பனைமுறைக் காலம் 13


தாவரசங்கமத்துள்

சாரா மெலடியுடைய திருமணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. திருமண நிகழ்ச்சிக்கு மிக குறைவானவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். சமூக இடைவெளி விட்டு ஆசனங்கள் இடப்பட்டிருந்தன. அங்கே டாக்டர் ஷோபன ராஜ் அவர்களை சந்தித்தேன். எனக்கு பனை குறித்த ஆரம்பகட்ட புரிதல்களை சிறு பிள்ளைக்கு கற்றுகொடுப்பது போல் கற்றுக்கொடுத்த பேராசிரியர். கொரோனா அச்சம் நாகர்கோவிலில் தலை தூக்கியிருக்கிறதை நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. அனைவரும் முக கவசம் அணிந்தே வந்திருந்தார்கள்.  அம்மா மற்றும் குடும்பத்தின் நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகளைப் பார்க்கும் வாய்ப்பாக மெலடியின் திருமணம் அமைந்தது. ஆனால் ஒருவரிடமும் நின்று பேசும்படியாக சூழல் அமையவில்லை. கண்களாலேயே பேசிக்கொண்டோம்.

அன்று அம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ரங்கிஷை பார்க்கச் சென்றேன், ரங்கிஷ், பனை மரச் சாலை பயணத்தில் என்னோடு தொலைபேசி வழியாக இணைந்துகொண்ட நாகர்கோவில் நண்பன். அதனைத் தொடர்ந்து பல பயணங்களில் என்னோடு இணைந்துகொண்டவன். சிறந்த புகைப்படக் கலைஞன். என் மீதும் எனது பயணங்கள் மீதும் மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன். பழவேற்காடு செல்லுகிறேன் என்றபோது அவனது காமிராவை தந்து உதவினான். அதனை கொண்டு கொடுக்கச் சென்றேன். இந்த முறை நண்பர்களின் உதவிகள் பல திசைகளிலிருந்து பல்வேறு வகைகளில் கிடைத்துக்கொண்டே இருந்தது கடவுளின் அருள் தான்.

பதினாறாம் தேதி மிகப்பெரிதாக ஏதும் நிகழவில்லை. ஆனால், நாகர்கோவில் சென்றுவிட்டு வரும் வழியில், ஒரு தேங்காய் ஏற்றி செல்லும் டெம்போ பார்த்தேன். அதற்குள் தேங்காய் சுமக்கும் கடவங்கள் இருந்தது. தேங்காய் சுமக்கும் கடவம் இருவகையில் முக்கியமானது. ஒன்று கடவத்தின் உறுதி. சில வேளைகளில் ஓலைக்கடவத்தின் மீது நார் கொண்டும் பொத்தியிருப்பார்கள். கடவங்கள் நார் கொண்டு பொத்தும்போது உறுதிமிக்கவைகளாக மாறிவிடுகின்றன. மற்றொன்று, ஓலைகள் கொண்டு செய்யும் கடவங்களின் அமைப்பு ஒன்று போலவே இருக்கும். அகன்று உயரம் குறைவாக காணப்படும். கடவங்களில் அதிகமாக தேங்காய்களை சுமப்பது இயல்வதல்ல. ஆகவே, நல்ல சுமட்டுக்காரர்களுக்கு ஏற்றவிதமாக, தென்னை ஓலையில் அதிகபடியான பின்னலை, வைத்திருப்பார்கள். புனல் போல விரிந்திருக்கம் அந்த பகுதியானது, மேலதிக தேங்காய்களை சுமந்து செல்ல வாகாக அமைந்திருக்கும். இந்தவித பெட்டிகள் இரண்டு பொருட்கள் ஒன்றிணையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பனை ஓலை மட்டுமல்லாமல் தென்னை ஓலைகளும் இப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஓரிடத்தில் வாழும் இரண்டு தாவரங்களை எப்படி மக்கள் புரிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும். 

பனை பொருட்களோடு இணைந்து கொள்ளும் தாவர பொருட்கள் என்பது ஒரு விரிவான பேசுபொருள். தென்னை, புளி, மா மரம், மரவள்ளி கிழங்கு, வாழை, சுரை, கமுகு, பேத்தவரை, ஆல், அரசு மூங்கில், என அவைகளின் விரிவு நாம் எண்ணிப்பார்க்க இயலாதபடி பெரிதானது. இந்த வரிசை, நமக்கு பனை எப்படி தன்னை சுற்றியுள்ள தாவரங்களோடு இணைந்திருக்கிறது. பாரக்கன் விளை அருகிலுள்ள காட்டுவிளை என்ற பகுதியில் பனையேறிக்கொண்டிருக்கும் செல்லதுரை என்ற பெரியவரை சந்தித்தபோது, பனை மரத்தில் ஏறுவதற்காக தேங்காய் தொண்டுகளை பனை மரத்தில் கட்டி வைத்து அதனை படியாக பாவித்து ஏறினார். பனையேறிகளின் தொழில் கருவியான அருவா பெட்டி என்பது பனம் பாளைகளால் செய்யப்பட்டதே.

எனது பயணத்தில், இன்றும்  கூட கரூர் திண்டுக்கல் பகுதிகளில் பதனீர் இறக்க சுரைக் குடுவைகளை பயன்படுத்தி வருகிறதை பார்த்திருக்கிறேன். அதற்காகவே சுரைக்குடுவைகளை தங்கள் தோட்டத்தில் பனையேறிகள் வளர்க்கிறார்கள். ஒருமுறை இயற்கை விவசாயம் செய்யும் சரோஜா அவர்களை சந்திக்க பள்ளபட்டி  சென்றிருந்தேன். எனது பல வருட தேடுதலுக்கு பயனாக அங்குதான் சுரைக்குடுவை பயன்பாட்டில் இருப்பதை கண்டுகொண்டேன். அன்று நான் அடைந்த ஆனந்த பரவசம் என்பது பனை சார்ந்த தேடுதலின் ஒரு சில உச்ச கணங்களில் ஒன்று என்றே சொல்லுவேன். சரோஜா அவர்கள் என்னை கோவிலூர் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, நாங்கள் சந்தித்த செல்வராஜ் என்ற பனையேறி கை நிறைய எங்களுக்கு சுரை விதையினைக் கொடுத்தார். பனையேறிகள் வள்ளல் எனச் சொல்லுவது வெறுமனே அல்ல, அவர்கள் அள்ளி அள்ளி கொடுப்பவர்கள்.

செல்வராஜ் அவர்கள் அதனை எப்படி நடுவது பேணுவது போன்றவற்றைக் குறித்து விளக்கினார். ஒரு கட்டத்தில் சுரை கொடியில் பூத்து காய் வந்த பின்னர் காய்களை எப்படி நேராக அமரவைப்பது. அதன் மூலம், எப்படி குடம் போன்ற வடிவத்தில் சுரைக்காயினை எடுக்கமுடியும் என விவரித்தார். பனையேறிகள் தங்களைச் சூழ ஒரு சூழியல் கட்டமைப்பை பேணிவந்திருக்கிறார்கள் என இவைகள் நமக்கு காண்பிக்கிறது.

எனது பயணத்தில், பனை மரங்களில் பற்றிப்பிடித்து ஏறும் பீர்க்கங்காய் (Luffa aegyptiaca, sponge gourd) கொடிகளைப் பார்த்திருக்கிறேன். பீர்க்கங்காய் இளசாக இருக்கும்போது, உணவாகவும் முத்திய பின்பு அதிலுள்ள நார்பகுதிகள் அதிகமாகி, உண்ணத்தகாததாக மாறிவிடும், ஆனால் சர்வதேச அளவில், முற்றிய பீர்க்கன், உடலில் தேய்த்து குளிக்கும் பஞ்சாக பயன்படுத்தபட்டுவருகிறது. நார்களின் நீடித்த உழைப்பினால் இது பலரால் விருபப்பட்டு இன்றும் உள்ளூரிலும் பயன்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் பெருமளவில் பரவியிருக்கும் தாவரம் மூங்கில் ஆகும். மூங்கில் பனையேறிகளின் வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குஜராத் மற்றும்  வேறு சில பிராந்தியங்கள் மூலமாக அறிகிறோம். மூங்கிலில் தான் பதனீர் எடுத்து வருவதும், மூங்கில் கழிகளை பயன்படுத்தி பனை ஏறுவதும் என மூங்கில் பனையோடு இணைந்துகொண்டதுபோல் வேறு தாவரங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. என்றாலும் தமிழகத்தில் மூங்கில் கூரை வேய்வதற்கே அன்றி பெருமளவில் பனையுடன் இணைந்துகொண்டது அல்ல. பனையேறிகள் பாளை சீவும் அரிவாளினைத் தீட்ட பயன்படுத்தும் பொடியை அருவாபெட்டிக்குள் ஒரு பொடிக்குழலினுள் வைத்திருப்பார்கள். பொடிக்குழல் என்பது அரையடி நீளமும் விரல் பருமனும் உள்ள சிறிய மூங்கில் துண்டுதான். ஒருவேளை தேடினால் வேறு சில பொருட்களில் பனை இணைந்துகொள்ளுமாயிருக்கும்.

மும்பையில் பனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய தருணத்தில் இங்குள்ள சூழியல் ஆர்வலர்களுக்கு மிகப்பெரும் சந்தேகம் இருந்தது. பனை இங்குள்ள மரம் தானா? இப்படி ஒற்றைப்படையாக ஒரு மரத்தை மட்டுமே விதைப்பது சரியா போன்ற விவாதங்கள் பெருமளவில் முன்வைக்கப்பட்டன. அனைவரையும் சமாளிக்க எனக்கு உதவியாயிருந்தது ஆல மரமும் அரச மரமும் தான். ஆரே பகுதியெங்கும் பனை மரங்களை ஆல மரமும் அரச மரமும் பற்றிப்பிடித்து சுற்றி நெருக்கி வளருவதையே அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன். ஒரு மரம் வாழும் பகுதியில் வேறு மரங்கள் வாழமுடியாது என்றிருக்கும் சூழலில், இந்திய ஆன்மீக மரங்களான ஆலமரம் மற்றும் அரச மரம், தங்கள் வாழ்விடத்தை பனையைச் சுற்றி அணைத்து அமைத்துக்கொண்டது சாதாரணமானது அல்ல என்றேன். இக்கருத்து மிகப்பெரிய மாற்றத்தை மும்பையில் ஏற்படுத்தியது.  ஓரிடத்தில் இரு மரங்கள் என்பது பனையை அன்றி வேறு எதுவுமே நமது கண்களின் முன்பு இல்லை. மாத்திரம் அல்ல மும்பை போன்ற இடப்பற்றாக்குறை நிறைந்த இடத்தில் ஓரிடத்தில் இரு மரங்கள் என்பது வரமாகவே பார்க்கப்பட்டது.

சங்கர் கணேஷ் 2017 முதல் எனது நட்பு வட்டத்தில் இருப்பவர். பட்டதாரி பனையேறி. ஒருமுறை என்னிடம், பனையேறிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்றினை விவரித்தார். கடந்தையின் பெருக்கத்தைக் குறித்தும் பனையேறிகள் அவைகளை சமாளிக்க சிரமப்படுவதையும் குறித்து பேசினார். கடந்தை (The Giant Indian hornets) எனப்படும் மிகப்பெரிய குளவி வகை. ஒரு மனிதன் மூன்று கடந்தைகளிடமிருந்து ஒரு சேர கொட்டு வாங்கினால் போதும், மரணம் ஏற்படும் வகையில் கொடிய விஷம் நிறைந்தது. வலியும் கடுமையாக இருக்கும். பெரும்பாலும், ஒற்றைக் கொட்டுகளை பனையேறிகள் “தாங்கிக்கொள்வார்கள்”. கடந்தைக் குறித்து என்னால் உடனே பதில் கூற முடியவில்லை, ஆனால் அது குறித்து விசாரித்து அறிந்தவைகள்  நல்ல செய்திகள் அல்ல. கடந்தை கூடு பெருகிக்கொண்டே செல்லும். ஆடு மாடு நாய் மனிதன் என அது இருக்கும் இடத்திற்குள் எவரையுமே நுழையவிடாது. பெருகும் தன்மை அதி வேகமாக இருப்பதால், கூண்டோடு நெருப்பிலிட்டு அழிப்பதே முக்கியமானது எனக் கூறுகிறார்கள். கடந்தைக்கும் சூழியல் பங்களிப்பு இருக்குமே? இருக்கும், இருக்கலாம், ஆனால், அப்படி விடுவது மனித நடமாட்டமுள்ள பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Deadly Asian Hornets that can 'kill with one sting' are heading to the UK -  Mirror Online
அபாயகரமான கடந்தை

குமரி மாவட்டத்தில் உள்ள நடைக்காவு என்ற பகுதியில் பனையேறி ஒருவர் இருக்கிறார் என்று அவரைத் தேடிச்சென்றேன். அப்போது அவர், பனை ஏறி கருப்பட்டி தயாரித்து கெல் பாம் (kel palm) என்ற கேரள அரசு நிறுவனத்திற்கு வழங்கிக்கொண்டிருந்தார். நான் தேடிச்சென்ற நேரம் அவர் நீண்ட குச்சியில் ஓலைகளைக் கட்டி வைத்துகொண்டிருந்தார். எதற்காக இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, “ஒரு கடந்த கூடு இருக்கு, தீ வேசணும்” என்றார். பொதுவாக கடந்தை கூடுகளை மாலை வேளைகளில் தான் நெருப்பு வைதுத் கொளுத்துவார்கள். அதற்கென திறன் வாய்ந்த மனிதர்கள் உண்டு. இரண்டு லிட்டர் மண் எண்ணை, இரண்டு குவாட்டர் மற்றும் 500 ரூபாய் கொடுத்துவிட்டால், ஒரு மணி நேரத்தில் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவார்கள். பனை சார்ந்து வாழும் இம்மனிதர், தானே களமிறங்கியிருக்கிறார் போலும் என நினைத்துக்கொண்டேன்.

ஏதோ எண்ணியவனாக கடந்தை கொட்டினால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டேன், “பேத்தவரையை அரச்சு தேய்ப்போம்” என்றார். போகிற போக்கில் கிடைத்த அரிய தகவல் இது. அதனை நான் பார்க்கவேண்டுமே என்றேன். எங்கிருந்தோ ஒரு மூலிகைச் செடியினைக் கொண்டுவரப்போகிறார் என்று எண்ணி, இதனைக் கூறினேன். அவரது மனைவி இதா இங்கே தான் நிற்கிறது என அந்த செடியினை வீட்டின் அருகிலேயே காண்பித்தார்கள். பேத்தவரை என்பது மஞ்சள் நிற பூக்களும் அவரை போன்ற காய்களும் உள்ள சிறிய செடி. முட்டளவு அல்லது இடுப்பளவு மட்டுமே வளரும் தன்மையுடையது. குமரி மாவட்டத்தில் பெருமளவு காணப்படுகின்ற செடி தான். உணவாக பயன்படவில்லையென்றாலும் பனையேறிகளின் வாழ்வில் முக்கிய மருந்தாக இது செயல்பட்டிருக்கிறது என அறியும்போது, நமக்கருகில் இருக்கும் தாவரங்கள் குறித்து நாம் ஒன்றுமே அறிந்துகொள்ளவில்லை என்றே தோன்றியது.

உப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா? | Side  effects of tamarind - Tamil BoldSky
புளி – இணையத்திலிருந்து

புளியும் பனையும் இணைந்திருக்கும் ஒரு சூழலை திண்டிவனம் பகுதியில் பார்த்தோம் இல்லையா?. குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், புளிய மர இலைகளைக் கூட தேடி எடுத்து அக்கானி காய்ச்சும் சூழ்நிலையே அன்று இருந்தது. அக்கானி என்பது பதனீரைக் குறிக்கும் குமரி மாவட்ட சொல். ஓடு உடைத்த புளியினை அப்படியே கம்பு, மற்றும் கொட்டைகளுடன் பானையில் போட்டு, ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் காய்ச்சிய பதனீரை பானைக்குள் ஊற்றுவார்கள். பின்னர் வண்டுகட்டி, 90 நாள் அசையாமல் ஓரிடத்தில் வைத்தால் பானையில் கற்கண்டு பரல்கள் பிடித்திருக்கும். புளியில் இனிப்பு ஏறி தேனடையாக மாறிவிட்டிருக்கும். சுவைத்தால், ஏதோ பேரீச்சையினைச் சாப்பிடுவதுபோல் புளிப்பு மறைந்து இனிப்பு சுவை கூடியிருக்கும். கடந்த காலத்தில் குமரி மாவட்ட சிறுவர்கள் விரும்பியுண்ட சுவை மிக்க பதார்த்தங்களுள் இது முதன்மையானது. ஏதோ ஒரு நல்லூள் இருந்ததால், மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றும்போது, பால்மா கார்டன்ஸ் என்ற அவர்களது தோட்டத்தில் பெறப்பட்ட பதனீரில் செய்த புளி பதனீரைச் சுவைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இன்று பனைத் தொழிலை சாராத ஒருவர் ஒரு பானை நிறைய புளி பதனீர் செய்யவேண்டுமென்று சொன்னால் குறைந்தபட்சம் ஒரு 5000 ரூபாய் செலவாகும். மிக எளிதாக நமது நிலப்பரப்பில் இருந்துவந்த ஓர் உணவு இன்று பெரும் பொருட்செலவு செய்தால் அன்றி மீட்டெடுப்பது இயல்வதல்ல.  நமது முன்னோர் கண்டுபிடித்த உணவு வகைகள் நட்சத்திர விடுதியினையும் மிஞ்சும் வகையில் அரிதினும் அரிதானதாகவே இருக்கிறது. மேலும் குறைந்த பட்சம் மூன்று மாதம் காத்திருக்கவும் வேண்டும்.

புளிகரைசலும், கருப்பட்டியும் சுக்குப்பொடியும் கலந்தே பானகம் செய்வார்கள். தென்னக பக்தர்களுக்கு இது ஒரு தவிர்க்க இயலாத மென்பானமாக திருவிழாக் காலங்களில் இருந்திருக்கிறது. அப்படியே கொரண்டு என்ற செடியினை தான் கற்கண்டு பிடிக்க பானைக்குள் போடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தினரின் பால்மா கார்டன்ஸ் குமரி எல்லையிலுள்ள களியக்காவிளைக்கு அருகில் இருக்கிறது. ஒரு சில வருடங்கள் நான் இங்கே தான் தங்கினேன். பதனீர் விற்பனையாகாத தருணங்களில், இங்கு நாங்கள் பதனீரைக் காய்ச்சி கருப்பட்டியாக்குவது வழக்கம். ஒருநாள், அங்கே பிடுங்கிய கிழங்கினை போட்டு வேகவைத்து கொடுத்தார்கள். மரவள்ளிக்கிழங்கு பக்குவமாக வெந்துவிட்டதென்றால் பஞ்சுபோல மாறிவிடும். உப்பு ஒன்று போல பிடித்திருக்கும். அன்று அந்த பாகிற்குள் கிடந்து வெந்த கிழங்கு, தேனில் ஊறிய கிழங்கென ஆனது. இதன் சுவை, கிட்டத்தட்ட,  கிழங்கையும் கருப்பட்டி பாகினையும் ஒன்றாக மெல்வதுபோன்ற ஒரு உணர்வினைக் கொடுக்கும். இப்படி ஒரு உணவு தயாரிக்க எவரும் இன்று தயாராவது இல்லை. விலையும் கட்டுப்படியாகாது.

பனையேறிகள் வாழ்வில் அரிசி மிக முக்கியமான ஒரு உணவுப்பொருள். குமரி மாவட்டத்திலுள்ள அத்தனை பனையேறிகளும் ஒருவேளையாவது நல்ல சம்பா அரிசி சோறும் மீனும் வைத்து சாப்பிடுவார்கள். இன்றும் சிலர் பனை மரங்கள் நடுவதை ஏதோ தேவையற்ற செயல் எனச் சொல்ல முற்படும்போது, பனை ஒரு பாலைவன தாவரம் எனக் கூறி கடுமையாக விவாதிப்பார்கள். அப்படி பனைக்கென ஒரு நிலம் கிடையாது. அது பல்வேறு நிலங்களிலும் நாடுகளிலும் வாழும்படி தன்னை தகவமைத்துக்கொண்ட மரம். உப்பு நீர் நிறைந்த பகுதிகளிலும் கூட செழித்து வளரும், ஆகவே தான் பனை மரங்கள் சதுப்பு நிலப்பகுதிகளிலும் செழித்து வளருவதை நம்மால் காணமுடிகிறது. அதாவது மக்கள், தங்கள் வாழ்வில் பனை தேவையென கருதி தங்களுடன் வைத்துக்கொண்ட ஒரு மரம் இது. பெருமிதத்துடன், தங்கள் தலைமுறையின் சொத்து என சேர்த்துக்கொண்ட மரம். ஆகவே, இவைகள் பரவலாக எங்கும் நிற்பதை நாம் காணலாம். மனித வாழ்வில் நெல்லுடைய பயன்பாடு 10000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கிறது. அவ்வகையில்  பனை மரத்தின் பயன்பாடு வெகு தொன்மையானது.

To Mumbaikars' surprise, this year's Alphonso mangoes came from Malawi, not  Konkan - The Economic Times
மாம்பழங்கள் – இணையத்திலிருந்து

திருநெல்வேலி பகுதியிலுள்ளவர்கள் கோடைக்காலத்தில் பதனீரில் மாம்பழத்தைப் போட்டு பிசைந்து சாப்பிடுகின்ற ஒரு வழக்கம் உண்டென்று சொல்ல  கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வழக்கம் குமரி மாவட்டத்தில் கிடையாது. காரணம், குமரி மாவட்டத்தில், பங்குனியோடு பதனீர் காலம் முடிவடைந்துவிடும், மாம்பழங்கள் சித்திரை மற்றும் வைகாசியிலேயே கிடக்கத் துவங்கும். ஆகவேதான், குமரி மாவட்டத்தில் இவ்வித வழக்கங்கள் இல்லை. ஆனால் மாங்காய் பயன்பாடு இருந்திருக்கிறது. சுமார் 35 – 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலும், குமரி மாவட்ட மக்களுக்கு காலை உணவு என ஏதும் கிடையாது. இங்கு ஐரோப்பியர் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியானபடியால், காலை உணவு இல்லாமையை மக்கள் உணர்ந்திருந்தினர். பதனீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது. ஆகவே எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு பதனீர் குடித்தே ஆக வேண்டும். வயறு இசகி இடம் கொடுத்தாலும், தித்திப்பு மிக்க பதனீரை எப்படி உள்ளே செலுத்த? அப்படி வயறு நிறம்ப குடிக்காவிட்டால், பசிக்கும்போது என்ன செய்வது என திகைத்து போய்விட்டவர்களின் கண்டுபிடிப்பே, மாங்காயும், பதனீரும். மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும் என்பது பழமொழி. இங்கே மாங்காய் ஊட்டும் பதனீர், அரைநாள் பசியினை தாக்குப்பிடிக்கச் செய்யும் அளவு வீரியம் கொண்டது.

குமரி மாவட்டத்தில் காணப்பட்ட மற்றொரு பயிர், கொல்லா மரம். கொல்லா மரத்திலிருந்து கிடைப்பது தான் கொல்லாங் கொட்டை. அண்டி பருப்பு அல்லது முந்திரி பருப்பு என அழைப்பதையே குமரி மாவட்டத்தில், அண்டி (கொட்டை) அல்லது கொல்லாங்க் கொட்டை என அழைப்பார்கள். வெளி நாட்டிலிருந்து இங்கு உள்ள கொல்லம் துறைமுகத்தின் வழியாக வந்ததாகையால், கொல்லத்து கொட்டை, கொல்லாங்கொட்டை என்றானது.

தாய் மடி என எண்ணி பனை மடியில் வளரும் ஆலமரம்

குமரி மாவட்டத்தின் மிக முக்கிய உணவு முந்திரி கொத்து ஆகும். பார்க்க திராட்சை குலை போல ஒன்றிணைந்து காணப்படும் இந்த தின்பண்டம், சிறு பயறு, தேங்காய், மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து பிசைந்து உருட்டி அரிசி மாவில் முக்கி எண்னையில் இட்டு பொரித்தெடுக்கும் சுவையான தின்பாண்டம். எனது வீட்டில் ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் அம்மா தவறாமல் செய்வார்கள். தற்போது எண்பதை தொட்ட சூழலிலும் மும்பை வந்திருந்தபோது ஜாஸ்மின் மற்றும் குழந்தைகளை எல்லாம் அழைத்து அவர்கள் உதவியுடன் முந்திரி கொத்து செய்து கொடுத்தார்கள்.

Are cashews fruit? - Quora
கொல்லாம் பழம் – இணையத்திலிருந்து

அம்மாவின் மாணவரும் தற்பொழுது பத்திரிகையாளருமாக இருக்கின்ற திரு. மலரமுதன் என்னிடம் சொன்ன அனுபவம் இவைகளையும் தாண்டி வேறு ஒரு நிலையில் இருந்தது. முந்திரி பருப்பை சரியான அளவில் உடைத்து போட்டு, கருப்பட்டிக்கு பதில், பந்தனீரையே காய்ச்சி, பாகு பதம் வரும்போது, அதன் ஒட்டும் தன்மையை கணித்து, சுட சுட உடைத்த பருப்பிற்குள் ஊற்றி அவைகளைக் கலந்து சூட்டுடன், உருண்டையாக பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் ருசியினை மிஞ்சி எதையும் தான் சாப்பிட்டதில்லை எனக் கூறி வாயூற வைத்துவிட்டார். உண்மையிலேயே, இவ்விதமான ஒரு உணவினை எவரும் இன்று தயாரிக்கப்போவதில்லை. அப்படி தயாரிக்க முன்வருகிறவர்கள் கூட, கலப்படமோ, அல்லது சாமானியர்கள் வாங்க இயலாத விலைகளையே வைக்க முடியும்.

பனையேறிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு என சில மரங்கள் உண்டு. அவைகளையே அவர்கள் தேடிச் செல்லுவது வழக்கம். குறிப்பாக ஆண் பாளைகளை இடுக்கி பதப்படுத்துவதற்காக செய்யப்படும், கடிப்பு என்ற கருவி, கமுகு மரத்திலிருந்தும் உலத்தி என அழைக்கப்படும் கூந்தல் பனையிலிருந்தே பெரும்பாலும் செய்யப்படும். அத்தகைய கடிப்புகளை நான் கைகளில் எடுத்து பார்த்திருக்கிறேன்.  இவ்விரு மரங்களில் இருந்து கிடைக்கின்ற கடிப்புகள் வளையும் தன்மை கொண்டவைகளாக இருந்திருக்கின்றன என சங்கர் கூறுவதை கேட்டிருக்கிறேன். உடைந்து போகா தன்மைகொண்ட மரங்களையே பனையேறிகள் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். பல்வேறு காட்டு மரங்கள் இன்று சமதளத்தில் இல்லாமல் போய்விட்டன. பெண் பாளைகளை பதப்படுத்தும் கடிப்புகள் பல்வேறு மரங்கள் இருப்பதாக சங்கர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டபொது அதிர்ந்துபோய்விட்டேன். பல மரங்களின் பெயர்கள் என் வாழ்நாளில் நான் கேள்விப்பட்டிராத பெயர்களாகவே இருந்தன. வெடத்தலை, விராலி, வெண் நொச்சி, அச்சங் கம்பு, எனப்து வெண் அச்சி மற்றூம் கறுப்பு அச்சி மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் விராலிக்காட்டுவிளை மற்றும் அச்சங்குளம் என்ற பெயரில் ஊர்கள் உண்டு. இன்றைய காலகட்டத்தில்  சீவலப்பேரி பகுதி மட்டும் தான் கடிப்பு வாங்க எஞ்சியிருக்கும் ஒரே இடம்.

மருத்துவகுணம் உள்ள கம்புகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள் எனும்போது, உள்ளூர ஒரு திடுக்கிடலை நான் உணர்த்தேன். மருத்துவம் சார்ந்த அறிவுகள் எப்படி இவர்கள் பதப்படுத்தலுக்குள் வந்தன? பாளையைப் பதப்படுத்தும் வகைமைகள் ஒவ்வொர் இடத்திற்கு ஏற்ப வேறுபடுவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

குமரி மேற்கு பகுதியினைப் பொறுத்த அளவில் பனையேறிகளுக்கான பயன்பாட்டு நிலம் என்பவை கைவிடப்பட்ட மேட்டு நிலங்கள் தான். தண்ணீர் வசதி ஏதும் இருக்காது. ஆகவே பனையேறும் நேரம் தவிர்த்து தங்களுக்கு வேண்டிய காய்கறிகளையும் கீரைகளையும் பயிரிடுவார்கள். அதனை நடுதலை என்று கூறுவார்கள். கத்தரிக்காயும் வழுதணங்காய் போன்றவைகள் இதில் அடங்கும். பனை ஓலையில் செய்யப்பட்ட காக்கட்டை என்ற காவடி போன்ற நீர் சேகரிக்கும் பொருளில் நீர் மொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றுவார்கள்.

பனங்காடுகளில் தற்போது பெருமளவில் காணப்படும் ஊடுபயிர், என்பது முருங்கை தான். முருங்கை, இரும்புச் சத்து வழங்கக்கூடிய ஒரு கீரையாகும். வறண்ட நிலத்தில் வளருவதால் இதனை பனையேறிகள் தங்கள் நடுதலைகளுடன் பேணிக்கொண்டனர். ஆகவே அவைகளுக்கு ஊற்றும் தண்ணீருடன் முருங்கையும்  காப்பாற்றப்பட்டு வந்தன.

தமிழகம் முழுக்க பனை எப்படி இருக்கின்றதோ அது போலவே வாழையும் தமிழகம் முழுக்க பரவியிருக்கிறது. வாழை மரத்தை பேண இன்னும் சற்றதிகம் நீர் தேவைப்படும். ஆகவே வறண்ட நிலங்களில் வாழைகள் பயிரிடப்படுவதில்லை. ஆனாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழைகளையும் காக்கட்டையில் நீர் இறைத்தே பேணியிருக்கிறார்கள். வாழை குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில் விழாக்களிலும் பங்குகொள்ளும் முக்கியமான மட்டுமல்ல ஒரே கனி எனலாம். வாழை பழுக்கும் சமயத்தில் அதன் குலைகளை தென்னை ஓலைகளை வைத்து பொதிந்து காப்பாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருவேளை பழங்காலத்தில் பனையோலைகளை அதற்கு பயன்படுத்தியிருக்கலாம். இன்றும் கூட குமரி மாவட்டத்திலுள்ள திருமணங்களில் வாழைப்பழங்களை வழங்கும்பொது பனை ஓலைக் கடவத்தில் தான் வைத்து எடுத்துச் செல்லுவார்கள். 

மிகப்பெரும் தொழில் வாய்ப்பு எனும்போது பனையின் ஊடுபயிராக வேர்கடலை இருந்தது என்பதை சொல்லாமல் இருக்க இயலாது. கடலை மிட்டாய்க்கு பேர்போன இடம் என்றால் அது கோவில்பட்டி தான். கடலை மிட்டாய் முற்காலங்களில் கருப்பட்டி பாகு சேர்த்து தான் செய்தார்கள் என்பதை நண்பர் ஸ்டாலின் பாலுச்சாமி உணர்ந்து அதனை மீட்டெடுத்திருக்கிறார். அந்த கலவையினை கண்டடைந்த நமது முன்னோர் மிகப்பெரிய வணிக வளத்தினைமட்டுமல்ல நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தையும்  பாதுகாத்திருக்கிறார்கள்.  ஸ்டாலினை பின்தொடருகையில் அப்படியே எள்ளும் நமது மரபில் இருந்திருக்கின்றன என்பதையும் நாம் காண்கிறோம். எண்ணை செட்டிகள் கருப்பட்டியினை எள் ஆட்டும்போது போடுவது வழக்கம் என்பது கூட நாம் பார்த்திருந்தோம். எள்ளும் கருப்பட்டியும் உரலில் போட்டு இடித்து கொடுத்த கோடியூர் ரெஜி வாத்தியாரை என்னால் மறக்க முடியாது.   

பனை மரத்தில் தொற்றி ஏறும் கொடிகள் குறித்த சரியான தரவுகள் என்னிடம் இல்லை ஆனால், தமிழகமெங்கும் பனை தொழில் கைவிடப்பட்ட இடங்களில், பனை மரத்தை பற்றி அழிக்கத்துடிக்கும் அளவிற்கு பெயர் தெரியா பல கொடிகள் சுற்றி படர்ந்து ஏறியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பனை மரத்தில் ஏறும் கொடிகளைக் குறித்து தனியாகவே எவராவது ஆய்வு செய்யலாம்.

பனை சார்ந்து வளருகின்ற வேறு சில மருத்துவ தாவரங்கள் என பிரண்டை, முசுமுசுக்கை, வேலிப்பருத்தி,  நன்னாரி, ஓரிதழ் தாமரை போன்றவற்றைக் பாண்டியன் குறிப்பிடுகிறார்.

தென் மாவட்டங்கள் தான் என்று அல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட நன்னாரி சர்பத் வெகு பிரபலமாக இருக்கிறது. நன்னாரி, பனங்காட்டில் வளரும் மூலிகைச் செடி தான்.  நன்னாரி வேர் ஒரு சிறந்த நறுமணமூட்டி.

கருப்பட்டி காப்பி குறித்து தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள். சமீபத்தில் வேம்பார் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள், காப்பி குறித்து ஆய்வு செய்யும் ஒரு சர்வதேச ஆய்வாளர் வேம்பார் வந்ததைக் குறிப்பிட்டார். அவர் வெறுமனே தகவல்களை மட்டு சேகரிக்காமல் கருப்பட்டி காப்பி தயாரித்து குடித்து அதனை ஆவணப்படுத்தி சென்றுள்ளார். பொதுவாக கருப்பட்டி காப்பியில் காப்பி பொடியே இருக்காது என்பது அனேகருக்குத் தெரியாது. மாறாக கொத்துமல்லி போடுவார்கள். சுக்கு காப்பி போடும்போது சிறிது நல்ல மிளகும் போடுவார்கள். குமரி மக்கள் சந்திக்கும் இரு வேறு பருவமழைக்கு ஏற்ற வகையில் இந்த காப்பி தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இலங்கையில் தேனீர் அருந்துவது இனிப்பு சேர்த்து அல்ல என சொல்லக் கேட்டிருக்கிறேன். தேயிலையினை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடுவையில் எடுத்துக்கொள்ளுவார்கள். மற்றொரு கையில் கருப்பட்டியை எடுத்துக்கொண்டு, கருப்பட்டியைக் கடித்து தேனீரைக் குடிப்பார்கள். இவ்வகையில் வெகு சமீப காலத்தில் நமக்கு பழக்கமான தேயிலையுடன் கூட பனை உறவை மேம்படுத்திக்கொண்டது என அறிய முடிகிறது. 

பனங் கருப்பட்டி, அனைத்து மூலிகைகளும் சேரும் லேகியங்களில் ஒரு முக்கிய சேர்மானமாக இருந்துவந்திருக்கிறது. அவ்வகையில், நம்மால் எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு பனையோடு இங்குள்ள தாவரங்கள் மட்டுமல்லாது அயல் நாட்டு தாவரங்கள் கூட உறவாடியிருக்கின்றன என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: