பனை மோகன்
அக்டோபர் 19ஆம் தேதி மீண்டும் நாகர்கோவில் சென்றேன். போகும் வழியில் பேரின்பபுரம் கடந்தபோது, போதகரும் எனது நண்பனுமான சாம் ஜெபசிங் அவர்கள் அங்கு பணியாற்ற வந்திருப்பதை அறிந்து அவரை சந்திக்கச் சென்றேன். என்னை மிகவும் நேசிக்கும், எனது பணிகளுக்கு பெரும் ஊக்கமாயிருக்கும் குமரி போதகர் அவர். எப்போது பண உதவி தேவை என்றாலும் கேளுங்கள், பொது வாழ்வில், நீங்கள் செய்யும் பணிகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்கிறேன் என்று சொல்லியிருந்தார். தேவைப்படும் நேரத்திலெல்லாம், தயங்காமல் ஆயிரம் இரண்டாயிரம் என அவரிடம் பணம் கேட்டிருக்கிறேன். இந்த பயணத்திலும் பொருட் செலவுகள் உண்டு என்பதால், அவரை சந்தித்தேன். என்னிடமிருந்த பனை விதைகளைக் கொடுத்தேன். அவரும் அவரது மனைவியுமாக உடனடியாக அந்த பனை விதையினை ஆலய வளாகத்தில் விதைத்தார்கள். அவரது மனைவி ரெனி, மலையாளாத்தை தனது தாய்மொழியாக கொண்டவர். ஆனால் நல்ல தமிழ் பேசவும் எழுதவும் அறித்திருந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில துறை விரிவுரையாளராக இருக்கிறார். என் பணிகள் குறித்து இருவரும் ஆவலுடன் கேட்டறிந்துகொண்டார்கள். என்னை அவர்களது ஆலயத்திற்கு செய்தி கொடுக்க அழைத்தார்கள்.

பேரின்பபுரத்தில் தான் பனை இளவரசன் சங்கர் வசிக்கிறார். சங்கர், படித்துக்கொண்டிருக்கும்போது அவரது தந்தை இறந்துவிடவே, அனைவரும் கைவிட்ட பனைத் தொழிலை கையிலெடுத்தார். அவரை பெருமளவில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை நான் ஏற்றேன். ஆகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரை என்னால் முயன்ற மட்டும் முன்னிறுத்தினேன். பனை சார்ந்த அனைவருக்கும் நான் செய்யக்கூடுவது அதுதான். ஆகவே, போதகர் சாம் ஜெபசிங் அவர்களிடம் நீங்கள் சங்கரை கவனித்துக்கொள்ளுங்கள் என்றேன். கிறிஸ்மஸ் கால அலங்காரங்கள் போன்றவற்றை செய்ய அவனை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன். கண்டிப்பாக செய்கிறேன் என்றார். பின்னர் கிறிஸ்மஸ் நேரத்தில் சங்கர் செய்த பனை ஓலை நட்சத்திரத்தை அவர்கள் ஆலயத்திலும், வீட்டிலும் தொங்க விட்டார்கள். முதன் முறையாக குமரி மாவட்டத்தில் பனை ஓலை நட்சத்திரத்தை வாங்கி பயன்படுத்திய நபர் போதகர் சாம் ஜெபசிங் அவர்கள் தான்.

பனை குறித்த எனது தேடுதலில், எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்து கொண்டது ஒரு பேராசீர்வாதம் என்றே கருதுகிறேன். எங்களது நட்பு, சுமார் 20 ஆண்டுகளாக தொடர்வது. அவரது சங்கச் சித்திரங்கள் தொடர் வழியாக அவரை நான் கண்டுகொண்டேன். பார்வதிபுரத்தில் வசிக்கிறார் என்றறிந்தபோது அவரை சந்திக்க பார்வதிபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்றேன். எனது சொந்த கிராமமான பெருவிளையிலிருந்து நடந்தே செல்லும் தூரம் தான். என்னை வீட்டிற்கு வரவேற்று என்னோடு பேசினார். அவரது மனைவி அருண்மொழி நங்கை காப்பி முறுக்கெல்லாம் கொடுத்தார்கள். அஜிதனும் சைதன்யாவும் சிறு பிள்ளைகள். அதன் பிறகு பல முறை அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறேன். நாகர்கோவிலில் நான் போக விரும்புகிற ஒரு சில வீடுகளுள் ஒன்று அவரது வீடு. எந்த அவசரத்தில் அவர் இருக்கிறார் என எப்போதும் நான் பார்த்ததில்லை, சில நேரம் தூங்கிக்கொண்டிருப்பார், சில நேரம் எழுதிக்கொண்டிருப்பார், ஒரு முறை அவரது செல்ல நாயை கவனித்துக்கொண்டிருப்பதையும் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, என்னோடு பேசிக்கொண்டிருந்திருக்கிறார், சில நிமிடங்கள் அல்ல மணிக்கணக்கில். அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக நான் உரையாடிய நேரம் கிடையாது. வீட்டிற்கு சென்றால், நமக்காக நேரம் ஒதுக்குகிற பண்பாளர்களை நாகர்கோவிலில் பெருமளவில் காண்பது இயலாது.
இரண்டாம் முறை அவரை நான் சந்திக்கும்போது, எனது கரத்தில் ஒரு கட்டுரை இருந்தது, அது நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது தயாரித்த கிறிஸ்மஸ் உரை. உரையினை வாசிக்குமுன், எவரிடமாவது காண்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் அவரை பார்க்கச் சென்றேன். “என்ன காட்சன் கட்டுரை எழுதியிருக்கீங்களா” என்று கேட்டபடி அதை வாங்கினார். நான் பத்து நிமிடம் பேசுவதற்காக தயாரித்திருந்தவற்றை, ஒரு நிமிட பார்வையில், வாசித்து முடித்துவிட்டு, நன்றாக இருக்கிறது என்றார். எனது சொற்பிழைகளை சுட்டிக்காட்டினார். அப்போது கவிதை நடையை ஒட்டிய ஒரு உரைநடையையே நான் கொண்டிருந்தேன். அந்த கட்டுரையின் தலைப்பு “குப்பைத் தொட்டி”. அதன் பின்பு கட்டுரை எழுதினால் அவரைப் பார்க்கச் சென்றுவிடுவேன். வாசித்தபின்பு என்னோடு பேசுவார், நான் எழுதிய தகவல்களை விட பல மடங்கு தகவல்களை சொல்லிக்கொண்டே இருப்பார். நான் அண்ணன் என்று அழைக்கும் அளவு என்னோடு அன்புகாட்டினார். என்னை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய ஆளுமை அவர்.

அவரிடம் பார்த்து வியக்கத்தக்க பல்வேறு விஷயங்கள் அன்றாட வாழ்வில் உண்டு. நட்பை பேணிக்கொள்ளுவதும், குறைகளை பெரிதுபடுத்தாமல் கடந்து செல்லுவதும், தட்டிக்கொடுப்பதும், பிரச்சனையினை எதிர்கொள்ளும்போது நேருக்குநேர் சந்திக்கும் துணிவுடனிருப்பதும், தன் மனதிற்குப்பட்டதை நேரடியாக சொல்லுவதும், வெறுமனே வம்புக்காக எதையும் சொல்லாதிருப்பதும் நான் வியத்த காரியங்கள். அவரது எழுத்துக்களில், “உள்ளுறைந்திருக்கும் சதிகளை” கண்டுபிடிப்பவர்கள் பெரும்பாலும், சாதி, சமய, அல்லது ஏதேனும் கோட்பாடுகளை மூர்க்கமாக பின்பற்றுகிறவர்களாகவே இருப்பார்கள்.
ஜெயமோகன் அவர்களின் அசுர எழுத்தைக் கண்டு நான் எப்போதும் எல்லாரையும்போல வியந்திருக்கிறேன். ஆனால், அவரது அக்கறை, அன்பும் நான் அணுக்கமாக அருகில் நின்று பார்த்தது. எனது திருமணத்திற்கு குடும்பமாக வந்து வாழ்த்து தெரிவித்தது மிகப்பெரும் பாக்கியம். அன்று எனது மூத்த அண்ணன் செல்சன் அவர்களிடம், ஜெயமோகன் அண்ணன் வருவார்கள், அழைத்து சென்று சாப்பிட அமரவைக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். எனது திருமணத்திற்கு வந்த பலருக்கும் எங்கள் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அறிந்திருப்பார்கள். என்னை மட்டுமே அறிந்த ஒருவராக அவர் மட்டுமே வந்திருந்தார். அப்படியே, எனது அண்ணன் அவரை அமரவைத்து, எனக்கு வந்து பதில் செல்லும் வரைக்கும் படபடப்பாகவே இருந்தது.
திருமணத்திற்குப் பிறகு நாங்கள் குழந்தை ஆரோனை எடுத்துக்கொண்டு சென்றோம். பெரிய காதுகளை அருண்மொழி அவர்களிடம் காட்டி பேசிக்கொண்டிருந்தார். அவனைத் தூக்கி கொஞ்சினார். அவர் குழந்தையாக மாறி விளையாடுவது எனக்கு பிடித்திருந்தது. குழந்தையினை எப்படி குளிப்பாட்டவேன்டும் என எனக்கு சொல்லித்தந்தார். நம்புங்கள், எனது கையில் குளிப்பாட்டும்போது மட்டும் ஆரோன், ஒருபோதும் அழுததில்லை. ஆரோனை கரத்தில் எடுத்து கொஞ்சியதோடல்லாமல், சைதன்யாவிடமும் கொடுத்து தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன் சைதன்யா தூக்கிய முதல் குழந்தை ஆரோன் தான் என்று. அஜிதன் பத்தாம் வகுப்பில் பெற்ற அதிக மதிப்பெண்களை என்னிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறான்.
நாங்கள் பூனேயில் இருக்கும்போது ஜெயமோகன்அண்ணன் ஆப்பிரிக்கா சென்றார். அப்போது மும்பையில் கிறிஸ்தவ போதகர்களுக்கும் மற்றும் பற்றாளர்களுக்கும் என ஒரு நிகழ்வினை ஒழுங்கு செய்தோம். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தனக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுக்க எங்களைக் கேட்டுக்கொண்டார். அவர் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும்போது, ஆரோனுக்காக ஒரு அழகிய முரசொன்றை வாங்கி வந்தார். அவரது வாழ்த்துக்களும் ஆசியும் தான், ஆரோனுக்கு தாளம் என்பது இயல்பாகவே வருகிறது.

பனை சார்ந்த என் தேடல்களில், ஜெயமோகன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. வேறு எவரை விடவும் பனை சார்ந்து நான் விரிவாக ஜெயமோகன் அண்ணனிடம் தான் விவாதித்திருக்கிறேன். அவர் எனக்கு அளித்த இடம் அவ்வகையில் முக்கியமானது. அது உறவு சார்ந்த ஒன்றாக அமைந்ததே ஒழிய, எழுத்தாளர் வாசகர் என்ற நிலையில் அமையவில்லை. அண்னன் அதனை ஒரு பொருட்டாக என்னிடம் காட்டிக்கொள்ளவும் இல்லை. எனக்கு பிடித்தவற்றை நான் செய்வதில் எப்போதும் அவர்களுக்கு மகிழ்ச்சி தான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பனை சார்ந்த எனது தேடுதல்களுக்கு ஆதரவே இல்லா சூழல்களில் அவரது ஆதரவுகரம் என்னோடு இருந்தது. எனது வலைப்பூ அவர் எனக்கு ஊட்டிய உற்சாகத்தால் துவங்கப்பட்டது. நான் “நெடும்பனை” என அதற்கு பெயர் வைக்க ஊக்கப்படுத்தியவரும் அவர்தான். அன்று வேறு எவரும் பனை என்ற பெயரில் நான் ஒரு வலைப்பூவை துவங்க ஊக்கமளித்திருக்க இயலாது. 2008 ஆம் ஆண்டு பனை மறக்கப்படவேண்டிய ஒரு தாவரமாகவே நாடார்களுக்குள் இருந்தது. கற்றுத்தேர்ந்த தமிழர் என்ற இனத்திற்கு அப்போது பனை என்றால் என்னவென்றே தெரியாது. தமிழகத்தில் பனை குறித்து முதல் முதலாக பேசிய நாம் தமிழர் கட்சி அப்போது பிறந்திருக்கவில்லை.
பனை எனக்கு அணுக்கமாயிருந்ததை அவர் அறிந்திருந்தார். பனைக்காக நான் எடுத்த முனைப்புகளில் எப்போதும் என்னுடனிருந்தவர் அவர். நான் மார்த்தாண்டத்தில் வேலைப் பார்க்கும்போது, அவருக்காக கோட்டைவிளையில் தயாரான கருப்பட்டியினை வாங்கி சென்றிருந்தேன். அன்றைய சந்தை விலையை விட அந்த கருப்பட்டியின் விலை அதிகம் தான். சொன்ன விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். சிறப்பு அதுவல்ல, உடனேயே அதனை சுவைத்துப்பார்த்து “நல்ல கருப்பட்டி” என்றார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் அமைப்பிற்கு சொந்தமான இடத்தில், நான் பணியாற்றும்போது, எனது மேற்பார்வையில் காய்ச்சப்பட்ட கருப்பட்டி. அது தரமான கருப்பட்டி என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒருவர் சுவைத்து அதற்கான அங்கீகாரத்தை அளிப்பது என்னை மகிழ்ச்சியில் மட்டுமல்ல ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. ஏன் அந்த ஆச்சரியம்? ஏனென்றால், இதே கருப்பட்டியினை நான் வேறு எவரிடமாவது கொடுத்திருந்தால், பல்வேறு சந்தேகங்களை பூடகமாக நம்மை நோக்கி வீசுவார்கள், எல்லாவகையிலும் நாம் பதில் சொன்னாலும், இறுதியாக, “எங்க பாட்டி வீட்டுல அப்போ அக்கானி காய்க்கும்போது” என்று சுய பெருமையை பேசுவார்கள். நல்ல கருப்பட்டி என்ற வார்த்தை வாயில் எளிதில் வராது.

தக்கலை பென்னி ஒருமுறை என்னிடம் இப்படி சொல்லியுமிருக்கிறார்…”குமரி மாவட்டத்தில் உள்ள நாடார் பெண்களும் நாயர் பெண்களும் செய்யும் கருப்பட்டி தனித்த சுவையானது” என்று. எப்படி அண்ணன் கருப்பட்டியினை கண்டுபிடித்தீர்கள் என்றேன். அவர்கள் வீட்டில் அக்கானி காய்ச்சும்போது தானும் அதனை செய்ய கற்றுக்கொண்டதாக கூறினார். மேலும் மணம் அதனை புதிய கருப்பட்டி என்கிறது, நாக்கில் கரைவதன் சுவையும், அது தூய கருப்பட்டிதான் என்கிறது என கூறினார்கள். இது இரண்டும் தான் மிக முக்கிய அறிகுறிகள் என்பதை இன்னும் பல வருடங்களுக்குப் பின்பு நான் அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டேன். உடைத்துப்பார்ப்பது மற்றொரு வழி.
2016 ஆம் ஆண்டு, எனது பயணத்தைக் குறித்து அவரது வலைப்பூவில் எழுதியது எனக்கு பல நல்ல நண்பர்களையும் தமிழகத்தின் தலை சிறந்த வாசகர்களையும் பெற்றுத்தந்தது. எனது வலைப்பூவினை அவரது வலைத்தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். ஆனாலும் 2016 ஆம் வருடம், அவர் எனது தென் இந்திய பனை பயணத்தை அறிமுகப்படுத்தியபோது ஒரே நாளில் அதற்கு முந்தைய வருடத்தை மிஞ்சும் வாசகர்கள் எனது தளத்திற்கு வந்தார்கள். அவர் எனக்களித்த அறிமுகம், தனித்து விடப்பட்ட என்னை அந்த அளவிற்கு முன்னிறுத்துவதாக அமைந்தது. பல விதங்களில் அவரது அந்த அறிமுகம் முக்கியமானது. அப்படியே எனது புத்தகம் வெளிவந்த போது அருண்மொழி நங்கை அவர்கள் எழுதிய மதிப்புரை மின்னல் வேகத்தில் வந்தது. இன்றுவரை குமரி மாவட்டத்தில், அந்த புத்தகத்தை குறித்த ஒரு சிறு விவாதம் கூட முன்னெடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் அனைத்து முன்னணி முற்போக்கு எழுத்தாளர்களும் பனையேறிகளுடைய பிள்ளைகள் தான். அதனைச் சொல்ல கூச்சப்படுமளவிற்கு இன்று அனைவர் கரத்திலும் பணமும் அதிகாரமும் வந்தாயிற்று.
2017 ஆம் ஆண்டு பனை குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்கும்படியாக மீண்டும் அவர்களைத் சந்தித்தேன். வேறு எவரும் சொல்லாத திசைகளில் அவர்கள் பேசியவைகள் எனக்கு மிகவும் உற்சாகமூட்டுபவைகளாக இருந்தன. தமிழகத்தில் வேறு எங்கும் பதிவிடப்படாதவைகள் ஆனபடியாலும் அவைகள் எனது எண்ண ஓட்டத்தை மீண்டும் புது பாய்ச்சலுடன் முன் செல்ல உதவியதாலும், இங்கே அவைகளை எனது நினைவிலிருந்து பதிவுசெய்கிறேன்.
“ஒரு பண்பாடு என்றால், சுவை தான் அந்த பண்பாடு. அவை நாக்கு சுவை, செவி சுவை, கண் சுவை. இந்த சுவை அந்த பகுதிகளில் இருக்கும் பொருட்களிலிருந்தே உருவாகும். தென்னையை விலக்கி எப்படி ஒரு கேரள பண்பாட்டை கூற முடியாதோ அதுபோல பனையை விலக்கி ஒரு தமிழக பண்பாட்டை சொல்லிவிட இயலாது” என்றார்.
“பனம்பழம் தின்ன பன்றி செவியறுத்தாலும் நிக்காது” என்பது குமரி மாவட்ட பழமொழி. நாக்கு அப்படியானது. தான் சுவைத்தவற்றை பேசும், தனது சுவையினை முன்னிறுத்த விழையும். ஆகவே தான் இனிப்பான நற்செய்தியும், கசப்பான உண்மைகளும் இன்று வெளிப்படுகின்றன. உப்பு பெறாத விசயங்கள் கூட பொருட்படுத்தப்படுவது அதனால் தான். “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என்ற பழமொழியும் நமக்கு செவிச் சுவையினையே உணர்த்துகிறது. பனைமரக் காட்டு சத்தம் எவருக்கு உகந்தது எவருக்கு அச்சமூட்டக்கூடியது போன்ற உண்மையினைப் போட்டுடைப்பது. கண் தான் அழகையும் அளவுகளையும் தீர்மானிக்கும். பனையளவு தினையளவு எல்லாம், பிரம்மாண்டத்தை சுட்டி நிற்பதும், பொருட்படுத்தவியலா சிறியவைகளாய் குறிப்பிடுவதுமாகவே இருந்திருக்கிறது.
எனக்கு அவர் தென்னை குறித்து சொல்லியிருக்கக்கூடாது என தோன்றியது. ஏனென்றால், தென்னை மரத்திற்கு உலகளாவிய ஒரு அங்கீகாரம் உண்டு. ஆனால் பனைக்கு அப்படியல்ல, ஆகவே தென்னை குறித்து ஏன் மீண்டும் பேசவேண்டும் என எண்ணினேன். ஆனால், அது ஒரு எளிய ஒப்புமை. அங்கே அப்படியிருந்தால் இங்கே இப்படி இருக்கலாமே எனும் ஒரு கோட்டுச் சித்திரம். எனக்கு உண்மையிலேயே தென்னையினை வெளிப்படையாக பேசுவது பிடிக்காது, ஆனால், தேங்காய் இல்லாமல் என்னால் மூன்று வேளைகளை கடத்திவிட முடியாது. ஒரு துவையல் போதும், கஞ்சியோ, தோசையோ அல்லது சுடு சோறோ இலகுவாக ஒரு நேரத்தைக் கடத்தி விடும் ஆள் நான். ஆகவே, நமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உண்மை நிலவரங்கள் பேசப்படலாம் என்பதையும் புரிந்துகொண்டேன். நமது பாவனைகளுக்காக ஒருவர் கருத்தில் குறைக் கண்டுபிடிக்கத் தேவையில்லை என்றே முடிவுசெய்தேன்.
“யானைகள் தமிழக கலாச்சாரத்தில் பாதி பங்களிப்பை ஆற்றியவை என ஒரு முறை தியோடர் பாஸ்கரன் கூறியிருக்கிறார். நான் சொல்லுகிறேன், பனை இல்லாவிட்டால் மிச்ச பாதியும் இல்லாமல் போயிருக்கும்”. இந்த வாக்கியம் என்னை வெகுவாக கிளர்ந்தெழச் செய்த வாக்கியமாக மாறிப்போனது. இன்று நமது மண்ணில், யானைகள் ஒருவழியாக புறந்தள்ளப்பட்டுவிட்டது. அப்படியே பனைகளும் நினைவுகளிலிருந்து மறைந்துகொண்டிருக்கிறது. யானையும் பனையும் ஒரே நிலத்தினை பகிர்ந்துகொண்டிருக்குமா? இருக்கலாம். குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு சற்று அருகில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் கடமான்குழி. அதற்கு சற்று இந்தப்பக்கம் இருக்கும் இடத்தினை ஆனைக்குழி என்பார்கள். சங்க கால பெயர்களாக இவைகள் இல்லாவிட்டாலும் யானையும் வேறு பல காட்டு விலங்குகளும் ஊரைச் சுற்றி நடமாடிக்கொண்டிருந்தன என்பதை விளக்கும்.

யானைகளுக்கும் பனைக்கும் தமிழகத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், நமது கட்டிடக்கலைக்கு அச்சாணியாக நான் பார்க்கிறேன். மிகப்பெரிய தூண்கள் மற்றும் கல் தச்சு பணியில் கூட யானைகளின் பங்களிப்பும் பனையின் பங்களிப்பும் ஒரு சேர இருந்துள்ளதை நாம் பார்க்கலாம். ராஜ ராஜ சோழன் கட்டிய ஆலயத்திற்கான கற்கள் சாய்வுகள் ஏற்படுத்தி மேலேற்றப்பட்டன. யானைகள் கற்களை இழுத்துச் சென்றன எனச் சொல்லுவார்கள். ஆனால் கற்களின் கீழே பனை மரங்களை வெட்டி இடப்பட்ட உருளைகளே இப்பணியினை இலகுவாக்கின. இல்லையென்றால், பனை வாரைகளை இட்டு அதன் மீது கற்கள் புரட்டப்பட்டு இழுக்கப்பட்டிருக்கலாம். அவைகள் தண்டவாளம் போல வழுவழுப்பாக கற்களை இழுத்துச் செல்ல வாய்ப்பளித்திருக்கும்.
நமது உணவு, உறைவிடம், இசைக்கருவிகள், பயன்பாட்டு பொருட்கள் என நிகரில்லா பொருட்கள் பனையிலிருந்து கிடைக்கிறது. இனிப்பு சுவையும் கள்ளும் இல்லாத கொண்டாட்டங்கள் தமிழகத்தில் இருந்ததில்லை. அதியமான் என்னும் மன்னன் ஓளவைக்கு கள்ளை வழங்கியே வரவேற்றிருகிறான். சங்க இலக்கியம் கள்ளை கொண்டாடியிருக்கிறது என்றார்.

மொழி எப்படி ஒரு சூழலிலிருந்து எழுகிறது என்பதை அண்ணன் சுட்டிக்காட்டினார்கள். இன்று நாம் பட்டியல் என்ற பதத்தை வரிசைப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறோம். ஏன் என்றால், பழங்காலத்தில் வீடுகளுக்கு கூரை வேயும்போது பட்டியல்களை வரிசையாக அடுக்கி அதன் மீது தான் கூரை இடுவார்கள். பெரும்பாலும் குமரி மாவட்டத்தில் பட்டியல்கள் என்பவை பனை மரத்தால் செய்ததாகவே இருக்கும். அப்படியானால், ஒரு மொழிக்கான சொற்களஞ்சியத்திற்கு பல்வேறு வார்த்தைகளை கொடையளித்த தாவரங்களுள் பனை முதன்மையான ஒன்று என்றார். பனையும் பனை சார்ந்த தொழில்களும் அழியும்போது இந்த சொற்களும் அழிவை சந்திக்கிறது என்றார். அவை புழங்கும் தளங்கள் இல்லாமல் ஆகிவிடுகின்றன. என்னிடம் பனை சார்ந்த ஒரு சொற்களஞ்சியத்தை உருவாக்க கேட்டுக்கொண்டார். செய்யவேண்டிய பணிகள் பட்டியலில் அது இருக்கிறது. அப்படியே பனை குறித்து ஒரு புனைவினையும் எழுத கேட்டுக்கொண்டார். அதை என்னால் செய்ய இயலுமா எனத் தெரியவிலை.

அவர் சொல்லாமல், அவரது எழுத்துக்களை வாசிப்பதினூடாக அக்காரம் என்ற சொல்லைக் கண்டுகொண்டேன். சற்றே பாயசம் போன்ற ஒரு உணவுப் பொருள் தான் அது. அந்த வார்த்தையினை நான் அவரை வாசிக்கும்வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால், பின்னர் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணன் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களில் கன்னியாகுமரி வட்டார சொற்கள் தாராளமாக புழங்கும். பல வேளைகளில் அது இலக்கிய பின்னணியம் கொண்டதாக இருக்கும். அப்படியானால், இந்த சொல்லுக்கு இணையான குமரி மாவட்ட சொல் ஏதும் இருக்குமா எனத் தேடினேன். என்னைக் கிழர்தெழச் செய்யும் வார்த்தை ஒன்று கிடைத்தது. அக்கானி என்கிற வார்த்தையினை குமரி மாவட்டம் தாண்டி வேறு எவருமே அறிந்திருக்க மாட்டார்கள். பதனீர் என்று இன்று நாம் வழங்கும் சொல்லை சுட்ட குமரி வாழ் மக்கள் பயன்படுத்தும் சொல் இது. அக்கானியிலிருந்து தயாரிப்பதால் அக்காரம் என பெயர் பெற்றதா?
ஆலய கட்டுமானங்களில் கல் பணிகள் அமைத்திருந்தாலும், அவைகளில் கூட பட்டியலை ஒத்த அமைப்புகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மர தச்சு பணிகள் இருந்த காலத்தில் எவ்விதமான கட்டுமான பணிகள் இருந்தனவோ அவைகளை அப்படியே பிரதியெடுப்பதை சுட்டிக்காட்டியவர், பனை வாரைகளைக் கொண்டு இன்றுவரை குமரி மாவட்டத்தில் கூரை அமைப்பதையும் சுட்டிக்காட்டினார். அரிய தகவல்கள் பல ஊறி நிறைந்து வழியும் ஊற்றுக்கண் தான் அவர்.
விஷ்ணுபுரம் முழுக்க பனை உணவாக, பல்வேறு பொருட்களாக, உவமானமாக வருகிறது. ஓலைச் சிலுவை, ஆமை, வலம் இடம் போன்ற கதைகளில் பனை சார்ந்த தகவல்கள் மற்றும் வாழ்க்கைச் சூழல் அதிகமாக பேசப்பட்டிருக்கின்றது. பல வேளைகளில் பனை அவரை ஆட்கொண்டுவிட்டதோ எனும் அளவிற்கு பனை அவரது எழுத்துக்களில் சரளமாக பயணிக்கிறதை எவரும் கண்டுகொள்ளலாம்.
எனது தொப்பி அழகாயிருக்கிறது என கூறியவர். இன்னும் சிறிய பொழிகள் கொண்டு செய்யப்பட்டால் மேலும் அழகாக இருக்கும் என்றார். காந்தியத்தையும் அதன் உள்ளூர் பொருட்களின் விற்பனை அதிகரிப்பையும் குறிப்பிட்டவர், காந்தியத்தின் அழகிற்கு எதிரான போக்கையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. அழகு நிறைந்த பொருட்களே இன்று விரும்பப்படுபவைகளாகவும் விற்பனையில் முதலிடத்தைப் பெருபவைகளாகவும் இருக்கின்றன என்றார். பனை நார் கொண்டு செய்யப்படும் பொருட்கள் மிக நீண்ட உழைப்பை கொடுக்கும். ஆகவே பனை நார் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் சர்வதேச சந்தைக்கு உகந்தவைகள் எனவும் கூறினார்.
அவரது அனுபவங்கள் மட்டுமல்ல கூர்ந்த அவதானிப்புகள் கூட என்னை பிரமிக்க வைத்தன.பனையும் காளியும் குறித்த எனது தேடுதல் அவருக்கு மிகப்பெரிய உளக்கிளர்ச்சியைக் கொடுத்தது என அறிவேன். பனையும் காளியையும் இணைத்து ஒரு பயணம் செல்லுமளவிற்கு கண்டடையப்படாத ஒரு களம் அது. ஏதோ ஒரு ஆதி குடிக்கு, அரம் போன்ற கரங்கள் கொண்டதும் ஆனால் கனிந்து உணவளிப்பதுமான ஒரு தெய்வமாக பனை உருபெற்றிருக்கலாம். அதனை தனது வாழ்வின் ஒரு அனுபவத்துடன் விளக்கினார். ஒரு முறை அவரதுபெரியம்மாவுடன் பயணித்துக்கொண்டிருந்த போது, வெட்டி வீழ்த்தப்பட்ட பனையின் மூட்டில் ஒரு பட்டையை வைத்து ஒழுகிய நீரைப் பிடித்துக்கொண்டிருந்தைப் பார்த்திருக்கிறார்கள். எதற்கு எனக் கேட்டபோது பதனீரை ஒத்த சுவையுடன் நீர் பெருகி வருமென சொல்லியிருக்கிறார்கள். அப்போது அவரது பெரியம்மா கூறிய வார்த்தை ‘அம்மையில்லா, எங்க வெட்டினாலும் இனிக்கத்தான் செய்யும்”. ஆக்கிரோஷம் கொண்டது போல கரங்களை வீசி நின்றாலும் கனிவின் மொத்தவுருவாக, அன்னையாக பனை ஏற்றுக்கொள்ளப்பட்டது இப்படித்தான்.
இனிமேல் ஏன் பனை தேவை எனக் கேட்டேன். இவ்வளவுதூரம் மறக்கப்பட்ட ஒரு மரத்தையோ அல்லது அதன் பொருட்களையோ நான் மீண்டும் கொண்டு வர எத்தனிப்பது பல வேளைகளில் நகைப்புக்குரியதாகவும், பொருளற்றதாகவும் இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில், என்னை வெகுவாக தேற்றியது. அவர் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, மிக அதிக செலவு செய்து அங்குள்ள கலாச்சாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார். ஆனால் அதே சிங்கப்பூரில், இதை விட வேகமாக அங்குள்ள பண்பாட்டு அழித்தொழிப்பு ஒரு காலத்தில் வளர்ச்சியின் பெயரால் நடைபெற்றிருக்கிறது. அழிப்பது எளிது ஆனால் மீண்டும் கட்டமைப்பது என்பது எளிதானதல்ல. அழித்தவற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டுமென்றால், பேணிக்கொள்வதை விடவும் மிகவும் பொருட்செலவு பிடிக்கும் ஒன்று அது என எனக்கு விளக்கினார். இன்று நிகழும் அழிவு, நாளை நாம் எப்படி முயற்சித்தாலும் மீட்டுருவாக்கும் நிலையில் இருக்காது என்றார்.
பனை சார்ந்த பொருட்கள் எப்படி மீண்டும் வரும்? “ஒரு பயன்பாட்டு பொருள் அதன் பயன்பாட்டு நிலையிலிருந்து அழியும்போது அது முற்றாக அழிவதில்லை. அது கலாச்சாரத்தின் அடையாளமாக எஞ்சுகிறது. ஆகவே அதன் மதிப்பு பலமடங்காக கூடிவிடுகிறது” என்றார். உண்மைதான் இன்று பல பனையேறிகளை நான் பார்க்கும்போது, அந்த காலத்தில், பனங் கருப்பட்டிக்கு இத்தனை மதிப்பு இருந்ததில்லை என ஒப்புக்கொள்ளுவார்கள்.
பனை இனிமேல் தமிழகத்தில் இருக்குமா? என்றேன். இருக்கும், “பனை இருந்துகொண்டுதான் இருக்கும், ஆனால், இதே வேகத்தில் சென்றால் பனையுடனான நமது உறவு முற்றாக அழிந்துவிடுவது நிகழும்” என்றார். நமது, வாழ்க்கையில் ஒன்றின்மீதான பற்றே அதன் மதிப்பை நமக்கு அளிக்கிறது. அந்த பற்று அம்மரத்துடனான நமது உறவிலிருந்து எழுகிறது. அந்த உறவு துண்டிக்கப்படாமல் காக்கப்பட்டாலே பனை இருப்பதற்கான பெறுமதி இருக்கும் என்றார். நான் அவரது கருத்துக்களுடன் முழுமையாகவே உடன்பட்டேன். எனது பனைமரச் சாலையே, அவ்விதமான ஒரு உறவை மீட்டெழுப்பும் கூக்குரல் கொண்டது தான்.
இவ்விதமான உரையாடல்கள் என்னை செழுமைப்படுத்தின. பனையுடனான எனது பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தின. “ஒரு பண்பாடு குறித்து பேச அப்பண்பாட்டின் உள்ளிருந்து ஒருவர் வந்தாலே அதன் நுண் பக்கங்ளை வாசிக்க முடியும்” என்றார். அவ்விதமான பல படைப்பாளிகளை எனக்கு அறிமுகம் செய்தார். பல நேரங்களில் எனது கிறுக்குத்தனம் நிறைந்த பேச்சுக்களை அவரது அன்பான கனிவான பெருந்தன்மையால் இயல்பாக கடந்தார். இன்று வரை எனது குடும்பத்தில் பெருவாரியானவர்களுக்கு நான் கிறுக்கு பிடித்து அலைகிற ஒருவனாகவே காட்சியளிக்கிறேன். நான் மட்டும் போதகராக இல்லையென்று சொன்னால், குடும்ப நிகழ்வுகளுக்கு கூட எனக்கு அனுமதி இருக்காது என்பது தான் உண்மை.

வீட்டை விட்டு ஓடிப்போவது எனக்கு மிகப்பிடித்தமானது. இருந்தாலும், என்னால் ஒரு முறைக் கூட அப்படி ஓட முடிந்திருக்கவில்லை. ஆனால், பனை என்னை அவ்வித பயணங்களுக்கு இரு கரம் நீட்டி வரவேற்றது. பல பனை நாயகர்களை நான் காண வழிவகை செய்தது. பனை இல்லாத வாழ்வு எனக்கு நீரிலிருந்து பிரிக்கப்பட்ட மீனின் வாழ்வுதான். செத்தே போய்விடுவேன்.
இப்படி நான் அறிந்த தகவல்களின் மேல் நின்று எனக்கு வெளிச்சம் வீசும் நபர்கள் வெகு அரிதானவர்கள். பலருக்கும் எனது தேடுதல் என்ன என்பது தெரியாது. நிறைய பணம் பெற்று தான் இவைகளைச் செய்கிறேன் என்றே பலர் நினைத்துக்கொள்ளுகிறார்கள். அல்லது, ஏதோ கட்சியினருடன் நான் இணைத்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுகிறார்கள். எனது பயணத்தின் வீச்சை அதன் துவக்கத்திலிருந்து அணுகி அறிந்த அண்ணனால் தான் என்னை புரிந்துகொள்ள இயலும்.
அன்று மாலை நான் அ கா பெருமாள் அவர்களை சந்திக்கச் சென்றேன். நாகர்கோவிலில் என்னோடு ஜாய்சன் ஜேக்கப் அவர்களும் இணைந்துகொண்டார். அ கா பெருமாள் அவர்களையும் சற்றேரக்குறைய இருபது ஆன்டுகளாக தெரியும். பனை சார்ந்து எனது தேடுதல்களில் பங்களிப்பாற்றிய ஒரு பெருத்தகை. நாட்டார் வழக்காற்றியலில் இன்று இருக்கும் மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒருவர். எந்த வித எதிர்பார்ப்புகளுமின்றி பழகுபவர். பல தகவல்களை எளியமுறையில் எனக்கு புரியவைத்தவர். பல மணி நேரம் தொடர்ந்து என்னோடு பேசியிருக்கும் நாகர்கோவில்காரர்.

எனக்கும் அ கா பெருமாள் அவர்களுக்குமான தொடர்பு, அவரது பாவைக்கூத்து ஆய்வுகளின் வாயிலாகவே துவங்கியது. பவைக்கூத்திற்கும் பனைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா எனக் கேட்டபோது இருக்கிறது என்றார். பாவைக்கூத்து என்பது, சினிமாவிற்கு முந்தைய கலை வடிவம். வெள்ளைத் துணி திரை கட்டி, ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட பாவைகளை அசைத்து, இசையுடன் புராண கதை சொல்லுவது. பெரும்பாலும் ராமாயணமே அதன் முக்கிய கதையாக இருக்கும். புராண கதையின் நடுவே உச்சுக்குடுமியும் உழுவத்தலைபேராசிரியர் அ கா பெருமாள்யன் என இரண்டு நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் வந்து பார்வையாளர்களை குலுங்கி சிரித்து விழச் செய்யும் வகையில் அமைத்திருப்பார்கள். அவைகளில் ஒன்று, இவ்விருவரும் பனையேறியை ஏமாற்றி, பதனீர் அருந்துவதாக அமைந்திருக்கும். பனையேறிகள் அன்றும் இன்றும் ஏமாற்றப்படுவது வழக்கம் தான் போலும். அந்த காட்சி வரும்போது, ஒரு பனை மரத்தில் பனையேறி ஏறுவதுபோல் தத்ரூபமாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். நானும் ரங்கிஷும் ஒருமுறை அ கா பெருமாள் அவர்களோடு கலைமாமணி முத்துச்சந்திரன் அவர்கள் பறக்கையில் நடத்திய நிகழ்ச்சியினை கண்டு ஆவணப்படுத்தினோம்.

அரவி தமிழ் சுவடிகளை குறித்து அவர் தான் எனக்கு முதன் முதலில் சொன்னார். அந்த பயணம் என்னை காயல்பட்டணம் வரை அழைத்துச் சென்றது. என்னால் அரவித்தமிழ் சுவடிகளை காணமுடியாவிட்டாலும் அப்பயணத்தை அவர் துவக்கி வைத்ததால் அவருக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் ஐக்கிய இறையியல் கல்லூரி, பெங்களூருவில் பயின்றுகொண்டிருக்கும்போது, அங்கே கிறிஸ்தவ திருமறையில் காணப்படும் வரிகளை உள்ளடக்கிய ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேன். தமிழில் எழுதி பாதுகாக்கப்பட்ட அந்த சுவடிகள், இஸ்லாமியர்களும் இப்படி அரபியில் எழுதிய சுவடிகள் வைத்திருப்பார்களே என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது. அதற்கு விடையாகத்தான், அரவித்தமிழ் குறித்து அ கா பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அரபி லிபியினை உள்ளடக்கிய தமிழ் வார்த்தைகள் கொண்ட சுவடி தான் அரவித்தமிழ். இது, தமிழ் தெரிந்தவர்களால் வாசிக்கமுடியாது, அரபி தெரிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாதது. அப்படியானால், தமிழ் இஸ்லாமியர்களிடம் மட்டுமே புழங்கிய ஒரு இலக்கிய வடிவாக இது இருந்திருக்கிறது.
அப்படியே, தமிழ் பைபிள் ஒன்றை ஆறுமுக நாடார் வைத்திருந்தார் என அவர் கூறக்கேட்டிருக்கிறேன். மிக வசதியான அவர், அதனை ஒரு வெள்ளைக்காரருக்கு கொடுத்துவிட்டதாக கேள்விப்பட்டேன். குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய தனியார் சுவடிகளின் தொகுப்புகளை மிகப் பாதுகாப்பான இடங்களுக்கு மடைமாற்றியவரும் அவரே. இல்லையென்றால் நமது பழம்பெரும் செல்வங்கள் கண்டிப்பாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும். ஓலைச் சுவடிகளை வாசிக்கின்ற வெகு சிலருள் பேராசிரியர் அவர்களும் ஒருவர். எனக்காக சில கணக்கு ஓலைச் சுவடிகளை எடுத்து வைத்திருக்கிறதாக கூறினார். மீண்டும் சந்திக்கும்போது அவைகளை என்னிடம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.
வாச்சி என்ற தொழிற்கருவியினையும் அவர் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். வாச்சி என்பது பனை மரங்களை செதுக்கும் கோடாரி போன்ற ஒரு கருவி. கோடாரி போன்று தடிமனாகவும் மண் வெட்டி போன்று திசை மாறியும் இருக்கும். பிளந்த பனை மரங்களை செதுக்கி எடுக்கும் இக்கருவி பயன்படுத்தும் நபர்கள் குமரி மாவட்டத்தில் பத்துபேர் இருப்பார்களா என்பது சந்தேகமே. பிற்பாடு பூக்கடை என்ற பகுதியில் வாச்சி பயன்படுத்தும் ஒருவரை தேடிக்கண்டடைந்தேன்.

அ கா பெருமாள் அவர்களுக்கு எனது தேசிய அளவிலான பனை சார்ந்த தேடுதல் குறித்த பெருமிதம் உண்டு. நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையத்தில் பனை குறித்து நான் பேசவேண்டும் என தன்னிடம் நிலைய அதிகாரி கேட்டுள்ளார் என கூறினார். எனக்கு அது மகிழ்வான தகவல். பல வருடங்களாக நான் வானொலியில் பேசவேண்டும் என நினைத்ததுண்டு. ஆனால், என்னால் அப்படி ஒரு வாய்ப்பை பெற இயலவில்லை. அ கா பெருமாள் அவர்கள், எப்படியும் என்னை பேச வைப்பது என முடிவெடுத்துவிட்டார்கள். அக்டோபர் 24 ஆம் தேதி பேசலாம் என முடிவு செய்தோம். பனை நேசர்களோடு இந்த நாள் இனிதாக முடிந்ததில் எனக்கு மனநிறைவே.
அருட்பணி காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, மும்பை
malargodson@gmail.com / 9080250653
You must be logged in to post a comment.