கள்ளூறும் காலம்
சுமன் மற்றும் பீட்டர் இருவரும் என்னை பேருந்தில் வழியனுப்ப வந்தார்கள். இவர்கள் இருவரின் உதவியுமின்றி என்னால் கண்டிப்பாக பழவேற்காடு குறித்து முழுதுணர்ந்திருக்க இயலாது. அவர்களிடம் நன்றி கூறி இரண்டு பறிகளை எடுத்துக்கொண்டு சென்னை புறப்பட்டேன்.
சென்னை வந்தால் எனக்கு சொல்ல வேண்டும் என விஸ்வா வேதா சொல்லியிருந்தான். சென்னையில் அப்படி அனேகர் உண்டு. எனது பஞ்சவர்ணம் அத்தையின் மகள் செல்வி அக்கா மற்றும் பேராசிரியர் இஸ்பா ஆகியோருக்கு தெரியாமல் சென்னை வந்து செல்வது இயல்வதல்ல. அவர்களை சந்திக்காமல் ஊர் திரும்பினால் எப்படியாவது மோப்பம் பிடித்துவிடுவார்கள். பிற்பாடு நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டி வரும். அப்படி இருந்தும் சென்னை ஒவ்வொரு முறை வரும்பொதும் எவராவது என்னை கொத்திக்கொண்டு போய்விடுவதும் உண்டு. அலுவலக விஷயமாக வந்தால் தங்குமிடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். அன்று இரவு ஆவடியிலுள்ள முனைவர் இஸ்பா அவர்கள் வீட்டில் தங்கினேன். காலை 6.30 மணிக்கு விஸ்வா வந்து என்னை அழைத்துச் சென்றான்.
விஸ்வா பனை சார்ந்து சென்னையில் நிகழ்த்திய முன்னெடுப்புகள் முக்கியமானவை. பனை விதைகளை சேகரித்து கடற்கரைகளில் நடுவதும், ஏரி குளங்களில் நடுவதுமாக இருக்கையில் எனது தொடர்புக்கு வந்தவர். நோய் தொற்று இருக்கையில், விழுப்புரத்திலுள்ள கஞ்சனூர் சென்று மாட்டிக்கொண்டவர். அங்கே உள்ள பனையேறிகளுடன் மிகவும் நெருங்கிவிட்டார். ஏன் பனையேறவும் கூட கற்றுக்கொண்டார். அங்குள்ளவர்களை ஒன்றுதிரட்டும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மென்பொருள் துறையில் பணியாற்றுகிறவர்கள் அனேகர் பனை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பியிருப்பது சிறப்பு என்றாலும், பனை விதை சேகரிப்பு, பனை ஏறுதல் போன்றவைகளில் ஈடுபாடுகொண்டோர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையே உள்ளது.
நாங்கள் செல்லும் வழியில் பல்வேறு பனை மரங்களை பார்த்து நிதானமாக சென்றுகொண்டிருந்தோம். சென்னை எல்லையில் சில மலைக்குன்றுகள் இருந்தன. அவற்றின் உச்சியில் ஒரே ஒரு பனை மரம் தனியாக நின்றதை விஸ்வா காண்பித்தார். வழியில் பதனீர் வாங்கி குடித்தோம், சர்க்கரைத்தண்ணி தான். எப்போதும் சாலையோரத்தில் பதனீர் வாங்கிக்குடிக்காதீர்கள் என்பதுவே அனைவருக்கும் நன் சொல்லும் அறிவுரை. பனை ஓலைகளை அலங்காரமாக வைத்து பனையோலைப்பெட்டிக்குள் பானையில் வைத்து விற்கும் திரவத்திற்கும் பதனீருக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்காது. பனை பொருட்கள் சாலைகளுக்கு வரத் தேவையில்லாத அளவிற்கு அது உற்பத்தியாகும் இடத்திலேய மக்கள் வாங்கிச் செல்லுகின்றனர். ஆகவே நம்மை சாலையில் சந்திப்பவைகள் அனைத்துமே போலிகள் தாம்.
இதனை நான் சொன்னபோது, ஒரு நண்பர் கொதித்துப்போய் சொன்னார், “பன்னாட்டு நிறுவனங்களின் திருட்டுத்தனங்களைக் கேள்விக்குட்படுத்தாமல், அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை தேடும் இவ்வெளிய மக்களை ஏன் இப்படி பழிக்கிறீர்கள்” என்றார். மெய் தான், ஆனால், நம்மைத் தேடி வரும் போலி பனை பொருட்களால் உழைத்து ஓடாய்ப் போகும் பனையேறிகளின் வாழ்வு குறித்தும் பேசவேண்டி இருக்கிறதே? பனையேறிகள் மீது நான் பெருத்த மரியாதை கொண்டுள்ளேன். அவர்கள் அனைவருமே, கடும் உழைப்பை செலுத்தி நேர்மையான வாழ்வை கடைபிடிப்பவர்கள் தாம். ஆனால் இந்த பொல்லாத காலம் அவர்களையும் திசை மாற்றிவிடக்கூடாதே என்கிற படபடப்பு எனக்கு உண்டு. பதனீரை இலவசமாக கொடுத்தவர்கள், இன்று அவைகளை விற்பதற்கு காரணம், காலம் அவர்களை அச்சூழலுக்குள் தள்ளியிருக்கிறது என்பது தான். அவர்களின் வாழ்வில் எவரும் விஷத்தை விதைத்துவிடக்கூடாதே என்கின்ற ஆதங்கத்தில் தான் போலிகளை கைகாட்டவேண்டியிருக்கிறது.
ஒருமுறை பனையேறிகளை நன்கு அறிந்த ஒருவர், சற்று பழைய மனிதர், நம்ம ஆட்களிடமும் தவறு உண்டு, தண்ணீரை பதனீரில் கலந்துவிடுவார்கள், அதற்குள்ளிருந்து தவளைக் குதித்துப்போகும்போது இவர்களின் வண்டவாளம் எல்லாம் வெளியாகிவிடுகிறதே என்றார். எனது 25 வருட அனுபவத்தில் இந்த குற்றச்சாட்டை நான் முதன் முறையாக கேட்கிறேன். அந்த பெரியவரின் கூற்று, ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வெகு பிரபலமாக இருந்த பால்காரர்கள் குறித்த நகைச்சுவை தொடர்ச்சி என்றே என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. பால்காரர்கள் தண்ணீர் சேர்ப்பார்கள் என்று ஒரு காலத்தில் பத்திரிகைகள் விதம் விதமாக சிரிப்பு துணுக்குகளைப் போட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் பாக்கெட் பால் வந்தபோது, பாலே இல்லாமல் டிடர்ஜெண்ட் சேர்த்து கொடுக்கப்பட்டபோது அது குறித்து பேச்சு மூச்சில்லை. சிலர் சந்தேகிப்பது போல, நமது பாரம்பரியத்தை ஊடகங்கள் தான் முதல் ஆளாக நின்று அழித்திருக்கின்றன. சரி, தவளை வந்தது உண்மையா இல்லையா என கேட்கலாம். பனை மரத்தில் வாழும் தவளைகள் தான் இருக்கின்றனவே? அவைகள் ஏன் உள்ளே குதித்திருக்கக்கூடாது? ஆம் பனை மரத்தில் தவளை இருக்கும் என்ற தகவலும் பொது மக்களுக்கு தெரியாது, பனையேறிகள் மட்டுமே அறிந்த உண்மை அது. ஆக இவர்களின் அறியாமையால் பனையேறிகளை பழியேற்கவைத்துவிடுகிறார்களே?

திண்டிவனத்தை நெருங்கியபோது விஸ்வா என்னிடம், “அண்ணா இங்கே தான் இந்த வருடம் பனை விதைகளை சேகரித்தோம்” என்றான். பனை விதை சேகரிப்பு என்பது பனை பாதுகாப்பில் ஒரு முக்கிய செயல்பாடு. பனை சார்ந்த சூழியலை அவதானிக்கும் செயல்பாடு இது என்று நான் கூறுவேன். பனையேறிகளின் குடும்பத்தினரைத் தவிர, பனை மரத்தை அணுகி அறிந்தவர்கள் பனை விதை சேகரிப்பாளர்கள் தான். பழங்கள் விழும் காலம், சேகரிக்கும் திறன், பாதுகாத்து வைக்கும் நுட்பம், புதர்களுள் கிடப்பவைகளை கண்டுபிடிப்பது, பனங்காடுகளுக்குள் வசிக்கும் உயிரினங்கள் என அது ஒரு மாபெரும் பட்டறிவு பாசரை. இன்று தமிழகத்தில் பனை விதைப்பு என்பது ஒரு கவர்ச்சிகர செயல்பாடு ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், பனை விதைகள் சேகரிப்பதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பனை விதைகள் சேகரிக்காதவர்கள் கூடி, நாங்கள் தான் பனை நட்டோம் என்று ஊடகங்களுக்கு முகத்தைக் காட்டும் அசிங்கங்களும் இக்காலங்களில் அரங்கேறத் துவங்கின. ஆகவே, பனை விதைகளை சேகரிக்காதவர்கள் விதைப்பதில் அர்த்தமில்லை என்று நான் பகிரங்கமாகவே அறிவித்தேன்.
பனை விதைகள் என்னும் வார்த்தை 2016 ஆண்டிற்கு பிறகே புழக்கத்தில் வந்தது. பனங் கொட்டை என்ற வார்த்தையே மரபானது. தமிழகமெங்கும் பாரம்பரியமாக கொட்டைகளை சேகரித்து, அவைகளை கிழங்குகளுக்காக போடும் தொழில் செய்பவர்கள் அனேகர் உண்டு. அப்படிப்பட்ட முதியவர்கள் தான் பெரும்பாலும், பனங்கிழங்குகளை வாங்கி பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் விற்பனை செய்வார்கள். இவ்விதமான மனிதர்களின் வாழ்வாதாரம் குறித்து எவருமே சிந்திப்பதில்லை. பனை விதைப்பு குறித்து எப்போதும் நான் சொல்லும் கருத்துக்கள் உண்டு. கூடுமானவரை நமது ஊருக்கு அருகாமையிலேயே பனை விதைகளை சேகரிக்க வேண்டும். அப்படி சேகரிக்கும்போது, வழக்கமாக சேகரிக்கும் நபர்கள் ஊருக்குள் இருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்ச தொகையினை அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு ஊரில் கிடைக்கும் பனை விதைகளில் இருபது சதவிகிதம், வெளியூருக்கு அனுப்பலாம். ஆனால் 80 சதவிகிதம், உணவாக மாற வேண்டும். தேவையான அளவிற்கு வருடம் தோறும் விதைக்கப்பட வேண்டும். இன்று, பல ஊர்களில் பனை விதை நடவோ, உணவாக பாவிக்கப்படுவதோ இல்லை. நேரடியாக பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். பனை விதைகள் ஒரு நுகர் பொருள் என்ற நிலையினை அமைத்தாலே பனை மரங்கள் வைத்திருப்போருக்கு அதனை பாதுகாக்க தோன்றும். நாமாக களமிறங்கி பனை விதைகளைப் பொறுக்கவில்லையென்று சொன்னால், பனை விதைகளை சேகரித்து கொடுப்பவர்களுக்கு அடிப்படை விலை கொடுப்பது அவசியமானதும் அர்த்தம் பொதிந்ததுமாகும்.
திண்டிவனத்தின் பனங்காடுகள் என்னளவில் மிக முக்கியமானவைகள். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நெருக்கமாகவும், நெடுந்தூரம் பரவியிருப்பதையும் காணலாம். எனக்கு அந்த பகுதிக்கு செல்லவேண்டும் என பல முறை எண்ணமிருந்தும் சாத்தியப்படவில்லை. இம்முறை விஸ்வா தனது பைக்கில் என்னை அழைத்துக்கொண்டு சென்றான். அது ஒரு ஏரியின் கரைப் பகுதி. கரை ஓரப்பகுதி சுமார் 30 மீட்டர் அகலம் இருக்கும். அதற்குள் வரிசையாக 10 பனை மரங்கள் நெருங்கியபடி நிற்கும். அந்த பகுதியில் தானே ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருக்கிறதைப் பார்க்கலாம். தமிழகத்தில் இதுபோல நெருக்கமாக இருக்கும் பனங்காடுகள் வேறு பல இடங்களிலும் இருக்கின்றன. வரிசையாக ஒற்றைமரங்கள் சுற்றி இருக்கும் பகுதிகளும் இருக்கின்றன. இந்த பனை மரங்கள் யாவும், அருகிலுள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்டது என விஸ்வா சொல்லக்கேட்டேன். பருவ காலத்தில் வாரத்திற்கு ஒருமுறைச் சென்றால், ஒரே நாளில் 10,000 விதைகள் பொறுக்க இயலும். திண்டிவனம் பகுதியில் காணப்படும் இந்த பனங்காடு ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு மாபெரும் பனை சுரங்கம்.
திண்டிவனம் என்பதற்கான பெயர் காரணம் குறித்து தேடும்பொது திந்திரி வனம் என்ற பெயர் மருவியிருப்பது தெரியவந்தது. திந்திரி என்றால் புளிய மரம் என்றும், வனம் என்பது மரங்கள் நெருக்கமாக இருக்கும் காட்டுப்பகுதி என்பதும் நாம் அறிந்ததே. புளியமரங்களும் பனை மரங்களும் பிறப்பிடம் சார்ந்து நெருங்கிய உறவினர்கள் தாம். இரண்டிற்கும் தாயகம் ஆப்பிரிக்கா என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் அதிக பனை மரங்கள் நடப்படுவதை அறிந்து மனவேதனைக்குள்ளான ஒரு “சமூக ஆர்வலர்”, பனை ஒரு வந்தேறி மரம் என குறிப்பிட்டார். பனை இங்கு வந்தேறியிருக்காவிட்டால், தமிழகம் கண்ட பஞ்சத்தில், பூர்வகுடிகள் என சொல்லப்படும் எவரும் எஞ்சியிருப்பார்களா என்பது சந்தேகமே. புளி நமது சமையலறையின் முக்கிய சுவைகூட்டியாக இருப்பதுடன், விறகாகவும் மருந்தாகவும் கூட பயனளித்திருக்கிறது. பஞ்சகால உணவாக புளியங்கொட்டைகள் இருந்திருக்கிறன.
ஏரியில் தண்ணிர் இல்லை. எங்கள் இரு சக்கர வாகனம் ஏரிக்குள் தான் நிறுத்தப்பட்டிருந்தது. சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். நான் புகைப்படங்களை எடுப்பதை விஸ்வா புகைப்படம் எடுத்தார். அது ஒரு சிறந்த புகைப்படமாக மாறிவிட்டது. மறுநாளில்தானே மும்பையிலிருந்து துருவா என்ற சூழியல் செயல்பாட்டாளர், எனது புகைப்படத்தை வரைந்து அனுப்பியிருந்தார். “பனைகள் சூழ பனை மனிதன்” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அப்படத்தை பார்க்கையில் பனையால் அமைத்த கோட்டைக்குள் நான் நிற்பது போன்ற ஒரு பிரம்மிப்பு ஏற்பட்டது.
வழியில் தானே காலை உணவை உண்டோம். அந்த நேரத்தில் விஸ்வாவின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே, தனது அலுவலக வேலையினை சிறிது நேரம் அந்த உணவகத்திலேயே தொடர்ந்தார். இன்னும் வந்து சேரவில்லையா என்று விழுப்புரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். மீண்டும் பயணிக்கையில், சாலை ஓரத்தில் வரிசையாக பனை மரங்கள் நிற்பதைக் கண்டு அந்தவழியாக வண்டியை திருப்பச் சொன்னேன். சில நேரங்களில், வேறு திசையிலிருந்து எடுக்கும் புகைப்படங்கள் சிறப்பானதாக இருக்கலாம் என்று நினைத்து தான் அப்படி சொன்னேன். நாங்கள் உள்நுழைந்து சென்ற பாதை முடிவடைத்தது. தூரத்தில் பனை மரங்களும் ஒரு பனையோலைக் குடிசையும் தென்பட்டது. போவதற்கு பாதை இல்லை. விஸ்வா காய்ந்து கிடக்கும் தாளடிகள் கருகின வயலின் ஊடாக அந்த குடிசை நோக்கி போனபோது, அது ஒரு சிறு கோவில் என புரிந்தது. அங்கிருந்து திரும்பி பார்த்தபோது கோவிலுக்கு எதிரில் ஒரு மிக அகன்ற தெரு முழுக்க பனை ஓலைகளால் கட்டப்பட்ட வீடுகள் இருமருங்கிலும் இருந்தன.
தெருவில் எவருமே இல்லை. வீடுகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தோம். மண் சுவர் மற்றும் ஓலை குடிசைகள் தான். சில வீடுகள் முழுவதுமே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்தது. பாம்பை போல் ஊர்ந்து சென்றால் மட்டுமே உள்ளே செல்ல இயலும்போல் வாசலுக்கு முன்பு கூரை மிகவும் தாழ்வாக இறங்கியிருந்தது. எங்கள் சந்தடி கேட்டு இரண்டு சிறுமிகள் வெளியே வந்தார்கள். மெலிந்த உருவம் அழகிய கரிய நிறமும் அகன்ற கண்களும் கொண்டவர்கள். படிக்கிறீர்களா என்று கேட்டபோது ஒரு பெண் 5ஆம் வகுப்போடு நிறுத்தி விட்டதாகவும், மற்றொறு பெண் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினாள். அங்கிருந்தே ஒரு ஓலை இலக்கை உருவி அவர்கள் படத்தை செய்து கொடுத்தேன். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் இவர்கள் இருளர் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் என்கிற புரிதல் எனக்கு கிடைத்தது. பனை ஓலைகளோடு புழங்கும் இவர்களுக்கு பனை ஓலை பயிற்சி ஒன்று வழங்கினால் என்ன என விஸ்வா கேட்டான். பனையேறி பாண்டியனைக்கொண்டு இங்கு ஒரு பயிற்சி ஒழுங்கு செய்ய முடியும் என்றும் சொன்னான்.

பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் மேற்கொண்டு என்ன படிக்க உனக்கு விருப்பம் எனக் கேட்டோம். மருத்துவர் ஆக விருப்பம் என்றாள். ஆடிப்போய்விட்டேன். எத்துணை பெரும் கனவுகள் இச்சிறிய ஓலைக் இக்குடிசைக்குள் இருக்கின்றன? கல்வி வியாபாரமயமாகிப்போன சூழலில் இக்கனவுகள் சாத்தியமா? இக்குழந்தைகளுக்கு வழிகாட்டவும், இவர்களுக்கு உதவி செய்யவும் நன்னெறிப்படுத்தவும் யாரேனும் இருக்கிறார்களா? இத்தகைய கனவுகளை தேடி கண்டடைந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் மக்கள் இருக்கிறார்களா? இருக்கலாம். ஆனால் கிராமங்களையும் தாண்டி இவ்வித குடிசைக்குள் இருப்பவர்களை அவர்களால் இனம் காண முடியுமா? முடியும் என்றால் மிகவும் நல்லது. ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த குழந்தைக்காக உள்ளூற இறை மன்றாட்டை ஏறெடுத்தேன்.
கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம். கஞ்சனூர் சென்றபோது கிராமத்து சிறுவர் சிறுமியர் அனைவரும், நீல நிற பனியன் போட்டுக்கொண்டு தோட்டத்திலிருந்து கும்பலாக வந்துகொண்டிருந்தார்கள். அனைவருக்கும் மோர் கொடுக்கப்பட்டது. பாண்டியன் வந்தார். உணவு இனிமேல் தான் தயாரிக்க வேண்டும் என மணிமேகலை கூறினார்கள். சாப்பாடு ஆயத்தமாகும் நேரத்திற்குள் விஸ்வா அலுவலக வேலைக்குள் மீண்டும் மூழ்கினார். வெகு சீக்கரமாகவே, சாதமும் மாட்டுக்கறியும் ஆயத்தமானது. மணிமேகலையின் சமையல், தனித்துவமானது. எதைச் செய்தாலும் குறைவில்லா சுவையுடனிருக்கும். பாண்டியன் வீட்டில் உள்ள சமையலில் பெரும்பகுதி அவர்கள் தோட்டத்தில் விளையும் அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டே அமையுமானபடியால், ஆரோக்கியத்திற்கும் பஞ்சமில்லா நஞ்சில்லா உணவுகளே அங்கே எப்போதும் கிடைக்கும்.
உணவு அருந்தியபின், கிராமத்தினருடன் ஒரு கலந்துரையாடல் செய்யலாமா என்று கேட்டேன். “செய்யலாங்க ஐயா” என்றார் பாண்டியன். பாண்டியன் என்மீது பெரும் மரியாதை வைத்திருக்கும் பனையேறி. 2017 ஆம் ஆண்டு தான் தனது முன்னோர்கள் வழியில் பனை தொழிலுக்குள் வந்தவர். முதல் ஆண்டிலேயே, பனங் கருப்பட்டி தயாரித்து விவசாயத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை தாண்டி வந்தவர். பனை கண்டிப்பாக கைகொடுக்கும் ஒரு மரம் என உள்ளூற நம்புகின்றவர். அதனை தன் வாழ்வில் அனுபவிப்பவர். பனை குறித்து வெற்று குரல்கள் தமிழகமெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தபோது தனது வாழ்வை பனையோடு இணைத்து ஆழமான கருத்துக்களை முன்வைப்பவர். பனை வாழ்வியலை மையமாக கொண்டவர். எனது பல கேள்விகளுக்கு நான் விடை தேடி நிற்கும் பனையேறி. அவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இளையவள் கரிஷ்மா. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். என்னை காட்சன் தாத்தா என்றே அழைப்பாள். நமக்கு வயசாகிக்கொண்டு போவது குழந்தைகளுக்கு தான் முதலில் தெரிகிறது. கரிஷ்மா நான் பார்த்த முதல் பனையேறும் சிறுமி. அனாயாசமாக ஏறுகிறாள். உற்சாகம் ததும்பும் இரண்டு குழந்தைகள் என பாண்டியன் வீடே கலகலப்பாக தான் இருக்கும். மூத்த மகள் வீனுச் சிறப்பாக சிலம்பம் விளையாடுகிறாள்.
பாண்டியனிடம் எனது தொப்பியைக் காட்டி, இதனை நார் கொண்டு பொத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். நார் உரித்து, நீரில் போட்டுவிட்டு இரவு நாம் இதனை சீர் செய்யலாம் என்று கூறினார். வேறு வேலை இல்லை. இரவு ஏழு மாணிக்கு தான் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தோம். ஆகவே நான் விஸ்வாவின் பைக்கை எடுத்துக்கொண்டு பண்ருட்டி சென்று பஞ்சவர்ணம் ஐயா அவர்களை சந்திக்கலாம் என்று புறப்பட்டேன். தெரியாத சாலை தான் ஆனாலும், எப்படியோ போய் சேர்ந்துவிட்டேன். பஞ்சவர்ண்ம் அவர்கள் நடமாடும் தாவரக் களஞ்சியம் எனப் பெயர் பெற்றவர்.
என்மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கும் பெரியவர். இந்தியாவிலேயே முதல் கணினி நிர்வாகம் கொண்ட பஞ்சாயத்தாக பண்ருட்டி பஞ்சாயத்தை மாற்றிய பெருமை இவரையே சேரும். பல சிறு பயணங்கள் இணைந்தே செய்திருக்கிறோம். பனை சார்ந்த கருத்துக்களை மணிக்கணக்காக பகிர்ந்திருக்கிறோம். அவரோடு இருந்த ஒவ்வொரு கணமும் எனது வயதை ஒத்த தோழனுடன் பழகுவதைப்போன்ற இனிமையான தருணங்களே. அவரது பனைமரம் என்ற புத்தகம் தான் எங்களை ஒன்றிணைத்தது. தமிழில், பனை சார்த்து இத்தனை விரிவான தொகுப்பு பனைக்கு இருந்ததில்லை என்பது தான் உண்மை. அதனைத் தொடர்ந்து பனை பாடும் படல் என்ற சிறிய புத்தகத்தையும் அவரது பஞ்சவர்ணம் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.
அவரை எனது பயணத்தில் பார்த்து ஆசி பெற்று, பனங்கள்ளிற்கு ஆதரவு பெறவுமே சென்றேன். அவர் தமிழக அரசியல் சூழ்நிலைகளை மிகச்செரியாக உள்வாங்கியிருப்பவர். “கள்ளுக்கெல்லாம் அனுமதி தரமாட்டார்கள். கொடுத்தால் நல்லதுதான் என்றார்”. குறைவாகவே அன்று பேசிக்கொண்டோம். மிக அதிக பயணங்களை மேற்கொள்பவர், நண்பர்கள் சூழவே இருப்பவர், நோயச்சத்தால், வீட்டை விட்டு வெளியே வர இயலாதபடி இருந்தார். நான் சென்று பார்ப்பதில் உள்ள அபத்தத்தை உணர்ந்திருந்தேன். ஆனால் நான் அவரை பார்க்காமல் வந்திருப்பேனென்றால் அது சரியாயிராது. சுமார் நூறு கிலோமீட்டர் மின்னலென போய் வந்தேன்.

நான் பாண்டியன் வீட்டிற்கு வந்தபோது அவர் ஊரிலுள்ள பனையேறிகள் அனைவருக்கும் தகவல் அனுப்பியிருந்தார். அவர்கள் வருமுன்பதாக நாம் பனம் பழங்களை அறுத்து வேக வைப்போம் என்று கூறி ஒரு குலையை முழுவதுமாக தனது அரிவாளால் அறுத்து தள்ளினார். செங்காய் பருவத்திலான அவ்வித பனங்காய்களை அதுவரை நான் சுவைத்ததில்லை. பனம் பழங்கள் சுவைத்திருந்தாலும், இந்த அனுபவம் எனக்கு புதிது. விஸ்வா பணியின் நிமித்தமாக கலந்துகொள்ள இயலாது என கூறினான். சுமார் 30 பனையேறிகள் அன்று மாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். எழரை மணிக்கு ஒருவாறு நிகழ்வைத் துவங்கினோம். சிமென்ட் சாலையில் பனையேறிகளுக்கு முன்பு நான் தரையில் அமர்த்துகொண்டேன். கஞ்சனூர் என்பது நான் இறங்கும் பேருந்து நிறுத்தம் தான். பூரிகுடிசை என்பது தான் பனையேறிகளை நான் சந்தித்த இடம். அங்கிருப்பவர்களில் ஒரு சிலரை நான் அறிவேன். ஆனாலும் பலரும் புது முகங்களாக இருந்தார்கள். பனையேறிகள் மத்தியில் இருக்கும்போது எனக்கு ஆலய ஆரதனையில் இருப்பது போன்ற உணர்வே எழுத்தது. பாண்டியன் என்னைக்குறித்து ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். நான் எனது மிகச்சிறிய உரையத் துவங்கினேன்.

நான் வெகுவாக மதிக்கும் பனையேறிகள் மத்தியில் நிற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பனை சார்ந்த தொழில் அனைத்திற்கும் பனையேறிகளே அச்சாணிகள். பனையேறிகள் இல்லாமல் பனைத் தொழில் என்பது இல்லை. எனது வாழ்வில் எப்போதும் பனையேறிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அதனை அரசு கருத்தில் கொண்டதாக சரித்திரம் இல்லை. மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை 1985 ஆம் ஆண்டு பதினைந்தாயிரம் தொழிலாளர்களை இணைத்து ஒரு பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தது. அரசின் காதில் எதுவுமே விழவில்லை. ஆகவே அரசு என்பது, தெரிந்தெடுக்கப்பட்ட கட்சியின் நிலைப்பாடுகளையே முன்னிறுத்தும். நமக்கு இப்போது சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறதானபடியால், நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு நாம் வக்களிப்பதுவே நமது கோரிக்கைகளை வலுப்பெறச் செய்யும். தமிழகத்தில் கள்ளிற்கு ஆதரவான கட்சிகள் என ஏதும் இல்லை. அதிலும், கள் என்கிற வார்த்தை சங்க காலம் முதல் இன்றுவரை நம்மிடம் மருவாமல் வந்து சேர்ந்திருக்கும் ஒரு பொருள். என்றாலும் அதனை ஆதரிக்கின்றோம் என்று சொல்லி பனம் பால் தென்னம் பால் என்று சொல்பவர்களையும் சேர்த்தே கேள்வி கேட்கிறோம். ஓளவை என்னும் மூதாட்டி, கள் குடித்து போதை தலைகேறி “அறம் செய்ய விரும்பு” என்று ஆத்திச்சூடியினை கூறியிருப்பாளாகில், இன்றும் அவ்வித பானத்தை நாம் ஏற்றுக்கொள்ளுவதில் பிழையில்லை.

கள் என்பது பலவகைகளில் ஒரு அடிப்படை விசையினை கொண்டிருக்கும் ஒரு உணவுப்பொருள். பனை மரம், பனையேறுவோர், நுகர்வோர், பனை சார்ந்த இதர பொருட்களைச் செய்வோர் என கள் ஒரு விரிந்த பின்னணியம் கொண்டிருக்கிறது. பனையும் பனையேரிகளும் தான் கள்ளிற்கு அடிப்படை. கள் வேண்டாம் என்பது பனையையும் பனை சார்ந்து வாழும் தொல்குடிகளையும் அச்சுறுத்தும் செயலே அன்றி வேறில்லை. கள் இறக்கும் தொழில் அல்லது மரபு அறுபடாத ஒரு சங்கிலியாக பன்னெடுங்காலமாக கள் நமது வாழ்விலும் மரபிலும் வந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகும். இதனைக் குறித்து புரிதலின்மையால் அல்லது வஞ்சத்துடன் எவரும் நமது வாழ்வாதாரத்திற்கு எதிராக நிற்பார்களேயானால் அவர்களை கேள்வியேழுப்புவது நமது கடமையாகிறது.
ஆகவே நமக்கு என்ன தேவை என்பதை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நமது தேவைகளை நம்மிடம் ஓட்டு கேட்க வருகிறவர்களிடம் சொல்ல வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்திற்கு உறுதி தருகிறவர்களுக்கே நாங்கள் ஓட்டளிப்போம் என ஒரு குரலாய் ஒலிக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். இன்று நாம் யாரையும் கொள்ளையடிக்கவில்லை ஆனால், உழைக்கிற நம்மை காவல்துறை கைது செய்கிறது. நாம் உழைத்து சேமிக்கிற பணத்தை நம்மை மிரட்டி லஞ்சமாக பெற்றுக்கொள்ளுகிறார்கள். நமது தொழிற் கருவிகளான பானைகளை அனாயாசமாக உடைக்கிறார்கள், நாம் ஏறிக்கொண்டிருக்கிற பனை மரங்களிலிருந்து பாளைகளை வெட்டித்தாள்ளுகிறார்கள், நம்மை கைது செய்து நமது வேலைகளை செய்ய விடாமல் இடைஞ்சல் செய்கிறார்கள். நம்மை அடித்து குற்றவாளி போல, நடத்துகிறார்கள். இவைகளை கேட்க இன்று நாதியில்லை. ஆகவே, வருகிற தேர்தலில், நமது ஊருக்குள் வருகிறவர்களுக்கு என நாம் ஒரு பத்து அம்ச கோரிக்கைகளை வைப்போம். அந்த கோரிக்கைகளை நீங்களே வடிவமைக்க வேண்டுகிறேன். உங்கள் தேவைகளை நீங்கள் முன்வைக்கும்பொது, அதற்கான தீர்வை ஏதேனும் ஒரு கட்சி முன்மொழியும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினேன்.

பூரிகுடிசை மக்கள் உண்மையிலேயே குடிசை வாழ் மக்கள். பனை மரத்தினையும் தங்கள் உழைப்பினையும் மட்டுமே நம்பி வாழும் எளிய மக்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட இங்கு வந்து அனைவரையும் கருப்பட்டி காய்ச்ச சொல்லி அறிவுறுத்தியிருந்தேன். ஏனென்றால், கள்ளிறக்கும் உரிமை கிடைக்காது என்ற நிதர்சன உண்மையால் மட்டும் தான். ஆனால், இந்த சட்டமன்ற தேர்தல் ஒரு வாய்ப்பு. நாம் கேட்டு பார்க்கலாம். ஓட்டிற்காக எதுவும் செய்வார்கள் என்ற நிலையில் சற்றேனும் பொருட்படுத்துவார்கள் என்றே எண்ணி கூறினேன். இன்று அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் சூழலில், கள்ளிற்கான அனுமதி என்பதைக் குறித்த மவுனம் பனைத் தொழிலாளர்கள் எப்போதும் வஞ்சிக்கப்படும் சூழல் இருந்துகொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
அந்த கூடுகை அம்மக்களை ஒரு முகப்படுத்தியது ஒரு முக்கியமான நிகழ்வு. தேர்தலை ஒட்டி இதுவரை எவரும் கள் அரசியல் முன்னெடுபுகளைச் செய்ததில்லை. மீண்டும் அங்கே நான் வரும்போது நமது பத்து அம்ச கோரிக்கைகளில் என்ன இருக்கலாம் என தீர்மானிக்கலாம் எனக் கூறினேன். அதற்கு முன்னதாக அவைகள் குறித்து நீங்களே கூடி விவாதிப்பது நல்லது எனக் கூறினேன். எனது பயணத்தில் பூரிகுடிசை மக்கள் மிக முக்கியமானவர்கள். இன்றுவரை பனை தொழிலினை கிராமமாக முன்னெடுப்பவர்கள். இக்கிராமத்தினை ஒரு பனை சுற்றுலா கிராமமாக மாற்றவேண்டும் என்பது எனது கனவு. இக்கிராமத்தினரோடு எனக்கிருக்கும் தொடர்பு பாண்டியன் அவர்களால் உருவானது. ஆகவே அவ்வப்பொது என்ன செய்யலாம் என திட்டமிட்டு சில விஷயங்களை முன்னெடுப்போம். நான் மும்பை போன பிற்பாடு கூட, பனையோடு விளையாடு என்ற ஒரு நிகழ்வினை நடத்தி, சுற்றியிருக்கும் கிராமத்துக் குழந்தைகள் பங்கேற்க வழிவகை செய்தோம். என்ன தான் செய்தாலும், கள் இறக்குவது தடை என கொள்ளப்பட்டால், இவர்கள் வாழ்வில் மட்டுமல்ல தமிழக பனையேறிகள் வாழ்வில் பெரும் சிக்கலே நீடிக்கும் என்பது தான் உண்மை.
அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். கள் எப்படி தங்கள் வாழ்வோடு இணைந்திருக்கிறது எனபதை பகிர்ந்துகொண்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி கள் ஒரு உணவாக அக்கிராமத்தில் இருக்கிறது எனவும், கள்ளின் மருத்துவகுணங்களையும் விவரித்தார்கள். பாண்டியனின் மகள் கரிஷ்மாவிற்கு கையில் ஒரு தோல் நோய் ஏற்பட்டபோது, உண்பொருள் குண அகராதியில் கள் தொழுநோயை குணமாக்கும் என்ற வாக்கியத்தை வாசித்து அதனை தொடர் சிகிழ்ச்சையாக பாண்டியன் அளித்தார். கரிஷ்மாவின் தோல் வியாதிகள் குணமடைந்ததை நான் கண்கூடாக பார்த்தேன்.
பாண்டியன் சொல்லும் ஒரு கருத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. “கள் விற்பனைக்கு வந்தால், எவரும் வெளிநாட்டு மதுவென்று எதனையும் தேடிப்போக மாட்டார்கள், ஆகவே நம்மைச் சுற்றி இருக்கும் பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். மக்களின் வாழ்வில் நோய்கள் குறையும்போது மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் தேவையற்றதாகிவிடும், அப்படியே பனங்கள்ளில் இருக்கும் ஏழு வகையான தாது பொருட்கள் தேவையற்ற ஊட்டத்து நிறுவனங்களை புறமுதுக்கிட்டு ஓடச்செய்துவிடும். இவ்விதம் நோயற்ற வாழ்வு வாழும் போது மக்களது உடலில் ஒரு பொலிவு கூடிவிடும் அது, நம்மை சுரண்டிக்கொண்டிருக்கின்ற அழகு சாதன விற்பனையாளர்களை புறம் தள்ளிவிடும். ஆகவேதான் கள்ளை பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கட்டுபடுத்துகிறார்கள்”. அவரது கூற்று முற்றிலும் உண்மை. இன்று கள்ளிற்கான தடை அதில் இருக்கும் போதைக்கு எதிரானது அல்ல, அது நமது தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வலுவுள்ளதாலேயே, அதன் மீதான அடக்குமுறைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
இரவு வீட்டிற்கு வந்தபோது பனம்பழங்கள் தயாராக இருந்தன. நான் பனம்பழங்கள் சாப்பிட, பாண்டியன் பனை நாரினை உரித்து செதுக்கி கொடுத்தார்ர். கிட்டத்தட்ட எட்டு நாரினை சீர் செய்து கொடுத்தார். நானே அவைகளை பொத்திக்கொள்ளுவேன் எனக் கூறி எடுத்துக்கொண்டேன். நாளை காலை எனது மாமா மகள் மெலடியுடைய திருமண நாள். நான் சென்று சேர வேண்டிய நிற்பந்தம், ஆகவே விஸ்வாவிடம் என்னை எப்படியாவது விழுப்புரம் பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டுவிடு என்றேன். அந்த இரவு நேரத்திலும், களைப்பினைப் பொருட்படுத்தாது என்னை கொண்டு விட்டான். “நாம இதுவரை சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம்ணா” என்றபடி ஒரு செல்ஃபி எடுத்தான். எங்களது சந்திப்பில் எப்போதும் ஒரு செல்ஃபி இருக்கும்.

விழுப்புரம் வந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் கிடைக்காதது ஒருபுறம், நாகர்கோவில் பேருந்துகளும் குறைவாகவே வந்தன. ஆகவே திருச்சி வண்டி பிடித்தேன். பேருந்தில் இருந்தே, எனது தொப்பியை நார் கொண்டு பொத்த ஆரம்பித்கேன். நான்கு நார்களையே என்னால் பொத்த முடிந்தது. திருச்சியிலிருந்து மதுரைக்கு வண்டி பிடித்தேன். மதுரை வந்தபோது நாகர்கோவில் வண்டியைப் பிடிக்க சென்ற அவசரத்தில், ஏனாதிகள் செய்து கொடுத்த அனைத்து பறிகளையும் பறிகொடுத்தேன்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, மும்பை
malargodson@gmail.com / 9080250653
மறுமொழியொன்றை இடுங்கள்