பனைமரச்சாலை (51)


இழந்த பனைமரங்கள்

அமிர்தராஜ் அந்த ஒற்றைப் பனைமரத்தையும் என்னையும் இணைத்து படம் எடுக்கப் புறப்பட்டார். அந்த கும்பல் நிறைந்த பகுதியில் அது எளிதில் நடைபெறாது. ஆகவே அங்கிருந்த ஒரு வழுவழுப்பான பாறைமேல் என்னை ஏறச்சொன்னார் நான் அதிர்ந்து, ஓய் நாப்பது வயசாச்சி என்றேன். சும்மா ஏறுங்க பாஸ் வயசு மனசுல தான் இருக்கு என்றார். அடப்பாவி, பைக்குல இருந்து விழுந்தாலாவது ஒரு சின்ன பெருமை இருக்கும், ஆனா பாறை ஏறி வழுக்கினா என்ன சொல்லப்போறாங்க? ஆனால் அமிர்தராஜ் சதாரணமான ஆள் இல்லை. என்னை பேசியே பாறை மேல் ஏற்றிவிட்டார். அந்தரத்தில் நிற்கவிடாமல் இருந்தால் சரிதான் என எண்ணிக்கொண்டேன்.

பனையும் நானும், மகாபலிபுரம்

பனையும் நானும், மகாபலிபுரம்

மூட்டோ முதுகோ வளையாமல் கரங்களை கொண்டு இறுக பற்றாமல் எனது விரல்  நுனிகளால் அப்பாறையை அழுத்தி கால்களில் எனது பலத்தை கொடுத்து ஏறினேன். சமீப நாட்களில் எனது உடல், வளைவுகளுக்கு இசைந்து கொடுப்பது இல்லை. அது என்னை கைவிட்டுவிட்டதாகவே உணர்ந்தேன். ஆனாலும் சமாளித்து ஏறிவிட்டேன். பயணத்தை கருத்தில்கொண்டு  நடந்தது போதாது என்றே நினைக்கிறேன். இன்னும் நடந்திருக்கவேண்டும். மேலும் சிறு சிறு உடற்பயிற்சிகளும் செய்திருக்க வேண்டும். எனது சிறுவயதில் கவ்வி பிடிப்பதும், கிளைக்கு கிளை தாவுவதும் தேவையென்றால் குதிப்பதும் நீளம் தாண்டுவதும் இயல்பாக எனக்கு கைவந்த கலையாக இருந்தது. கல்லூரியில் உயரம் தாண்டுதலில் நான்கு வருடங்களாக நானே முதல் பரிசு பெற்றவன். இப்போதோ, நான் எதுவும் செய்ய இயலாதபடி 40 வயது என்னை எச்சரித்தது வேதனையான காரியம்.

ஒரிரு புகைப்படங்கள் எடுத்தபின் மீண்டும் வந்து வேறு இடங்களிலிருந்து படங்களை எடுத்தோம். அமிர்தராஜ் ஒரு உண்மையான கலைஞன். தனது பணியில் மாத்திரம் அல்ல இந்த மண்ணின் மீதும் பற்று கொண்டவர். ஆத்மார்த்தமாக பணிகளை செய்தார். என்னை மிகவும் இலகுவாக்கிக்கொள்ள அவர் உதவினார். பயணம் குறித்த அச்சமோ, வேறு பயங்களோ என்னை அணுகாதபடி தனது தனித்துவமான நகைசுவை உணர்வால் என்னை எளிதாக்கினார். அவரை கலைக்கவே என்னை ஆண்டவன் அனுப்பியிருப்பார் போலும். ஒருவரை ஒருவர் கலைத்து பிரித்து அடுக்க ஆரம்பித்துவிட்டோம்.

உயர்ந்த பனையுடன் அமர்ந்தபடி நான், மகாபலிபுரம்

உயர்ந்த பனையுடன் அமர்ந்தபடி நான், மகாபலிபுரம்

அங்கிருந்து வரும்போது இளநீர் நுங்கு ஆகியவைகள் விற்கப்படுவதைக் கண்டோம். இளநீருக்கான ஒரு சீரான விற்பனை சங்கிலி  இருக்கிறது. வருடம் முழுவதும் கிடைக்கும். நொங்கு அப்படியல்ல. அதற்கான ஒரு காலசூழல், மற்றும்  குறிப்பிடத்தகுந்த இடங்களில் மட்டுமே கிடைக்கும். அப்படியானால் தென்னை மரத்தின் எண்ணிக்கை பனை மரங்களை விட மிக மிக அதிகமாக இருக்கும்போலும். மிக சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூட தென்னை மரங்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் பனைமரம் சார்ந்த எந்த புள்ளிவிபரங்களும் கிடப்பது இல்லை. கிடைப்பவைகளும் 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவைகளே.

மகாபலிபுரத்தில் ஒன்றுக்கு போகவேண்டுமென்றால் 5 ரூபாய் கொடுக்கவேண்டும். மும்பையைப் பொறுத்தவரை ஆத்திர அவசரத்துக்கு அங்கே பணம் கொடுக்க வேண்டி இராது. ஆனால் வரிசையில் மட்டும் நிற்கவேண்டும். எனக்கு  பணம் குடுத்து உள்ளே போக விருப்பம் இல்லை.  பொதுக்கழிப்பிடங்கள் பெரும்பாலும் சுத்தமாக பேணப்படாததே காரணம். நானெல்லாம்  பொது கழிவறைகளுக்குச் செல்லுமுன் அனைத்தையும் தயாராக்கிச் சென்று மூச்சை நன்றாக இழுத்து, அனைத்தும் ஓய்ந்தபின்  ஓடோடி வெளியே வந்து சுதந்திரக்காற்றை வாயால் சுவாசிக்கும் அளவுக்கு புலனடக்கம் உள்ளவன். ஆனாலும் ஐந்து ரூபாய் கொடுத்து நான் உள்ளே சென்றேன். உலக சுற்றுலா தலத்திற்கு இணையான அல்லது அவர்கள் வாங்கும் 5 ரூபாய்க்கு நிகரான ஒரு கழிவறையாக அது பேணப்படவில்லை.

வெளியே வந்தபோது பார்கிங் அருகே அமிர்த்தராஜ் பாட்டியோடு  பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே தண்ணீர் வாங்கி குடித்தோம். தேவையான பாட்டில்களையும் வாங்கிகொண்டோம். அங்கே சற்று அமர்ந்துவிட்டு அங்கிருந்து நேராக நாங்கள் கடற்கரை கோயிலுக்குச் சென்றோம். செல்லும் வழியில் அமிர்தராஜ் என்னிடம் கடற்கரை கோவில் அருகில் பனைமரங்கள் இருக்கின்றனவா என்று பாருங்கள் என்றார். அவர் அருகில் உள்ள இடங்களில் பனை மரங்கள் இருக்கும் இடங்களைத் தேடிப்போனார். நான் கடற்கரை கோவிலுக்குள் செல்லவில்லை. ஒன்று மிக மிக நெருக்கடியான இடம். இரண்டாவதாக அந்தக்கோவிலின் அருகில் பனைமரங்களைக் காணவில்லை. மகாபலிபுரம் காஞ்சிபுரத்தின் கீழ் செயல்பட்டது என ஒரு குறிப்பை வாசித்தேன். இன்றும் அது காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்கைக்குள்ளே அமைந்திருக்கிறது. புராதனமான பல பனை ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வரும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் இங்கேதான் அருகில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது.

பனை மரங்கள் குறித்து மிக அதிகமாக விவரிக்கும் கிறித்தவ மிஷனெரி கால்டுவெல்  இவ்விதமாக கூறுகிறார். பனை மரங்கள் காண்பதற்கு பனை வகைகளிலேயே மிக குறைந்த அழகுள்ளது ஆனால் மிகுந்த பலனைத் தருவது. அழகியல் சார்ந்த அவரது பார்வை சரியானதா என என்னை நானே கேட்டுக்கொண்டேன். இல்லை என்பதே எனது உறுதியான பதில். கால்டுவெல் தமது காலத்தின் ஒரு அழகியலை மட்டுமே முன்வைக்கிறார் என்பதாக வேண்டுமானால்  எடுத்துக்கொள்ளலாம். அல்லது தனது மேலை அழகியல் தளத்தில் நின்று அதை கூறுகின்றார் எனவும் கூற இடமுண்டு. தனிப்பட்ட முறையில் எனக்கு அனைவரும் விரும்பும் தென்னைகளின் பால் இத்துணை விருப்பு கிடையாது. நான் கம்போடியா சென்றிருக்கும்போது அதையே வேறுசிலரும் எண்ணுகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். அங்கே நான் வாழ்வில் பார்த்ததிலேயே மிகப்பெரிய இளநீர் விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் கம்போடிய கெமேர் கலாச்சாரத்தின் சின்னமான அங்கோர் வாட் பகுதியில் தென்னைகள் வளர்கப்படவில்லை. தொன்மையான பனைமரங்களே கெம்பீரமாக அழகூட்டுவதாக எழுந்து நின்றன.

நான் தூரத்திலிருந்து பார்க்கும்போது அங்கே சில மரங்கள் கடற்கரை ஓர கோவிலின் அருகில் புதிதாக வளர்கப்படுவதை காண முடிந்தது. எனக்கு அவைகள் ஒருவித விலக்கத்தையே அளித்தன. அவைகள் கடற்கரையில் வளருகின்ற தாவரம் போல் இல்லை. பனை மரங்கள் அந்த கோவிலுக்கு மிக அதிக அழகைக் கொடுத்திருக்கும். ஒரு தொன்மையின் இழையாக அதனுடன் மிக நேர்த்தியாக இயைந்து காட்சியளித்திருக்கும். ஆனால் மாநில மரத்திற்கு தான் மதிப்பு கிடையாதே? என்னைப்பொறுத்தவரையில் அந்த இடத்தில் கண்டிப்பாக பனை மரங்கள் நின்றிருக்கும். இன்று அவைகள் பேணப்படவில்லை என்பதே உண்மை. இது நான் எனது உள்ளுணர்வு சார்ந்து கூறுவது. பனை சார்ந்த எனது உள்ளுணர்வுகள் இந்த 20 ஆண்டு காலத்தில் பெரும்பாலும் பொய்த்தது இல்லை. இங்கே பனை மரக்கன்றுகள் ஊன்றப்படவேண்டும்.

நான் அங்கே சற்று நேரம் காத்திருந்தேன். என்னைத் தேடி அமிர்த்தராஜ் வருவதை தூரத்திலிருந்து பார்த்தேன். திரும்பிவிடுவோம் என்று கூறி அங்கிருந்து வெளியே வந்தோம். தமிழகத்தின் முக்கிய வரலாற்றிடங்களின் அருகில் கண்டிப்பாக பனைமரங்கள் நிற்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அப்படித்தான் மாநில மரத்தின் மேன்மையை பறைசாற்ற இயலும். குளிர் பிரதேசங்கள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் செழித்து வளரக்கூடியது பனைமரம். மீண்டும் இவைகளை நாம் அதன் வாழ்விடங்களில் செழிக்க அனுமதிக்கவேண்டும்.

சுமார் ஒரு வருடங்கள் இருக்கும், ஒருநாள் நான் திடீரென ஒரு கனவிலிருந்து விழித்தவன் போல உணர்ந்து, நேராக கன்னியாகுமரிக்கு எனது மாமா மகன் ஜானியையும் சேர்த்துக்கொண்டு பயணித்தேன். என்னுடைய உள்ளத்தில் ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அதாவது எனது சிறு வயதில் நான் கன்னியாகுமரி சென்ற தருணங்களில் பகவதி கோவிலின் பின்புறம்  திரிவேணி சங்கமம் செல்லும் வழியில் பனைமரம் ஒன்று நின்றதாக ஒரு எண்ணம். என்னால் அதை உறுதியாக சொல்லமுடியாது ஆனால் அது ஒரு அலையடிக்கும் எண்ணமாக தெளிவற்று அசைந்துகொண்டிருந்தது. காந்தி மண்டபத்திலிருந்து நாம் விவேகானந்தர் பாறையை பார்க்கும்போது இரண்டுக்கும் மத்தியில் அங்கே அந்த பனை மரம் நின்றிருக்கும். இதை சொல்லி அரற்றியபடியே வந்தேன்.

ஏன் அது மிகவும் முக்கியமானது? இரண்டு முக்கிய கரணங்கள் உடனடியாக என் மனதில் எழுந்தன. முதலில் கன்னியாகுமரி தேவி அல்லது பகவதி என அழைக்கப்படும் மூக்குத்தி அம்மன் கோவிலின் கருவறையில் அமர்ந்திருப்பது பத்திரகாளியாகவும் எண்ணி வழிபடப்படுகிறது.  அப்படியென்றால் அங்கே அருகில் பனை மரம் நிற்பது மிகவும் ஏற்புடையது ஆகின்றது. மற்றொன்று மிகவும் இயல்பானது. இந்திய பெருநிலத்தின் கடைசி எல்லையில் வளர்ந்திருந்த ஒரே தாவரம் பனை மரம் என கருத இடமிருக்கிறது. அது பனை மரத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும் என எண்ணினேன். உப்புநீர் பாதிக்காத வகையிலும் வளருகின்ற தமிழக மாநில மரம் குமரி எல்லையில் நிற்பதல்லவா முறை.

ஆனால் நாங்கள் அங்கே சென்று சேர்ந்தபோது எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பழைமையின் எந்த சுவடும் அங்கெ இல்லை. அந்த இடத்தை நோக்கி நான் போகையில் அது ஒரு வியாபார மையமாக மாறிவிட்டிருந்தது. நான் மனதில் குறித்துவைத்திருந்த இடம் மண் கொட்டப்பட்டு அங்கே  ஆஸ்திரேலியவிலிருந்து வரவழைக்கப்பட்ட புற்களால் அழகு செய்திருந்தார்கள். என்னே ஒரு அற்பணிப்பு. மாற்றான் தோட்டத்து புல்லில் மேய்வது தனி சுகம்தான் போலும். இங்கிருந்த பனைமரத்தை காணோம் என சொன்னேன். ஜானி  சரி விடுங்கண்ணா அப்புறமா பாத்துக்கலாம் என்றான். அவனது வழக்கமான சொற்றொடர் அது. அந்த கணத்திலிருந்து விடுதலை பெற்று சிந்தித்து செயல்படுவது. சரி என்றேன்.

ஆனால் அந்த நாள் எனது மனதில் ஒரு தீர்மானம் எடுத்தேன். கண்டிப்பாக குமரி எல்லையில் கடலை ஒட்டி  நிற்கும் கடைசி மரம் பனைமரமாக இருக்கும் என. அதுவே இந்த நிலத்தின் கல்விக்கும், ஆன்மீகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் அடிநாதமனது. பனை மரம் இல்லாத குமரி எல்லை மூளியான காளிக்கு சமம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

பின்னூட்டமொன்றை இடுக