Posts Tagged ‘பனையோலை’

பின்னல்கள் – 8

மே 29, 2020


விசிறி


பனையோலை பட்டையினைக் குறித்துப் பார்க்கையில், பல பண்பாடுகளில் எப்படி அவை ஒரே வடிவத்துடன் பல யுகங்களாய் மாற்றமின்றி வந்தடைந்திருக்கிறது என ஆச்சரியத்துடன் பார்த்தோம். இதற்கு நேர் எதிரான ஒரு முறைமை இருந்திருக்கிறதையும் ஆச்சரியத்துடன் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான காரணம், அதன் பின்னணியம், விரிவு போன்றவற்றை தேடி கண்டடைவது பேரானந்தம் தான். அவ்வகையில் நாம் அனைவரும் அறிந்த கை விசிறி குறித்த ஒரு பார்வையினை முன்வைக்கிறேன்.


திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து கூறும்போது “தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். (மத்தேயு 3: 12) தூற்றுக்கூடை என்பது fan / winnowing fork என்பதாக ஆங்கிலத்தில் பதிவாகியிருக்கிறது. Fan என்கிற வார்த்தை vannus என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது. அது ரோமர்கள் தானியங்கள் பிரிக்க பயன்படுத்தும் புனிதமான கருவி ஒன்றினைச் சுட்டி நிற்கின்றது.

சாதாரண விசிறியின் ஓரங்களில் காணப்படும் பூவேலைகள்


விசிறி குறித்து ஒரு நகைச்சுவைக் கதையே உண்டு. விசிறி விற்கும் வியாபாரி ஒருவன் அரசரிடம் தான் விற்கும் விசிறி எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாது என்று கூறி தனது விசிறியை விற்றுவிடுவான். அரசர் அதனை பயன்படுத்துகையில் அது பழுதடைந்துவிடும். கோட்டையைக்கூட தாண்டாத அந்த வியாபாரியை அரசர் தனது வீரர்களைக் கொண்டு அழைத்து வந்து, என்னை எப்படி நீ ஏமாற்றலாம் எனக் கேட்டார். “அய்யா என் மீதோ என் விசிறியின் மீதோ பிழை இருக்காது தாங்கள் அதனை பயன் படுத்திய விதத்தில்தான் பிழை” என வியாபாரி அதற்கு பதிலளித்தான். “அப்படியானால் அந்த விசிறியை எப்படி கையாளவேண்டும் என்பதை நீ எனக்கு காண்பி” என அந்த அரசன் கேட்க, வியாபாரி விசிறியை ஒருகையால் முகத்தின் முன்னால் பிடித்துக்கொண்டு தலையை இடதும் வலதுமாக அசைக்கவேண்டும் என்று வியாபாரி செய்து காண்பிப்பார்.

விசிறின் விசிறியாக


விசிறி என்றவுடன் எனக்கு எனது பாட்டி வீடுதான் ஞாபகம் வரும். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது வேனிற்கால விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பாட்டி வீட்டின் தரை, சாணி மெழுகப்பட்டிருக்கும், பனை ஓலைப் பாயில் தான் படுக்கவேண்டும். மேலும் மின்விசிறிகள் கிடையாது. இவை அனைத்தும் அன்றைய சூழலில் நான் அறிமுகம் செய்திராத வாழ்க்கைமுறை. பகல் வேளைகளில் நண்பர்களுடன் நன்றாக விளையாடலாம். ஆனால் இரவு நேரம் பாட்டி வீட்டில் தங்குவது எனக்கு மிகப்பெரிய அளவில் மன உளைச்சலைக் கொடுத்தது. வேறு வழி கிடையாது. புழுக்கம் நிறைந்த அந்த இரவுபொழுதுகளில் அங்கே தான் தங்கவேண்டும். அங்கே எனக்கிருந்த ஒரே ஆறுதல் பனையோலை விசிறி தான். ஆங்கில எழுத்து P வடிவில் காணப்படும். அது மிக பெரிய தொழில் நுட்பம் கொண்ட ஒன்றும் அல்ல இருந்தாலும் பாட்டி ஒரு முறை விசிறிவிட்டால் போதும் உடலே குளிர்ந்து சிலிர்த்துவிடும். பனைஓலைக்குள் அந்த காற்று எப்படி அமைகிறது என்று தான் எனக்கு புரியவேயில்லை.

விசிறி மொழி


பனை விசிறி: நாக்கில் சுவை இன்மையைப் போக்கும், வாத, பித்த, கப நோய்களைப் போக்கும் என்று ஒரு குறிப்பினைப் படித்தேன். ‘அட்சய திருதியை’ யில் பனை ஓலை விசிறி உள்ளிட்ட சில பொருட்களை வழங்குவது சிறப்பானது எனும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பனங்காட்டு ஓலைகள் வீசும் காற்று மருத்துவ குணமுடையவைகள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சமீபத்தில் கூட ஒரு நண்பர் பனங்காட்டில் சென்று படுத்து உறங்கி புத்துணர்ச்சியோடு வந்தார். நான் சந்தித்த ஒரு சித்த மருத்துவரும் பனை ஓலை விசிறியின் முக்கியத்துவம் குறித்து கூறியிருக்கிறார்.
விசிறிகள் உலகில் வெகு அதிகமாக பரவி இருந்த ஒரு பயன்பாட்டுப் பொருள். பல்வேறு நாடுகளில் விசிறி முக்கியமான ஒரு அலங்காரப்பொருளாக இருந்திருக்கிறதைப் பார்க்கலாம். மேலும் வாழ்வின் பல்வேறு தருணங்களிலிலும் பனையோலை விசிறி இணைந்து வந்திருக்கிறதை நாம் அறியலாம். ஒவ்வொன்றும் விரிவான பின்புலம் கொண்டவை. இக்கட்டுரைத் தொடரில் நாம் ஆராய்ந்து முடியாதவை.

கலை நேர்த்தியுடன் செய்யப்பட்ட விசிறி


உலகெங்கும் பார்க்கையில் விசிறி சமயச் சடங்குகளோடு, அரச குலத்தினரோடு உயர்குடியினரோடு தொடர்புகொண்டிருப்பதைக் காணமுடியும். பல்வேறு சூழல்களில் ஆன்மீக குறியீடாக விசிறி பயன்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் தந்தத்திலும், தங்கத்திலும், தாமிரத்திலும் செய்யப்பட்டன. இயற்கையில் கிடைப்பவைகளைத் தாண்டி இவைகள் பயன்படுத்தப்பட்டது. விசிறிகள் இன்றைய கால கட்டத்தில், காகிதம், நெகிழி மற்றும் துணியாலான விசிறிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட விசிறி – ராஜஸ்தான்


ஜப்பானியர்கள் விசிறிக்கே விசிறியானவர்கள். ஜப்பானைப் பொறுத்த அளவில் அவர்களது ஆன்மீகத்துடன் விசிறிகள் பெறும் முக்கியத்துவம் வேறெங்கும் இல்லாதது அவர்களது போர் விசிறிகள், சாமுராய் விசிறி சண்டைகள், சுமோ போர் விசிறி, திருவிழாக்கள், கலாச்சார சமூக அடையாளம் என்று பலதளங்களை அது எட்டியிருக்கின்றது. உலகம் முழுக்க தங்கள் பொருட்களை எடுத்துச் சென்ற சீனர்களுக்கே ஜப்பானிய துறவி வழங்கிய கை விசிறி முக்கியமானதாக கருதப்பட்டிருக்கிறது. கி பி 988 வாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டிலிருந்து சீனா சென்ற முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜப்பானிய பாணி விசிறியினையே எடுத்துச் சென்றிருக்கின்றனர். சீனர்கள் விசிறி நடனம் என்று ஒரு வகைமையையே முன்னெடுத்திருக்கிறார்கள்.

ஜப்பானிய பெண்கள் விசிறி பயன்படுத்துகிறார்கள்


ஓலை விசிறிகள் குறிப்பிட்ட இடங்களில் பெருமளவில் புழங்குவதை கவனித்திருக்கிறேன். ஒன்று திருமண வீடுகளில் வருகை புரிந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது. இரண்டு, சர்க்கஸ் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் விற்பனைச் செய்யப்படும். மூன்று, சமய நிகழ்வுகளான சொற்பொழிவுகள், பாத யாத்திரைகள் போன்றவற்றை மையப்படுத்தி நிகழும் விற்பனை. குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் சிவாலய ஓட்டம் மகா சிவராத்திரி அன்று நடைபெறும். விசிறிக்கொண்டே பக்தர்கள் ஓடுவார்கள் அல்லது சைக்கிளில் இதனை வைத்து ஓட்டிச் செல்லுவார்கள். தேவைப்படும் இடங்களில் எடுத்து விசிறிக்கொள்ளுவார்கள். சிவாலய ஓட்டத்தை மட்டுமே தனது வருமானமாக எண்ணி விசிறி செய்யும் ஒரு நபரை நான் குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு என்ற பகுதியில் பார்த்திருக்கிறேன்.

பிரம்மாண்ட அலங்காரம் கொண்ட பழங்கால விசிறி


எனது ஒரிய பயணத்தில் துறவிகள் பனை ஓலைகளை பயன்படுத்துவதைக் கண்டு பிரமித்துப்போனேன். மொகிமா தர்மா என்று சொல்லக்கூடிய ஒரு அமைப்பு. அவர்கள் வைத்திருக்கும் விசிறி தனித்துவமானது இரட்டைச் சுழி கொண்ட ஒர் அழகிய விசிறி அது. துறவினைச் சுட்டும் அந்த விசிறியினை அந்த துறவிகளே தயாரித்துக் கொள்வார்கள். பனை ஓலை பொருட்களை தங்கள் ஆன்மீக வாழ்வின் அடையாளமாக வைத்திருப்பவர்களைக் காணும்போது கண்டிப்பாக பனை ஓர் ஆன்மீக மரம் தான் என்கிற உண்மை வெளிப்படுகிறது. எனது பயணம் முழுக்கவே பனை ஓலைப்பொருட்கள் ஆன்மீக வாழ்வு சார்ந்து பயன்பட்டுக்கொண்டிருப்பதை பதிவுசெய்தபடியே வருகிறேன்.துறவு வாழ்வில் விசிறி இணைந்திருப்பது பவுத்தத்தில் கூடத்தான் எனும்போது ஆசிய வாழ்வில் பனையோலை விசிறியாக பரிமளிப்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டிய சூழல் இருப்பதை நாம் மறுக்க இயலாது. பனையுடன்கூடிய ஆன்மீகத்தின் அந்த ஒரு துளியினையாவது நாம் காத்துகொள்ளவேண்டும்.

மொகிமா தர்மா துறவியின் கரத்திலிருக்கும் விசிறி


குமரி மாவட்டத்தில் உள்ள காணிமடம் என்ற பகுதிக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன். அங்கே யோகிராம் சுரத் குமார் என்பவரது ஆசிரமம் இருந்தது. ஆசிரமத்தின் வெளியே அவரது படம் வரையப்பட்டு ஒரு கரத்தில் விசிறியுடன் அவர் காணப்பட்டார். விசிறி அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும் என்பதுபோல ஒரு தோற்றம் இருந்தது அல்லது அறியாமையை நீக்கி அறிதல் எனும் மென் காற்றினை வழங்கும் ஒரு அழைப்பு. ஆனால் அந்த விசிறி சொல்லும் ஒரு கருத்து அவருக்குள் உள்ளுறைந்திருந்தது. அது தான் எளிமை. பனை ஓலை விசிறி என்பது ஒரு எளிமையின் அடையாளம் தான். தன் வாழ்விடத்தை துறந்தாலும் மென் காற்றினை வழங்க தவறாத மேன்மையின் வடிவம்.

யோகிராம் சுரத்குமார் கரத்தில் இருக்கும் விசிறி


இந்தியாவில் முதன் முதலாக வரலாற்றில் சுட்டிகாட்டப்படும் விசிறியானது அஜந்தா குகையோவியங்களிலிருந்து எடுக்கப்பட்டது என கை விசிறிகள் குறித்து ஆய்வு செய்த George Woolliscroft Rhead என்பவர் தனது History of the Fan என்ற நூலில் வெளிப்படுத்துகிறார்கள்.

எகிப்திய இறகு விசிறி

விசிறிகளைப் பொறுத்தவரையில் முன்று முக்கிய உண்மைகளை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 1. ஒரு நாட்டின் பருவநிலை 2. அங்குள்ள சூழியல் சார்ந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் 3. அப்பகுதி வாழ் மக்களின் கைத்திறன் மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் யாவற்றையும் ஒருங்கே பார்க்கவேண்டும் என்கிறார்.

ஆக்ராவில் செய்யப்படும் விசிறி


பழங்குடியினர் மற்றும் தொன்மையான வாழ்வைத் தொடரும் சமூகங்களில் நான்கு விதமான விசிறிகள் பயன்பாட்டில் இருப்பதை அவர் சுட்டி காண்பிக்கிறார். பனை ஓலை விசிறி, பனை மரங்கள் அதிகமாக இருக்கின்ற நாடுகளில் கிடைக்கின்றது என குறிப்பிடுகின்றார். இரண்டாவதாக, புற்கள் மற்றும் பின்னி செய்யப்படும் மூங்கில் அல்லது பிரம்பு போன்ற பொருட்களைக் குறிப்பிடுகிறார். மூன்றாவதாக தோல் பொருட்களில் செய்யப்படும் விசிறிகள் பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன என்றும் இறுதியாக இறகுகளில் செய்யப்பட்ட விசிறிகளும் கூட தொல் பழங்கால நாகரீகம் கொண்ட மக்களின் வாழ்வில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

விசிறி செய்யும் கலைஞர்கள்


தமிழகத்தைப் பொறுத்த அளவில் பல்வேறு விசிறிகளை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலைஞனின் கைவண்ணம் என்று தான் சொல்ல வேண்டும். ஓலைகளை பயன்பாட்டு பொருளாக பார்த்த நமது முன்னோர் பல்வேறு வகைகளில் அதனை செய்ய முயற்சித்தனர். ஓலைகளின் தன்மை மாறாமல் செய்யப்படும் விசிறிகள். பாதியாக கிழித்து செய்யப்படும் விசிறிகள், பின்னல்கள் கொண்டு செய்யப்படும் விசிறிகள் மற்றும் அழகிய மடக்கு விசிறிகள் என வகைபாட்டிற்குள் வரும். பல்வேறு ஓலைகள், தேவைகளின் விளைவாகவும் சூழல்களை கருத்தில் கொண்டும் வகை வகையாக செய்யப்பட்டு வந்தன.

மடக்கு விசிறி


இந்த வகைகளைத் தேடுவதும் அடையாளப்படுத்துவதும் மிக முக்கியமான தேவை. சிறுவனாக இருக்கும்போது கன்னியாகுமரிக்கு அப்பா அழைத்துச் செல்லுவார்கள். அப்போது கன்னியாகுமரியில் விற்கப்படும் பொருட்களில் மிக முக்கியமானதாக நான் கருதியது பனை ஓலை விசிறிதான். மடக்கும் விதத்தில் செய்யப்படும் அந்த விசிறி இன்று கன்னியாகுமரியிலேயே இல்லாமலாகிவிட்டது. ஒட்டுமொத்த சீன பொருட்களின் விற்பனைச் சாளரமாகத்தான் கன்னியாகுமரி இன்று காணப்படுகின்றது. என்னைப்பொறுத்த அளவில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் நினைவு பரிசாக எடுத்துச் செல்ல வழி வகை செய்வதே மாவட்டத்தின் சூழியலுக்கும் பொருளியலுக்கும் கலை வளர்ச்சிக்கும் செய்யும் பொருத்தமுள்ள பணியாகும்.

வித்தியாச வடிவில் விசிறி


எனது வாழ்வில் அனேகர் விசிறி செய்வதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். குமரி, நெல்லை மற்றும் ராமநாதபுரங்களில் செய்யப்படும் விசிறி ஒவ்வொருவிதமானவைகள். சமீபத்தில் முக நூலில் இருக்கும் நண்பர்களிடம் விசிறியுடன் ஒரு புகைப்படம் எடுத்துப் போடுங்கள் என கேட்டிருந்தேன். அதற்கு எவருமே பதிலளிக்கவில்லை. விசிறி என்பது நமது வாழ்வை விட்டு விலகி சென்றுவிட்டதையே அது காட்டுகின்றது. பெரும்பாலும் வயோதிபர்களுடனும், கிராமப்புறத்தில் உள்ளவர்களுடனும் மட்டுமே தொடர்புடைய ஒன்றாக விசிறி மாறிவிட்டது. இன்றும் நகர்ப்புரங்களில் வசிப்பவர்கள் மின் இணைப்பு போனால் மட்டுமே அதனை பயன்படுத்துகிறார்கள். மும்பையில் நான் தங்கியிருக்கும் குடியிருப்பில் வசிக்கும் வங்காளத்தைச் சார்ந்தவர் வீட்டில் இன்றும் விசிறி இருக்கிறது.

கலைநுணுக்கம் மிகுந்த விசிறி


விசிறி கிழக்கிந்திய வாழ்வில் தனி பரிணாமம் எடுத்தது. ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபோது அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளில் முதன்மையானது இங்கே உள்ள கோடைகால வெப்பம் தான். கோடையின் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். அவைகளில் முதன்மையானது தங்கள் இல்லங்களிலும் அரசு அலுவலகங்களிலும் விசிறிமயமாக்கினர். அந்த விசிறியினை சதா காலத்திலும் அசைத்து காற்று வரும்படி செய்ய குறைந்த கூலி கொடுத்து வேலைக்காரர்களை வைத்திருந்தார்கள். இந்தியில் அவர்களை “பங்கா வாலா” என்று அழைத்தார்கள். சிலர் முழு பனை ஓலையையுமே எடுத்து விசிறி எனச் செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் விசிறி விட்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பிர்ம்மாண்ட விசிறிகளும் விசிறி வீசுபவர்களும்

பனை ஓலையில் விசிறி செய்வது மிகவும் எளிதானது தான். ஆனால் அதனைச் செய்யவும் தனித் திறமை வேண்டும் என்பதை அருகில் இருந்தபோது அறிந்துகொண்டேன். ஓலைகளை தெரிவு செய்வது குறித்து யோசித்துப் பார்த்தால், எப்படிப்பட்ட விசிறி செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஓலைகளின் தேவை இருக்கும். ஓலைகளை பெரும்பாலும் நீரில் நனைத்தே வேலை செய்வார்கள். அது தேவையான வடிவத்திற்கு மாற்றுவது எல்லாம் கலைஞர்களின் திறமையால் மட்டுமே. குருத்தோலைகளையோ வடலியோலைகளையோ அல்லது சாரோலைகளோ எடுத்து பொருள் செய்வது வழக்கம். முழுமையாக ஓலைகளை பெருமளவில் சிதைக்காமல் செய்யப்படுகின்ற விசிறி உண்டு. ஓலையின் வடிவம் மாறி செய்யப்படுகின்ற பின்னல்களாலான விசிறியும் உண்டு. ஓலைகளுடன் இணைந்துகொள்ளும் மூங்கில் போன்ற வேறு பொருட்களும் உண்டு. இந்த வேறுபாடுகள் இன்னும் எவராலும் கூர்ந்து அவதானிக்கப்படாதது நமது ஆழ்ந்த கவனத்தைக் கோருவது.

கால்களால் விசிறும் விசிறி

தபால் தலைகளை சேகரிப்பதுபோல் விசிறிகளை சேகரிக்கும் பழக்கம் கொண்ட சிலர் இருக்கின்றனர். இந்தியா முழுவது அவ்விதத்தில் நாம் ஓலை விசிறிகளை சேகரிக்க இயலும், வர்ணம் பூசியிருப்பதில் காணப்படுவதில் இருக்கும் வேறு பாடுகள், பின்னல்களில் காணப்படும் வேறுபாடுகள், ஓலையைச் சுற்றி வர செய்திருக்கும் பூவேலைப்பாடுகள், ஓலைகளின் ஓரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் துணியோ இன்ன பிற காரியங்களோ ஒவ்வொன்றும் 50 கிலோமீட்டருக்கு வித்தியாசப்படும் அளவிற்கு தனித்துவமானவைகள். 

பின்னல்களால் செய்யப்பட்ட விசிறி

பனை ஓலையில் செய்யப்படும் விசிறிகள் இன்றும் நமக்கு பல உண்மைகளை சொல்லத்தக்கதாக இருக்கிறது. பொதுவாக பனை மரங்களில் பின்னேட்லி (Pinately) பாமேட்லி (Palmately) என இரு வகையாக பிரிப்பார்கள். ஒற்றை ஒற்றையாக தென்னை இலக்குகள் போல மட்டையிலிருந்து பிரிந்து செல்லுபவை பின்னேட்லி வகையாகவும், உள்ளங்கையும் விரல்களும் போல  இணைந்து இருப்பவைகள் பாமேட்லி என்றும் குறிப்பிடுவார்கள். பாமேட்லி வகைகளில் அனேக “பனை வகை” மரங்கள் உண்டு. நாம் சிறப்பாக எடுத்துக்கூறும் பனை மரம் அவைகளில் ஒன்று.

தனியாரின் விசிறி சேகரிப்பு

என்னைப்பொறுத்த அளவில் இயற்கையாகவே பனை மரத்தின் ஓலைகள் விசிறி போன்று இருப்பது இதன் பயன்பாட்டிற்கான தொன்மையான காலத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றது. இரண்டாவதாக பனை ஓலையில் இன்றும் விசிறி செய்பவர்கள், அதனை “கற்களை” வைத்து தான் நேராக்கி சீராக்கி பயன்படுத்துகிறார்கள். ஆகவே கற்காலம் துவங்கி இதன் பயன்பாடும் உருவாக்கமும் இருந்திருக்கும்.

மூன்றாவதாக இன்றும் பனையோலை விசிறிகள் கரி நெருப்பு போட்டு உணவை வேகவைக்கும் தந்தூரி உணவு செய்பவர்கள் பயன்படுத்துவதாக இருக்கிறது. அப்படியானால், நெருப்பில் சுட்டு வேகவைக்கும் முறைமைகளை கடைபிடித்த கற்கால மனிதர்களுக்கும் இது உதவிகரமாகத்தானே இருந்திருக்கும்? நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பனையோலை விசிறியினை தாராளமாக கொண்டு சேர்க்கலாம் போல இருக்கின்றது.

நான்காவதாக பனை ஓலையிலிருந்து வீசும் காற்று பூச்சிகள் அண்டாமல் நம்மை பாதுகாக்கும். குறிப்பாக காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லும்போது கொசுக்களின் அல்லது பூச்சிகளின் தொல்லை இருக்கும். அவைகளினின்று தப்பிக்க  விசிறி மிக முக்கிய தேவையாக இருந்திருக்கும். சில வேளைகளில் வேட்டைபொருட்களை எடுக்கையில் ஈக்களின் தொந்தரவிலிருந்து விடுபடவும் விசிறி உகந்ததாகவே இருந்திருக்கின்றன.

இறுதியாக ஆனால் உண்மையாக சொல்லப்படவேண்டிய காரணம் என்னவென்றால், ஓலை விசிறி வெம்மையைத் தணித்து உடலைக் குளிர்விக்க பயன்பட்டிருக்கும். தனது குழந்தையின் உடல், வெம்மையினை சகிக்காது என்ற உணர்வுடைய ஒரு தாயார் குழந்தைக்கு விசிறி விட தானே கண்டுபிடித்த ஒரு இயற்கை  பொருளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

மோசிகீரனார்

மோசிகீரனார் என்ற புலவர் அக்கால வழக்கத்தின்படி  சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையிடம் பரிசில் பெற வேண்டி சென்றார். நீண்டதூரம் நடந்து வந்த  களைப்பின் மிகுதியாலும் பசியாலும் அரண்மனையில் இருந்த முரசுக்கட்டிலில் படுத்து உறங்கினார். செய்தி மன்னனுக்கு சென்றது. செய்யக்கூடாத ஒன்றை செய்த அந்த பேதையின் தலையினைக் கொய்து வரவேண்டும் என தனது வாளோடு புறப்படுகிறான். அங்கே புலவர், கண்ணயர்ந்து உறங்குவதை கண்டு மனம் பதைத்து தனது வாளை ஒதுக்கிவைத்துவிட்டு கவரி வீசுகிறான் என்பதாக பார்க்கிறோம். கவரி வீசுவது பசியுற்றவனுக்கு மன்னன் செய்யும் கடன் என்பதாக ஒரு விழுமியம் இருந்திருக்கிறது. இன்று பனையோலை விசிறி செய்பவர்களது வாழ்க்கை பசியுடன் போராடிக்கொண்டிருக்கையில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம்முன் நிற்கும் மிக முக்கிய கேள்வி.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com


%d bloggers like this: