Posts Tagged ‘பனை ஏறுபவர்கள்’

பனைமரச் சாலை (23)

ஜூலை 4, 2016

திளாப்பு – இணைக்கும் கருவி

அங்கிருந்து நான் சென்ற இடங்கள் எல்லாமே இருமருங்கிலும் பனைமரத்தால் சூழப்பட்ட சாலைகள். அதன்பின்பு ஒருநாளும் நான் பனை மரம் இல்லாத சாலையில் பயணித்த நினைவு இல்லை. பனை மரச் சாலையினுள் அல்லது பனை மரச் சோலையினுள் நுழைந்த ஒரு மிதப்பு என்னுள் வந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பனை, பனை கூட்டங்கள், பனங்காடுகள். சொந்த நிலத்தில் காலடி வைத்த உணர்வு. ஒருவழியாக எனது கனவு சாலையை பிடித்துவிட்டேன் எனும் ஆனந்தம். இதற்காகவல்லவா இத்துணை நெடுந்தூரப் பயணம்.

பனை மரங்கள் சூழ்ந்த முற்கால வங்ககடற்கரையோரம் எப்படி இருந்திருக்கும்? அவகளின் மக்கள் இத்தனை திரட்சியான ஒரு மரத்தை எப்படி பயன்படுத்தியிருப்பார்கள். மிஷனெறி ஆவணங்களிலோ அல்லது பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலோ எவரேனும் இவைகளை பதிவு செய்த்திருப்பார்களா? இவ்வழிகளில் பயணம் எவ்விதம் இருந்திருக்கும்?இஸ்லாமியர் கோட்டையானபடியால், அவர்கள் பனை மரத்தினை எவ்விதம் அணுகியிருப்பார்கள். பனை சார் பொருளாதாரம், பனை சார் வாழ்வு போன்றவைகளின் எச்சத்தை கண்டடைய முடியுமா? பனை நிறைந்த இடத்தில் கடந்த கால பயணிகளின் பாதையும் பயணமும் எவ்விதம் இருந்திருக்கும்? போன்ற கேள்விகள் என்னில் சுழன்றன.

அப்போது எனக்கு இடப்பக்கமாக பனையோலையில் செய்யப்பட்ட ஒரு அழகிய குடிசை தென்பட்டது. சாலையின் மிக அருகில் அது அமைக்கப்பட்டிருந்தது. புதிய ஓலைகளால் வேயப்பட்ட கூம்பு எடுப்பான ஒரு தோற்றம். உள்ளே நுழைய வேண்டுமானால் தலை தாழ்த்தி குனிந்தே செல்ல வேண்டும், அத்துணை தாழ்வான அமைப்பு. அதனருகில் நிற்பவரை என்னால் இனம் கண்டுகொள்ள முடிந்தது. ஆம் அது ஒரு பனை தொழிலாளியே தான்.

ஆந்திராவில் காணப்படும் பனைத் தொழிலாளியுடன் நான்

ஆந்திராவில் காணப்படும் பனைத் தொழிலாளியுடன் நான்

வண்டியை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன். குட்டையான மனிதர் பனியன் அணிந்திருந்தார் ஆனால் கீழ்பகுதியில் பிளாஸ்டிக் சாக்கால் செய்யப்பட்ட ஒரு சிறிய உடையை அணிந்திருந்தார். கழுத்திலிருந்து பாம்பு மாலைபோல் இடுப்புவரை சுற்றிக்கிடந்தது பனையேறும் உபகரணம். அதைக்கொண்டே அவர்கள் பனை ஏறுகிறார்கள் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் களத்தில் பார்ப்பது  இதுவே முதல் முறை.

உடை, கருவிகள் மற்றும் பனையேறும் தன்மைகள் யாவும் குமரி மாவட்டத்தைவிட, வெகு வித்தியாசமாயிருந்தாலும், கருவிகளின் பயன்பாடு மற்றும் தோற்றங்கள் பொதுமைகொண்டுள்ளன. அவைகளும்  ஆய்வுகுரிய   ஒன்றாக மாணவர்கள் தெரிவு செய்யலாம்.

திளாப்பு எனும் கருவியை பனை ஏறுபவர்கள் கால்களில் அணிந்து கொள்வார்கள். திளாப்பு பனை நாரால் செய்யப்பட்ட நீள வட்ட கயிற்றை ஒத்த ஒன்றரையடி கருவி. பனை ஏறுபவர்கள் தங்கள் கால்களின் கணுக்களில் அணிந்து கொள்ளுவார்கள். திளாப்பு அணிந்து எறும்போது இரண்டு கால்களுக்கும் ஒரு சேர பிடிமானம் கிடைக்கிறது. அது மாத்திரம் அல்ல, பனையில் ஏறும் வேகத்தையும் அதிகரிக்கிறது.

இடை கயிறும் தளை நாரும் அணிந்து மரம் ஏறும் ஆந்திரா பனைத்தொழிலாளி

இடை கயிறும் தளை நாரும் அணிந்து மரம் ஏறும் ஆந்திரா பனைத்தொழிலாளி

திளாப்பு செய்வதற்கு பனை நாரினை எடுத்து முற்காலங்களில் பயன் படுத்துவார்கள். பனை ஓலையை பனையோடிணைக்கும் மட்டையிலிருந்து பெறப்படும் நாரிலிருந்து இதை செய்வார்கள். மட்டையின் உள்நோக்கி குவிந்திருக்கும் பகுதியிலிருந்து பெறப்படும் நார் அகணி என்றும் மேடிட்டு காணப்படும் பகுதியிலிருந்து பெறப்படும் நார் புறணி என்றும் கூறப்படும்.  பொதுவாக திளாப்பு செய்வதற்கு அகணி நாரையே பயன்படுத்துவார்கள்.

பனை ஓலையை மரத்திலிருந்து எடுக்கும்போது பத்தையோடு சேர்த்தே எடுப்பார்கள். பிற்பாடு பத்தையை தனியாகவும், ஓலையை தனியாகவும் பிரித்தெடுப்பார்கள். இவைகளை நீக்கிய பின்னர் சுமார் 4 – 5 அடி  வரை நீளமான மட்டைகள் கிடைக்கும். மட்டையை பனையிலிருந்து வெட்டிபோட்ட ஒரு சில நாட்களில் நாரை உரித்து எடுப்பார்கள். பின்னர் அவைகளை உலரப்போட்டு பெரும் கட்டுகளாக கட்டி வைப்பார்கள். இவைகளிலிருந்து தான் திளாப்பு, பனை நார் கட்டில்,  நார் பெட்டி போன்றவை செய்ய பயன்படுத்துவார்கள்.

பனை நார் விசேஷித்த உறுதி படைத்தது அதே நேரம் சற்று நெகிழும் தன்மையும் உடையது. பளபளப்பான மேல் தோல் கொண்டது பார்க்க மெழுகுதடவியது போன்றே இருக்கும். பச்சை வண்ணத்தில் காணப்படும் நார்கள், பிற்பாடு இள மஞ்சள் நிறத்திலோ அல்லது பழுப்பு நிறத்திலோ மாறிவிடும்.  இவைகளை மிகவும் நேர்த்தியாக சுற்றிக்கட்டி திளாப்பை செய்வது வழக்கம். முற்காலங்களில்  செய்யப்பட்ட திளாப்புகளை பார்க்கும்போது அவைகள் ஒரு கலை படைப்போ என தோன்றும் அளவிற்கு மிக நேர்த்தியாக இருக்கும்.   திளாப்பை தளைநார் என்றும் சொல்வார்கள். தளை என்பது பிணைப்பது அல்லது கட்டுதல் எனும் பொருளில் வழங்கப்பட்டுவருவதை நாம் அறிவோம். ஆகவே கால்களைப் பிணைக்கும் அல்லது கட்டும் நார் என இதைக் குறிப்பிடுவார்கள். தளைப்பு எனும் சொல் மருவி திளாப்பு என மாறியிருக்கும் என எண்ணுகிறேன்.

பனை ஏறுபவர்கள் ஒரு பனையில் தங்கள் பணிகளை முடித்துவிட்டு அடுத்த பனைக்குச் செல்லும்போது, திளாப்பை பல்வேறு இடங்களில் மாட்டிக்கொள்வர். எடுத்துச் செல்லும் மிருக்கு தடியிலோ, அல்லது தங்கள் அரிவாள் பெட்டியிலோ அவற்றை தொங்க விடுதல் பார்க்க வித்தியாசமாக இருக்கும். சிலர் தங்கள் தலைகளில் அவைகளை கிரீடம் போலவும் அணிந்துகொள்வர்.

குமரி மாவட்டத்தைச் சார்ந்த பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஜெ. ஆர். வி. எட்வர்ட் அவர்கள் திளாப்பு எனும் பெயரில் ஒரு சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். திளாப்பு அவ்விதம் ஒரு முக்கிய குறியீடாக மக்கள் மனதில் நிற்கிறது.

திளாப்பு கட்டி ஏறும்போது கால் கணுக்களில் அவை பற்றியிருக்கும் இடங்களில் பனை ஏறுபவருக்கு காய்ப்பு ஏற்படுகிறது. தோலின் மென்மைகள் போய் மிகவும் சொரசொரப்பாக அப்பகுதி மாறிவிடும். இவைகளை மென்மையாக்க எந்த மருந்துகளும் இல்லை. உள்லங்கைகளிலும் அவ்விதமாகவே காய்ப்பு ஏற்படுவதைக் காணலாம். இவர்களின் நிலை எசாயா கூரிய துன்புரும் ஊழியரோடு ஒத்துப்போவதை நாம் கண்டடையமுடிகிறது.

“1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்: நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை: நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை:3 அவர் இகழப்பட்டார்: மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்: வேதனையுற்ற மனிதராய் இருந்தார்: நோயுற்று நலிந்தார்: காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்: அவர் இழிவுபடுத்தப்பட்டார்: அவரை நாம் மதிக்கவில்லை.4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.” (ஏசாயா 53 திருவிவிலியம்)

நான் இங்கே பார்த்தவர்கள் சற்று வித்தியாசமாக திளாப்பைச் செய்திருந்தனர். லாரி டியூபைக்கொண்டு அவர்கள் அதை வடிவமைத்திருந்தனர். நீண்டநாள் உழைக்கும் படியாகவும், நாரில் செய்வதைவிட, இலகுவாக செய்யகூடியதாக இருப்பதாலும் மாற்று பொருட்களை பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்திருக்கும். ஆனால் கண்டிப்பாக ஆந்திராவிலும் பனை நார்களையே முற்காலத்தில் பயன்படுத்தியிருப்பார்கள் என்பது உறுதி.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா பனைத் தொழிலாலர்களின் தனித்தன்மை மற்றும் கம்பீரம் அவர்கள் தங்கள் தோழில் சுற்றியுள்ள இணைப்பு கயிறால் தான் என நான் எண்ணுகிறேன். தொழில் கருவிகள் ஒரு மனிதனோடு இணைத்து ஒன்றித்து கூட்டும் அழகு அது. அனுமன் பெற்ற வால் போல அது அவர்களோடு ஒன்றித்திருக்கிறது. பெரு வீரனின் சாட்டையை போல அது மதர்ப்புடன அவர்தம் நெஞ்சில் அணைத்திருக்கிறது. பாம்பை தோள்மேல் போட்டு வித்தை காட்டுகிற வீரனைப் போலிருக்கிறர்கள். மலர் மாலை அணிந்த மன்மதனைப்போலவே ஒவ்வொரு பனித்தொழிலாளியும் காட்சியளிக்கிறார்கள். போர் வீரர்களின் நிமிர்வு ஒவ்வொருவரிடமும் உண்டு. ஒருவேளை கோட்டை மேல் கயிற்றை வீசி பிடித்து ஏறும் பணியில் ஈடுபட்டிருபார்களோ என எண்ணத்தோன்றுகிறது. உலகின் எப்பகுதிக்குச் சென்றலும் பனைத் தொழிலாளி மெல்லிடையோடு கச்சிதமாக இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். அது அவர்களது தொடர் உழைப்பையும் அவர்களது அணிகலன் அவர்கள் வீரத்தையும் கோடிட்டு காட்டுகிறது.

இதற்கு இணையாகவே குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்கள் தங்கள் அருவா பெட்டியை இட்டிருப்பதை நான் காண்கிறேன். உடை வாள் வைக்கப்பட்டது போல அது அவர்களது இடுப்பின் வலதுபுறத்தில் இருக்கும். நவீன கவ் பாய் தனது இடையில் துப்பாக்கியை மாட்டிவிட்டிருப்பது போல. எனது மாதிரி பிரசங்கம் செய்யப்பட்ட போது இவ்விதமாகவே நான் குமரி மாவட்ட பனைத்தொழிலாளர்களைப்போல்  உடை மற்றும் உபகரணங்களை அணிந்திருந்தேன். அனைத்து முடிந்த பிற்பாடு ஒரு ஆசிரியர் என்னிடம் வந்து அமைதியாக, உனது உடை அமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தத்து. அந்த உடை உனது செய்திக்கு மதிப்பு கூட்டியதோடல்லாமல் உனக்கும் ஒரு கெம்பீரத்தைக் கொடுத்தது என்றார். ஆனால் தற்கால உலகமயமாக்கப்பட்ட சமூகத்தினரால் இவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவும், பின் தங்கியவர்களாகவும், பொருளற்றவர்களாகவும், நாகரீகமற்றவர்களாகவும் பார்க்கப்படும் நிலையே காணப்படுகிறது.

முதுகில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணங்கள்

முதுகில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணங்கள்

 

குமரி மாவட்டத்தை போலல்லாது இவர்கள் அருவா பெட்டியை தங்கள் முதுகின் பின்னால் கட்டி வைத்திருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் தென்னம் பாளையைக் கொண்டு மிக நேர்த்தியாக செய்யப்படும் அருவாபெட்டி இங்கு மரத்தில் செய்யப்பட்டிருப்பது இன்னும் அழகு. இவை அனைத்திலும், தனித்தன்மைகள் கணக்கிடைப்பதே எனது பயணத்தின் ஆகச்சிறந்த மகிழ்ச்சி.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com