Posts Tagged ‘பனந்தும்பு; தும்பு; தமிழ்நாடு;’

பனைமரச் சாலை (15)

ஜூன் 26, 2016

மண்ணின் மரம்

 

காலை ஒன்பதரை மணிக்குமேல் ஆகிவிட்டது. சிறப்பான ஒரு உரையாடல் அருமை ஃபாதர். பாபுவோடு நடைபெற்றதால் அந்த காலை சிறப்பாக மலர்ந்தது. அன்று ஹைதராபாத் செல்லவேண்டும் என்ற முடிவுடன் வண்டியைத் திருப்பினேன்.

செல்லும் வழியில் தேசிய நெடுச்சலைத் துறையினர்  பணி செய்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் தமது கரங்களில் பிரஷ்ஷை வைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தனர். ஏதோ ஒரு பொறி தட்ட, நான் அவர்கள் உபயோகிக்கும் பிரஷ்ஷைக் காண வண்டியை நிறுத்தினேன். சற்று தூரம் அவர்களை நோக்கி நடந்து சென்று அவர்கள் செய்யும் வேலையை கூர்ந்து கவனித்தேன்.

சாலைப் பணியாளர்கள் பயன்படுத்தும் பனந்தும்பு பிரஷ்

சாலைப் பணியாளர்கள் பயன்படுத்தும் பனந்தும்பு பிரஷ்

சாலைகளில் படிந்திருக்கும் தூசுகளை தங்கள் கரங்களில் உள்ள பிரஷ்ஷால் துடைத்துக்கொண்டிருந்தார்கள். மிகவும் நேர்தியாய் சுத்தம் செய்யத்தக்கதாக வடிவமைக்கப்பட்ட பிரஷ் அது. அதை கரத்தில் வாங்கி பார்த்தேன், அந்த பிரஷ்ஷில் எனது விரல்களைக் கொண்டு தடவி அதன் உறுதியை சோதித்தேன். ஆம் நான் நினைத்தது சரி தான், பனந் தும்பைக் கொண்டு தான் இந்த பிரஷ்ஷை செய்திருக்கிறார்கள்.

பனந்தும்பு என்றால் என்ன? பனை ஓலைகள் மரத்தை கவ்வியிருக்கும் அடிப் பகுதி பார்ப்பதற்கு ஆங்கில எழுத்து “V” போல காணப்படும்; அவைகளை பத்தை என்பார்கள். பொதுவாக வடலி எனும் முதிரா பனை மரங்களிலிருந்து, இவ்விதமான பத்தைகளை சேகரித்து அவைகளை தண்ணீரில் ஊற வைத்து பிற்பாடு நன்றாக அடித்தால் அவைகளில் உள்ள தும்பு தனியாக பிரிந்துவிடும். இந்த தும்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு சிறந்த கச்சாப்பொருளாகும்.

பனைஓலையின் அடிப்பாகம்: பத்தை

பனைஓலையின் அடிப்பாகம்: பத்தை (உதவி: இணையம்)

குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் பனந்தும்புகளைச் செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். பொதுவாக ஆண்களே இப்பணியில் ஈடுபட்டிருப்பார்கள். தும்பை அடித்து உலர்த்திய பின்பு, அதை இரும்பு ஆணிகள் பொருத்திய ஒரு சீப்பில் வைத்து சீவுவார்கள். இறுதியில், ஒத்தை ஒத்தையாக, சேமியா போன்று நீளமாக ஆனால் கரிய நிறத்தில், ஒரு அடிநீள  தும்புகள் கிடைக்கும். அவைகளை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனிலிருந்து கப்பல் வந்து ஏற்றிச்செல்லும். குளச்சலில் இன்னமும் தும்பை வெளிநாட்டிற்கு அனுப்பிய மெஸ்ஸர்ஸ் கம்பெனி சிதிலமடைந்து கிடப்பதை நாம் பார்க்கலாம்.

சீராக்கப்பட்ட தும்பு (உதவி: இணையம்)

சீராக்கப்பட்ட தும்பு (உதவி: இணையம்)

பனந் தும்பு தற்காலத்திற்கு ஏற்றதா? எனும் கேள்வி அனேகருக்கு உள்ளதை போன்று எனக்கும் ஏற்பட்டது. ஆம் என்பதே அதன் விடையாக முடியும். சாலைகளை பராமரிப்பது ஒரு தனி கலை. இன்று சாலைகளை சுத்தம் செய்ய மெஷின்கள் வந்துவிட்டாலும், அடிப்படையாக அவர்கள் ஒரு பிரஷ்ஷை அந்த வண்டியோடு இணைத்திருக்கிறார்கள். இவைகளில் கண்டறிந்த உண்மை என்னவென்றால், நெகிழியில் செய்யப்பட்ட பிரஷ்கள் நீடித்த உழைப்பை அளிக்கவில்லை, ஆகவே இரும்பு பிரஷ்ஷை முயற்சித்திருக்கிறார்கள். அவைகள் சாலைகளை பாதிக்கின்றன என்பதை கண்டுகொண்டார்கள். இவைகளுக்கு மாற்றாக பனந்தும்பை பயன்படுத்தினால் அவைகள் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கிறதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கழிவறை பிரஷ் (உதவி: இணையம்)

கழிவறை பிரஷ் (உதவி: இணையம்)

தமிழ்நாடு பனை வாரியம் கடந்த 2002- 2003 ஆண்டுகளில் பனந்தும்பு மட்டும் ஏற்றுமதி செய்து 200 இலட்சம் ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டியிருக்கிறார்கள். எனினும் இவைகளைச் செய்யும் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்கின்றனவா என்றால் அது சந்தேகமே.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் மாலத்தீவு சென்றிருந்த போது, அங்கே உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்றிருந்தேன். உலகின் முக்கிய பணக்காரர்கள் மட்டுமே தங்கும் அந்த ரிசார்ட்டில் எனது நண்பன் பணிபுரிந்த காரணத்தால் என்னால் ஒரு பார்வையாளனாக அங்கு செல்ல முடிந்தது. அங்கு இருந்த நடைமுறைகள் சில ஆச்சரியமாக இருந்தன. முழுமையான இயற்கை பொருட்களால் அந்த தங்குமிடங்களை அவர்கள் நிர்மாணித்திருந்தனர்.

ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்களால் செய்யப்பட்ட வீடுகள் கடலுக்குள் இருந்தன. அவைகளுக்கு செல்லும் பாதையும் மரத்தால் செய்யப்பட்டது. சுமார் 2 கி மீ சுற்றளவுள்ள அந்த தீவில் எங்கு சென்றாலும் வெறுங்காலுடனே செல்லவேண்டும். இல்லையென்று சொன்னால் இரும்பு கம்பிக்குப் பதில் மூங்கிலால் செய்யப்பட்ட “பாம்பூ” சைக்கிள். முடியாதவர்களுக்கு பாட்டரி கார்.

இவ்விதமாக இவர்கள் நடக்கும்போது கால்களில் படிந்துள்ள மெல்லிய மணல் துகள்களை நீக்க ஒரு சிறப்பான கால் மிதியடியைக் தங்குமிடம் ஒவ்வொன்றின் முற்றத்திலும் வைத்திருக்கக் கண்டேன். அந்த மிதியடி பார்வைக்கு ஒரு முள்ளம்பன்றியை போல இருந்தது. கால்களில் உள்ள துகள்கள் மிக அழகாக சுத்தம் செய்யப்படுவதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். கண்ணைக்கவரும் வகையில் புதிய வடிவமைப்பில் செய்யப்பட்ட அந்த மிதியடி பனந்தும்பால் செய்யப்பட்டது என நான் கண்டுகொண்டேன். கிழக்காசிய நாடுகளிலிருந்து இவைகள் பெறப்படுகின்றன என்பதையும் நான் பிற்பாடு அறிந்துகொண்டேன்.

 முள்ளம்பன்றி தோற்றமுடைய கால் மிதியடி. இடம் : மாலத்தீவு

லங்கன்ஃபுஷி எனும் ரிசார்டில் காணப்படும் முள்ளம்பன்றி தோற்றமுடைய கால் மிதியடி. இடம் : மாலத்தீவு

பனந்தும்புகளை செய்பவர்கள் இன்று குமரி மாவட்டத்தில் இல்லை என்றே நினைக்கின்றேன். குளச்சல் பகுதியில் அவர்கள் பணியாற்றிய இடங்கள் இன்று வெறுமையாக காட்சியளிக்கின்றன. ஆகினும், சாலை பராமரிப்பு என்பது இன்று ஒரு முக்கிய தொழில். அதை செய்ய தேவையான பிரஷ்ஷிற்கு தேவையான தும்பு ஒரு முக்கிய கச்சாப் பொருள். சாலை இல்லா தேசம் இல்லை.  சாலைகள் என்று மாத்திரம் இல்லை பல்வெறு வகைகளிலும் இன்று பிரஷ்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக கழிப்பறைகளுக்கும் பிரஷ்கள் தேவைப்படுகின்றன. உறுதியான தும்புகள் கிடைக்குமென்றால் யார் தான் பயன்படுத்த மாட்டார்கள்?

நமது நாட்டில் நிற்கும் வடலிப்பனைகள் இன்று பெருவாரியாக ஜெ சி பி எந்திரத்தால் பிழுது  எடுக்கப்படுகின்றன. ஒரு முக்கிய கச்சாப்பொருள் கவனிப்பாரின்றி வீணாய் போகின்றது. எப்படி இவைகளை நாம் வரும் நாட்களில் பயன்படுத்த முடியும்? எப்படி இவற்றை பயன்படுத்துவோரை நாம் ஒன்றிணைக்க முடியும்?

நமது மாண்ணின் மரம் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்வளிக்கப்போகிறதா? அல்லது மாண்ணோடு மண்ணாகப் போகிறதா? விடை தெரியாத கேள்விகளுடன் பயணத்தை தொடர்ந்தேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

Advertisements

%d bloggers like this: