Posts Tagged ‘கட்டுரை’

உப்பு

ஏப்ரல் 1, 2009

மீரா ரோடு தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி படிகளில் ஏறும்போது காணும் உப்பளம் ஒரு சிறந்த விவிலிய கொட்பாட்டை நினைவுபடுத்தியபடியே இருக்கும். பாத்திகளில் விளையும் உப்பும், சேர்த்து பனிமலைப்போல் குவித்துவைத்திருக்கும் உப்பும் அங்கு வாழும்/ வேலைசெய்யும் மக்களும் நாம் கவனிக்கத்தக்கவர்கள் எனும் எண்ணம் உமிக்கரியில் சேர்த்த உப்பைபோல என் சிந்தனைகளை துலக்கிக்கோண்டிருந்தது. ஓரு நாளாவது திருச்சபை வாலிபர்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்து அவர்களது வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொள்ளச்செய்வது என்னும் பாரம் என்முதுகில் ஏறிய உப்புமூட்டையாகவே இருந்தது.

கிரேக்க இதிகாசமான இலியட்டை எழுதிய ஹோமர் உப்பு “தெய்வீகமானது” என்றும், தத்துவ ஞானியான பிளேட்டோ “கடவுளுக்கு பிரியமானது” என்றும் கூறுவதை நாம் புறந்தள்ள இயலாது. திருவிவிலியத்தில் கூட, இறைவனுக்கு அளிக்கும் உணவுப்படையலில்(லேவியர் 2:13), எரிபலியில் (எசேக்கியேல் 43:24), நறுமண தூபத்தில் (விடுதலைப் பயணம் 30:35) கோவில் குருக்களுக்கு தேவையான உப்பை மக்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் (எஸ்ரா 6:9) எனவும் அறுதியிட்டுக் கூறவில்லையா? நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் (மத் 5:13அ, பொ. மொழி) எனும் திருவிவிலிய வாக்கியம், வாழ்வில் அனேகம் தரம் நாம் கடந்து வந்தது. உப்பு தன்னை உணவில் கரைத்து சுவையால் நிறைப்பது போல, நாமும் நம்மை மறைத்து பிறர் வாழ்வை சுவை மிகுந்த ஒன்றாக மாற்றுவது கிறிஸ்தவர்களாகிய நம்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. திருச்சபையின் தாய்மார்களுக்கு மிகவும் பரிச்சியமான இந்த வாக்கியம் அதன் தொடர்ச்சியான கருத்துக்களோடு புரிந்துகொள்ளப்பட்டுள்ளதா எனும் கேள்வி எழும்பினால் நமது பதில் திருப்தி அளிக்கக்கூடியதாய் அமையுமா என்றால் சந்தேகமே.

உப்பின் தன்மை அது தன்னை பிரம்மாண்டமான கடலிலிருந்து பிரித்துக்கொள்வதில் இருந்து வருகிறது. ஒரு நீண்ட பயணத்தை அது கடலிலிருந்து பூமினோக்கி பின்னோக்கி வருவதே ஒரு ஆன்மீக வாழ்வின் முதற்படியாக இருப்பதைக் காண்கிறோம். பூமியிலுள்ள உப்புதான் நீரால் இழுத்துசெல்லப்பட்டு கடலிலே உப்புதன்மையை நிறைப்பதை அறிந்த நமக்கு, ஆன்மீக வாழ்விலும் இறைவனிடைருந்து வந்த நாம் பாவ உலகில் இருந்து மீண்டு, மீண்டுமாக நமது தூய உருவை பெற்றுக்கொள்ளும் நிகழ்வே நமது ஆன்மீக வாழ்வு. இதற்கு உதவி புரிபவர்களே உப்பள பணியாளர்கள் எனும் போதகர்கள்.

அலைபாய்ந்துகொண்டிருந்த நம்மை முறைப்படுத்தி, வழிநடத்தி முழுமைபடுத்தும் வரைக்கும் நாம் நம்மை முழுவதுமாக இந்த தவத்திற்கு ஒப்புக்கொடுக்காவிட்டால், நமது முழுமை என்பது கேள்விக்குறியாகிவிடும். அலை அடித்து எழும்பும் நம்மை சாந்தப்படுத்தும் பாத்திகளுக்குள் கட்டுப்படுத்துவது, அமைதியும் கட்டுப்பாடுகளும் கடும் அக்கினியென காயும் வெயில் போன்றவற்றை உள்ளடக்கிய மாபெரும் தவம் இது. இந்த தவம் நம்மை முழுவதுமாக மாற்றுவது. அதற்காக நமது பொறுமையை வேண்டுவது.

உப்பின் தவத்திற்கு கிடைத்த பெருமை தான் என்ன? உப்பு எப்போது முழுமை அடைகின்றதோ அப்போதே அது தன்னை இழக்க தயாராகின்றது. அது பிறர் வாழ்வை சுவைபடுத்திவிட்டு தனக்கான வாழ்வை இழந்துவிடுகிறது. தன்னை அழித்துக்கொள்வதில் அது பெறும் நிறைவே அதன் பிறவிப்பயன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.”அவர் உப்பைத் தின்று வளர்ந்தவன்” என்ற சொல்லாடல் ஒருவர் தான் பெற்ற நன்மையை நினைவுகூறும் வார்த்தைகளன்றி வேறென்ன?

 திருவிவிலிய வாக்கியம் இன்னும் முழுமை பெற்றுவிடவில்லை. “உப்பு உவர்ப்பற்று போனால் எதைக்கொண்டு அதை உவர்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது” (மத் 5:13 ஆ, பொ. மொழி)

 உலகம் முழுவதும் பலநிறங்களில் உப்பு காணக்கிடைப்பது மனிதனை ஒத்த அதன் தன்மையை வெளிப்படுத்துகிறது மாத்திரம் அல்ல இயேசுவின் கூரிய அவதானிப்பும் தான். சிவந்த நிறமுள்ள உப்பாகட்டும், கரிய நிற உப்பாகட்டும் இல்லை நாம் உபயோகிக்கும் வெண்மையான உப்பகட்டும், தனது சுவை கொடுக்கும் தன்மையை இழந்துபோனால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்று இயேசு தனது தெளிந்த அறிவுரையை மானிடர்களுக்கு இந்த வாக்கியத்தின் மூலமாகக் வழங்குகிறார்.

மனித உடல் உப்பின்றி வாழ இயலாது; அவ்வாறே மிருகங்களும். யானை மண்ணைத்தோண்டி உப்பை உண்பதும், நாம் வீடுகளில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைக்கும்போது உப்பிட்டுகொடுப்பதும் நாமறிந்தது. மூணாரில் உள்ள ராஜமலையில் காணப்படும் வரையடுகள் மனிதர்களோடு பழகும் விதத்தை நான் கண்டு அதிசயித்த போது, எனது நண்பரும் இயற்கை ஆர்வலருமான முனைவர் கிறிஸ்டோபர் கூறினது ” அது உப்பு கொடுத்து பழக்கப்படுத்தப்பட்ட தலைமுறை, மனிதர்கள் அருகில் வராத வரையாடுகளும் உண்டு”.

உப்பின் குணமின்றி வாழ்தல் என்பது ஒரு செத்துப்போன வாழ்வாகவே இயேசு கருதுகிறார். நாம் நம்மை பிறருக்கென்று அற்பணிக்க தவறினோமென்றால், அந்த வாழ்வு நம்மை நாமே இறைவனுக்கு அற்பணிக்காத சுவையற்ற வாழ்வாகும்.

உப்பை சம்பளமாக ரோம போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது; வரலாற்றில் உப்பு பொன்னுக்கு சமமாக விற்பனையாகி இருக்கும்போது: எதிராளிமீது போர்தொடுக்கும் காலம், உப்பு வரத்தை தடை செய்வது போன்ற நிகழ்வுகள் உப்பை இயேசு நாதர் மனிதனுடன் ஒப்பிடுவதில் உள்ள உயரிய நோக்கத்தை அறியலாம்.

என் சிறுவயதில் கடைகளுக்கு முன்பதாக ஆதரவற்று இருக்கு ஒரே பொருள் உப்பு சாக்குதான். உப்பை ஒருவரும் திருட முடியாத அளவு அதன் விலை மிகவும் மலிவாக இருந்தது. உப்பாக இருப்பதன் அர்த்தம் மிகவும் எளிமையாக இருப்பதுதான் இல்லையா?

 சரிதான், மனிதன் விலையேறப்பெற்றவன்; எனினும் எளிமையானவன், அவன் அன்பை கண்ணீராலும், கடமையை வியர்வையாலும், தியாகத்தை இரத்தத்தாலும் – உப்பின் சுவையுடன் அளிப்பதால் மனிதன் மண்ணுலகிற்கு உப்பயிருக்கிறான்.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyrah_project@yahoo.com

09870765181 (மும்பை)

பன்றியிறைச்சி

பிப்ரவரி 18, 2009

கிறிஸ்தவர்கள் சதவிகிதத்தில் அதிகம் வாழும் மாவட்டமான குமரியிலே கிறிஸ்மஸ், ஈஸ்டர், புத்தாண்டு ஆகிய விஷேச நாட்களிலே பன்றி இறைச்சி கிறிஸ்தவர்களுக்காகவே தாராளமாக வெட்டப்படுகின்றது. திருமறையாம் விவிலியத்தை பின்பற்ற விரும்பும் நாம், பன்றி இறைச்சியை உண்பது கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு புறம்பானது என்று உறுதிபட நம்பினாலும், யகோவா அந்த காரியத்தை முன்னிறுத்துவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுவது அதிக பயனளிக்கும். 

ஆராய்ந்து பார்த்தால் நாம் உணவை அல்ல நம்பிக்கைகளையே முன்னிறுத்தப்படுவதைக் காண்கிறோம். நமக்கு கொடுக்கப்பட்ட புனித நூலை விட்டு நாம் பிறழ்ந்து விடலாகாது என்கிற அதிக கவனம் நமக்கு உண்டு. “ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் அழிந்துபோவது இல்லை” என உறுதி படக் கூறும் நாம், அன்றன்று உள்ள “ஆகாரத்தை” தாரும் என்பதை “அப்பத்தை” தாரும் என்பதாக சொல்லுகிறோம். சரி, தினமும் அப்பத்தை சாப்பிடுகிறோமா என்ற கேள்வி எழுப்பினால், சோறு தான் அப்பம் என்ற பதில் வருமே அன்றி, அப்பத்தை சாப்பிட பழகவோ, அப்பம் என்ற வார்த்தைக்குப் பதில் ஆகாரம் என்ற திருமறை வார்த்தையைக்கூட சொல்லத் துணியமாட்டோம். ஏனென்றால் நாம் பழகிய ஒன்றை நம்மால் மாற்றுவது கடினம். அது தவறாக இருந்தாலும், நாம் அதை குறித்து உணார்த்தப்பட்டாலும் அது நம்மை தனிப்பட்ட முறையில் உரசிவிடுகின்ற  ஒன்றாக  மாறிப்போய்விடுகிறதேயன்றி நம் மாற்றத்திற்கான காரணியாவதென்பதோ ஐயத்துக்குரிய ஒன்றுதான்.

மார்வின் ஹாரிஸ் என்ற மானுடவியலாளர் தனது “பசுக்கள் பன்றிகள் போர்கள் அற்றும் ஸூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்” என்ற புத்தகத்தில் இந்தக் கருத்தை பிந்தொடர்ந்து சென்று அதன் வேராழத்தை கண்டுகொள்கிறார். நான் பிறந்த வருடத்தில் எழுதப்பட்ட இந்த புஸ்தகத்தின் ஆழமான கருத்துகளை இத்தனை வருட காலத்தில் எந்த கிறிஸ்தவ போதகரும் திருச்சபையில் என்னறிவின்படி முன்வைக்காததால் நான் அந்தக் கருத்துக்களை முன்வைப்பதிலே  உள்ள அவசர கடமையை உணருகிறேன்.

எனது இறையியல் கல்லூரியில் “தலித் இறையியல்” கற்றுக்கொடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் கடவுள் எவ்விதம் துணை நிற்கிறார் என்பதையும், போதகர்களாகிய எங்களுக்கு திருச்சபையில் புரையோடியிருக்கும் சாதீய காழ்ப்புகளை வேறறுக்கும் ஒரு மகத்துவமான பயிற்சியாக அது அமைந்தது.

சத்தி கிளார்க், எங்கள் ஆசிரியர், மிகவும் திறம்பட அந்த வகுப்பை நடத்தினார்கள். எங்களுக்கென்று ஒரு சிறப்பு பயண வகுப்பையும் ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். ஒரு தலித் கிராமத்தைக் கண்டு, அங்கு தங்கி, அந்த மக்களோடு வாழ்ந்த அனுபவம், புதிய புரிதலுக்கான வடிவம். என் வார்த்தைகள் எள் அளவேனும் அதை விவரிக்காது, எவரையும் திருப்திப்படுத்தாது என்பதையும் அறிவேன்.

லேவியராகமம் பதினொன்றாம் அதிகாரத்திலே கர்த்தர் மோசெயையும் ஆரோனையும் நோக்கி, எந்த விதமான மிருகஜீவன்களை புசிக்கலாம் எவைகளை புசிக்கலாகாது எனக்கூறுகிறார். கர்த்தர் இந்த வேறுபாடுகளை காண சில குறிப்புகளை கொடுத்தாலும், ஏன் புசிக்கலாகாது என்ற காரணத்தைக் கூறாமல், அது உங்களுக்கு “அசுத்தமாக இருக்கும்” என்பதாக மட்டுமே கூறுகிறார்.

இந்த பயிற்சியின் இறுதி வடிவமாக எங்கள் ஆசிரியர், என்களுக்கு உணவு படைத்தார். அதன் முக்கியத்துவமே மட்டிறைச்சி சாப்பிடுவது தான். எனது ஆசிரியர் என்னிடம் கேட்டார், காட்சன் வில் யூ ஈற் பீப்? அப்பொழுது தான், அதன் உட்கருத்தை நான் புரிந்து கொண்டேன் தலித், இஸ்லாமியர் அல்லாதவர் மாட்டிறச்சியை புசிப்பதல்ல என்ற பிம்பத்தை எனது ஆசிரியர் கொண்டிருக்கிறார் என்று. அதற்கான காரணங்கள் அவருக்கு இருக்கும், ஆனால், என் அனுபவமே வேறு.

சிறு வயது முதலே, நான் வேட்டைக்கறிகளை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன் (இப்பொழுது அல்ல) குமரி மாவட்டத்தின் தன்மை சற்று கேரள சாயல் கொண்டதால் எங்கள் உணவில் மாட்டிறைச்சியை சேர்த்துக்கொள்ளுவதிலே எவருக்கும் எந்த அசூசையும் இல்லை. நாகர்கோவிலில் முக்கிய மாட்டிறைச்சி வியாபாரி சேவியர் ஒரு கிறிஸ்தவர்தான். எனினும் நான்கு கிலோமீட்டர் தல்ல்ளியிருக்கும் பெருவிளையில் (என்னுடைய ஊர்) கிறிஸ்தவர்கள் வந்து ஒரு இஸ்லாமியரிடம் இறைச்சி வாங்கி செல்வார்கள். தரம் அவ்வளவு நன்றாக இருக்கும்.

எனக்கு சுமார் ஐந்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டினருகே ஒரு நபர் கூவிக்கொண்டெ சென்றார். பொதுவாக அந்த நாட்களிலே தின்பண்டங்களை அவ்விதமாக விற்பதால், நான் எனது அம்மாவிடம் அது என்ன என்று கேட்டேன். எனக்கு பன்றி என்றால் என்ன என்று தெரியாத மிஷன் காம்பவுண்டில் வளர்ந்த காலகட்டம் அது. அம்மா அது பன்றி இறைச்சி என்றும் நாம் சாப்பிடக்கூடாது என்றும் கூறினார்கள். இறைச்சி என்றவுடனே அதன் மீதான கவர்ச்சி கூடி, எனக்கு அது வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தேன். எனது தொல்லை பொறுக்க முடியாமல் அம்மா அவனை அழைத்தார்கள். பனையோலையிலான பொதிகளை பார்க்கவே அழகாக இருந்தது, பிடித்துப்பார்த்தால் அந்தப் பொதிகள் மெத்து மெத்தென்று காற்றடத்த பலூன் போலவே இருந்தது. வாங்கி, சமத்து சாப்பிட்டுமாகிற்று, அம்மா அப்பா அதை தொடவில்லை.

இதன் பிற்பாடு நான் பன்றி இறச்சி சாப்பிட்டது எல்லாம், நண்பர்களுடைய வீட்டிலே தான். பலமுறை என்னை கேட்ட பின்பே எனக்கு அதை பறிமாறுவார்கள். ஏன் என்பது எனக்கு புரியவில்லை.

எனது அறிவின்படி, பன்றி அசுத்தமான மிருகம், அதன் உணவு பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வியாதியையும் குறிப்பிட்டு அதை நாம் உண்ணலாகாது என திருச்சபையிலே பிரச்ங்கித்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ விசுவாசிகள் கூறும் காரணங்களை கேட்டிருப்போம். இவை மூன்றையுமே மார்வின் ஹாரிஸ் ஆழமான புரிதலுடன் மறுக்கிறார்.

1. பன்றி சுத்தமற்றது
பன்றியின் சுத்தத்தை நாம் நன்கு அறிவோம். தெருவோரங்களிலும், சாக்கடைகளிலும், மலம் குவிந்து கிடக்கும் இடங்களிலும் அது தன் ஆகாரத்தை தேடுகிறது. அசுத்தமானதை தின்று வ்ளர்வதும் அசுத்தமாகத்தானே இருக்கும் என்பது நம் கணிப்பு. இந்த விதமான தருக்கத்தில் எழும் கேள்விகள் என்னவென்றால். ஒருவேளை சுத்தமானதை பன்றி தின்று வளர்ந்தால் நாம் அதை சுத்தமாக எண்ணி புசிக்கலாமா? அதைக் குறித்து கர்த்தர் ஏதும் கூறவில்லை.

காட்சியை சற்று மாற்றி பசுவையோ, ஒரு ஆட்டையோ நாம் எண்ணிப்பார்போமானால் என்ன நடக்கிறது. இவைகளை நாம் ஒரு தொழுவத்தில் வைத்து பராமரிக்கிறோம். தினமும் தொழுவத்தை சுத்தப்படுத்துகிறோம், தினமும் குளிப்பாட்டுகிறோம். இந்தக்காரியங்களை நாம் செய்யத்தவறினால், இவைகளும் பன்றிகள் போலவே அசுத்தமாக அலையும் என்பதை பட்டணங்களில் நாம் அன்றாடம் காண்கின்றோம்.

2.பன்றியின் உணவு
பன்றியின் உணவு என்பதே மலம் என்பதாக நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஆரம்பத்தில் அப்படியான மிருகமல்ல அது. பன்றியின் வாழ்விடம் காடும் அதைசார்ந்த பகுதிகளும். அதன் முக்கிய உணவுகள் கிழங்குகளேயாகும். தானியங்களும், பழங்களையும் அது விரும்பி உண்ணும். பதனீர் என்றால் அதற்கு உயிர். ஆனால் இவைகளை கொடுத்தால் முதலுக்கே மோசம் என்பதால் நாம் இவைகளை கொடுக்காமல் அதை துப்புறவு பிறாணியாகவே காண்பித்து நமது தரப்பை உறுதி செய்கின்றோம்.

பசு மற்றும் ஆடுகளைப் பொறுத்தவரையில், இன்றைக்கு நாமே உணவுகளை அதனிடத்திற்கு எடுத்துச்செல்லுகிறோம். எந்த குறையும் இல்லாமல் அவைகளை பாதுகாத்துக் கொள்ளுகிறோம். மேலும் அவைகளுக்கான உணவின் விலையும், தேவையும் பன்றியோடு ஒப்பிட்டால் மிக மிக குறைவே.

3. வியாதி பரப்பும்
நன்றாக வேகாத பன்றி இறைச்சி, வியாதியை அளிக்கும் என்பது உண்மையே. குறிப்பாக டிரிச்சினொஸிஸ் எனும் வியாதி வருவதற்கான காரணங்கள் உண்டு. அப்படியெனில்  பன்றி இறைச்சி  சாப்பிடுவது தவறானது தான் என்று நாம் நினைகக்கூடும். 
நன்றாக வேகாத மாட்டு இறைச்சி மூலமாக நடப்புழுக்கள் வயிற்றில் தங்கி அபாய்மான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.  ஆட்டின் இறைச்சி கூட  புருசெல்லோஸிஸ் என்ற நோய் ஏற்படுத்தக்கூடியது தான். கூடவே பயங்கர ஆந்த்ராக்ஸ் என்ற நோய் இந்த மிருகங்களால் மட்டுமே ஏற்படும் பன்றியால் ஏற்படாது.
இந்தமுரண்பாடு தெரிந்ததும் நாம் இவைகளை சப்பிடாமல் இருக்கப்போகிறோமா என்ன?

மார்வின் ஹாரிஸ் இறுதியாக,. கர்த்தர்  எபிரேயர்கள் பன்றியை தொடக்கூடாது என்று சொல்லுவதற்கு காரணம் அவர்கள் வாழ்ந்த சுற்றுசூழலே காரணம் என்கிறார். பாலைவனதில் வாழும் மனித்ர்களுக்கு, பன்றி அவர்களது உணவுக்கு நேரிடையான எதிரி ஆகின்றது. கொட்டைகளையும், பழங்களையும் மற்றும் தானிய்ங்கலையும் அவை தின்றுவிட்டு, மாமிசம் மட்டுமெ பதிலாக கொடுக்கின்றன. மாடும் ஆட்டுமந்தைகளும், கம்பளி, தோல், பால் சார்ந்த பொருட்கள், எரு மற்றும் உழவுக்கும் பயன்படுகின்றன. சுவை மிகுந்த பன்றி இறைச்சியின் மீது அவர்களுக்கு ஆசை பிறந்துவிட்டால் அதன் மூலம் ஏற்படும் அபாயகரமான விலைவுகளை கடவுள் உணர்ந்திருந்தார்.  ஒருவகையில் காந்தியின் சிந்தனைப்படி, “எல்லாருடைய தேவைக்கும் போடுமானது பலஸ்தீனாவிலே உண்டு. ஆனால் பேராசைகளுக்கு கர்த்தர் இடமளிக்கவில்லை.

இறையியல் சாராத மார்வின் –காரிசின் கூற்றை நாம் எப்படி ஒரு அளவுகோலாக கருத்முடியும்? உண்மைதான், அவர் இறையியலாளர் அல்ல, எனினும், பிற வேத பகுதிகள் அவ்ர்கூறுவதை மெய்ப்பிக்கின்றன.

முதல்லவதாக, இயேசு சொன்ன இளைய குமாரன் உவமை. பஞ்சகாலத்திலே இளையமகன் ஒரு குடியானவனிடம் ஒட்டிக்கொள்ளுகிறான். அங்கே பன்றிக்கு கொடுக்கும் தவிட்டினால் தன் பசியை ஆற்றிக்கொள்ள விரும்பினான் என்பதாக காண்கிறோம். மனிதனுக்கு உணவற்ற நிலையிலும் பண்றியை போஷிக்கும் அளவுக்கு, மனிதர் சாபிடும் உணவை கொடுக்க சித்தமாய் இருந்த சூழலை காண்கிறோம்.

இரண்டாவதாக தெக்கொப்போலி பகுதியிலே இயேசு அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதனை குணமாக்குகின்றார். அவனில் இருந்து புறப்பட்ட ஆவிகள் பன்றி கூட்டத்திற்குள் சேல்ல அனுமதி கேட்கின்றன. இயேசு அனுமதித்தவுடனே அவை யாவும் பன்றி கூட்டத்தோடு சேர்ந்து அவைகளை செங்குத்தான மலையிலிருந்து கடலிலே விழப்பண்ணுகின்றன.

ஏவ்வளவு பெருத்த நஷ்டம்? மக்கள் அவரை அன்கிருந்து போகச் சொல்கின்றனர். ஆனால் இயேசு செய்த காரியங்களை கூர்ந்து கவனித்தொமானால் அவர் அந்த மனிதனை மாதிரமல்ல, அந்த ஊரையே குணமாக்கியிருக்கிறார். இரண்டாயிரம் பன்றி எந்தனை பேருடைய உணவிற்கு உலை வத்தன? அவ்வித ஆடம்பரத்தை விடுத்து அனைவருக்கும் உணவு கிடைப்பதையே இயேசு விரும்பினார். சுவைக்கு பழகிப்பொன நாக்குகளால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்த மேசியாவை சுவக்கமுடியாமற் போயிறு.

குமரி மாவட்டத்தில் பன்ரியை சாப்பிடுவது சரியென்று கூறலாம? கூரலாம், இறைவன் நமக்கு கொடுத்த சுற்று சூழல் அப்படி. கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கி வரும் பன்றி எதிரியாக இருக்கும்போது, அவர்கள் அதை வேட்டையாடி இழந்த உணவை சமன் செய்திருப்பர். மாத்திரமல்ல  பன்றியை வளர்க்க தெவையான தண்ணீர் மற்றும் உணவுபதார்தங்கள் இங்கே மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கின்றன. அதன் சுவை தொன்றுதொட்டு சுற்றுசூழல் உணவுபழக்கத்தில் ஊரிக்கிடக்கின்றது. ஈறைவன் அதை தவறாக எண்ணிக்கொள்ளமட்டார், அது சுற்று சூழல் சுழர்ச்சியை சமன் செய்யும் ஒன்றே.

 

காட்சன் சாமுவேல்
தொடர்புக்கு
palmyra_project @yahoo.com

யூதாஸ்

நவம்பர் 10, 2008

இயேசுக்கிறிஸ்துவின் பாடுமரணங்களை தியானிக்கும் கஸ்தி வாரங்களில் யூதாஸை மறுபடியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது நம் மனசாட்சிக்கு உறுத்தாத விஷயமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்திருந்தால் நாமே அவனுக்கெதிராய் வழக்காடி அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கியிருப்போம். கோவலனைப்போல் அவனுக்கு ஒரு மனைவி இருந்திருந்தால் நம்மிடம் வந்து வெள்ளிக்காசுகளை விசிறி அவனுக்கக வாதாடியிருப்பாள். யாருமேயற்ற அவனது தனிமை மற்றும் மவுனம் நம் மனசாட்சியை அறைந்து எழுப்பவில்லையா? இயேசுவின் சினேகிதன் நமக்கு எப்படி எதிரியானான்? சற்று பதட்டப்படாமல் யூதாஸை நண்பனாக பாவித்து சிறிது மனம் விட்டு பேசினோமானால்……

யூதா என்கிற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம் தான் யூதாஸ். நன்றி கூறத்தக்க என்கிற அர்த்தம் பெறும் பெயராக இருப்பினும், நன்றி இழந்து செயல்பட்டு விட்டானோ என்கிற ஐயத்தின் அடிப்படையிலே நாம் யூதாஸை கல்நெஞ்சனாக காண முற்படுகிறோம். எந்த ஒரு தீர்ப்பும் தீரவிசாரிக்காமல் அளிக்கப்பட்டால் அது தவறாக மாறிவிட வாய்ப்புள்ளது. ஆகவே யூதாஸ் என்கிற சீஷனின் பின்புலத்தை ஆராய்ந்து குற்றத்தின் பின்னணியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது நமது கடமையாகிறது.

யார் அவன்? எந்த ஊரான்? எப்படி சீஷனானான்? அவன் பொறுப்பு என்ன? அவன் சிந்தனை எத்தகையது? எங்கே தவறு நிகழ்ந்தது? ஏன் தவறு நிகழ்ந்தது? மேலும் அவன் செய்தது மன்னிக்க கூடிய குற்றமா?மேற்கண்ட கேள்விகளுக்கு நம்மால் பதில் பெற முடியுமானால் அதுவே நமக்குத் தேவையான செய்திகளை சொல்லி விட வாய்ப்புண்டு.

யூதாஸ் யூதா கோத்திரத்தைச் சார்ந்தவன். எப்படி நம்மூரில் குமரி, நாஞ்சில் என பெயரின் முன் சிலர் அடையாளம் பெற்று காணப்படுகிறார்களோ அது போலவே யூதா ‘ஸ்காரியோத்’தைச் சார்ந்தவன் என்பது யூதாஸ்காரியோத்து என்பதன் அர்த்தம். எப்படி சீஷனானான் என்பதற்கு ஏற்ற தெளிவான விளக்கங்கள் நேரடியாக திருவிவிலியத்தில் காணக்கிடைக்கவில்லை எனினும் நாம் நிதானித்து அறியதக்க ஏராளமான விஷயங்கள் திருமறையில் சிதறிக்கிடக்கின்றன.

“என் பின்னே வாருங்கள்” என இயேசு யூதாசையும் ஒரு காரணத்தோடேயே அழைத்திருக்க வேண்டும். அந்த அழைப்புக்கு மனுஷனை பிடிக்கிற நோக்கமும் இருந்திருக்க வேண்டுமல்லவா? எனில் யூதாஸ் அழைக்கப்பட்டவனேயன்றி அழையா விருந்தாளியான எதிராளி அல்ல என்கிற தெளிவு பிறக்கின்றது.

 
‘அவன் திருடனானபடியால்’ என்கிற பதம், அவன் வாழ்வின் ஆரம்பப்பகுதியாக இருந்திருக்கலாமேயன்றி அவன் இயேசுவை பின் தொடரும் போது நிகழும் ஒன்றாக பார்ப்பது ஏற்புடையதாகாது. மட்டுமல்ல, இயேசுவின் சீடர்கள் அவரை சார்ந்திருக்கும் போது தவறான செயல்களில் ஈடுபட்டதுமில்லை அவ்வாறு அவர்களை அவர் பயிற்றுவிக்கவுமில்லை (இயேசுவை பிடிக்க வந்த போது காதற வெட்டிய நிகழ்வு திட்டமிடப்படாதது) ஒரு ஒழுக்கமுள்ள சீஷத்துவத்தை இயேசு அவர்களுக்கு கற்பித்திருக்க மாட்டாரா என்ன! மேலும் சகேயுவை இயேசு அழைத்த போது,ஒரே நாளில் அவன் பெற்ற மாற்றம் நாம் எல்லோரும் அறிந்தது. எனவே யூதாஸ் பெற்ற மாற்றம் உண்மையானது எனவும், அவன் தன் பழைய திருட்டு வாழ்வை விட்டொழிந்த பின்பே அவரை பின் தொடர்ந்தான் என்பதும் நாம் கண்டறியும் உன்மைகள்.

எனினும் சீஷர்களுக்குள்ளே ஒற்றுமையுணர்வு சீர்குலைந்ததை வைத்து பார்க்கும் போது,ஒரு உண்மை வெளிப்படுகின்றது. பணப்பெட்டியை வைத்திருக்கும் பொறுப்பை ஏற்க நினைத்தவர்களுக்கு அது கைகூடாமற்போனதும், யூதாஸின் பழைய வாழ்க்கையை கிளறி, அவனை சிறுமைப்படுத்த அவர்கள் கையாண்ட ஒரு பிரயோகமாகவே நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலகட்டம், சுவிசேஷகர்கள் யூதாசை வில்லனாக அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற இடைவளி கொண்டது என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

இயேசு அவனை நம்பி பணப்பையைக் கொடுத்ததற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். “திருடனின் கையில் சாவியைக் கொடுப்பது” என்று நம்மூரில் ஒரு வழக்கச் சொல் கூட இருக்கிறதே! இயேசுவோ யூதாசுக்கு தன்னம்பிக்கை வரவும் அவன் திருந்திய வாழ்வை மற்ற சீடர்களும் காணும்படியாக இவ்வாறு செய்திருக்க வாய்ப்புக்கள் வளமாக  இருக்கின்றது.

மேலும் நாம் உற்று நோக்கதக்க, அவன் பொறுப்பை சார்ந்த பல அரிய குணங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. பணத்தைச் சிக்கனமாக செலவு செய்திருக்கிறான் (யோவான்:12:5) எனும் போதே அவன் நம்பிக்கைக்குரியவனாக பரிமளிக்கின்றான், கூடவே குறித்த நேரத்தில் தேவையானதை வாங்கிவர செல்பவனாயிருக்கிறான், எல்லாவற்றிற்கும் மேல் தரித்திரர் மீது அக்கறையுள்ளவனாய்க் காணப்படுகிறான் (யோவான்:18:29). ஆகவே வேத ஆதாரங்கள் அவன் பணத்தை கையாடல் செய்ததை உறுதிப்படுத்தாதவரை நாம் அவனை சந்தேகிப்பது முறையாகாது.

யோவான் 12ம் அதிகாரத்தில் நடக்கும் சம்பவம் சற்று விசித்திரமாகவும் ஆழ்ந்த கேள்விகளை தொக்கியும் நிற்கிறது. சம்பவம் இது தான். இயேசுவை அபிஷேகம் பண்ண மரியாள் எனும் பெண் விலையேறப்பெற்ற நளதம் எனும் தைலத்தை கொண்டு வந்து அவரது பாதத்தை அபிஷேகம் பண்ணுகிறாள். மற்ற சீஷர்கள் அருகிலிருந்தும், யூதாசின் பார்வை பொருளாதாரம் சார்ந்த சமூகவியலாக உருவெடுக்கின்றது.

இத்துணை விலையுயர்ந்த பொருள் காலடியில் ஒன்றுக்கும் உதவாமல் வீணாய்ப்போவது, பணத்தை நியாயமாக செலவழிப்பவர்களுக்கு கவலையளிப்பதாகவே இருக்கும்.இதை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என அவன் வினவுவதை யாரும் தவறாக எடுத்து கொள்ள இயலாது ஏனென்றால் அதை அவனுக்குக் கற்பித்ததே இயேசு தான்! ஆகவே தான் அவர் அவனுக்குத் தன் நிலைப்பாட்டைப் புரியவைக்க முயற்சிக்கிறார். தன் மரணத்துக்கு ஏதுவாக அவள் இதைச் செய்கிறாள் என அவர் கூறியும் அவனால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. 
இந்த புரிதல் வேறுப்பாட்டைக் கொண்டு நாம் எந்த தவறான முடிவுக்கும் வந்துவிட முடியாது, ஏனென்றால் இயேசுவின் பிற சீஷர்கள் கூட அவரை புரிந்து கொள்ளாத சந்தர்ப்பங்கள் அனேகம் உண்டே! இவ்வாறாகவே யூதாசும், இயேசுவின் பதிலில் திருப்தியடையாமல் தன்னை அவர் இகழ்ந்ததாக கருத வாய்ப்புள்ளது. இந்த இடமே நாம் யூதாசின் சுயரூபம் வெளிப்படும் இடமாக நாம் கருத வேண்டும்.சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் தான்  அறிந்துகொண்ட ஒரு நல்ல கொள்கையில் அரிச்சந்திரன் போன்று யூதாசும் பிடிவாதமாக நிற்கிறான்.  சந்தர்ப்பத்தைக் கணக்கிடாமல், கொள்கையைக் கற்றுக்கொடுத்தவரே அதை மீறுவதைப்பார்த்து அவன் உணர்ச்சி மயமாகி நிற்கிறான்.
மேற்கூறியவற்றை மையமாக வைத்துப்பார்க்கும் போது, யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடும்கும் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள வழி வகுக்கின்றது. அவனது முத்தமிடும் தன்மை கலச்சாரம் சார்ந்த ஒன்றாக இருப்பினும், அவன் போல் இயேசுவை முத்தமிடுவோர் உணர்ச்சி மேலீட்டாலே அவ்வாறு செய்வதை நாம் கண்டுகொள்ள முடியும். யூதாஸ் உணர்ச்சி மிக்க ஒருவனாக தன்னை இங்கே அடையாளப்படுத்துகிறான். 

உணர்ச்சிவசப்பட்டு செய்கின்ற காரியங்களின் விளைவு நல்ல முடிவைத் தரவல்லதல்ல என அவன் புரிந்துகொள்ளுகிறான். எனவே, தான் செய்த தவறை எண்ணி மனஸ்தாபப் படுகிறான். தான் பெற்றுக்கொண்ட காசை திரும்பக்கொடுத்தாவது இயேசுவை மீட்டுவிடலாம் என்று மனப்பால் குடித்து தேவாலையம் நோக்கி விரைகின்றான். “குற்றமில்லதவரைக் காட்டிக்கொடுத்தேன்” என தேவாலயத்தில் வைத்து தைரியமாக அறிக்கையிடுகிறான்.

இந்த சூழ்நிலையில், ப்ரதான ஆசாரியன் அவன் கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தால் கதையே வேறு விதமாய் மாறியிருக்கும் (அவர்களைப் பொறுத்தவரை யூதாஸ் ஒரு டிஸ்போஸிபிள் ப்ளேட்). அந்தோ பரிதாபம், யூதாஸின் யூகம் அங்கே தவறாகிவிடுகின்றது. அவர்களோ அவனைப்பார்த்து “அது உன் பாடு” என்றதும் நொறுங்கிவிடுகிறான்.  தான் ஒரு கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டதை எண்ணி துடி துடிக்கிறான்! காலம் கைமீறிப் போய்விட்டதை எண்ணி பதைபதைக்கிறான்.

கையிலுள்ள காசால் எங்காவது சென்று, காணி நிலம் வாங்கியாவது வாழ்ந்திருக்க முடியும் அவனால். ஆனால் தனக்கு அது தகாது என உணர்ந்து, அதை தேவாலயத்தில் விசிறியடிக்கிறான். அதை கவனமாக பொறுக்கியெடுத்த பிரதான ஆசாரியர், அதைக்கொண்டு குயவனின் நிலத்தை வாங்கும் நிதானத்தில் இருக்கும்போது, தனது தவற்றை உணர்ந்த யூதாஸ் குற்றத்தின் ஆழத்தை உணர்ந்தவனாகிறான். மன்னிக்கும் கருணையுள்ளம் கொண்டவரிடம் கூட சொல்லிக்கொள்ள தைரியம் அற்று, கூனி குறுகி தனது துயர முடிவை தெரிந்துகொள்ளுகிறான்.

இந்த முடிவை நாம் நியாயப்படுத்துவது தவறாகிவிடலாம் எனினும், இதை யூதாசின் முடிவாக அல்லாமல் இன்றைய சூழ்நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் பலவீன இதயம் கொண்டோர் மற்றும் ஒதுக்கப்பட்ட நபர்களின் மனநிலையோடு பொருத்திப்பார்க்கும் கடமை நமக்கு உண்டு. எவரொருவர் தற்கொலை செய்துகொண்டாலும் அதற்கு முக்கிய காரணம் சமூக நிராகரிப்பே. தான் தவறு செய்துவிட்டோம் எனவும் சமூகம் தன்னை  எற்றுக்கொள்ளாது என்ற நிலையிலும் யூதாஸ் இந்த துயர முடிவை மேற்கொள்ளுகிறான். சொல்லப்போனால் அவனது பலவீனமான இதயமும், உணர்ச்சிமயமான அணுகுமுறையும், சமூக நிராகரிப்புமே அவனை இந்த முடிவுக்கு நேராய் உந்தித் தள்ளியது.

வாழ்க்கையில் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்தவர்களை நாம் அரவணக்கத் தவறினோமானால், அன்பை எதிர்நோக்குபவர்களை உதாசீனம் செய்தோமென்றால், அவர்கள் செய்யத்துணியும் தற்கொலைகளுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

நிர்வாணம்

நவம்பர் 4, 2008

சமூக வாழ்க்கையில் நாம் பொருள்தேடும் விஷயங்களுள் நிர்வாணம் என்பது மிகவும் முக்கியமான மற்றும் மர்மமான ஒன்று! நிர்வாணத்தை நானாக இருந்த, இருக்கும் மற்றும் அடையும் நிலைகளை குறிப்பதாக புரிந்து கொள்ளலாம். மேலும் நிர்வாணம் நிரந்தரமானது, விரும்பத்தக்க ஒன்று, தன்னலமற்ற தன்மையுடையது, பிறர் நலன் பேணிக்காப்பது, உலக சுழற்ச்சியின் ஆதாரம் என இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன் உலகத்தை நிர்வாணமாக படைத்து, ரசித்து, வாழ்த்தி நிர்வாணமே நீடிய வாழ்விற்கு ஏற்றதென உணர்த்தியது நம் கண்களுக்கு மறைவாக போயிற்று. நிர்வாணத்தைக் குறித்த எண்ணம் நம்மை நேராக பாலியல் சிந்தனைக்குத் தூண்டுவதாக அமைவதன் காரணம் என்ன? என்ற கேள்வி எழும் போது, நாம் அவ்வாறாக புரிந்து கொள்ள பழக்கப்பட்டுள்ளோம் என்பதே சிறந்த பதிலாக அமையமுடியும். நிர்வாணத்தைக் குறித்த இத்தகைய மேலோட்டமான சிந்தனையை மாற்றிவிட்டு சற்று ஆழமான உண்மைகளை தேட முற்படுவது நிர்வாணமாக நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியதையாகும்.இறைவனின் படைப்பே நிர்வாணத்தின் மேன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. தமது சாயலில் மனுக்குலத்தைப் படைக்கும் போது கடவுள் தன்னையே வெளிப்படுத்துகிறார்! குறிப்பாக தன்னை மூடிமறைக்காத, வெளிப்படையான ஒருவரே நம் எல்லோருடைய கடவுளாக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கடவுளின் நிர்வாணம் உடல் சம்பந்தப்பட்டதாகவோ சிந்தனை சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம், இரண்டுமாகவும் இருக்கலாம் அல்லது வேறெந்த நிலையிலாவது இருக்கலாம். எப்படியிருந்தாலும் இறைவன் நிர்வாணியாக இருப்பது உறுதி.

ஆடை என்பது தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஏன் அணிகிறோம் என்ற கேள்விக்கு ‘எல்லோரும் அணிகிறார்கள்’ என்ற ஒரே வாதத்தைத் தவிர நம்மிடம் எந்த தடயமும் இல்லை. சொல்லப்போனால் உடை நம்மில் ஒரு பாதியாகிவிட்டதாகக் கருதுகிறோம். உண்மை அதுவல்ல “நாம் சுயம் சார்ந்தவர்களாக இருக்கிறோம்”என்பதே அதன் பொருள். நம்மைச் சுற்றி எல்லோரும் நான் எனக்கு என பிறர் நலன் நோக்காது எடுத்துக்கொள்ளும் போது, நாமும் நமக்கானவற்றைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும் என களமிறங்குகிறோம். எடுத்தவற்றையும் நம்மையும் மறைக்க நம்மாலான பிரயத்தனங்கள் எடுக்கிறோம். ஆனால் நிர்வாணியான இறைவனை தரிசிக்க முடியாமல் தவிக்கிறோம். எதிர் பாலினம் இறைவனை சந்திக்கத் தடையாயிருக்குமென தனித்து நின்று பிரார்த்தனை செய்கின்றோம். முடிந்தவரை அவர்களை தலை முதல் கால்வரை மூடி நடமாடும் பொருட்களாக ஆக்கிவிட்டோம். இந்த ஆடை சிறைக்குள் இருப்பவர்கள் எழுதும் நியாயங்கள் இறைவனின் சட்டபுத்தகத்தில் செல்லாது என்பதை புரிந்துக்கொள்ளுவதில்லை.

அழகியலை விரும்புபவர்கள் அனைவரும் நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். நிர்வாணம் வளைவுகளையும், உயரங்களையும் ஆழ அகலங்களையும் உடையது. ஆனாலும் அவைகளில் துளியேனும் பாகுபாடு காணப்படுவதில்லை ‘தலை சிறந்தது’ என்றும் ‘கால் தூசி’ என்றும் சொல்லுவது நம் அறியாமையின் வெளிப்பாடு மட்டுமே! ஏனென்றால் நிர்வாணம் என்பது மனிதக்குலத்துக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் உரித்தானது. வானம், பூமி, கடல், செடி, கொடி, மரம், பறவை, மிருகம், ஊர்வன என எல்லாம் நிர்வாணமாக இருக்கின்றன. இதற்கு ஈடான அழகை நாம் எதையும் அணிந்து மெருகூட்டிட இயலாது என்று தெரிந்தும் நாம் அதை தொடருகிறோம். இந்த அழகிய நிர்வாணத்தை நாம் அனுபவிக்க பழகியிருக்கிறோமா அல்லது அழிப்பதற்கு துவங்கியிருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது. உலகின் மிகப்பெரிய சந்தோஷமாக நான் கருதுவது நிர்வாணமாக இருப்பது தான்! நிர்வாணமே உறவுகளை பெலப்படுத்துகிறது. ஜாதி, மதம், நிறம், மொழி எல்லவற்றையும் தாண்டிய ஒரு மகோன்னத நிலையை அது பெற்றிருக்கிறது. இருபாலினரும் நிர்வாணம் தரிக்கும் போது தானே ஒன்றாகின்றனர்? தாய் தான் பெற்றெடுத்த குழந்தையின் நிர்வாணத்தை ரசிப்பதற்கு, என்னாலும் படைக்க முடியும் என்ற இறைவனை அடுத்த நிலையை அடைந்த மகிழ்விற்கு  ஈடான சந்தோஷம் உலகில் உண்டா? இல்லறத்தில் மட்டுமல்லாது துறவறத்திலும் நிர்வாணம் உன்னதமான நிலையைக் குறிப்பதாக அமைகிறது. இல்லறத்தில் நானும் நீயும் ஒன்று என்ற கோட்பாடே துறவறத்தில் நானும் இறைவனும் ஒன்று என்பதாக இருக்க முடியும்? வாழ்க்கை என்பது நிர்வாணத்தில் துவங்கி அவ்வறே முடிகிறது. இடைப்பட்ட நேரத்தில் நாம் நிர்வாணத்தைக் காயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். 

 நிர்வாணம் ஏற்றத்தாழ்வுகளை துடைத்தெறிய இறைவன் தந்த வரம். மனிதன் இந்த வரத்தைக் கூறுபோட்ட விதம் மிகவும் கொடூரமானது. இறைவன் கொடுத்த நிர்வாண வரத்தை கெடுத்தது, நாம் மேற்கொள்ளும் தவறான காரியங்கள் தாம்.  தவறான செயல்களை மட்டுமே நாம் மூடி மறைக்க எத்தனிக்கின்றோம். இறைப்படைப்பில் தவறான காரியங்கள் இருக்கக்கூடுமோ? அல்லவே? நிர்வாணம் என்பது எப்போது தவறான ஒன்று என்ற எண்ணம் வந்ததோ அப்போதே நாம் அதை மூடி மறைக்க எத்தனங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டோம். விளைவு? இன்று நாம் நம் உடலை மட்டும் மறைக்காமல் இறைவன் நமக்கு அருளிய விசாலமான மனதையும் மறைக்கத் துவங்கிவிட்டோம்.

மனுக்குலத்தின் வீழ்ச்சி  எப்போதும் தன்னை மறைத்துக்கொள்ளுவதினாலே ஏற்படுகின்றது என்பது என்  கணிப்பு. மறைத்துக்கொள்ளுதல் பகைமையை வெளிப்படுத்துகின்றது, தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறது, பயத்தைக் காட்சிப்படுத்துகின்றது, ஒப்புறவை புறந்தள்ளுகிறது. மறைத்துக்கொள்ளுதல் தனிமைப்படுத்திக்கொள்ளும் அவலம். அது கலாச்சார அபாயம். சாதி, சமயம், நிறம், நாடு, கல்வி, கலாச்சாரம், தொழில், மொழி, கட்சி முதலானவற்றைக் கொண்டு நம்மை மறைக்க முயலுகின்றோம். இத்தகைய மறைவு வாழ்க்கை நம்மை எத்துணை இடர்களுக்குள் இட்டுச்சென்றுள்ளது என்பதைப் புரிந்துகொண்டால், வாழ்க்கை ரம்மியாமானதாக மாறிவிடும்.

நிர்வாணம் கற்போடு இருக்கின்றது. நாம் தான் அதைக் கட்டுப்பாடுகளால் கற்பழிக்கின்றோம். நீயும் நானும் நிர்வாணமாயிருபோம் என்பது உயரிய சமதர்மவாதம். உலகம் முழுமைக்கும் இறைவன் கொடுத்தருளிய இந்த சித்தாந்தத்திற்கு எதிராய் நாம் மாறிவிட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றோம். நான் மறைத்துக்கொள்ளுவேன், நீ நிர்வாணமாய் இருக்கவேண்டும் என்பது நிர்வாணத்தை அவமானப்படுத்தும் செயலாக அல்லாமல் வேறென்னச் சொல்ல? இன்று நிர்வாணப்படுத்துவதே நம் வேலையாகிப்போனது. பிறரின் நிர்வாணம் பாலியல் கிளர்ச்சியையும், கிளுகிளுப்பையும் அள்ளித்தரும் விஷயமாகிப்போனது. பிறரது நிர்வாணம், கண்டுகொள்ளப்படாததும், பரிகசிப்புக்குரியதாகவும் அமைந்து விட்டது. நம்மை மறத்துக்கொண்டு பிறரை நிர்வாணப்படுத்துவது இன்றைய நாகரீகத்தின் உச்சவளர்ச்சியாக இருக்கின்றது. ஓவியம், புத்தகம், நிழற்படம், திரைப்படம், தொலைக்காட்ச்சி, இணையதளம், ஏன் செல்பேசி கூட உபயோகித்து காலமாற்றத்திற்கு ஏற்ப நிர்வாணத்தை வியாபாரப்படுத்தும் நாம் – உடையெனும் சமூகப்போர்வைக்குள் நம்மை ஒளித்துக்கோண்டு இவைகளைச்செய்வது குற்றத்தின் உச்சமல்லவா? நிர்வாணத்தை உணரவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ தெரியாதவர்கள் பிறரை நிர்வாணப்படுத்துவது பெருங்குற்றமல்லவா? நம்மால் புரிந்துகொள்ள இயலாத நம்மைச்சார்ந்த பல விஷயங்கள் இருக்க, பிறரை நிர்வாணப்படுத்தி  புரிந்துகொள்ள முற்படுவது பிற்போக்கான எண்ணமல்லவா? நிர்வாணம் ஆவோம் என்பது ஒருமித்தக்குரலாக ஒலிக்கச்செய்வதை விட்டுவிட்டு, நிர்வாணப்படுத்த முற்படுவதால் என்ன லாபம்? நம்மேல் உள்ள பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு தோள் தேவைபடலாமே அன்றி இன்னொருவர் தலையில் ஏற்றுவது தவறல்லவா? நிர்வாணாம் பிறரை ஏற்றுக்கொள்ளும் விசாலமன ஒன்றாய் இருந்தும், நாம் குப்பை இடும் பகுதியாக அதை மாற்றுவது நிர்வாணத்தின் தலையில் பாரத்தை ஏற்றுவதாகாதா? நிர்வாணம் பிறரை ஏற்றுக்கொள்ள இடம் தர வேண்டுமே அன்றி திணிக்கப்படக்கூடாதல்லவா? 

நிர்வாணம் ஏற்படுவதர்க்கான காரணங்கள் என நான் கருதுவது – போர், வறுமை, வன்முறை என பட்டியலிடலாம். சமயம் கூட தன் பங்கிற்கு பல பெண்களை நிர்வாணப்படுத்தியிருப்பது மிகவும் வேதனையான விஷயம். கூடவே, இன்று நாம் நமது பங்களிப்பாக நமக்கடுத்தவர்களை நிர்வாணிகளாக வைத்திருக்கிறோம். நிர்வாணியாக நம் அயலார் மரிக்கையில், துணிகளைக்குவித்து வைத்திருக்கும் நாம் யார்? போர்முனையில் கையில் அகப்பட்ட எளியவர்களை நிர்வாணப்படுத்துவதுதான் நமது வெற்றிக்களிப்பா? வெறும் களிப்பை அள்ளித்தரும் சாதனமாக நிர்வாணம் காணப்படுவதும், பேணப்படாது சுரண்டப்படுவதும் எவருடையத் தவறு? நிர்வாணமே கலச்சாரமாக வாழும் பழங்குடியினரை காட்டுமிராண்டிகள் என்பதும் முதிர்ச்சியின்மை அல்லவா? கடவுளின் திருப்பெயரைச்சொல்லியே பணம் சம்பாதிக்கும் இக்காலத்திலே, இறைச்சாயலான மனித குல நிர்வாணத்தைக் காட்டி தொழில் செய்வது ஒன்றும் ஆச்சரியமில்லைதான். நமது பணம் மற்றும் பலம் கொண்டு நாம் நிர்வாணத்தை அணுகும்போது அது தன் தெய்வீக நிலையை இழக்கின்றது. 

‘அவரது வஸ்திரத்தின் மேல் சீட்டுப்போட்டு அதை பங்கிட்டுக் கொண்டார்கள்’ எனும் வசனமே இயேசுவை சிலுவையில் நிர்வாணமாக அறைந்தார்கள் என்பதற்குச் சான்று.  மேலும், நிர்வாணமே சிலுவையில் தொங்குபவர்களுக்கு உடை அமைப்பாக இருந்ததை யாரும் மறுக்கவியலாது. இயேசுவின் நிர்வாணம் நமக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லையா? அவரின் நிர்வாணம் நம்மை எந்தவித சிந்தனைக்கு நேராக வழிநடத்துகிறது? 

இயேசு சிலுவையில் தொங்கும்போது அவரது தாய், சீடர்கள், வழிப்போக்கர்கள், அரசுக் காவலர்கள், மதத்தலைவர்கள் என ஒரு கலவையான மக்கள் திரள் அந்தக் காட்சியப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவரது நிர்வாணத்தைக் குறித்த சிந்தனை அனைவருக்கும் ஒர்ன்றுபோல் இராது என்பது தெளிவு. சிறுமைப்படுத்துவோர் அனேகராயும், சிறுமையுற்றோர் வெகு சிலராயும், வேதனையுற்றோர் சொற்பமாயும் இருந்திருப்பர். இவ்விரண்டு மனநிலையிலும் மக்கள் சார்ந்திருப்பதனால் இறைவனின் நிர்வாணத்தை நாம் புரிந்துகொள்ளப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. “இறைச்சாயலில் உள்ளவர்கள் நிர்வாணம் ஆகும்போதும் ஆக்கப்படும்போதும் நாம் யாரைக் காண முற்படுகிறோம்! மானுடத்தையா? இறைவனையா?”

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

காகம்

ஒக்ரோபர் 30, 2008

மும்பை பட்டிணத்தின் மழை மிகுந்த நாளில் தவிர்க்க முடியாத பிரயாணம் ஒன்று ஏற்ப்பட்டது. ‘தானே’ இரயில் நிலையம் முன்பு ஷூ மூழ்குமளவு தண்ணீரில் பொதுமக்கள் எதுவுமே நடவாதது போல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மும்பை வாழ்க்கை இன்னமும் அதிசயிக்கதக்கதாகவே இருக்கும் என் கிராமத்து மனது பரக்கு பார்த்தபடியே நிதானமாக நீரை துழாவியபடியே நடந்தது. எனக்கு மிகச் சமீபமாக ஒரு கீச்சுக்குரலை நான் கேட்டபொழுது அப்படியே நின்றுவிட்டேன். என் கால்களின் அருகிலேயே ஒரு எலிக்குஞ்சு (பெருச்சாளியின் இளவல்?) பரப்பரப்புடன் நீந்திக்கொண்டிருந்தது. எங்கே சென்று கரையேறுகிறது என நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு காகம் என்னை வட்டமிட்டபடி வந்து ஒரு சாய்ந்துபோன தூணில் அமர்ந்தது. சூழ்நிலையை புரிந்துகொண்ட நான், இன்னும் நிதானமாக கூர்ந்து கவனிக்க நேரமில்லாமல் என்ன செய்வது என நிதானிப்பதற்குள் காகம் மிக லாவகமாக தனது உணவை கொத்திச் சென்றது. கீச்சுக் குரல்களும் காகமும் மறைந்தன. காகம் தன்னுடைய உணவை எங்கே எடுத்துச் சென்றிருக்கும்? என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்தேன்.

சமீபநாட்களாக நான் சிறுகுழந்தைகளை அழைத்து கதைகளைச் சொல்லவும், கேட்கவும் ஆரம்பித்திருந்தேன். அவர்கள் கூறிய கதைகளில் காகங்களும் இடம் பெற்றிருந்தன. குழந்தைகள் வாழ்வில் காகம் பெற்றிருக்கும் முக்கிய இடம் என்னை காகத்தின் பால் ஈர்த்தது. நகர வாழ்வில் நம்மைவிட்டு அநேக பறவைகள் அகன்றபோதிலும், தியாகம் மற்றும் நல்லுறவை வெளிப்படுத்தும் காகம் நம்மோடு தங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. காகங்கள் குறித்த உயர்வான எண்ணங்கள் ஏதும் தற்பொழுது நம்மிடம் இல்லை. நாம் விரும்பத்தகாத கரிய நிறம், குரல்வளமற்ற அதன் கரைச்சல், நடைப்பழகத் தெரியாமல் தத்துவது, சனி பிடித்துவிடுமோ என்ற அச்சம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அசுத்தமாக கருதப்படும் பொருட்களோடுமுள்ள அதன்  தொடர்பு. எனினும் குழந்தைகள் தம் வாழ்வில் காகம் நீக்கமற நிறைந்திருப்பது, காகத்தை நாம் குறைத்து மதிப்பிடலாகாது எனச்சுட்டுகின்றது.

குழந்தைகளுக்கு சோறூட்டவேண்டி, காகங்களை நாம் காண்பிக்கும் பொழுது காகம் ஒன்றும் குழந்தைகளை பயமுறுத்துவது இல்லை. நாம் தான் சிறிது சிறிதாக குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கிறோம். காகம் தலைக்குமேல் பறப்பது நல்லதல்ல என துவங்கி சனி பகவானை அழைத்து வந்து பயமுறுத்தும் வரை நமது கதைகள் யாவும் குழந்தைகளை காகத்தை விட்டு தூரமாக்கும் சதிவலைகளாகவே காணப்படுகின்றது. பிஞ்சு இதயங்களை நஞ்சாக்கி காகத்தின் தியாகத்தை அறிந்துகொள்ள முடியாமற் செய்கிறோம். காகங்களை கைச்சாடையால் துரத்துவதோடே மெல்ல மெல்ல நாம் காகங்களை குழந்தைகளிடமிருந்து தூரமாக்கும் கதைகளை பகிர்ந்து கொள்ளத் துவங்குகிறோம். ‘பாட்டி வடை சுட்டக்கதை’ தான் நம் கைவசமிருக்கும் முதற்கதை. திருட்டு என்றால் என்ன?, பிறரை நயமாக வஞ்சிப்பது மற்றும் ஏமாற்றுவது எப்ப்படி போன்ற நல்லொழுக்கங்களை குழந்தைகளுக்கு புரியாத வயதிலேயே புரியும்படி விளக்குகின்றோம். தன் தள்ளாமையில் உழைக்கும் பாட்டிக்கு நிகழும் அவலம் தான் உழைப்போருக்கு அனுதினமும் நடைபெற்றுவரும் அவலம் என்பதையும், நம்மைசுற்றி சுரண்டி வாழும் ஒரு பெருங்கூட்டம் இருப்பதையும் எடுத்துக்கூறாமல் விட்டுவிடுகிறோம். உயிர் வாழ உணாவின் இன்றியமையாமை என்ன என்பதை மட்டுமே அறிந்திருக்கும் காகத்திற்கு திருட்டு பட்டம் அணிவித்து, ‘தவறு செய்தவன் ஏமாற்றப்படுவான்’ என்கிற நீதியோடு நரி செய்த ஏமாற்று வேலைச் சரி என்பதாகவே கதையை முடிக்கிறோம். காகம் புத்திசாலியானது என நிரூபிக்கும் வகையில், வடையை தன் கால்களில் கவ்விவிட்டு, பாடல் பாடி நரியை ஏமாற்றிய காகம் என இக்கதையின் நீட்சியும் உண்டு.

புத்திசாலி காகங்கள் குறித்த கதைகள், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. நீர் தேடி அலையும் காகம் ஒன்று ஆர்கிமிடீஸின் இயற்பியல் தத்துவத்தை உணர்ந்து, நீர் குறைவுள்ள ஜாடியிலே கற்களை நிறப்பி, நீர் நிறைந்த பொழுது அதைக்குடித்து தாகம் தணிந்து சென்ற கதையை குழந்தைகள் ஆர்வத்தோடும் வியப்போடும் கேட்பதைக் காண கண் கோடி வேண்டுமல்லவா? தனது குஞ்சுகளைக் கொன்ற பாம்பிற்கு பாடம் புகட்ட, மகாராணியின் முத்துமாலையை சாதுர்யமாக எடுத்து வந்து, காவலர்கள் மூலமாக பாம்பை தண்டித்த காகத்தின் வீர தீரச் செயல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘டிங்கிள்’ என்கிற குழந்தைகளுக்கான வரைபடங்களுடன் கூடிய இந்திய கதை புத்தகத்தில் வரும் ‘காளி காகம்’ குழந்தைகள் மனதில் அழியா சித்திரம் பெற்ற ஒரு அமர பாத்திரப்படைப்பு. நரியும் முதலையும் சேர்ந்து செய்யும் சதி வேலைகளை ஒரு தேர்ந்த துப்பறிவாளினி போல் கண்டுபிடித்து, சதித்திட்டங்களை நிர்மூலமாக்கி, எளிய காட்டு விலங்குகளை பாதுகாக்கும் தன்மை, சிறுவர்களின் நல்லுள்ளம் மற்றும் ஆளுமையை விருத்திசெய்ய ஏற்றது. வலையில் சிக்கிய மானை காப்பாற்ற வேண்டி காகம் கண்களை கொத்துவது போல் அபிநயிக்கும் கதை காகத்தின் இயல்புகளிலிருந்து பெறப்பட்ட கதையாகும்.

நோவா, மழை நின்ற பின்பு பேசாமல் வாத்துக்களையும் அன்னப்பறவைகளையும் வெளியே விட்டிருக்கலாம். அனேக நாட்களுக்கு பிறகு தண்ணீரில் சுதந்திரமாக விளையாடிய இன்பமாவது கிடைத்திருக்கும் அவைகளுக்கு. ஆனாலும், நோவா என்ன நினைத்தாரோ தெரியவில்லை காகத்தை முதலாவதாக அனுப்பினார். ஒருவேளை காகம் புத்திக்கூர்மையுடையது என்பதாலும், எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றதாலும் எனக் கொள்ளலாமா? மேலும் பரிசுத்தமான புறாவைக் காவு கொடுப்பதைவிட, இரண்டு ஜோடி காகத்தில் ஒன்று போனால் நஷ்டமில்லை என நினைத்திருப்பாரோ? இந்தக் கதையில் புறாவே கதாநாயக அந்தஸ்து பெறுகின்றது. பரிசுத்தமான புறா போவதும் வருவதுமான காகத்தைப்போலல்லாமல், தன் கடமையை செவ்வனே செய்யும்பொருட்டு பறந்து சென்று, இடங்களை மேற்பார்வைஇட்டு, நீர் வடியவில்லை என உறுதி செய்தபின் நோவாவின் கைகளுக்கே திரும்பி வந்தது.  மறுபடியும் ஏழு நாட்களுக்குப் பின்னே, புறாவை அனுப்பியபோது, அது தன் அலகிலே ஒலிவ இலையை கொத்திக்கொண்டு வந்து வெள்ளம் வடிவதற்கான அறிகுறியை அறிவித்தது. இன்னும் ஒரு ஏழு நாட்கள் காத்திருந்த நோவா,  புறாவை அனுப்பிய போது, அது திரும்ப வரவில்லை. எங்கே சென்றிருக்கும்? நன்றியிழந்து காணப்பட்டாலும், புறாவை விட்டுக்கொடுக்க மனமின்றி, நோவாவும் நாமும், இது வெள்ளம் வற்றியதற்கான அறிகுறி என நம்மையே தேற்றிக்கொள்வோம். காகத்தையோ ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை.

பறவைகளில் மிகவும் அழகானது எது? மிகவும் இனிய குரல்வளமுடைய பறவை ஏது? பேசும் பறவைத் தெரியுமா? கபடற்ற பறவையின் பெயர் என்ன? பெரிய மற்றும் சிறிய பறவைகளின் பெயர்களைக்கூறு போன்ற கேள்விகளே பெரும்பாலும் பறவைகளைப்பற்றிய நமது அகராதியிலிருந்து எழுகின்றன. பறவைகளை கடவுள் ஒரு காரணத்தோடே படைத்திருக்கிறார் என்பதும், அவைகள் தத்தமது பணிகளை செவ்வனே செய்கின்றன என்பதையும் நாம் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். ஆக இறைவன் படைத்த காகத்திற்கு சிறுவர் அளிக்கும் முக்கியத்துவம் கூட நாம் கொடுக்காமல் இருப்பது, இறைவன் அளித்த படைப்பின் ஒரு பங்கினை உதாசீனப்படுத்துவதல்லவா?

காகத்தை துப்புரவு பறவை என அழப்பதுண்டு. துப்புரவு செய்யும் நம் சக மனிதர்களை சற்றேனும் மதிக்காத நாம், பாவம் இந்த காகத்தை எவ்வகையில்தான் முக்கியத்துவப்படுத்துவோம். இந்தக் கட்டுரை வாயிலாக காகம் நம் மனதிலிருக்கும் கசடுகளை எடுத்துப்போடுமானால் அது நமக்கு நலமாயிருக்கும்.

இயேசு காகத்தை இவ்வாறு முன்னிலைப்படுத்துகிறார். ‘காகங்களை கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்கு சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?’ ஆம், இயேசு தனது சிந்தனையை மிகத் தெளிவாக அறிவுறுத்துகின்றார். பழமை கொண்ட சிந்தனையோடு இயைந்து, காகம் அசுத்தமானப் பறவை எனக் கொள்ளாமல், இறைவன் அவற்றுக்கும் உணவளிக்கிறார் என்பது என்னே ஒரு உயர்ந்த எண்ணம். இறைவனே அளிக்கும் உணவு அசுத்தமானதாக இருக்க வாய்ப்பு இல்லையே! சரியாகப் புரிந்துகொண்டோமென்றால், பறவைகள் இறைவனின் படைப்பை மாட்சியுறச் செய்வன என இயேசு உறுதிப்படுத்துகின்றார். இயேசுவின் இந்த நுண்ணிய அறிவுரையோடு நாம் எலியாவின் வாழ்க்கையைப் பார்த்தோமானால் காகத்தின் பங்களிப்பு நமக்கு தெரியவரும்.

எலியா எனும் தீர்க்கன், ஆகாபுக்கு பயந்து கேரீத் எனும் நீரூற்றண்டையிலே இறை வாக்கின்படி தங்கியிருக்கிறான். போதுமான நீர் இருக்கின்றது, உணவருந்துவதற்குத்தான் ஏற்ற வழியில்லை. என்ன செய்வது? எல்லாம் இறைவன் விட்ட வழி என எலியா தன்னையே அர்ப்பணித்து இருக்கும்போது, கடவுள் எலியாவை நோக்கி, பயப்படாதே, ‘உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்’ என் உறுதி கூறுகிறார். காகங்கள் நமக்குத்தெரிந்து உணவு தயாரிப்பதில்லை. அவ்விதமாகவே உணவை மனிதர்களுக்கு பறிமாறுவதும் பழக்கமில்லை. பாட்டி வடைசுட்ட கதையில் கூட, பாட்டி அதனைத் துரத்தியோ பாடச்சொல்லியோ வடையை வாங்கவில்லை. ஏனென்றால் காகத்தின் எச்சிலையா மனிதர்கள் தின்பது? சீய், சீய், இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கு வேண்டுமானால் எச்சில் வடை சுவைக்கத்தகுந்ததாய் இருக்கலாம். காகத்தைப் பொறுத்தமட்டில் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் அனத்துமே உயர்தர உணவக பண்டங்களே. ஒருவேளை செத்த எலிக்கறி அசைவ விருந்தாகவே அவை பாவிக்கும். எனில், எலியாவின் வாழ்வில் காகம் ஆற்றிய பணியினை கடவுள் எவ்வாறு முன்னிறுத்துகிறார்?

காகம் பகிர்ந்துண்ணும் பறவை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பகிர்தல் மற்றும் யாரோடு பகிர்தல் போன்ற அளவுகோல்களை இறைவன் இங்கு மறு ஆக்கம் செய்கிறார். ‘இவர் பாவிகளோடும், ஆயக்காரரோடும் உணவருந்துகிறார் என்பதும், போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமாயிருக்கிறான் என்பதும் எத்துணை பக்குவமற்ற வார்த்தைகள். இறைவன் எலியாவையும் காகத்தையும் ஒரேத்தட்டில் நிறுத்துகிறார். இறையடியவரான எலியா இந்த எளிய வாழ்வை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுகிறார். தனக்காக விதைக்காமலும் அறுக்காமலும், சேமிப்பறையும், களஞ்சியமும் அற்று, அசுத்தமான உணவாக கருதப்பட்ட (ஒருவேளை எலிக்கறி என்ற) உணவைக் காகத்தோடு பகிரத் துவங்கியது, காகங்களின் மேன்மையை பறைசாற்றாவிடிலும் பரவாயில்லை; நிறுவனங்கள், விமானங்கள், மாளிகைகள் மற்றும் உயர்தர உணவுகள் மட்டுமே தயாரிக்கின்ற சமையலறைகள் போன்ற களஞ்சிய சேமிப்பறைக் கொண்டுள்ள, கிறிஸ்து இயேசுவை வியாபாரப் பொருளாக மட்டுமேக் கொண்டு, பல்லாயிரம் மக்களைத் தவறானப் பாதையில் வழிநடத்தும் இன்றைய சில மத வியாபாரிகளின் மத்தியில், இறையடியார்களின் தியாக வாழ்வை பறைசாற்ற வல்லவை.

காட்சன் சாமுவேல்

குப்பைத்தொட்டி

ஒக்ரோபர் 24, 2008

குப்பைத்தொட்டியை கடந்துபோகும்பொது ஏற்பட்ட சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் குப்பைத்தொட்டியை அலட்சியபடுத்தாமல் ஆராய்ந்து அறிய எத்தனித்தால் அதுவே ஒரு அட்சய பாத்திரமாக உருவெடுத்து நல்ல பல கருத்துக்களை அள்ளித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குப்பைத்தொட்டியை வைத்திருப்பதன் காரணம் என்ன? குப்பைகளை இடுவதற்கா அல்லது குப்பைகளை உருவாக்குவதற்காகவா? சுத்தம் சோறு போடும் என்பார்கள் ஆனால் நாமோ சோற்றை குப்பைத்தொட்டியில் போடுகின்றோம். சுகாதாரம் என்பது சமத்துவம் எனும் உயர்ந்த கருத்தை வலியுறுத்தும்போது மற்றோர் இடத்தை குப்பைத்தொட்டியாக்கி சுத்தமானவர்கள் என்று பெருமிதம் கொள்ளுவது நியாயமா? குப்பை என்று நாம் நினைப்பதை இன்னோர் இடத்திற்கு மாற்றுவதால் நாம் அதை அகற்றுபவர்கள் ஆவதில்லை, மாறாக அதை இடமாற்றல் செய்து இடும் பொருட்களின் எண்ணிக்கையையும் அளவுகளையும் கூட்டிக்கொண்டே போகின்றோமல்லவா? என்னைப்பொறுத்தவரையில் மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக நான் கருதுவது குப்பைத்தொட்டிதான், ஏனென்றால், மனிதனின் மற்றெல்லா கண்டுபிடிப்புகளும் இதனுள்ளே சங்கமமாகிவிடும்.

குப்பைத்தொட்டிக்குள் செல்லும் எதுவும் மறுபடியும் பிறந்தது ஆகின்றது. குறிப்பாக தன் முந்தைய நிலையைத்தாண்டி ஒரு உன்னதமான நிலையை அது அடைகிறது என்பது என் கணிப்பு. மறுபடியும் பிறந்தது என்ற வார்த்தை பிறப்பை ஞாபகப்படுத்துகின்றதல்லவா? ஆம் வேறெங்கும் இல்லாத அதிசயம் இங்கு நம் தேசத்தில் நிகழ்கின்றது. குப்பைத்தொட்டி பெற்றெடுக்கின்றது மனிதக்குழந்தைகளை! இந்த விசேஷ குழந்தைகளைப்பற்றி நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? சமூகத்தோடு சேர்ந்து இக்குழந்தைகளை தாழ்வாக கருதும் நம்மைப்பார்த்து குப்பைத்தொட்டி – மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவரை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து விழா கொண்டாடுகிறீர்களே, ஏன் என்னிடம் பிறந்தவர்களுக்கு இந்த கவனிப்பு இல்லை என்று கேட்டால் நாம் என்ன பதில் கூறப்போகின்றோம்? யோசித்துப்பார்க்கும்பொழுது மேலும் பல சிந்தனைகள் நம் எண்ண அலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன அல்லவா? ஆம் என்னைப்பொறுத்தவரைக்கும் மனிதனுக்கும் குப்பைத்தொட்டிக்கும் உள்ள உறவு ஒரு புனிதமான பந்தமாகவே காணப்படுகிறது. மனிதனயும் குப்பைத்தொட்டியையும் பிரிக்கும் ஒரு சமுதாயம் எதிர்காலத்தில் எங்கும் இராது எனும் அளவிற்கு நம்மோடு நிழல்போல வருவது குப்பைத்தொட்டி மாத்திரமே. தன்னிடத்தில் வரும் எதையும், எவரையும் புறம்பே தள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு விசாலமான சிந்தனைவாதியாக, யதார்த்தவாதியாக குப்பைத்தொட்டி காணப்படுவது விந்தையிலும் விந்தை.

குப்பைத்தொட்டிகளை சார்ந்து வாழும் சிறுவர்களை கேட்டால் சொல்லுவார்கள், அது தங்கள் கோயில் என்று. நாள் முழுவதும் இந்த புண்ணிய தலத்தில் தவம்புரியும் இந்த இளம் சன்னியாசிகள் கொண்டுவந்தது என்ன? கொண்டுபோவது என்ன? சற்றே உரக்க சிந்தித்துப்பார்த்தால், கடையெழு வள்ளல்களையும் தாண்டி, அள்ள அள்ள குறையா செல்வங்களை நாள்தோறும் அளிக்கும் குப்பைத்தொட்டி ஒரு எட்டாவது வள்ளலாக எழுச்சியோடு இந்த சிறுவர்முன் மட்டுமல்லாது நம்முன்னும் கம்பீரமாக நிற்கிறது. வானளாவ உயர்ந்து நின்ற தேவாலயத்தை பார்த்த இயேசு ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்பட்டுப் போகும் நாட்கள் வரும் என்று ஏன் குறிப்பிட்டார் என்பது புரிகிறதல்லவா?

நாம் இப்போது கூர்ந்து கவனிக்கப்போகிறோம், குப்பைத்தொட்டியில் என்ன இடப்படுகின்றது என்று. சமூகம் சொல்லலாம் மாசுகள் என்று! சிலர் கூறக்கூடும் குப்பைகள் என்று! அது நிஜம்தானா என்று நாம் சற்றே எண்ணிப்பார்க்கையில் இல்லை என்றே சொல்லத்தோன்றுகின்றது. நாம் குப்பைத்தொட்டியில் போடுவதெல்லாம் நம் வறட்டு கவுரவத்தையும், நாம் வாழும் சமுதாயத்தின் வெளிப்பாடுகளையுமே அன்றி குப்பைகளை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. மாசு நம் மனதில் இருக்கிறது, நம்மைச் சுற்றியும் இருக்கிறது. ஆனால் அது கண்டிப்பாக குப்பைத்தொட்டியில் இல்லை என உறுதியாக கூறிவிடமுடியும். எல்லாம் படைத்த இறைவன் ஏன் ஒரு குப்பைத்தொட்டியை படைக்கவில்லை என்றால் ‘குப்பை என்று எதுவும் கிடையாது” என்ற சீரிய நோக்கால் அல்லவா? நடந்தது என்ன? நாம் கண்டுபிடித்தோம் குப்பைகளையும் குப்பைத்தொட்டியையும். நம்மை சுற்றி கடவுள்(கள்) கோணிப்பையுடன் குப்பைத்தொட்டிகளைச் சுற்றி சுற்றி வரும்பொழுது, நாம் வேறு சில பைகளுடன் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். நன்மை தீமை வேறுபடுத்தத் தெரியாத அளவு கடவுளை தூரமாக வைத்து வேடிக்கை பார்க்கும் மதபோதகர்களால் ஏற்பட்ட தீங்குகளின் விளைவா இது? குப்பைத்தொட்டியை இவ்வளவு தூக்கி பேசவேண்டிய அவசியமில்லை என்று யாரோ சொல்லுவது கேட்கின்றது! ஆனால் அதன் அவசியம் அவசரமானது.

ஒரு வினாடி உற்றுப்பாருங்கள், எங்கும் காணாத சமத்துவத்தை குப்பைத்தொட்டியின் அருகில். மானுடம், பறவை, மிருகம், ஊர்வன என என்னே ஒரு ஒற்றுமை. கூடியிருக்கும் காரணம் கூட உணவு என்கிற ஒன்று தானே? கூடி உண்ணும் இடத்தில் தானே இறை ப்ரசன்னம் இருக்கிறது? பகிர்தலைபற்றி கூறவந்த இறைவனே குப்பைத்த்தொட்டியில் உணவருந்த வந்த அழகை கவனிக்க தவறிவிட்டோம்! காலம் கடந்துவிட்டதா அல்லது கண் கெட்ட பிறகு திரைப்படமா? ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இன்று குப்பைத்தொட்டியில் நாம் போடுவது நம் எதிர்காலத்தை மட்டுமல்ல நம் சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வைக்கூடத்தான்! ஏன்? எப்படி இவ்வளவு குருரமாக மாறிவிட்டிருக்கிறோம்?

குப்பைத்தொட்டியில் இலைகள் மற்றும் மட்கிப்போகின்ற சாதனங்களைப் போடுவது பழங்கதையாகிப்போனது. மட்காப் பொருட்களகிய ப்ளாஸ்டிக் பைகள், ஆஸ்பத்தரிக் கழிவுகள், ஆலைக் கழிவுகள், அன்னிய நாட்டுப்பொருட்களின் கழிவுகள் என மனித குலத்தின் எதிர்க்காலத்தை உரசிப்பார்த்து உயில் எழுதும் ஆயுதங்களின் தளவாடமாகவே மாறிவிட்டது. எங்கே நம்மை இட்டுச்செல்லும் இந்தப் பாதை?

நம் கேள்விகளையெல்லம் ஒன்று திரட்டி குப்பைத்தொட்டியைக் கேட்டால் குப்பைத்தொட்டியின் பதில் என்னவாக இருக்கும்? குப்பைத்தொட்டி கூறுகின்றது – ‘மனித மனமே ஒரு குப்பைத்தொட்டிதான்” எதை வைக்கவேண்டும் எதைக் களையவேண்டும் என இனம் பிரிக்கத் தெரியாத ஒரு குப்பைத்தொட்டி என்று. சிந்தித்துப் பார்த்தால் அது சரியென்றேப் படுகின்றது. மனித மனமே குப்பைத்தொட்டியை பெற்றெடுத்த இயந்திரமாக இருக்கின்றது. குப்பைத்தொட்டியை ஒரு சிறிய பொருளிலிருந்து ஊதி மிகபிரம்மாண்டமாக ஆக்கி சில மூன்றாம் உலக நாடுகளையே குப்பைத்தொட்டியாய் மாற்றிவிட்டது யாருடைய தவறு? விளைவு, இன்று நாம் குப்பைத்தொட்டியை வைத்திருக்கும் நிலையில் நம்மை சில மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். மனித சமுதாயத்தின் சுயமரியாதையை இழக்கச்செய்யும், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சிந்தனைகளை களைவது அத்தனை சுலபமில்லை, ஆனால் இதைக் களைவது மிகவும் அவசியம். இல்லவிட்டால் இந்த பூமி ஒரு குப்பைத்தொட்டியகவே இருந்துவிடும் இறுதிவரைக்கும்.

வாழ்க்கையில் பலவற்றை தேவையற்றவைகள் எனக் களைகிறோம். அது நமக்கு தேவையற்றதே அன்றி, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் ஒரு பெருங்கூட்டதை பொருட்படுத்தத் தவறுகிறோம். களையும் இந்த பொருட்களுக்காக வீணான சுரண்டல்கள், அழிவுகள், அடக்குமுறைகளை மேற்கொள்ளுகிறோம், முடிவில் நாமே அடங்குகிறோம். பகிர்ந்து வாழத் தெரியாமல், பிரித்துவாழ முற்படுகிறோம். முக்கியமற்றவைகள் என நாம் இன்று நினைப்பது நாளை அதி முக்கியமான ஒன்றாக மாறுவதை சிந்தித்துப் பார்த்ததுன்டா? இலவசமாக இறைவன் கொடுத்ததை மாசுபடுத்தி, மாசற்றது எனக்கருதி காசுகொடுத்து வாங்கிக் குவிப்பவைகளால் மேலும் மாசுபடுத்துகிறோம் அல்லவா?

குப்பைத்தொட்டியின் ஆதிகேள்விக்குப் பதில் கிடைத்ததுபோல் இருக்கின்றது! மாட்டுக்கொட்டிலில் பிறந்த பாலனுக்கு நிகர் குப்பைத்தொட்டி குழந்தைதான் சந்தேகமில்லை. இயேசு கருவாக இருந்தபோது அதன் தாய் அதைக்குறித்து வேதனைப்பட்டிருக்ககூடும், அதன் தகப்பன் அதைக்குறித்து வெட்கப்பட்டிருக்கக்கூடும். அது தேவையற்றது என முடிவுகட்டி ஒரு ராஜாவே அதை அழிக்க கங்கணம் கட்டினான். எல்லோரும் தேவையற்றது எனக் கருதி அந்த குழந்தையை குப்பைத்தொட்டிக்கு அனுப்ப எத்தனித்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில், இறைவனின் அநாதி திட்டப்படி அதன் தாயும் தகப்பனும் எடுத்த முயற்சியால் அந்த சிசு குப்பைத்தொட்டியில் இடப்படாமல் மாட்டுத்தொழுவத்தில் அவதரித்தது. அதன் பலனை அக்குழந்தையின் பெற்றோர் அனுபவித்தார்களோ இல்லையோ நாம் அனுபவிக்கிறோம் இல்லையா? ஆகவே மறு சுழற்சிக்கான முயற்சிகளை எடுப்பது நம் கடமை என்பதை தியானமாக கொள்ளுவது சாலச்சிறந்தது என நான் கருதுகிறேன்.

காட்சன் சாமுவேல்
(மார்தாண்டம் பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் வருடாந்திர கூடுகையில் வாசிப்பதற்காக 28.11.2003 அன்று இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது)


%d bloggers like this: