பனைமுறைக் காலம் 17


பனைபொருள் பலவிதம்

பால்மா ஜேக்கப் அவர்கள், என்னோடு பயணம் செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். நான் அதனை முதன் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், எனது பயணங்கள் என் போக்கில் நிகழ்பவை, எங்கும் ஒட்டிக்கொள்ளுவேன். ஆனால் ஜேக்கப் ஒரு அலுவலகத்தை நிர்வகிப்பவர், என்னோடு அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று எண்ணினேன். ஆகவே, என்னை உற்சாகப்படுத்தும்படியாக சொல்லியிருக்கலாம் என்பதால், அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் மீண்டும் மீண்டும் பயணம் குறித்து வலியுறுத்தும்போது, அவர் விளையாட்டாக பேசவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.  ஒரு மூன்று நாள் பயணம் அப்படித்தான் ஒழுங்கானது. அவர்களது வாகனத்தில் பயணிக்கலாம் என்றும், பயண செலவுகளை அவர்களே பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்கள் என்றும் சொன்னார். அது எனக்கு வரம். எனது பயணத்தின் ஆழத்தை அவர்கள் அதிமுக்கியமானதாக கருதியிருந்தால் ஒழிய, அவர்கள் இப்படியான ஒரு பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பார்களா? இருக்கமுடியாது என்று எண்ணியபோது, அவர்களின் அழைப்பிற்கு நான் தலைவணங்கினேன்.

அக்டோபர் 20 வாழ்வின் மற்றுமொரு முக்கிய நாள். ஜேக்கப் அவர்களுடன் நாங்கள் திட்டமிட்டபடி மூன்று நாள் பயணத்தை தேவிகோடு என்ற பகுதியிலிருந்து துவங்கினோம். காலை 6. 30 மணிக்கு வண்டி நாங்கள் தங்கியிருந்த ஜாஸ்மினுடைய தம்பி ஜெகன் வீட்டிற்கு முன்னால் வந்து சேர்ந்தது. நான் ஏறிக்கொண்டேன். வண்டி ஓட்ட ஜெனிஷ் (24) துணைக்கு விபின் (24) ஆகிய இருவரும் உடன் வந்தார்கள். அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை, முழுமையாக எனது பயண திட்டத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்து வந்திருந்தார்கள். சிறப்பு என்னவென்றால், நானும் எந்தவிதமான திட்டங்களையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி வழியாக நாகர்கோவில் வந்து மூன்று நாளில் பயணத்தை முடிக்கும் ஒரு கற்பனை வரைவு இருந்தது. ஆகவே செல்லும் வழியில் இருக்கும் நண்பர்களை தொடர்புகொண்டு எனது வருகையினை அறிவித்துவிட்டேன்.

ஓலை பெட்டிகள் , பாய்கள் மற்றும் வாழை நார் விற்பனை செய்யும் கடை, தோவாளை பூ சந்தை

தோவாளையைக் கடக்கும்போது, வண்டியை நிறுத்தச் சொன்னேன். தோவாளை பூ சந்தை உண்மையிலேயே உலக பிரசித்தி பெற்றது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக உலகின் பல நாடுகளுக்கு பூக்கள் சென்று சேரும். அதிகாலை பூக்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பால் அவசரம் வண்டியை விட வேகமாக செல்பவை. அவைகளில் எடுத்துச் செல்லப்படும் பூக்கள், பனை ஓலைக் கூடைகளிலும், பனை ஓலைப் பாயினை மடித்து செய்யும் கூடைகளிலுமே அனுப்புவார்கள். பனை ஓலை இயற்கைப் பொருளானதால், பூக்கள் சேதமடைவதில்லை. காலையில் வாங்கிய பூக்கள், பனை ஓலை கூடைக்குள் மாலை வரை எவ்வித வெம்மைக்கும் ஆளாகாமல் பளிச்சென்று இருக்கும். ஆகவே, அவர்கள் பூக்களை எப்படி கையாளுகிறார்கள் என பார்க்கச் சென்றோம்.

ஓலை பெட்டிகள் மற்றும் பாய்கள் இருந்க்டாலும் பிளாஸ்டிக் பெட்டிகளல் நிறைந்திருக்கும் தோவாளை பூ சந்தை

2017ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலாக தோவாளை பூ சந்தையைக் காணச் சென்றேன்.  ரங்கிஷ் என்னுடன் இருந்தான். ஒரு ஆவணப்படம், எடுக்கும் நோக்குடன் நாங்கள் அங்கே சென்றிருந்தோம். நாகர்கோவிலில், திருமணங்களுக்காகவோ அல்லது மரணசடங்குகளுக்காகவோ பூக்களை வாங்கும்போது ஓலை பெட்டியில் வைத்தே கொடுப்பார்கள். அந்த பெட்டிக்கு விலை இருக்காது. அதன் பின்னல்களும் உறுதியாக இருக்காது. இடைவெளியிட்டு, ஒற்றை பின்னல்கள் கொண்டதும், கால் முட்டளவு உயரம் கொண்டதாகவும் இருக்கும். கருப்பட்டி கொட்டானைப் போலவும் புளி கொட்டானைப்போலவும் அகலம் குறைவாகவும் பின்னப்பட்டிருக்கும் இப்பெட்டிகள் உயரம் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆகவே, பூச்சந்தையின் முக்கிய பயன்பாட்டு பொருளாக பனை ஓலை பொருட்கள் இருக்கும் என்றே சென்றோம்.

பூக்கள் பனை ஓலைப் பாய்களில் விரித்திடப்பட்டிருந்தன, பனை ஓலையில் செய்த பாய்களை சுருட்டி, அவைகளை ஒரு உருளைப் பெட்டி போல் மாற்றி பூக்களை எடுத்துச் செல்வதை பார்த்தோம். அனைத்து டெம்போக்களிலும், பனை ஓலைப் பாய்கள், பெட்டிகள் அதிகமாக இருப்பதைப் பார்த்தோம். ஆனால், பிளாஸ்டிக்கின் வரவு பெருமளவு துவங்கியிருந்தது தான் உண்மை.

உள்ளே பிளாஸ்டிக் பையில் பூ, வெளியே பனை ஓலைப் பெட்டி. தோவாளை

இம்முறைச் செல்லும்போது, பனை ஓலைகளை தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பிளாஸ்டிக் மயமாக அந்த இடம் காட்சியளித்தது.  பனையோலைக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று கைவிரித்து நிற்கின்ற தோவாளையை பார்க்கும்போது உறைந்துபோனேன். நான்கே வருடங்களில் தலைகீழ் மாற்றம். பூக்களை நம்பியே வாழும் குடும்பங்கள், பனை ஓலைகளை நம்பி வாழ்பவர்களை கைவிட்டிருப்பது தெரியவருகிறது. ஆனாலும் மரபின் தொடர்ச்சியாக ஓரிரு இடங்களில் பனை ஓலைப் பாயும் பாஉக்கள் எடுத்துச் செல்லும் பெட்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.  சோர்வுடன் தான் வெளியேறினோம்.

இதே சூழல் தான் கடற்கரையிலும் நிகழ்த்தது. பிளாஸ்டிக் பெட்டிகள், பனை ஓலைப்பெட்டிகளை அகற்றியது. நவீனம், தனது கோர முகத்துடன் உள்நுழைவதற்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறோம். இறுதியில் மிகப்பெரும் அழிவுகளை இணைந்து செய்ய நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுக்கிறோம். இன்று தோவாளையைச் சுற்றிலும் பனை மரங்கள் இருக்கின்றன. குமரி மாவட்டத்தின் மிகப்பெரும் பனங்காடு, தோவாளை அருகிலிருக்கும் ஆரல்வாய்மொழி பகுதிகளில் தான் இருக்கின்றன. ஆனால், ஓலைகளை எடுத்துக்கொடுக்கும் பனையேறிகள் இல்லை. ஆகவே பனை ஓலைக் கலைஞர்கள் அருகிவிட்டார்கள். இன்று தோவாளைக்கு வருகின்ற ஓலைப்பொருட்கள் அனைத்தும் இராமனாதபுரத்திலிருந்தே வருகிறது. இனிமேல் அதற்கும் தேவை இருக்காது போலும்.

காலை உணவை அங்கே சாப்பிடலாமா என்று எண்ணியபின், வேண்டாம் என முடிவெடுத்து தொடர்ந்து சென்றோம். சிவகாமிபுரத்தின் அருகில் வண்டி சென்றபோது, பனையேறி வெட்டும்பெருமாள் அவர்களின் நினைவு வந்தது. இங்கும் ஆவணப்படத்திற்காக நானும் ரங்கிஷும் வந்திருக்கிறோம். அக்டோபர் மாதம் ஆனபடியால், பனை ஏறத்துவங்கியிருப்பார்கள் என்ற உறுதியிருந்தது. உள்ளே கிராமத்திற்குள் சென்றபோது பனை நாரினை சைக்கிளில் கட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் ஒரு மனிதரைப் பார்த்தேன். அவரை சந்தித்து, அவருடைய எண்ணை வாங்கி உடனேயே ஜாய்சனுக்கு அனுப்பினேன். கட்டில் நார் பின்னுகிற அவருக்கு அது தேவையாக இருக்கும் என எண்ணினேன். எங்களிடமிருந்த பனை விதை பெட்டியினை அவருக்கு கொடுத்தோம்.

நார் விற்பவருக்கு பனை விதைப் பெட்டி, சிவகாமிபுரம்

அந்த தெருவில் தான் வெட்டும் பெருமாள் அவர்கள் வீடு. ஜேக்கப் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றேன். வெட்டும் பெருமாள் அண்ணனின் மனைவிக்கு என்னை நினைவிருந்தது. அங்கும் ஒரு பனை விதை பெட்டியினைக் கொடுத்தோம். பின்னர் அங்குள்ள விபரங்களை சேகரித்தோம். கருப்பட்டி காய்ச்சத் துவங்கியிருப்பதாக கூறினார்கள். மொத்தமாக எடுத்தால் கிலோவிற்கு 350 வைத்து கொடுப்பதாக சொன்னார்கள். பதனீர் வேண்டுமென்றால், காட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதையும் சொன்னார்கள்.

பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டிகள் (கலயம்), சிவகாமிபுரம்

அவர்கள் குறிப்பிட்டிருக்கும் காடு மேற்குதொடர்ச்சி மலையின் கீழே, இருந்தது. அங்கே பனங்காடுகள், நிறைந்திருக்கும். ஆனால் அந்த பகுதிகளுக்கும் அருகில் காற்றாலைகள் வந்துவிட்டன. காற்றாலைகள், மக்களை சிறிது சிறிதாக அங்குள்ள பாரம்பரிய தொழில்களிலிருந்து அப்புறப்படுத்துகின்றன. காற்றாலைக்காக வாங்கும் நிலங்களிலிருந்து கிடைக்கும் பணம், பனை குறித்து எவரையும் சிந்திக்க விடுவதில்லை.

புத்துணர்ச்சி அளிக்கும் பதனீர்

இதற்குமேல் வண்டி செல்லாது என்று தோன்றிய ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, நடக்கத்துவங்கினோம். காட்டிற்குள் நாங்கள் வழிதப்பிவிடும் அளவிற்கு பாதைகள் பிரிந்து செல்வதும், அடர்ந்தும் காணப்பட்டது. வெட்டும் பெருமாள் அண்ணன் பனையேறிக்கொண்டு வீட்டிற்கு தனது டி வி எஸ் 50ல் வந்துகொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நிறுத்தி நலம் விசாரித்து எங்களுக்கு பாதை காட்டிவிட்டு சென்றார்கள். அவர் கூறிய பாதை வழியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயணித்திருக்கிறேன். ஆனால், இன்று சரியாக நினைவில்லை. தடுமாறிக்கொண்டே சென்றோம். நாங்கள் சென்று சேர்ந்த தோட்டத்தில் பதனீர் கலயங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு கைவிடப்பட்ட வீடு இருந்தது. அங்கே வந்த சில வாலிபர்கள் தொடர்ந்து சென்றால் விடிலி வரும் என்றார்கள்.

கடலை பயிரிடப்பட்டிருக்கும் பனங்காடு, சிவகாமிபுரம்

தொடர்ந்து சென்றுகொண்டிருந்தோம். வெம்மை ஏறுகின்ற நேரம். அங்கே சென்றபோது, நாங்கள் தேடிச்சென்ற விடிலியில் ஒரு பாட்டி இருந்தார்கள். பதனீர் வேண்டும் என்றோம், கிழக்காக போங்கள் என்றார். தூரத்தில், தெரிந்த விடிலி நோக்கிச் சென்றோம். அந்த வயக்காடு முழுவதும் கடலை பயிரிட்டிருந்தார்கள். பச்சைப்பசேலென கடலை செடியும், உயர்ந்தெழுந்த பனைகளும் சூழ அந்த இடம் ஒரு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தந்தது. வேர்கடலையை மிதிக்காமல் கவனமாக கால்களைத் தூக்கிச் சென்றோம். ஒரு வழியாக அரைமணி நேரத்திற்கு பின்பு அந்த இடத்தை அடைந்தோம். 9 மணி ஆகிவிட்டிருந்தது

ஜெனிஸ் மற்றும் விபின் ஆகியோர் பதனீரை பட்டையில் ஊற்றி சுவைத்து குடிக்கின்றனர்

ஒரு விடிலியில் பெண்மணி ஒருவர் மட்டும் இருந்தார். சற்று தொலைவில் அவரது கணவர் பனையேறிக்கொண்டிருந்தார். பதனீர் வேண்டும் என்றவுடன், கருப்பட்டி காய்ச்ச ஆயத்தமான பெண்மணி, நிறுத்திவிட்டு அவரது கணவரைப் பார்த்தார். அவர், அங்கிருந்த ஒரு கலயத்தை எடுத்து அகப்பையில் பதனீரைக் கோரி ஊற்றி, பனையோலைப் பட்டையினை எடுத்து மடித்துக் கொடுத்தார்.  பவ்வியமாக இருகரத்தில் பிடித்து கலயத்திலிருந்து அவர் ஊற்றிய பதனீரை வாங்கி பருகினோம். வயிறு முட்ட குடித்தோம். நாங்கள் போதும் என்றபோது, அவர்கள் நெருப்பிட்டு கருப்பட்டி காய்ச்ச துவங்கினார்கள். அன்றைய காலை உணவு அதுவாகத்தானிருந்தது. இனிப்பான அந்த காலை உணவு அந்த நாள் முழுக்க எங்களுக்கான ஆசியினை உள்ளடக்கியிருந்தது.

காய்ச்ச தயாரான பதனீரை எங்களுக்கென எடுத்துக் கொடுக்கிறார் பனையேறி, சிவகாமிபுரம்

பணக்குடியினைத் நெருங்கும்போது பனை முறம் செய்யும் ராமகிருஷ்ணன் அவர்களை பார்க்கச் சென்றோம். அவர் வீடு மாறியிருந்தார். முன்பு தங்கியிருந்ததற்கும் அருகிலேயே வாடகைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.  அலைபேசியில் அவரை அழைத்தபோது சாலைக்கு வந்து எங்களுக்கு வழி காட்டினார். அழகான பாரம்பரிய வீடு அது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளவர்கள் முறத்தினை சுளவு என்பார்கள். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முறம் பனை நம்முடன் பயணிக்கும் ஒரு மரம் என்பதற்கான வலுவான சான்று. முறத்தினை மூங்கிலிலும் செய்வார்கள். முதலில் தோன்றியது மூங்கில் முறமா? அல்லது பனை முறமா என்கிற கேள்விகள் இன்று எஞ்சியிருந்தாலும், இவைகள் ஒரே காலகட்டத்து கண்டுபிடிப்புகள் என்றே நான் கருதுகிறேன். அந்தத்த நிலப்பரப்பில் கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரே காலகட்டத்தில் உருவாக்கிக்கொண்டனர் என்பது ஏற்புடைய வாதம் என்றே நான் கருதுகிறேன்.

முறம் செய்ய பனையோலை ஈர்க்கு கொண்டு அமைக்கப்பட்ட தட்டு

முறம் செய்கின்ற சமூகம் பெரும்பாலும் தலித் சமூகத்தினராக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பாவூர்சத்திரம் அருகிலுள்ள அர்னாபேரி என்ற ஊரில் நாடார்கள் முறம் பின்னுவதைப் பார்த்தேன். பொதுவாகவே, பழங்குடியினரும் தலித் மக்களும் செய்கின்ற பனை சார்ந்த பொருட்களும் அவைகளின் வடிவங்களும், பின்னல்களும், அவைகளை வெகு பழங்காலத்தை சார்ந்தவைகளாக பறைசாற்றிக்கொண்டிருக்கும். ராமகிருஷ்ணன் மிக நேர்த்தியாக முறங்களைச் செய்பவர். கிட்டத்தட்ட 40 வருடங்களாக முறம் செய்வதை மட்டுமே தனது வாழ்வின் ஆதாரமாக வைத்திருக்கிறார். தெற்கு வள்ளியூரில் இன்றும் அவரது உறவினர்கள் சிலர் முறம் பின்னுவதை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதைக் குறிப்பிட்டார். அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பணக்குடியில் தங்கி தனது தொழில் வாய்ப்பினை ராமகிருஷ்ணன் முன்னெடுக்கிறார். கள்ளர் மற்றும் தேவர் சமூகத்தினரின் ஒரு பிரிவான பட்டங்கட்டியார் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தேவர் சமூகத்தில் பனை ஓலைப்பொருட்கள் செய்யும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கே புது தகவல் தான். அவரது செய் நேர்த்தி, உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடையது. ஜேக்கப் அவரிடமிருந்து சில முறங்களை வாங்கிக்கொண்டார். அவரது எண்ணையும் எடுத்துக்கொண்டார்.

இராமகிருஷ்ணன், அவர் செய்த அழகிய முறத்துடன்.

மும்பையில் பொது முடக்கத்தின்போது நான் கலந்துகொண்ட ஒரே திருமணம் லெனினுடையது. மொத்தமே இருபது நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்விற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். முதல் முடக்கம் உச்சத்திலிருந்தபோது, களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுள் அவனும் ஒருவன். எஙள் திருச்சபைக்கும் சில பொருட்களை எடுட்து வந்தான். பொது முடக்கம் சற்று தளர்ந்தபோது சொந்த ஊரான நாங்குநேரிக்கு குடிபெயர்ந்தார். அவரது தந்தையும் தாயும் என்மீது அன்புகொண்டவர்கள். ஆகவே, நான் அவர்களைப் பார்த்து, ஒரு இறை மன்றாட்டை ஏறெடுத்துச் செல்ல திட்டமிட்டேன். ஜேக்கப் போகலாம் என்றார்கள். கிராமத்தில் இருந்த அவர்கள் வீட்டை நாங்கள் கண்டுபிடித்து சென்றபோது லெனினுடைய தாயார் மட்டும் இருந்தார்கள். நான் அங்கு சென்றது அவர்களுக்கு நிறைவளிப்பதாக இருந்தது. பழங்கள் கொடுத்தார்கள். அப்போதுதான் பதனீர் குடித்திருந்தபடியால், எதுவும் சாப்பிடவில்லை. ஜெபித்துவிட்டு புறப்பட்டோம். 

எங்கள் பயணம் தொடர்ந்தது. முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். காலை பதினோரு மணி போல அவர் இருந்த செய்துங்கநல்லூர் என்ற ஊருக்குச் சென்றோம். ஆச்சரியமாக, அவருடன் நான் ஏற்கனவே சந்தித்திருந்த கருங்குளம் பால்பாண்டி அவர்களும் இருந்தார்கள். எனக்கு சால்வை அணிவித்து முத்தாலக்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சனல்லூர் குறித்த புத்தகத்தை பரிசாக கொடுத்தார்கள். எனக்கு உண்மையிலேயே தலை கால் புரியவில்லை. “மும்பையிலிருந்து காட்சன் ஆதிச்சநல்லூர் வருகிறார் என்றால் அது பெரிய விஷயம் இல்லையா” என்றார். அவர் பூடகமாக எதையோ சொல்ல வருகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மிகச்சரியாக என்னவென்பதை கணிக்க முடியவிலை. சரி பொறுத்திருப்போம் பின்னர் பேசலாம் என நினைத்துக்கொண்டேன். எங்களுக்கு தேனீர் மற்றும் வடை போன்றவைகளை வாங்கி கொடுத்து உபசரித்தார்.

எரித்துபோன இடத்தில் உயிர்ப்புடன் எழுந்துநிற்கும் பனை, ஆதிச்சநல்லூர்

நாங்கள் ஆதிச்சநல்லூர் சென்றபோது, அங்கே இரண்டு காவலர்கள் இருந்தனர். அங்கே ஒரு பத்திரிகையாளர் வருகிறார் என அவர் சொன்னதால் காத்திருந்தோம். அங்கே ஒரு பத்திரிகையாளர் வருகிறார் என அவர் சொன்னதால் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் எனது நண்பரும் பத்திரிகையாளருமான காட்சன் வைஸ்லியும் இணைந்து கொண்டார். நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க அந்த பகுதியினை சுற்றிப்பார்க்க சென்றோம். சாலையிலிருந்து ஒரு மேடேறியது. அங்கு மண் வெள்ளைக்கற்களும் செம்மண்ணுமாக பற்றி இறுகியிருந்தது, தாவரங்களின் வளர்ச்சி ஏதும் இல்லை. முதுமக்கள் தாழி போன்றவை பார்க்கலாம் என்று போன எனக்கு, அவர்கள் இரண்டு குழிகளை மட்டுமே காண்பித்தார்கள். இரண்டும் அடுத்தடுத்து இருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி ஒரு அகழ்வாய்வு நடந்த இடத்தில் நிற்கிறேன். மிக சீராக வெட்டியெடுக்கப்பட்ட சதுரக் குழிகள். ஐந்து அல்லது ஆறு அடி தாழ்ச்சி இருக்கலாம். வெட்டியெடுத்த பகுதிகளிலும் சில பானை ஓடுகள் எஞ்சி இருந்தன. ஆனால் பெரிதாக ஏதும் பார்ப்பதற்கு இல்லை.

அப்போது முதலில் எந்த குழியினை வெட்டினார்கள், அவர் எவ்விதமாக இந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் போன்றவற்றை சொல்லியபடி வந்தார். மேட்டில் வேறொரு பெரிய குழி இருந்தது அங்கே ஒரு பானையினை எடுக்காமல் விட்டிருந்தனர். மறுநாள் இவை அனைத்தையும் மண் கொண்டு மூடவிருப்பதாக முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் கூறினார்கள். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே நான் எண்ணினேன். அந்த மேட்டுப்பகுதியில் நான் ஏறி வந்தபோது அவர் காண்பித்தது தான் ஆச்சரியமளிக்கும் ஒன்றாக இருந்தது. அங்கே ஒரு குழி, வெண்மையால் நிறைந்து இருந்தது, மற்ற குழிகள் போல காணப்படவில்லை. அது ஒரு சுண்ணாம்பு காளவாய் போல இருந்தது. எனது மனதிற்குள் பல்வேறு எண்ணங்கள் ஓடத்துவங்கியது.

முத்தாலக்குறிச்சி காமராசு ஒரு போராளி. சுமார் 25 வருடங்களாக இப்பகுதி குறித்த ஆய்வுகளில் தன்னார்வலராக ஈடுபடுத்திக்கொண்டவர். கீழடி குறித்த பேச்சுக்கள் மேலெழுந்தபோது ஆதிச்சநல்லூர், முக்கியத்துவம் பெறாமல் இருந்தது கண்டு போராடியவர் இவர். 130 ஆண்டுகளாக அவ்வப்போது திறந்து மூடப்பட்டுவரும் ஆதிச்சநல்லூர், இங்கே தமிழர்களது நாகரீகத்தை வெளிப்படுத்தும் ஒரு அரும்பெரும் சுரங்கம் என்பதை கண்ணுற்றதால், அதனை தனது வாழ்நாள் பணியாக எடுத்து பொதுவெளியில் பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். தென் மாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஜாதியம் தலை தூக்கி இருக்கையில், இங்கே கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், எந்த சாதியினரைக் குறிப்பதாக இருக்கிறது என்னும் எண்ணம் மேலோங்கியிருப்பதால், ஆய்வாளர்களே சற்று நிதானமாகத்தான் களமாடுகிறார்கள். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலத்தில் இன்றுபோல் சாதிய அமைப்பு இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர். அவ்வகையில், தமிழக அரசு தற்போது அவருக்கு வழங்கிய விருது என்பது, அவரது போராட்ட குணத்திற்கும், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அவர் காட்டிய தன் முனைப்பிற்கும் அச்சாரமானது.  

முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களிடம் அந்த சுண்ணாம்பு காளவாய் குறித்து பேச்செடுத்தேன். அப்போது அவர் அது ஒரு உலையாக இருக்கக்கூடும் என்றார். இரும்பு உருக்க பயன்பட்ட இடமாக இருக்கலாம், அல்லது, பானைகள் சுட்டெடுக்க பயன்பட்டிருக்கலாம், ஏன் சுண்ணாம்பு காளவாயாகவும் இருக்கலாம் என்றார். பானைகள் சுட்டெடுப்பதற்கான காரணம் இருக்கிறது. எங்கும் பானைகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, பானைகள் பயன்பாடு மிக அதிகமாக இருந்திருக்கும் சூழலில் இந்த இடம், சூளையாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் சுமார் 3800 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.  இந்த நிலத்தை 1876ஆம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி ஆட்சியாளரும், மாவட்ட பொறியியலாளரும், மற்றும் முனைவர். ஜாகர் (Dr. Jagor) ஆகிய மூவரும் இணைந்து தோண்டத் துவங்கினர். பல பானையோடுகளும், இரும்பாலான ஆயுதங்களும், கருவிகளும் கண்டடையப்பட்டன. அலெக்சாண்டர் ரே (Alexander Rey) என்ற ஆய்வாளரும் 1889 – 1905 வரை இப்பகுதிகளில் தனது தேடுதல்களை நிகழ்த்தி, ஜாகர் அவர்கள் கண்டுபிடித்ததை ஒத்த பொருட்களை ஆவணப்படுத்துகிறார்.   ரே ஆவணப்படுத்துகையில், வெண்கலம் மற்றும் தங்கத்தாலான பொருட்களும் பட்டியலில் இடம் பெறுகின்றன என கூறப்படுகிறது. ஆகவே வெண்கலத்தை உருக்கும் உலையாகவோ, இரும்பை உருக்கும் உலையாகவோ கூட இருந்திருக்கும் வாய்ப்புள்ளது.

ஆதிச்சநல்லூரில் நான் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் வாசித்த்ச்வைகளையும் கோர்த்து பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட சில யூகங்களே இனிமேல் நான் கூற முற்படுபவை. இப்பகுதிகளில் எங்குமே பிரம்மாண்ட செங்கல் கட்டுமானங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இவர்கள் சுண்ணாம்பு காளவாய் வைத்திருந்தால், அவைகளை செங்கல் கட்டுமானங்களுக்கு பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் இல்லாமலாகிறது. வேறு எங்குமே சுண்ணாம்பு பயன்பாடு குறித்த தகவல்கள் இல்லை. ஆகையினால், இங்கே நீற்றி எடுக்கப்பட்ட சுண்ணாம்பு, வெற்றிலை சுவைப்பதற்கும், பனை ஏறிகள் பனையில் இட்டிருக்கும் கலசத்தில் தடவுவதற்கும் பயன்படுத்தியிருக்கலாமே என்கிற எண்ணமே மேலோங்குகிறது.

இதுவரை கிடைத்த பெரும்பாலான பானைகள் தாழி வகைகள் என நாம் அங்கு கிடைத்த எலும்புகளை வைத்து முடிவுக்கு வர இயலும். அத்தகைய பிரம்மாண்டமான பானைகள் செய்ய முடிந்த ஒரு சமூகத்தில் எளிய கலயங்கள் செய்வது கடினமாகவா இருந்திருக்கும்? ஆக, பனையேறிகளின் முக்கிய தேவையான கலயங்கள் அங்கே இருந்திருப்பதும் உறுதியாகிறது.

அவர்கள் வாழ்ந்த வீடுகள் எப்படி இருந்தன என இதுவரை எவ்வித சான்றுகளும் இல்லாதபோது, பனை மரத்தடிகளும் ஓலைகளும் கொண்டு தங்கள் வீடுகளை அவர்கள் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாம் யூகிக்க இடமிருக்கிறது. செம்மண் குழைத்தும் வீடுகளைக் கட்டியிருக்கலாம். கீழடியைப் போல செங்கல் கட்டுமானங்கள் இனிமேல் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எப்படியிருந்தாலும், பனை ஓலைகளாலான கூரைகள் அமைத்திருக்க வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அங்கு கிடைத்த இரும்பு பொருட்களை கிழ்கண்ட முறைகளில் வைகைப்படுத்துகிறார்கள். கத்திகள், குறுவாட்கள் மற்றும் கைக்கோடாரிகள் என ரே குறிப்பிடுகிறார். இரும்பு பொருட்கள் வேட்டையினை சுட்டிக்காட்டவும், போர் மற்றும் பயன்பாட்டு தொழிற்கருவிகளாகவும் இருப்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அவ்வகையிலும், பனையேறிகள் பயன்படுத்தும் பாளை அரிவாள் பயன்பாட்டில் இருந்திருக்குமென நாம் யூகிக்க இடமுள்ளது.

எனது ஆதிச்சநல்லூர் பயணம் குறித்த செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆதிச்சநல்லூர் பயணமும், முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் தொடர்பும், நண்பர் வைசிலினைப் பார்த்தது மிகப்பெரும் உளக்கிளர்ச்சியைப் எனக்களித்தது. காட்சன் ஆதிச்சநல்லூர் வருகிறார் என்றால், பனை சார்ந்து ஏதோ தேடி வருகிறார் என்பதே முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் கூற்று என்பதை நான் புரிந்துகொண்டேன். அது உண்மையும் கூட. பனையுடன் இணைந்த வாழ்வையே நான் தேடிச்செல்லுகிறேன். எனது எண்ணங்கள் யூகங்கள் மற்றும் பயண நோக்கம் குறித்து நண்பர் காட்சன் வைஸ்லியுடன் விரிவாக விவாதித்தேன்.

நாங்கள் அங்கிருந்து பால்பாண்டி அவர்கள் வீட்டிற்கு சென்றோம். நான் ஏற்கனவே அங்கு சமீபத்தில் சென்றிருந்தாலும், நண்பர்களுக்கு அவ்விடத்தை காண்பிப்பது சரியாயிருக்கும் என்று அழைத்துச் சென்றேன். ஜெனிஸ் மற்றும் விபின் ஆகியோர், எங்கள் பயணத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் பெருமளவில் உணர்வெழிச்சுக்குள்ளானது போல் தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் கூர்ந்து கவனித்து வந்தார்கள். பனை சார்ந்து அவர்களுக்கு தெரியாதவற்றை எல்லாம் இப்பயணம் அவர்களுக்கு அறிமுகம் செய்யும் என்று ஜேக்கப் அறிந்திருந்தார்கள். 

பனை தூண்கள், ஸ்ரீ வைகுண்டம்

ஸ்ரீ வைகுண்டம் நோக்கி நாங்கள் வந்து சேர்ந்தபோது மதியம் இரண்டு தாண்டிவிட்டது. நாங்கள் கடந்து சென்ற ஒரு இந்து கோவிலின் மூடிய வாசலுக்கு வெளியே நான்கு தூண்கள் கருப்பாக எழுந்து உயர்ந்து நின்றன. அவைகளின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்ததால், வண்டியை நிறுத்தச் சொன்னேன். சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு தூண் போல காணப்பட்டது. அதன் அருகில் சென்று பார்த்தபோது, முழு பனை மரத்தினை அப்படியே செதுக்கி எடுத்த தூண் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டாம் முறியிலிருந்து உருவாக்கப்பட்ட தூண்கள்.  இதற்கு ஒப்பான தூண்களை நான் புத்தளம் சி எஸ் ஐ தேவாலயத்தில் பார்த்திருக்கிறேன். அவைகள் ஆலயத்திற்குள், வெயில் மழை காற்று என எதுவுமே பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பாக நிற்கும் பளபளப்பான தூண்கள். இருநூறு வருடங்களாக அப்படி இருப்பது வியப்பொன்றுமில்லை. ஆனால் இங்கே, நூறாண்டுகள் கடந்து நிற்கும் இந்த பனை மரம் நமது கட்டிடக் கலைகளின் மரபினை நமக்கு சொல்லும் ஒரு தடயமாக இருக்கிறது. குறிப்பாக கறையான் ஏறாமல் இருக்க கீழே கல் வைத்துவிட்டு, தூண் சரியாமல் இருக்கவும் கல் ஒன்று கீழே பனையின் கால் மாட்டில் படி எடுத்து அதனுள் சொருகப்பட்டிருந்தது. இயற்கையை மிக குறைவாக வடிவம் மாற்றி செய்யும் கட்டுமான கலை.

வர்ண முறம், ஸ்ரீ வைகுண்டம்

பேருந்து நிறுத்தத்தின் அருகில் உணவு உண்ண சென்றோம். செல்லும் வழியில், ஒரு பனை ஓலை பொருட்களை விற்கும் கடையினைப் பார்த்து அங்கு சென்று பொருட்களை வாங்கினோம். குறிப்பாக, வர்ணம் தீட்டிய பனை முறம் அங்கு இருந்தது. குமரி மவட்டத்தில் செய்யும் அரிவட்டியினை ஒத்த பெட்டிகள் வர்ணமிடப்பட்டிருந்தன. அருகில் யாரேனும் பனையோலைப் பொருட்கள் செய்பவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டோம், அருகில் கணியர் தெரு ஒன்று இருக்கிறது அங்கே சென்றால் பனை ஓலைப் பொருட்கள் செய்பவர்களைப் பார்க்கலாம் என்றார். சாப்பிட்டுவிட்டு அந்த தெரு நோக்கி சென்றோம்.

தமிழகத்தின் பல்வேறு ஜாதியினர் பனையுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். கணியர் என்ற சாதியினர் பனையுடன் தொடர்புடயவர்கள் என்ற தகவலை இங்கேதான் முதன் முதலாக பெறுகிறேன். ஆகவே அவர்கள் எப்படியான வாழ்க்கை முறையினைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் செய்யும் பனை ஓலைப் பொருட்களின் வடிவங்களையும் காண வெகுவாய் ஆசைப்பட்டேன். ஜேக்கப் அவர்கள் குமரி மாவட்டத்திலும் கணியர் உள்ளனர் என்றார்.

தெருவின் முனையில் கணியர் தெரு என்று எழுதப்பட்டிருந்தது. ஆகவே, சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறோம் என உறுதி செய்துகொண்டோம். அங்கே பெண்கள் கும்பலாக கூடியிருந்த இடத்தில், ஓலைப் பொருளினைச் செய்பவர்களைத் தேடி வந்தோம் என்றேன். கடைசி வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்கள். குறிப்பிட்ட அந்த வீடு ஒரு எளிய குடிசை. எங்களை வீட்டிற்குள் அனுமதித்தனர். உள்ளே சென்று அந்த பெண்மணியுடன் உரையாடினோம். வீட்டிற்குள், ஓலைகள் வரிசையாக கீறப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பழைய பொருட்கள் ஏதேனும் இருக்குமா என்று கேட்டபோது, வெற்றிலைப் பெட்டி இருக்கிறது என்றார்கள். சுமார் இருபது அல்லது முப்பது வருட பழைமையான ஒரு பெட்டியை எடுத்து வந்தார்கள். 

அழகிய வெற்றிலைப்பெட்டியினை செய்யும் திறன் பெற்ற கலைஞர், ஸ்ரீ வைகுண்டம்

பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், அந்த வடிவம் குமரி மாவட்டத்தில் காணப்படும் அரிவட்டிக்கு இணையானது. குமரி மாவட்டத்தில் உத்தரங்கோடு என்ற பகுதியில் இவ்வித அரிவட்டி செய்யும் சாம்பவர்கள் வாழ்கிறார்கள். எனது பனை சார்ந்த தேடுதல் துவங்கிய இடம் அது. அந்த பின்னல் முறம் பின்னுவதற்கு அடிப்படையானது. அரிவட்டியும் முறமும், பனை ஈர்க்கிலால் செய்யப்பட்டவைகள். ஆனால், எங்கும் அரிவட்டியினை மூடி இட்டு நான் பார்த்ததில்லை. அல்லது, இவ்வகை பின்னல்கள் கொண்ட பெட்டிகளுக்கு என் வாழ்நாளில் இதுவரை மூடி இட்டு நான் பார்க்கவில்லை. ஆகவே, இவ்வகை பின்னல் கணியர் சமூகத்துடன் இணைந்து இருக்கும் ஒரு முறையாக காணப்பட்டது. ஜேக்கப் பால்மாவிற்கு தேவையான பொருட்களுக்கு முன்பணம் கொடுத்தார்.  நான் அந்த பழைய வெற்றிலைப் பெட்டியினை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

நாங்கள் அங்கிருந்து பண்ணைவிளை நோக்கிச் சென்றோம். அங்கே மொர்தேகாயுடைய மாமா தானியேல் நாடார் அவர்கள் இருந்தார்கள். நான் அவரைத் தேடி சென்றபோது, வழியிலேயே ஒரு டீக்கடை முன்பு அவர் இருந்ததைப் பார்த்துவிட்டேன். எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் வாங்கி வைத்திருந்த கருப்பட்டி சாப்பிடக் கொடுத்தார். எங்கள் தேவைக்காக இரண்டு கிலோ கருப்பட்டி வாங்கி வந்தேன். பனை இரவு தானியேல் தாத்தா தோட்டத்தில் தான் நடைபெற்றது.  அவரது மீசையும், நடையும், நறுக்கென்ற சத்தமான பேச்சும் எல்லாம் ஒரு கதாநாயகனுக்கு உரியது.

அன்று இரவு நாங்கள் எங்காவது தங்கவேண்டும். ஆகவே போதகர் ஜாண் சாமுவேல் அவர்களை அழைத்தேன். “கண்டிப்பா வாங்கையா” என்றார்கள். ஜாண் சாமுவேல் போதகர் அவர்கள், 2019 ஆம் ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று தனது பகுதியிலுள்ள பனையேறிகளை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்தது செய்தியாக வந்தது. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து அவரை நான் தொடர்புகொண்டேன். நான் பயின்ற ஐக்கிய இறையியல் கல்லூரி பெங்களூருவில் அவரும் பயின்றவர், ஆகவே என்னைக்குறித்து அறிந்திருக்கிறார். எனது பணிகள் அவருக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. ஆகவே, பனை சார்ந்த மக்களுக்காக பல பணிகளை முன்னெடுத்தவர். எனக்குப்பின்பு, பனை சார்ந்த முன்னெடுப்புகளை இயல்பாக கையாளும் ஒரே போதகர் அவர் மட்டும்தான். அவர் இருக்கும் இடங்களில் பனை ஓலை பின்னும் மக்கள் இருப்பதால் மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் கரிசனத்தாலும், இயல்பாக விழிம்புநிலை மக்கள் மீது கொண்ட பாரத்தால், அவர் இவ்விதமான முயற்சிகளை எடுக்கிறார் என்பதை நான் அறிவேன்.

கடந்த 2020ஆம் வருடம், பனை ஓலையில், உண்டியல் செய்யும் திட்டத்தைக் குறித்து பேசினோம். பொதுவாக கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின்போது, திருச்சபையின் மக்களிடம் உண்டியல் வழங்குவது வழக்கம். புலால் உணவைக் குறைத்து, பூச்சூடாமல், உண்ணா நோன்பு கடைபிடித்து சேகரிக்கும் பணம், திருச்சபையின் அருகிலிருக்கும் அல்லது திருச்சபையால் சுட்டிக்காட்டப்படும் ஏழைகளுக்கு வழங்கப்படும். பொதுவாக குயவர்களிடம் இவ்வித உண்டியல் வாங்குவது வழக்கம். காலப்போக்கில், தகரத்திலும், இன்று பிளாஸ்டிக்கிலும், இவ்வித உண்டியல் வழங்கப்படுகிறது. எனது அறிவில், பனையோலையில் எவருமே உண்டியல் செய்ததில்லை. ஆகவே, அங்குள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து ஊண்டியல் செய்ய இயலுமா எனக் கேட்டேன். “பார்க்கிறேன் அய்யா” என்றார்கள். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு, வெற்றிகரமாக அவர்கள் எங்களுக்கு, உண்டியலை செய்து அனுப்பினார்கள். உலகிலேயே முதன் முறையாக திருச்சபை பனையோலையில் உண்டியலை செய்தது பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

பனையோலை உண்டியல் குறித்த செய்தி

அப்போது, மீண்டும் ஒரு பணியினை அவருக்கு நான் கொடுத்தேன். போதகர்கள் பயன்படுத்தும் “ஸ்டோல்” என்று அழைக்கப்படுகிற ஆயர் தோள் பட்டை பனை ஓலையில் செய்தால், குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்தலாமே என்றேன். “முயற்சிக்கிறேன் அய்யா” என்றார்கள். 2020 ஆம் ஆண்டு தவக்காலம் துவங்கும்போது இருந்த சூழல் அப்படியே மாறியது. இந்தியா முழுக்க நோய் தொற்றின் நிமித்தமாக ஆலயங்கள் வழிப்பாடுகள் அனைத்தும் முடங்கின. ஆகவே, அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இவ்வருடம், அதனை குறித்து சற்று தாமதமாக திட்டமிட்டோம். அவரது திருச்சபையைச் சார்ந்த நேசம்மாள் என்பவர், இவ்வித அழகிய மேலங்கியினை செய்ய ஒப்புக்கொண்டார். வசதியான பின்னணியத்தை கொண்ட அப்பெண்மணி, இதனை ஒரு அற்பணிப்புடன் செய்தார். 2021 குருத்தோலை ஞாயிறு அன்று, போதகர் ஜாண் சாமுவேல் அவர்கள், அந்த மேலங்கியினை முதன் முறையாக உலகிற்கு அறிமுகம் செய்தார். அவர் எனக்கு அனுப்பியது குருத்தோலை ஞாயிறு அன்று எனக்கு கிடைக்காததால், உயிர்ப்பின் ஞாயிறு அன்று அதனை நான் பயன்படுத்தினேன்.

திருமதி நேசம்மாள் அவர்கள் செய்து கொடுத்த ஆயர் தோள் பட்டையுடன் நான்

பனை ஓலைகளை சமயம் சார்ந்து பயன்படுத்துவது முக்கிய குறியீடாக அமையும் என்பது எனது எண்ணம். 2014 ஆம் ஆண்டு நான் அகமதாபாத்தில் இருக்கும்போது, என்னோடு பணி புரியும் மும்பை தமிழ் போதகர்கள் அனைவருக்கும் என் கையால் செயப்பட்ட பனை ஓலைக் கழுத்துப்பட்டைகளை அனுப்பினேன். போதகர்களின் உடை அமைப்பு என்பது, வட்ட காலர் வைத்த கறுப்பு சட்டையும், அதற்குள் ஒரு வெள்ளை காலரை நுழைத்து அணிவதுதான். எங்கு பயணித்தாலும், இது அவர்களை அடையாளம் காட்டும் ஒன்றாக அமையும். அங்கி போட்டுக்கொண்டு செல்ல தேவையில்லை. அங்கி என்பது, திருச்சபை வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் மட்டுமே என்ற வரையறை இருந்தது. குருத்தோலை ஞாயிறுக்காக நான் கொடுத்த கழுத்துப் பட்டைகளை எத்தனை போதகர்கள் அணிந்தனரோ நான் அறியேன், ஆனால், அதன் நீட்சியாக இப்படி ஒரு மேலங்கி வந்து அமையும் என நான் அப்போது நினைக்கவில்லை.

போதகர் ஜாண் சாமுவேல், நேசம்மாள் அவர்கள் செய்து கொடுத்த ஆயர் தோள் பட்டையுடன்

அன்று இரவு அவரது வீட்டிற்குச் சென்றோம். எங்களுக்காக ஒரு அறையை ஒதுக்கித் தந்திருந்தார்கள். அவரை சந்திக்க அன்று மன்னா செல்வகுமார் என்கிற கிறிஸ்தவ வரலாற்றைத் தேடுகின்ற ஆய்வாளர் ஒருவர் தன்னார்வலர்களுடன் வந்திருந்தார். அன்று இணைந்து பாடல் பாடி ஜெபித்து எங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருந்த விருந்தினை சுவைத்தோம். மிக சிறப்பான ஒழுங்குகளைச் போதகர் அவர்கள் செய்திருந்தார்கள்.  அவரது தனிப்பட்ட சேகரிப்பில் 500 வேதாகமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பழங்கால பொருட்களும் இருந்தன. வெகு உற்சாகமாக் பேசினோம். ஜேக்கப் எங்கள் பேச்சில் இணைந்துகொண்டார். பனை மரங்கள் எவ்வாறெல்லாம் நமது வாழ்வில் இணைந்திருக்கின்றன எனக் கூறும் ஒற்றை நாளாக அது இருந்தது.

என்னுடன் மன்னா செல்வகுமார், போதகர் ஜாண் சாமுவேல் மற்றும் அவரது துணைவியார்

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: