பத்து குஷ்டரோகிகள் குணமடைந்த நிகழ்ச்சி ஒரு அழகிய கதைக்குரிய இலக்கணங்களுடனும் விவரிப்புடனும் திருப்பங்களுடனும் லூக்கா நற்செய்தியாளரால் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு நிகழ்வாகும். வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் இந்நிகழ்வில் கூறப்படுவதை நன்றி கூறும் மனநிலை அற்ற பெரும்பான்மையரோடு இணைத்து பொருள் கொள்ளும் ஒன்றாகவே நாம் கண்டிருக்கிறோம். மெதடிஸ்ட் திருச்சபை இன்று இத்திருமறைப் பகுதியை சற்று ஆழ்ந்து அவதானிக்க அழைப்பு விடுக்கிறது. நன்றியைத் தாண்டிய ஒரு இறையியல் உண்மையைக் கண்டுகொள்ளுவது நமக்கு பயனளிக்கும்.
இயேசு தனது பயணத்தை எருசலேமை நோக்கி தொடருகின்றபொழுது அவர் சமாரியா வழி போக நேர்ந்தது. இயேசுவின் பயணம் சமாரியா வழி அமைந்திருந்ததை அவரது சமாரிய பெண்ணுடனான உரையாடலிலும், அவரை ஏற்றுக்கொள்ளாத சமாரியர்கள் போன்ற நிகழ்வுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். இயேசு வாழ்ந்த காலத்தில் கலிலேயாவிலிருந்து யூதர்கள் சமாரியாவை கடந்து தான் எருசலேமுக்குச் செல்லவேண்டும் என்றாலும், அப்பாதையை அவர்கள் தெரிந்தெடுப்பதில்லை. யோர்தான் ஆற்றைக் கடந்து அதற்கு அப்புறம் உள்ள பகுதிவழியாக பயணித்து பின்பு ஆற்றைக் கடந்து எரிகோ வந்து எருசலேம் புகுவது வாடிக்கை.
இவ்விதம் அவர்கள் சுற்றிப் போவதற்கான காரணங்கள் சமாரியர்கள் கலப்புமணம் செய்துகொண்டது, அவர்களின் பழக்கவழக்கங்கள் யூதர்களின் சமய ஒழுக்கங்களோடு ஒத்துப்போகாதது போன்றவை முக்கிய காரணிகள். இன்றைய உலகில் நாமும் சில இடங்களை கடந்து செல்லும்போது அவைகளில் குப்பைகொட்டப்பட்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்து கடந்து போவோம். இதே நிலையில் தான் சமாரியர்களை யூதர்கள் கருதியிருந்தனர். அவ்விடத்தை தங்கள் சமூகத்தின் குப்பைகளை சேர்க்கும் இடமாக கருதியிருந்தனர். தங்கள் சமூகத்தில் எவரொருவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டாரோ அவரை தங்கள் சமூகத்திலிருந்து துரத்திவிடுவது வழக்கம். துரத்திவிடப்பட்ட தொழுநோயளிகள் சென்று சேரும் இடம் சமாரியாவாக இருந்தது. சமூகத்தின் அத்தனை அழுக்குகளும், சமயம் எனும் வடிகட்டலில் வண்டலாக சேர்ந்து உருவான ஒரு இடமாகவே சமாரியாவை யூத மக்கள் உருவகித்தனர்.
புதிய ஏற்பாட்டில் காணப்படும் இவ்விதமான விரோதப்போக்கு சரியானதல்ல என்பதை இயேசு தனது ஊழியத்தின் வாயிலாக உணர்த்துகிறார். அப்பகுதியில் பயணம் செய்வதாகட்டும், சீடர்கள் சமாரியர்களை அழிக்கவேன்டும் என்று கூறும்போது தமது சீடர்களையே அவர் கடிந்து கொள்ளுவதாகட்டும், நல்ல சமாரியன் உவமையின் வாயிலாக யூதர்களுக்கு அவர்களது பிறன் யார் என ஊணர்த்துவதிலாகட்டும், சமாரிய பெண்ணிற்கு தம்மை மேசியாவாக வெளிப்படுத்தி, யூத சமாரிய சமய எதிர்நோக்கை ஒருங்கே பூர்த்தி செய்ய தாம் வந்ததாக எடுத்துக்கூறும்போதும், தன்னிகரற்ற தனது அன்பு அனைவரை அணைக்கும் கடவுளுக்கு நிகரானது என்பதை அவர் பதிவுசெய்கிறார்.
இப்பின்னணியத்தில் இயேசுவின் பயணத்தை நாம் பொருத்திப் பார்க்கும்போது அவரிடம் வந்தோர் பற்றிய உண்மை புலனாகிறது. இயேசு புறக்கணிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதியில் தயக்கமின்றி பயணம் செய்திருக்கிறார் என்பதும் அவர்கள் நல்வாழ்வில் மிகவும் கரிசனை கொன்டவராக இருந்திருக்கிறார் என்பதும் புலனாகிறது. குமரி மாவட்டத்தில் இன்றும் அடிமைத்தன கால வாழ்வின் எச்சங்களாக ஏமான், பத்தடி தள்ளி நில்லு, தீட்டு பொன்ற சில வார்த்தைகள் புழங்குவதுண்டு. இவ்வார்த்தைகள் இயேசுவின் காலத்தில் தொழுநோயாளிகள் 50 அடி தூரத்தில் நிற்கவேண்டும், ஊருக்குள் வரலாகாது, உடைகள் மரண சடங்கில் ஒருவர் எவ்விதமாக சணலை உடுத்துவார்களோ அது போல தனது மரணத்துக்கான உடையை அணிந்தபடி செல்லவேண்டும். லெவியராகமம் 13: 45, 46ல் கொடுக்கப்பட்டக் கட்டளைகளையும் தாண்டி இதுபோன்ற பல கட்டளைகளை தங்கள் வசதிக்கேற்ப அமைத்துக்கொண்டனர். ஆனால் இயேசுவோ கட்டளையின் பின்னணியத்தை உணர்ந்தவராக செயல்படுகிறர் என்பதே நற்செய்தியாக பதிவு செய்யப்படிருப்பதைக் காண்கிறோம்.
மாற்கு 1 ஆம் அதிகாரத்தில் ஒரு குஷ்டரோகியை அவர் குணமாக்கும்பொழுது அவன் “…அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார் (40,41). ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்கு சாட்சியாக செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி உடனே அவனை அனுப்பிவிட்டார் (44). இதற்கு இணையாக தொழுநோயை இயேசு குணமாக்கும் ஒரே பகுதியாக நாம் வாசிக்க கேட்ட பகுதி வருகிறதைக் காண்கிறோம்.
….அவர்கள் தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். இவ்விரு நிகழ்வுகளிலும் இயேசுவின் தனிமை மற்றும் அவரை சூழ இருப்போரை இனக்காட்டுவதாக அமைகிறதை கண்டுகொள்ளுகிறோம். இயேசுவின் தொடுகைக்கு அருகில் வரும்படியான ஒரு தனிமையின் சூழல் மாற்குவில் அமைந்தபடியால் தான் அவர் “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு” (மாற்கு 1: 43) என்கிறார். இங்கோ அவர்கள் சமூக கட்டுப்பாட்டால் அவருக்கு அருகில் வர இயலாதபடி இருக்கும்போது தாமும் அவர்களைப்போல் சத்தமிட்டு (அப்படித்தான் இருக்கவேண்டும்) நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார் (லூக்கா 17: 14).
இயேசுவின் சொற்களுக்கு கீழ்ப்படிந்து அனைவரும் செல்லும் வழியில் அவர்கள் தொழுநோய் நீங்கி அவர்கள் சுத்தமாகிறார்கள். இம்மகிழ்ச்சியின் செய்தி விரைவாக எடுத்துச் சென்று ஆசாரியர்களுக்குக் காண்பிக்கப்படவேண்டும். ஆசாரியர் அவர்கள் செய்யவேண்டிய சடங்குகளை குறிப்பிடுவார்கள். ஏழையிலும் ஏழை கூட இவ்விதமான சடங்கைச் செய்ய மோசே வாய்ப்பளித்திருப்பதால் பொருள் ஒரு முக்கிய தேவை இல்லை. உடனடியாக சென்று இவ்விதமான ஒரு பலியைச் செலுத்திவிட்டால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரோடும் சமூகத்தோடும் ஐக்கியமாகிவிடலாம் எனும் உந்துதலோடு அனைவரும் ஆசாரியனைக் காண விரைகிறார்கள். குணம் அடையும் வரை தொழுநோயாளிகள் எனும் ஒரே அடையாளத்துடனிருந்த இவர்கள், குணம் அடைந்த பின்பு ஒன்பது யூதர் ஒரு சமாரியர் எனும் அடையாளத்தை பெறுகின்றனர். இவ்வடையாளம் அவர்களை பிரிக்கிறது.
இச்சமய வேறுபாட்டால் ஒன்பது யூதரும் தங்கள் சமய கடமை செய்யும்படி விரைகிறார்கள். இம்மட்டும் தங்களோடிருந்த ஒருவனின் எதிற்காலம் குறித்த எந்த கவலையுமற்று தங்கள் வாழ்வில் பெற்ற நன்மைகளே பெரிது எனும் குறுகிய மனநிலையோடு அவர்கள் செல்லுகிறார்கள். சமாரியன் நின்று யோசிக்கிறான். தன்னை அவர்களோடு இணைக்கும் சமயமோ, நோயோ தன்னிடம் இல்லாததால் தான் தனித்து விடப்படுவதை எண்ணி ஏங்குகிறான். எனினும் கடவுள் தன் வாழ்வில் செய்த நன்மைகளை புகழ அவன் தவறவில்லை. அந்த புகழ்ச்சியை அவன் உள்ளத்திலிருந்து எழும்படியாக அமைக்கிறான். சடங்குகளை விஞ்சும் ஒரு உன்னத பலி, நன்றி பலி அவன் நாவிலிருந்து புறப்படுகிறது.
இயேசு அன்றைய சமய சூழலை அறியாதவர் அல்ல. ஆனால் அதை அவர் புரிந்துகொண்டிருந்த விதம் திருமறையை முழுமையாக வாசித்து புரிந்துகொண்டிருப்பதால் எழுந்த புரிதல். பலி எனும் சடங்கு சமயம் சார்ந்து தேவை என்பது அதன் தேவையையும் அவர் பண்பாட்டு கூறின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளுகிறார். ஆனால் தாவீது, தனது வாழ்வு பாவத்தில் தோய்ந்து அமிழ்ந்து போன பின்பு பாடுகின்ற உணர்ச்சிமயமான பாடலில் “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங் 51: 16,17) உங்கள் தகனபலிகளையும், போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன் (ஆமோஸ் 5: 22) நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டுவரக்கடவது (ஆமோஸ் 5: 24) எனும் ஆமோசின் கூற்றை நாம் பரிசீலிக்க அழைக்கிறார்.
யாருமற்றோருக்கு கடவுளே துணை எனும் உறுதியோடு கடவுளை மகிமைப்படுத்தியபடி நோய் நீங்கிய சமாரியர் இயேசுவண்டை வருகிறார். அவர் ஒருவேளை தன் சமய சுத்தீகரிப்பின்படி ஏதும் செய்யச் சென்றிருக்கலாம் அல்லது தனது குடும்பத்தினரைக் காணும் ஆவலுடன் ஒடோடிப் போயிருக்கலாம். எனினும் அவர் அவைகள் எல்லாவற்றையும் விட கடவுளுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கும் துதியே சிறந்தது என முடிவுக்கு வந்து. எங்கே தனக்கு கருணை கிடைத்ததோ அங்கேயே தனது நன்றி வெளிப்பாட்டை காண்பிக்கிறார். இதன் மூலம் இயேசுவை அவர் ஆசாரியராக ஏற்றுக்கொள்ளுகிறார். அதைத் தொடர்ந்து அவரே கடவுள் எனும் முடிவோடு அவர் பாதத்தருகில் முகம்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான் (17)
இதைத் தொடர்ந்து இயேசு கேட்கும் கேள்வி அர்த்தம் பொதிந்ததாக வேளிப்படுகிறது. அவர் ஊழியத்தின் தன்மையை அவரைச் சார்ந்தவர்கள் புரிந்துகொள்ளாமலிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அவரால் பயன் பெற்றோர் பத்துப் பேர் என்றாலும் அவரது சமூகத்தின் அடையாளமாக காணப்பட்ட ஒன்பதுபேரும் ஒட்டுமொத்தமாக கடவுளை புறக்கணித்ததை அவர் வேதனையோடு பகிர்ந்து கொள்ளுகிறார். “தேவனை மகிமைப்படுத்துவதற்கு இந்த அன்னியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே” (லூக்கா 17: 18) எனும் இடத்தில் இயேசுவே கடவுளின் சார்பாக நிற்கிறதை யூதர்கள் மறந்துபோனதை சுட்டிக்காட்டுகிறார்.
குணமடையவேண்டும் என்கிற ஆவல் – துன்புறுவோரோடு நமக்குள்ள உறவை பிரிக்கும் ஒன்றாக அமைகிறதா? அருகில் இருந்து உதவி செய்யும் கடவுளை புரிந்து கொள்ள தடையாயிருக்கிறதா? இக்கேள்விகளை உள்ளார்ந்து நாம் கேட்போமென்றால் நற்செய்தி நாயகன் இயேசுவின் தொடுகையால் நாம் பூரண குணமடைந்தோம் என்பதே பொருள்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
+91 8238 503 714
palmyra_project@yahoo.com
malargodson@gmail.com
13.10.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.