிற்கு பின்பே களத்தில் இறங்கி பனை நட துவங்கினார். இன்று தமிழக் அரசியலில் பனை ஒரு முக்கிய அரசியல் தரப்பாக எழுத்துநிற்கின்றது. பனை தொழிலாளர்களுக்கு ஏதும் செய்யாத ஸ்டாலின் கூட வேறு வழியின்றி பதனீரை பட்டையில் குடிக்கின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டார்.
பனை மரம் குறித்து ஏன் இத்த திடீர் எழுச்சி? பனை சார்ந்த வணிகம் செய்யும் மக்களுக்கு இதன் மேன் ஒரு கண்ணா? குறிப்பாக நாடார் இன மக்கள் இதன் பின்னணியமாக இருந்து தூண்டுகிறார்களா? அப்படி தேவையில்லாத ஒரு மரத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறார்களா? எனபதுவே கேள்வியாக இருக்கிறது.
இன்றும் பெருமளவில் நாடார் மக்கள் பனை சார்ந்த தொழிலில் இருந்தாலும், அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே உழல்கின்றனர். அரசு பனைத் தொழிலாளர்களை வஞ்சித்தது போல் வேறு எவரையும் கடந்த 30 ஆண்டுகளில் வஞ்சித்திருக்குமா தெரியாது. அந்த அளவு வறுமையின் கோரப்பிடியில் நின்றே பனைத்தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் 95% பனைகள் பயன்படுத்தப்படவே இல்லை.
பனை மரங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவைகளை நம்மால் எப்படியும் பொருளியல் ரீதியாக பாதுகாக்க இயலாது. ஆனால் சூழியல் சார்ந்து பனை மரங்களின் பங்களிப்பு என்பது பனையேறி இருந்தால் ஒருவகையிலும், பனையேறி இல்லாவிட்டால் வேறு வகைகளிலும் இருக்கிறதைக் காணமுடிகிறது. ஒருவகையில் மனிதன் சூழியலின் அங்கமாக எவ்விதம் இருக்கவேண்டும் என்பதைக் கூட நாம் பனையேறிகளிடம் இருந்து அறியவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பனை மரங்களின் எண்ணிக்கை 1965 (பனை வளம்) முதல் இன்று வரை 5 கோடியாக இருப்பது ஒரு மாபெரும் அதிசயம் என்றே கூறவேண்டும். இந்த மண்ணில் மனிதர்கள் இருக்கிறார்களோ இல்லையோ பனை மரங்கள் இருக்கும். பனை இருந்தால் தான் மனித இனம் தழைக்க முடியும். பனைக்கு மாற்றாக மற்றோரு மரத்தை எவரும் சுட்டிக்காட்ட இயலாது. கேரளாவில் காணப்படும் கற்பகத்தருவான தென்னை உட்பட.
சூழியலில் ஒரு மரத்தையோ ஒரு மிருகத்தையோ ஒரு பறவையையோ ஒரு இனக்குழுவுடன் இணைப்பது என்பது பழங்குடியினர் வாழ்வில் இருந்த ஒரு கலாச்சார அமைப்பு. இன்று அவைகள் மீண்டும் வேறு வகையில் நமது அடையாளமாக மறுசீரடைகின்றனவே ஒழிய, அவைகளை சாதியோடு சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாது. அப்படி செய்வது சிக்கலான ஒரு வரலாற்று திருப்பத்தை நமக்கு அளிக்குமே அன்றி முழுமையான வரலாற்று நோக்கை அளிக்காது.
ஏன் இப்போது பனை சார்ந்து ஒரு பரபரப்பு கூட்டப்படுகின்றது என்பவர்கள் பனை சார்ந்து முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளை கூர்ந்து ஆராயாதவர்கள். பனை சார்ந்த முயற்சிகள் 1950 – 1960களில் நடைபெற்றதில் ஒரு துளி கூட இன்று நடைபெறவில்லை. கருப்பட்டி இன்று மருத்துவபொருளாக எஞ்சியிருப்பதனால் அதன் தேவை தக்கவைக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, அது மிகப்பெரிய எண்ணை வணிகம் போன்றதல்ல. ஆக ஒரு வணிகத்திற்காக பிறரை ஏமாற்றும் பணியினை நாடார்கள் செய்கிறார்கள் என்பது போன்ற பிரச்சாரம் தேவையற்றது. வணிகம் செய்பவர்கள் தங்கள் வணிகத்திற்கு பனை தடையாக இருக்கும் என்றே வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். பனை மரம் ஏற ஆட்கள் இல்லை என்பதுவே இன்றைய சிக்கலாக இருக்கிறது.
சூழியல் சார்ந்த ஒரு மரமாக பனையினை முன்னெடுப்பதற்கு பனை மரத்தடியில் தண்ணீர் நிற்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பனை மரத்தின் தகவமைப்பு பல்வேறு சூழலமைப்புகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் வலிமை பெற்றது. மீனவர்கள் வாழும் நெய்தல் நிலப் பகுதிகளிலும், முல்லை நில பகுதியிலும், மருத நிலப் பகுதிகளிலும் பனை இருந்திருப்பதாக இலக்கியங்களின் வாயிலாகவும் நமது நிலவியல் அமைப்பினைக் கொண்டும் நம்மால் உறுதியாக கூறமுடிகிறது. குறிஞ்சி நிலத்தில் பனை நின்றிருக்கிறதா? அது ஆய்வுக்குறியது, ஆனால் பனை சார்ந்த “முறம்” குறிஞ்சி நிலப் பகுதி வாழ் புலியினை விரட்ட பயன்பட்டிருக்கிறது. ஐவகை நிலங்கள் நமக்கு உண்டென்றால் ஐவகை நிலத்திலும் பனை ஏதோ ஒருவகையில் தன்னை இணைத்துகொண்டிருக்கிறது என்பதுவே நான் நேரில் கண்ட உண்மை.
தமிழ் மொழியே பனையினை மையமாக கொண்டு வளர்ந்த மொழி தான். பல்வேறு வார்த்தைகள் பனையிலிருந்து கிளைப்பதை நம்மால் உணரமுடியும். நமது நிலம், நமது வடிவமைப்புகள், நமது வார்த்தைகள் நமது கலாச்சாரம் அனைத்தும் பனை சார்ந்த ஒரு வாழ்வின் எச்சம் தான். அவைகள் குறித்த ஆய்வுகளோ சீரான பதிவுகளோ நம்மிடம் எதுவும் இல்லை. ஆனால் பனையால் நமக்கு அவைகளைத் திருப்பித்தர இயலும்.
மனித குல வரலாற்றில் இன்றியமையாத ஒரு தாவரமாக நம் பனை மரத்தினைக் கொள்ள இயலும். அதனை இழித்து பேசுவோர் ஏறிய ஏணியினை எட்டி உதைக்கும் மனோபாவம் கொண்டவர்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விதம் மன பிறள்வுகள் கொண்டோரை கருணையுடன் நோக்கும் தன்மை நம்மில் பெருகவேண்டும். பனை சார்ந்த ஒரு மாற்று தரப்பாக அவர்கள் இருந்துவிட்டு போகட்டும் என்பது தான் எனது விருப்பம். இந்த மாற்று தரப்பினைத் தாண்டி முன்னேறும் பனை படை வீரர்களே நமக்குத் தேவை. பனை அதனை தெரிவு செய்யும்.
இறுதியாக பனை குறித்து பேசுகையில் பனை மரத்தினை எதோ மந்திர வித்தைக் காட்டும் மரம் என முன்னிறுத்தும் பாங்கினையும் நாம் ஒழிக்க வேண்டும். பனை மரம் நமது எதிர்காலத்தில் எவ்விதம் பயன்மிக்கதாக இருக்கும் என்பதை நமது மரபிலிருந்து கண்டடைய வேண்டுமே ஒழிய வீணான கற்பனை தகவல்களை உலவவிடுவதை தவிர்க்க வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளாக பனை சார்ந்த பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறேன். பனை சார்ந்த முன்னெடுப்புகள் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்வரிசை பிடிப்பதை நானே பிரமிப்புடன் பார்க்கிறேன். இதற்கு மிக முக்கிய காரணம், தமிழகத்தில் நாம் சந்திக்கும் வறட்சி தான். மரங்களை நட்டு வளர்த்திய பல்வேறு அமைப்புகள், கோடைக் காலத்தில் அவைகளை பராமரிப்பதில் உள்ள சிரமத்தை களத்தில் உணர்ந்தவர்கள். பனை வளர்ப்பது எளிது என்பது மட்டுமல்ல நீர் மேலாண்மைக்கும் உகந்தது என்பதை கண்டுணர்ந்தவர்கள். உலகில் வருடம் முழுவதும் உணவுதரும் வேறு ஒரு மரம் உண்டா? உணவோடு கூட புழங்கு பொருட்களை வழங்கும் வேறு மரங்கள் உண்டா? தமிழகம் என்று மொழி வாரியாக தன்னை குறுக்கிக்கொள்ளாதபடி மூன்று கண்டங்களில் பரவி விரிந்து சாதி மதம் இனம் கடந்து பயனளிக்கும் மரம் உண்டா? இல்லை என்பது தான் பதில்.
ஆனால் ஒன்று உண்டு, நவீன வாழ்வில் பனை அளவு புறக்கணிக்கப்பட்ட தாவரம் மற்றொன்றில்லை. பனை சார்ந்த ஆய்வுகள் மிக மந்தமாக நடைபெற்று அவைகளும் இன்று இல்லாமற் போய்விட்டன. உலகளாவிய ஒருங்கிணைந்த ஆய்வுகளை முன்னெடுக்கும் வலிமையான அமைப்புகளும் நம்மிடம் இல்லை. இலங்கையைச் சார்ந்த கோவூர் பனை குறித்து சொல்லும்போது, “பனை மிகவும் பயனுள்ள மரம் தான் ஆனால், வணிக ரீதியாக பார்க்கையில் பனையிலிருந்து கிடைக்கும் அத்தனைப் பொருட்களுக்கும் மலிவான ஒரு மாற்று சந்தையில் இருக்கிறது”. அவ்வகையில் பனை மரமானது தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை சக்திகளாலும் புறம்தள்ளப்பட்டும் அவைகளைப் பொறுட்படுத்தாமல் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்றே நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றது.
இன்று பனை மரத்தினை நாயக வழிபாட்டு மனநிலையுடன் அணுகும் ஒரு புது தலைமுறை எழுந்துள்ளது. ஆனால் நமது தேவை ஆய்வுள்ளம் கொண்ட இளம் தலைமுறை. அத்தனை துறைகளிலும் பனை சார்ந்து ஆய்வு செய்ய வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. இன்னும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து அவரும் அறியவில்லை என்பது தான் வேதனை. இதற்கிடையில் நிறுவப்படாத உண்மைகளுக்கு எதிராக பதில் கூற களமிறங்கியிருக்கும் அறிவாளிகளுக்கு என்ன பதில் சொல்லுவது?
தெருச்சண்டை மனநிலையுடன் இருப்பவர்களைக் காண கூட்டம் கூடுவது இயல்பு. அக்கூட்டம் சண்டை நடைபெறவில்லையென்றால் கலைந்துவிடும். பனை சார்ந்து நிகழும் இந்த உலகளாவிய எழுச்சி காலத்தின் கட்டாயம். பனை தனக்கானவர்களை தெரிந்துகொள்ளும். தன்னை வெட்ட வருபவர்களையும் அணைக்கும் அன்னை அது.
உலகெங்கிலும் விவசாயம் பழகின நிலங்கள் கூட நாளடைவில் மிகப்பெரும் சூழியல் சீர்கேடுகளை அடைந்துள்ள நிலையில் நிலத்தின் தன்மையினை சிறிதும் மாற்றாமல் இருக்கும் நிலப்பகுதி பனை தொழில் இயங்கும் பகுதிதான். பனையேறி எனும் சூழியலாளனை விட வேறு சிறந்த சூழியலாளர் இருக்கின்றனரா என்ன?
அருட்பணி. காட்சன் சாமுவேல்
ராயல் பாம்ஸ், ஆரே மில்க் காலனி, மும்பை
9080250653, malargodson@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்