Archive for மார்ச், 2021

பனைமுறைக் காலம் 14

மார்ச் 29, 2021

நார்முடி காலம்

அக்டோபர் 17 ஆம் தேதி மித்திரனுடைய பிறந்தநாள். மிடாலக்காட்டில் எங்களோடு வாடகை வீட்டில் இருந்தவர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்தோம். அங்கே ஏகப்பட்ட சிறுவர்கள் உண்டு. நாங்கள் வாடைகை இருந்த வீட்டிற்கு கீழே தானே பாத்திரங்கள் கிடைக்கும் ஆகவே, அங்கிருந்து பாத்திரம் வாங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டோம். பொதுவாக நாங்கள் பிறந்தநாள் கேக் வாங்குவதில்லை. கடந்த முறையும் இங்கிருக்கும்போது மித்திரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு எல்லா குழந்தைகளுக்கும் நுங்கு வெட்டிக்கொடுத்தோம். இம்முறை, மித்திரனுடைய ஜஸ்டின் மாமா கேக் வாங்கி கொண்டாடினார்கள். நாமும் தான் எத்தனை நாளைக்கு சாதாரண கேக்கிற்கு எதிராக கொள்கை என கொடிபிடிப்பது?

மிடாலக்காட்டில் தான் நான் போவாஸ் பனையேறியை சந்தித்தேன். ஆரோனும் மித்திரனும் சந்தித்த முதல் பனையேறி அவர் தான். அறுபது வயதை தொடும் மனிதர். சலிப்பில்லாமல் இன்றும் பனை ஏறுகிறார். அவர் மிடாலக்காட்டில் இருப்பதால் அவரை சந்திக்கச் சென்றேன்.

போவாஸ் அவர்களுடன் மித்திரனும் ஆரோனும்

மிடாலக்காட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு கத்தோலிக்கத் ஆலயம் இருந்தது. பாதிரியார் பேசுவது அதிகாலை வேளையில் எங்கள் வீடு வரை கேட்கும். ஒரு நாள் நான் அங்கே சென்று அந்த பாதிரியாரை சந்தித்தேன். பாதிரியார் சகாய பெலிக்ஸ் இளவயதுடையவர். ஓவியம் வரையும் திறன் கொண்டவர். எனது பனை சார்ந்த முன்னெடுப்புகளை செவிமடுத்து கேட்டார். அவரது தந்தையும் ஒரு பனையேறி தான் என்றார். நமது திருச்சபையில் உள்ளவர்களுக்கு ஒருநாள் பனை சார்ந்த விழிப்புணர்வு அளிக்கவேண்டும். அதற்காக ஒருநாள் பனம்பழத்தினை மக்களுக்கு உண்ணக் கொடுப்போமே என்றேன். செய்யலாமே என்றார்.

மித்திரன் சேகரித்த மிகப்பெரிய பனம்பழம்

எனது பிள்ளைகள் ஆரோன் மற்றும் மித்திரன் உதவியுடன், பனம் பழங்களைத் தேடி எடுத்து குளிர் சாதனப்பெட்டியில் இட்டுவைத்தேன். மூன்று நாட்கள் தேடுக்கையில் கிட்டத்தட்ட 18 பழங்களே கிடைத்தன. போவாஸ் அவர்கள் தனது அறிவாளை எடுத்துக்கொண்டு உதவிக்கு வந்தார். மிக கூர்மையான அறிவாள் இருந்தாலே பனம்பழங்களை சரியாக பாளம் பாளமாக கீறி எடுக்க இயலும். திருச்சபையினருக்கு 18 பழங்கள் போதாது என்று போவாஸ் அவர்கள் கூறினார்கள். “இது என்ன எக்காட்டுகதுக்கா” என சிரித்தார். ஆனால் கை வலிக்க அத்தனை பழங்களையும் அவரே சீவியெடுத்து கொடுத்தார். அந்த நேர்த்தி, அரிவாள் பிடிக்கும் கைகளுக்க்கு மட்டுமே உரித்தானது. அன்று இரவே பானையின் அடியில் பனம்பழ நெட்டுகளைப் போட்டு சீவிய பனம்பழங்களை அடுக்கி மேலே சிறிது கருப்பட்டி போட்டு வேகவைத்தோம். 

போவாஸ் பனம் பழங்களை சீவுகிறார்

மறுநாள் காலை எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய கூட்டம் திருச்சபையின் மைதானத்தில் திரண்டது. ஒரு மிகப்பெரிய காகிதத்தில் பனை என எழுதி அதையே ஒரு பனை மரத்தில் பனையேறி இருப்பது போன்ற ஒவியமாக பாதிரியார் பெலிக்ஸ் மாற்றினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திவிட்டு பனை மரத்தினை காக்கும் அவசியத்தை குறிப்புணர்த்தினார். அனைவரும் வரிசையில் வந்து வாங்கிச் செல்லுங்கள் என்றார். ஐந்தே நிமிடத்தில் அத்தனையும் காலியாகின. பானையில் தேங்கியிருந்த நீரினை சுவைக்க அவ்வளவு போட்டி நடைபெற்றது. இப்படியான ஒரு நிகழ்வு இதுவரை எந்த திருச்சபையிலும் நடந்திருக்காது என்றே எண்ணுகிறேன். பனம்பழ சுவையானது இன்றளவில் மறந்து போய்விட்ட ஒன்றாகவே இருக்கிறது.

பாதிரியார் சகாய பெலிக்ஸ்

போவாஸ் அன்று ஆலயத்திற்கு வரவில்லை. எப்போதுமே அப்படித்தான், பனையேறிகள் ஆலயத்திற்குப் போவதில்லை. நான் தான் அவரை முதன்முறையாக  அறிமுகப்படுத்தினேன் என்று பாதிரியார் கூறினார். ஆனால் அவரது மனைவி அங்கு நிகழ்ந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பொதுவாக அனைவருக்கும் தேவையான அளவு பானம்பழங்கள் வேண்டுமென்றால், ஒரு கோயிலுக்கு குறைந்தபட்சம் பத்து பனையேறிகளாவது இருக்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுமா என்பது சந்தேகமே. 

பனம்பழங்களை உண்ண முண்டியடிக்கும் சிறுவர்கள்

போவாஸ் அவர்களை நான் சந்தித்து பனை விதைகளைக் கொடுத்தேன். நாங்கள் இருவரும் ஒரு சில தருணங்களில் பனை விதைகளை இணைந்தே சேகரித்திருக்கிறோம். மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார். இந்த முறையும் பனையேற துவங்கியிருகிறார். எனது தொப்பிக்கு சில பனை நார்கள் தேவை உரித்து கொடுக்க இயலுமா என்று கேட்டேன். மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன் என்றார். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட இயற்கை இழை நாற்காலி

அன்று மதியம் ஜாய்சன் ஜேக்கப் என்ற பனை நார் கட்டில் பின்னும் நண்பர் என்னைத் தொடர்புகொண்டார். நேரம் இருப்பின் வாருங்கள் என்றார். எனது வாகனத்தை நாகர்கோவிலில் வைத்துவிட்டு, அவருடைய இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டேன். எனக்கு பனை நார் நார்க்காலிகள் மீது பெரு விருப்பம் உண்டு. பனை நார் நார்காலிகள் என்பவை பல்வேறு வடிவங்களில் இருந்திருக்கின்றன. சாய்வு நார்காலியாக, கைபிடியுள்ள நாற்காலியாக, முக்காலியாக, சுழல் நாற்காலியாக என அவைகள் பல வடிவங்களைக் கொண்டிருக்கிண்றன. சிறு வயதில், பேருந்து மற்றும் லாறிகளில் ஓட்டுனர் இருக்கைகள் பனை நார் கொண்டே அமைக்கப்பட்டிருந்தன. வாகன ஓட்டிகளுக்கு சூடு தாக்காமல் இருக்க இவ்வகை நார் போட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. பிற்பாடு அவைகள் பிளாஸ்டிக் இழைகளாக மாறி தற்போது குஷன் நாற்காலிகளாக மாறிவிட்டன.   

பனைநார் கொண்டு செய்யப்பட்ட கையடக்க பெட்டி – நூறு வருட பழைமையானது

பனை நார் கொண்டு அரசு பேருந்து ஓட்டுனர் இருக்கையினை அமைக்கவேண்டும் என்று ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டால், விழுந்துகிடக்கும் பனையேறிகள் பலர் வாழ்வுபெறுவார்கள். ஆனால், அரசு எவ்வகையிலும் இவ்வித எளியகலைஞர்களை பொருட்டாக கொள்ளுவதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு பனை நாரால் செய்யப்பட்ட ஒரு சாய்வு இருக்கை வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அப்படி ஒரு சாய்வு இருக்கை அமைக்கவேண்டுமென்றால் குறைத்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் ஆகிவிடும். இப்போது அவ்வளவு செலவளிக்க இயலாது, ஆகவே, இன்னும் சில வருடங்கள் கழித்து வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலில் அதனை இணைத்துள்ளேன்.

மருந்துவாழ் மலையின் அருகிலிருந்து நாகர்கோவில் நோக்கி எடுத்த புகைப்படம்

ஜாய்சன் அன்று எனக்கு மருந்துவாழ் மலையினை சுற்றிக்காட்டினார். மருந்துவாழ் மலை, பனை என்ற அரணால் சூழப்பட்ட மலை என்பதை அன்று தான் நான் கண்டுகொண்டேன். முழு மலையையும் சுற்றி வந்த போது, இத்தகைய அழகினை எப்படி தவறவிட்டேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வழுக்கம்பாறையை அடுத்த பொற்றையடியை நெருங்குகையில் மருந்துவாழ் மலை நமது கண்களுக்குத் தெரியும். இராமரின் தம்பி, இலக்குவன் இலங்கையில் அடிபட்டு கிடக்கும்போது, அனுமனிடம் இமய மலையிலிருந்து சஞ்சீவி மூலிகையினை எடுத்துவர பணிக்கிறார்கள். இமயம் சென்ற அனுமனால் மிகச்சரியாக சஞ்சீவி மூலிகையினைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, முழு மலையையும் அப்படியே தூக்கி இலங்கைக்கு எடுத்து செல்லுகிறார். செல்லும் வழியில் அவரது கரத்திலிருந்து விழுந்த சிறு துண்டு தான் மருந்துவாழ் மலை என வாய்மொழி கதையாக கூறுகிறார்கள். மிக முக்கிய மூலிகைகள் இங்கே கிடைப்பதால், வனத்துறையின் கட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது.

இனிய மாலை நேர மருந்துவாழ் மலையின் அடிவாரம்

இது மருந்துவாழ் மலை என்றால் அதனைச் சுற்றி நிற்பது அனைத்துமே மருந்துவாழ் பனை என்றே கொள்ள முடியும். அனைத்து வகையான சித்த மருத்துவத்திலும், இனிப்பு சேர்மானமாக கருப்பட்டியும், கற்கண்டும் இணைவதை நாம் கண்டுகொள்ள முடியும். ஒத்தை மரக் கள்ளு, மருந்துகள் இட்ட கிழிகளில் ஊறிய கள், போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். மருந்துவாழ் மலை உச்சியில் கூட ஒரு பனை தனியாக நின்றது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தை கொண்ட சிகரம் உள்ள இம்மலையில், கண்டிப்பாக 1500 அடிகளுக்கு மேல் தான் இப்பனை நின்றிருக்கிறது. இது சராசரி பனை மரத்தின் வாழ்விடத்தை விட உயரமானது. ஆகவே பனையால் 1500 அடிகளுக்கு மேலும் தாக்குப்பிடிக்கும் தன்மை இருப்பதை இந்த பனை நிறுவுகிறது.  சிவலிங்கம் என்ற பனையேரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தான் சிறு வயதில் மேலே சென்று சாப்பிட்டு போட்ட கொட்டை அது என்றார். அத்தனை உயரத்தில் ஒரு பனை மரத்தினைப் பார்ப்பது அந்த மலைக்கு ஒரு தனி அழகைச் சேர்த்தது. மலையைச் சுற்றிய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. ஜாய்சன் அவருடன் இருந்த தருணத்தை செழுமைப்படுத்தினார். வழியில் ஆறடி நீள பாம்பு ஒன்று எங்களுக்கு முன்பதாக சாலையில் குறுக்காக கடந்து சென்றது.

மருந்துவாழ் மலையின் உச்சியில் பனை மரம்

அந்த மாலை நேரத்தில் மருந்துவாழ் மலையினை சுற்றி வந்தது ஒரு அற்புத அனுபவம். கிரிவலம் என்ற அமைப்பு இவ்வித அனுபவங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்போலும். சீர்திருத்த நற்செய்தியாளரான ரிங்கல் தெளபே அவர்கள், மைலாடியிலுள்ள தனது வீட்டிலிருந்தபடியே இந்த மலையினைப் பார்த்து வியந்திருப்பதை பதிவு செய்திருக்கிறார். இந்த மலைப்பகுதி அனேகருக்கு புகலிடமாகவும் இருந்திருக்கிறது. இன்றும் சில சித்தர்கள் இந்த மலையில் வசிக்கிறார்கள். மருந்துவாழ் மலையில் சரி பாதி தூரம் ஏறியிருக்கிறேன். அதிகாலையில் ஏறுவதுதான் சிறப்பானது. மீண்டும் மலை உச்சிக்கு போகவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

சற்றே இருட்டும் நேரத்தில் கொட்டாரத்தில் இருக்கும் அவரது நார் கட்டில் பின்னும் கடைக்கு கூட்டிச் சென்றார். பனை நார் குறித்து தொடர்ந்து பேசினோம். பனை ஓலைகள் குறித்து தமிழகம் தழுவிய ஒரு விழிப்புணர்வு இன்று உண்டு. ஆனால், பனை நார் குறித்து அத்தகைய விழிப்புணர்வு இல்லை. மேலும் பனை நார் இன்று மிகவும் அரிதான பொருளாகி வருகிறது என்றும் இத்தொழில் அதிகநாட்கள் நீடிக்காது என்றும் ஜாய்சன் கூறினார். மனம் பிசையும் வார்தைகளாகவே அவருடனான உரையாடல் இருந்தது.

பனை நார் கட்டில்களைப் பின்னுவது போல அகலத்தைக் குறைத்து பெஞ்சு போல செய்தால் என்ன என ஜாய்சனிடம் கேட்டேன். எனக்கு ஒருவேலை அவ்விதமான ஒரு பெஞ்சு கிடைத்தால், சில ஆலயங்களுக்கு இவ்விதமான பென்சுகளை நாம் பரிந்துரைக்கலாமே என்றேன். அது ஒன்றும் சிரமமில்லை என்றார். அனேக ஆலயங்களில் பனை நார் அல்லது ஈறல் போன்றவைகளிலிருந்து உரித்த நார்களைக் கொண்டு சாய்வு பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பணப்புழக்கம் வந்தபோது முழு மரத்தையும் அறுத்து அமைக்கும் பெஞ்சுகள் தேவாலயங்களை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. புதிதாக அமைக்கும் ஆலயங்கள், இவ்விதமாக பனை நார் பெஞ்சுகளை அமைப்பது, எண்ணற்ற முதியோர்களுக்கும் கலைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பளிக்கும் என நம்புகிறேன்.

மும்பையில் துவங்கிய பாம்பே ஃபுட் கோர்ட் (Palmbay Food Court) உணவகத்திற்காக வாங்கிய பனை நார் பெஞ்சுகள்

ஜாய்சனுடைய தந்தையார் பனை நார் கட்டில் பின்னுபவர் தான். ஜாய்சன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு நட்சத்திர விடுதிகளில் வேலை பார்த்திருக்கிறார்.  ஒரு விபத்தினை சந்தித்து  அதற்கு பின்பு ஒரு டீ கடை நடத்தி, அதில் நஷ்டம் ஏற்பட்டு, இப்போது பனை நார் கட்டில் பின்ன களம் இறங்கியிருக்கிறார். குறைந்தது 10 கட்டில்கள் அவர் வசம் எப்போதும் இருக்கின்றன. தொழில் சிறப்பாக இருக்கின்றது ஆனால் போதுமான நார் கிடைப்பதில்லை என்றே அவர் குறைப்பட்டுக்கொண்டார். தென் தமிழகமெங்கும் தனது இரு சக்கர வாகனத்தில் நார் எடுப்பதற்காக அவர் அலைந்து திரிந்ததைக் குறித்து சொல்லும்போது, நாம் இழந்த பனை செல்வங்களின் பிரம்மாண்டம் கண்கள் முன் திரண்டெழுகிறது.

பனை நார் என்பது பனங்கள்ளுடன் தொடர்புடையது என்பதே ஜாய்சனின் புரிதல். பனங்கள் இறக்க அனுமதிக்கப்பட்டாலே பனையேறிகள் இன்னும் அதிக பனை மரங்கள் ஏறுவார்கள். பனங்கள் தான் உடனடி பண தேவையினை உறுதி செய்யும். ஆகவே, அவர்கள் ஏறும் பனைகளிலிருந்து கிடைக்கும் மட்டைகளை உரித்து உபரி வருமானம் பார்க்கும் வாய்ப்பிருப்பதாக ஜாய்சன் அனுமானிக்கிறார். உண்மை அதுதான். பனை ஓலைகளை விட, பனை நார் இன்று காண்பதற்கரிய பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. எப்படி பனை ஓலைகள் முறிக்கப்படும் பனைகளிலிருந்து கிடைக்கிறதோ அது போலவே பனை நாரும் கூட, பெருமளவில் முறிக்கப்படும் பனையிலிருந்தே கிடைக்கிறது.

இந்தியா காலனியாதிக்கத்தில் இருந்தபோது வெள்ளையர் பயன்படுத்திய இயற்கை இழை ஆடும் நாற்காலி (Rocking Chair)

இச்சூழலில் பனை நார் இன்னும் அதிகமாக புழக்கத்தில் வரவேண்டுமென்றால் கண்டிப்பாக நாம் கள் இறக்குவதற்கான உரிமையை பெற்றே ஆகவேண்டும். தமிழகத்தில் நெகிழி தடுப்பிற்குப் பின்பும் பனை ஓலை பொருட்கள் மிகப்பெரிய அலவில் புழக்கத்திற்கு வராததற்கு காரணம், கள் தடை நீடிப்பது தான். இதனை எவரும் புரிந்துகொள்ளுவது இல்லை என்பது தான் நமக்கு விளைந்த கேடு. பாரம்பரியமாக கள் நமது மரபில் உணவாக வந்துகொண்டிருந்த சூழலில், கள் குறித்த தவறான வியாக்கியானங்கள் அளித்தும் அதிகார பலத்தைக் கொண்டும் அதனை அடக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடுவதல்ல. குறிப்பாக, கள் குறித்து அறிந்த ஒருவர் ஒன்றில் கள் இறக்குவதை தொடருவார் அல்லது அந்த மரத்திற்கும் தனக்கும் உள்ள உறவினை துண்டித்துக்கொள்ளுவார். இன்று தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அவலம் என்பது இதுதான். மிக வேதனையுடனே பனையேறிகள் பனையை கைவிடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இன்றும் அனேக முதிய கலைஞர்கள், நார் கிடைக்காமல், தங்கள் கரங்களில் திறமை இருந்தும் தங்கள் ஜீவனத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தொழில் வாய்ப்பு என்பது பனை நார் கட்டில் உருவாக்குவது. எப்போதும் அதற்கு என்று தேவைகள் இருந்துகொண்டே இருக்கும். பல்வேறு கலைஞர்களின் வீட்டில், கட்டில்கள் ஒன்றிரண்டு கட்டப்படாமலே கிடக்கும். மிக அவசர தேவைக்கானவைகளேயே முக்கியத்துவமளித்து, முன்னுரிமையளித்து கட்டில் பின்னுபவர்கள் கட்டுவார்கள். கட்டில் கட்டுபவர்களிடம் வாடிக்கையாளர்கள் விடுக்கும் ஆணைகளும், பணம் கொடுப்பதில் ஏற்படும் இழுபறிகளும் என பலவற்றை ஜாய்சன் கூறுவதை கேட்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் எஞ்சிய கலைஞர்களையும் நாம் சீக்கிரம் அழித்துவிடுவோமே என்ற பதைபதைப்பு எழுகிறது.

பனை நார் கட்டில் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்த ஒன்று என்று குமரி மாவட்டத்திலுள்ள அலோபதி மருத்துவர்களே பரிந்துரைச் செய்வார்கள். நாகர்கோவிலிலுள்ள ஜெயசேகரன் மற்றும் மத்தியாஸ் ஆஸ்பத்திரிகளில் பனை நார் கட்டிலுக்கு என அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டன என்கிற செய்தியும் உண்டு. என்னோடு தொடர்பிலிருக்கும், ஆயுர்வேத சித்த மருட்துவர்கள் எல்லாம் பனை நார் கட்டில் வேண்டும் என திரும்பத் திரும்பச் சொல்லுவதை நான் செவி கூர்ந்தபடி இருக்கிறேன்.

பனை நார் கட்டில் பின்னும் மிடாலக்காட்டைச் சார்ந்த அருணாச்சலம்

குமரி மாவட்டத்தில் வீட்டிற்கு இரண்டு பனை நார் கட்டில்கள் இருக்கும். பெரிய குடும்பம் என்றால் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் வயோதிபர்களுக்கு பனை நார் கட்டிலே பரிந்துரைக்கப்படும். நோய் படுக்கையில் இருப்போருக்கும், படுக்கைப்புண் வராமல் இருக்க பனை நார் கட்டிலையே தெரிவு செய்வார்கள். குழந்தை பெற்ற தாய்மார்கள் கூட பனை நார் கட்டிலில் படுப்பது அவர்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் என சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏன் பிறந்த குழந்தைகளைக் கூட, பனை நார் தொட்டிலில் கிடத்துவது வழக்கமாக இருந்திருக்கிறது. 

பனை நார் கட்டில் எப்படி ஆரோக்கியமானது என கூறமுடியும்? வடிவம் சார்ந்து இரண்டு முக்கியமான காரியங்களை நாம் அவதானிக்கமுடியும். ஒன்று, படுக்கைக்கு கீழே இருக்கும் காற்றோட்டம் நமது உடலுக்கு கிடைக்கிறது. வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் நமக்கு இவ்வித காற்றோட்டம் தேவையாக இருக்கிறது, நாம் தற்போது பயன்படுத்தும்  மெத்தைகள் அவ்விதமான காற்றோட்டத்தை தர இயலாது ஆகவே, மெத்தைகள் வீட்டிற்குள் வந்தாலே, நாம் கண்டிப்பாக குளிரூட்டிய அறையாக நமது வீட்டை மாற்ற விழைகிறோம். இல்லாவிட்டால் மெத்தையில் நம்மால் புரண்டுகொண்டிருக்க இயலாது. இரண்டாவதாக, சிறிய இணுக்குகள் கொண்ட பனை நார் ஒருவித அக்குபங்சராக செயல்படுகிறது. நமது உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அவைகள் சீர் செய்கின்றன. நமது உடலுக்கு தேவையான அழுத்தங்களை நார்களின் பின்னல் அமைப்பு கொடுக்கிறது. நமது அசைவுகளும், புரண்டு படுக்குப்போது ஏற்படும் நகர்தல்களும் நம்மை அறியாமலேயே ஒருவித தொடு சிகிழ்ச்சையை அளிப்பதாக இருக்கிறது. ஆகவே மிகச்சிறந்த கட்டிலாக பனை நார் கட்டில் இன்றும் கோலோச்சுகிறது. இவைகளை சர்வதேச அளவில் கொண்டுசெல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நான் விரும்பி உறங்கிய பனை நார் கட்டில்

அப்படியானால் எப்படி பனை நார் கட்டில்கள் வழக்கொழிந்தன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இவ்வித பயன்பாடு இல்லாதது ஏன் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. மிகச்சரியாக சொல்ல முடியாவிட்டாலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் கண்டிப்பாக இதற்கு ஒப்பான வேறு கட்டில்கள் இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கட்டில் என்ற பிரம்மாண்ட கண்டுபிடிப்பிற்கு இந்தியாவில் ஒரு முக்கிய முகம் உண்டு.

இவ்வித கட்டில்களை வட இந்திய பகுதிகளில் “சார்பாய்” என அழைப்பார்கள். சார் என்றால் நான்கு என்றும் பாயா என்றால் கால்கள் என்றும் அர்த்தம். நான்கு கால்கள் கொண்ட படுக்கையினை இப்படியே அழைக்கிறார்கள். நான்கு கால்களும் நான்கு சட்டங்களும் இவ்வைகை கட்டில்களுக்கு போதுமானது. மரங்களை குறைவாக பயன்படுத்தும் சூழியல் பங்களிப்பை இவ்வித கட்டில்கள் உலகிற்கு பறைசாற்றுகின்றன. இந்தியாவைச் சுற்றிலுமிருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் சார்பாய் பிரசித்தம் பெற்றது. இவ்வித கட்டில்கள் பருத்தி நூல் கயிறு, இயற்கை இழைகள் மற்றும் பேரீச்சை இலைகளைக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்றன என அறிஞர்கள் கூறுகிறார்கள். 

பல்வேறு கண்ணிகள் கொண்ட கட்டில்கள் இருந்தாலும், தென் தமிழக பனை நார் கட்டில்களின் வடிவம் பிற வடிவங்களை விடவும் வித்தியாசமானது. இங்கு தலை முதல் கால்வரை ஒரே பின்னல்கள் ஊடு பாவாக சென்றிருக்கும். ஆனால், வட இந்திய பகுதிகளிலும், சில வட தமிழக பகுதிகளிலும் நாம் பார்க்கும் கயிற்றுக் கட்டில்கள், முக்கால் பங்கு சீரான பின்னல்கள் கொண்டதும் கால் பகுதி மட்டும் இழுத்து கட்டுகின்ற நேர் இழுப்பு தன்மைகொண்டதுமாகும். நேர் இழுப்புகள் பின்னல்கள் தொய்யும்போது இழுத்து கட்டி சீர் செய்ய அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே எனக்குள் கேள்விகள் எழுந்தவண்னம் இருந்தது. இவ்வித கட்டில்களுக்கான ஆதி வடிவம் எங்கிருந்து பிறந்திருக்கும் என என்னையே கேட்டுக்கொண்டேன். எனது தேடுதல்கள் பொதுவாக பொய்த்துப்போவதில்லை. எங்கோ ஒரு மூலையில் நான் தேடியவைகளை, என்னை வழிநடத்தும் ஆண்டவர் எனக்கு அருளியபடியே இருக்கிறார் என்பதுவே இப்பணியில் நான் இன்றுவரை நீடித்திருப்பதற்கான காரணம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் திண்டுக்கல்லை அடுத்த அழகாபுரி என்ற பகுதிக்கு சென்றிருந்தேன். அங்கே ராமலிங்கம் என்ற பனையேறியினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது வீட்டில் பனை நார் கொண்டு பின்னிய கட்டில் அப்படியே வட இந்திய பாணியிலாக அமைந்திருந்தது என்னை துணுக்குறச் செய்தது. கயிற்றுக்கு பதிலாக தடிமனான நார் கொண்டு அமைத்த கட்டில். பார்க்க, சற்றே வடிவ நேர்த்தியற்ற ஒரு கட்டில் தான். அன்று நான் அவருடன் அவரது குடிசையில் தங்கினேன். அந்த கட்டிலில் படுப்பதற்கு அப்படித்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பேரனுபவம் எனக்காக அன்று காத்திருந்தது என்பதை இவ்வுலகிர்க்கு நான் கூவி அறிவித்தே ஆகவேண்டும். தாய்மடியில் படுத்துறங்கும் ஒரு உன்னத தருணமாகவே அதனை நான் கருதுகிறேன். பல்வேறு நட்சத்திர விடுதிகளில் நான் தங்கியிருந்தாலும், என்னால் இதற்கு ஒப்பான ஒரு சுகமான உறக்கத்தினை நினைவில் கொள்ள முடியவில்லை. வெறும் மூங்கில்களைக் கொண்டு கால்களையும் சட்டங்களையும் செய்த அவர், அவருக்கே உரித்தான தனித்துவ வடிவத்தினை உருவாக்கியிருந்தார். வேறு எங்கும் இத்தனை “பச்சையாக” எவரும் நார் கொன்டு பின்னி நான் பார்த்ததில்லை. 

அழகாபுரி இராமலிங்கம் பின்னிய கட்டில்

ராமலிங்கம் அவர்களிடம் எனக்கென ஒரு கட்டிலை செய்து தரச் சொன்னேன். அதற்காக பலமுறை அவரைத் தேடி சென்றேன். ஒவ்வொரு முறையும் அவர், எதோ ஒரு காரணத்தைச் சொல்லி என்னை ஏமாற்றியபடியிருக்கிறார். கடைசியாக நான் போன சமயத்தில், உங்களுக்காக மூங்கில் மற்றும் நார்கள் எடுத்து வைத்திருக்கிறேன், கொஞ்சம் பொறுமை காருங்கள் என்றார். இராமலிங்கத்திடம் நாம் கோபப்படவே முடியாது. அந்த அளவிற்கு அன்பாக பேசி நம்மையே நல்வழிப்படுத்தும் மகான் அவர். அவருடன் ஒரு மூன்று நாட்கள் ஒரு சேர இருந்தாலே எனக்கு அவ்விதமான ஒரு கட்டில் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பனை நார் கட்டில்களில் பழங்காலத்தில் இருந்த முக்கிய பிரச்சனை என்னவென்றால் மூட்டைபூச்சிகள் அதில் வந்து சேர்ந்துகொள்ளும். பனை நார்கள் குவிந்திருக்கும் இடுக்குகளுக்குள் மூட்டைப்பூச்சிகள் சென்று ஒளிந்துகொள்ளும். அதிலிருந்து  மூட்டைப்பூச்சிகளை நீக்குவது என்பது இயலாத ஒரு காரியமாக பார்க்கப்பட்டது. பெரும்பாலும், மூட்டைப்பூச்சிகளை கொல்லுவதற்கு என மருந்துகள் அடிக்கப்பட்டன. ஆனால் அவைகளை விட மூட்டைகள் வீரியமாக வளர்ந்தன. இருபது வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் சென்னையிலுள்ள ஒரு திரையரங்கிற்கு சென்றிருந்தேன், அங்கே ஏதோ கடிக்கிறது என கால்களுக்கு கீழே கையை வத்து பார்த்தபோது கையில் பிசு பிசுவென ஏதோ ஒட்டிக்கொண்டது. இருட்டில் என்ன என முகர்ந்து பார்த்தேன். குமட்டலுடன் அப்படியே வெளியே ஓடினேன். மூட்டைப்பூச்சி நசுங்கி குமட்டும் நாற்றமெடுத்திருக்கிறது.

மூட்டைப்பூச்சிகள் பொதுவாக திரையரங்குகளிலிருந்தே வீடுகளுக்கு வந்தன என்றும், வீடுகளிலிருந்து திரையரங்கிற்கு சென்றன என்றும் பரஸ்பர குற்றம் சாட்டும் காலம் இருந்தது. ஆனால், நோயாளிகள் படுத்திருக்கும் கட்டில்களில் கூட மூட்டைபூச்சிகள் வந்து அடைந்து மிகப்பெரிய தொந்தரவை அளித்துக்கொண்டிருந்த காலம் உண்டு. பனை நார் கட்டில்களை சரித்து வைத்துவிட்டு கொதிக்கிற வென்னீரை பனை நார் கட்டில்கள் மேல் ஊற்றுவார்கள். ஆனாலும், மூட்டைப்பூச்சிகளைக் கொல்லுவது எளிதல்ல. அவைகள், பனை நாருக்குள் சென்று சுகமாக உறங்கும், ஒளிந்திருக்கும். பனை நார்கள் பெருமளவில் சூடு கடத்தாதவைகள் ஆதலால், ஒரு சில கண்டிப்பாக தப்பித்துக்கொள்ளும். ஓரிரு நாட்களிலேயே பெருகி மீண்டும் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கும். மாதத்திற்கொருமுறை வென்னீர் ஊற்றுவது பனை நார் பொருளின் ஆயுளைக் கூட்டும் என்பதாக சொல்லுவார்கள்.

நார் கட்டில்கள் என்று மட்டுமல்ல, நார் கயிறுகள் செய்யும் நுட்பங்களும் நமது மக்களிடம் இருந்திருக்கின்றன. மாட்டிற்கான மூக்கணங் கயிறு முதல், பல்வேறு கயிறுகள் பனை நார்கொண்டு செய்யும் அறிவு நமது மக்களிடம் இருந்திருக்கின்றன. தென் மாவட்டங்களைப் பொறுத்த அளவில், பனை நார் கொண்டு பெட்டிகள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பஞ்சவர்ணம் அத்தை எங்களுக்கு தோசை சுட்டு நார் பெட்டியில் சுமந்து கொண்டு கொடுத்ததாக அம்மா சொல்லியிருக்கிறார்கள். நான் பிறப்பதற்கு முந்தைய காலமாக அது இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

பண்ணைவிளை அசனத்தின்போது பயன்பட்ட நார் பெட்டிகள்

நார் பெட்டிகளுக்கு என சமூக அங்கீகாரம் உண்டு. திருமண வீடுகளில் நார் பெட்டிகளையே சீதனமாக கொடுப்பார்கள். அரிசி பெட்டி என்றும், முறுக்குப்பெட்டியென்றும் அவைகளுக்கு பெயர் உண்டு. இதைத்தான், பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள், நாடார்களும் செட்டியார்களும் தங்கள் திருமணத்தில் நார் பெட்டியினை பயன்படுத்தியிருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். குமரி மாவட்டத்திலுள்ள நார் பெட்டிகள் மீது எனக்கு மிகப்பெரிய விருப்பம் இல்லை. அவைகள் என்னை கவரவும் இல்லை. வர்ணங்கள் இட்டிருந்தாலும், அவைகள் மிகப்பெரிதான பொழிகள் கொண்டு செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை, நான் மிகச்சரியான அழகுள்ள நார் பெட்டிகளை பார்க்கவில்லையோ என்னவோ. அல்லது அடிக்கடி பார்த்த பெட்டிகள் மீதான சலிப்பா எனவும் கூற இயலவில்லை.

நார் பெட்டிகள் அழகுற செய்யப்படவேண்டுமென்று சொன்னால், பொறுமையுடன் செய்யப்படவேண்டும். அதன் செய்நேர்த்தி மட்டுமல்ல உறுதியும் முக்கியமானவைகளே. உறுதி இல்லாத நார் பெட்டிகள் அழகை இழந்துவிடுகின்றன. ஏன் உறுதியற்ற பெட்டிகள் இன்று தயாரிக்கப்படுகின்றன? சீர்வரிசை பொன்ற ஒருசில சடங்குகளுக்காக மட்டும் நார் பெட்டிகள் செய்யப்படுகின்றன. மங்கி வரும் இவ்வித கலாச்சார பொருட்கள் வெறுமனே அடையாளமாக காணப்படுவதால், மலிவான நார் பெட்டிகள் கடைக்கு வருகின்றன. ஒரு பெட்டி செய்வதற்கான ஊதியமோ அல்லது அதற்குண்டான மரியாதையோ இங்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் இவ்வித அழகுணர்சியற்ற பெட்டிகள் வர காரணமாகின்றன. 

இதற்கு ஒப்புநோக்க மதுரையை அடுத்த பெருமாள் பட்டி என்ற ஊரிலுள்ள பனை நார் பெட்டிகள் தமிழக அளவில் சிறந்த வடிவ நேர்த்தி கொண்டவைகள். சன்னமான நார்கள், பொறுமையாக இழைக்கப்பட்டு அழகுற செய்யப்படுபவைகள். குமரி மாவட்டத்தை ஒத்த நார் பெட்டிகள் தான் செட்டியார்களின் வடிவமைப்பில் இருக்கின்றன. ஆனால், செட்டியார் நார் பெட்டிகளின் விளிம்பு மிகவும் அகலமாக இருக்கும். நார்களும் நேர்த்தியாக வகுந்தெடுக்கப்பட்டிருக்கும். தேவையற்ற வர்ணங்கள் இருக்காது.

மதுரையை அடுத்த பெருமாள்பட்டி நார் பெட்டிகள்

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற அசன விழாக்களின் போது, நார் பெட்டிகளை கொடையாக வழங்கும் முறைமை இன்றும் இருக்கிறது. சுட சுட சோறுகளை அள்ளி எடுத்து செல்ல இதனையே பயன்படுத்துவார்கள். சுடு சோறு நார்களில் பட்டு எழுப்பும் வாசனை பசிக்காதவர்களையும் சுண்டி இழுத்து கூட நான்கு கவளத்தை உள்ளிழுக்க வைக்கும் ஆற்றல் மிக்கது.

2018 ஆம் ஆண்டு எனது ஒரிய பயணத்தில், ஒரு குடியானவர் வீட்டில் நார் பெட்டியை ஒத்த ஒரு பெட்டியினைப் பார்த்தேன். பின்னல்முறை வேறு வகையில் இருந்ததோடல்லாமல், அதன் விளிம்புகளும் தனித்துவமாக இருந்தது. நான் அதனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஈட்டி மரத்தினை இழைத்து , மொழுமொழு தன்மைகள் கொண்ட இழைகளை இழுத்து கட்டியது போன்ற ஒரு பெட்டி. ஒருவகையில் பருமனான ஈட்டி மரத்தை அப்படியே குடைந்து எடுத்து செய்திருப்பார்களோ என ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆவல் பொறுக்கமுடியாமல் அதனை அணுகிச் சென்று தொட்டு தடவிப்பார்த்தபோது தான் அது பனை நார் என்கிற உண்மை உறுதியானது. பல வருட புழக்கம் உள்ள அந்த பெட்டியின் அழகிற்கு ஈடு இணையான எந்த நார் பெட்டியினையும் நான் இதுவரைப் பார்க்கவில்லை. பல வருடங்களாக கைகள் பட்டு வழுவழுப்பாகவும் ஒரு தனித்துவ மினுமினுப்பு கொண்ட ஆப்பிரிக்க அழகினை ஒத்திருந்தது அந்த பெட்டி. இந்த பெட்டி எனக்கு கிடைக்குமா எனக் கேட்டு அள்ளி எடுத்து வந்துவிட்டேன்.  

ஓலைப்பொருட்களின் மீது நார் பொத்துவது அழகினையும் உறுதியினையும் அப்பொருளின் ஆயுளையும் கூட்டும் என்னும் உண்மையினை வெகு சமீபத்தில் தான் நான் அறிந்துகொண்டேன். ஆகவே எனது தொப்பி, நான் பயன்படுத்தும் திருமறை பை மற்றும் பயணப்பைகள் அனைத்தையும் நார் கொண்டு பொத்திவிட முடிவு செய்தேன். இப்போது இவைகள் அனைத்தையுமே பிற பனையோலைப் பொருட்களுடன் இணைத்து கண்காட்சி அமைக்க முடிவுசெய்திருக்கிறேன்.

போவாஸ் பனை விதைகளுடன்

எழுத்தாளர் பொன்னீலன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பனம்பூ மாலை குறித்து பெருமளவில் பேசப்படுகிறது ஆனால் “நார்முடி சேரல்” என்பது குறித்த பேச்சுகள் பரவலாக இல்லை என்றார்.  “களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்”, பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் கரிய களக்காய் போன்ற மணிகளையும் முத்துக்களையும் பொன்னிழைகளில் கோர்த்து பட்டுத்துணியால் செய்த தலைபாகையாக அணிந்துகொண்டவன் என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. “நார்முடி” என்ற வார்த்தை சேர மன்னர்கள் தங்கள் மணி மகுடமாக பனை நாரினை கொண்டிருந்தார்கள் என குறிப்பால் உணர்த்துகிறது என அவர் கூறினார். பனை நாரினை இழப்பது, நமது சங்க இலக்கியத்துடனான நமது நேரடி தொடர்பை இழப்பது ஆகும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 13

மார்ச் 26, 2021

தாவரசங்கமத்துள்

சாரா மெலடியுடைய திருமணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. திருமண நிகழ்ச்சிக்கு மிக குறைவானவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். சமூக இடைவெளி விட்டு ஆசனங்கள் இடப்பட்டிருந்தன. அங்கே டாக்டர் ஷோபன ராஜ் அவர்களை சந்தித்தேன். எனக்கு பனை குறித்த ஆரம்பகட்ட புரிதல்களை சிறு பிள்ளைக்கு கற்றுகொடுப்பது போல் கற்றுக்கொடுத்த பேராசிரியர். கொரோனா அச்சம் நாகர்கோவிலில் தலை தூக்கியிருக்கிறதை நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. அனைவரும் முக கவசம் அணிந்தே வந்திருந்தார்கள்.  அம்மா மற்றும் குடும்பத்தின் நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகளைப் பார்க்கும் வாய்ப்பாக மெலடியின் திருமணம் அமைந்தது. ஆனால் ஒருவரிடமும் நின்று பேசும்படியாக சூழல் அமையவில்லை. கண்களாலேயே பேசிக்கொண்டோம்.

அன்று அம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ரங்கிஷை பார்க்கச் சென்றேன், ரங்கிஷ், பனை மரச் சாலை பயணத்தில் என்னோடு தொலைபேசி வழியாக இணைந்துகொண்ட நாகர்கோவில் நண்பன். அதனைத் தொடர்ந்து பல பயணங்களில் என்னோடு இணைந்துகொண்டவன். சிறந்த புகைப்படக் கலைஞன். என் மீதும் எனது பயணங்கள் மீதும் மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன். பழவேற்காடு செல்லுகிறேன் என்றபோது அவனது காமிராவை தந்து உதவினான். அதனை கொண்டு கொடுக்கச் சென்றேன். இந்த முறை நண்பர்களின் உதவிகள் பல திசைகளிலிருந்து பல்வேறு வகைகளில் கிடைத்துக்கொண்டே இருந்தது கடவுளின் அருள் தான்.

பதினாறாம் தேதி மிகப்பெரிதாக ஏதும் நிகழவில்லை. ஆனால், நாகர்கோவில் சென்றுவிட்டு வரும் வழியில், ஒரு தேங்காய் ஏற்றி செல்லும் டெம்போ பார்த்தேன். அதற்குள் தேங்காய் சுமக்கும் கடவங்கள் இருந்தது. தேங்காய் சுமக்கும் கடவம் இருவகையில் முக்கியமானது. ஒன்று கடவத்தின் உறுதி. சில வேளைகளில் ஓலைக்கடவத்தின் மீது நார் கொண்டும் பொத்தியிருப்பார்கள். கடவங்கள் நார் கொண்டு பொத்தும்போது உறுதிமிக்கவைகளாக மாறிவிடுகின்றன. மற்றொன்று, ஓலைகள் கொண்டு செய்யும் கடவங்களின் அமைப்பு ஒன்று போலவே இருக்கும். அகன்று உயரம் குறைவாக காணப்படும். கடவங்களில் அதிகமாக தேங்காய்களை சுமப்பது இயல்வதல்ல. ஆகவே, நல்ல சுமட்டுக்காரர்களுக்கு ஏற்றவிதமாக, தென்னை ஓலையில் அதிகபடியான பின்னலை, வைத்திருப்பார்கள். புனல் போல விரிந்திருக்கம் அந்த பகுதியானது, மேலதிக தேங்காய்களை சுமந்து செல்ல வாகாக அமைந்திருக்கும். இந்தவித பெட்டிகள் இரண்டு பொருட்கள் ஒன்றிணையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பனை ஓலை மட்டுமல்லாமல் தென்னை ஓலைகளும் இப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஓரிடத்தில் வாழும் இரண்டு தாவரங்களை எப்படி மக்கள் புரிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும். 

பனை பொருட்களோடு இணைந்து கொள்ளும் தாவர பொருட்கள் என்பது ஒரு விரிவான பேசுபொருள். தென்னை, புளி, மா மரம், மரவள்ளி கிழங்கு, வாழை, சுரை, கமுகு, பேத்தவரை, ஆல், அரசு மூங்கில், என அவைகளின் விரிவு நாம் எண்ணிப்பார்க்க இயலாதபடி பெரிதானது. இந்த வரிசை, நமக்கு பனை எப்படி தன்னை சுற்றியுள்ள தாவரங்களோடு இணைந்திருக்கிறது. பாரக்கன் விளை அருகிலுள்ள காட்டுவிளை என்ற பகுதியில் பனையேறிக்கொண்டிருக்கும் செல்லதுரை என்ற பெரியவரை சந்தித்தபோது, பனை மரத்தில் ஏறுவதற்காக தேங்காய் தொண்டுகளை பனை மரத்தில் கட்டி வைத்து அதனை படியாக பாவித்து ஏறினார். பனையேறிகளின் தொழில் கருவியான அருவா பெட்டி என்பது பனம் பாளைகளால் செய்யப்பட்டதே.

எனது பயணத்தில், இன்றும்  கூட கரூர் திண்டுக்கல் பகுதிகளில் பதனீர் இறக்க சுரைக் குடுவைகளை பயன்படுத்தி வருகிறதை பார்த்திருக்கிறேன். அதற்காகவே சுரைக்குடுவைகளை தங்கள் தோட்டத்தில் பனையேறிகள் வளர்க்கிறார்கள். ஒருமுறை இயற்கை விவசாயம் செய்யும் சரோஜா அவர்களை சந்திக்க பள்ளபட்டி  சென்றிருந்தேன். எனது பல வருட தேடுதலுக்கு பயனாக அங்குதான் சுரைக்குடுவை பயன்பாட்டில் இருப்பதை கண்டுகொண்டேன். அன்று நான் அடைந்த ஆனந்த பரவசம் என்பது பனை சார்ந்த தேடுதலின் ஒரு சில உச்ச கணங்களில் ஒன்று என்றே சொல்லுவேன். சரோஜா அவர்கள் என்னை கோவிலூர் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, நாங்கள் சந்தித்த செல்வராஜ் என்ற பனையேறி கை நிறைய எங்களுக்கு சுரை விதையினைக் கொடுத்தார். பனையேறிகள் வள்ளல் எனச் சொல்லுவது வெறுமனே அல்ல, அவர்கள் அள்ளி அள்ளி கொடுப்பவர்கள்.

செல்வராஜ் அவர்கள் அதனை எப்படி நடுவது பேணுவது போன்றவற்றைக் குறித்து விளக்கினார். ஒரு கட்டத்தில் சுரை கொடியில் பூத்து காய் வந்த பின்னர் காய்களை எப்படி நேராக அமரவைப்பது. அதன் மூலம், எப்படி குடம் போன்ற வடிவத்தில் சுரைக்காயினை எடுக்கமுடியும் என விவரித்தார். பனையேறிகள் தங்களைச் சூழ ஒரு சூழியல் கட்டமைப்பை பேணிவந்திருக்கிறார்கள் என இவைகள் நமக்கு காண்பிக்கிறது.

எனது பயணத்தில், பனை மரங்களில் பற்றிப்பிடித்து ஏறும் பீர்க்கங்காய் (Luffa aegyptiaca, sponge gourd) கொடிகளைப் பார்த்திருக்கிறேன். பீர்க்கங்காய் இளசாக இருக்கும்போது, உணவாகவும் முத்திய பின்பு அதிலுள்ள நார்பகுதிகள் அதிகமாகி, உண்ணத்தகாததாக மாறிவிடும், ஆனால் சர்வதேச அளவில், முற்றிய பீர்க்கன், உடலில் தேய்த்து குளிக்கும் பஞ்சாக பயன்படுத்தபட்டுவருகிறது. நார்களின் நீடித்த உழைப்பினால் இது பலரால் விருபப்பட்டு இன்றும் உள்ளூரிலும் பயன்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் பெருமளவில் பரவியிருக்கும் தாவரம் மூங்கில் ஆகும். மூங்கில் பனையேறிகளின் வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குஜராத் மற்றும்  வேறு சில பிராந்தியங்கள் மூலமாக அறிகிறோம். மூங்கிலில் தான் பதனீர் எடுத்து வருவதும், மூங்கில் கழிகளை பயன்படுத்தி பனை ஏறுவதும் என மூங்கில் பனையோடு இணைந்துகொண்டதுபோல் வேறு தாவரங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. என்றாலும் தமிழகத்தில் மூங்கில் கூரை வேய்வதற்கே அன்றி பெருமளவில் பனையுடன் இணைந்துகொண்டது அல்ல. பனையேறிகள் பாளை சீவும் அரிவாளினைத் தீட்ட பயன்படுத்தும் பொடியை அருவாபெட்டிக்குள் ஒரு பொடிக்குழலினுள் வைத்திருப்பார்கள். பொடிக்குழல் என்பது அரையடி நீளமும் விரல் பருமனும் உள்ள சிறிய மூங்கில் துண்டுதான். ஒருவேளை தேடினால் வேறு சில பொருட்களில் பனை இணைந்துகொள்ளுமாயிருக்கும்.

மும்பையில் பனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய தருணத்தில் இங்குள்ள சூழியல் ஆர்வலர்களுக்கு மிகப்பெரும் சந்தேகம் இருந்தது. பனை இங்குள்ள மரம் தானா? இப்படி ஒற்றைப்படையாக ஒரு மரத்தை மட்டுமே விதைப்பது சரியா போன்ற விவாதங்கள் பெருமளவில் முன்வைக்கப்பட்டன. அனைவரையும் சமாளிக்க எனக்கு உதவியாயிருந்தது ஆல மரமும் அரச மரமும் தான். ஆரே பகுதியெங்கும் பனை மரங்களை ஆல மரமும் அரச மரமும் பற்றிப்பிடித்து சுற்றி நெருக்கி வளருவதையே அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன். ஒரு மரம் வாழும் பகுதியில் வேறு மரங்கள் வாழமுடியாது என்றிருக்கும் சூழலில், இந்திய ஆன்மீக மரங்களான ஆலமரம் மற்றும் அரச மரம், தங்கள் வாழ்விடத்தை பனையைச் சுற்றி அணைத்து அமைத்துக்கொண்டது சாதாரணமானது அல்ல என்றேன். இக்கருத்து மிகப்பெரிய மாற்றத்தை மும்பையில் ஏற்படுத்தியது.  ஓரிடத்தில் இரு மரங்கள் என்பது பனையை அன்றி வேறு எதுவுமே நமது கண்களின் முன்பு இல்லை. மாத்திரம் அல்ல மும்பை போன்ற இடப்பற்றாக்குறை நிறைந்த இடத்தில் ஓரிடத்தில் இரு மரங்கள் என்பது வரமாகவே பார்க்கப்பட்டது.

சங்கர் கணேஷ் 2017 முதல் எனது நட்பு வட்டத்தில் இருப்பவர். பட்டதாரி பனையேறி. ஒருமுறை என்னிடம், பனையேறிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்றினை விவரித்தார். கடந்தையின் பெருக்கத்தைக் குறித்தும் பனையேறிகள் அவைகளை சமாளிக்க சிரமப்படுவதையும் குறித்து பேசினார். கடந்தை (The Giant Indian hornets) எனப்படும் மிகப்பெரிய குளவி வகை. ஒரு மனிதன் மூன்று கடந்தைகளிடமிருந்து ஒரு சேர கொட்டு வாங்கினால் போதும், மரணம் ஏற்படும் வகையில் கொடிய விஷம் நிறைந்தது. வலியும் கடுமையாக இருக்கும். பெரும்பாலும், ஒற்றைக் கொட்டுகளை பனையேறிகள் “தாங்கிக்கொள்வார்கள்”. கடந்தைக் குறித்து என்னால் உடனே பதில் கூற முடியவில்லை, ஆனால் அது குறித்து விசாரித்து அறிந்தவைகள்  நல்ல செய்திகள் அல்ல. கடந்தை கூடு பெருகிக்கொண்டே செல்லும். ஆடு மாடு நாய் மனிதன் என அது இருக்கும் இடத்திற்குள் எவரையுமே நுழையவிடாது. பெருகும் தன்மை அதி வேகமாக இருப்பதால், கூண்டோடு நெருப்பிலிட்டு அழிப்பதே முக்கியமானது எனக் கூறுகிறார்கள். கடந்தைக்கும் சூழியல் பங்களிப்பு இருக்குமே? இருக்கும், இருக்கலாம், ஆனால், அப்படி விடுவது மனித நடமாட்டமுள்ள பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Deadly Asian Hornets that can 'kill with one sting' are heading to the UK -  Mirror Online
அபாயகரமான கடந்தை

குமரி மாவட்டத்தில் உள்ள நடைக்காவு என்ற பகுதியில் பனையேறி ஒருவர் இருக்கிறார் என்று அவரைத் தேடிச்சென்றேன். அப்போது அவர், பனை ஏறி கருப்பட்டி தயாரித்து கெல் பாம் (kel palm) என்ற கேரள அரசு நிறுவனத்திற்கு வழங்கிக்கொண்டிருந்தார். நான் தேடிச்சென்ற நேரம் அவர் நீண்ட குச்சியில் ஓலைகளைக் கட்டி வைத்துகொண்டிருந்தார். எதற்காக இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, “ஒரு கடந்த கூடு இருக்கு, தீ வேசணும்” என்றார். பொதுவாக கடந்தை கூடுகளை மாலை வேளைகளில் தான் நெருப்பு வைதுத் கொளுத்துவார்கள். அதற்கென திறன் வாய்ந்த மனிதர்கள் உண்டு. இரண்டு லிட்டர் மண் எண்ணை, இரண்டு குவாட்டர் மற்றும் 500 ரூபாய் கொடுத்துவிட்டால், ஒரு மணி நேரத்தில் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவார்கள். பனை சார்ந்து வாழும் இம்மனிதர், தானே களமிறங்கியிருக்கிறார் போலும் என நினைத்துக்கொண்டேன்.

ஏதோ எண்ணியவனாக கடந்தை கொட்டினால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டேன், “பேத்தவரையை அரச்சு தேய்ப்போம்” என்றார். போகிற போக்கில் கிடைத்த அரிய தகவல் இது. அதனை நான் பார்க்கவேண்டுமே என்றேன். எங்கிருந்தோ ஒரு மூலிகைச் செடியினைக் கொண்டுவரப்போகிறார் என்று எண்ணி, இதனைக் கூறினேன். அவரது மனைவி இதா இங்கே தான் நிற்கிறது என அந்த செடியினை வீட்டின் அருகிலேயே காண்பித்தார்கள். பேத்தவரை என்பது மஞ்சள் நிற பூக்களும் அவரை போன்ற காய்களும் உள்ள சிறிய செடி. முட்டளவு அல்லது இடுப்பளவு மட்டுமே வளரும் தன்மையுடையது. குமரி மாவட்டத்தில் பெருமளவு காணப்படுகின்ற செடி தான். உணவாக பயன்படவில்லையென்றாலும் பனையேறிகளின் வாழ்வில் முக்கிய மருந்தாக இது செயல்பட்டிருக்கிறது என அறியும்போது, நமக்கருகில் இருக்கும் தாவரங்கள் குறித்து நாம் ஒன்றுமே அறிந்துகொள்ளவில்லை என்றே தோன்றியது.

உப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா? | Side  effects of tamarind - Tamil BoldSky
புளி – இணையத்திலிருந்து

புளியும் பனையும் இணைந்திருக்கும் ஒரு சூழலை திண்டிவனம் பகுதியில் பார்த்தோம் இல்லையா?. குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், புளிய மர இலைகளைக் கூட தேடி எடுத்து அக்கானி காய்ச்சும் சூழ்நிலையே அன்று இருந்தது. அக்கானி என்பது பதனீரைக் குறிக்கும் குமரி மாவட்ட சொல். ஓடு உடைத்த புளியினை அப்படியே கம்பு, மற்றும் கொட்டைகளுடன் பானையில் போட்டு, ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் காய்ச்சிய பதனீரை பானைக்குள் ஊற்றுவார்கள். பின்னர் வண்டுகட்டி, 90 நாள் அசையாமல் ஓரிடத்தில் வைத்தால் பானையில் கற்கண்டு பரல்கள் பிடித்திருக்கும். புளியில் இனிப்பு ஏறி தேனடையாக மாறிவிட்டிருக்கும். சுவைத்தால், ஏதோ பேரீச்சையினைச் சாப்பிடுவதுபோல் புளிப்பு மறைந்து இனிப்பு சுவை கூடியிருக்கும். கடந்த காலத்தில் குமரி மாவட்ட சிறுவர்கள் விரும்பியுண்ட சுவை மிக்க பதார்த்தங்களுள் இது முதன்மையானது. ஏதோ ஒரு நல்லூள் இருந்ததால், மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றும்போது, பால்மா கார்டன்ஸ் என்ற அவர்களது தோட்டத்தில் பெறப்பட்ட பதனீரில் செய்த புளி பதனீரைச் சுவைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இன்று பனைத் தொழிலை சாராத ஒருவர் ஒரு பானை நிறைய புளி பதனீர் செய்யவேண்டுமென்று சொன்னால் குறைந்தபட்சம் ஒரு 5000 ரூபாய் செலவாகும். மிக எளிதாக நமது நிலப்பரப்பில் இருந்துவந்த ஓர் உணவு இன்று பெரும் பொருட்செலவு செய்தால் அன்றி மீட்டெடுப்பது இயல்வதல்ல.  நமது முன்னோர் கண்டுபிடித்த உணவு வகைகள் நட்சத்திர விடுதியினையும் மிஞ்சும் வகையில் அரிதினும் அரிதானதாகவே இருக்கிறது. மேலும் குறைந்த பட்சம் மூன்று மாதம் காத்திருக்கவும் வேண்டும்.

புளிகரைசலும், கருப்பட்டியும் சுக்குப்பொடியும் கலந்தே பானகம் செய்வார்கள். தென்னக பக்தர்களுக்கு இது ஒரு தவிர்க்க இயலாத மென்பானமாக திருவிழாக் காலங்களில் இருந்திருக்கிறது. அப்படியே கொரண்டு என்ற செடியினை தான் கற்கண்டு பிடிக்க பானைக்குள் போடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தினரின் பால்மா கார்டன்ஸ் குமரி எல்லையிலுள்ள களியக்காவிளைக்கு அருகில் இருக்கிறது. ஒரு சில வருடங்கள் நான் இங்கே தான் தங்கினேன். பதனீர் விற்பனையாகாத தருணங்களில், இங்கு நாங்கள் பதனீரைக் காய்ச்சி கருப்பட்டியாக்குவது வழக்கம். ஒருநாள், அங்கே பிடுங்கிய கிழங்கினை போட்டு வேகவைத்து கொடுத்தார்கள். மரவள்ளிக்கிழங்கு பக்குவமாக வெந்துவிட்டதென்றால் பஞ்சுபோல மாறிவிடும். உப்பு ஒன்று போல பிடித்திருக்கும். அன்று அந்த பாகிற்குள் கிடந்து வெந்த கிழங்கு, தேனில் ஊறிய கிழங்கென ஆனது. இதன் சுவை, கிட்டத்தட்ட,  கிழங்கையும் கருப்பட்டி பாகினையும் ஒன்றாக மெல்வதுபோன்ற ஒரு உணர்வினைக் கொடுக்கும். இப்படி ஒரு உணவு தயாரிக்க எவரும் இன்று தயாராவது இல்லை. விலையும் கட்டுப்படியாகாது.

பனையேறிகள் வாழ்வில் அரிசி மிக முக்கியமான ஒரு உணவுப்பொருள். குமரி மாவட்டத்திலுள்ள அத்தனை பனையேறிகளும் ஒருவேளையாவது நல்ல சம்பா அரிசி சோறும் மீனும் வைத்து சாப்பிடுவார்கள். இன்றும் சிலர் பனை மரங்கள் நடுவதை ஏதோ தேவையற்ற செயல் எனச் சொல்ல முற்படும்போது, பனை ஒரு பாலைவன தாவரம் எனக் கூறி கடுமையாக விவாதிப்பார்கள். அப்படி பனைக்கென ஒரு நிலம் கிடையாது. அது பல்வேறு நிலங்களிலும் நாடுகளிலும் வாழும்படி தன்னை தகவமைத்துக்கொண்ட மரம். உப்பு நீர் நிறைந்த பகுதிகளிலும் கூட செழித்து வளரும், ஆகவே தான் பனை மரங்கள் சதுப்பு நிலப்பகுதிகளிலும் செழித்து வளருவதை நம்மால் காணமுடிகிறது. அதாவது மக்கள், தங்கள் வாழ்வில் பனை தேவையென கருதி தங்களுடன் வைத்துக்கொண்ட ஒரு மரம் இது. பெருமிதத்துடன், தங்கள் தலைமுறையின் சொத்து என சேர்த்துக்கொண்ட மரம். ஆகவே, இவைகள் பரவலாக எங்கும் நிற்பதை நாம் காணலாம். மனித வாழ்வில் நெல்லுடைய பயன்பாடு 10000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கிறது. அவ்வகையில்  பனை மரத்தின் பயன்பாடு வெகு தொன்மையானது.

To Mumbaikars' surprise, this year's Alphonso mangoes came from Malawi, not  Konkan - The Economic Times
மாம்பழங்கள் – இணையத்திலிருந்து

திருநெல்வேலி பகுதியிலுள்ளவர்கள் கோடைக்காலத்தில் பதனீரில் மாம்பழத்தைப் போட்டு பிசைந்து சாப்பிடுகின்ற ஒரு வழக்கம் உண்டென்று சொல்ல  கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வழக்கம் குமரி மாவட்டத்தில் கிடையாது. காரணம், குமரி மாவட்டத்தில், பங்குனியோடு பதனீர் காலம் முடிவடைந்துவிடும், மாம்பழங்கள் சித்திரை மற்றும் வைகாசியிலேயே கிடக்கத் துவங்கும். ஆகவேதான், குமரி மாவட்டத்தில் இவ்வித வழக்கங்கள் இல்லை. ஆனால் மாங்காய் பயன்பாடு இருந்திருக்கிறது. சுமார் 35 – 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலும், குமரி மாவட்ட மக்களுக்கு காலை உணவு என ஏதும் கிடையாது. இங்கு ஐரோப்பியர் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியானபடியால், காலை உணவு இல்லாமையை மக்கள் உணர்ந்திருந்தினர். பதனீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது. ஆகவே எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு பதனீர் குடித்தே ஆக வேண்டும். வயறு இசகி இடம் கொடுத்தாலும், தித்திப்பு மிக்க பதனீரை எப்படி உள்ளே செலுத்த? அப்படி வயறு நிறம்ப குடிக்காவிட்டால், பசிக்கும்போது என்ன செய்வது என திகைத்து போய்விட்டவர்களின் கண்டுபிடிப்பே, மாங்காயும், பதனீரும். மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும் என்பது பழமொழி. இங்கே மாங்காய் ஊட்டும் பதனீர், அரைநாள் பசியினை தாக்குப்பிடிக்கச் செய்யும் அளவு வீரியம் கொண்டது.

குமரி மாவட்டத்தில் காணப்பட்ட மற்றொரு பயிர், கொல்லா மரம். கொல்லா மரத்திலிருந்து கிடைப்பது தான் கொல்லாங் கொட்டை. அண்டி பருப்பு அல்லது முந்திரி பருப்பு என அழைப்பதையே குமரி மாவட்டத்தில், அண்டி (கொட்டை) அல்லது கொல்லாங்க் கொட்டை என அழைப்பார்கள். வெளி நாட்டிலிருந்து இங்கு உள்ள கொல்லம் துறைமுகத்தின் வழியாக வந்ததாகையால், கொல்லத்து கொட்டை, கொல்லாங்கொட்டை என்றானது.

தாய் மடி என எண்ணி பனை மடியில் வளரும் ஆலமரம்

குமரி மாவட்டத்தின் மிக முக்கிய உணவு முந்திரி கொத்து ஆகும். பார்க்க திராட்சை குலை போல ஒன்றிணைந்து காணப்படும் இந்த தின்பண்டம், சிறு பயறு, தேங்காய், மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து பிசைந்து உருட்டி அரிசி மாவில் முக்கி எண்னையில் இட்டு பொரித்தெடுக்கும் சுவையான தின்பாண்டம். எனது வீட்டில் ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் அம்மா தவறாமல் செய்வார்கள். தற்போது எண்பதை தொட்ட சூழலிலும் மும்பை வந்திருந்தபோது ஜாஸ்மின் மற்றும் குழந்தைகளை எல்லாம் அழைத்து அவர்கள் உதவியுடன் முந்திரி கொத்து செய்து கொடுத்தார்கள்.

Are cashews fruit? - Quora
கொல்லாம் பழம் – இணையத்திலிருந்து

அம்மாவின் மாணவரும் தற்பொழுது பத்திரிகையாளருமாக இருக்கின்ற திரு. மலரமுதன் என்னிடம் சொன்ன அனுபவம் இவைகளையும் தாண்டி வேறு ஒரு நிலையில் இருந்தது. முந்திரி பருப்பை சரியான அளவில் உடைத்து போட்டு, கருப்பட்டிக்கு பதில், பந்தனீரையே காய்ச்சி, பாகு பதம் வரும்போது, அதன் ஒட்டும் தன்மையை கணித்து, சுட சுட உடைத்த பருப்பிற்குள் ஊற்றி அவைகளைக் கலந்து சூட்டுடன், உருண்டையாக பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் ருசியினை மிஞ்சி எதையும் தான் சாப்பிட்டதில்லை எனக் கூறி வாயூற வைத்துவிட்டார். உண்மையிலேயே, இவ்விதமான ஒரு உணவினை எவரும் இன்று தயாரிக்கப்போவதில்லை. அப்படி தயாரிக்க முன்வருகிறவர்கள் கூட, கலப்படமோ, அல்லது சாமானியர்கள் வாங்க இயலாத விலைகளையே வைக்க முடியும்.

பனையேறிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு என சில மரங்கள் உண்டு. அவைகளையே அவர்கள் தேடிச் செல்லுவது வழக்கம். குறிப்பாக ஆண் பாளைகளை இடுக்கி பதப்படுத்துவதற்காக செய்யப்படும், கடிப்பு என்ற கருவி, கமுகு மரத்திலிருந்தும் உலத்தி என அழைக்கப்படும் கூந்தல் பனையிலிருந்தே பெரும்பாலும் செய்யப்படும். அத்தகைய கடிப்புகளை நான் கைகளில் எடுத்து பார்த்திருக்கிறேன்.  இவ்விரு மரங்களில் இருந்து கிடைக்கின்ற கடிப்புகள் வளையும் தன்மை கொண்டவைகளாக இருந்திருக்கின்றன என சங்கர் கூறுவதை கேட்டிருக்கிறேன். உடைந்து போகா தன்மைகொண்ட மரங்களையே பனையேறிகள் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். பல்வேறு காட்டு மரங்கள் இன்று சமதளத்தில் இல்லாமல் போய்விட்டன. பெண் பாளைகளை பதப்படுத்தும் கடிப்புகள் பல்வேறு மரங்கள் இருப்பதாக சங்கர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டபொது அதிர்ந்துபோய்விட்டேன். பல மரங்களின் பெயர்கள் என் வாழ்நாளில் நான் கேள்விப்பட்டிராத பெயர்களாகவே இருந்தன. வெடத்தலை, விராலி, வெண் நொச்சி, அச்சங் கம்பு, எனப்து வெண் அச்சி மற்றூம் கறுப்பு அச்சி மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் விராலிக்காட்டுவிளை மற்றும் அச்சங்குளம் என்ற பெயரில் ஊர்கள் உண்டு. இன்றைய காலகட்டத்தில்  சீவலப்பேரி பகுதி மட்டும் தான் கடிப்பு வாங்க எஞ்சியிருக்கும் ஒரே இடம்.

மருத்துவகுணம் உள்ள கம்புகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள் எனும்போது, உள்ளூர ஒரு திடுக்கிடலை நான் உணர்த்தேன். மருத்துவம் சார்ந்த அறிவுகள் எப்படி இவர்கள் பதப்படுத்தலுக்குள் வந்தன? பாளையைப் பதப்படுத்தும் வகைமைகள் ஒவ்வொர் இடத்திற்கு ஏற்ப வேறுபடுவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

குமரி மேற்கு பகுதியினைப் பொறுத்த அளவில் பனையேறிகளுக்கான பயன்பாட்டு நிலம் என்பவை கைவிடப்பட்ட மேட்டு நிலங்கள் தான். தண்ணீர் வசதி ஏதும் இருக்காது. ஆகவே பனையேறும் நேரம் தவிர்த்து தங்களுக்கு வேண்டிய காய்கறிகளையும் கீரைகளையும் பயிரிடுவார்கள். அதனை நடுதலை என்று கூறுவார்கள். கத்தரிக்காயும் வழுதணங்காய் போன்றவைகள் இதில் அடங்கும். பனை ஓலையில் செய்யப்பட்ட காக்கட்டை என்ற காவடி போன்ற நீர் சேகரிக்கும் பொருளில் நீர் மொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றுவார்கள்.

பனங்காடுகளில் தற்போது பெருமளவில் காணப்படும் ஊடுபயிர், என்பது முருங்கை தான். முருங்கை, இரும்புச் சத்து வழங்கக்கூடிய ஒரு கீரையாகும். வறண்ட நிலத்தில் வளருவதால் இதனை பனையேறிகள் தங்கள் நடுதலைகளுடன் பேணிக்கொண்டனர். ஆகவே அவைகளுக்கு ஊற்றும் தண்ணீருடன் முருங்கையும்  காப்பாற்றப்பட்டு வந்தன.

தமிழகம் முழுக்க பனை எப்படி இருக்கின்றதோ அது போலவே வாழையும் தமிழகம் முழுக்க பரவியிருக்கிறது. வாழை மரத்தை பேண இன்னும் சற்றதிகம் நீர் தேவைப்படும். ஆகவே வறண்ட நிலங்களில் வாழைகள் பயிரிடப்படுவதில்லை. ஆனாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழைகளையும் காக்கட்டையில் நீர் இறைத்தே பேணியிருக்கிறார்கள். வாழை குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில் விழாக்களிலும் பங்குகொள்ளும் முக்கியமான மட்டுமல்ல ஒரே கனி எனலாம். வாழை பழுக்கும் சமயத்தில் அதன் குலைகளை தென்னை ஓலைகளை வைத்து பொதிந்து காப்பாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருவேளை பழங்காலத்தில் பனையோலைகளை அதற்கு பயன்படுத்தியிருக்கலாம். இன்றும் கூட குமரி மாவட்டத்திலுள்ள திருமணங்களில் வாழைப்பழங்களை வழங்கும்பொது பனை ஓலைக் கடவத்தில் தான் வைத்து எடுத்துச் செல்லுவார்கள். 

மிகப்பெரும் தொழில் வாய்ப்பு எனும்போது பனையின் ஊடுபயிராக வேர்கடலை இருந்தது என்பதை சொல்லாமல் இருக்க இயலாது. கடலை மிட்டாய்க்கு பேர்போன இடம் என்றால் அது கோவில்பட்டி தான். கடலை மிட்டாய் முற்காலங்களில் கருப்பட்டி பாகு சேர்த்து தான் செய்தார்கள் என்பதை நண்பர் ஸ்டாலின் பாலுச்சாமி உணர்ந்து அதனை மீட்டெடுத்திருக்கிறார். அந்த கலவையினை கண்டடைந்த நமது முன்னோர் மிகப்பெரிய வணிக வளத்தினைமட்டுமல்ல நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தையும்  பாதுகாத்திருக்கிறார்கள்.  ஸ்டாலினை பின்தொடருகையில் அப்படியே எள்ளும் நமது மரபில் இருந்திருக்கின்றன என்பதையும் நாம் காண்கிறோம். எண்ணை செட்டிகள் கருப்பட்டியினை எள் ஆட்டும்போது போடுவது வழக்கம் என்பது கூட நாம் பார்த்திருந்தோம். எள்ளும் கருப்பட்டியும் உரலில் போட்டு இடித்து கொடுத்த கோடியூர் ரெஜி வாத்தியாரை என்னால் மறக்க முடியாது.   

பனை மரத்தில் தொற்றி ஏறும் கொடிகள் குறித்த சரியான தரவுகள் என்னிடம் இல்லை ஆனால், தமிழகமெங்கும் பனை தொழில் கைவிடப்பட்ட இடங்களில், பனை மரத்தை பற்றி அழிக்கத்துடிக்கும் அளவிற்கு பெயர் தெரியா பல கொடிகள் சுற்றி படர்ந்து ஏறியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பனை மரத்தில் ஏறும் கொடிகளைக் குறித்து தனியாகவே எவராவது ஆய்வு செய்யலாம்.

பனை சார்ந்து வளருகின்ற வேறு சில மருத்துவ தாவரங்கள் என பிரண்டை, முசுமுசுக்கை, வேலிப்பருத்தி,  நன்னாரி, ஓரிதழ் தாமரை போன்றவற்றைக் பாண்டியன் குறிப்பிடுகிறார்.

தென் மாவட்டங்கள் தான் என்று அல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட நன்னாரி சர்பத் வெகு பிரபலமாக இருக்கிறது. நன்னாரி, பனங்காட்டில் வளரும் மூலிகைச் செடி தான்.  நன்னாரி வேர் ஒரு சிறந்த நறுமணமூட்டி.

கருப்பட்டி காப்பி குறித்து தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள். சமீபத்தில் வேம்பார் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள், காப்பி குறித்து ஆய்வு செய்யும் ஒரு சர்வதேச ஆய்வாளர் வேம்பார் வந்ததைக் குறிப்பிட்டார். அவர் வெறுமனே தகவல்களை மட்டு சேகரிக்காமல் கருப்பட்டி காப்பி தயாரித்து குடித்து அதனை ஆவணப்படுத்தி சென்றுள்ளார். பொதுவாக கருப்பட்டி காப்பியில் காப்பி பொடியே இருக்காது என்பது அனேகருக்குத் தெரியாது. மாறாக கொத்துமல்லி போடுவார்கள். சுக்கு காப்பி போடும்போது சிறிது நல்ல மிளகும் போடுவார்கள். குமரி மக்கள் சந்திக்கும் இரு வேறு பருவமழைக்கு ஏற்ற வகையில் இந்த காப்பி தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இலங்கையில் தேனீர் அருந்துவது இனிப்பு சேர்த்து அல்ல என சொல்லக் கேட்டிருக்கிறேன். தேயிலையினை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடுவையில் எடுத்துக்கொள்ளுவார்கள். மற்றொரு கையில் கருப்பட்டியை எடுத்துக்கொண்டு, கருப்பட்டியைக் கடித்து தேனீரைக் குடிப்பார்கள். இவ்வகையில் வெகு சமீப காலத்தில் நமக்கு பழக்கமான தேயிலையுடன் கூட பனை உறவை மேம்படுத்திக்கொண்டது என அறிய முடிகிறது. 

பனங் கருப்பட்டி, அனைத்து மூலிகைகளும் சேரும் லேகியங்களில் ஒரு முக்கிய சேர்மானமாக இருந்துவந்திருக்கிறது. அவ்வகையில், நம்மால் எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு பனையோடு இங்குள்ள தாவரங்கள் மட்டுமல்லாது அயல் நாட்டு தாவரங்கள் கூட உறவாடியிருக்கின்றன என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 12

மார்ச் 19, 2021

கள்ளூறும் காலம்

சுமன் மற்றும் பீட்டர் இருவரும் என்னை பேருந்தில் வழியனுப்ப வந்தார்கள். இவர்கள் இருவரின் உதவியுமின்றி என்னால் கண்டிப்பாக பழவேற்காடு குறித்து முழுதுணர்ந்திருக்க இயலாது. அவர்களிடம் நன்றி கூறி இரண்டு பறிகளை எடுத்துக்கொண்டு சென்னை புறப்பட்டேன்.

சென்னை வந்தால் எனக்கு சொல்ல வேண்டும் என விஸ்வா வேதா சொல்லியிருந்தான். சென்னையில் அப்படி அனேகர் உண்டு. எனது பஞ்சவர்ணம் அத்தையின் மகள் செல்வி அக்கா மற்றும் பேராசிரியர் இஸ்பா ஆகியோருக்கு தெரியாமல் சென்னை வந்து செல்வது இயல்வதல்ல. அவர்களை சந்திக்காமல் ஊர் திரும்பினால் எப்படியாவது மோப்பம் பிடித்துவிடுவார்கள். பிற்பாடு நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டி வரும். அப்படி இருந்தும் சென்னை ஒவ்வொரு முறை வரும்பொதும் எவராவது என்னை கொத்திக்கொண்டு போய்விடுவதும் உண்டு. அலுவலக விஷயமாக வந்தால் தங்குமிடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். அன்று இரவு ஆவடியிலுள்ள முனைவர் இஸ்பா அவர்கள் வீட்டில் தங்கினேன். காலை 6.30 மணிக்கு விஸ்வா வந்து என்னை அழைத்துச் சென்றான்.

விஸ்வா பனை சார்ந்து சென்னையில் நிகழ்த்திய முன்னெடுப்புகள் முக்கியமானவை. பனை விதைகளை சேகரித்து கடற்கரைகளில் நடுவதும், ஏரி குளங்களில் நடுவதுமாக இருக்கையில் எனது தொடர்புக்கு வந்தவர். நோய் தொற்று இருக்கையில், விழுப்புரத்திலுள்ள கஞ்சனூர் சென்று மாட்டிக்கொண்டவர். அங்கே உள்ள பனையேறிகளுடன் மிகவும் நெருங்கிவிட்டார். ஏன் பனையேறவும் கூட கற்றுக்கொண்டார். அங்குள்ளவர்களை ஒன்றுதிரட்டும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மென்பொருள் துறையில் பணியாற்றுகிறவர்கள் அனேகர் பனை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பியிருப்பது சிறப்பு என்றாலும், பனை விதை சேகரிப்பு, பனை ஏறுதல் போன்றவைகளில் ஈடுபாடுகொண்டோர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையே உள்ளது.

நாங்கள் செல்லும் வழியில் பல்வேறு பனை மரங்களை பார்த்து நிதானமாக சென்றுகொண்டிருந்தோம். சென்னை எல்லையில் சில மலைக்குன்றுகள் இருந்தன. அவற்றின் உச்சியில் ஒரே ஒரு பனை மரம் தனியாக நின்றதை விஸ்வா காண்பித்தார். வழியில் பதனீர் வாங்கி குடித்தோம், சர்க்கரைத்தண்ணி  தான். எப்போதும் சாலையோரத்தில் பதனீர் வாங்கிக்குடிக்காதீர்கள் என்பதுவே அனைவருக்கும் நன் சொல்லும் அறிவுரை. பனை ஓலைகளை அலங்காரமாக வைத்து பனையோலைப்பெட்டிக்குள் பானையில் வைத்து விற்கும் திரவத்திற்கும் பதனீருக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்காது. பனை பொருட்கள் சாலைகளுக்கு வரத் தேவையில்லாத அளவிற்கு அது உற்பத்தியாகும் இடத்திலேய மக்கள் வாங்கிச் செல்லுகின்றனர். ஆகவே நம்மை சாலையில் சந்திப்பவைகள் அனைத்துமே போலிகள் தாம்.

இதனை நான் சொன்னபோது, ஒரு நண்பர் கொதித்துப்போய் சொன்னார், “பன்னாட்டு நிறுவனங்களின் திருட்டுத்தனங்களைக் கேள்விக்குட்படுத்தாமல், அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை தேடும் இவ்வெளிய மக்களை ஏன் இப்படி பழிக்கிறீர்கள்” என்றார். மெய் தான், ஆனால், நம்மைத் தேடி வரும் போலி பனை பொருட்களால் உழைத்து ஓடாய்ப் போகும் பனையேறிகளின் வாழ்வு குறித்தும் பேசவேண்டி இருக்கிறதே? பனையேறிகள் மீது நான் பெருத்த மரியாதை கொண்டுள்ளேன். அவர்கள் அனைவருமே, கடும் உழைப்பை செலுத்தி நேர்மையான வாழ்வை கடைபிடிப்பவர்கள் தாம். ஆனால் இந்த பொல்லாத காலம் அவர்களையும் திசை மாற்றிவிடக்கூடாதே என்கிற படபடப்பு எனக்கு உண்டு. பதனீரை இலவசமாக கொடுத்தவர்கள், இன்று அவைகளை விற்பதற்கு காரணம், காலம் அவர்களை அச்சூழலுக்குள் தள்ளியிருக்கிறது என்பது தான். அவர்களின் வாழ்வில் எவரும் விஷத்தை விதைத்துவிடக்கூடாதே என்கின்ற ஆதங்கத்தில் தான் போலிகளை கைகாட்டவேண்டியிருக்கிறது.

ஒருமுறை பனையேறிகளை நன்கு அறிந்த ஒருவர், சற்று பழைய மனிதர், நம்ம ஆட்களிடமும் தவறு உண்டு, தண்ணீரை பதனீரில் கலந்துவிடுவார்கள், அதற்குள்ளிருந்து தவளைக் குதித்துப்போகும்போது இவர்களின் வண்டவாளம் எல்லாம் வெளியாகிவிடுகிறதே என்றார். எனது 25 வருட அனுபவத்தில் இந்த குற்றச்சாட்டை நான் முதன் முறையாக கேட்கிறேன். அந்த பெரியவரின் கூற்று, ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வெகு பிரபலமாக இருந்த பால்காரர்கள் குறித்த நகைச்சுவை தொடர்ச்சி என்றே என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. பால்காரர்கள் தண்ணீர் சேர்ப்பார்கள் என்று ஒரு காலத்தில் பத்திரிகைகள் விதம் விதமாக சிரிப்பு துணுக்குகளைப் போட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் பாக்கெட் பால் வந்தபோது, பாலே இல்லாமல் டிடர்ஜெண்ட் சேர்த்து கொடுக்கப்பட்டபோது அது குறித்து பேச்சு மூச்சில்லை. சிலர் சந்தேகிப்பது போல, நமது பாரம்பரியத்தை ஊடகங்கள் தான் முதல் ஆளாக நின்று அழித்திருக்கின்றன. சரி, தவளை வந்தது உண்மையா இல்லையா என கேட்கலாம். பனை மரத்தில் வாழும் தவளைகள் தான் இருக்கின்றனவே? அவைகள் ஏன் உள்ளே குதித்திருக்கக்கூடாது? ஆம் பனை மரத்தில் தவளை இருக்கும் என்ற தகவலும் பொது மக்களுக்கு தெரியாது, பனையேறிகள் மட்டுமே அறிந்த உண்மை அது. ஆக இவர்களின் அறியாமையால் பனையேறிகளை பழியேற்கவைத்துவிடுகிறார்களே?

திண்டிவனம் பனங்காடு

திண்டிவனத்தை நெருங்கியபோது விஸ்வா என்னிடம், “அண்ணா இங்கே தான் இந்த வருடம் பனை விதைகளை சேகரித்தோம்” என்றான். பனை விதை சேகரிப்பு என்பது பனை பாதுகாப்பில் ஒரு முக்கிய செயல்பாடு. பனை சார்ந்த சூழியலை அவதானிக்கும் செயல்பாடு இது என்று நான் கூறுவேன். பனையேறிகளின் குடும்பத்தினரைத் தவிர, பனை மரத்தை அணுகி அறிந்தவர்கள் பனை விதை சேகரிப்பாளர்கள் தான். பழங்கள் விழும் காலம், சேகரிக்கும் திறன், பாதுகாத்து வைக்கும் நுட்பம், புதர்களுள் கிடப்பவைகளை கண்டுபிடிப்பது, பனங்காடுகளுக்குள் வசிக்கும் உயிரினங்கள் என அது ஒரு மாபெரும் பட்டறிவு பாசரை. இன்று தமிழகத்தில் பனை விதைப்பு என்பது ஒரு கவர்ச்சிகர செயல்பாடு ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், பனை விதைகள் சேகரிப்பதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பனை விதைகள் சேகரிக்காதவர்கள் கூடி, நாங்கள் தான் பனை நட்டோம் என்று ஊடகங்களுக்கு முகத்தைக் காட்டும் அசிங்கங்களும் இக்காலங்களில் அரங்கேறத் துவங்கின. ஆகவே, பனை விதைகளை சேகரிக்காதவர்கள் விதைப்பதில் அர்த்தமில்லை என்று நான் பகிரங்கமாகவே அறிவித்தேன்.

பனை விதைகள் என்னும் வார்த்தை 2016 ஆண்டிற்கு பிறகே புழக்கத்தில் வந்தது. பனங் கொட்டை என்ற வார்த்தையே மரபானது. தமிழகமெங்கும் பாரம்பரியமாக கொட்டைகளை சேகரித்து, அவைகளை கிழங்குகளுக்காக போடும் தொழில் செய்பவர்கள் அனேகர் உண்டு. அப்படிப்பட்ட முதியவர்கள் தான் பெரும்பாலும், பனங்கிழங்குகளை வாங்கி பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் விற்பனை செய்வார்கள். இவ்விதமான மனிதர்களின் வாழ்வாதாரம் குறித்து எவருமே சிந்திப்பதில்லை. பனை விதைப்பு குறித்து எப்போதும் நான் சொல்லும் கருத்துக்கள் உண்டு. கூடுமானவரை நமது ஊருக்கு அருகாமையிலேயே பனை விதைகளை சேகரிக்க வேண்டும். அப்படி சேகரிக்கும்போது, வழக்கமாக சேகரிக்கும் நபர்கள் ஊருக்குள் இருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்ச தொகையினை அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு ஊரில் கிடைக்கும் பனை விதைகளில் இருபது சதவிகிதம், வெளியூருக்கு அனுப்பலாம். ஆனால் 80 சதவிகிதம், உணவாக மாற வேண்டும். தேவையான அளவிற்கு வருடம் தோறும் விதைக்கப்பட வேண்டும். இன்று, பல ஊர்களில் பனை விதை நடவோ, உணவாக பாவிக்கப்படுவதோ இல்லை. நேரடியாக பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். பனை விதைகள் ஒரு நுகர் பொருள் என்ற நிலையினை அமைத்தாலே பனை மரங்கள் வைத்திருப்போருக்கு அதனை பாதுகாக்க தோன்றும். நாமாக களமிறங்கி பனை விதைகளைப் பொறுக்கவில்லையென்று சொன்னால், பனை விதைகளை சேகரித்து கொடுப்பவர்களுக்கு அடிப்படை விலை கொடுப்பது அவசியமானதும் அர்த்தம் பொதிந்ததுமாகும்.

திண்டிவனத்தின் பனங்காடுகள் என்னளவில் மிக முக்கியமானவைகள். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நெருக்கமாகவும், நெடுந்தூரம்  பரவியிருப்பதையும் காணலாம். எனக்கு அந்த பகுதிக்கு செல்லவேண்டும் என பல முறை எண்ணமிருந்தும் சாத்தியப்படவில்லை. இம்முறை விஸ்வா தனது பைக்கில் என்னை அழைத்துக்கொண்டு சென்றான். அது ஒரு ஏரியின் கரைப் பகுதி. கரை ஓரப்பகுதி சுமார் 30 மீட்டர் அகலம் இருக்கும். அதற்குள் வரிசையாக 10 பனை மரங்கள் நெருங்கியபடி நிற்கும். அந்த பகுதியில் தானே ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருக்கிறதைப் பார்க்கலாம். தமிழகத்தில் இதுபோல நெருக்கமாக இருக்கும் பனங்காடுகள் வேறு பல இடங்களிலும் இருக்கின்றன. வரிசையாக ஒற்றைமரங்கள் சுற்றி இருக்கும் பகுதிகளும் இருக்கின்றன. இந்த பனை மரங்கள் யாவும், அருகிலுள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்டது என விஸ்வா சொல்லக்கேட்டேன். பருவ காலத்தில் வாரத்திற்கு ஒருமுறைச்  சென்றால், ஒரே நாளில் 10,000 விதைகள் பொறுக்க இயலும்.  திண்டிவனம் பகுதியில் காணப்படும் இந்த பனங்காடு ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு மாபெரும் பனை சுரங்கம்.

திண்டிவனம் என்பதற்கான பெயர் காரணம் குறித்து தேடும்பொது திந்திரி வனம் என்ற பெயர் மருவியிருப்பது தெரியவந்தது. திந்திரி என்றால் புளிய மரம் என்றும், வனம் என்பது மரங்கள் நெருக்கமாக இருக்கும் காட்டுப்பகுதி என்பதும் நாம் அறிந்ததே.  புளியமரங்களும் பனை மரங்களும் பிறப்பிடம் சார்ந்து நெருங்கிய உறவினர்கள் தாம். இரண்டிற்கும் தாயகம் ஆப்பிரிக்கா என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் அதிக பனை மரங்கள் நடப்படுவதை அறிந்து மனவேதனைக்குள்ளான ஒரு “சமூக ஆர்வலர்”, பனை ஒரு வந்தேறி மரம் என குறிப்பிட்டார். பனை இங்கு வந்தேறியிருக்காவிட்டால், தமிழகம் கண்ட பஞ்சத்தில், பூர்வகுடிகள் என சொல்லப்படும் எவரும் எஞ்சியிருப்பார்களா என்பது சந்தேகமே. புளி நமது சமையலறையின் முக்கிய சுவைகூட்டியாக இருப்பதுடன், விறகாகவும் மருந்தாகவும் கூட பயனளித்திருக்கிறது. பஞ்சகால உணவாக புளியங்கொட்டைகள் இருந்திருக்கிறன.

ஏரியில் தண்ணிர் இல்லை. எங்கள் இரு சக்கர வாகனம் ஏரிக்குள் தான் நிறுத்தப்பட்டிருந்தது. சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். நான் புகைப்படங்களை எடுப்பதை விஸ்வா புகைப்படம் எடுத்தார். அது ஒரு சிறந்த புகைப்படமாக மாறிவிட்டது. மறுநாளில்தானே மும்பையிலிருந்து துருவா என்ற சூழியல் செயல்பாட்டாளர், எனது புகைப்படத்தை வரைந்து அனுப்பியிருந்தார். “பனைகள் சூழ பனை மனிதன்” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அப்படத்தை பார்க்கையில் பனையால் அமைத்த கோட்டைக்குள் நான் நிற்பது போன்ற ஒரு பிரம்மிப்பு ஏற்பட்டது.

வழியில் தானே காலை உணவை உண்டோம். அந்த நேரத்தில் விஸ்வாவின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே, தனது அலுவலக வேலையினை சிறிது நேரம் அந்த உணவகத்திலேயே தொடர்ந்தார். இன்னும் வந்து சேரவில்லையா என்று விழுப்புரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். மீண்டும் பயணிக்கையில், சாலை ஓரத்தில் வரிசையாக பனை மரங்கள் நிற்பதைக் கண்டு அந்தவழியாக வண்டியை திருப்பச் சொன்னேன். சில நேரங்களில், வேறு திசையிலிருந்து எடுக்கும் புகைப்படங்கள் சிறப்பானதாக இருக்கலாம் என்று நினைத்து தான் அப்படி சொன்னேன். நாங்கள் உள்நுழைந்து சென்ற பாதை முடிவடைத்தது. தூரத்தில் பனை மரங்களும் ஒரு பனையோலைக் குடிசையும் தென்பட்டது. போவதற்கு பாதை இல்லை. விஸ்வா காய்ந்து கிடக்கும் தாளடிகள் கருகின வயலின் ஊடாக அந்த குடிசை நோக்கி போனபோது, அது ஒரு சிறு கோவில் என புரிந்தது. அங்கிருந்து திரும்பி பார்த்தபோது கோவிலுக்கு எதிரில் ஒரு மிக அகன்ற தெரு முழுக்க பனை ஓலைகளால் கட்டப்பட்ட வீடுகள் இருமருங்கிலும் இருந்தன.

தெருவில் எவருமே இல்லை. வீடுகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தோம். மண் சுவர் மற்றும் ஓலை குடிசைகள் தான். சில வீடுகள் முழுவதுமே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்தது. பாம்பை போல் ஊர்ந்து சென்றால் மட்டுமே உள்ளே செல்ல இயலும்போல் வாசலுக்கு முன்பு கூரை மிகவும் தாழ்வாக இறங்கியிருந்தது. எங்கள் சந்தடி கேட்டு இரண்டு சிறுமிகள் வெளியே வந்தார்கள். மெலிந்த உருவம் அழகிய கரிய நிறமும் அகன்ற கண்களும் கொண்டவர்கள். படிக்கிறீர்களா என்று கேட்டபோது ஒரு பெண் 5ஆம் வகுப்போடு நிறுத்தி விட்டதாகவும், மற்றொறு பெண் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினாள். அங்கிருந்தே ஒரு ஓலை இலக்கை உருவி அவர்கள் படத்தை  செய்து கொடுத்தேன். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் இவர்கள் இருளர் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் என்கிற புரிதல் எனக்கு கிடைத்தது. பனை ஓலைகளோடு புழங்கும் இவர்களுக்கு பனை ஓலை பயிற்சி ஒன்று வழங்கினால் என்ன என விஸ்வா கேட்டான். பனையேறி பாண்டியனைக்கொண்டு இங்கு ஒரு பயிற்சி ஒழுங்கு செய்ய முடியும் என்றும் சொன்னான்.

இருளர் பழங்குடியினர்

பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் மேற்கொண்டு என்ன படிக்க உனக்கு விருப்பம் எனக் கேட்டோம். மருத்துவர் ஆக விருப்பம் என்றாள். ஆடிப்போய்விட்டேன். எத்துணை பெரும் கனவுகள் இச்சிறிய ஓலைக் இக்குடிசைக்குள் இருக்கின்றன? கல்வி வியாபாரமயமாகிப்போன சூழலில் இக்கனவுகள் சாத்தியமா? இக்குழந்தைகளுக்கு வழிகாட்டவும், இவர்களுக்கு உதவி செய்யவும் நன்னெறிப்படுத்தவும் யாரேனும் இருக்கிறார்களா? இத்தகைய கனவுகளை தேடி கண்டடைந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் மக்கள் இருக்கிறார்களா? இருக்கலாம். ஆனால் கிராமங்களையும் தாண்டி இவ்வித குடிசைக்குள் இருப்பவர்களை அவர்களால் இனம் காண முடியுமா? முடியும் என்றால் மிகவும் நல்லது. ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த குழந்தைக்காக உள்ளூற இறை மன்றாட்டை ஏறெடுத்தேன். 

கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம். கஞ்சனூர் சென்றபோது கிராமத்து சிறுவர் சிறுமியர் அனைவரும், நீல நிற பனியன் போட்டுக்கொண்டு தோட்டத்திலிருந்து கும்பலாக வந்துகொண்டிருந்தார்கள். அனைவருக்கும் மோர் கொடுக்கப்பட்டது. பாண்டியன் வந்தார். உணவு இனிமேல் தான் தயாரிக்க வேண்டும் என மணிமேகலை கூறினார்கள். சாப்பாடு ஆயத்தமாகும் நேரத்திற்குள் விஸ்வா அலுவலக வேலைக்குள் மீண்டும் மூழ்கினார். வெகு சீக்கரமாகவே, சாதமும் மாட்டுக்கறியும் ஆயத்தமானது. மணிமேகலையின் சமையல், தனித்துவமானது. எதைச் செய்தாலும் குறைவில்லா சுவையுடனிருக்கும். பாண்டியன் வீட்டில் உள்ள சமையலில் பெரும்பகுதி அவர்கள் தோட்டத்தில் விளையும் அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டே அமையுமானபடியால், ஆரோக்கியத்திற்கும் பஞ்சமில்லா நஞ்சில்லா உணவுகளே அங்கே எப்போதும் கிடைக்கும்.

உணவு அருந்தியபின், கிராமத்தினருடன் ஒரு கலந்துரையாடல் செய்யலாமா என்று கேட்டேன். “செய்யலாங்க ஐயா” என்றார் பாண்டியன்.  பாண்டியன் என்மீது பெரும் மரியாதை வைத்திருக்கும் பனையேறி. 2017 ஆம் ஆண்டு தான் தனது முன்னோர்கள் வழியில் பனை தொழிலுக்குள் வந்தவர். முதல் ஆண்டிலேயே, பனங் கருப்பட்டி தயாரித்து விவசாயத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை தாண்டி வந்தவர். பனை கண்டிப்பாக கைகொடுக்கும் ஒரு மரம் என உள்ளூற நம்புகின்றவர். அதனை தன் வாழ்வில் அனுபவிப்பவர். பனை குறித்து வெற்று குரல்கள் தமிழகமெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தபோது தனது வாழ்வை பனையோடு இணைத்து ஆழமான கருத்துக்களை முன்வைப்பவர். பனை வாழ்வியலை மையமாக கொண்டவர். எனது பல கேள்விகளுக்கு நான் விடை தேடி நிற்கும் பனையேறி. அவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இளையவள் கரிஷ்மா. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். என்னை காட்சன் தாத்தா என்றே அழைப்பாள். நமக்கு வயசாகிக்கொண்டு போவது குழந்தைகளுக்கு தான் முதலில் தெரிகிறது. கரிஷ்மா நான் பார்த்த முதல் பனையேறும் சிறுமி. அனாயாசமாக ஏறுகிறாள். உற்சாகம் ததும்பும் இரண்டு குழந்தைகள் என பாண்டியன் வீடே கலகலப்பாக தான் இருக்கும். மூத்த மகள் வீனுச் சிறப்பாக சிலம்பம் விளையாடுகிறாள்.

பாண்டியனிடம் எனது தொப்பியைக் காட்டி, இதனை நார் கொண்டு பொத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். நார் உரித்து, நீரில் போட்டுவிட்டு இரவு நாம் இதனை சீர் செய்யலாம் என்று கூறினார். வேறு வேலை இல்லை. இரவு ஏழு மாணிக்கு தான் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தோம். ஆகவே நான் விஸ்வாவின் பைக்கை எடுத்துக்கொண்டு பண்ருட்டி சென்று பஞ்சவர்ணம் ஐயா அவர்களை சந்திக்கலாம் என்று புறப்பட்டேன். தெரியாத சாலை தான் ஆனாலும், எப்படியோ போய் சேர்ந்துவிட்டேன். பஞ்சவர்ண்ம் அவர்கள் நடமாடும் தாவரக் களஞ்சியம் எனப் பெயர் பெற்றவர்.

என்மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கும் பெரியவர். இந்தியாவிலேயே முதல் கணினி நிர்வாகம் கொண்ட பஞ்சாயத்தாக பண்ருட்டி பஞ்சாயத்தை மாற்றிய பெருமை இவரையே சேரும். பல சிறு பயணங்கள் இணைந்தே செய்திருக்கிறோம். பனை சார்ந்த கருத்துக்களை மணிக்கணக்காக பகிர்ந்திருக்கிறோம். அவரோடு இருந்த ஒவ்வொரு கணமும் எனது வயதை ஒத்த தோழனுடன் பழகுவதைப்போன்ற இனிமையான தருணங்களே. அவரது பனைமரம் என்ற புத்தகம் தான் எங்களை ஒன்றிணைத்தது. தமிழில், பனை சார்த்து இத்தனை விரிவான தொகுப்பு பனைக்கு இருந்ததில்லை என்பது தான் உண்மை. அதனைத் தொடர்ந்து பனை பாடும் படல் என்ற சிறிய புத்தகத்தையும் அவரது பஞ்சவர்ணம் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.

அவரை எனது பயணத்தில் பார்த்து ஆசி பெற்று, பனங்கள்ளிற்கு ஆதரவு பெறவுமே சென்றேன். அவர் தமிழக அரசியல் சூழ்நிலைகளை மிகச்செரியாக உள்வாங்கியிருப்பவர். “கள்ளுக்கெல்லாம் அனுமதி தரமாட்டார்கள். கொடுத்தால் நல்லதுதான் என்றார்”. குறைவாகவே அன்று பேசிக்கொண்டோம். மிக அதிக பயணங்களை மேற்கொள்பவர், நண்பர்கள் சூழவே இருப்பவர், நோயச்சத்தால், வீட்டை விட்டு வெளியே வர இயலாதபடி இருந்தார். நான் சென்று பார்ப்பதில் உள்ள அபத்தத்தை உணர்ந்திருந்தேன். ஆனால் நான் அவரை பார்க்காமல் வந்திருப்பேனென்றால் அது சரியாயிராது. சுமார் நூறு கிலோமீட்டர் மின்னலென போய் வந்தேன். 

உண்பதற்கு தயாராகும் செங்காய்கள்

நான் பாண்டியன் வீட்டிற்கு வந்தபோது அவர் ஊரிலுள்ள பனையேறிகள் அனைவருக்கும் தகவல் அனுப்பியிருந்தார். அவர்கள் வருமுன்பதாக நாம் பனம் பழங்களை அறுத்து வேக வைப்போம் என்று கூறி ஒரு குலையை முழுவதுமாக தனது அரிவாளால் அறுத்து தள்ளினார். செங்காய் பருவத்திலான அவ்வித பனங்காய்களை அதுவரை நான் சுவைத்ததில்லை. பனம் பழங்கள் சுவைத்திருந்தாலும், இந்த அனுபவம் எனக்கு புதிது. விஸ்வா பணியின் நிமித்தமாக கலந்துகொள்ள இயலாது என கூறினான். சுமார் 30 பனையேறிகள் அன்று மாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.   எழரை மணிக்கு ஒருவாறு நிகழ்வைத் துவங்கினோம். சிமென்ட் சாலையில் பனையேறிகளுக்கு முன்பு நான் தரையில் அமர்த்துகொண்டேன். கஞ்சனூர் என்பது நான் இறங்கும் பேருந்து நிறுத்தம் தான். பூரிகுடிசை என்பது தான் பனையேறிகளை நான் சந்தித்த இடம். அங்கிருப்பவர்களில் ஒரு சிலரை நான் அறிவேன். ஆனாலும் பலரும் புது முகங்களாக இருந்தார்கள். பனையேறிகள் மத்தியில் இருக்கும்போது எனக்கு ஆலய ஆரதனையில் இருப்பது போன்ற உணர்வே எழுத்தது. பாண்டியன் என்னைக்குறித்து ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். நான் எனது மிகச்சிறிய உரையத் துவங்கினேன்.

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

நான் வெகுவாக மதிக்கும் பனையேறிகள் மத்தியில் நிற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பனை சார்ந்த தொழில் அனைத்திற்கும் பனையேறிகளே அச்சாணிகள். பனையேறிகள் இல்லாமல் பனைத் தொழில் என்பது இல்லை. எனது வாழ்வில் எப்போதும் பனையேறிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அதனை அரசு கருத்தில் கொண்டதாக சரித்திரம் இல்லை. மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை 1985 ஆம் ஆண்டு பதினைந்தாயிரம் தொழிலாளர்களை இணைத்து ஒரு பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தது. அரசின் காதில் எதுவுமே விழவில்லை. ஆகவே அரசு என்பது, தெரிந்தெடுக்கப்பட்ட கட்சியின் நிலைப்பாடுகளையே முன்னிறுத்தும். நமக்கு இப்போது சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறதானபடியால், நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு நாம் வக்களிப்பதுவே நமது கோரிக்கைகளை வலுப்பெறச் செய்யும். தமிழகத்தில் கள்ளிற்கு ஆதரவான கட்சிகள் என ஏதும் இல்லை. அதிலும், கள் என்கிற வார்த்தை சங்க காலம் முதல் இன்றுவரை நம்மிடம் மருவாமல் வந்து சேர்ந்திருக்கும் ஒரு பொருள். என்றாலும் அதனை ஆதரிக்கின்றோம் என்று சொல்லி பனம் பால் தென்னம் பால் என்று சொல்பவர்களையும் சேர்த்தே கேள்வி கேட்கிறோம். ஓளவை என்னும் மூதாட்டி, கள் குடித்து போதை தலைகேறி “அறம் செய்ய விரும்பு” என்று ஆத்திச்சூடியினை கூறியிருப்பாளாகில், இன்றும் அவ்வித பானத்தை நாம் ஏற்றுக்கொள்ளுவதில் பிழையில்லை. 

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

கள் என்பது பலவகைகளில் ஒரு அடிப்படை விசையினை கொண்டிருக்கும் ஒரு உணவுப்பொருள். பனை மரம், பனையேறுவோர், நுகர்வோர், பனை சார்ந்த இதர பொருட்களைச் செய்வோர் என கள் ஒரு விரிந்த பின்னணியம் கொண்டிருக்கிறது. பனையும் பனையேரிகளும் தான் கள்ளிற்கு அடிப்படை. கள் வேண்டாம் என்பது பனையையும் பனை சார்ந்து வாழும் தொல்குடிகளையும் அச்சுறுத்தும் செயலே அன்றி வேறில்லை. கள் இறக்கும் தொழில் அல்லது மரபு அறுபடாத ஒரு சங்கிலியாக பன்னெடுங்காலமாக கள் நமது வாழ்விலும்  மரபிலும் வந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகும். இதனைக் குறித்து புரிதலின்மையால் அல்லது வஞ்சத்துடன் எவரும் நமது வாழ்வாதாரத்திற்கு எதிராக நிற்பார்களேயானால் அவர்களை கேள்வியேழுப்புவது நமது கடமையாகிறது.

ஆகவே நமக்கு என்ன தேவை என்பதை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நமது தேவைகளை நம்மிடம் ஓட்டு கேட்க வருகிறவர்களிடம் சொல்ல வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்திற்கு உறுதி தருகிறவர்களுக்கே நாங்கள் ஓட்டளிப்போம் என ஒரு குரலாய் ஒலிக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். இன்று நாம் யாரையும் கொள்ளையடிக்கவில்லை ஆனால், உழைக்கிற நம்மை காவல்துறை கைது செய்கிறது. நாம் உழைத்து சேமிக்கிற  பணத்தை நம்மை மிரட்டி லஞ்சமாக பெற்றுக்கொள்ளுகிறார்கள். நமது தொழிற் கருவிகளான பானைகளை அனாயாசமாக உடைக்கிறார்கள், நாம் ஏறிக்கொண்டிருக்கிற பனை மரங்களிலிருந்து பாளைகளை வெட்டித்தாள்ளுகிறார்கள், நம்மை கைது செய்து நமது வேலைகளை செய்ய விடாமல் இடைஞ்சல் செய்கிறார்கள்.  நம்மை அடித்து குற்றவாளி போல, நடத்துகிறார்கள். இவைகளை கேட்க இன்று நாதியில்லை. ஆகவே, வருகிற தேர்தலில், நமது ஊருக்குள் வருகிறவர்களுக்கு என நாம் ஒரு பத்து அம்ச கோரிக்கைகளை வைப்போம். அந்த கோரிக்கைகளை நீங்களே வடிவமைக்க வேண்டுகிறேன். உங்கள் தேவைகளை நீங்கள் முன்வைக்கும்பொது, அதற்கான தீர்வை ஏதேனும் ஒரு கட்சி முன்மொழியும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினேன்.

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

பூரிகுடிசை மக்கள் உண்மையிலேயே குடிசை வாழ் மக்கள். பனை மரத்தினையும் தங்கள் உழைப்பினையும் மட்டுமே நம்பி வாழும் எளிய மக்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட இங்கு வந்து அனைவரையும் கருப்பட்டி காய்ச்ச சொல்லி அறிவுறுத்தியிருந்தேன்.  ஏனென்றால், கள்ளிறக்கும் உரிமை கிடைக்காது என்ற நிதர்சன உண்மையால் மட்டும் தான். ஆனால், இந்த சட்டமன்ற தேர்தல் ஒரு வாய்ப்பு. நாம் கேட்டு பார்க்கலாம். ஓட்டிற்காக எதுவும் செய்வார்கள் என்ற நிலையில் சற்றேனும் பொருட்படுத்துவார்கள் என்றே எண்ணி கூறினேன். இன்று அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் சூழலில், கள்ளிற்கான அனுமதி என்பதைக் குறித்த மவுனம் பனைத் தொழிலாளர்கள் எப்போதும் வஞ்சிக்கப்படும் சூழல் இருந்துகொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அந்த கூடுகை அம்மக்களை ஒரு முகப்படுத்தியது ஒரு முக்கியமான நிகழ்வு. தேர்தலை ஒட்டி இதுவரை எவரும் கள் அரசியல் முன்னெடுபுகளைச் செய்ததில்லை. மீண்டும் அங்கே நான் வரும்போது நமது பத்து அம்ச கோரிக்கைகளில் என்ன இருக்கலாம் என தீர்மானிக்கலாம் எனக் கூறினேன். அதற்கு முன்னதாக அவைகள் குறித்து நீங்களே கூடி விவாதிப்பது நல்லது எனக் கூறினேன். எனது பயணத்தில் பூரிகுடிசை மக்கள் மிக முக்கியமானவர்கள். இன்றுவரை பனை தொழிலினை கிராமமாக முன்னெடுப்பவர்கள். இக்கிராமத்தினை ஒரு பனை சுற்றுலா கிராமமாக மாற்றவேண்டும் என்பது எனது கனவு. இக்கிராமத்தினரோடு எனக்கிருக்கும் தொடர்பு பாண்டியன் அவர்களால் உருவானது. ஆகவே அவ்வப்பொது என்ன செய்யலாம் என திட்டமிட்டு சில விஷயங்களை முன்னெடுப்போம். நான் மும்பை போன பிற்பாடு கூட, பனையோடு விளையாடு என்ற ஒரு நிகழ்வினை நடத்தி, சுற்றியிருக்கும் கிராமத்துக் குழந்தைகள் பங்கேற்க வழிவகை செய்தோம். என்ன தான் செய்தாலும், கள் இறக்குவது தடை என கொள்ளப்பட்டால், இவர்கள் வாழ்வில் மட்டுமல்ல தமிழக பனையேறிகள் வாழ்வில் பெரும் சிக்கலே நீடிக்கும் என்பது தான் உண்மை.

அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். கள் எப்படி தங்கள் வாழ்வோடு இணைந்திருக்கிறது எனபதை பகிர்ந்துகொண்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி கள் ஒரு உணவாக அக்கிராமத்தில் இருக்கிறது எனவும், கள்ளின் மருத்துவகுணங்களையும் விவரித்தார்கள். பாண்டியனின் மகள் கரிஷ்மாவிற்கு கையில் ஒரு தோல் நோய் ஏற்பட்டபோது, உண்பொருள் குண அகராதியில் கள் தொழுநோயை குணமாக்கும் என்ற வாக்கியத்தை வாசித்து  அதனை தொடர் சிகிழ்ச்சையாக பாண்டியன் அளித்தார். கரிஷ்மாவின் தோல் வியாதிகள் குணமடைந்ததை நான் கண்கூடாக பார்த்தேன்.

பாண்டியன் சொல்லும் ஒரு கருத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. “கள் விற்பனைக்கு வந்தால், எவரும் வெளிநாட்டு மதுவென்று எதனையும் தேடிப்போக மாட்டார்கள், ஆகவே நம்மைச் சுற்றி இருக்கும் பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். மக்களின் வாழ்வில் நோய்கள் குறையும்போது மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் தேவையற்றதாகிவிடும், அப்படியே பனங்கள்ளில் இருக்கும் ஏழு வகையான தாது பொருட்கள் தேவையற்ற ஊட்டத்து நிறுவனங்களை புறமுதுக்கிட்டு ஓடச்செய்துவிடும். இவ்விதம் நோயற்ற வாழ்வு வாழும் போது மக்களது உடலில் ஒரு பொலிவு கூடிவிடும் அது, நம்மை சுரண்டிக்கொண்டிருக்கின்ற அழகு சாதன விற்பனையாளர்களை புறம் தள்ளிவிடும். ஆகவேதான் கள்ளை பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கட்டுபடுத்துகிறார்கள்”. அவரது கூற்று முற்றிலும் உண்மை. இன்று கள்ளிற்கான தடை அதில் இருக்கும் போதைக்கு எதிரானது அல்ல, அது நமது தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வலுவுள்ளதாலேயே, அதன் மீதான அடக்குமுறைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

இரவு வீட்டிற்கு வந்தபோது பனம்பழங்கள் தயாராக இருந்தன. நான் பனம்பழங்கள் சாப்பிட, பாண்டியன் பனை நாரினை உரித்து செதுக்கி கொடுத்தார்ர். கிட்டத்தட்ட எட்டு நாரினை சீர் செய்து கொடுத்தார். நானே அவைகளை  பொத்திக்கொள்ளுவேன் எனக் கூறி எடுத்துக்கொண்டேன். நாளை காலை எனது மாமா மகள் மெலடியுடைய திருமண நாள். நான் சென்று சேர வேண்டிய நிற்பந்தம், ஆகவே விஸ்வாவிடம் என்னை எப்படியாவது விழுப்புரம் பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டுவிடு என்றேன். அந்த இரவு நேரத்திலும், களைப்பினைப் பொருட்படுத்தாது என்னை கொண்டு விட்டான். “நாம இதுவரை சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம்ணா” என்றபடி ஒரு செல்ஃபி எடுத்தான். எங்களது சந்திப்பில் எப்போதும் ஒரு செல்ஃபி இருக்கும்.

விஸ்வாவுடன் விழுப்புரம் பேருந்து நிலையத்தில்

விழுப்புரம் வந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் கிடைக்காதது ஒருபுறம், நாகர்கோவில் பேருந்துகளும் குறைவாகவே வந்தன. ஆகவே திருச்சி வண்டி பிடித்தேன். பேருந்தில் இருந்தே, எனது தொப்பியை நார் கொண்டு பொத்த ஆரம்பித்கேன். நான்கு நார்களையே என்னால் பொத்த முடிந்தது. திருச்சியிலிருந்து மதுரைக்கு வண்டி பிடித்தேன். மதுரை வந்தபோது நாகர்கோவில் வண்டியைப் பிடிக்க சென்ற அவசரத்தில், ஏனாதிகள் செய்து கொடுத்த அனைத்து  பறிகளையும் பறிகொடுத்தேன். 

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 11

மார்ச் 16, 2021

பனை வழி சமூகங்கள்

பீட்டர்வருவது வரை காத்திருந்ததுவிட்டு என்னை பொறுப்பானவர் கரத்தில் ஒப்படைத்த திருப்தியில் சேவியர் சென்னை கிளம்பினார். பீட்டர் கடல் தொழில் செய்து உரமேறிய உடல் கொண்டவர். முகத்தை முழுவதுமாகவே மழித்திருந்தார். மென்மையாக பேசினார்.  அவரது வாகனத்தில் பெட்ரோல் இட்டுக்கொண்டு அருகிலிருந்த ஒரு ஏனாதி பழங்குடியினர் கிராமம் நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் தானே முந்தைய நாள் பார்த்த அந்த எளிய மனிதரைப் பார்த்தேன். அவருக்குக் கண் தெரியாது ஆனால் அவர் தான் இவ்வித பறிகள் செய்வார் என அறிந்துகொண்டேன். அவரது கிராமத்திற்கு போகும் வழியில் வேறொரு கிராமம் சென்றோம்,. மிக ஏழ்மையான கிராமம். சுமார் 30 வீடுகள் இருக்கலாம். அக்கிராமத்தின் துவக்கத்தில் ஒரு சிறு கோயில் இருந்தது, ஒரு சில ஆடுகள் நின்றன. எண்ணை காணாத   தலைகள் கொண்டவர்களே இருந்தார்கள். பீட்டர் தேடிய நபரைக் காணவில்லை. அருகில் ஒரு குளியலறை பனை ஓலைகளைக்கொண்டு மறைவு போல் அமைக்கப்பட்டிருந்த்தது.

பனை ஓலைகளைக் கொண்டு மறைத்து உருவாக்ககப்பட்ட குளியலறை

மீண்டும் பயணிக்கையில் ஒரு நீர்பிடிப்பு பகுதியில் இருந்த சேற்றுப்பகுதியில்  நின்றுகொண்டு இரு பெண்கள் இறால்  பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் முதிய பெண் தனது வாயில் பரியினை கடித்தபடி நீரில் மீன்களை துளாவிக்கொண்டிருந்தார். எங்கள் பைக் அந்த நீர் பிடிப்பு பகுதியில் காணப்பட்ட தற்காலிக சாலை வழியாக சென்று முக்கிய பாதையில் ஏறியது. பழவேற்காட்டின் எல்லையை கடந்து மிக ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த ஏனாதி கிராமம் சமீபத்தில் நான் பார்த்த பேரதிர்ச்சிகளுள் ஒன்று. நாங்கள் சந்தித்த அக்குடும்பம் அங்கிருந்த பாழடைந்த ஒரு வீட்டில் தங்கி  இருந்தது. சுவரில் ஒரு ஆள் நுழையும்படியான ஓட்டை. தெருவில் நாம் பார்க்கும் கைவிடப்பட்டவர்களிடம் இருக்கும், ஏகாந்தம், தனிமை, புறக்கணிப்பு, பசி, வறுமை என எல்லாம் கூட்டாக அங்கிருந்தது.

பறியில் ஒரு வகை

நான் அந்த  கிராமத்தின் தெருக்களில் மெல்ல நடந்து அதனை புரிந்துகொள்ள முற்பட்டபோது பெரும்பாலான வீடுகள் பனை ஓலையால் வேயப்பட்டதாக இருந்ததைக் காணமுடிந்தது. ஒற்றை அறை, அதற்கு செல்லும் ஒற்றை வாசல்கள் கொண்ட குடிசைகள்.  அனைத்துமே தற்காலிக குடிசை பகுதி போல தோன்றின. அனைத்து குடிசைகளும் ஒன்றுபோல் இருந்தன. வாசல் பகுதி சற்றே முன்னால் நீண்டபடி இருக்கும் ஒரு அமைப்பு என தனித்து அழகு கொண்டதாகத்தான் காட்சியளித்தது. வீடும் வீட்டடியும் இரண்டு முதல் 4 சென்று நிலம் மட்டுமே இருக்கலாம்.  பெரும்பாலான வீடுகளைச் சுற்றி இருக்கும் வேலிகளில், பனையோலையில் செய்யப்பட்ட பறி தொங்கிக்கொண்டிருந்தது.

பெருச்சாளி வடிவத்தை ஒத்திருக்கும் ஏனாதிகளின் குடிசை

பனை ஓலைக் குடிசைகள் செய்யும் திறன் இன்று ஒரு சில சமூகத்திடம் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு தொழில் நுட்பம். ஏனாதிகளிடம் காணப்படும் இந்த தொன்மையான கட்டிடக்கலை அவர்களுக்கு நல் வாய்ப்பை அளிப்பதாக இருக்கும் என நான் நம்புகிறேன். என்னிடம் அனேகர் பனை ஓலையில் குடிசைகள் அமைக்கும் நபர்களை ஒழுங்கு செய்து தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். பனை ஓலைக் குடிசைகள் என்பது மிகவும் குளிர்ச்சியான ஒரு வாழ்விடம். எத்தகைய வெம்மையிலும் ஒரு குடும்பம், வெம்மையின் தாக்கம் ஏதுமின்றி சுகமாக தங்க ஏற்ற இடம் பனை ஓலை குடிசைகள். இந்த வடிவமைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இனிமேல் வேறு யாரேனும் பனை குடில்கள் கட்டவேண்டும் என விருப்பம் தெரிவித்தால், ஏனாதிகளை தொடர்பு கொள்ள சொல்லவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டேன்.

அக்குடும்பத்தினரிடம் பேசினோம், பார்வையற்ற மனிதர் தம்மால் உடனடியாக செய்து தர இயலாது, ஓலைகள் இல்லை என்றார். அங்கிருந்தவர்களில் சற்றே திடகாத்திரமாக காணப்பட்ட வேறு ஒருவர், தான் பனை ஓலையில் பறி செய்து தர விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கு ஓலைகள் வேண்டுமே என்றார். ஓலைகள் எங்கே கிடைக்கும் என தேடியபோது, பழவேற்காடு பகுதிகளில், ஓலை விற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அங்கே வாருங்கள் என்றார். அங்கு சென்று மூன்று ஓலைகளை தெரிந்தெடுத்துக் கொடுத்தோம். மறுநாள் ஓலையில் பறிகள் தயார் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம்.

இன்னும் நேரம் இருந்ததால், எங்கே செல்லலாம் என யோசித்தபோது, பீட்டர் என்னை அங்கிருந்த மகளிர் ஓலை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார். அது நான் காலையில் வந்து பார்த்த இடம் தான். அவர்கள் என்னை காலையில் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகவே நான், இங்கே வந்திருக்கிறேன், வேண்டாம் போய்விடுவோம் என்றேன், அந்த பெண்மணி மீண்டும் வெளியே வந்து பார்த்து என்னை துரத்துவதற்கு ஆயத்தமானார்கள். ஆனால் பீட்டர் விடுவதாக் இல்லை. சார் சொல்லிவிட்டார்கள் என சேவியர் அவர்கள் பெயரைச் சொன்னார். யோசனையுடனும் சற்றே தயக்கத்துடனும் எங்களை உள்ளே அனுமதித்ததனர்.

பழவேற்காடு பெண்கள் ஓலை பொருள் கூட்டுறவு மையம்

மிகவும் பழைமையான ஆனால் சுத்தமான வீடு. உள்ளே ஐந்து முதிர்ந்த பெண்கள் பனை ஓலையில் பொருட்களை பின்னிக்கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக உள்ளே சென்று அமர்ந்தேன். அந்த பெண்மணிக்கு என் மீது நம்பிக்கை வரவில்லை. அங்கிருந்த பெண்கள் என்னோடு பேச்சுக்கொடுக்க துவங்கினார்கள். அனைவருமே ஐம்பதுகளைத் தாண்டியவர்கள். அவர்களோடு அமர்த்து பேசும்பொது, அங்கிருக்கும் அனைவருமே அழகு பொருட்களை மட்டுமே செய்கிறார்கள் என உணர்ந்துகொண்டேன். மேலதிகமாக என்ன தகவல்கள் கிடைக்கும் என தொடர்ந்து பேசியபோது, அவர்கள் அனைவருமே மரக்காயர் என்ற சமூகத்தினர் என்பது தெரியவந்தது.

மரக்காயர் சமூக பெண்கள் செய்த அழகிய பனை ஓலை பொருட்கள்

மரக்காயர் சமூகம் தங்கள் வீடுகளில் செய்யும் பனை ஓலைப் பொருட்களைக் குறித்து கேட்டால் அவர்களால் எதையும் சொல்ல முடியவிலை. இறுதியாக அமீர் பானு என்று சொல்லக்கூடிய ஒரு பெண்மணி, மரக்காயர் வீடுகளில் காணப்படும் துத்திப்பூ என்ற பொருளைக் குறித்து கூறினார்கள். துத்திப்பூ என்பது, பனை ஓலையில் செய்யக்கூடிய உணவுகளை மூடிவைக்கும் ஒரு மூடி தான். கத்தரிக்காய்  காம்பு போல மேலெழுந்து வளைந்து நிற்கும் தன்மையுடையது. உணவு பொருட்களை மூடி வைக்க பழங்காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை இன்னும் சற்று நாட்களை ஒதுக்கி அவர்களிடம் நெருங்கிப் பழகினால் மரக்காயர்களுக்கே உரித்தான அழகிய வேறு சில பயன்பாட்டு பொருட்களையும் மீட்டெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மரக்காயர் சமூக பெண்மணி பனை ஓலைப் பொருட்கள் செய்யும்போது

ஏனாதி சமூகத்தினரை பீட்டர் இருளர் என்றே அழைத்தார். ஒருவேளை தமிழகத்தில் இருளர் என்று அழைக்கப்படுபவர்களே ஆந்திராவில் ஏனாதிகள் என அழைக்கப்படுபவர்களாக இருக்கலாம் என எண்ணுகிறேன். ஏனாதிகள் இந்தியாவிலுள்ள பட்டியல் பழங்குடி இனத்தவர்கள். ஆந்திராவைச் சார்ந்த இவர்கள், ஆந்திர எல்லையில் இருக்கும் பழவேற்காடு பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இன்றும் வேட்டையாடி, சேகரித்து உண்ணும் வழக்கம் கொண்ட இவர்களை சென்னை அரசு அருங்காட்சியக கண்காணிப்பாளராயிருந்த எட்வர்ட் தர்ஸ்டன் (Edward Thurston, 1855– 12 அக்டோபர் 1935) என்பவர் “அனாதி” என்கிற சமஸ்கிருத பெயரிலிருந்து “துவக்கமே இல்லாதவர்கள்” என ஊகிக்கிறார். அதாவது “என்றும் இருப்பவர்கள்” என்றும் பொருள் கொள்ளலாம். தம்மைச் சுற்றி இருக்கும் நிலப்பரப்பைக் குறித்த கூர்ந்த அவதானிப்பு இவர்களிடம் உண்டு. ஒருமுறை இறை அடியவருக்கு உணவு வழங்கி பசியாற்றியபோது அவர்களுக்கு பாம்புகளை விரட்டும்  வரத்தினை அந்த இறை அடியவர்  வழங்கியதாக ஏனாதிகள் குறித்த தொன்மம் வழக்கிலிருக்கிறது. ஏனாதிகள் பனை ஓலை இட்ட குடிசைகளிலேயே வாழ்வது, அவர்களது வாழ்விடம் பன்னெடுங்காலமாகவே பனை சார்ந்த நிலவியலை அடிப்படையாக அமைந்தது என்பதை ஊகிக்க வழிவகை செய்கிறது.

இருளர்களைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பாம்பு மற்றும் எலிகளைப் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். எனது தோழியும் பல் மருத்துவருமான கடலூர் தாமரை, கிளப் டென் (Club Ten) என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். அவர்களின் களப்பணியில் பல இருளர்களை அவர்கள் சந்தித்து பணியாற்றிவரும்போது, பனை சார்ந்த ஏதேனும் பொருட்கள் அவர்கள் வைத்திருக்கிறார்களா எனக் கேட்டேன். எனது மனதில், இருளர்கள் பாம்பு பிடித்து போடும் பெட்டிகள் பனை ஓலையானாலதாக இருக்கலாம் என்பது எண்ணம். தாமரையால், அவைகளை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை, ஒருவேளை எனது எண்ணம் தவறாக கூட இருக்கலாம், ஆனால், ஒருமுறை தாமரை ஒரு இருளர் பெண்மணி செய்ததாக கூறி எனக்கு அனுப்பிய ஒரு படம், சற்றேறக்குறைய பறி போலவே காணப்பட்டது. ஆகவே இவ்விரு சமூகத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். மேலும் பாம்பு பிடிக்கும் வழக்கத்தினை இன்று அரசாங்கம் தடை செய்து வைத்திருக்கிறது. ஆகவே பாம்புகளை போடுகின்ற பெட்டிகள் பனை ஓலையில் அவர்கள் செய்திருந்தாலும் கூட, அதன் பயன்பாடு இல்லாது போனதால், இனிமேல் அவைகளை மீட்டெடுப்பது எளிதான காரியம் அல்ல.

நவீன காலத்தில் பனை பொருட்களின் அழிவு என்பது நவீன பொருட்களின் வரவால் மட்டுமன்றி, இது போன்ற தடைகள் மூலமாகவும் என்பதை அறியும்போது, அவர்களின் தொல் அறிதல்கள் எவ்விதம் சந்தடியின்றி மறைந்துபோகின்றன என்கிற பதைபதைப்பு எழுகிறது. பழங்குடியினரின் கலை வாழ்வு என்பது அவர்களின் வாழ்வை ஒட்டி வருவது. அவர்கள் வரலாறுகள், கலைகள் உயிர்ப்புடன் இருக்கக்கூடியவை. அவைகளின் ஒரு கண்ணியை பிரித்தாலும், அவர்கள் வாழ்வு மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும். தாமரை என்னிடம், மீன்களை எப்படி விற்கவேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை, அப்படியே ஓலைகளை அவர்கள் எடுத்துக்கொள்ள அருகிலிருக்கும் மக்கள் அனுமதிப்பதில்லை என்று கூறியிருந்தார். வாழ்வில் ஓரங்கட்டப்பட்டவர்களை மேலும் நெருக்குவது என்பது சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் வாடிக்கையாகிவிட்டது. 

அன்று இரவு மீண்டும் என்னை சற்று தொலைவிலிருக்கும் ஒரு ஏனாதி கிராமத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். உலகின் மற்றொரு பாகத்திற்கு நான் செல்லுகிறேன் என்கிற எவ்வித அறிதலுமின்றி நான் பயணப்பட்டேன். இருள் நிறைந்த அந்த சாலையில் தனது மொபைல் டார்ச் லைட் ஒளி பாய்ச்ச பீட்டர் வண்டியில் சென்றது என்னை அதிர்ச்சியில் உறையச் செய்தது. எதிரே எங்கும் வண்டிகள் வராத குக்கிராம சாலை. ஆனால் அவர் அவ்விதம் வண்டியை ஓட்டும்போது எனக்கு உள்ளூர ஒரு நடுக்கம் இருந்துகொண்டிருந்தது. நான் சாதாரணமாக அப்படி நடுங்குகிறவன் அல்ல. ஆனால் எங்கோ தொலைவில் செல்கிறது போல ஒரு படபடப்பு நெஞ்சுக்குள் அடித்துக்கொண்டிருந்தது. 

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நாகர்கோவில் கஸ்பா சபை புத்தாண்டு ஆராதனையை முடித்த கையோடு மாறாமலை செல்ல திட்டமிட்டோம். எனது நண்பன் விஸ்டன் மற்றும் எனது மாமா மகன் ஜானியும் உடன் உண்டு. பின்னிரவு நேரம், கீரிப்பாறை செக்போஸ்ட் அருகில் வண்டியை உருட்டியபடி உறங்கிக்கொண்டிருக்கும் காவலர்களுக்குத் தெரியாமல் காட்டிற்குள் சென்றோம். ஜானி பயம் அற்றவன். அவன் போகும் வேகத்தை வெகு சிரமப்பட்டே தொடரவேண்டியிருந்தது. மேலும் அவன் தனியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான், எனது வண்டியின் பின்புறம் விஸ்டன் இருந்தான். காட்டிற்குள் வேகமெடுத்து சென்றுகொண்டிருந்தோம். யானை இருக்கும் காடு, எப்போது வேண்டுமானாலும், பன்றிகள் எதிர்படலாம், செந்நாய்களின் கூட்டம் எங்களை சுற்றி சூரையாடலாம், காட்டு மாடுகள் எங்களை தூக்கி வீசலாம். ஆனால், நாங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல் பயணப்பட்டுகொண்டே இருந்தோம். காட்டிற்குள் புத்தாண்டை கொண்டாடுவதும், புது புலரியில் காட்டிற்குள் நிற்பதும் வாழ்வில் கிடைக்காத அனுபவம் என்று எண்ணி, பரவசத்துடனும் உள்ளக் கிளர்ச்சியுடனும் சென்றுகொண்டிருந்தோம். ஒரு கிளைச் சாலைப் பிரியும்போது ஜானி அதில் வண்டியை செலுத்தினான். சரளைக்கற்களும், குழியும் பெரும் கற்களும் நிறைந்த அந்த பாதையை ராஜ பாதையென நினைத்து ஜானியின் வண்டி சென்றுகொண்டிருந்தது. நானோ திகிலுடன் அவனை தொடர்ந்துகொண்டிருந்தேன். ஜானி சென்று சேர்ந்த இடம் ஒரு நீரோடை, பாதையின் குறுக்காக ஒரு சிற்றோடை ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்வது என தெரியாமல் ஜானி அங்கே நின்று விட்டிருந்தான். அப்போது விஸ்டன் சொன்னான், வழி தப்பி வந்துவிட்டோம், மேலேறி செல்லுவோம் என்று. மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு சரியான பாதையை வந்தடைந்தோம்.

லைட் ஆஃப் செய்துவிட்டு வண்டி ஓட்டுவோமா என்று விஸ்டன் கேட்டான். அக்காலகட்டத்தில் அது எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு. விஸ்டனுடைய யமகாவில், இருக்கும் வெளிச்சம் என்பது மிக மங்கலானது. அது எரிவதும் எரியாமல் இருப்பதும் ஒன்றுதான். ஆனால், எதிரில் வரும் வண்டிகளுக்கு அது ஒரு முக்கிய அடையாளம். ஆகவே பல நாட்கள் இருட்டில், வண்டியின் முன் விளக்கை அணைத்துவிட்டு வண்டியை ஓட்டியிருக்கிறோம். அதெல்லாம் தெரிந்த சாலைகளில். மேலும், அன்று கண் பார்வை வெகு துலக்கமாக இருந்தது. வெகு மங்கலான ஒளியுமே கூட போதுமானதாக இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலே இள ரத்தத்தில் ஊறி ததும்பி நிற்கும் பைத்தியக்கார சாகச வேட்கை.  இது முற்றிலும் புதிதான ஒரு இடம். அடர் காடு. என்ன சம்பவிக்கும், எதிரில் என்ன நிற்கும் என தெரியாது. சரிடா என்று கூறி துணிந்து வண்டியை எடுத்தேன். மயிற்கூச்செறியும் ஒரு பயணம் அது. மலை வளைந்து வளைந்து செல்ல, வண்டியின் சக்கரத்தில் உள்ள அதிர்வுகளையும் இருளுக்குள் இருக்கும் ஒரு மென்வெளிச்சத்தையும் பிடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தோம். ஓரிடத்தில் யானை நிற்பதுபோல் தோன்ற பயத்தில் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டேன். ஜானி, பின்னால் வந்து என்னாச்சுணா என்றான். பயத்தை வெளியே காட்டாமல், இங்கேயே நிற்போம் என்றேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அன்று அங்கு நின்றோம். நல்லவேலையாக பயந்தபடி ஏதும் நிகழவில்லை. சற்றே பொழுது புலர்ந்தபோது, அங்கிருந்து புறப்பட்டு ஒரு கிராமத்தை சென்றடைந்தோம். முன்பின் தெரியாத ஒரு பெண்மணி, நீர் தெளித்து வாசல் கூட்டிக்கொண்டிருந்தவர்கள், டீ வேணுமா என்று கேட்டு சுடச் சுட பாலில்லா டீ கொடுத்தார்கள்.

அந்த வயதும் அன்றைய நிலையும் இப்போது இல்லை. ஆனபடியால், மெழுகுதிரி போன்ற ஒளியில் நாங்கள் செல்லுவதே சிலிர்ப்பாக இருந்தது. செல்லும் வழியில் பனை மரங்கள் நிற்பதைப் பார்த்தேன். கூட்டமாக ஓரிடத்திலும், ஆங்காங்கே ஒன்றிரண்டாகவும் தென்பட்டது. வேறு மரங்கள் அதிகமாக கண்ணில் படவில்லை. ஓரிடத்தில், வழி தெரியாமல், ஓடைக்குள் வண்டி செல்ல இருந்தது, பீட்டர் எப்படியோ சுதாரித்து வண்டியை நிறுத்தினார்.

தேடித்தேடி இரவில் ஒரு கிராமத்தைச் சென்றடைந்தோம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏனாதிகளின் குடிசைகள் இருந்தது. அந்த இரவு வேளையில் நான் பார்த்த அந்த குடிசை எங்களை நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு பெருச்சாளி போல காட்சியளித்தது. ஏனாதிகளின் கட்டிடக்கலையின் சிறப்பு இதுதான். அவர்களின் வீடுகளை தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் அடையாளம் காணும்படியாக ஒரு வடிவமைப்பு. மிகச்சிறிய கூடம், நுழைவதற்கான வாசலும் சற்று முன் நீட்டி கூரையிடப்பட்டிருந்தது. இந்த வடிவம் தான் எங்கும் இருக்கிறது என கண்டுகொண்டேன். அது ஒரு தொல் பழங்கால வடிவம். கிட்டத்தட்ட ஆறுக்கு எட்டு என்ற அளவில் அந்த வீடு இருக்கலாம். வீட்டின் முத்தத்தில் இரண்டு பறிகள் இருந்தன. இவ்விதமான ஒரு வீட்டினை அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என கேட்டபோது, ரூ. 6000/- எனக் கூறினார்கள். என்னால் புரிந்துகொள்ளவே முடியவிலை. மும்பை தாராவியில் உள்ள குடிசை வீட்டிற்கு ஒரு மாத வாடகை ரூ 6000 இருக்கும். அதனைக் கொண்டு மொத்தமாக ஒரு வீட்டையே உருவாக்கிவிட முடியுமா? ஆச்சரியத்துடன் பின்னர் இதனை சேவியரிடம் பகிர்ந்துகொண்டபோது “Welcome to Pulicat” என்றார்.  அத்தனை வளம் இருந்தபோதும் வறுமை கோரத்தாண்டவமாடும் ஒரு காட்சிகளைப் பார்க்கையில் ஒரு வித பாரம் நெஞ்சை அழுத்தியது.

இறால் பிடிக்கும் ஏனாதி பெண்மணி

பல இடங்களுக்கு போகும்போது, அந்த இடங்களை மீண்டும் தேடிப்போகவேண்டும் என்கிற ஆவல் எழும், ஆனால் பழவேற்காடு என்னும் இடத்திற்கு நான் என் வாழ்நாளில் செல்லவே இயலாது. அங்கு நான் செல்லவேண்டுமென்றால், பனை சார்ந்த பணிகளில் நான் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தாலே சாத்தியம். அங்கு செய்யவேண்டிய பணிகள் அவ்வளவு இருக்கின்றன. ஒருநாள் அவர்கள் பெற்றுக்கொள்ளும் இறால், அவர்களுக்கு மிகச்சிறந்த ஊட்டசத்து மிக்க உணவு. நம்மால் தினம் தோறும் அவ்வளவு இறால்களை வாங்கி ஒரு குடும்பத்தை ஓட்டிவிட முடியாது, ஆனால், அனைவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். கிடைக்கும் பணம் அன்று தானே டாஸ்மாக் நோக்கி செல்லுகிறது. குடிக்க பணம் இருந்தால் போதும் உணவு என்று ஏதும் தேவையில்லை என்ற வாழ்கை முறை. அனைவருமே மெலிந்து பெலன் குன்றிப்போய், ஊட்டச்சத்து கூறைபாடுள்ளவர்களாய் காணப்படுகிறார்கள். இவர்களின் நிலை அறிந்து அங்குள்ள மீனவர்களும் இவர்களிடம் மிகக்குறைந்த விலையிலேயே இறாலினை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

நாங்கள் தேடிச்சென்ற மற்றொரு கிராமம், சற்றே வசதி படைத்ததாக இருந்தது. ஆனாலும் பிந்தங்கிய கிராமம் தான். வன்னியர்கள் வாழும் கிராமம் என்றார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தான் உடனடியாக மனதிற்கு வந்துபோனது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பனைக்காக குரல் கொடுத்தவர். அங்கு நான் விசாரித்த வகையில் பனைகள் மீதான உரிமை கொண்டவர்கள் அவர்கள் தான். வன்னியர்களுக்கும் பனைக்கும் தொடர்புண்டு என்று இங்கே வந்த பின்புதான் அறிந்துகொண்டேன். வன்னியர்கள் பனை ஏறுவதோடு, பனை ஓலைகளிலும் பொருட்களைச் செய்கிறார்கள். அங்கு அர்சுனன் என்ற நபரை சந்தித்தோம். மிகப்பெரிய பனை ஓலைகளை இணைத்து அவர்கள் செய்யும் பறி விரிந்த பானையைப்போல் பிரம்மாண்டமாக காணப்பட்டது. ஏனாதிகளின் பின்னல் முறையில், பானை போல வயிறு திறண்டு வாய் ஒடுங்கிய ஒரு வடிவம். அளவிலும் உறுதியிலும் ஏனாதிகளைக் காட்டிலும் திடம் அதிகமாக இருக்கும் என்பதை முதல் பார்வையிலேயே ஒருவர் நிதானித்த்துக்கொள்ள முடியும். ஆகவே தங்கள் உணவிற்கு மிஞ்சிய மீன்களை விற்பனை செய்யும் பொருட்டு இவ்வித மிகப்பிரம்மாண்டமான பறிகளை வன்னியர்கள் தயாரித்திருக்கிறார்கள் எனவும், தங்கள் உணவிற்கான தேவைகளோடு ஏனாதிகள் நிறுத்திக்கொண்டார்கள் என்பதும் இதன் மூலம் வெளிப்படுகிறது. 

வன்னியர் பயன்படுத்தும் பறி. இதனை பெட்டி என்கிறார்கள்.

நிச்சயமாக வன்னியர் இன மக்கள் செய்யும் பறியானது ஏனாதிகளிடமிருந்து பெற்ற அறிவின் தொடர்ச்சி தான். ஆனால் இன்று ஏனாதிகள் வன்னியர் பயன்படுத்தும் பறிகளைப்போல் ஏதும் செய்துவிடமுடியாது. ஒவ்வொரு ஜாதிக்கும் தகுத்த வடிவங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. பழவேற்காடு பகுதிகளிலேயே மூன்று சாதிய பின்புலம் கொண்டவர்கள் மூன்று வித்தியாச பின்னணியத்தினை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டவர்கள், பனையினை தங்கள் வாழ்வின் அங்கமாக கொண்டிருகிறார்கள் என்பது எனக்கு மிகப்பெரிய செய்தி. தொல் குடிகளான ஏனாதிகள், கடற்கரை வாசிகளான மரக்காயர்கள் மற்றும் இம்மண்ணின் வாசிகளான வன்னியர் என மூன்று விதமான மக்களின் வாழ்வில் பனை மையமாக நின்றிருப்பது நாம் உற்றுநோக்கத்தக்கது.  பனை இருக்கும் நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்கு, பனை ஏதோ ஒருவகையில் பயன்பட்டபடி இருக்கிறது. பனையை விலக்கி வாழ தமிழ் சமூகம் எப்போதும் நினைத்ததில்லை. இம்மூன்று சமூகங்களுக்குமிடையில் காணப்படும் பனை சார்ந்த வாழ்வியல் நுட்பங்களை எவரேனும் ஆழ்ந்து கற்று வெளிப்படுத்துவது பேருதவியாக இருக்கும்.

பறியின் வேறு வடிவம்

அன்று இரவு எனது தூக்கம் தள்ளிப்போனது. உணவு சேகரிப்பவர்களால் ஏன் உணவினைக் கொண்டு திருப்தியாக வாழ முடியவில்லை? சிறந்த உணவுகள் தேடி சேகரிக்கும் மக்களிடமிருந்து அதனை தட்டிபறிக்கும் நுட்பத்தினை யார் புகுத்தியது? இவர்களுக்குள் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டினை எப்படி எளிமையாக தீர்ப்பது? குடிப்பழக்கம் இவர்களுக்குள் ஏற்படுத்தும் தீங்கிலிருந்து இவர்களைக் காக்கப்போவது யார்? போன்ற கேள்விகள் என்னைக் குடைந்தபடி இருந்தன.

பீட்டரும் ரஜினியும்

மறுநாள் அதிகாலையில் ரஜினி அவர்கள் என்னை அழைத்தார்கள். ரஜினி என்னை படகில் பழவேற்காடு பகுதியை சுற்றிக்காட்டும்படி சேவியரால் ஒழுங்கு செய்யப்பட்டவர். மற்றொருபுரம் பீட்டரும் அழைத்தார். நான் எங்கே செல்ல வேண்டும் என என்னையே கேட்டார்கள். எனக்கு எங்கே செல்ல வேண்டும் என சொல்லத் தெரியவில்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் ஏனாதிகளை நான் சந்திக்க வேண்டும் என்றேன்.  காலை உணவினை வாங்கிக்கொண்டு, தேவையான நீரையும் எடுத்துக்கொண்டு சென்றோம். ஒரு அரைமணி நேர பயணத்தில், அங்கிருந்த ஒரு சிறிய தீவைக் கண்டோம். அங்கு நின்றிருந்த படகுகளண்டையில் நாங்கள் சென்ற படகை ரஜினி நிறுத்தினார். நான் இறங்கியவுடன், படகை மற்றொருபுரம் எடுத்துச் சென்று நிறுத்தினார்கள்.

படகில் நானும் ரஜினியும்

இறங்கிய இடத்தில் ஒரு குடும்பம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அவர்கள் ஏனாதிகள் என அங்கிருந்த பறிகள் பறை சாற்றிக்கொண்டிருந்தன. பேச்சுக்கொடுத்தபோது அவர்கள், பெந்தேகோஸ்தே சபையில் இணைந்திருப்பதாக அறிந்துகொண்டேன். இக்காலத்தில் பெந்தேகோஸ்தே சபைகள் எளியவர்களை தேடி வரும் நிகழ்வு கவனத்திற்குட்படுத்தப்படவேண்டியது ஆகும். இக்குடும்பம் மற்ற ஏனாதிகளை விட சற்றே வசதியானவர்கள் என அவர்கள் வைத்திருந்த படகும், வலைகளும் கூவி அறிவித்தன. நேற்றைய தினம் மாலையில் சென்ற கிராமத்திலும் கூட இவ்விதமான சில குடும்பங்களைப் பார்த்தேன். கிறிஸ்தவ சேவை பணிகள் இங்கு நடைபெறுவது பாராட்டுக்குரியது. அங்குள்ள கத்தோலிக்க திருச்சபை ஏனாதிகள் வீடு அமைக்க உதவி செய்கிறது என்பதாக சேவியர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் இவைகள் போதாது, இம்மக்கள் விடியலைக்காணவேண்டுமென்றால், ஒட்டுமொத்த தமிழகமும் தங்கள் கரங்களை நீட்டி இவர்களை அரவணைத்துக்கொள்ளவேண்டும். சாதி சமயம் பாராது இங்கு மக்கள் வந்து பணியாற்ற வேண்டும்.

மணலில் புதைத்து சுட்ட மீன்கள்

இப்படியான எண்ணத்திற்கு ஊடே, வேறொரு எண்ணமும் தலை தூக்கியது. பொதுவாக காடுகளை பேணும்படியாக பழங்குடியினரை காட்டிலிருந்து வெளியேற்றுவது வழக்கம். அது மிகச்சரியான அணுகுமுறை இல்லாவிட்டாலும், அது போல பழவேற்காடு மண்ணிற்கு சொந்தமில்லாதவர்களை அப்பகுதியிலிருந்து விலக்கினால், ஒருவேளை இவர்கள் வாழ்வு மேம்படுமா என எண்ணிப் பார்க்கிறேன். குறைந்தபட்சம் இவர்களின் உணவிற்கான உறுதி ஏற்படும், இவர்களை உறிஞ்சி சக்கையாக வெளியேற்றும் டாஸ்மாக் போன்றவைகள் இல்லாமல் இருந்தால் அரசு வழங்கு மற்ற உதவிகளை கொண்டு சரசரவென முன்னேறும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.  இறாலும் பனையும் இருக்குமிடம் வளம் மிக்கதே. அதனை சீர்படுத்தி இம்மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டியது அரசின் கடமை. மக்களின் வாழ்வு சிறக்க அரசுகள் அப்போது தான் முன்வருமோ தெரியவிலை.

அந்த தீவில் உணவு உண்ணும் முன்பதாக ரஜினியும் பீட்டரும் இணைந்து வலையை போட்டார்கள். காலை உணவை முடித்துவிட்டு வந்து வலையை எடுத்துப்பார்த்தபோது இரண்டே இருண்டு சிறிய மீன்கள் தான் சிக்கியது. அப்பகுதியில் முட்கள் வெட்டிபோட்டிருந்தார்கள். அந்த முட்களில் வலை சிக்கிவிட்டது. மிகுந்த பிரயாசப்பட்டு வலையினை  முட்களிலிருந்து பிரித்து எடுத்தார்கள். மீண்டும் ஒரு தீவுக்கு சென்று அங்கே கிடைத்த முட் சுள்ளிகளை அடுக்கி மணலுக்குள் மீனை போட்டு சுட்டு கொடுத்தார்கள். தனித்துவமான அந்த ஆதி சுவையினை அனுபவித்து ரசித்தேன். அந்த தீவு வெண்மணலால் சூழப்பட்டு அழகுற காட்சியளித்தது.

பறியை பல்லால் கடித்து பிடித்துக்கொண்டு இறால் துழாவும் கண்ணிழந்த மனிதர்

குமரி மாவட்டத்தில் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ரூஃபியோ என்ற சிறுவனின் மாமி பழவேற் காட்டில் தான் தங்கியிருக்கிறார்கள். மதியம் அவர்களை சந்தித்து உணவுண்டு திரும்பினேன். சென்னை செல்லும் முன்பு, ஓலைப் பெட்டிகளை வாங்க வேண்டூம். பீட்டர் என்னை அழைத்துக்கொண்டு வேறு ஒரு கிராமம் செல்ல வெண்டும் என புறப்பட்டபோது அங்கே காவல்துறை வாகனங்களை பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். தமிழகத்தில், வாகன பரிசோதனை என்பதே பணம் பறிக்கும் ஒரு வழிமுறை தான். அனைத்து வாகன ஓட்டிகளிடமும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து வசூல் நடத்துவதே இவ்வகை நேரங்களில் நடப்பது. திரும்பிவிடுவது நல்லது எனக் கூறி அங்கிருந்து பழவேற்காடு திரும்பினோம்.

பெண்கள் வரிசையாக இறால் பிடிக்கும் காட்சி

வரும் வழியில் ஒரு மிகப்பெரிய சானல் வெட்டப்பட்டிருந்தது, அதில் பத்து பெண்கள் தங்கள் தலைகளில் பறியினைப் போட்டபடி ஒரே வரிசையில் நின்று இறால் பிடித்துக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட தேயிலை பறிக்கும் பெண்கள் தங்கள் முதுகில் இட்டிருப்பதுபோன்ற அமைப்பு. பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நான் புகைப்படம் எடுக்கத்துவங்கியபோது ஏன் எதற்காக என்று பல்வேறு கேள்விகள். நான் எனது தொப்பியைக் காட்டினேன். எனது பயணம் குறித்து சொன்னேன். மிக வேடிக்கையாக என்னோடு பேசிக்கொன்டிருந்தார்கள். ஆளாளுக்கு என்னைக்குறித்து விசாரித்தார்கள். எனது மனைவி குறித்து, பிள்ளைகள் குறித்து, வேலை குறித்து என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள். நான் அவர்களிடம், அவர்கள் கணவர்களின் தொழிலைக் குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் “வீட்டுக்காரங்க ஒழுங்கா இருந்தா நாங்க எதுக்கு இந்த வெயில்ல இங்கே வந்து கஷ்டப்படுகிறோம்” என்றனர். இவர்கள் கொண்டு செல்லும் பணத்தில் தான் அவர்களின் குடி களியாட்டங்கள் இருக்கின்றன. அவர்களின் சமூகம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள கிராமத்தில் தான் அவர்கள் வசித்துவருவதாக அறிந்துகொண்டேன்.

வேகமாக இறால் பிடித்தபடி முன்னேறிச் செல்லும் பெண்கள்

பீட்டருக்கு நேரம் ஆவதுபோல தோன்றியது. அப்போது அங்கிருந்த ஒரு பெண்மணி போட்டோ எல்லாம் எடுக்குறீங்க எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றார்கள். என்ன வேணும் கேளுங்க உடனே செய்கிறேன் என்றேன். இவ்வளவு தூரம் கேட்டியேப்பா அதுவே போதும் என்று அவர்கள் முடித்துக்கொண்டார்கள். வேறு ஒருவர், தண்ணியிலேயே நிற்கிறோம், ஒரு டீ தண்ணி வாங்கிதரக்கூடாதா என்றார்கள். வாங்கலாமே என்றேன். மீண்டும் ஒரு 5 கிலோ மீட்டர் டீ கடைக்கு செல்லவேண்டும். அங்கே போய், டீ மற்றும் பிஸ்கட் எல்லாம் வாங்கிகொண்டு வந்தபோது அனைவரும் இறால் பிடித்துக்கொண்டு திரும்பும் வேளை ஆகிவிட்டது. தண்ணீரில் நின்றபடியே டீ வாங்கி குடித்துவிட்டு என்னை வாழ்த்தி அனுப்பினார்கள்.

கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. (1 யோவான் 4:21 திருவிவிலியம் ) என்ற வாசகம் என்னுள் வந்து சென்றது.

மீண்டும் நாங்கள் பழவேற்காடு வந்தபோது ஓலை பறிகள் தயாராக இருந்தது. அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி பேருந்தில் பயணித்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 10

மார்ச் 2, 2021

பனைமுறைக் காலம் 10

பனைவேற்காடு

வாட்ட சாட்டமாக அட்டகாசமான சிரிப்போடு  பைக்கில் சுமன் வந்து நின்றார். வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு போனார்.  அவரது வீட்டில் தான் அன்று மதியம் உணவு. வீட்டில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்வு. எங்களுக்கு அடுப்பிலிருந்து கொதித்துக்கொண்டிருந்த மீனை எடுத்து கொடுத்தார்கள். செம்ம ருசியாக இருந்தது. “ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி  கடல்ல நீந்திட்டிருந்த மீன் சார் இது” என வாய் கொள்ளா சிரிப்புடன் சொன்னார். இத்தனைக்கும் மசாலா மீனுக்குள் பற்றியிருக்கவில்லை. முதல் கொதியிலேயே அள்ளி எடுத்து வைக்கப்பட்ட மீன்.  சாப்பிட்ட பின் அவருக்கு சில வேலைகள் இருந்ததால் நானும் கல்யாண் குமாரும் அந்த வீட்டின் அருகில் இருந்த விழா பந்தலில் அமர்ந்திருந்தோம். நான் சற்று காலாற நடக்கலாம் என அடுத்த தெருவிற்குள் நுழைந்தேன் சில பெண்கள் வட்டமாக அமர்ந்திருந்து  விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த விளையாட்டு சற்று வித்தியாசமானது. அனைத்து பெண்களின் கரத்திலும் ஒரு குச்சி இருந்தது. நின்று கொண்டிருந்த பெண்மணி தனது சாரியினை கங்காரு பைபோல் அமைத்து அதற்குள் சில நூல் பூக்களை பல வண்ணங்களில் வைத்திருந்தார். அவர் ஒவ்வொன்றாக போட, அமர்ந்திருந்த பெண்கள் தங்கள் கரங்களிலிருந்த குச்சிகளை வைத்து அதனை எடுத்துக்கொண்டிருந்தார்கள், யார் முதலில் குறிப்பிட்ட வர்ணத்தை சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். முதன் முறையாக இப்படி ஒரு விளையாட்டைப் பார்க்கிறேன்.

சுமன் எங்களை  அழைத்துக்கொண்டு எனக்கு ஒருக்கியிருக்கும் அறைக்குக் கூட்டிச் சென்றார். அது ஒரு ஷட்டர் கொண்ட சிறிய அறை. ஒரே ஒரு மேஜை வீச்றி இருந்தது. அதுவும் சரியாக ஓடவில்லை. எனக்கான குளியலறை மற்றும் காலைக்கடன்களுக்கு இன்னும் ஒரு மாடி ஏறி செல்ல வேண்டும். சேவியர் என்னிடம் முதலிலேயே கூறியிருந்தார். இங்கு தங்கும் இடங்கள் கிடையாது என்று. பழவேற்காட்டைப் பொறுத்தவரையில் உல்லாச விடுதி மற்றும் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி கிடையாது. அது தான் இப்பகுதியினை இன்னும் அதன் தனித்தன்மைகளுடன் வைத்திருக்கிறது.

தங்குமிடத்திலிருந்து  சிறிது தொலைவில் எனக்கான உணவு ஓரிடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அனைத்தும் முடிந்த பின்பு கல்யாண் குமார் புறப்படும் வேளை வந்தது. அவரது பைக்கில் 600 ரூபாய்க்கு பெட்ரோல் இட்டேன். மேலும் 400 ரூபாய் அவரது கரத்தில் கொடுத்தேன். பொதுவாக எனது செலவுகளை எப்போதும் கல்யாண் தான் பார்த்துக்கொள்ளுவார். இம்முறை எனக்கான ஒரு வாய்ப்பு. பிரியா விடை பெற்றுக்கொண்டோம்.

அன்று இரவு அந்த ஊரில் தனியனாக பல முறை அந்த பாலத்தை கடந்து நடந்தேன். கலங்கரை விளக்கத்திலிருந்து  உமிழும் ஒளி அங்கிருந்த பனை மரத்தினை தாண்டிச் செல்லுவது தனித்துவமான ஒரு காட்சியாக தென்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்ட பனை போல. அதனை எப்படியாவது படம்பிடிக்கவேண்டும் என முயன்று தோற்றுப்போனேன். புகைப்படக்கலை குறித்த நெளிவு சுளிவுகள் தெரிந்திருந்தால் அன்று அக்காட்சியினை அழகுற படமாக்கியிருக்கலாம்.   காற்று அதிகம் இருந்தாலும், நான் தங்கியிருந்த இடத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது. மேஜை விசிறியால் பெரிய பயன் இல்லை. இரவு படுத்திருக்கும்போது அந்த அறையினை பயன்படுத்தும் வாலிபன் அங்கே வந்தான். ஒரு கை அவனுக்கு ஊனம், ஆனாலும் இரு சக்கர வாகனம் ஒன்றை ஓட்டி வந்தான். என்னோடு அன்பாக பேசியபடியே தனது வேலையையும் கவனித்துக்கொண்டான். ஊனம் என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு அழகோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தான்.  

காலை எழுந்தவுடன் பாலத்தை  கடந்து ஒரு நடை நடந்தேன். பனை மரத்தடிகளை கொண்டு சிறிய கூடாரத்திற்கான தூண்களை அமைத்திருந்தார்கள். பாலத்தின் அருகில் இருக்கும் மக்களிடம் பேச்சு கொடுத்தபோது புகைப்படங்கள் எடுக்காதீர்கள் எனக் கூறினார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு நபர் என்னிடம் கோபமாக இங்கு புகைப்படம் எடுக்கக் கூடாது என்றார். அவர் தான் ஊர் தலைவர் என பின்னர் அறிந்து கொண்டேன். ஆனால் அப்படி புகைப்படம் எடுக்காமல் என்னால் இருக்க முடியாது என்றே அங்குள்ள சூழல் இருந்தது. ஏனாதி பெண்களும் ஆண்களும் அந்த காயலுக்குள் இருந்த திட்டு ஒன்றை நோக்கி முட்டளவு தண்ணீரில் கையில் பறி மற்றும் உணவுகூடைகளுடன் சென்றார்கள். அங்கே சென்றவுடன் அமர்ந்து மெதுவாக வெற்றிலை போட்டுக்கொண்டார்கள். அதே நேரத்தில் கரைக்கு வெகு அருகில் நேற்று பார்த்த ஒரு நபர் பறியை வாயில் கவ்வியபடி கழுத்தளவு மூழ்கி இரண்டு கைகளாலும் துழாவி இறால் பிடித்துக்கொண்டிருந்தார். எனக்கே இறங்கி இறால் பிடித்துபார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றிவிட்டது. 

பர்மாவில் எருமை வண்டியும் பனங்காடும்

காலை வேளையில் தானே நான் அங்கே ஒரு எருமை மாட்டு வண்டியினைப் பார்த்தேன். எருமை மாட்டு வண்டியினை நான் பார்ப்பது அதுவே முதன் முறை. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனக்கு ஒரு நாட்டுப்புற கதை சொன்னார்கள். முன்பொரு காலத்தில் மிகப்பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஏழை விதவைப் பெண்ணொருத்தி தனது ஏழு குழந்தைகளுடன் வாழ இயலாத சூழலில் ஒரு கிணற்றுக்குள் தனது குழந்தைகளை போட்டுவிட்டு தானும் அதற்குள் குதிக்கிறாள். அவளுக்கு தான் குதிப்பது பாதாள உலகத்தின் வாசல் என அப்போது தெரியாது. அனைவரும் வாசுகி என்ற பெரிய பாம்பின் மேல் விழுகிறார்கள். வாசுகி அவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் எனக் கேட்க, எங்களுக்கு வாழ வழியில்லை அதனால் தான் சாக வந்தோம் என இப்பெண்மணி கூறியிருக்கிறார்கள். சூழ்நிலையை உணர்ந்த வாசுகி, உனக்கு பொன்னும் பொருளும் தருகிறேன், நீ வீட்டிற்கு போ என்று கூற, இப்பிரச்சனை தனக்கு மட்டும் உரியதல்ல, ஊரிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பட்டினியால் வாடுகின்றன எனக் கூறி அனைவருக்கும் தீர்வு சொல்ல முடிந்தால் மட்டுமே தான் இங்கிருந்து புறப்படுவேன் என்று கூறி நிலையாய் நின்றுவிட்டாள். அப்போது வாசுகி அவளுடன் இரண்டு பாம்புகளை அனுப்பியது. ஒன்று பனை மரமாகவும் மற்றொன்று எருமையாகவும் மாறி அவர்களுக்கு வறட்சியான காலத்திலும், பசிப்பிணி இன்றி வாழ வகை செய்தது.

ஆப்பிரிக்காவில் எருமையும் பனங்காடும்

இந்த கதை நமது பண்பாட்டில் ஊறி எழுந்த ஒரு கதையாகவே பார்க்கிறேன். பசுக்கள் உயர்குடியினருக்கான அடையாளமாக இருக்கையில் எருமைகள் ஏழைகளின் வாழ்வியலோடு இணைந்து வருவதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எப்பேர்ப்பட்ட பஞ்ச காலத்திலும் பனையும் எருமையும் தாக்குப்பிடிக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன. ஆகவே அவைகளே ஏழைகளின் சார்பில் நிற்கும் உயிரினங்கள் என நாம் கொள்ள முடியும்.

பனையும் எருமையும் இரட்டை உயிரினங்களாக இருக்குமா? அதனைக் குறித்து நான் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் தேட ஆரம்பித்தேன். அதற்கு ஜெயமோகன் அண்ணனுடைய கதை முழுமுதற்  காரணம். இரண்டாவதாக நான் மும்பையிலிருக்கும் ஆரே காலனிக்கு வந்தது மற்றொரு திருப்புமுனையாகும். ஆரே முழுக்க எருமை பண்ணைகள் தான் இருக்கின்றன. எருமைகள் ஒரு அடைக்கப்பட்ட பண்ணை சூழலில் வளருவதால் என்னால் அவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஆனால் சாய் பாங்குடா என்ற அப்குதியில் இருக்கும் பனைகளை நான் பார்த்தபோது அங்கு அனேக எருமைகள் தொடர்ந்து மேய்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். வருடத்தில் ஆறு மாதங்கள் இப்பகுதி சதுப்பு நிலமாகவே இருக்கும்.

வியட்னாம் எருமை வண்டி

ஆம் எருமை என்பது நீர் தேவையுள்ள ஒரு மிருகம் தான். ஆரே பகுதியில் கவிதை எழுதிய ஒரு பழங்குடி இங்குள்ள மாடுகளுக்கு குளிக்க தண்ணீர் இருக்கிறது ஆனால் ஆதிவாசிகளுக்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லை எனவும், மாடுகளுக்கான குடிநீரே எங்களுக்கான குடிநீர் எனவும் வேதனையுடன் எழுதியிருப்பது குறித்து இங்கு சூழியல் பங்களிப்பாட்டும் சஞ்சிவ் வல்சன் ஒரு முறைக் கூறினார். ஆம், ஆங்கிலத்தில் கூட எருமையினை Water buffalo  என்று தான் குறிப்பிடுவார்கள்.

வியட்னாம் வயல் பகுதிகளில் எருமை

தென் தமிழகத்தில் என்னால் அதிக எருமைகளைக் காண முடியவில்லை என்பது உண்மை தான், ஆனால் இந்தியாவெங்கும் பனையும் எருமையும் ஒன்று போல் நிற்பதைக் காண முடிகிறது. எருமைப்பாலின் அடர்த்தி அதிகமாகவும், அதில் இருக்கும் கொழுப்புச்சத்து பசுமாட்டினை விட அதிகமாகவும் இருக்கும். ஆனால் இன்று பண்ணையாக எருமைகளை வைத்துக்கொள்ளுகிறவர்களை கூட நாம் பார்த்துவிடலாம், ஆனால் தனியாக எருமைகளை வளர்ப்பவர்கள் தென் தமிழகத்தில் அருகிவிட்டார்கள். பசு வளர்ப்பதே நவீனமானது என்ற எண்ணம் குமரி போன்ற நிலங்களில் வேரூன்றியிருக்கிறது.  

எருமையைப் பொறுத்த வரையில், அது பனை மரத்தைப்போலவே, அதிக எதிர்பார்ப்புகள் அற்ற ஒரு உயிரினம். இருப்பதைச் சாப்பிட்டு, எல்லா கால சூழல்களுக்கும் தன்னை தகவமைத்துக்கொண்டு, மழை மற்றும் வறட்சியினைத் தாங்கும் சக்தி கொண்ட ஒரு கால்நடை. நோய் எதிர்ப்பாற்றல் மாடுகளைவிட அதிகமானது. கி மு 4000ஆம் ஆண்டில் தான் எருமைகளை மனிதர்கள் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் எனக் கூறுவதை வைத்து பார்க்கும்போது இதே காலகட்டத்தில் தான் பனையுடனான உறவுகள் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

எருமை சவாரி செய்யும் சிறுவன், வியட்னாம்

உலகில் காணப்படும் மொத்த எருமைகளில் 90 சதவிகிதத்திற்கு மேல் ஆசியாவில் தான் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பர்மா, பாகிஸ்தான், வியட்னாம், போன்ற நாடுகளிலும் எருமைகள் பெருமளவில் இருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் பனை இருக்கும் இடங்களில் இவைகள் இணைந்தே வாழ்கின்றன.  இது குறித்து மேலதிகமாக ஆய்வு செய்ய விரும்பும் அன்பர்களுக்கு இவ்விணைவு குறித்து மேலதிக தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பதாக உணர்கிறேன். மட்டுமல்ல, இதுவரை எவரும் பார்த்திராத புது கோணங்களும் இவ்வாய்வுகளின் வழி வெளிப்படும் என்றே நம்புகின்றேன்.

நாடோடிகளுக்கும், பழங்குடியினருக்கும் எருமை மாடுகளுடன் அதிக தொடர்பு உண்டு. இன்றும் இந்தியாவில் பல பகுதிகளில் பனையும் எருமையும் தொல் குடிகளுடன் தொடர்புடையவைகாளாக இருக்கின்றன. மாத்திரம் அல்ல இன்று எருமைகள் மிக முக்கிய அளவில் எண்ணிக்கைகளில் பசுவை விட அதிகரித்தபடி உள்ளன. காரணம் மாட்டரசியல் தான். பசுவைப்போல எருமை புனிதப்படுத்தப்பட்ட உயிரினம் அல்ல. பசு மீதான புனிதப்படுத்துதல்  விவசாயிகளுக்கு மாடுகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை அதிகப்படுத்துகிறது. குறிப்பிட்ட வயதில் ஒரு மாட்டினை கறிக்காக விற்பனை செய்யும் வாய்ப்பு இருந்தாலொழிய ஒரு விவசாயியால் மாடுகளை வைத்து இறுதிவரை பேணமுடியாது. மேலும், எருமையிலிருந்து கிடைக்கும் பால் அதிக கெட்டிதன்மைக்கொண்டதும் பசும்பாலில் கிடைப்பதை விட இரு மடங்கிற்கு மேல் கொழுப்புச்சத்தும் உள்ளது. ஆகவே இன்று பல பண்ணைகள் எருமைகளையே வளர்க்க விரும்புகின்றனர். மாடுகளை விட அதிக பாரத்தை எருமைகளால் எளிதில் சுமக்க முடியும். நம்மூர் ஆசிரியர்கள் மாணவர்களை எருமை என்று அழைப்பது இவ்வித புரிதல் இல்லாமையால் தான். நவீன காலத்தில் எருமைக்கு கிடைத்திருக்கும் இத்தகைய முகியத்துவம் பனைக்கும் கிடைக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். 

எமதர்மராஜா

எருமை குறித்து பேசும்போது எமதர்மராஜாவைக் குறித்து பேசாமல் இருக்க முடியாது. பாசக்கயிற்றை வீசும் தெற்கின் தலைவன் அவன். இறந்தவர்களை வழிகாட்டும் எமனின் வாகனம் அல்லவா எருமை. எமன் குறித்து சீன ஜப்பானிய மற்றும் ஈரானிய தொன்மங்களும் இருக்கின்றன. எமனும் காளியும் தொல் குடிகளிடமிருந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் உருவகங்கள் என்பதை பார்க்கும்போது, பனங்காடுகளை எமன் எட்டிப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்பது விளங்கும். 

