பனையும் பானையும்
அக்டோபர் 18 ஆம் தேதி ஜேக்கப் அவர்களுடன் தென் தமிழக பயணம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தோம். இறுதி நேரத்தில் ஜேக்கப் அவர்களின் மகளுக்கான ஒரு நேர்முகத் தேர்வு வந்ததால் அந்த நிகழ்வைத் தள்ளிவைக்க முடியுமா என்று கேட்டார்கள். இச்சூழலில், நான் ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்பினேன். ஆகவே லக்னோவில் இருக்கும் எனது நண்பரான மொர்தேகாய் அவர்களைத் தொடர்பு கொண்டு மனோன்மணியம் சுத்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் சுதாகர் அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்றேன். மொர்தேகாய் தொல்லுயிரியல் ஆய்வு களத்தில் இருப்பவர். பேராசிரியர் சுதாகர் அவர்கள் சில பானை ஓடுகளில் சுண்ணாம்பு இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறதாக கூறினார். ஆகவே அதனைத் தேடி செல்ல திட்டமிட்டேன். எனது திருச்சபையினருக்கான செய்தியினை வாட்சாப்பில் இட்டுவிட்டு, அதிகாலையில் திருநெல்வேலி நோக்கி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன்.
திருநெல்வேலியில் இருக்கும் ஆத்தூர் என்ற பகுதி எனக்கு புதியது. ஆகவே, பனை மரம் குறித்து ஆய்வுகளத்தில் இருக்கும் வெங்கடேஷ் என்ற மாணவரை அழைத்து தம்பி, நான் உங்கள் ஊருக்கு வருகிறேன், என்னோடு இணைந்துகொள் என்றேன். இம்முறை ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டினுடைய புல்லட். புதியது ஆகவே சிறந்த பயண அனுபவமாக இருந்தது. எண்பது கிலோமீட்டர் வேகத்தை பிடித்துக்கொண்டேன். போகும் வழியில் எங்கும் நிற்காமல், சீக்கிரமாக செல்லவேண்டும் என்ற எண்ணத்துடனேயே பயணித்தேன். வழியில், புண்ணியவாளன்புரம் என்ற ஒரு ஊர் பலகை கண்ணில் பட்டது. சுற்றிலும் பனை மரங்கள். பனை இருக்குமிடம் புண்ணியவாளர்கள் இருக்குமிடம் தானே.

பணக்குடியைக் கடக்கும்போது ஒரு மனிதர் பனை ஓலைகளை சைக்கிளில் தள்ளிக்கொண்டு சென்றார். பணக்குடி பகுதிகளில் முறம் செய்வதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த மனிதர் எடுத்துச் செல்லும் ஓலைகளைப் பார்த்தால், முறம் செய்பவர் போல தோன்றவில்லை. ஆகவே எதற்காக எடுத்துச் செல்லுகிறீர்கள் என நிறுத்தி விசாரித்தேன். பெட்டி செய்ய எடுத்துப்போகிறேன் என்றார். நிற்க நேரமில்லை ஆகையால், வேகமாக அங்கிருந்து நகர்ந்தேன். என்னவகையான பெட்டி செய்பவராக இருப்பார் என்றே என மனம் அசைபோட்டபடி இருந்தது.

திருநெல்வேலியைக் கடந்தபோது மீண்டும் வெங்கடேஷை அழைத்தேன். தயாராகிக்கொண்டிருப்பதாக சொன்னான். ஆகவே வழியில் தானே காலை உணவை முடித்துக்கொண்டேன். கருங்குளம் விலக்கில் என்னை காத்திருக்கச் சொன்னான். நான் சென்று எனது வாகனத்தை நிறுத்தியபோது அங்கே இருந்த சோதனைச் சாவடி காவலர்கள் என்னையே உற்று பார்த்தனர். நான் தலைக் கவசத்தைக் கழட்டிவிட்டு, வெங்கடேஷ் வருவதற்கு நேரம் இருந்ததால், எனது பனை ஓலைத் தொப்பியை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு நின்றேன். சிறிது நேரத்திலேயே வெங்கடேஷ் வந்தான். மெலிந்த தேகம். முதல் தலைமுறையாக உயர்கல்வி படிக்கும் மாணவன். ஆனால் வெகு உற்சாகமானவன். அவனது ஆய்வுகளின் வழியாக என்னை வந்தடைந்தவன். அண்ணன் என்றே என்னை அழைப்பான்.
இருவருமாக புறப்படுபோது அங்கிருந்த காவல்துறையினர் எங்களை அழைத்தனர். எதற்காக என தெரியாமல் பதட்டத்தோடு சென்றபோது, வெறுமனே பேச்சு கொடுக்க தான் அழைத்தனர் என்பது தெரியவந்தது. எனது பனை ஓலைத் தொப்பியும் பனை ஓலைப் பையுமே அவர்களைக் கவர்ந்திருக்கிறது. அவர்கள் அருகில் சென்றபோது எங்கிருந்து வருகிறீர்கள் எங்கே செல்லுகிறீர்கள் என்று கேட்டார்கள். பனைக்காக நான் செய்து வரும் வேலைகளைக் குறித்து வெங்கடேஷ் சுருக்கமாக அறிமுகப்படுத்தினான். எங்களது பனை தேடுதலைக் குறித்து நான் சொன்னேன். அவர்களுக்கு எங்கள் தேடுதல் மீது ஓர் இணக்கம் வந்திருக்க வேண்டும், பனைக்காக எவ்வளவோ பேசுகிறீர்கள் கள்ளை குறித்து பேசக்கூடாதா என்றார். எனக்கு உற்சாகம் தாங்கவில்லை… “எனது தமிழக பயணமே அதற்குத்தான்” என்றேன்.
அப்போது அவர் கூறிய வார்த்தை கூர்மையான அவதானிப்பு கொண்ட ஒன்று. சார், பனை ஏறும் காலம் வெறும் மூன்று மாதங்கள் தான். வெறும் 90 நாட்கள், “நீங்கள் ஏன் 100 நாட்கள் மட்டும் கள்ளிறக்க போராடக்கூடாது” என்றார். எனக்கு அந்த மனிதரை அப்படியே கொண்டாடவேண்டும்போல் இருந்தது. எவ்வளவு கச்சிதமான வார்த்தை அது. இதுவரை பனை சார்ந்து இயங்கிய எவரும் கேட்காத ஒரு கோணத்திலிருந்து பிறந்த வார்த்தை. உண்மைதான், நூறு நாள் வேலைத் திட்டம் போல நூறுநாள் கள் திட்டத்தை அரசு கொடுக்க விண்ணப்பிக்கலாம் என்று சொன்னேன். உண்மையிலேயே, காவல்துறைக்குள் இருப்பவர்களுள் பலரும் சூழ்நிலைகளை அறிந்து உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் அழுத்தமே அவர்களை வெறும் கருவியாக எஞ்ச செய்கிறது என்ற புரிதலை பெற்றுக்கொண்டேன்.
நூறுநாள் கள் திட்டம் என்ற ஒரு கருத்தினை முன்வைக்கலாமா? அவைகளின் சாதக பாதகங்கள் என்ன? முதலில், கள்ளுக்கடை என்ற ஒன்றை நாம் எப்போதும் எச்சூழலிலும் வரவேற்கப்போவது இல்லை. பனையேறிகள் தங்கள் தங்கள் பனை மரத்தின் அடியில் இருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் கிடைக்கின்ற பனங்கள்ளினை விற்பனை செய்துகொள்ளலாம். மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் உள்ளது போல், இந்த நூறு நாட்கள் மட்டும் அனுமதியளித்து விட்டு மிச்ச நாட்களில் கள்ளுக்கு தடை செய்வதே மிகச் சரியாக இருக்கும். இதனை ஒவ்வொரு மாவட்டத்தினரும் தங்களுடைய பனை சார்ந்த பருவத்தினை ஒட்டி, தங்களுக்கு தேவையான 100 நாளை தெரிவு செய்யும் வாய்ப்புகள் வழங்கவேண்டும். அரசு இன்று பனையேறிகளுடைய வாழ்வை பரிசீலிக்கவில்லையென்று சொன்னால், நாளைய தினம் நமது நிலம், வேலை வாய்ப்பு, உணவு, கலாச்சாரம் எல்லாம் அழிந்துபோய்விடும்.
வழியில் ஆதிச்சநல்லூரைக் கடந்து சென்றோம் அங்கே பனை மரங்களை ஒரு புல்டோசர் கொண்டு பிடுங்கி வீசிக்கொண்டிருந்தார்கள். தனியார் இடமா அல்லது புறம்போக்கா என தெரியாத அந்த இடத்தில், எவர் இவ்விதம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க இயலவில்லை. தமிழகம் முழுக்கவே பனை மரங்களை புற்களும் களைகளும் என நினைத்து வெட்டிப்போடுவது சர்வசாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆதிச்சநல்லூருக்கும் பனை மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதே எனது எண்ணம். சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் நான் பயணிக்கையில் பனை மர உச்சியில் ஒரு மயில் தங்கியிருப்பதைப் பார்த்தேன்.

நாங்கள் செல்லும் வழியில்தானே சில பனைகள் நின்ற இடத்தில் நெருப்பு வைக்கப்பட்டு சாம்பல் தரையில் கிடந்தன. ஆனால் ஆச்சரியமாக பனைகள் ஏதும் மடிந்துவிடவில்லை. எரிந்தபின் அவைகள் உயிர்த்தெழுந்து மறு வாழ்வு பெற்று நின்றன. எரித்தவர்களை நோவதா அல்லது பனையின் வீரியம் குறித்து பெருமைகொள்வதா என எனக்குத் தெரியவில்லை. பல்வேறு தருணங்களில் நெருப்பு வைக்கப்பட்ட பனை மரங்கள் இவ்விதம் தப்பிப்பிழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே இவைகளை காட்டுத்தீயினை கட்டுப்படுத்த வளர்க்கலாம் என பரிந்துரை செய்யப்படுவதுண்டு.

ஸ்ரீவைகுண்டம் கடந்து செல்லும்போது ஒரு கல் மண்டபத்திற்குள் பனை ஓலையில் செய்யப்பட்ட ஒரு கொடாப்பு கிடப்பதைப் பார்த்தேன். கொடாப்பு என்பது இடையர்கள் பணியும் ஒரு மிகப்பெரிய கூடு. பிறந்து சில நாட்களேயான ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல இயலாது, அவைகளல் வெம்மையினை தாங்கிகொள்ள இயலாது. சில வேலைகளில் நாயோ நாரியோ கவ்விச்சென்றுவிடும் ஆபாயம் கூட இருக்கிறது. ஆகவே, மிகச்சிறிய குட்டிகள் பாதுகாப்பாய் இருக்கும்படியாக செய்யப்பட்ட பனை ஓலை கூடு தான் கொடாப்பு. தமைழகம் முழுவதும் எனது பயணத்தில் பல முறை இவைகளை நான் பார்த்திருக்கிறேன். கீதாரிகள் என்று சொல்லப்படுகின்ற ஆட்டிடையர்கள் இவ்விதமான அழகிய கூடுகளை தயாரிக்கும் கலைதிறனை கொண்டிருக்கிறார்கள். இடையர்கள் வாழ்வில் பனை அவ்வகையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. சில இடங்களில், கொடப்பினை அப்படியே ஒரு கூரையாக மாற்றி அதற்கு கீழே இடையர்கள் தங்குகின்ற தற்காலிக குடிசைகளையும் பார்த்திருக்கிறேன். தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் வாழ்விடங்களை பனை ஓலைகளைக் கொண்டு அமைத்திருக்கிறார்கள். இவ்வித கட்டுமானங்களை நாம் மீட்டெடுப்பது அவசியம்.

இன்று சாலையோரங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் கடை போட்டிருப்பவர்கள் சில செயற்கை இழைக் குடைகளை அமைத்து போட்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், ஏன் இப்படி பனை ஓலைகளால் எவரும் செய்வதில்லை என குறைபட்டிருக்கிறேன். ஒரு முறை பாண்டிச்சேரியிலுள்ள நண்பர்களுக்காக இப்படி ஒரு முயற்சியை முன்னெடுக்க விழைந்தோம். ஆனால் இறுதியில் நாங்கள் நினைத்ததுபோல் எதுவும் நடைபெறவில்லை. நமது மரபுகளை மீட்பது, அவ்வளவு எளிதாக இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டோம். நமது மரபுகளை மீட்பது நமது சூழியலை பேணுவதாக அமையும் என நான் உறுதிபட நம்புகிறேன்.

தெற்கு ஆத்தூர் என்ற பகுதிக்குச் சென்றோம். பேராசிரியர் சுதாகர் வீட்டை கண்டுபிடித்து அந்த வளாக கதவினை தட்டியபோது அவர் வெளியே வந்து மகிழ்வுடன் எங்களை வரவேற்றார். நெடுநாள் பழகிய நண்பரைப்போன்ற உணர்வே அவரை பார்த்ததும் தோன்றியது. உயரமாக சற்றே காமராஜரை நினைவுறுத்தும் ஒரு தோற்றம். கைலி கட்டியிருந்ததால், பேராசிரியர் போலல்லாமல், ஒரு விவசாயி போலவே தோற்றமளித்தார். வெகு இயல்பாக இருந்தார், எங்களையும் இயல்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இத்தனைக்கும் அவர் அமெரிக்காவில் தனது வேலையை ராஜினாமா செய்து இந்தியா வந்தவர், நமது மண்ணில் இருக்கும் மகத்தான ஆய்வு களங்களை தேடிச்செல்லும் விருப்பமுள்ளவர். அரண்டுபோனேன். இத்தனை எளிமையினை என்னை சுற்றி சமீபத்தில் எங்குமே கண்டதில்லை. சிறிது நேரம் உரையாடிய பின்பு ஆளுக்கொரு டவல் கொடுத்தார். புரியாமல் வாங்கிகொண்டோம். பின்னர் எங்களை அழைத்துக்கொண்டு பானை ஓடுகள் கிடைக்கும் இடத்திற்கு போவோம் என்றார். அவரது காரிலேயே சென்றோம். அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட இருக்காது. அங்கே ஒரு மிகப்பெரிய குளம் இருந்தது. அந்த குளத்திலிருந்து சிலர் மணல் அள்ளியிருந்தார்கள், அதிலிருந்து சில புதைப்படிவங்களை எடுத்து காட்டினார். நத்தைகள் போல ஆனால், விதவிதமான வடிவங்கள் அங்கே கேட்பாரற்று கிடந்தன. அனைத்தும் பல மில்லியன் ஆண்டுகள் பழைமையானவைகள். உண்மையான ஆய்வுகள் நமது கிராமத்திலிருந்தே துவங்குகின்றன என்பதை அறியும்விதமாக இருந்தது.

அங்கே குளத்தில் நீர் தேங்கியிருக்கும் இடம் வந்ததும் இனி துண்டைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றார். துண்டைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கினோம். எங்கே போகிறோம் என்றே தேரியாத ஒரு திசையில் அவர் முன்னால் நடக்க அவரைத் தொடர்ந்து நானும் என் பின்னால் வெங்கடேசும் நடந்து சென்றோம். இங்கே வருவதற்கு முன்னால், ஏதோ என்னை ஒரு தொல்லியல் களத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள பானையோடுகளைக் காட்டுவார் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், மனிதர் எங்களை தண்ணீரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். உள்ளபடியே எனது வாழ்வில் இது ஒரு புது அனுபவம். இப்படி தண்ணீரில் இறங்கி எனது ஆய்வுப்பயணத்தை இதுவரை நான் முன்னெடுத்ததில்லை. கணுக்கால் அளவிலிருந்து முழங்கால் வரைக்கும் ஆழத்தில் முட்கள் குத்த, புற்கள் கால்களில் தட்டுபட நடந்தோம். குளத்தின் மையப்பகுதி வரும்வரை முட்டளவு நீரில் நடந்தே சென்றோம். அங்கே நீர் பிடிப்பு இல்லாத சற்றே மேடாக ஒரு இடம் நோக்கிச் சென்றோம். அங்கிருந்தும் மணல் அள்ளியிருந்தார்கள். பார்க்கும்போது தொல்லியல் எச்சத்தினை கண்டடைவதற்கான எந்த தடயமும் அங்கு காணப்படவில்லை.

ஏன் எங்களை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். உண்மையிலேயே இவர் ஏதேனும் ஆய்வுகள் செய்திருக்கிறாரா? அல்லது சிலரைப்போல கவன ஈர்ப்புக்காக இல்லாத கதைகளைச் சொல்லி, நம்மை திசை திருப்புகிறாரா என்ற எண்ணம் ஏற்பட்டது. நடுக்குளத்தில் கொண்டுவந்து இங்கே தான் தொல் நாகரீகம் இருந்ததாக கதை விடப்போகிறாரா என உண்மையிலேயே சந்தேகித்தேன். ஏனென்றால், தொல்லியலாளர்கள் எவரும் அங்கே வந்து போனதற்கான எந்த சான்றுமே அங்கே இல்லை. பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு கூட இல்லை. என்ன சொல்ல போகிறார் என கவனிக்க ஆரம்பித்தேன்.
சுதாகர் சார் சொன்னார். இந்த குளத்தில் மண் அள்ளுவது எனது நண்பர் தான், ஒருமுறை அவர் எடுத்துச்சென்ற மணலில் பானை ஓடுகள் இருந்ததைப் பார்த்தேன். அவைகள் மிக பழைமையான பானை ஓடுகள் போலவே கானப்பட்டதால் நான் ஒரு சில மாதிரிகளை லக்னோவிற்கு அனுப்பியிருக்கிறேன். இந்த பானை ஓடுகளுக்கு சுமார் 2200 ஆண்டு பழமை இருப்பதாக தொல்லியலாளர்கள் கணிக்கிறார்கள். ஒருவேளை அதிகாரப்பூர்வ தகவல்கல் வரும்போது இதன் பழைமை குறித்து நாம் மேலும் திட்டமாக அறியமுடியும். ஆகவே, அதிகாரப்பூர்வமான தகவல் வரக் காத்திருக்கிறேன் என்றார். சிறப்பு என்னவென்றால், பானை ஓடுகளுக்குள் சுண்ணாம்பு இருக்கிறது என்றார். பானை ஓடுகளுக்குள் சுண்ணாம்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? எதனைக் குறிப்பிடுகிறார் என எனக்கு முதலில் விளங்கவில்லை. நமது வார்ப்பு அப்படி, எல்லாம் சற்று மெதுவாகத்தான் புரியும். உண்மையிலேயே சுண்ணாம்பு இருந்ததா என்று கேட்டேன். வேண்டுமென்றால் என்னோடு நீங்களும் இறங்கித் தேடுங்கள் என்றார்.
மணல் அள்ளிய இடத்தில் முட்டளவு நீருக்குள் இறங்கி கைகளை விட்டு துழாவினேன், எங்கு கை வைத்தாலும், உடைந்த மண் பாண்ட துண்டுகள் கரத்தில் கிடைத்தபடி இருந்தன. நான் முதலில் எடுத்த சில ஓடுகளில் உண்மையிலேயே சுண்ணாம்பு இல்லை, சில ஓடுகள் மென்மையாக சுண்ணம்பு கொண்டிருந்தன.இங்கு எப்படி மண் பாண்ட துண்டுகள் வந்திருக்கும் என எண்ணியபடி தேடுதலைத் தொடர்ந்தேன். சற்றும் தாமதிக்காமல் என் கரத்தில் அகப்பட்ட ஒரு பானை ஓட்டில் சுண்ணாம்பு படிந்திருந்தது. கைகளால் அதனை அழுத்தி தேய்த்து தண்ணிரில் கழுவியவுடனேயே அவைகள் கரைந்து போயிற்று. சுதாகர் சொன்னார். கழுவாதீர்கள், அப்படியே எடுங்கள் என. மனதிற்குள் ஒரு முணுமுணுப்பு ஓடிக்கொண்டீருந்தது. எத்தனையோ தொல்லியல் எச்சங்கள் கிடக்கும் இந்த குளத்தில் பானை ஓடுகள் மீது சுண்ணாம்பு படிவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. சிப்பிகள் வெயில் காலத்தில், சூட்டினால் வெந்து நீர் பிடிப்பு ஏற்படும் சமயத்தில் சுண்ணாம்பாக மாறி பானை ஓடுகளில் படிந்திருக்கலாமே என நினைத்தேன். ஆனால், எல்லா ஓடுகளிலும் சுண்ணாம்பு ஒன்றுபோல் படிந்திருக்கவில்லை.

மீண்டும் தேடுகையில் அட்டகாசமான வேறு ஒரு துண்டு கிடைத்தது. முன்பை விட அதிக சுண்ணாம்பு படிந்திருக்கும் ஒரு பானை ஓடு. அப்போது தான் எனக்கு எல்லாம் உறைத்தது. சார்…… என்று கூவினேன், கும்மாளமிட்டேன், வெடித்து சிரித்தேன். கண்டுபிடித்துவிட்டேன் என சத்தமிட்டேன். எனது சந்தோஷம் கரைபுரண்டோடிய தருணமாக அது அமைத்திருந்தது. என்னை குதூகலப்படுத்திய அந்த ஓடோ, சுண்ணாம்பு மிகச்சரியான அளவில் படிந்திருந்த ஒரு ஓடு. அவ்விதமான ஓடுகளை நான் வேறு எங்கோ பார்த்திருக்கிறேன். ஆம் அந்த பானை ஓடுகளை நாம் இனிமேல் பானை ஓடுகள் எனக் கூறக் கூடாது, ஏனென்றால் பதனீர் கலய ஓடுகள் அவைகள். சுண்ணாம்பு தடவிய பதனீர் கலயங்கள் தான் அவை. எதற்காக கலயங்களில் சுண்ணாம்பு தடவ வேண்டும்? வேறெதற்கு? பனை ஏறுகிறவர்கள் பதனீரை எடுப்பதற்காகத்தான் சுண்ணாம்பைத் தடவுவார்கள். காலப்போக்கில், சுண்ணாம்பு அந்த பானை ஓட்டின் அடியில் படிந்துவிடும். அப்படியானால் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மக்கள் பனையேறியிருப்பதுடன் பதனீரும் இறக்கியிருக்கிறார்கள். அது ஒரு மாபெரும் தகவல்.

கரையில் ஏறி வெற்றிக்களிப்புடன் அந்த பானை ஓட்டைப் பார்த்தேன். நானும் ஒரு புதை படிம ஆய்வாளன் என என்னை ஒருபடி ஏற்றிவிட்ட பானைத்துண்டு அது. பெருமிதத்துடன் எனது கரங்களில் அதனை ஏந்திக்கொண்டேன். இப்படியான ஒரு பொற்தருணத்தை நான் சிறிதும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. சங்க இலக்கியங்களில் கள் குறித்து அதிக தகவல்கள் இருக்கின்றன ஆனால் பதனீர் குறித்த குறிப்புகள் இல்லை. பேராசிரியர் வேதசகாய குமார் கூட, என்னிடம், பதினேழாம் நூற்றாண்டிற்கு பிறகே பதனீர் எடுத்து கருப்பட்டி காய்ச்சும் விதம் தோன்றியிருக்கும் என்று தனது யூகத்தை முன்வைத்தார். அப்போது என்னிடம் தகுந்த ஆதாரங்கள் இல்லை, ஆனால், இங்கு வந்த பிற்பாடு, தெற்கு ஆத்தூருக்கும் பனையேறிகளுக்கும் சங்க காலம் முதல் பெருத்த தொடர்பிருக்கும் என நான் உள்ளூற உறுதியாக நம்பினேன்.
தாமிரபரணி ஆற்றோரங்களில் கிடைக்கும் பானை ஓடுகள் மற்றும் பொருட்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனைச் சுற்றிலும் இருக்கின்ற பனை மரங்களுக்கும் அவைகளுக்கும் தொடர்புகள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணங்கள் வலுவாக ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. வெகு சமீபத்தில் கூட எனது குஜராத் பயணங்களில் பனை மரங்கள் அதிகமாக இருப்பதை பதிவு செய்திருந்தேன். லோதல் பகுதிகளிலும் பனை மரங்கள் இருந்ததைப் பார்த்த ஒரு உணர்வு நீடிக்கிறது. குஜராத் பகுதிகளில் பீல் பழங்குடியினருள் ஒரு இனக்குழுவினருக்கு தாட்வி என்ற பெயர் இருக்கிறது. தாட்வி என்றால் பனை சார்ந்திருக்கிறவர் என்றே பொருள். குஜராத்தில் நர்மதா நதியினை ஒட்டி பனை மரங்கள் செழித்து வளருவதை பார்க்கலாம்.
சுண்ணாம்பு தடவிய கலசங்களை பருவ காலம் அல்லாத நேரங்களில் கீழே இறக்கி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவைகளின் கீழ்பகுதியில் சுண்ணாம்பு படிவத்தின் அளவு மிகுதியாகவும், அதன் விலா பகுதிகளில் தீற்றலாகவும் மேல் பகுதிகளில் இல்லாமலும் இருக்கும். பதனீர் இறங்கும் அளவைப் பொறுத்து தான் பானைகளில் சுண்ணாம்பு தடவுவார்கள். அடிப்பகுதியில் சுண்ணாம்பு தேங்கிவிடுவதால், அவைகள் நாளாவட்டத்தில், பல அடுக்குகளாக வெள்ளையடித்து இறுகிய சுண்ணாம்பு பாளம் போல் மாறிவிடும். ஆகவேதான், பனை மரத்தினை கீழிருந்து பார்க்கும்போது சுண்ணாம்பு தடவிய பானைக்கும் கள் இட்டிருக்கும் பானைக்கும் வித்தியாசத்தை இலகுவாக கண்டுபிடிக்க முடியும். பானையின் அடிப்பாகம் மெல்லிய ஈரப்பதத்துடனிருந்தால் அது கள் இட்டிருக்கும் பானை எனவும், ஈரம் இல்லாது இருந்தால், அது சுண்ணாம்பு தடவிய பானை என்றும் அறியலாம். சுண்ணாம்பு பானையிலிருந்து பதனீர் கசிவதையும் நொதித்தலையும் தடுக்கிறது.
சுண்ணாம்பு பயன்பாடு தமிழகத்தில் மட்டுமால்லாது ஆசிய கண்டம் முழுக்கவே உள்ளது. வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து சுவைக்கும் வழக்கம் தென்கிழக்காசியாவில் தொல்பழங்காலம் தொட்டே உள்ள வழக்கமாகவே இருந்திருக்கிறது. ஆகவே கள்ளிறக்கும் பானையில் சுண்ணாம்பு தடவி பதனீர் எடுக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். ஆனால் சுண்ணாம்பு என்பது வேதியல் பொருள். இயற்கையாக கிடைக்கின்ற ஒரு உணவுடன் வேதியல் பொருளினை சேர்ப்பது முக்கியமாக இருந்திருக்கிறதா? சுண்ணாம்பு சத்து வேண்டும் என்பதற்காக இவ்விதம் சேர்க்கப்பட்டதா போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இன்று இயற்கை பொருளை உண்பதன் அவசியத்தை வலியுறுத்தும்போது, இயற்கையாகவே நொதித்தலைக் கட்டுப்படுத்தும் முறைமைகள் இருந்திருக்கிறதா என்ற கேள்விகள் எழுவது இயல்பு. எனது தேடுதலில் இயற்கை பொருட்களை பயன்படுத்தும் வழிமுறைகளை நான் இதுவரை தமிழகத்தில் பார்க்கவில்லை. ஆனால், தென்கிழக்காசிய நாடுகளில் சில மரங்களின் துண்டுகளை வெட்டிப்போட்டு நொதித்தலைக் கட்டுப்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒருவேளை தமிழகத்திலும் அவ்வித வழக்கங்கள் இருந்திருக்கலாம், ஆனால் சுண்ணாம்பு எளிமையாக கிடைத்ததாலோ என்னவோ, தமிழகத்தில் சுண்ணாம்பு பயன்பாட்டிற்கு பனையேறிகள் மாறியிருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.
கையிலிருந்த ஓடு கூட கலயத்தின் தடிமனுடன் தான் இருக்கிறது என்பதை மீள மீள பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனைப் பயணத்தில் இது ஒரு மைல் கல். பேராசிரியருக்கு நன்றி கூறினேன். அவர் அதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல என ஒரு குழந்தைபோல் சிரித்துக்கொண்டிருந்தார். இந்த சுண்ணாம்பிற்கு என்ன அர்த்தம்? மீண்டும் எனக்குள் சந்தேகம் ஓடியது. யாரேனும் சில பானைகளை குளத்தின் நடுவில் எப்போதாவது கொண்டு போட்டிருக்கலாம். வீணாக நாமே பெரிய அறிஞர் போல காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்தேன். ஆனால் எனக்கு உள்ளூர நன்றாகவே தெரிந்தது, எனது கரத்திலிருக்கும் ஓடு எனது முதாதையர்கள் பதனீர் இறக்கிய ஓடு தான். அதனை நான் நிறுவிவிடமுடியுமா என்பதே எனக்குள்ள சவால். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இதற்குமேலும் செல்லவேண்டுமென்றாலும் செல்லலாம் என்று துணிந்துவிட்டேன்.
பேராசிரியர் அங்கிருந்து எங்களை கொற்கைக்கு அழைத்துச் சென்றார். கொற்கை ஒரு துறைமுக நகரமாக பண்டிய மன்னர்களின் வெளிநாட்டு வணிகத்தை நிற்ணயிக்கும் ஒரு முக்கிய இடமாக இருந்தது. முத்து குளிக்கும் மீனவர்களும், முத்து வியாபாரிகளும் மிகுந்திருந்தார்கள். இன்றும் அக்காசாலை என்று அழைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்துவோர் உண்டு. கடல் இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் விலகி சென்றுவிட்டது. இன்று கண்ணகி அம்மன் கோவில், ஒரு குளத்தினுள் அமையப்பெற்றிருக்கிறது. கொற்கையினைச் சுற்றி பனை மரங்களே செழித்து வளர்ந்திருக்கின்றன. அனைத்தும் நூறாண்டுகள் கடந்த நெடிந்துயர்ந்த பனை மரங்கள்.

மதியம் பேராசிரியர் வீட்டிற்கு வந்து உணவுண்டோம். சுடசுட சுவையான் மீன் குழம்பு சாப்பாடு அவரது தாயார் எங்களுக்கு ஆயத்தம் செய்திருந்தார். சாப்பிடும்போது, வெங்கடேஷ் அவர்களின் ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார். தம்மாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். வெங்கடேஷ் தனது ஆய்வுகளுக்கு இவைகள் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். நானும் வெங்கடேஷும் சுதாகர் சாருக்கு நன்றி கூறி புறப்பட்டோம்.
திரும்பிச் செல்லும் வழியில் பால்பாண்டி என்ற நபரைக் குறித்து விசாரித்தேன். பால்பாண்டி என்பவர், பனை ஓலைகளில் பல்வேறு வடிவங்களைச் செய்யும் ஒரு கலைஞர். பனை ஓலையில் அவர் செய்த காமராஜர் முழு உருவச் சிலை அவரை ஒரு முக்கிய கலைஞராக தமிழகமெங்கும் அறிமுகப்படுத்தியது. பின்னர் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் திரு உருவச்சிலையினையும் அவர் செய்ததாக பத்திரிகை மூலமாக அறிந்துகொண்டேன். பல தருணங்களில் அவரை சந்திக்க முயன்றும் முடியவில்லை ஆகையால் இம்முறை தவறவிடக்கூடாது என முடிவு செய்து வெங்கடேஷ் அவர்களின் உதவியைக் கேட்டேன்.
வெங்கடேஷ் அவரைக் குறித்து அறிந்திருந்தான். நன்பர்களின் உதவியுடன் கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றான். நாங்கள் சென்றபோது அங்கே வீட்டில் அவர் இல்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது. நான் அங்கிருந்த குளக்கரையில் காணப்பட்ட பனை மரங்களைத் தேடிச் சென்றேன். வரிசையாக குளத்தை சுற்றி நிற்கு பனை மரங்கள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தன்படம் ஒன்றை எடுத்துக்கொண்டேன். அப்போது, பால்பாண்டி அவர்கள் வந்துவிட்டார்கள், உடனேயே வாருங்கள் என வெங்கடேஷிடமிருந்து அழைப்பு வந்தது.
பால்பாண்டி கப்படா மீசை வைத்திருப்பவர். சிரிப்பில் பச்ச புள்ள தெரிகிற கள்ளமற்ற மனிதர். நிறுத்தாமல் பேசிக்கொண்டே செல்லும் தன்மை கொண்டவர். அவர் பெற்ற விருதுகள், அவர் செய்த சாதனைகள் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போனார். ஒரு முறை தஞ்சாவூருக்கு பணை ஏறப்போன இடத்தில் அழைத்துக்கொண்டு போனவர்கள், இவர்களைக் கைவிட, சாப்பாட்டிற்கு வழியில்லாமல், பனையேறி ஓலைகளை வெட்டிப்போட்டு, அந்த ஓலையில் பொருட்களைச் செய்து, அவைகளை விற்று சொத்த ஊர் திரும்பிய திருப்புமுனைக் கதையே அவரை பனை ஓலைக் கலையின் பால் திருப்பியிருக்கிறது. சமீபத்தில் மூன்று மாதங்கள் இரவும் பகலுமாக அமர்ந்து பிழை திருத்தி அவர் செய்த காமராஜ் உருவச்சிலை தான் அவரது வாழ்வை புரட்டிப்போட்டிருக்கிறது.

மாட்டு வண்டி, மாட்டுத் தலை, பொருட்களை எடுத்துச் செல்ல சூட்கேஸ், செருப்பு, காமராஜர் முன்னால், பள்ளிக்கூடம் செல்லும் இரு குழந்தைகள் என வித்தியாசமாக அவரது படைப்புகள் காணப்பட்டன. அத்தனையும் பனை ஓலைகளைக் கொண்டு மட்டுமே செய்கிறார். நாங்கள் சென்றபோது தமிழக முதலமைச்ச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் திருவுருவச் சிலையினை அவர் செய்து வைத்திருந்தார். பனை ஓலையில், இவ்விதமான வடிவங்கள் என்பவை புதிதே. எவரும் இதுவரை இப்படியான முயற்சிகளை எடுப்பது இல்லை. அவரை சந்தித்தது எனக்கு பெருமகிழ்வளிப்பதாக இருந்தது.
அவரது பொருட்களில் காணப்பட்ட குறையென்பது அனைத்திற்கும் தாராளமாக வர்ணம் பூசியிருந்தார். இரசாயன வர்ணங்கள் ஓலைகளைக் காக்கும் என அவர் எண்ணியிருக்கலாம். இயற்கை சாயங்களை பயன்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும் என என் மனதிற்குப் பட்டது. எதிர்காலத்தில் பல்வேறு தலைவர்கள் உருவச்சிலையினையும் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தினை முன்வைத்தார்.
பனை ஓலையில் இவ்விதமான மனித மற்றும் மிருக உருவங்கள் செய்வது இதுவே முதல் முறை. ஆகவே, இவைகளில் ஒருமை கூடவில்லை என்பது உண்மை. கடுமையான உழைப்பின் மூலம், இவருக்கு பின் வரும் தலைமுறைகள் சில அடிப்படைகளை முன்னெடுத்து செல்லுமானால், எப்படி சிற்பிகளின் மூலப்பொருட்கள் இருக்கின்றனவோ அது போலவே, பனை ஓலைகளும் முக்கிய கச்சா பொருளாக மாறிவிட வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அவருக்கு பனை விதை ஒன்றினைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
தம்பி வெங்க்டேஷை அவனது வீட்டில் கொண்டு விட்டேன். அவனது அப்பா செங்கல் சூளையில் கணக்கு பார்க்கிறவர். ஒரு தம்பிம் ஒரு தங்கையும் உண்டு. மாலை 7 மணி தான் ஆகியிருந்தது, அவரது அம்மா சாப்பிட்டு செல்லுங்கல் என்றார். மறுக்க முடியவில்லை. எளிய ஆனால் அன்பான உணவு எனக்கு பகிர்ந்தளித்தார்கள். அவர்கள் வாழும் பகுதியில், நாடார்கள், பனை மரங்களை துணிந்து அழிப்பதும், பனை மரங்களை பேணி பாதுகாப்பது இஸ்லாமியர்கள் என்பதுமாக கேள்விப்பட்டேன்.
வெங்கடேஷ்சுடைய அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெங்கடேஷ் தான் அவர்கள் வீட்டின் எதிர்காலமே. அவன் முனைவர் ஆய்வு முடித்து நல்ல வேலை பெற்று குடும்பத்தை கரை சேர்க்க வேண்டிய பொறுப்புள்ளவன். அவனை வாழ்த்தினேன். என்ன தேவை என்றாலும் தயங்காமல் கேள் என்றேன்.
அன்று இரவு மீண்டும் ஒரு 130 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது எனது வாகனத்தை எடுத்தேன். கடவுளை வேண்டி எனது வாகனத்தை உயிர்ப்பித்தேன். எந்த சிக்கலும் இல்லாத மூன்று மணி நேர பயணம். நேராக வீடு வந்து சேர்ந்தேன்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, மும்பை
malargodson@gmail.com / 9080250653
மறுமொழியொன்றை இடுங்கள்