கடவுளே
நெடிய பனைமரத்திற்கு மேலே தங்கியிருப்பவரே
உமது திருப்பெயர் புகழப்படுவதாக
பனங்காடுகள் உமது வருகையினால் செழிப்பதாக
தேவை நிறைந்தோர்,
உம்மிடத்தில் நிறைவடைவதுபோல்
பனைமரத்தினின்று பெறுபவைகளினால்
திருப்தி அடைவார்களாக
அன்றன்று உள்ள ஆகாரமாம் பதனீரையும், கிழங்குகளையும்
பனம்பழத்தையும் தருவீராக
எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்யும்
அரசு, சந்தை, சாதீய மேட்டிமை போன்றவற்றை
நாங்கள் மன்னிப்பது போல
தினமும் பனைமரத்தை வெட்டிச்சாய்ப்பதை கண்டும்
வாளாவிருக்கும் எங்களை மன்னியும்
பனைமரத்தில் ஏறி நாங்கள் தொழில் செய்யும்போது
மரணத்துக்கேதுவான எல்லாவித அபாயங்களினின்றும்
எங்களைக் காத்துக்கொள்ளும்
குடும்பமாக உமது பனங்காட்டில் வேலை செய்யும் எங்களை
தீயவரிடமிருந்தும் காப்பாற்றும்
பனையைப்போன்ற உமது உயர்ந்த அரசும்
அதன் வைரத்தை ஒத்த உமது வல்லமையும்
தன்னையே வாரி வழங்கும் வள்ளண்மையும்
என்றென்றும் உமக்கே உரியது
ஆமேன்
தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com
குறிச்சொற்கள்: இறைவேண்டல்
மறுமொழியொன்றை இடுங்கள்