அன்று காலை உணவினை முடித்த பின்பு, ஊரை சுற்றிபார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உணவகம் இருந்த இடத்க்டின் எதிரில் காணப்பட்ட  தெருவில்  நடக்க ஆரம்பித்தேன். சுத்தமாக நீர் தெளித்து பேணப்பட்ட தெருக்கள். ஒரு புராதனமான இந்து கோயில் அங்கே இருந்தது. பாழடைந்திருந்ததை புதிப்பிக்கும்படியான புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதற்கான அடையாளம் தெரிந்தன. சுவர்கள் எல்லாம் சுறண்டி எடுக்கப்பட்டு அடுத்த கட்ட வேலைகளுக்காக அக்கோயில் காத்திருந்தது. கோவிலை சுற்றிலும் இருந்த புதர்கள் சமீபத்தில் தான் வெட்டி சீர் செய்யப்பட்டிருந்தன. கோவிலில் எவருமே இல்லை.

எதிரே இருந்த தெருவில் நடந்த போது பனை ஓலைகள் சாயமிடப்பட்டு காயப்போடப்பட்டிருந்தன. ஆகவே இங்கு பனை ஓலையில் பொருட்களைச் செய்பவர்கள் இருக்கலாம் என்று உணர்ந்து அருலில் இருக்கும் சிறுவர்களிடம் கேட்டேன். அவர்கள் காட்டிய வீட்டில் சென்று கேட்டபோது இங்கே ஒரு பெண்கள் அமைப்பு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்றார்கள். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கலையும் அவர்களே சொல்லுவார்கள் என்றனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றபோது அங்கிருந்த பெண்மணி என்னை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். பேச்சுக்கொடுக்கவே விரும்பவில்லை. பொதுவாக இவ்வித சூழல் பிற இடங்களிலும் சந்தித்திருக்கிறேன். சர்வதேச சந்தையினை மையமாக கொண்டு ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள், தங்கள் அலுவலகங்களை மர்ம தேசங்களாக வைத்திருப்பது வாடிக்கை. போட்டி நிறைந்த உலகில், இவ்விதமான மக்களை ஆசை வார்த்தை காட்டி வேறு இடங்களுக்கு இழுத்துக்கொள்ளும் சிலரும் இருக்கிறார்கள். ஆனால், முதன்மையான காரியம் என்னவென்றால், இவர்கள் செய்யும் பொருட்கள் குறித்த இரகசியம் பேணவே விரும்புகிறார்கள். 

பழவேற்காட்டில் என்னால் எதனையும் பார்க்க இயலாதோ என எண்ணியபடி வெளியேறினேன். நான் வெளியேறும் சமயத்தில் அங்கு ஒரு மனிதர் தனது மனைவியினை டி வி எஸ் எக்செல் வண்டியில் வைத்து ஓட்டியபடி எதிரில் வந்தார். கருமையான திடமான அழகிய தேகம். முகமும் ஒளிகொண்டிருந்தது.  வண்டியின் முன்புறம் தொங்கவிடப்பட்டிருந்த ஒயர் கூடையில் பனை ஒலைக் குருத்து. பாய்ந்து வண்டியை நிறுத்தினேன். ஓலையை எதற்காக கொண்டு செல்லுகிறீர்கள்,  எங்கே தங்கியிருக்கிறீர்கள் என மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கினேன். அருகில் தான் வசிப்பதாகக் கூறினார்கள். அவர்களும் பறி செய்வதற்காகவே இதனை எடுத்துச் செல்லுகிறார்கள் என புரிந்துகொண்டேன்.

காலை வேளையில் பொடிநடையாக நடக்கையில் அங்கிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரி கடல் ஆய்வு மையம் தென்பட்டது. சுற்றி நடந்து வருகையில், அங்கிருந்த ஒரு நூலகம் கண்ணில் பட்டது. உள்ளே செல்ல முயன்றபோது கொரோனா தடுப்பு முறைமைகள் கடைபிடிக்கப்பட்டது. பின்னரே உள்ளே அனுமதித்தார்கள். அங்கிருந்த நூல்களை தேடிப்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்  சேவியர் என்னை அழைத்தார்கள். நான் இங்கு எனது அலுவலகம்  வந்துவிட்டேன் நீங்களும் வாருங்கள் என்றார்.

ஆர் டி எம் அங்குள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபையின் வளாகத்திலிருந்தது. அங்கு சென்றபோது தான் கலை நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் கிடைத்தன.  நான் சென்ற வீடுகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் வீடுகள். அங்குள்ள பெண்கள் பார்ப்பதற்கு பிற பெண்கள் போலவே இருந்தார்கள். அவர்கள் மரக்காயர்கள் என சேவியர் சொன்னார். சேவிரைப் பொறுத்தவரையில் மிக அழகிய பனையோலைப் பொருட்களைச் செய்வதற்கு காரணம் மரக்காயர் சமூகம் தான். இஸ்லாமிய தொடர்புகளினால் அவர்கள் அழகிய பனையோலைப் பொருட்கள் செய்ய கற்றிருந்தனர். அவர்களிடமிருந்து பரதவர்கள் பனையோலைப் பொருட்கள் செய்ய கற்றிருக்கின்றனர். தமிழகத்தில் இவ்விரண்டு சமூகங்களே அழகிய பனையோலைப் பொருட்கள் செய்பவர்கள் என்றார். எனக்கு அது புது தகவல். ஏனென்றால், இவ்விரு சமூகங்களும் பனையுடன் தொடர்புடையது என சேவியரை சந்தித்த பின்பு தான் நான் அறிந்துகொள்ளுகிறேன். அவரது அலுவலகத்தில் இருந்தது ஒரு மரக்காயர் பெண் தான். வெகு சாதாரண தமிழக பெண்மணியினைப் போன்ற உடையமைப்பிலேயே இருந்தார். ஓலைகளை மிக சன்னமாக கிழித்து பொருட்களை செய்துகொண்டிருந்தார். 

பழவேற்காடு ஓலைப் பெட்டிகள்

பனையோலை அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஆர்வம் கிடையாது. வர்ணங்கள் மீதும் எனக்குப் பெரிய வாஞ்சை கிடையாது. அழகிய வர்ணங்கள் தீட்டும் SHARE என்ற வேலூரைச் சார்ந்த  அமைப்பு, தலித் பெண்களைக் கொண்டு மிகச் சிறப்பான பொருட்களைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இங்கிலாந்து, உட்பட பல ஐரோப்பிய நகரங்களுக்கு அவர்கள் பொருட்களை அனுப்புகிறார்கள்.

மற்றொரு அமைப்பு மஞ்சள் எனப்படுவது. செட்டியார்கள் நடத்தும் ஒரு அமைப்பு. தமிழகத்தில் இன்று முதலிடத்தில் இருக்கும் அழகிய வடிவமைப்புகள் கொண்ட அமைப்பு இது. ரோடா அலெக்ஸ் தான் மஞ்சள் என்ற அமைப்பினை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மஞ்சள் எப்படி இயங்குகிறது என நான் தேடி சென்றபோது, நாடார் பெண்களை வைத்தே வேலை செய்கிறார்கள் என்பதை கண்டுகொண்டேன். அங்கு அவர்களது பணியிடத்திற்குள் செல்ல நான் அனுமதிக்கப்படவில்லை.

செட்டிநாடு பனை ஓலைப் பொருட்களை அறிமுகம் செய்யும் கொட்டான் என்ற புத்தகம்

செட்டியார் சமூகத்தினருக்கும் நாடார் சமூகத்தினருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என காலம்சென்ற பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். பனை மரச்சாலை புத்தகத்தினை அவர் தான் முழுவதும் வாசித்து பதிப்பகத்திற்கு கொடுக்கலாம் என பச்சைக் கொடி காட்டியவர். திருமண சீர்களில் நாடார்கள் எப்படி நார் பெட்டிகளை கொண்டு செல்வார்களோ அது போலவே செட்டியார்களும் செய்வார்கள் என்றார். முதன் முறையாக  செட்டியார்களுக்கும் பனைக்கும் இருக்கும் உறவு என் பார்வையில் அப்படித்தான் தெரிய வந்தது. 

ஆகவே இதனை மையப்படுத்தியே நான் செட்டியார்களுக்கும் நாடார்களுக்கும் உள்ள தொடர்பினைத் தேட ஆரம்பித்தேன்.  திண்டுக்கல் பகுதிகளில் நான் பயணித்துக்கொண்டிருக்கும்போது கோவிலூர் என்ற பகுதியில் ஒரு பெண்மணி நாங்கள் செட்டியாருக்குத் தான் கருப்பட்டியை கொடுப்போம் என்றது எனக்குள் கேள்வியை எழுப்பியது? ஏன் செட்டியார்கள்? பணம் இருப்பதிலேயா? வெறும் பணம் ஒரு காரணியாக இருக்க முடியாது ஏன் என்றால் சிவகாசி நாடார்களும், இன்னும் பல நாடார்களும் கருப்பட்டி வணிகத்தை தங்கள் குல உரிமைச் சொத்தாக வைத்திருந்தார்கள். என்னுடைய அம்மா வழி தாத்தாவின் சகோதரியின் கணவர் கூட ஒரு வெற்றிகரமான கருப்பட்டி யாவாரியாக கொல்லத்தில் கொடிகட்டிப்பறந்தவர் தான். அப்படியானால் ஏன் செட்டியார்கள் பனையேறிகளுடன் தொடர்பிலிருக்கிறார்கள்?

விடை சொல்லுவதற்காகவே திருச்சியில் செல்லம்மாள் மண் பானை சமையல் என்ற பாரம்பரிய உணவகத்தை நடத்தும் திரு மோகன் அவர்கள் என்னை அவர்களது உணவகத்திற்கு அழைத்திருந்தார்கள். உணவு உண்பதற்கு முன், அவரது உணவகத்தை எனக்கு சுற்றிக்காண்பித்தார்கள். சமையலுக்கான மண் பாண்டங்களைத் தேர்வு செய்த விதம், விறகுகள் முதற்கொண்டு காய்கறிகள் எப்படி வாங்குவது உட்பட பல கோட்பாடுகளை அவர் வைத்திருக்கிறார். அவர் வாங்கி வைத்திருக்கும் கருப்பட்டிகள் தருமபுரியிலிருந்து வரவழைத்தவை என காண்பித்தார். அவைகளின் வடிவமே சற்று வித்தியாசமாக இருந்தது. தேங்காய் சிரட்டையில் ஊற்றியது போல அல்ல, சற்று ஆழமான குழிக்குள் ஊற்றியது போல நீண்டு காணப்பட்டது. அவர் தான் சொன்னார், செட்டியார்கள் எண்ணை ஆட்டும்போது கருப்பட்டியினைக் கலந்தே ஆட்டுவார்கள் என்று. குறிப்பாக எள் எண்ணை ஆட்டும்போது கருப்பட்டி கண்டிப்பாக இட்டே ஆகவேண்டும். ஒரு முறை காயல் பட்டிணம் சென்றிருக்கும்போது ஒரு இஸ்லாமியர் செக்கு ஆட்டும் இயந்திரத்தில் கருப்பட்டிகளை போட்டுக்கொண்டிருந்ததை அப்போது நினைவு கூர்ந்தேன்.  கருப்பட்டிகளை இட்டு அரைத்தால் தான் எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணையில் உள்ள காரல் நீங்கும்.

செட்டியார்கள் மத்தியில் எண்ணெய் செட்டியார்கள் உண்டு என்பது எனக்கு புது தகவல். பெருவிளையில் எங்கள் வீட்டிற்கு  பின்புறம் இருக்கும் அரிசி அரவை ஆலைக்கருகில் ஒரு செக்காட்டும் கல் கிடப்பதையும் எனது சிறு வயது முதல் பார்த்து வருகிறேன். சமீபத்தில் மீண்டும் செக்கெண்ணெய்கள் தமிழகத்தில் மீட்சி பெறுவதைப் பார்க்கும்போது  கருப்பட்டியின் தேவை இன்றும் அதிகமாக இருப்பதாகவே உணருகிறேன். 

கேள்வி இன்னும் எஞ்சியிருக்கிறது. செட்டியார்கள் வாழ்வில் பனையோலைப் பெட்டி எப்படி நுழைந்தது? அவர்களுக்கான ஓலை பின்னும் ஒரு மரபு தமிழகத்தில் எப்படி தனித்துவத்துடன் இயங்கலாயிற்று என்பது மிகப்பெரிய கேள்வி. மஞ்சள் வெளியிட்ட கொட்டான் என்ற ஒரு புத்தகத்தை பெரும் விலை கொடுத்து வாங்கினேன். அந்த புத்தகம் அவர்களின் பொருட்களின் அறிமுகம் என்ற அளவிலான ஒரு புத்தகமே ஒழிய அதிலிருந்து பெருமளவில் விடை கிடைப்பதாக இல்லை. ஏனென்றால் அப்புத்தகத்தில் எங்குமே அவர்களுக்கு ஓலைகள் எங்கிருந்து கிடைக்கிறது என்கின்ற தகவல் சொல்லப்படவில்லை. ஓலைகள் கிடைக்கும் பனை மரம் குறித்து போற்கிற போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஓலைகளை யார் வெட்டி கொடுப்பார்கள், போன்றவைகள் பேசப்படவில்லை. ஒருவேளை, அப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஓலைகளை சேகரித்து கொடுத்திருக்கலாம், இல்லை தலித் சமூகத்தினர் அப்பகுதிகளில் பனையேறியிருக்கலாம். பொருந்தும்படியாக நாம் எண்ணத்தக்க விடை, செட்டிநாடு பகுதிகளில் வாழ்ந்த நாடார்கள் தான் ஓலைகளை எடுத்து செட்டி ஆய்ச்சிகளுக்கு கொடுத்திருப்பார்கள் என்பது தான்.

அழகிய செட்டிநாடு கொட்டான்கள்

அப்படியானால், ஓலைகளில் பொருட்கள் செய்யும் நுட்பம் செட்டியார் சமூகத்தினருக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார்கள் என்பது அதனை தொக்கி நிற்கும் கேள்வி. கண்டிப்பாக நாடார் பெண்களே செட்டி ஆய்ச்சிகளுக்குப் பின்னல் முறைகளை கற்றுக்கொடுத்திருப்பார்கள். அப்புத்தகத்தில் அதற்கான தெளிவுகள் ஏதும் இல்லை. பெரும்பாலும் செட்டியார்கள் பர்மா சென்று பொருளீட்டுகையில், செட்டி ஆய்ச்சிகள் வீட்டில் பொழுதுபோக கற்ற ஒரு கலை வடிவமாகவே  இதனைப் கொட்டான் முன்வைக்கிறது. இன்றும் செட்டி நாட்டு சுற்றுவட்டாரங்களில் காணப்படும் நார் பெட்டிகள் தனித்துவமிக்கவைகளாக  காணப்படுவதைப் பார்க்கலாம். இவ்வித நார் பெட்டிகளே செட்டியார்களுடைய திருமணங்களில் பயன்படுத்தப்பட்டன. அப்படியானால், அவர்களிடம் காணப்படும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பெட்டிகளுக்கான பின்புலம் என்ன? தென் தமிழகத்தில் காணப்படும் முறைமைகளைத் தாண்டி செட்டியார்களுடைய வர்ணங்களும், மடிப்புகளும் வித்தியாசப்படும் இடங்கள்  உண்டு. அது எப்படி என்கிற கேள்வி என்னை குடைந்துகொண்டிருந்தது.  

அதற்கான விடை கண்டுபிடிக்க நான் வேறு ஒரு பயணம் செய்யவேண்டியிருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை. தற்செயலாக அவ்விதமான ஒரு பயணம் நிகழ்ந்தது.  எனது இறையியல் கல்லூரித் தோழன்,   ஹெம்கொமாங் ஹோக்கிப் (Hemkhomang Hoakip)  மணிப்பூரில் நிகழ்ந்த ஒரு கிறிஸ்துவ சமய நிகழ்ச்சிக்காக என்னை பேச அழைத்தார். நிகழ்ச்சி முடிவில் என்னோடு படித்த குக்கி இனக்குழுவைச் சார்ந்த மாங்சா ஹோக்கிப் (Mangcha Hoakip) , என்னை அவனுடன் தங்கும்படியாக அழைத்துச் சென்றான். மோரே என்று சொல்லப்படும் ஒரு பகுதி இருக்கிறது அங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள், அதன் அருகில் தான் பர்மா இருக்கிறது அங்கு செல்வோம் என்றான். மறுநாள் அதிகாலமே, ஒருநாள் பயணமாக  பர்மா நோக்கி மாங்சா குடும்பத்தினருடன்  இணைந்து பயணித்தோம். 

தூரத்தில் தெரிகிறது தான் பர்மா என காண்பித்தான். பர்மா எனப்படுவது சமதளத்தில் இருக்குமிடம் என்றும், இந்தியா  மலையில் இருப்பதும் தான் எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய வேறுபாடு. நாங்கள் மோரே சென்று  காலை உணவருந்திவிட்டு, ஒரு நாள் பெர்மிட் எடுத்துவிட்டு பர்மாவிற்குள் நுழைந்தோம். அங்கே அருகிலிருந்த ஒரு நகரத்திற்குள்  நான் காலடி எடுத்து வைத்தபோதே உணர்ந்துகொண்டேன் இது பனைகளுக்கான தேசம் என்று, என்னை வரவேற்க நான்கு பனை மரங்கள் சாலை ஓரத்தில் நின்றன. கலயம் கட்டப்பட்டிருந்தது. இல்லை இல்லை அவிழ்க்கப்படாமலிருந்தது. அன்று நாங்கள் சென்ற சந்தையில், கருப்பட்டி விற்கப்படுவதைப் பார்த்தேன். பனை ஓலைப்பொருட்களை நான் அன்று அங்கு எங்குமே பார்க்கவில்லை. எப்படி அதை தவற விட்டேன் என இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். 

எனது செட்டி நாட்டு பயணத்தில் அங்குள்ள புராதன பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்றபோது, பர்மாவிலிருந்து கொண்டுவந்த ஓலைப்பெட்டிகள் தாராளம் இருப்பதைப் பார்த்தேன். செட்டியார்களுடைய தனித்துவம் என்பது நாடார்களிடம் இருந்து கற்ற பின்னல் முறைகளுடன் பர்மிய கலைப்படைப்புகளையும் சேர்த்து  முயங்கி ஏற்பட்ட கலவையான கலைவடிவங்கள் என்பதை அப்படித்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பர்மியக் கலைப்படைப்புகள் என்பவை அனைத்து இந்திய கலைப்படைப்புகளுக்கும் அப்பாற்பட்ட அழகு கொண்டது என்பதை இங்கு பதிவு செய்துதான் ஆகவேண்டும்.

என்னைப்பொறுத்தவரையில், ஒவ்வொரு சமூகமும், தமிழகத்தில் பனை சார்ந்த பொருட்களை தங்களுக்கு என வடிவமைத்திருக்கிறார்கள். அது அவரவர்களின், சடங்கு அல்லது, பயன்பாட்டு காரணங்களை ஒட்டி இருக்கலாம் என்பது எனது அவதானிப்பு. ஆகவே அழகினை விட, ஒரு பொருள் எவ்விதம் பயன்படுத்திடப்பட்டிருக்கிறது எனவும், அவைகள் அச்சமூகத்தை எப்படி பிரதிபலிக்கிறது என்பதும் தான் எனது முக்கிய தேடுதலாக இருக்கிறது.  செட்டியார்களுடைய பங்களிப்பு என்பவைகள் அவ்வகையில் அழகியல் சார்ந்து அவர்கல் தமிழ் சமூகத்திற்கு அளித்த கொடைகள் என்றே கொள்ளுவேன். இன்று மஞ்சள் சென்று பனை ஓலைப் பொருட்கள் வாங்குபவர்கள் தமிழகத்தில் உள்ள மேல் தட்டு மக்கள் மட்டும் தான். அந்த அளவு சர்வதேச கலை ஒருமையினை அவர்கள் பேணி வருகிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது. 

பறி குறித்த விடை எனக்கு ஓரளவு கிடைத்துவிட்டாலும்,  பறி குறித்து நான் மேலும் அறிய விரும்பியே பழவேற்காடு வந்தேன். கூடவே எலிக்கிட்டி என்று ஒன்றினையும் தேடி வந்தேன். எனக்கு சேவியர் அறிமுகமான பிற்பாடு, ஒருநாள் முகநூலில் ஒரு படத்தினை பகிர்ந்திருந்ததைப் பார்க்தேன். ஒரு மனிதர் டி வி எஸ் எக்செல் வண்டி நிறைய பனயோலையிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற ஒரு படம். என்ன இது என்று வினவ, எலிக் கிட்டி என்றார். இப்படியான ஒரு பெயர் எனக்கு புதிதாக இருப்பதனால், அது குறித்த தேடலையும் இணைத்தே இப்பயணத்தினை அமைத்திருந்தேன்.  

சேவியருடன் பேசும்போதெல்லாம், இதைச் செய்பவர்களைப் பார்க்க முடியுமா அதைச் செய்பவர்களைப் பார்க்க முடியுமா என்று நச்சரித்தபடியே இருப்பேன். சேவியர் எப்போதும் மெல்லிய சிரிப்புடன், கிண்டலாக சொல்லுவார். “நீங்க பாம்பே ஆள் மாதிரியே பேசுறீங்க”. அதற்கு அர்த்தம், ஒரு தகவலை நினைத்த மாத்திரத்திலேயே  திரட்டிவிட முடியாது. பொறுமை அவசியம். பல நாள் தேடவேண்டியிருக்கும் என்பதுதான். எனக்கு எலி கிட்டியினை பார்த்தே ஆகவேண்டிய வேகத்தில் தான் இந்த பயணமே என நெஞ்சு அடித்துக்கொண்டீருந்தது. அவர் என்னிடம், உங்களுக்காக ஒரு நண்பரை ஒழுங்கு செய்திருக்கிறேன், அவர் வந்தால் உங்களுக்கான உதவிகளைச் செய்வார். மீதி உங்கள் அதிருஷ்டத்தைப் பொறுத்தது என்றார். மேலும் அவர், நாளைய தினம், காயலில் நீங்கள் பயணம் செய்ய ஒரு படகினை அமர்த்தியிருக்கிறேன் , பயணம் சென்று வாருங்கள். ஒருவேளை நீங்கள் தேடுகின்றவைகளில் ஏதேனும் உங்களுக்கு இப்பயணத்தில் வெளிப்படலாம் என்றார். 

சேவியர் என்னை அழைத்துகொண்டு அங்கிருந்த டச்சு கல்லறையினை காண்பித்தார். அதற்குள் நாங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்படியே, என்னை ஒரு தொன்மையான இஸ்லாமிய பள்ளிவாசலுக்கும் அழைத்துச் சென்றார். புராதனமான அந்த பள்ளிவாசலிலும் நாங்கள் உள்ளே சென்று புகைப்படம் எடுக்க இயலவில்லை. வெளியே படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் அங்கிருந்தவர். அழகிய கற்தூண்களால் ஆன அந்த பள்ளிவாசல், இந்திய கட்டிடக்கலையும் இஸ்லாமிய கட்ட்டக்கலையும் இணைந்த சங்கமம். வெளியே இருந்த ஒரு சூரிய கடிகாரத்தையும், பாங்கு  அழைக்கும் மேடையினையும் பார்த்துவிட்டு திரும்பினோம். மதிய உணவினை இருவரும் இணைந்து  சென்று சாப்பிட்டோம். நான் இறால் பிரியாணி  சாப்பிட, அவர் சைவ சாப்பாடு சாப்பிட்டார். அவர் எனக்கு உதவி செய்யும்படி அழைத்திருந்த பீட்டர் வரும்வரையில் என்னோடு நேரம் செலவைட்டு பழவேற்காடு குறித்து பல்வேறு அரிய தகவல்களை பகிந்துகொண்டார். 

https://lbb.in/chennai/manjal-home-decor-chettinad-crafts-store/

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653


%d bloggers like this: