பனை வழி சமூகங்கள்
பீட்டர்வருவது வரை காத்திருந்ததுவிட்டு என்னை பொறுப்பானவர் கரத்தில் ஒப்படைத்த திருப்தியில் சேவியர் சென்னை கிளம்பினார். பீட்டர் கடல் தொழில் செய்து உரமேறிய உடல் கொண்டவர். முகத்தை முழுவதுமாகவே மழித்திருந்தார். மென்மையாக பேசினார். அவரது வாகனத்தில் பெட்ரோல் இட்டுக்கொண்டு அருகிலிருந்த ஒரு ஏனாதி பழங்குடியினர் கிராமம் நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் தானே முந்தைய நாள் பார்த்த அந்த எளிய மனிதரைப் பார்த்தேன். அவருக்குக் கண் தெரியாது ஆனால் அவர் தான் இவ்வித பறிகள் செய்வார் என அறிந்துகொண்டேன். அவரது கிராமத்திற்கு போகும் வழியில் வேறொரு கிராமம் சென்றோம்,. மிக ஏழ்மையான கிராமம். சுமார் 30 வீடுகள் இருக்கலாம். அக்கிராமத்தின் துவக்கத்தில் ஒரு சிறு கோயில் இருந்தது, ஒரு சில ஆடுகள் நின்றன. எண்ணை காணாத தலைகள் கொண்டவர்களே இருந்தார்கள். பீட்டர் தேடிய நபரைக் காணவில்லை. அருகில் ஒரு குளியலறை பனை ஓலைகளைக்கொண்டு மறைவு போல் அமைக்கப்பட்டிருந்த்தது.

மீண்டும் பயணிக்கையில் ஒரு நீர்பிடிப்பு பகுதியில் இருந்த சேற்றுப்பகுதியில் நின்றுகொண்டு இரு பெண்கள் இறால் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் முதிய பெண் தனது வாயில் பரியினை கடித்தபடி நீரில் மீன்களை துளாவிக்கொண்டிருந்தார். எங்கள் பைக் அந்த நீர் பிடிப்பு பகுதியில் காணப்பட்ட தற்காலிக சாலை வழியாக சென்று முக்கிய பாதையில் ஏறியது. பழவேற்காட்டின் எல்லையை கடந்து மிக ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த ஏனாதி கிராமம் சமீபத்தில் நான் பார்த்த பேரதிர்ச்சிகளுள் ஒன்று. நாங்கள் சந்தித்த அக்குடும்பம் அங்கிருந்த பாழடைந்த ஒரு வீட்டில் தங்கி இருந்தது. சுவரில் ஒரு ஆள் நுழையும்படியான ஓட்டை. தெருவில் நாம் பார்க்கும் கைவிடப்பட்டவர்களிடம் இருக்கும், ஏகாந்தம், தனிமை, புறக்கணிப்பு, பசி, வறுமை என எல்லாம் கூட்டாக அங்கிருந்தது.

நான் அந்த கிராமத்தின் தெருக்களில் மெல்ல நடந்து அதனை புரிந்துகொள்ள முற்பட்டபோது பெரும்பாலான வீடுகள் பனை ஓலையால் வேயப்பட்டதாக இருந்ததைக் காணமுடிந்தது. ஒற்றை அறை, அதற்கு செல்லும் ஒற்றை வாசல்கள் கொண்ட குடிசைகள். அனைத்துமே தற்காலிக குடிசை பகுதி போல தோன்றின. அனைத்து குடிசைகளும் ஒன்றுபோல் இருந்தன. வாசல் பகுதி சற்றே முன்னால் நீண்டபடி இருக்கும் ஒரு அமைப்பு என தனித்து அழகு கொண்டதாகத்தான் காட்சியளித்தது. வீடும் வீட்டடியும் இரண்டு முதல் 4 சென்று நிலம் மட்டுமே இருக்கலாம். பெரும்பாலான வீடுகளைச் சுற்றி இருக்கும் வேலிகளில், பனையோலையில் செய்யப்பட்ட பறி தொங்கிக்கொண்டிருந்தது.

பனை ஓலைக் குடிசைகள் செய்யும் திறன் இன்று ஒரு சில சமூகத்திடம் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு தொழில் நுட்பம். ஏனாதிகளிடம் காணப்படும் இந்த தொன்மையான கட்டிடக்கலை அவர்களுக்கு நல் வாய்ப்பை அளிப்பதாக இருக்கும் என நான் நம்புகிறேன். என்னிடம் அனேகர் பனை ஓலையில் குடிசைகள் அமைக்கும் நபர்களை ஒழுங்கு செய்து தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். பனை ஓலைக் குடிசைகள் என்பது மிகவும் குளிர்ச்சியான ஒரு வாழ்விடம். எத்தகைய வெம்மையிலும் ஒரு குடும்பம், வெம்மையின் தாக்கம் ஏதுமின்றி சுகமாக தங்க ஏற்ற இடம் பனை ஓலை குடிசைகள். இந்த வடிவமைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இனிமேல் வேறு யாரேனும் பனை குடில்கள் கட்டவேண்டும் என விருப்பம் தெரிவித்தால், ஏனாதிகளை தொடர்பு கொள்ள சொல்லவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டேன்.
அக்குடும்பத்தினரிடம் பேசினோம், பார்வையற்ற மனிதர் தம்மால் உடனடியாக செய்து தர இயலாது, ஓலைகள் இல்லை என்றார். அங்கிருந்தவர்களில் சற்றே திடகாத்திரமாக காணப்பட்ட வேறு ஒருவர், தான் பனை ஓலையில் பறி செய்து தர விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கு ஓலைகள் வேண்டுமே என்றார். ஓலைகள் எங்கே கிடைக்கும் என தேடியபோது, பழவேற்காடு பகுதிகளில், ஓலை விற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அங்கே வாருங்கள் என்றார். அங்கு சென்று மூன்று ஓலைகளை தெரிந்தெடுத்துக் கொடுத்தோம். மறுநாள் ஓலையில் பறிகள் தயார் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம்.
இன்னும் நேரம் இருந்ததால், எங்கே செல்லலாம் என யோசித்தபோது, பீட்டர் என்னை அங்கிருந்த மகளிர் ஓலை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார். அது நான் காலையில் வந்து பார்த்த இடம் தான். அவர்கள் என்னை காலையில் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகவே நான், இங்கே வந்திருக்கிறேன், வேண்டாம் போய்விடுவோம் என்றேன், அந்த பெண்மணி மீண்டும் வெளியே வந்து பார்த்து என்னை துரத்துவதற்கு ஆயத்தமானார்கள். ஆனால் பீட்டர் விடுவதாக் இல்லை. சார் சொல்லிவிட்டார்கள் என சேவியர் அவர்கள் பெயரைச் சொன்னார். யோசனையுடனும் சற்றே தயக்கத்துடனும் எங்களை உள்ளே அனுமதித்ததனர்.

மிகவும் பழைமையான ஆனால் சுத்தமான வீடு. உள்ளே ஐந்து முதிர்ந்த பெண்கள் பனை ஓலையில் பொருட்களை பின்னிக்கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக உள்ளே சென்று அமர்ந்தேன். அந்த பெண்மணிக்கு என் மீது நம்பிக்கை வரவில்லை. அங்கிருந்த பெண்கள் என்னோடு பேச்சுக்கொடுக்க துவங்கினார்கள். அனைவருமே ஐம்பதுகளைத் தாண்டியவர்கள். அவர்களோடு அமர்த்து பேசும்பொது, அங்கிருக்கும் அனைவருமே அழகு பொருட்களை மட்டுமே செய்கிறார்கள் என உணர்ந்துகொண்டேன். மேலதிகமாக என்ன தகவல்கள் கிடைக்கும் என தொடர்ந்து பேசியபோது, அவர்கள் அனைவருமே மரக்காயர் என்ற சமூகத்தினர் என்பது தெரியவந்தது.

மரக்காயர் சமூகம் தங்கள் வீடுகளில் செய்யும் பனை ஓலைப் பொருட்களைக் குறித்து கேட்டால் அவர்களால் எதையும் சொல்ல முடியவிலை. இறுதியாக அமீர் பானு என்று சொல்லக்கூடிய ஒரு பெண்மணி, மரக்காயர் வீடுகளில் காணப்படும் துத்திப்பூ என்ற பொருளைக் குறித்து கூறினார்கள். துத்திப்பூ என்பது, பனை ஓலையில் செய்யக்கூடிய உணவுகளை மூடிவைக்கும் ஒரு மூடி தான். கத்தரிக்காய் காம்பு போல மேலெழுந்து வளைந்து நிற்கும் தன்மையுடையது. உணவு பொருட்களை மூடி வைக்க பழங்காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை இன்னும் சற்று நாட்களை ஒதுக்கி அவர்களிடம் நெருங்கிப் பழகினால் மரக்காயர்களுக்கே உரித்தான அழகிய வேறு சில பயன்பாட்டு பொருட்களையும் மீட்டெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனாதி சமூகத்தினரை பீட்டர் இருளர் என்றே அழைத்தார். ஒருவேளை தமிழகத்தில் இருளர் என்று அழைக்கப்படுபவர்களே ஆந்திராவில் ஏனாதிகள் என அழைக்கப்படுபவர்களாக இருக்கலாம் என எண்ணுகிறேன். ஏனாதிகள் இந்தியாவிலுள்ள பட்டியல் பழங்குடி இனத்தவர்கள். ஆந்திராவைச் சார்ந்த இவர்கள், ஆந்திர எல்லையில் இருக்கும் பழவேற்காடு பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இன்றும் வேட்டையாடி, சேகரித்து உண்ணும் வழக்கம் கொண்ட இவர்களை சென்னை அரசு அருங்காட்சியக கண்காணிப்பாளராயிருந்த எட்வர்ட் தர்ஸ்டன் (Edward Thurston, 1855– 12 அக்டோபர் 1935) என்பவர் “அனாதி” என்கிற சமஸ்கிருத பெயரிலிருந்து “துவக்கமே இல்லாதவர்கள்” என ஊகிக்கிறார். அதாவது “என்றும் இருப்பவர்கள்” என்றும் பொருள் கொள்ளலாம். தம்மைச் சுற்றி இருக்கும் நிலப்பரப்பைக் குறித்த கூர்ந்த அவதானிப்பு இவர்களிடம் உண்டு. ஒருமுறை இறை அடியவருக்கு உணவு வழங்கி பசியாற்றியபோது அவர்களுக்கு பாம்புகளை விரட்டும் வரத்தினை அந்த இறை அடியவர் வழங்கியதாக ஏனாதிகள் குறித்த தொன்மம் வழக்கிலிருக்கிறது. ஏனாதிகள் பனை ஓலை இட்ட குடிசைகளிலேயே வாழ்வது, அவர்களது வாழ்விடம் பன்னெடுங்காலமாகவே பனை சார்ந்த நிலவியலை அடிப்படையாக அமைந்தது என்பதை ஊகிக்க வழிவகை செய்கிறது.
இருளர்களைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பாம்பு மற்றும் எலிகளைப் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். எனது தோழியும் பல் மருத்துவருமான கடலூர் தாமரை, கிளப் டென் (Club Ten) என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். அவர்களின் களப்பணியில் பல இருளர்களை அவர்கள் சந்தித்து பணியாற்றிவரும்போது, பனை சார்ந்த ஏதேனும் பொருட்கள் அவர்கள் வைத்திருக்கிறார்களா எனக் கேட்டேன். எனது மனதில், இருளர்கள் பாம்பு பிடித்து போடும் பெட்டிகள் பனை ஓலையானாலதாக இருக்கலாம் என்பது எண்ணம். தாமரையால், அவைகளை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை, ஒருவேளை எனது எண்ணம் தவறாக கூட இருக்கலாம், ஆனால், ஒருமுறை தாமரை ஒரு இருளர் பெண்மணி செய்ததாக கூறி எனக்கு அனுப்பிய ஒரு படம், சற்றேறக்குறைய பறி போலவே காணப்பட்டது. ஆகவே இவ்விரு சமூகத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். மேலும் பாம்பு பிடிக்கும் வழக்கத்தினை இன்று அரசாங்கம் தடை செய்து வைத்திருக்கிறது. ஆகவே பாம்புகளை போடுகின்ற பெட்டிகள் பனை ஓலையில் அவர்கள் செய்திருந்தாலும் கூட, அதன் பயன்பாடு இல்லாது போனதால், இனிமேல் அவைகளை மீட்டெடுப்பது எளிதான காரியம் அல்ல.
நவீன காலத்தில் பனை பொருட்களின் அழிவு என்பது நவீன பொருட்களின் வரவால் மட்டுமன்றி, இது போன்ற தடைகள் மூலமாகவும் என்பதை அறியும்போது, அவர்களின் தொல் அறிதல்கள் எவ்விதம் சந்தடியின்றி மறைந்துபோகின்றன என்கிற பதைபதைப்பு எழுகிறது. பழங்குடியினரின் கலை வாழ்வு என்பது அவர்களின் வாழ்வை ஒட்டி வருவது. அவர்கள் வரலாறுகள், கலைகள் உயிர்ப்புடன் இருக்கக்கூடியவை. அவைகளின் ஒரு கண்ணியை பிரித்தாலும், அவர்கள் வாழ்வு மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும். தாமரை என்னிடம், மீன்களை எப்படி விற்கவேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை, அப்படியே ஓலைகளை அவர்கள் எடுத்துக்கொள்ள அருகிலிருக்கும் மக்கள் அனுமதிப்பதில்லை என்று கூறியிருந்தார். வாழ்வில் ஓரங்கட்டப்பட்டவர்களை மேலும் நெருக்குவது என்பது சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் வாடிக்கையாகிவிட்டது.
அன்று இரவு மீண்டும் என்னை சற்று தொலைவிலிருக்கும் ஒரு ஏனாதி கிராமத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். உலகின் மற்றொரு பாகத்திற்கு நான் செல்லுகிறேன் என்கிற எவ்வித அறிதலுமின்றி நான் பயணப்பட்டேன். இருள் நிறைந்த அந்த சாலையில் தனது மொபைல் டார்ச் லைட் ஒளி பாய்ச்ச பீட்டர் வண்டியில் சென்றது என்னை அதிர்ச்சியில் உறையச் செய்தது. எதிரே எங்கும் வண்டிகள் வராத குக்கிராம சாலை. ஆனால் அவர் அவ்விதம் வண்டியை ஓட்டும்போது எனக்கு உள்ளூர ஒரு நடுக்கம் இருந்துகொண்டிருந்தது. நான் சாதாரணமாக அப்படி நடுங்குகிறவன் அல்ல. ஆனால் எங்கோ தொலைவில் செல்கிறது போல ஒரு படபடப்பு நெஞ்சுக்குள் அடித்துக்கொண்டிருந்தது.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நாகர்கோவில் கஸ்பா சபை புத்தாண்டு ஆராதனையை முடித்த கையோடு மாறாமலை செல்ல திட்டமிட்டோம். எனது நண்பன் விஸ்டன் மற்றும் எனது மாமா மகன் ஜானியும் உடன் உண்டு. பின்னிரவு நேரம், கீரிப்பாறை செக்போஸ்ட் அருகில் வண்டியை உருட்டியபடி உறங்கிக்கொண்டிருக்கும் காவலர்களுக்குத் தெரியாமல் காட்டிற்குள் சென்றோம். ஜானி பயம் அற்றவன். அவன் போகும் வேகத்தை வெகு சிரமப்பட்டே தொடரவேண்டியிருந்தது. மேலும் அவன் தனியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான், எனது வண்டியின் பின்புறம் விஸ்டன் இருந்தான். காட்டிற்குள் வேகமெடுத்து சென்றுகொண்டிருந்தோம். யானை இருக்கும் காடு, எப்போது வேண்டுமானாலும், பன்றிகள் எதிர்படலாம், செந்நாய்களின் கூட்டம் எங்களை சுற்றி சூரையாடலாம், காட்டு மாடுகள் எங்களை தூக்கி வீசலாம். ஆனால், நாங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல் பயணப்பட்டுகொண்டே இருந்தோம். காட்டிற்குள் புத்தாண்டை கொண்டாடுவதும், புது புலரியில் காட்டிற்குள் நிற்பதும் வாழ்வில் கிடைக்காத அனுபவம் என்று எண்ணி, பரவசத்துடனும் உள்ளக் கிளர்ச்சியுடனும் சென்றுகொண்டிருந்தோம். ஒரு கிளைச் சாலைப் பிரியும்போது ஜானி அதில் வண்டியை செலுத்தினான். சரளைக்கற்களும், குழியும் பெரும் கற்களும் நிறைந்த அந்த பாதையை ராஜ பாதையென நினைத்து ஜானியின் வண்டி சென்றுகொண்டிருந்தது. நானோ திகிலுடன் அவனை தொடர்ந்துகொண்டிருந்தேன். ஜானி சென்று சேர்ந்த இடம் ஒரு நீரோடை, பாதையின் குறுக்காக ஒரு சிற்றோடை ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்வது என தெரியாமல் ஜானி அங்கே நின்று விட்டிருந்தான். அப்போது விஸ்டன் சொன்னான், வழி தப்பி வந்துவிட்டோம், மேலேறி செல்லுவோம் என்று. மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு சரியான பாதையை வந்தடைந்தோம்.
லைட் ஆஃப் செய்துவிட்டு வண்டி ஓட்டுவோமா என்று விஸ்டன் கேட்டான். அக்காலகட்டத்தில் அது எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு. விஸ்டனுடைய யமகாவில், இருக்கும் வெளிச்சம் என்பது மிக மங்கலானது. அது எரிவதும் எரியாமல் இருப்பதும் ஒன்றுதான். ஆனால், எதிரில் வரும் வண்டிகளுக்கு அது ஒரு முக்கிய அடையாளம். ஆகவே பல நாட்கள் இருட்டில், வண்டியின் முன் விளக்கை அணைத்துவிட்டு வண்டியை ஓட்டியிருக்கிறோம். அதெல்லாம் தெரிந்த சாலைகளில். மேலும், அன்று கண் பார்வை வெகு துலக்கமாக இருந்தது. வெகு மங்கலான ஒளியுமே கூட போதுமானதாக இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலே இள ரத்தத்தில் ஊறி ததும்பி நிற்கும் பைத்தியக்கார சாகச வேட்கை. இது முற்றிலும் புதிதான ஒரு இடம். அடர் காடு. என்ன சம்பவிக்கும், எதிரில் என்ன நிற்கும் என தெரியாது. சரிடா என்று கூறி துணிந்து வண்டியை எடுத்தேன். மயிற்கூச்செறியும் ஒரு பயணம் அது. மலை வளைந்து வளைந்து செல்ல, வண்டியின் சக்கரத்தில் உள்ள அதிர்வுகளையும் இருளுக்குள் இருக்கும் ஒரு மென்வெளிச்சத்தையும் பிடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தோம். ஓரிடத்தில் யானை நிற்பதுபோல் தோன்ற பயத்தில் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டேன். ஜானி, பின்னால் வந்து என்னாச்சுணா என்றான். பயத்தை வெளியே காட்டாமல், இங்கேயே நிற்போம் என்றேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அன்று அங்கு நின்றோம். நல்லவேலையாக பயந்தபடி ஏதும் நிகழவில்லை. சற்றே பொழுது புலர்ந்தபோது, அங்கிருந்து புறப்பட்டு ஒரு கிராமத்தை சென்றடைந்தோம். முன்பின் தெரியாத ஒரு பெண்மணி, நீர் தெளித்து வாசல் கூட்டிக்கொண்டிருந்தவர்கள், டீ வேணுமா என்று கேட்டு சுடச் சுட பாலில்லா டீ கொடுத்தார்கள்.
அந்த வயதும் அன்றைய நிலையும் இப்போது இல்லை. ஆனபடியால், மெழுகுதிரி போன்ற ஒளியில் நாங்கள் செல்லுவதே சிலிர்ப்பாக இருந்தது. செல்லும் வழியில் பனை மரங்கள் நிற்பதைப் பார்த்தேன். கூட்டமாக ஓரிடத்திலும், ஆங்காங்கே ஒன்றிரண்டாகவும் தென்பட்டது. வேறு மரங்கள் அதிகமாக கண்ணில் படவில்லை. ஓரிடத்தில், வழி தெரியாமல், ஓடைக்குள் வண்டி செல்ல இருந்தது, பீட்டர் எப்படியோ சுதாரித்து வண்டியை நிறுத்தினார்.
தேடித்தேடி இரவில் ஒரு கிராமத்தைச் சென்றடைந்தோம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏனாதிகளின் குடிசைகள் இருந்தது. அந்த இரவு வேளையில் நான் பார்த்த அந்த குடிசை எங்களை நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு பெருச்சாளி போல காட்சியளித்தது. ஏனாதிகளின் கட்டிடக்கலையின் சிறப்பு இதுதான். அவர்களின் வீடுகளை தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் அடையாளம் காணும்படியாக ஒரு வடிவமைப்பு. மிகச்சிறிய கூடம், நுழைவதற்கான வாசலும் சற்று முன் நீட்டி கூரையிடப்பட்டிருந்தது. இந்த வடிவம் தான் எங்கும் இருக்கிறது என கண்டுகொண்டேன். அது ஒரு தொல் பழங்கால வடிவம். கிட்டத்தட்ட ஆறுக்கு எட்டு என்ற அளவில் அந்த வீடு இருக்கலாம். வீட்டின் முத்தத்தில் இரண்டு பறிகள் இருந்தன. இவ்விதமான ஒரு வீட்டினை அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என கேட்டபோது, ரூ. 6000/- எனக் கூறினார்கள். என்னால் புரிந்துகொள்ளவே முடியவிலை. மும்பை தாராவியில் உள்ள குடிசை வீட்டிற்கு ஒரு மாத வாடகை ரூ 6000 இருக்கும். அதனைக் கொண்டு மொத்தமாக ஒரு வீட்டையே உருவாக்கிவிட முடியுமா? ஆச்சரியத்துடன் பின்னர் இதனை சேவியரிடம் பகிர்ந்துகொண்டபோது “Welcome to Pulicat” என்றார். அத்தனை வளம் இருந்தபோதும் வறுமை கோரத்தாண்டவமாடும் ஒரு காட்சிகளைப் பார்க்கையில் ஒரு வித பாரம் நெஞ்சை அழுத்தியது.

பல இடங்களுக்கு போகும்போது, அந்த இடங்களை மீண்டும் தேடிப்போகவேண்டும் என்கிற ஆவல் எழும், ஆனால் பழவேற்காடு என்னும் இடத்திற்கு நான் என் வாழ்நாளில் செல்லவே இயலாது. அங்கு நான் செல்லவேண்டுமென்றால், பனை சார்ந்த பணிகளில் நான் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தாலே சாத்தியம். அங்கு செய்யவேண்டிய பணிகள் அவ்வளவு இருக்கின்றன. ஒருநாள் அவர்கள் பெற்றுக்கொள்ளும் இறால், அவர்களுக்கு மிகச்சிறந்த ஊட்டசத்து மிக்க உணவு. நம்மால் தினம் தோறும் அவ்வளவு இறால்களை வாங்கி ஒரு குடும்பத்தை ஓட்டிவிட முடியாது, ஆனால், அனைவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். கிடைக்கும் பணம் அன்று தானே டாஸ்மாக் நோக்கி செல்லுகிறது. குடிக்க பணம் இருந்தால் போதும் உணவு என்று ஏதும் தேவையில்லை என்ற வாழ்கை முறை. அனைவருமே மெலிந்து பெலன் குன்றிப்போய், ஊட்டச்சத்து கூறைபாடுள்ளவர்களாய் காணப்படுகிறார்கள். இவர்களின் நிலை அறிந்து அங்குள்ள மீனவர்களும் இவர்களிடம் மிகக்குறைந்த விலையிலேயே இறாலினை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
நாங்கள் தேடிச்சென்ற மற்றொரு கிராமம், சற்றே வசதி படைத்ததாக இருந்தது. ஆனாலும் பிந்தங்கிய கிராமம் தான். வன்னியர்கள் வாழும் கிராமம் என்றார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தான் உடனடியாக மனதிற்கு வந்துபோனது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பனைக்காக குரல் கொடுத்தவர். அங்கு நான் விசாரித்த வகையில் பனைகள் மீதான உரிமை கொண்டவர்கள் அவர்கள் தான். வன்னியர்களுக்கும் பனைக்கும் தொடர்புண்டு என்று இங்கே வந்த பின்புதான் அறிந்துகொண்டேன். வன்னியர்கள் பனை ஏறுவதோடு, பனை ஓலைகளிலும் பொருட்களைச் செய்கிறார்கள். அங்கு அர்சுனன் என்ற நபரை சந்தித்தோம். மிகப்பெரிய பனை ஓலைகளை இணைத்து அவர்கள் செய்யும் பறி விரிந்த பானையைப்போல் பிரம்மாண்டமாக காணப்பட்டது. ஏனாதிகளின் பின்னல் முறையில், பானை போல வயிறு திறண்டு வாய் ஒடுங்கிய ஒரு வடிவம். அளவிலும் உறுதியிலும் ஏனாதிகளைக் காட்டிலும் திடம் அதிகமாக இருக்கும் என்பதை முதல் பார்வையிலேயே ஒருவர் நிதானித்த்துக்கொள்ள முடியும். ஆகவே தங்கள் உணவிற்கு மிஞ்சிய மீன்களை விற்பனை செய்யும் பொருட்டு இவ்வித மிகப்பிரம்மாண்டமான பறிகளை வன்னியர்கள் தயாரித்திருக்கிறார்கள் எனவும், தங்கள் உணவிற்கான தேவைகளோடு ஏனாதிகள் நிறுத்திக்கொண்டார்கள் என்பதும் இதன் மூலம் வெளிப்படுகிறது.

நிச்சயமாக வன்னியர் இன மக்கள் செய்யும் பறியானது ஏனாதிகளிடமிருந்து பெற்ற அறிவின் தொடர்ச்சி தான். ஆனால் இன்று ஏனாதிகள் வன்னியர் பயன்படுத்தும் பறிகளைப்போல் ஏதும் செய்துவிடமுடியாது. ஒவ்வொரு ஜாதிக்கும் தகுத்த வடிவங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. பழவேற்காடு பகுதிகளிலேயே மூன்று சாதிய பின்புலம் கொண்டவர்கள் மூன்று வித்தியாச பின்னணியத்தினை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டவர்கள், பனையினை தங்கள் வாழ்வின் அங்கமாக கொண்டிருகிறார்கள் என்பது எனக்கு மிகப்பெரிய செய்தி. தொல் குடிகளான ஏனாதிகள், கடற்கரை வாசிகளான மரக்காயர்கள் மற்றும் இம்மண்ணின் வாசிகளான வன்னியர் என மூன்று விதமான மக்களின் வாழ்வில் பனை மையமாக நின்றிருப்பது நாம் உற்றுநோக்கத்தக்கது. பனை இருக்கும் நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்கு, பனை ஏதோ ஒருவகையில் பயன்பட்டபடி இருக்கிறது. பனையை விலக்கி வாழ தமிழ் சமூகம் எப்போதும் நினைத்ததில்லை. இம்மூன்று சமூகங்களுக்குமிடையில் காணப்படும் பனை சார்ந்த வாழ்வியல் நுட்பங்களை எவரேனும் ஆழ்ந்து கற்று வெளிப்படுத்துவது பேருதவியாக இருக்கும்.

அன்று இரவு எனது தூக்கம் தள்ளிப்போனது. உணவு சேகரிப்பவர்களால் ஏன் உணவினைக் கொண்டு திருப்தியாக வாழ முடியவில்லை? சிறந்த உணவுகள் தேடி சேகரிக்கும் மக்களிடமிருந்து அதனை தட்டிபறிக்கும் நுட்பத்தினை யார் புகுத்தியது? இவர்களுக்குள் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டினை எப்படி எளிமையாக தீர்ப்பது? குடிப்பழக்கம் இவர்களுக்குள் ஏற்படுத்தும் தீங்கிலிருந்து இவர்களைக் காக்கப்போவது யார்? போன்ற கேள்விகள் என்னைக் குடைந்தபடி இருந்தன.

மறுநாள் அதிகாலையில் ரஜினி அவர்கள் என்னை அழைத்தார்கள். ரஜினி என்னை படகில் பழவேற்காடு பகுதியை சுற்றிக்காட்டும்படி சேவியரால் ஒழுங்கு செய்யப்பட்டவர். மற்றொருபுரம் பீட்டரும் அழைத்தார். நான் எங்கே செல்ல வேண்டும் என என்னையே கேட்டார்கள். எனக்கு எங்கே செல்ல வேண்டும் என சொல்லத் தெரியவில்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் ஏனாதிகளை நான் சந்திக்க வேண்டும் என்றேன். காலை உணவினை வாங்கிக்கொண்டு, தேவையான நீரையும் எடுத்துக்கொண்டு சென்றோம். ஒரு அரைமணி நேர பயணத்தில், அங்கிருந்த ஒரு சிறிய தீவைக் கண்டோம். அங்கு நின்றிருந்த படகுகளண்டையில் நாங்கள் சென்ற படகை ரஜினி நிறுத்தினார். நான் இறங்கியவுடன், படகை மற்றொருபுரம் எடுத்துச் சென்று நிறுத்தினார்கள்.

இறங்கிய இடத்தில் ஒரு குடும்பம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அவர்கள் ஏனாதிகள் என அங்கிருந்த பறிகள் பறை சாற்றிக்கொண்டிருந்தன. பேச்சுக்கொடுத்தபோது அவர்கள், பெந்தேகோஸ்தே சபையில் இணைந்திருப்பதாக அறிந்துகொண்டேன். இக்காலத்தில் பெந்தேகோஸ்தே சபைகள் எளியவர்களை தேடி வரும் நிகழ்வு கவனத்திற்குட்படுத்தப்படவேண்டியது ஆகும். இக்குடும்பம் மற்ற ஏனாதிகளை விட சற்றே வசதியானவர்கள் என அவர்கள் வைத்திருந்த படகும், வலைகளும் கூவி அறிவித்தன. நேற்றைய தினம் மாலையில் சென்ற கிராமத்திலும் கூட இவ்விதமான சில குடும்பங்களைப் பார்த்தேன். கிறிஸ்தவ சேவை பணிகள் இங்கு நடைபெறுவது பாராட்டுக்குரியது. அங்குள்ள கத்தோலிக்க திருச்சபை ஏனாதிகள் வீடு அமைக்க உதவி செய்கிறது என்பதாக சேவியர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் இவைகள் போதாது, இம்மக்கள் விடியலைக்காணவேண்டுமென்றால், ஒட்டுமொத்த தமிழகமும் தங்கள் கரங்களை நீட்டி இவர்களை அரவணைத்துக்கொள்ளவேண்டும். சாதி சமயம் பாராது இங்கு மக்கள் வந்து பணியாற்ற வேண்டும்.

இப்படியான எண்ணத்திற்கு ஊடே, வேறொரு எண்ணமும் தலை தூக்கியது. பொதுவாக காடுகளை பேணும்படியாக பழங்குடியினரை காட்டிலிருந்து வெளியேற்றுவது வழக்கம். அது மிகச்சரியான அணுகுமுறை இல்லாவிட்டாலும், அது போல பழவேற்காடு மண்ணிற்கு சொந்தமில்லாதவர்களை அப்பகுதியிலிருந்து விலக்கினால், ஒருவேளை இவர்கள் வாழ்வு மேம்படுமா என எண்ணிப் பார்க்கிறேன். குறைந்தபட்சம் இவர்களின் உணவிற்கான உறுதி ஏற்படும், இவர்களை உறிஞ்சி சக்கையாக வெளியேற்றும் டாஸ்மாக் போன்றவைகள் இல்லாமல் இருந்தால் அரசு வழங்கு மற்ற உதவிகளை கொண்டு சரசரவென முன்னேறும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. இறாலும் பனையும் இருக்குமிடம் வளம் மிக்கதே. அதனை சீர்படுத்தி இம்மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டியது அரசின் கடமை. மக்களின் வாழ்வு சிறக்க அரசுகள் அப்போது தான் முன்வருமோ தெரியவிலை.
அந்த தீவில் உணவு உண்ணும் முன்பதாக ரஜினியும் பீட்டரும் இணைந்து வலையை போட்டார்கள். காலை உணவை முடித்துவிட்டு வந்து வலையை எடுத்துப்பார்த்தபோது இரண்டே இருண்டு சிறிய மீன்கள் தான் சிக்கியது. அப்பகுதியில் முட்கள் வெட்டிபோட்டிருந்தார்கள். அந்த முட்களில் வலை சிக்கிவிட்டது. மிகுந்த பிரயாசப்பட்டு வலையினை முட்களிலிருந்து பிரித்து எடுத்தார்கள். மீண்டும் ஒரு தீவுக்கு சென்று அங்கே கிடைத்த முட் சுள்ளிகளை அடுக்கி மணலுக்குள் மீனை போட்டு சுட்டு கொடுத்தார்கள். தனித்துவமான அந்த ஆதி சுவையினை அனுபவித்து ரசித்தேன். அந்த தீவு வெண்மணலால் சூழப்பட்டு அழகுற காட்சியளித்தது.

குமரி மாவட்டத்தில் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ரூஃபியோ என்ற சிறுவனின் மாமி பழவேற் காட்டில் தான் தங்கியிருக்கிறார்கள். மதியம் அவர்களை சந்தித்து உணவுண்டு திரும்பினேன். சென்னை செல்லும் முன்பு, ஓலைப் பெட்டிகளை வாங்க வேண்டூம். பீட்டர் என்னை அழைத்துக்கொண்டு வேறு ஒரு கிராமம் செல்ல வெண்டும் என புறப்பட்டபோது அங்கே காவல்துறை வாகனங்களை பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். தமிழகத்தில், வாகன பரிசோதனை என்பதே பணம் பறிக்கும் ஒரு வழிமுறை தான். அனைத்து வாகன ஓட்டிகளிடமும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து வசூல் நடத்துவதே இவ்வகை நேரங்களில் நடப்பது. திரும்பிவிடுவது நல்லது எனக் கூறி அங்கிருந்து பழவேற்காடு திரும்பினோம்.

வரும் வழியில் ஒரு மிகப்பெரிய சானல் வெட்டப்பட்டிருந்தது, அதில் பத்து பெண்கள் தங்கள் தலைகளில் பறியினைப் போட்டபடி ஒரே வரிசையில் நின்று இறால் பிடித்துக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட தேயிலை பறிக்கும் பெண்கள் தங்கள் முதுகில் இட்டிருப்பதுபோன்ற அமைப்பு. பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நான் புகைப்படம் எடுக்கத்துவங்கியபோது ஏன் எதற்காக என்று பல்வேறு கேள்விகள். நான் எனது தொப்பியைக் காட்டினேன். எனது பயணம் குறித்து சொன்னேன். மிக வேடிக்கையாக என்னோடு பேசிக்கொன்டிருந்தார்கள். ஆளாளுக்கு என்னைக்குறித்து விசாரித்தார்கள். எனது மனைவி குறித்து, பிள்ளைகள் குறித்து, வேலை குறித்து என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள். நான் அவர்களிடம், அவர்கள் கணவர்களின் தொழிலைக் குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் “வீட்டுக்காரங்க ஒழுங்கா இருந்தா நாங்க எதுக்கு இந்த வெயில்ல இங்கே வந்து கஷ்டப்படுகிறோம்” என்றனர். இவர்கள் கொண்டு செல்லும் பணத்தில் தான் அவர்களின் குடி களியாட்டங்கள் இருக்கின்றன. அவர்களின் சமூகம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள கிராமத்தில் தான் அவர்கள் வசித்துவருவதாக அறிந்துகொண்டேன்.

பீட்டருக்கு நேரம் ஆவதுபோல தோன்றியது. அப்போது அங்கிருந்த ஒரு பெண்மணி போட்டோ எல்லாம் எடுக்குறீங்க எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றார்கள். என்ன வேணும் கேளுங்க உடனே செய்கிறேன் என்றேன். இவ்வளவு தூரம் கேட்டியேப்பா அதுவே போதும் என்று அவர்கள் முடித்துக்கொண்டார்கள். வேறு ஒருவர், தண்ணியிலேயே நிற்கிறோம், ஒரு டீ தண்ணி வாங்கிதரக்கூடாதா என்றார்கள். வாங்கலாமே என்றேன். மீண்டும் ஒரு 5 கிலோ மீட்டர் டீ கடைக்கு செல்லவேண்டும். அங்கே போய், டீ மற்றும் பிஸ்கட் எல்லாம் வாங்கிகொண்டு வந்தபோது அனைவரும் இறால் பிடித்துக்கொண்டு திரும்பும் வேளை ஆகிவிட்டது. தண்ணீரில் நின்றபடியே டீ வாங்கி குடித்துவிட்டு என்னை வாழ்த்தி அனுப்பினார்கள்.
கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. (1 யோவான் 4:21 திருவிவிலியம் ) என்ற வாசகம் என்னுள் வந்து சென்றது.
மீண்டும் நாங்கள் பழவேற்காடு வந்தபோது ஓலை பறிகள் தயாராக இருந்தது. அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி பேருந்தில் பயணித்தேன்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, மும்பை
malargodson@gmail.com / 9080250653
மறுமொழியொன்றை இடுங்கள்