Archive for ஏப்ரல், 2021

பனைமுறைக் காலம் 17

ஏப்ரல் 10, 2021

பனைபொருள் பலவிதம்

பால்மா ஜேக்கப் அவர்கள், என்னோடு பயணம் செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். நான் அதனை முதன் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், எனது பயணங்கள் என் போக்கில் நிகழ்பவை, எங்கும் ஒட்டிக்கொள்ளுவேன். ஆனால் ஜேக்கப் ஒரு அலுவலகத்தை நிர்வகிப்பவர், என்னோடு அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று எண்ணினேன். ஆகவே, என்னை உற்சாகப்படுத்தும்படியாக சொல்லியிருக்கலாம் என்பதால், அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் மீண்டும் மீண்டும் பயணம் குறித்து வலியுறுத்தும்போது, அவர் விளையாட்டாக பேசவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.  ஒரு மூன்று நாள் பயணம் அப்படித்தான் ஒழுங்கானது. அவர்களது வாகனத்தில் பயணிக்கலாம் என்றும், பயண செலவுகளை அவர்களே பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்கள் என்றும் சொன்னார். அது எனக்கு வரம். எனது பயணத்தின் ஆழத்தை அவர்கள் அதிமுக்கியமானதாக கருதியிருந்தால் ஒழிய, அவர்கள் இப்படியான ஒரு பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பார்களா? இருக்கமுடியாது என்று எண்ணியபோது, அவர்களின் அழைப்பிற்கு நான் தலைவணங்கினேன்.

அக்டோபர் 20 வாழ்வின் மற்றுமொரு முக்கிய நாள். ஜேக்கப் அவர்களுடன் நாங்கள் திட்டமிட்டபடி மூன்று நாள் பயணத்தை தேவிகோடு என்ற பகுதியிலிருந்து துவங்கினோம். காலை 6. 30 மணிக்கு வண்டி நாங்கள் தங்கியிருந்த ஜாஸ்மினுடைய தம்பி ஜெகன் வீட்டிற்கு முன்னால் வந்து சேர்ந்தது. நான் ஏறிக்கொண்டேன். வண்டி ஓட்ட ஜெனிஷ் (24) துணைக்கு விபின் (24) ஆகிய இருவரும் உடன் வந்தார்கள். அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை, முழுமையாக எனது பயண திட்டத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்து வந்திருந்தார்கள். சிறப்பு என்னவென்றால், நானும் எந்தவிதமான திட்டங்களையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி வழியாக நாகர்கோவில் வந்து மூன்று நாளில் பயணத்தை முடிக்கும் ஒரு கற்பனை வரைவு இருந்தது. ஆகவே செல்லும் வழியில் இருக்கும் நண்பர்களை தொடர்புகொண்டு எனது வருகையினை அறிவித்துவிட்டேன்.

ஓலை பெட்டிகள் , பாய்கள் மற்றும் வாழை நார் விற்பனை செய்யும் கடை, தோவாளை பூ சந்தை

தோவாளையைக் கடக்கும்போது, வண்டியை நிறுத்தச் சொன்னேன். தோவாளை பூ சந்தை உண்மையிலேயே உலக பிரசித்தி பெற்றது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக உலகின் பல நாடுகளுக்கு பூக்கள் சென்று சேரும். அதிகாலை பூக்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பால் அவசரம் வண்டியை விட வேகமாக செல்பவை. அவைகளில் எடுத்துச் செல்லப்படும் பூக்கள், பனை ஓலைக் கூடைகளிலும், பனை ஓலைப் பாயினை மடித்து செய்யும் கூடைகளிலுமே அனுப்புவார்கள். பனை ஓலை இயற்கைப் பொருளானதால், பூக்கள் சேதமடைவதில்லை. காலையில் வாங்கிய பூக்கள், பனை ஓலை கூடைக்குள் மாலை வரை எவ்வித வெம்மைக்கும் ஆளாகாமல் பளிச்சென்று இருக்கும். ஆகவே, அவர்கள் பூக்களை எப்படி கையாளுகிறார்கள் என பார்க்கச் சென்றோம்.

ஓலை பெட்டிகள் மற்றும் பாய்கள் இருந்க்டாலும் பிளாஸ்டிக் பெட்டிகளல் நிறைந்திருக்கும் தோவாளை பூ சந்தை

2017ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலாக தோவாளை பூ சந்தையைக் காணச் சென்றேன்.  ரங்கிஷ் என்னுடன் இருந்தான். ஒரு ஆவணப்படம், எடுக்கும் நோக்குடன் நாங்கள் அங்கே சென்றிருந்தோம். நாகர்கோவிலில், திருமணங்களுக்காகவோ அல்லது மரணசடங்குகளுக்காகவோ பூக்களை வாங்கும்போது ஓலை பெட்டியில் வைத்தே கொடுப்பார்கள். அந்த பெட்டிக்கு விலை இருக்காது. அதன் பின்னல்களும் உறுதியாக இருக்காது. இடைவெளியிட்டு, ஒற்றை பின்னல்கள் கொண்டதும், கால் முட்டளவு உயரம் கொண்டதாகவும் இருக்கும். கருப்பட்டி கொட்டானைப் போலவும் புளி கொட்டானைப்போலவும் அகலம் குறைவாகவும் பின்னப்பட்டிருக்கும் இப்பெட்டிகள் உயரம் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆகவே, பூச்சந்தையின் முக்கிய பயன்பாட்டு பொருளாக பனை ஓலை பொருட்கள் இருக்கும் என்றே சென்றோம்.

பூக்கள் பனை ஓலைப் பாய்களில் விரித்திடப்பட்டிருந்தன, பனை ஓலையில் செய்த பாய்களை சுருட்டி, அவைகளை ஒரு உருளைப் பெட்டி போல் மாற்றி பூக்களை எடுத்துச் செல்வதை பார்த்தோம். அனைத்து டெம்போக்களிலும், பனை ஓலைப் பாய்கள், பெட்டிகள் அதிகமாக இருப்பதைப் பார்த்தோம். ஆனால், பிளாஸ்டிக்கின் வரவு பெருமளவு துவங்கியிருந்தது தான் உண்மை.

உள்ளே பிளாஸ்டிக் பையில் பூ, வெளியே பனை ஓலைப் பெட்டி. தோவாளை

இம்முறைச் செல்லும்போது, பனை ஓலைகளை தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பிளாஸ்டிக் மயமாக அந்த இடம் காட்சியளித்தது.  பனையோலைக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று கைவிரித்து நிற்கின்ற தோவாளையை பார்க்கும்போது உறைந்துபோனேன். நான்கே வருடங்களில் தலைகீழ் மாற்றம். பூக்களை நம்பியே வாழும் குடும்பங்கள், பனை ஓலைகளை நம்பி வாழ்பவர்களை கைவிட்டிருப்பது தெரியவருகிறது. ஆனாலும் மரபின் தொடர்ச்சியாக ஓரிரு இடங்களில் பனை ஓலைப் பாயும் பாஉக்கள் எடுத்துச் செல்லும் பெட்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.  சோர்வுடன் தான் வெளியேறினோம்.

இதே சூழல் தான் கடற்கரையிலும் நிகழ்த்தது. பிளாஸ்டிக் பெட்டிகள், பனை ஓலைப்பெட்டிகளை அகற்றியது. நவீனம், தனது கோர முகத்துடன் உள்நுழைவதற்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறோம். இறுதியில் மிகப்பெரும் அழிவுகளை இணைந்து செய்ய நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுக்கிறோம். இன்று தோவாளையைச் சுற்றிலும் பனை மரங்கள் இருக்கின்றன. குமரி மாவட்டத்தின் மிகப்பெரும் பனங்காடு, தோவாளை அருகிலிருக்கும் ஆரல்வாய்மொழி பகுதிகளில் தான் இருக்கின்றன. ஆனால், ஓலைகளை எடுத்துக்கொடுக்கும் பனையேறிகள் இல்லை. ஆகவே பனை ஓலைக் கலைஞர்கள் அருகிவிட்டார்கள். இன்று தோவாளைக்கு வருகின்ற ஓலைப்பொருட்கள் அனைத்தும் இராமனாதபுரத்திலிருந்தே வருகிறது. இனிமேல் அதற்கும் தேவை இருக்காது போலும்.

காலை உணவை அங்கே சாப்பிடலாமா என்று எண்ணியபின், வேண்டாம் என முடிவெடுத்து தொடர்ந்து சென்றோம். சிவகாமிபுரத்தின் அருகில் வண்டி சென்றபோது, பனையேறி வெட்டும்பெருமாள் அவர்களின் நினைவு வந்தது. இங்கும் ஆவணப்படத்திற்காக நானும் ரங்கிஷும் வந்திருக்கிறோம். அக்டோபர் மாதம் ஆனபடியால், பனை ஏறத்துவங்கியிருப்பார்கள் என்ற உறுதியிருந்தது. உள்ளே கிராமத்திற்குள் சென்றபோது பனை நாரினை சைக்கிளில் கட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் ஒரு மனிதரைப் பார்த்தேன். அவரை சந்தித்து, அவருடைய எண்ணை வாங்கி உடனேயே ஜாய்சனுக்கு அனுப்பினேன். கட்டில் நார் பின்னுகிற அவருக்கு அது தேவையாக இருக்கும் என எண்ணினேன். எங்களிடமிருந்த பனை விதை பெட்டியினை அவருக்கு கொடுத்தோம்.

நார் விற்பவருக்கு பனை விதைப் பெட்டி, சிவகாமிபுரம்

அந்த தெருவில் தான் வெட்டும் பெருமாள் அவர்கள் வீடு. ஜேக்கப் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றேன். வெட்டும் பெருமாள் அண்ணனின் மனைவிக்கு என்னை நினைவிருந்தது. அங்கும் ஒரு பனை விதை பெட்டியினைக் கொடுத்தோம். பின்னர் அங்குள்ள விபரங்களை சேகரித்தோம். கருப்பட்டி காய்ச்சத் துவங்கியிருப்பதாக கூறினார்கள். மொத்தமாக எடுத்தால் கிலோவிற்கு 350 வைத்து கொடுப்பதாக சொன்னார்கள். பதனீர் வேண்டுமென்றால், காட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதையும் சொன்னார்கள்.

பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டிகள் (கலயம்), சிவகாமிபுரம்

அவர்கள் குறிப்பிட்டிருக்கும் காடு மேற்குதொடர்ச்சி மலையின் கீழே, இருந்தது. அங்கே பனங்காடுகள், நிறைந்திருக்கும். ஆனால் அந்த பகுதிகளுக்கும் அருகில் காற்றாலைகள் வந்துவிட்டன. காற்றாலைகள், மக்களை சிறிது சிறிதாக அங்குள்ள பாரம்பரிய தொழில்களிலிருந்து அப்புறப்படுத்துகின்றன. காற்றாலைக்காக வாங்கும் நிலங்களிலிருந்து கிடைக்கும் பணம், பனை குறித்து எவரையும் சிந்திக்க விடுவதில்லை.

புத்துணர்ச்சி அளிக்கும் பதனீர்

இதற்குமேல் வண்டி செல்லாது என்று தோன்றிய ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, நடக்கத்துவங்கினோம். காட்டிற்குள் நாங்கள் வழிதப்பிவிடும் அளவிற்கு பாதைகள் பிரிந்து செல்வதும், அடர்ந்தும் காணப்பட்டது. வெட்டும் பெருமாள் அண்ணன் பனையேறிக்கொண்டு வீட்டிற்கு தனது டி வி எஸ் 50ல் வந்துகொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நிறுத்தி நலம் விசாரித்து எங்களுக்கு பாதை காட்டிவிட்டு சென்றார்கள். அவர் கூறிய பாதை வழியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயணித்திருக்கிறேன். ஆனால், இன்று சரியாக நினைவில்லை. தடுமாறிக்கொண்டே சென்றோம். நாங்கள் சென்று சேர்ந்த தோட்டத்தில் பதனீர் கலயங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு கைவிடப்பட்ட வீடு இருந்தது. அங்கே வந்த சில வாலிபர்கள் தொடர்ந்து சென்றால் விடிலி வரும் என்றார்கள்.

கடலை பயிரிடப்பட்டிருக்கும் பனங்காடு, சிவகாமிபுரம்

தொடர்ந்து சென்றுகொண்டிருந்தோம். வெம்மை ஏறுகின்ற நேரம். அங்கே சென்றபோது, நாங்கள் தேடிச்சென்ற விடிலியில் ஒரு பாட்டி இருந்தார்கள். பதனீர் வேண்டும் என்றோம், கிழக்காக போங்கள் என்றார். தூரத்தில், தெரிந்த விடிலி நோக்கிச் சென்றோம். அந்த வயக்காடு முழுவதும் கடலை பயிரிட்டிருந்தார்கள். பச்சைப்பசேலென கடலை செடியும், உயர்ந்தெழுந்த பனைகளும் சூழ அந்த இடம் ஒரு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தந்தது. வேர்கடலையை மிதிக்காமல் கவனமாக கால்களைத் தூக்கிச் சென்றோம். ஒரு வழியாக அரைமணி நேரத்திற்கு பின்பு அந்த இடத்தை அடைந்தோம். 9 மணி ஆகிவிட்டிருந்தது

ஜெனிஸ் மற்றும் விபின் ஆகியோர் பதனீரை பட்டையில் ஊற்றி சுவைத்து குடிக்கின்றனர்

ஒரு விடிலியில் பெண்மணி ஒருவர் மட்டும் இருந்தார். சற்று தொலைவில் அவரது கணவர் பனையேறிக்கொண்டிருந்தார். பதனீர் வேண்டும் என்றவுடன், கருப்பட்டி காய்ச்ச ஆயத்தமான பெண்மணி, நிறுத்திவிட்டு அவரது கணவரைப் பார்த்தார். அவர், அங்கிருந்த ஒரு கலயத்தை எடுத்து அகப்பையில் பதனீரைக் கோரி ஊற்றி, பனையோலைப் பட்டையினை எடுத்து மடித்துக் கொடுத்தார்.  பவ்வியமாக இருகரத்தில் பிடித்து கலயத்திலிருந்து அவர் ஊற்றிய பதனீரை வாங்கி பருகினோம். வயிறு முட்ட குடித்தோம். நாங்கள் போதும் என்றபோது, அவர்கள் நெருப்பிட்டு கருப்பட்டி காய்ச்ச துவங்கினார்கள். அன்றைய காலை உணவு அதுவாகத்தானிருந்தது. இனிப்பான அந்த காலை உணவு அந்த நாள் முழுக்க எங்களுக்கான ஆசியினை உள்ளடக்கியிருந்தது.

காய்ச்ச தயாரான பதனீரை எங்களுக்கென எடுத்துக் கொடுக்கிறார் பனையேறி, சிவகாமிபுரம்

பணக்குடியினைத் நெருங்கும்போது பனை முறம் செய்யும் ராமகிருஷ்ணன் அவர்களை பார்க்கச் சென்றோம். அவர் வீடு மாறியிருந்தார். முன்பு தங்கியிருந்ததற்கும் அருகிலேயே வாடகைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.  அலைபேசியில் அவரை அழைத்தபோது சாலைக்கு வந்து எங்களுக்கு வழி காட்டினார். அழகான பாரம்பரிய வீடு அது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளவர்கள் முறத்தினை சுளவு என்பார்கள். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முறம் பனை நம்முடன் பயணிக்கும் ஒரு மரம் என்பதற்கான வலுவான சான்று. முறத்தினை மூங்கிலிலும் செய்வார்கள். முதலில் தோன்றியது மூங்கில் முறமா? அல்லது பனை முறமா என்கிற கேள்விகள் இன்று எஞ்சியிருந்தாலும், இவைகள் ஒரே காலகட்டத்து கண்டுபிடிப்புகள் என்றே நான் கருதுகிறேன். அந்தத்த நிலப்பரப்பில் கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரே காலகட்டத்தில் உருவாக்கிக்கொண்டனர் என்பது ஏற்புடைய வாதம் என்றே நான் கருதுகிறேன்.

முறம் செய்ய பனையோலை ஈர்க்கு கொண்டு அமைக்கப்பட்ட தட்டு

முறம் செய்கின்ற சமூகம் பெரும்பாலும் தலித் சமூகத்தினராக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பாவூர்சத்திரம் அருகிலுள்ள அர்னாபேரி என்ற ஊரில் நாடார்கள் முறம் பின்னுவதைப் பார்த்தேன். பொதுவாகவே, பழங்குடியினரும் தலித் மக்களும் செய்கின்ற பனை சார்ந்த பொருட்களும் அவைகளின் வடிவங்களும், பின்னல்களும், அவைகளை வெகு பழங்காலத்தை சார்ந்தவைகளாக பறைசாற்றிக்கொண்டிருக்கும். ராமகிருஷ்ணன் மிக நேர்த்தியாக முறங்களைச் செய்பவர். கிட்டத்தட்ட 40 வருடங்களாக முறம் செய்வதை மட்டுமே தனது வாழ்வின் ஆதாரமாக வைத்திருக்கிறார். தெற்கு வள்ளியூரில் இன்றும் அவரது உறவினர்கள் சிலர் முறம் பின்னுவதை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதைக் குறிப்பிட்டார். அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பணக்குடியில் தங்கி தனது தொழில் வாய்ப்பினை ராமகிருஷ்ணன் முன்னெடுக்கிறார். கள்ளர் மற்றும் தேவர் சமூகத்தினரின் ஒரு பிரிவான பட்டங்கட்டியார் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தேவர் சமூகத்தில் பனை ஓலைப்பொருட்கள் செய்யும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கே புது தகவல் தான். அவரது செய் நேர்த்தி, உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடையது. ஜேக்கப் அவரிடமிருந்து சில முறங்களை வாங்கிக்கொண்டார். அவரது எண்ணையும் எடுத்துக்கொண்டார்.

இராமகிருஷ்ணன், அவர் செய்த அழகிய முறத்துடன்.

மும்பையில் பொது முடக்கத்தின்போது நான் கலந்துகொண்ட ஒரே திருமணம் லெனினுடையது. மொத்தமே இருபது நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்விற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். முதல் முடக்கம் உச்சத்திலிருந்தபோது, களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுள் அவனும் ஒருவன். எஙள் திருச்சபைக்கும் சில பொருட்களை எடுட்து வந்தான். பொது முடக்கம் சற்று தளர்ந்தபோது சொந்த ஊரான நாங்குநேரிக்கு குடிபெயர்ந்தார். அவரது தந்தையும் தாயும் என்மீது அன்புகொண்டவர்கள். ஆகவே, நான் அவர்களைப் பார்த்து, ஒரு இறை மன்றாட்டை ஏறெடுத்துச் செல்ல திட்டமிட்டேன். ஜேக்கப் போகலாம் என்றார்கள். கிராமத்தில் இருந்த அவர்கள் வீட்டை நாங்கள் கண்டுபிடித்து சென்றபோது லெனினுடைய தாயார் மட்டும் இருந்தார்கள். நான் அங்கு சென்றது அவர்களுக்கு நிறைவளிப்பதாக இருந்தது. பழங்கள் கொடுத்தார்கள். அப்போதுதான் பதனீர் குடித்திருந்தபடியால், எதுவும் சாப்பிடவில்லை. ஜெபித்துவிட்டு புறப்பட்டோம். 

எங்கள் பயணம் தொடர்ந்தது. முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். காலை பதினோரு மணி போல அவர் இருந்த செய்துங்கநல்லூர் என்ற ஊருக்குச் சென்றோம். ஆச்சரியமாக, அவருடன் நான் ஏற்கனவே சந்தித்திருந்த கருங்குளம் பால்பாண்டி அவர்களும் இருந்தார்கள். எனக்கு சால்வை அணிவித்து முத்தாலக்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சனல்லூர் குறித்த புத்தகத்தை பரிசாக கொடுத்தார்கள். எனக்கு உண்மையிலேயே தலை கால் புரியவில்லை. “மும்பையிலிருந்து காட்சன் ஆதிச்சநல்லூர் வருகிறார் என்றால் அது பெரிய விஷயம் இல்லையா” என்றார். அவர் பூடகமாக எதையோ சொல்ல வருகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மிகச்சரியாக என்னவென்பதை கணிக்க முடியவிலை. சரி பொறுத்திருப்போம் பின்னர் பேசலாம் என நினைத்துக்கொண்டேன். எங்களுக்கு தேனீர் மற்றும் வடை போன்றவைகளை வாங்கி கொடுத்து உபசரித்தார்.

எரித்துபோன இடத்தில் உயிர்ப்புடன் எழுந்துநிற்கும் பனை, ஆதிச்சநல்லூர்

நாங்கள் ஆதிச்சநல்லூர் சென்றபோது, அங்கே இரண்டு காவலர்கள் இருந்தனர். அங்கே ஒரு பத்திரிகையாளர் வருகிறார் என அவர் சொன்னதால் காத்திருந்தோம். அங்கே ஒரு பத்திரிகையாளர் வருகிறார் என அவர் சொன்னதால் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் எனது நண்பரும் பத்திரிகையாளருமான காட்சன் வைஸ்லியும் இணைந்து கொண்டார். நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க அந்த பகுதியினை சுற்றிப்பார்க்க சென்றோம். சாலையிலிருந்து ஒரு மேடேறியது. அங்கு மண் வெள்ளைக்கற்களும் செம்மண்ணுமாக பற்றி இறுகியிருந்தது, தாவரங்களின் வளர்ச்சி ஏதும் இல்லை. முதுமக்கள் தாழி போன்றவை பார்க்கலாம் என்று போன எனக்கு, அவர்கள் இரண்டு குழிகளை மட்டுமே காண்பித்தார்கள். இரண்டும் அடுத்தடுத்து இருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி ஒரு அகழ்வாய்வு நடந்த இடத்தில் நிற்கிறேன். மிக சீராக வெட்டியெடுக்கப்பட்ட சதுரக் குழிகள். ஐந்து அல்லது ஆறு அடி தாழ்ச்சி இருக்கலாம். வெட்டியெடுத்த பகுதிகளிலும் சில பானை ஓடுகள் எஞ்சி இருந்தன. ஆனால் பெரிதாக ஏதும் பார்ப்பதற்கு இல்லை.

அப்போது முதலில் எந்த குழியினை வெட்டினார்கள், அவர் எவ்விதமாக இந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் போன்றவற்றை சொல்லியபடி வந்தார். மேட்டில் வேறொரு பெரிய குழி இருந்தது அங்கே ஒரு பானையினை எடுக்காமல் விட்டிருந்தனர். மறுநாள் இவை அனைத்தையும் மண் கொண்டு மூடவிருப்பதாக முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் கூறினார்கள். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே நான் எண்ணினேன். அந்த மேட்டுப்பகுதியில் நான் ஏறி வந்தபோது அவர் காண்பித்தது தான் ஆச்சரியமளிக்கும் ஒன்றாக இருந்தது. அங்கே ஒரு குழி, வெண்மையால் நிறைந்து இருந்தது, மற்ற குழிகள் போல காணப்படவில்லை. அது ஒரு சுண்ணாம்பு காளவாய் போல இருந்தது. எனது மனதிற்குள் பல்வேறு எண்ணங்கள் ஓடத்துவங்கியது.

முத்தாலக்குறிச்சி காமராசு ஒரு போராளி. சுமார் 25 வருடங்களாக இப்பகுதி குறித்த ஆய்வுகளில் தன்னார்வலராக ஈடுபடுத்திக்கொண்டவர். கீழடி குறித்த பேச்சுக்கள் மேலெழுந்தபோது ஆதிச்சநல்லூர், முக்கியத்துவம் பெறாமல் இருந்தது கண்டு போராடியவர் இவர். 130 ஆண்டுகளாக அவ்வப்போது திறந்து மூடப்பட்டுவரும் ஆதிச்சநல்லூர், இங்கே தமிழர்களது நாகரீகத்தை வெளிப்படுத்தும் ஒரு அரும்பெரும் சுரங்கம் என்பதை கண்ணுற்றதால், அதனை தனது வாழ்நாள் பணியாக எடுத்து பொதுவெளியில் பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். தென் மாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஜாதியம் தலை தூக்கி இருக்கையில், இங்கே கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், எந்த சாதியினரைக் குறிப்பதாக இருக்கிறது என்னும் எண்ணம் மேலோங்கியிருப்பதால், ஆய்வாளர்களே சற்று நிதானமாகத்தான் களமாடுகிறார்கள். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலத்தில் இன்றுபோல் சாதிய அமைப்பு இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர். அவ்வகையில், தமிழக அரசு தற்போது அவருக்கு வழங்கிய விருது என்பது, அவரது போராட்ட குணத்திற்கும், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அவர் காட்டிய தன் முனைப்பிற்கும் அச்சாரமானது.  

முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களிடம் அந்த சுண்ணாம்பு காளவாய் குறித்து பேச்செடுத்தேன். அப்போது அவர் அது ஒரு உலையாக இருக்கக்கூடும் என்றார். இரும்பு உருக்க பயன்பட்ட இடமாக இருக்கலாம், அல்லது, பானைகள் சுட்டெடுக்க பயன்பட்டிருக்கலாம், ஏன் சுண்ணாம்பு காளவாயாகவும் இருக்கலாம் என்றார். பானைகள் சுட்டெடுப்பதற்கான காரணம் இருக்கிறது. எங்கும் பானைகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, பானைகள் பயன்பாடு மிக அதிகமாக இருந்திருக்கும் சூழலில் இந்த இடம், சூளையாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் சுமார் 3800 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.  இந்த நிலத்தை 1876ஆம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி ஆட்சியாளரும், மாவட்ட பொறியியலாளரும், மற்றும் முனைவர். ஜாகர் (Dr. Jagor) ஆகிய மூவரும் இணைந்து தோண்டத் துவங்கினர். பல பானையோடுகளும், இரும்பாலான ஆயுதங்களும், கருவிகளும் கண்டடையப்பட்டன. அலெக்சாண்டர் ரே (Alexander Rey) என்ற ஆய்வாளரும் 1889 – 1905 வரை இப்பகுதிகளில் தனது தேடுதல்களை நிகழ்த்தி, ஜாகர் அவர்கள் கண்டுபிடித்ததை ஒத்த பொருட்களை ஆவணப்படுத்துகிறார்.   ரே ஆவணப்படுத்துகையில், வெண்கலம் மற்றும் தங்கத்தாலான பொருட்களும் பட்டியலில் இடம் பெறுகின்றன என கூறப்படுகிறது. ஆகவே வெண்கலத்தை உருக்கும் உலையாகவோ, இரும்பை உருக்கும் உலையாகவோ கூட இருந்திருக்கும் வாய்ப்புள்ளது.

ஆதிச்சநல்லூரில் நான் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் வாசித்த்ச்வைகளையும் கோர்த்து பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட சில யூகங்களே இனிமேல் நான் கூற முற்படுபவை. இப்பகுதிகளில் எங்குமே பிரம்மாண்ட செங்கல் கட்டுமானங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இவர்கள் சுண்ணாம்பு காளவாய் வைத்திருந்தால், அவைகளை செங்கல் கட்டுமானங்களுக்கு பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் இல்லாமலாகிறது. வேறு எங்குமே சுண்ணாம்பு பயன்பாடு குறித்த தகவல்கள் இல்லை. ஆகையினால், இங்கே நீற்றி எடுக்கப்பட்ட சுண்ணாம்பு, வெற்றிலை சுவைப்பதற்கும், பனை ஏறிகள் பனையில் இட்டிருக்கும் கலசத்தில் தடவுவதற்கும் பயன்படுத்தியிருக்கலாமே என்கிற எண்ணமே மேலோங்குகிறது.

இதுவரை கிடைத்த பெரும்பாலான பானைகள் தாழி வகைகள் என நாம் அங்கு கிடைத்த எலும்புகளை வைத்து முடிவுக்கு வர இயலும். அத்தகைய பிரம்மாண்டமான பானைகள் செய்ய முடிந்த ஒரு சமூகத்தில் எளிய கலயங்கள் செய்வது கடினமாகவா இருந்திருக்கும்? ஆக, பனையேறிகளின் முக்கிய தேவையான கலயங்கள் அங்கே இருந்திருப்பதும் உறுதியாகிறது.

அவர்கள் வாழ்ந்த வீடுகள் எப்படி இருந்தன என இதுவரை எவ்வித சான்றுகளும் இல்லாதபோது, பனை மரத்தடிகளும் ஓலைகளும் கொண்டு தங்கள் வீடுகளை அவர்கள் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாம் யூகிக்க இடமிருக்கிறது. செம்மண் குழைத்தும் வீடுகளைக் கட்டியிருக்கலாம். கீழடியைப் போல செங்கல் கட்டுமானங்கள் இனிமேல் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எப்படியிருந்தாலும், பனை ஓலைகளாலான கூரைகள் அமைத்திருக்க வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அங்கு கிடைத்த இரும்பு பொருட்களை கிழ்கண்ட முறைகளில் வைகைப்படுத்துகிறார்கள். கத்திகள், குறுவாட்கள் மற்றும் கைக்கோடாரிகள் என ரே குறிப்பிடுகிறார். இரும்பு பொருட்கள் வேட்டையினை சுட்டிக்காட்டவும், போர் மற்றும் பயன்பாட்டு தொழிற்கருவிகளாகவும் இருப்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அவ்வகையிலும், பனையேறிகள் பயன்படுத்தும் பாளை அரிவாள் பயன்பாட்டில் இருந்திருக்குமென நாம் யூகிக்க இடமுள்ளது.

எனது ஆதிச்சநல்லூர் பயணம் குறித்த செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆதிச்சநல்லூர் பயணமும், முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் தொடர்பும், நண்பர் வைசிலினைப் பார்த்தது மிகப்பெரும் உளக்கிளர்ச்சியைப் எனக்களித்தது. காட்சன் ஆதிச்சநல்லூர் வருகிறார் என்றால், பனை சார்ந்து ஏதோ தேடி வருகிறார் என்பதே முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் கூற்று என்பதை நான் புரிந்துகொண்டேன். அது உண்மையும் கூட. பனையுடன் இணைந்த வாழ்வையே நான் தேடிச்செல்லுகிறேன். எனது எண்ணங்கள் யூகங்கள் மற்றும் பயண நோக்கம் குறித்து நண்பர் காட்சன் வைஸ்லியுடன் விரிவாக விவாதித்தேன்.

நாங்கள் அங்கிருந்து பால்பாண்டி அவர்கள் வீட்டிற்கு சென்றோம். நான் ஏற்கனவே அங்கு சமீபத்தில் சென்றிருந்தாலும், நண்பர்களுக்கு அவ்விடத்தை காண்பிப்பது சரியாயிருக்கும் என்று அழைத்துச் சென்றேன். ஜெனிஸ் மற்றும் விபின் ஆகியோர், எங்கள் பயணத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் பெருமளவில் உணர்வெழிச்சுக்குள்ளானது போல் தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் கூர்ந்து கவனித்து வந்தார்கள். பனை சார்ந்து அவர்களுக்கு தெரியாதவற்றை எல்லாம் இப்பயணம் அவர்களுக்கு அறிமுகம் செய்யும் என்று ஜேக்கப் அறிந்திருந்தார்கள். 

பனை தூண்கள், ஸ்ரீ வைகுண்டம்

ஸ்ரீ வைகுண்டம் நோக்கி நாங்கள் வந்து சேர்ந்தபோது மதியம் இரண்டு தாண்டிவிட்டது. நாங்கள் கடந்து சென்ற ஒரு இந்து கோவிலின் மூடிய வாசலுக்கு வெளியே நான்கு தூண்கள் கருப்பாக எழுந்து உயர்ந்து நின்றன. அவைகளின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்ததால், வண்டியை நிறுத்தச் சொன்னேன். சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு தூண் போல காணப்பட்டது. அதன் அருகில் சென்று பார்த்தபோது, முழு பனை மரத்தினை அப்படியே செதுக்கி எடுத்த தூண் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டாம் முறியிலிருந்து உருவாக்கப்பட்ட தூண்கள்.  இதற்கு ஒப்பான தூண்களை நான் புத்தளம் சி எஸ் ஐ தேவாலயத்தில் பார்த்திருக்கிறேன். அவைகள் ஆலயத்திற்குள், வெயில் மழை காற்று என எதுவுமே பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பாக நிற்கும் பளபளப்பான தூண்கள். இருநூறு வருடங்களாக அப்படி இருப்பது வியப்பொன்றுமில்லை. ஆனால் இங்கே, நூறாண்டுகள் கடந்து நிற்கும் இந்த பனை மரம் நமது கட்டிடக் கலைகளின் மரபினை நமக்கு சொல்லும் ஒரு தடயமாக இருக்கிறது. குறிப்பாக கறையான் ஏறாமல் இருக்க கீழே கல் வைத்துவிட்டு, தூண் சரியாமல் இருக்கவும் கல் ஒன்று கீழே பனையின் கால் மாட்டில் படி எடுத்து அதனுள் சொருகப்பட்டிருந்தது. இயற்கையை மிக குறைவாக வடிவம் மாற்றி செய்யும் கட்டுமான கலை.

வர்ண முறம், ஸ்ரீ வைகுண்டம்

பேருந்து நிறுத்தத்தின் அருகில் உணவு உண்ண சென்றோம். செல்லும் வழியில், ஒரு பனை ஓலை பொருட்களை விற்கும் கடையினைப் பார்த்து அங்கு சென்று பொருட்களை வாங்கினோம். குறிப்பாக, வர்ணம் தீட்டிய பனை முறம் அங்கு இருந்தது. குமரி மவட்டத்தில் செய்யும் அரிவட்டியினை ஒத்த பெட்டிகள் வர்ணமிடப்பட்டிருந்தன. அருகில் யாரேனும் பனையோலைப் பொருட்கள் செய்பவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டோம், அருகில் கணியர் தெரு ஒன்று இருக்கிறது அங்கே சென்றால் பனை ஓலைப் பொருட்கள் செய்பவர்களைப் பார்க்கலாம் என்றார். சாப்பிட்டுவிட்டு அந்த தெரு நோக்கி சென்றோம்.

தமிழகத்தின் பல்வேறு ஜாதியினர் பனையுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். கணியர் என்ற சாதியினர் பனையுடன் தொடர்புடயவர்கள் என்ற தகவலை இங்கேதான் முதன் முதலாக பெறுகிறேன். ஆகவே அவர்கள் எப்படியான வாழ்க்கை முறையினைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் செய்யும் பனை ஓலைப் பொருட்களின் வடிவங்களையும் காண வெகுவாய் ஆசைப்பட்டேன். ஜேக்கப் அவர்கள் குமரி மாவட்டத்திலும் கணியர் உள்ளனர் என்றார்.

தெருவின் முனையில் கணியர் தெரு என்று எழுதப்பட்டிருந்தது. ஆகவே, சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறோம் என உறுதி செய்துகொண்டோம். அங்கே பெண்கள் கும்பலாக கூடியிருந்த இடத்தில், ஓலைப் பொருளினைச் செய்பவர்களைத் தேடி வந்தோம் என்றேன். கடைசி வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்கள். குறிப்பிட்ட அந்த வீடு ஒரு எளிய குடிசை. எங்களை வீட்டிற்குள் அனுமதித்தனர். உள்ளே சென்று அந்த பெண்மணியுடன் உரையாடினோம். வீட்டிற்குள், ஓலைகள் வரிசையாக கீறப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பழைய பொருட்கள் ஏதேனும் இருக்குமா என்று கேட்டபோது, வெற்றிலைப் பெட்டி இருக்கிறது என்றார்கள். சுமார் இருபது அல்லது முப்பது வருட பழைமையான ஒரு பெட்டியை எடுத்து வந்தார்கள். 

அழகிய வெற்றிலைப்பெட்டியினை செய்யும் திறன் பெற்ற கலைஞர், ஸ்ரீ வைகுண்டம்

பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், அந்த வடிவம் குமரி மாவட்டத்தில் காணப்படும் அரிவட்டிக்கு இணையானது. குமரி மாவட்டத்தில் உத்தரங்கோடு என்ற பகுதியில் இவ்வித அரிவட்டி செய்யும் சாம்பவர்கள் வாழ்கிறார்கள். எனது பனை சார்ந்த தேடுதல் துவங்கிய இடம் அது. அந்த பின்னல் முறம் பின்னுவதற்கு அடிப்படையானது. அரிவட்டியும் முறமும், பனை ஈர்க்கிலால் செய்யப்பட்டவைகள். ஆனால், எங்கும் அரிவட்டியினை மூடி இட்டு நான் பார்த்ததில்லை. அல்லது, இவ்வகை பின்னல்கள் கொண்ட பெட்டிகளுக்கு என் வாழ்நாளில் இதுவரை மூடி இட்டு நான் பார்க்கவில்லை. ஆகவே, இவ்வகை பின்னல் கணியர் சமூகத்துடன் இணைந்து இருக்கும் ஒரு முறையாக காணப்பட்டது. ஜேக்கப் பால்மாவிற்கு தேவையான பொருட்களுக்கு முன்பணம் கொடுத்தார்.  நான் அந்த பழைய வெற்றிலைப் பெட்டியினை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

நாங்கள் அங்கிருந்து பண்ணைவிளை நோக்கிச் சென்றோம். அங்கே மொர்தேகாயுடைய மாமா தானியேல் நாடார் அவர்கள் இருந்தார்கள். நான் அவரைத் தேடி சென்றபோது, வழியிலேயே ஒரு டீக்கடை முன்பு அவர் இருந்ததைப் பார்த்துவிட்டேன். எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் வாங்கி வைத்திருந்த கருப்பட்டி சாப்பிடக் கொடுத்தார். எங்கள் தேவைக்காக இரண்டு கிலோ கருப்பட்டி வாங்கி வந்தேன். பனை இரவு தானியேல் தாத்தா தோட்டத்தில் தான் நடைபெற்றது.  அவரது மீசையும், நடையும், நறுக்கென்ற சத்தமான பேச்சும் எல்லாம் ஒரு கதாநாயகனுக்கு உரியது.

அன்று இரவு நாங்கள் எங்காவது தங்கவேண்டும். ஆகவே போதகர் ஜாண் சாமுவேல் அவர்களை அழைத்தேன். “கண்டிப்பா வாங்கையா” என்றார்கள். ஜாண் சாமுவேல் போதகர் அவர்கள், 2019 ஆம் ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று தனது பகுதியிலுள்ள பனையேறிகளை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்தது செய்தியாக வந்தது. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து அவரை நான் தொடர்புகொண்டேன். நான் பயின்ற ஐக்கிய இறையியல் கல்லூரி பெங்களூருவில் அவரும் பயின்றவர், ஆகவே என்னைக்குறித்து அறிந்திருக்கிறார். எனது பணிகள் அவருக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. ஆகவே, பனை சார்ந்த மக்களுக்காக பல பணிகளை முன்னெடுத்தவர். எனக்குப்பின்பு, பனை சார்ந்த முன்னெடுப்புகளை இயல்பாக கையாளும் ஒரே போதகர் அவர் மட்டும்தான். அவர் இருக்கும் இடங்களில் பனை ஓலை பின்னும் மக்கள் இருப்பதால் மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் கரிசனத்தாலும், இயல்பாக விழிம்புநிலை மக்கள் மீது கொண்ட பாரத்தால், அவர் இவ்விதமான முயற்சிகளை எடுக்கிறார் என்பதை நான் அறிவேன்.

கடந்த 2020ஆம் வருடம், பனை ஓலையில், உண்டியல் செய்யும் திட்டத்தைக் குறித்து பேசினோம். பொதுவாக கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின்போது, திருச்சபையின் மக்களிடம் உண்டியல் வழங்குவது வழக்கம். புலால் உணவைக் குறைத்து, பூச்சூடாமல், உண்ணா நோன்பு கடைபிடித்து சேகரிக்கும் பணம், திருச்சபையின் அருகிலிருக்கும் அல்லது திருச்சபையால் சுட்டிக்காட்டப்படும் ஏழைகளுக்கு வழங்கப்படும். பொதுவாக குயவர்களிடம் இவ்வித உண்டியல் வாங்குவது வழக்கம். காலப்போக்கில், தகரத்திலும், இன்று பிளாஸ்டிக்கிலும், இவ்வித உண்டியல் வழங்கப்படுகிறது. எனது அறிவில், பனையோலையில் எவருமே உண்டியல் செய்ததில்லை. ஆகவே, அங்குள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து ஊண்டியல் செய்ய இயலுமா எனக் கேட்டேன். “பார்க்கிறேன் அய்யா” என்றார்கள். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு, வெற்றிகரமாக அவர்கள் எங்களுக்கு, உண்டியலை செய்து அனுப்பினார்கள். உலகிலேயே முதன் முறையாக திருச்சபை பனையோலையில் உண்டியலை செய்தது பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

பனையோலை உண்டியல் குறித்த செய்தி

அப்போது, மீண்டும் ஒரு பணியினை அவருக்கு நான் கொடுத்தேன். போதகர்கள் பயன்படுத்தும் “ஸ்டோல்” என்று அழைக்கப்படுகிற ஆயர் தோள் பட்டை பனை ஓலையில் செய்தால், குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்தலாமே என்றேன். “முயற்சிக்கிறேன் அய்யா” என்றார்கள். 2020 ஆம் ஆண்டு தவக்காலம் துவங்கும்போது இருந்த சூழல் அப்படியே மாறியது. இந்தியா முழுக்க நோய் தொற்றின் நிமித்தமாக ஆலயங்கள் வழிப்பாடுகள் அனைத்தும் முடங்கின. ஆகவே, அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இவ்வருடம், அதனை குறித்து சற்று தாமதமாக திட்டமிட்டோம். அவரது திருச்சபையைச் சார்ந்த நேசம்மாள் என்பவர், இவ்வித அழகிய மேலங்கியினை செய்ய ஒப்புக்கொண்டார். வசதியான பின்னணியத்தை கொண்ட அப்பெண்மணி, இதனை ஒரு அற்பணிப்புடன் செய்தார். 2021 குருத்தோலை ஞாயிறு அன்று, போதகர் ஜாண் சாமுவேல் அவர்கள், அந்த மேலங்கியினை முதன் முறையாக உலகிற்கு அறிமுகம் செய்தார். அவர் எனக்கு அனுப்பியது குருத்தோலை ஞாயிறு அன்று எனக்கு கிடைக்காததால், உயிர்ப்பின் ஞாயிறு அன்று அதனை நான் பயன்படுத்தினேன்.

திருமதி நேசம்மாள் அவர்கள் செய்து கொடுத்த ஆயர் தோள் பட்டையுடன் நான்

பனை ஓலைகளை சமயம் சார்ந்து பயன்படுத்துவது முக்கிய குறியீடாக அமையும் என்பது எனது எண்ணம். 2014 ஆம் ஆண்டு நான் அகமதாபாத்தில் இருக்கும்போது, என்னோடு பணி புரியும் மும்பை தமிழ் போதகர்கள் அனைவருக்கும் என் கையால் செயப்பட்ட பனை ஓலைக் கழுத்துப்பட்டைகளை அனுப்பினேன். போதகர்களின் உடை அமைப்பு என்பது, வட்ட காலர் வைத்த கறுப்பு சட்டையும், அதற்குள் ஒரு வெள்ளை காலரை நுழைத்து அணிவதுதான். எங்கு பயணித்தாலும், இது அவர்களை அடையாளம் காட்டும் ஒன்றாக அமையும். அங்கி போட்டுக்கொண்டு செல்ல தேவையில்லை. அங்கி என்பது, திருச்சபை வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் மட்டுமே என்ற வரையறை இருந்தது. குருத்தோலை ஞாயிறுக்காக நான் கொடுத்த கழுத்துப் பட்டைகளை எத்தனை போதகர்கள் அணிந்தனரோ நான் அறியேன், ஆனால், அதன் நீட்சியாக இப்படி ஒரு மேலங்கி வந்து அமையும் என நான் அப்போது நினைக்கவில்லை.

போதகர் ஜாண் சாமுவேல், நேசம்மாள் அவர்கள் செய்து கொடுத்த ஆயர் தோள் பட்டையுடன்

அன்று இரவு அவரது வீட்டிற்குச் சென்றோம். எங்களுக்காக ஒரு அறையை ஒதுக்கித் தந்திருந்தார்கள். அவரை சந்திக்க அன்று மன்னா செல்வகுமார் என்கிற கிறிஸ்தவ வரலாற்றைத் தேடுகின்ற ஆய்வாளர் ஒருவர் தன்னார்வலர்களுடன் வந்திருந்தார். அன்று இணைந்து பாடல் பாடி ஜெபித்து எங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருந்த விருந்தினை சுவைத்தோம். மிக சிறப்பான ஒழுங்குகளைச் போதகர் அவர்கள் செய்திருந்தார்கள்.  அவரது தனிப்பட்ட சேகரிப்பில் 500 வேதாகமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பழங்கால பொருட்களும் இருந்தன. வெகு உற்சாகமாக் பேசினோம். ஜேக்கப் எங்கள் பேச்சில் இணைந்துகொண்டார். பனை மரங்கள் எவ்வாறெல்லாம் நமது வாழ்வில் இணைந்திருக்கின்றன எனக் கூறும் ஒற்றை நாளாக அது இருந்தது.

என்னுடன் மன்னா செல்வகுமார், போதகர் ஜாண் சாமுவேல் மற்றும் அவரது துணைவியார்

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 16

ஏப்ரல் 7, 2021

னை மோகன்

அக்டோபர் 19ஆம் தேதி மீண்டும் நாகர்கோவில் சென்றேன். போகும் வழியில் பேரின்பபுரம் கடந்தபோது, போதகரும் எனது நண்பனுமான சாம் ஜெபசிங் அவர்கள் அங்கு பணியாற்ற வந்திருப்பதை அறிந்து அவரை சந்திக்கச் சென்றேன். என்னை மிகவும் நேசிக்கும், எனது பணிகளுக்கு பெரும் ஊக்கமாயிருக்கும் குமரி போதகர் அவர். எப்போது பண உதவி தேவை என்றாலும் கேளுங்கள், பொது வாழ்வில், நீங்கள் செய்யும் பணிகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்கிறேன் என்று சொல்லியிருந்தார். தேவைப்படும் நேரத்திலெல்லாம், தயங்காமல் ஆயிரம் இரண்டாயிரம் என அவரிடம் பணம் கேட்டிருக்கிறேன். இந்த பயணத்திலும் பொருட் செலவுகள் உண்டு என்பதால், அவரை சந்தித்தேன். என்னிடமிருந்த பனை விதைகளைக் கொடுத்தேன். அவரும் அவரது மனைவியுமாக உடனடியாக அந்த பனை விதையினை ஆலய வளாகத்தில் விதைத்தார்கள். அவரது மனைவி ரெனி, மலையாளாத்தை தனது தாய்மொழியாக கொண்டவர். ஆனால் நல்ல தமிழ் பேசவும் எழுதவும் அறித்திருந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில துறை விரிவுரையாளராக இருக்கிறார். என் பணிகள் குறித்து இருவரும் ஆவலுடன் கேட்டறிந்துகொண்டார்கள். என்னை அவர்களது ஆலயத்திற்கு செய்தி கொடுக்க அழைத்தார்கள்.

அருட்பணியாளர் ஜெபசிங் அவர்களுக்கு பனை விதைகளை வழங்கியபோது

பேரின்பபுரத்தில் தான் பனை இளவரசன் சங்கர் வசிக்கிறார். சங்கர், படித்துக்கொண்டிருக்கும்போது அவரது தந்தை இறந்துவிடவே, அனைவரும் கைவிட்ட பனைத் தொழிலை கையிலெடுத்தார். அவரை பெருமளவில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை நான் ஏற்றேன். ஆகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரை என்னால் முயன்ற மட்டும் முன்னிறுத்தினேன். பனை சார்ந்த அனைவருக்கும் நான் செய்யக்கூடுவது அதுதான். ஆகவே, போதகர் சாம் ஜெபசிங் அவர்களிடம் நீங்கள் சங்கரை கவனித்துக்கொள்ளுங்கள் என்றேன். கிறிஸ்மஸ் கால அலங்காரங்கள் போன்றவற்றை செய்ய அவனை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன்.  கண்டிப்பாக செய்கிறேன் என்றார்.  பின்னர் கிறிஸ்மஸ் நேரத்தில் சங்கர் செய்த பனை ஓலை நட்சத்திரத்தை அவர்கள் ஆலயத்திலும், வீட்டிலும் தொங்க விட்டார்கள். முதன் முறையாக குமரி மாவட்டத்தில் பனை ஓலை நட்சத்திரத்தை வாங்கி பயன்படுத்திய நபர் போதகர் சாம் ஜெபசிங் அவர்கள் தான்.

அருட்பணியாளர் ஜெபசிங் மற்றும் அவரது துணைவியார் பேராசிரியர் ரெனி இணைந்து பேரின்பபுரம் சி எஸ் ஐ ஆலய வளகத்தில் பனை விதை நடுகிறார்கள்

பனை குறித்த எனது தேடுதலில், எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்து கொண்டது ஒரு பேராசீர்வாதம் என்றே கருதுகிறேன். எங்களது நட்பு, சுமார் 20 ஆண்டுகளாக தொடர்வது. அவரது சங்கச் சித்திரங்கள் தொடர் வழியாக அவரை நான் கண்டுகொண்டேன். பார்வதிபுரத்தில் வசிக்கிறார் என்றறிந்தபோது அவரை சந்திக்க பார்வதிபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்றேன். எனது சொந்த கிராமமான பெருவிளையிலிருந்து நடந்தே செல்லும் தூரம் தான். என்னை வீட்டிற்கு வரவேற்று என்னோடு பேசினார். அவரது மனைவி அருண்மொழி நங்கை காப்பி முறுக்கெல்லாம் கொடுத்தார்கள். அஜிதனும் சைதன்யாவும் சிறு பிள்ளைகள். அதன் பிறகு பல முறை அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறேன். நாகர்கோவிலில் நான் போக விரும்புகிற ஒரு சில வீடுகளுள் ஒன்று அவரது வீடு. எந்த அவசரத்தில் அவர் இருக்கிறார் என எப்போதும் நான் பார்த்ததில்லை, சில நேரம் தூங்கிக்கொண்டிருப்பார், சில நேரம் எழுதிக்கொண்டிருப்பார், ஒரு முறை அவரது செல்ல நாயை கவனித்துக்கொண்டிருப்பதையும் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, என்னோடு பேசிக்கொண்டிருந்திருக்கிறார், சில நிமிடங்கள் அல்ல மணிக்கணக்கில். அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக நான் உரையாடிய நேரம் கிடையாது. வீட்டிற்கு சென்றால், நமக்காக நேரம் ஒதுக்குகிற பண்பாளர்களை நாகர்கோவிலில் பெருமளவில் காண்பது இயலாது.

இரண்டாம் முறை அவரை நான் சந்திக்கும்போது, எனது கரத்தில் ஒரு கட்டுரை இருந்தது, அது நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது தயாரித்த கிறிஸ்மஸ் உரை. உரையினை வாசிக்குமுன், எவரிடமாவது காண்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் அவரை பார்க்கச் சென்றேன். “என்ன காட்சன் கட்டுரை எழுதியிருக்கீங்களா” என்று கேட்டபடி அதை வாங்கினார். நான் பத்து நிமிடம் பேசுவதற்காக தயாரித்திருந்தவற்றை, ஒரு நிமிட பார்வையில், வாசித்து முடித்துவிட்டு, நன்றாக இருக்கிறது என்றார். எனது சொற்பிழைகளை சுட்டிக்காட்டினார். அப்போது கவிதை நடையை ஒட்டிய ஒரு உரைநடையையே நான் கொண்டிருந்தேன். அந்த கட்டுரையின் தலைப்பு “குப்பைத் தொட்டி”. அதன் பின்பு கட்டுரை எழுதினால் அவரைப் பார்க்கச் சென்றுவிடுவேன். வாசித்தபின்பு என்னோடு பேசுவார், நான் எழுதிய தகவல்களை விட பல மடங்கு தகவல்களை சொல்லிக்கொண்டே இருப்பார். நான் அண்ணன் என்று அழைக்கும் அளவு என்னோடு அன்புகாட்டினார். என்னை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய ஆளுமை அவர்.

பனை விதையினை பெற்ற மகிழ்ச்சியில் அண்ணன் ஜெயமோகன், சாரதா நகர், பார்வதிபுரம்

அவரிடம் பார்த்து வியக்கத்தக்க பல்வேறு விஷயங்கள் அன்றாட வாழ்வில் உண்டு. நட்பை பேணிக்கொள்ளுவதும், குறைகளை பெரிதுபடுத்தாமல் கடந்து செல்லுவதும், தட்டிக்கொடுப்பதும், பிரச்சனையினை எதிர்கொள்ளும்போது நேருக்குநேர் சந்திக்கும் துணிவுடனிருப்பதும், தன் மனதிற்குப்பட்டதை நேரடியாக சொல்லுவதும், வெறுமனே வம்புக்காக எதையும் சொல்லாதிருப்பதும் நான் வியத்த காரியங்கள். அவரது எழுத்துக்களில், “உள்ளுறைந்திருக்கும் சதிகளை” கண்டுபிடிப்பவர்கள் பெரும்பாலும், சாதி, சமய, அல்லது ஏதேனும் கோட்பாடுகளை மூர்க்கமாக பின்பற்றுகிறவர்களாகவே இருப்பார்கள்.

ஜெயமோகன் அவர்களின் அசுர எழுத்தைக் கண்டு நான் எப்போதும் எல்லாரையும்போல வியந்திருக்கிறேன். ஆனால், அவரது அக்கறை, அன்பும் நான் அணுக்கமாக அருகில் நின்று பார்த்தது. எனது திருமணத்திற்கு குடும்பமாக வந்து வாழ்த்து தெரிவித்தது மிகப்பெரும் பாக்கியம். அன்று எனது மூத்த அண்ணன் செல்சன் அவர்களிடம், ஜெயமோகன் அண்ணன் வருவார்கள், அழைத்து சென்று சாப்பிட அமரவைக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். எனது திருமணத்திற்கு வந்த பலருக்கும் எங்கள் வீட்டில்  ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அறிந்திருப்பார்கள். என்னை மட்டுமே அறிந்த ஒருவராக அவர் மட்டுமே வந்திருந்தார். அப்படியே, எனது அண்ணன் அவரை அமரவைத்து, எனக்கு வந்து பதில் செல்லும் வரைக்கும் படபடப்பாகவே இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு நாங்கள் குழந்தை ஆரோனை எடுத்துக்கொண்டு சென்றோம். பெரிய காதுகளை அருண்மொழி அவர்களிடம் காட்டி பேசிக்கொண்டிருந்தார். அவனைத் தூக்கி கொஞ்சினார். அவர் குழந்தையாக  மாறி விளையாடுவது எனக்கு பிடித்திருந்தது. குழந்தையினை எப்படி குளிப்பாட்டவேன்டும் என எனக்கு சொல்லித்தந்தார். நம்புங்கள், எனது கையில் குளிப்பாட்டும்போது மட்டும் ஆரோன், ஒருபோதும் அழுததில்லை. ஆரோனை கரத்தில் எடுத்து கொஞ்சியதோடல்லாமல், சைதன்யாவிடமும் கொடுத்து தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன் சைதன்யா தூக்கிய முதல் குழந்தை ஆரோன் தான் என்று. அஜிதன் பத்தாம் வகுப்பில் பெற்ற அதிக மதிப்பெண்களை என்னிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறான்.

நாங்கள் பூனேயில் இருக்கும்போது ஜெயமோகன்அண்ணன் ஆப்பிரிக்கா சென்றார். அப்போது மும்பையில் கிறிஸ்தவ போதகர்களுக்கும் மற்றும் பற்றாளர்களுக்கும் என ஒரு நிகழ்வினை ஒழுங்கு செய்தோம். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தனக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுக்க எங்களைக் கேட்டுக்கொண்டார். அவர் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும்போது,  ஆரோனுக்காக ஒரு அழகிய முரசொன்றை வாங்கி வந்தார். அவரது வாழ்த்துக்களும் ஆசியும் தான், ஆரோனுக்கு தாளம் என்பது இயல்பாகவே வருகிறது.

ஜெயமோகன் அண்ணண் ஆப்பிரிக்காவிலிருந்து ஆரோனுக்காக எடுத்து வந்த முரசு.

பனை சார்ந்த என் தேடல்களில், ஜெயமோகன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. வேறு எவரை விடவும் பனை சார்ந்து நான் விரிவாக ஜெயமோகன் அண்ணனிடம் தான் விவாதித்திருக்கிறேன். அவர் எனக்கு அளித்த இடம் அவ்வகையில் முக்கியமானது. அது உறவு சார்ந்த ஒன்றாக அமைந்ததே ஒழிய, எழுத்தாளர் வாசகர் என்ற நிலையில் அமையவில்லை. அண்னன் அதனை ஒரு பொருட்டாக என்னிடம் காட்டிக்கொள்ளவும் இல்லை. எனக்கு பிடித்தவற்றை நான் செய்வதில் எப்போதும் அவர்களுக்கு மகிழ்ச்சி தான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பனை சார்ந்த எனது தேடுதல்களுக்கு ஆதரவே இல்லா சூழல்களில் அவரது ஆதரவுகரம் என்னோடு இருந்தது. எனது வலைப்பூ அவர் எனக்கு ஊட்டிய உற்சாகத்தால் துவங்கப்பட்டது. நான் “நெடும்பனை” என அதற்கு பெயர் வைக்க ஊக்கப்படுத்தியவரும் அவர்தான். அன்று வேறு எவரும் பனை என்ற பெயரில் நான் ஒரு வலைப்பூவை துவங்க ஊக்கமளித்திருக்க இயலாது. 2008 ஆம் ஆண்டு பனை மறக்கப்படவேண்டிய ஒரு தாவரமாகவே நாடார்களுக்குள் இருந்தது. கற்றுத்தேர்ந்த தமிழர் என்ற இனத்திற்கு அப்போது பனை என்றால் என்னவென்றே தெரியாது. தமிழகத்தில் பனை குறித்து முதல் முதலாக பேசிய நாம் தமிழர் கட்சி அப்போது பிறந்திருக்கவில்லை.  

பனை எனக்கு அணுக்கமாயிருந்ததை அவர் அறிந்திருந்தார். பனைக்காக நான் எடுத்த முனைப்புகளில் எப்போதும் என்னுடனிருந்தவர் அவர். நான் மார்த்தாண்டத்தில் வேலைப் பார்க்கும்போது, அவருக்காக கோட்டைவிளையில் தயாரான கருப்பட்டியினை வாங்கி சென்றிருந்தேன். அன்றைய சந்தை விலையை விட அந்த கருப்பட்டியின் விலை அதிகம் தான். சொன்ன விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். சிறப்பு அதுவல்ல, உடனேயே அதனை சுவைத்துப்பார்த்து “நல்ல கருப்பட்டி” என்றார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் அமைப்பிற்கு சொந்தமான இடத்தில், நான் பணியாற்றும்போது, எனது மேற்பார்வையில் காய்ச்சப்பட்ட கருப்பட்டி. அது தரமான கருப்பட்டி என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒருவர் சுவைத்து அதற்கான அங்கீகாரத்தை அளிப்பது என்னை மகிழ்ச்சியில் மட்டுமல்ல ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. ஏன் அந்த ஆச்சரியம்? ஏனென்றால், இதே கருப்பட்டியினை நான் வேறு எவரிடமாவது கொடுத்திருந்தால், பல்வேறு சந்தேகங்களை பூடகமாக நம்மை நோக்கி வீசுவார்கள், எல்லாவகையிலும் நாம் பதில் சொன்னாலும், இறுதியாக, “எங்க பாட்டி வீட்டுல அப்போ அக்கானி காய்க்கும்போது” என்று சுய பெருமையை பேசுவார்கள். நல்ல கருப்பட்டி என்ற வார்த்தை வாயில் எளிதில் வராது.   

ஜெயமோகன் அண்ணணுடன் மிக நெருக்கமாக

தக்கலை பென்னி ஒருமுறை என்னிடம் இப்படி சொல்லியுமிருக்கிறார்…”குமரி மாவட்டத்தில் உள்ள நாடார் பெண்களும் நாயர் பெண்களும் செய்யும் கருப்பட்டி தனித்த சுவையானது” என்று. எப்படி அண்ணன் கருப்பட்டியினை கண்டுபிடித்தீர்கள் என்றேன். அவர்கள் வீட்டில் அக்கானி காய்ச்சும்போது தானும் அதனை செய்ய கற்றுக்கொண்டதாக கூறினார். மேலும் மணம் அதனை புதிய கருப்பட்டி என்கிறது, நாக்கில் கரைவதன் சுவையும், அது தூய கருப்பட்டிதான் என்கிறது என கூறினார்கள். இது இரண்டும் தான் மிக முக்கிய அறிகுறிகள் என்பதை இன்னும் பல வருடங்களுக்குப் பின்பு நான் அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டேன். உடைத்துப்பார்ப்பது மற்றொரு வழி.

2016 ஆம் ஆண்டு, எனது பயணத்தைக் குறித்து அவரது வலைப்பூவில் எழுதியது எனக்கு பல நல்ல நண்பர்களையும் தமிழகத்தின் தலை சிறந்த வாசகர்களையும் பெற்றுத்தந்தது. எனது வலைப்பூவினை அவரது வலைத்தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். ஆனாலும் 2016 ஆம் வருடம், அவர் எனது தென் இந்திய பனை பயணத்தை அறிமுகப்படுத்தியபோது ஒரே நாளில் அதற்கு முந்தைய வருடத்தை மிஞ்சும் வாசகர்கள் எனது தளத்திற்கு வந்தார்கள். அவர் எனக்களித்த அறிமுகம், தனித்து விடப்பட்ட என்னை அந்த அளவிற்கு முன்னிறுத்துவதாக அமைந்தது. பல விதங்களில் அவரது அந்த அறிமுகம் முக்கியமானது. அப்படியே எனது புத்தகம் வெளிவந்த போது அருண்மொழி நங்கை அவர்கள் எழுதிய மதிப்புரை மின்னல் வேகத்தில் வந்தது. இன்றுவரை குமரி மாவட்டத்தில், அந்த புத்தகத்தை குறித்த ஒரு சிறு விவாதம் கூட முன்னெடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் அனைத்து முன்னணி முற்போக்கு எழுத்தாளர்களும் பனையேறிகளுடைய பிள்ளைகள் தான். அதனைச் சொல்ல கூச்சப்படுமளவிற்கு இன்று அனைவர் கரத்திலும் பணமும் அதிகாரமும் வந்தாயிற்று.

2017 ஆம் ஆண்டு பனை குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்கும்படியாக மீண்டும் அவர்களைத் சந்தித்தேன். வேறு எவரும் சொல்லாத திசைகளில் அவர்கள் பேசியவைகள் எனக்கு மிகவும் உற்சாகமூட்டுபவைகளாக இருந்தன. தமிழகத்தில் வேறு எங்கும் பதிவிடப்படாதவைகள் ஆனபடியாலும் அவைகள் எனது எண்ண ஓட்டத்தை மீண்டும் புது பாய்ச்சலுடன் முன் செல்ல உதவியதாலும், இங்கே அவைகளை எனது நினைவிலிருந்து பதிவுசெய்கிறேன்.

“ஒரு பண்பாடு என்றால், சுவை தான் அந்த பண்பாடு. அவை நாக்கு சுவை, செவி சுவை, கண் சுவை. இந்த சுவை அந்த பகுதிகளில் இருக்கும் பொருட்களிலிருந்தே உருவாகும். தென்னையை விலக்கி எப்படி ஒரு கேரள பண்பாட்டை கூற முடியாதோ அதுபோல பனையை விலக்கி ஒரு தமிழக பண்பாட்டை சொல்லிவிட இயலாது” என்றார்.

“பனம்பழம் தின்ன பன்றி செவியறுத்தாலும் நிக்காது” என்பது குமரி மாவட்ட பழமொழி. நாக்கு அப்படியானது. தான் சுவைத்தவற்றை பேசும், தனது சுவையினை முன்னிறுத்த விழையும். ஆகவே தான் இனிப்பான நற்செய்தியும், கசப்பான உண்மைகளும் இன்று வெளிப்படுகின்றன. உப்பு பெறாத விசயங்கள் கூட பொருட்படுத்தப்படுவது அதனால் தான். “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என்ற பழமொழியும் நமக்கு செவிச் சுவையினையே உணர்த்துகிறது. பனைமரக் காட்டு சத்தம் எவருக்கு உகந்தது எவருக்கு அச்சமூட்டக்கூடியது போன்ற உண்மையினைப் போட்டுடைப்பது. கண் தான் அழகையும் அளவுகளையும் தீர்மானிக்கும். பனையளவு தினையளவு எல்லாம், பிரம்மாண்டத்தை சுட்டி நிற்பதும், பொருட்படுத்தவியலா சிறியவைகளாய் குறிப்பிடுவதுமாகவே இருந்திருக்கிறது.

எனக்கு அவர் தென்னை குறித்து சொல்லியிருக்கக்கூடாது என தோன்றியது. ஏனென்றால், தென்னை மரத்திற்கு உலகளாவிய ஒரு அங்கீகாரம் உண்டு. ஆனால் பனைக்கு அப்படியல்ல, ஆகவே தென்னை குறித்து ஏன் மீண்டும் பேசவேண்டும் என எண்ணினேன். ஆனால், அது ஒரு எளிய ஒப்புமை. அங்கே அப்படியிருந்தால் இங்கே இப்படி இருக்கலாமே எனும் ஒரு கோட்டுச் சித்திரம். எனக்கு உண்மையிலேயே தென்னையினை வெளிப்படையாக பேசுவது பிடிக்காது, ஆனால், தேங்காய் இல்லாமல் என்னால் மூன்று வேளைகளை கடத்திவிட முடியாது. ஒரு துவையல் போதும், கஞ்சியோ, தோசையோ அல்லது சுடு சோறோ இலகுவாக ஒரு நேரத்தைக் கடத்தி விடும் ஆள் நான். ஆகவே, நமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உண்மை நிலவரங்கள் பேசப்படலாம் என்பதையும் புரிந்துகொண்டேன். நமது பாவனைகளுக்காக ஒருவர் கருத்தில் குறைக் கண்டுபிடிக்கத் தேவையில்லை என்றே முடிவுசெய்தேன்.

“யானைகள் தமிழக கலாச்சாரத்தில் பாதி பங்களிப்பை ஆற்றியவை என ஒரு முறை தியோடர் பாஸ்கரன் கூறியிருக்கிறார். நான் சொல்லுகிறேன், பனை இல்லாவிட்டால் மிச்ச பாதியும் இல்லாமல் போயிருக்கும்”. இந்த வாக்கியம் என்னை வெகுவாக கிளர்ந்தெழச் செய்த வாக்கியமாக மாறிப்போனது. இன்று நமது மண்ணில், யானைகள் ஒருவழியாக புறந்தள்ளப்பட்டுவிட்டது. அப்படியே பனைகளும் நினைவுகளிலிருந்து மறைந்துகொண்டிருக்கிறது. யானையும் பனையும் ஒரே நிலத்தினை பகிர்ந்துகொண்டிருக்குமா? இருக்கலாம். குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு சற்று அருகில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் கடமான்குழி. அதற்கு சற்று இந்தப்பக்கம் இருக்கும் இடத்தினை ஆனைக்குழி என்பார்கள். சங்க கால பெயர்களாக இவைகள் இல்லாவிட்டாலும் யானையும் வேறு பல காட்டு விலங்குகளும் ஊரைச் சுற்றி நடமாடிக்கொண்டிருந்தன என்பதை விளக்கும்.

யானையும் பனையும், கருங்கல் தேங்காபட்டணம் சாலையில்

யானைகளுக்கும் பனைக்கும் தமிழகத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், நமது கட்டிடக்கலைக்கு அச்சாணியாக நான் பார்க்கிறேன். மிகப்பெரிய தூண்கள் மற்றும் கல் தச்சு பணியில் கூட யானைகளின் பங்களிப்பும் பனையின் பங்களிப்பும் ஒரு சேர இருந்துள்ளதை நாம் பார்க்கலாம். ராஜ ராஜ சோழன் கட்டிய ஆலயத்திற்கான கற்கள் சாய்வுகள் ஏற்படுத்தி மேலேற்றப்பட்டன. யானைகள் கற்களை இழுத்துச் சென்றன எனச் சொல்லுவார்கள். ஆனால் கற்களின் கீழே பனை மரங்களை வெட்டி இடப்பட்ட உருளைகளே இப்பணியினை இலகுவாக்கின. இல்லையென்றால், பனை வாரைகளை  இட்டு அதன் மீது கற்கள் புரட்டப்பட்டு இழுக்கப்பட்டிருக்கலாம். அவைகள் தண்டவாளம் போல வழுவழுப்பாக கற்களை இழுத்துச் செல்ல வாய்ப்பளித்திருக்கும்.

நமது உணவு, உறைவிடம், இசைக்கருவிகள், பயன்பாட்டு பொருட்கள் என நிகரில்லா பொருட்கள் பனையிலிருந்து கிடைக்கிறது. இனிப்பு சுவையும் கள்ளும் இல்லாத கொண்டாட்டங்கள் தமிழகத்தில் இருந்ததில்லை. அதியமான் என்னும் மன்னன் ஓளவைக்கு கள்ளை வழங்கியே வரவேற்றிருகிறான். சங்க இலக்கியம் கள்ளை கொண்டாடியிருக்கிறது என்றார்.  

பனை மரப் பட்டியல் கொண்டு அமைக்கப்பட்ட கூரை

மொழி எப்படி ஒரு சூழலிலிருந்து எழுகிறது என்பதை அண்ணன் சுட்டிக்காட்டினார்கள். இன்று நாம் பட்டியல் என்ற பதத்தை வரிசைப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறோம். ஏன் என்றால், பழங்காலத்தில் வீடுகளுக்கு கூரை வேயும்போது பட்டியல்களை வரிசையாக அடுக்கி அதன் மீது தான் கூரை இடுவார்கள். பெரும்பாலும் குமரி மாவட்டத்தில் பட்டியல்கள் என்பவை பனை மரத்தால் செய்ததாகவே இருக்கும். அப்படியானால், ஒரு மொழிக்கான சொற்களஞ்சியத்திற்கு பல்வேறு வார்த்தைகளை கொடையளித்த தாவரங்களுள் பனை முதன்மையான ஒன்று என்றார். பனையும் பனை சார்ந்த தொழில்களும் அழியும்போது இந்த சொற்களும் அழிவை சந்திக்கிறது என்றார். அவை புழங்கும் தளங்கள் இல்லாமல் ஆகிவிடுகின்றன. என்னிடம் பனை சார்ந்த ஒரு சொற்களஞ்சியத்தை உருவாக்க கேட்டுக்கொண்டார். செய்யவேண்டிய பணிகள் பட்டியலில் அது இருக்கிறது. அப்படியே பனை குறித்து ஒரு புனைவினையும் எழுத கேட்டுக்கொண்டார். அதை என்னால் செய்ய இயலுமா எனத் தெரியவிலை.

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில், கருங்கல் பட்டியல்

அவர் சொல்லாமல், அவரது எழுத்துக்களை வாசிப்பதினூடாக அக்காரம் என்ற சொல்லைக் கண்டுகொண்டேன். சற்றே பாயசம் போன்ற ஒரு உணவுப் பொருள் தான் அது. அந்த வார்த்தையினை நான் அவரை வாசிக்கும்வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால், பின்னர் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணன் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களில் கன்னியாகுமரி வட்டார சொற்கள் தாராளமாக புழங்கும். பல வேளைகளில் அது இலக்கிய பின்னணியம் கொண்டதாக இருக்கும். அப்படியானால், இந்த சொல்லுக்கு இணையான குமரி மாவட்ட சொல் ஏதும் இருக்குமா எனத் தேடினேன். என்னைக் கிழர்தெழச் செய்யும் வார்த்தை ஒன்று கிடைத்தது. அக்கானி என்கிற வார்த்தையினை குமரி மாவட்டம் தாண்டி வேறு எவருமே அறிந்திருக்க மாட்டார்கள். பதனீர் என்று இன்று நாம் வழங்கும் சொல்லை சுட்ட குமரி வாழ் மக்கள் பயன்படுத்தும் சொல் இது. அக்கானியிலிருந்து தயாரிப்பதால் அக்காரம் என பெயர் பெற்றதா?

ஆலய கட்டுமானங்களில் கல் பணிகள் அமைத்திருந்தாலும், அவைகளில் கூட பட்டியலை ஒத்த அமைப்புகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மர தச்சு பணிகள் இருந்த காலத்தில் எவ்விதமான கட்டுமான பணிகள் இருந்தனவோ அவைகளை அப்படியே பிரதியெடுப்பதை சுட்டிக்காட்டியவர், பனை வாரைகளைக் கொண்டு இன்றுவரை குமரி மாவட்டத்தில் கூரை அமைப்பதையும் சுட்டிக்காட்டினார். அரிய தகவல்கள் பல ஊறி நிறைந்து வழியும் ஊற்றுக்கண் தான் அவர்.

விஷ்ணுபுரம் முழுக்க பனை உணவாக, பல்வேறு பொருட்களாக, உவமானமாக வருகிறது. ஓலைச் சிலுவை, ஆமை, வலம் இடம் போன்ற கதைகளில் பனை சார்ந்த தகவல்கள் மற்றும் வாழ்க்கைச் சூழல் அதிகமாக பேசப்பட்டிருக்கின்றது. பல வேளைகளில் பனை அவரை ஆட்கொண்டுவிட்டதோ எனும் அளவிற்கு பனை அவரது எழுத்துக்களில் சரளமாக பயணிக்கிறதை எவரும் கண்டுகொள்ளலாம்.

எனது தொப்பி அழகாயிருக்கிறது என கூறியவர். இன்னும் சிறிய பொழிகள் கொண்டு செய்யப்பட்டால் மேலும் அழகாக இருக்கும் என்றார். காந்தியத்தையும் அதன் உள்ளூர் பொருட்களின் விற்பனை அதிகரிப்பையும் குறிப்பிட்டவர், காந்தியத்தின் அழகிற்கு எதிரான போக்கையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. அழகு நிறைந்த பொருட்களே இன்று விரும்பப்படுபவைகளாகவும் விற்பனையில் முதலிடத்தைப் பெருபவைகளாகவும் இருக்கின்றன என்றார். பனை நார் கொண்டு செய்யப்படும் பொருட்கள் மிக நீண்ட உழைப்பை கொடுக்கும். ஆகவே பனை நார் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் சர்வதேச சந்தைக்கு உகந்தவைகள் எனவும் கூறினார்.

அவரது அனுபவங்கள் மட்டுமல்ல கூர்ந்த அவதானிப்புகள் கூட என்னை பிரமிக்க வைத்தன.பனையும் காளியும் குறித்த எனது தேடுதல் அவருக்கு மிகப்பெரிய உளக்கிளர்ச்சியைக் கொடுத்தது என அறிவேன். பனையும் காளியையும் இணைத்து ஒரு பயணம் செல்லுமளவிற்கு கண்டடையப்படாத ஒரு களம் அது. ஏதோ ஒரு ஆதி குடிக்கு, அரம் போன்ற கரங்கள் கொண்டதும் ஆனால் கனிந்து உணவளிப்பதுமான ஒரு தெய்வமாக பனை உருபெற்றிருக்கலாம். அதனை தனது வாழ்வின் ஒரு அனுபவத்துடன் விளக்கினார். ஒரு முறை அவரதுபெரியம்மாவுடன் பயணித்துக்கொண்டிருந்த போது, வெட்டி வீழ்த்தப்பட்ட பனையின் மூட்டில் ஒரு பட்டையை வைத்து ஒழுகிய நீரைப் பிடித்துக்கொண்டிருந்தைப் பார்த்திருக்கிறார்கள். எதற்கு எனக் கேட்டபோது பதனீரை ஒத்த சுவையுடன் நீர் பெருகி வருமென சொல்லியிருக்கிறார்கள். அப்போது அவரது பெரியம்மா கூறிய வார்த்தை ‘அம்மையில்லா, எங்க வெட்டினாலும் இனிக்கத்தான் செய்யும்”. ஆக்கிரோஷம் கொண்டது போல கரங்களை வீசி நின்றாலும் கனிவின் மொத்தவுருவாக, அன்னையாக பனை ஏற்றுக்கொள்ளப்பட்டது இப்படித்தான்.

இனிமேல் ஏன் பனை தேவை எனக் கேட்டேன். இவ்வளவுதூரம் மறக்கப்பட்ட ஒரு மரத்தையோ அல்லது அதன் பொருட்களையோ நான் மீண்டும் கொண்டு வர எத்தனிப்பது பல வேளைகளில் நகைப்புக்குரியதாகவும், பொருளற்றதாகவும் இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில், என்னை வெகுவாக தேற்றியது. அவர் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, மிக அதிக செலவு செய்து அங்குள்ள கலாச்சாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார். ஆனால் அதே சிங்கப்பூரில், இதை விட வேகமாக அங்குள்ள பண்பாட்டு அழித்தொழிப்பு ஒரு காலத்தில் வளர்ச்சியின் பெயரால் நடைபெற்றிருக்கிறது. அழிப்பது எளிது ஆனால் மீண்டும் கட்டமைப்பது என்பது எளிதானதல்ல. அழித்தவற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டுமென்றால், பேணிக்கொள்வதை விடவும் மிகவும் பொருட்செலவு பிடிக்கும் ஒன்று அது என எனக்கு விளக்கினார். இன்று நிகழும் அழிவு, நாளை நாம் எப்படி முயற்சித்தாலும் மீட்டுருவாக்கும் நிலையில் இருக்காது என்றார்.

பனை சார்ந்த பொருட்கள் எப்படி மீண்டும் வரும்? “ஒரு பயன்பாட்டு பொருள் அதன் பயன்பாட்டு நிலையிலிருந்து அழியும்போது அது முற்றாக அழிவதில்லை. அது கலாச்சாரத்தின் அடையாளமாக எஞ்சுகிறது. ஆகவே அதன் மதிப்பு பலமடங்காக கூடிவிடுகிறது” என்றார். உண்மைதான் இன்று பல பனையேறிகளை நான் பார்க்கும்போது, அந்த காலத்தில், பனங் கருப்பட்டிக்கு இத்தனை மதிப்பு இருந்ததில்லை என ஒப்புக்கொள்ளுவார்கள்.

பனை இனிமேல் தமிழகத்தில் இருக்குமா? என்றேன். இருக்கும், “பனை இருந்துகொண்டுதான் இருக்கும், ஆனால், இதே வேகத்தில் சென்றால் பனையுடனான நமது உறவு முற்றாக அழிந்துவிடுவது நிகழும்” என்றார். நமது, வாழ்க்கையில் ஒன்றின்மீதான பற்றே அதன் மதிப்பை நமக்கு அளிக்கிறது. அந்த பற்று அம்மரத்துடனான நமது உறவிலிருந்து எழுகிறது. அந்த உறவு துண்டிக்கப்படாமல் காக்கப்பட்டாலே பனை இருப்பதற்கான பெறுமதி இருக்கும் என்றார். நான் அவரது கருத்துக்களுடன் முழுமையாகவே உடன்பட்டேன். எனது பனைமரச் சாலையே, அவ்விதமான ஒரு உறவை மீட்டெழுப்பும் கூக்குரல் கொண்டது தான்.

இவ்விதமான உரையாடல்கள் என்னை செழுமைப்படுத்தின.  பனையுடனான எனது பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தின. “ஒரு பண்பாடு குறித்து பேச அப்பண்பாட்டின் உள்ளிருந்து ஒருவர் வந்தாலே அதன் நுண் பக்கங்ளை வாசிக்க முடியும்” என்றார். அவ்விதமான பல படைப்பாளிகளை எனக்கு அறிமுகம் செய்தார். பல நேரங்களில் எனது கிறுக்குத்தனம் நிறைந்த பேச்சுக்களை அவரது அன்பான கனிவான பெருந்தன்மையால் இயல்பாக கடந்தார். இன்று வரை எனது குடும்பத்தில் பெருவாரியானவர்களுக்கு நான் கிறுக்கு பிடித்து அலைகிற ஒருவனாகவே காட்சியளிக்கிறேன். நான் மட்டும் போதகராக இல்லையென்று சொன்னால், குடும்ப நிகழ்வுகளுக்கு கூட எனக்கு அனுமதி இருக்காது என்பது தான் உண்மை. 

எனது பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் அண்ணன் ஜெயமோகன்

வீட்டை விட்டு ஓடிப்போவது எனக்கு மிகப்பிடித்தமானது. இருந்தாலும், என்னால் ஒரு முறைக் கூட அப்படி ஓட முடிந்திருக்கவில்லை. ஆனால், பனை என்னை அவ்வித பயணங்களுக்கு இரு கரம் நீட்டி வரவேற்றது. பல பனை நாயகர்களை நான் காண வழிவகை செய்தது. பனை இல்லாத வாழ்வு எனக்கு நீரிலிருந்து பிரிக்கப்பட்ட மீனின் வாழ்வுதான். செத்தே போய்விடுவேன்.

இப்படி நான் அறிந்த தகவல்களின் மேல் நின்று எனக்கு வெளிச்சம் வீசும் நபர்கள் வெகு அரிதானவர்கள். பலருக்கும் எனது தேடுதல் என்ன என்பது தெரியாது. நிறைய பணம் பெற்று தான் இவைகளைச் செய்கிறேன் என்றே பலர் நினைத்துக்கொள்ளுகிறார்கள். அல்லது, ஏதோ கட்சியினருடன் நான் இணைத்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுகிறார்கள். எனது பயணத்தின் வீச்சை அதன் துவக்கத்திலிருந்து அணுகி அறிந்த அண்ணனால் தான் என்னை புரிந்துகொள்ள இயலும்.

அன்று மாலை நான் அ கா பெருமாள் அவர்களை சந்திக்கச் சென்றேன். நாகர்கோவிலில் என்னோடு ஜாய்சன் ஜேக்கப் அவர்களும் இணைந்துகொண்டார். அ கா பெருமாள் அவர்களையும் சற்றேரக்குறைய இருபது ஆன்டுகளாக தெரியும். பனை சார்ந்து எனது தேடுதல்களில் பங்களிப்பாற்றிய ஒரு பெருத்தகை. நாட்டார் வழக்காற்றியலில் இன்று இருக்கும் மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒருவர். எந்த வித எதிர்பார்ப்புகளுமின்றி பழகுபவர். பல தகவல்களை எளியமுறையில் எனக்கு புரியவைத்தவர். பல மணி நேரம் தொடர்ந்து என்னோடு பேசியிருக்கும் நாகர்கோவில்காரர்.

பேராசிரியர் அ கா பெருமாள்

எனக்கும் அ கா பெருமாள் அவர்களுக்குமான தொடர்பு, அவரது பாவைக்கூத்து ஆய்வுகளின் வாயிலாகவே துவங்கியது. பவைக்கூத்திற்கும் பனைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா எனக் கேட்டபோது இருக்கிறது என்றார். பாவைக்கூத்து என்பது, சினிமாவிற்கு முந்தைய கலை வடிவம். வெள்ளைத் துணி திரை கட்டி, ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட பாவைகளை அசைத்து, இசையுடன் புராண கதை சொல்லுவது. பெரும்பாலும் ராமாயணமே அதன் முக்கிய கதையாக இருக்கும். புராண கதையின் நடுவே உச்சுக்குடுமியும் உழுவத்தலைபேராசிரியர் அ கா பெருமாள்யன் என இரண்டு  நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் வந்து பார்வையாளர்களை குலுங்கி சிரித்து விழச் செய்யும் வகையில் அமைத்திருப்பார்கள். அவைகளில் ஒன்று, இவ்விருவரும் பனையேறியை ஏமாற்றி, பதனீர் அருந்துவதாக அமைந்திருக்கும். பனையேறிகள் அன்றும் இன்றும் ஏமாற்றப்படுவது வழக்கம் தான் போலும்.  அந்த காட்சி வரும்போது, ஒரு பனை மரத்தில் பனையேறி ஏறுவதுபோல் தத்ரூபமாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். நானும் ரங்கிஷும் ஒருமுறை அ கா பெருமாள் அவர்களோடு கலைமாமணி முத்துச்சந்திரன் அவர்கள் பறக்கையில் நடத்திய நிகழ்ச்சியினை கண்டு ஆவணப்படுத்தினோம். 

பாவைக்கூத்தில் பனையேறி

அரவி தமிழ் சுவடிகளை குறித்து அவர் தான் எனக்கு முதன் முதலில் சொன்னார். அந்த பயணம் என்னை காயல்பட்டணம் வரை அழைத்துச் சென்றது.  என்னால் அரவித்தமிழ் சுவடிகளை காணமுடியாவிட்டாலும் அப்பயணத்தை அவர் துவக்கி வைத்ததால் அவருக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் ஐக்கிய இறையியல் கல்லூரி, பெங்களூருவில் பயின்றுகொண்டிருக்கும்போது, அங்கே கிறிஸ்தவ திருமறையில் காணப்படும் வரிகளை உள்ளடக்கிய ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேன். தமிழில் எழுதி பாதுகாக்கப்பட்ட அந்த சுவடிகள், இஸ்லாமியர்களும் இப்படி அரபியில் எழுதிய சுவடிகள் வைத்திருப்பார்களே என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது. அதற்கு விடையாகத்தான், அரவித்தமிழ் குறித்து அ கா பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அரபி லிபியினை உள்ளடக்கிய தமிழ் வார்த்தைகள் கொண்ட சுவடி தான் அரவித்தமிழ். இது, தமிழ் தெரிந்தவர்களால் வாசிக்கமுடியாது, அரபி தெரிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாதது. அப்படியானால், தமிழ் இஸ்லாமியர்களிடம் மட்டுமே புழங்கிய ஒரு இலக்கிய வடிவாக இது இருந்திருக்கிறது.

அப்படியே, தமிழ் பைபிள் ஒன்றை ஆறுமுக நாடார் வைத்திருந்தார் என அவர் கூறக்கேட்டிருக்கிறேன். மிக வசதியான அவர், அதனை ஒரு வெள்ளைக்காரருக்கு கொடுத்துவிட்டதாக கேள்விப்பட்டேன். குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய தனியார் சுவடிகளின் தொகுப்புகளை மிகப் பாதுகாப்பான இடங்களுக்கு மடைமாற்றியவரும் அவரே. இல்லையென்றால் நமது பழம்பெரும் செல்வங்கள் கண்டிப்பாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும். ஓலைச் சுவடிகளை வாசிக்கின்ற வெகு சிலருள் பேராசிரியர் அவர்களும் ஒருவர். எனக்காக சில கணக்கு ஓலைச் சுவடிகளை எடுத்து வைத்திருக்கிறதாக  கூறினார். மீண்டும் சந்திக்கும்போது அவைகளை என்னிடம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

வாச்சி என்ற தொழிற்கருவியினையும் அவர் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். வாச்சி என்பது பனை மரங்களை செதுக்கும் கோடாரி போன்ற ஒரு கருவி. கோடாரி போன்று தடிமனாகவும் மண் வெட்டி போன்று திசை மாறியும் இருக்கும். பிளந்த பனை மரங்களை செதுக்கி எடுக்கும் இக்கருவி பயன்படுத்தும் நபர்கள் குமரி மாவட்டத்தில் பத்துபேர் இருப்பார்களா என்பது சந்தேகமே. பிற்பாடு பூக்கடை என்ற பகுதியில் வாச்சி பயன்படுத்தும் ஒருவரை தேடிக்கண்டடைந்தேன்.

கோடாலியுடன் பனை சீவியெடுக்கும் வாச்சி

அ கா பெருமாள் அவர்களுக்கு எனது தேசிய அளவிலான பனை சார்ந்த தேடுதல் குறித்த பெருமிதம் உண்டு. நாகர்கோவில் அகில இந்திய  வானொலி நிலையத்தில் பனை குறித்து நான் பேசவேண்டும் என தன்னிடம் நிலைய அதிகாரி கேட்டுள்ளார் என கூறினார். எனக்கு அது மகிழ்வான தகவல். பல வருடங்களாக நான் வானொலியில் பேசவேண்டும் என நினைத்ததுண்டு. ஆனால், என்னால் அப்படி ஒரு வாய்ப்பை பெற இயலவில்லை. அ கா பெருமாள் அவர்கள், எப்படியும் என்னை பேச வைப்பது என முடிவெடுத்துவிட்டார்கள். அக்டோபர் 24 ஆம் தேதி பேசலாம் என முடிவு செய்தோம். பனை நேசர்களோடு இந்த நாள் இனிதாக முடிந்ததில் எனக்கு மனநிறைவே.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 15

ஏப்ரல் 2, 2021

பனையும் பானையும்

அக்டோபர் 18 ஆம் தேதி ஜேக்கப் அவர்களுடன் தென் தமிழக பயணம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தோம்.  இறுதி நேரத்தில் ஜேக்கப் அவர்களின் மகளுக்கான ஒரு நேர்முகத் தேர்வு வந்ததால் அந்த நிகழ்வைத் தள்ளிவைக்க முடியுமா என்று கேட்டார்கள். இச்சூழலில், நான் ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்பினேன். ஆகவே லக்னோவில் இருக்கும் எனது நண்பரான மொர்தேகாய் அவர்களைத் தொடர்பு கொண்டு மனோன்மணியம் சுத்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் சுதாகர் அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்றேன். மொர்தேகாய் தொல்லுயிரியல் ஆய்வு களத்தில் இருப்பவர். பேராசிரியர் சுதாகர் அவர்கள் சில பானை ஓடுகளில் சுண்ணாம்பு இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறதாக கூறினார். ஆகவே அதனைத் தேடி செல்ல திட்டமிட்டேன். எனது திருச்சபையினருக்கான செய்தியினை வாட்சாப்பில் இட்டுவிட்டு, அதிகாலையில் திருநெல்வேலி நோக்கி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன்.

திருநெல்வேலியில் இருக்கும் ஆத்தூர் என்ற பகுதி எனக்கு புதியது. ஆகவே, பனை மரம் குறித்து ஆய்வுகளத்தில் இருக்கும் வெங்கடேஷ் என்ற மாணவரை அழைத்து தம்பி, நான் உங்கள் ஊருக்கு வருகிறேன், என்னோடு இணைந்துகொள் என்றேன். இம்முறை ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டினுடைய புல்லட். புதியது ஆகவே சிறந்த பயண அனுபவமாக இருந்தது. எண்பது கிலோமீட்டர் வேகத்தை பிடித்துக்கொண்டேன். போகும் வழியில் எங்கும் நிற்காமல், சீக்கிரமாக செல்லவேண்டும் என்ற எண்ணத்துடனேயே பயணித்தேன். வழியில், புண்ணியவாளன்புரம் என்ற ஒரு ஊர் பலகை கண்ணில் பட்டது. சுற்றிலும் பனை மரங்கள். பனை இருக்குமிடம் புண்ணியவாளர்கள் இருக்குமிடம் தானே.

புண்ணியவாளன்புரமும் பனை மரங்களும்

பணக்குடியைக் கடக்கும்போது ஒரு மனிதர் பனை ஓலைகளை சைக்கிளில் தள்ளிக்கொண்டு சென்றார். பணக்குடி பகுதிகளில் முறம் செய்வதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த மனிதர் எடுத்துச் செல்லும் ஓலைகளைப் பார்த்தால், முறம் செய்பவர் போல தோன்றவில்லை. ஆகவே எதற்காக எடுத்துச் செல்லுகிறீர்கள் என நிறுத்தி விசாரித்தேன். பெட்டி செய்ய எடுத்துப்போகிறேன் என்றார். நிற்க நேரமில்லை ஆகையால், வேகமாக அங்கிருந்து நகர்ந்தேன். என்னவகையான பெட்டி செய்பவராக இருப்பார் என்றே என மனம் அசைபோட்டபடி இருந்தது.

பெட்டி செய்ய பனை ஓலைகளை எடுத்துச் செல்லும் பெரியவர், பணக்குடி

திருநெல்வேலியைக் கடந்தபோது மீண்டும் வெங்கடேஷை அழைத்தேன். தயாராகிக்கொண்டிருப்பதாக சொன்னான். ஆகவே வழியில் தானே காலை உணவை முடித்துக்கொண்டேன். கருங்குளம் விலக்கில் என்னை காத்திருக்கச் சொன்னான். நான் சென்று எனது வாகனத்தை நிறுத்தியபோது அங்கே இருந்த சோதனைச் சாவடி காவலர்கள் என்னையே உற்று பார்த்தனர். நான் தலைக் கவசத்தைக் கழட்டிவிட்டு, வெங்கடேஷ் வருவதற்கு நேரம் இருந்ததால், எனது பனை ஓலைத் தொப்பியை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு நின்றேன். சிறிது நேரத்திலேயே வெங்கடேஷ் வந்தான். மெலிந்த தேகம். முதல் தலைமுறையாக உயர்கல்வி படிக்கும் மாணவன். ஆனால் வெகு உற்சாகமானவன். அவனது ஆய்வுகளின் வழியாக என்னை வந்தடைந்தவன். அண்ணன் என்றே என்னை அழைப்பான்.

இருவருமாக புறப்படுபோது அங்கிருந்த காவல்துறையினர் எங்களை அழைத்தனர். எதற்காக என தெரியாமல் பதட்டத்தோடு சென்றபோது, வெறுமனே பேச்சு கொடுக்க தான் அழைத்தனர் என்பது தெரியவந்தது. எனது பனை ஓலைத் தொப்பியும் பனை ஓலைப் பையுமே அவர்களைக் கவர்ந்திருக்கிறது. அவர்கள் அருகில் சென்றபோது எங்கிருந்து வருகிறீர்கள் எங்கே செல்லுகிறீர்கள் என்று கேட்டார்கள். பனைக்காக நான் செய்து வரும் வேலைகளைக் குறித்து வெங்கடேஷ் சுருக்கமாக அறிமுகப்படுத்தினான். எங்களது பனை தேடுதலைக் குறித்து நான் சொன்னேன். அவர்களுக்கு எங்கள் தேடுதல் மீது ஓர் இணக்கம் வந்திருக்க வேண்டும், பனைக்காக எவ்வளவோ பேசுகிறீர்கள் கள்ளை குறித்து பேசக்கூடாதா என்றார். எனக்கு உற்சாகம் தாங்கவில்லை… “எனது தமிழக பயணமே அதற்குத்தான்” என்றேன்.

அப்போது அவர் கூறிய வார்த்தை கூர்மையான அவதானிப்பு கொண்ட ஒன்று. சார், பனை ஏறும் காலம் வெறும் மூன்று மாதங்கள் தான். வெறும் 90 நாட்கள், “நீங்கள் ஏன் 100 நாட்கள் மட்டும் கள்ளிறக்க போராடக்கூடாது” என்றார். எனக்கு அந்த மனிதரை அப்படியே கொண்டாடவேண்டும்போல் இருந்தது. எவ்வளவு கச்சிதமான வார்த்தை அது. இதுவரை பனை சார்ந்து இயங்கிய எவரும் கேட்காத ஒரு கோணத்திலிருந்து பிறந்த வார்த்தை. உண்மைதான், நூறு நாள் வேலைத் திட்டம் போல நூறுநாள் கள் திட்டத்தை அரசு கொடுக்க விண்ணப்பிக்கலாம் என்று சொன்னேன். உண்மையிலேயே, காவல்துறைக்குள் இருப்பவர்களுள் பலரும் சூழ்நிலைகளை அறிந்து உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் அழுத்தமே அவர்களை வெறும் கருவியாக எஞ்ச செய்கிறது என்ற புரிதலை பெற்றுக்கொண்டேன்.

நூறுநாள் கள் திட்டம் என்ற ஒரு கருத்தினை முன்வைக்கலாமா? அவைகளின் சாதக பாதகங்கள் என்ன? முதலில், கள்ளுக்கடை என்ற ஒன்றை நாம் எப்போதும் எச்சூழலிலும் வரவேற்கப்போவது இல்லை. பனையேறிகள் தங்கள் தங்கள் பனை மரத்தின் அடியில் இருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் கிடைக்கின்ற பனங்கள்ளினை விற்பனை செய்துகொள்ளலாம். மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் உள்ளது போல், இந்த நூறு நாட்கள் மட்டும் அனுமதியளித்து விட்டு மிச்ச நாட்களில் கள்ளுக்கு தடை செய்வதே மிகச் சரியாக இருக்கும். இதனை ஒவ்வொரு மாவட்டத்தினரும் தங்களுடைய பனை சார்ந்த பருவத்தினை ஒட்டி, தங்களுக்கு தேவையான 100 நாளை தெரிவு செய்யும் வாய்ப்புகள் வழங்கவேண்டும். அரசு இன்று பனையேறிகளுடைய வாழ்வை பரிசீலிக்கவில்லையென்று சொன்னால், நாளைய தினம் நமது நிலம், வேலை வாய்ப்பு, உணவு, கலாச்சாரம் எல்லாம் அழிந்துபோய்விடும்.

வழியில் ஆதிச்சநல்லூரைக் கடந்து சென்றோம் அங்கே பனை மரங்களை ஒரு புல்டோசர் கொண்டு பிடுங்கி வீசிக்கொண்டிருந்தார்கள். தனியார் இடமா அல்லது புறம்போக்கா என தெரியாத அந்த இடத்தில், எவர் இவ்விதம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க இயலவில்லை. தமிழகம் முழுக்கவே பனை மரங்களை புற்களும் களைகளும் என நினைத்து வெட்டிப்போடுவது சர்வசாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆதிச்சநல்லூருக்கும் பனை மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதே எனது எண்ணம். சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் நான் பயணிக்கையில் பனை மர உச்சியில் ஒரு மயில் தங்கியிருப்பதைப் பார்த்தேன். 

பனைமர அழித்தொழிப்பு, ஆதிச்சநல்லூர்

நாங்கள் செல்லும் வழியில்தானே சில பனைகள் நின்ற இடத்தில் நெருப்பு வைக்கப்பட்டு சாம்பல் தரையில் கிடந்தன. ஆனால் ஆச்சரியமாக பனைகள் ஏதும் மடிந்துவிடவில்லை. எரிந்தபின் அவைகள் உயிர்த்தெழுந்து மறு வாழ்வு பெற்று நின்றன. எரித்தவர்களை நோவதா அல்லது பனையின் வீரியம் குறித்து பெருமைகொள்வதா என எனக்குத் தெரியவில்லை. பல்வேறு தருணங்களில் நெருப்பு வைக்கப்பட்ட பனை மரங்கள் இவ்விதம் தப்பிப்பிழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே இவைகளை காட்டுத்தீயினை கட்டுப்படுத்த வளர்க்கலாம் என பரிந்துரை செய்யப்படுவதுண்டு.

நெருப்பிட்டபோதும் உயிர்தெழும் பனை மரச் செல்வம்.

ஸ்ரீவைகுண்டம் கடந்து செல்லும்போது ஒரு கல் மண்டபத்திற்குள் பனை ஓலையில் செய்யப்பட்ட ஒரு கொடாப்பு கிடப்பதைப் பார்த்தேன். கொடாப்பு என்பது இடையர்கள் பணியும் ஒரு மிகப்பெரிய கூடு. பிறந்து சில நாட்களேயான ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல இயலாது, அவைகளல் வெம்மையினை தாங்கிகொள்ள இயலாது. சில வேலைகளில் நாயோ நாரியோ கவ்விச்சென்றுவிடும் ஆபாயம் கூட இருக்கிறது. ஆகவே, மிகச்சிறிய குட்டிகள் பாதுகாப்பாய் இருக்கும்படியாக செய்யப்பட்ட பனை ஓலை கூடு தான் கொடாப்பு. தமைழகம் முழுவதும் எனது பயணத்தில் பல முறை இவைகளை நான் பார்த்திருக்கிறேன். கீதாரிகள் என்று சொல்லப்படுகின்ற ஆட்டிடையர்கள் இவ்விதமான அழகிய கூடுகளை தயாரிக்கும் கலைதிறனை கொண்டிருக்கிறார்கள். இடையர்கள் வாழ்வில் பனை அவ்வகையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. சில இடங்களில், கொடப்பினை அப்படியே ஒரு கூரையாக மாற்றி அதற்கு கீழே இடையர்கள் தங்குகின்ற தற்காலிக குடிசைகளையும் பார்த்திருக்கிறேன். தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் வாழ்விடங்களை பனை ஓலைகளைக் கொண்டு அமைத்திருக்கிறார்கள். இவ்வித கட்டுமானங்களை நாம் மீட்டெடுப்பது அவசியம்.

சிதிலமடைந்து கிடக்கும் கொடாப்பு, ஸ்ரீவைகுண்டம்

இன்று சாலையோரங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் கடை போட்டிருப்பவர்கள் சில செயற்கை இழைக் குடைகளை அமைத்து போட்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், ஏன் இப்படி பனை ஓலைகளால் எவரும் செய்வதில்லை என குறைபட்டிருக்கிறேன். ஒரு முறை பாண்டிச்சேரியிலுள்ள நண்பர்களுக்காக இப்படி ஒரு முயற்சியை முன்னெடுக்க விழைந்தோம். ஆனால் இறுதியில் நாங்கள் நினைத்ததுபோல் எதுவும் நடைபெறவில்லை. நமது மரபுகளை மீட்பது, அவ்வளவு எளிதாக இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டோம். நமது மரபுகளை மீட்பது நமது சூழியலை பேணுவதாக அமையும் என நான் உறுதிபட நம்புகிறேன்.

பயன்பாட்டில் இருக்கும் கொடாப்பு

தெற்கு ஆத்தூர் என்ற பகுதிக்குச் சென்றோம். பேராசிரியர் சுதாகர் வீட்டை கண்டுபிடித்து அந்த வளாக கதவினை தட்டியபோது அவர் வெளியே வந்து மகிழ்வுடன் எங்களை வரவேற்றார். நெடுநாள் பழகிய நண்பரைப்போன்ற உணர்வே அவரை பார்த்ததும் தோன்றியது. உயரமாக சற்றே காமராஜரை நினைவுறுத்தும் ஒரு தோற்றம். கைலி கட்டியிருந்ததால், பேராசிரியர் போலல்லாமல், ஒரு விவசாயி போலவே தோற்றமளித்தார். வெகு இயல்பாக இருந்தார், எங்களையும் இயல்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இத்தனைக்கும் அவர் அமெரிக்காவில் தனது வேலையை ராஜினாமா செய்து இந்தியா வந்தவர், நமது மண்ணில் இருக்கும் மகத்தான ஆய்வு களங்களை தேடிச்செல்லும் விருப்பமுள்ளவர். அரண்டுபோனேன். இத்தனை எளிமையினை என்னை சுற்றி சமீபத்தில் எங்குமே கண்டதில்லை. சிறிது நேரம் உரையாடிய பின்பு ஆளுக்கொரு டவல் கொடுத்தார். புரியாமல் வாங்கிகொண்டோம். பின்னர் எங்களை அழைத்துக்கொண்டு பானை ஓடுகள் கிடைக்கும் இடத்திற்கு போவோம் என்றார். அவரது காரிலேயே சென்றோம். அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட இருக்காது. அங்கே ஒரு மிகப்பெரிய குளம் இருந்தது. அந்த குளத்திலிருந்து சிலர் மணல் அள்ளியிருந்தார்கள், அதிலிருந்து சில புதைப்படிவங்களை எடுத்து காட்டினார். நத்தைகள் போல ஆனால், விதவிதமான வடிவங்கள் அங்கே கேட்பாரற்று கிடந்தன. அனைத்தும் பல மில்லியன் ஆண்டுகள் பழைமையானவைகள். உண்மையான ஆய்வுகள் நமது கிராமத்திலிருந்தே துவங்குகின்றன என்பதை அறியும்விதமாக இருந்தது.

ஆய்வு மாணவர் வெங்கடேஷ் மற்றும் பேராசிரியர் சுதாகர்

அங்கே குளத்தில் நீர் தேங்கியிருக்கும் இடம் வந்ததும் இனி துண்டைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றார். துண்டைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கினோம். எங்கே போகிறோம் என்றே தேரியாத ஒரு திசையில் அவர் முன்னால் நடக்க அவரைத் தொடர்ந்து நானும் என் பின்னால் வெங்கடேசும் நடந்து சென்றோம்.  இங்கே வருவதற்கு முன்னால், ஏதோ என்னை ஒரு தொல்லியல் களத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள பானையோடுகளைக் காட்டுவார் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், மனிதர் எங்களை தண்ணீரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். உள்ளபடியே எனது வாழ்வில் இது ஒரு புது அனுபவம். இப்படி தண்ணீரில் இறங்கி எனது ஆய்வுப்பயணத்தை இதுவரை நான் முன்னெடுத்ததில்லை. கணுக்கால் அளவிலிருந்து முழங்கால் வரைக்கும் ஆழத்தில் முட்கள் குத்த, புற்கள் கால்களில் தட்டுபட நடந்தோம். குளத்தின் மையப்பகுதி வரும்வரை முட்டளவு நீரில் நடந்தே சென்றோம். அங்கே நீர் பிடிப்பு இல்லாத சற்றே மேடாக ஒரு இடம் நோக்கிச் சென்றோம். அங்கிருந்தும் மணல் அள்ளியிருந்தார்கள். பார்க்கும்போது தொல்லியல் எச்சத்தினை கண்டடைவதற்கான எந்த தடயமும் அங்கு காணப்படவில்லை.

நானும் பேராசிரியர் சுதாகர் அவர்களும் பானை ஓடுகளை தேடிச்செல்லும் பயணம்

ஏன் எங்களை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். உண்மையிலேயே இவர் ஏதேனும் ஆய்வுகள் செய்திருக்கிறாரா? அல்லது சிலரைப்போல கவன ஈர்ப்புக்காக இல்லாத கதைகளைச் சொல்லி, நம்மை திசை திருப்புகிறாரா என்ற எண்ணம் ஏற்பட்டது. நடுக்குளத்தில் கொண்டுவந்து இங்கே தான் தொல் நாகரீகம் இருந்ததாக கதை விடப்போகிறாரா என உண்மையிலேயே சந்தேகித்தேன். ஏனென்றால், தொல்லியலாளர்கள் எவரும் அங்கே வந்து போனதற்கான எந்த சான்றுமே அங்கே இல்லை. பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு கூட இல்லை. என்ன சொல்ல போகிறார் என கவனிக்க ஆரம்பித்தேன்.

சுதாகர் சார் சொன்னார். இந்த குளத்தில் மண் அள்ளுவது எனது நண்பர் தான், ஒருமுறை அவர் எடுத்துச்சென்ற மணலில் பானை ஓடுகள் இருந்ததைப் பார்த்தேன். அவைகள் மிக பழைமையான பானை ஓடுகள் போலவே கானப்பட்டதால் நான் ஒரு சில மாதிரிகளை லக்னோவிற்கு அனுப்பியிருக்கிறேன். இந்த பானை ஓடுகளுக்கு சுமார் 2200 ஆண்டு பழமை இருப்பதாக தொல்லியலாளர்கள் கணிக்கிறார்கள்.  ஒருவேளை அதிகாரப்பூர்வ தகவல்கல் வரும்போது இதன் பழைமை குறித்து நாம் மேலும் திட்டமாக அறியமுடியும். ஆகவே, அதிகாரப்பூர்வமான தகவல் வரக் காத்திருக்கிறேன் என்றார். சிறப்பு என்னவென்றால், பானை ஓடுகளுக்குள் சுண்ணாம்பு இருக்கிறது என்றார். பானை ஓடுகளுக்குள் சுண்ணாம்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? எதனைக் குறிப்பிடுகிறார் என எனக்கு முதலில் விளங்கவில்லை. நமது வார்ப்பு அப்படி, எல்லாம் சற்று மெதுவாகத்தான் புரியும். உண்மையிலேயே சுண்ணாம்பு இருந்ததா என்று கேட்டேன். வேண்டுமென்றால் என்னோடு நீங்களும் இறங்கித் தேடுங்கள் என்றார்.

மணல் அள்ளிய இடத்தில் முட்டளவு நீருக்குள் இறங்கி கைகளை விட்டு துழாவினேன், எங்கு கை வைத்தாலும், உடைந்த மண் பாண்ட துண்டுகள் கரத்தில் கிடைத்தபடி இருந்தன. நான் முதலில் எடுத்த சில ஓடுகளில் உண்மையிலேயே சுண்ணாம்பு இல்லை, சில ஓடுகள் மென்மையாக சுண்ணம்பு கொண்டிருந்தன.இங்கு எப்படி மண் பாண்ட துண்டுகள் வந்திருக்கும் என எண்ணியபடி தேடுதலைத் தொடர்ந்தேன். சற்றும் தாமதிக்காமல் என் கரத்தில் அகப்பட்ட ஒரு பானை ஓட்டில் சுண்ணாம்பு படிந்திருந்தது. கைகளால் அதனை அழுத்தி தேய்த்து தண்ணிரில் கழுவியவுடனேயே அவைகள் கரைந்து போயிற்று. சுதாகர் சொன்னார். கழுவாதீர்கள், அப்படியே எடுங்கள் என.  மனதிற்குள் ஒரு முணுமுணுப்பு ஓடிக்கொண்டீருந்தது. எத்தனையோ தொல்லியல் எச்சங்கள் கிடக்கும் இந்த குளத்தில் பானை ஓடுகள் மீது சுண்ணாம்பு படிவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. சிப்பிகள் வெயில் காலத்தில், சூட்டினால் வெந்து நீர் பிடிப்பு ஏற்படும் சமயத்தில் சுண்ணாம்பாக மாறி பானை ஓடுகளில் படிந்திருக்கலாமே என நினைத்தேன். ஆனால், எல்லா ஓடுகளிலும் சுண்ணாம்பு ஒன்றுபோல் படிந்திருக்கவில்லை.

ஆற்றில் இறங்கி பானை ஓடுகளை எடுத்த போது, தெற்கு ஆத்தூர்

மீண்டும் தேடுகையில் அட்டகாசமான வேறு ஒரு துண்டு கிடைத்தது. முன்பை விட அதிக சுண்ணாம்பு படிந்திருக்கும் ஒரு பானை ஓடு. அப்போது தான் எனக்கு எல்லாம் உறைத்தது. சார்…… என்று கூவினேன், கும்மாளமிட்டேன், வெடித்து சிரித்தேன். கண்டுபிடித்துவிட்டேன் என சத்தமிட்டேன். எனது சந்தோஷம் கரைபுரண்டோடிய தருணமாக அது அமைத்திருந்தது. என்னை குதூகலப்படுத்திய அந்த ஓடோ, சுண்ணாம்பு மிகச்சரியான அளவில் படிந்திருந்த ஒரு ஓடு. அவ்விதமான ஓடுகளை நான் வேறு எங்கோ பார்த்திருக்கிறேன். ஆம் அந்த பானை ஓடுகளை நாம் இனிமேல் பானை ஓடுகள் எனக் கூறக் கூடாது, ஏனென்றால் பதனீர் கலய ஓடுகள் அவைகள். சுண்ணாம்பு தடவிய பதனீர் கலயங்கள் தான் அவை. எதற்காக கலயங்களில் சுண்ணாம்பு தடவ வேண்டும்? வேறெதற்கு? பனை ஏறுகிறவர்கள் பதனீரை எடுப்பதற்காகத்தான் சுண்ணாம்பைத் தடவுவார்கள். காலப்போக்கில், சுண்ணாம்பு அந்த பானை ஓட்டின் அடியில் படிந்துவிடும். அப்படியானால் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மக்கள் பனையேறியிருப்பதுடன் பதனீரும் இறக்கியிருக்கிறார்கள். அது ஒரு மாபெரும் தகவல்.

சுண்ணாம்பு படிந்திருக்கும் பானை ஓடு, தெற்கு ஆத்தூர்

கரையில் ஏறி வெற்றிக்களிப்புடன் அந்த பானை ஓட்டைப் பார்த்தேன். நானும் ஒரு புதை படிம ஆய்வாளன் என என்னை ஒருபடி ஏற்றிவிட்ட பானைத்துண்டு அது. பெருமிதத்துடன் எனது கரங்களில் அதனை ஏந்திக்கொண்டேன். இப்படியான ஒரு பொற்தருணத்தை நான் சிறிதும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. சங்க இலக்கியங்களில் கள் குறித்து அதிக தகவல்கள் இருக்கின்றன ஆனால் பதனீர் குறித்த குறிப்புகள் இல்லை. பேராசிரியர் வேதசகாய குமார் கூட, என்னிடம், பதினேழாம் நூற்றாண்டிற்கு பிறகே பதனீர் எடுத்து கருப்பட்டி காய்ச்சும் விதம் தோன்றியிருக்கும் என்று தனது யூகத்தை முன்வைத்தார். அப்போது என்னிடம் தகுந்த ஆதாரங்கள் இல்லை, ஆனால், இங்கு வந்த பிற்பாடு, தெற்கு ஆத்தூருக்கும் பனையேறிகளுக்கும் சங்க காலம் முதல் பெருத்த தொடர்பிருக்கும் என நான் உள்ளூற உறுதியாக நம்பினேன்.

தாமிரபரணி ஆற்றோரங்களில் கிடைக்கும் பானை ஓடுகள் மற்றும் பொருட்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனைச் சுற்றிலும் இருக்கின்ற பனை மரங்களுக்கும் அவைகளுக்கும் தொடர்புகள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணங்கள் வலுவாக ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. வெகு சமீபத்தில் கூட எனது குஜராத் பயணங்களில் பனை மரங்கள் அதிகமாக இருப்பதை பதிவு செய்திருந்தேன். லோதல் பகுதிகளிலும் பனை மரங்கள் இருந்ததைப் பார்த்த ஒரு உணர்வு நீடிக்கிறது. குஜராத் பகுதிகளில் பீல் பழங்குடியினருள் ஒரு இனக்குழுவினருக்கு தாட்வி என்ற பெயர் இருக்கிறது. தாட்வி என்றால் பனை சார்ந்திருக்கிறவர் என்றே பொருள். குஜராத்தில் நர்மதா நதியினை ஒட்டி பனை மரங்கள் செழித்து வளருவதை பார்க்கலாம்.

சுண்ணாம்பு தடவிய கலசங்களை பருவ காலம் அல்லாத நேரங்களில் கீழே இறக்கி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவைகளின் கீழ்பகுதியில் சுண்ணாம்பு படிவத்தின் அளவு மிகுதியாகவும், அதன் விலா பகுதிகளில் தீற்றலாகவும் மேல் பகுதிகளில் இல்லாமலும் இருக்கும். பதனீர் இறங்கும் அளவைப் பொறுத்து தான் பானைகளில் சுண்ணாம்பு தடவுவார்கள்.  அடிப்பகுதியில் சுண்ணாம்பு தேங்கிவிடுவதால், அவைகள் நாளாவட்டத்தில், பல அடுக்குகளாக வெள்ளையடித்து இறுகிய சுண்ணாம்பு பாளம் போல் மாறிவிடும். ஆகவேதான், பனை மரத்தினை கீழிருந்து பார்க்கும்போது சுண்ணாம்பு தடவிய பானைக்கும் கள் இட்டிருக்கும் பானைக்கும் வித்தியாசத்தை இலகுவாக கண்டுபிடிக்க முடியும். பானையின் அடிப்பாகம் மெல்லிய ஈரப்பதத்துடனிருந்தால் அது கள் இட்டிருக்கும் பானை எனவும், ஈரம் இல்லாது இருந்தால், அது சுண்ணாம்பு தடவிய பானை என்றும் அறியலாம். சுண்ணாம்பு பானையிலிருந்து பதனீர் கசிவதையும் நொதித்தலையும் தடுக்கிறது.

சுண்ணாம்பு பயன்பாடு தமிழகத்தில் மட்டுமால்லாது ஆசிய கண்டம் முழுக்கவே உள்ளது. வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து சுவைக்கும் வழக்கம் தென்கிழக்காசியாவில் தொல்பழங்காலம் தொட்டே உள்ள வழக்கமாகவே இருந்திருக்கிறது. ஆகவே கள்ளிறக்கும் பானையில் சுண்ணாம்பு தடவி பதனீர் எடுக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். ஆனால் சுண்ணாம்பு என்பது வேதியல் பொருள். இயற்கையாக கிடைக்கின்ற ஒரு உணவுடன் வேதியல் பொருளினை சேர்ப்பது முக்கியமாக இருந்திருக்கிறதா? சுண்ணாம்பு சத்து வேண்டும் என்பதற்காக இவ்விதம் சேர்க்கப்பட்டதா போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இன்று இயற்கை பொருளை உண்பதன் அவசியத்தை வலியுறுத்தும்போது, இயற்கையாகவே நொதித்தலைக் கட்டுப்படுத்தும் முறைமைகள் இருந்திருக்கிறதா என்ற கேள்விகள் எழுவது இயல்பு. எனது தேடுதலில் இயற்கை பொருட்களை பயன்படுத்தும் வழிமுறைகளை நான் இதுவரை தமிழகத்தில் பார்க்கவில்லை. ஆனால், தென்கிழக்காசிய நாடுகளில் சில மரங்களின் துண்டுகளை வெட்டிப்போட்டு நொதித்தலைக் கட்டுப்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒருவேளை தமிழகத்திலும் அவ்வித வழக்கங்கள் இருந்திருக்கலாம், ஆனால் சுண்ணாம்பு எளிமையாக கிடைத்ததாலோ என்னவோ, தமிழகத்தில் சுண்ணாம்பு பயன்பாட்டிற்கு பனையேறிகள் மாறியிருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.

கையிலிருந்த ஓடு கூட கலயத்தின் தடிமனுடன் தான் இருக்கிறது என்பதை மீள மீள பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனைப் பயணத்தில் இது ஒரு மைல் கல். பேராசிரியருக்கு நன்றி கூறினேன். அவர் அதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல என ஒரு குழந்தைபோல் சிரித்துக்கொண்டிருந்தார். இந்த சுண்ணாம்பிற்கு என்ன அர்த்தம்? மீண்டும் எனக்குள் சந்தேகம் ஓடியது.  யாரேனும் சில பானைகளை குளத்தின் நடுவில் எப்போதாவது கொண்டு போட்டிருக்கலாம். வீணாக நாமே பெரிய அறிஞர் போல காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்தேன். ஆனால் எனக்கு உள்ளூர நன்றாகவே தெரிந்தது, எனது கரத்திலிருக்கும் ஓடு எனது முதாதையர்கள் பதனீர் இறக்கிய ஓடு தான். அதனை நான் நிறுவிவிடமுடியுமா என்பதே எனக்குள்ள சவால். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இதற்குமேலும் செல்லவேண்டுமென்றாலும் செல்லலாம் என்று துணிந்துவிட்டேன். 

பேராசிரியர் அங்கிருந்து எங்களை கொற்கைக்கு அழைத்துச் சென்றார். கொற்கை ஒரு துறைமுக நகரமாக பண்டிய மன்னர்களின் வெளிநாட்டு வணிகத்தை நிற்ணயிக்கும் ஒரு முக்கிய இடமாக இருந்தது. முத்து குளிக்கும் மீனவர்களும், முத்து வியாபாரிகளும் மிகுந்திருந்தார்கள். இன்றும் அக்காசாலை என்று அழைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்துவோர் உண்டு. கடல் இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் விலகி சென்றுவிட்டது. இன்று கண்ணகி அம்மன் கோவில், ஒரு குளத்தினுள் அமையப்பெற்றிருக்கிறது. கொற்கையினைச் சுற்றி பனை மரங்களே செழித்து வளர்ந்திருக்கின்றன. அனைத்தும் நூறாண்டுகள் கடந்த நெடிந்துயர்ந்த பனை மரங்கள்.

பேராசிரியர் சுதாகர் கொற்கையில்

மதியம் பேராசிரியர் வீட்டிற்கு வந்து உணவுண்டோம். சுடசுட சுவையான் மீன் குழம்பு சாப்பாடு அவரது தாயார் எங்களுக்கு ஆயத்தம் செய்திருந்தார். சாப்பிடும்போது, வெங்கடேஷ் அவர்களின் ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார். தம்மாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். வெங்கடேஷ் தனது ஆய்வுகளுக்கு இவைகள் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். நானும் வெங்கடேஷும் சுதாகர் சாருக்கு நன்றி கூறி புறப்பட்டோம்.

திரும்பிச் செல்லும் வழியில் பால்பாண்டி என்ற நபரைக் குறித்து விசாரித்தேன். பால்பாண்டி என்பவர், பனை ஓலைகளில் பல்வேறு வடிவங்களைச் செய்யும் ஒரு கலைஞர்.  பனை ஓலையில் அவர் செய்த காமராஜர் முழு உருவச் சிலை அவரை ஒரு முக்கிய கலைஞராக தமிழகமெங்கும் அறிமுகப்படுத்தியது. பின்னர் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் திரு உருவச்சிலையினையும் அவர் செய்ததாக பத்திரிகை மூலமாக அறிந்துகொண்டேன். பல தருணங்களில் அவரை சந்திக்க முயன்றும் முடியவில்லை ஆகையால் இம்முறை தவறவிடக்கூடாது என முடிவு செய்து வெங்கடேஷ் அவர்களின் உதவியைக் கேட்டேன்.

வெங்கடேஷ் அவரைக் குறித்து அறிந்திருந்தான். நன்பர்களின் உதவியுடன் கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றான். நாங்கள் சென்றபோது அங்கே வீட்டில் அவர் இல்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது. நான் அங்கிருந்த குளக்கரையில் காணப்பட்ட பனை மரங்களைத் தேடிச் சென்றேன். வரிசையாக குளத்தை சுற்றி நிற்கு பனை மரங்கள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  தன்படம் ஒன்றை எடுத்துக்கொண்டேன். அப்போது, பால்பாண்டி அவர்கள் வந்துவிட்டார்கள், உடனேயே வாருங்கள் என வெங்கடேஷிடமிருந்து அழைப்பு வந்தது.

பால்பாண்டி கப்படா மீசை வைத்திருப்பவர். சிரிப்பில் பச்ச புள்ள தெரிகிற கள்ளமற்ற மனிதர். நிறுத்தாமல் பேசிக்கொண்டே செல்லும் தன்மை கொண்டவர். அவர் பெற்ற விருதுகள், அவர் செய்த சாதனைகள் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போனார். ஒரு முறை தஞ்சாவூருக்கு பணை ஏறப்போன இடத்தில் அழைத்துக்கொண்டு போனவர்கள், இவர்களைக் கைவிட, சாப்பாட்டிற்கு வழியில்லாமல், பனையேறி ஓலைகளை வெட்டிப்போட்டு, அந்த ஓலையில் பொருட்களைச் செய்து, அவைகளை விற்று சொத்த ஊர் திரும்பிய திருப்புமுனைக் கதையே அவரை பனை ஓலைக் கலையின் பால் திருப்பியிருக்கிறது. சமீபத்தில் மூன்று மாதங்கள் இரவும் பகலுமாக அமர்ந்து பிழை திருத்தி அவர் செய்த காமராஜ் உருவச்சிலை தான் அவரது வாழ்வை புரட்டிப்போட்டிருக்கிறது.

கருங்குளம் பால்பாண்டி அவர்களுக்கு பனை விதைகளை கொடுத்தபோது

மாட்டு வண்டி, மாட்டுத் தலை, பொருட்களை எடுத்துச் செல்ல சூட்கேஸ்,  செருப்பு, காமராஜர் முன்னால், பள்ளிக்கூடம் செல்லும் இரு குழந்தைகள் என வித்தியாசமாக அவரது படைப்புகள் காணப்பட்டன. அத்தனையும் பனை ஓலைகளைக் கொண்டு மட்டுமே செய்கிறார். நாங்கள் சென்றபோது தமிழக முதலமைச்ச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் திருவுருவச் சிலையினை அவர் செய்து வைத்திருந்தார். பனை ஓலையில், இவ்விதமான வடிவங்கள் என்பவை புதிதே. எவரும் இதுவரை இப்படியான முயற்சிகளை எடுப்பது இல்லை. அவரை சந்தித்தது எனக்கு பெருமகிழ்வளிப்பதாக இருந்தது.

அவரது பொருட்களில் காணப்பட்ட குறையென்பது அனைத்திற்கும் தாராளமாக வர்ணம் பூசியிருந்தார். இரசாயன வர்ணங்கள் ஓலைகளைக் காக்கும் என அவர் எண்ணியிருக்கலாம். இயற்கை சாயங்களை பயன்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும் என என் மனதிற்குப் பட்டது. எதிர்காலத்தில் பல்வேறு தலைவர்கள் உருவச்சிலையினையும் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தினை முன்வைத்தார்.

பனை ஓலையில் இவ்விதமான மனித மற்றும் மிருக உருவங்கள் செய்வது இதுவே முதல் முறை. ஆகவே, இவைகளில் ஒருமை கூடவில்லை என்பது உண்மை. கடுமையான உழைப்பின் மூலம், இவருக்கு பின் வரும் தலைமுறைகள் சில அடிப்படைகளை முன்னெடுத்து செல்லுமானால், எப்படி சிற்பிகளின் மூலப்பொருட்கள் இருக்கின்றனவோ அது போலவே, பனை ஓலைகளும் முக்கிய கச்சா பொருளாக மாறிவிட வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அவருக்கு பனை விதை ஒன்றினைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

தம்பி வெங்க்டேஷை அவனது வீட்டில் கொண்டு விட்டேன். அவனது அப்பா செங்கல் சூளையில் கணக்கு பார்க்கிறவர். ஒரு தம்பிம் ஒரு தங்கையும் உண்டு. மாலை 7 மணி தான் ஆகியிருந்தது, அவரது அம்மா சாப்பிட்டு செல்லுங்கல் என்றார். மறுக்க முடியவில்லை. எளிய ஆனால் அன்பான உணவு எனக்கு பகிர்ந்தளித்தார்கள். அவர்கள் வாழும் பகுதியில், நாடார்கள், பனை மரங்களை துணிந்து அழிப்பதும், பனை மரங்களை பேணி பாதுகாப்பது இஸ்லாமியர்கள் என்பதுமாக கேள்விப்பட்டேன்.

வெங்கடேஷ்சுடைய அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  வெங்கடேஷ் தான் அவர்கள் வீட்டின் எதிர்காலமே. அவன் முனைவர் ஆய்வு முடித்து நல்ல வேலை பெற்று குடும்பத்தை கரை சேர்க்க வேண்டிய பொறுப்புள்ளவன். அவனை வாழ்த்தினேன். என்ன தேவை என்றாலும் தயங்காமல் கேள் என்றேன்.

அன்று இரவு மீண்டும் ஒரு 130 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது எனது வாகனத்தை எடுத்தேன். கடவுளை வேண்டி எனது வாகனத்தை உயிர்ப்பித்தேன்.  எந்த சிக்கலும் இல்லாத மூன்று மணி நேர பயணம். நேராக வீடு வந்து சேர்ந்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653


%d bloggers like this: