இன்று மதியம் பெற்ற ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு ஒரு மிகப்பெரிய தரிசனத்தை அளிக்க இருக்கிறது என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. குருத்தோலை கொளுக்கட்டை என்ற பதிவை ஜெயமோகன் அண்ணனின் வலைத்தளத்தில் படித்துவிட்டு என்னை அழைத்தாக மீர கண்ணன் கூறினார்கள். பல நாள் பழகிய நண்பர்கள் போலவே பேசினார்கள். பல இடங்கள், பிரபலங்களை கடந்துவந்த ஒரு ஆளுமை. டாக்குமென்ட்ரி தயாரித்துகொண்டிருப்பதாக கூறினார்கள்.
சஞ்சய் காந்தி நேஷனல் பார்க் போகலாம் வருகிறீர்களா அங்கே ஒரு குகை இருக்கிறது என்றார்கள். எங்கே இருக்கிறீர்கள் என்றேன், காந்திவலி என்றார்கள். மீரா ரோட்டிற்கும் காந்திவலிக்கும் இடைப்பட்ட தூரம்தான், போரிவிலியில் வருகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பதாக நான் ஸ்னேக சாகர் மூலமாக தெருவோரக் குழந்தைகளுடன் பணிபுரிந்துகொண்டிருந்த போது இயற்கை சார்ந்த அறிமுகம் இந்தக் குழந்தைகள் பெறுவது அவசியம் என்று உணர்ந்து ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்தேன். பி என் எச் எஸ் குழந்தைகளுக்கு நடத்தும் இயற்கை ஒரு அறிமுகம் என்ற நிகழ்வில் நானும் ஒரு குழந்தையாகவே கலந்துகொண்டேன்.
இலை, மரம், சத்தம், வண்டு, வண்ணத்துப்பூச்சி, மரங்களில் காணப்பட்ட சிறுத்தையின் நகக் குறிகள் என பலவற்றை காண்பித்து பொறுமையாக விளக்கினார்கள். இரண்டு சிடி திரையிட்டார்கள். ஒன்று சிறு பூச்சிகள் மற்றும் பிராணிகளைப் பற்றியது மற்றொன்று மும்பை காணும் மாசுகளைப் பற்றியது. சிருவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டர்கள். குறிப்புகளை எடுத்தனர். கண்டிப்பாக இது ஒரு விதையாக அவர்கள் மனதில் முளைக்கவிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த நிகழ்விற்குப் பிறகு நான் சஞ்சய் காந்தி நேஷனல் பார்க்கிற்கு போகவில்லை. எனது பணி திருச்சபையில் துவங்கிவிட்டது. ஆகையினாலே இந்த அழைப்பை என்னால் உதாசீனம் பண்ண இயலவில்லை. எனக்கு 10 நிமிடத்திற்கு முன்பதாகவே வந்து காத்திருந்தார்கள். நான் எனது MSL 8537 புல்லட்டில் சென்றிருந்தேன். அங்கே காத்திருந்த பேருந்தில் ஏறினோம். சுமார் அரைமணி நேரத்தில் வண்டியில் 11 பேர் அமர வண்டி புறப்பட்டது.
‘கெனரி குகைகளை’ நாங்கள் எட்டியபோது, குகை குறித்த எனது அனுமானங்களை அப்படியே மாற்றிவிட்டது அந்த இடம். மிகவும் நேர்த்தியாக கொத்தப்பட்ட பாறைகள். குடைந்து செய்யப்பட்ட பிரம்மாண்டமான தங்குமிடங்கள். தவத்தின் வலிமையால் உருப்பெற்ற ஒரு இடம் என்பதே அதன் முக்கியத்துவமாக நான் கண்டுகொண்டேன். போர் எதும் இல்லை, மனதை அறிந்துகொள்ள இத்துணை வலிமையான கோட்டையை ஒத்த வாழ்விடங்கள். ஆயிரமாண்டுகளுக்குமேல் இந்த இடம் உருவாக்கிய ஆன்மீக வீச்சு சற்றும் குறையாமல் இருக்கிறது.
அப்பு, மீராவின் மகன் அந்த இடத்தை மிகவும் நன்றாக அறிந்து வைத்திருந்தான். ஒரு குகையின் விதானத்தில் வரையப்பட்ட படத்தை அவன் காண்பித்திருக்காவிட்டால் தவற விட்டிருப்போம். 130 குகைகள் இருக்கின்றன என்று மீரா சொன்னார்கள். ஒரு சில தான் பார்த்திருப்போம், வழியில் ஒரு தியான மண்டப வாசலில் சிகரெட் துண்டு ஒன்றைக் கண்டு தலையிலடித்துக்கொண்டோம். அதை மீரா பொறிக்கிகொள்ள நான் பத்திரப்படுத்திக்கொண்டேன். குடிபோதையுடன் வருபவர்கள், சிகரட் பிடிப்பவர்கள் மற்றும் மாசுபடுத்துபவர்கள் என்று ஒருசிலர் வந்தபடியேதான் இருக்கிறார்கள்.
நல்ல அதிர்வுகள் நிறைந்த ஒரு குகையில் வந்தபோது மீராவை ஓம் சொல்லச் சொன்னேன். ஓரிருமுறை அவர்கள் சொன்னதைத் தொடர்ந்து அப்பு ஓம் சொல்லத்தொடங்கினான். இரண்டுமுறை விட்டு நானும் அதே சுதியில் ஹம் செய்யத்துடங்கினேன். அருமையான ஹார்மனி. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருந்தது. மீரா தியானம் செய்யவேண்டும் என்றார்கள் அமைதியாக இருந்தோம். தியான நிலையில் அவர்கள் அமர்ந்திருக்க நான் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.
சவக்கடல் அருகிலுள்ள கும்ரன் குகைகள் என் கண்களுக்கு வந்து போயின. பொதுமக்களிலிருந்து தூரமாயிருந்தாலும் தாங்கள் இருக்குமிடாத்திலிருந்து சலிக்காமல் எழுதிகுவித்து மானுட வாழ்வின் மேன்மையை பறைசாற்றிய துறவிகள் கண்ணில் வந்து போனார்கள். நிர்வாணமாக தங்கள் அன்றாட கடமைகள் தொழுகைகள் செய்துகொண்டிருந்த பிக்குகள் கண்ணில் தென்பட்டார்கள். உடல் சிலிர்க்க கண் விழித்தேன். இதற்கு இணையான தியான அனுபவம் எனக்கு ஏற்பட்டது இல்லை.
சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பரமஹம்ஸ நித்யானந்தரின் ‘ஜீவன் முக்தி’ என்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்கள். திரும்பும் நேரம் என்பதை அப்பு நினைப்பூட்டினான். ஆத்மாவை வருடிச் செல்லும் காற்று. உடலை கழுவி விடும் தூய ஒளி. பசுமையான மரங்களின் மென்மையான மடி தரும் சுகம். துறவிகள் விட்டுச்சென்ற ஒரு வாழும் ஆய்வுக்கூடம். யாவற்றையும் விட்டு இறங்க மனம் ஒப்பவில்லை. மும்பைவிட்டு பிரியாமல் இருப்பதற்கு இப்போது எனக்குள்ள ஒரே காரணம் கெனரி குகைகளும் அதைச்சார்ந்த கடுகளும்தான்.
திரும்பி வரும் வழியில் கொய்யாப்பழம் வாங்கிக்கொண்டோம். குரங்குகள் சூழ்ந்துகொள்ள மீரா அவர்களுடையதை கொடுத்துவிட்டார்கள். எங்களோடு இன்னும் ஒரு நபரை சேர்த்துக்கொண்டு நடந்தே ஆறு கிலோமீட்டர் இறங்க முடிவு செய்தோம். வழியில் பறவைகளும் அதன் ஒலிகளும் கேட்டபடி வந்தோம். கூட வந்த நபர் புகைப்படம் எடுத்துகொண்டே வந்தார். ஒரு பாம்புச்சட்டை கண்டோம், ஹனுமன் லங்கூர் தாவியபடி கடந்து சென்றன.
நாங்கள் வந்துசென்றோம் என்பதன் அடையாளமாக பிலாஸ்டிக் உறைகளை வழிநெடுக பொறுக்கிக்கொண்டே வந்தோம். மொத்த காட்டிலும் தேடினால் கண்டிப்பாக லாரி லாரியாக அள்ளமுடியும். பனிபொழிய துவங்கியிருந்தது. இருட்டத்துவங்கிவிட்டது.
எட்டுமணிக்கு நான் உபவாச ஜெபத்திற்குச் செல்ல வேண்டும். மீண்டும் சந்திப்போம் கூறி பிரிந்தோம்.
கண்டிப்பாக ஆரனை இங்கு வாரத்திற்கு ஒருமுறையாவது கூட்டிவரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஆம் ஜாஸ்மினும் உடன் இருப்பாள்.
அருட்திரு. காட்சன் சாமுவேல்
தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com
Mobile: 09702567603