பனைமுறைக் காலம் 14


நார்முடி காலம்

அக்டோபர் 17 ஆம் தேதி மித்திரனுடைய பிறந்தநாள். மிடாலக்காட்டில் எங்களோடு வாடகை வீட்டில் இருந்தவர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்தோம். அங்கே ஏகப்பட்ட சிறுவர்கள் உண்டு. நாங்கள் வாடைகை இருந்த வீட்டிற்கு கீழே தானே பாத்திரங்கள் கிடைக்கும் ஆகவே, அங்கிருந்து பாத்திரம் வாங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டோம். பொதுவாக நாங்கள் பிறந்தநாள் கேக் வாங்குவதில்லை. கடந்த முறையும் இங்கிருக்கும்போது மித்திரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு எல்லா குழந்தைகளுக்கும் நுங்கு வெட்டிக்கொடுத்தோம். இம்முறை, மித்திரனுடைய ஜஸ்டின் மாமா கேக் வாங்கி கொண்டாடினார்கள். நாமும் தான் எத்தனை நாளைக்கு சாதாரண கேக்கிற்கு எதிராக கொள்கை என கொடிபிடிப்பது?

மிடாலக்காட்டில் தான் நான் போவாஸ் பனையேறியை சந்தித்தேன். ஆரோனும் மித்திரனும் சந்தித்த முதல் பனையேறி அவர் தான். அறுபது வயதை தொடும் மனிதர். சலிப்பில்லாமல் இன்றும் பனை ஏறுகிறார். அவர் மிடாலக்காட்டில் இருப்பதால் அவரை சந்திக்கச் சென்றேன்.

போவாஸ் அவர்களுடன் மித்திரனும் ஆரோனும்

மிடாலக்காட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு கத்தோலிக்கத் ஆலயம் இருந்தது. பாதிரியார் பேசுவது அதிகாலை வேளையில் எங்கள் வீடு வரை கேட்கும். ஒரு நாள் நான் அங்கே சென்று அந்த பாதிரியாரை சந்தித்தேன். பாதிரியார் சகாய பெலிக்ஸ் இளவயதுடையவர். ஓவியம் வரையும் திறன் கொண்டவர். எனது பனை சார்ந்த முன்னெடுப்புகளை செவிமடுத்து கேட்டார். அவரது தந்தையும் ஒரு பனையேறி தான் என்றார். நமது திருச்சபையில் உள்ளவர்களுக்கு ஒருநாள் பனை சார்ந்த விழிப்புணர்வு அளிக்கவேண்டும். அதற்காக ஒருநாள் பனம்பழத்தினை மக்களுக்கு உண்ணக் கொடுப்போமே என்றேன். செய்யலாமே என்றார்.

மித்திரன் சேகரித்த மிகப்பெரிய பனம்பழம்

எனது பிள்ளைகள் ஆரோன் மற்றும் மித்திரன் உதவியுடன், பனம் பழங்களைத் தேடி எடுத்து குளிர் சாதனப்பெட்டியில் இட்டுவைத்தேன். மூன்று நாட்கள் தேடுக்கையில் கிட்டத்தட்ட 18 பழங்களே கிடைத்தன. போவாஸ் அவர்கள் தனது அறிவாளை எடுத்துக்கொண்டு உதவிக்கு வந்தார். மிக கூர்மையான அறிவாள் இருந்தாலே பனம்பழங்களை சரியாக பாளம் பாளமாக கீறி எடுக்க இயலும். திருச்சபையினருக்கு 18 பழங்கள் போதாது என்று போவாஸ் அவர்கள் கூறினார்கள். “இது என்ன எக்காட்டுகதுக்கா” என சிரித்தார். ஆனால் கை வலிக்க அத்தனை பழங்களையும் அவரே சீவியெடுத்து கொடுத்தார். அந்த நேர்த்தி, அரிவாள் பிடிக்கும் கைகளுக்க்கு மட்டுமே உரித்தானது. அன்று இரவே பானையின் அடியில் பனம்பழ நெட்டுகளைப் போட்டு சீவிய பனம்பழங்களை அடுக்கி மேலே சிறிது கருப்பட்டி போட்டு வேகவைத்தோம். 

போவாஸ் பனம் பழங்களை சீவுகிறார்

மறுநாள் காலை எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய கூட்டம் திருச்சபையின் மைதானத்தில் திரண்டது. ஒரு மிகப்பெரிய காகிதத்தில் பனை என எழுதி அதையே ஒரு பனை மரத்தில் பனையேறி இருப்பது போன்ற ஒவியமாக பாதிரியார் பெலிக்ஸ் மாற்றினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திவிட்டு பனை மரத்தினை காக்கும் அவசியத்தை குறிப்புணர்த்தினார். அனைவரும் வரிசையில் வந்து வாங்கிச் செல்லுங்கள் என்றார். ஐந்தே நிமிடத்தில் அத்தனையும் காலியாகின. பானையில் தேங்கியிருந்த நீரினை சுவைக்க அவ்வளவு போட்டி நடைபெற்றது. இப்படியான ஒரு நிகழ்வு இதுவரை எந்த திருச்சபையிலும் நடந்திருக்காது என்றே எண்ணுகிறேன். பனம்பழ சுவையானது இன்றளவில் மறந்து போய்விட்ட ஒன்றாகவே இருக்கிறது.

பாதிரியார் சகாய பெலிக்ஸ்

போவாஸ் அன்று ஆலயத்திற்கு வரவில்லை. எப்போதுமே அப்படித்தான், பனையேறிகள் ஆலயத்திற்குப் போவதில்லை. நான் தான் அவரை முதன்முறையாக  அறிமுகப்படுத்தினேன் என்று பாதிரியார் கூறினார். ஆனால் அவரது மனைவி அங்கு நிகழ்ந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பொதுவாக அனைவருக்கும் தேவையான அளவு பானம்பழங்கள் வேண்டுமென்றால், ஒரு கோயிலுக்கு குறைந்தபட்சம் பத்து பனையேறிகளாவது இருக்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுமா என்பது சந்தேகமே. 

பனம்பழங்களை உண்ண முண்டியடிக்கும் சிறுவர்கள்

போவாஸ் அவர்களை நான் சந்தித்து பனை விதைகளைக் கொடுத்தேன். நாங்கள் இருவரும் ஒரு சில தருணங்களில் பனை விதைகளை இணைந்தே சேகரித்திருக்கிறோம். மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார். இந்த முறையும் பனையேற துவங்கியிருகிறார். எனது தொப்பிக்கு சில பனை நார்கள் தேவை உரித்து கொடுக்க இயலுமா என்று கேட்டேன். மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன் என்றார். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட இயற்கை இழை நாற்காலி

அன்று மதியம் ஜாய்சன் ஜேக்கப் என்ற பனை நார் கட்டில் பின்னும் நண்பர் என்னைத் தொடர்புகொண்டார். நேரம் இருப்பின் வாருங்கள் என்றார். எனது வாகனத்தை நாகர்கோவிலில் வைத்துவிட்டு, அவருடைய இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டேன். எனக்கு பனை நார் நார்க்காலிகள் மீது பெரு விருப்பம் உண்டு. பனை நார் நார்காலிகள் என்பவை பல்வேறு வடிவங்களில் இருந்திருக்கின்றன. சாய்வு நார்காலியாக, கைபிடியுள்ள நாற்காலியாக, முக்காலியாக, சுழல் நாற்காலியாக என அவைகள் பல வடிவங்களைக் கொண்டிருக்கிண்றன. சிறு வயதில், பேருந்து மற்றும் லாறிகளில் ஓட்டுனர் இருக்கைகள் பனை நார் கொண்டே அமைக்கப்பட்டிருந்தன. வாகன ஓட்டிகளுக்கு சூடு தாக்காமல் இருக்க இவ்வகை நார் போட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. பிற்பாடு அவைகள் பிளாஸ்டிக் இழைகளாக மாறி தற்போது குஷன் நாற்காலிகளாக மாறிவிட்டன.   

பனைநார் கொண்டு செய்யப்பட்ட கையடக்க பெட்டி – நூறு வருட பழைமையானது

பனை நார் கொண்டு அரசு பேருந்து ஓட்டுனர் இருக்கையினை அமைக்கவேண்டும் என்று ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டால், விழுந்துகிடக்கும் பனையேறிகள் பலர் வாழ்வுபெறுவார்கள். ஆனால், அரசு எவ்வகையிலும் இவ்வித எளியகலைஞர்களை பொருட்டாக கொள்ளுவதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு பனை நாரால் செய்யப்பட்ட ஒரு சாய்வு இருக்கை வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அப்படி ஒரு சாய்வு இருக்கை அமைக்கவேண்டுமென்றால் குறைத்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் ஆகிவிடும். இப்போது அவ்வளவு செலவளிக்க இயலாது, ஆகவே, இன்னும் சில வருடங்கள் கழித்து வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலில் அதனை இணைத்துள்ளேன்.

மருந்துவாழ் மலையின் அருகிலிருந்து நாகர்கோவில் நோக்கி எடுத்த புகைப்படம்

ஜாய்சன் அன்று எனக்கு மருந்துவாழ் மலையினை சுற்றிக்காட்டினார். மருந்துவாழ் மலை, பனை என்ற அரணால் சூழப்பட்ட மலை என்பதை அன்று தான் நான் கண்டுகொண்டேன். முழு மலையையும் சுற்றி வந்த போது, இத்தகைய அழகினை எப்படி தவறவிட்டேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வழுக்கம்பாறையை அடுத்த பொற்றையடியை நெருங்குகையில் மருந்துவாழ் மலை நமது கண்களுக்குத் தெரியும். இராமரின் தம்பி, இலக்குவன் இலங்கையில் அடிபட்டு கிடக்கும்போது, அனுமனிடம் இமய மலையிலிருந்து சஞ்சீவி மூலிகையினை எடுத்துவர பணிக்கிறார்கள். இமயம் சென்ற அனுமனால் மிகச்சரியாக சஞ்சீவி மூலிகையினைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, முழு மலையையும் அப்படியே தூக்கி இலங்கைக்கு எடுத்து செல்லுகிறார். செல்லும் வழியில் அவரது கரத்திலிருந்து விழுந்த சிறு துண்டு தான் மருந்துவாழ் மலை என வாய்மொழி கதையாக கூறுகிறார்கள். மிக முக்கிய மூலிகைகள் இங்கே கிடைப்பதால், வனத்துறையின் கட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது.

இனிய மாலை நேர மருந்துவாழ் மலையின் அடிவாரம்

இது மருந்துவாழ் மலை என்றால் அதனைச் சுற்றி நிற்பது அனைத்துமே மருந்துவாழ் பனை என்றே கொள்ள முடியும். அனைத்து வகையான சித்த மருத்துவத்திலும், இனிப்பு சேர்மானமாக கருப்பட்டியும், கற்கண்டும் இணைவதை நாம் கண்டுகொள்ள முடியும். ஒத்தை மரக் கள்ளு, மருந்துகள் இட்ட கிழிகளில் ஊறிய கள், போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். மருந்துவாழ் மலை உச்சியில் கூட ஒரு பனை தனியாக நின்றது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தை கொண்ட சிகரம் உள்ள இம்மலையில், கண்டிப்பாக 1500 அடிகளுக்கு மேல் தான் இப்பனை நின்றிருக்கிறது. இது சராசரி பனை மரத்தின் வாழ்விடத்தை விட உயரமானது. ஆகவே பனையால் 1500 அடிகளுக்கு மேலும் தாக்குப்பிடிக்கும் தன்மை இருப்பதை இந்த பனை நிறுவுகிறது.  சிவலிங்கம் என்ற பனையேரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தான் சிறு வயதில் மேலே சென்று சாப்பிட்டு போட்ட கொட்டை அது என்றார். அத்தனை உயரத்தில் ஒரு பனை மரத்தினைப் பார்ப்பது அந்த மலைக்கு ஒரு தனி அழகைச் சேர்த்தது. மலையைச் சுற்றிய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. ஜாய்சன் அவருடன் இருந்த தருணத்தை செழுமைப்படுத்தினார். வழியில் ஆறடி நீள பாம்பு ஒன்று எங்களுக்கு முன்பதாக சாலையில் குறுக்காக கடந்து சென்றது.

மருந்துவாழ் மலையின் உச்சியில் பனை மரம்

அந்த மாலை நேரத்தில் மருந்துவாழ் மலையினை சுற்றி வந்தது ஒரு அற்புத அனுபவம். கிரிவலம் என்ற அமைப்பு இவ்வித அனுபவங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்போலும். சீர்திருத்த நற்செய்தியாளரான ரிங்கல் தெளபே அவர்கள், மைலாடியிலுள்ள தனது வீட்டிலிருந்தபடியே இந்த மலையினைப் பார்த்து வியந்திருப்பதை பதிவு செய்திருக்கிறார். இந்த மலைப்பகுதி அனேகருக்கு புகலிடமாகவும் இருந்திருக்கிறது. இன்றும் சில சித்தர்கள் இந்த மலையில் வசிக்கிறார்கள். மருந்துவாழ் மலையில் சரி பாதி தூரம் ஏறியிருக்கிறேன். அதிகாலையில் ஏறுவதுதான் சிறப்பானது. மீண்டும் மலை உச்சிக்கு போகவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

சற்றே இருட்டும் நேரத்தில் கொட்டாரத்தில் இருக்கும் அவரது நார் கட்டில் பின்னும் கடைக்கு கூட்டிச் சென்றார். பனை நார் குறித்து தொடர்ந்து பேசினோம். பனை ஓலைகள் குறித்து தமிழகம் தழுவிய ஒரு விழிப்புணர்வு இன்று உண்டு. ஆனால், பனை நார் குறித்து அத்தகைய விழிப்புணர்வு இல்லை. மேலும் பனை நார் இன்று மிகவும் அரிதான பொருளாகி வருகிறது என்றும் இத்தொழில் அதிகநாட்கள் நீடிக்காது என்றும் ஜாய்சன் கூறினார். மனம் பிசையும் வார்தைகளாகவே அவருடனான உரையாடல் இருந்தது.

பனை நார் கட்டில்களைப் பின்னுவது போல அகலத்தைக் குறைத்து பெஞ்சு போல செய்தால் என்ன என ஜாய்சனிடம் கேட்டேன். எனக்கு ஒருவேலை அவ்விதமான ஒரு பெஞ்சு கிடைத்தால், சில ஆலயங்களுக்கு இவ்விதமான பென்சுகளை நாம் பரிந்துரைக்கலாமே என்றேன். அது ஒன்றும் சிரமமில்லை என்றார். அனேக ஆலயங்களில் பனை நார் அல்லது ஈறல் போன்றவைகளிலிருந்து உரித்த நார்களைக் கொண்டு சாய்வு பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பணப்புழக்கம் வந்தபோது முழு மரத்தையும் அறுத்து அமைக்கும் பெஞ்சுகள் தேவாலயங்களை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. புதிதாக அமைக்கும் ஆலயங்கள், இவ்விதமாக பனை நார் பெஞ்சுகளை அமைப்பது, எண்ணற்ற முதியோர்களுக்கும் கலைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பளிக்கும் என நம்புகிறேன்.

மும்பையில் துவங்கிய பாம்பே ஃபுட் கோர்ட் (Palmbay Food Court) உணவகத்திற்காக வாங்கிய பனை நார் பெஞ்சுகள்

ஜாய்சனுடைய தந்தையார் பனை நார் கட்டில் பின்னுபவர் தான். ஜாய்சன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு நட்சத்திர விடுதிகளில் வேலை பார்த்திருக்கிறார்.  ஒரு விபத்தினை சந்தித்து  அதற்கு பின்பு ஒரு டீ கடை நடத்தி, அதில் நஷ்டம் ஏற்பட்டு, இப்போது பனை நார் கட்டில் பின்ன களம் இறங்கியிருக்கிறார். குறைந்தது 10 கட்டில்கள் அவர் வசம் எப்போதும் இருக்கின்றன. தொழில் சிறப்பாக இருக்கின்றது ஆனால் போதுமான நார் கிடைப்பதில்லை என்றே அவர் குறைப்பட்டுக்கொண்டார். தென் தமிழகமெங்கும் தனது இரு சக்கர வாகனத்தில் நார் எடுப்பதற்காக அவர் அலைந்து திரிந்ததைக் குறித்து சொல்லும்போது, நாம் இழந்த பனை செல்வங்களின் பிரம்மாண்டம் கண்கள் முன் திரண்டெழுகிறது.

பனை நார் என்பது பனங்கள்ளுடன் தொடர்புடையது என்பதே ஜாய்சனின் புரிதல். பனங்கள் இறக்க அனுமதிக்கப்பட்டாலே பனையேறிகள் இன்னும் அதிக பனை மரங்கள் ஏறுவார்கள். பனங்கள் தான் உடனடி பண தேவையினை உறுதி செய்யும். ஆகவே, அவர்கள் ஏறும் பனைகளிலிருந்து கிடைக்கும் மட்டைகளை உரித்து உபரி வருமானம் பார்க்கும் வாய்ப்பிருப்பதாக ஜாய்சன் அனுமானிக்கிறார். உண்மை அதுதான். பனை ஓலைகளை விட, பனை நார் இன்று காண்பதற்கரிய பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. எப்படி பனை ஓலைகள் முறிக்கப்படும் பனைகளிலிருந்து கிடைக்கிறதோ அது போலவே பனை நாரும் கூட, பெருமளவில் முறிக்கப்படும் பனையிலிருந்தே கிடைக்கிறது.

இந்தியா காலனியாதிக்கத்தில் இருந்தபோது வெள்ளையர் பயன்படுத்திய இயற்கை இழை ஆடும் நாற்காலி (Rocking Chair)

இச்சூழலில் பனை நார் இன்னும் அதிகமாக புழக்கத்தில் வரவேண்டுமென்றால் கண்டிப்பாக நாம் கள் இறக்குவதற்கான உரிமையை பெற்றே ஆகவேண்டும். தமிழகத்தில் நெகிழி தடுப்பிற்குப் பின்பும் பனை ஓலை பொருட்கள் மிகப்பெரிய அலவில் புழக்கத்திற்கு வராததற்கு காரணம், கள் தடை நீடிப்பது தான். இதனை எவரும் புரிந்துகொள்ளுவது இல்லை என்பது தான் நமக்கு விளைந்த கேடு. பாரம்பரியமாக கள் நமது மரபில் உணவாக வந்துகொண்டிருந்த சூழலில், கள் குறித்த தவறான வியாக்கியானங்கள் அளித்தும் அதிகார பலத்தைக் கொண்டும் அதனை அடக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடுவதல்ல. குறிப்பாக, கள் குறித்து அறிந்த ஒருவர் ஒன்றில் கள் இறக்குவதை தொடருவார் அல்லது அந்த மரத்திற்கும் தனக்கும் உள்ள உறவினை துண்டித்துக்கொள்ளுவார். இன்று தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அவலம் என்பது இதுதான். மிக வேதனையுடனே பனையேறிகள் பனையை கைவிடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இன்றும் அனேக முதிய கலைஞர்கள், நார் கிடைக்காமல், தங்கள் கரங்களில் திறமை இருந்தும் தங்கள் ஜீவனத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தொழில் வாய்ப்பு என்பது பனை நார் கட்டில் உருவாக்குவது. எப்போதும் அதற்கு என்று தேவைகள் இருந்துகொண்டே இருக்கும். பல்வேறு கலைஞர்களின் வீட்டில், கட்டில்கள் ஒன்றிரண்டு கட்டப்படாமலே கிடக்கும். மிக அவசர தேவைக்கானவைகளேயே முக்கியத்துவமளித்து, முன்னுரிமையளித்து கட்டில் பின்னுபவர்கள் கட்டுவார்கள். கட்டில் கட்டுபவர்களிடம் வாடிக்கையாளர்கள் விடுக்கும் ஆணைகளும், பணம் கொடுப்பதில் ஏற்படும் இழுபறிகளும் என பலவற்றை ஜாய்சன் கூறுவதை கேட்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் எஞ்சிய கலைஞர்களையும் நாம் சீக்கிரம் அழித்துவிடுவோமே என்ற பதைபதைப்பு எழுகிறது.

பனை நார் கட்டில் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்த ஒன்று என்று குமரி மாவட்டத்திலுள்ள அலோபதி மருத்துவர்களே பரிந்துரைச் செய்வார்கள். நாகர்கோவிலிலுள்ள ஜெயசேகரன் மற்றும் மத்தியாஸ் ஆஸ்பத்திரிகளில் பனை நார் கட்டிலுக்கு என அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டன என்கிற செய்தியும் உண்டு. என்னோடு தொடர்பிலிருக்கும், ஆயுர்வேத சித்த மருட்துவர்கள் எல்லாம் பனை நார் கட்டில் வேண்டும் என திரும்பத் திரும்பச் சொல்லுவதை நான் செவி கூர்ந்தபடி இருக்கிறேன்.

பனை நார் கட்டில் பின்னும் மிடாலக்காட்டைச் சார்ந்த அருணாச்சலம்

குமரி மாவட்டத்தில் வீட்டிற்கு இரண்டு பனை நார் கட்டில்கள் இருக்கும். பெரிய குடும்பம் என்றால் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் வயோதிபர்களுக்கு பனை நார் கட்டிலே பரிந்துரைக்கப்படும். நோய் படுக்கையில் இருப்போருக்கும், படுக்கைப்புண் வராமல் இருக்க பனை நார் கட்டிலையே தெரிவு செய்வார்கள். குழந்தை பெற்ற தாய்மார்கள் கூட பனை நார் கட்டிலில் படுப்பது அவர்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் என சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏன் பிறந்த குழந்தைகளைக் கூட, பனை நார் தொட்டிலில் கிடத்துவது வழக்கமாக இருந்திருக்கிறது. 

பனை நார் கட்டில் எப்படி ஆரோக்கியமானது என கூறமுடியும்? வடிவம் சார்ந்து இரண்டு முக்கியமான காரியங்களை நாம் அவதானிக்கமுடியும். ஒன்று, படுக்கைக்கு கீழே இருக்கும் காற்றோட்டம் நமது உடலுக்கு கிடைக்கிறது. வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் நமக்கு இவ்வித காற்றோட்டம் தேவையாக இருக்கிறது, நாம் தற்போது பயன்படுத்தும்  மெத்தைகள் அவ்விதமான காற்றோட்டத்தை தர இயலாது ஆகவே, மெத்தைகள் வீட்டிற்குள் வந்தாலே, நாம் கண்டிப்பாக குளிரூட்டிய அறையாக நமது வீட்டை மாற்ற விழைகிறோம். இல்லாவிட்டால் மெத்தையில் நம்மால் புரண்டுகொண்டிருக்க இயலாது. இரண்டாவதாக, சிறிய இணுக்குகள் கொண்ட பனை நார் ஒருவித அக்குபங்சராக செயல்படுகிறது. நமது உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அவைகள் சீர் செய்கின்றன. நமது உடலுக்கு தேவையான அழுத்தங்களை நார்களின் பின்னல் அமைப்பு கொடுக்கிறது. நமது அசைவுகளும், புரண்டு படுக்குப்போது ஏற்படும் நகர்தல்களும் நம்மை அறியாமலேயே ஒருவித தொடு சிகிழ்ச்சையை அளிப்பதாக இருக்கிறது. ஆகவே மிகச்சிறந்த கட்டிலாக பனை நார் கட்டில் இன்றும் கோலோச்சுகிறது. இவைகளை சர்வதேச அளவில் கொண்டுசெல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நான் விரும்பி உறங்கிய பனை நார் கட்டில்

அப்படியானால் எப்படி பனை நார் கட்டில்கள் வழக்கொழிந்தன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இவ்வித பயன்பாடு இல்லாதது ஏன் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. மிகச்சரியாக சொல்ல முடியாவிட்டாலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் கண்டிப்பாக இதற்கு ஒப்பான வேறு கட்டில்கள் இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கட்டில் என்ற பிரம்மாண்ட கண்டுபிடிப்பிற்கு இந்தியாவில் ஒரு முக்கிய முகம் உண்டு.

இவ்வித கட்டில்களை வட இந்திய பகுதிகளில் “சார்பாய்” என அழைப்பார்கள். சார் என்றால் நான்கு என்றும் பாயா என்றால் கால்கள் என்றும் அர்த்தம். நான்கு கால்கள் கொண்ட படுக்கையினை இப்படியே அழைக்கிறார்கள். நான்கு கால்களும் நான்கு சட்டங்களும் இவ்வைகை கட்டில்களுக்கு போதுமானது. மரங்களை குறைவாக பயன்படுத்தும் சூழியல் பங்களிப்பை இவ்வித கட்டில்கள் உலகிற்கு பறைசாற்றுகின்றன. இந்தியாவைச் சுற்றிலுமிருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் சார்பாய் பிரசித்தம் பெற்றது. இவ்வித கட்டில்கள் பருத்தி நூல் கயிறு, இயற்கை இழைகள் மற்றும் பேரீச்சை இலைகளைக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்றன என அறிஞர்கள் கூறுகிறார்கள். 

பல்வேறு கண்ணிகள் கொண்ட கட்டில்கள் இருந்தாலும், தென் தமிழக பனை நார் கட்டில்களின் வடிவம் பிற வடிவங்களை விடவும் வித்தியாசமானது. இங்கு தலை முதல் கால்வரை ஒரே பின்னல்கள் ஊடு பாவாக சென்றிருக்கும். ஆனால், வட இந்திய பகுதிகளிலும், சில வட தமிழக பகுதிகளிலும் நாம் பார்க்கும் கயிற்றுக் கட்டில்கள், முக்கால் பங்கு சீரான பின்னல்கள் கொண்டதும் கால் பகுதி மட்டும் இழுத்து கட்டுகின்ற நேர் இழுப்பு தன்மைகொண்டதுமாகும். நேர் இழுப்புகள் பின்னல்கள் தொய்யும்போது இழுத்து கட்டி சீர் செய்ய அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே எனக்குள் கேள்விகள் எழுந்தவண்னம் இருந்தது. இவ்வித கட்டில்களுக்கான ஆதி வடிவம் எங்கிருந்து பிறந்திருக்கும் என என்னையே கேட்டுக்கொண்டேன். எனது தேடுதல்கள் பொதுவாக பொய்த்துப்போவதில்லை. எங்கோ ஒரு மூலையில் நான் தேடியவைகளை, என்னை வழிநடத்தும் ஆண்டவர் எனக்கு அருளியபடியே இருக்கிறார் என்பதுவே இப்பணியில் நான் இன்றுவரை நீடித்திருப்பதற்கான காரணம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் திண்டுக்கல்லை அடுத்த அழகாபுரி என்ற பகுதிக்கு சென்றிருந்தேன். அங்கே ராமலிங்கம் என்ற பனையேறியினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது வீட்டில் பனை நார் கொண்டு பின்னிய கட்டில் அப்படியே வட இந்திய பாணியிலாக அமைந்திருந்தது என்னை துணுக்குறச் செய்தது. கயிற்றுக்கு பதிலாக தடிமனான நார் கொண்டு அமைத்த கட்டில். பார்க்க, சற்றே வடிவ நேர்த்தியற்ற ஒரு கட்டில் தான். அன்று நான் அவருடன் அவரது குடிசையில் தங்கினேன். அந்த கட்டிலில் படுப்பதற்கு அப்படித்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பேரனுபவம் எனக்காக அன்று காத்திருந்தது என்பதை இவ்வுலகிர்க்கு நான் கூவி அறிவித்தே ஆகவேண்டும். தாய்மடியில் படுத்துறங்கும் ஒரு உன்னத தருணமாகவே அதனை நான் கருதுகிறேன். பல்வேறு நட்சத்திர விடுதிகளில் நான் தங்கியிருந்தாலும், என்னால் இதற்கு ஒப்பான ஒரு சுகமான உறக்கத்தினை நினைவில் கொள்ள முடியவில்லை. வெறும் மூங்கில்களைக் கொண்டு கால்களையும் சட்டங்களையும் செய்த அவர், அவருக்கே உரித்தான தனித்துவ வடிவத்தினை உருவாக்கியிருந்தார். வேறு எங்கும் இத்தனை “பச்சையாக” எவரும் நார் கொன்டு பின்னி நான் பார்த்ததில்லை. 

அழகாபுரி இராமலிங்கம் பின்னிய கட்டில்

ராமலிங்கம் அவர்களிடம் எனக்கென ஒரு கட்டிலை செய்து தரச் சொன்னேன். அதற்காக பலமுறை அவரைத் தேடி சென்றேன். ஒவ்வொரு முறையும் அவர், எதோ ஒரு காரணத்தைச் சொல்லி என்னை ஏமாற்றியபடியிருக்கிறார். கடைசியாக நான் போன சமயத்தில், உங்களுக்காக மூங்கில் மற்றும் நார்கள் எடுத்து வைத்திருக்கிறேன், கொஞ்சம் பொறுமை காருங்கள் என்றார். இராமலிங்கத்திடம் நாம் கோபப்படவே முடியாது. அந்த அளவிற்கு அன்பாக பேசி நம்மையே நல்வழிப்படுத்தும் மகான் அவர். அவருடன் ஒரு மூன்று நாட்கள் ஒரு சேர இருந்தாலே எனக்கு அவ்விதமான ஒரு கட்டில் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பனை நார் கட்டில்களில் பழங்காலத்தில் இருந்த முக்கிய பிரச்சனை என்னவென்றால் மூட்டைபூச்சிகள் அதில் வந்து சேர்ந்துகொள்ளும். பனை நார்கள் குவிந்திருக்கும் இடுக்குகளுக்குள் மூட்டைப்பூச்சிகள் சென்று ஒளிந்துகொள்ளும். அதிலிருந்து  மூட்டைப்பூச்சிகளை நீக்குவது என்பது இயலாத ஒரு காரியமாக பார்க்கப்பட்டது. பெரும்பாலும், மூட்டைப்பூச்சிகளை கொல்லுவதற்கு என மருந்துகள் அடிக்கப்பட்டன. ஆனால் அவைகளை விட மூட்டைகள் வீரியமாக வளர்ந்தன. இருபது வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் சென்னையிலுள்ள ஒரு திரையரங்கிற்கு சென்றிருந்தேன், அங்கே ஏதோ கடிக்கிறது என கால்களுக்கு கீழே கையை வத்து பார்த்தபோது கையில் பிசு பிசுவென ஏதோ ஒட்டிக்கொண்டது. இருட்டில் என்ன என முகர்ந்து பார்த்தேன். குமட்டலுடன் அப்படியே வெளியே ஓடினேன். மூட்டைப்பூச்சி நசுங்கி குமட்டும் நாற்றமெடுத்திருக்கிறது.

மூட்டைப்பூச்சிகள் பொதுவாக திரையரங்குகளிலிருந்தே வீடுகளுக்கு வந்தன என்றும், வீடுகளிலிருந்து திரையரங்கிற்கு சென்றன என்றும் பரஸ்பர குற்றம் சாட்டும் காலம் இருந்தது. ஆனால், நோயாளிகள் படுத்திருக்கும் கட்டில்களில் கூட மூட்டைபூச்சிகள் வந்து அடைந்து மிகப்பெரிய தொந்தரவை அளித்துக்கொண்டிருந்த காலம் உண்டு. பனை நார் கட்டில்களை சரித்து வைத்துவிட்டு கொதிக்கிற வென்னீரை பனை நார் கட்டில்கள் மேல் ஊற்றுவார்கள். ஆனாலும், மூட்டைப்பூச்சிகளைக் கொல்லுவது எளிதல்ல. அவைகள், பனை நாருக்குள் சென்று சுகமாக உறங்கும், ஒளிந்திருக்கும். பனை நார்கள் பெருமளவில் சூடு கடத்தாதவைகள் ஆதலால், ஒரு சில கண்டிப்பாக தப்பித்துக்கொள்ளும். ஓரிரு நாட்களிலேயே பெருகி மீண்டும் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கும். மாதத்திற்கொருமுறை வென்னீர் ஊற்றுவது பனை நார் பொருளின் ஆயுளைக் கூட்டும் என்பதாக சொல்லுவார்கள்.

நார் கட்டில்கள் என்று மட்டுமல்ல, நார் கயிறுகள் செய்யும் நுட்பங்களும் நமது மக்களிடம் இருந்திருக்கின்றன. மாட்டிற்கான மூக்கணங் கயிறு முதல், பல்வேறு கயிறுகள் பனை நார்கொண்டு செய்யும் அறிவு நமது மக்களிடம் இருந்திருக்கின்றன. தென் மாவட்டங்களைப் பொறுத்த அளவில், பனை நார் கொண்டு பெட்டிகள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பஞ்சவர்ணம் அத்தை எங்களுக்கு தோசை சுட்டு நார் பெட்டியில் சுமந்து கொண்டு கொடுத்ததாக அம்மா சொல்லியிருக்கிறார்கள். நான் பிறப்பதற்கு முந்தைய காலமாக அது இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

பண்ணைவிளை அசனத்தின்போது பயன்பட்ட நார் பெட்டிகள்

நார் பெட்டிகளுக்கு என சமூக அங்கீகாரம் உண்டு. திருமண வீடுகளில் நார் பெட்டிகளையே சீதனமாக கொடுப்பார்கள். அரிசி பெட்டி என்றும், முறுக்குப்பெட்டியென்றும் அவைகளுக்கு பெயர் உண்டு. இதைத்தான், பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள், நாடார்களும் செட்டியார்களும் தங்கள் திருமணத்தில் நார் பெட்டியினை பயன்படுத்தியிருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். குமரி மாவட்டத்திலுள்ள நார் பெட்டிகள் மீது எனக்கு மிகப்பெரிய விருப்பம் இல்லை. அவைகள் என்னை கவரவும் இல்லை. வர்ணங்கள் இட்டிருந்தாலும், அவைகள் மிகப்பெரிதான பொழிகள் கொண்டு செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை, நான் மிகச்சரியான அழகுள்ள நார் பெட்டிகளை பார்க்கவில்லையோ என்னவோ. அல்லது அடிக்கடி பார்த்த பெட்டிகள் மீதான சலிப்பா எனவும் கூற இயலவில்லை.

நார் பெட்டிகள் அழகுற செய்யப்படவேண்டுமென்று சொன்னால், பொறுமையுடன் செய்யப்படவேண்டும். அதன் செய்நேர்த்தி மட்டுமல்ல உறுதியும் முக்கியமானவைகளே. உறுதி இல்லாத நார் பெட்டிகள் அழகை இழந்துவிடுகின்றன. ஏன் உறுதியற்ற பெட்டிகள் இன்று தயாரிக்கப்படுகின்றன? சீர்வரிசை பொன்ற ஒருசில சடங்குகளுக்காக மட்டும் நார் பெட்டிகள் செய்யப்படுகின்றன. மங்கி வரும் இவ்வித கலாச்சார பொருட்கள் வெறுமனே அடையாளமாக காணப்படுவதால், மலிவான நார் பெட்டிகள் கடைக்கு வருகின்றன. ஒரு பெட்டி செய்வதற்கான ஊதியமோ அல்லது அதற்குண்டான மரியாதையோ இங்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் இவ்வித அழகுணர்சியற்ற பெட்டிகள் வர காரணமாகின்றன. 

இதற்கு ஒப்புநோக்க மதுரையை அடுத்த பெருமாள் பட்டி என்ற ஊரிலுள்ள பனை நார் பெட்டிகள் தமிழக அளவில் சிறந்த வடிவ நேர்த்தி கொண்டவைகள். சன்னமான நார்கள், பொறுமையாக இழைக்கப்பட்டு அழகுற செய்யப்படுபவைகள். குமரி மாவட்டத்தை ஒத்த நார் பெட்டிகள் தான் செட்டியார்களின் வடிவமைப்பில் இருக்கின்றன. ஆனால், செட்டியார் நார் பெட்டிகளின் விளிம்பு மிகவும் அகலமாக இருக்கும். நார்களும் நேர்த்தியாக வகுந்தெடுக்கப்பட்டிருக்கும். தேவையற்ற வர்ணங்கள் இருக்காது.

மதுரையை அடுத்த பெருமாள்பட்டி நார் பெட்டிகள்

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற அசன விழாக்களின் போது, நார் பெட்டிகளை கொடையாக வழங்கும் முறைமை இன்றும் இருக்கிறது. சுட சுட சோறுகளை அள்ளி எடுத்து செல்ல இதனையே பயன்படுத்துவார்கள். சுடு சோறு நார்களில் பட்டு எழுப்பும் வாசனை பசிக்காதவர்களையும் சுண்டி இழுத்து கூட நான்கு கவளத்தை உள்ளிழுக்க வைக்கும் ஆற்றல் மிக்கது.

2018 ஆம் ஆண்டு எனது ஒரிய பயணத்தில், ஒரு குடியானவர் வீட்டில் நார் பெட்டியை ஒத்த ஒரு பெட்டியினைப் பார்த்தேன். பின்னல்முறை வேறு வகையில் இருந்ததோடல்லாமல், அதன் விளிம்புகளும் தனித்துவமாக இருந்தது. நான் அதனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஈட்டி மரத்தினை இழைத்து , மொழுமொழு தன்மைகள் கொண்ட இழைகளை இழுத்து கட்டியது போன்ற ஒரு பெட்டி. ஒருவகையில் பருமனான ஈட்டி மரத்தை அப்படியே குடைந்து எடுத்து செய்திருப்பார்களோ என ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆவல் பொறுக்கமுடியாமல் அதனை அணுகிச் சென்று தொட்டு தடவிப்பார்த்தபோது தான் அது பனை நார் என்கிற உண்மை உறுதியானது. பல வருட புழக்கம் உள்ள அந்த பெட்டியின் அழகிற்கு ஈடு இணையான எந்த நார் பெட்டியினையும் நான் இதுவரைப் பார்க்கவில்லை. பல வருடங்களாக கைகள் பட்டு வழுவழுப்பாகவும் ஒரு தனித்துவ மினுமினுப்பு கொண்ட ஆப்பிரிக்க அழகினை ஒத்திருந்தது அந்த பெட்டி. இந்த பெட்டி எனக்கு கிடைக்குமா எனக் கேட்டு அள்ளி எடுத்து வந்துவிட்டேன்.  

ஓலைப்பொருட்களின் மீது நார் பொத்துவது அழகினையும் உறுதியினையும் அப்பொருளின் ஆயுளையும் கூட்டும் என்னும் உண்மையினை வெகு சமீபத்தில் தான் நான் அறிந்துகொண்டேன். ஆகவே எனது தொப்பி, நான் பயன்படுத்தும் திருமறை பை மற்றும் பயணப்பைகள் அனைத்தையும் நார் கொண்டு பொத்திவிட முடிவு செய்தேன். இப்போது இவைகள் அனைத்தையுமே பிற பனையோலைப் பொருட்களுடன் இணைத்து கண்காட்சி அமைக்க முடிவுசெய்திருக்கிறேன்.

போவாஸ் பனை விதைகளுடன்

எழுத்தாளர் பொன்னீலன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பனம்பூ மாலை குறித்து பெருமளவில் பேசப்படுகிறது ஆனால் “நார்முடி சேரல்” என்பது குறித்த பேச்சுகள் பரவலாக இல்லை என்றார்.  “களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்”, பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் கரிய களக்காய் போன்ற மணிகளையும் முத்துக்களையும் பொன்னிழைகளில் கோர்த்து பட்டுத்துணியால் செய்த தலைபாகையாக அணிந்துகொண்டவன் என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. “நார்முடி” என்ற வார்த்தை சேர மன்னர்கள் தங்கள் மணி மகுடமாக பனை நாரினை கொண்டிருந்தார்கள் என குறிப்பால் உணர்த்துகிறது என அவர் கூறினார். பனை நாரினை இழப்பது, நமது சங்க இலக்கியத்துடனான நமது நேரடி தொடர்பை இழப்பது ஆகும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: