இயேசுக்கிறிஸ்துவின் பாடுமரணங்களை தியானிக்கும் கஸ்தி வாரங்களில் யூதாஸை மறுபடியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது நம் மனசாட்சிக்கு உறுத்தாத விஷயமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்திருந்தால் நாமே அவனுக்கெதிராய் வழக்காடி அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கியிருப்போம். கோவலனைப்போல் அவனுக்கு ஒரு மனைவி இருந்திருந்தால் நம்மிடம் வந்து வெள்ளிக்காசுகளை விசிறி அவனுக்கக வாதாடியிருப்பாள். யாருமேயற்ற அவனது தனிமை மற்றும் மவுனம் நம் மனசாட்சியை அறைந்து எழுப்பவில்லையா? இயேசுவின் சினேகிதன் நமக்கு எப்படி எதிரியானான்? சற்று பதட்டப்படாமல் யூதாஸை நண்பனாக பாவித்து சிறிது மனம் விட்டு பேசினோமானால்……
யூதா என்கிற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம் தான் யூதாஸ். நன்றி கூறத்தக்க என்கிற அர்த்தம் பெறும் பெயராக இருப்பினும், நன்றி இழந்து செயல்பட்டு விட்டானோ என்கிற ஐயத்தின் அடிப்படையிலே நாம் யூதாஸை கல்நெஞ்சனாக காண முற்படுகிறோம். எந்த ஒரு தீர்ப்பும் தீரவிசாரிக்காமல் அளிக்கப்பட்டால் அது தவறாக மாறிவிட வாய்ப்புள்ளது. ஆகவே யூதாஸ் என்கிற சீஷனின் பின்புலத்தை ஆராய்ந்து குற்றத்தின் பின்னணியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது நமது கடமையாகிறது.
யார் அவன்? எந்த ஊரான்? எப்படி சீஷனானான்? அவன் பொறுப்பு என்ன? அவன் சிந்தனை எத்தகையது? எங்கே தவறு நிகழ்ந்தது? ஏன் தவறு நிகழ்ந்தது? மேலும் அவன் செய்தது மன்னிக்க கூடிய குற்றமா?மேற்கண்ட கேள்விகளுக்கு நம்மால் பதில் பெற முடியுமானால் அதுவே நமக்குத் தேவையான செய்திகளை சொல்லி விட வாய்ப்புண்டு.
யூதாஸ் யூதா கோத்திரத்தைச் சார்ந்தவன். எப்படி நம்மூரில் குமரி, நாஞ்சில் என பெயரின் முன் சிலர் அடையாளம் பெற்று காணப்படுகிறார்களோ அது போலவே யூதா ‘ஸ்காரியோத்’தைச் சார்ந்தவன் என்பது யூதாஸ்காரியோத்து என்பதன் அர்த்தம். எப்படி சீஷனானான் என்பதற்கு ஏற்ற தெளிவான விளக்கங்கள் நேரடியாக திருவிவிலியத்தில் காணக்கிடைக்கவில்லை எனினும் நாம் நிதானித்து அறியதக்க ஏராளமான விஷயங்கள் திருமறையில் சிதறிக்கிடக்கின்றன.
“என் பின்னே வாருங்கள்” என இயேசு யூதாசையும் ஒரு காரணத்தோடேயே அழைத்திருக்க வேண்டும். அந்த அழைப்புக்கு மனுஷனை பிடிக்கிற நோக்கமும் இருந்திருக்க வேண்டுமல்லவா? எனில் யூதாஸ் அழைக்கப்பட்டவனேயன்றி அழையா விருந்தாளியான எதிராளி அல்ல என்கிற தெளிவு பிறக்கின்றது.
‘அவன் திருடனானபடியால்’ என்கிற பதம், அவன் வாழ்வின் ஆரம்பப்பகுதியாக இருந்திருக்கலாமேயன்றி அவன் இயேசுவை பின் தொடரும் போது நிகழும் ஒன்றாக பார்ப்பது ஏற்புடையதாகாது. மட்டுமல்ல, இயேசுவின் சீடர்கள் அவரை சார்ந்திருக்கும் போது தவறான செயல்களில் ஈடுபட்டதுமில்லை அவ்வாறு அவர்களை அவர் பயிற்றுவிக்கவுமில்லை (இயேசுவை பிடிக்க வந்த போது காதற வெட்டிய நிகழ்வு திட்டமிடப்படாதது) ஒரு ஒழுக்கமுள்ள சீஷத்துவத்தை இயேசு அவர்களுக்கு கற்பித்திருக்க மாட்டாரா என்ன! மேலும் சகேயுவை இயேசு அழைத்த போது,ஒரே நாளில் அவன் பெற்ற மாற்றம் நாம் எல்லோரும் அறிந்தது. எனவே யூதாஸ் பெற்ற மாற்றம் உண்மையானது எனவும், அவன் தன் பழைய திருட்டு வாழ்வை விட்டொழிந்த பின்பே அவரை பின் தொடர்ந்தான் என்பதும் நாம் கண்டறியும் உன்மைகள்.
எனினும் சீஷர்களுக்குள்ளே ஒற்றுமையுணர்வு சீர்குலைந்ததை வைத்து பார்க்கும் போது,ஒரு உண்மை வெளிப்படுகின்றது. பணப்பெட்டியை வைத்திருக்கும் பொறுப்பை ஏற்க நினைத்தவர்களுக்கு அது கைகூடாமற்போனதும், யூதாஸின் பழைய வாழ்க்கையை கிளறி, அவனை சிறுமைப்படுத்த அவர்கள் கையாண்ட ஒரு பிரயோகமாகவே நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலகட்டம், சுவிசேஷகர்கள் யூதாசை வில்லனாக அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற இடைவளி கொண்டது என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.
இயேசு அவனை நம்பி பணப்பையைக் கொடுத்ததற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். “திருடனின் கையில் சாவியைக் கொடுப்பது” என்று நம்மூரில் ஒரு வழக்கச் சொல் கூட இருக்கிறதே! இயேசுவோ யூதாசுக்கு தன்னம்பிக்கை வரவும் அவன் திருந்திய வாழ்வை மற்ற சீடர்களும் காணும்படியாக இவ்வாறு செய்திருக்க வாய்ப்புக்கள் வளமாக இருக்கின்றது.
மேலும் நாம் உற்று நோக்கதக்க, அவன் பொறுப்பை சார்ந்த பல அரிய குணங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. பணத்தைச் சிக்கனமாக செலவு செய்திருக்கிறான் (யோவான்:12:5) எனும் போதே அவன் நம்பிக்கைக்குரியவனாக பரிமளிக்கின்றான், கூடவே குறித்த நேரத்தில் தேவையானதை வாங்கிவர செல்பவனாயிருக்கிறான், எல்லாவற்றிற்கும் மேல் தரித்திரர் மீது அக்கறையுள்ளவனாய்க் காணப்படுகிறான் (யோவான்:18:29). ஆகவே வேத ஆதாரங்கள் அவன் பணத்தை கையாடல் செய்ததை உறுதிப்படுத்தாதவரை நாம் அவனை சந்தேகிப்பது முறையாகாது.
யோவான் 12ம் அதிகாரத்தில் நடக்கும் சம்பவம் சற்று விசித்திரமாகவும் ஆழ்ந்த கேள்விகளை தொக்கியும் நிற்கிறது. சம்பவம் இது தான். இயேசுவை அபிஷேகம் பண்ண மரியாள் எனும் பெண் விலையேறப்பெற்ற நளதம் எனும் தைலத்தை கொண்டு வந்து அவரது பாதத்தை அபிஷேகம் பண்ணுகிறாள். மற்ற சீஷர்கள் அருகிலிருந்தும், யூதாசின் பார்வை பொருளாதாரம் சார்ந்த சமூகவியலாக உருவெடுக்கின்றது.
இத்துணை விலையுயர்ந்த பொருள் காலடியில் ஒன்றுக்கும் உதவாமல் வீணாய்ப்போவது, பணத்தை நியாயமாக செலவழிப்பவர்களுக்கு கவலையளிப்பதாகவே இருக்கும்.இதை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என அவன் வினவுவதை யாரும் தவறாக எடுத்து கொள்ள இயலாது ஏனென்றால் அதை அவனுக்குக் கற்பித்ததே இயேசு தான்! ஆகவே தான் அவர் அவனுக்குத் தன் நிலைப்பாட்டைப் புரியவைக்க முயற்சிக்கிறார். தன் மரணத்துக்கு ஏதுவாக அவள் இதைச் செய்கிறாள் என அவர் கூறியும் அவனால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை.
இந்த புரிதல் வேறுப்பாட்டைக் கொண்டு நாம் எந்த தவறான முடிவுக்கும் வந்துவிட முடியாது, ஏனென்றால் இயேசுவின் பிற சீஷர்கள் கூட அவரை புரிந்து கொள்ளாத சந்தர்ப்பங்கள் அனேகம் உண்டே! இவ்வாறாகவே யூதாசும், இயேசுவின் பதிலில் திருப்தியடையாமல் தன்னை அவர் இகழ்ந்ததாக கருத வாய்ப்புள்ளது. இந்த இடமே நாம் யூதாசின் சுயரூபம் வெளிப்படும் இடமாக நாம் கருத வேண்டும்.சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் தான் அறிந்துகொண்ட ஒரு நல்ல கொள்கையில் அரிச்சந்திரன் போன்று யூதாசும் பிடிவாதமாக நிற்கிறான். சந்தர்ப்பத்தைக் கணக்கிடாமல், கொள்கையைக் கற்றுக்கொடுத்தவரே அதை மீறுவதைப்பார்த்து அவன் உணர்ச்சி மயமாகி நிற்கிறான்.
மேற்கூறியவற்றை மையமாக வைத்துப்பார்க்கும் போது, யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடும்கும் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள வழி வகுக்கின்றது. அவனது முத்தமிடும் தன்மை கலச்சாரம் சார்ந்த ஒன்றாக இருப்பினும், அவன் போல் இயேசுவை முத்தமிடுவோர் உணர்ச்சி மேலீட்டாலே அவ்வாறு செய்வதை நாம் கண்டுகொள்ள முடியும். யூதாஸ் உணர்ச்சி மிக்க ஒருவனாக தன்னை இங்கே அடையாளப்படுத்துகிறான்.
உணர்ச்சிவசப்பட்டு செய்கின்ற காரியங்களின் விளைவு நல்ல முடிவைத் தரவல்லதல்ல என அவன் புரிந்துகொள்ளுகிறான். எனவே, தான் செய்த தவறை எண்ணி மனஸ்தாபப் படுகிறான். தான் பெற்றுக்கொண்ட காசை திரும்பக்கொடுத்தாவது இயேசுவை மீட்டுவிடலாம் என்று மனப்பால் குடித்து தேவாலையம் நோக்கி விரைகின்றான். “குற்றமில்லதவரைக் காட்டிக்கொடுத்தேன்” என தேவாலயத்தில் வைத்து தைரியமாக அறிக்கையிடுகிறான்.
இந்த சூழ்நிலையில், ப்ரதான ஆசாரியன் அவன் கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தால் கதையே வேறு விதமாய் மாறியிருக்கும் (அவர்களைப் பொறுத்தவரை யூதாஸ் ஒரு டிஸ்போஸிபிள் ப்ளேட்). அந்தோ பரிதாபம், யூதாஸின் யூகம் அங்கே தவறாகிவிடுகின்றது. அவர்களோ அவனைப்பார்த்து “அது உன் பாடு” என்றதும் நொறுங்கிவிடுகிறான். தான் ஒரு கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டதை எண்ணி துடி துடிக்கிறான்! காலம் கைமீறிப் போய்விட்டதை எண்ணி பதைபதைக்கிறான்.
கையிலுள்ள காசால் எங்காவது சென்று, காணி நிலம் வாங்கியாவது வாழ்ந்திருக்க முடியும் அவனால். ஆனால் தனக்கு அது தகாது என உணர்ந்து, அதை தேவாலயத்தில் விசிறியடிக்கிறான். அதை கவனமாக பொறுக்கியெடுத்த பிரதான ஆசாரியர், அதைக்கொண்டு குயவனின் நிலத்தை வாங்கும் நிதானத்தில் இருக்கும்போது, தனது தவற்றை உணர்ந்த யூதாஸ் குற்றத்தின் ஆழத்தை உணர்ந்தவனாகிறான். மன்னிக்கும் கருணையுள்ளம் கொண்டவரிடம் கூட சொல்லிக்கொள்ள தைரியம் அற்று, கூனி குறுகி தனது துயர முடிவை தெரிந்துகொள்ளுகிறான்.
இந்த முடிவை நாம் நியாயப்படுத்துவது தவறாகிவிடலாம் எனினும், இதை யூதாசின் முடிவாக அல்லாமல் இன்றைய சூழ்நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் பலவீன இதயம் கொண்டோர் மற்றும் ஒதுக்கப்பட்ட நபர்களின் மனநிலையோடு பொருத்திப்பார்க்கும் கடமை நமக்கு உண்டு. எவரொருவர் தற்கொலை செய்துகொண்டாலும் அதற்கு முக்கிய காரணம் சமூக நிராகரிப்பே. தான் தவறு செய்துவிட்டோம் எனவும் சமூகம் தன்னை எற்றுக்கொள்ளாது என்ற நிலையிலும் யூதாஸ் இந்த துயர முடிவை மேற்கொள்ளுகிறான். சொல்லப்போனால் அவனது பலவீனமான இதயமும், உணர்ச்சிமயமான அணுகுமுறையும், சமூக நிராகரிப்புமே அவனை இந்த முடிவுக்கு நேராய் உந்தித் தள்ளியது.
வாழ்க்கையில் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்தவர்களை நாம் அரவணக்கத் தவறினோமானால், அன்பை எதிர்நோக்குபவர்களை உதாசீனம் செய்தோமென்றால், அவர்கள் செய்யத்துணியும் தற்கொலைகளுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
காட்சன் சாமுவேல்
தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com
குறிச்சொற்கள்: கட்டுரை
3:23 முப இல் மார்ச் 23, 2018
அருமையான பார்வை. வாழ்த்துகின்றேன். நான் படிக்கும் காலத்தில் யூதாசைப் பற்றி இதே கண்ணோட்டத்தில் கட்டுரை எழுதியது நினைவுக்கு வருகின்றது. மிக்க நன்றி