Archive for the ‘பயணக்கட்டுரை’ Category

பனைமுறைக் காலம் 17

ஏப்ரல் 10, 2021

பனைபொருள் பலவிதம்

பால்மா ஜேக்கப் அவர்கள், என்னோடு பயணம் செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். நான் அதனை முதன் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், எனது பயணங்கள் என் போக்கில் நிகழ்பவை, எங்கும் ஒட்டிக்கொள்ளுவேன். ஆனால் ஜேக்கப் ஒரு அலுவலகத்தை நிர்வகிப்பவர், என்னோடு அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று எண்ணினேன். ஆகவே, என்னை உற்சாகப்படுத்தும்படியாக சொல்லியிருக்கலாம் என்பதால், அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் மீண்டும் மீண்டும் பயணம் குறித்து வலியுறுத்தும்போது, அவர் விளையாட்டாக பேசவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.  ஒரு மூன்று நாள் பயணம் அப்படித்தான் ஒழுங்கானது. அவர்களது வாகனத்தில் பயணிக்கலாம் என்றும், பயண செலவுகளை அவர்களே பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்கள் என்றும் சொன்னார். அது எனக்கு வரம். எனது பயணத்தின் ஆழத்தை அவர்கள் அதிமுக்கியமானதாக கருதியிருந்தால் ஒழிய, அவர்கள் இப்படியான ஒரு பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பார்களா? இருக்கமுடியாது என்று எண்ணியபோது, அவர்களின் அழைப்பிற்கு நான் தலைவணங்கினேன்.

அக்டோபர் 20 வாழ்வின் மற்றுமொரு முக்கிய நாள். ஜேக்கப் அவர்களுடன் நாங்கள் திட்டமிட்டபடி மூன்று நாள் பயணத்தை தேவிகோடு என்ற பகுதியிலிருந்து துவங்கினோம். காலை 6. 30 மணிக்கு வண்டி நாங்கள் தங்கியிருந்த ஜாஸ்மினுடைய தம்பி ஜெகன் வீட்டிற்கு முன்னால் வந்து சேர்ந்தது. நான் ஏறிக்கொண்டேன். வண்டி ஓட்ட ஜெனிஷ் (24) துணைக்கு விபின் (24) ஆகிய இருவரும் உடன் வந்தார்கள். அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை, முழுமையாக எனது பயண திட்டத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்து வந்திருந்தார்கள். சிறப்பு என்னவென்றால், நானும் எந்தவிதமான திட்டங்களையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி வழியாக நாகர்கோவில் வந்து மூன்று நாளில் பயணத்தை முடிக்கும் ஒரு கற்பனை வரைவு இருந்தது. ஆகவே செல்லும் வழியில் இருக்கும் நண்பர்களை தொடர்புகொண்டு எனது வருகையினை அறிவித்துவிட்டேன்.

ஓலை பெட்டிகள் , பாய்கள் மற்றும் வாழை நார் விற்பனை செய்யும் கடை, தோவாளை பூ சந்தை

தோவாளையைக் கடக்கும்போது, வண்டியை நிறுத்தச் சொன்னேன். தோவாளை பூ சந்தை உண்மையிலேயே உலக பிரசித்தி பெற்றது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக உலகின் பல நாடுகளுக்கு பூக்கள் சென்று சேரும். அதிகாலை பூக்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பால் அவசரம் வண்டியை விட வேகமாக செல்பவை. அவைகளில் எடுத்துச் செல்லப்படும் பூக்கள், பனை ஓலைக் கூடைகளிலும், பனை ஓலைப் பாயினை மடித்து செய்யும் கூடைகளிலுமே அனுப்புவார்கள். பனை ஓலை இயற்கைப் பொருளானதால், பூக்கள் சேதமடைவதில்லை. காலையில் வாங்கிய பூக்கள், பனை ஓலை கூடைக்குள் மாலை வரை எவ்வித வெம்மைக்கும் ஆளாகாமல் பளிச்சென்று இருக்கும். ஆகவே, அவர்கள் பூக்களை எப்படி கையாளுகிறார்கள் என பார்க்கச் சென்றோம்.

ஓலை பெட்டிகள் மற்றும் பாய்கள் இருந்க்டாலும் பிளாஸ்டிக் பெட்டிகளல் நிறைந்திருக்கும் தோவாளை பூ சந்தை

2017ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலாக தோவாளை பூ சந்தையைக் காணச் சென்றேன்.  ரங்கிஷ் என்னுடன் இருந்தான். ஒரு ஆவணப்படம், எடுக்கும் நோக்குடன் நாங்கள் அங்கே சென்றிருந்தோம். நாகர்கோவிலில், திருமணங்களுக்காகவோ அல்லது மரணசடங்குகளுக்காகவோ பூக்களை வாங்கும்போது ஓலை பெட்டியில் வைத்தே கொடுப்பார்கள். அந்த பெட்டிக்கு விலை இருக்காது. அதன் பின்னல்களும் உறுதியாக இருக்காது. இடைவெளியிட்டு, ஒற்றை பின்னல்கள் கொண்டதும், கால் முட்டளவு உயரம் கொண்டதாகவும் இருக்கும். கருப்பட்டி கொட்டானைப் போலவும் புளி கொட்டானைப்போலவும் அகலம் குறைவாகவும் பின்னப்பட்டிருக்கும் இப்பெட்டிகள் உயரம் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆகவே, பூச்சந்தையின் முக்கிய பயன்பாட்டு பொருளாக பனை ஓலை பொருட்கள் இருக்கும் என்றே சென்றோம்.

பூக்கள் பனை ஓலைப் பாய்களில் விரித்திடப்பட்டிருந்தன, பனை ஓலையில் செய்த பாய்களை சுருட்டி, அவைகளை ஒரு உருளைப் பெட்டி போல் மாற்றி பூக்களை எடுத்துச் செல்வதை பார்த்தோம். அனைத்து டெம்போக்களிலும், பனை ஓலைப் பாய்கள், பெட்டிகள் அதிகமாக இருப்பதைப் பார்த்தோம். ஆனால், பிளாஸ்டிக்கின் வரவு பெருமளவு துவங்கியிருந்தது தான் உண்மை.

உள்ளே பிளாஸ்டிக் பையில் பூ, வெளியே பனை ஓலைப் பெட்டி. தோவாளை

இம்முறைச் செல்லும்போது, பனை ஓலைகளை தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பிளாஸ்டிக் மயமாக அந்த இடம் காட்சியளித்தது.  பனையோலைக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று கைவிரித்து நிற்கின்ற தோவாளையை பார்க்கும்போது உறைந்துபோனேன். நான்கே வருடங்களில் தலைகீழ் மாற்றம். பூக்களை நம்பியே வாழும் குடும்பங்கள், பனை ஓலைகளை நம்பி வாழ்பவர்களை கைவிட்டிருப்பது தெரியவருகிறது. ஆனாலும் மரபின் தொடர்ச்சியாக ஓரிரு இடங்களில் பனை ஓலைப் பாயும் பாஉக்கள் எடுத்துச் செல்லும் பெட்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.  சோர்வுடன் தான் வெளியேறினோம்.

இதே சூழல் தான் கடற்கரையிலும் நிகழ்த்தது. பிளாஸ்டிக் பெட்டிகள், பனை ஓலைப்பெட்டிகளை அகற்றியது. நவீனம், தனது கோர முகத்துடன் உள்நுழைவதற்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறோம். இறுதியில் மிகப்பெரும் அழிவுகளை இணைந்து செய்ய நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுக்கிறோம். இன்று தோவாளையைச் சுற்றிலும் பனை மரங்கள் இருக்கின்றன. குமரி மாவட்டத்தின் மிகப்பெரும் பனங்காடு, தோவாளை அருகிலிருக்கும் ஆரல்வாய்மொழி பகுதிகளில் தான் இருக்கின்றன. ஆனால், ஓலைகளை எடுத்துக்கொடுக்கும் பனையேறிகள் இல்லை. ஆகவே பனை ஓலைக் கலைஞர்கள் அருகிவிட்டார்கள். இன்று தோவாளைக்கு வருகின்ற ஓலைப்பொருட்கள் அனைத்தும் இராமனாதபுரத்திலிருந்தே வருகிறது. இனிமேல் அதற்கும் தேவை இருக்காது போலும்.

காலை உணவை அங்கே சாப்பிடலாமா என்று எண்ணியபின், வேண்டாம் என முடிவெடுத்து தொடர்ந்து சென்றோம். சிவகாமிபுரத்தின் அருகில் வண்டி சென்றபோது, பனையேறி வெட்டும்பெருமாள் அவர்களின் நினைவு வந்தது. இங்கும் ஆவணப்படத்திற்காக நானும் ரங்கிஷும் வந்திருக்கிறோம். அக்டோபர் மாதம் ஆனபடியால், பனை ஏறத்துவங்கியிருப்பார்கள் என்ற உறுதியிருந்தது. உள்ளே கிராமத்திற்குள் சென்றபோது பனை நாரினை சைக்கிளில் கட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் ஒரு மனிதரைப் பார்த்தேன். அவரை சந்தித்து, அவருடைய எண்ணை வாங்கி உடனேயே ஜாய்சனுக்கு அனுப்பினேன். கட்டில் நார் பின்னுகிற அவருக்கு அது தேவையாக இருக்கும் என எண்ணினேன். எங்களிடமிருந்த பனை விதை பெட்டியினை அவருக்கு கொடுத்தோம்.

நார் விற்பவருக்கு பனை விதைப் பெட்டி, சிவகாமிபுரம்

அந்த தெருவில் தான் வெட்டும் பெருமாள் அவர்கள் வீடு. ஜேக்கப் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றேன். வெட்டும் பெருமாள் அண்ணனின் மனைவிக்கு என்னை நினைவிருந்தது. அங்கும் ஒரு பனை விதை பெட்டியினைக் கொடுத்தோம். பின்னர் அங்குள்ள விபரங்களை சேகரித்தோம். கருப்பட்டி காய்ச்சத் துவங்கியிருப்பதாக கூறினார்கள். மொத்தமாக எடுத்தால் கிலோவிற்கு 350 வைத்து கொடுப்பதாக சொன்னார்கள். பதனீர் வேண்டுமென்றால், காட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதையும் சொன்னார்கள்.

பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டிகள் (கலயம்), சிவகாமிபுரம்

அவர்கள் குறிப்பிட்டிருக்கும் காடு மேற்குதொடர்ச்சி மலையின் கீழே, இருந்தது. அங்கே பனங்காடுகள், நிறைந்திருக்கும். ஆனால் அந்த பகுதிகளுக்கும் அருகில் காற்றாலைகள் வந்துவிட்டன. காற்றாலைகள், மக்களை சிறிது சிறிதாக அங்குள்ள பாரம்பரிய தொழில்களிலிருந்து அப்புறப்படுத்துகின்றன. காற்றாலைக்காக வாங்கும் நிலங்களிலிருந்து கிடைக்கும் பணம், பனை குறித்து எவரையும் சிந்திக்க விடுவதில்லை.

புத்துணர்ச்சி அளிக்கும் பதனீர்

இதற்குமேல் வண்டி செல்லாது என்று தோன்றிய ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, நடக்கத்துவங்கினோம். காட்டிற்குள் நாங்கள் வழிதப்பிவிடும் அளவிற்கு பாதைகள் பிரிந்து செல்வதும், அடர்ந்தும் காணப்பட்டது. வெட்டும் பெருமாள் அண்ணன் பனையேறிக்கொண்டு வீட்டிற்கு தனது டி வி எஸ் 50ல் வந்துகொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நிறுத்தி நலம் விசாரித்து எங்களுக்கு பாதை காட்டிவிட்டு சென்றார்கள். அவர் கூறிய பாதை வழியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயணித்திருக்கிறேன். ஆனால், இன்று சரியாக நினைவில்லை. தடுமாறிக்கொண்டே சென்றோம். நாங்கள் சென்று சேர்ந்த தோட்டத்தில் பதனீர் கலயங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு கைவிடப்பட்ட வீடு இருந்தது. அங்கே வந்த சில வாலிபர்கள் தொடர்ந்து சென்றால் விடிலி வரும் என்றார்கள்.

கடலை பயிரிடப்பட்டிருக்கும் பனங்காடு, சிவகாமிபுரம்

தொடர்ந்து சென்றுகொண்டிருந்தோம். வெம்மை ஏறுகின்ற நேரம். அங்கே சென்றபோது, நாங்கள் தேடிச்சென்ற விடிலியில் ஒரு பாட்டி இருந்தார்கள். பதனீர் வேண்டும் என்றோம், கிழக்காக போங்கள் என்றார். தூரத்தில், தெரிந்த விடிலி நோக்கிச் சென்றோம். அந்த வயக்காடு முழுவதும் கடலை பயிரிட்டிருந்தார்கள். பச்சைப்பசேலென கடலை செடியும், உயர்ந்தெழுந்த பனைகளும் சூழ அந்த இடம் ஒரு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தந்தது. வேர்கடலையை மிதிக்காமல் கவனமாக கால்களைத் தூக்கிச் சென்றோம். ஒரு வழியாக அரைமணி நேரத்திற்கு பின்பு அந்த இடத்தை அடைந்தோம். 9 மணி ஆகிவிட்டிருந்தது

ஜெனிஸ் மற்றும் விபின் ஆகியோர் பதனீரை பட்டையில் ஊற்றி சுவைத்து குடிக்கின்றனர்

ஒரு விடிலியில் பெண்மணி ஒருவர் மட்டும் இருந்தார். சற்று தொலைவில் அவரது கணவர் பனையேறிக்கொண்டிருந்தார். பதனீர் வேண்டும் என்றவுடன், கருப்பட்டி காய்ச்ச ஆயத்தமான பெண்மணி, நிறுத்திவிட்டு அவரது கணவரைப் பார்த்தார். அவர், அங்கிருந்த ஒரு கலயத்தை எடுத்து அகப்பையில் பதனீரைக் கோரி ஊற்றி, பனையோலைப் பட்டையினை எடுத்து மடித்துக் கொடுத்தார்.  பவ்வியமாக இருகரத்தில் பிடித்து கலயத்திலிருந்து அவர் ஊற்றிய பதனீரை வாங்கி பருகினோம். வயிறு முட்ட குடித்தோம். நாங்கள் போதும் என்றபோது, அவர்கள் நெருப்பிட்டு கருப்பட்டி காய்ச்ச துவங்கினார்கள். அன்றைய காலை உணவு அதுவாகத்தானிருந்தது. இனிப்பான அந்த காலை உணவு அந்த நாள் முழுக்க எங்களுக்கான ஆசியினை உள்ளடக்கியிருந்தது.

காய்ச்ச தயாரான பதனீரை எங்களுக்கென எடுத்துக் கொடுக்கிறார் பனையேறி, சிவகாமிபுரம்

பணக்குடியினைத் நெருங்கும்போது பனை முறம் செய்யும் ராமகிருஷ்ணன் அவர்களை பார்க்கச் சென்றோம். அவர் வீடு மாறியிருந்தார். முன்பு தங்கியிருந்ததற்கும் அருகிலேயே வாடகைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.  அலைபேசியில் அவரை அழைத்தபோது சாலைக்கு வந்து எங்களுக்கு வழி காட்டினார். அழகான பாரம்பரிய வீடு அது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளவர்கள் முறத்தினை சுளவு என்பார்கள். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முறம் பனை நம்முடன் பயணிக்கும் ஒரு மரம் என்பதற்கான வலுவான சான்று. முறத்தினை மூங்கிலிலும் செய்வார்கள். முதலில் தோன்றியது மூங்கில் முறமா? அல்லது பனை முறமா என்கிற கேள்விகள் இன்று எஞ்சியிருந்தாலும், இவைகள் ஒரே காலகட்டத்து கண்டுபிடிப்புகள் என்றே நான் கருதுகிறேன். அந்தத்த நிலப்பரப்பில் கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரே காலகட்டத்தில் உருவாக்கிக்கொண்டனர் என்பது ஏற்புடைய வாதம் என்றே நான் கருதுகிறேன்.

முறம் செய்ய பனையோலை ஈர்க்கு கொண்டு அமைக்கப்பட்ட தட்டு

முறம் செய்கின்ற சமூகம் பெரும்பாலும் தலித் சமூகத்தினராக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பாவூர்சத்திரம் அருகிலுள்ள அர்னாபேரி என்ற ஊரில் நாடார்கள் முறம் பின்னுவதைப் பார்த்தேன். பொதுவாகவே, பழங்குடியினரும் தலித் மக்களும் செய்கின்ற பனை சார்ந்த பொருட்களும் அவைகளின் வடிவங்களும், பின்னல்களும், அவைகளை வெகு பழங்காலத்தை சார்ந்தவைகளாக பறைசாற்றிக்கொண்டிருக்கும். ராமகிருஷ்ணன் மிக நேர்த்தியாக முறங்களைச் செய்பவர். கிட்டத்தட்ட 40 வருடங்களாக முறம் செய்வதை மட்டுமே தனது வாழ்வின் ஆதாரமாக வைத்திருக்கிறார். தெற்கு வள்ளியூரில் இன்றும் அவரது உறவினர்கள் சிலர் முறம் பின்னுவதை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதைக் குறிப்பிட்டார். அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பணக்குடியில் தங்கி தனது தொழில் வாய்ப்பினை ராமகிருஷ்ணன் முன்னெடுக்கிறார். கள்ளர் மற்றும் தேவர் சமூகத்தினரின் ஒரு பிரிவான பட்டங்கட்டியார் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தேவர் சமூகத்தில் பனை ஓலைப்பொருட்கள் செய்யும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கே புது தகவல் தான். அவரது செய் நேர்த்தி, உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடையது. ஜேக்கப் அவரிடமிருந்து சில முறங்களை வாங்கிக்கொண்டார். அவரது எண்ணையும் எடுத்துக்கொண்டார்.

இராமகிருஷ்ணன், அவர் செய்த அழகிய முறத்துடன்.

மும்பையில் பொது முடக்கத்தின்போது நான் கலந்துகொண்ட ஒரே திருமணம் லெனினுடையது. மொத்தமே இருபது நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்விற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். முதல் முடக்கம் உச்சத்திலிருந்தபோது, களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுள் அவனும் ஒருவன். எஙள் திருச்சபைக்கும் சில பொருட்களை எடுட்து வந்தான். பொது முடக்கம் சற்று தளர்ந்தபோது சொந்த ஊரான நாங்குநேரிக்கு குடிபெயர்ந்தார். அவரது தந்தையும் தாயும் என்மீது அன்புகொண்டவர்கள். ஆகவே, நான் அவர்களைப் பார்த்து, ஒரு இறை மன்றாட்டை ஏறெடுத்துச் செல்ல திட்டமிட்டேன். ஜேக்கப் போகலாம் என்றார்கள். கிராமத்தில் இருந்த அவர்கள் வீட்டை நாங்கள் கண்டுபிடித்து சென்றபோது லெனினுடைய தாயார் மட்டும் இருந்தார்கள். நான் அங்கு சென்றது அவர்களுக்கு நிறைவளிப்பதாக இருந்தது. பழங்கள் கொடுத்தார்கள். அப்போதுதான் பதனீர் குடித்திருந்தபடியால், எதுவும் சாப்பிடவில்லை. ஜெபித்துவிட்டு புறப்பட்டோம். 

எங்கள் பயணம் தொடர்ந்தது. முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். காலை பதினோரு மணி போல அவர் இருந்த செய்துங்கநல்லூர் என்ற ஊருக்குச் சென்றோம். ஆச்சரியமாக, அவருடன் நான் ஏற்கனவே சந்தித்திருந்த கருங்குளம் பால்பாண்டி அவர்களும் இருந்தார்கள். எனக்கு சால்வை அணிவித்து முத்தாலக்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சனல்லூர் குறித்த புத்தகத்தை பரிசாக கொடுத்தார்கள். எனக்கு உண்மையிலேயே தலை கால் புரியவில்லை. “மும்பையிலிருந்து காட்சன் ஆதிச்சநல்லூர் வருகிறார் என்றால் அது பெரிய விஷயம் இல்லையா” என்றார். அவர் பூடகமாக எதையோ சொல்ல வருகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மிகச்சரியாக என்னவென்பதை கணிக்க முடியவிலை. சரி பொறுத்திருப்போம் பின்னர் பேசலாம் என நினைத்துக்கொண்டேன். எங்களுக்கு தேனீர் மற்றும் வடை போன்றவைகளை வாங்கி கொடுத்து உபசரித்தார்.

எரித்துபோன இடத்தில் உயிர்ப்புடன் எழுந்துநிற்கும் பனை, ஆதிச்சநல்லூர்

நாங்கள் ஆதிச்சநல்லூர் சென்றபோது, அங்கே இரண்டு காவலர்கள் இருந்தனர். அங்கே ஒரு பத்திரிகையாளர் வருகிறார் என அவர் சொன்னதால் காத்திருந்தோம். அங்கே ஒரு பத்திரிகையாளர் வருகிறார் என அவர் சொன்னதால் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் எனது நண்பரும் பத்திரிகையாளருமான காட்சன் வைஸ்லியும் இணைந்து கொண்டார். நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க அந்த பகுதியினை சுற்றிப்பார்க்க சென்றோம். சாலையிலிருந்து ஒரு மேடேறியது. அங்கு மண் வெள்ளைக்கற்களும் செம்மண்ணுமாக பற்றி இறுகியிருந்தது, தாவரங்களின் வளர்ச்சி ஏதும் இல்லை. முதுமக்கள் தாழி போன்றவை பார்க்கலாம் என்று போன எனக்கு, அவர்கள் இரண்டு குழிகளை மட்டுமே காண்பித்தார்கள். இரண்டும் அடுத்தடுத்து இருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி ஒரு அகழ்வாய்வு நடந்த இடத்தில் நிற்கிறேன். மிக சீராக வெட்டியெடுக்கப்பட்ட சதுரக் குழிகள். ஐந்து அல்லது ஆறு அடி தாழ்ச்சி இருக்கலாம். வெட்டியெடுத்த பகுதிகளிலும் சில பானை ஓடுகள் எஞ்சி இருந்தன. ஆனால் பெரிதாக ஏதும் பார்ப்பதற்கு இல்லை.

அப்போது முதலில் எந்த குழியினை வெட்டினார்கள், அவர் எவ்விதமாக இந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் போன்றவற்றை சொல்லியபடி வந்தார். மேட்டில் வேறொரு பெரிய குழி இருந்தது அங்கே ஒரு பானையினை எடுக்காமல் விட்டிருந்தனர். மறுநாள் இவை அனைத்தையும் மண் கொண்டு மூடவிருப்பதாக முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் கூறினார்கள். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே நான் எண்ணினேன். அந்த மேட்டுப்பகுதியில் நான் ஏறி வந்தபோது அவர் காண்பித்தது தான் ஆச்சரியமளிக்கும் ஒன்றாக இருந்தது. அங்கே ஒரு குழி, வெண்மையால் நிறைந்து இருந்தது, மற்ற குழிகள் போல காணப்படவில்லை. அது ஒரு சுண்ணாம்பு காளவாய் போல இருந்தது. எனது மனதிற்குள் பல்வேறு எண்ணங்கள் ஓடத்துவங்கியது.

முத்தாலக்குறிச்சி காமராசு ஒரு போராளி. சுமார் 25 வருடங்களாக இப்பகுதி குறித்த ஆய்வுகளில் தன்னார்வலராக ஈடுபடுத்திக்கொண்டவர். கீழடி குறித்த பேச்சுக்கள் மேலெழுந்தபோது ஆதிச்சநல்லூர், முக்கியத்துவம் பெறாமல் இருந்தது கண்டு போராடியவர் இவர். 130 ஆண்டுகளாக அவ்வப்போது திறந்து மூடப்பட்டுவரும் ஆதிச்சநல்லூர், இங்கே தமிழர்களது நாகரீகத்தை வெளிப்படுத்தும் ஒரு அரும்பெரும் சுரங்கம் என்பதை கண்ணுற்றதால், அதனை தனது வாழ்நாள் பணியாக எடுத்து பொதுவெளியில் பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். தென் மாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஜாதியம் தலை தூக்கி இருக்கையில், இங்கே கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், எந்த சாதியினரைக் குறிப்பதாக இருக்கிறது என்னும் எண்ணம் மேலோங்கியிருப்பதால், ஆய்வாளர்களே சற்று நிதானமாகத்தான் களமாடுகிறார்கள். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலத்தில் இன்றுபோல் சாதிய அமைப்பு இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர். அவ்வகையில், தமிழக அரசு தற்போது அவருக்கு வழங்கிய விருது என்பது, அவரது போராட்ட குணத்திற்கும், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அவர் காட்டிய தன் முனைப்பிற்கும் அச்சாரமானது.  

முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களிடம் அந்த சுண்ணாம்பு காளவாய் குறித்து பேச்செடுத்தேன். அப்போது அவர் அது ஒரு உலையாக இருக்கக்கூடும் என்றார். இரும்பு உருக்க பயன்பட்ட இடமாக இருக்கலாம், அல்லது, பானைகள் சுட்டெடுக்க பயன்பட்டிருக்கலாம், ஏன் சுண்ணாம்பு காளவாயாகவும் இருக்கலாம் என்றார். பானைகள் சுட்டெடுப்பதற்கான காரணம் இருக்கிறது. எங்கும் பானைகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, பானைகள் பயன்பாடு மிக அதிகமாக இருந்திருக்கும் சூழலில் இந்த இடம், சூளையாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் சுமார் 3800 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.  இந்த நிலத்தை 1876ஆம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி ஆட்சியாளரும், மாவட்ட பொறியியலாளரும், மற்றும் முனைவர். ஜாகர் (Dr. Jagor) ஆகிய மூவரும் இணைந்து தோண்டத் துவங்கினர். பல பானையோடுகளும், இரும்பாலான ஆயுதங்களும், கருவிகளும் கண்டடையப்பட்டன. அலெக்சாண்டர் ரே (Alexander Rey) என்ற ஆய்வாளரும் 1889 – 1905 வரை இப்பகுதிகளில் தனது தேடுதல்களை நிகழ்த்தி, ஜாகர் அவர்கள் கண்டுபிடித்ததை ஒத்த பொருட்களை ஆவணப்படுத்துகிறார்.   ரே ஆவணப்படுத்துகையில், வெண்கலம் மற்றும் தங்கத்தாலான பொருட்களும் பட்டியலில் இடம் பெறுகின்றன என கூறப்படுகிறது. ஆகவே வெண்கலத்தை உருக்கும் உலையாகவோ, இரும்பை உருக்கும் உலையாகவோ கூட இருந்திருக்கும் வாய்ப்புள்ளது.

ஆதிச்சநல்லூரில் நான் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் வாசித்த்ச்வைகளையும் கோர்த்து பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட சில யூகங்களே இனிமேல் நான் கூற முற்படுபவை. இப்பகுதிகளில் எங்குமே பிரம்மாண்ட செங்கல் கட்டுமானங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இவர்கள் சுண்ணாம்பு காளவாய் வைத்திருந்தால், அவைகளை செங்கல் கட்டுமானங்களுக்கு பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் இல்லாமலாகிறது. வேறு எங்குமே சுண்ணாம்பு பயன்பாடு குறித்த தகவல்கள் இல்லை. ஆகையினால், இங்கே நீற்றி எடுக்கப்பட்ட சுண்ணாம்பு, வெற்றிலை சுவைப்பதற்கும், பனை ஏறிகள் பனையில் இட்டிருக்கும் கலசத்தில் தடவுவதற்கும் பயன்படுத்தியிருக்கலாமே என்கிற எண்ணமே மேலோங்குகிறது.

இதுவரை கிடைத்த பெரும்பாலான பானைகள் தாழி வகைகள் என நாம் அங்கு கிடைத்த எலும்புகளை வைத்து முடிவுக்கு வர இயலும். அத்தகைய பிரம்மாண்டமான பானைகள் செய்ய முடிந்த ஒரு சமூகத்தில் எளிய கலயங்கள் செய்வது கடினமாகவா இருந்திருக்கும்? ஆக, பனையேறிகளின் முக்கிய தேவையான கலயங்கள் அங்கே இருந்திருப்பதும் உறுதியாகிறது.

அவர்கள் வாழ்ந்த வீடுகள் எப்படி இருந்தன என இதுவரை எவ்வித சான்றுகளும் இல்லாதபோது, பனை மரத்தடிகளும் ஓலைகளும் கொண்டு தங்கள் வீடுகளை அவர்கள் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாம் யூகிக்க இடமிருக்கிறது. செம்மண் குழைத்தும் வீடுகளைக் கட்டியிருக்கலாம். கீழடியைப் போல செங்கல் கட்டுமானங்கள் இனிமேல் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எப்படியிருந்தாலும், பனை ஓலைகளாலான கூரைகள் அமைத்திருக்க வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அங்கு கிடைத்த இரும்பு பொருட்களை கிழ்கண்ட முறைகளில் வைகைப்படுத்துகிறார்கள். கத்திகள், குறுவாட்கள் மற்றும் கைக்கோடாரிகள் என ரே குறிப்பிடுகிறார். இரும்பு பொருட்கள் வேட்டையினை சுட்டிக்காட்டவும், போர் மற்றும் பயன்பாட்டு தொழிற்கருவிகளாகவும் இருப்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அவ்வகையிலும், பனையேறிகள் பயன்படுத்தும் பாளை அரிவாள் பயன்பாட்டில் இருந்திருக்குமென நாம் யூகிக்க இடமுள்ளது.

எனது ஆதிச்சநல்லூர் பயணம் குறித்த செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆதிச்சநல்லூர் பயணமும், முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் தொடர்பும், நண்பர் வைசிலினைப் பார்த்தது மிகப்பெரும் உளக்கிளர்ச்சியைப் எனக்களித்தது. காட்சன் ஆதிச்சநல்லூர் வருகிறார் என்றால், பனை சார்ந்து ஏதோ தேடி வருகிறார் என்பதே முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் கூற்று என்பதை நான் புரிந்துகொண்டேன். அது உண்மையும் கூட. பனையுடன் இணைந்த வாழ்வையே நான் தேடிச்செல்லுகிறேன். எனது எண்ணங்கள் யூகங்கள் மற்றும் பயண நோக்கம் குறித்து நண்பர் காட்சன் வைஸ்லியுடன் விரிவாக விவாதித்தேன்.

நாங்கள் அங்கிருந்து பால்பாண்டி அவர்கள் வீட்டிற்கு சென்றோம். நான் ஏற்கனவே அங்கு சமீபத்தில் சென்றிருந்தாலும், நண்பர்களுக்கு அவ்விடத்தை காண்பிப்பது சரியாயிருக்கும் என்று அழைத்துச் சென்றேன். ஜெனிஸ் மற்றும் விபின் ஆகியோர், எங்கள் பயணத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் பெருமளவில் உணர்வெழிச்சுக்குள்ளானது போல் தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் கூர்ந்து கவனித்து வந்தார்கள். பனை சார்ந்து அவர்களுக்கு தெரியாதவற்றை எல்லாம் இப்பயணம் அவர்களுக்கு அறிமுகம் செய்யும் என்று ஜேக்கப் அறிந்திருந்தார்கள். 

பனை தூண்கள், ஸ்ரீ வைகுண்டம்

ஸ்ரீ வைகுண்டம் நோக்கி நாங்கள் வந்து சேர்ந்தபோது மதியம் இரண்டு தாண்டிவிட்டது. நாங்கள் கடந்து சென்ற ஒரு இந்து கோவிலின் மூடிய வாசலுக்கு வெளியே நான்கு தூண்கள் கருப்பாக எழுந்து உயர்ந்து நின்றன. அவைகளின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்ததால், வண்டியை நிறுத்தச் சொன்னேன். சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு தூண் போல காணப்பட்டது. அதன் அருகில் சென்று பார்த்தபோது, முழு பனை மரத்தினை அப்படியே செதுக்கி எடுத்த தூண் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டாம் முறியிலிருந்து உருவாக்கப்பட்ட தூண்கள்.  இதற்கு ஒப்பான தூண்களை நான் புத்தளம் சி எஸ் ஐ தேவாலயத்தில் பார்த்திருக்கிறேன். அவைகள் ஆலயத்திற்குள், வெயில் மழை காற்று என எதுவுமே பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பாக நிற்கும் பளபளப்பான தூண்கள். இருநூறு வருடங்களாக அப்படி இருப்பது வியப்பொன்றுமில்லை. ஆனால் இங்கே, நூறாண்டுகள் கடந்து நிற்கும் இந்த பனை மரம் நமது கட்டிடக் கலைகளின் மரபினை நமக்கு சொல்லும் ஒரு தடயமாக இருக்கிறது. குறிப்பாக கறையான் ஏறாமல் இருக்க கீழே கல் வைத்துவிட்டு, தூண் சரியாமல் இருக்கவும் கல் ஒன்று கீழே பனையின் கால் மாட்டில் படி எடுத்து அதனுள் சொருகப்பட்டிருந்தது. இயற்கையை மிக குறைவாக வடிவம் மாற்றி செய்யும் கட்டுமான கலை.

வர்ண முறம், ஸ்ரீ வைகுண்டம்

பேருந்து நிறுத்தத்தின் அருகில் உணவு உண்ண சென்றோம். செல்லும் வழியில், ஒரு பனை ஓலை பொருட்களை விற்கும் கடையினைப் பார்த்து அங்கு சென்று பொருட்களை வாங்கினோம். குறிப்பாக, வர்ணம் தீட்டிய பனை முறம் அங்கு இருந்தது. குமரி மவட்டத்தில் செய்யும் அரிவட்டியினை ஒத்த பெட்டிகள் வர்ணமிடப்பட்டிருந்தன. அருகில் யாரேனும் பனையோலைப் பொருட்கள் செய்பவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டோம், அருகில் கணியர் தெரு ஒன்று இருக்கிறது அங்கே சென்றால் பனை ஓலைப் பொருட்கள் செய்பவர்களைப் பார்க்கலாம் என்றார். சாப்பிட்டுவிட்டு அந்த தெரு நோக்கி சென்றோம்.

தமிழகத்தின் பல்வேறு ஜாதியினர் பனையுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். கணியர் என்ற சாதியினர் பனையுடன் தொடர்புடயவர்கள் என்ற தகவலை இங்கேதான் முதன் முதலாக பெறுகிறேன். ஆகவே அவர்கள் எப்படியான வாழ்க்கை முறையினைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் செய்யும் பனை ஓலைப் பொருட்களின் வடிவங்களையும் காண வெகுவாய் ஆசைப்பட்டேன். ஜேக்கப் அவர்கள் குமரி மாவட்டத்திலும் கணியர் உள்ளனர் என்றார்.

தெருவின் முனையில் கணியர் தெரு என்று எழுதப்பட்டிருந்தது. ஆகவே, சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறோம் என உறுதி செய்துகொண்டோம். அங்கே பெண்கள் கும்பலாக கூடியிருந்த இடத்தில், ஓலைப் பொருளினைச் செய்பவர்களைத் தேடி வந்தோம் என்றேன். கடைசி வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்கள். குறிப்பிட்ட அந்த வீடு ஒரு எளிய குடிசை. எங்களை வீட்டிற்குள் அனுமதித்தனர். உள்ளே சென்று அந்த பெண்மணியுடன் உரையாடினோம். வீட்டிற்குள், ஓலைகள் வரிசையாக கீறப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பழைய பொருட்கள் ஏதேனும் இருக்குமா என்று கேட்டபோது, வெற்றிலைப் பெட்டி இருக்கிறது என்றார்கள். சுமார் இருபது அல்லது முப்பது வருட பழைமையான ஒரு பெட்டியை எடுத்து வந்தார்கள். 

அழகிய வெற்றிலைப்பெட்டியினை செய்யும் திறன் பெற்ற கலைஞர், ஸ்ரீ வைகுண்டம்

பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், அந்த வடிவம் குமரி மாவட்டத்தில் காணப்படும் அரிவட்டிக்கு இணையானது. குமரி மாவட்டத்தில் உத்தரங்கோடு என்ற பகுதியில் இவ்வித அரிவட்டி செய்யும் சாம்பவர்கள் வாழ்கிறார்கள். எனது பனை சார்ந்த தேடுதல் துவங்கிய இடம் அது. அந்த பின்னல் முறம் பின்னுவதற்கு அடிப்படையானது. அரிவட்டியும் முறமும், பனை ஈர்க்கிலால் செய்யப்பட்டவைகள். ஆனால், எங்கும் அரிவட்டியினை மூடி இட்டு நான் பார்த்ததில்லை. அல்லது, இவ்வகை பின்னல்கள் கொண்ட பெட்டிகளுக்கு என் வாழ்நாளில் இதுவரை மூடி இட்டு நான் பார்க்கவில்லை. ஆகவே, இவ்வகை பின்னல் கணியர் சமூகத்துடன் இணைந்து இருக்கும் ஒரு முறையாக காணப்பட்டது. ஜேக்கப் பால்மாவிற்கு தேவையான பொருட்களுக்கு முன்பணம் கொடுத்தார்.  நான் அந்த பழைய வெற்றிலைப் பெட்டியினை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

நாங்கள் அங்கிருந்து பண்ணைவிளை நோக்கிச் சென்றோம். அங்கே மொர்தேகாயுடைய மாமா தானியேல் நாடார் அவர்கள் இருந்தார்கள். நான் அவரைத் தேடி சென்றபோது, வழியிலேயே ஒரு டீக்கடை முன்பு அவர் இருந்ததைப் பார்த்துவிட்டேன். எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் வாங்கி வைத்திருந்த கருப்பட்டி சாப்பிடக் கொடுத்தார். எங்கள் தேவைக்காக இரண்டு கிலோ கருப்பட்டி வாங்கி வந்தேன். பனை இரவு தானியேல் தாத்தா தோட்டத்தில் தான் நடைபெற்றது.  அவரது மீசையும், நடையும், நறுக்கென்ற சத்தமான பேச்சும் எல்லாம் ஒரு கதாநாயகனுக்கு உரியது.

அன்று இரவு நாங்கள் எங்காவது தங்கவேண்டும். ஆகவே போதகர் ஜாண் சாமுவேல் அவர்களை அழைத்தேன். “கண்டிப்பா வாங்கையா” என்றார்கள். ஜாண் சாமுவேல் போதகர் அவர்கள், 2019 ஆம் ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று தனது பகுதியிலுள்ள பனையேறிகளை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்தது செய்தியாக வந்தது. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து அவரை நான் தொடர்புகொண்டேன். நான் பயின்ற ஐக்கிய இறையியல் கல்லூரி பெங்களூருவில் அவரும் பயின்றவர், ஆகவே என்னைக்குறித்து அறிந்திருக்கிறார். எனது பணிகள் அவருக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. ஆகவே, பனை சார்ந்த மக்களுக்காக பல பணிகளை முன்னெடுத்தவர். எனக்குப்பின்பு, பனை சார்ந்த முன்னெடுப்புகளை இயல்பாக கையாளும் ஒரே போதகர் அவர் மட்டும்தான். அவர் இருக்கும் இடங்களில் பனை ஓலை பின்னும் மக்கள் இருப்பதால் மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் கரிசனத்தாலும், இயல்பாக விழிம்புநிலை மக்கள் மீது கொண்ட பாரத்தால், அவர் இவ்விதமான முயற்சிகளை எடுக்கிறார் என்பதை நான் அறிவேன்.

கடந்த 2020ஆம் வருடம், பனை ஓலையில், உண்டியல் செய்யும் திட்டத்தைக் குறித்து பேசினோம். பொதுவாக கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின்போது, திருச்சபையின் மக்களிடம் உண்டியல் வழங்குவது வழக்கம். புலால் உணவைக் குறைத்து, பூச்சூடாமல், உண்ணா நோன்பு கடைபிடித்து சேகரிக்கும் பணம், திருச்சபையின் அருகிலிருக்கும் அல்லது திருச்சபையால் சுட்டிக்காட்டப்படும் ஏழைகளுக்கு வழங்கப்படும். பொதுவாக குயவர்களிடம் இவ்வித உண்டியல் வாங்குவது வழக்கம். காலப்போக்கில், தகரத்திலும், இன்று பிளாஸ்டிக்கிலும், இவ்வித உண்டியல் வழங்கப்படுகிறது. எனது அறிவில், பனையோலையில் எவருமே உண்டியல் செய்ததில்லை. ஆகவே, அங்குள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து ஊண்டியல் செய்ய இயலுமா எனக் கேட்டேன். “பார்க்கிறேன் அய்யா” என்றார்கள். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு, வெற்றிகரமாக அவர்கள் எங்களுக்கு, உண்டியலை செய்து அனுப்பினார்கள். உலகிலேயே முதன் முறையாக திருச்சபை பனையோலையில் உண்டியலை செய்தது பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

பனையோலை உண்டியல் குறித்த செய்தி

அப்போது, மீண்டும் ஒரு பணியினை அவருக்கு நான் கொடுத்தேன். போதகர்கள் பயன்படுத்தும் “ஸ்டோல்” என்று அழைக்கப்படுகிற ஆயர் தோள் பட்டை பனை ஓலையில் செய்தால், குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்தலாமே என்றேன். “முயற்சிக்கிறேன் அய்யா” என்றார்கள். 2020 ஆம் ஆண்டு தவக்காலம் துவங்கும்போது இருந்த சூழல் அப்படியே மாறியது. இந்தியா முழுக்க நோய் தொற்றின் நிமித்தமாக ஆலயங்கள் வழிப்பாடுகள் அனைத்தும் முடங்கின. ஆகவே, அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இவ்வருடம், அதனை குறித்து சற்று தாமதமாக திட்டமிட்டோம். அவரது திருச்சபையைச் சார்ந்த நேசம்மாள் என்பவர், இவ்வித அழகிய மேலங்கியினை செய்ய ஒப்புக்கொண்டார். வசதியான பின்னணியத்தை கொண்ட அப்பெண்மணி, இதனை ஒரு அற்பணிப்புடன் செய்தார். 2021 குருத்தோலை ஞாயிறு அன்று, போதகர் ஜாண் சாமுவேல் அவர்கள், அந்த மேலங்கியினை முதன் முறையாக உலகிற்கு அறிமுகம் செய்தார். அவர் எனக்கு அனுப்பியது குருத்தோலை ஞாயிறு அன்று எனக்கு கிடைக்காததால், உயிர்ப்பின் ஞாயிறு அன்று அதனை நான் பயன்படுத்தினேன்.

திருமதி நேசம்மாள் அவர்கள் செய்து கொடுத்த ஆயர் தோள் பட்டையுடன் நான்

பனை ஓலைகளை சமயம் சார்ந்து பயன்படுத்துவது முக்கிய குறியீடாக அமையும் என்பது எனது எண்ணம். 2014 ஆம் ஆண்டு நான் அகமதாபாத்தில் இருக்கும்போது, என்னோடு பணி புரியும் மும்பை தமிழ் போதகர்கள் அனைவருக்கும் என் கையால் செயப்பட்ட பனை ஓலைக் கழுத்துப்பட்டைகளை அனுப்பினேன். போதகர்களின் உடை அமைப்பு என்பது, வட்ட காலர் வைத்த கறுப்பு சட்டையும், அதற்குள் ஒரு வெள்ளை காலரை நுழைத்து அணிவதுதான். எங்கு பயணித்தாலும், இது அவர்களை அடையாளம் காட்டும் ஒன்றாக அமையும். அங்கி போட்டுக்கொண்டு செல்ல தேவையில்லை. அங்கி என்பது, திருச்சபை வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் மட்டுமே என்ற வரையறை இருந்தது. குருத்தோலை ஞாயிறுக்காக நான் கொடுத்த கழுத்துப் பட்டைகளை எத்தனை போதகர்கள் அணிந்தனரோ நான் அறியேன், ஆனால், அதன் நீட்சியாக இப்படி ஒரு மேலங்கி வந்து அமையும் என நான் அப்போது நினைக்கவில்லை.

போதகர் ஜாண் சாமுவேல், நேசம்மாள் அவர்கள் செய்து கொடுத்த ஆயர் தோள் பட்டையுடன்

அன்று இரவு அவரது வீட்டிற்குச் சென்றோம். எங்களுக்காக ஒரு அறையை ஒதுக்கித் தந்திருந்தார்கள். அவரை சந்திக்க அன்று மன்னா செல்வகுமார் என்கிற கிறிஸ்தவ வரலாற்றைத் தேடுகின்ற ஆய்வாளர் ஒருவர் தன்னார்வலர்களுடன் வந்திருந்தார். அன்று இணைந்து பாடல் பாடி ஜெபித்து எங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருந்த விருந்தினை சுவைத்தோம். மிக சிறப்பான ஒழுங்குகளைச் போதகர் அவர்கள் செய்திருந்தார்கள்.  அவரது தனிப்பட்ட சேகரிப்பில் 500 வேதாகமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பழங்கால பொருட்களும் இருந்தன. வெகு உற்சாகமாக் பேசினோம். ஜேக்கப் எங்கள் பேச்சில் இணைந்துகொண்டார். பனை மரங்கள் எவ்வாறெல்லாம் நமது வாழ்வில் இணைந்திருக்கின்றன எனக் கூறும் ஒற்றை நாளாக அது இருந்தது.

என்னுடன் மன்னா செல்வகுமார், போதகர் ஜாண் சாமுவேல் மற்றும் அவரது துணைவியார்

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 14

மார்ச் 29, 2021

நார்முடி காலம்

அக்டோபர் 17 ஆம் தேதி மித்திரனுடைய பிறந்தநாள். மிடாலக்காட்டில் எங்களோடு வாடகை வீட்டில் இருந்தவர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்தோம். அங்கே ஏகப்பட்ட சிறுவர்கள் உண்டு. நாங்கள் வாடைகை இருந்த வீட்டிற்கு கீழே தானே பாத்திரங்கள் கிடைக்கும் ஆகவே, அங்கிருந்து பாத்திரம் வாங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டோம். பொதுவாக நாங்கள் பிறந்தநாள் கேக் வாங்குவதில்லை. கடந்த முறையும் இங்கிருக்கும்போது மித்திரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு எல்லா குழந்தைகளுக்கும் நுங்கு வெட்டிக்கொடுத்தோம். இம்முறை, மித்திரனுடைய ஜஸ்டின் மாமா கேக் வாங்கி கொண்டாடினார்கள். நாமும் தான் எத்தனை நாளைக்கு சாதாரண கேக்கிற்கு எதிராக கொள்கை என கொடிபிடிப்பது?

மிடாலக்காட்டில் தான் நான் போவாஸ் பனையேறியை சந்தித்தேன். ஆரோனும் மித்திரனும் சந்தித்த முதல் பனையேறி அவர் தான். அறுபது வயதை தொடும் மனிதர். சலிப்பில்லாமல் இன்றும் பனை ஏறுகிறார். அவர் மிடாலக்காட்டில் இருப்பதால் அவரை சந்திக்கச் சென்றேன்.

போவாஸ் அவர்களுடன் மித்திரனும் ஆரோனும்

மிடாலக்காட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு கத்தோலிக்கத் ஆலயம் இருந்தது. பாதிரியார் பேசுவது அதிகாலை வேளையில் எங்கள் வீடு வரை கேட்கும். ஒரு நாள் நான் அங்கே சென்று அந்த பாதிரியாரை சந்தித்தேன். பாதிரியார் சகாய பெலிக்ஸ் இளவயதுடையவர். ஓவியம் வரையும் திறன் கொண்டவர். எனது பனை சார்ந்த முன்னெடுப்புகளை செவிமடுத்து கேட்டார். அவரது தந்தையும் ஒரு பனையேறி தான் என்றார். நமது திருச்சபையில் உள்ளவர்களுக்கு ஒருநாள் பனை சார்ந்த விழிப்புணர்வு அளிக்கவேண்டும். அதற்காக ஒருநாள் பனம்பழத்தினை மக்களுக்கு உண்ணக் கொடுப்போமே என்றேன். செய்யலாமே என்றார்.

மித்திரன் சேகரித்த மிகப்பெரிய பனம்பழம்

எனது பிள்ளைகள் ஆரோன் மற்றும் மித்திரன் உதவியுடன், பனம் பழங்களைத் தேடி எடுத்து குளிர் சாதனப்பெட்டியில் இட்டுவைத்தேன். மூன்று நாட்கள் தேடுக்கையில் கிட்டத்தட்ட 18 பழங்களே கிடைத்தன. போவாஸ் அவர்கள் தனது அறிவாளை எடுத்துக்கொண்டு உதவிக்கு வந்தார். மிக கூர்மையான அறிவாள் இருந்தாலே பனம்பழங்களை சரியாக பாளம் பாளமாக கீறி எடுக்க இயலும். திருச்சபையினருக்கு 18 பழங்கள் போதாது என்று போவாஸ் அவர்கள் கூறினார்கள். “இது என்ன எக்காட்டுகதுக்கா” என சிரித்தார். ஆனால் கை வலிக்க அத்தனை பழங்களையும் அவரே சீவியெடுத்து கொடுத்தார். அந்த நேர்த்தி, அரிவாள் பிடிக்கும் கைகளுக்க்கு மட்டுமே உரித்தானது. அன்று இரவே பானையின் அடியில் பனம்பழ நெட்டுகளைப் போட்டு சீவிய பனம்பழங்களை அடுக்கி மேலே சிறிது கருப்பட்டி போட்டு வேகவைத்தோம். 

போவாஸ் பனம் பழங்களை சீவுகிறார்

மறுநாள் காலை எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய கூட்டம் திருச்சபையின் மைதானத்தில் திரண்டது. ஒரு மிகப்பெரிய காகிதத்தில் பனை என எழுதி அதையே ஒரு பனை மரத்தில் பனையேறி இருப்பது போன்ற ஒவியமாக பாதிரியார் பெலிக்ஸ் மாற்றினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திவிட்டு பனை மரத்தினை காக்கும் அவசியத்தை குறிப்புணர்த்தினார். அனைவரும் வரிசையில் வந்து வாங்கிச் செல்லுங்கள் என்றார். ஐந்தே நிமிடத்தில் அத்தனையும் காலியாகின. பானையில் தேங்கியிருந்த நீரினை சுவைக்க அவ்வளவு போட்டி நடைபெற்றது. இப்படியான ஒரு நிகழ்வு இதுவரை எந்த திருச்சபையிலும் நடந்திருக்காது என்றே எண்ணுகிறேன். பனம்பழ சுவையானது இன்றளவில் மறந்து போய்விட்ட ஒன்றாகவே இருக்கிறது.

பாதிரியார் சகாய பெலிக்ஸ்

போவாஸ் அன்று ஆலயத்திற்கு வரவில்லை. எப்போதுமே அப்படித்தான், பனையேறிகள் ஆலயத்திற்குப் போவதில்லை. நான் தான் அவரை முதன்முறையாக  அறிமுகப்படுத்தினேன் என்று பாதிரியார் கூறினார். ஆனால் அவரது மனைவி அங்கு நிகழ்ந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பொதுவாக அனைவருக்கும் தேவையான அளவு பானம்பழங்கள் வேண்டுமென்றால், ஒரு கோயிலுக்கு குறைந்தபட்சம் பத்து பனையேறிகளாவது இருக்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுமா என்பது சந்தேகமே. 

பனம்பழங்களை உண்ண முண்டியடிக்கும் சிறுவர்கள்

போவாஸ் அவர்களை நான் சந்தித்து பனை விதைகளைக் கொடுத்தேன். நாங்கள் இருவரும் ஒரு சில தருணங்களில் பனை விதைகளை இணைந்தே சேகரித்திருக்கிறோம். மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார். இந்த முறையும் பனையேற துவங்கியிருகிறார். எனது தொப்பிக்கு சில பனை நார்கள் தேவை உரித்து கொடுக்க இயலுமா என்று கேட்டேன். மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன் என்றார். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட இயற்கை இழை நாற்காலி

அன்று மதியம் ஜாய்சன் ஜேக்கப் என்ற பனை நார் கட்டில் பின்னும் நண்பர் என்னைத் தொடர்புகொண்டார். நேரம் இருப்பின் வாருங்கள் என்றார். எனது வாகனத்தை நாகர்கோவிலில் வைத்துவிட்டு, அவருடைய இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டேன். எனக்கு பனை நார் நார்க்காலிகள் மீது பெரு விருப்பம் உண்டு. பனை நார் நார்காலிகள் என்பவை பல்வேறு வடிவங்களில் இருந்திருக்கின்றன. சாய்வு நார்காலியாக, கைபிடியுள்ள நாற்காலியாக, முக்காலியாக, சுழல் நாற்காலியாக என அவைகள் பல வடிவங்களைக் கொண்டிருக்கிண்றன. சிறு வயதில், பேருந்து மற்றும் லாறிகளில் ஓட்டுனர் இருக்கைகள் பனை நார் கொண்டே அமைக்கப்பட்டிருந்தன. வாகன ஓட்டிகளுக்கு சூடு தாக்காமல் இருக்க இவ்வகை நார் போட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. பிற்பாடு அவைகள் பிளாஸ்டிக் இழைகளாக மாறி தற்போது குஷன் நாற்காலிகளாக மாறிவிட்டன.   

பனைநார் கொண்டு செய்யப்பட்ட கையடக்க பெட்டி – நூறு வருட பழைமையானது

பனை நார் கொண்டு அரசு பேருந்து ஓட்டுனர் இருக்கையினை அமைக்கவேண்டும் என்று ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டால், விழுந்துகிடக்கும் பனையேறிகள் பலர் வாழ்வுபெறுவார்கள். ஆனால், அரசு எவ்வகையிலும் இவ்வித எளியகலைஞர்களை பொருட்டாக கொள்ளுவதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு பனை நாரால் செய்யப்பட்ட ஒரு சாய்வு இருக்கை வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அப்படி ஒரு சாய்வு இருக்கை அமைக்கவேண்டுமென்றால் குறைத்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் ஆகிவிடும். இப்போது அவ்வளவு செலவளிக்க இயலாது, ஆகவே, இன்னும் சில வருடங்கள் கழித்து வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலில் அதனை இணைத்துள்ளேன்.

மருந்துவாழ் மலையின் அருகிலிருந்து நாகர்கோவில் நோக்கி எடுத்த புகைப்படம்

ஜாய்சன் அன்று எனக்கு மருந்துவாழ் மலையினை சுற்றிக்காட்டினார். மருந்துவாழ் மலை, பனை என்ற அரணால் சூழப்பட்ட மலை என்பதை அன்று தான் நான் கண்டுகொண்டேன். முழு மலையையும் சுற்றி வந்த போது, இத்தகைய அழகினை எப்படி தவறவிட்டேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வழுக்கம்பாறையை அடுத்த பொற்றையடியை நெருங்குகையில் மருந்துவாழ் மலை நமது கண்களுக்குத் தெரியும். இராமரின் தம்பி, இலக்குவன் இலங்கையில் அடிபட்டு கிடக்கும்போது, அனுமனிடம் இமய மலையிலிருந்து சஞ்சீவி மூலிகையினை எடுத்துவர பணிக்கிறார்கள். இமயம் சென்ற அனுமனால் மிகச்சரியாக சஞ்சீவி மூலிகையினைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, முழு மலையையும் அப்படியே தூக்கி இலங்கைக்கு எடுத்து செல்லுகிறார். செல்லும் வழியில் அவரது கரத்திலிருந்து விழுந்த சிறு துண்டு தான் மருந்துவாழ் மலை என வாய்மொழி கதையாக கூறுகிறார்கள். மிக முக்கிய மூலிகைகள் இங்கே கிடைப்பதால், வனத்துறையின் கட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது.

இனிய மாலை நேர மருந்துவாழ் மலையின் அடிவாரம்

இது மருந்துவாழ் மலை என்றால் அதனைச் சுற்றி நிற்பது அனைத்துமே மருந்துவாழ் பனை என்றே கொள்ள முடியும். அனைத்து வகையான சித்த மருத்துவத்திலும், இனிப்பு சேர்மானமாக கருப்பட்டியும், கற்கண்டும் இணைவதை நாம் கண்டுகொள்ள முடியும். ஒத்தை மரக் கள்ளு, மருந்துகள் இட்ட கிழிகளில் ஊறிய கள், போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். மருந்துவாழ் மலை உச்சியில் கூட ஒரு பனை தனியாக நின்றது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தை கொண்ட சிகரம் உள்ள இம்மலையில், கண்டிப்பாக 1500 அடிகளுக்கு மேல் தான் இப்பனை நின்றிருக்கிறது. இது சராசரி பனை மரத்தின் வாழ்விடத்தை விட உயரமானது. ஆகவே பனையால் 1500 அடிகளுக்கு மேலும் தாக்குப்பிடிக்கும் தன்மை இருப்பதை இந்த பனை நிறுவுகிறது.  சிவலிங்கம் என்ற பனையேரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தான் சிறு வயதில் மேலே சென்று சாப்பிட்டு போட்ட கொட்டை அது என்றார். அத்தனை உயரத்தில் ஒரு பனை மரத்தினைப் பார்ப்பது அந்த மலைக்கு ஒரு தனி அழகைச் சேர்த்தது. மலையைச் சுற்றிய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. ஜாய்சன் அவருடன் இருந்த தருணத்தை செழுமைப்படுத்தினார். வழியில் ஆறடி நீள பாம்பு ஒன்று எங்களுக்கு முன்பதாக சாலையில் குறுக்காக கடந்து சென்றது.

மருந்துவாழ் மலையின் உச்சியில் பனை மரம்

அந்த மாலை நேரத்தில் மருந்துவாழ் மலையினை சுற்றி வந்தது ஒரு அற்புத அனுபவம். கிரிவலம் என்ற அமைப்பு இவ்வித அனுபவங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்போலும். சீர்திருத்த நற்செய்தியாளரான ரிங்கல் தெளபே அவர்கள், மைலாடியிலுள்ள தனது வீட்டிலிருந்தபடியே இந்த மலையினைப் பார்த்து வியந்திருப்பதை பதிவு செய்திருக்கிறார். இந்த மலைப்பகுதி அனேகருக்கு புகலிடமாகவும் இருந்திருக்கிறது. இன்றும் சில சித்தர்கள் இந்த மலையில் வசிக்கிறார்கள். மருந்துவாழ் மலையில் சரி பாதி தூரம் ஏறியிருக்கிறேன். அதிகாலையில் ஏறுவதுதான் சிறப்பானது. மீண்டும் மலை உச்சிக்கு போகவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

சற்றே இருட்டும் நேரத்தில் கொட்டாரத்தில் இருக்கும் அவரது நார் கட்டில் பின்னும் கடைக்கு கூட்டிச் சென்றார். பனை நார் குறித்து தொடர்ந்து பேசினோம். பனை ஓலைகள் குறித்து தமிழகம் தழுவிய ஒரு விழிப்புணர்வு இன்று உண்டு. ஆனால், பனை நார் குறித்து அத்தகைய விழிப்புணர்வு இல்லை. மேலும் பனை நார் இன்று மிகவும் அரிதான பொருளாகி வருகிறது என்றும் இத்தொழில் அதிகநாட்கள் நீடிக்காது என்றும் ஜாய்சன் கூறினார். மனம் பிசையும் வார்தைகளாகவே அவருடனான உரையாடல் இருந்தது.

பனை நார் கட்டில்களைப் பின்னுவது போல அகலத்தைக் குறைத்து பெஞ்சு போல செய்தால் என்ன என ஜாய்சனிடம் கேட்டேன். எனக்கு ஒருவேலை அவ்விதமான ஒரு பெஞ்சு கிடைத்தால், சில ஆலயங்களுக்கு இவ்விதமான பென்சுகளை நாம் பரிந்துரைக்கலாமே என்றேன். அது ஒன்றும் சிரமமில்லை என்றார். அனேக ஆலயங்களில் பனை நார் அல்லது ஈறல் போன்றவைகளிலிருந்து உரித்த நார்களைக் கொண்டு சாய்வு பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பணப்புழக்கம் வந்தபோது முழு மரத்தையும் அறுத்து அமைக்கும் பெஞ்சுகள் தேவாலயங்களை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. புதிதாக அமைக்கும் ஆலயங்கள், இவ்விதமாக பனை நார் பெஞ்சுகளை அமைப்பது, எண்ணற்ற முதியோர்களுக்கும் கலைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பளிக்கும் என நம்புகிறேன்.

மும்பையில் துவங்கிய பாம்பே ஃபுட் கோர்ட் (Palmbay Food Court) உணவகத்திற்காக வாங்கிய பனை நார் பெஞ்சுகள்

ஜாய்சனுடைய தந்தையார் பனை நார் கட்டில் பின்னுபவர் தான். ஜாய்சன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு நட்சத்திர விடுதிகளில் வேலை பார்த்திருக்கிறார்.  ஒரு விபத்தினை சந்தித்து  அதற்கு பின்பு ஒரு டீ கடை நடத்தி, அதில் நஷ்டம் ஏற்பட்டு, இப்போது பனை நார் கட்டில் பின்ன களம் இறங்கியிருக்கிறார். குறைந்தது 10 கட்டில்கள் அவர் வசம் எப்போதும் இருக்கின்றன. தொழில் சிறப்பாக இருக்கின்றது ஆனால் போதுமான நார் கிடைப்பதில்லை என்றே அவர் குறைப்பட்டுக்கொண்டார். தென் தமிழகமெங்கும் தனது இரு சக்கர வாகனத்தில் நார் எடுப்பதற்காக அவர் அலைந்து திரிந்ததைக் குறித்து சொல்லும்போது, நாம் இழந்த பனை செல்வங்களின் பிரம்மாண்டம் கண்கள் முன் திரண்டெழுகிறது.

பனை நார் என்பது பனங்கள்ளுடன் தொடர்புடையது என்பதே ஜாய்சனின் புரிதல். பனங்கள் இறக்க அனுமதிக்கப்பட்டாலே பனையேறிகள் இன்னும் அதிக பனை மரங்கள் ஏறுவார்கள். பனங்கள் தான் உடனடி பண தேவையினை உறுதி செய்யும். ஆகவே, அவர்கள் ஏறும் பனைகளிலிருந்து கிடைக்கும் மட்டைகளை உரித்து உபரி வருமானம் பார்க்கும் வாய்ப்பிருப்பதாக ஜாய்சன் அனுமானிக்கிறார். உண்மை அதுதான். பனை ஓலைகளை விட, பனை நார் இன்று காண்பதற்கரிய பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. எப்படி பனை ஓலைகள் முறிக்கப்படும் பனைகளிலிருந்து கிடைக்கிறதோ அது போலவே பனை நாரும் கூட, பெருமளவில் முறிக்கப்படும் பனையிலிருந்தே கிடைக்கிறது.

இந்தியா காலனியாதிக்கத்தில் இருந்தபோது வெள்ளையர் பயன்படுத்திய இயற்கை இழை ஆடும் நாற்காலி (Rocking Chair)

இச்சூழலில் பனை நார் இன்னும் அதிகமாக புழக்கத்தில் வரவேண்டுமென்றால் கண்டிப்பாக நாம் கள் இறக்குவதற்கான உரிமையை பெற்றே ஆகவேண்டும். தமிழகத்தில் நெகிழி தடுப்பிற்குப் பின்பும் பனை ஓலை பொருட்கள் மிகப்பெரிய அலவில் புழக்கத்திற்கு வராததற்கு காரணம், கள் தடை நீடிப்பது தான். இதனை எவரும் புரிந்துகொள்ளுவது இல்லை என்பது தான் நமக்கு விளைந்த கேடு. பாரம்பரியமாக கள் நமது மரபில் உணவாக வந்துகொண்டிருந்த சூழலில், கள் குறித்த தவறான வியாக்கியானங்கள் அளித்தும் அதிகார பலத்தைக் கொண்டும் அதனை அடக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடுவதல்ல. குறிப்பாக, கள் குறித்து அறிந்த ஒருவர் ஒன்றில் கள் இறக்குவதை தொடருவார் அல்லது அந்த மரத்திற்கும் தனக்கும் உள்ள உறவினை துண்டித்துக்கொள்ளுவார். இன்று தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அவலம் என்பது இதுதான். மிக வேதனையுடனே பனையேறிகள் பனையை கைவிடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இன்றும் அனேக முதிய கலைஞர்கள், நார் கிடைக்காமல், தங்கள் கரங்களில் திறமை இருந்தும் தங்கள் ஜீவனத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தொழில் வாய்ப்பு என்பது பனை நார் கட்டில் உருவாக்குவது. எப்போதும் அதற்கு என்று தேவைகள் இருந்துகொண்டே இருக்கும். பல்வேறு கலைஞர்களின் வீட்டில், கட்டில்கள் ஒன்றிரண்டு கட்டப்படாமலே கிடக்கும். மிக அவசர தேவைக்கானவைகளேயே முக்கியத்துவமளித்து, முன்னுரிமையளித்து கட்டில் பின்னுபவர்கள் கட்டுவார்கள். கட்டில் கட்டுபவர்களிடம் வாடிக்கையாளர்கள் விடுக்கும் ஆணைகளும், பணம் கொடுப்பதில் ஏற்படும் இழுபறிகளும் என பலவற்றை ஜாய்சன் கூறுவதை கேட்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் எஞ்சிய கலைஞர்களையும் நாம் சீக்கிரம் அழித்துவிடுவோமே என்ற பதைபதைப்பு எழுகிறது.

பனை நார் கட்டில் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்த ஒன்று என்று குமரி மாவட்டத்திலுள்ள அலோபதி மருத்துவர்களே பரிந்துரைச் செய்வார்கள். நாகர்கோவிலிலுள்ள ஜெயசேகரன் மற்றும் மத்தியாஸ் ஆஸ்பத்திரிகளில் பனை நார் கட்டிலுக்கு என அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டன என்கிற செய்தியும் உண்டு. என்னோடு தொடர்பிலிருக்கும், ஆயுர்வேத சித்த மருட்துவர்கள் எல்லாம் பனை நார் கட்டில் வேண்டும் என திரும்பத் திரும்பச் சொல்லுவதை நான் செவி கூர்ந்தபடி இருக்கிறேன்.

பனை நார் கட்டில் பின்னும் மிடாலக்காட்டைச் சார்ந்த அருணாச்சலம்

குமரி மாவட்டத்தில் வீட்டிற்கு இரண்டு பனை நார் கட்டில்கள் இருக்கும். பெரிய குடும்பம் என்றால் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் வயோதிபர்களுக்கு பனை நார் கட்டிலே பரிந்துரைக்கப்படும். நோய் படுக்கையில் இருப்போருக்கும், படுக்கைப்புண் வராமல் இருக்க பனை நார் கட்டிலையே தெரிவு செய்வார்கள். குழந்தை பெற்ற தாய்மார்கள் கூட பனை நார் கட்டிலில் படுப்பது அவர்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் என சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏன் பிறந்த குழந்தைகளைக் கூட, பனை நார் தொட்டிலில் கிடத்துவது வழக்கமாக இருந்திருக்கிறது. 

பனை நார் கட்டில் எப்படி ஆரோக்கியமானது என கூறமுடியும்? வடிவம் சார்ந்து இரண்டு முக்கியமான காரியங்களை நாம் அவதானிக்கமுடியும். ஒன்று, படுக்கைக்கு கீழே இருக்கும் காற்றோட்டம் நமது உடலுக்கு கிடைக்கிறது. வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் நமக்கு இவ்வித காற்றோட்டம் தேவையாக இருக்கிறது, நாம் தற்போது பயன்படுத்தும்  மெத்தைகள் அவ்விதமான காற்றோட்டத்தை தர இயலாது ஆகவே, மெத்தைகள் வீட்டிற்குள் வந்தாலே, நாம் கண்டிப்பாக குளிரூட்டிய அறையாக நமது வீட்டை மாற்ற விழைகிறோம். இல்லாவிட்டால் மெத்தையில் நம்மால் புரண்டுகொண்டிருக்க இயலாது. இரண்டாவதாக, சிறிய இணுக்குகள் கொண்ட பனை நார் ஒருவித அக்குபங்சராக செயல்படுகிறது. நமது உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அவைகள் சீர் செய்கின்றன. நமது உடலுக்கு தேவையான அழுத்தங்களை நார்களின் பின்னல் அமைப்பு கொடுக்கிறது. நமது அசைவுகளும், புரண்டு படுக்குப்போது ஏற்படும் நகர்தல்களும் நம்மை அறியாமலேயே ஒருவித தொடு சிகிழ்ச்சையை அளிப்பதாக இருக்கிறது. ஆகவே மிகச்சிறந்த கட்டிலாக பனை நார் கட்டில் இன்றும் கோலோச்சுகிறது. இவைகளை சர்வதேச அளவில் கொண்டுசெல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நான் விரும்பி உறங்கிய பனை நார் கட்டில்

அப்படியானால் எப்படி பனை நார் கட்டில்கள் வழக்கொழிந்தன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இவ்வித பயன்பாடு இல்லாதது ஏன் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. மிகச்சரியாக சொல்ல முடியாவிட்டாலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் கண்டிப்பாக இதற்கு ஒப்பான வேறு கட்டில்கள் இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கட்டில் என்ற பிரம்மாண்ட கண்டுபிடிப்பிற்கு இந்தியாவில் ஒரு முக்கிய முகம் உண்டு.

இவ்வித கட்டில்களை வட இந்திய பகுதிகளில் “சார்பாய்” என அழைப்பார்கள். சார் என்றால் நான்கு என்றும் பாயா என்றால் கால்கள் என்றும் அர்த்தம். நான்கு கால்கள் கொண்ட படுக்கையினை இப்படியே அழைக்கிறார்கள். நான்கு கால்களும் நான்கு சட்டங்களும் இவ்வைகை கட்டில்களுக்கு போதுமானது. மரங்களை குறைவாக பயன்படுத்தும் சூழியல் பங்களிப்பை இவ்வித கட்டில்கள் உலகிற்கு பறைசாற்றுகின்றன. இந்தியாவைச் சுற்றிலுமிருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் சார்பாய் பிரசித்தம் பெற்றது. இவ்வித கட்டில்கள் பருத்தி நூல் கயிறு, இயற்கை இழைகள் மற்றும் பேரீச்சை இலைகளைக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்றன என அறிஞர்கள் கூறுகிறார்கள். 

பல்வேறு கண்ணிகள் கொண்ட கட்டில்கள் இருந்தாலும், தென் தமிழக பனை நார் கட்டில்களின் வடிவம் பிற வடிவங்களை விடவும் வித்தியாசமானது. இங்கு தலை முதல் கால்வரை ஒரே பின்னல்கள் ஊடு பாவாக சென்றிருக்கும். ஆனால், வட இந்திய பகுதிகளிலும், சில வட தமிழக பகுதிகளிலும் நாம் பார்க்கும் கயிற்றுக் கட்டில்கள், முக்கால் பங்கு சீரான பின்னல்கள் கொண்டதும் கால் பகுதி மட்டும் இழுத்து கட்டுகின்ற நேர் இழுப்பு தன்மைகொண்டதுமாகும். நேர் இழுப்புகள் பின்னல்கள் தொய்யும்போது இழுத்து கட்டி சீர் செய்ய அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே எனக்குள் கேள்விகள் எழுந்தவண்னம் இருந்தது. இவ்வித கட்டில்களுக்கான ஆதி வடிவம் எங்கிருந்து பிறந்திருக்கும் என என்னையே கேட்டுக்கொண்டேன். எனது தேடுதல்கள் பொதுவாக பொய்த்துப்போவதில்லை. எங்கோ ஒரு மூலையில் நான் தேடியவைகளை, என்னை வழிநடத்தும் ஆண்டவர் எனக்கு அருளியபடியே இருக்கிறார் என்பதுவே இப்பணியில் நான் இன்றுவரை நீடித்திருப்பதற்கான காரணம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் திண்டுக்கல்லை அடுத்த அழகாபுரி என்ற பகுதிக்கு சென்றிருந்தேன். அங்கே ராமலிங்கம் என்ற பனையேறியினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது வீட்டில் பனை நார் கொண்டு பின்னிய கட்டில் அப்படியே வட இந்திய பாணியிலாக அமைந்திருந்தது என்னை துணுக்குறச் செய்தது. கயிற்றுக்கு பதிலாக தடிமனான நார் கொண்டு அமைத்த கட்டில். பார்க்க, சற்றே வடிவ நேர்த்தியற்ற ஒரு கட்டில் தான். அன்று நான் அவருடன் அவரது குடிசையில் தங்கினேன். அந்த கட்டிலில் படுப்பதற்கு அப்படித்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பேரனுபவம் எனக்காக அன்று காத்திருந்தது என்பதை இவ்வுலகிர்க்கு நான் கூவி அறிவித்தே ஆகவேண்டும். தாய்மடியில் படுத்துறங்கும் ஒரு உன்னத தருணமாகவே அதனை நான் கருதுகிறேன். பல்வேறு நட்சத்திர விடுதிகளில் நான் தங்கியிருந்தாலும், என்னால் இதற்கு ஒப்பான ஒரு சுகமான உறக்கத்தினை நினைவில் கொள்ள முடியவில்லை. வெறும் மூங்கில்களைக் கொண்டு கால்களையும் சட்டங்களையும் செய்த அவர், அவருக்கே உரித்தான தனித்துவ வடிவத்தினை உருவாக்கியிருந்தார். வேறு எங்கும் இத்தனை “பச்சையாக” எவரும் நார் கொன்டு பின்னி நான் பார்த்ததில்லை. 

அழகாபுரி இராமலிங்கம் பின்னிய கட்டில்

ராமலிங்கம் அவர்களிடம் எனக்கென ஒரு கட்டிலை செய்து தரச் சொன்னேன். அதற்காக பலமுறை அவரைத் தேடி சென்றேன். ஒவ்வொரு முறையும் அவர், எதோ ஒரு காரணத்தைச் சொல்லி என்னை ஏமாற்றியபடியிருக்கிறார். கடைசியாக நான் போன சமயத்தில், உங்களுக்காக மூங்கில் மற்றும் நார்கள் எடுத்து வைத்திருக்கிறேன், கொஞ்சம் பொறுமை காருங்கள் என்றார். இராமலிங்கத்திடம் நாம் கோபப்படவே முடியாது. அந்த அளவிற்கு அன்பாக பேசி நம்மையே நல்வழிப்படுத்தும் மகான் அவர். அவருடன் ஒரு மூன்று நாட்கள் ஒரு சேர இருந்தாலே எனக்கு அவ்விதமான ஒரு கட்டில் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பனை நார் கட்டில்களில் பழங்காலத்தில் இருந்த முக்கிய பிரச்சனை என்னவென்றால் மூட்டைபூச்சிகள் அதில் வந்து சேர்ந்துகொள்ளும். பனை நார்கள் குவிந்திருக்கும் இடுக்குகளுக்குள் மூட்டைப்பூச்சிகள் சென்று ஒளிந்துகொள்ளும். அதிலிருந்து  மூட்டைப்பூச்சிகளை நீக்குவது என்பது இயலாத ஒரு காரியமாக பார்க்கப்பட்டது. பெரும்பாலும், மூட்டைப்பூச்சிகளை கொல்லுவதற்கு என மருந்துகள் அடிக்கப்பட்டன. ஆனால் அவைகளை விட மூட்டைகள் வீரியமாக வளர்ந்தன. இருபது வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் சென்னையிலுள்ள ஒரு திரையரங்கிற்கு சென்றிருந்தேன், அங்கே ஏதோ கடிக்கிறது என கால்களுக்கு கீழே கையை வத்து பார்த்தபோது கையில் பிசு பிசுவென ஏதோ ஒட்டிக்கொண்டது. இருட்டில் என்ன என முகர்ந்து பார்த்தேன். குமட்டலுடன் அப்படியே வெளியே ஓடினேன். மூட்டைப்பூச்சி நசுங்கி குமட்டும் நாற்றமெடுத்திருக்கிறது.

மூட்டைப்பூச்சிகள் பொதுவாக திரையரங்குகளிலிருந்தே வீடுகளுக்கு வந்தன என்றும், வீடுகளிலிருந்து திரையரங்கிற்கு சென்றன என்றும் பரஸ்பர குற்றம் சாட்டும் காலம் இருந்தது. ஆனால், நோயாளிகள் படுத்திருக்கும் கட்டில்களில் கூட மூட்டைபூச்சிகள் வந்து அடைந்து மிகப்பெரிய தொந்தரவை அளித்துக்கொண்டிருந்த காலம் உண்டு. பனை நார் கட்டில்களை சரித்து வைத்துவிட்டு கொதிக்கிற வென்னீரை பனை நார் கட்டில்கள் மேல் ஊற்றுவார்கள். ஆனாலும், மூட்டைப்பூச்சிகளைக் கொல்லுவது எளிதல்ல. அவைகள், பனை நாருக்குள் சென்று சுகமாக உறங்கும், ஒளிந்திருக்கும். பனை நார்கள் பெருமளவில் சூடு கடத்தாதவைகள் ஆதலால், ஒரு சில கண்டிப்பாக தப்பித்துக்கொள்ளும். ஓரிரு நாட்களிலேயே பெருகி மீண்டும் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கும். மாதத்திற்கொருமுறை வென்னீர் ஊற்றுவது பனை நார் பொருளின் ஆயுளைக் கூட்டும் என்பதாக சொல்லுவார்கள்.

நார் கட்டில்கள் என்று மட்டுமல்ல, நார் கயிறுகள் செய்யும் நுட்பங்களும் நமது மக்களிடம் இருந்திருக்கின்றன. மாட்டிற்கான மூக்கணங் கயிறு முதல், பல்வேறு கயிறுகள் பனை நார்கொண்டு செய்யும் அறிவு நமது மக்களிடம் இருந்திருக்கின்றன. தென் மாவட்டங்களைப் பொறுத்த அளவில், பனை நார் கொண்டு பெட்டிகள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பஞ்சவர்ணம் அத்தை எங்களுக்கு தோசை சுட்டு நார் பெட்டியில் சுமந்து கொண்டு கொடுத்ததாக அம்மா சொல்லியிருக்கிறார்கள். நான் பிறப்பதற்கு முந்தைய காலமாக அது இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

பண்ணைவிளை அசனத்தின்போது பயன்பட்ட நார் பெட்டிகள்

நார் பெட்டிகளுக்கு என சமூக அங்கீகாரம் உண்டு. திருமண வீடுகளில் நார் பெட்டிகளையே சீதனமாக கொடுப்பார்கள். அரிசி பெட்டி என்றும், முறுக்குப்பெட்டியென்றும் அவைகளுக்கு பெயர் உண்டு. இதைத்தான், பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள், நாடார்களும் செட்டியார்களும் தங்கள் திருமணத்தில் நார் பெட்டியினை பயன்படுத்தியிருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். குமரி மாவட்டத்திலுள்ள நார் பெட்டிகள் மீது எனக்கு மிகப்பெரிய விருப்பம் இல்லை. அவைகள் என்னை கவரவும் இல்லை. வர்ணங்கள் இட்டிருந்தாலும், அவைகள் மிகப்பெரிதான பொழிகள் கொண்டு செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை, நான் மிகச்சரியான அழகுள்ள நார் பெட்டிகளை பார்க்கவில்லையோ என்னவோ. அல்லது அடிக்கடி பார்த்த பெட்டிகள் மீதான சலிப்பா எனவும் கூற இயலவில்லை.

நார் பெட்டிகள் அழகுற செய்யப்படவேண்டுமென்று சொன்னால், பொறுமையுடன் செய்யப்படவேண்டும். அதன் செய்நேர்த்தி மட்டுமல்ல உறுதியும் முக்கியமானவைகளே. உறுதி இல்லாத நார் பெட்டிகள் அழகை இழந்துவிடுகின்றன. ஏன் உறுதியற்ற பெட்டிகள் இன்று தயாரிக்கப்படுகின்றன? சீர்வரிசை பொன்ற ஒருசில சடங்குகளுக்காக மட்டும் நார் பெட்டிகள் செய்யப்படுகின்றன. மங்கி வரும் இவ்வித கலாச்சார பொருட்கள் வெறுமனே அடையாளமாக காணப்படுவதால், மலிவான நார் பெட்டிகள் கடைக்கு வருகின்றன. ஒரு பெட்டி செய்வதற்கான ஊதியமோ அல்லது அதற்குண்டான மரியாதையோ இங்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் இவ்வித அழகுணர்சியற்ற பெட்டிகள் வர காரணமாகின்றன. 

இதற்கு ஒப்புநோக்க மதுரையை அடுத்த பெருமாள் பட்டி என்ற ஊரிலுள்ள பனை நார் பெட்டிகள் தமிழக அளவில் சிறந்த வடிவ நேர்த்தி கொண்டவைகள். சன்னமான நார்கள், பொறுமையாக இழைக்கப்பட்டு அழகுற செய்யப்படுபவைகள். குமரி மாவட்டத்தை ஒத்த நார் பெட்டிகள் தான் செட்டியார்களின் வடிவமைப்பில் இருக்கின்றன. ஆனால், செட்டியார் நார் பெட்டிகளின் விளிம்பு மிகவும் அகலமாக இருக்கும். நார்களும் நேர்த்தியாக வகுந்தெடுக்கப்பட்டிருக்கும். தேவையற்ற வர்ணங்கள் இருக்காது.

மதுரையை அடுத்த பெருமாள்பட்டி நார் பெட்டிகள்

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற அசன விழாக்களின் போது, நார் பெட்டிகளை கொடையாக வழங்கும் முறைமை இன்றும் இருக்கிறது. சுட சுட சோறுகளை அள்ளி எடுத்து செல்ல இதனையே பயன்படுத்துவார்கள். சுடு சோறு நார்களில் பட்டு எழுப்பும் வாசனை பசிக்காதவர்களையும் சுண்டி இழுத்து கூட நான்கு கவளத்தை உள்ளிழுக்க வைக்கும் ஆற்றல் மிக்கது.

2018 ஆம் ஆண்டு எனது ஒரிய பயணத்தில், ஒரு குடியானவர் வீட்டில் நார் பெட்டியை ஒத்த ஒரு பெட்டியினைப் பார்த்தேன். பின்னல்முறை வேறு வகையில் இருந்ததோடல்லாமல், அதன் விளிம்புகளும் தனித்துவமாக இருந்தது. நான் அதனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஈட்டி மரத்தினை இழைத்து , மொழுமொழு தன்மைகள் கொண்ட இழைகளை இழுத்து கட்டியது போன்ற ஒரு பெட்டி. ஒருவகையில் பருமனான ஈட்டி மரத்தை அப்படியே குடைந்து எடுத்து செய்திருப்பார்களோ என ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆவல் பொறுக்கமுடியாமல் அதனை அணுகிச் சென்று தொட்டு தடவிப்பார்த்தபோது தான் அது பனை நார் என்கிற உண்மை உறுதியானது. பல வருட புழக்கம் உள்ள அந்த பெட்டியின் அழகிற்கு ஈடு இணையான எந்த நார் பெட்டியினையும் நான் இதுவரைப் பார்க்கவில்லை. பல வருடங்களாக கைகள் பட்டு வழுவழுப்பாகவும் ஒரு தனித்துவ மினுமினுப்பு கொண்ட ஆப்பிரிக்க அழகினை ஒத்திருந்தது அந்த பெட்டி. இந்த பெட்டி எனக்கு கிடைக்குமா எனக் கேட்டு அள்ளி எடுத்து வந்துவிட்டேன்.  

ஓலைப்பொருட்களின் மீது நார் பொத்துவது அழகினையும் உறுதியினையும் அப்பொருளின் ஆயுளையும் கூட்டும் என்னும் உண்மையினை வெகு சமீபத்தில் தான் நான் அறிந்துகொண்டேன். ஆகவே எனது தொப்பி, நான் பயன்படுத்தும் திருமறை பை மற்றும் பயணப்பைகள் அனைத்தையும் நார் கொண்டு பொத்திவிட முடிவு செய்தேன். இப்போது இவைகள் அனைத்தையுமே பிற பனையோலைப் பொருட்களுடன் இணைத்து கண்காட்சி அமைக்க முடிவுசெய்திருக்கிறேன்.

போவாஸ் பனை விதைகளுடன்

எழுத்தாளர் பொன்னீலன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பனம்பூ மாலை குறித்து பெருமளவில் பேசப்படுகிறது ஆனால் “நார்முடி சேரல்” என்பது குறித்த பேச்சுகள் பரவலாக இல்லை என்றார்.  “களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்”, பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் கரிய களக்காய் போன்ற மணிகளையும் முத்துக்களையும் பொன்னிழைகளில் கோர்த்து பட்டுத்துணியால் செய்த தலைபாகையாக அணிந்துகொண்டவன் என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. “நார்முடி” என்ற வார்த்தை சேர மன்னர்கள் தங்கள் மணி மகுடமாக பனை நாரினை கொண்டிருந்தார்கள் என குறிப்பால் உணர்த்துகிறது என அவர் கூறினார். பனை நாரினை இழப்பது, நமது சங்க இலக்கியத்துடனான நமது நேரடி தொடர்பை இழப்பது ஆகும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 12

மார்ச் 19, 2021

கள்ளூறும் காலம்

சுமன் மற்றும் பீட்டர் இருவரும் என்னை பேருந்தில் வழியனுப்ப வந்தார்கள். இவர்கள் இருவரின் உதவியுமின்றி என்னால் கண்டிப்பாக பழவேற்காடு குறித்து முழுதுணர்ந்திருக்க இயலாது. அவர்களிடம் நன்றி கூறி இரண்டு பறிகளை எடுத்துக்கொண்டு சென்னை புறப்பட்டேன்.

சென்னை வந்தால் எனக்கு சொல்ல வேண்டும் என விஸ்வா வேதா சொல்லியிருந்தான். சென்னையில் அப்படி அனேகர் உண்டு. எனது பஞ்சவர்ணம் அத்தையின் மகள் செல்வி அக்கா மற்றும் பேராசிரியர் இஸ்பா ஆகியோருக்கு தெரியாமல் சென்னை வந்து செல்வது இயல்வதல்ல. அவர்களை சந்திக்காமல் ஊர் திரும்பினால் எப்படியாவது மோப்பம் பிடித்துவிடுவார்கள். பிற்பாடு நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டி வரும். அப்படி இருந்தும் சென்னை ஒவ்வொரு முறை வரும்பொதும் எவராவது என்னை கொத்திக்கொண்டு போய்விடுவதும் உண்டு. அலுவலக விஷயமாக வந்தால் தங்குமிடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். அன்று இரவு ஆவடியிலுள்ள முனைவர் இஸ்பா அவர்கள் வீட்டில் தங்கினேன். காலை 6.30 மணிக்கு விஸ்வா வந்து என்னை அழைத்துச் சென்றான்.

விஸ்வா பனை சார்ந்து சென்னையில் நிகழ்த்திய முன்னெடுப்புகள் முக்கியமானவை. பனை விதைகளை சேகரித்து கடற்கரைகளில் நடுவதும், ஏரி குளங்களில் நடுவதுமாக இருக்கையில் எனது தொடர்புக்கு வந்தவர். நோய் தொற்று இருக்கையில், விழுப்புரத்திலுள்ள கஞ்சனூர் சென்று மாட்டிக்கொண்டவர். அங்கே உள்ள பனையேறிகளுடன் மிகவும் நெருங்கிவிட்டார். ஏன் பனையேறவும் கூட கற்றுக்கொண்டார். அங்குள்ளவர்களை ஒன்றுதிரட்டும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மென்பொருள் துறையில் பணியாற்றுகிறவர்கள் அனேகர் பனை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பியிருப்பது சிறப்பு என்றாலும், பனை விதை சேகரிப்பு, பனை ஏறுதல் போன்றவைகளில் ஈடுபாடுகொண்டோர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையே உள்ளது.

நாங்கள் செல்லும் வழியில் பல்வேறு பனை மரங்களை பார்த்து நிதானமாக சென்றுகொண்டிருந்தோம். சென்னை எல்லையில் சில மலைக்குன்றுகள் இருந்தன. அவற்றின் உச்சியில் ஒரே ஒரு பனை மரம் தனியாக நின்றதை விஸ்வா காண்பித்தார். வழியில் பதனீர் வாங்கி குடித்தோம், சர்க்கரைத்தண்ணி  தான். எப்போதும் சாலையோரத்தில் பதனீர் வாங்கிக்குடிக்காதீர்கள் என்பதுவே அனைவருக்கும் நன் சொல்லும் அறிவுரை. பனை ஓலைகளை அலங்காரமாக வைத்து பனையோலைப்பெட்டிக்குள் பானையில் வைத்து விற்கும் திரவத்திற்கும் பதனீருக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்காது. பனை பொருட்கள் சாலைகளுக்கு வரத் தேவையில்லாத அளவிற்கு அது உற்பத்தியாகும் இடத்திலேய மக்கள் வாங்கிச் செல்லுகின்றனர். ஆகவே நம்மை சாலையில் சந்திப்பவைகள் அனைத்துமே போலிகள் தாம்.

இதனை நான் சொன்னபோது, ஒரு நண்பர் கொதித்துப்போய் சொன்னார், “பன்னாட்டு நிறுவனங்களின் திருட்டுத்தனங்களைக் கேள்விக்குட்படுத்தாமல், அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை தேடும் இவ்வெளிய மக்களை ஏன் இப்படி பழிக்கிறீர்கள்” என்றார். மெய் தான், ஆனால், நம்மைத் தேடி வரும் போலி பனை பொருட்களால் உழைத்து ஓடாய்ப் போகும் பனையேறிகளின் வாழ்வு குறித்தும் பேசவேண்டி இருக்கிறதே? பனையேறிகள் மீது நான் பெருத்த மரியாதை கொண்டுள்ளேன். அவர்கள் அனைவருமே, கடும் உழைப்பை செலுத்தி நேர்மையான வாழ்வை கடைபிடிப்பவர்கள் தாம். ஆனால் இந்த பொல்லாத காலம் அவர்களையும் திசை மாற்றிவிடக்கூடாதே என்கிற படபடப்பு எனக்கு உண்டு. பதனீரை இலவசமாக கொடுத்தவர்கள், இன்று அவைகளை விற்பதற்கு காரணம், காலம் அவர்களை அச்சூழலுக்குள் தள்ளியிருக்கிறது என்பது தான். அவர்களின் வாழ்வில் எவரும் விஷத்தை விதைத்துவிடக்கூடாதே என்கின்ற ஆதங்கத்தில் தான் போலிகளை கைகாட்டவேண்டியிருக்கிறது.

ஒருமுறை பனையேறிகளை நன்கு அறிந்த ஒருவர், சற்று பழைய மனிதர், நம்ம ஆட்களிடமும் தவறு உண்டு, தண்ணீரை பதனீரில் கலந்துவிடுவார்கள், அதற்குள்ளிருந்து தவளைக் குதித்துப்போகும்போது இவர்களின் வண்டவாளம் எல்லாம் வெளியாகிவிடுகிறதே என்றார். எனது 25 வருட அனுபவத்தில் இந்த குற்றச்சாட்டை நான் முதன் முறையாக கேட்கிறேன். அந்த பெரியவரின் கூற்று, ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வெகு பிரபலமாக இருந்த பால்காரர்கள் குறித்த நகைச்சுவை தொடர்ச்சி என்றே என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. பால்காரர்கள் தண்ணீர் சேர்ப்பார்கள் என்று ஒரு காலத்தில் பத்திரிகைகள் விதம் விதமாக சிரிப்பு துணுக்குகளைப் போட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் பாக்கெட் பால் வந்தபோது, பாலே இல்லாமல் டிடர்ஜெண்ட் சேர்த்து கொடுக்கப்பட்டபோது அது குறித்து பேச்சு மூச்சில்லை. சிலர் சந்தேகிப்பது போல, நமது பாரம்பரியத்தை ஊடகங்கள் தான் முதல் ஆளாக நின்று அழித்திருக்கின்றன. சரி, தவளை வந்தது உண்மையா இல்லையா என கேட்கலாம். பனை மரத்தில் வாழும் தவளைகள் தான் இருக்கின்றனவே? அவைகள் ஏன் உள்ளே குதித்திருக்கக்கூடாது? ஆம் பனை மரத்தில் தவளை இருக்கும் என்ற தகவலும் பொது மக்களுக்கு தெரியாது, பனையேறிகள் மட்டுமே அறிந்த உண்மை அது. ஆக இவர்களின் அறியாமையால் பனையேறிகளை பழியேற்கவைத்துவிடுகிறார்களே?

திண்டிவனம் பனங்காடு

திண்டிவனத்தை நெருங்கியபோது விஸ்வா என்னிடம், “அண்ணா இங்கே தான் இந்த வருடம் பனை விதைகளை சேகரித்தோம்” என்றான். பனை விதை சேகரிப்பு என்பது பனை பாதுகாப்பில் ஒரு முக்கிய செயல்பாடு. பனை சார்ந்த சூழியலை அவதானிக்கும் செயல்பாடு இது என்று நான் கூறுவேன். பனையேறிகளின் குடும்பத்தினரைத் தவிர, பனை மரத்தை அணுகி அறிந்தவர்கள் பனை விதை சேகரிப்பாளர்கள் தான். பழங்கள் விழும் காலம், சேகரிக்கும் திறன், பாதுகாத்து வைக்கும் நுட்பம், புதர்களுள் கிடப்பவைகளை கண்டுபிடிப்பது, பனங்காடுகளுக்குள் வசிக்கும் உயிரினங்கள் என அது ஒரு மாபெரும் பட்டறிவு பாசரை. இன்று தமிழகத்தில் பனை விதைப்பு என்பது ஒரு கவர்ச்சிகர செயல்பாடு ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், பனை விதைகள் சேகரிப்பதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பனை விதைகள் சேகரிக்காதவர்கள் கூடி, நாங்கள் தான் பனை நட்டோம் என்று ஊடகங்களுக்கு முகத்தைக் காட்டும் அசிங்கங்களும் இக்காலங்களில் அரங்கேறத் துவங்கின. ஆகவே, பனை விதைகளை சேகரிக்காதவர்கள் விதைப்பதில் அர்த்தமில்லை என்று நான் பகிரங்கமாகவே அறிவித்தேன்.

பனை விதைகள் என்னும் வார்த்தை 2016 ஆண்டிற்கு பிறகே புழக்கத்தில் வந்தது. பனங் கொட்டை என்ற வார்த்தையே மரபானது. தமிழகமெங்கும் பாரம்பரியமாக கொட்டைகளை சேகரித்து, அவைகளை கிழங்குகளுக்காக போடும் தொழில் செய்பவர்கள் அனேகர் உண்டு. அப்படிப்பட்ட முதியவர்கள் தான் பெரும்பாலும், பனங்கிழங்குகளை வாங்கி பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் விற்பனை செய்வார்கள். இவ்விதமான மனிதர்களின் வாழ்வாதாரம் குறித்து எவருமே சிந்திப்பதில்லை. பனை விதைப்பு குறித்து எப்போதும் நான் சொல்லும் கருத்துக்கள் உண்டு. கூடுமானவரை நமது ஊருக்கு அருகாமையிலேயே பனை விதைகளை சேகரிக்க வேண்டும். அப்படி சேகரிக்கும்போது, வழக்கமாக சேகரிக்கும் நபர்கள் ஊருக்குள் இருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்ச தொகையினை அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு ஊரில் கிடைக்கும் பனை விதைகளில் இருபது சதவிகிதம், வெளியூருக்கு அனுப்பலாம். ஆனால் 80 சதவிகிதம், உணவாக மாற வேண்டும். தேவையான அளவிற்கு வருடம் தோறும் விதைக்கப்பட வேண்டும். இன்று, பல ஊர்களில் பனை விதை நடவோ, உணவாக பாவிக்கப்படுவதோ இல்லை. நேரடியாக பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். பனை விதைகள் ஒரு நுகர் பொருள் என்ற நிலையினை அமைத்தாலே பனை மரங்கள் வைத்திருப்போருக்கு அதனை பாதுகாக்க தோன்றும். நாமாக களமிறங்கி பனை விதைகளைப் பொறுக்கவில்லையென்று சொன்னால், பனை விதைகளை சேகரித்து கொடுப்பவர்களுக்கு அடிப்படை விலை கொடுப்பது அவசியமானதும் அர்த்தம் பொதிந்ததுமாகும்.

திண்டிவனத்தின் பனங்காடுகள் என்னளவில் மிக முக்கியமானவைகள். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நெருக்கமாகவும், நெடுந்தூரம்  பரவியிருப்பதையும் காணலாம். எனக்கு அந்த பகுதிக்கு செல்லவேண்டும் என பல முறை எண்ணமிருந்தும் சாத்தியப்படவில்லை. இம்முறை விஸ்வா தனது பைக்கில் என்னை அழைத்துக்கொண்டு சென்றான். அது ஒரு ஏரியின் கரைப் பகுதி. கரை ஓரப்பகுதி சுமார் 30 மீட்டர் அகலம் இருக்கும். அதற்குள் வரிசையாக 10 பனை மரங்கள் நெருங்கியபடி நிற்கும். அந்த பகுதியில் தானே ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருக்கிறதைப் பார்க்கலாம். தமிழகத்தில் இதுபோல நெருக்கமாக இருக்கும் பனங்காடுகள் வேறு பல இடங்களிலும் இருக்கின்றன. வரிசையாக ஒற்றைமரங்கள் சுற்றி இருக்கும் பகுதிகளும் இருக்கின்றன. இந்த பனை மரங்கள் யாவும், அருகிலுள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்டது என விஸ்வா சொல்லக்கேட்டேன். பருவ காலத்தில் வாரத்திற்கு ஒருமுறைச்  சென்றால், ஒரே நாளில் 10,000 விதைகள் பொறுக்க இயலும்.  திண்டிவனம் பகுதியில் காணப்படும் இந்த பனங்காடு ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு மாபெரும் பனை சுரங்கம்.

திண்டிவனம் என்பதற்கான பெயர் காரணம் குறித்து தேடும்பொது திந்திரி வனம் என்ற பெயர் மருவியிருப்பது தெரியவந்தது. திந்திரி என்றால் புளிய மரம் என்றும், வனம் என்பது மரங்கள் நெருக்கமாக இருக்கும் காட்டுப்பகுதி என்பதும் நாம் அறிந்ததே.  புளியமரங்களும் பனை மரங்களும் பிறப்பிடம் சார்ந்து நெருங்கிய உறவினர்கள் தாம். இரண்டிற்கும் தாயகம் ஆப்பிரிக்கா என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் அதிக பனை மரங்கள் நடப்படுவதை அறிந்து மனவேதனைக்குள்ளான ஒரு “சமூக ஆர்வலர்”, பனை ஒரு வந்தேறி மரம் என குறிப்பிட்டார். பனை இங்கு வந்தேறியிருக்காவிட்டால், தமிழகம் கண்ட பஞ்சத்தில், பூர்வகுடிகள் என சொல்லப்படும் எவரும் எஞ்சியிருப்பார்களா என்பது சந்தேகமே. புளி நமது சமையலறையின் முக்கிய சுவைகூட்டியாக இருப்பதுடன், விறகாகவும் மருந்தாகவும் கூட பயனளித்திருக்கிறது. பஞ்சகால உணவாக புளியங்கொட்டைகள் இருந்திருக்கிறன.

ஏரியில் தண்ணிர் இல்லை. எங்கள் இரு சக்கர வாகனம் ஏரிக்குள் தான் நிறுத்தப்பட்டிருந்தது. சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். நான் புகைப்படங்களை எடுப்பதை விஸ்வா புகைப்படம் எடுத்தார். அது ஒரு சிறந்த புகைப்படமாக மாறிவிட்டது. மறுநாளில்தானே மும்பையிலிருந்து துருவா என்ற சூழியல் செயல்பாட்டாளர், எனது புகைப்படத்தை வரைந்து அனுப்பியிருந்தார். “பனைகள் சூழ பனை மனிதன்” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அப்படத்தை பார்க்கையில் பனையால் அமைத்த கோட்டைக்குள் நான் நிற்பது போன்ற ஒரு பிரம்மிப்பு ஏற்பட்டது.

வழியில் தானே காலை உணவை உண்டோம். அந்த நேரத்தில் விஸ்வாவின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே, தனது அலுவலக வேலையினை சிறிது நேரம் அந்த உணவகத்திலேயே தொடர்ந்தார். இன்னும் வந்து சேரவில்லையா என்று விழுப்புரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். மீண்டும் பயணிக்கையில், சாலை ஓரத்தில் வரிசையாக பனை மரங்கள் நிற்பதைக் கண்டு அந்தவழியாக வண்டியை திருப்பச் சொன்னேன். சில நேரங்களில், வேறு திசையிலிருந்து எடுக்கும் புகைப்படங்கள் சிறப்பானதாக இருக்கலாம் என்று நினைத்து தான் அப்படி சொன்னேன். நாங்கள் உள்நுழைந்து சென்ற பாதை முடிவடைத்தது. தூரத்தில் பனை மரங்களும் ஒரு பனையோலைக் குடிசையும் தென்பட்டது. போவதற்கு பாதை இல்லை. விஸ்வா காய்ந்து கிடக்கும் தாளடிகள் கருகின வயலின் ஊடாக அந்த குடிசை நோக்கி போனபோது, அது ஒரு சிறு கோவில் என புரிந்தது. அங்கிருந்து திரும்பி பார்த்தபோது கோவிலுக்கு எதிரில் ஒரு மிக அகன்ற தெரு முழுக்க பனை ஓலைகளால் கட்டப்பட்ட வீடுகள் இருமருங்கிலும் இருந்தன.

தெருவில் எவருமே இல்லை. வீடுகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தோம். மண் சுவர் மற்றும் ஓலை குடிசைகள் தான். சில வீடுகள் முழுவதுமே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்தது. பாம்பை போல் ஊர்ந்து சென்றால் மட்டுமே உள்ளே செல்ல இயலும்போல் வாசலுக்கு முன்பு கூரை மிகவும் தாழ்வாக இறங்கியிருந்தது. எங்கள் சந்தடி கேட்டு இரண்டு சிறுமிகள் வெளியே வந்தார்கள். மெலிந்த உருவம் அழகிய கரிய நிறமும் அகன்ற கண்களும் கொண்டவர்கள். படிக்கிறீர்களா என்று கேட்டபோது ஒரு பெண் 5ஆம் வகுப்போடு நிறுத்தி விட்டதாகவும், மற்றொறு பெண் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினாள். அங்கிருந்தே ஒரு ஓலை இலக்கை உருவி அவர்கள் படத்தை  செய்து கொடுத்தேன். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் இவர்கள் இருளர் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் என்கிற புரிதல் எனக்கு கிடைத்தது. பனை ஓலைகளோடு புழங்கும் இவர்களுக்கு பனை ஓலை பயிற்சி ஒன்று வழங்கினால் என்ன என விஸ்வா கேட்டான். பனையேறி பாண்டியனைக்கொண்டு இங்கு ஒரு பயிற்சி ஒழுங்கு செய்ய முடியும் என்றும் சொன்னான்.

இருளர் பழங்குடியினர்

பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் மேற்கொண்டு என்ன படிக்க உனக்கு விருப்பம் எனக் கேட்டோம். மருத்துவர் ஆக விருப்பம் என்றாள். ஆடிப்போய்விட்டேன். எத்துணை பெரும் கனவுகள் இச்சிறிய ஓலைக் இக்குடிசைக்குள் இருக்கின்றன? கல்வி வியாபாரமயமாகிப்போன சூழலில் இக்கனவுகள் சாத்தியமா? இக்குழந்தைகளுக்கு வழிகாட்டவும், இவர்களுக்கு உதவி செய்யவும் நன்னெறிப்படுத்தவும் யாரேனும் இருக்கிறார்களா? இத்தகைய கனவுகளை தேடி கண்டடைந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் மக்கள் இருக்கிறார்களா? இருக்கலாம். ஆனால் கிராமங்களையும் தாண்டி இவ்வித குடிசைக்குள் இருப்பவர்களை அவர்களால் இனம் காண முடியுமா? முடியும் என்றால் மிகவும் நல்லது. ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த குழந்தைக்காக உள்ளூற இறை மன்றாட்டை ஏறெடுத்தேன். 

கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம். கஞ்சனூர் சென்றபோது கிராமத்து சிறுவர் சிறுமியர் அனைவரும், நீல நிற பனியன் போட்டுக்கொண்டு தோட்டத்திலிருந்து கும்பலாக வந்துகொண்டிருந்தார்கள். அனைவருக்கும் மோர் கொடுக்கப்பட்டது. பாண்டியன் வந்தார். உணவு இனிமேல் தான் தயாரிக்க வேண்டும் என மணிமேகலை கூறினார்கள். சாப்பாடு ஆயத்தமாகும் நேரத்திற்குள் விஸ்வா அலுவலக வேலைக்குள் மீண்டும் மூழ்கினார். வெகு சீக்கரமாகவே, சாதமும் மாட்டுக்கறியும் ஆயத்தமானது. மணிமேகலையின் சமையல், தனித்துவமானது. எதைச் செய்தாலும் குறைவில்லா சுவையுடனிருக்கும். பாண்டியன் வீட்டில் உள்ள சமையலில் பெரும்பகுதி அவர்கள் தோட்டத்தில் விளையும் அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டே அமையுமானபடியால், ஆரோக்கியத்திற்கும் பஞ்சமில்லா நஞ்சில்லா உணவுகளே அங்கே எப்போதும் கிடைக்கும்.

உணவு அருந்தியபின், கிராமத்தினருடன் ஒரு கலந்துரையாடல் செய்யலாமா என்று கேட்டேன். “செய்யலாங்க ஐயா” என்றார் பாண்டியன்.  பாண்டியன் என்மீது பெரும் மரியாதை வைத்திருக்கும் பனையேறி. 2017 ஆம் ஆண்டு தான் தனது முன்னோர்கள் வழியில் பனை தொழிலுக்குள் வந்தவர். முதல் ஆண்டிலேயே, பனங் கருப்பட்டி தயாரித்து விவசாயத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை தாண்டி வந்தவர். பனை கண்டிப்பாக கைகொடுக்கும் ஒரு மரம் என உள்ளூற நம்புகின்றவர். அதனை தன் வாழ்வில் அனுபவிப்பவர். பனை குறித்து வெற்று குரல்கள் தமிழகமெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தபோது தனது வாழ்வை பனையோடு இணைத்து ஆழமான கருத்துக்களை முன்வைப்பவர். பனை வாழ்வியலை மையமாக கொண்டவர். எனது பல கேள்விகளுக்கு நான் விடை தேடி நிற்கும் பனையேறி. அவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இளையவள் கரிஷ்மா. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். என்னை காட்சன் தாத்தா என்றே அழைப்பாள். நமக்கு வயசாகிக்கொண்டு போவது குழந்தைகளுக்கு தான் முதலில் தெரிகிறது. கரிஷ்மா நான் பார்த்த முதல் பனையேறும் சிறுமி. அனாயாசமாக ஏறுகிறாள். உற்சாகம் ததும்பும் இரண்டு குழந்தைகள் என பாண்டியன் வீடே கலகலப்பாக தான் இருக்கும். மூத்த மகள் வீனுச் சிறப்பாக சிலம்பம் விளையாடுகிறாள்.

பாண்டியனிடம் எனது தொப்பியைக் காட்டி, இதனை நார் கொண்டு பொத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். நார் உரித்து, நீரில் போட்டுவிட்டு இரவு நாம் இதனை சீர் செய்யலாம் என்று கூறினார். வேறு வேலை இல்லை. இரவு ஏழு மாணிக்கு தான் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தோம். ஆகவே நான் விஸ்வாவின் பைக்கை எடுத்துக்கொண்டு பண்ருட்டி சென்று பஞ்சவர்ணம் ஐயா அவர்களை சந்திக்கலாம் என்று புறப்பட்டேன். தெரியாத சாலை தான் ஆனாலும், எப்படியோ போய் சேர்ந்துவிட்டேன். பஞ்சவர்ண்ம் அவர்கள் நடமாடும் தாவரக் களஞ்சியம் எனப் பெயர் பெற்றவர்.

என்மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கும் பெரியவர். இந்தியாவிலேயே முதல் கணினி நிர்வாகம் கொண்ட பஞ்சாயத்தாக பண்ருட்டி பஞ்சாயத்தை மாற்றிய பெருமை இவரையே சேரும். பல சிறு பயணங்கள் இணைந்தே செய்திருக்கிறோம். பனை சார்ந்த கருத்துக்களை மணிக்கணக்காக பகிர்ந்திருக்கிறோம். அவரோடு இருந்த ஒவ்வொரு கணமும் எனது வயதை ஒத்த தோழனுடன் பழகுவதைப்போன்ற இனிமையான தருணங்களே. அவரது பனைமரம் என்ற புத்தகம் தான் எங்களை ஒன்றிணைத்தது. தமிழில், பனை சார்த்து இத்தனை விரிவான தொகுப்பு பனைக்கு இருந்ததில்லை என்பது தான் உண்மை. அதனைத் தொடர்ந்து பனை பாடும் படல் என்ற சிறிய புத்தகத்தையும் அவரது பஞ்சவர்ணம் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.

அவரை எனது பயணத்தில் பார்த்து ஆசி பெற்று, பனங்கள்ளிற்கு ஆதரவு பெறவுமே சென்றேன். அவர் தமிழக அரசியல் சூழ்நிலைகளை மிகச்செரியாக உள்வாங்கியிருப்பவர். “கள்ளுக்கெல்லாம் அனுமதி தரமாட்டார்கள். கொடுத்தால் நல்லதுதான் என்றார்”. குறைவாகவே அன்று பேசிக்கொண்டோம். மிக அதிக பயணங்களை மேற்கொள்பவர், நண்பர்கள் சூழவே இருப்பவர், நோயச்சத்தால், வீட்டை விட்டு வெளியே வர இயலாதபடி இருந்தார். நான் சென்று பார்ப்பதில் உள்ள அபத்தத்தை உணர்ந்திருந்தேன். ஆனால் நான் அவரை பார்க்காமல் வந்திருப்பேனென்றால் அது சரியாயிராது. சுமார் நூறு கிலோமீட்டர் மின்னலென போய் வந்தேன். 

உண்பதற்கு தயாராகும் செங்காய்கள்

நான் பாண்டியன் வீட்டிற்கு வந்தபோது அவர் ஊரிலுள்ள பனையேறிகள் அனைவருக்கும் தகவல் அனுப்பியிருந்தார். அவர்கள் வருமுன்பதாக நாம் பனம் பழங்களை அறுத்து வேக வைப்போம் என்று கூறி ஒரு குலையை முழுவதுமாக தனது அரிவாளால் அறுத்து தள்ளினார். செங்காய் பருவத்திலான அவ்வித பனங்காய்களை அதுவரை நான் சுவைத்ததில்லை. பனம் பழங்கள் சுவைத்திருந்தாலும், இந்த அனுபவம் எனக்கு புதிது. விஸ்வா பணியின் நிமித்தமாக கலந்துகொள்ள இயலாது என கூறினான். சுமார் 30 பனையேறிகள் அன்று மாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.   எழரை மணிக்கு ஒருவாறு நிகழ்வைத் துவங்கினோம். சிமென்ட் சாலையில் பனையேறிகளுக்கு முன்பு நான் தரையில் அமர்த்துகொண்டேன். கஞ்சனூர் என்பது நான் இறங்கும் பேருந்து நிறுத்தம் தான். பூரிகுடிசை என்பது தான் பனையேறிகளை நான் சந்தித்த இடம். அங்கிருப்பவர்களில் ஒரு சிலரை நான் அறிவேன். ஆனாலும் பலரும் புது முகங்களாக இருந்தார்கள். பனையேறிகள் மத்தியில் இருக்கும்போது எனக்கு ஆலய ஆரதனையில் இருப்பது போன்ற உணர்வே எழுத்தது. பாண்டியன் என்னைக்குறித்து ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். நான் எனது மிகச்சிறிய உரையத் துவங்கினேன்.

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

நான் வெகுவாக மதிக்கும் பனையேறிகள் மத்தியில் நிற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பனை சார்ந்த தொழில் அனைத்திற்கும் பனையேறிகளே அச்சாணிகள். பனையேறிகள் இல்லாமல் பனைத் தொழில் என்பது இல்லை. எனது வாழ்வில் எப்போதும் பனையேறிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அதனை அரசு கருத்தில் கொண்டதாக சரித்திரம் இல்லை. மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை 1985 ஆம் ஆண்டு பதினைந்தாயிரம் தொழிலாளர்களை இணைத்து ஒரு பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தது. அரசின் காதில் எதுவுமே விழவில்லை. ஆகவே அரசு என்பது, தெரிந்தெடுக்கப்பட்ட கட்சியின் நிலைப்பாடுகளையே முன்னிறுத்தும். நமக்கு இப்போது சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறதானபடியால், நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு நாம் வக்களிப்பதுவே நமது கோரிக்கைகளை வலுப்பெறச் செய்யும். தமிழகத்தில் கள்ளிற்கு ஆதரவான கட்சிகள் என ஏதும் இல்லை. அதிலும், கள் என்கிற வார்த்தை சங்க காலம் முதல் இன்றுவரை நம்மிடம் மருவாமல் வந்து சேர்ந்திருக்கும் ஒரு பொருள். என்றாலும் அதனை ஆதரிக்கின்றோம் என்று சொல்லி பனம் பால் தென்னம் பால் என்று சொல்பவர்களையும் சேர்த்தே கேள்வி கேட்கிறோம். ஓளவை என்னும் மூதாட்டி, கள் குடித்து போதை தலைகேறி “அறம் செய்ய விரும்பு” என்று ஆத்திச்சூடியினை கூறியிருப்பாளாகில், இன்றும் அவ்வித பானத்தை நாம் ஏற்றுக்கொள்ளுவதில் பிழையில்லை. 

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

கள் என்பது பலவகைகளில் ஒரு அடிப்படை விசையினை கொண்டிருக்கும் ஒரு உணவுப்பொருள். பனை மரம், பனையேறுவோர், நுகர்வோர், பனை சார்ந்த இதர பொருட்களைச் செய்வோர் என கள் ஒரு விரிந்த பின்னணியம் கொண்டிருக்கிறது. பனையும் பனையேரிகளும் தான் கள்ளிற்கு அடிப்படை. கள் வேண்டாம் என்பது பனையையும் பனை சார்ந்து வாழும் தொல்குடிகளையும் அச்சுறுத்தும் செயலே அன்றி வேறில்லை. கள் இறக்கும் தொழில் அல்லது மரபு அறுபடாத ஒரு சங்கிலியாக பன்னெடுங்காலமாக கள் நமது வாழ்விலும்  மரபிலும் வந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகும். இதனைக் குறித்து புரிதலின்மையால் அல்லது வஞ்சத்துடன் எவரும் நமது வாழ்வாதாரத்திற்கு எதிராக நிற்பார்களேயானால் அவர்களை கேள்வியேழுப்புவது நமது கடமையாகிறது.

ஆகவே நமக்கு என்ன தேவை என்பதை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நமது தேவைகளை நம்மிடம் ஓட்டு கேட்க வருகிறவர்களிடம் சொல்ல வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்திற்கு உறுதி தருகிறவர்களுக்கே நாங்கள் ஓட்டளிப்போம் என ஒரு குரலாய் ஒலிக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். இன்று நாம் யாரையும் கொள்ளையடிக்கவில்லை ஆனால், உழைக்கிற நம்மை காவல்துறை கைது செய்கிறது. நாம் உழைத்து சேமிக்கிற  பணத்தை நம்மை மிரட்டி லஞ்சமாக பெற்றுக்கொள்ளுகிறார்கள். நமது தொழிற் கருவிகளான பானைகளை அனாயாசமாக உடைக்கிறார்கள், நாம் ஏறிக்கொண்டிருக்கிற பனை மரங்களிலிருந்து பாளைகளை வெட்டித்தாள்ளுகிறார்கள், நம்மை கைது செய்து நமது வேலைகளை செய்ய விடாமல் இடைஞ்சல் செய்கிறார்கள்.  நம்மை அடித்து குற்றவாளி போல, நடத்துகிறார்கள். இவைகளை கேட்க இன்று நாதியில்லை. ஆகவே, வருகிற தேர்தலில், நமது ஊருக்குள் வருகிறவர்களுக்கு என நாம் ஒரு பத்து அம்ச கோரிக்கைகளை வைப்போம். அந்த கோரிக்கைகளை நீங்களே வடிவமைக்க வேண்டுகிறேன். உங்கள் தேவைகளை நீங்கள் முன்வைக்கும்பொது, அதற்கான தீர்வை ஏதேனும் ஒரு கட்சி முன்மொழியும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினேன்.

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

பூரிகுடிசை மக்கள் உண்மையிலேயே குடிசை வாழ் மக்கள். பனை மரத்தினையும் தங்கள் உழைப்பினையும் மட்டுமே நம்பி வாழும் எளிய மக்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட இங்கு வந்து அனைவரையும் கருப்பட்டி காய்ச்ச சொல்லி அறிவுறுத்தியிருந்தேன்.  ஏனென்றால், கள்ளிறக்கும் உரிமை கிடைக்காது என்ற நிதர்சன உண்மையால் மட்டும் தான். ஆனால், இந்த சட்டமன்ற தேர்தல் ஒரு வாய்ப்பு. நாம் கேட்டு பார்க்கலாம். ஓட்டிற்காக எதுவும் செய்வார்கள் என்ற நிலையில் சற்றேனும் பொருட்படுத்துவார்கள் என்றே எண்ணி கூறினேன். இன்று அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் சூழலில், கள்ளிற்கான அனுமதி என்பதைக் குறித்த மவுனம் பனைத் தொழிலாளர்கள் எப்போதும் வஞ்சிக்கப்படும் சூழல் இருந்துகொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அந்த கூடுகை அம்மக்களை ஒரு முகப்படுத்தியது ஒரு முக்கியமான நிகழ்வு. தேர்தலை ஒட்டி இதுவரை எவரும் கள் அரசியல் முன்னெடுபுகளைச் செய்ததில்லை. மீண்டும் அங்கே நான் வரும்போது நமது பத்து அம்ச கோரிக்கைகளில் என்ன இருக்கலாம் என தீர்மானிக்கலாம் எனக் கூறினேன். அதற்கு முன்னதாக அவைகள் குறித்து நீங்களே கூடி விவாதிப்பது நல்லது எனக் கூறினேன். எனது பயணத்தில் பூரிகுடிசை மக்கள் மிக முக்கியமானவர்கள். இன்றுவரை பனை தொழிலினை கிராமமாக முன்னெடுப்பவர்கள். இக்கிராமத்தினை ஒரு பனை சுற்றுலா கிராமமாக மாற்றவேண்டும் என்பது எனது கனவு. இக்கிராமத்தினரோடு எனக்கிருக்கும் தொடர்பு பாண்டியன் அவர்களால் உருவானது. ஆகவே அவ்வப்பொது என்ன செய்யலாம் என திட்டமிட்டு சில விஷயங்களை முன்னெடுப்போம். நான் மும்பை போன பிற்பாடு கூட, பனையோடு விளையாடு என்ற ஒரு நிகழ்வினை நடத்தி, சுற்றியிருக்கும் கிராமத்துக் குழந்தைகள் பங்கேற்க வழிவகை செய்தோம். என்ன தான் செய்தாலும், கள் இறக்குவது தடை என கொள்ளப்பட்டால், இவர்கள் வாழ்வில் மட்டுமல்ல தமிழக பனையேறிகள் வாழ்வில் பெரும் சிக்கலே நீடிக்கும் என்பது தான் உண்மை.

அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். கள் எப்படி தங்கள் வாழ்வோடு இணைந்திருக்கிறது எனபதை பகிர்ந்துகொண்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி கள் ஒரு உணவாக அக்கிராமத்தில் இருக்கிறது எனவும், கள்ளின் மருத்துவகுணங்களையும் விவரித்தார்கள். பாண்டியனின் மகள் கரிஷ்மாவிற்கு கையில் ஒரு தோல் நோய் ஏற்பட்டபோது, உண்பொருள் குண அகராதியில் கள் தொழுநோயை குணமாக்கும் என்ற வாக்கியத்தை வாசித்து  அதனை தொடர் சிகிழ்ச்சையாக பாண்டியன் அளித்தார். கரிஷ்மாவின் தோல் வியாதிகள் குணமடைந்ததை நான் கண்கூடாக பார்த்தேன்.

பாண்டியன் சொல்லும் ஒரு கருத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. “கள் விற்பனைக்கு வந்தால், எவரும் வெளிநாட்டு மதுவென்று எதனையும் தேடிப்போக மாட்டார்கள், ஆகவே நம்மைச் சுற்றி இருக்கும் பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். மக்களின் வாழ்வில் நோய்கள் குறையும்போது மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் தேவையற்றதாகிவிடும், அப்படியே பனங்கள்ளில் இருக்கும் ஏழு வகையான தாது பொருட்கள் தேவையற்ற ஊட்டத்து நிறுவனங்களை புறமுதுக்கிட்டு ஓடச்செய்துவிடும். இவ்விதம் நோயற்ற வாழ்வு வாழும் போது மக்களது உடலில் ஒரு பொலிவு கூடிவிடும் அது, நம்மை சுரண்டிக்கொண்டிருக்கின்ற அழகு சாதன விற்பனையாளர்களை புறம் தள்ளிவிடும். ஆகவேதான் கள்ளை பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கட்டுபடுத்துகிறார்கள்”. அவரது கூற்று முற்றிலும் உண்மை. இன்று கள்ளிற்கான தடை அதில் இருக்கும் போதைக்கு எதிரானது அல்ல, அது நமது தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வலுவுள்ளதாலேயே, அதன் மீதான அடக்குமுறைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

இரவு வீட்டிற்கு வந்தபோது பனம்பழங்கள் தயாராக இருந்தன. நான் பனம்பழங்கள் சாப்பிட, பாண்டியன் பனை நாரினை உரித்து செதுக்கி கொடுத்தார்ர். கிட்டத்தட்ட எட்டு நாரினை சீர் செய்து கொடுத்தார். நானே அவைகளை  பொத்திக்கொள்ளுவேன் எனக் கூறி எடுத்துக்கொண்டேன். நாளை காலை எனது மாமா மகள் மெலடியுடைய திருமண நாள். நான் சென்று சேர வேண்டிய நிற்பந்தம், ஆகவே விஸ்வாவிடம் என்னை எப்படியாவது விழுப்புரம் பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டுவிடு என்றேன். அந்த இரவு நேரத்திலும், களைப்பினைப் பொருட்படுத்தாது என்னை கொண்டு விட்டான். “நாம இதுவரை சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம்ணா” என்றபடி ஒரு செல்ஃபி எடுத்தான். எங்களது சந்திப்பில் எப்போதும் ஒரு செல்ஃபி இருக்கும்.

விஸ்வாவுடன் விழுப்புரம் பேருந்து நிலையத்தில்

விழுப்புரம் வந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் கிடைக்காதது ஒருபுறம், நாகர்கோவில் பேருந்துகளும் குறைவாகவே வந்தன. ஆகவே திருச்சி வண்டி பிடித்தேன். பேருந்தில் இருந்தே, எனது தொப்பியை நார் கொண்டு பொத்த ஆரம்பித்கேன். நான்கு நார்களையே என்னால் பொத்த முடிந்தது. திருச்சியிலிருந்து மதுரைக்கு வண்டி பிடித்தேன். மதுரை வந்தபோது நாகர்கோவில் வண்டியைப் பிடிக்க சென்ற அவசரத்தில், ஏனாதிகள் செய்து கொடுத்த அனைத்து  பறிகளையும் பறிகொடுத்தேன். 

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 11

மார்ச் 16, 2021

பனை வழி சமூகங்கள்

பீட்டர்வருவது வரை காத்திருந்ததுவிட்டு என்னை பொறுப்பானவர் கரத்தில் ஒப்படைத்த திருப்தியில் சேவியர் சென்னை கிளம்பினார். பீட்டர் கடல் தொழில் செய்து உரமேறிய உடல் கொண்டவர். முகத்தை முழுவதுமாகவே மழித்திருந்தார். மென்மையாக பேசினார்.  அவரது வாகனத்தில் பெட்ரோல் இட்டுக்கொண்டு அருகிலிருந்த ஒரு ஏனாதி பழங்குடியினர் கிராமம் நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் தானே முந்தைய நாள் பார்த்த அந்த எளிய மனிதரைப் பார்த்தேன். அவருக்குக் கண் தெரியாது ஆனால் அவர் தான் இவ்வித பறிகள் செய்வார் என அறிந்துகொண்டேன். அவரது கிராமத்திற்கு போகும் வழியில் வேறொரு கிராமம் சென்றோம்,. மிக ஏழ்மையான கிராமம். சுமார் 30 வீடுகள் இருக்கலாம். அக்கிராமத்தின் துவக்கத்தில் ஒரு சிறு கோயில் இருந்தது, ஒரு சில ஆடுகள் நின்றன. எண்ணை காணாத   தலைகள் கொண்டவர்களே இருந்தார்கள். பீட்டர் தேடிய நபரைக் காணவில்லை. அருகில் ஒரு குளியலறை பனை ஓலைகளைக்கொண்டு மறைவு போல் அமைக்கப்பட்டிருந்த்தது.

பனை ஓலைகளைக் கொண்டு மறைத்து உருவாக்ககப்பட்ட குளியலறை

மீண்டும் பயணிக்கையில் ஒரு நீர்பிடிப்பு பகுதியில் இருந்த சேற்றுப்பகுதியில்  நின்றுகொண்டு இரு பெண்கள் இறால்  பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் முதிய பெண் தனது வாயில் பரியினை கடித்தபடி நீரில் மீன்களை துளாவிக்கொண்டிருந்தார். எங்கள் பைக் அந்த நீர் பிடிப்பு பகுதியில் காணப்பட்ட தற்காலிக சாலை வழியாக சென்று முக்கிய பாதையில் ஏறியது. பழவேற்காட்டின் எல்லையை கடந்து மிக ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த ஏனாதி கிராமம் சமீபத்தில் நான் பார்த்த பேரதிர்ச்சிகளுள் ஒன்று. நாங்கள் சந்தித்த அக்குடும்பம் அங்கிருந்த பாழடைந்த ஒரு வீட்டில் தங்கி  இருந்தது. சுவரில் ஒரு ஆள் நுழையும்படியான ஓட்டை. தெருவில் நாம் பார்க்கும் கைவிடப்பட்டவர்களிடம் இருக்கும், ஏகாந்தம், தனிமை, புறக்கணிப்பு, பசி, வறுமை என எல்லாம் கூட்டாக அங்கிருந்தது.

பறியில் ஒரு வகை

நான் அந்த  கிராமத்தின் தெருக்களில் மெல்ல நடந்து அதனை புரிந்துகொள்ள முற்பட்டபோது பெரும்பாலான வீடுகள் பனை ஓலையால் வேயப்பட்டதாக இருந்ததைக் காணமுடிந்தது. ஒற்றை அறை, அதற்கு செல்லும் ஒற்றை வாசல்கள் கொண்ட குடிசைகள்.  அனைத்துமே தற்காலிக குடிசை பகுதி போல தோன்றின. அனைத்து குடிசைகளும் ஒன்றுபோல் இருந்தன. வாசல் பகுதி சற்றே முன்னால் நீண்டபடி இருக்கும் ஒரு அமைப்பு என தனித்து அழகு கொண்டதாகத்தான் காட்சியளித்தது. வீடும் வீட்டடியும் இரண்டு முதல் 4 சென்று நிலம் மட்டுமே இருக்கலாம்.  பெரும்பாலான வீடுகளைச் சுற்றி இருக்கும் வேலிகளில், பனையோலையில் செய்யப்பட்ட பறி தொங்கிக்கொண்டிருந்தது.

பெருச்சாளி வடிவத்தை ஒத்திருக்கும் ஏனாதிகளின் குடிசை

பனை ஓலைக் குடிசைகள் செய்யும் திறன் இன்று ஒரு சில சமூகத்திடம் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு தொழில் நுட்பம். ஏனாதிகளிடம் காணப்படும் இந்த தொன்மையான கட்டிடக்கலை அவர்களுக்கு நல் வாய்ப்பை அளிப்பதாக இருக்கும் என நான் நம்புகிறேன். என்னிடம் அனேகர் பனை ஓலையில் குடிசைகள் அமைக்கும் நபர்களை ஒழுங்கு செய்து தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். பனை ஓலைக் குடிசைகள் என்பது மிகவும் குளிர்ச்சியான ஒரு வாழ்விடம். எத்தகைய வெம்மையிலும் ஒரு குடும்பம், வெம்மையின் தாக்கம் ஏதுமின்றி சுகமாக தங்க ஏற்ற இடம் பனை ஓலை குடிசைகள். இந்த வடிவமைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இனிமேல் வேறு யாரேனும் பனை குடில்கள் கட்டவேண்டும் என விருப்பம் தெரிவித்தால், ஏனாதிகளை தொடர்பு கொள்ள சொல்லவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டேன்.

அக்குடும்பத்தினரிடம் பேசினோம், பார்வையற்ற மனிதர் தம்மால் உடனடியாக செய்து தர இயலாது, ஓலைகள் இல்லை என்றார். அங்கிருந்தவர்களில் சற்றே திடகாத்திரமாக காணப்பட்ட வேறு ஒருவர், தான் பனை ஓலையில் பறி செய்து தர விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கு ஓலைகள் வேண்டுமே என்றார். ஓலைகள் எங்கே கிடைக்கும் என தேடியபோது, பழவேற்காடு பகுதிகளில், ஓலை விற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அங்கே வாருங்கள் என்றார். அங்கு சென்று மூன்று ஓலைகளை தெரிந்தெடுத்துக் கொடுத்தோம். மறுநாள் ஓலையில் பறிகள் தயார் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம்.

இன்னும் நேரம் இருந்ததால், எங்கே செல்லலாம் என யோசித்தபோது, பீட்டர் என்னை அங்கிருந்த மகளிர் ஓலை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார். அது நான் காலையில் வந்து பார்த்த இடம் தான். அவர்கள் என்னை காலையில் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகவே நான், இங்கே வந்திருக்கிறேன், வேண்டாம் போய்விடுவோம் என்றேன், அந்த பெண்மணி மீண்டும் வெளியே வந்து பார்த்து என்னை துரத்துவதற்கு ஆயத்தமானார்கள். ஆனால் பீட்டர் விடுவதாக் இல்லை. சார் சொல்லிவிட்டார்கள் என சேவியர் அவர்கள் பெயரைச் சொன்னார். யோசனையுடனும் சற்றே தயக்கத்துடனும் எங்களை உள்ளே அனுமதித்ததனர்.

பழவேற்காடு பெண்கள் ஓலை பொருள் கூட்டுறவு மையம்

மிகவும் பழைமையான ஆனால் சுத்தமான வீடு. உள்ளே ஐந்து முதிர்ந்த பெண்கள் பனை ஓலையில் பொருட்களை பின்னிக்கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக உள்ளே சென்று அமர்ந்தேன். அந்த பெண்மணிக்கு என் மீது நம்பிக்கை வரவில்லை. அங்கிருந்த பெண்கள் என்னோடு பேச்சுக்கொடுக்க துவங்கினார்கள். அனைவருமே ஐம்பதுகளைத் தாண்டியவர்கள். அவர்களோடு அமர்த்து பேசும்பொது, அங்கிருக்கும் அனைவருமே அழகு பொருட்களை மட்டுமே செய்கிறார்கள் என உணர்ந்துகொண்டேன். மேலதிகமாக என்ன தகவல்கள் கிடைக்கும் என தொடர்ந்து பேசியபோது, அவர்கள் அனைவருமே மரக்காயர் என்ற சமூகத்தினர் என்பது தெரியவந்தது.

மரக்காயர் சமூக பெண்கள் செய்த அழகிய பனை ஓலை பொருட்கள்

மரக்காயர் சமூகம் தங்கள் வீடுகளில் செய்யும் பனை ஓலைப் பொருட்களைக் குறித்து கேட்டால் அவர்களால் எதையும் சொல்ல முடியவிலை. இறுதியாக அமீர் பானு என்று சொல்லக்கூடிய ஒரு பெண்மணி, மரக்காயர் வீடுகளில் காணப்படும் துத்திப்பூ என்ற பொருளைக் குறித்து கூறினார்கள். துத்திப்பூ என்பது, பனை ஓலையில் செய்யக்கூடிய உணவுகளை மூடிவைக்கும் ஒரு மூடி தான். கத்தரிக்காய்  காம்பு போல மேலெழுந்து வளைந்து நிற்கும் தன்மையுடையது. உணவு பொருட்களை மூடி வைக்க பழங்காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை இன்னும் சற்று நாட்களை ஒதுக்கி அவர்களிடம் நெருங்கிப் பழகினால் மரக்காயர்களுக்கே உரித்தான அழகிய வேறு சில பயன்பாட்டு பொருட்களையும் மீட்டெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மரக்காயர் சமூக பெண்மணி பனை ஓலைப் பொருட்கள் செய்யும்போது

ஏனாதி சமூகத்தினரை பீட்டர் இருளர் என்றே அழைத்தார். ஒருவேளை தமிழகத்தில் இருளர் என்று அழைக்கப்படுபவர்களே ஆந்திராவில் ஏனாதிகள் என அழைக்கப்படுபவர்களாக இருக்கலாம் என எண்ணுகிறேன். ஏனாதிகள் இந்தியாவிலுள்ள பட்டியல் பழங்குடி இனத்தவர்கள். ஆந்திராவைச் சார்ந்த இவர்கள், ஆந்திர எல்லையில் இருக்கும் பழவேற்காடு பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இன்றும் வேட்டையாடி, சேகரித்து உண்ணும் வழக்கம் கொண்ட இவர்களை சென்னை அரசு அருங்காட்சியக கண்காணிப்பாளராயிருந்த எட்வர்ட் தர்ஸ்டன் (Edward Thurston, 1855– 12 அக்டோபர் 1935) என்பவர் “அனாதி” என்கிற சமஸ்கிருத பெயரிலிருந்து “துவக்கமே இல்லாதவர்கள்” என ஊகிக்கிறார். அதாவது “என்றும் இருப்பவர்கள்” என்றும் பொருள் கொள்ளலாம். தம்மைச் சுற்றி இருக்கும் நிலப்பரப்பைக் குறித்த கூர்ந்த அவதானிப்பு இவர்களிடம் உண்டு. ஒருமுறை இறை அடியவருக்கு உணவு வழங்கி பசியாற்றியபோது அவர்களுக்கு பாம்புகளை விரட்டும்  வரத்தினை அந்த இறை அடியவர்  வழங்கியதாக ஏனாதிகள் குறித்த தொன்மம் வழக்கிலிருக்கிறது. ஏனாதிகள் பனை ஓலை இட்ட குடிசைகளிலேயே வாழ்வது, அவர்களது வாழ்விடம் பன்னெடுங்காலமாகவே பனை சார்ந்த நிலவியலை அடிப்படையாக அமைந்தது என்பதை ஊகிக்க வழிவகை செய்கிறது.

இருளர்களைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பாம்பு மற்றும் எலிகளைப் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். எனது தோழியும் பல் மருத்துவருமான கடலூர் தாமரை, கிளப் டென் (Club Ten) என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். அவர்களின் களப்பணியில் பல இருளர்களை அவர்கள் சந்தித்து பணியாற்றிவரும்போது, பனை சார்ந்த ஏதேனும் பொருட்கள் அவர்கள் வைத்திருக்கிறார்களா எனக் கேட்டேன். எனது மனதில், இருளர்கள் பாம்பு பிடித்து போடும் பெட்டிகள் பனை ஓலையானாலதாக இருக்கலாம் என்பது எண்ணம். தாமரையால், அவைகளை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை, ஒருவேளை எனது எண்ணம் தவறாக கூட இருக்கலாம், ஆனால், ஒருமுறை தாமரை ஒரு இருளர் பெண்மணி செய்ததாக கூறி எனக்கு அனுப்பிய ஒரு படம், சற்றேறக்குறைய பறி போலவே காணப்பட்டது. ஆகவே இவ்விரு சமூகத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். மேலும் பாம்பு பிடிக்கும் வழக்கத்தினை இன்று அரசாங்கம் தடை செய்து வைத்திருக்கிறது. ஆகவே பாம்புகளை போடுகின்ற பெட்டிகள் பனை ஓலையில் அவர்கள் செய்திருந்தாலும் கூட, அதன் பயன்பாடு இல்லாது போனதால், இனிமேல் அவைகளை மீட்டெடுப்பது எளிதான காரியம் அல்ல.

நவீன காலத்தில் பனை பொருட்களின் அழிவு என்பது நவீன பொருட்களின் வரவால் மட்டுமன்றி, இது போன்ற தடைகள் மூலமாகவும் என்பதை அறியும்போது, அவர்களின் தொல் அறிதல்கள் எவ்விதம் சந்தடியின்றி மறைந்துபோகின்றன என்கிற பதைபதைப்பு எழுகிறது. பழங்குடியினரின் கலை வாழ்வு என்பது அவர்களின் வாழ்வை ஒட்டி வருவது. அவர்கள் வரலாறுகள், கலைகள் உயிர்ப்புடன் இருக்கக்கூடியவை. அவைகளின் ஒரு கண்ணியை பிரித்தாலும், அவர்கள் வாழ்வு மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும். தாமரை என்னிடம், மீன்களை எப்படி விற்கவேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை, அப்படியே ஓலைகளை அவர்கள் எடுத்துக்கொள்ள அருகிலிருக்கும் மக்கள் அனுமதிப்பதில்லை என்று கூறியிருந்தார். வாழ்வில் ஓரங்கட்டப்பட்டவர்களை மேலும் நெருக்குவது என்பது சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் வாடிக்கையாகிவிட்டது. 

அன்று இரவு மீண்டும் என்னை சற்று தொலைவிலிருக்கும் ஒரு ஏனாதி கிராமத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். உலகின் மற்றொரு பாகத்திற்கு நான் செல்லுகிறேன் என்கிற எவ்வித அறிதலுமின்றி நான் பயணப்பட்டேன். இருள் நிறைந்த அந்த சாலையில் தனது மொபைல் டார்ச் லைட் ஒளி பாய்ச்ச பீட்டர் வண்டியில் சென்றது என்னை அதிர்ச்சியில் உறையச் செய்தது. எதிரே எங்கும் வண்டிகள் வராத குக்கிராம சாலை. ஆனால் அவர் அவ்விதம் வண்டியை ஓட்டும்போது எனக்கு உள்ளூர ஒரு நடுக்கம் இருந்துகொண்டிருந்தது. நான் சாதாரணமாக அப்படி நடுங்குகிறவன் அல்ல. ஆனால் எங்கோ தொலைவில் செல்கிறது போல ஒரு படபடப்பு நெஞ்சுக்குள் அடித்துக்கொண்டிருந்தது. 

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நாகர்கோவில் கஸ்பா சபை புத்தாண்டு ஆராதனையை முடித்த கையோடு மாறாமலை செல்ல திட்டமிட்டோம். எனது நண்பன் விஸ்டன் மற்றும் எனது மாமா மகன் ஜானியும் உடன் உண்டு. பின்னிரவு நேரம், கீரிப்பாறை செக்போஸ்ட் அருகில் வண்டியை உருட்டியபடி உறங்கிக்கொண்டிருக்கும் காவலர்களுக்குத் தெரியாமல் காட்டிற்குள் சென்றோம். ஜானி பயம் அற்றவன். அவன் போகும் வேகத்தை வெகு சிரமப்பட்டே தொடரவேண்டியிருந்தது. மேலும் அவன் தனியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான், எனது வண்டியின் பின்புறம் விஸ்டன் இருந்தான். காட்டிற்குள் வேகமெடுத்து சென்றுகொண்டிருந்தோம். யானை இருக்கும் காடு, எப்போது வேண்டுமானாலும், பன்றிகள் எதிர்படலாம், செந்நாய்களின் கூட்டம் எங்களை சுற்றி சூரையாடலாம், காட்டு மாடுகள் எங்களை தூக்கி வீசலாம். ஆனால், நாங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல் பயணப்பட்டுகொண்டே இருந்தோம். காட்டிற்குள் புத்தாண்டை கொண்டாடுவதும், புது புலரியில் காட்டிற்குள் நிற்பதும் வாழ்வில் கிடைக்காத அனுபவம் என்று எண்ணி, பரவசத்துடனும் உள்ளக் கிளர்ச்சியுடனும் சென்றுகொண்டிருந்தோம். ஒரு கிளைச் சாலைப் பிரியும்போது ஜானி அதில் வண்டியை செலுத்தினான். சரளைக்கற்களும், குழியும் பெரும் கற்களும் நிறைந்த அந்த பாதையை ராஜ பாதையென நினைத்து ஜானியின் வண்டி சென்றுகொண்டிருந்தது. நானோ திகிலுடன் அவனை தொடர்ந்துகொண்டிருந்தேன். ஜானி சென்று சேர்ந்த இடம் ஒரு நீரோடை, பாதையின் குறுக்காக ஒரு சிற்றோடை ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்வது என தெரியாமல் ஜானி அங்கே நின்று விட்டிருந்தான். அப்போது விஸ்டன் சொன்னான், வழி தப்பி வந்துவிட்டோம், மேலேறி செல்லுவோம் என்று. மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு சரியான பாதையை வந்தடைந்தோம்.

லைட் ஆஃப் செய்துவிட்டு வண்டி ஓட்டுவோமா என்று விஸ்டன் கேட்டான். அக்காலகட்டத்தில் அது எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு. விஸ்டனுடைய யமகாவில், இருக்கும் வெளிச்சம் என்பது மிக மங்கலானது. அது எரிவதும் எரியாமல் இருப்பதும் ஒன்றுதான். ஆனால், எதிரில் வரும் வண்டிகளுக்கு அது ஒரு முக்கிய அடையாளம். ஆகவே பல நாட்கள் இருட்டில், வண்டியின் முன் விளக்கை அணைத்துவிட்டு வண்டியை ஓட்டியிருக்கிறோம். அதெல்லாம் தெரிந்த சாலைகளில். மேலும், அன்று கண் பார்வை வெகு துலக்கமாக இருந்தது. வெகு மங்கலான ஒளியுமே கூட போதுமானதாக இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலே இள ரத்தத்தில் ஊறி ததும்பி நிற்கும் பைத்தியக்கார சாகச வேட்கை.  இது முற்றிலும் புதிதான ஒரு இடம். அடர் காடு. என்ன சம்பவிக்கும், எதிரில் என்ன நிற்கும் என தெரியாது. சரிடா என்று கூறி துணிந்து வண்டியை எடுத்தேன். மயிற்கூச்செறியும் ஒரு பயணம் அது. மலை வளைந்து வளைந்து செல்ல, வண்டியின் சக்கரத்தில் உள்ள அதிர்வுகளையும் இருளுக்குள் இருக்கும் ஒரு மென்வெளிச்சத்தையும் பிடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தோம். ஓரிடத்தில் யானை நிற்பதுபோல் தோன்ற பயத்தில் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டேன். ஜானி, பின்னால் வந்து என்னாச்சுணா என்றான். பயத்தை வெளியே காட்டாமல், இங்கேயே நிற்போம் என்றேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அன்று அங்கு நின்றோம். நல்லவேலையாக பயந்தபடி ஏதும் நிகழவில்லை. சற்றே பொழுது புலர்ந்தபோது, அங்கிருந்து புறப்பட்டு ஒரு கிராமத்தை சென்றடைந்தோம். முன்பின் தெரியாத ஒரு பெண்மணி, நீர் தெளித்து வாசல் கூட்டிக்கொண்டிருந்தவர்கள், டீ வேணுமா என்று கேட்டு சுடச் சுட பாலில்லா டீ கொடுத்தார்கள்.

அந்த வயதும் அன்றைய நிலையும் இப்போது இல்லை. ஆனபடியால், மெழுகுதிரி போன்ற ஒளியில் நாங்கள் செல்லுவதே சிலிர்ப்பாக இருந்தது. செல்லும் வழியில் பனை மரங்கள் நிற்பதைப் பார்த்தேன். கூட்டமாக ஓரிடத்திலும், ஆங்காங்கே ஒன்றிரண்டாகவும் தென்பட்டது. வேறு மரங்கள் அதிகமாக கண்ணில் படவில்லை. ஓரிடத்தில், வழி தெரியாமல், ஓடைக்குள் வண்டி செல்ல இருந்தது, பீட்டர் எப்படியோ சுதாரித்து வண்டியை நிறுத்தினார்.

தேடித்தேடி இரவில் ஒரு கிராமத்தைச் சென்றடைந்தோம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏனாதிகளின் குடிசைகள் இருந்தது. அந்த இரவு வேளையில் நான் பார்த்த அந்த குடிசை எங்களை நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு பெருச்சாளி போல காட்சியளித்தது. ஏனாதிகளின் கட்டிடக்கலையின் சிறப்பு இதுதான். அவர்களின் வீடுகளை தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் அடையாளம் காணும்படியாக ஒரு வடிவமைப்பு. மிகச்சிறிய கூடம், நுழைவதற்கான வாசலும் சற்று முன் நீட்டி கூரையிடப்பட்டிருந்தது. இந்த வடிவம் தான் எங்கும் இருக்கிறது என கண்டுகொண்டேன். அது ஒரு தொல் பழங்கால வடிவம். கிட்டத்தட்ட ஆறுக்கு எட்டு என்ற அளவில் அந்த வீடு இருக்கலாம். வீட்டின் முத்தத்தில் இரண்டு பறிகள் இருந்தன. இவ்விதமான ஒரு வீட்டினை அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என கேட்டபோது, ரூ. 6000/- எனக் கூறினார்கள். என்னால் புரிந்துகொள்ளவே முடியவிலை. மும்பை தாராவியில் உள்ள குடிசை வீட்டிற்கு ஒரு மாத வாடகை ரூ 6000 இருக்கும். அதனைக் கொண்டு மொத்தமாக ஒரு வீட்டையே உருவாக்கிவிட முடியுமா? ஆச்சரியத்துடன் பின்னர் இதனை சேவியரிடம் பகிர்ந்துகொண்டபோது “Welcome to Pulicat” என்றார்.  அத்தனை வளம் இருந்தபோதும் வறுமை கோரத்தாண்டவமாடும் ஒரு காட்சிகளைப் பார்க்கையில் ஒரு வித பாரம் நெஞ்சை அழுத்தியது.

இறால் பிடிக்கும் ஏனாதி பெண்மணி

பல இடங்களுக்கு போகும்போது, அந்த இடங்களை மீண்டும் தேடிப்போகவேண்டும் என்கிற ஆவல் எழும், ஆனால் பழவேற்காடு என்னும் இடத்திற்கு நான் என் வாழ்நாளில் செல்லவே இயலாது. அங்கு நான் செல்லவேண்டுமென்றால், பனை சார்ந்த பணிகளில் நான் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தாலே சாத்தியம். அங்கு செய்யவேண்டிய பணிகள் அவ்வளவு இருக்கின்றன. ஒருநாள் அவர்கள் பெற்றுக்கொள்ளும் இறால், அவர்களுக்கு மிகச்சிறந்த ஊட்டசத்து மிக்க உணவு. நம்மால் தினம் தோறும் அவ்வளவு இறால்களை வாங்கி ஒரு குடும்பத்தை ஓட்டிவிட முடியாது, ஆனால், அனைவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். கிடைக்கும் பணம் அன்று தானே டாஸ்மாக் நோக்கி செல்லுகிறது. குடிக்க பணம் இருந்தால் போதும் உணவு என்று ஏதும் தேவையில்லை என்ற வாழ்கை முறை. அனைவருமே மெலிந்து பெலன் குன்றிப்போய், ஊட்டச்சத்து கூறைபாடுள்ளவர்களாய் காணப்படுகிறார்கள். இவர்களின் நிலை அறிந்து அங்குள்ள மீனவர்களும் இவர்களிடம் மிகக்குறைந்த விலையிலேயே இறாலினை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

நாங்கள் தேடிச்சென்ற மற்றொரு கிராமம், சற்றே வசதி படைத்ததாக இருந்தது. ஆனாலும் பிந்தங்கிய கிராமம் தான். வன்னியர்கள் வாழும் கிராமம் என்றார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தான் உடனடியாக மனதிற்கு வந்துபோனது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பனைக்காக குரல் கொடுத்தவர். அங்கு நான் விசாரித்த வகையில் பனைகள் மீதான உரிமை கொண்டவர்கள் அவர்கள் தான். வன்னியர்களுக்கும் பனைக்கும் தொடர்புண்டு என்று இங்கே வந்த பின்புதான் அறிந்துகொண்டேன். வன்னியர்கள் பனை ஏறுவதோடு, பனை ஓலைகளிலும் பொருட்களைச் செய்கிறார்கள். அங்கு அர்சுனன் என்ற நபரை சந்தித்தோம். மிகப்பெரிய பனை ஓலைகளை இணைத்து அவர்கள் செய்யும் பறி விரிந்த பானையைப்போல் பிரம்மாண்டமாக காணப்பட்டது. ஏனாதிகளின் பின்னல் முறையில், பானை போல வயிறு திறண்டு வாய் ஒடுங்கிய ஒரு வடிவம். அளவிலும் உறுதியிலும் ஏனாதிகளைக் காட்டிலும் திடம் அதிகமாக இருக்கும் என்பதை முதல் பார்வையிலேயே ஒருவர் நிதானித்த்துக்கொள்ள முடியும். ஆகவே தங்கள் உணவிற்கு மிஞ்சிய மீன்களை விற்பனை செய்யும் பொருட்டு இவ்வித மிகப்பிரம்மாண்டமான பறிகளை வன்னியர்கள் தயாரித்திருக்கிறார்கள் எனவும், தங்கள் உணவிற்கான தேவைகளோடு ஏனாதிகள் நிறுத்திக்கொண்டார்கள் என்பதும் இதன் மூலம் வெளிப்படுகிறது. 

வன்னியர் பயன்படுத்தும் பறி. இதனை பெட்டி என்கிறார்கள்.

நிச்சயமாக வன்னியர் இன மக்கள் செய்யும் பறியானது ஏனாதிகளிடமிருந்து பெற்ற அறிவின் தொடர்ச்சி தான். ஆனால் இன்று ஏனாதிகள் வன்னியர் பயன்படுத்தும் பறிகளைப்போல் ஏதும் செய்துவிடமுடியாது. ஒவ்வொரு ஜாதிக்கும் தகுத்த வடிவங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. பழவேற்காடு பகுதிகளிலேயே மூன்று சாதிய பின்புலம் கொண்டவர்கள் மூன்று வித்தியாச பின்னணியத்தினை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டவர்கள், பனையினை தங்கள் வாழ்வின் அங்கமாக கொண்டிருகிறார்கள் என்பது எனக்கு மிகப்பெரிய செய்தி. தொல் குடிகளான ஏனாதிகள், கடற்கரை வாசிகளான மரக்காயர்கள் மற்றும் இம்மண்ணின் வாசிகளான வன்னியர் என மூன்று விதமான மக்களின் வாழ்வில் பனை மையமாக நின்றிருப்பது நாம் உற்றுநோக்கத்தக்கது.  பனை இருக்கும் நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்கு, பனை ஏதோ ஒருவகையில் பயன்பட்டபடி இருக்கிறது. பனையை விலக்கி வாழ தமிழ் சமூகம் எப்போதும் நினைத்ததில்லை. இம்மூன்று சமூகங்களுக்குமிடையில் காணப்படும் பனை சார்ந்த வாழ்வியல் நுட்பங்களை எவரேனும் ஆழ்ந்து கற்று வெளிப்படுத்துவது பேருதவியாக இருக்கும்.

பறியின் வேறு வடிவம்

அன்று இரவு எனது தூக்கம் தள்ளிப்போனது. உணவு சேகரிப்பவர்களால் ஏன் உணவினைக் கொண்டு திருப்தியாக வாழ முடியவில்லை? சிறந்த உணவுகள் தேடி சேகரிக்கும் மக்களிடமிருந்து அதனை தட்டிபறிக்கும் நுட்பத்தினை யார் புகுத்தியது? இவர்களுக்குள் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டினை எப்படி எளிமையாக தீர்ப்பது? குடிப்பழக்கம் இவர்களுக்குள் ஏற்படுத்தும் தீங்கிலிருந்து இவர்களைக் காக்கப்போவது யார்? போன்ற கேள்விகள் என்னைக் குடைந்தபடி இருந்தன.

பீட்டரும் ரஜினியும்

மறுநாள் அதிகாலையில் ரஜினி அவர்கள் என்னை அழைத்தார்கள். ரஜினி என்னை படகில் பழவேற்காடு பகுதியை சுற்றிக்காட்டும்படி சேவியரால் ஒழுங்கு செய்யப்பட்டவர். மற்றொருபுரம் பீட்டரும் அழைத்தார். நான் எங்கே செல்ல வேண்டும் என என்னையே கேட்டார்கள். எனக்கு எங்கே செல்ல வேண்டும் என சொல்லத் தெரியவில்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் ஏனாதிகளை நான் சந்திக்க வேண்டும் என்றேன்.  காலை உணவினை வாங்கிக்கொண்டு, தேவையான நீரையும் எடுத்துக்கொண்டு சென்றோம். ஒரு அரைமணி நேர பயணத்தில், அங்கிருந்த ஒரு சிறிய தீவைக் கண்டோம். அங்கு நின்றிருந்த படகுகளண்டையில் நாங்கள் சென்ற படகை ரஜினி நிறுத்தினார். நான் இறங்கியவுடன், படகை மற்றொருபுரம் எடுத்துச் சென்று நிறுத்தினார்கள்.

படகில் நானும் ரஜினியும்

இறங்கிய இடத்தில் ஒரு குடும்பம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அவர்கள் ஏனாதிகள் என அங்கிருந்த பறிகள் பறை சாற்றிக்கொண்டிருந்தன. பேச்சுக்கொடுத்தபோது அவர்கள், பெந்தேகோஸ்தே சபையில் இணைந்திருப்பதாக அறிந்துகொண்டேன். இக்காலத்தில் பெந்தேகோஸ்தே சபைகள் எளியவர்களை தேடி வரும் நிகழ்வு கவனத்திற்குட்படுத்தப்படவேண்டியது ஆகும். இக்குடும்பம் மற்ற ஏனாதிகளை விட சற்றே வசதியானவர்கள் என அவர்கள் வைத்திருந்த படகும், வலைகளும் கூவி அறிவித்தன. நேற்றைய தினம் மாலையில் சென்ற கிராமத்திலும் கூட இவ்விதமான சில குடும்பங்களைப் பார்த்தேன். கிறிஸ்தவ சேவை பணிகள் இங்கு நடைபெறுவது பாராட்டுக்குரியது. அங்குள்ள கத்தோலிக்க திருச்சபை ஏனாதிகள் வீடு அமைக்க உதவி செய்கிறது என்பதாக சேவியர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் இவைகள் போதாது, இம்மக்கள் விடியலைக்காணவேண்டுமென்றால், ஒட்டுமொத்த தமிழகமும் தங்கள் கரங்களை நீட்டி இவர்களை அரவணைத்துக்கொள்ளவேண்டும். சாதி சமயம் பாராது இங்கு மக்கள் வந்து பணியாற்ற வேண்டும்.

மணலில் புதைத்து சுட்ட மீன்கள்

இப்படியான எண்ணத்திற்கு ஊடே, வேறொரு எண்ணமும் தலை தூக்கியது. பொதுவாக காடுகளை பேணும்படியாக பழங்குடியினரை காட்டிலிருந்து வெளியேற்றுவது வழக்கம். அது மிகச்சரியான அணுகுமுறை இல்லாவிட்டாலும், அது போல பழவேற்காடு மண்ணிற்கு சொந்தமில்லாதவர்களை அப்பகுதியிலிருந்து விலக்கினால், ஒருவேளை இவர்கள் வாழ்வு மேம்படுமா என எண்ணிப் பார்க்கிறேன். குறைந்தபட்சம் இவர்களின் உணவிற்கான உறுதி ஏற்படும், இவர்களை உறிஞ்சி சக்கையாக வெளியேற்றும் டாஸ்மாக் போன்றவைகள் இல்லாமல் இருந்தால் அரசு வழங்கு மற்ற உதவிகளை கொண்டு சரசரவென முன்னேறும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.  இறாலும் பனையும் இருக்குமிடம் வளம் மிக்கதே. அதனை சீர்படுத்தி இம்மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டியது அரசின் கடமை. மக்களின் வாழ்வு சிறக்க அரசுகள் அப்போது தான் முன்வருமோ தெரியவிலை.

அந்த தீவில் உணவு உண்ணும் முன்பதாக ரஜினியும் பீட்டரும் இணைந்து வலையை போட்டார்கள். காலை உணவை முடித்துவிட்டு வந்து வலையை எடுத்துப்பார்த்தபோது இரண்டே இருண்டு சிறிய மீன்கள் தான் சிக்கியது. அப்பகுதியில் முட்கள் வெட்டிபோட்டிருந்தார்கள். அந்த முட்களில் வலை சிக்கிவிட்டது. மிகுந்த பிரயாசப்பட்டு வலையினை  முட்களிலிருந்து பிரித்து எடுத்தார்கள். மீண்டும் ஒரு தீவுக்கு சென்று அங்கே கிடைத்த முட் சுள்ளிகளை அடுக்கி மணலுக்குள் மீனை போட்டு சுட்டு கொடுத்தார்கள். தனித்துவமான அந்த ஆதி சுவையினை அனுபவித்து ரசித்தேன். அந்த தீவு வெண்மணலால் சூழப்பட்டு அழகுற காட்சியளித்தது.

பறியை பல்லால் கடித்து பிடித்துக்கொண்டு இறால் துழாவும் கண்ணிழந்த மனிதர்

குமரி மாவட்டத்தில் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ரூஃபியோ என்ற சிறுவனின் மாமி பழவேற் காட்டில் தான் தங்கியிருக்கிறார்கள். மதியம் அவர்களை சந்தித்து உணவுண்டு திரும்பினேன். சென்னை செல்லும் முன்பு, ஓலைப் பெட்டிகளை வாங்க வேண்டூம். பீட்டர் என்னை அழைத்துக்கொண்டு வேறு ஒரு கிராமம் செல்ல வெண்டும் என புறப்பட்டபோது அங்கே காவல்துறை வாகனங்களை பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். தமிழகத்தில், வாகன பரிசோதனை என்பதே பணம் பறிக்கும் ஒரு வழிமுறை தான். அனைத்து வாகன ஓட்டிகளிடமும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து வசூல் நடத்துவதே இவ்வகை நேரங்களில் நடப்பது. திரும்பிவிடுவது நல்லது எனக் கூறி அங்கிருந்து பழவேற்காடு திரும்பினோம்.

பெண்கள் வரிசையாக இறால் பிடிக்கும் காட்சி

வரும் வழியில் ஒரு மிகப்பெரிய சானல் வெட்டப்பட்டிருந்தது, அதில் பத்து பெண்கள் தங்கள் தலைகளில் பறியினைப் போட்டபடி ஒரே வரிசையில் நின்று இறால் பிடித்துக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட தேயிலை பறிக்கும் பெண்கள் தங்கள் முதுகில் இட்டிருப்பதுபோன்ற அமைப்பு. பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நான் புகைப்படம் எடுக்கத்துவங்கியபோது ஏன் எதற்காக என்று பல்வேறு கேள்விகள். நான் எனது தொப்பியைக் காட்டினேன். எனது பயணம் குறித்து சொன்னேன். மிக வேடிக்கையாக என்னோடு பேசிக்கொன்டிருந்தார்கள். ஆளாளுக்கு என்னைக்குறித்து விசாரித்தார்கள். எனது மனைவி குறித்து, பிள்ளைகள் குறித்து, வேலை குறித்து என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள். நான் அவர்களிடம், அவர்கள் கணவர்களின் தொழிலைக் குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் “வீட்டுக்காரங்க ஒழுங்கா இருந்தா நாங்க எதுக்கு இந்த வெயில்ல இங்கே வந்து கஷ்டப்படுகிறோம்” என்றனர். இவர்கள் கொண்டு செல்லும் பணத்தில் தான் அவர்களின் குடி களியாட்டங்கள் இருக்கின்றன. அவர்களின் சமூகம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள கிராமத்தில் தான் அவர்கள் வசித்துவருவதாக அறிந்துகொண்டேன்.

வேகமாக இறால் பிடித்தபடி முன்னேறிச் செல்லும் பெண்கள்

பீட்டருக்கு நேரம் ஆவதுபோல தோன்றியது. அப்போது அங்கிருந்த ஒரு பெண்மணி போட்டோ எல்லாம் எடுக்குறீங்க எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றார்கள். என்ன வேணும் கேளுங்க உடனே செய்கிறேன் என்றேன். இவ்வளவு தூரம் கேட்டியேப்பா அதுவே போதும் என்று அவர்கள் முடித்துக்கொண்டார்கள். வேறு ஒருவர், தண்ணியிலேயே நிற்கிறோம், ஒரு டீ தண்ணி வாங்கிதரக்கூடாதா என்றார்கள். வாங்கலாமே என்றேன். மீண்டும் ஒரு 5 கிலோ மீட்டர் டீ கடைக்கு செல்லவேண்டும். அங்கே போய், டீ மற்றும் பிஸ்கட் எல்லாம் வாங்கிகொண்டு வந்தபோது அனைவரும் இறால் பிடித்துக்கொண்டு திரும்பும் வேளை ஆகிவிட்டது. தண்ணீரில் நின்றபடியே டீ வாங்கி குடித்துவிட்டு என்னை வாழ்த்தி அனுப்பினார்கள்.

கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. (1 யோவான் 4:21 திருவிவிலியம் ) என்ற வாசகம் என்னுள் வந்து சென்றது.

மீண்டும் நாங்கள் பழவேற்காடு வந்தபோது ஓலை பறிகள் தயாராக இருந்தது. அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி பேருந்தில் பயணித்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 8

பிப்ரவரி 19, 2021

பறவைகள் பனைவிதம்

2017 ஆம் ஆண்டு, பனையேற்றம் என்ற குழுவினை இளவேனில்  மற்றும் சாமிநாதன் எனும் இளைஞர்கள் துவங்கியிருந்தனர். பனையேற்றம் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பனையேற்றம் என்பது ஒரு முழுமையை சுட்டி நிற்கும் சொல். பனை பெரும்பாலும் தனித்து நிற்கும் ஒன்றைக் குறிப்பதாகவே நான் காண்கிறேன்.  பனை சார்ந்து தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வு அரும்பியிருந்த காலம் அது.  பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில், செம்மை நிகழ்த்தும் பனை கூடல் என்ற  நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். செம்மை அமைப்பும், செம்மையினை வழி நடத்தும் செந்தமிழன் அவர்களும் எனக்கு அப்போது தான் அறிமுகம். நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பனங்காட்டில்  வைத்து நடைபெற்றது. அனைவருக்குமான உணவினை அங்கு வந்தவர்களே இணைந்து பொங்கினார்கள். அனைத்து செலவுகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அன்று மதியம் செந்தமிழன் பேசினார். பனை குறித்து அதிகம் பேசவில்லை என்றாலும் இயற்கையான ஒரு மரத்தினை சார்ந்து வாழ்வது எவ்வகையில் நமக்கு உகந்தது என அவருக்கே உரிய பாணியில் பேசினார். தமிழர்களது வாழ்வில் இனிப்பு என்பது கருமையோடு தொடர்புடையது என்பதை, தேன், வெல்லம், கரும்பு, கருப்பட்டி என அவர் வரிசைப்படுத்தி கூறியது, வெள்ளைச் சர்க்கரைக்கு எதிரான மண் சார்ந்த குரல் என்றே பார்க்கிறேன்.

பாண்டிச்சேரி கோபினாத் முனிசாமி எடுத்த புகைப்படம்

இரவு ஒரு அமர்வு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பனை குறித்து விரிவாக நான் அறிந்தவற்றைக் குறித்து பேசினேன். திருச்சபைக்குள் இருந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுள், தனியனாக நான் எழுப்பும் கூக்குரலையும், எனது எளிய பங்களிப்புகளையும் குறித்து விவரித்தேன். “ஈராயிரம் ஆண்டுகளாக குருத்தோலைப் பண்டிகையினை கொண்டாடும் திருச்சபை ஏன் ஒரு பனை மரத்தைக்  கூட நடவில்லை”? என திருச்சபை நோக்கி நான் எழுப்பிய கேள்வியினை பகிர்ந்தபோது அனைவரும் நிமிர்ந்து என்னைப் பார்த்தனர். அக்கூடுகையில் கிறிஸ்தவரல்லாதோர் பெருவாரியாக இருந்தாலும், நான் என்ன கூற வருகிறேன் என மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால் எவருமே என்னிடம் கேள்வி எழுப்பவில்லை. அதற்கு காரணம் பனை குறித்த எந்த அறிமுகமும் அவர்களுக்கு இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் பனை குறித்து அறிந்துகொள்ள வந்தோம் என அனைவரும் ஒத்துக்கொண்டனர். இது ஒரு முக்கியமான புரிதலை எனக்கு ஏற்படுத்க்டியது. பனை சார்ந்து வாழும் தென் மாவட்டட்தைச் சார்ந்டவர்களுக்கு பனை குறித்து ஒரு விலக்கமும், பனை குறித்த புரிதலற்ற சமூகம் பனை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற காட்சி வெளிப்பட்டது. அன்று வந்திருந்தவர்களில் அனேகர் எனது தொடர்பு எண்ணை எடுத்துக்கொண்டார்கள். அன்று இரவு அங்கே  தங்குவதற்கு பள்ளிகூடம் ஒன்று இருந்தாலும், பெண்கள் உட்பட அனைவருமே வெளியே கிடந்த கடல் மணலில் தான் உறங்கினோம். எனது பயணங்களில் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இது அமைந்தது. இப்படி கட்டற்று தேடல் ததும்பி வழியும்  ஒரு குழுவினரை என் வாழ்வில் நான் சந்தித்ததே இல்லை. 

பனம்பழம் சாப்பிடும் குரங்கு

இங்கு வைத்து தான் கல்யாண் குமார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் சென்னையை அடுத்த திருவள்ளூரில் பனை சார்ந்த பயிற்சி ஒன்றை ஒழுங்குசெய்தார்.சுமார் 10 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சிக்கு இரு திருநங்கைகள் வந்திருந்தார்கள். நான் மிகவும் மதிக்கும் ஐயா கலையரசன் அவர்களை அந்த நிகழ்விலே தான் சந்தித்தேன்.  கல்யாண் குமார், சென்னை வந்தால் என்னை பார்க்காமல் செல்லக்கூடாது என அன்புகட்டளை இட்டிருந்தார், ஆகவே, பெரும்பாலும் சென்னை செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்துவிடுவேன். நான் சென்றால் தனது வங்கி வேலையைக் கூட கல்யாண் ஒதுக்கிவைத்துவிட்டு என்னுடன் பயணிப்பார். அவர் என்மீது கொண்ட அன்பு ஆழமானது. திருமாவளவன் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி, பனை விதைகளை சேகரிக்க துவங்குகையில், எனக்கு பதிலாக கல்யாண் அவர்களை தான் நான் உதவிக்கு அனுப்பினேன். இப்போதும் சென்னை செல்ல ஆயத்தமாகும்போது கல்யாண் தான் நினைவுக்கு வந்தார்.

பனம்பழம் சாப்பிடும் ஆடுகள்

கல்யாண் தனது வேலைகளுக்கு மத்தியில், எனக்காக நேரத்தை ஒதுக்கினார். விடுப்பு எடுத்து எனக்காக காத்திருந்தார். தாம்பரத்தில் இறங்கி, அவரது வீடு இருக்கும் நிமிலிச்சேரி பகுதிக்கு பேருந்தில் சென்று இறங்கினேன். அவர் பேருந்து நிலையத்திற்கு வந்து என்னை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது அப்பாவும் அம்மாவும் வீட்டிலிருந்தார்கள். மனைவி அருகிலிருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.  அவரது வீட்டில் குளித்து சுட சுட தோசை சாப்பிட்டுவிட்டு பழவேற்காடு நோக்கி கிளம்பினோம். பொது முடக்கம், அனைவரையும் சற்று அதிகமாகவே சீண்டிப்பார்த்திருக்கிறது. கல்யாண் தனது வீட்டை சமீபத்தில் தான் கட்டியிருந்தார். ஆகவே வருமானம் கிடைக்கும்படியாக ஏதேனும் ஒரு தொழிலினை மேற்கொண்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை.  மீன் கடை வைக்கும் எண்ணம் தனக்கிருப்பதாகவும், பழவேற்காடு சென்றால், மீன்களை வாங்கும் வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ளலாம் என்று கூறியபடி வந்தார்.

பனை ஓலையில் தும்பி

அவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு  ஈச்சமரத்தில் சில தூக்கணாங் குருவி கூடுகள்  இருப்பதைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சற்று தூரத்தில் வேறொரு பனை மரத்தில்  தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். நாங்கள் செல்லும் வழியில் கூட பனை மரங்களில் பல இடங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பெரும்பாலும் பார்க்க முடிந்தது. வெகு ஆச்சரியமாக அன்று  ஒரு தென்னை மரத்திலும் தூக்கணாங் குருவிக் கூடுகளைப் பார்த்தேன். எனது நண்பனும் பறவைகளை மிக அதிகமாக நேசிக்கும் பாண்டிச்சேரி ராம், என்னிடம் அடிக்கடி சொல்லுவான் “தூக்கணாங் குருவி வேறே எங்கண்ணே இருக்கும்? பனை மரத்திலே தானே அண்ணே கூடு கட்டும்”. அவனது கூற்று முற்றிலும் உண்மையானது. பனை மரங்களே அவைகளின் விருப்பத்திற்குரிய வாழிடம். அப்படி பனை மரங்கள் இல்லாதிருந்தால் அவைகள் வேறு மரங்களையோ புதர் செடிகளையோ வேறு இடங்களையோ தெரிவு செய்துகொள்ளும். வயல் வெளிகள், மற்றும் சதுப்பு நிலங்களிலோ அல்லது நீர் இருக்கும் கிணறுகள் அருகிலோ,  ஒற்றையாக நிற்கும் மரங்களை தெரிவு செய்து தங்கள் கூடுகளை தூக்கணாங் குருவிகள் அமைப்பதை பார்த்திருக்கிறேன்.

வடலி பனையில் கரிச்சான் குருவி

2017 ஆம் ஆண்டு மும்பை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் எடுக்கப்பட்ட துக்கணாங் குருவி கணக்கெடுப்புகளில், இந்திய அளவில் தூக்கணாங் குருவிகள் குறைந்து வருகின்றன என பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் (BNHS) பதிவு செய்கிறார்கள். இப்பதிவில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் எந்த முடிவிற்கும் வரவியலாது ஏனென்றால், இது ஒரு முழுமையான ஆய்வு அல்ல, ஆய்வின் துவக்கம் மட்டுமே. ஆனால், அவர்கள் வெளிப்படுத்தும் சந்தேகம் உண்மையானது. அந்க்ட சந்தேகம் எனக்குளூம் அப்படியே இருக்கிறது. இன்று BNHS பறவை ஆர்வலர்களையும், பறவையியலாளர்களையும், சூழியல் செயல்பாட்டாளர்களையும், காட்டிலாகாவினரையும் துக்கணாங் குருவி கணக்கெடுப்பு செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். அப்படியானால், பறவைகளின் எண்ணிக்கையில் ஒரு மாபெரும் வீழ்ச்சி புலப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஒருவேளை பனை மரங்களின் அழிவு தான் இப்பறவைகளின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறதா? இயற்கை சங்கிலியில், பனை மரங்களை நாம் பெரும்பாலும் பொருட்டாக கருதுவதில்லை, ஆனால் அவைகளின் இருப்பு முக முக்கியமானது என எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை வேறு பல காரணிகளும் தூக்கணாங்குரிவியின் அழிவிற்கு காரனமாக இருக்கலாம். அவைகள் என்ன என்பது தேடிக்கண்டடயவேண்டியவைகள். இப்பேரழிவிற்கு காரணங்கள் என்ன என்பதை விகிதாச்சார அடிப்படையில் நாம் ஆராயவேண்டும்.

பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகள்

குமரி மாவட்டத்திலும் நான் பெருமளவு இவைகளை நான் கண்டது இல்லை. ஒரு முறை வெள்ளிமலை பகுதியிலிருந்து கூட்டுமங்கலம் செல்லும் வயல்வெளி குறுக்குப்பாதையில், காணப்பட்ட ஒரு பனை மரக்த்தில் சில தூக்கணாங்க் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். குமரி மாவட்டத்தில் வேறு  எங்குமே பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகளை நான் காண இயலவில்லை. ஒருவேளை நாகர்கோவிலுக்கு கிழக்குப் பகுதிகளில் அவைகள் காணப்படலாம். நான் தற்போது வாழும் ஆரே பகுதிகளில் வந்த துவக்கத்தில் ஒரு பனை மரத்தில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள் இருந்ததைப் பார்த்தேன். பின்னர் அவைகளை என்னால் காண முடியவில்லை. பனை மரங்கள் இங்கு வெகுவாக குறைந்துவிட்டது ஒருபுறம், மற்றொருபுரம், இங்கு இருக்கும் ஆதிவாசிகளின் வாழ்வு நகரமயமாக்கலில் பெருமளவில் மாறிவருகிறது. குறிப்பாக, வயல்வெளிகள் இங்கு அருகிவருவதும் ஒரு காரணம். ஒருவேளை, ஆதிவாசிகள் கூட பயிர்களைக் காக்கும்படியாக சில பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது இப்பறவைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.  ஆனால் ஆரே காலனி அலகு எண் 7ல் இருக்கும் எங்கள் ஆலயத்திற்கு எதிர்புறம் உள்ள புல்வெளி நடுவில் இருக்கும் ஒரு அரச மரத்தில், ஒரு சில கூடுகளைப் கடந்த மாரி காலத்தில் பார்த்தேன். இப்போது அவைகள் இல்லை. அந்த அரச மரத்தை பருந்துகள் ஆக்கிரமித்துவிட்டன. தூக்கணாங் குருவிகள் எங்கே சென்றுவிட்டன என தேடிக்கொண்டே இருக்கிறேன். மகராஷ்டிராவின் பால்கர் பகுதிகளில் இன்னும் பனை மரங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகள் ஆங்காங்கே இருக்கின்றன. 

அரிவாள் மூக்கன்

2018 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் துக்கணாங் குருவிகள் கூடு குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. சுமார் 42 வகையான தாவரங்களில் தூக்கணாங் குருவிகள் தங்கள் கூடுகளை அமைப்பது இதன் மூலம் கண்டடையப்பட்டது. இவைகளில் 92 சதவிகித கூடுகள், பனை, தென்னை மற்றும் ஈச்சை மரங்களில் இருப்பதாக பதிவு செய்கிறார்கள். இந்த ஆய்வில் துணை நின்ற ஆய்வுக்கட்டுரையில் T A டேவிஸ் அவர்கள் மிக முக்கியமாக அடிக்கோடிடப்பட்டிருப்பது எனக்கு புதிய திறப்புகளைக் கொடுக்கிறதாக அமைந்தது. 1974 வாக்கிலேயே அவர் எழுதிய தூக்கணாங்குருவி குறித்த கட்டுரைகள், அவரது பனை சார்ந்த தேடுதலின் அங்கமாக இது இருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. T A டேவிஸ் அவர்கள் பனை சார்ந்து சர்வதேச கட்டுரைகள் எழுதிய மிகப்பெரிய ஆளுமை.

மானில மரத்தில் தேசிய பறவை

ஆரே காலனி வந்த பின்பு இங்குள்ள வார்லி பழங்குடியினருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டேன். அப்படியே பழங்குடியினருக்காக களப்பணியாற்றும் சில நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒரு சிலருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் வாய்த்தன. இந்த நெருக்கம் வார்லி பழங்குடியினரின் வாழ்வில் பனை எப்படி இரண்டரக் கலந்திருக்கிறது என்பதற்கான தரவுகளை சேர்க்க உதவியது. வார்லி பழங்குடியினரின் ஓவியங்களில் பனை மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், தூக்கணாங் குருவிகளைக் குறிப்பிடுமிடத்தில் அவைகள் பனையிலோ  ஈச்சமரத்திலோ அல்லது தென்னை மரத்திலோ  இருப்பதாகவே பதிவு செய்யப்படும். இது வெறுமனே போகிறபோக்கில் வரையப்படும் சாதாரண படங்களல்ல. பத்தாயிர வருட வார்லி பழங்குடி வாழ்வின் தொடர்ச்சி. அவர்கள் தொடர்ந்து இயற்கையை அணுகி அறிந்த உண்மையினை சொற்களாக்கும் முன்பு வரைந்து காட்டிய வாழ்கைச் சித்திரம்.

மரத் தவளை/ தேரை

தூக்கணாங் குருவிகளின் கூடுகள் புற்களாலும், நெற்பயிரின் இளம் தாள்களாலும் கட்டப்படுபவைகள். அவைகளின் வாழிடம் குறித்தும் ஆய்வுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவைகளின் உணவு பழக்கம் குறித்த தேடுதல் நமக்கு பலவிதமான உண்மைகளை வெளிப்படுத்த வல்லவை. சிறிய விதைகளை தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணும். அரிசி, கோதுமை, பார்லி போன்றவை அவைகளின் விருப்ப உணவு என்பதாக அறிகிறோம். வெட்டுக்கிளிகள், சிறு பூச்சிகள், வண்டுகள், கரையான் வண்ணத்துப்பூச்சிகள், கம்பளிப்பூச்சி போன்றவற்றையும் தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணுகின்றது. சில நேரங்களில் மலர்களில் உள்ள தேனையோ, பதனீரையோ, சிலந்தி, சிறு நத்தைகள் மற்றும் நெல் தவளை போன்றவற்றையும் உண்ணுகிறது. நெற்பயிரும் பனையும் இணைந்து நிற்கும் இடங்களில் இவைகள் கூடமைப்பது சதுப்பு நிலப்பகுதிகளை இவைகள் தேர்ந்தெடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும். ஆகவே, பனை மரங்கள் சதுப்பு நிலத்திலும் வளரும் தன்மைகொண்ட மரம் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது.

வார்லி பழங்குடியினரின் ஓவியம்: பனையில் தூக்கணாங் குருவிக்கூடு

பனைமரச் சாலை பயணம் தான் என்னை முதன் முறையாக பனை மரங்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பை கண்டுணரும் வாய்ப்பை நல்கியது. அது மிகவும் எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஆனால், அந்த திறப்பு எனக்கு பல்வேறு வகைகளில் பனை மீதான எனது முடிவுகளையே உறுதிப்படுத்திக்கொண்டு இருந்தன. குறிப்பாக நம் நாட்டு பறவைகளில் பெரும்பாலானவைகள் பனை மரத்தை கூடாகவோ, வேட்டைக்களமாகவோ அல்லது இளைப்பாறுமிடமாகவோ வைத்திருக்கின்றன. ஆனால் பனை மரத்திற்கும் நமது சூழியலுக்கும் உள்ள  தொடர்பு குறித்து இதுவரை குறிப்பிடத்தகுத்த ஒரு கட்டுரை கூட வெளிவந்தது இல்லை. இத்தனைக்கும் நம்மிடம், இயற்கை சார்ந்து பணியாற்றுகிறவர்கள் ஏராளம் உண்டு.

வார்லி பழங்குடியினரின் ஓவியம்: ஈச்சமரத்தில் தூக்கணாங் குருவிகளும் கூடும்

2017 ஆம் ஆண்டு  ஹைதிரபாத் பகுதியில் இருக்கும் ஹென்றி மார்டின் இன்ஸ்டிடியூட் (HMI) என்னை பனை சார்ந்த ஆவண படம் எடுக்க பணித்திருந்தார்கள். பறவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்பினை அறிய வேண்டி நான் டாக்டர். ராபர்ட் கிரப் (Robert Grubb) அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்.

தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த பறவையியலாளரான அவரது மகன் எனது நெருங்கிய நண்பன். நாங்கள் கல்லூரியில் ஒன்றாக படித்தோம், கல்லூரி பாடகர் குழுவில் இணைந்து பாடினோம், ஒன்றாக சைக்கிள் ஓட்டினோம், தேசிய மாணவர் படையில் இணைந்திருந்தோம், மேலதிகமாக நாகர்கோவிலை அடுத்த கீழப்பெருவிளை என்ற ஒரே ஊரின் இரு வேறு பகுதிகளில் தங்கியிருந்தோம். கல்லூரி காலத்தில் அடிக்கடி சந்திப்போம். ஆகவே அவரிடம், சற்றே உரிமையுடன், பனை மரங்களில் இருக்கும் பறவைகள் குறித்து எனக்கு சில குறிப்புகளைக் கூற முடியுமா என்று நான் கேட்டபோது, அவர் யோசிக்காமலேயே, “அப்படி பனை மரத்தில் பெரிதாக ஒன்றும் இருக்கிறது மாதிரி தெரியவில்லையே” என்றார். எனக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் மூத்த சூழியலாளர்களுல் ஒருவர் அவர்.

கள் குடிக்க வந்திருக்கும் பச்சைக் கிளி

அவரிடம் இருந்து பெறும் ஒவ்வொரு வார்த்தைகளும் வரம் போன்றவைகள். அவர் திடுமென அப்படி சொல்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் நானே பல பறவைகளை பனை மரத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை அவரிடம் நான் நேரடியாக சொல்ல முடியாது. ஆகவே, அவர் தலைமுறையிலுள்ள  ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வரும் தாவரவியலாளருமான டாக்டர் ஷோபனராஜ் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, பனங்காடை என்று ஒன்று பனை மரத்தில் இருப்பதாக அவர் கூறினார் என்றேன். மேலும், பொன்னி குருவி என்கிற பாம் சுவிஃப்ட் (Palm Swift) என்ற பறவையின் பெயரையும் அவர் குறிப்பிட்டார் எனக் கூறினேன். அவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். நீ ஒரு முடிவோட தான் வந்திருக்கே என்பது அதன் அர்த்தம். ஒரு ஆழ்ந்த அமைதிக்குப் பின் என்னிடம், “நீ ஒரு நாலு நாளைக்கு அப்புறம் வாடே” என்றார். எனக்கு அது முதல் வெற்றி.

Painted Stork

நான்கு நாட்களுக்குப் பின்பு, நான் அவரை சந்தித்தபோது அவர் என்னை வெகு உற்சாகமாக என்னை வரவேற்றார். முப்பதிற்கும் மேற்பட்ட பறவைகளைக் குறித்த ஒரு நீண்ட உரையாடலை நான் காணொளியாக பதிவு செய்ய அவர் உதவினார். அவரது விளக்கங்கள் அவ்வளவு தெளிவாகவும், எவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் விளக்கியபடி வந்க்டார். அன்று மட்டும் முப்பது பறவைகளின் பெயர்களைக் குறீப்பிட்டு அவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்புகளை விளக்கிகூறினார். இன்று தமிழகத்தில்  இருக்கும் பறவைகளில் சரிபாதி ஏதொ ஒரு வகையில் பனையோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். பறவைகளின் வாழிடம், உணவு மற்றும் அவைகளின் வேட்டைக்களம் போன்றவைகள் பறவையியலாளர்களால் மிக அதிகளவில் பேசப்பட்ட பேசுபொருள் தான். ஆனால் பனை மரங்கள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஏனென்றால், பனை மரத்தின் உயரம், எங்கும் காணப்படும் அந்த மரங்கள் மீதான சலிப்பு, காடுகளுக்குள் இருக்கும் பறவைகள் மீதான மோகம் என, நாம் அன்றாடும் காணும் பறவைகளுக்கும், பனைக்கும் உள்ள உறவுகளை இணைத்துப் பார்க்க இயலாதபடி நமது கண்களை முடிவிட்டன.

பனை மரத்தில் வாழும் சிறிய வகை பாலூட்டி

அழகிய நீல நிற சிறகுகள் கொண்ட பறவையினை புளூ ஜே (Blue jay) என்றும் இன்டியன் ரோலர் (Indian Roller) என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் பனங்காடுகள் நிறைந்த பகுதிகளில் தான் இவைகள் வாழும். அப்படியே, பனை சார்ந்த பகுதிகளில் இவைகள் பெருமளவில் காணப்படும் என்றார். பொதுவாக நாம் காணும் காடைகளுக்கும் இவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், பனங் காடை என்ற பெயர், உள்ளூர் மக்களால் வழங்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியம் பனை சார்ந்து வாழும் இப்பறவைகளினை அறிந்துணர்ந்த நமது முன்னோரால் வழங்கப்பட்டிருக்கும் என்பது உறுதி. இதே பறவையினை நான் மும்பை ஆரே காலணியிலும், பால்கர் பகுதிகளிலும், ஒரிசா சென்றிருந்தபோதும் பார்க்க முடிந்தது. பனை மர பொந்துகளில் இவைகள் இருப்பதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.  இப்பறவைகளை நான் எங்கேனும் பார்த்தால் அனிச்சையாக என் கண்கள் பனை மரங்களைத் தேடும். கண்டிப்பாக அப்பகுதிகளில் பனை மரங்களை நான் பார்த்துவிடுவேன். பனையின்றி பனங்காடைகள் கிடையாது எனும் அளவிற்கு அவைகள் பனையோடு இணைந்தே வாழுகின்றன.

பனைஓலையில் தேன்கூடு

பாம் ஸ்விஃப்ட் என்ற பறவைக் குறித்து டாக்டர் கிரப் அவர்கள் விவரித்தது, பனை சார்ந்த புரிதல் கொண்ட ஒருவருக்கே உரித்தானது. மேலும் அவரின் விவரணைகள் பறவையியலாளர்களின் தனித்துவ பார்வைகளையும் கொண்டது. “பாம் ஸ்விஃப்ட் என்பதை பொன்னி குருவி என்று தமிழில் அழைப்பார்கள்” என்றார். மேலும் “குமரி மாவட்டத்தில் மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள்”. மூக்கோலை என்றால் என்ன? பனை ஓலைகள் பார்ப்பதற்கு விரிந்திருப்பது போல தெரிந்தாலும், அவைகளில் மூன்று மேடு பள்ளங்கள் இருக்கும். அதிலும் மட்டை வந்து சேருமிடம் மூக்கைப்போல் மேலெழும்பி இருக்கும். இதன் நடுவில் தாம் இக்குருவி வாழும் ஆகவே இதனை மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள். பொன்னி என்கிற வார்த்தை கூட மூக்கோலையின் பகுதியை சுட்டுவதாகவே அமைகிறது. அப்படியானால் பொன்னி என்கிற பெண்பாற் பெயர், பனையிலிருந்து கிடைத்தது மாத்திரம் அல்ல, தன்னை நாடி வருவோருக்கும் அடைக்கலம் அளிக்கும் ஆழ்ந்த பொருள் உள்ள ஒன்றாக வெளிப்படுத்துகிறது. பொன்னி குருவிகளை, நான் பனை இருக்கும் பகுதிகளில் எல்லாம் பார்த்து வருகிறேன். அவைகள் பறந்துகொண்டே உணவை தேடிக்கொள்ளும் எனவும், அவைகள் பெரும்பாலும் காற்றினை பயன்படுத்தி பட்டம் போல் பறக்கும் எனவும் அவர் குற்ப்பிட்டார். மேலும், அவைகள் தமது கூடுகளில் தங்குவதை விட, வெளியே பறந்துகொண்டிருப்பதையே விரும்பும் என்றார்.

புல்புல் தனது கூட்டினை பனை ஓலையில் அமைத்திருக்கிறது

தூக்கணாங் குருவி தமது கூடுகளை பனையில் அமைப்பது, எதிரிகளிடமிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும்  தனது குஞ்சுகளையும் முட்டையினையும் காப்பதற்காக என்று அவர் சொன்னது மிகவும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஆண் தூக்கணாங் குருவி கட்டும் இக்கூடுகலை பெண் குருவ் வந்க்டு பார்த்து  ஆராய்ந்து ஒப்புதல் அளித்தாலே அவைகள் தங்கள் புது வாழ்க்கையை துவங்க முடியும். ஆகவே சில வேளைகளில் முற்றுப்பெறாத கூடுகளும் மரங்களில் தென்படும்.  தூக்கணாங் குருவிக் கூடுகள் இருக்குமிடத்தினை பாம்புகள் எட்டுவது என்பது வெகு சவாலான விஷயம் என்றே அவர் கூறுகிறார். ஏனென்றால், பனை ஓலைகளின் நுனியிலேயே அவைகள் தமது கூடுகளைக் கட்டும். அதையும் மீறி பாம்புகள் இக்கூடுகளுக்குள் நுழைந்து முட்டைகளை எடுப்பதும், குஞ்சுகளைச் சாப்பிடுவது கூட நிகழ்த்திருப்பதை பாண்டிச்சேரி ராம் கூறினான். உணவிற்கான தேடுதலில், உயிரை பணயம் வைப்பது  இயற்கை நியதி தானே? ராபர்ட் கிரப் அவர்கள், வயல் வெளிகளில் இவைகள் கூடு கட்டும்போது  பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை சாப்பிடுவதால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது எனக் கூறினார்.  இப்பறவைகள் தங்கள்,  இனப்பெருக்க காலத்தில் இன்னும் அதிகமாக பூச்சிகளை வேட்டையாடும். ஆகவே தூக்கணாங் குருவிகள் விவசாயிகளின் நண்பன் தான் என்றார்.

பனையிலிருந்து இறங்கிவரும் பாம்பு

அனைத்தையும் விவரித்து முடியும் தருவாயில், டாக்டர். கிரப் அவர்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்ததை நான் நேரிலேயே பார்த்தேன். அவர் அதுவரை தனது கவனத்தைச் செலுத்தாத ஒரு மரத்தின் மீது அவருக்கு ஏற்படும் பிடிப்பு தான் அது. அன்று இறுதியாக அவர் இப்படி சொன்னார், “பனை மரம் சார்ந்து வாழும் பறவைகளை வைத்து பார்க்கையில், பனை மரமே ஒரு சரணாலயம் தான்”. நான் அதைக்கேட்டபொழுது அப்படியே நெஞ்சுருகிப்போனேன். எதற்கென அவரைத் தேடி வந்தேனோ அது கச்சிதமாக நிகழ்ந்த பொற்தருணம் என்றே அதைக் கருதுவேன். ஒரு பறவையியலாளராக அவர் பல சரணலயங்களைப் பார்த்திருப்பார், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் அவ்வித சரணாலயங்களை குறித்து பதிவு செய்துமிருப்பார். ஆனால், அவரது வாழ்க்கையில் முதன் முறையாக பனை மரத்தை ஒரு சரணாலையம் என்று சொல்லுகின்ற தருணத்திற்கு அவர் வந்தது அவருக்கே வியப்பளித்திருக்கும். அந்த வார்த்தை அவர் இதயத்திலிருந்து எழுந்த ஒன்று என்பது மறுக்கவியலா உண்மை. அவரும் ஒரு பரவச நிலையிலேயே இருந்தார்.

2017 – 19 வரையிலும் இரண்டு வருடங்கள், நான் தமிழகம் முழுவதும் பனை மரத்தினை குறிவைத்து அலைந்து திரிந்தேன். நேரடியாக பல்வேறு பறவைகளும், விலங்குகளும், உயிரிகளும் பனையுடன் இணைந்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறேன். நினைக்கவியலா ஒரு பெரும் தொகுப்பு அது. இம்மண்ணில், பனைச் சூழியல் குறித்து தேடும் ஒரு தலைமுறை எழும்புமென்றால் , பனை மரம் எத்துணை முக்கியமானது என்பது நமக்கு தெரியவரும்.

பனையோலைக்குள் குளவிக்கூடுகள்

பொதுவாகவே பனையுடன் இணைந்து வாழ்பவர்களுக்கு பனையுடன் இருக்கும் பல்வேறு உயிரினங்கள் குறித்த புரிதல் தானாகவே இருக்கும். எளிமையாக சொல்லவேண்டுமென்றால், பனைமரத்தடியில் சென்று பதனீர் வாங்குபவர்களோ அல்லது கள் அருந்த செல்லுபவர்களோ அந்த பானங்களில் விழுந்து கிடக்கும் எண்ணிறந்த பூச்சிகள் குறித்த புரிதல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தேனீக்கள், பல்வேறு ஈக்கள், வண்டுகள், கொசுக்கள், வண்ணத்து பூச்சிகள், அந்துப்பூச்சிகள், தும்பி, எட்டுக்கால் பூச்சிகள், எறும்புகள், குளவிகள் கடந்தைகள், தேள் என பூச்சியியலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பனை. பல்லிகள், ஓணான், பச்சோந்தி, அரணை, உடும்பு, பல்வேறுவகை பாம்புகள் என ஊர்வன பட்டியல் தனியாக இருக்கும். மிகச்சிறிய பாலூட்டியான எலி முதல், பழவுண்ணி எனப்படும் மரநாய், குரங்கு, தேவாங்கு, கரடி மற்றும் பனம் பழங்களை விரும்பி உண்ணும் மான்கள், நரி, காட்டு மாடுகள், பன்றிகள் மற்றும்  வீட்டு விலங்குகளான நாய், ஆடு, மாடு போன்றவைகளுடன் மிகப்பெரிய உயிரியான யானையையும் குறிப்பிட வேண்டும். பறவைகளில், தேன் குடிக்கும் மிகச்சிறிய பறவைகளிலிருந்து பூச்சிகளைப் பிடிக்கும் பறவைகளும், காகம், கிளி, மைனா, ஆந்தை, என உருவங்கள் பெரிதாகி, வைரி, ராஜாளி, அரிவாள் மூக்கன், பருந்து மற்றும் மிகப்பெரிய மயில் மற்றும் கழுகுகள் வரை பனை மரங்களில் வந்தமரும். பலவேறு நிலப்பரப்புகளில் பனை மரத்தில் வாழும் நத்தைகளையும், ஒருசிலவிடங்களில் மரத்தவளைகளையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஏன், பனயேறிக்கெண்டை என்ற மீனே பனை ஏறுகிற ஒன்றாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட சங்கிலியைத் தான் நாம் எவ்வித அடிப்படை புரிதலுமின்றி தகர்த்தெறிந்துகொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை. பனையேறுகின்ற மனிதன் தான் இவைகள் அனைத்தையும் காப்பாற்றிவரும் சூழியலாலன்.  தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படவேண்டியவன்.

பனையேறி எனும் தன்னிகரற்ற சூழியலாளன்

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 6

ஜனவரி 19, 2021

பனை நிலவு

அக்டோபர் எட்டாம் தேதி காலை ஜாஸ்மினும்  ஆரோனுமாக காலை நடைக்கு மிடாலம் கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் சென்ற சற்று நேரத்தில்  நானும் கடற்கரை நோக்கி சென்றேன். கையில் பணமும் எடுத்து வைத்துக்கொண்டேன். மிடாலம் கடற்கரையில் காலை எட்டு மணிக்கு முன்பு சென்றால்  கரமடி மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.  செல்லும் வழியில் ஒரு வடலி பனை மரத்தை முறித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன். இப்பாதகத்தை மின்சார வாரியம் செய்ததா அல்லது தோப்பின் உரிமையாளர் செய்ததா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. அந்த மரத்தின் மட்டைகளை வெட்டி விட்டிருந்தால் அது எவ்வித பிரச்சனையுமின்றி மின்சார கம்பத்தை தாண்டி வளர்ந்திருக்கும். காலை நேரம் இப்படி மன சஞ்சலத்தை ஏற்படுத்தும் காட்சியுடன் விடியும் என நான் எண்ணியிருக்கவில்லை.

முறித்துப் போட்ட வடலி பனை

நான் கடற்கரைக்கு சென்றபோது ஆரோன் ஒடியாடி மீன்களை  பொறுக்கிக்கொண்டிருந்தான். கைகள் நிறைய நிறைய சில  சாளை மீன்களை எடுத்து வந்து எனக்கு காட்டினான். பொதுவாக மீனவர்கள் வலைகளில் சிக்கியிருக்கும் ஜெல்லி மீன்களையும் தேவையற்ற மீன்களையும் எடுத்து வெளியே வீசுவது வழக்கம். ஜெல்லி மீன்களுள்  சிக்கியிருக்கும் சிறிய மீன்களை கடற்கரையில் வாழும் சிறுவர்கள் எடுத்துச் செல்லுவது வழக்கம். கடற்கரையில் வேறு சில சிறுவர்கள் ஒரு வீட்டிற்கு தேவையான மீன்களை குவித்து வைத்திருந்ததைப் பார்த்தேன். அன்று அதிகமாக சாளை மீன் பிடிபட்டிருந்தது. ஜாஸ்மின் நூறு ரூபாய்க்கு மீன்களை வாங்கினாகள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு மீன்கள் எடுத்து கொடுத்தார்கள். நாங்கள் 500 ரூபாய் கொடுத்தபோது, சில்லரை இல்லை எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவ்வளவு மீன்களை முன் பின் தெரியாதவர்களுக்கு கொடுக்கும் நல்லுள்ளம் எந்த வியாபாரிக்கும் வராது. பனையேறிகளே இவ்விதம் வழிப்போக்கர்களுக்கு பதனீரை இலவசமாக கொடுத்த கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வகையில் மீனவர்கள் மாபெரும் வள்ளல் பரம்பரைதான்.

ஆரோன் சேகரித்த மீன்களுடன்

2018 ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் இருந்தபோது, இதே கடற்கரையில் 100 பனை விதைகளை நட்டோம். நானூறு பனை விதைகளை இங்குள்ள மீனவர்களுக்கு கொடுத்தோம். அவைகளில் சில முளைத்திருந்ததை நான் ஏற்கனவே வந்து பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் தற்போது கடற்கரையில் காங்கிரீட் தடுப்புச் சுவர் எழுப்பவேண்டி நாங்கள் பனை விதைத்திருந்த   ஆக்கிரமித்திருந்தார்கள். பல பனைகள் சமாதியாகிவிட்டிருந்தன.  நாம் நடுகின்ற பனைவிதைகளில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் மட்டுமே அதன் முழு ஆயுளைக் காணும் என நினைக்கிறேன். ஆர்வத்தால் விதைப்பவைகள் அனைத்தும் அதன் பலனைக் கொடுக்கும் வரை இருக்குமோ இல்லையோ தெரியாது எனும் அளவில் தான் தற்போதைய சூழல் இருக்கின்றது. எங்கும் நிகழும் சாலை விரிவாக்கப்பணிகள், பொதுப்பணித்துறை பணிகள், கட்டுமானப்பணிகள், என பல்வேறு காரணிகள் விதைக்கப்படும் பனை விதைகளை முளையிலேயே கிள்ளி எறியும் சூழல் மேலோங்கி இருக்கிறது. ஆகவேதான், நிற்கும் மரங்களை பாதுகாப்பது, எதிர்காலத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய புண்ணிய  காரியம் என்பதாக உணருகிறேன்.

மிடாலம் கடற்கரை இன்று

காலை நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்திற்கு சென்றேன். அங்கே அதன் இயக்குனராக இருக்கு  சந்திரபாபு அவர்களை சந்திப்பது தான்எனது எண்ணமாக இருந்தது. நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் போது, இவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இருவருமாக பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைச் சார்ந்த சில பெண்கள் எப்படி அரசியல் தளங்களில் வெற்றி பெற்றனர் என்பதை மையமாக கொண்டு ஒரு புத்தகத்தினை தொகுத்தோம். எனது பங்களிப்பு அதில் மிகச் சிறிய அளவில் தான் இருந்தது. ஆகவே தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைப் பேசி வரலாம் என்று தான் கிளம்பினேன்.  “வரும் தேர்தலில்  கள் தான் கதாநாயகன்” என்ற சூளுரையோடு எனது தமிழகம் தழுவிய பயணத்தை  முன்னெடுக்கிறேன் என்றேன்.   உங்கள் அனுபவம் சார்ந்து சில தகவல்களை தந்துதவ முடியுமா எனக் கேட்டேன். என்ன வேண்டும் எனக் கேட்டார்கள். “பனையேறிகள் செய்த போராட்டங்களில் கள் சார்ந்து ஏதேனும் போராட்டங்கள் முன்னெடுத்தார்களா எனக் கேட்டேன்” அவர் பல்வேறு போராட்டங்கள் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். கள் என்பது கள்ளுக்கடைகளுக்கு தான் இலாபம் ஈட்டும் ஒன்றாக இருந்ததால், பனையேறிகள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு மட்டுமே கள் இறக்கிக்கொண்டிருந்தனர் என்றார்.   மேலும் அவர், 1985 ஆம் ஆண்டு பனைதொழிலாளர்கள் நிகழ்த்திய மாநாட்டின் மூலம் ஒரு பத்தம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர் என்றும் அதனை சமீபத்தில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் மீண்டும் பதிப்பித்திருக்கிறது என சொல்லி ஒரு புத்தகத்தை எனக்கு காண்பித்தார். 

சந்திரபாபு அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

பனைத்தொழிலாளர்களின் பத்தம்சக் கோரிக்கைகள் – 1985

1. பனைத் தொழிலாளர்களுக்கும் பனைப் பொருட்களின் உற்பத்திக்கும் ஊக்கமளிக்க பனைவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

2. அரசு நிலங்களிலிருந்து குத்தகைக்கு விடப்படும் பனை மரங்கள் பனைத்

தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படல் வேண்டும்.

3. பனைத் தொழிலாளர்களின் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை முழுவதும் அரசே செலுத்த வேண்டும்.

4. பனைத் தொழிலாளர்களுக்கு பணி செய்ய இயலாத காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

5. பனைத் தொழிலை அறிவியல் முறையில் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்

6. கருப்புகட்டிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

7. பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு , கல்வி மருத்துவம், வீட்டு வசதி,

வேலைவாய்ப்புத் துறைகளில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.

8. பனைத் தொழில் செய்யும்போது விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டால் பிரேத

பரிசோதனையின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

9. விபத்தில் மரணமடையும் பனை தொழிலாளிகளுக்கு 15000 ரூபாய் காப்பீடாகவும், தொழில் செய்ய இயலாமல் நிரந்தர ஊனமுற்றால் 7500 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

10. அரசின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், உதவிகள், கடன்கள் அனைத்தும், பனைத் தொழிலாளர் அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும்

பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்று அல்ல, பனை சார்ந்து எங்கும் இதுவரை வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்குட்படுத்தப்படவில்லை. பதினைந்தாயிரம் பனைதொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த   மாபெரும் போராட்டகளத்தில் ஒரு  கோரிக்கை கூட செவிசாய்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலானகோரிக்கைகள் அன்றைய சூழலை பிரதிபலிப்பதாக இருந்தாலும் இன்றும் இவைகள் கோரிக்கை என்னும் வடிவிலேயே இருக்கின்றன. பெரும்பாலான கோரிக்கைகள் இன்றும் பனைதொழிலாளர் வாழ்வு மாறவில்லை என்பதன் மவுன சாட்சியாக நிற்கின்றன.

குமரி மாவட்டத்திலுள்ள தேவிகோடு பகுதியை அடுத்த பட்டன்விளாகத்தைச் சார்ந்த பனைத் தொழிலாளி திரு செல்வராஜ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் “அனைத்து கோரிக்கைகளையும் விட, பனை மரத்திலிருந்து விழும் பனையேறிகளுக்கு உடற்கூறு ஆய்வு மட்டும் செய்யவேண்டாம் என்ற கோரிக்கையினை இறுதியாக மாவட்ட ஆட்சிதலைவர் முன் வைத்தோம்” என்றது மிக  நெகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அன்றைய ஆட்சியாளராக இருந்தவர், இவ்விதமாக பதிலளித்திருக்கிறார்: “விபத்தில் நான் உயிரிழந்தால் கூட  எனக்கும் உடற்கூறாய்வு செய்தே ஆகவேண்டும் என்பது தான் நியதி” அதனைத் தாண்டி எங்களால் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்க இயலவில்லை என்றார். சோகம் என்னவென்றால், அன்று பனையேறிகள் தங்களுக்காக முன்னெடுத்த போராட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்களின்  உதவி சிறிதும் இல்லாமல் இருந்தது. பனையேறிகள் தானே என்னும் இளக்காரமே மேலோங்கியிருந்தது. தங்கள் உடன்பிறந்தவர் என்றாலும் தந்தையே என்றாலும் பனையேறியென்றால் சமூகத்தில் அதனை பெருமிதத்துடன் முன்வைக்க இயலாத சூழல் காணப்பட்டது. ஆகவே பனை சார்ந்து இயங்குகிறவர்கள் மெதுவாக பனை மரத்தை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.            

அங்கிருந்து நான் சவுத் இந்தியா பிறஸ் என்ற அச்சகத்தை வைத்திருக்கும் கருணா அவர்களை சந்திக்கச் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை வேஷ்டி சட்டையில் மார்த்தாண்டத்தின் கதாநாயகனாக வலம் வரும் முக்கிய ஆளுமை அவர். கேரளா முதல் உலகின் அத்தனை பாகங்களிலும் நட்புக்களை வைத்திருப்பவர். பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள், பனை  தொழிலாளர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைத்தபோது கூட்டிய மிகச்சிறிய நண்பர் குழாமில் இவரும் ஒருவர். பனையேறிகளுக்கு நாம் செய்யகூடிய நன்மை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டபோது அன்றைய இளைஞரான கருணா, தனக்கே உரிய  தனித்துவத்துடன் “எல்லா பனையையும் முறிக்கணும்” என்றது செவி வழி செய்தி. 1975ல் அப்படி சொல்லும் ஒரு கருத்து மிகவும் புரட்சிகரமானது. அவரது ஒற்றைச் சொல் மிகவும் வீரியமாக பின்னாளில் பலித்திருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில்,  காதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குமரி மாவட்டத்தில் இருந்த  பனை மரங்களின் எண்ணிகை 25 லட்சம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று குமரி மாவட்டம் முழுக்க பனைகளை நான் தேடி ஆவணப்படுத்துகையில் ஒரு லட்சம் பனை மரங்கள் எஞ்சுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இவைகள் எப்படி முறிக்கப்பட்டன? ஒரு சமூகமே இணைந்து பனை மரங்களை உதறிவிட்டது போலவே இந்த இழப்பை நான் புரிந்துகொள்ளுகிறேன்.

கருணா அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

கருணா அவர்களின் அந்த கூற்றிற்கு காரணம் என்ன? ஆழ்ந்து நோக்குகையில், பனையேறிக்கும் பனைக்கும் உள்ள உறவு என்பது ஆத்மார்த்தமானது. பனை ஏறிக்கொண்டிருக்கும் ஒருவரால், பனை மரத்தினை அவ்வளவு எளிதில் உதறிவிட இயலாது.  பனை மரம் ஏறுவதைத் தவிற உலகில் வேறு சிறந்த துறை இருக்கிறது என ஒருபோதும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. பனை மீதான  காதலால் கண்மூடித்தனமான வழிபாட்டு நோக்குடனே பனையை அவர்கள் பூஜித்தார்கள். ஆகவே, பனையேறிகளின் வாழ்வு பனையைச் சுற்றியே இருக்கும். அன்றைய சூழலின்படி பனை சார்ந்து வாழ்பவர்கள் வறுமையிலேயே உழல நேரிடும். மேலும், பனை ஏறுகின்றவர், சமூகத்தில் கீழாகவே பார்க்கப்பட்டு வந்தார், ஆகவே, பனை மரங்களை முறித்துவிட்டால், வேறு ஏதேனும் வேலைக்குச் சென்று தனது வாழ்வை ஒருவர்  காப்பாற்றிகொள்ள முடியும் என கருணா அவர்கள் உறுதியாக நம்பினார். அவரது சொல் தான் பின்னர் பலித்தது என நான் எண்ணிக்கொள்ளுவேன்.

கருணா அவர்கள் எனது பணிகளை ஆழ்ந்து கவனிப்பவர், எனது தனித்துவ பணிகளுக்காக என்னை அதிகமாக ஊக்கப்படுத்துபவர். அவரிடம் பனை விதைகளை கொடுத்தேன். வாங்கிவிட்டு, இதனை எனது வீட்டின் அருகில் நடுவேன் என உறுதியாக கூறினார். மேலும் அவரது வீட்டின் அருகில் ஒரு வடலி பனை நிற்பதாகவும்,  எச்சூழலிலும் எவரும் அதனை முறிக்ககூடாது என பேணி பாதுகாப்பதாகவும் சொன்னார். சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு மனிதருக்குள் ஏற்பட்ட தலைகீழான மாற்றம் தான் என்ன? இன்று பனை ஒரு பண்பாட்டு அடையாளமாக மாறிவிட்டது தான் உண்மை. தமது மூதாதையரின் பெருமித அடையாளமாக இன்று பனை அவருக்கு காட்சியளிக்கிறது. கள்ளிற்கு ஆதரவு தெரிவித்த அவர்,  ஆயிரம் ரூபாய் இல்லாவிட்டால் இன்று கேரள கள்ளுக்கடைக்குள் சென்று வர இயலாது எனக் கூறினார்(அங்கு கிடைக்கும் சுவையான மீன் தலை மற்றும் கிழங்கு இன்னபிற உணவுகளுடன் சேர்த்து). குமரி மாவட்டத்தில் கள் கிடைக்கவில்லை எனவும், கருப்பட்டி வேண்டுமென்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் நண்பர்களிடம் சொல்லி வைத்து வாங்கவேண்டும் எனவும் ஆதங்கப்பட்டார். மாற்றம் அனைவரது வாழ்விலும் நிகழும் என்பதற்கு கருணா அவர்களின் புரிதல் ஒரு பதம்.

அங்கிருந்து மீண்டும் பால்மா நோக்கி பயணித்தேன். ஜேக்கப் அவர்களிடம் உரையாடும்போது “என்னை உங்கள் பயணங்களில் இணைத்துக்கொள்ள மாட்டீர்களா” எனக் கேட்டார். நான் இந்த கேள்வியினை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜேக்கப் நான் முன்னெடுக்கும் பனை பயணத்தில் இணைத்துகொள்ளுவார் என்பது நான் எண்ணிப்பார்த்திராதது.  நான் எனது பயணத்தில் உள்ள சிரமங்களைச் சொன்னேன்.  எனது பயணம் நீண்டது என்றும், கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்க முடியும் என்றும், உங்கள் அலுவலகத்தை விட்டு உங்களால் அப்படி ஒரு தொடர் பயணத்தை முன்னெடுப்பது சாத்தியமா எனக் கேட்டேன். “தமிழகமே உங்களோடு பயணிக்க விரும்புகிறது எங்களுக்கு விருப்பம் இருக்காதா” என்றார். நான் மலைத்துப்போனேன். சரி உங்களுக்கு பொருத்தமான நாட்களைச் சொல்லுங்கள் என்றேன். ஒரு மூன்று நாட்கள் தென்தமிழக பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனச் சொன்னார். அது குறித்து நாம் விரிவாக திட்டமிடுவோம் எனக் கூறி விடைபெற்றேன்.

எனது பயணத்தை தமிழக அளவில் ஒரு முக்கிய அடையாளமாக நான் நிலைநிறுத்தியிருக்கிறேன். எனது சிறு வயதில் கூட, பல பயணங்கள் பனை மரங்களைப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்தது. பனைமரச்சாலை அவ்வகையில் ஒரு முக்கிய திருப்பம். எனது பயணம் திட்டமிட்டவைகளை விட, தற்செயல்களால் நிறைந்தவை. அதில் இருக்கும் சாகசத் தன்மை என்னை உந்தும் விசை. அதே வேளையில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அது  மிகப்பெரிய மன எழுச்சியைக் கொடுப்பவை.  நான் எங்கு சென்றாலும், அங்கே எல்லாம் புதிய தகவல்களைத்  தேடி பதிவு செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். தமிழகத்தில் பனை சார்ந்து பயணங்கள் நிகழ்த்தப்படுமென்றால் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்.

பனை மரங்களை தேடி மனிதர்கள் சென்றாலே பனை சார்ந்து வாழும் மனிதர்களின் மற்றும் பனை மரங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது எனது தீர்க்கமான முடிவு. பனை சார்ந்த கலைஞர்கள் அனைவரும், உழைப்பை முன்னிறுத்துகிறவர்கள். உழைப்பினைத் தொடர்ந்து செல்லும் அவர்களுக்கு ஓய்வு மிக முக்கிய தேவை. அவர்களின் ஓய்வு நேரம் அவர்களைக் கண்டு உரையாடுவது அவர்களின் அல்லது அவர்களின் பணி நேரத்தில் அவர்களின் பணிக்கு இடையூறின்றி சந்திப்பது யாவும் அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.  பனை சார்ந்த கலைஞர்கள் நமது சமூகத்தில் அடையாளம் இழந்து வாழ்கிறார்கள், அவர்களை நாம் நேரடியாக சென்று சந்தித்து வரும்போது அவர்கள் வாழ்க்கை முறைக் குறித்த ஒரு புரிதல் உண்டாகும். அவ்வித புரிதல் இல்லையென்றால் நம்மால் ஒருபோதும், பனை சார்ந்த ஒரு மாற்றத்தை இச்சமூகத்தில் நிகழ்த்திவிட இயலாது. இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கு கூட பனையேறிகள் குறித்த புரிதல் சரியாக இல்லை. ஏனெனில் அவர்கள் பனை சார்ந்த மனிதர்களுடன் பயணிப்பது இல்லை.

இக்கருத்துக்களை எப்படி ஒன்றாக திரட்டி மக்களுக்கு அளிப்பது என நான் எண்ணுகையில் தான் பனை நிலவு என்ற ஒரு திட்டம் எனக்குள் உதித்தது. பனை நிலவு என்பது பனை சார்ந்த ஒரு சுற்றூலா தான். பனையோடு செலவிடும் நாட்கள். பனை குறித்த புரிதலற்ற ஒரு குழுவினரை ஒன்றாக திரட்டி, அவர்களுக்கு, ஒரு திட்டமிட்ட பயண அனுபவத்தைக் கொடுப்பதுவே எனது எண்ணமாக இருத்தது. அவ்வகையில் இதனை ஒழுங்கமைக்க அதிக சிரமத்தை எடுத்துக்கொண்டேன். ஆனால் நான் எண்ணியதை விட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. தேனிலவிற்கு இணையான போதையுடன் இருக்கும் என்றாதாலேயே “பனை நிலவு” என பெயரிட்டேன். இரண்டு நாள் பயணம். கன்னியாகுமரி மாவட்டம் துவங்கி திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவு செய்யும் ஒரு அற்புத பயண திட்டம்.

மார்த்தாண்டம் பால்மா மக்கள் இயக்கத்தில் அனைவரும் கூடவும், அங்கிருந்து பயணத்திற்கான திட்டத்தை  முன்னுரை வழங்கவும் திட்டமிட்டோம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எங்கள் பயணத்தில் சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். முன்னுரையில் பனை மரத்தை எப்படி பனையேறியும் பனைக் கலைஞர்களும் தாங்கிப்பிடிக்கின்றனர் என்றும், பனை சார்ந்த கலாச்சாரமே பனை மரங்களின் வாழ்வை நீட்டிக்கும் எனவும் கூறினேன். பனை சார்ந்த சுற்றுலா பனையேறுகின்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், உள்ளூர் சுற்றுலாவையும், உள்ளூர் பனை உணவு மற்றும் பனை பொருட்கள் சார்ந்த விற்பனையும் மேம்படும் என்றும் கூறினேன். பனை பொருட்களை நகரத்திலிருந்து வாங்கிவிடத் துடிக்கும் மனநிலை எப்படி பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வில் எவ்வித பயனையும் விதைக்காமல் போய்விடுகிறது எனவும் விளக்கிக்கூறினேன். வந்த அனைவருக்கும் பனம்பழ ஸ்குவாஷ் மற்றும் பனம்பழ ஜாம் வழங்கினோம்.

சுதா அவர்கள் செய்யும் அரிவட்டி

பனை ஓலைக் கலைஞரான சுதா அவர்களைக்  காணவேண்டி அவர்களின் ஒப்புதலுடன், கழுவந்திட்டை பகுதிக்கு  சென்றோம். முதலில் இது எப்படியிருக்கும் என அவர்கள் தயங்கினாலும், பின்னர் எங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். சுதா அவர்கள் பனை ஓலையில் இருக்கும் ஈர்க்கில் கொண்டு ஈர்க்காம்பெட்டி என்ற அரிவட்டியினை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். குமரிமாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஈர்க்கில் கொண்டு பொருட்களைச் செய்பவர்கள்  தலித் சமூகத்தினராகவே இருப்பார்கள். ஈர்க்கிலில் பொருட்களைச் செய்ய தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பனை ஓலைப் பாய் செய்யவும் தெரிந்திருக்கும். மேலதிகமாக பனை ஓலைப் பெட்டியும் செய்யத் தெரிந்திருக்கும்.  எஞ்சியிருக்கும் ஈர்க்கில் கொண்டே அழகிய வடிவம்பெறும் வகையில் ஒரு பொருளைச் செய்யும் சமூகம் எத்துணை திறமையானதும்  பனையுடன் உறவாடியதுமாக இருந்திருக்க வேண்டும்? அரிவட்டியின் பின்னல் முறைகள் சற்றே வித்தியாசமானது, பெருக்கல் குறியீடோ அல்லது கூட்டல் குறியீடோ சார்ந்தபின்னல்கள் அல்ல இது. ஒருவகையில் நடுவிலிருந்து அலையலையாக விரிந்து செல்லும் ஒரு  வடிவம். இரட்டை ஓலைகளாக தாவிச் செல்லும் பாய்ச்சல் கொண்டது. மூங்கில்களைக் கோண்டு  செய்ய்யப்படும் இவ்வகை பின்னல்கள் பெருமளவில் பழங்குடியினரிடம் மட்டுமே இன்று  எஞ்சியிருக்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். சுதா அவர்களிடம் உரையாடிய அனைவரும் தங்களுக்கு வேண்டிய பதிவுசெய்துகொண்டனர். அவர்கள் கூறிய பணத்தை விட அதிகமாகவே கொடுக்க அனைவரும் சித்தமாயினர். இந்த புரிதல் வேண்டிதான் அனைவரையும் இவ்வித பனை பயணம் செல்ல நான் அறைகூவல் விடுக்கிறேன். உண்மையான கலைஞர்களின் பெறுமதி என்ன என்பதை அருகிலிருந்து பார்த்தால் தான் புரிந்துகொள்ள இயலும். அவ்வகையில் இது எனது முதல் வெற்றி.

சுதா அவர்கள் செய்த கூட்டுப்பெட்டி – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கொழிந்து போனது

சுதா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, குமரி மாவட்டத்தில் வழக்கொழிந்துபோன கூட்டுபெட்டி என்ற ஒன்றை குறித்து பேசினேன். அவர்கள் எனக்கு அதனை மீட்டெடுத்து கொடுத்தார்கள். ஓலைகளை ஒடுக்கமான பெட்டியாக பின்னி, அதன் வாயை பரணியின் வாய் போல குறுக்கி, அதனுள் ஒரு கயிறு கட்டிய தேங்காய் சிரட்டையினை இட்டு, மூடிவிடுவார்கள். இவ்வித  கூட்டுபெட்டியினுள், மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அரிய பொருட்களை வைத்து தொங்கவிட்டுவிடுவார்கள். எலிகளால் அவைகளை எவ்வகையிலும் சேதப்படுத்திவிட இயலாது. 

பனை ஓலைக் கடவத்தில் குவித்து வைத்திருக்கும் காய்கறிகள்

பின்னர் குழுவினரை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் சந்தைக்குச் சென்றேன். மார்த்தாண்டம் சந்தையில் புளியினை பனை ஓலைப்பாயினில் விரித்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். ஓலைப்பெட்டியில் புளிகள் விற்பனைக்கு சிப்பம் சிப்பமாக வைக்கப்பட்டிருந்தன. காய்கறிகளை உட்புறமாக மடக்கிய கடவத்தில் குவித்து வைத்திருந்தனர். இது குழுவினருக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பனை ஓலை பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்று அவர்கள் விற்பனைச் செய்யும் பொருட்களை காண்பித்தேன். இன்றும் பனை ஓலைப் பொருட்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் இவ்வித கடைகள் தான் காரணம். விசிறி, மற்றும் பல்வேறு பொருட்கள் அங்கே இருந்தன. மார்த்தாண்டம் சந்தையில் மட்டும் பனை ஓலைப் பொருட்களை விற்கும் கடைகள் 2 இருக்கின்றன. 

குறும்பனை வெகு அருகில் தான்

இதனைத் தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் மிக முக்கியமானது. தென் இந்திய திருச்சபையின் அங்கமான கூடவிளை திருச்சபைக்கு சென்றோம். நாங்கள் புனிதவெள்ளி அன்று எங்கள் பயணத்தை அமைத்திருந்தபடியால், குமரி மாவட்டத்தில் காணப்படும் தனித்துவமான ஒரு வாய்ப்பினை நண்பர்கள் அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது.  புனித வெள்ளி அன்று அனைத்து திருச்சபைகளிலும் இயேசுவின் சிலுவை மொழிகளை மூன்று மணி நேர தியான நேரமாக கொள்ளுவது வழக்கம். மும்மணி நேர ஆராதனை முடிந்த பின்பு களைப்புற்றிருக்கும் அனைவருக்கும், பனை ஓலையில் பயிறு மற்றும் தேங்காய் துருவிபோட்ட கஞ்சி வழங்கப்படும். சமீப நாட்களில், இவ்வகை சடங்குகள் உருமாறிக்கொண்டு வந்தாலும், கூடவிளை போன்ற சபைகளில் இவ்வித பாரம்பரியத்தினை கைக்கொண்டு வருகிறார்கள். கஞ்சியின் சுவை ஒருபுறம், திருச்சபை பனை சார்ந்து கொண்டுள்ள தனித்திவமான பாரம்பரிய வழக்கம் மற்றொருபுறம் என நண்பர்கள் திக்குமுக்காடிப்போனார்கள்.

நண்பர்கள் அனைவரையும் குறும்பனை என்ற கடற்கரை கிராமத்திற்கு அழைத்துச் சென்றேன். பனை இருக்கும் இடத்தை தென்னை எப்படி ஆக்கிரமித்திருக்கிறது என நேரடியான ஒரு அனுபவ புரிதலுக்கு இப்பயணம் உதவியாக இருந்தது. மேலும் குறும்பனையில் காணப்பட்ட பனைகள் அனைத்தும் குறுகியே காணப்பட்டன.  ஒருவகையில் இங்கு காணப்படும் பனைகள் தனித்துவமானவைகளா? அதனை உணர்ந்து தான் குறும்பனை என நமது முன்னோர்கள் பெயரிட்டிருக்கிறார்களா? என்கிற கேள்விஎனக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. மீனவர்கள் வாழ்வில் பனை மரம் எவ்விதம் ஊடுபாவியிருந்தது எனவும் நண்பர்களுக்கு விளக்கினேன்.

அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் குமரி மாவட்டத்தின்  சிறந்த பானமான நுங்கு சர்பத்தினை ருசிக்க முடிந்தது. அங்கே தானே, நூங்கு சார்ந்த எனது புரிதலை விளக்கிக் கூறினேன். நுங்கு என்பது முதிர்ச்சி அடையாத ஒரு பனைக் கனி. அதனை உண்டுவிட்டால், நமக்கு அடுத்த தலைமுறை பனை மரங்கள் கிடைக்காது. குமரி மாவட்டத்தில் பனை மரங்கள் வேகமாக அழிவதற்கு நுங்கினை உட்கொள்ளும் மரபு ஒரு முக்கிய காரணம் என்றேன். என்னைப்பொறுத்த அளவில் நுங்கு உண்பது  பனைக்கு நாம் செய்யும் கருச்சிதைவு. ஆனால், சாமானிய மக்களைப் பொறுத்த அளவில், பனை மரங்களை மக்களிடம் கொண்டு செல்ல நுங்கு தான் எளிய வழி. அனைவரும் பனை மரத்தினை நுங்கு மரம் என்றே அறிந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற கிராமத்தை அந்தி சாயும் நேரத்தில் வந்தடைந்தோம். அங்கே இருக்கும் பனை மரங்களையும் நெல் வயல்களையும் நண்பர்களுக்கு காண்பித்து, ஆதி மனிதர்கள் நமக்கு எச்சமாக விட்டு வைத்த ஊர் இது. இந்த ஊரில் காணப்படும் பனை மரங்கள் என்பவை நமது மூதா,தையர்களுடன் நம்மை இன்றும் இணைப்பவைகளாக உள்ளன என கூறினேன். ஒரு முறை எனது நண்பர் ஒருவர் பழைய பானை ஓடுகளை எனக்கு காண்பித்தபோது அதன் அடிப்பகுதியில் பனை ஓலைப்பாயின் அடையாளம் அச்சாக பதிந்திருந்ததைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

அன்று இரவு நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி என்ற கிராமத்தின் அருகில் இருக்கும் திரு தானியேல் நாடார் என்பவரின் தோட்டத்தில் இரவு தங்கினோம்.  அங்கே சென்றபோது பனம்பழமும்  பனங்கிழங்கும்  உணவாக வைக்கப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற மீன்களை சமைத்து இரவு உணவு உண்டுவிட்டு, இரவு உலாவிற்கு பனங் காட்டிற்குள் சென்றோம். பனை சார்ந்து வாழும் மிருகங்கள் பறவைகள் அவைகளின் சத்தங்கள் போன்றவற்றை குறித்து பாண்டிச்சேரி ராம் விளக்கி கூறினார்கள். சூழியல் சார்ந்த அவரது புரிதல் பனை சார்ந்து எண்ணற்ற உயிரினக்கள் இருக்கின்றன என்பதை நண்பர்களுக்கு எடுத்துக்கூறியது. இரவு படுத்துறங்குவதற்கு என பச்சைப் பனை ஓலைகளை வெட்டி போட்டிருந்தார்கள்.  பனை ஓலைகள் மேல் படுத்துறங்குவது என்பது தனித்துவமான ஓர் அனுபவமாக அனைவருக்கும் இருந்தது. நட்ட நடு ராத்திரியில் தலைக்குமேல் எந்த கூரையும் இல்லாமல் பனங்காட்டில் ஓலைகளின் மேல் புரண்டு உறங்கும் ஒரு வாழ்க்கைமுறை எவரும் கேள்விப்பட்டிராதது. அன்று அதன் இன்பத்தை  முழுவதுமாக அனுபவித்தோம்.

பனை நிலவில் கலந்துகொண்டவர்கள் – புகைப்படம் ஆரோன்

மறுநாள் அதிகாலை சுற்றிலுமிருக்கும் கிராமங்களுக்குச் சென்று பனை நார் கட்டில் பின்னுபவர்களுடனும், பனை ஓலை முறம் செய்பவர்களுடனும் உரையாடினோம். எனது நண்பனும், நியூசிலாந்து நாட்டில் ஓட்டல் துறையில் இருக்கும் வின்ஸ்டன் மதியம் கருப்பட்டி பிரியாணி என ஒன்றைச் செய்தார். அனைவரும் நிகழ்ச்சி குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள மகிழ்வுடன்  கலைந்தோம்.  இதன் சிறப்பம்சம் என்பது பனை சார்ந்த அத்தனை உணவுகளும், அந்த இரு நாட்களுக்குள் எங்களால் சுவைக்க முடிந்தது. ஒரு வருடமாக கிடைக்கும் விதவிதமான பனை உணவுகளை இரண்டே நாளில் சுவைத்தது எங்கள் நண்பர் குழுவினராக மட்டுமே இருக்கமுடியும். ஒரு பனைத் தொழிலாளியின் குடும்பமே கூட ஒரே நாளில் இத்தனை சுவைகளை அறிந்திருக்காது.

ஜேக்கப் அவர்களிடமிருந்து விடை பெற்று, நடைக்காவு என்ற பகுதிக்குச் சென்றேன். செல்லும் வழியை நான் தவறவிட்டதால், வழிதப்பி நான் சென்ற பாதையில் ஒரு புதுப்பிக்கப்பட்ட இந்து ஆலயமும் அதன் அருகில் நிற்கும் அழகிய பனை மரமும் என் கண்ணிற்குப் பட்டது. ஒற்றை மரமாக அது இருந்தபோதிலும்,  அவ்வாலயத்திற்கு அது அழகு சேர்த்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவ்விடத்தில் நான் செலவிட்டேன். எனது வழி  எப்போதும் பனை வழி தான். ஆகவேதான் வழிதப்பினாலும் பனை மரங்கள் என் கண்களுக்கு விருந்தாக எங்கும் நின்றுகொண்டிருக்கின்றன.

நடைக்காவு என்ற ஊரில் திரு. பாலையன் அவர்கள் இருக்கிறார்கள்.பாலையன் அவர்கள் என்னை மிகவும் நேசித்தவர்.  நான் மும்பையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும்போது அவரை சந்தித்தது. அவரது மகள் புஷ்பா மூலமாக எனது எண்ணை வாங்கி என்னிடம் பேசி என்னை பார்க்க வாருங்கள் என்றார். பொதுவாக திருச்சபை அங்கத்தினர்கள் என்போன்ற பணிகளை செய்பவர்களை விரும்புவதில்லை. ஆனால் பாலையன் அவர்கள் என்மீது மிகப்பெரும் மதிப்பை கொண்டிருந்தார். “பனையேறி பாஸ்டரே” என அன்புடனே அழைப்பார். அவரது மகள் புஷ்பா, மருமகன் கிறிஸ்துராஜ், பேரபிள்ளை ஸ்னேகா, மற்றும் மகன் ஃபெலிக்ஸ் அனைவருமே என்னை மிகவும் நேசிப்பவர்கள். ஆகவே அவரைக் கண்டு பனை விதையினைக் கொடுத்து வந்தேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தனது  வீட்டில் நின்ற பனை மரத்தை மகன் முறித்துவிட்டான் என்ற வருத்தம் இருந்தாலும்,  அங்கே வளர்ந்து வரும் ஒரு சிறு வடலியைக் காட்டி சந்தோஷப்பட்டார்.  என்னைப் பார்க்கும் மக்கள் அனைவருமே பனை மரத்தினை கண்டிப்பாக நாம் பாதுகாக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வந்துவிடுகிறார்கள் என்பதுவே  நான் அடைந்த ஆகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 5

ஜனவரி 16, 2021

பனை கலைஞர் மாவட்டம்

சேவியர் அவர்களை நான் பால்மா மக்கள் அமைப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு அங்கமாக இருந்த பனைத் தொழிலாளர் பேரவையானது அதன் நிறுவனர் பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் இலட்சியக் கனவான ” பனைத்தொழிலாளர்களின் ஒன்றிணைவு, தற்சார்பு சமூகம், இவற்றால் விளையும் சுதந்திரம் மற்றும் வாழ்க்கைத்தரம்  உயர்தல்” என்ற கோட்பாட்டின் வழி தனித்து, பால்மா மக்கள் இயக்கமாக தற்பொழுது செயல்படுகிறது. எந்த அரசும் செய்யாத வகையில் 165 முதிய  பனைத்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும், பனைத் தொழிலாளர்களின் மனைவியாக இருந்து விதவையானவர்களுக்கும் உதவிசெய்துவருகிறார்கள். இங்கு உருவாக்கியிருக்கும் ஒரு புதிய சந்தை பொருளினை காண்பிக்கவே நான் சேவியர் அவர்களை அழைத்து வந்தேன். 

பால்மா மக்கள் அமைப்பின் தலைவராக திரு அன்பையன் என்னும் முன்னாள் பனை தொழிலாளி இருக்கிறார்கள். இதன் செயல் இயக்குனராக நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது அங்கு நிதி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு ஜேக்கப் அவர்களும் இருக்கிறர்கள். என்னை பால்மாவின்  பிரதிநிதியாக 2017 ஆம் ஆண்டுமுதல் முன்னிறுத்திவருகிறார்கள். பால்மா குமரி மாவட்டத்தில் மட்டும்  454 பெண்கள் சுய உதவிக்குழுக்களைக் கொண்டது 186 தொழிலாளர் மன்றங்களும் கொண்டது. குமரியில் மிக பிரம்மாண்டமான வலைப்பின்னல் கொண்டது. தங்கள் அமைப்பிலுள்ள அனைவரையும் இலாப பங்காளர்களாக மாற்றும் உன்னத நோக்குடன் பால்மா செயல்படுகிறது.  

2018 ஆம் ஆண்டு பனம்பழங்கள் எனும் உணவுப்பொருள் மிகப்பெருமளவில் வீணாகின்றன என்பதனை குறித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதனை வாசித்த செயல் இயக்குனர் ஜேக்கப் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். அப்போது நான் பனை ஓலைக் குடுவைகள் செய்யும் ஒரு பயிற்சியின் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை கிராமத்தை அடுத்த இலங்கையாளவார் தோட்டத்தில் இருந்தேன். மிக பிரம்மாண்டமான பனை தோட்டம் அது. வருடத்திற்கு ஒருமுறை அங்கே பனையேறிகள் வந்து தங்கி பதனீர் இறக்கி அதனை காய்த்து, கருப்பட்டியாக விற்பனை செய்வார்கள். ஆகவே தங்குமிடம் சமையலறை, கிணறு மற்றும் பம்புசெற்று ஆகியவை இருந்தன.

தங்கப்பனைக் கொண்டு வழங்கிய குடுவை பயிற்சி

“உங்க கட்டுரையைப் பார்த்தேன் ஒரு சில பனம்பழங்கள் வேண்டும்” என்று கேட்டார்கள். குமரி மாவட்டத்தில் தேடினால் கிடைக்கும் என்றேன். ஆனால் அவர்கள் இப்போது இங்கே சீசன் இல்லை நீங்கள் எடுத்து வர முடியுமென்றால் ஒருசில பழங்களை எடுத்துவரவேண்டும் என்றார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டு, நான்கு பனம்பழங்களுடன்  இரவிபுதூர்க்கடை என்ற பகுதிக்கு வந்தபோது இரவு 8 மணி ஆகிவிட்டது.  அந்த இரவு பொழுதிலும் அங்கே வந்து பனம்பழங்களை எடுத்துச் சென்றார்கள். எதற்கு என கேட்டதற்கு விடை ஒரு வாரத்திற்குப் பின்பு எனக்கு கிடைத்தது. என்னை அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து, பனம் பழத்தில் ஸ்குவாஷ் செய்திருக்கிறோம் என்றார்கள். எனக்கு ஒரு பாட்டில் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் சுவைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.  பனம்பழத்தில் உள்ள காரல் தன்மையோடு சிறப்பாகவே அந்த பானம் இருந்தது. பின்னர் அதுவே பால்மாவின் அடையாளமாகிப்போனது.

பனம்பழங்கள் உணவிற்காக சுடப்படுகின்றன

பால்மாவுடன் இணைந்து பனம் பழச் சாறு தயாரிக்கும் ஒரு பயிற்சி பட்டறையினை தமிழக அளவில் நடத்தினோம்.  இந்த பனம்பழச் சாறு குறித்து அறிந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக காளிமார்க் குளிர்பானங்களின் அதிபரும் அதில் கலந்துகொண்டார். எங்களது திட்டம் பனம்பழங்கள் பனை மரத்திலிருந்து விழுந்த சில மணி நேரங்களில் வண்டு ஏறி உண்ணத்தகாததாக மாறிவிடும். ஆகவே இவைகளை சேகரித்து எப்படி அதிக நாட்கள் உணவுபொருளாக பயன்படுத்தலாம் என்பதாக இருந்தது. அவ்வகையில் பனம்பழச் சாறு என்பது ஒரு வருட அலமாரி ஆயுள் கொண்டது. தமிழகத்தில் வீணாகும் பனம்பழங்கள் அந்தந்த இடங்களில் சேகரிக்கப்பட்டு அவைகள் பயன்படுத்தப்பட்டால்,  உணவும் வீணாகபோகாது உபரியாக வருமானமும் கிடைக்கும் என்பது தான் எண்ணமாக இருந்தது.

பனம்பழம் உண்பதற்காக வேகவைக்கும் முறை

எங்களுக்கு பயிற்சியளிக்க திரு பால்ராஜ் அவர்கள் வந்திருந்தார்கள். மத்திய அரசு வழங்கிய பயிற்சியினைப் பெற்றவர் இவர். மிக எளியவராக பார்வைக்கு தோற்றமளிப்பவர் என்றாலும், மிக மிக திறன் வாய்ந்தவர். ஜெர்மனியிலுள்ள ஆய்வாளர்களுடன் இணைந்து பனை சார்ந்த ஆய்வுகளை குமரி மாவட்டத்தில் மேற்கொண்டவர். குமரி மாவட்டத்தில் கற்கண்டு விளையாது என்ற கூற்றை உடைத்து முதன் முதலாக கற்கண்டு அறுவடை செய்தவர் இவர். பால்மாவுடன் இணைந்து மேலும் ஒரு சில பயிற்சிகளை முன்னெடுக்க இது ஒரு நல் துவக்கமாக அமைந்தது.

முதல் பனம்பழம் ஸ்குவாஷுடன் ஜேக்கப்

பால்மா பனம் பழங்களில் செய்யும் ஸ்குவாஷ் விற்பனையில் இப்படித்தான் களமிறங்கியது. தனது எல்லைகளை குமரியை விட்டு விலக்கி தமிழகத்தின் பிற பகுதிகளில் காலடி எடுத்து வைக்க முற்பட்டது. மாத்திரம் அல்ல பனம்பழ ஜாம் போன்றவற்றையும் இன்று விற்பனை செய்துகொண்டிருக்கிறது. வரும் நாட்களில் பனம் பழங்களிலிருந்து அழகுசாதனபொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

பனம்பழம் ஸ்குவாஷ் பயிற்சி வழங்கு பால்ராஜ்

திரு அன்பையன் அவர்களுட னும் ஜேக்கப் அவர்களுடனும் சேவியர் அவர்கள் சந்தித்து உரையாடினார்கள். திரு அன்பையன் அவர்கள் தற்பொழுது பனை மரம் குறித்த பனையேறியின் பார்வையில் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழக அளவில் ஒரு பனையேறி எழுதும் முதல் புத்தகம் என்ற அளவில் இது ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.  புறப்படும் முன்பு, தேவையான ஸ்குவாஷ் மற்றும் கருப்பட்டிகளை வாங்கிக்கொண்டார்கள்.

அங்கிருந்து திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். இரவிபுதூர்கடையிலிருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் இடப்புறமாக இரயில் தண்டவாளத்தின் அருகில் செல்லும் சாலையினைப் பிடித்தால் வாழ்வச்சகோஷ்டம் என்ற பகுதியில் வாழும் தங்கப்பன் அவர்கள் வீட்டை அடையலாம். தங்கப்பன் என்பவர் என்னைப்பொறுத்தவரையில் பனையோலைக் கலைஞர்களுள் மிக முக்கியமான ஆளுமை. முறையான கல்வி கற்காதவர், ஆனால் வறுமையின் நிமித்தமாக தனது சிறு வயது முதலே உழைப்பில் ஊறிப்போய்விட்டவர். அவரது 12 வயது முதல் குடுவை செய்ய குடும்பத்தினருடன் அமர்ந்து உழைத்தவர்.

குடுவை என்பது பனையேறிகளின் அடையாளம்.  குடுவை என்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வழக்கொழிந்துபோனஒரு கலைப்படைப்பாகும். அன்றைய காலத்தில் பனை ஏறுகிறவர்கள், பனை மரத்தில் மண் கலயத்தினை கட்டியிருப்பார்கள். பனை மரத்திலிருந்து பதனீரை இறக்கி கொண்டு வர பனை ஓலையால் செய்யப்பட்ட பனையோலைக் குடுவையினை பயன்படுத்துவார்கள். திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் சுரை குடுகையினை இதற்கென பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

வழக்கொழிந்துபோன பனையோலை குடுவை பயிற்சி வழங்கிய தங்கப்பன் பயிற்சியாளர்களுடன்

பனையோலைக் குடுவை என்பது ஒரு செவ்வியல் படைப்பு. பனை ஓலைகளில் காணப்படும், குருத்தோலை சாரோலை, பனை நார், கருக்கு நார், பனை மட்டை, ஈர்க்கில் என அனைத்து பொருட்களையும் இணைந்து செய்யப்படுவதுவே குடுவையாகும். பனையோலைக் குடுவைக்கு இணையான ஒரு நீர் ஏந்தும் தாவர பாத்திரம் உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இருந்திருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு இனத்தின் நாடி நரம்பு அனைத்தும் பனை சார்ந்து துடித்தாலொழிய இவ்வித கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்க இயலாது. உலகில் வேறு எந்த பகுதியிலும் இதற்கு இணையான பொருள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

சுமார் தொண்ணூறுகள் வரைக்கும் மிக எளிமையாக கிடைத்துக்கொண்டிருந்த பனைஓலைக் குடுவைகள் பிற்பாடு அழிவை சந்தித்தன. எனது பனை மர தேடுதலும் விருப்பமும் குடுவையின் அழகில் மயங்கி தான் நிகழ்த்தன என நான் பனைமரச்சாலையிலேயே பதிவு செய்திருப்பேன். இப்படி பனை ஓலைக் குடுவை செய்யும் ஒரு நபரையாவது கண்டடையமுடியுமா என்று குமரி மாவட்டத்தை சல்லடையாக சலித்து தேடிக்கொண்டிருக்கும்போதுதான் தங்கப்பன் அவர்களை சந்தித்தேன். எனக்கு ஒரு குடுவை செய்ய்வெண்டும் என்று சொன்னபோது 1000 ரூபாய் வேண்டும், ஆறு மட்டை சாரோலைகள், மூன்று மட்டை குருத்தோலை மற்றும் ஆறு நீண்ட மட்டைகள் வேண்டும் எனக் கேட்டார். எனது அண்ணன் உதவியுடன் இவைகளை எடுத்துச் சென்று நான் கொடுத்தேன். 2017 ஆம் ஆண்டு அவர் எனக்கு இதனைச் செய்து கொடுத்தார். என்னைப்பொறுத்த அளவில், குமரிமாவட்டத்தில் இருக்கும் எஞ்சிய ஒரே குடுவை தயாரிப்பவர் இவர் தான். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் இருக்கக்கூடும். தஞ்சையிலும், பண்ணைவிளையிலும் குடுவை செய்கிறவர்களை சந்தித்திருக்கிறேன்.

தங்கப்பன் அவர்களைக் கொண்டு தான் குடுவை பயிற்சி இலங்கை ஆளவார் தோட்டத்தில் வைத்து நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 7 நபர்கள் வந்திருந்தார்கள். இருவர் ஆண்கள் மற்றும் ஐவர் பெண்கள். பயிற்சி காலம் ஒரு வாரம். எப்படியோ கஷ்டப்பட்டு பெண்கள் ஐவரும் ஆளுக்கொரு குடுவையினை செய்து முடித்தார்கள். தங்கப்பன் அவ்வகையில் ஒரு தலைசிறந்த ஆசிரியர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு சர்வதேச மலர்கண்காட்சிக்கு நான் திரு தங்கப்பன் அவர்களைத் தான் அழைத்தேன். பனை சார்ந்த ஒரு கலைஞரை விமானத்தின் மூலம் பயணிக்கச் செய்தது எனக்கு மனநிறைவளித்ததுடன் முதன் முறையாக பயணித்த அவருக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. பனை ஏறுகின்ற சங்கர் கணேஷ் அவர்களுக்கு உதவியாகவும் தனது கலைப்படைப்புகளுடனும் அங்கே வந்திருந்தார்கள்.

நாங்கள் அங்கே சென்றபோது தங்கப்பன் அவர்கள் மண் கிளைக்கும் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவியும் இரண்டு பேரபிள்ளைகளும் மட்டுமே இருந்தனர். தங்கப்பன் செய்யும் பொருட்களின் செய்நேர்த்தி என்பது இரண்டு கூறுகளால் ஆனது. ஒன்று அவரது கைகளில் ஒளிந்திருக்கும் கலை நேர்த்தி. இரண்டாவதாக அப்பொருளின் உறுதி அதன் மூலமாக அப்பொருள் நீடித்து உழைக்கும் தன்மை. திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு நான் முதன் முறையாக சென்றபோது, அவரது திருமணத்திற்கு அவரே செய்த பனையோலை பாயினைக் காண்பித்தார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த பாய், கருநாகத்தோல் போல் வழவழப்புடன் காணப்பட்டது. பனை பொருட்களை எடுத்து பயன்படுத்துவது என்பது அதன் மீதான ஆழ்ந்த பற்றுடன் செய்யப்படக்கூடியது என்ற படிப்பினையை தங்கப்பன் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதற்கென அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் கூறவில்லை. மாறாக தனது கைத்திறனால் உருவாக்கிய பொருட்களின் மூலம் அவர் பேசினார்.

அவர்கள் வீட்டில் செய்யப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் மற்றும் ஒற்றைமுக்கு தொப்பி போன்றவற்றை சேவியர், அவர்கள் கூறிய விலைக்கே வாங்கிக்கொன்டார். நாங்கள் தேடி வந்த பனையோலைக் குடுவை கிடைக்கவில்லை. ஆனால் எப்படியும் குடுவையினை உங்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று உறுதிகூறினேன். அங்கிருந்து நேராக மதிய உணவிற்கு ஜாஸ்மின் வீட்டிற்கு சென்றோம்.

மதியத்திற்குப் பின்பு கிராமிய வளர்ச்சி இயக்கம் (RDM) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றோம். பாரக்கன் விளை என்ற பகுதியில் இருக்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர், பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் நெருங்கிய நண்பரான அறிவர் அருட்திரு. இஸ்ரயேல் செல்வநாயகம். கிராமிய வளர்ச்சி இயக்கம், அப்பகுதியிலுள்ள பெண்களின் தொழில் வாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. தையல் மற்றும் வேறு பல வேலைவாய்ப்புகளும் இங்கு உண்டு. பெண்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகள் செய்யலாம். குமரி மாவட்டத்தில், பனை ஓலைகள் சார்ந்து அழகு பொருட்களைச் செய்யும் கடைசி தலைமுறையினரில் இவர்கள் குழுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த  இக்கலைஞர்களுக்குப் பின்பு அடுத்த தலைமுறையினர் இக்கலைகளை கற்றுக்கொள்ளாதது வேதனையானது.அங்கிருந்த பொருட்களைப் பார்த்த பின்பு, அங்குள்ளவர்களோடு சற்றுநேரம் சேவியர் உரையாடினார். பின்னர் அங்கிருந்து பனை ஓலையில் கடவம் செய்யும் பாலம்மாளைக் காண ஓலைவிளைக்கு செல்லலாம் என்று கூறினேன். சேவியர் சரி என்றார்.

சற்றேறக்குறைய மாலை 5 மணி ஆகிவிட்டது. என்னைப்பொறுத்தவரை பாலம்மாள் அவர்கள் கடவம் செய்வதில் நிபுணத்துவம் கொண்டவர். ஓலைகள் அவர்கள் பேச்சை கேட்கும். எவ்விதமான கடவம் வேண்டும் என்று கேட்டாலும் ஒரு மணி நேரத்தில் அவைகளைச் செய்து நமது கரத்தில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். அன்று நாங்கள் சென்றபோது சற்று வேலையாக இருந்தார்கள். ஆகவே நாங்கள் அருகிலுள்ள கடைக்கு தேனீர் குடிக்கப் போனோம். செல்லும் வழியில் “கூவக் கிழங்குகள்” விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் சேவியர் கண்டு ஆச்சரியத்துடன் சிறிது வாங்கிக்கொண்டார். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் இந்த கிழங்கு மிகவும் சுவையானது. வெண்மை நிறத்திலிருக்கும் இதனைக் கடித்து சுவைக்கையில் பால் ஊறி வரும். தனித்துவமான சுவைக்கொண்டிருக்கும். கொஞ்சமே கொஞ்சமாக கோதல் எஞ்சும். குமரியின் மேற்கு பகுதியிலுள்ளவர்களை “கிழங்கன்” என்று அழைப்பதற்கு அவர்கள் உணவில் பெருமளவில் சேரும் கிழங்குவகைகள் தான் காரணம். 

கடவம் முடையும் பாலம்மாள்

ஓலைவிளை ஜங்ஷனின் அருகிலேயே  பாறைகளை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் நாங்கள் சென்று நின்றோம். எவ்விதம் வளர்ச்சி என்ற பெயரில் நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என சேவியர் கூறினார். நமது வளார்ச்சி திட்டங்கள் எப்படி அழிவை நோக்கியதாகவே இருக்கின்றன என்பதை ஒரு பொறியாளராக அவர் விளக்கிக் கூறும்போது, சூழியல் சார்ந்த பொறுப்புணர்வு ஒரு சமூகத்திற்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்றன என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

பனையோலைக் கலைஞர்களைப் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படும். அவர்களிடம் சில குறிப்பிட்ட பண்புகள் காணப்படுகின்றன. அவர்கள் ஓலைகளை எடுத்து வைக்கும் அழகு, நேர்த்தி போன்றவை பிரமிக்க வைப்பது. அவர்கள் ஓலைகளை தெரிவு செய்வது கூட ஒன்றுபோலவே இருக்கும். எவ்வித சூழலிலும் இறுதி வடிவம் மிக அழகாக காட்சியளிக்கும் வண்ணம் செய்துவிடுவார்கள். பொருட்களைச் செய்வதில் உள்ள வேகம், கூடவே வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் திறன் என பல்முனை திறன் பெற்ற ஆளுமைகளாக இருப்பார்கள். பார்வைக்கு மிக அதிக ஓலைகளை விரயம் செய்வதுபோல காணப்பட்டாலும், மிக சிக்கனமாக ஓலைகளைக் கையாள்வது உடனிருந்து பார்ப்பவருக்குத்தான் தெரியும். பாலம்மாளுக்கு ஒருவேளை கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியிருந்தால் குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய கல்லூரியில் விரிவுரையாளராக மாறியிருப்பார். அப்படி பேச்சு கொடுப்பார்.

ஆரம்பத்தில் கடவம் குறித்து எனக்கு சரியான புரிதல் இருந்ததில்லை. ஆகவே கடவம் செய்பவர்கள் மேலும் எனக்கு முதலில் பெரிய மதிப்பு இருந்ததில்லை. ஆனால் பாலம்மாள் தனித்திறன் வாய்ந்தவர் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மூன்றடி சுற்றளவு கொண்ட ஒரு கடவத்தை செய்யும் திறன் எவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அன்னையைப்போன்ற ஒருவராலேயே ஓலைகளை தன் மடியில் குழந்தைகளைப்போல விளையாட விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலும்பி நிற்கும் ஓலைகளாய் வழிக்கு கொண்டுவரும் திறமை உண்டு. அவர்களின் கைகளுக்கு மட்டுமல்ல,  தனது பல்லாண்டு அனுபவத்தாலும் கரிசனையாலும் ஓலைகளை ஒன்றிணைப்பவர் என்பதனைக் கண்டுகொண்டேன்.

கடவம் செய்யும்போது, ஓலைகளில் ஈர்க்கில் கிழிக்கப்படாது. ஆனால் அதன் வயிற்றுப்பகுதி மட்டும் சற்று சீர் செய்யப்பட்டு இணைக்கப்படும். இதில் இணைத்திருக்கும் ஈர்க்கிலால் ஒரு புறம் இப்பெட்டிகள் உறுதி பெற்றாலும், மற்றொரு வகையில் பார்க்கும்போது ஈர்க்கில் இருப்பதால் இரட்டை ஓலைகள் இயல்பாக இப்பின்னல்களில் அமைந்துவிடுகிறது. இதற்கு மேல் பொத்தல் என்று சொல்லகூடிய அதிகப்படியான பின்னல் கடவத்தின் உறுதியினை மேம்படுத்தி நீடித்து உழைக்கச் செய்கிறது.

சிறிய கடவத்தினை நேர்த்தியாக உருவாக்கிக்கொண்டிருக்கும் பாலம்மாள்

கடவம் என்பது குமரி மாவட்டத்தில் செய்யப்படும் பெட்டிகளிலேயே மிகப்பெரிய வகையாகும். குமரி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக இவைகள் செய்யப்படுகின்றன. திருமண வீட்டில் அப்பளம் பொரித்து வைக்கவும், பழங்கள் எடுத்துச் செல்லவும், சோறு எடுத்துச் செல்லவும் இவைகள் பயன்பட்டன. சந்தைகளில் காய்கறிகள் வைக்கவும், சுமடு எடுத்து செல்லுகிறவர்கள், கடவங்களிலேயே பொருட்களை எடுத்துச் செல்லுவதும் குமரி மாவட்டத்தில் காணப்படும் அன்றாட காட்சி. மீன் விற்பவர்கள் பனை ஓலைக் கடவத்தில் தான் பல மைல்கள் கடந்து மீனை எடுத்துச் சென்று விற்பார்கள். அக்காலங்கள் ஐஸ் இல்லாத மீன்கள் விற்கப்பட்ட காலம். மேலும் எண்னை பிழியும் செக்கு இயக்கப்படுமிடங்களில் கூட பனை ஓலைக் கடவமே பயன்பாட்டில் இருக்கும். காயவைத்த தேங்காய்களை எடுத்துச் செல்ல இவைகள் பயன் பட்டன. வீடுகளில் உரம் சுமக்க, மண் சுமக்க மற்றும் சருகுகள் வார என பல்வேறு பயன்பாடுகள் இங்கே இருந்தன.

“கடவத்துல வாரியெடுக்கவேண்டும்” என்கிற சொல்லாடல் தெறிக்கெட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள் சொல்லுவது. “பெருசா கடவத்துல கொண்டுவந்துட்டா” என மருமகளைப் பார்த்து மாமியார் கேட்பதும் உண்டு.

கடவங்களில் அதன் நான்கு முக்குகள் தான் முதலில் பாதிக்கப்படும். அப்போது ஓலைகளை கொண்டு பெரியவர்கள் பொத்தி பயன்படுத்துவார்கள். பொத்தி எனும் வார்த்தை ஓட்டையை அடைப்பது என்பதுடன், அதனைப் பலப்படுத்துவது, மேலும் ஒரு வரிசை ஓலைகளை இணைத்துக்கொள்ளுவது என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. என் குழந்தையை பொத்தி பொத்தி வளார்த்தேன் என்பது கூட மிக கவனமாக ஒன்றன் பின் ஒன்றாக கவனித்து வளர்த்தேன் என்கிற பொருள்பெறுவது இப்படித்தான். அதிகமாக சாப்பிடுகிறவர்களை “கடவங்கணக்குல அள்ளி தின்னுகான்” என்பார்கள்.

ஓலைவிளையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பும் கூட நூற்றிற்கு மேற்பட்ட மக்கள் கடவம் பின்னுவதனையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பனை ஓலைகள் இங்கே கிடைப்பதில்லை. இராமநாதபுரத்திலிருந்து வருகின்ற ஓலைகளை நம்பியே இங்கே தற்போது தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓலைகள் பெரிய லாரியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் அவைகள் சிறிய டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஓலைகள் குறித்த காலத்திற்கு வராமை, ஓலைகளுக்கான விலையேற்றம், தரமற்ற ஓலைகள் என பல காரணங்களால் இன்று பெரும்பாலானோர் இதனை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

ஓலைகளை செய்து முடித்த பின்பு, சேவியர் ஒரு வேண்டுகோளை அவர்கள் முன்பு வைத்தார். இதே பெட்டி ஒடுங்கி சற்றே உயரமாக வரும்படி செய்ய முடியுமா? பாலம்மாள் முடியும் என்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யோசித்திருக்கவில்லை. உடனடியாக ஒன்றைச் செய்ய சொல்ல, அவர்கள் அதனை செய்து பார்த்தார்கள். இருட்டிவிட்டது. ஆனால் அவர்களது கைகளோ தட்டச்சு வேகத்தில் பின்னிக்கொண்டு சென்றது. இருளில் அதனையும் பொத்திக் கொடுத்தார்கள். ஆனால் கடவத்தின் நேர்த்தி கைகூடவில்லை. அது அப்படித்தான், ஒரே வடிவம், சீரான அமைப்பு என ஒருவர் பின்னிக்கொண்டு வருகையில், அதிலிருந்து மாறுதலான வடிவம் ஒன்றைச் செய்யச் சொன்னால் அது அத்துணை எளிதில் நடைபெறுவது இல்லை. சேவியர் அவர்கள் அதனைப் புரிந்துகொண்டார். அவர்கள் பாலம்மாளிடம் எனக்கு இதுபோல 5 பெட்டிகள் வேண்டும், பொறுமையாக செய்து அனுப்புங்கள் என அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றார்.

இரவாகிவிட்டதால் சேவியர் திரும்பவேண்டிய நேரம் வந்தது. ஆனால் அவர் சங்கர் கணேஷ் என்ற எனது நண்பனும், பனையேறியும், பனை ஓலைக் கலைஞனை காண விரும்பினார்கள். சங்கருக்கு அப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே பல்வேறு வேலைகளில் அவன் சிக்கிகொண்டதால், எங்களை சந்திக்க வரவில்லை. ஆகவே நான் கூறினேன், நாங்கள் உனது வீட்டைத்தான் நோக்கி வருகிறோம் என்று. அவன் வேலைகளை முடித்துவிட்டு எங்களை திக்கணங்கோட்டில் வைத்து சந்தித்தார். இரவு சற்றேறக்குறைய 9 மணி இருக்கும்.

சங்கர், தான் செய்த பொருட்களைக் அவருக்கு விளக்கி காட்டினான். விலைகளைக் குறித்து விசாரித்தபின், மெல்லிய சிரிப்போடு, இதனைவிட விலைகுறைவாக நேர்த்தியாக பழவேற்காட்டில் செய்வார்கள் என்றார். சேவியர் அவர்கள், என்னோடு பேசும்போது எப்படி அவர்களால் ஒரு சிறந்த தரத்தை கைக்கொள்ள முடிகிறது என்பதைக் குறித்து விவரித்தார்கள். ஓலைகள் பழவேற்காட்டைச் சார்த்தவை. ஒவ்வொரு பொருளும், ஆர்டரை முன்வைத்தே செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்கள் இவ்வித முறைமையினையே கைக்கொள்ளுகிறார்கள், ஆனால் பழவேற்காட்டைப் பொறுத்த அளவில், ஓலைகள், வாங்கப்பட்ட பின்பே பொருட்கள் செய்யப்படும். ஓலைகளை ஏற்கனவே வாங்கி பரணில் போட்டு பழைய ஓலைகளில் பொருட்கள் செய்யும் வழக்கம் அங்கே இல்லை. அவ்வகையில் பார்க்கும்பொது, பழவேற்காட்டில் உள்ள கூலி குமரி மாவட்டத்தை விட குறைவு. தயாரிப்பு செலவு இன்னும் குறைவாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் அவர்களது கலைத் திறன் மேல் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் சேவியர்.  

அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு தற்போது இல்லை. பாரம்பரிய பொருட்களைச் செய்வோர் மீது எனக்கு மிகப்பெரிய காதலுண்டு. எப்படி இஸ்லாமியர் வாயிலாக நமக்கு அழகிய கலைப்பொருட்கள் வந்திருக்கும் எனவும், எப்படி பரதவர் பெண்கள் பனை ஓலைக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நான் பார்த்தவரையில் மணப்பாடு மிகச்சிறந்த பனைக் கலைஞர்களைக் கொண்ட இடம். அவ்விடத்தில் பரதவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

பேச்சினூடே பரதவர்களுக்கும் பனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவர்கள் தயாரிக்கும் ஒரு உணவு பொருளை நீங்கள் சுவைத்துப்பாருங்கள் என்று கொடுத்தார்கள். வாழைப்பழத்தை பதனீரில் இட்டு இடித்து செய்யும் ஒரு தின்பண்டம். அல்வா போல இருந்தது. இன்னும் அனேக உணவுபொருட்கள் உண்டு என்றார். மிக அழகிய வேலைப்பாடுகள் மட்டுமல்ல, பல்வேறுவகைகளில் மீன்களைப் பிடிக்கவும், கள் உட்பட பல்வேறு உணவு பொருட்களை பனை சார்ந்து அவர்களே அமைத்துக்கொண்டுள்ளனர் என்றார். நாங்கள் மெய்மறந்து நின்றோம்.

உண்மையில், நமது உரையாடல் என்பது மேலோட்டமானது, நமக்கடுத்திருக்கும் நபர்களின் வாழ்வியல் சார்ந்து நாம் அறிந்தவைகள் மிகக்குறைவு. நான் 2017 – 2019 வரை குமரி மாவட்டத்தில்  தங்கியிருந்தபோது தான் நெய்தல் நிலத்திற்கும் பனைக்குமான தொடர்பைக் குறித்து ஆராய துவங்கினேன். நாங்கள் தங்கியிருந்த மிடாலக்காடு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் குறும்பனை என்ற கடற்கரை கிராமம் இருக்கின்றது. குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே, தென்னை மரங்களால் நிறைந்தவை. தென்னைகள் என்பவை பனைகளுக்கு மாறாகவும், புன்னை மரங்களை அழித்தும் வேரூன்றியவை. அப்படியானால் குறும்பனை? நாங்கள் தேடி சென்றபோது இன்னும் சிதைவுறாமல் ஒரு பனங்காடு அங்கே இருப்பதைப் பார்த்தேன். கன்னியாகுமரி, சொத்தைவிளை மற்றும் முட்டம் போன்ற கடற்கரைகளில் இன்றும் பனைமரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கடற்கரையில் வாழும் மக்களுக்கு பனை மரம் மிகவும் நெருக்கமானது தான் சந்தேகம் இல்லை.

நான் பழவேற்காடு பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் கூறினேன். அவர் தங்கும் வசதி எதுவும் கிடையாது என்றார். எப்படியாவது ஓரிடத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்றேன். பார்க்கிறேன் என்றார். நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் ஏதும் இருக்காது, ஆனால் வாருங்கள் என்றார். கண்டிப்பாக பழவேற்காட்டில் சந்திப்போம் என்று கூறி பிரிந்தோம். அவர் காரில் நாகர்கோவில் செல்ல சங்கர் தனது பைக்கில் என்னை தேவிகோடு அழைத்துச் சென்றார். வீட்டில் இருவருமாக இரவு உணவைச் சாப்பிட்டோம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

திருச்சபையின் பனைமர வேட்கை – 32

ஏப்ரல் 9, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 32

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

குருத்தோலை திங்கள்

மற்றொரு தாயார் எழுந்து எங்களது இளமைக் காலத்தில் பனைமரங்கள் அழிவை நோக்கி சென்றதாக நாங்கள் கருதவில்லை, ஒரு வேளை போர் மிகப்பெரிய அழிவை பனை மரங்களுக்கு  ஏற்படுத்தியிருக்கலாம். என்றாலும் பனை மரம் தானே வளரக்கூடியது என்பது தான் எங்களது புரிதல். திருச்சபை இதில் எப்படி ஈடுபடுவது என்பதை சற்று விளக்குங்கள் என்றார்.

காலங்கள் மாறிக்கொண்டு வருகிறதை நாம் கவலையுடன் தான் பார்க்கிறோம். முன்பு போன்ற வாழ்கை முறை அல்ல இன்று நாம் வாழ்வது. இயற்கை சார்ந்து நாம் அனுபவித்தவைகளில் வெகு சிலவே இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. நமது வீட்டின் அடுப்பறையை நாம் எட்டிப்பார்த்தால் நமக்குத் தெரியும் நம்முடைய அடுக்களையில் புழங்கிய 60 சதவிகிதத்துக்கும் மேலான பொருட்கள் இன்று பயன்பாட்டில் இல்லை. நமது பெற்றோர் ஓலையில் செய்ய அறிந்திருந்த கைப்பணிகளில் எவைகளை நாம் அறிந்திருக்கிறோம். பணம் கொடுத்து பனைஓலைப் பொருட்களை வாங்கி பாவிப்பது சரியானது என நமக்குச் சொன்னவர்கள் யார்? இன்று நமது அடுக்களையிலிருந்து காணாமல் போனது ஓலைப் பொருட்கள் மட்டும் அல்ல, பலர் தங்களுடைய வாழ்வாதாரங்களை இக்காலகட்டத்தில் இழந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை பறைசாற்றும் அத்தாட்சிகள் அவை.

தண்ணீர் என்பதை விலைக்கொடுத்து வாங்க வேண்டிய சூழல் வரும் என்று நாம் நம் சிறு வயதில் எண்ணியிருக்க மாட்டோம். இன்று தண்ணீர் விற்பவர் மிக சிறந்த வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்றே பொதுமனம் எண்ணிக்கொள்ளுகின்றது, ஏனெனில் அவர் கை நிறைய பொருளீட்டுகிறார். அலுங்காமல் குலுங்காமல் பொருளீட்டுவது ஒன்றே முன்னேற்றம் என்று கருதப்படுகிறது. வளங்களை சிக்கனமாய் பேணி பாதுகாப்பவர்களைவிட ஊதாரிகளையே வணங்கப்படவேண்டியவர்களாக கருதும் தீய எண்ணம் நமக்குள் ஊன்றப்பட்டிருக்கிறது.

நமது திருச்சபையின் முன்பு நிற்கும் இரு பனைகளை காலனிய மனநிலைகளின் எச்சம் என்று நான் குறிப்பிட்டேன். சிலர் அதனால் மனம் வருந்தியிருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள மனநிலை என்ன என்று நாம் சற்றே ஆழ்ந்து பார்க்கையில், நமக்கு சில தெளிவுகள் கிடைக்கும். பனை மரங்கள் திருகோணமலை பகுதியில் இருந்திருக்கிறது எனவும் அது சார்ந்து மக்கள் தங்கள் தொழில் வாய்ப்புகளை அமைத்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் நாம் மறுக்க இயலாது. இச்சுழலில் தான் அழகுக்கான பனை மரம் நடப்படுகிறது. திருச்சபை தன்னை கடின வேலைகளிலிருந்து விலக்கிக்கொள்ள துடிக்கிறதோ? சீவல் தொழிலை அடிமைத்தனம் என எண்ணும் கால சூழ்நிலையில் இருந்ததால் அதிலிருந்து திருச்சபை விடுதலை பெற அழைப்பு விடுப்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. சரிதானே எனத் தோன்றும் இவ்வெண்ணத்தில்,  காணப்படும் குறை தான் என்ன? நாம் காலனீய எண்ணங்களுக்கு அடிமையாகிறோம். அவர்கள் நமக்கு உனது வாழ்வு பிழையானது எனச் சொல்லுகிறார்கள். எனக்கு அடிமையாக இருந்துப்பார், உனது வாழ்வு எங்கோ சென்றுவிடும் எனக் கூறுகிறார்கள்.

அதற்காக நமது முன்னோர்கள் நமக்கு சேமித்து வைத்த அறிவு தளங்களிலிருந்து நம்மை விலக்குகிறார்கள். பனை  உணவு பொருள் குறித்து நமக்கு இருந்த எண்ணங்களை நம்மிலிருந்து அகற்றி அவர்களின் உணவு பொருள்களை பயன்படுத்த நமக்கு கற்பிக்கிறார்கள். இன்று நாம் பயன்படுத்தும் புட்டு எனும் உணவிற்கு ஈடாக பாண் (பிரட்) பயன்படுத்தும் அளவிற்கு அவர்களின் தாக்கம் நம்மில் நிலவுகிறது.  இனிமேல் பனை ஏற வேண்டாம் சீவல் தொழிலில் ஈடுபடவேண்டாம், பொருள் ஈட்டினால் போதும், நமக்கு தேவையானவைகள் கிடைக்கும் என்ற நுகர்வு கலாச்சாரத்தின் துவக்கத்தை நமக்கு விதைத்துச் சென்றுவிட்டனரோ?

பனை மரங்கள் தானே வளரும் என்ற சூழல் இன்று மாறிக்கொண்டு வருகின்றது, இன்று வளர்ச்சி என்ற பெயரில் பனைமரங்கள் வேகமாக அழிந்துவருகிறது. ஒரு நாளைக்கு இலங்கை முழுவது 100 மரம் வீதம் வெட்டப்படுகிறது எனும் புள்ளி விபரம் இருக்கிறது. பல புதிய கட்டுமான பணிகள் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவ்வகையில் திருச்சபை பனை மரங்களை நடுவது அவசியமாகிறது. அதற்கான கரணம் ஒன்று உண்டு.

32 Rev. Godson

இரண்டாயிரம் வருடங்களாக திருச்சபைக்குள் நுழைந்துவிட்ட சடங்குள் ஏராளம். அவைகள் மாற்றங்களுக்கு உட்பட்டே இன்று நம்மை அடைந்திருக்கின்றன. திருமறையில் காணப்படுவது போல் எதுவுமே இன்று நம்மிடம் எஞ்சியிருக்காது. அது சாத்தியமும் அல்ல. காலம் அவைகளில் வடுக்களையும் வண்ணங்களையும் ஏற்றி இறக்கியிருக்கிறது  என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது. மாற்கு நற்செய்தி நூலின் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் குருத்தோலை பவனி நடைபெற்ற நாள் திங்கட் கிழமை என்றே சமீபத்திய புரிதல் எழுந்துள்ளது. சிந்தனைக்காக குருத்தோலை திங்கள் என ஒருபுறம் வைத்துக்கொண்டாலும், திருச்சபை அனுசரிக்கும்  குருத்தோலை ஞாயிறு எனும் பண்டிகை நான்காம் நூறாண்டு முதல் வழக்கத்தில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் யூகிக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டு இறுதிப்பகுதியிலிருந்து  அதுகுறித்த ஆவணங்கள் கிடைக்கப்பெறுகின்றன.  சிறிது சிறிதாக திருச்சபைக்குள் நீக்கமற நிறைந்து விட்ட இவ்வழக்கத்தில் நாம் பிடித்துச் செல்லுகின்ற குருத்தோலைகளை நமக்கு எடுத்துக்கொடுப்பவர்கள் யார்? அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தாது நாம் கொண்டாடும் இன்நீண்ட பாரம்பரியத்தில் காணப்படும் இடைவெளிகளை எவ்விதம் நாம் எடுத்தாளப்போகிறோம். குறிப்பாக  பனை மரங்களே இல்லை என்று சொன்னால் நாம் குருத்தோலை திருவிழாவை எவ்விதம் கொண்டாடுவோம்?

குருத்தோலை திருநாள் அலங்காரம்

குருத்தோலை திருநாள் அலங்காரம்

குருத்துக்களை எடுக்கையில் மரங்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றது. மரங்களின் வளர்ச்சியை அது பாதிப்பதோடு அதில் நாம் பெறும் பயன்களையும் அது குறைத்துவிடுகிறது. ஒருமுறை பெங்களூரில் ஒரு பேராயர், குருத்துக்களை எடுத்து வருவதை தடை செய்ய வேண்டும் எனக் கூற அது பெரிய விவாதம் ஆகிவிட்டதாக எனது இறையியல் ஆசிரியர் என்னிடம் கூறினார். அவ்விதம் நம்மால் குருத்தோலைகளை இழந்து ஒரு கொண்டாட்டத்தை முன்னெடுக்க இயலாது. ஆகவே தான் நாம் மரங்களை நடுவதும் பேணுவதும் அவசியமாகிறது. ஆலய வளாகங்களில் பனை மரங்கள் இல்லை என்று சொன்னால் பிற்பாடு நாம் எடுக்கும் குருத்தோலை எங்கிருந்து வரும்.? அவ்விதம் குருத்தோலைகள் நாம் பெறுமிடங்களில் அவற்றை ஒரு வணிக பறிமாற்றமாக மட்டுமே  நாம் பார்த்திருக்கிறோம்.  அவர்கள் மத்தியில் பணி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளதாக நாம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நமது குருத்தோலை பண்டிகை அர்த்தம் பெறும் ஒன்றாக அமையும்.

இயேசுவின் முன்னே குருத்தோலைகளைப் பிடித்துச் சென்றவர்கள் அனைவரும் பனை சார்ந்த வாழ்வியலைக் கொண்டிருன்ட்தவர்கள் என நாம் பார்த்தோம். அவர்கள் ஓலைகளை எடுத்துச்செல்ல உரிமை பெற்றவர்கள். எனது குடும்பத்தின் பணி ஈச்சமரம் ஏறுவது ஆகவே நாங்கள் ஈச்ச ஓலைகளை எமது மீட்பர் முன்னிலையில் அசைக்க அனைத்து தகுதிகளும் உடையவர் என்ற கருத்தை அது ஆணித்தரமாக நிறுவுகிறது.  “உள்ளபடி” வரவே ஆண்டவர் அழைப்பு விடுக்கிறார்.

சிஸ்டர் கிளேர் (Sr. Clair)  வரைந்த குருத்தோலை பவனி


சிஸ்டர் கிளேர் (Sr. Clair) வரைந்த குருத்தோலை பவனி

நமது வாழ்வு பனை மரத்திலிருந்து வெகுவாக விலகி வந்துவிட்டது. இச்சூழலில் பனை சார்ந்த கரிசனையுடன் மட்டுமே நாம் நமது சமய நம்பிக்கைகளை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளோம். நமக்கும் ஓலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத சூழலில் நாம் ஓலைகளை எடுத்துச்செல்லுவது அர்த்தம் நிறைந்ததாக இராது. மாறாக இன்றைய சூழலை வைத்துப் பார்க்கையில்  குருத்தோலைகளை சுமந்து செல்லுவதை விடபனை மரத்தினை நடுவது தான் பொருள் பொதிந்ததாக இருக்கும். திருச்சபை ஒவ்வொரு குருத்தோலை ஞாயிறு அன்றும் குறைந்தபட்சம் ஒரு பனை மரத்தையாவது  நட முற்படலாம். ஒருவேளை ஆலய வளாகத்தில் இடம் இல்லை என்று சொன்னால், நாம் செல்லும் குருத்தோலை பேரணியின் போது சாலை ஓரங்களிலோ அல்லது பொதுவிடங்களிலோ அனுமதி பெற்றும் நடலாம். இவ்வகையில் திருச்சபை வருடத்திற்கு ஒரு மரம் நட்டாலே அது குறியீட்டு ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திருச்சபையின் சூழியல் பங்களிப்பை அது அறுதியிட்டுக்காட்டும்.  நொடிந்துபோயிருக்கும் சீவல் தொழிலாளர் வாழ்வில் அது நம்பிக்கை அளிக்கும் பேரணியாக இருக்கும். ஆண்டவரும் மகிழுவார்.

திருமறை சார்ந்து பொதுவான கேள்விகளை கேட்க போதகர் திருச்சபையினரை ஊக்கப்படுத்தினார், ஆனால் எவரும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் சற்றே தளர்ந்து போனேன். எவ்வித சலனமும் ஏற்படுத்தாமல் இவ்விடத்தை விட்டு கடந்து போகிறேனா ஆண்டவரே என்று உளம் உருகி நின்றேன். அவ்வேளையில் போதகர், அந்த தாயாரிடம் ஜெபிக்க சொன்னார்கள். அந்த ஜெபம் கடவுள் உண்மையிலேயே ஒரு பெரும் அசைவை திருகோணமலை மெதடிஸ்ட் திருச்சபையில் ஏற்படுத்தியிருக்கிறார் என்னும் நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது. ஒரு வயதான மூதாட்டி, எனது கரத்தில் இலங்கைப் பணம் 100 ரூபாயை வைத்தார்கள். தங்கள் ஏழ்மையில் அவர்கள் கொடுத்த அன்பு காணிக்கை என்றே கருதி ஏற்றுக்கொண்டேன்.

போதகரின் மனைவி என்னிடம் பனை சார்ந்து பல விஷயங்களைப் அன்று பேசினார்கள். அந்த திருச்சபையின் அங்கத்தினர் ஒருவர் என்னோடு மேலும் ஒரு மணி நேரம் விவாதித்தார். நாங்கள் ஒருபோதும் சீவல் தொழிலாளர்களை வெறுக்கவில்லை என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. போதகர் நிஷாந்தா தனது கடமைகள் அனைத்தும் முடித்து வந்தபின் எனது உரை நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார் ” இந்திய போதகர்  எண்டால் எப்படியென்று நிரூபிச்சிட்டியளே” என்றார்.

அன்று போதகர் நிஷாந்தா என்னோடு அதிக நேரம் செலவிட்டார். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு இலங்கையில் எழுந்துவரும் ஆதரவுகளைக் குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து வரும் பல நற்செய்தியாளர்கள் திருச்சபையில் ஏற்படுத்தும் ஆழ்ந்த இறையியல் தடுமாற்றங்கள் குறித்து மிகவும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். இலங்கை திருச்சபையை எப்படி பணம் பறிக்கும் இடமாக இந்திய திருச்சபையினர் பாவிக்கிறார்கள் என்று அவர் சொல்லுகையில், வெட்டிய பனையில் கள்ளெடுக்க துணியும் இழிமனம் கொண்டவர்களே என எண்ணிக்கொண்டேன்.

இலங்கை பயணத்தின் இந்த முதல் வாரம் எனது வாழ்வில் மரக்க முடியாத பயணங்களால் நிரம்பியதாக அமைந்தது. சந்தித்த ஒவ்வொருவரின் வாழ்விலும் என்னால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடவுள் என்னை பயன்படுத்தினார் என்றே உணர்ந்தேன். சொற்களை குவித்து எனது பயணம் நிறைவாக அமைந்தது என்று சொல்லி செல்ல நாண் விழையவில்லை, ஆனால் மனப்பூர்வமாக இவைகளை நான் உணர்ந்தேன். ஒருவேளை இன்னும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் இலங்கை போயிருந்தால் கூட, என்னால் திருச்சபை பயனடைந்திருக்காது மாறாக நான் தான்  பயனடைந்திருப்பேன். ஆனால் இப்பயணம் கடவுள் என்னை முழுமையாக தயார் செய்து அழைத்துச் சென்ற பயணமாக உணர்ந்தேன். என்னை முழுவதும் அற்பணித்து ஒவ்வொன்றையும் செய்யவும், அனைத்துப் புலங்களாலும் இலங்கை பனை சார் வாழ்வை உள்வாங்கவும் எனக்கு பயிற்சி தேவையாயிருந்தது. பனைமரச் சாலை அவ்வகையில் என்னை தயார்படுத்திய ஒரு நிகழ்வு என்றே நான் நம்புகின்றேன்.

போதகர் நிஷாந்தா  மறுநாள் நிகழ்ச்சியைக் குறித்து எனக்கு ஒரு சிறு குறிப்பை அளித்தார். காலை 5. 30 மணிக்கு கிளிநோச்சி நோக்கி பயணம் பிற்பாடு அங்கிருந்து யாழ்பாணம். கண்டிப்பாக எனக்கு செறிவான ஒரு பயணம் அமைய காத்திருக்கிறது என்றே உணர்ந்தேன். எனது எண்ணங்களுக்கும் மேலாய் என்னை வழி நடத்தி எனக்கு எண்ணிறந்த வாய்ப்புகளை வழங்கிய ஆண்டவருக்கு நன்றி கூறி அந்த இரவு கண்ணயர்ந்தேன்.

இரு மன்றாட்டுகள்

பொலியும் வாழ்வை தந்தவரே

ஓலை சிலுவை சுமக்கிறேன்

வேதனை அற்ற சுகமான சுமை என்பதால்

சிலுவையைப் பற்றி நிற்கும் விசுவாசி நான்

சீவல் தொழிலாளி போன்ற பாவியல்ல

அவன் மார்பில் உராயும் பனை வடுக்களை

தலையணையில் புதையும் என் முழங்கால்கள் ஒருபோதும் கவனிக்காது. ஆமேன்

 

காயங்கள் ஏற்ற நாதா

ஓலைகள் சுமந்து செல்லும் பவனிகள் இன்று

உமது பாதைகளில் இருந்து வெகுவாய் விலகிவிட்டன

நீர் சிலுவையிலிருந்து இறங்கி வரவேண்டாம்

இவர்களை மன்னியும் என்று மீண்டும் சொல்லும்

ஆம் அழகாய் நிற்கும் யாரிவர்கள்

தான் அழுக்கடைய  பனை ஏறாதவர்

 

(முதல் பருவம் முடிந்தது. மீண்டும் அடுத்த கலயம் கட்டும் வரை காத்திருக்கவும்)

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 31

ஏப்ரல் 6, 2017

 

திருச்சபையின் பனைமர வேட்கை – 31

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

கள் – திருச்சபையின் கேள்வி

அந்த அமைதியை உடைக்கும்படி போதகர் நிஷாந்தா எழுந்துவந்தார். நாம் ஒரு மாறுபட்ட திருமறை ஆய்வு செய்ய உதவிய போதகருக்கு நன்றி கூறுகிறேன். இப்போது கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேள்விகள் கேட்கலாம் என்றார்கள். சற்று நேர மவுனத்திற்கு பின்பு ஒருவர் எழுந்து “சீவல் தொழிலும் கள்ளும் இலங்கையைப் பொறுத்த அளவில் இணைந்தே இருக்கிறது, இச்சூழலில் திருச்சபை எப்படி அவர்களுடன் இணைய இயலும் என்றார். சிரித்துக்கொண்டே இப்படி கடினமாக எல்லாம் கேள்விகள் கேட்கக்கூடாது என்றேன். சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது.

கள் குடிப்பது ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக நமது மரபில் பார்க்கப்படுவது எவ்வளவு உண்மையோ அது போலவே அது மருத்துவம் சார்ந்தும் பாவிக்கப்படுகிறது  சமையல் இடுபொருளாகவும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆகவே ஒற்றைபடையான எண்ணங்களுடன் கள்ளை நாம் புறந்தள்ளிவிட இயலாது. ஈரோட்டைச் சார்ந்த திரு. நல்லசாமி அவர்கள் கள் இறக்க அனுமதி வேண்டி தமிழகத்தில் போராடிக்கொண்டிருக்கிறார். இந்திய அரசியலமைப்பின் படி கள் இறக்குவதும் பருகுவதும் மக்களுக்கு அரசு வழங்கியிருக்கும் உணவு தேடும் உரிமை. கள் போதை பொருளல்ல. நாம் பாவிக்கும் உணவுகள் அனைத்திலும் ஆல்கஹால் இருக்கிறது ஆனால் விகிதாச்சாரம் மட்டுமே மாறுகிறது என்று கூறுகிறார். போதை தரும் வெளிநாட்டு மதுவில் ஆல்கஹாலின் அளவு 42 சதவிகிதமும், கள்ளில் 4.5 சதவிகிதமும் இருக்கிறதாக அவர் கூறுகிறார். அவ்வகையில் கள் ஒரு மென் பானம் என அவர் கூறுகிறார். அவரின் கருத்துக்களை நாம் சற்றே காதுகொடுத்து கேட்கவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

திருமறை மதுவிற்கு எதிராக இருக்கிறதே, மது ஒருவரின் சிந்தனையை மழுங்கடிக்கும்  தன்மை கொண்டிருக்கிறதே என்றால் ஆமாம். அதனை நாம் மறுக்க இயலாது. திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே.(நீதிமொழிகள் 20: 1 திருவிவிலியம்) துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்? திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,மதுவைப் பார்த்து, “இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!” எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்; பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும். உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும். கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும். “என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை; நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்” என்று நீ சொல்வாய். (நீதிமொழிகள் 23: 29 – 35 திருவிவிலியம்) மேற்கூறிய வகையில் திராட்சை ரச மதுவை விரும்புவோர் அதனால் ஏற்படும் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று திருமறை எச்சரிப்பது சரிதான். ஆனால் திருமறை ஒற்றைபடையான நோக்கில் திராட்சை ரச மதுவை அணுகவில்லை என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

நாசீர் விதிகளாக ஆண்டவர் மோசேயிடம் கூறுவதில் மது சார்ந்த ஒரு பார்வை இருக்கிறதை நாம் காண்கிறோம். “ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர்  பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால், திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது. பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.” (எண்ணிக்கை 6 திருவிவிலியம்) இவ்வகையில் நாம் பார்க்கையில் கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒருவர், திராட்சை ரசம் மட்டும் அருந்தலாகாது என்ற விதி அல்ல திராட்சை சார்ந்த எதுவும் உண்ணக்கூடாது என சொல்லப்படுவதைப் பார்க்கிறோம். வற்றல் விதை அதன் தோல் எவற்றிலும் போதை இருக்காது. ஆனால் அது அவன் பிரித்து எடுக்கப்பட்டவன் என்ற கூற்றின் ஆழத்தை உணர்த்த முழுவதுமாக இவைகளில் நின்று ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.

இயேசு நாசீர் விரதம் இருந்தவர் அல்ல, அவர் வாழ்வில் திராட்சை ரசமும் இருந்தது பல முறை இறந்தவர்களை அவர் உயிரோடு எழுப்பியிருக்கிறார். இயேசு தமது முதல் அற்புதத்தை கூட கானா ஊரில் நடைபெற்ற திருமண வீட்டில் தான் நிகழ்த்துகிறார். திராட்சை ரசம் தீர்ந்த போது அவர் தண்ணீரை ரசமாக மாற்றி தமது முதலாம் அற்புதத்தை நிகழ்த்துகிறார். தம்மை குறித்தே அவர் பகடி செய்துகொள்ளும் திருமறைப்பகுதி ஒன்று இருக்கிறது.  “எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ “அவன் பேய்பிடித்தவன்” என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, “இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.” (மத்தேயு 11 : 19 திருவிவிலியம்) இயேசுவின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இன்றைய திருச்சபையின் நோக்கில் மிக முக்கிய குற்றச்சாட்டு ஆகும், எனினும் அவர் அதனை ஒரு குற்றமென கொள்ளாமல், குற்ற உணர்வும் அடையாமல் இலகுவாக கடந்து வருகிறார். அவர் குடிகாரர் அல்ல, அவரை அப்படி “புரிந்து வைத்திருந்தனர்”.

பாவிகளுடன் உணவருந்தும் இயேசு

பாவிகளுடன் உணவருந்தும் இயேசு

திருச்சபை இன்று “வெட்டு ஒன்று துண்டு இரண்டாக” திருமறையில் குடி சார்ந்த எண்ணக்கள் எப்படி இருக்கின்றன என கேட்பதை நாம் பார்க்கிறோம். அப்படி ஒரு பதிலை எவரும் சொல்ல இயலாது. அது சூழலைப் பொருத்தது. அடிமைப்பட்டுகிடந்த மக்களும் சிதிலமாகி கிடந்த எருசலேம் நகரும் மீட்படையும் என்பதை ஆண்டவரின் வார்த்தையாக ஏசாயா உரைக்கிறார்  “ஆண்டவர் தம் வலக்கையின் மேலும் வலிமைமிக்க தம் புயத்தின் மேலும் ஆணையிட்டுக் கூறியது: உன் தானியத்தை இனி நான் உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்: உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை வேற்றின மக்கள் பருகமாட்டார்கள். அறுவடை செய்தவர்களே அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர். பழம் பறித்தவர்களே என் தூயகச் சுற்றுமுற்றங்களில் இரசம் பருகுவர்.” (ஏசாயா 62: 8 – 9 திருவிவிலியம்). மகிழ்வின் தருணங்களில் உச்சக்கட்ட வெற்றியைக் குறிப்பிடும்படி திராட்சை ரசம் குறிப்பிடப்பட்டிருக்கிறதை இதன் வாயிலாக நாம் அறிகிறோம்.

ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு; களிப்புடனிரு; திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு; தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு. (சபை உரையாளர்  9: 7 திருவிவிலியம்)  என சபை உரையாளரால் கூறப்படும் சூழலும் “தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து.”(1 திமோத்தேயு   5:  திருவிவிலியம்)  என்று பவுலால் அறிவுறுத்தப்படும் சூழலும் வேறு வேறு. அவைகளை நாம் கவனத்துடனேயே கையாள வேண்டும்.

கள்ளும் திராட்சை ரசமும் ஒன்று அல்ல. ஆனால் இரண்டும் இருவேறு பின்னணியங்களில் கிடைக்கும் சற்றேரக்குறைய ஒரே பானமென எண்ணி நாம் நமது கருத்துக்களை முன்வைக்கலாம் என்று எண்ணுகிறேன். நமது சமூகத்திலும் போர் வெறி ஊட்டவேண்டி கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது, அதே நேரம் விழாக்களின் போது களியாட்டிற்கென கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இருவேறு மன நிலைகளை இவைகள் சுட்டி நிற்கின்றன. தனி மரக் கள், அந்திக்கள் போன்றவைகள் மருத்துவ குணம் நிறைந்தவை என்பது அனுபவத்தில் கண்டவர்கள் கூறும் உண்மையாகும். குறிப்பாக வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளரும் பனை மரத்தின் கள் அப்பகுதிகளில் வாழும் மக்களின் வெப்பத்தை தணிக்கும் ஒன்றாக இருப்பதை நாம் காணலாம். குஜராத்தில் உள்ள பீல் பழங்குடியினர் தமது வீடுகளுக்கு அருகில் இன்றும் ஐந்து முதல் பத்து பனைமரங்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் வாழுமிடத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரியும் அதிக பட்ச வெப்பநிலையாக 47 டிகிரியும் செல்லும். இச்சூழலில் அவர்கள் வெம்மையை தணிக்க கள்ளையே தொல் பழங்காலத்தில் இருந்து பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் கள் இறக்கும் நேரம் கூட ஃபெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தான். ஜூன் மாதம் மழை பெய்யுமட்டும் அவர்கள் தொடர்ந்து கள் இறக்குகிறார்கள். அது ஒவ்வொரு குடும ஆணின் கடமை.

ஆலயத்தில் இருந்து கள்ளிற்கு சாதகமாக போதகர் ஐய்யா பேசுகிறாரே என நீங்கள் நினைக்கலாம். எனக்கு முன்பும் மூன்று தலைமுறையினர் போதகராக இருந்தவர்கலே. எனது தந்தை, எனது தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவும் போதகராக இருந்தவர்கள் தாம். ஆனால் அனைவரது வீட்டிலும்  ஆப்பத்திற்கென கள் வாங்கி பயன் படுத்தப்பட்டது. இது உணவை பதப்படுத்தும் ஒரு முறையாக கையாளப்பட்டது. நாம் வாங்கும் பிளம் கேக் எப்படி மது ஊற்றி செய்யப்படுகிறதோ அது போலவே அன்றும் உணவு தயாரிக்க கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

பிழை எங்கே ஏற்படுகிறது என்பதி நாமே அறிவோம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. பனை மரத்தடியில் அமர்ந்து  காலை முதல் மாலை வரை கள் அருந்தினால் அது எவ்வகையில் ஒருவரை பணி செய்ய அனுமதிக்கும். அவ்விதமான முறைகளை எவரும் எவருக்கும் பரிந்துரை செய்யப்போவது இல்லை.

மேலும், மற்றொரு வகையிலும் நம்மை நாம் சுய பரிசோதனை செய்ய அழைக்கப்படுகிறோம். நேற்று தான் நான் இங்கே வந்தேன். ஆனால் இப்பகுதிகளில் நான் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை சென்றதால் இப்பகுதியைக் குறித்த ஒரு புரிதல் எனக்கு கிடைத்தது. நமது ஆலயத்திலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் பாதையில் 500 அடிக்குள் ஒரு மதுக்கடை இருக்கிறது. நமது அலயத்தின் பின்புறம் 200 அடிக்குள் வேறொரு மதுக்கடை இருக்கிறது. மதுவிற்கு எதிரான மனநிலை கொண்ட நம்மால் அவைகளை குறைந்த பட்சம் இவ்விடங்களில் இருந்து நகர்த்த இயலவில்லை. 200 வருடமான ஒரு வழிபாட்டு தலம் அவ்வகையில் தனது இயலாமையை கூறி நிற்கிறது.

இன்றும் மதுக்கடை வணிகம் என்பது அதன் முன் எவரும் நின்று எதிர்க்க இயலா அளவிற்கு கட்டற்ற பலம் வாய்ந்தவைகளாக இன்று நம்முன் நிற்கின்றன. நாம் எதிர்க்கவேண்டியவைகள் அவைகளே. எளிய பனை தொழிலாளியை நாம் உறிவைப்போம் என்று சொன்னால் அது நமது வீரியம் குறைவுபட்டிருக்கிறது என்பது தான் பொருளே அன்றி நாம் மதுவிற்கு எதிராக நிற்கிறோம் என்று பொருள் தருவது ஆகாது.

பனை மரம் சார்ந்த இன்னும் பல்வேறு பானங்கள் இருக்கையில் கள் தேவையா என்கிற எண்ணம் நம்மில் எஞ்சியிருக்கும்  என்பதை நன் அறிவேன். ஆனால் அதற்கென நாம் அவர்களை ஒதுக்கி வைக்க இயலாது. அவர்களின் பணிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு மேலதிகமான வாழ்வை அவர்களுக்கு உறுதி செய்யாத வரையில் நாம் அவர்களை பாவிகள் என நியாயம் தீர்க்க இயலாது. ஆண்டவர் ஒரு பொதும் அதனை ஒப்ப மாட்டார். ஏனெனில், இயேசு பாவிகளின் நேசர்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 30

ஏப்ரல் 5, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 30

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

திருச்சபைக்கு குருத்தோலை தந்தவர்கள் 

புதிய ஏற்பாட்டு காலத்தில் பேரீச்சைக் குறித்த சான்றுகள் திருமறையில் அதிகமாக இல்லை தான். ஆனால் முழுவதும் இல்லை என்று சொல்ல முடியாது. எனது வாசிப்பின் வழியாக புதியேற்பாட்டில் காணப்படும் திருமறை பகுதிகள் யாவும் மிக தீவிரமான ஒரு இறையியல் பார்வையை நோக்கி நம்மை உந்திச் செல்லும் விசையாக காணப்படுகிறது. என்னையே நான் உய்த்து அறிகையில் புதிய ஏற்பாட்டு ஒரு சில வசனங்களுக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் பழைய ஏற்பாட்டு பகுதிகளுக்கு கொடுக்கவில்லையோ என எண்ணத்தோன்றுகின்றது. அதற்கு காரணம், எனது இறையியல் கல்லூரியில் நான் நிகழ்த்திய மாதிரி வழிபாடுதான். அதற்கென நான் உருவாக்கிய இறையியல் பார்வையை பழைய ஏற்பாட்டுடன் நான் இன்னும் முழுமையாக விரித்து உரைக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.

இயேசுவின் பணி நாம் சற்றும் எதிர்பாராத ஒரு புள்ளியில் இயங்குகிறதை இத்தேடலில் நான் கண்டுகொண்டேன். குறிப்பாக அவரது பணி பாவிகள் என்று சொல்லப்படுகின்ற விளிம்பு நிலையில் உள்ள மக்களையும் வரி தண்டுபவர்களாகிய அரசு பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், நிக்கோதேம் போன்ற சமய தலைவர்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவர் தம் பணியில் நோயுற்றோர் குணமடைய தன்னை அற்பணித்தார் என பார்க்கிரோம். சமூக வாழ்வில் புறக்கணிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் சிறுவர்களையும் அவர் அரவணைக்கிறதைப் பார்க்கிறோம், தமது உடல் உழைப்பை செலுத்தி பணி செய்யும் மக்களையும் அவர் தம்மிடத்தில் ஆறுதல் பெற  அழைப்பு விடுக்கிறார்.

எரிகோ என்ற பட்டணம் குறித்து இரண்டு நிகழ்ச்சிகள் புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம். ஒன்று நல்ல சமாரியன் உவமையில் எருசலேமிலிருந்து எரிகோ செல்லும் வழியில் ஒருவன் கள்ளர் கையில் அகப்படும் நிகழ்ச்சியை இயேசு விவரிக்கையில் அன்றைய எருசலேம் எரிகோ நெடுஞ்சாலையின் காட்சி மனதில் விரிவடைகிறது. வணிகங்கள் நடந்திருப்பதால் தான் சமாரியன் அப்பாதையில் வருகிறான் என்பதும் தெளிவாகிறது. வணிகப்பாதையில் நின்று கொள்ளையடிக்கும் குழுவினர், தனித்து வருபவர்களை கொள்ளையடிக்கும் அளவிற்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த் இடமாக  எரிகோ காணப்படுகிறது.

மீண்டும் எரிகோ குறித்து நாம் பார்ப்பது இயேசு சக்கேயு என்ற வரி வசூலிப்பவர் வீட்டிற்குச் செல்லும் நிகழ்ச்சியாகும். இயேசு சக்கேயுவோடு என்ன பேசினார் என திருமறையில் காணப்படவில்லை. ஆனால் அவன் இயேசுவிடம் “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறினார் (லூக்கா 19 திருவிவிலியம்) அந்த சந்திப்பின் இறுதியில் இயேசு அவனைப் பார்த்து “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” (லூக்கா 19: 9 – 10  திருவிவிலியம்) எனக் கூறுகிறார்.

ஒரு சிறு இணைப்பை நாம் இவர்கள் சந்திப்பின் வாயிலாக நம்மால் இணைக்க இயலுமென்றால் வெகு விரைவிலேயே ஒரு கோட்டு சித்திரத்தை நாம் பெற்றுக்கொள்ள இயலும். இயேசு வரி வசூல் எப்படி நடக்கிறது எனப்தைக் குறித்து ஒரு உரையாடலை சகேயுவுடன் நிகழ்த்தியிருக்க வாய்ப்புள்ளதா. ஆம். அவைகள் பலஸ்தீனாவில் உள்ள வரி வசூல் முறைகள், முறைகேடுகள், அவற்றின் அழுத்தம், அவற்றை நடைமுறைப்பாடுத்துவோரின்  உள்ளக்கிடக்கைகள் பொன்றவற்றை சக்கேயு போன்றோரே மிக சிறப்பாக எடுத்துக் கூற இயலும். குறிப்பாக எளிய விவசாயிகள் போன்றோரின் வாழ்வில் அன்றய வரி வசூலிக்கும் முறை எவ்வளவு ஆழமான வடுக்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பதை இயேசு தனது பயணத்தில் கண்டு அதனை சக்கேயுவுடன் விவாதித்திருக்கலாம். மற்றும் பல தருணங்களில் அவர் வரி வசூலிப்போருடன் இருந்திருக்கிறார் என்பதற்கும்  பல திருமறசி சான்றுகள் இருக்கின்றன.

நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் எருசலேம் நோக்கிய இறுதி பயணத்தைக் குறிப்பிடுகிறது. லெந்து காலத்தின் உச்சக்கட்டம் பாடுகளின் வாரத்தில் துவங்குகிறது. அதன் முக்கிய துவக்கமாக இருப்பது எருசலேம் நோக்கிய இயேசுவின் இறுதி பயணம் தான். அதனை குருத்தோலை ஞாயிறு என்றும் சொல்லுவார்கள். உலகமெங்கும் அனுசரிக்கப்படும் இவ்விழாவிற்கான மையம், பனை அல்லது இயற்கை  சார்ந்த ஒரு வாழ்வியல் என்றால் அது மிகையாகாது.

“இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.” (மாற்கு 11: 1 – 2 திருவிவிலியம்) இவ்வசனங்கள் நான்கு நற்செய்திகளில் ஆக பழைமையான பிரதியாகிய மாற்குவில் இடம்பெறுகிறது. முன்னோர்கள் ஊர்களுக்கு பெயரிடுகையில் அவ்வூர்களில் உள்ள சிரப்புகளைக் கொண்டே பெயரிட்டனர் என்பதை நாம் அறிவோம். அவ்வகையில் ஒலிவமலை என்னப்படுகிற என்றாலே ஒலிவ மரங்கள் அதிகம் நிற்கும் இடம் என நாம் இலகுவில் புரிந்துகொள்ளலாம். பெத்பெகு என்றால் அத்திப்பழ வீடு என பொருள் படுகிறது. பெத்தானியா என்றால் பேரீச்சைகளின் வீடு என திருமறை அறிஞர்கள் கூறுவார்கள். இம்மூன்று ஊர்களும் சஙமிக்கும் இடத்திற்கு எதிரே உள்ள கிராமத்திற்கு இயேசு தமது சீடர்களை தமது பயணத்திற்கான கழுதையை பெற்றுக்கொள்ள அனுப்பிவிடுகிறதைப் பார்க்கிறோம்.

இவ்வூர்கள் அமைந்திருக்கின்ற தன்மையைப் பார்க்கையில் இவைகளுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறதைக் நாம் காணலாம். அனைத்து கிராமமும் விவசாயத்தை மையப்படுத்திய கிராமங்களாக அமைந்திருக்கிறதை நாம் காண்கிறோம். ஒலிவமலை ஒலிவ எண்ணை என்று சொல்லகூடிய சிறந்த ஒரு வணிக பொருளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இடமாக இருந்திருக்கலாம். எருசலேமுக்கு அருகில் இருந்ததால் தேவாலயத்திற்கு தேவையான அனைத்து எண்ணைகளும் இங்கிருந்தே பெறப்பட்டிருக்கலாம். அதற்கென உழைக்கும் மக்கள் எவ்வகையிலும் தேவாலயத்தால் உதவிகள் பெற இயலாதபடி கடின வரிகளால் துன்பபட்டிருக்கக் கூடும். அவ்விதமாகவே பெத்பகுவும் அத்தி மரங்களை நம்பி வாழ்ந்த மக்கள் கொண்ட இடமாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் நோக்குகையில் பெத்தானியா குறித்த குறிப்புகள் அங்கே எவ்விதமான மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை தெளிவுற நமக்கு காட்டுகின்றது. பேரீச்சைகள் நிறைந்த அந்த பகுதியில் அதனை நம்பி வாழும் ஒரு பெருங்கூட்டம் இருப்பதை நாம் காண்கிறோம்.

இயேசு ஏறிய கழுதை அழைத்துக்கொண்டுவரப்பட்ட கிராமத்தின் பெயர் நமக்கு தெரியாவிட்டாலும் ஓலிவமலை, பெத்பெகு மற்றும் பெத்தானியாவிலுள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஏற்றிச் செல்ல நம்பியிருக்கும் ஒரு கிராமமாக இப்பகுதி விளங்கியிருக்கலாம். எருசலேமால் அவர்கள் சுரண்டப்பட்டிருக்கலாம், ஏரோது கடின வரிகளை அவ்ர்கள் மேல் சுமத்தியிருக்கலாம், இவைகளை தேவாலய பொருப்பிலிருந்த குருக்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆகவே தான் இயேசுவோடு இம்மக்கள் உடன் இணைகின்றனர். “வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர்.” (மாற்கு 11: 11, திருவிவிலியம்) அவர்களைப் பொறுத்த அளவில் இயேசு தாவீதின் அரசை போன்றவொரு அரசை நிர்ணயித்தால் தமது வரிச்சுமைகள் நீங்கும் என எண்ணியிருக்கலாம்.  இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.  “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.(லூக்கா 19: 41 –  42 திருவிவிலியம் )

இயேசு எருசலேம் நகர் நுழைதல்

இயேசு எருசலேம் நகர் நுழைதல்

இயேசு சென்ற வழியெங்கும் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். சிலர் மரங்களின் கிளைகளையும் சிலர் தங்கள் உடைகளையும் அவர் சென்ற வழிகளில் விரித்தபடி அவரை வாழ்த்தினர்.  இன்நிகழ்ச்சியை தூய யோவான் நற்செய்தியாளர் கூறுகையில், “மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” (யோவான் 13:   திருவிவிலியம்) என ஆர்ப்பரிக்கிறதை காண்கிறோம். இவர்கள் கரங்களில் குருத்தோலைகள் எப்படி கிடைக்கப்பெற்றன? அதனை எடுத்துக்கொடுத்தவர்கள் யார்? கண்டிப்பாக பெத்தானியாவைச் சார்ந்த பேரீச்சை தொழிலாளிகள் மக்கள் இயேசுவை மக்கள் எதிர்கொண்டு போகையில் அதனைப் பிடித்துச் செல்ல அவர்களே உந்துதலாய் இருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

குருத்தோலையைப் பிடிக்கையில் அவைகள் சொல்லாமல் சொல்லும் குறியீடுகளாக அமைவதை யோவான் இப்பகுதியில் மறைமுகமாக எடுத்தாள்கிறார். நமது ஊர்களில் திருவிழாகளின் போது குருத்தோலைகளில் தோரணங்களைச் செய்து அலங்கரிப்பது வழக்கம். இவைகள் குறிப்பிடுபவை என்ன? வறண்ட நிலத்தில் நின்று திரட்சியாக தேனைப்போன்ற கனிகளை அளிக்கும் மரம், அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையின் சின்னம் அல்லவா?

அது போலவே புதிய ஓலைகளை குருத்தோலை என்று சொல்லுகிறோம். அவைகள் புதிய ஒருவாழ்வை மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர் என்பதை எடுத்துக்கூற வல்லது. மேலும் பழைய ஓலைகள் உதிர்ந்து விழுகையில் குருத்தோலை விண்ணை நோக்கி உயர்ந்து எழும்புகிறது. அது போராடி வெற்றிபெறும் உளவலிமையை சுட்டுகின்றது.. மேலும் வானம் நோக்கி எழுந்து நிற்கும் அதன் கீற்றுகள் படைத்த இறைவனை நோக்கி கூப்பியபடி இருப்பது அதற்கு ஒரு ஆன்மீக அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது. இவ்விதமாக பல அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதனால் குருத்தோலை ஒரு முக்கிய படிமமாக இச்சூழலில் அமைகிறது.

இவைகளை நாம் பொருத்திப் பார்க்கையில், இயேசு பேரீச்சை மரம் சார்ந்த தொழிலாளிகளின் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளை உணர்ந்திருந்தார் என்பது தெளிவாகிறது. ஆகவே அவர்களுக்காக ஒரு சொல்லும் எடுக்காத ஆன்மீக பீடத்தை அவர் தனது வாழ்வை பணயம் வைத்து முன்னெடுக்கிறார். இறுதியில் அவர் எருசலேம் தேவாலயம் செல்லுகையில் மக்கள் தொழுகைக்காக வரும் இடம் தொழில் கூடமாக மாறிப்போனதை  குறிப்பிட்டு அங்கே கலகம் செய்வதை நாம் பார்க்கிறோம். “கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. ‘;என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார். (மாற்கு 11: 15 – 17, திருவிவிலியம்)

இயேசுவின் மரண தீர்ப்பு கூட ஆன்மீக வாதிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் முன்வைத்த எந்த சமய குற்றச்சாட்டுகளும் அவருக்கு இறுதி தீர்ப்பை பெற்றுத்தர இயலவில்லை. ஆனால் மக்களை வரி செலுத்த விடாது கலகம் செய்கிறவர் என்றும் அரசுக்கு எதிரானவர் என்றும் அவரை அரச குற்றம் புரிந்தவராக காண்பிக்க முயற்சிக்கிறார்கள் “இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்;” (லூக்கா 23: 2, திருவிவிலியம்)

இயேசுவின் காலத்தில் பேரீச்சை மரம் ஏறி பயனெடுத்த மக்களின் நிலையில் தான் இன்று நமது பனைத்தொழிலாளிகள்  இருக்கின்றனர். அவர்களை கவனிப்பார் இல்லை. இன்று திருச்சபையும் கூட அவர்களை பெரிதும் பொருட்படுத்துவதில்லை என்பது வேதனையான உண்மை. நமக்கு இரண்டாயிரம் வருடங்களாக குருத்தோலை ஞாயிறு கொண்டாட ஓலைகளை எடுத்து தந்த மக்களுக்கு நாம் செய்த கைமாறு என்ன? அவர்களை எப்போதேனும் நாம் பொருட்படுத்தியிருக்கிறோமா? அவர்களுக்கான ஏதாவது உதவிகளை திருச்சபை இதுநாள் வரை செய்த்திருக்கிறதா? நமது கருணைகள் பல்வேறு தரப்பட்ட மக்களை சென்று சேருகையில் பனைத் தொழிலாளர்கள் மட்டும் திருச்சபையால் தீண்டத்தகாதவர்களாக புறக்கணிக்கப்பட்டிருப்பது சரியா? திருச்சபை அவர்களுக்கென களமிறங்கவேண்டும் என்ற நோக்குடன் உலக அளவில் முதன் முறையாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று எடுக்கும் இம்முயற்சியில் நீங்களும் உங்களை இணைத்துக்கொள்ளுவீர்களா?

பவுல் அடியார் கூடாரம் அமைத்து தமது ஊழியத்தை தொடர்ந்ததாக நாம் பார்க்கிறோம். கூடாரப் பண்டிகைகள் ஈச்சமர ஓலைகளைக் கோன்Dஎ அமைக்கப்பட்டது என்பதையும் நாம் பார்த்தோம், நமது ஊர்களில் முற்காலங்களில் பந்தல்களை முடைந்த ஓலைகளைக் கொண்டு அமைப்பது வழக்கம். பவுல் அவ்விதம் செயல்பட்டாரா? அவரது ஊழியத்திற்கு பேரீச்சை தான் உறுதுணையாக இருந்ததா?  உறுதியாக கூற முடியவில்லை, ஓருவேலை அவர் தோல் கூடாரங்களையும் அமைத்திருக்கலாம், ஆனால் அவர் பேரீச்ச ஓலைகளைக் கொண்டு கூடாரம் அமைக்க சம அளவில் வாய்ப்புகள் வளமாக இருந்திருக்கிறதை நாM மறுக்க இயலாது.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தான் பரலோகம் செல்ல வேண்டும் என்பதே முக்கிய குறிகோளாக இருக்கிறதை நான் அறிவேன். அவ்வகையில் திருச்சபை குருத்தோலைகளை அர்த்தத்துடன் கையாளவேண்டும் என நான் நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். பனை தொழிலாளிகளை திருச்சபை மதித்து அவரளுக்கென செயல்படாத வரைக்கும்  நாம் குருத்தோலைகளை பிடிப்பது வெறும் சடங்காக நின்றுவிடும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பரலோக காட்சியை காண்ட யோவான் அவைகளைக் குறித்து எழுதுகையில், “இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.” “திருவெளிப்பாடு 7 : 9, திருவிவிலியம்) இக்காட்சி உலக மக்கள் அனைவரையும் குருத்தோலை ஒன்றிணைக்கிறது என்பதையும் எத்தேசத்தார் என்றாலும் அவர்கள் இறையரசில் பனையுடன் தொடர்புகொண்டே அமைவார்கள் என்றும் திருமறை தெளிவாக விளக்குகிறது. ஆகவே திருச்சபை பனை நோக்கிய தனது கவனத்தை திருப்புவதும் பனை தொளிலாளர்களுக்காய் களமிறங்குவதும் அவசியம். ஆண்டவர் தாமே நம்மனைவரோடும் இருந்து நமது பணிகள் சிறக்க ஆசியளிப்பாராக.  ஆமென்.

இவைகளைக் கூறி நான் நிறைவு செய்கையில் ஆலயத்தில் ஒரு பெரும் நிசப்தம் இருந்தது. அனைவர் முகங்களும் பேயறைந்தது போல் காணப்பட்டது என்ன ஆகுமோ என்று பதைபதைப்புடன் அங்கே நின்றுகொண்டிருந்தேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com


%d bloggers like this: