பிள்ளையார் சுழி
எங்களது பயணத்தில் நாங்கள் இருந்த பெட்டியிலேயே என்னோடு பணியாற்றும் ஜாண் ராஜாமணி என்ற போதகரும் பயணிக்கிறார் என்பதை வழியில் கண்டுகொண்டோம். போதகர் ராஜாமணி அவர்கள் வசாய் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறார்கள். போதகர் ராஜாமணி அவர்களுக்கு பனை மீதான விருப்பம் அதிகம், மாத்திரம் அல்ல பனைமரச் சாலை தொடராக எனது வலைப்பூவில் வெளிவந்தபோது அதனை தொடர்ந்து வாசித்து வந்தவர் அவர். பயணம் முழுக்க பனை குறித்து உரையாடியபடி வந்தோம்.

மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஒரு பழங்கால கோட்டை இருக்கிறது. வசாய் பகுதியினை ப்ரிட்டிஷார் பேசின் (Bessin) என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றும் கூட வசாய் செல்லும் மும்பை நகர்புற இரயில்கள் V என்ற எழுத்திற்கு பதிலாக BS என்றே தாங்கி வரும். வசாய் கோட்டை 1509 ஆம் ஆண்டு போர்துகீசியர்கள் மும்பையில் கால் ஊன்றியதை நினைவுறுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை. பிற்பாடு மாராத்தியர்கள் இதனை 18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் இதைனை கையகப்படுத்தினார்கள். கடலை முத்தமிட்டிருக்கும் இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தகோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வசாய் பகுதியில் பனை மரங்கள் செழித்திருக்கும் என நான் கேவிப்பட்டிருப்பதினாலேயே, அங்கே செல்லவேண்டும் என போதகரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

கேரளத்தினூடாக பயணிக்கிறோம் என்பதை இருபுறத்திலும் எங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த தென்னைகளின் திரட்சி பறைசாற்றின. பனை மரங்கள் தென்னையினூடாக தலைதூக்கி எட்டிப்பார்க்கும் காட்சிகள் ஆங்காங்கே தென்பட்டவண்ணம் இருந்தன. கேரளம், தென்னை மரத்தை தனது பண்பாட்டு அடையாளமாக கொண்டிருப்பதாக கூறுவார்கள். கேர எனும் வார்த்தையே தென்னையைக் குறிப்பிடுவதாக அமைகிறது. கேரளா என்பது சமீபகாலமாக தென்னை நோக்கி நகர்ந்து வந்த ஒரு நிலபரப்பு என்றே நான் கொள்ளுவேன். போர்துக்கீசியர் வந்தபின்பே தென்னை இங்கு நிலைபெற்றிருக்கும். சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் முன்பதாக பனை மரம் கேரளாவின் தேவையினை பூர்த்தி செய்த ஒரு மரமாகவே இருந்திருக்கிறது. தென்னை மரம் ஒரு பணப்பயிர் என கண்ணுற்றபோது, அதிக உழைப்பைக்கோரும் பனை மரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டனர் என்பதுதான் உண்மை. ஆனால், பனை சுயம்புவாக இங்கே முழைத்தெழும்பி நிலைபெற்றிருப்பதைக் காணும்போது, நமது பார்வைகள் சற்றே மாறவேண்டும் என்றே நினைக்கின்றேன்.
கேரளாவில் தென்னை ஓலைகள் வீடுகள் கட்டவும், பனை ஓலைகள் பயன்பாட்டு பொருட்கள் செய்யவும் என துறைசார்ந்து பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விதமான பிரிவுகள் தாவரங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவைகளை சமூகங்கள் தேவையான விகிதங்களில் பேணிவந்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தும். பொதுவாகவே பனையும் தென்னையும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் ஆகும். கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி, பனை மரங்களை விட தென்னைகளை பேணும் காலங்களாகவே இருந்திருக்கின்றன. இப்படியான சூழலில், பனை மரங்களை தென்னந்தோப்புகளின் நடுவில் நாம் காணும்போது, அவைகள் தப்பிப்பிழைத்த மரபான தாவரங்கள் என்றே நாம் உணர்ந்துகொள்ளுகிறோம்.
ஒருமுறை கொச்சியில் பணிபுரியும் என் சகோதரி மெர்சியா அவர்கள் அங்குள்ள ஒரு மேலாண்மை நிறுவனத்தில், பனை சார்ந்து ஒரு கட்டுரை வாசிக்கச்சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். சர்வதேச அளவிலான அந்த நிகழ்வின் இறுதி நாளில் ஆலப்புழாவிலுள்ள படகு வீடு ஒன்றில் நாங்கள் கும்பலாக ஏறி பயணித்தோம். தென்னைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் அந்த நீர்பரப்பு, விந்தையானது. எப்படி ஒரு சமூகம் தென்னையை மையப்படுத்துகிறது என்பதோடு பிற தாவரங்கள் எப்படி அவ்விடத்திலிருந்து அழிந்துபோகின்றது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்விதமான ஒற்றைத் தாவர பயிரிடுதல் நிகழும்போது அங்கே இருக்கும் வேறு சில மரபான தாவரங்கள் அழிவதை தவிர்க்க இயலாது. எனது பயணத்தில் தென்னைகளுக்கு மத்தியில் நெடுந்துயர்ந்து வளர்ந்த ஒரு ஒற்றைப் பனையும் அதன் அருகில் ஒரு கோவிலையும் கண்டேன். பார்க்க வண்ணக்கலவைகளுடன் சற்றே தமிழ் சாயலைக் கொண்ட கோவிலாக இருந்தது.
தென்னைகள் பயிரிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியில் ஒற்றைப்பனைமரம் எப்படி வந்தது? பனை மரத்திற்கான தேவை தான் என்ன? விடை இதுதான், பனை மற்றும் இன்னபிற தாவரங்கள் இருந்த இடங்களில் இருந்து அவைகள் சிறுக சிறுக அகற்றப்பட்டு மெதுவாக தென்னை குடியேறியிருக்கிறது என்பது தான் உண்மை.
இதனைக் குறித்து என்னோடு பயணித்த ஒரு பேராசிரியரிடம் நான் கேட்டபோது, அவர் பனை மரங்கள் இங்கு வாழ ஏற்றவை அல்ல என்றார். மேலும் அவர், இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் பதனீர் காய்ச்ச உகந்த இடம் இதுவல்ல என்றார். அவர் கூறுவது உண்மைதான், ஆனால், இவ்வித எண்ணங்கள் பொருளியல் சார்ந்த ஒரு பார்வையை முன்வைக்கிறதேயன்றி, நிலவியல் சார்ந்த உண்மையை வெளிப்படுத்துவது அல்ல. தென்னைகள் கூட, சிறுக சிறுக மக்கள் பெருக்கத்தினூடாக ஏற்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உண்மையிலேயே இப்படியான பிரம்மாண்ட தென்னை நிலப்பரப்பு இருந்திருக்க இயலாது.
பனை சார்ந்த நிலப்பரப்பு என்பவை எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழும்புவது இயல்பு. நான் மும்பையில் பனை விதைகளை விதைக்கையில், மும்பை என்னும் காட்டினை பாலைவனமாக்கிவிடாதீர்கள் என்ற எச்சரிப்பை ஒருவர் வழங்கினார். இப்படியான எச்சரிப்புகள் எனக்கு புதிதல்ல. தமிழகம் முழுக்கவே பனை விதைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் ஒரு சில சூழியல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் எப்படி நீர் நிலைகள் இம்மாவட்டங்களின் சூழியலை மாற்றியமைத்தன என நாம் உணர்ந்துகொள்ள முடியும். மும்பையில் கூட இன்றும் பனை செழித்து வளரும் ஒரு நிலப்பரப்பு மழை பொழியும் ஆறு மாதங்கள் சதுப்புநிலமாகவே காட்சியளிப்பதைப் பார்த்து வியந்துபோனேன். பறைகளுக்கிடையில், கடற்கரை ஓரங்களில் என பனை மரங்கள் தனக்கான இடத்தை தகவமைத்துக்கொள்ளுவது ஆச்சரியமானது.
தென்னை மரங்கள் மனிதர்களால் பயிரிடப்படவில்லையென்றால், கண்டிப்பாக நீர் நிலைகளால் பரவும் வாய்ப்பு கொண்டவை. ஆனால், பனை மரங்களுக்கு வெறு பல வாய்ப்புகள் கூடவே இருக்கின்றன. மாடுகள், பன்றிகள், எருதுகள், மான்கள், குரங்குகள், நாய்கள், நரிகள், யானைகள் என எண்ணற்ற உயிரினங்கள் பனை விதை பரப்புதலில் இணைந்துகொள்ளுகின்றன. மேலும், வறட்சி காலங்களில் பனை மரம் தப்பி பிழைக்கும் தன்மையுடையது ஆனபடியால் தென்னையை விடவும் தன்னிச்சையாக பலவிடங்களில் பரவியிருக்க வாய்ப்புள்ளது.
“Kerala – The Land of Palms” என்ற புத்தகம் 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படம் பனை மரத்தாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் ஹாக்கர் (I H Hacker) கேரளவிலுள்ள கொல்லம் (Quilon) பகுதிக்கு வரும்போது அங்கே காணப்படும் தென்னைமரங்களை சுட்டிக்காட்டி, இதுவே கேரள தனது பெயரை பெற்றுக்கொள்ள காரணமான மரம் என ஒப்புக்கொள்ளுகிறார். தென்னை மரங்கள் கொல்லம் பகுதிகளில் காணப்படுவதாக வரைந்திருக்கும் படத்தில் கூட, பல்வேறு தாவரங்களின் மத்தியில் தான் தென்னைகள் நெடுந்துயர்ந்து வளர்ந்திருக்கின்றன. தனது புத்தகத்தில் தாவரங்களின் இளவரசன் பனை என்றே குறிப்பிடுகிறார்.

தென்னை நிறைந்த பகுதியாக மட்டுமே இருந்திருந்தால் எப்படி பனை மரங்கள் அன்று முகப்பில் இடம்பெற்றிருக்கும்? விடை இதுதான், பனை சார்ந்த ஒரு வாழ்வு திருவிதாங்கூர் பகுதிகளில் செழித்திருந்தது. லண்டன் மிஷன் சொசைட்டி (London Mission Society) வெளியிட்ட இந்த புத்தகம், அக்காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவிய பெரும்பாலான நாடார் சமூகத்தை முன்னிறுத்தும்பொருட்டும் இருந்திருக்கலாம். ஆனால் தென்னைகள் கூடி இருப்பதை விட பனங்கூடலை காண்பிக்கும் கோட்டோவியங்கள் அசாத்தியமானவை. தென்னை சார்ந்த வாழ்வியலை விட பனை சார்ந்த வாழ்வியல் இப்புத்தகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தென்னைகளின் திரட்சியின் முன்பாக பனைகள் காணாமல் போவதற்கு காரணம் என்ன? திருவிதாங்கூரில் ஏற்பட்ட சாதிய கொடுமைகளும், பனை மரம் சார்ந்த இழி அடையாளங்களும், பனை மரத்தை நினைவிலிருந்து மட்டுமல்ல, நிலப்பரப்பிலிருந்தே நீங்கச்செய்திருக்கும் என்பது தான் உண்மை. மரத்தோடு தொடர்புடையவர்கள் இழிவானவர்களாக கீழானவர்களாக சமூகம் கட்டமத்தபின்பு, அந்த மரமே இழிவானது என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவது ஒன்றும் கடினம் அல்ல. ஆகவே நாடார் சமூகமே பனை மரங்களைக் கைவிடத் துவங்கினர். அதற்கு அன்று அவர்கள் மிஷனெறி பணிகள் மூலமாக பெற்ற கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன என்பதை புத்தகம் குறிப்புணர்த்துகிறது.

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதிகளில் பயணிக்கையில் കള്ള് என மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையை ஆங்காங்கே ஒதுக்குபுறமாக பார்த்திருக்கிறேன். தமிழில் கள்ளு என எழுதியிருப்பதால் மலையாளத்திலும் அதையே எழுதியிருக்கிறார்கள் என்றும், என்னால் மலையாளம் வாசிக்க முடியும் என்றும் குதூகலித்திருக்கிறேன். இவைகளுடன் Toddy என ஆங்கில எழுத்துரு இடம் பெற்றிருக்கும். அனைத்து எழுத்துக்களும் கரும்பலகையில் அழகிய வெண்ணிற எழுத்துக்களால் வரையப்பட்டிருக்கும். நான் பார்த்தவரையில் மிக கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம் அது. இருளில் மின்னும் வெண்மை. நுரைக்கும் கள்ளை காட்சிப்படுத்தும் கரும் பலகை. சீரான எழுத்துக்கள் என அதற்கு ஓர் அழகு இருந்தது. மும்பை வந்த பின்பு தான் Toddy என்ற வார்த்தை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு, (அல்லது சமஸ்கிருதத்திலிருந்து) சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். “தாட்” என்றல் பனை மரம், பனை மரத்திலிருந்து கிடைப்பது “தாடி” (Toddy) என்றே இன்றும் வட இந்திய நிலப்பரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விளம்பரப்பலகையின் அருகில் ஒரு தென்னையோலை கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். அங்கே தான் கள் விற்பனை நடக்கும். உள்ளே எப்படி இருக்கும் என தெரியாது. எனது 11 வயது வரை இவ்வித காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். பின்னர், மார்த்தாண்டம் காவல் நிலையம் கள்ளினை கைப்பற்றி வடக்குத்தெருவிலுள்ள ஓடைகளில் கவிழ்த்துவிடுவது வாடிக்கையாக இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில் மதுவிலக்கு போலீசார் எவ்விதம் தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள் என இறும்பூதெய்தாமால் இருக்கவியலவில்லை.
கேரளம் என்பது கள்ளிற்கான பூமி. இன்றும் கள்ளை கொண்டாடும் சமூகம், அங்கே உயிர்ப்புடன் இருக்கின்றனர். பனங்கள் கிடைக்குமோ இல்லையோ தென்னங்கள் கண்டிப்பாக கிடைக்கும். நான் இதுவரை கேரளத்திலோ அல்லது குமரி மாவட்டத்திலோ தென்னங்கள் பருகியது இல்லை. ஆனால் பெங்களூருவிலும் பாண்டிச்சேரியிலும் தென்னங்கள் பருகியிருக்கிறேன். முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு வாக்கில் குமரி மாவட்டதிலுள்ள தெரிசனங்கோப்பு என்ற பகுதியில் கள் கிடைக்கும் என்று சொன்னதால் தனியாக சென்றேன். அங்கிருந்த ஒரு குளத்தைத் தாண்டி நடந்து சென்றபோது ஒரு பழைமையான கோவில் வந்தது. அதையும் கடந்து குளக்கரையில் இருந்த ஒரு தோப்பிற்குள் சென்று கள் பருகியது மறக்கவியலா அனுபவம். சற்றே புளிப்புடன் இருந்தாலும், கள்ளை சுவைத்துவிட்டேன் என்பதே ஆகப்பெரும் வெற்றியாக இருந்தது. போலீசார் தொந்தரவு குறித்து அப்போது அவர் கூறியிருந்தாலும் மீண்டும் 2000ஆம் ஆண்டு அங்கே சென்றேன்.
2004 ஆம் ஆண்டு நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றிய போது அவர்களின் பழைய போராட்ட வரலாறுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” நடத்திய குறிப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது, கள்ளுக்கடைகள் எப்படி பனையேரிகளை சுரண்டி தழைத்தன என்கிற உண்மை வெளியானது. பனையேரிகளிடமிருந்து பதனீராகவே கள்ளுக்கடையினர் வாங்குவார்கள். பின்னர் எப்படி காய்ச்சிய பாலை ஆறவைத்து அதில் தயிர் ஊற்றி உறை வைப்பார்களோ அது போலவே, பதனீரிலுள்ள சுண்ணாம்பை அகற்றிவிட்டு, தனி பதனீரை தெளித்தெடுத்து அதில் கள்ளை ஊற்றி வைப்பார்கள். சரியான பருவத்தில் இதனை கள்ளாக விற்பனை செய்வார்கள். மேலும் போதை ஏறுவதற்காக சில இயற்கை மற்றும் செயற்கை சேர்மானங்களையும் இடுவார்கள். எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை நான் சந்தித்தபோது, “கள்ளுக்கு எப்போ போதை வருகிறது?…. அது கடைக்கு வரும்போது தான்” என்று சொன்ன கூற்றின் உண்மை பின்னணியம் இதுதான். இவ்விதமான கள்ளுக்கடைகள் தனி முதலாளிகளையே ஊக்குவிக்கின்றது. ஆகவே தங்கள் முழு முதல் உரிமையினை மீட்டெடுக்கும் பனையேறிகளின் ஒரு உணர்ச்சிகர போராட்ட வடிவமாகவே “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” இருத்ததாக நான் புரிந்துகொள்ளுகிறேன். இப்போதும் கூட கள்ளு என்பது கடைக்கு வரவேண்டாம் பனையேறிகளே கள்ளினை விற்பனை செய்யட்டும் என்னும் நிலைப்பாடே சரியாக இருக்கும்.
மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் 1985 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். சுமார் 15 ஆயிரம் பனையேறிகள் கலந்துகொண்ட அந்த மாநாடு, தமிழகத்தையே அசைத்தது. இதனைத் தொடர்ந்து தான் 01.01.1987 ஆம் ஆண்டு கள் தடைக்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படுகிறது கவனத்திற்குரியது. பனைத் தொழிலாளிகள் ஒன்றுபட்டால் அவர்களது கோரிக்கைகள் வலுப்பெறும் எனவே கள்ளுக்கடைக்கு தடை போட்டால் ஒரேயடியாக பனை தொழிலுக்கு மூடுவிழா நடத்திவிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கும். அது உண்மைதான் என சமீபகாலத்தில் உணர்ந்துகொண்டேன். தமிழகம் முழுவதும் 12 லெட்சம் பனை தொழிலாளர்கள் இருந்து வந்த சூழல் கள் தடைக்குப் பின் மாறியது. கள் தடை அறிவித்தவுடனேயே 10 லெட்சம் பனையேறிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர் என சுதேசி இயக்கத்தைச் சார்ந்த திரு. குமரி நம்பி அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.
இச்சூழலில் தான் தமிழகத்தில் கள் சார்ந்த ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணி இப்பயணத்தை நிகழ்த்த உறுதிபூண்டேன். ஆனால் ஒருபோதும் இவைகளை எழுத்துருவாக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் கள்ளை முதன்மைப்படுத்தி ஒரு போதகர் எழுதுவதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது. நான் அறிந்த பல கிறிஸ்தவர்களும் கள் சார்ந்து ஒரு புரிதலற்ற நிலையினையேக் கொண்டுள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனெறிகள் பலரும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். கிறிஸ்தவ கிராமங்களிலிருந்து கள் இறக்குகிறவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக குமரி மாவட்ட நெய்யூர் பகுதியைச் சார்ந்த குறிப்பு காணப்படுகிறது. அதற்கு காரணம் உண்டு.
பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளில் போதை இல்லையா? எப்படி ஒரு போதகர் கள்ளைக் குறித்து எவ்வித அருவருப்புமின்றி பேசமுடியும்? திருமறை குடிபோதையை எதிர்க்கிறதே என பலவிதமான எண்ணங்களுடன் நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கள் எனும் பானத்தை குடிக்கு நிகரென பேசுவது தற்கால சூழலில் நகைப்புக்குரியதாகவே இருக்கும். ஆகவே ஒரு முழுமையான பின்னணியத்தில் இவைகளை வைத்துப் பார்ப்பது மிகவும் தேவை.
1999 ஆம் ஆண்டு நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, அங்கு மாதத்திற்கு ஒருமுறை நற்கருணை வழிபாடு நிகழும். குமரி மாவட்டத்தில் வழங்கும் நற்கருணை திராட்சை ரசத்திற்கும், ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கிய திராட்சை ரசத்திற்கும் பெரிய வேறுபாடு இருந்ததைக் அப்போது தான் கண்டுகொண்டேன். குமரி மாவட்ட சி எஸ் ஐ திருச்சபைகளில் வழங்கப்படும் திராட்சை ரசம் என்பது உண்மையிலேயே திராட்சை ரசம் கிடையாது. அது சில மணமூட்டிகளும் சர்க்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு செயற்கை பானம் மட்டுமே. அதனுடன் தண்ணீர் சேர்த்தே நற்கருணை ஆராதனையில் பருக கொடுப்பார்கள். ஆனால் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கப்படும் திராட்சை ரசமானது வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன் (Home made wine) ஆகும். திராட்சைப் பழங்களும் இன்ன பிற சேர்மானங்களும் இணைத்து செய்யப்படும் பானத்தையே எங்களுக்கு கொடுப்பார்கள். இந்தபானத்தில் இருக்கும் ஆல்கஹால் தான் இதனைக் கெட்டுபோகாமல் வைத்திருக்க உதவுகிறது. பெங்களூரில் இருக்கையில் நான் சென்ற தூய மாற்கு (St Mark’s Cathedral) ஆலயத்திலும் இவ்விதமான திராட்சை பழங்களை பிழிந்தெடுத்த சாறு தான் நற்கருணையில் வழங்குவார்கள்.

குமரி மாவட்டத்தில் செயற்கை மணமூட்டிகள் நிறமூட்டிகளைக் கொண்டு வழங்கப்படும் பானமும், பெங்களூரில் வழங்கிய திராட்சை ரசம் என்றாலும், வழங்கப்படும் நோக்கம் ஒன்றுதான். இரண்டு பானங்களும் இயேசுவின் அருட்கொடையாம் சிலுவைப்பாடுகளை நினைவுறுத்தும் ஒன்றே. அது கிறிஸ்துவின் இரத்தத்தில் நாம் பங்குகொள்ளுகிறோம் என்னும் பேருண்மையின் அடையாளம் மட்டுமே. ரசத்தின் உள்ளடக்கம் என்பது இங்கு அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தை மட்டுமே தாங்கி நிற்பதாக அமைகிறது என்றே கொள்ளவேண்டும். அவ்வகையில் சுண்ணாம்பு தடவிய பதனீரோ அல்லது கள்ளோ பனையேறியின் உழைப்பின் அடையாளமாகத்தான் பார்க்கப்படவேண்டும். வேறு வகைகளில் பார்க்கப்படுவது பார்பவரின் பார்வைக் குறைபாட்டையே எடுத்தியம்பும்.
திருமறையில் இயேசு அருந்திய திராட்சை ரசம் எப்படிப்பட்டது என்று விவாதங்கள் வரலாற்றில் அப்போதே எழுந்திருக்கின்றன. “எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்”. (மத்தேயு 11: 18 – 19) இந்த வசனம் “நீதி” என ஒப்புக்கொள்ளப்படும் என்ற இடத்தில் நிறைவடைகிறது கவனத்திற்குட்படுத்தவேண்டியது ஆகும். அதுவே ஞானம்.
இன்று கள் என்பது கண்டிப்பாக போதை வஸ்து அல்ல. அது போதைக்கு எதிரான ஒன்றாகவே எழுந்து நிற்கின்றது. இன்றைய தமிழக அரசு வழங்கும் வெளிநாட்டு மதுபானங்கள் என்பவை உடலையும், உள்ளத்தையும், குடும்பங்களையும் அழிப்பவை. ஆனால் பனங்கள் என்பது குடும்பங்களை வாழ வைப்பவை. அது ஒரு விடுதலையின் அடையாளம். காலம் காலமாக தங்கள் முன்னோர் புழங்கிய தளங்களில் பனையேறிகள் தங்கு தடையின்றி பயணிக்கும் அனுமதி சீட்டு.
கள் இறக்க அனுமதி இருந்தாலே பனை சார்ந்த பிற தொழில்கள் செழிக்க இயலும். பலர் என்னிடம் கள் என்பது ஒரு போதைப்பொருள் தான். அவைகள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஏன் கள் விற்பனையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்கள் பதனீர் எடுப்பதை ஊக்கப்படுத்தினால் அவர்களுக்கு எந்த வகையிலும் வருமானம் குறைவுபடாதே? இவ்விதமான தீய காரியங்களுக்கு ஏன் உடன்படுகிறீர்கள் என கேள்விகளை முன் வைப்பார்கள். நான் மறு உத்தரவாக அவர்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் பனை ஏறுவீர்களா? என்பதைத்தான். பனை ஏறாதவர்கள் பனையேறிகளுக்கு எது தேவை என நிர்ணயிக்க இயலாது. பனை ஏறுகிற எவருமே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து நான் பார்த்ததில்லை. கள் குடிக்காமல் பனையேறிகள் இருந்திருக்கலாம் ஆனால், ஒருபோதும், பனை சார்ந்து இயங்கும் மக்கள் கள் தடை வேண்டும் என சொல்லமாட்டார்கள். கள்ளில் இருக்கும் மருத்துவ குணங்கள் அப்படிப்பட்டவைகள். குறிப்பாக கோடை கால வெம்மையிலிருந்து மக்களைக் காக்கும் அருமருந்து கள். ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு என்பது, பனையேறிகளைப் புரிந்து கொள்ளாமை தான்.
முந்தைய பயணம்போல் நான் எனது இருசக்கரவாகனத்தை இப்பயணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனது இருசக்கர வாகனம் இல்லாத கலவையான ஒரு பயணம் இது. இவ்விதமான கலவையான ஒரு பயணத்தை எப்படி ஒருங்கிணைத்து எழுதுவது என்ற எண்ணம் என் மனதின் அடியாளத்தில் இருந்துகொண்டிருந்தது.
இச்சூழலில் தான் நண்பர் ஷாகுல் திருவனந்தபுரத்திலுள்ள நண்பர் சுப்பிரமணியின் தொடர்பு எண்னைக் கொடுத்தார். நண்பர் சுப்பிரமணி உளவுத்துறையில் பணியாற்றியவர். அதற்கான கல்வியினை கற்கும்படியாக பல நாடுகளுக்கு பயணித்தவர். இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மூலமாக எனது பயணக்கட்டுரையினைக் குறித்து கேள்விப்பட்டு, பின்னர் சாகுல் அவர்களின் கடையிலிருந்து எனது புத்தகத்தை வாங்கி வாசித்திருக்கிறார். எனது பனைமரச்சாலையினை வாசித்துவிட்டு என்மீது தனிப்பிரியம் கொண்டு என்னைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்படியும் திருவனத்தபுரத்தைக் கடந்து செல்வதினாலேயே நான் அவருக்கு படங்களை எடுத்துச் செல்லவும் அவரை சந்திக்கவும் உறுதி கூறினேன். எனது பயணத்தின் துவக்கம் முதல் என்னோடு தொடர்பில் இருந்தார். திருவனத்தபுரத்திலிருந்து தேவிகோடு செல்வதற்கு உதவி வேண்டுமென்றால் தாம் உதவி செய்வதாகவும் கூறியிருந்தார். என்ன உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்றார்.
நான் திருவனந்தபுரம் வருகிறேன் என அறிந்தபோது எனது மூத்த சகோதரி மெர்சியா அவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு செல் என்றார்கள். அவர்கள் திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணினோம் ஆனால் அவர்கள் நெடுமங்காடு செல்லும் வழியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக விலாசத்தைப் பார்த்து சுப்பிரமணி கூறினார்.
திருவனந்தபுரம் வந்து இறங்கியதும் அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டோம். சுமார் ஒரு மணி நேரம் நின்றுகொண்டிருந்தோம். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைத் தவிர வேறு எவரும் அங்கு இல்லை. எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நபர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். ஒருவழியாக அனைத்து முறைமைகளும் முடிந்து வெளியே வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பிள்ளைகள் துவண்டுபோனார்கள்.
இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டின் வந்து காத்திருந்தார். போதகர் ஜாண் ராஜாமணி அவர்களும் எங்களுடன் வீட்டிற்கே வருவதாக கூறியிருந்தார். நாங்கள் பெட்டிகளை வண்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது நண்பர் சுப்பிரமணி அவரது காரிலேயே வந்து சேர்த்துவிட்டார். அடையாளம் கண்டதும், காரிலிருந்து மிகவும் உயரமான நல்ல உடல்வாகும்கொண்ட ஒரு நபர் இறங்கி என்னை நோக்கி வந்தார். நான் என்ன என எண்ணுமுன்பே எனது காலில் விழுந்தார். பையன் ஜனா தான் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சுப்பிரமணி சொன்னார். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று சொன்னேன்.
எனது குடும்பத்தினர் மற்றும் போதகர் ராஜாமணி ஆகியோரை ஜஸ்டின் காரில் ஏறச்சொல்லிவிட்டு, நான் நண்பர் சுப்பிரமணி அவர்கள் காரில் ஏறிக்கொண்டேன். உடனேயே கொண்டு வந்த படங்கள் மறந்துவிடக்கூடாது என எண்ணி, அவரிடம் கொடுத்தேன். பசிக்கிறது எங்காவது நிறுத்துங்கள் என்றேன். எங்கள் கார் முன்னால் வழிகாட்டியபடி செல்ல குடும்பத்தினர் எங்களைத் தொடர்ந்தனர். திருவனத்தபுரம் கிட்டத்தட்ட அடைபட்டுக்கிடந்தது. உணவு தேடியபடி சென்றோம். ரோட்டோரம் ஒரு கேரவனைக்கண்டு நிறுத்தி, சுட சுட கேரள கல் தோசை, ஆறென பெருக்கெடுத்தோடும் சுவையான தேங்காய்ச் சட்னி மற்றும் பீஃப் சாப்பிட்டோம்.
சுப்பிரமணி, சொல்லியிருந்தால் கண்டிப்பாக வீட்டில் உணவு தயாரித்திருப்பேன் என்றார்கள். அக்கா பணியாற்றும் இடத்திலும் உணவு தயாரிக்க இயலாத சூழ்நிலை. செல்லும் வழி எங்கும் பேசிக்கொண்டே சென்றோம். அக்காவை பார்த்தபோது மகிழ்ந்துபோனோம். அக்கா அவர்கள் இருக்கும் இடத்தைக் சுற்றிகாட்டினார்கள். கத்தோலிக்க குருமார் நடத்தும் அந்த கல்லூரி மிகவும் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்ததை அந்த இரவிலும் கண்டுகொண்டோம்.

எங்கள் சுருக்க பயணத்தில் நான் கண்டுகொண்டது இதுதான். சுப்பிரமணியிடம் ஒரு வேகம் இருந்தது, அன்பு கூறுவதில் ஆகட்டும், பேச்சில் ஆகட்டும், வாகனம் ஓட்டுவதில் ஆகட்டும், நிறுத்தவியலா ஒரு கரைபுரண்டோடும் தன்மை உண்டு. நான் மிகவு ரசிக்கும் ஒரு வேகம் அது. அவர் ஒரு பிள்ளை சமூகத்தை சார்த்தவர். பிள்ளை சமூகத்தினரிடையே பனை சார்ந்து காணப்படும் தொடர்புகளை எனக்கு விவரித்தபடி வந்தார். அது எனக்கு மாபெரும் திறப்பு. பெரும்பாலான சடங்குகள் நமது சாதிக்குள்ளேயோ அல்லது சமயத்திற்குள்ளேயோ இருப்பதால், நம்மால் ஒருபோதும் பிற சாதியினர் எவ்விதம் தங்கள் சடங்குகளைச் செய்கின்றனர் என உணர முடியாது, பார்க்கவும் வழியில்லை. அன்று மட்டும் என்னிடம் பலமுறை கூறியபடி வந்தார், “நீங்கள் இந்த பயணத்தை ஒரு கட்டுரைத் தொகுப்பாக போடவேண்டும் என்று”. என்னால் இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் முயன்று பார்க்கலாம் என வாக்களித்தேன். இப்புத்தகம் வடிவம்பெறுமென்றால் அதற்கான “பிள்ளை”யார்சுழி சுப்பிரமணி தான்.
நாங்கள் பிரியும் வேளை வந்தபோது, எனது கரத்தில் ரு2500/- கொடுத்தார். நான் இருக்கட்டும் வேண்டாம் எனக் கூறினேன். உங்கள் பயணம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதனை ஒரு வாழ்த்தாக பெற்றுக்கொண்டேன். பயணம் குறித்து எழுதுவது மட்டுமல்ல பயணம் செய்வதே இப்போது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.
நான் அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறியவுடன், போதகர் என்னிடம் கூறினார்” திருச்சபையில் கூட இத்துணை அன்பானவர்களை காண்பது அரிது என்றார்” ஆம். நான் மட்டுமல்ல சுப்பிரமணியுடன் பழகியவர்கள் கண்டிப்பாக இதனை உணர்ந்துகொள்ளுவார்கள்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, மும்பை
malargodson@gmail.com / 9080250653
மறுமொழியொன்றை இடுங்கள்