பறிபோகா உறவுகள்
எங்களது பயணம் நீண்டுகொண்டே சென்றது மதியம் 12.30 வாக்கிலே தான் சென்று சேர்ந்தோம். நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு நீண்ட பாலத்தின் ஆரம்பம். அந்த பாலத்திற்கு அப்பால் தொலை தூரத்தில் ஒரு கலங்கரை விளக்கம் நின்றுகொண்டிருந்தது. அதனைச் சுற்றிலும் பனை மரக்கூட்டம். எனக்கு அந்த காட்சி மிகவும் பிடித்திருந்தது. அக்காட்சி என் மனதிற்கு நெருக்கமானது மட்டுமல்ல, கலங்கரை விளக்கத்தின் ஊற்றுக்கண்ணே பனை மரம் தான் என நான் எண்ணிக்கொள்வதுண்டு. கிட்டத்தட்ட இதற்கு இணையாக கன்னியாகுமரியிலும் பனை மரங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் நின்றுகொண்டிருக்கும். பல பனை மரங்கள் அழிந்துபோனாலும், இன்றும், ஒரு சில பனை மரங்கள், முட்டம் கடற்கரையினை ஒட்டி இருப்பதை நான் பதிவு செய்திருக்கிறேன். இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கூட ஒரு சில பனை மரங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். நான் எனக்கான இடத்தை தேடி வந்திருக்கிறேன் என்ற நிறைவை அந்த பனைமரங்களும் கலங்கரை விளக்கமும் கொடுத்தது.
அங்கே சுமன் என்ற மீனவர் நண்பர் ஒருவரின் தொடர்பு எண்ணை சேவியர் கொடுத்திருந்தார்கள். அவரை தொடர்புகொள்ள முயற்சித்தோம், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். ஆகவே, எங்களுக்கு இடதுபுறமாக காணப்பட்ட மீன் சந்தைக்குச் சென்றோம். மீன்பிடி படகுகள், தோணிகள் அதிகமாக அப்பகுதிகளில் நின்றுகொண்டிருந்தன. கடலை ஒட்டி அனைத்து மீன்களும் உடனுக்குடன் பிடிக்கப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருந்தது. இறால் அதிகமாக தென்பட்டது. எதுவும் மலிவாக இருப்பது போல தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அனைத்தும் பிடிக்கப்பட்டு உயிருடனோ அல்லது சற்று நேரத்திற்கு முன் உயிரை விட்டோ வந்திருக்கிறது.
சுமன் வருவதற்கு நேரமானபடியால், அக்கரையிலிருந்த கலங்கரை விளக்கம் நோக்கிச் சென்றோம். பழவேற்காடு பகுதிகளில் இரண்டு கலங்கரை விளக்கம் இருப்பதாக சேவியர் கூறினார். மற்றுமொரு கலங்கரை விளக்கம் பல மைல்கள் தள்ளி ஆந்திரா எல்லையில் இருக்கிறது. கலங்கரை விளக்கத்தினைத் தாண்டி நாங்கள் சென்றபோது அங்கே ஆர்ப்பரிக்கும் கடல் இருந்தது. எனக்கு குழப்பமாகிவிட்டது. அப்படியானால் இங்கே பாலத்தின் அடியில் நான் கண்டது என்ன? ஆம், அது தான் பழவேற்காடு காயல் என பின்னர் அறிந்துகொண்டேன். இங்கு கடலுக்கும் காயலுக்கும் நடுவில் மிக நீண்ட மணல் திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள காயலே மீன் பெருமளவில் பெருகுவதற்கும், இறால் பெருகி வளருவதற்கும் வெளிநாட்டு பறவைகள் வருவதற்கும் காரணமாகின்றன. இன்று ஐஸ் வைக்கபடாத மீன்கள் வேண்டுவோர் பழவேற்காடு நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆகவே இங்கே விலை பிற இடங்களை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

எனது பயணம் ஏன் பழவேற்காடு நோக்கி அமைத்தது? அதற்கு ஒரு நீண்ட பின்கதை உண்டு. பனைமரச்சாலை பயணத்தில் நான் ஸ்ரீ ஹரிக்கோட்டாவை தாண்டி வரும்போது பழவேற்காடு பகுதியை பார்க்கவேண்டும் என விரும்பினேன். ஆனால் சென்னை செல்லுவது தாமதம் ஆகும் என கருதியதால் அன்று அந்த எண்ணத்தை கைவிட்டு ஏலூருவிலிருந்து சென்னை வரை 500 கிலோமீட்டர் ஒரே மூச்சாய் ஓட்டி வந்து சேர்ந்தேன். அந்த பயணத்தில் நான் பழவேற்காடு பகுதியை பார்க்கத்தவறியது மாபெரும் தவறு என பல நாள் எண்ணி வருந்தியிருக்கிறேன்.
ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒருவர் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். பனை ஓலையில் செய்யப்பட்ட பறி போன்ற அமைப்பைக்கொண்ட ஒரு அழகிய பனையோலை பெட்டியினை ஒரு கரிய மனிதர் வெண்மையான முள் தாடியுடனும், தனது தோளில் உள்ள குச்சியின் ஓரத்தில் கட்டி தொங்கவிட்டபடி புகைப்படக் கருவியை தீர்க்கமாக பார்த்தபடி நின்றார். அப்புகைப்படம், ஒரு நூறாண்டு பழைமையான புகைப்படம் போலவே காணப்பட்டது. காலத்தால் நாம் பின்நோக்கிச் சென்றால் எப்படி அன்றைய கருப்பு வெள்ளை படங்களில் நமது ஆதி குடிகளை ஆங்கிலேயர்கள் படமெடுத்து வைத்திருந்தார்களோ அப்படியான தோரணைக் கொண்டது அப்படம். ஆனால் ஆச்சரியப்பட வைக்கும் அளவில் அப்படம் வர்ணக்கலவையால் நிறைந்திருந்தது. இது எப்படி சாத்தியம் என எண்ணிக்கொண்டு நண்பர்களிடம் அப்புகைப்படம் எடுத்த நபர் குறித்து விவரங்கள் கேட்டேன். ஒருவகையாக அப்புகைப்படம் எடுத்த நபரையும் தேடிக்கண்டுபிடித்தேன். பிரசாந்த் சுவாமினாதன் என்ற அந்த புகைப்படக்காரருக்கு, அவரது பயணத்தின் போது, தற்செயலாக கிடைத்த படம் அது என்பதைத் தாண்டி மேலதிகமாக எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றாலும், எண்ணூர் பகுதியில் இப்படியான புகைப்படத்தைத் தாம் எடுத்தாக ஒப்புக்கொண்டார்.
இதனை நான் தேடுகையில், தான் சேவியர் அவர்களை ரோடா அலெக்ஸ் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். சேவியர் அவர்கள் என்னை நேரடியாக பழவேற்காடு வரச்சொல்லிவிட்டார். என்னால் அங்கு செல்லும் சூழல் அப்போது அமையவில்லை. எனது மனதோ பழவேற்காடு செல்லவேண்டும் என துடித்துக்கொண்டிருந்தது. பழவேற்காடு பகுதிகளில் காணப்படும் இவ்வித ஓலை வடிவத்தைக் குறித்து நான் தேடத் துவங்கியது 2017 ஆம் ஆண்டு தான். அதுவரை பறி என்கிற வார்த்தையை நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.

பறி என்ற சொல்லினை நான் முதன் முறையாக பாண்டிச்சேரியில் வைத்து தான் கேள்விப்பட்டேன். பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் “அகவிழி” என்ற குறும்படத்தை எடுத்த இயக்குநர் பாண்டியனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். பாண்டியனோடு பேசிக்கொண்டிருக்கும்போது தான் பாண்டிச்சேரி பகுதியில் காணப்படும் பறி குறித்த விவரங்களை எனக்குச் சொன்னார். பாண்டிச்சேரி மக்கள் மீன் வாங்குவதற்கு என ஒரு பனை ஓலை பையினை வைத்திருப்பார்கள் எனவும், அதனை எடுத்துக்கொண்டு தான் மீன் வாங்கச் செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் மீன் வங்கி வந்த பின்பு அந்த பெட்டியினை அவர்கள் கழுவி மீண்டும் பயன்படுத்த வேண்டி பத்திரமாக எடுத்து வைப்பார்கள் எனவும் கூறினார். நமது சூழியல் அறிவு எப்படி சமீப காலங்களில் மழுங்கிப்போய்விட்டது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வெகு சமீப காலம் வரைக்கும் புழக்கத்திலிருந்த இவ்வழக்கம் மறைந்து போய்விட்டது என அவர் சொன்ன போதே இதனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என உறுதி பூண்டேன்.

ஆனால், நான் எங்கு தேடியும் அது எனது கைகளில் சிக்கவில்லை. அப்படி ஒரு பொருள் இருந்திருக்கிறது என்றவர்களால் கூட அது எங்கிருந்து உருவாகி அவர்கள் கைகளை வந்தடைந்தது என சொல்லத் தெரியவில்லை. இது போன்ற சூழல்களில் தான் நமக்கு உள்ளூர் வாசிகளின் உதவி தேவைப்படும். பாண்டிச்சேரியில் இரண்டு நாட்கள் செலவழித்தால் ஒருவேளை இதனை கண்டுபிடித்து மீட்டெடுக்க இயலும். மக்கள் வெகு சாதாரணமாக புழங்கிய ஒரு பொருள் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இன்றி மறைந்து போவது என்பது மாபெரும் பண்பாட்டு இழப்பாகும்.
குமரி மாவட்டத்தில் கூட மீன் வாங்கச் செல்லுபவர்கள், ஒரு சிறு பெட்டியினை சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் முப்பதாண்டுகளுக்கு முன்பு இருந்தது. சாதாரண மிட்டாய் பெட்டியின் அடிப்பாகம் போல காணப்படும் ஒரு எளிய பெட்டி தான் அது. ஆனால் அதனை எடுத்துச் செல்லும் விதம் தான் அதனை சற்று வித்தியாசமான ஒன்றாக காட்சிப்படுத்தும். வட்ட வடிவில் காணப்படும் கையடக்க பெட்டிக்குள் மீனை போட்டு, முயலின் காதை பிடித்து வருவதுபோல் அதன் மேற்பகுதியினை மடித்து தூக்கி வருவார்கள். இப்பெட்டியும் வழக்கொழிந்து போனதுதான்.

குமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு பகுதியில் ஒரு நாள் பனை விதைகளை சேகரித்துக்கொண்டிருந்தபோது, உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று ஒரு பெண்மணி சொன்னார்கள். அவர்கள் பெயர் ரெஜினா. கணவனை இழந்தவர்கள், இரண்டு ஆண் மகன்கள் அவர்களுக்கு உண்டு. கிட்டத்தட்ட 5000 விதைகளை அவர்கள் அந்த வருடம் தன்னார்வலராக சேகரித்து கொடுத்தார்கள். அவர்கள் தனக்கு அந்த மீன் பட்டி செய்யத் தெரியும் என்றும், ஓலைகள் கொடுத்தால் நான் செய்து கொடுப்பேன் என்றும் கூறினார்கள். அப்படித்தான் இழந்த மீன் பெட்டியினை மீட்டெடுத்தோம்.

பறி குறித்து எனது தேடுதல் வேகமடைந்தது. 2017 – 2018ஆம் ஆண்டிற்கான சூழியல் விருதினை பாண்டிச்சேரியிலுள்ள ஆரண்யா காடு என்ற அமைப்பினை நடத்தும் திரு சரவணன் மற்றும் குழுவினர் என்னையும் ஒருவராக தெரிந்தெடுத்திருந்தார்கள். அங்கே பனைமரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. பண்ருட்டி இரா பஞ்சவர்ணம் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. எனது தேடுதலைச் சொன்ன போது, அவரது நட்புகளை தொடர்புகொண்டு, எப்படியும் உதவி செய்தே ஆகவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னை பகுதிகளில் அவருக்கு ஏராளம் நண்பர்கள் உண்டு. விதைகளை சேகரித்து அதனை பரவலாக்கும் ராமநாதன் என்னும் ஓய்வுபெற்ற ஆசிரியர் எங்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்கள். எப்படியோ ஓரிடத்தை கண்டுபிடித்துவிட்டோம். அங்கே சென்று சேர்ந்த போது, அது வீராம்பட்டிணம் என்ற ஒரு மீனவ கிராமம். பாண்டிச்சேரியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

அங்கு சென்றபோது ஒருசேர ஏமாற்றமும் அதிர்ச்சியும் எனக்கு காத்திருந்தது. நாங்கள் தேடி வந்த மக்கள் பயன்பாட்டிற்கான பறி கிடைக்கவில்லை. அது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அதனை சற்று நேரத்திற்குப் பின் தான் என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. மீனவர் கிராமத்தில் வந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் பறியினை தேடுவது சரியில்லையே?
எங்கள் தேடுதலில் ஆச்சரியமளிக்கும் விதமாக இங்கு பறி செய்யும் ஒருவரைப் பார்த்தோம். திரு ராஜேந்திரன் என்பவர் அதனை செய்துகொண்டிருந்தார். இன்றும் விராம்பட்டிணம் ஊரிலுள்ள மறை மலையடிகள் தெருவை சார்ந்த நான்கு குடும்பங்கள் பறி செய்வதாக தெரிவித்தார். அந்த பறியின் பயன்பாடு தெரிய அந்த மீனவரை அழைத்துக்கொண்டு சென்றோம். உள்நாட்டு மீனவர்கள் தான் இவர்கள் என அப்போதுதான் புரிந்துகொண்டேன். அவர் தனது இடுப்பில் இந்த பறியைக் கட்டிக்கொண்டு கரத்தில் ஒரு வலையை எடுத்துக்கொண்டார். கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளில் தான் இவர்கள் மீன் பிடிப்பது வழக்கமாக இருக்கிறது. அன்று அதிகமாக எதுவும் கிடைக்கவில்லை, ஒரு நண்டும் ஒரு சில சிறிய மீன்களும் அவருக்கு கிடைத்தன.
பறியின் வடிவம் குறித்து நான் சொல்லியே ஆகவேண்டும். பறி குமரி மாவட்டத்தில் காணப்படும் எந்த வித பொருட்களுடனும் தொடர்புடையது அல்ல. அப்படி நான் சொல்லுவதற்கு காரணம், குமரி மாவட்டத்தில் வழக்கமாக கிடைக்கும் பொருட்கள் எதனுடனும் நாம் ஒப்பிடமுடியாத வடிவமாக அது காணப்பட்டது. மேலும் அப்போது நான் குமரி கடற்கரைகளில் புழங்கும் பனை ஓலை பொருட்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. ஆனால் அதனைப் பார்த்த போது இனம்புரியாத ஒரு குதூகலம், என்னை ஆட்கொண்டது. ஏதோ கண்டுபிடித்துவிட்டேன், சாதித்துவிட்டேன் என்பது போல உற்சாகமாகிவிட்டேன். எனது உற்சாகம், ஐயா பஞ்சவர்ணம் அவர்களையும், மற்றும் உடன் வந்த ராமநாதன் ஆசிரியரையும் ஒருங்கே கூட தொற்றிக்கொண்டது. எனக்கான பறிக்கு ஐயா பஞ்சவர்ணம் அவர்கள் முன்பணம் கூட கொடுத்துவிட்டார்கள்.
அப்படி அந்த பறியில் நான் என்னத்தை சிறப்பாக கண்டேன்? எனக்குத் தெரியவில்லை. பொதுவாக நான்கு முக்கு பெட்டிகளோ இரண்டு முக்கு பெட்டிகளோ தான் குமரி மாவட்டத்தில் இருக்கும். இது ஒரு சீரான வடிவற்ற பொருள். பார்க்க மனிதர்களின் பிருட்டம் போல காணப்பட்டது. அதன் வாய் ஒடுங்கி மனித கழுத்தினளவு தான் இருந்தது. பறியின் அடிப்பகுதி நேர்கோடாக செல்லும் பகுதியையும், வாய் பகுதி சீரான வட்ட வடிவத்தையும் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. பறி என்ற அமைப்பில் தான் வயிற்றுப்பகுதி ஊதி பெரிதாகவும், மிச்சப்பகுதிகள் சீராக இருப்பதாகவும் எனக்கு தோன்றிற்று. அவைகள் எப்படி இந்த “வடிவற்ற” வடிவை அடைந்தன என என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. என்னைப்பொறுத்த அளவில் செய்நேர்த்தி இல்லாத ஒரு ஆச்சரிய வடிவம் என்பதாகத்தான் அதனை அப்போது உள்வாங்க முடிந்தது.
ஏன் பிருட்டம் போன்ற வடிவம்? ஏன் பனை ஓலையில் போன்ற கேள்விகளுக்கு அன்றே எனக்கு விடை கிடைத்தன. தண்ணீரில் இடுப்பளவு இறங்கி நின்று மீன் பிடிக்கும் ஒருவர், பறியினை இடுப்பில் கட்டியிருப்பார். பிடித்த மீனை பறிக்குள் உயிருடன் போடுவார். அது அவர் வீடு வருவது வரை உயிருடன் இருக்கும். அப்படி தண்ணீரிலேயே மீன்கள் இருப்பதனால் எவ்வகையிலும், அவைகள் மீண்டும் தண்ணீரில் குதித்துவிடக்கூடாதே என்பதற்காக தான் இவ்விதம் அதனை மடித்து கழுத்தை சிறிதாக்கி விடுகிறார்கள் என அறிந்துகொண்டேன். பனை மரங்கள் நெய்தல் நிலத்தில் பெருமளவு காணப்படுவதால் பனை ஓலைகளை மீன்பிடி உபகரணங்கள் செய்ய பயன் படுத்துகிறார்கள் என அறிந்து கொண்டேன்.
தமிழக கடற்கரை பகுதிகளுக்கும் பனை மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் மட்டுமல்ல, இராமநாதபுரம் பகுதிகளிலும் பனை ஓலையில் பறி செய்யும் வழக்கம் இருப்பதாக பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில் குறிப்பிட்டார்கள். அக்குழுவினரைச் சார்ந்த சாமிநாதன் என்பவர், ராமநாதபுரம் சென்று பறி எப்படி செய்கிறார்கள் எனக் கற்று வந்தார். ஆகவே இளவேனிலிடம் அப்பெரியவரின் எண் வாங்கிகொண்டு அந்த மனிதரைக் கண்டு திரும்பலாம் என நினைத்தேன்.
பல தேடுதல்களுக்கு பின்பு ராமநாதபுரத்தில் பறி செய்யும் அந்த நபரை கண்டுபிடித்தேன். அவரிடம் நான் பர்த்த பறி இன்னும் வித்தியாசமாக காணப்பட்டது. ஏற்கெனவே நான் கூறியிருப்பது போல பின்னல்களில் கூட்டல் வடிவமும் பெருக்கல் வடிவமும் உண்டு. ராமநாதபுரத்தைப் பொறுத்த அளவில் கூட்டல் முறை போன்ற ஒன்றே அவர்களிடம் காணப்படுகிறது. மேலும், கூட்டல் முறை என்று சொல்லும்போது இரண்டு பக்கமும் ஓலைகளையோ அல்லது பனை நாரையோ கொண்டு பின்னல் இடுவது வழக்கம். ஆனால் இங்கு செய்யப்படும் பறியின் அமைப்பு, சற்று வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக ஊடாக செல்லும் ஓலைக்குப் பதிலாக பனை ஈர்க்கில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதே பின்னல் முறையினை ஒத்த ஒரு நேர்த்தியான வடிவத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மீண்டும் அமைந்தது பெரும் பாக்கியம் என்றே சொல்லுவேன். 2017 – 18 ஆகிய வருடங்களில் ஜாஸ்மின் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அவருடன் பணியாற்றும் ஒரு ஆசிரியர் உடல் நலம் குன்றியபோது நாங்கள் அவர்களைப் பார்க்கச் சென்றோம். அவர்களின் கணவர், பனை ஓலையில் ஒமல் என்கிற பனை ஓலைப் பொருளை தமது சிறு வயதில் மீன்களை அள்ள பயன்படுத்திருக்கிறாதாக கூறினார்கள். குமரி மாவட்டத்தில் பனை சார்ந்த தேடுதலை 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்துவந்த எனக்கு அது ஒரு ஆச்சரியத் தகவல். நமக்கடுத்திருப்பவர்களிடம் இருக்கும் ஓலைப்பொருளைக்கூட தெரியாமல் இருந்திருக்கிறேனே என்கிற ஆற்றாமை என்னை புரட்டிப்போட்டது. ஆகவே குமரி கடற்கரையை பகுதிகளை பன்னாடையிட்டு தேடத் துவங்கினேன். முட்டம் என்னும் ஒரு பகுதில் ஒருவர், ஒமல் செய்வதாக கேள்விப்பட்டு அவ்வீட்டை கண்டடைந்தேன். ஆனால் அவர்கள், பிளாஸ்டிக் நார் கொண்டே அந்த ஒமலினைச் செய்து வந்தார்கள். பனை ஓலையில் செய்யும் ஒரே ஒருவர் அப்பகுதியில் இன்னும் இருப்பதாகவும், அவர் தனது மகளுடைய வீட்டிற்கு போயிருப்பதாகவும் கூறினார்கள். அவரைக் கண்டுபிடிக்க சிறிது காலம் தேவைப்பட்டது.

2018 – 19 ஆகிய வருடங்களில், மிடாலக்காடு என்ற பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டிற்கு எதிரில் இரண்டு மீனவ குடும்பத்தினர் வாடைகைக்கு இருந்தார்கள். மீனவ குடும்பத்தினருக்கே உரிய அன்பை எங்கள் மீது பொழிந்தவர்கள் அவர்கள். பனை சார்ந்த எனது தேடுதலை அறிந்த பாக்கியம் என்ற அம்மையார், தனது தந்தையார் பனை ஓலைகளில் ஒமல் என்கிற மீன் அள்ளும் பொருளினைச் செய்வதை தான் பார்த்திருப்பதாகவும், ஓலைகள் கொடுத்தால், தான் அதனை மீட்டிருவாக்கம் செய்ய இயலும் என்றும் கூறினார்கள். கிட்டத்தட்ட 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே ஒமல் குறித்த அறிவு இருக்கும்.

நான் ஓலைகளை எடுத்து வந்தபோது அவர்கள் அதனை செய்யத் துவங்கினார்கள். என் கண்களின் முன்னால் உருப்பெற்ற அந்த ஒமல் வட்ட வடிவாக விரிந்து செல்லுவதும், ஈர்க்கில்களே அவைகளை இணைத்து கட்டுவதும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. குமரி மாவட்டம் என்று அல்ல, தமிழகத்தின் எப்பகுதியிலும் இவ்விதமான பின்னும் முறைகள் காணப்பட்டதில்லை என்பது தான் உண்மை. எனக்கு ஒமல் என்ற அந்த வடிவத்தைப் பார்க்க ஆச்சரியமாயிருந்தது. மீனவர்களின் இந்த தனித்திறனோ அல்லது பனையுடனான உறவோ ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும், மீனவ சமூகத்தாலேயே மறக்கப்பட்டு வருவதும் வேதனையான உண்மைகள். குறிப்பாக குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே மெல்ல மெல்ல தென்னைமயமாகிக்கொண்டு வருவதும், பனைகள் குமரி கடற்கரையோரங்களிலிருந்து மறைந்துபோவதும் தொடர்நிகழ்வாகிவிட்டன.
முட்டத்தைச் சார்ந்த அந்த மனிதரைப் வெகு நாட்களுக்குப் பின்பு கண்டுபிடித்தேன். அவர் பெயர் இன்னாசி மகன் ஜோசப் (79). கடற்கரைக்கே உரித்தான வட்டார வழக்கினை தவிர்த்து அவர் பேசினது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுமார் எண்பது வயதை எட்டுகின்ற அவர், எனக்கு ஒமல் செய்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தார். அவரது உடல், மற்றும் வயோதிபம் போன்ற பல காரணங்களால் அந்த பழைமையான பொருளை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதாக கைக்கூடவில்லை. நான் அவரை மீண்டும் மீண்டும் சென்று பார்க்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டியிருந்தது. அவர் அதனைத் துவங்கும்போது அவருடனிருந்தேன். இரண்டு ஈர்க்கில்களின் மத்தியில் ஒரு ஓலை செல்லும். ஈர்க்கில் அந்த ஓலையினை பின்னிச்செல்வதினூடாக வலிமையான ஒரு பொருளாக அதனை மாற்றும். அவர் அதனை முடிக்கும் வேளையில் நான் மும்பை வந்துவிட்டேன். எனது நண்பர்களே அதனை வாங்கி சென்னை எடுத்துச் சென்றனர். எப்படியிருந்தாலும், அதன் வடிவம் சற்றே ராமநாதபுரத்தை ஒட்டிய ஒருவடிவமாகவே காணப்பட்டது ஆனால் ராமநாதபுரத்தை விட மிகப் பெரிதாக இருந்தது.

வேம்பார் பகுதிகளிலும் கூட பறி பயன்பாட்டில் இருப்பதாக ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அதனை செய்பவர்களையோ அல்லது அதன் ஒரு மாதிரியோ ஏன் ஒரு புகைப்படமோக்கூட எங்களுக்கு கிடைக்கவேயில்லை. என்னைப்பொறுத்தவரையில் தென் தமிழக கடற்கரை பகுதிக்கும், வட தமிழக கடற்கரைப் பகுதிக்கும் ஒரு பெருத்த வித்தியாசம் இருக்கிறது. பின்னல்களில் அந்த வேறுபாடு சிறப்பாகவே தென்படுகின்றன. ஒருவேளை கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நேராக பழவேற்காடு வரைக்கும் பயணித்தால், கண்டிப்பாக விதம் விதமான மீன்பிடி பொருட்களை நம்மால் சேகரிக்க இயலும். இப்பயணத்தினை கொல்கத்தா வரை விரித்தால், கேட்கவே வேண்டாம். இவ்விதமான பண்பாட்டு கண்ணிகளைப் பிடித்து பயணிப்பது ஆச்சரியங்கள் பலவற்றை நமக்கு வெளிப்படுத்தும். இன்று அந்த அறிவு பெருமளவில் மங்கிப்போய்விட்டது என்பது தான் உண்மை.
கடற்கரைப் பகுதிகளில் தனித்துவமான பனை ஓலைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது எனது பயணத்தின் மூலமாக உறுதிப்பட்டன. பனை சார்ந்து வாழும் கரையோர மக்களின் பயன்பாட்டு பொருட்களுக்கும் கடற்கரை மக்களின் பொருட்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை இவைகள் உணர்த்துவதுமாகவே இருக்கின்றன. நெய்தல் நிலத்தில் பனை மரங்கள் இருப்பது மட்டுமல்ல நெய்தல் நில வாழ்வில் பனை சார்ந்த பொருட்கள் செய்யும் தனித்துவ அறிவு ஊடுருவியிருப்பதை இவை தெளிவுபடுத்துகின்றன. ஆகவே பனை மரங்கள் சார்ந்த வாழ்வியல் என்பது கரைப்பகுதியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல கடற்கரை மக்களுக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவே இருக்கிறது. அவைகளின் வித்தியாசம், இருவேறு பண்பாட்டை சுட்டிக்காட்டும் பின்னல்களைக் கொண்டிருக்கின்றன.
எங்கள் அழைப்பை எடுத்த சுமன், உடனே வருவதாக கூறினார். அவருக்காக நாங்கள் பாலத்திற்கு அருகில் காத்து நிற்கையில், ஒயர் கூடையில் மிகச்சிறிய பனை ஓலைக்குருத்தினை எடுத்துச்செல்லும் ஒரு மனிதரைப் பார்த்தேன். அருகில் அவரது மனைவி என்று சொல்லத்தக்க ஒரு பெண்மணி. சிறிய ஒயர்கூடையில் அவர்களது உணவு மற்றும் பொருட்களை வைத்திருப்பார்கள் போலும். பொருட்களால் நிரம்பியிருந்த அந்த கூடைக்கு மேல், அப்போதுதான் பறித்த சிறிய வடலி குருத்து தீட்டிய குறுவாளென பளபளப்புடன் காணப்பட்டது. அதிலும் அவர்கள் அந்த குருத்தினை கத்தி வைத்து வெட்டி எடுத்தது போல தோன்றவில்லை. ஏதோ கூர்மையான கல்லைக்கொண்டு வெட்டி எடுத்தது போல அதன் மட்டை சதைந்து இருந்தது. மிஞ்சிப்போனால் ஒரு முளம் நீளம் மட்டுமே வரும் அந்த குருத்தினை அவர்கள் ஒரு பொக்கிஷமென எடுத்துச் செல்லுவது என்னை பலவாறாக சிந்திக்க வைத்தது. அந்த மனிதரின் கரத்தில் பனை ஓலையாலான பறி இருந்தது. சேவியர் என்னிடம் கூறியது அப்போது தான் என நினைவிற்கு வந்தது. பழவேற்காடு பகுதிகளில் ஏனாதிகள் என்னும் பழங்குடியினர் தான் இறால் பிடிப்பார்கள். தங்கள் கரங்களை பயன்படுத்தியே இறால் பிடிக்கும் அவர்கள் தாங்கள் பிடித்த இறால் மீன்களை பனை ஓலை பறியில் தான் எடுத்துச் செல்லுவார்கள் எனவும் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது. எனக்கு ஒவ்வொன்றாக விளங்கத் துவங்கியது.எனது பழவேற்காடு பயணத்தையே இதற்காகத்தான் ஒருக்கியிருந்தேன். ஆகவே அவர்களை நிறுத்தி பேச்சுக்கொடுக்கத் துவங்கினேன். அவர்கள் இறால் பிடித்துக்கொண்டு செல்லுவதாகவும் நேரம் ஆகிவிட்டது எனவும் கூறி அகன்றுவிட்டார்கள்.
பழங்குடியினரின் வடிவங்கள் என்பவை தொல் பழங்காலத்தைச் சார்ந்தவை. அதுவும் குறிப்பாக ஏனாதிகளின் கரத்தில் இருக்கும் இந்த பறி பல முக்கிய அறிதல்களை உள்ளடக்கியிருக்கிறது என கண்டுகொண்டேன். பொதுவாக பழங்குடியினரைப் பார்த்தவுடன் எப்படி வில்லும் அம்பும் அவர்களது தொன்மையை பறை சாற்றுமோ, அது போன்ற ஒரு காட்சிதான் ஏனாதிகள் கரத்தில் இருக்கும் இந்த பறி. இதனை சிறப்பான ஒன்றாக நான் கருதியதற்கு காரணம் என்னவென்றால், அந்த வடிவமைப்பில் உள்ள பழைமை தான். நவீன காலத்தில் பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள், அனைவருமே, ஓலையின் அடிப்பாகத்தையும் அதன் நுனி பகுதியையும் வெட்டிவிட்டே பொருட்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். இவர்களைப் பொறுத்த அளவில், ஓலைகள் அதன் அடி முதல் நுனி வரை அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, ஈர்க்கில் மட்டுமே ஓலையிலிருந்து கைகளாலேயே பிய்த்து நீக்கப்பட்டிருக்கிறது. பிற இடங்களில் ஓலைகளை வகிர்ந்து எடுப்பது போல் ஓலைகளை வகிரவில்லை. இத்தனை ஏன் இவ்வோலைகளின் வயிற்றுப்பகுதி கூட சீர்செய்யப்படவில்லை. ஆகவே தான் பறியின் வயிறு பெரிதாகவும் அதன் கழுத்துப்பகுதி மிக சிறிதாகவும் இருக்கிறது. இந்த அறிதல் என்னை துள்ளிக்குதிக்க வைத்துவிட்டது. பழங்குடியினரான இவர்களது வாழ்வில் இருக்கும் பொருட்கள் தமிழக அளவில் மட்டுமல்ல உலக அளவிலேயே மிக முக்கியமான தொல்லியல் சான்று என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பழவேற்காடு வரும் வரையிலும், என்னால் இவ்வடிவத்தின் பின்னால் இருக்கும் ஒரு பிரம்மாண்டத்தை உணர்ந்துகொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. கற்கால வாழ்வில் எப்படி கல் ஆயுதங்களையும் கைகளையும் மட்டுமே கருவிகள் செய்யவும் வேட்டையாடவும் பயன்படுத்தினார்களோ அதே முறைமையினை இன்றும் ஏனாதிகள் கைகொள்ளுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மீன்களையும் இறாலையும் கைகளைக் கொண்டே பிடிப்பார்கள் என சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போது அவர்கள் செய்யும் பறியும் கூட எவ்வித கருவிகளும் இன்றி கைகளைக் கொண்டு மாத்திரம் செய்யப்படும் ஒன்று என்பதை அறியும்போது பழவேற்காடு வந்ததன் பயனை அடைந்துவிட்டேன் என என் மனம் கூவியது. பழவேற்காடு என்பது ஏனாதிகள் எனும் தொல்குடிகளின் வாழும் நிலப்பரப்பு. பல்வேறு மாற்றங்களை கண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் தனித்துவத்துடன் நமக்கு முன் முழு வீச்சுடன் எழுந்து நிற்கிறார்கள்.
அவர்களின் கைகள் அவர்கள் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன. அவர்கள் ஆன்மா அந்த நிலப்பரப்பை ஒரு புனித தலமாகவே கருதுகிறது என் நினைத்துக்கொண்டேன். இவ்வித ஒரு நிலப்பகுதியில் எனது பயணம் அமைந்தது ஒரு புண்ணிய யாத்திரைக்கு ஒப்பானது. அவ்வகையில் இது எனது புனித பயணம். நான் நிற்பது புண்ணிய பூமி. பறி என்னை உயிருடன் உள்ளிழுத்துக்கொண்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்