பறவைகள் பனைவிதம்
2017 ஆம் ஆண்டு, பனையேற்றம் என்ற குழுவினை இளவேனில் மற்றும் சாமிநாதன் எனும் இளைஞர்கள் துவங்கியிருந்தனர். பனையேற்றம் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பனையேற்றம் என்பது ஒரு முழுமையை சுட்டி நிற்கும் சொல். பனை பெரும்பாலும் தனித்து நிற்கும் ஒன்றைக் குறிப்பதாகவே நான் காண்கிறேன். பனை சார்ந்து தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வு அரும்பியிருந்த காலம் அது. பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில், செம்மை நிகழ்த்தும் பனை கூடல் என்ற நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். செம்மை அமைப்பும், செம்மையினை வழி நடத்தும் செந்தமிழன் அவர்களும் எனக்கு அப்போது தான் அறிமுகம். நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பனங்காட்டில் வைத்து நடைபெற்றது. அனைவருக்குமான உணவினை அங்கு வந்தவர்களே இணைந்து பொங்கினார்கள். அனைத்து செலவுகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அன்று மதியம் செந்தமிழன் பேசினார். பனை குறித்து அதிகம் பேசவில்லை என்றாலும் இயற்கையான ஒரு மரத்தினை சார்ந்து வாழ்வது எவ்வகையில் நமக்கு உகந்தது என அவருக்கே உரிய பாணியில் பேசினார். தமிழர்களது வாழ்வில் இனிப்பு என்பது கருமையோடு தொடர்புடையது என்பதை, தேன், வெல்லம், கரும்பு, கருப்பட்டி என அவர் வரிசைப்படுத்தி கூறியது, வெள்ளைச் சர்க்கரைக்கு எதிரான மண் சார்ந்த குரல் என்றே பார்க்கிறேன்.

இரவு ஒரு அமர்வு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பனை குறித்து விரிவாக நான் அறிந்தவற்றைக் குறித்து பேசினேன். திருச்சபைக்குள் இருந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுள், தனியனாக நான் எழுப்பும் கூக்குரலையும், எனது எளிய பங்களிப்புகளையும் குறித்து விவரித்தேன். “ஈராயிரம் ஆண்டுகளாக குருத்தோலைப் பண்டிகையினை கொண்டாடும் திருச்சபை ஏன் ஒரு பனை மரத்தைக் கூட நடவில்லை”? என திருச்சபை நோக்கி நான் எழுப்பிய கேள்வியினை பகிர்ந்தபோது அனைவரும் நிமிர்ந்து என்னைப் பார்த்தனர். அக்கூடுகையில் கிறிஸ்தவரல்லாதோர் பெருவாரியாக இருந்தாலும், நான் என்ன கூற வருகிறேன் என மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால் எவருமே என்னிடம் கேள்வி எழுப்பவில்லை. அதற்கு காரணம் பனை குறித்த எந்த அறிமுகமும் அவர்களுக்கு இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் பனை குறித்து அறிந்துகொள்ள வந்தோம் என அனைவரும் ஒத்துக்கொண்டனர். இது ஒரு முக்கியமான புரிதலை எனக்கு ஏற்படுத்க்டியது. பனை சார்ந்து வாழும் தென் மாவட்டட்தைச் சார்ந்டவர்களுக்கு பனை குறித்து ஒரு விலக்கமும், பனை குறித்த புரிதலற்ற சமூகம் பனை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற காட்சி வெளிப்பட்டது. அன்று வந்திருந்தவர்களில் அனேகர் எனது தொடர்பு எண்ணை எடுத்துக்கொண்டார்கள். அன்று இரவு அங்கே தங்குவதற்கு பள்ளிகூடம் ஒன்று இருந்தாலும், பெண்கள் உட்பட அனைவருமே வெளியே கிடந்த கடல் மணலில் தான் உறங்கினோம். எனது பயணங்களில் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இது அமைந்தது. இப்படி கட்டற்று தேடல் ததும்பி வழியும் ஒரு குழுவினரை என் வாழ்வில் நான் சந்தித்ததே இல்லை.

இங்கு வைத்து தான் கல்யாண் குமார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் சென்னையை அடுத்த திருவள்ளூரில் பனை சார்ந்த பயிற்சி ஒன்றை ஒழுங்குசெய்தார்.சுமார் 10 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சிக்கு இரு திருநங்கைகள் வந்திருந்தார்கள். நான் மிகவும் மதிக்கும் ஐயா கலையரசன் அவர்களை அந்த நிகழ்விலே தான் சந்தித்தேன். கல்யாண் குமார், சென்னை வந்தால் என்னை பார்க்காமல் செல்லக்கூடாது என அன்புகட்டளை இட்டிருந்தார், ஆகவே, பெரும்பாலும் சென்னை செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்துவிடுவேன். நான் சென்றால் தனது வங்கி வேலையைக் கூட கல்யாண் ஒதுக்கிவைத்துவிட்டு என்னுடன் பயணிப்பார். அவர் என்மீது கொண்ட அன்பு ஆழமானது. திருமாவளவன் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி, பனை விதைகளை சேகரிக்க துவங்குகையில், எனக்கு பதிலாக கல்யாண் அவர்களை தான் நான் உதவிக்கு அனுப்பினேன். இப்போதும் சென்னை செல்ல ஆயத்தமாகும்போது கல்யாண் தான் நினைவுக்கு வந்தார்.

கல்யாண் தனது வேலைகளுக்கு மத்தியில், எனக்காக நேரத்தை ஒதுக்கினார். விடுப்பு எடுத்து எனக்காக காத்திருந்தார். தாம்பரத்தில் இறங்கி, அவரது வீடு இருக்கும் நிமிலிச்சேரி பகுதிக்கு பேருந்தில் சென்று இறங்கினேன். அவர் பேருந்து நிலையத்திற்கு வந்து என்னை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது அப்பாவும் அம்மாவும் வீட்டிலிருந்தார்கள். மனைவி அருகிலிருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அவரது வீட்டில் குளித்து சுட சுட தோசை சாப்பிட்டுவிட்டு பழவேற்காடு நோக்கி கிளம்பினோம். பொது முடக்கம், அனைவரையும் சற்று அதிகமாகவே சீண்டிப்பார்த்திருக்கிறது. கல்யாண் தனது வீட்டை சமீபத்தில் தான் கட்டியிருந்தார். ஆகவே வருமானம் கிடைக்கும்படியாக ஏதேனும் ஒரு தொழிலினை மேற்கொண்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை. மீன் கடை வைக்கும் எண்ணம் தனக்கிருப்பதாகவும், பழவேற்காடு சென்றால், மீன்களை வாங்கும் வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ளலாம் என்று கூறியபடி வந்தார்.

அவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு ஈச்சமரத்தில் சில தூக்கணாங் குருவி கூடுகள் இருப்பதைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சற்று தூரத்தில் வேறொரு பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். நாங்கள் செல்லும் வழியில் கூட பனை மரங்களில் பல இடங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பெரும்பாலும் பார்க்க முடிந்தது. வெகு ஆச்சரியமாக அன்று ஒரு தென்னை மரத்திலும் தூக்கணாங் குருவிக் கூடுகளைப் பார்த்தேன். எனது நண்பனும் பறவைகளை மிக அதிகமாக நேசிக்கும் பாண்டிச்சேரி ராம், என்னிடம் அடிக்கடி சொல்லுவான் “தூக்கணாங் குருவி வேறே எங்கண்ணே இருக்கும்? பனை மரத்திலே தானே அண்ணே கூடு கட்டும்”. அவனது கூற்று முற்றிலும் உண்மையானது. பனை மரங்களே அவைகளின் விருப்பத்திற்குரிய வாழிடம். அப்படி பனை மரங்கள் இல்லாதிருந்தால் அவைகள் வேறு மரங்களையோ புதர் செடிகளையோ வேறு இடங்களையோ தெரிவு செய்துகொள்ளும். வயல் வெளிகள், மற்றும் சதுப்பு நிலங்களிலோ அல்லது நீர் இருக்கும் கிணறுகள் அருகிலோ, ஒற்றையாக நிற்கும் மரங்களை தெரிவு செய்து தங்கள் கூடுகளை தூக்கணாங் குருவிகள் அமைப்பதை பார்த்திருக்கிறேன்.

2017 ஆம் ஆண்டு மும்பை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் எடுக்கப்பட்ட துக்கணாங் குருவி கணக்கெடுப்புகளில், இந்திய அளவில் தூக்கணாங் குருவிகள் குறைந்து வருகின்றன என பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் (BNHS) பதிவு செய்கிறார்கள். இப்பதிவில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் எந்த முடிவிற்கும் வரவியலாது ஏனென்றால், இது ஒரு முழுமையான ஆய்வு அல்ல, ஆய்வின் துவக்கம் மட்டுமே. ஆனால், அவர்கள் வெளிப்படுத்தும் சந்தேகம் உண்மையானது. அந்க்ட சந்தேகம் எனக்குளூம் அப்படியே இருக்கிறது. இன்று BNHS பறவை ஆர்வலர்களையும், பறவையியலாளர்களையும், சூழியல் செயல்பாட்டாளர்களையும், காட்டிலாகாவினரையும் துக்கணாங் குருவி கணக்கெடுப்பு செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். அப்படியானால், பறவைகளின் எண்ணிக்கையில் ஒரு மாபெரும் வீழ்ச்சி புலப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஒருவேளை பனை மரங்களின் அழிவு தான் இப்பறவைகளின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறதா? இயற்கை சங்கிலியில், பனை மரங்களை நாம் பெரும்பாலும் பொருட்டாக கருதுவதில்லை, ஆனால் அவைகளின் இருப்பு முக முக்கியமானது என எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை வேறு பல காரணிகளும் தூக்கணாங்குரிவியின் அழிவிற்கு காரனமாக இருக்கலாம். அவைகள் என்ன என்பது தேடிக்கண்டடயவேண்டியவைகள். இப்பேரழிவிற்கு காரணங்கள் என்ன என்பதை விகிதாச்சார அடிப்படையில் நாம் ஆராயவேண்டும்.

குமரி மாவட்டத்திலும் நான் பெருமளவு இவைகளை நான் கண்டது இல்லை. ஒரு முறை வெள்ளிமலை பகுதியிலிருந்து கூட்டுமங்கலம் செல்லும் வயல்வெளி குறுக்குப்பாதையில், காணப்பட்ட ஒரு பனை மரக்த்தில் சில தூக்கணாங்க் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். குமரி மாவட்டத்தில் வேறு எங்குமே பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகளை நான் காண இயலவில்லை. ஒருவேளை நாகர்கோவிலுக்கு கிழக்குப் பகுதிகளில் அவைகள் காணப்படலாம். நான் தற்போது வாழும் ஆரே பகுதிகளில் வந்த துவக்கத்தில் ஒரு பனை மரத்தில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள் இருந்ததைப் பார்த்தேன். பின்னர் அவைகளை என்னால் காண முடியவில்லை. பனை மரங்கள் இங்கு வெகுவாக குறைந்துவிட்டது ஒருபுறம், மற்றொருபுரம், இங்கு இருக்கும் ஆதிவாசிகளின் வாழ்வு நகரமயமாக்கலில் பெருமளவில் மாறிவருகிறது. குறிப்பாக, வயல்வெளிகள் இங்கு அருகிவருவதும் ஒரு காரணம். ஒருவேளை, ஆதிவாசிகள் கூட பயிர்களைக் காக்கும்படியாக சில பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது இப்பறவைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஆரே காலனி அலகு எண் 7ல் இருக்கும் எங்கள் ஆலயத்திற்கு எதிர்புறம் உள்ள புல்வெளி நடுவில் இருக்கும் ஒரு அரச மரத்தில், ஒரு சில கூடுகளைப் கடந்த மாரி காலத்தில் பார்த்தேன். இப்போது அவைகள் இல்லை. அந்த அரச மரத்தை பருந்துகள் ஆக்கிரமித்துவிட்டன. தூக்கணாங் குருவிகள் எங்கே சென்றுவிட்டன என தேடிக்கொண்டே இருக்கிறேன். மகராஷ்டிராவின் பால்கர் பகுதிகளில் இன்னும் பனை மரங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகள் ஆங்காங்கே இருக்கின்றன.

2018 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் துக்கணாங் குருவிகள் கூடு குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. சுமார் 42 வகையான தாவரங்களில் தூக்கணாங் குருவிகள் தங்கள் கூடுகளை அமைப்பது இதன் மூலம் கண்டடையப்பட்டது. இவைகளில் 92 சதவிகித கூடுகள், பனை, தென்னை மற்றும் ஈச்சை மரங்களில் இருப்பதாக பதிவு செய்கிறார்கள். இந்த ஆய்வில் துணை நின்ற ஆய்வுக்கட்டுரையில் T A டேவிஸ் அவர்கள் மிக முக்கியமாக அடிக்கோடிடப்பட்டிருப்பது எனக்கு புதிய திறப்புகளைக் கொடுக்கிறதாக அமைந்தது. 1974 வாக்கிலேயே அவர் எழுதிய தூக்கணாங்குருவி குறித்த கட்டுரைகள், அவரது பனை சார்ந்த தேடுதலின் அங்கமாக இது இருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. T A டேவிஸ் அவர்கள் பனை சார்ந்து சர்வதேச கட்டுரைகள் எழுதிய மிகப்பெரிய ஆளுமை.

ஆரே காலனி வந்த பின்பு இங்குள்ள வார்லி பழங்குடியினருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டேன். அப்படியே பழங்குடியினருக்காக களப்பணியாற்றும் சில நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒரு சிலருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் வாய்த்தன. இந்த நெருக்கம் வார்லி பழங்குடியினரின் வாழ்வில் பனை எப்படி இரண்டரக் கலந்திருக்கிறது என்பதற்கான தரவுகளை சேர்க்க உதவியது. வார்லி பழங்குடியினரின் ஓவியங்களில் பனை மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், தூக்கணாங் குருவிகளைக் குறிப்பிடுமிடத்தில் அவைகள் பனையிலோ ஈச்சமரத்திலோ அல்லது தென்னை மரத்திலோ இருப்பதாகவே பதிவு செய்யப்படும். இது வெறுமனே போகிறபோக்கில் வரையப்படும் சாதாரண படங்களல்ல. பத்தாயிர வருட வார்லி பழங்குடி வாழ்வின் தொடர்ச்சி. அவர்கள் தொடர்ந்து இயற்கையை அணுகி அறிந்த உண்மையினை சொற்களாக்கும் முன்பு வரைந்து காட்டிய வாழ்கைச் சித்திரம்.

தூக்கணாங் குருவிகளின் கூடுகள் புற்களாலும், நெற்பயிரின் இளம் தாள்களாலும் கட்டப்படுபவைகள். அவைகளின் வாழிடம் குறித்தும் ஆய்வுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவைகளின் உணவு பழக்கம் குறித்த தேடுதல் நமக்கு பலவிதமான உண்மைகளை வெளிப்படுத்த வல்லவை. சிறிய விதைகளை தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணும். அரிசி, கோதுமை, பார்லி போன்றவை அவைகளின் விருப்ப உணவு என்பதாக அறிகிறோம். வெட்டுக்கிளிகள், சிறு பூச்சிகள், வண்டுகள், கரையான் வண்ணத்துப்பூச்சிகள், கம்பளிப்பூச்சி போன்றவற்றையும் தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணுகின்றது. சில நேரங்களில் மலர்களில் உள்ள தேனையோ, பதனீரையோ, சிலந்தி, சிறு நத்தைகள் மற்றும் நெல் தவளை போன்றவற்றையும் உண்ணுகிறது. நெற்பயிரும் பனையும் இணைந்து நிற்கும் இடங்களில் இவைகள் கூடமைப்பது சதுப்பு நிலப்பகுதிகளை இவைகள் தேர்ந்தெடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும். ஆகவே, பனை மரங்கள் சதுப்பு நிலத்திலும் வளரும் தன்மைகொண்ட மரம் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது.

பனைமரச் சாலை பயணம் தான் என்னை முதன் முறையாக பனை மரங்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பை கண்டுணரும் வாய்ப்பை நல்கியது. அது மிகவும் எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஆனால், அந்த திறப்பு எனக்கு பல்வேறு வகைகளில் பனை மீதான எனது முடிவுகளையே உறுதிப்படுத்திக்கொண்டு இருந்தன. குறிப்பாக நம் நாட்டு பறவைகளில் பெரும்பாலானவைகள் பனை மரத்தை கூடாகவோ, வேட்டைக்களமாகவோ அல்லது இளைப்பாறுமிடமாகவோ வைத்திருக்கின்றன. ஆனால் பனை மரத்திற்கும் நமது சூழியலுக்கும் உள்ள தொடர்பு குறித்து இதுவரை குறிப்பிடத்தகுத்த ஒரு கட்டுரை கூட வெளிவந்தது இல்லை. இத்தனைக்கும் நம்மிடம், இயற்கை சார்ந்து பணியாற்றுகிறவர்கள் ஏராளம் உண்டு.

2017 ஆம் ஆண்டு ஹைதிரபாத் பகுதியில் இருக்கும் ஹென்றி மார்டின் இன்ஸ்டிடியூட் (HMI) என்னை பனை சார்ந்த ஆவண படம் எடுக்க பணித்திருந்தார்கள். பறவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்பினை அறிய வேண்டி நான் டாக்டர். ராபர்ட் கிரப் (Robert Grubb) அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்.
தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த பறவையியலாளரான அவரது மகன் எனது நெருங்கிய நண்பன். நாங்கள் கல்லூரியில் ஒன்றாக படித்தோம், கல்லூரி பாடகர் குழுவில் இணைந்து பாடினோம், ஒன்றாக சைக்கிள் ஓட்டினோம், தேசிய மாணவர் படையில் இணைந்திருந்தோம், மேலதிகமாக நாகர்கோவிலை அடுத்த கீழப்பெருவிளை என்ற ஒரே ஊரின் இரு வேறு பகுதிகளில் தங்கியிருந்தோம். கல்லூரி காலத்தில் அடிக்கடி சந்திப்போம். ஆகவே அவரிடம், சற்றே உரிமையுடன், பனை மரங்களில் இருக்கும் பறவைகள் குறித்து எனக்கு சில குறிப்புகளைக் கூற முடியுமா என்று நான் கேட்டபோது, அவர் யோசிக்காமலேயே, “அப்படி பனை மரத்தில் பெரிதாக ஒன்றும் இருக்கிறது மாதிரி தெரியவில்லையே” என்றார். எனக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் மூத்த சூழியலாளர்களுல் ஒருவர் அவர்.

அவரிடம் இருந்து பெறும் ஒவ்வொரு வார்த்தைகளும் வரம் போன்றவைகள். அவர் திடுமென அப்படி சொல்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் நானே பல பறவைகளை பனை மரத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை அவரிடம் நான் நேரடியாக சொல்ல முடியாது. ஆகவே, அவர் தலைமுறையிலுள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வரும் தாவரவியலாளருமான டாக்டர் ஷோபனராஜ் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, பனங்காடை என்று ஒன்று பனை மரத்தில் இருப்பதாக அவர் கூறினார் என்றேன். மேலும், பொன்னி குருவி என்கிற பாம் சுவிஃப்ட் (Palm Swift) என்ற பறவையின் பெயரையும் அவர் குறிப்பிட்டார் எனக் கூறினேன். அவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். நீ ஒரு முடிவோட தான் வந்திருக்கே என்பது அதன் அர்த்தம். ஒரு ஆழ்ந்த அமைதிக்குப் பின் என்னிடம், “நீ ஒரு நாலு நாளைக்கு அப்புறம் வாடே” என்றார். எனக்கு அது முதல் வெற்றி.

நான்கு நாட்களுக்குப் பின்பு, நான் அவரை சந்தித்தபோது அவர் என்னை வெகு உற்சாகமாக என்னை வரவேற்றார். முப்பதிற்கும் மேற்பட்ட பறவைகளைக் குறித்த ஒரு நீண்ட உரையாடலை நான் காணொளியாக பதிவு செய்ய அவர் உதவினார். அவரது விளக்கங்கள் அவ்வளவு தெளிவாகவும், எவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் விளக்கியபடி வந்க்டார். அன்று மட்டும் முப்பது பறவைகளின் பெயர்களைக் குறீப்பிட்டு அவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்புகளை விளக்கிகூறினார். இன்று தமிழகத்தில் இருக்கும் பறவைகளில் சரிபாதி ஏதொ ஒரு வகையில் பனையோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். பறவைகளின் வாழிடம், உணவு மற்றும் அவைகளின் வேட்டைக்களம் போன்றவைகள் பறவையியலாளர்களால் மிக அதிகளவில் பேசப்பட்ட பேசுபொருள் தான். ஆனால் பனை மரங்கள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஏனென்றால், பனை மரத்தின் உயரம், எங்கும் காணப்படும் அந்த மரங்கள் மீதான சலிப்பு, காடுகளுக்குள் இருக்கும் பறவைகள் மீதான மோகம் என, நாம் அன்றாடும் காணும் பறவைகளுக்கும், பனைக்கும் உள்ள உறவுகளை இணைத்துப் பார்க்க இயலாதபடி நமது கண்களை முடிவிட்டன.

அழகிய நீல நிற சிறகுகள் கொண்ட பறவையினை புளூ ஜே (Blue jay) என்றும் இன்டியன் ரோலர் (Indian Roller) என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் பனங்காடுகள் நிறைந்த பகுதிகளில் தான் இவைகள் வாழும். அப்படியே, பனை சார்ந்த பகுதிகளில் இவைகள் பெருமளவில் காணப்படும் என்றார். பொதுவாக நாம் காணும் காடைகளுக்கும் இவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், பனங் காடை என்ற பெயர், உள்ளூர் மக்களால் வழங்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியம் பனை சார்ந்து வாழும் இப்பறவைகளினை அறிந்துணர்ந்த நமது முன்னோரால் வழங்கப்பட்டிருக்கும் என்பது உறுதி. இதே பறவையினை நான் மும்பை ஆரே காலணியிலும், பால்கர் பகுதிகளிலும், ஒரிசா சென்றிருந்தபோதும் பார்க்க முடிந்தது. பனை மர பொந்துகளில் இவைகள் இருப்பதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன். இப்பறவைகளை நான் எங்கேனும் பார்த்தால் அனிச்சையாக என் கண்கள் பனை மரங்களைத் தேடும். கண்டிப்பாக அப்பகுதிகளில் பனை மரங்களை நான் பார்த்துவிடுவேன். பனையின்றி பனங்காடைகள் கிடையாது எனும் அளவிற்கு அவைகள் பனையோடு இணைந்தே வாழுகின்றன.

பாம் ஸ்விஃப்ட் என்ற பறவைக் குறித்து டாக்டர் கிரப் அவர்கள் விவரித்தது, பனை சார்ந்த புரிதல் கொண்ட ஒருவருக்கே உரித்தானது. மேலும் அவரின் விவரணைகள் பறவையியலாளர்களின் தனித்துவ பார்வைகளையும் கொண்டது. “பாம் ஸ்விஃப்ட் என்பதை பொன்னி குருவி என்று தமிழில் அழைப்பார்கள்” என்றார். மேலும் “குமரி மாவட்டத்தில் மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள்”. மூக்கோலை என்றால் என்ன? பனை ஓலைகள் பார்ப்பதற்கு விரிந்திருப்பது போல தெரிந்தாலும், அவைகளில் மூன்று மேடு பள்ளங்கள் இருக்கும். அதிலும் மட்டை வந்து சேருமிடம் மூக்கைப்போல் மேலெழும்பி இருக்கும். இதன் நடுவில் தாம் இக்குருவி வாழும் ஆகவே இதனை மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள். பொன்னி என்கிற வார்த்தை கூட மூக்கோலையின் பகுதியை சுட்டுவதாகவே அமைகிறது. அப்படியானால் பொன்னி என்கிற பெண்பாற் பெயர், பனையிலிருந்து கிடைத்தது மாத்திரம் அல்ல, தன்னை நாடி வருவோருக்கும் அடைக்கலம் அளிக்கும் ஆழ்ந்த பொருள் உள்ள ஒன்றாக வெளிப்படுத்துகிறது. பொன்னி குருவிகளை, நான் பனை இருக்கும் பகுதிகளில் எல்லாம் பார்த்து வருகிறேன். அவைகள் பறந்துகொண்டே உணவை தேடிக்கொள்ளும் எனவும், அவைகள் பெரும்பாலும் காற்றினை பயன்படுத்தி பட்டம் போல் பறக்கும் எனவும் அவர் குற்ப்பிட்டார். மேலும், அவைகள் தமது கூடுகளில் தங்குவதை விட, வெளியே பறந்துகொண்டிருப்பதையே விரும்பும் என்றார்.

தூக்கணாங் குருவி தமது கூடுகளை பனையில் அமைப்பது, எதிரிகளிடமிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும் தனது குஞ்சுகளையும் முட்டையினையும் காப்பதற்காக என்று அவர் சொன்னது மிகவும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஆண் தூக்கணாங் குருவி கட்டும் இக்கூடுகலை பெண் குருவ் வந்க்டு பார்த்து ஆராய்ந்து ஒப்புதல் அளித்தாலே அவைகள் தங்கள் புது வாழ்க்கையை துவங்க முடியும். ஆகவே சில வேளைகளில் முற்றுப்பெறாத கூடுகளும் மரங்களில் தென்படும். தூக்கணாங் குருவிக் கூடுகள் இருக்குமிடத்தினை பாம்புகள் எட்டுவது என்பது வெகு சவாலான விஷயம் என்றே அவர் கூறுகிறார். ஏனென்றால், பனை ஓலைகளின் நுனியிலேயே அவைகள் தமது கூடுகளைக் கட்டும். அதையும் மீறி பாம்புகள் இக்கூடுகளுக்குள் நுழைந்து முட்டைகளை எடுப்பதும், குஞ்சுகளைச் சாப்பிடுவது கூட நிகழ்த்திருப்பதை பாண்டிச்சேரி ராம் கூறினான். உணவிற்கான தேடுதலில், உயிரை பணயம் வைப்பது இயற்கை நியதி தானே? ராபர்ட் கிரப் அவர்கள், வயல் வெளிகளில் இவைகள் கூடு கட்டும்போது பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை சாப்பிடுவதால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது எனக் கூறினார். இப்பறவைகள் தங்கள், இனப்பெருக்க காலத்தில் இன்னும் அதிகமாக பூச்சிகளை வேட்டையாடும். ஆகவே தூக்கணாங் குருவிகள் விவசாயிகளின் நண்பன் தான் என்றார்.

அனைத்தையும் விவரித்து முடியும் தருவாயில், டாக்டர். கிரப் அவர்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்ததை நான் நேரிலேயே பார்த்தேன். அவர் அதுவரை தனது கவனத்தைச் செலுத்தாத ஒரு மரத்தின் மீது அவருக்கு ஏற்படும் பிடிப்பு தான் அது. அன்று இறுதியாக அவர் இப்படி சொன்னார், “பனை மரம் சார்ந்து வாழும் பறவைகளை வைத்து பார்க்கையில், பனை மரமே ஒரு சரணாலயம் தான்”. நான் அதைக்கேட்டபொழுது அப்படியே நெஞ்சுருகிப்போனேன். எதற்கென அவரைத் தேடி வந்தேனோ அது கச்சிதமாக நிகழ்ந்த பொற்தருணம் என்றே அதைக் கருதுவேன். ஒரு பறவையியலாளராக அவர் பல சரணலயங்களைப் பார்த்திருப்பார், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் அவ்வித சரணாலயங்களை குறித்து பதிவு செய்துமிருப்பார். ஆனால், அவரது வாழ்க்கையில் முதன் முறையாக பனை மரத்தை ஒரு சரணாலையம் என்று சொல்லுகின்ற தருணத்திற்கு அவர் வந்தது அவருக்கே வியப்பளித்திருக்கும். அந்த வார்த்தை அவர் இதயத்திலிருந்து எழுந்த ஒன்று என்பது மறுக்கவியலா உண்மை. அவரும் ஒரு பரவச நிலையிலேயே இருந்தார்.

2017 – 19 வரையிலும் இரண்டு வருடங்கள், நான் தமிழகம் முழுவதும் பனை மரத்தினை குறிவைத்து அலைந்து திரிந்தேன். நேரடியாக பல்வேறு பறவைகளும், விலங்குகளும், உயிரிகளும் பனையுடன் இணைந்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறேன். நினைக்கவியலா ஒரு பெரும் தொகுப்பு அது. இம்மண்ணில், பனைச் சூழியல் குறித்து தேடும் ஒரு தலைமுறை எழும்புமென்றால் , பனை மரம் எத்துணை முக்கியமானது என்பது நமக்கு தெரியவரும்.

பொதுவாகவே பனையுடன் இணைந்து வாழ்பவர்களுக்கு பனையுடன் இருக்கும் பல்வேறு உயிரினங்கள் குறித்த புரிதல் தானாகவே இருக்கும். எளிமையாக சொல்லவேண்டுமென்றால், பனைமரத்தடியில் சென்று பதனீர் வாங்குபவர்களோ அல்லது கள் அருந்த செல்லுபவர்களோ அந்த பானங்களில் விழுந்து கிடக்கும் எண்ணிறந்த பூச்சிகள் குறித்த புரிதல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தேனீக்கள், பல்வேறு ஈக்கள், வண்டுகள், கொசுக்கள், வண்ணத்து பூச்சிகள், அந்துப்பூச்சிகள், தும்பி, எட்டுக்கால் பூச்சிகள், எறும்புகள், குளவிகள் கடந்தைகள், தேள் என பூச்சியியலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பனை. பல்லிகள், ஓணான், பச்சோந்தி, அரணை, உடும்பு, பல்வேறுவகை பாம்புகள் என ஊர்வன பட்டியல் தனியாக இருக்கும். மிகச்சிறிய பாலூட்டியான எலி முதல், பழவுண்ணி எனப்படும் மரநாய், குரங்கு, தேவாங்கு, கரடி மற்றும் பனம் பழங்களை விரும்பி உண்ணும் மான்கள், நரி, காட்டு மாடுகள், பன்றிகள் மற்றும் வீட்டு விலங்குகளான நாய், ஆடு, மாடு போன்றவைகளுடன் மிகப்பெரிய உயிரியான யானையையும் குறிப்பிட வேண்டும். பறவைகளில், தேன் குடிக்கும் மிகச்சிறிய பறவைகளிலிருந்து பூச்சிகளைப் பிடிக்கும் பறவைகளும், காகம், கிளி, மைனா, ஆந்தை, என உருவங்கள் பெரிதாகி, வைரி, ராஜாளி, அரிவாள் மூக்கன், பருந்து மற்றும் மிகப்பெரிய மயில் மற்றும் கழுகுகள் வரை பனை மரங்களில் வந்தமரும். பலவேறு நிலப்பரப்புகளில் பனை மரத்தில் வாழும் நத்தைகளையும், ஒருசிலவிடங்களில் மரத்தவளைகளையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஏன், பனயேறிக்கெண்டை என்ற மீனே பனை ஏறுகிற ஒன்றாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட சங்கிலியைத் தான் நாம் எவ்வித அடிப்படை புரிதலுமின்றி தகர்த்தெறிந்துகொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை. பனையேறுகின்ற மனிதன் தான் இவைகள் அனைத்தையும் காப்பாற்றிவரும் சூழியலாலன். தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படவேண்டியவன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, மும்பை
malargodson@gmail.com / 9080250653
மறுமொழியொன்றை இடுங்கள்